கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு?

Wednesday 22 February 2012



















இலங்கையின் இனப்பிரச்சினை போருக்குப் பிறகும் தொடர்கிறது. இந்த நூற்றாண்டிலும் தொடர்கிறது. புலிகள் இல்லாத சூழலிலும் தொடர்கிறது. தமிழ் இயக்கங்களின் கைகளில் ஆயுதங்கள் அற்ற நிலையிலும் தொடர்கிறது. சமாதானத்தை விரும்புகிறவர்கள்(?), அதற்காக முயற்சிப்பவர்கள்(?) என்று கூறுகின்றவர்களின் ஆட்சிக் காலத்திலும் தொடர்கிறது.

வட்டமேசை மாநாடு, அனைத்துக்கட்சிக்குழு, சர்வகட்சி மாநாடு, பேச்சுவார்த்தைகள் எனப் பல சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட பிறகும் தொடர்கிறது. இந்தியாவின் தலையீடு, நோர்வேயின் மத்தியஸ்தம் என்றெல்லாம் நடந்த பிறகும் தொடர்கிறது. இனப்பிரச்சினை சர்வதேச விவகாரமாகிய பின்னரும் தொடர்கிறது.

ஆட்சி மாறிப் புதிய ஆட்சிகள் வந்துள்ளன. தலைவர்கள் மாறி மாறி புதிது புதிதாக வந்திருக்கின்றனர். ஆனால், பிரச்சினை மட்டும் அதே நிலையில், அதே வலியுடனும் அதே மணத்துடனும் அதே எரிநிலையிலும் உள்ளன.

ஆகவே, இப்போதைக்கு இந்தப் பிரச்சினை முடியாது போலவேயுள்ளது எனக் கேட்டார் ஒரு நண்பர். அமைதிக்கான முயற்சிகள் ஒவ்வொன்றின்போதும் இந்த நண்பர் இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படவேண்டும் என்று விசுவாசமாகவே விரும்புகின்றவர். அவருடைய நாற்பதாண்டுகால அரசியல் அனுபவத்தில் அவர், ஏமாற்றப்பட்டதும், நம்பிக்கையிழக்க வைக்கப்பட்டதுமே அதிகமாக உள்ளது. இப்போது இந்த நண்பருக்கு வயது 71. இனப்பிரச்சினைக்கு வயது....? சுதந்திரத்துக்குப் பிறகான காலம் என்று பார்த்தாலும் 62 ஆண்டுகள்.

காலங்கள் மாறிவிட்டன. உலக ஓட்டம் மாறிவிட்டது. அரசியற் போக்குகளும் வாழ்க்கை அமைப்புகளும் எவ்வளவோ மாறியிருக்கின்றன. சிந்தனைகளும் நம்பிக்கைகளும் எண்ணங்களும் வௌ;வேறு அனுபவங்களையும் அறிவையும் பெற்றுள்ளன.

கடந்த நூற்றாண்டின் பிரதான அரசியற் போக்குகளாக இருந்த இடதுசாரி, வலதுசாரிய அரசியல், பனிப்போர் நிலைமைகள் எல்லாம் மாறிவிட்டன. அதையொட்டிய அரசியல் பிரயோகங்கள் எல்லாம் வெளிறிப்போய்விட்டன.

ஆனால், இலங்கையின் இனப்பிரச்சினை மட்டும் கொதித்துக்கொண்டேயிருக்கிறது. அதே தீவிரத்துடன், அதே கொதிப்புடன்.

பேச்சுகள் நடக்கின்றன. நம்பிக்கையீனங்களின் மத்தியில், இழுபாடுகளின் மத்தியில், உடன்பாடின்மைகளின் மத்தியில் அமைதிக்கான - இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுகள் நடக்கின்றன.

இந்தப் பேச்சுகள் வெற்றியடையுமா? நடக்கின்ற இந்தப் பேச்சுகளில் ஏதாவது அர்த்தம் உண்டா? இவை உண்மையானவையா? என்ற கேள்விகள் இன்று சராசரியான பொதுமக்களிடம் முக்கியமான கேள்வியாக எழுந்துள்ளன.

அப்படியானால், இதைவிட்டால் அடுத்த கட்டம் என்ன? இனித் திரும்பி ஆயுதப்போராட்டம் ஒன்றுக்குப் போக முடியுமா? அதற்கான சாத்தியங்கள் உண்டா? அப்படியிருந்தாலும் அது வெற்றியளிக்குமா? அல்லது பேச்சுவார்த்தையை விட்டு வெளியே வந்து அரசியற் போராட்டங்களை நடத்துவதா? அப்படி நடத்துவதானால், அந்தப் போராட்டத்தை எவ்வாறு நடத்துவது? அது சாத்தியமா? அது வெற்றியளிக்குமா? அதற்கான ஆதரவை எப்படித் திரட்டுவது? அந்தப் போராட்டத்துக்கு பிராந்திய சக்தியாகிய இந்தியா மற்றும் சர்வதேச சமூகத்தின் ஆதரவுகள் எல்லாம் எப்படியிருக்கும்?

இந்தக் கேள்விகள் எல்லாமே பதிலற்ற நிலையிற்தான் உள்ளன. யாரும் இதற்குரிய பதில்களைக் கூறுவார்கள் என்று தோன்றவில்லை. ஆனால், பரபரப்பாக அரசியற் செய்திகள் தினமும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எந்த முன்னேற்றத்தையும் எட்டாத முயற்சிகளைப் பற்றிய செய்திகளாக அவை இருக்கின்றன என்பதை அரசியலாளர்களும் சிந்திக்கவில்லை. அறிஞர்களும் சிந்திப்பதாக இல்லை. ஊடகவியலாளர்களும் சிந்திப்பதாகத் தெரியவில்லை.

மனதிலே இருக்கின்ற ஆத்திரத்தையும் இயலாமையின் நிமித்தமாக எழுகின்ற ஆற்றாமையையும் கொட்டித் தீர்க்கும் விதமாக இலங்கை அரசையும் அதன் ஆட்சியாளரையும் சிங்கள அதிகார வர்க்கத்தையும் திட்டித் தீர்த்து விடுவதுடன் தமிழரின் அரசியற் பணிகளின் முதற்பகுதி நிறைவடைகிறது.

அடுத்தபகுதியில் இந்தியா மற்றும் மேற்குலகு, ஐ.நா போன்றவற்றிடம் இலங்கை அரசைப்பற்றியும் தமிழ் மக்களுடைய நிலையைப் பற்றியும் முறையிடுவதுடன் மீதி அரசியற் பணிகள் நிறைவடைகின்றன.

ஆனால், இவை இரண்டினாலும் மட்டும் நிச்சயமாக தமிழ் பேசும் மக்களுடைய இனப்பிரச்சினையோ அரசியல் அதிகாரப் பகிர்வோ சாத்தியமாகிவிடாது. அவ்வாறு ஒரு சாத்தியப்பாடு கிட்டுமானால், இலங்கையில் அது எப்போதோ கிட்டியிருக்க வேணும். இலங்கைக்கு வெளியே இந்த  மாதிரிப் பிரச்சினை உள்ள நாடுகளில் எப்போதோ எல்லாம் அவற்றின் பிரச்சினைகள் தீர்ந்திருக்கும்.

ஆனால், அப்படி எந்த அதிசயமோ அற்புதமோ எங்கும் நடந்ததாக இல்லை.

பதிலாக - நிலைமைகள், உலக அரசியற் போக்கின் அசைவுகள், மக்களின் மனவுறுதியைக் கட்டமைத்தல், அவர்களுடைய வாழ்க்கையை இணைந்து நின்று மேம்படுத்திப் பாதுகாத்தல், மக்கள் தொடக்கம் எதிர்த்தரப்பின் நட்புச் சக்திகள் மற்றும் சர்வதேச சமூகங்கள் வரையான உரையாடல் போன்றவற்றை உன்னிப்பாக அவதானித்து அவற்றைச் செயற்படுத்தினாலே பேச்சுகளில் வெற்றியை ஏற்படுத்த முடியும். பிரச்சினைக்கான தீர்வினை எட்ட முடியும்.

ஆனால், இதெல்லாம் இலகுவான வழிமுறைகள் அல்ல. மிகக் கடினமான – கடுமையான உழைப்பைக் கோரும் வழிமுறைகளாகும். இதற்கு அந்த உழைப்பை வழங்கக் கூடிய மனநிலையும் ஆற்றலும் ஆளுமை மிக்க தலைமைத்துவதும் தேவை.

அது இலங்கைச் சிறுபான்மைச் சமூகத்தினரிடத்திலே உண்டா?

சிங்களத் தரப்பைக் குற்றம் சாட்டுகின்ற சிறுபான்மைத் தரப்பினரிடம் ஒரு பொது உடன்பாட்டைக் காணவோ எட்டவோ முடியாத நிலையே இன்னமும் உண்டு. தேர்தற்காலக் கூட்டுகள், சந்தர்ப்பத்துக்கேற்ற அணி உருவாக்கங்கள், தேவைக்கேற்ற சமரசங்கள் என்பதற்கு அப்பால், பொது நோக்கில், மக்களின் நலனை முதன்மைப்படுத்தி, எதிர்த்தரப்பை - அரசைப் பலவீனப்படுத்தும் நோக்கில் எவரும் ஒரு கட்டமைப்பை உருவாக்கத் தயாராக இல்லை.

கடந்த காலத்தில் உருவாக்கப்பட்ட கூட்டுகள் கூட சிதைந்த நிலையிலேயே உள்ளன. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்த தமிழ்க் கட்சிகளின் அரங்கம் இன்று உறைநிலைக்குப் போய் விட்டது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உடைந்து சிறு துண்டாகியுள்ளது. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அணி தனிக்கட்சி அடையாளத்துடன் இன்று இன்னொரு கூறாகச் செயற்பட்டு வருகிறது.

மிஞ்சியிருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் ஈ.பி.ஆர்.எல்.எவ் அணிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்குமிடையில் வெளிப்படையாகவே பலத்த இழுபறிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ரெலோ, புளொட், தமிழர் விடுதலைக்கூட்டணி போன்றவற்றுக்குக் குரலே இல்லை. ஏதோ இருக்கிறோம் என்ற அளவில் அவ்வப்போது எதைப் பற்றியாவது கதைப்பார்கள்.

ஆனால், எவரும் தனித்துப்போய் நின்று தாக்குப் பிடிக்க முடியாதென்ற நிலையில் இழுபட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர, மற்றும்படி கொள்கையின்படியோ, செயலொன்றை ஆற்ற வேண்டும் என்ற முனைப்பின்படியோ, தீர்மானத்தின் படியோ பிரச்சினைக்கான தீர்வினைக் கண்டடையவேண்டும் என்றோ, பொது உடன்பாட்டின் வழியாகச் சிறுபான்மைச் சமூகங்களைத் திரட்சியாக்கி, சிங்களத் தரப்பிலுள்ள நியாயவாதிகளை அணிப்படுத்த வேண்டும் என்றோ கருதவில்லை.

எனவேதான் எதிர்த்தரப்பான அரசுக்கும் சிங்கள இனவாதிகளுக்கும் இனப்பிரச்சினையை நீடித்துச் செல்ல முடிகிறது. பலவீனமான தரப்பாக சிறுபான்மையினர் இருக்கும் வரையில்; அவர்களைக் கையாள்வது இலகு என்ற மனவுணர்வும் அனுபவமும் சிங்களத்தரப்புக்குத் தாராளமாகவே உண்டு. ஆகவேதான் அது புதிய புதிய அறிவிப்புகளை விடுத்துக் கொண்டிருக்கிறது.

இதன்படி அது தெரிவுக்குழு என்ற புதிய அறிவிப்பைச் செய்துள்ளது. இது ஒரு நெருக்கடி நிலையை ஏற்படுத்தும் அரசின் உத்தியே. இந்தத் தெரிவுக்குழுவில் பங்கேற்பதில்லை என்று இதுவரையிற் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சொல்லி வருகின்றனர். ஆனால், என்னதான் சொன்னாலும் இதைத் தீர்மானமாக மறுத்துரைத்து வெளியே வருவதற்கு கூட்டமைப்பினால் முடியாது.

கூட்டமைப்புத் தெரிவுக்குழுவில் பங்கேற்பது தவிர்க்க முடியாது. அதில் பெரிய தப்பேதும் இல்லை என்று கூட்டமைப்பை ஆதரிக்கும் அரசியற்பத்தியாளர்கள் தொடர்ந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் வலியுறுத்தி வருகின்றனர். கூடவே எதிர்காலத்தில் மாகாணசபைத் தேர்தலை முன்வைத்தாலும் அதிலும் கூட்டமைப்புப் போட்டியிடலாம் என்பது  இவர்களுடைய கருத்து. அதாவது, கூட்டமைப்பு எடுத்த எடுப்பிலே பொறியில் வீழ்ந்து விடாமல் கவனமாக இருப்பதாகக் காட்டிக் கொண்டு, பிகு பண்ணிவிட்டுப் பின்னர் சத்தமில்லாமல் விசயத்தில் இறங்கப்போகிறது.

ஆனால், தெரிவுக்குழுவில் இடம்பெறுவதும், மாகாணசபைத் தேர்தலில் பங்கேற்பதும் தற்கொலைக்கொப்பானது என்று இதை மறுத்து விமர்சிக்கும் தரப்பும் உண்டு.

என்னதான் இருந்தாலும் யதார்த்தம் என்பதற்கே எப்போதும் முதலுரிமை உண்டு. அதுவே எதையும் தீர்மானித்து விடுகிறது.

கூட்டமைப்புக்குள்கூட தெரிவுக்குழுவில் பங்கேற்பதா இல்லையா, மாகாணசபையில் போட்டியிடுவதா இல்லையா என்ற முடிவெடுக்கும் பிரச்சினை வந்தாலும் யாரும் முரண்பாடுகளின் வாயிலாக வெளியே போவதற்குத் தயாரில்லை. அப்படி வெளியே போனால் அது அரசியற் துறவாகி விடும் என்று அவர்களுக்குத் தெரியும்.

ஆகவே இந்தப் பலவீனங்களை எல்லாம் அவதானித்திருக்கும் சிங்கள அதிகார வர்க்கம் நிச்சமயமாக எத்தகைய விட்டுக்கொடுப்புக்கும் வராது. அப்படி வரவேண்டிய தேவையும் அதற்கில்லை.

ஆனால், பிராந்தியத்தின் அமைதி, சீனா போன்ற பிற சக்திகளின் தலையீட்டுக்கான வாய்ப்பு போன்ற வித்தியாசமான காரணங்களுக்காக சில வகையான முன்னெடுப்புகளின் நிமித்தமாக அமைதிப் பேச்சுகளில் சில மாற்றங்கள் ஏற்படலாம். முன்னேற்றங்கள் எட்டலாம்.

என்றாலும் இப்போதைக்கு அவை முயற்கொம்புகளே!

அப்படியானால் அடுத்தது என்ன? இதைத் தான் பலரும் கேட்கிறார்கள். ஏன் பேச்சுகளில் ஈடுபடுவோருக்கும் அடுத்தது என்ன என்று தெரியாது. என்றபடியாற்தான் அரசாங்கம் நெருக்கடிகளை ஏற்படுத்த, ஏற்படுத்த அதை முறியடிக்க முடியாமல் அதனுடைய வலையில் சிக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. குறைந்த பட்சம் ஒரு தீர்வு யோசனையைக் கூட முன்வைக்க முடியாமல் வாய்பாடுகள், பழைய பாடல்கள், தேய்ந்த குரல்களையே சனங்களுக்குப் பரிசளித்துக் கொள்ள வேண்டியேற்படுகிறது.

அவ்வாறெனில் சிறுபான்மைச் சமூகங்களின் அரசியற் தலைவிதி எவ்வாறு அமையப் போகிறது? இதுவே எளிய கேள்வி. இதுவே கடினமான கேள்வியும். இதுவே எல்லோருடைய கேள்வியும்.

முற்றிலும் புதிய அரசியல் வழிமுறைக்கும் அரசியற் சிந்தனைக்கும் தமிழ் பேசும் தரப்பினர் செல்ல வேண்டும். இது படிப்பினைகளின் காலம். மீள் பரிசீலனைகளின் காலம். புதியவற்றுக்காக முயற்சிக்கும் சூழல். கடந்த கால அரசியற் பாதைகளிலும் பயணங்களிலும் செயற்பாடுகளிலும் நோக்கிலும் சிந்தனையிலும் அனுபவங்களிலும் கற்றுக்கொண்ட அரசியல் அறிவை, வரலாற்றறிவைப் பயன்படுத்த வேண்டிய காலமும் சூழலும்.

இதைச் செய்வதே இன்றைய அரசியற் செயற்றிட்டமாகும். இத்தகைய ஒரு நிகழ்ச்சித் திட்டத்தில் உலகத்திசைகளில் இருக்கும் செயற்பாட்டாளர்களும் தீர்வை விரும்புவோரும் நெருங்கி, ஒருங்கிணைந்து வரக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.

நிலைமைகளும் அவற்றைக் கையாளும் முறைகளுமே யாரையும் ஒருங்கிணைப்பன. எதுவும் வெற்றியை நோக்கி நகர்த்துவன என்பதற்கு ஏராளம் அடையாளங்கள் வரலாற்றில் உண்டு.

ஆகவே இன்று இதைக் குறித்துச் சிந்திப்பதே இன்றைய – நாளைய அரசியலாகும். இதன் வெற்றியே கடந்த காலத் தோல்விகளையும் காயங்களையும் ஆற்றுப்படுத்தும்.

எந்தத் தோல்வியும் எத்தகைய பின்னடைவும் சிந்திக்கும் செயற்படும் தரப்பினருக்கு நிரந்தரமாக அமைவதில்லை.

நூற்றாண்டுத் துயரங்களும் நூற்றாண்டுத் தூரங்களும் கூரிய சிந்தனையில் எளிதாகக் கடக்கப்படும் என்பதை இதை விட எப்படி விளக்குவது?
00



0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB