கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

கண்ணீர் விட்ட எவரும் கைவிடப்படுவதில்லை.

Monday 28 May 2012


நேர்காணல் - ஸகசதுல்ல ஜதூரோஸ்.






யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் ஸகசதுல்ல ஜதூரோஸ். ஜதுரோஸ_க்கு வயது 60. இப்போது புத்தளம் வாசி. 


ஆனால், அவருடைய நினைவும் கனவும் யாழ்ப்பாணத்தில்தான். 1990 இல் யாழ்ப்பாணத்திலிருந்து விடுதலைப்புலிகளின் அறிவிப்பை அடுத்து வெளியேறியவர்களில் ஸகசதுல்ல ஜதூரோஸின் குடும்பமும் ஒன்று. 

நீண்டகால அகதி வாழ்க்கை – பின்னர் புத்தளத்திலேயே காணி, வீடு என்று நிரந்தர வாழ்க்கைக்கு மாறி, புத்தளம் வாசியாகிவிட்டார் ஸகசதுல்ல ஜதூரோஸ்.  

20 ஆண்டுகளாக யாழ்ப்பாணத்துக்கு வெளியே வசித்து வரும் ஸகசதுல்ல ஜதூரோஸ் யாழ்ப்பாணத்தில் புடவை வியாபாரத்துக்காக வந்து செல்கிறார். அவருடன் கூடவே அவருடைய பிள்ளைகளும் வந்து செல்கிறார்கள். 

நடமாடும் வியாபாரியாகத் தொழில் செய்துவரும் ஸகசதுல்ல ஸதூரோஸையும் அவருடைய பிள்ளைகளையும் சந்தித்து உரையாடினேன். 



1. நீண்டகாலத்துக்குப் பிறகு யாழ்ப்பாணத்துக்கு வந்திருக்கிறீங்கள் -  யாழ்ப்பாண நிலைமைகள் எப்படியிருக்கு? யாழ்ப்பாணத்துக்கு நிரந்தரமாகவே வருவதற்கு முயற்சிக்கவில்லையா?

யாழ்ப்பாணத்துக்கு வரும்போது எனக்கு ஏற்படும் சந்தோசத்தைச் சொல்லவே முடியாது. அவ்வளவு மகிழ்ச்சி. நெஞ்சு நிரம்பச் சந்தோசம். நான் பிறந்து வளந்த ஊர் அல்லவா! சொந்த ஊருக்கு வரும்போது யாருக்குத்தான் மகிழ்ச்சி வராது, சொல்லுங்க. 

எத்தனை வயசானாலும் சொந்த ஊர் எண்டால் அது சந்தோசமாத்தான் இருக்கும். நான் யாழ்ப்பாணத்தில்தான் பிறந்தேன். என்னுடைய வாப்பா, உம்மா, காக்கா, தம்பி, தங்கைச்சி எல்லாருமே யாழ்ப்பாணத்திலதான் பிறந்தாங்க. வாப்பாவோட வாப்பா, அவரோட வாப்பா எல்லாருமே யாழ்ப்பாணத்தில் தான் பிறந்து வளந்தாங்க.

நான் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் படித்தேன். அந்த நாளையில இருந்த யாழ்ப்பாணமே வேறு. அப்போது முஸ்லிம்கள் இல்லாத யாழ்ப்பாண வாழ்க்கை கிடையாது. நகை செய்வதாக இருந்தாலும் சரி, பாத்திரங்களைச் சீர்ப்படுத்திறதாக இருந்தாலும் சரி, புடவைகளை வாங்கிறதாக இருந்தாலும் சரி, வீட்டுப் பொருட்களை வாங்கிறதாக இருந்தாலும் சரி, அம்மி ஆட்டுக்கல் கொத்திறதாக இருந்தாலும் சரி எல்லாத்துக்கும் முஸ்லிம்கள்தான் தேவையாக இருந்தது. 

நல்ல மதிப்பாக முஸ்லிம்கள் இருந்தாங்க. நல்ல அன்பாக தமிழர்களும் மதிச்சாங்க. அப்ப தமிழ் முஸ்லிம் என்ற பேதமெல்லாம் கிடையாது. நான் ஒரு போதுமே என்னை ஒரு முஸ்லிமாக உணர்ந்ததேயில்லை. ஆனா பள்ளிக்குப் போவோம். தொழுகை செய்வோம். அதெல்லாம் வேற. ஆனா, சந்தையில, கடைத்தெருவில, கூட்டாளிகள் வட்டத்தில எல்லாம் நாங்க எல்லாருமே ஒண்ணுதான். 

எனக்கு எவ்வளவோ நண்பர்கள் தமிழர்கள்தான். தருமலிங்கம், சின்னையா, அருமைத்துரை, குலநாயகம், எட்வேட், பொன்னம்பலம், காந்தராசா, துரை, சாமிநாதன், யோசேவ்... எண்டு ஏராளம் கூட்டாளிகள் இருந்தாங்க. 

இப்ப நான் வந்து அவங்களைத் தேடினால் ஆட்களைப் பிடிக்கவே முடியவில்லை. சிலர் இறந்து விட்டார்கள். சில ஆட்கள் வெளிநாடுகளுக்குப் போயிட்டாங்க. சிலபேர் எங்கேயென்றே தெரியாது. குமாரத்தம்பி என்றவரை மட்டும் பார்த்தேன். 

நான் வந்தது அவசரமான பயணம். வியாபாரத்துக்காக வந்திருக்கிறோம். நடமாடும் வியாபாரம். பொருட்களை வைப்பதற்கும் எடுப்பதற்கும் பாதுகாப்பில்லாத சூழல். அதற்குள்தான் வீடு, காணி எல்லாத்தையும் போய்ப்பாத்தது. 

பாருங்க, என்னோட இடத்திலேயே நான் இப்படி ஆயிருக்கன். ஆனா இப்ப நான் இதுக்கெல்லாம் கவலைப்படல்லை. காலம் மாறியிருக்கில்ல. நான் யாழ்ப்பாணம் வந்திருக்கிறன். ஆனா, இதுக்குள்ள நாம என்னத்தை எல்லாம் செஞ்சிருக்கம். அதுதான் முக்கியம். எவ்வளவு இழப்புகள்? எவ்வளவு சோகங்கள்? எவ்வளவு அலைச்சல்கள்? இதெல்லாம் யாருக்கு? சிங்கள ஆட்களுக்கா? இல்லையே? தமிழாட்களும் முஸ்லிங்களும் அடிபட்டா கொண்டாட்டம் யாருக்கு சொல்லுங்க?

நாம மற்றவங்களுக்கு வெற்றி வாய்ப்பைக் குடுத்திருக்கிறம். முந்தி யாழ்ப்பாணத்தில துணை மேயராக எல்லாம் முஸ்லிம்கள் இருந்திருக்கிறாங்க. பெரிய படிப்பாளிகளாக, நீதிவானாகக்கூட இருந்திருக்கிறாங்க. 

ஆ, யாழ்ப்பாணத்தைப் பத்திக் கேட்டீங்க. யாழ்ப்பாணம் நல்லாத்தான் இருக்கு. ஆனா முந்திய மாதிரி இல்லை. இன்னும் அது மாறணும். அது வளராமல் அப்பிடியே இருக்கு. புத்தளத்துக்கு நாங்க போனபோது அங்கே அவ்வளவு பெரிய ரவுண் கிடையாது. ஆனா, இப்ப புத்தளத்தப் பாத்தீங்கன்னா, நீங்களே ஆச்சரியப்படுறம். 

மரம் வளருறமாதிரி கிசிகிசி எண்டு வளந்திருக்கு. ஆனா, யாழ்ப்பாணம் அப்பிடியில்ல. நாங்க போனப்பறம் இருந்த மாதிரியே இருக்கு. வளரேல்ல. எல்லா இடமும் பெரிசா ஆகிருக்கு, நம்ம இடம் மட்டும் இப்பிடியே இருந்தா மனசு தாங்குமா? ஆனா, இப்ப நிலைமை கொஞ்சம் பரவாயில்ல. 

நான் யாழ்ப்பாணத்து ஆள்தான். யாழ்ப்பாணத்துக்கு வரலாம் எண்டவுடனே வந்தேன். ஆனா வீடில்லை. காணி எல்லாம் பழுதாகிட்டுது. திருத்தணும். அதுக்குப் பணம் வேணும். இப்ப யாழ்ப்பாணத்துக்கு வந்து வியாபாரம் பண்ணுறன். புள்ளைகளையும் கூட்டிட்டு வந்திருக்கிறன். ஆனா இங்க தங்க முடியாது. வீட்டைத்திருத்தணும். அதுக்குப் பிறகுதான் இங்க வரலாம். அதிலயும் பிரச்சினை இருக்கு...

2. ஏன்? மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் நீங்கள் இணைந்து கொள்ளவில்லையா? வீட்டைத்திருத்திக் கொள்ளலாம். இப்போது அதற்கான உதவிகளைச் செய்கிறார்களே!

முன்னாடி எண்டால் வந்திருக்கலாம். பத்து இருபது வருசத்துக்கு முந்தி எண்டால். இப்ப பிள்ளைகள் வளந்திருக்காங்க. நாங்க யாழ்ப்பாணத்தை விட்டுப் போகும்போது மூத்த மகனுக்கு எட்டு வயது. மற்றவனுக்கு ஆறு. அடுத்தது மகள். கைப்பிள்ளையாக் கொண்டு போனம். கடைசி புத்தளத்தில் பிறந்தான். 

எல்லாருமே புத்தளத்தில்தான் வளந்தாங்க. அவங்களுக்கு யாழ்ப்பாணம் தெரியாது. பெரிய ஆளுக்கு மட்டும் கொஞ்சம் தெரியும். அவனுக்கு ஊருக்கு வர கொஞ்சம் விருப்பம். ஆனா, அவன்ர கூட்டாளிகள் அங்க – புத்தளத்தில். மற்றவங்களுக்கும் அப்படித்தான். அங்க இருக்கத்தான் அவங்களுக்கு விருப்பம். இப்ப யாருக்குமே யாழ்ப்பாணத்துக்கு வர இஸ்ரமில்லை. 

இப்ப பாருங்க என்னட நிலைமையை. நான் ஊருக்கு வர விரும்பினாலும் பிள்ளைங்களுக்கு விருப்பமில்லை. நான் மட்டும் எப்பிடி இந்த வயசான காலத்தில வந்திட முடியும்? என் பெண்டாட்டிக்கும் யாழ்ப்பாணத்துக்கு வரவும் இங்கேயே கடைசிக்காலத்தைப் போக்கவும் விருப்பம். ஆனா முடியுமா?

வீட்டைத்திருத்த வேணும் எண்டு புள்ளைகளிடம் சொல்லியிருக்கிறன். அதுக்குச் சம்மதம் சொல்லிருக்கிறாங்க. இப்ப யாழ்ப்பாணத்தில இருக்கிற வீட்டையும் காணியையும் காட்டினன். 

வீடு இடிஞ்சு போயிட்டுது. பதிவு செய்ய வேணும். ஆனா, இங்க வந்த எங்க சொந்தக் காரங்களுக்கே இன்னும் ஏராளம் பிரச்சினைகள் இருக்கு. அதைப் பாத்தா பிள்ளைகளுக்கு வேறமாதிரி எண்ணங்கள்தான் வருது.

3. மீளக்குடியேறிய யாழ்ப்பாண முஸ்லிம்களின் நிலைமை எப்பிடியிருக்கு?

நீங்க முஸ்லிம் தெருவுக்குப் போனா அதைப் பாக்கலாம். இப்படியா முந்தி முஸ்லிம்கள் இருந்தாங்க. என்னமாதிரி இருந்த ஊர். எல்லாமே இடிஞ்சு பாழாய்ப் போயிட்டுது. பாழடைஞ்ச தெருவில நடக்கவே துக்கமாக இருக்கு. 

சனங்கள் தங்கட வீட்டுக்கு வந்திருக்கிறாங்க. சிலபேர் கொஞ்சம் கொஞ்சமா வீட்டைத்திருத்திட்டாங்க. மத்த வீடெல்லாமே பழுதாத்தான் இருக்கு.

இந்த மக்கள்ட பிரச்சினையை சுபியான் பாக்கிறார். சுபியான்தான் யாழ்ப்பாண முஸ்லிம்களின்ர தலைவரா இருக்கிறார். மத்தவங்க இங்க வாறதில்லை.  

அரசாங்கத்தின்ர உதவி போதாது. பழையமாதிரி எங்கட இடத்தை திருத்தி எடுக்கிறதுக்கு ஏராளம் பணம்வேணும். இந்தியா உதவிற மாதிரி முஸ்லிம் நாடுகளும் உதவணும். ஆனா, அதுக்கு அதைப்பத்தி யார் யோசிக்கிறாங்க. 

தமிழாக்கள்தான் இப்ப நாங்க நடத்திய கடைகளை எல்லாம் நடத்துறாங்க. சில கடைகள் மட்டும் முஸ்லிம்களுக்குத் திரும்பக் கிடைச்சிருக்கு. கஸ்தூரியார் வீதியில ஒரு நகைக்கடையும் இப்ப முஸ்லிம்களுக்கில்லை. முந்தி ஏராளம் கடைகள் இருந்தன. 

இந்த மாதிரி நடமாடும் வியாபாரத்தை எல்லாராலும் செய்ய முடியமா? அல்லது எப்பவும் இப்படிச் செய்ய முடியமா? 

நான் கூட ஒரு வேசம் போட்டுத்தான் இந்த வியாபாரத்துக்காக வந்திருக்கிறன். இப்பிடி யாவாரம் பண்ணிறதுக்கு புள்ளைகளுக்கோ மருமகனுக்கோ விருப்பம் கிடையாது.

நான் யாழ்ப்பாணம் வாறதுக்காக இந்த வியாபாரத்தை ஏத்துக்கிட்டன். அவ்வளவுதான். தமிழர்களும் முஸ்லிம்களும் நிச்சயமா நல்லமாதிரி ஒத்துமையா வாழலாம். அப்படி வாழவேணும். 

யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு நிறைய உதவவேணும். அதுக்குத் தமிழாக்களும் ஒத்துழைக்க வேணும். 

4. புத்தளத்தில் இப்போதும் நீங்கள் முகாம்களில்தான் இருக்கிறீங்களா?

இல்லை. நாங்க இப்ப சொந்தமா காணி வாங்கி, வீடு கட்டியிருக்கிறம். ஏராளமானவங்க இப்படி காணி வீடு எல்லாத்தோடும் இருக்கிறாங்க. இதுதான் பிரச்சினையே. அங்கேயே தொழிலையும் புடிச்சிட்டாங்க. இப்ப எல்லாருமே புத்தளம் ஆட்களாகீட்டாங்க. 

மூத்த ஆட்களுக்குத்தான் யாழ்ப்பாணத்துக்கு வாறதுக்கு எண்ணமிருக்கு. புள்ளைகளுக்கு அதெல்லாம் கிடையாது. அவங்க புத்தளத்தோட ஐக்கியமாகீட்டாங்க.

ஆனா, அங்க கொஞ்ச ஆட்கள் இன்னம் காம்பிலதான் இருக்கிறாங்க. அவங்க குறைவான எண்ணிக்கை. அவங்களுக்கும் தொழில் அங்கதான். 

யாழ்ப்பாணத்தில நல்ல வசதி வாய்ப்புகள் இருந்தா வந்திடுவாங்க. அப்பிடி வந்து இருந்து பழகீட்டா பிறகு இங்கேயே இருந்திடுவாங்க. 

5. உங்களைப் பொறுத்தவரையில் கடந்த கால நிகழ்வுகளைப் பற்றிய கவலைகள், அபிப்பிராயங்கள், கோபங்கள் எல்லாம் எப்பிடியிருக்கு?

யார் மீது யார் கோவிக்கிறது. இப்ப தராசு எந்தப் பக்கம் நிக்குது? அதான் முன்னமே சொன்னேனே நாம் அடிபட்டு எதிராளிக்கு வெற்றியைக் குடுத்திருக்கிறம் எண்டு. 

பழசையெல்லாம் பேசிக் கொண்டிருக்க முடியுமா? அதையே பேசிக்கொண்டிருந்தால், நாம உருப்படவே மாட்டோம். எனக்குக் கூட சின்ன வயசில எங்க வாப்பா, அவங்கட வாப்பா எல்லாம் சில கதைகளைச் சொல்லியிருக்கிறாங்க.

முந்தி நாம நல்லூர்ப்பக்கம்தான் இருந்தம். பிறகு எங்கள வெட்டி விரட்டிப் போட்டங்க. அதாலதான் வந்து இந்தப் பக்கமா - இப்ப இருக்கிற சோனகக் குடிப்பக்கமாக இருக்கிறம் எண்டு. 

இதுக்குப் போய் இப்ப சண்டை போட முடியுமா? பழசை வைச்ச பழி வாங்கவும் சண்டை போடவும் முடியுமா? பழிதான் வளரும். புழி வளர்ந்தால் என்ன நடக்கும். அழிவு. அதானே நடந்தது. 

மனிசனுக்கு மன்னிக்கிற மனம் வேணும். மன்னிப்பு எண்டிறது ஏமாளியாகிறது எண்டில்ல. மன்னித்தாத்தான் மறக்கிற மனம் வரும். மறதி ஏமாளியாகிறதில்லை. மறதி இல்லை எண்டால் எப்பவும் இரத்தம்தான் பாயும். 

இதுவரை பாய்ஞ்ச ரத்தம் போதாதா? நாங்க யாழ்ப்பாணத்த விட்டுப் போனபோது இருந்த கோவம் இப்ப இல்லை. அந்தக் கோவத்தை பிள்ளைகளுக்கும் கொடுத்தா என்னாகும்? நாம எப்ப ஒற்றுமையா இருக்கிறது?

இனி என்ன செய்யப்போறம்? எண்டு யோசிக்கவே விரும்பிறன். முதல்ல நாங்க யாழ்ப்பாணத்துக்கு வரணுமா? வந்து இருக்கணுமா? எண்டு பாக்கணும். யுhழ்ப்பாணத்துக்கு வாறதுக்காக ஏதோ அடிமை மாதிரி எல்லாத்துக்கும் பயந்து கொண்டு நான் இதைப் பேசல்ல. நியாயமா என்ன செய்யணும் எண்டு யோசிச்சுத்தான் பேசறன். 

எங்களைப் பொறுத்தவரை நாங்கள் யாழ்ப்பாணத்து மக்கள். நாங்க யாழ்ப்பாணத்துக்கு வாறதும் யாழ்ப்பாணத்தில இருக்கிறதும் எப்படி எண்டு நாங்க யோசிக்கிறம். 

அந்த நேரம் நாங்க யாழ்ப்பாணத்தில இருந்த வெளியேற்றப்பட்டபோது எங்களுக்காக குரல் குடுத்த மற்ற இடத்து முஸ்லிம்களை நாங்க மறக்கயில்லை. ஆனா, இப்ப நாங்க இங்க வாறத அவங்க ஆதரிக்கணும். 

6. யாழ்ப்பாணத்தில் வாழ்வதற்கு உங்களுக்கு விருப்பம். பிள்ளைகளோ புத்தளத்தில் வாழத்தான் விரும்புகிறார்கள். இந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வைக் காணலாம் என்று நினைக்கிறீங்கள்?

உண்மையாக எனக்கு இப்பத்தான் துக்கம். யாழ்ப்பாணத்தை விட்டுப்போகும்போது இருந்த துக்கத்தை விட இப்ப, யாழ்ப்பாணத்துக்கு வரக் கூடிய நிலைமை இருந்தும் வரமுடியல்ல. இதுதான் பெரீய கொடுமை. பாத்தீங்களா வாழ்க்கையை? 

இதுதான் மனிசனுக்கு தீராத கொடுமை என்கிறது. எல்லாத்தையும் அல்லா விளையாட்டாப் பாக்கிறாரா என்று கூட யோசிப்பேன். 

இதில யாரைக் கோவிக்கணும். நீங்க பாக்காம விட்ட பழைய சிவாஜி படத்தை இப்ப பாக்க விரும்புறீங்க. ஆனா புள்ளைகளுக்கு விஜய் படமோ அஜித் படமோதான் புடிக்குது. உங்களால என்ன பண்ணமுடியும்? 

ஒரு தீர்வையும் காண முடியாம துக்கத்தோட வாழவேண்டியதான். புள்ளங்க யாழ்ப்பாணத்தில பிஸினஸைப் புடிச்சி, இங்க இருக்கிற நம்மட காணியை திருத்தணும், வீட்டைக் கட்டணும் எண்டாத்தன் எல்லாம். 

அந்த எண்ணத்தோடதான் இந்த வியாபாரத்தை இஞ்ச மாத்தியிருக்கன். ஆனா, புள்ளகளுக்கு புத்தளத்தில் வியாபாரத்தைப் பலமாக்கத்தான் விருப்பம். இதில யார் வெற்றியடையிறது எண்டு தெரியேல்ல. 

7. மீள் குடியேறிய முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் எப்படியிருக்கிறார்கள்?

இப்பதானே வந்திருக்கிறார்கள். வந்த ஆட்கள் காணிப்பிரச்சினை எண்டு அங்கும் இங்குமாக அலைஞ்சு திரியிறாங்க. சிலபேர் உண்மையிலேயே அந்த நேரங்களில காணியை வித்துப் போட்டாங்க. வன்னியில சமாதானம் நடந்த காலத்தில இந்த மாதிரி காணியை வித்த ஆட்கள் இருக்கு. சிலபேருடைய காணியை வேற ஆட்களும் விடுதலைப் புலிகளும் பிடிச்சி வைச்சிருந்திருக்கிறாங்க. 
இப்ப அங்க காணிப்பிரச்சினை பெரிய பிரச்சினையா இருக்கெண்டு சொல்லிறாங்க. ஆனா இதைப்பத்தி முழுமையா எனக்குத் தெரியாது. 

யுhழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை காணிப்பிரச்சினை பெரிசா இல்லை. ஆனா கடைகளை எடுக்கிறது பிரச்சினை. பழைய உடன்படிக்கை எல்லாம் சரியா இல்லை. ஆட்கள் மாறீட்டாங்க. நிலைமை மாறீட்டுது. பாதிப்புத்தான். நடந்தது பெரிய போர். பெரிய பெரிய காரியங்கள். நாம கடடுப்படுத்த முடியாத சங்கதிகள். 

எப்பவும் மனிசன் எதையும் கட்டுப்படுத்த முடியாத ஒரு நிலைமைக்குப் போறானோ அப்பவே இந்த மாதிரி துன்பங்கள்தான் கிடைக்கும். நமக்குக் கிடைச்சது அப்பிடிப்பட்ட துன்பந்தான். 

8. இருந்தாலும் இதிலிருந்து மீள்வதற்கு என்ன செய்யலாம் என்று கருதுறீங்கள்? அரசாங்கமோ பிற தரப்பினரோ இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, இந்த நிலைமைகளை மாற்றுவதற்கு எவ்வாறு முயற்சிக்கலாம்?

அதுக்கு வழியிருக்கு. வழியில்லாமல் எதுதான் இருக்கு? முதல்ல இந்தப் பிரச்சினையை யார் பாக்கிறாங்க. அப்பிடி யாராவது பாத்தாத்தான் ஏதாவது செய்யலாம். யாரிட்டயாவது எதையாவது கேட்கலாம். 

யாழ்ப்பாணத்தில முஸ்லிம்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் எப்பிடி இருக்கிறார்கள் என்று யாராவது பார்க்கிறார்களா? பத்திரிகைகளில் எங்களைப்பத்தி என்ன செய்திகள் எழுதுகிறார்கள்? 

வருசம் வருசம் கூட்டம் போடுகிறார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட நாள் என்று சொல்கிறார்கள். அட முஸ்லிம்களை மீண்டும் நல்லமாதிரிக் குடியேற வைக்கணும் எண்டு யாராவது சிந்திக்கிறாங்களா?

அல்லது தமிழாக்களைத்தான் குடியேத்திறதப்பற்றி ஏதாவது உருப்படியாகப் பேசிறாங்களா? நாம மெல்ல மெல்ல எங்கள் காரியங்கள எங்கட மூளைக்கும் யோசினைக்கும் எட்டிய மாதிரிச் செய்ய வேண்டியதுதான். அரசாங்கமாவது கட்சிக்காரங்களாவது மண்ணாங்கட்டி....

9. புத்தளத்தில் எவ்வளவு யாழ்ப்பாண முஸ்லிம்கள் இருக்கிறார்கள்? அவர்களுடைய எதிர்காலம் எப்படியிருக்கும்?

அந்தக் கணக்கை என்னால் சரியாகச் சொல்ல முடியாது. ஆனா 75 ஆயிரத்துக்கு மேல எண்டு சொல்ல முடியும். அவங்களுக்கு புத்தளத்தில் காணி வீடு தொழில் எல்லாம் இருக்கு. அவர்கள் இப்போது புத்தளம் வாசிகளைப் போலவே மாறிவிட்டார்கள். 

இந்தா என்னைப் போல இந்த வயதிலயும் யாழ்ப்பாணத்துக்கு – நான் பிறந்த மண்ணுக்கு, ஓடியாடி விளையாடிய மண்ணுக்கு மறுபடியும் வரவேணம் என்ற தவிப்போட கொஞ்சப்பேர் இருக்கிறாங்க. 

மற்றப்படி அரைவாசிப் பேர் புத்தளத்தில்தான் இருப்பாங்க என்று படுது. மிச்ச ஆட்கள் மெல்ல மெல்ல யாழப்பாணத்துக்கு வருவாங்க. யாழ்ப்பாணமும் கொஞ்ச பெரிசா வளந்திட்டா அவங்களும் வந்திடுவாங்க. 

முக்கியமாக யாழ்ப்பாணத்தில முஸ்லிம்பகுதிகளில எந்த வசதியும் இல்லையல்லவா? அதாலதான் எல்லாரும் பின்னடிக்கிறாங்க. இப்ப யாழ்ப்பாணத்தில இருக்கிற – மீளக் குடியேறியிருக்கிற முஸ்லிம்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்தால் நிலைமை கொஞ்சம் மாறும். வேகமா அங்க இருந்து ஆட்கள் வருவாங்க. 

நானும் அதைத்தான் எதிர்பாக்கிறன். அந்த நாள் வருமா? அதை யார் கொண்டு வாறது? ஆல்லாவுக்குத்தான் வெளிச்சம். ஆனா எனக்கு நல்ல நம்பிக்கை இருக்கு. இப்ப நாம யாழ்ப்பாணம் வரமுடிஞ்சிருக்கிற மாதிரி அதுவும் வரும். 

கண்ணீர் விட்ட எவரும் கைவிடப்படுவதில்லை. 

00

இனப்பிரச்சினைக்கான தீர்வு?

Sunday 27 May 2012















தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாதை எது? அதனுடைய பயணம் எந்த இலக்கை நோக்கியது? என்ற கேள்விகள் இன்று தீவிர நிலையில் அதனுடைய ஆதரவாளர்கள் மட்டத்திலேயே எழுந்துள்ளன.


இதனால், கூட்டமைப்பைக் குறித்து கடுமையான விமர்சனங்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை கூட்டமைப்பை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்று கடுமையாகப் பாடுபடும் போக்கும் தீவிரமாக உள்ளது.


ஆனால், முன்வைக்கப்பட்டு வருகின்ற எத்தகைய விமர்சனங்களையும் கூட்டமைப்புப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. அதைப்போல கூட்டமைப்புப் பின்பற்ற வேண்டிய முக்கியமான விசயங்களைக் குறித்த அறிவுரைகளைக் கூட அது ஏற்றுக்கொண்டதாக இல்லை. கூட்டமைப்பை எப்படியாவது காப்பாற்றி விட வேணும் என மற்றவர்கள் கொண்டுள்ள அக்கறையின் அளவுக்கு அதனுடைய உறுப்பினர்களிடம் அது குறித்த பொறுப்புணர்வில்லை. குறைந்த பட்சமாக கூட்டமைப்பு இவற்றைப் பரிசீலிப்பதாகவும் இல்லை.


பதிலாக மேலும் மேலும் குறைபாடுகளையே அதிகமாகக் கொண்டுள்ள ஒரு அமைப்பாக அது தன்னை வைத்திருக்கிறது. முரண், சுயமுரண் என்ற நிலை கூட்டமைப்பினுள் அதிகமாக உருவாகியுள்ளது. எத்தகைய விமர்சனங்களையும் (அது சிநேக விமர்சனமாக இருந்தாலும் சரி, புறநிலை விமர்சனமாக இருந்தாலும் சரி) அது ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தோடும் இல்லை.


இதனால், அது தொடர்ச்சியாகக் கடுமையான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. தவறான அரசியல் தெரிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது. இலகுவில் எதிர்த்தரப்புகளால் தோற்கடிக்கக் கூடியதாக இருக்கிறது. இத்தகைய நிலை என்பது, அதனுள்ளேயே கொந்தளிப்பான நிலைமைகளை உருவாக்குகிறது@ முரண்களை உண்டாக்குகிறது@ அதனுடைய ஆதரவாளர்களைக்கூடச் சலிப்படையவும் சீற்றமடையவும் வைத்துள்ளது.


கூட்டமைப்பை ஆதரிக்கின்ற ஆய்வாளர்களும் பத்திரிகைள் உள்ளிட்ட ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் (கட்சிகளை ஆதரிப்போர் எப்படி ஊடகவியலாளர்களாக இருக்க முடியும்? என்று கேட்கப்படும் கேள்விகளும் உள்ளன) கூட இப்போது சோர்வடையும் நிலைக்கு வந்திருப்பதைக் காணலாம்.


இவர்களில் ஒரு சாரார் கூறும் கருத்தையும் இங்கே நாம் குறிப்பிடுவது பொருத்தமாகும். ‘கூட்டமைப்பின் அரசியலை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், நாங்கள் அந்த அமைப்பை ஏற்றுக்கொள்கிறோம். அதற்கு ஆதரவளிக்கிறோம்’ என்று இவர்களிற் சிலர் கூறுகின்றனர்.


இதற்கான காரணத்தைக் கூறும்போது, ‘புலிகளும் இல்லாத சூழலில், வேறு அரசியற் தலைமைகள் முறையாக இல்லாத போது மக்களுடைய ஆதரவைப் பெற்ற சக்தியாக களத்தில் நிற்பது கூட்டமைப்பு மட்டுமே. ஆகவே அதைப் பாதுகாக்க வேண்டியுள்ளது. கூட்டமைப்பையும் விட்டால் வேறு யாரைத் தெரிவு செய்வது?’ என்கிறார்கள்.
ஆகவே, வேறு வழியின்றி, இருக்கின்ற ஒன்றை அல்லது இருக்கின்றவற்றுள் தமக்குப் பிடித்த ஒன்றை இவர்கள் தேர்வு செய்கின்றனர் என்பது தெளிவாகின்றது. அதாவது, அரசுக்கு வெளியே தனி அடையாளத்தைக் கோரும் தெரிவுகளில் இவர்களுடைய புலனுக்குத் தட்டுப்படுவது கூட்டமைப்பே.


இதேவேளை ‘கூட்டமைப்புக்குக் கிடைத்த ஆதரவென்பது புலிகளினால் தெரிவு செய்யப்பட்ட அமைப்பாக அது இருக்கின்றது என்பதாற்தான்’ எனச் சொல்வோர் உள்ளனர். (இதைச் சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றவர்கள் நிராகரிக்கின்றனர்).


‘புலிகளுக்குப் பிறகு உருவான ‘தமிழ் அரசியல் வெளி’யை நிரப்புவதற்காகவே கூட்டமைப்பை மக்கள் தெரிவு செய்தனர். ஆனால், அதை அந்த அமைப்பு விளங்கிக் கொள்ளாமலிருப்பதே கவலையளிக்கிறது’ என்று இன்னொரு சாரார் கூறுகின்றனர்.


‘இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் ஆசிர்வாதம் கூட்டமைப்புக்கு உண்டு. ஆகவே அதைப் பலமாக வைத்திருப்பதன் மூலமாகவே எதிர்காலத்திற் பெறக்கூடிய அரசியல் ஆதாயங்களைப் பெற முடியும். அதிதீவிரவாதத் தமிழ்ச் சக்திகளையும் விட, அரசோடு இணைந்திருக்கும் தரப்பையும் விட கூட்டமைப்புக்கு இருக்கின்ற முக்கியத்துவம் இதுதான்’ என்று இன்னொரு தரப்பினர் சொல்கிறார்கள்.


இப்படிப் பல வியாக்கியானங்களும் காரணங்களும் சொல்லப்படுகின்றன.


ஆனால், இலங்கை அரசாங்கம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மக்களுக்கான நலத்திட்டங்களைச் சீராகச் செய்யாதவரை –


போரினால் பாதிப்புக்குள்ளான பிரதேசங்களை முழுமையாகச் சீர்ப்படுத்தாதவரையில்-


போர்க்குற்றங்களைக் குறித்த விசாரணைனையைச் செய்யாதவரை –


இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கு நேர்மையாக முன்வராத வரையில்-


தமிழ் பேசும் மக்களை வேறுபடுத்திப் பார்க்கும் வரையில் -


அவர்கள் அச்சப்படும் வகையில் அடையாளச் சிதைப்புகள் மேற்கொள்வதைக் கைவிடாத வரையில் -
அந்த மக்களின் மீது அரசியல் - இராணுவ மேலாண்மைகளைச் செலுத்திக் கொண்டிருக்கும் வரையில் -
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு குறிப்பிட்டளவு மக்களின் ஆதரவும் அதற்கேற்ற ஊடகங்களின் ஆதரவும் இருந்து கொண்டேயிருக்கும்.


அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை வெளிக்காட்டும் ஒரு ஊடகமாகத்தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பெரும்பாலான தமிழர்கள் கருதுகிறார்கள். அப்படியே அதைக் காட்டிக் கொள்கிறார்கள்.


கூட்டமைப்பின் பலவீனங்கள், அரசியல் ரீதியாக அதனுடைய குழப்பங்கள், அது தன்னகத்தில் கொண்டிருக்கின்ற சுயமுரண்கள் எல்லாவற்றையும் சேர்த்தே அவர்கள் அதனை ஆதரிக்கிறார்கள்.


எனினும் முடிந்த வரையில் அதனுடைய குறைபாடுகளை நீக்கி அல்லது அவற்றைக் களைந்து அதை ஒரு செயற்றிறன் மிக்க வலுவான அமைப்பாக்க வேண்டும் என்று அவர்களிற் சிலர் முயற்சிக்கிறார்கள். ஏனெனில் மக்களாக இருப்போருக்கு அவர்களின் முன்னே இருக்கின்ற பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பது ஒரு முக்கிய விசயமாகும். ஆகவே அவர்கள் அதைக்குறித்துச் சிந்திக்கிறார்கள்.


ஆனால், எவர் எப்படித்தான்; முயன்றாலும் கூட்டமைப்பானது வரவர மோசமான நிலையில் முரண்பாடுகளாலும் தடுமாற்றங்களாலும் சிதைந்து கொண்டேயிருக்கிறது.


இங்கேதான் நாம் சில விசயங்களைக் குறித்து மேலும் பேச வேண்டியுள்ளது.


இந்தப் பத்தியாளரால் ஏற்கனவே பல சந்தர்ப்பத்திலும் கூட்டமைப்பின் இத்தகைய பலவீனங்களும் குறைபாடுகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அதிலும் தொடக்க காலத்தில். அதிலும் புலிகளின் வீழ்ச்சிக்கு முன்னரேயே. பிறகு தொடர்ச்சியாகவும். இப்போது பலரும் இந்த வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.


அப்போதே கூட்டமைப்பின் தடுமாற்றங்களைக் குறித்தும் உள் முரண்பாடுகளைக் குறித்தும் விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் மெல்லிய பகிரங்க நிலையில் பலரிடமும் இருந்தன. ஆனால், ‘புலிகளை மேவித் தனித்துவமாகக் கூட்டமைப்பு எத்தகைய தீர்மானங்களையும் மேற்கொள்ள முடியாது’ என்று கூறப்பட்டதால் கூட்டமைப்பின் மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் நேரடியாக அதனைப் பாதிக்கவில்லை. புலிகளின் மீதே அந்தப் பழிகள் வீழ்ந்தன.


‘ஆளுமையற்ற தரப்பாக கூட்டமைப்பு செயற்படுகிறது, சுயாதீனமாக அதனால் ஏன் செயற்பட முடியாது?’ என்று எதிர்த்தரப்பினர் கூட்டமைப்பின் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடுத்திருந்தனர் ஒரு தரப்பினர்.
‘புலிகள் வீழ்ச்சியடைந்த பின்னரும் அது அப்படித்தான் உள்ளது. பின்னர் அது இந்தியாவின் நிகழ்ச்சி நிரலைக் கடந்து சிந்திக்க முடியாதிருக்கிறது’ என்றார்கள் பின்னர், சற்று ஏமாற்றத்தோடு.
‘இப்போது கூட்டமைப்பினர் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்குத் தாளம் போடுகிறார்கள்’ என்று குற்றம் சாட்டப்படுகிறது.


கூட்டமைப்பின் மீது தொடக்க காலத்தில் விமர்சனங்களை முன்வைத்தவர்கள் ‘இனப்பிரச்சினையில் மாறுபாடான நிலைப்பாட்டைக்கொண்டவர்கள்’, ‘அரசாங்கத்தின் நிகழ்;ச்சி நிரலுக்குக் கட்டுப்பட்டவர்கள்’ எனச் சந்தேகிக்கப்பட்டனர்.


ஆனால், இப்போது அதனுடைய கட்சியினர், ஆதரவாளர்கள் என்போரே அதனைக் கடுமையாக விமர்சிக்கின்றனர், அதனைக் குற்றம் சாட்டுகின்றனர் என்றால் இவர்கள் எல்லாம் எப்போது அரசின் நிகழ்ச்சி நிரலுக்குட்பட்டனர்? அல்லது இவர்களும் கூட்டமைப்பை எதிர்க்கும் நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றனரா?
உண்மையில் அவ்வாறெல்லாம் இல்லை. அப்படியிருந்தாலும் அவர்கள் யாரும் தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்கான தேவையைக் குறித்துச் சிந்திக்காதவர்களும் அல்ல. எதிர்நிலையாளர்களும் இல்லை.
இங்கே பிரச்சினை கூட்டமைப்பிலேயே – அதனுள்ளேயே உள்ளது.


ஒரு அரசியல் அமைப்பானது ஒரு கொள்கையின் அடிப்படையில், கோட்பாட்டின் அடிப்படையில், அந்தக் கொள்கையையும் கோட்பாட்டையும் அடைவதற்கான வழிமுறைகளைக் கொண்டிருக்கும் வகையில், அதற்கான செயற்றிட்டங்களின் அடிப்படையில், அதற்கான செயலாற்றலின் அடிப்படையில் இருக்க வேண்டும். அரசியல் திறன்களைக் கொண்டிருக்க வேண்டும்.


இத்தகைய கொள்கை, கோட்பாடு, செயற்றிட்டம், செயலாற்றல் போன்றன கூட்டமைப்புக்கு உள்ளனவா? என்பதே இங்கே முன்னிறுத்தப்படும் கேள்வியாகும். அவை இருந்திருந்தால் அது பலருடைய விமர்சனங்களுக்கும் உள்ளக முரண்களுக்கும் உட்பட வேண்டியிருக்காது.  


கூட்டமைப்பை ஒரு கட்சியாகப் பதிவு செய்வதில் தொடங்கி, மக்களுக்கான பணிகள் மற்றும் அரசியற் பேச்சுகளில் முன்வைப்பதற்கான தீர்வுத் திட்டத்தைத் தயாரிப்பது வரையில் உள்ள ஏகப்பட்ட விடயங்களில் எந்த ஒன்றுக்கும் அது இதுவரையில் எத்தகைய தீர்மானங்களையும் எடுத்ததில்லை.


எனவேதான் அது மிகப் பலவீனமான ஒரு அமைப்பாக இருக்கின்றது. கூட்டமைப்பின் பலவீனம் என்பது இன்று மிகப் பகிரங்கமானது.


தன்னுடைய மக்களாலேயே பரிகசிக்கப்படும் ஒரு அமைப்பாக அது மாறியுள்ளது. இந்த நிலையில் மிகக் கடினமான எதிர்த்தரப்புடன் போராடி எவ்வாறு அது விடுதலையைப் பெற முடியும்? அல்லது தீர்வினைப் பெற இயலும்? ஒரு கொடி (தேசியக் கொடி) விவகாரத்தையே சரியாகக் கையாள முடியாத நிலையில் அது தடுமாறியது அண்மைய உதாரணம்.


எனவே, இன்று எழுகின்ற கேள்விகளுக்கு அதனுடைய பதில் என்ன? அதனை ஆதரிப்போரின் பதில்கள் என்ன?
எழுந்து நிற்கவே முடியாத ஒரு எருதை வைத்துக்கொண்டு பயணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்.
ஆத்தாக் கொடுமைக்காக – பேருக்காக ஒன்று முன்னே நிற்கட்டுமே என்று சொல்வார்களே! அது மாதிரி ஒரு அமைப்பு இருப்பது, பெரும் நெருக்கடிகளின் மத்தியில் இருக்கின்ற சமூகத்துக்கு சரியாகுமா?
ஆனால், இலங்கை அரசுக்கு மட்டுமல்ல சிங்களப் பெருந்தேசியவாதிகளுக்கும் கூட்டமைப்பே தேவையாக இருக்கிறது. இந்த அமைப்பையும் விட ஒரு பலமான அமைப்பு, செயலாற்றல் மிக்க, சிந்தனைத் திறன் மிக்க அமைப்பு ஒன்று வருமிடத்து அதனை எதிர் நோக்குவதில் அரசுக்கும் சிங்கள மேலாதிக்கத்தினருக்கும் சிரமங்கள் ஏற்படும்.


அதையும் விட இதைப் பராமரிப்பது அவர்களுக்கு அதிக நன்மையை அளிக்கக் கூடியது. பலவானைக் கையாள்வது கடினம். பலவீனமானவனைக் கையாள்வது மிகச் சுலபம் என்பது அனைவரும் அறிந்த எளிய உண்மை.


ஆகவே பலவீனமான நிலையில் இருக்கும் கூட்டமைப்புக்கு நீர் ஊற்றுவதிலேயே அரசாங்கம் கவனஞ்செலுத்துகிறது. தெற்கிலே பலவீனமான ஐ.தே.கவை (ரணில் தலைவராக இருக்கும் வரையில் அவரால் ஒரு கோல் போடவே முடியாது என ஐ.தே.கவினரே சொல்வதைப்போல) அரசாங்கம் பேணி வளர்ப்பதைப்போல வடக்கிலே கூட்டமைப்பை அது பேணுகிறது.


கூட்டமைப்பின் பலம் என்பது இதுதான். அரசாங்கம் வழங்குகின்ற பலத்தில் உயிர்வாழ்வது. அதையே தன்னுடைய ஜீவபலமாக்கிக் கொள்வது. அதாவது அரசாங்கமே அதனுடைய பலத்தை எப்போதும் வழங்கிக் கொண்டிருக்கிறது.  அரசாங்கமே அதைத் தக்கவைக்கிறது. இது அரசாங்கத்துக்கு அவசியமான ஒன்று. தீர்வைக் கொடுக்காமல், தீர்வைப் பற்றிப் பேசிக் கொள்வதற்கு ஒரு அமைப்பை வைத்துக் கொள்வது. அரசாங்கத்துக்கு நெருக்கடிகளை ஏற்படுத்த முடியாத வகையில் எதிர்ப்பை வெளிப்படுத்தும் ஒரு அமைப்பின் இருப்பையே அரசாங்கம் விரும்புகின்றது.


தனக்கு அதிக நெருக்கடிகளைத் தராத, ஒரு அமைப்பைப் பராமரிப்பதன் மூலமாக தன்னுடைய நலன்களை மேலும் மேலும் பெற்றுக்கொள்ளலாம் என்ற தந்திரோபயத்தில் அரசாங்கம் இவ்வாறு செயற்படுகிறது.
இந்த இடத்தில்தான் நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு உண்மை உண்டு. உண்மையில் அரசாங்கத்துக்குப் பிடிக்காத – அதற்கு நெருக்கடியைக் கொடுக்கும் தரப்புகளாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் றிஸாத் பதியுதீனும் உள்ளனர்.


இந்தத் தரப்புகள் வெளிப்படையாக அரசாங்கத்துடன் இணைந்து நிற்கின்றன. அப்படி இணைந்து நின்று கொண்டே அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுத்து சில காரியங்களைச் செய்விக்கின்றன. (சம்மந்தன் பிடிப்பதும் சிங்கக்கொடி. டக்ளஸ் தேவானந்தா பிடிப்பதும் சிங்கக் கொடி. ஆனால், ஒருவர் அரசாங்கத்துக்கு வெளியே நின்று பிடிக்கிறார். மற்றவர் அரசாங்கத்துடன் நின்று பிடிக்கிறார் என்று ஒரு ஆய்வாளர் எழுதியிருந்தமை கவனத்திற்குரிய ஒன்று). இந்தத் தரப்புகள் நெருக்கமாக இருப்பதன் காரணத்தினால் இவை முன்வைக்கும் கோரிக்கைகளைப் புறந்தள்ள முடியாத நிலை, அரசாங்கத்துக்கு ஒரு தவிர்க்க முடியாத நெருக்கடியாகும். இந்தத் தரப்புகளின் கோரிக்கைகளை முழுமையாகச் செய்யாது விட்டாலும் குறிப்பிடத்தக்க அளவில் அது செய்தே ஆக வேண்டும் என்பது நிர்ப்பந்தம்.


இல்லையெனில் அதுவே அரசாங்கத்துக்கு நெருக்கடிகளை உருவாக்கும். – ‘உன்னுடன் நிற்கும் தரப்பினரின் சிறிய கோரிக்கையைக் கூட நீ நிறைவேற்றவில்லையே ‘என்று வெளியுலகத்தின் கேள்விகள் இந்தச் சந்தர்ப்பத்தில் எழும். எனவே அந்த நெருக்கடியைத் தணித்துக் கொள்வதற்காக அது விருப்பமில்லாது விட்டாலும் அவற்றைச் செய்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆகவே, உண்மையில் அரசாங்கத்தின் போக்கின்படி இது அதற்கு தவிர்க்க முடியாத ஒரு நெருக்கடியே.


இந்த நெருக்கடிகளை எதிர்காலத்திற் தவிர்ப்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது. எனவேதான் அது வடக்குக் கிழக்கில் தனியான ஏற்பாட்டை மேற்கொண்டு – சிறிலங்கா சுதந்திரக்கட்சியைப் பலப்படுத்தி வருகிறது.
இதன்மூலம் தான் மட்டும் தனியே பலமாவது, அல்லது பலவீனமான கூட்டமைப்புக்கு அடுத்தபடியாக சுதந்திரக் கட்சியே அடுத்த இடங்களைப் பெறுவது என்ற அணுகுமுறையைப் பலப்படுத்துவது. அரசுக்குச் சார்பான தரப்புகளின் தேவையைத் தவிர்த்து விட முயற்சிப்பது இந்த அடிப்படையிற்தான்.


ஆகவே, இதிலும் தமிழ் பேசும் மக்கள் மேலும் தோற்கடிக்கப்படும் பொறிகளே அதிகம் தென்படுகின்றன.
எனவே நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்பதை மிக எளிதாக விளங்கிக் கொள்ள முடிகிறது.
இதை விளங்கிக் கொண்டால் அதிக குழப்பங்கள் பலருக்கும் ஏற்படாது, அதற்குப் பிறகு பதற்றங்கள் ஏற்படவும் அதற்காக மருத்துவமனைகளை (அரசியல் மருத்துவ மனைகளை) நாடவும் வேண்டியிராது.


எனவே, இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தற்போதைக்கு இல்லை என்பது தெளிவாகிறது. இதை நாம் அறுதியிட்டுக் கூறலாம். அப்படியான ஒரு தீர்வு கிட்டுவதாக இருந்தால், அது அதிசயத்திலும் அதிசயமான ஒரு நிழ்ச்சியாகவே அமையும். அது வெளிச்சக்திகளின் நலன் மற்றும் தேவைகளைப் பொறுத்தது.


00

‘புத்திமான் பலவான்’

Saturday 26 May 2012











டிப்படைகளை உருவாக்க முடியாத எத்தகைய செயல்களும் நல்விளைவுகளைத் தரவே மாட்டாது. குழப்பம், முரண்பாடு, தெளிவற்ற நிலை, உறுதியின்மை, செயற்றினில் போதாமை, நேர்மையீனம், அர்ப்பணிப்பின்மை, அல்லது அதிதீவிரம், மேலாதிக்கப்போக்கு, யதார்த்தத்தைக் கடந்த கற்பனாவாதம் போன்ற குறைபாடுகளின் மத்தியில் அல்லது இவற்றை வைத்துக் கொண்டு எந்தச் சிறு நன்மையையும் பெற முடியாது.

ஈழத்தமிழர்களின் அரசியலில் இவ்வளவு குறைபாடுகளும் உள்ளன. பலவீனமானவர்களைத் தோற்கடிப்பது எளிது. எனவேதான் அவர்கள் எளிதிற் தோற்கடிக்கப்படுகிறார்கள்.

குழப்பம், முரண்பாடு, தெளிவற்ற நிலை, உறுதியின்மை, செயற்றினில் போதாமை, நேர்மையீனம், அர்ப்பணிப்பின்மை, அல்லது அதிதீவிரம், மேலாதிக்கப்போக்கு, யதார்த்தத்தைக் கடந்த கற்பனாவாதம் போன்ற குறைபாடுகள் நிறைந்திருக்கும் ஒரு சமூகமாக இன்றைய தமிழ்பேசும் சமூகமும் உள்ளது.

விடுதலைப் புலிகளின் காலத்தில் பலமாக இருந்ததாக ஒரு தோற்றம் பலரிடம் உணரப்படுகிறது. புலிகள் ஆயுதரீதியாகவும் போர் புரிவதில் பலமாகவும் இருந்தாலும் அவர்களிடம் இருந்த அரசியற் பலவீனமும் ஜனநாயகக் குறைபாடுகளும் சிந்தனைப் பலவீனமும் இறுதியில் அவர்களின் பலமாக இருந்த அம்சங்களையே பலவீனமாக்கின.

இப்போது சர்வ தேச ரீதியாக (புலம் பெயர்ந்த தமிழர்கள் உட்பட) தமிழர்களின் செயற்பாடுகள் பரந்த தளத்தில் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் மிக எளிதிற் தோற்கடிக்கப்படும் நிலையிலேயே அவை உள்ளன.

பலம் என்பது வளம், ஆளணி, நிலப்பரப்பின் விஸ்தீரணம் போன்றவற்றினால் வருவதல்ல. அதன் அடிப்படைகள் வேறானவை.

ஆசியாவின் நிலப்பரப்பையும் ஆளணியையும் விட அமெரிக்காவின் நிலப்பரப்பும் ஆளணியும் குறைவானதே. ஆனால், உலகத்தின் தலைமைப் பொலிஸ் பாத்திரத்தில் இருப்பது அமெரிக்காவே.

‘ஐரோப்பியர்களின் காலம்’ என்ற அடையாளத்தை வரலாற்றில் உருவாக்கிய போர்த்துக்கல், ஒல்லாந்து, பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் அந்த நாட்களில் கண்டம் கடந்து தங்களின் ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் எப்படி உருவாக்கின?

இதற்கு அவற்றின் நிலப்பரப்போ, ஆளணித்தொகையோ, வளங்களோ காரணம் அல்ல.

அவற்றிடம் இருந்த வேட்கையே, தேவைகள் ஏற்படுத்திய அவசியமே அவற்றின் வெற்றிக்குக் காரணம். அதற்காக இந்த நாடுகள் மேற்கொண்ட தேடல்களும் அரசியல் நடவடிக்கைகளும் கவனத்திற்குரியவை. இதையொட்டியே வீரர்களும் அரசியற் தலைவர்களும் மதகுருக்களும் அறிஞர்களும் தொழிற்பட்டனர்.

ஐரோப்பிய ஆதிக்கம் அந்த ஆதிக்கத்துக்குக் கீழ்க்கட்டுப்பட்டவர்களுக்கு மிகப் பெரிய அநீதிதான். ஆனால், ஐரோப்பியர்களைப் பொறுத்தவரை அது அவர்களுக்குத் தவிர்க்க முடியாத ஒன்று. தேவையான ஒன்று.

ஐரோப்பாவின் வரலாற்றில் முடியாட்சிகள் எப்படி இருந்தன என்று தெரிந்தவர்களுக்கு, அங்கே மக்களுடைய வாழ்க்கை எந்தளவுக்குக் கடுமையாக இருந்தது என்று புரியும். பொருளாதார நெருக்கடிகளும் ஒடுக்கு முறையும் உச்ச வரியும் மக்களை வாட்டி வதைத்தன.

இன்று வேலையற்றோருக்கே உதவிப் பணத்தை வழங்கும் நிலையில் இருக்கின்ற மேற்கு நாடுகள் அன்று உழைப்பவருக்கான ஊதியத்தைக் கொடுப்பதற்கே பிரச்சினைப்பட்டுக் கொண்டிருந்தன.

இன்றைக்கு நாம் பார்க்கின்ற ஐரோப்பாவாக அன்றைய ஐரோப்பா இருக்கவில்லை. அன்று கொந்தளிப்புகளும் ஒடுக்கு முறையும் ஜனநாயக மறுப்புகளும் தாராளமாக இருந்தன.

யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகளில் இருந்து பொருளாதாரத் தேவைகள், நிலத் தேவைகளுக்காக கடந்த நூற்றாண்டில் தீவக மக்கள் வேறு இடங்களை நோக்கிப் பெயர்ந்ததைப்போலவே, கண்டங்களைக் கடக்க முற்பட்டனர் ஐரோப்பியர்.

அமெரிக்காவுக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் ஆசியாவுக்கும் ஆபிரிக்காவுக்கும் என உலகத்தின் திசைகள் எங்கும் அவர்கள் புறப்பட்டனர்.

போனவர்கள் போரிட்டார்கள், நாடுகளைக் கைப்பற்றினார்கள். ஆட்சிகளை அமைத்தார்கள். வளங்களைத் தராளமாக எடுத்தார்கள். அந்தந்த நாடுகளின் மக்களை வைத்தே தங்களுக்குத் தேவையானதையெல்லாம் செய்து கொண்டார்கள்.

போதாக்குறைக்குத் தங்களுடைய பண்ணைகளுக்குத் தேவையான பணியாட்களை அடிமையாகக் கொண்டு செல்லுமளவு உச்ச நிலையில் அவர்களுடைய செயல்கள் இருந்தன.

இப்படியெல்லாம் செய்தே ஐரோப்பாவை – தங்களுடைய நாடுகளை, தங்களுடைய வாழ்க்கையை, தங்களை வளப்படுத்தினார்கள். அவர்களுடைய வெற்றிகள் இப்படித்தான் அமைந்தன. ஐரோப்பாவின் இன்றைய அடையாளம் இப்படித்தான் உருவாக்கப்பட்டது.

இன்றைய மேற்குலகத்தின் வளர்ச்சியும் மேலாண்மையும் அங்குள்ள மக்களின் வளமான வாழ்க்கையும் உருவாகிய பின்னணி இப்படித்தான் உள்ளது. இதற்காக அவர்கள் அன்றும் வெட்கப்பட்டதில்லை. இன்றும் வெட்கப்பட்டதில்லை என்பது தனிக்கதை.

மேற்குலகத்தினரின் வெற்றிகளுக்கும் ஆதிக்கத்துக்கும் அவர்களுக்குப் பயன்பட்டது முதலில், நிலைமைகளைப் பற்றிய தெளிவே. பொருளாதார நெருக்கடிகளும் மோதலும் குழப்பங்களும் வாழ்க்கைப் பிரச்சினைகளும் தொடர்ந்து ஏற்படுவதற்கான காரணங்களை எப்படி எதிர்கொள்வது என்ற சிந்தனை அவர்களை வெளிப்பரப்பு நோக்கிப் பயணிக்க வைத்தது. பிற தேசங்களை நோக்கிப் பயணிக்க வைத்தது. அந்தப் பயணங்களுக்கான சிந்தனையே அவர்களுடைய முதற்படியாகும். (இப்போது கிரகங்களை நோக்கி அவர்கள் பயணிப்பதும் வெளியை ஆள்வதும் இந்த அடிப்படையின் இரண்டாம் கட்டமே.

இந்தப் பயணங்களை எப்படிச் செய்வது? இந்தப் பயணங்களின் விளைவாக எவற்றைப் பெறலாம்? அவற்றை எப்படிப் பெறலாம்? அப்படிப் பெற முற்படும்போது எத்தகைய எதிர்விளைவுகள் ஏற்படும்? அல்லது எவ்வாறான எதிர்விளைவுகள் ஏற்படக்கூடும்? அவற்றை எப்படியெல்லாம் முறியடிப்பது? அடுத்த கட்டங்கள் என்ன? என்ற ஆயிரக்கணக்கான தொடர் கேள்விகளுக்கான பதில்களைத் தயார்ப்படுத்திக் கொண்டமை இந்த வெற்றியின் அடுத்த படியாகும்.

பின்னர் அவர்கள் மேற்கொண்ட பயணங்களும் படையெடுப்புகளும் பிறவும். இவை அதற்கடுத்த படிகளாகும்.

இதற்கெல்லாம் அவர்களுக்குப் பயன்பட்டது, தேவைகளைப் பற்றிய தெளிவு, சுயமதிப்பீடு, வெளி மதிப்பீடு, தங்களுடைய செயற்பாடுகளைப் பற்றிய தெளிவு, முரண்பாடுகளைத் தீர்த்துக்கொள்ளும் ஆற்றல், ஒருங்கிணைவு, உறுதி, செயற்றிறன், தங்களின் செயலைச் செய்வதில் உள்ள நேர்மை, வெற்றியைக் குறித்த நம்பிக்கை, அந்த வெற்றியைப் பெற வேண்டும் என்ற முனைப்புக்கு வழங்கிய அர்ப்பணிப்பு, யதார்த்த நிலைமைகளை விளங்கிக் கொள்ளல், ஒருங்கிணைந்து செயற்படுவதில் பேணவேண்டிய விட்டுக்கொடுத்தல் மற்றும் செயற்பாட்டாளர்களிடையே பேணப்பட்ட அனுசரித்துப் போதல் போன்றவையே.

எனவேதான் அவர்களால் வெற்றிகளைப் பெற முடிந்தது. நீடித்த நெருக்கடிகளைத் தீர்த்துக் கொள்வதற்கான பொருளாதாரப் பிடிமானத்தை – அறிவு மற்றும் அனுபவ வளத்தை எல்லாம் அவர்கள் பெற்றுக் கொண்டனர்.
இங்கே ஐரோப்பியர்களின் பலம் என்பது அவர்களிடம் இருந்த சிந்தனையே. வெல்வதற்கான மூலோபாயத்தையும் தந்திரோபாயத்தையும் அவர்கள் வகுத்துக் கொண்டமையே அவர்களை நிரந்தர வெற்றியாளர்களாக வைத்திருக்கிறது.

அதற்காக ஐரோப்பிய நாகரீகத்தையும் ஐரோப்பிய அரசியலையும் இங்கே நாம் முழுமனதோடு அங்கீகரிக்கவில்லை. ஆனால், மேற்குலகம் எப்படி எழுச்சியடைந்தது என்பதையும் அதனுடைய இன்றைய நிலை எப்படி உருவாகியது என்பதையுமே இங்கே நாம் பார்க்கிறோம்.

இதற்கு இன்னொரு உதாரணம். ஆனால் பலரும் பயன்படுத்திய ஒரு மோசமான உதாரணம், இஸ்ரேலின் உருவாக்கமும் அதனுடைய ஸ்திரத்தன்மையும்.

மேற்குலகத்தின் தேவையோடு இணைந்த உருவாக்கமே இஸ்ரேலின் நிலை என்றாலும் அது ஒரு சிறிய நாடு, அந்தப் பிராந்தியத்தில் தொகையிற் குறைவானவர்களையே அது தனது சனங்களாகக் கொண்டிருக்கிறது என்பதும் கவனத்திற்குரியவை.

இங்கே இஸ்ரேலுக்குப் பயன்பட்டதும் இன்றுவரை அது பயன்படுத்துவதும் மூளையைத்தான்.

யூதர்களுடைய மூளைப் பலமே இன்றுவரை இஸ்ரேலின் பலம் என்பார்கள்.
அதிகம் ஏன், தாவீது, கோலியாத் கதையில் நாம் கற்றுக்கொள்வதென்ன புத்திசாலித்தனத்தையும் அர்ப்பணிப்பையும்தான் அல்லவா!

ஆனால், நடைமுறையில் தமிழர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
தமிழர்கள் ஒன்றில் தமது பழம்பெருமைகளைப் பெருமிதமாகப் பேசுவார்கள். அல்லது பெருங்குரலெடுத்து தங்களுடைய குறைகளையும் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியையும் சொல்லி அழுவார்கள்.

இந்த இரண்டும் யாருக்கும் எரிச்சலூட்டுவது. இந்த இரண்டையும் யாரும் விரும்புவதில்லை. ஓயாத புளுகும் ஓயாத புலம்பலும் எப்படியிருக்கும் என்று யாருக்கும் சொல்லித்தரவேண்டுமா என்ன?

எப்போதும் புலம்பிக் கொண்டிருப்பவர், உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்@  செயல் ரீதியாகப் பலவீனமானவர்.

ஏறக்குறைய இந்த நிலையிற்தான் ஈழத்தமிழர்கள் இன்றிருக்கின்றனர். இந்த நிலைக்கு இத்தப் பத்தியாளரும் விதிவிலக்காக இல்லை. ஆனால், இதைக் கடக்க வேண்டும்.

யாரைக் கண்டாலும் புலம்புதல் - குறைகளைச் சொல்லுதல், மற்றவர்களைப் பற்றியே குற்றம் கூறுதல்...

இந்தப் பழக்கம் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வைப் பெற்றுத்தராது.
உலகம் என்பது பல கோடுகளாலும் பல பின்னல்களாலும் ஆன போட்டிக்களம். மின்னற் பொழுதில் ஒன்றையொன்று வெட்டிச் செல்லும் ராஜதந்திரப் போர்க்களம் அது.

எந்தப் பெரிய வல்லரசுக்கும் கூட ஏராளம் பிரச்சினைகளும் நெருக்கடிகளும் சவால்களும் அச்சுறுத்தல்களும் அபாயங்களும் எப்போதும் இருந்து கொண்டேயிருக்கின்றன.

தலைமைப் பொலிஸ்காரனாக ராஜாங்கம் செய்கின்ற அமெரிக்காவுக்கே இந்த உலகத்தில் அதிகமான எதிரிகள்.

செப்ரெம்பர் 11 இல் அமெரிக்கா கலங்கியதும் இப்போது வரையில் தன்னை நோக்கி வரக்கூடிய எதிர்ப்புகளுக்காக அது கலங்குவதும் பகிரங்கமானது.
இதைப் போலவே எந்த நாட்டுக்கும் எந்தச் சமூகத்துக்கும் எப்போதும் நெருக்கடிகளும் அபாயங்களும் சவால்களும் இருந்து கொண்டேயிருக்கின்றன.

ஆனால், பல நாடுகளும் பல சமூகங்களும் தங்களைக் கண்டறிந்து, தங்களுடைய சூழலைக் கண்டுணர்ந்து, தங்களின் தேவைகளையும் அவசியத்தையும் பிரித்தறித்து, அவற்றை எட்டுவதற்கான வழியறிந்து, அதற்காகச் செயலாற்றும் முறையறிந்து செயற்படுகின்றன.
இதற்காக அவை தேவைகளைப் பற்றிய தெளிவு, சுயமதிப்பீடு, வெளி மதிப்பீடு, தங்களுடைய செயற்பாடுகளைப் பற்றிய தெளிவு, முரண்பாடுகளைத் தீர்த்துக்கொள்ளும் ஆற்றல், ஒருங்கிணைவு, உறுதி, செயற்றிறன், தங்களின் செயலைச் செய்வதில் உள்ள நேர்மை, வெற்றியைக் குறித்த நம்பிக்கை, அந்த வெற்றியைப் பெற வேண்டும் என்ற முனைப்புக்கு வழங்கிய அர்ப்பணிப்பு, யதார்த்த நிலைமைகளை விளங்கிக் கொள்ளல், ஒருங்கிணைந்து செயற்படுவதில் பேணவேண்டிய விட்டுக்கொடுத்தல் மற்றும் செயற்பாட்டாளர்களிடையயே பேணப்பட்ட அனுசரித்துப் போதல் என்ற அடிப்படை விசயங்களை ஒழுங்கு படுத்திச் செயலாற்றுகின்றன.

அதிகம் ஏன், இலங்கை அரசுக்கே எவ்வளவு நெருக்கடிகள் கடந்த 30 ஆண்டுகளுக்குள் ஏற்பட்டுள்ளன. ஆனால், அவற்றையெல்லாம் அது எப்படி எதிர்கொண்டு வெற்றியடைந்திருக்கிறது?

‘யானைக்கு துப்பிக்கை பலம் என்றால், எலிக்கு வளை பலம்’ என்பார்கள். இது எதைச் சொல்கிறது?

ஆனால், ஈழத்தமிழர்கள் இவற்றுக்கு எதிர்த்திசையிலேயே தங்களுடைய தோணிகளை – கப்பல்கள் என்று நினைத்து ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

‘புத்திமான் பலவான்’ என்று தெரியாமலா சொன்னார்கள்?

அந்தப் புத்திசாலித்தனத்தை மக்கள் மயப்படுத்திச் செயலாற்றும்போதே விழிப்பும் விடுதலையும் கிட்டும்.

முள்ளை முள்ளால் எடுப்பது, காற்றுள்ள போதே தூற்றிக் கொள், சிறு துரும்பும் பல்லுக்குத்துவதற்கு உதவும் என்றெல்லாம் தமிழில் முன்னோர் சொல்லித்தான் வைத்திருக்கிறார்கள்.

ஆனால், அமெரிக்காக்காரனின் மூத்திரமும் தீர்த்தமாக இனிக்கிறது சிலருக்கு. இந்தப் புத்திசாலித்தனத்தை என்னவென்றுரைப்பது?

00

உபாயமும் அதிகாரமும் - 03

Friday 25 May 2012




உபாயமும் அதிகாரமும் என்ற கட்டுரையின் இறுதிப் பகுதி இது. இலங்கையின் சமகால அரசியலை மையப்படுத்தி எழுதப்பட்டது. குறிப்பாக தமிழரின் அரசியலை மையப்படுத்தி. விரிவான இந்த விடயம் பற்றி விரிவாக ஆராயப்படவும் விவாதிக்கப்படவும் வேணும்.





“தென்னாசியப் பிராந்தியத்தில் சிங்கள இராசதந்திரத்தைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிடுவார்கள். குறிப்பாக இந்தியா என்ற பென்னாம் பெரிய நாட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் இலங்கை தன்னுடைய இராசதந்திரத்தினாலேயே – உபாயத்தினாலேயே - தாக்குப் பிடித்துக்கொண்டிருக்கிறது. இதில் சிங்கள இராசதந்திரத்தின் சிறப்பைக் காணலாம்” என்று பல ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அதாவது “யானைக்குத் தும்பிக்கை பலம் என்றால் எலிக்கு வளை பலம் என்பதைப் புரிந்து கொண்டவர்கள் சிங்கள இராசதந்திரிகள்” என்று குறிப்பிடுகிறார் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு.

இந்தியாவின் அச்சுறுத்தல் - தமிழ் நாட்டின் படையெடுப்பு அபாயங்கள் - சிங்களவர்களைத் தேர்ந்த இராசதந்திரத்தை நோக்கி அவர்களைச் சிந்திக்கத் தூண்டியிருக்கலாம்.

மேலும் கடந்த அறுநூறு ஆண்டுகளாக பல தரப்பினரின் ஆதிக்கப்போட்டிக்கான களமாக இலங்கை இருப்பது இன்னும் அவர்களை இந்தத் துறையில் தேர்ச்சியுடையவர்களாக்கியிருக்கலாம்.

என்றபடியால்தான் அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொண்டதுடன் துலக்கமான தனியான அடையாளங்களைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அதிலும் தென்னாசியப் பிராந்தியத்தில் - ஏன் உலகிலேயே – மிகச் சிறிய தரப்பினராக இருந்துகொண்டே வலுவானவர்களாக – தாக்குப் பிடிக்கும் திறனுடையவர்களாக - சிங்களவர்கள்
இருக்கிறார்கள்.

சிங்களவர்களிடம் உருவாகிய இந்த இராசதந்திரம் அவர்களை அதிகாரத் தரப்பினர் ஆக்கியதுடன், மேலும் உபாயங்களில் நம்பிக்கையுள்ளவர்களாகவும் தேர்ச்சியுடையவர்களாகவுமாக ஆக்கியது.
‘அரசும் அதிகார வர்க்கமும் தொடர்ச்சியாக இருக்கும் போது அதையொட்டி உபாயங்களும் தேர்ச்சியுறும் வளரும்’ என்று சொல்வார்கள். இது சிங்களத்தரப்புக்கும் பொருந்தும்.

என்றபடியால்தான் இலங்கையில் மிகச் செழிப்பான இராச்சியங்களைக் கொண்டவர்களாகவும் புகழுடைய மன்னர்களைக் கொண்டதாகவும் சிங்கள வரலாறு இருக்கிறது.

மகாவம்சம் புனைவுகளை அதிகமாகக் கொண்ட வரலாற்று நூலாக இருப்பினும் அது சிங்கள ஆதிக்கத்தரப்பினுடைய உபாயத்தின் விளைவு அல்லது வெளிப்பாடு எனலாம்.

இவ்வளவு சக்திவாய்ந்த சிங்களத்தரப்பின் உபாயம் இப்போது நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறது. இதற்குக் காரணம் அது இனவாதத்திற்குள் சிக்கியிருப்பதே. இனவாதம் என்பது குறுகிய அரசியல் எண்ணமாகும். அதேவேளை அது தவறானதாகும்.

ஆனால், உபாயங்களில் தேர்ச்சியுடைய தரப்புகள் இந்த மாதிரித் தவறான அரசிலிலும் கணிசமான காலம் வெற்றிகளைப் பெற்றேயிருக்கும்.  இதற்குக் காரணம் இவற்றின் தேர்ச்சியான உபாயங்களின் மூலம் இவை, தங்கள் நெருக்கடிகளை மிக இலகுவாகக் கடந்த விடக் கூடியனவாக இருப்பதேயாகும்.

ஆனாலும் இறுதியில் இந்த வகையான அரசியலுக்குப் பயன்படுத்தப்படும் உபாயம் நிச்சயம் தோல்வியிலேயே போய்முடியும். இதற்கு வரலாறு நெடுகிலும் ஏராளம் உதாரணங்கள் உண்டு.

கடந்த கால் நூற்றாண்டுக் காலத்தில் அதிக நெருக்கடியை இலங்கையில் – சிங்கள இராசதந்திரம் சந்தித்திருக்கிறது. அந்த நெருக்கடிகளைத் தன்னுடைய தேர்ச்சியான அணுகுமுறையின் மூலம் அது வென்றும் வந்திருக்கிறது.
உதாரணமாக, இந்திய நெருக்கடி 1987 இல் இலங்கைக்குப் பெரிய சவாலாகவே இருந்தது. அதையும் விட 1980 களில் தமிழ்ப் போராளிகளை இந்தியா தனக்குச் சாதகமாக வளர்த்துக் கையாண்டது. ஆனால் அத்தனை இயக்கங்களையும் இன்று இலங்கை (சிங்கள உபாயம்) தோற்கடித்துத் தன்வசப்படுத்தி விட்டது. இதுதான் சிங்கள உபாயத்தின் வெற்றி. இந்தியா வளர்த்த குழந்தைகள் இப்போது இலங்கையின் பிள்ளைகளாகி விட்டனர்.
ஆனாலும் ஒரு வகையில் சிங்கள அதிகார வர்க்கமும் அதைத் தாங்கும் சிங்கள உபாயமும் தோல்விகளை அல்லது சரிவுகளை இந்தக் காலகட்டத்தில் சந்தித்திருக்கிறது எனலாம்.

தமிழர்களை ஒடுக்க முற்பட்டவேளையிலேயே சிங்கள உபாயத்தின் தோல்வி ஆரம்பமாகியது.

ஒடுக்குமுறை என்பது தவறான அரசியல் வழிமுறையாகும் என்று கண்டோம். என்னதான் நுட்பங்களையும் தந்திரோபாயங்களையும் பயன்படுத்தினாலும் ஒடுக்குமுறையை ஒரு போதும் தளர்வற்றுத் தொடரமுடியாது. எவ்வளவு பலத்தோடிருந்தாலும் ஆதிக்கம் ஒருநாள் முடிவுக்கு வந்தே தீரும்.

ஆபிரிக்காவை மேற்குலகம் ஆக்கிரமித்திருந்தது. கறுப்பர்களை வெள்ளையர்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். இறுதியில் என்ன நடந்தது? ஒரு நாள் வெள்ளையர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டியிருந்தது. ஒடுக்குமுறைக்கு முடிவுகட்டவும் வேண்டியிருந்தது. இங்கே வெள்ளையர்களின் அத்தனை உபாயங்களும் தோற்றுப்போயின.
ஒருகாலம் சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜித்தை வைத்திருந்த பிரித்தானியா – ஒடுக்குமுறைக்குப் பயன்படுத்தும் பிரித்தாளும் தந்திரத்தில் பேர் பெற்ற பிரித்தானியா-  தன்னுடைய ஆதிக்கக் கரங்களை உலகெங்கிலும் இருந்து  பின்னே எடுக்க வேண்டிவந்தது.

இன்னும் சொல்லப்போனால், கி.பி 1400 களிலிருந்து ஏறக்குறைய ஆறுநூற்றாண்டுகள் வரையில் உலகத்தின் ஏனைய பகுதிகளைத் தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தது ஐரோப்பா.

ஆனால், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இந்த நிலைமைகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. இன்று இந்த நிலைமை இன்னும் மாறியுள்ளது. இப்போது பல நாடுகள் சுயாதீனமாகவே இருக்கின்றன. பல சமூகங்களும் சுயாதீனமுடையவையாக மாறியுள்ளன.

அறுநூறு ஆண்டுகால ஆதிக்கத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த உபாயம் ஒருபோது முடிவுக்கு வந்ததே உண்மை. இதை நாம் கவனித்துக் கொள்ள வேணும்;.

இலங்கையில் தமிழர்களை ஒடுக்குவதில் குறியாக இருக்கும் சிங்கள அதிகார வர்க்கம் அதற்கான உபாயங்களைப் பற்றியே அதிகமாகச் சிந்திக்கிறது. இதனால், அது, வெளிச் சக்திகளையும் உள்நாட்டுச் சக்திகளையும் தனது ஒடுக்குமுறை அரசியலுக்குச் சார்பாக – சாதகமாகப் பயன்படுத்த விளைகிறது. இதற்காகவே அது தன்னுடைய மூளையின் பெரும்பகுதியையும் செலவழிக்கிறது.

இதேவேளை சிங்கள அதிகாரவர்க்கத்தைப் பணிய வைக்க விரும்பும் உள் மற்றும் வெளிச் சக்திகள் சிங்களத் தரப்பிற்கு எதிராக இருக்கும் தமிழ்த்தரப்பை தேவைக் கேற்றமாதிரியும் இனவாதத்தை சந்தர்ப்பத்திற்கு ஏற்றமாதிரியும் பயன்படுத்திக் கொள்கின்றன.

இது சிங்களத் தரப்புக்குப் பல சந்தர்ப்பங்களிலும் நெருக்கடிகளையே கொடுக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகாலத்தினுள், சிங்கள அதிகார வர்க்கம்  பல நெருக்கடிகளை உள்நாட்டுச் சக்திகளாலும் வெளிச் சக்திகளாலும் சந்தித்துள்ளது.

இந்தியா, மேற்குலகம், ஐ.நா அமைப்புகள், மற்றும் மனித உரிமை அமைப்புகள் என வெளி நெருக்கடிகளாலும் போராட்ட இயக்கங்கள் - குறிப்பாக விடுதலைப் புலிகள் என உள் நெருக்கடிகளாலும் சிங்கள அதிகார வர்க்கம் நெருக்கடிப் பட்டிருக்கிறது.

இந்த நெருக்கடிகளால் இலங்கைத் தீவே பெரும் அழிவுகளையும் இழப்புகளையும் பின்னடைவையும் சந்திக்க வேண்டியேற்பட்டது.
என்னதான் உபாயங்களைக் கையாண்டபோதும் சிங்கள அதிகார வர்க்கம் நினைத்ததைப் போல ஒடுக்குமுறை என்பது இலகுவானதாக இருக்கவில்லை. எவ்வளவுதான் சிறப்பான உபாயங்களைப் பிரயோகித்தாலும் ஒடுக்குமுறையின் எதிர்விளைவுகளால் ஏற்பட்ட நெருக்கடிகளைத் தடுக்க சிங்கள அதிகார வர்க்கத்தினால் முடியவில்லை.
சிங்கள ஒடுக்குமுறையினால் தமிழர்கள் மட்டும் அழிவுகளையும் இழப்புகளையும் வேதனைகளையும் துயரத்தையும் பதற்றத்தையும் பெறவில்லை. சிங்களவர்களும் அழிவுக்கும் இழப்புக்கும் வேதனைக்கும் நெருக்கடிக்கும் பதற்றத்துக்கும் உள்ளானார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.

இந்த ஒடுக்குமுறையின் விளைவுகளால், சிங்களத் தலைவர்கள் பலரை அது  இழந்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் இனப்போரினால் பலியிடப்பட்டிருக்கின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காலிழந்தும் கையிழந்தும் இருக்கின்றனர். பல கோடிக்கணக்கான சொத்திழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

இன ஒடுக்குமுறையினால் இலங்கைத் தீவே பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது. இது சிங்கள மக்களின் வாழ்க்கையையும் பாதித்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், இன்று ஏற்பட்டிருக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் அத்தனைக்கும் சிங்கள அதிகார வர்க்கம் உருவாக்கிய போரே காரணமாகும்.

இவை மட்டுமல்ல, இன ஒடுக்குமுறைப் போர் தீவிரம் பெற்று அது மனிதாபிமான எல்லைகளுக்கப்பால், பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்களையே பலியிட்டது.

இவையெல்லாம் இன்று பெரும் மனித உரிமை மீறல்களாக்கப்பட்டு சர்வதேசத்தின் முன் விசாரணை நடத்தும் அளவுக்கும் தண்டனையைப் பெறவேண்டிய நிலைக்கும் கொண்டு வந்து விட்டுள்ளன. இப்போது தமிழர்களை விடவும் சிங்களத் தரப்பினரே அதிகமாகக் கலங்குகின்றனர்.

உலகத்தின் முன்னே சிங்களவர்கள் தலைகுனியும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
புலிகளும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிந்தாலும் அது ஒட்டுமொத்தமான தமிழ்ச் சமூகத்தை அடையாளப்படுத்தவில்லை. ஆனால், சிங்களத் தரப்பில் ஒட்டுமொத்தச் சிங்களச் சமூகமும் இதைத் தன்னுடைய தலையில் விழுந்துள்ள அடியாகக் கருதும் அளவுக்கே நிலைமையுள்ளது. இதை ஏற்படுத்தியதே சிங்கள இனவாதந்தான். அதாவது, சிங்கள இனவாதத்தைப் பாதுகாக்கும் அதிகாரத்தரப்பின் உபாயமே.

சிங்கள உபாயம் எல்லா நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வெற்றி பெற்று வந்தாலும் அதை ஒரு தீய பிசாசைப்போலச் சூழ்ந்து கொண்டிருக்கும் தொடர் நெருக்கடிகளை அதனால் தடுக்க முடியவில்லை. இதற்குக் காரணம் முன்னரே குறிப்பிட்டிருப்பதைப் போல அது பின்பற்றும் இனவாதமேயாகும். அதாவது தவறான அரசியல் அணுகுமுறைகளேயாகும்.

சனங்களை அழித்து, சொத்துகளை அழித்து, நாட்டை அழித்து, இன்று தன்னுடைய கழுத்தில் தானே சுருக்குக் கயிற்றைப் போட்டிருக்கிறது இந்தத் தவறான உபாயம்.

ஆனால், இந்த நெருக்கடியிலிருந்தும் நாளைக்கு சிங்களத் தரப்பு மீண்டு விடலாம். போரைச் செய்வதற்கும் புலிகளை ஒடுக்குவதற்கும் சர்வதேச சமூகத்தைத் தன்னுடைய உபாயங்களால் வெற்றி கொண்ட சிங்களத்தரப்பு இதிலும் வெற்றியடையலாம்.

ஆனால், இனவாதத்தைத் தொடரும்வரையில் அதனைத் தொடர்ந்து கொண்டேயிருக்கும் பல நெருக்கடிகள். இதைத் தடுப்பதற்கு எந்த உபாயத்தினாலும் முடியாது. இறுதியில் ஒருநாள் இந்த உபாயம் தோல்வியில் முடிந்து சமாதிக்குச் சென்று விடும். இது விதி.

ஆகவே, உபாயங்கள் என்பது எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதில்தான் அவற்றின் வெற்றியும் தோல்வியும் அமைந்திருக்கின்றன. கத்தியைப் பயன்படுத்தி மரத்தையும் வெட்டலாம். மனிதரையும் வெட்டலாம். இதில் எதைச் செய்ய அதைப் பயன்படுத்தப் போகிறோம் என்பதில்தான் நமது அறிவு தங்கியிருக்கிறது. நமது பண்பும் தங்கியுள்ளது.

00



சுற்றி வளைப்புக்குள் சிக்குண்ட தரப்பு

Thursday 24 May 2012



பேச்சுவார்த்தையில் அரசாங்கம் தீர்வை முன்வைக்காததால் கூட்டமைப்புத் தப்பிப் பிழைத்தது. தீர்வை அரசாங்கம் முன்வைத்திருந்தால் அதை ஆதரிப்பதா இல்லையா என்ற விவாதத்தில் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கவும் வாய்ப்பிருந்திருக்கும். இது கூட்டமைப்பினுள் சிலவேளை முரண்களை உருவாக்கயிருக்கும். ஆனால், துரதிருஸ்ரவசமாக அரசாங்கமும் தீர்வெதையும் முன்வைக்கவில்லை. அப்படி அது தீர்வை முன்வைத்திருந்தால் சிலவேளை அதுவே கூட்டமைப்புக்குப் பெரும் நெருக்கடியாகவும் பிரச்சினையாகவும் இருந்திருக்கும்.





பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் செல்லுமா? என்பது இன்று பரவலாக எழுப்பப்படுகின்ற ஒரு கேள்வியாகும். தெரிவுக்குழுவுக்குக் கூட்டமைப்புச் செல்வதில் லாபங்கள் என்ன? அதன்மூலம் எதையெல்லாம் சாதிக்க முடியும்? தெரிவுக்குழுவின் மூலம் தீர்வை எட்டுவதற்கு மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் விசுவாசமாகச் செயற்படுமா என்ற கேள்விகளும் துணையாக எழுப்பப்படுகின்றன.

இதற்கான பதில்களைக் காண்பதற்கு முன்னர், இனப்பிரச்சினைக்கு எத்தகைய தீர்வு சாத்தியம் என்பது தொடர்பாக தமிழர்களோ அல்லது இலங்கையிலுள்ள மக்களோ அல்லது அரசாங்கமோ இதுவரையில் பகிரங்கமாக அறிவிக்கவில்லை.

பொதுவாகப் பல முன்மொழிவுகள் மொழியப்பட்டுள்ளனவே தவிர, இதுதான் பொருத்தமான தீர்வு அல்லது இதுதான் பொருத்தமான நடைமுறை என்று எத்தகைய முன்வைப்பையும் யாரும் வைக்கவில்லை.

13 பிளஸ் என்ற கருத்திட்டம் ஒன்று இப்போது பிரஸ்தாபிக்கப்படுகிறது. இதுவே அதிகமாகப் பிரஸ்தாபிக்கவும் படுகிறது. ஆனால், இதை ஏற்க முடியாது என்று தமிழர்களில் ஒரு தரப்பினர் கடுமையாக வாதிட்டு வருகின்றனர்.

நாடு கடந்த தமிழீழக் கோட்பாட்டுடன் ஒரு தரப்புச் செயற்பட்டு வருகிறது. உள்ளக சுயாட்சி என்ற கருத்தை ஒரு தரப்பு வலியுறுத்துகிறது. சுயாட்சியை வலியுறுத்தும் சமஸ்டியே அவசியம் என இன்னொரு தரப்பு சொல்கிறது. கிடைப்பதைப் பெற்றுக் கொள்வோம் முதலில். பின்னர் கட்டம் கட்டமாக முன்னேறலாம் என்கின்றது இன்னொரு தரப்பு.

இவையெல்லாமே இதுவரையிலும் சாத்தியமற்ற முறையில் இருப்பதையும் இதில் எவையும் நடைமுறைக்கு வராமலிருப்பதையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.

ஆனாலும் அரசியல் அரங்கில் தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு நிலைப்பாட்டை அறிவித்து வருகின்றன. அதேவேளை இந்தத் தெரிவுகளை ஒவ்வொரு தரப்பும் தமது நிலைப்பாடாக அறிவித்து அதில் ஓரளவுக்கு நம்பிக்கை கொண்டும் உள்ளன.

ஆனால், தற்போது இதில் எத்தகைய நிலைப்பாட்டைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக் கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. ஏனெனில் அந்த அமைப்பினுள் பலவகையான நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் உள்ளனர்.

இதனால், இதுவரையில் பகிரங்கமாகவோ அல்லது ரகசியமாகவோ கூட்டமைப்பினால் ஒரு தீர்மானத்துக்கு வரமுடியாமலிருக்கிறது.

கடந்த தடவை பேச்சுகளுக்குச் சென்ற போது தீர்வுத் திட்டத்துடன் சென்றிருக்க வேண்டும் என்று கூட்டமைப்பை நோக்கிக் குற்றச்சாட்டை  முன்வைத்தவர்கள் உண்டு. அவர்கள் அப்படிக் கூடியதில் தவறும் இல்லை. ஆனால், கூட்டமைப்பினால் எத்தகைய தீர்வை முன்வைக்க முடியும்? அதனால், அப்படி இலகுவாக ஒரு தீர்வுக்குச் செல்ல முடியுமா? என்ற கேள்விகள் உள்ளனவே.

ஏனெனில் நாம் முன்னரே சொன்னதைப்போல அது பலவிதமான கருத்தோட்டமுள்ளவர்களைக் கொண்ட ஒரு கூடாரம். எனவே, அதில் ஏகமனதாக ஒரு தீர்மானத்துக்கு வர முடியாதிருக்கிறது.

ஆகவேதான் அது ஒரு தீர்மானத்துக்குச் செல்ல முடியாமல் தவிர்த்தது. அதேவேளை அரசாங்கம் ஒரு தீர்வை முன்வைத்தால் அதிலிருந்து தெரிவைச் செய்யலாம் என்று கருதியிருந்தது,

ஆனால், துரதிருஸ்ரவசமாக அரசாங்கமும் தீர்வெதையும் முன்வைக்கவில்லை. அப்படி அது தீர்வை முன்வைத்திருந்தால் சிலவேளை அதுவே கூட்டமைப்புக்குப் பெரும் நெருக்கடியாகவும் பிரச்சினையாகவும் இருந்திருக்கும்.

ஏனெனில் அப்படியொரு தீர்வை அரசாங்கம் முன்வைத்திருந்தால் அதை ஆதரிப்பதா இல்லையா என்ற விவாதத்தில் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கவும் வாய்ப்பிருந்திருக்கும். இது கூட்டமைப்பினுள் சிலவேளை முரண்களை உருவாக்கயிருக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஆகவே அந்தப் பேச்சுவார்த்தையில் அரசாங்கம் தீர்வை முன்வைக்காததால் கூட்டமைப்புத் தப்பிப் பிழைத்தது என்று நாம் கருதலாம்.

அடுத்தது இப்போது தெரிவுக்குழுவுக்கு வரவேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துக் கொண்டிருக்;கிறது. தெரிவுக்குழுவுக்கு கூட்டமைப்புச் செல்ல வேண்டும் என்ற தொனியோடான அறிவிப்புகளை அமெரிக்கா, இந்தியா போன்ற  நாடுகளும் சொல்லி வருகின்றன.

கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் இந்த இரண்டு நாடுகளின் சொல்லைத் தட்டிவிட்டுத் தனியாகச் சுயாதீனமாக ஒரு தீர்வை அதனால் எடுக்கவும் முடியாது.

நிபந்தனையுடன் கூடிய அறிவிப்பைச் செய்து கொண்டு தெரிவுக்குழுவுக்குக் கூட்டமைப்புச் செல்லும்  என கூட்டமைப்பின் வலுமிக்க சமிக்ஞையாளர் சுமந்திரன் சொல்லியிருக்கிறார்.

ஆனால், அப்படிச் செல்லும்போது எத்தகைய தீர்மானத்தைக் கூட்டமைப்புக் கொண்டு செல்லும் என்றோ எத்தகைய தீர்வை அது ஏற்கும் என்றோ அவர் சொல்லவில்லை.

ஆப்படிச் சொன்னால் அது கூட்டமைப்பிற்கு உள்ளும் நெருக்கடிகளைக் கொடுக்கும் வெளியேயும் நெருக்கடிகளைக் கொடுக்கும். பொதுவாகக் கூட்டமைப்பு ஒரு தீர்வை முன்மொழிந்தால் அதை அந்தக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பவர்களும் விவாதிப்பவர்களும் உள்ளனர். ஆதைப்போல கட்சிக்கு வெளியே உள்ள தமிழ் அமைப்புகளும் புலம்பெயர் தமிழர்களும் கூட விவாதிப்பார்கள், விமர்சிப்பார்கள், சில வேளை எதிர்ப்பு நடவடிக்கையிற் கூட இறங்குவார்கள்.

அதேவேளை, கூட்டமைப்பின் தீர்மானத்தை ஏற்கவேண்டாம் என்று சிங்களத்தரப்பிலும் தீவிர நிலையைக் கொண்ட சக்திகள் சொல்லக்கூடும்.

எனவே தீர்வொன்றைக் கொண்டு செல்ல முடியாத அவலமும் கூட்டமைப்புக்கு உண்டு. அதேவேளை தீர்வெதையும் எடுத்துச் செல்லாமல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் அதை அரசாங்கம் தனக்கான வாய்பபாகக் கருதிக் கொண்டு மேலும் காலத்தை இழுத்தடிக்கவும் வாய்ப்புண்டு.

அப்படித் தீர்வொன்றைக் கொண்டு செல்வதாக இருந்தால் அதனால் எத்தகைய தீர்வை எடுத்துச் செல்ல முடியும்?

இன்றைய உலக யதார்த்தத்தின் படியும் இலங்கையின் கள நிலைவரப்படியும் தனி ஈழத்திற்கான கோரிக்கை பொருத்தமற்றது என்று சிலர் வாதிடுகின்றனர். இதை விளங்கிக் கொள்ள முடியாமையினால் தான் நாம் அளவுக்கதிகமான இழப்புகளைச் சந்திக்க வேண்டிவந்தது. அதேவேளை போராட்டத்திலும் வெற்றிபெறமுடியாமற் போனது என்றும் அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

ஆகவே, சர்வதேச சமூகம் எதிர்க்காத – அது நிராகரிக்க முடியாத ஒரு தீர்வை கூட்டமைப்பு முன்மொழிய வேண்டும். ஆனால், அப்படியான ஒரு தீர்வை கூட்டமைப்பு முன்மொழிந்தால் அதைத் தமிழ்த் தீவிர நிலையாளர்கள் எதிர்ப்பர்.

எனவே எத்தகைய முடிவையும் எடுக்க முடியாத ஒரு நெருக்கடிச் சூழலுக்குள் இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்புச் சிக்கியிருக்கிறது.

இதற்;கு அவசியமானது என்னவெனில், ஆளுமை மிக்க உறுத்திப்பாடே.

ஆனால், அத்தகைய ஆளுமை மிக்க தலைமைத்துவம் கூட்டமைப்பில் இருவருக்கே தற்போதுண்டு. இந்த இருவரும் ஓரளவுக்குச் சர்வதேச சமூகத்தின் உணர்வோட்டங்களைப் புரிந்து கொள்ளக் கூடியவர்கள்.  ஆனால், தமிழ்த் தீவிர நிலையாளர்களினால் இவர்கள் சந்தேகிக்கவும் கண்டிக்கவும் படுகிறவர்கள்.

ஒருவர் கூட்டமைப்பின் தலைவர் திரு. சம்மந்தன். மற்றவர் சம்மந்தனின் ஆசீர்வாதத்தைப் பெற்ற திரு. சுமந்திரன்.

இவர்கள் இருவருமே அரசியல் அணுகுமுறைகளைக் குறித்துச் சிந்திப்பவர்கள். எனவே இவர்கள் எத்தகைய தீர்வைப் பற்றிச் சிந்திக்கிறார்கள் என்பதைப்பொறுத்தே அடுத்த கட்ட நிகழ்ச்சிகள் அமையவுள்ளன. இவர்கள் இருவருக்குமே முஸ்லிம் காங்கிரசுடன் ஒரு இடைநிலைப்பட்ட புரிந்துணர்வும் உறவும் உள்ளது.

இவர்கள்தான் தெரிவுக்குழுவில் பங்கேற்பதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பவர்களும் கூட.

தெரிவுக்குழுவில் பங்கேற்பதால் என்ன லாபங்கள் தமிழர்களுக்குக் கிடைக்கும் என்பதற்கு முன்னர், அதில் பங்கேற்பதாக இருந்தலென்ன பங்கேற்காது விட்டாலென்ன, இனப்பிரச்சினைக்கான தீர்வு எத்;தகையதாக அமையும் என யாருக்காவது தெரிந்தால் அதுவே போதும்.

ஏனென்றால் அதிலிருந்;தே எத்தகைய நடைமுறைகளை அதற்காகக் கைக்கொள்ள முடியும் என்று சிந்திக்கலாம்.

ஆதற்கெல்லாம் முன்னர் முஸ்லிம்கள் என்ன நினைக்கிறார்கள்? ஆவர்கள் எதற்கெல்லாம் தயாராக இருக்கிறார்கள் என்றும் நாம்  சிந்திக்க வேணும்.

தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதில் லாபமா நட்டமா என்பதற்கு அப்பால், இவற்றைக் குறித்துச் சிந்திப்பது அவசியம். அதற்குப் பிறகே அடுத்த காரியம்.



00

வன்னியில் பல்கலைக் கழக பீடங்கள் - யாழ்ப்பாணச் சமூகம் அனுமதிக்குமா?

Monday 14 May 2012



இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு எவ்வாறு சிங்கள மேலாதிக்க வர்க்கம் எதிராகச் செயற்படுகிறதோ அவ்வாறே வன்னிப் பகுதியின் மேம்பாட்டுக்கு ஒத்துழைக்காமல், அதற்கு எதிராக யாழ்ப்பாணச் சமூகம் செயற்படுகிறது. கிளிநொச்சி தனி மாவட்டமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, இயங்குகின்ற போதும் இன்னும் அது யாழ்ப்பாணத்தின் தொங்குதசையாக - யாழ்ப்பாணத்தை நம்பியே தங்கவைக்கப்பட்டுள்ளது. ஆனால், யாழ்ப்பாணத்துக்கு, மண், நெல், எரு, கால்நடைகள், விறகு, மரம், மரப்பொருட்கள் எனப் பலவும் வன்னியிலிருந்தே எடுக்கப்படுகின்றன. போதாக்குறைக்கு, அடுத்த ஆண்டுகளில், கிளிநொச்சி - இரணமடுக் குளத்திலிருந்தே குடிநீரும் யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது. ஆனால், யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்கு வந்து சேவையாற்றுவதற்கு பிரதேச மனநிலை இடமளிக்கத் தயங்குகிறது. தேசியப் பற்றோ இந்த இடத்தில் கள்ளத்தனமாக மயங்குகிறது.



வன்னிப் பிராந்தியத்தின் பாடசாலைக் கல்விப் பிரச்சினைகள் ஒருபக்கம் இருக்க, இன்னொரு பக்கத்தில் அங்கே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொறியியற் பீடம், விவசாய பீடம் ஆகியவற்றை ஆரம்பிப்பதற்கான ஆயத்தங்கள் நடைபெறுகின்றன.

இதற்காக கடந்த வாரம் கிளிநொச்சிக்கு உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்கா தலைமையிலான அணியினர் கிளிநொச்சியில் குறிப்பிட்ட பீடங்கள் அமையவுள்ள பகுதிகளைப் பார்வையிட்டபின்னர், சம்மந்தப்பட்ட தரப்பினர்களுடன் ஒரு உயர்மட்டக் கலந்துரையாடலையும் மேற்கொண்டுள்ளார்.

இதில் ஏற்கனவே கிளிநொச்சியில் இயங்கிய விவசாய பீடத்தை மீண்டும் கிளிநொச்சியில் இயங்க வைப்பதற்கான முயற்சிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இநதத் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் நடைமுறையில் உள்ள பிரச்சினைகளைக் குறித்தே இந்தப் பத்தி சிந்திக்கிறது.

ஏற்கனவே கிளிநொச்சியில் இயங்கிய விவசாய பீடம் யுத்தத்தின் காரணமாகவே யாழ்ப்பாணத்துக்குச் சென்றது. யுத்தம் முடிந்து, மீள் குடியேற்றம் நடைபெற்று, மக்கள் தங்களின் வாழ்வை மீளக் கட்டியெழுப்பி வருகின்றபோதும் யாழ்ப்பாணத்தில் இயங்கும் விவசாய பீடத்தை கிளிநொச்சிக்குக் கொண்டு வருவதற்கு இன்னும் பல்கலைக்கழக நிர்வாகம் முழுஅளவில் முயற்சிக்கவில்லை.

இணைப்பு நிலையில் தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தில் வைக்கப்பட்டிருக்கும் பல்கலைக்கழகத்தை கிளிநொச்சிக்குக் கொண்டு வருவதற்குப் பல பிரச்சினைகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதில் ஒன்று பௌதீக வளப்பற்றாக்குறை. இதுவே முக்கியமானதாகவும் முதன்மையானதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இந்தப் பௌதீக வளப் பற்றாக்குறை என்பது தனியே பல்கலைக்கழத்திற்கு மட்டுமே உரிததான ஒன்றல்ல. வன்னியில் யுத்தத்திற்குப் பின்னர் இயங்கி வரும் அத்தனை அரச நிறுவனங்களும் மக்களும் மக்கள் அமைப்புகளும் பெரும் பற்றாக்குறைகளின் மத்தியிலேயே இயங்கி இன்று நிமிர்ந்திருக்கின்றன. அல்லது வளர்ந்து வருகின்றன.

இதை மிக அருமையாக இந்த உயர்மட்டக் கலந்துரையாடலின்போது தெரிவித்திருந்தார் கிளிநொச்சி மாவட்டக் கல்வி அபிவிருத்திப் பேரவையின் முக்கியஸ்தரும் வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் அத்தியட்சகருமான மருத்துவக் கலாநிதி எஸ். சத்தியமூர்த்தி. அவர் கூறும்போது, “எல்லா வளங்களையும் உருவாக்கி விட்டுத்தான் பல்கலைக்கழகத்தை இயங்க வைப்பது என்பது மிகக் கடினமான காரியம். அது இப்போதைக்குச் சாத்தியப்படக்கூடிய ஒன்றுமல்ல. பதிலாக அடிப்படை வளங்களை உருவாக்கிக் கொண்டு, அதிலிருந்தே பணிகளை ஆரம்பித்துச் செயற்படும் வேளையில் ஏனைய வளங்களைப் பெற்றுக் கொள்வது சாத்தியமானது. அதுவே பொருத்தமானதும் கால தாமதத்தைக் குறைத்து வெற்றியைத் தரக்கூடியது என்று.

இந்தக் கூற்று உண்மையானது. இதுவே பொருத்தமானதும்கூட.
மீள் குடியேற்றம் என்பது பற்றாக்குறைகளின் மத்தியிலேயே நடைபெற்றது. மீள் குடியேற்றப்பகுதிகளில் இயங்கிய மருத்துவமனைகள் அடிப்படை வசதிகள் குறைந்த நிலையிலேயே செயற்பட்டன. ஆனால், இப்பொழுது அவை எவ்வளவோ தூரம் மேம்பாடடைந்துள்ளன.

செயற்படத் தொடங்கும்போது தேவைகளை நிறைவேற்றும் வேகமும் அதிகரிக்கிறது என்பது பொதுவிதி. அந்த விதிக்கேற்ப இந்த மாற்றம் ஏற்பட்டது. இப்படித்தான் வன்னிப் பிராந்தியப் பாடசாலைகளில் ஏற்பட்ட வளர்ச்சியும் பிற அரச திணைக்களங்களின் செயற்படு முறையும் அமைந்திருந்தன.

ஆனால், இங்கே பிரச்சினை வேறு கோணத்திலேயே காணப்படுகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் இந்தப் பீடங்களை அமைப்பதற்கான பௌதீக வளப் பிரச்சினையையும் விட, மன நிலையிலுள்ள பிரச்சினைகளே இங்கே பாதகமாக உள்ளன.

யாழ்ப்பாணத்திலிருந்து விவசாய பீடத்தை மீண்டும் வன்னிக்குக் கொண்டு செல்வதற்கு அரசியல் மட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அதனுடன் சம்மந்தப்பட்ட நிர்வாகிகள், ஊழியர்கள் மட்டத்தில் ஏராளம் தயக்கங்கள் உள்ளன.

தங்குமிட வசதி, போக்குவரத்து வசதி, மின்சாரம், குடிநீர் போன்றவற்றின் வசதி எனப் பலவற்றை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஆனால் இப்பொழுதிருப்பதையும் விட மிக நெருக்கடியான சூழலில் 1990 களில் கிளிநொச்சியில் விவசாய பீடம் இயங்கியது என்பது நினைவு கொள்ளத் தக்கது.

ஒரு கட்டத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு வருவதற்கான எல்லாப்பாதைகளும் மூடப்பட்டிருந்த நிலையில் கிளாலி மூலமாக கடல்வழியே படகிற் பயணித்தே மாணவர்களும் கிளிநொச்சிக்குச் சென்றனர். அவ்வாறே விரிவுரையாளர்களும் கிளிநொச்சிக்குப் போயினர்.

இன்று நிலைமை அத்தனை இறுக்கமானதல்ல. வளங்களின் பற்றாக்குறை பெரிதாக இருந்தாலும் ஏனைய விடயங்களில் முன்னேற்றமுண்டு. போக்குவரத்து, மின்சாரம் போன்றவற்றிற் பிரச்சினையே இல்லை. ஆகப் பிரச்சினையாக இருப்பது தங்குமிடம் மட்டுமே.

பீடங்களுக்கான கட்டிட வசதிகள் கூடப் பெருமளவுக்கும் உள்ளன என்றே சொல்ல வேண்டும். யுத்தத்திற்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் சிறு சேதங்களுக்குள்ளாகிய நிலையில் இருக்கின்றன. அவற்றைத் திருத்தம் செய்து, புதிதாக வேணடிய தொகுதிக் கட்டிடங்களை நிர்மாணித்தால் இந்தத் தேவை பூர்த்தியாகி விடும்.

இவற்றைத் திருத்தம் செய்வதற்கு முதற்கட்டமாக 900 மில்லியன் ரூபாய் நிதியை இலங்கை அரசும் இந்திய அரசும் ஒதுக்கியுள்ளன. முக்கியமாக இந்தப் பீடங்களை அமைப்பதற்கான உதவிகளை வழங்குவதற்கு இந்தியா முன்வந்துள்ளது.

ஆகவே, இப்போதுள்ள பிரச்சினை, யாழ்ப்பாணத்திலிருந்து வரவேண்டிய விரிவுரையாளர்கள், ஊழியர்கள் போன்றோர் தொடர்பானதே. எனவேதான் சொல்கிறோம், இது பௌதீக வளப் பற்றாக்குறைப் பிரச்சினையையும் விட பிரதேச அமைவிடம் தொடர்பான மனநிலைப் பிரச்சினை என்று.

அதாவது, இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு எவ்வாறு சிங்கள மேலாதிக்க வர்க்கம் எதிராகச் செயற்படுகிறதோ அவ்வாறே வன்னிப் பகுதியின் மேம்பாட்டுக்கு ஒத்துழைக்காமல், அதற்கு எதிராக யாழ்ப்பாணச் சமூகம் செயற்படுகிறது. கிளிநொச்சி தனி மாவட்டமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, இயங்குகின்ற போதும் இன்னும் அது யாழ்ப்பாணத்தின் தொங்குதசையாக - யாழ்ப்பாணத்தை நம்பியே தங்கவைக்கப்பட்டுள்ளது. ஆனால், யாழ்ப்பாணத்துக்கு, மண், நெல், எரு, கால்நடைகள், விறகு, மரம், மரப்பொருட்கள் எனப் பலவும் வன்னியிலிருந்தே எடுக்கப்படுகின்றன. போதாக்குறைக்கு, அடுத்த ஆண்டுகளில், கிளிநொச்சி - இரணமடுக் குளத்திலிருந்தே குடிநீரும் யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது. ஆனால், யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்கு வந்து சேவையாற்றுவதற்கு பிரதேச மனநிலை இடமளிக்கத் தயங்குகிறது. தேசியப் பற்றோ இந்த இடத்தில் கள்ளத்தனமாக மயங்குகிறது.

இங்கே இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் இன்னொரு விடயத்தையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

வடமாகாண சபையின் நிர்வாக அமைப்பைத் திருகோணமலையில் இருந்து வடக்கே கொண்டு செல்வதற்குத் தீர்மானித்தபோது அந்த நிர்வாக அமைவிடத்தை வன்னியில் அமைக்கலாம் என அரசாங்கம் தீர்மானித்தது. அதற்கான அறிவிப்பையும் அது விடுத்திருந்தது.

ஆனால், அரசாங்கத்தின் சிந்தனையையே யாழ்ப்பாணத்து அதிகாரிகள் மாற்றிவிட்டனர். இதற்காக அவர்கள் கூறிய காரணங்கள் நகைப்பிற்குரியன. இதற்காக அவர்கள் எழுதிய பெரிடப்பட்ட கடிதங்களிலிருந்து பெயரிடப்படாத கடிதங்கள் வரையில் ஏராளமுண்டு.

எப்படியோ அவர்கள் தங்களுடைய முயற்சியில் வெற்றியடைந்து வடமாகாணசபையைத் தங்களுடைய வீடுகளின் கோடிகளுக்குப் பின்னே கொண்டு சென்று விட்டனர்.

இப்பொழுது வடமாகாணசபை யாழ்ப்பாணத்தில் எங்கே இயங்குகிறது என்று யாருக்குத் தெரியும்?

இலங்கையில் உள்ள மாகாணசபை நிர்வாகத்திலேயே மிக மோசமான நிலையில் உதிரிகளாகச் சிதைந்திருப்பது வடமாகாணசபை மட்டுமே.

மாகாணசபைக்கான நிதி ஒதுக்கீட்டில் அதிகளவு பணம், வீட்டு வாடகைக்கே கொடுக்கப்படுகிறது என மாகாணசபையின் நிர்வாகப் பிரிவு உயர் அதிகாரியான திரு. ரங்கராஜன் தெரிவித்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆகவே, இப்படித்தான் பல்கலைக்கழகத்தின் பீடங்களை அமைக்கும் நடவடிக்கைக்குப் பதிலாக மாற்று ஒழுங்குகளை ரகசியமாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் நிர்வாகமும் செய்து விடுமோ என்று மக்கள் அஞ்சுகிறார்கள்.
ஆனால், கிளிநொச்சியில் இந்தப் பீடங்களை அமைப்பதற்கு வன்னி மக்கள் தாராளமாக உதவ முன்வந்துள்ளது. இதனை உயர்கல்வி அமைச்சரே பாராட்டியுமுள்ளார்.

ஒரு பிரதேசத்தில் பல்கலைக்கழகமொன்று உருவாகும்போது அதற்கு அந்தப் பிரதேச மக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் அவசியம். அத்தகைய ஆதரவும் ஒத்துழைப்பும் அந்த மக்களின் ஈடுபாடும் கிளிநொச்சியில் இருப்பதையிட்டு மகிழ்வடைகிறேன் என்று அவர் கூறியிருக்கிறார்.

இந்தப் பல்கலைக்கழப் பீடங்களை அமைப்பதில் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திருகுமாரும் அமைச்சர் டக்கஸ் தேவானந்தாவும் கூடுதலான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சியில் பொறியியற் பீடத்தை அமைப்பது என்று அறிவிப்பு ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு மேற்பட்டது. இதற்கான காணி இதுவரையில் மூன்று இடங்களில் ஒதுக்கப்பட்டது.

முதலில் காணி ஒதுக்கப்பட்ட இடம் கிளிநொச்சி நகரில் டிப்போ அமைந்துள்ள இடத்துக்கு அண்மையான பகுதியாகும்.

ஆனால், பின்னர் இந்த இடங்களில் மக்கள் அத்துமீறிக் குடியேறியமையால் இந்த இடம் கைநழுவிப் போனது.

பிறகு முறிகண்டியிலிருந்து அக்கராயன்குளத்துக்குச் செல்லும் வீதியில் இரண்டாம் கட்டைக்கு அண்மையான பகுதியில. அதுவும் பின்னர் இல்லாமற் போய்விட்டது. இப்போது கிளிநொச்சி அறிவியல் நகர்ப்பகுதியில் அமைவிடம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஆனால், இந்த இடத்திலாவது அது அமையும் சாத்தியங்கள் உண்டா என்பதே இன்றைய கேள்வி.

இதேவேளை கடந்த வாரம் கிளிநொச்சி உள்ளிட்ட வன்னிப் பிராந்தியத்தின் கல்வி நிலை தொடர்பாக எழுதப்பட்டிருந்த கட்டுரை தொடர்பாக கல்விச் சிந்தனையாளர்களிடையே பலவிதமான அபிப்பிராயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதில் முக்கியமாவையாக இருப்பவை இரண்டு. ஒன்று, அடிப்படைக் கல்வியாகிய முன்பள்ளிக் கல்வி தோற்கும்போது அல்லது அந்தக் கல்வி போதாமையாக இருக்கும்போது பின்னர் தொடரப்படுகின்ற கல்வி மிகப் பாதிப்பானதாகவே இருக்கும். இது பெறுபேறுகளில் மட்டுமல்ல மாணவர்களின் ஆளுமை விருத்தியிலும் குறைபாட்டையே கொண்டிருக்கும் என்பது.

ஆகவே முன்பள்ளிக் கல்வியை மேம்படுத்த வேண்டும். இதற்கு முன்பள்ளிகளை மேம்படுத்துவதுடன் அதற்கான ஆசிரியர்களுக்கான வேதனைத்தையும் கொடுக்க வேண்டும்.

மாதாந்தம் ஆகக் குறைந்தது ஐயாயிரம் ரூபாயைச் செலவழிக்கத் தவறுகிறோம். இந்தத் தவறே பின்னர் பிள்ளைகளின் இடைநிலைக் கல்வியிலும் உயர்கல்வியிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்கின்றனர் கல்விச் சிந்தனையாளர்கள்.

அஸ்திவாரத்தைச் செம்மையாகப் போடவேண்டும் என்பதே இவர்களுடைய கருத்து.

அடுத்தது, தொண்டர் ஆசிரியர்களாகக் கடமையாற்றுவோரின் அர்ப்பணிப்பும் அவர்களுடைய கல்விச் சேவையும் மனங்கொள்ளப்படவேண்டும் என்பது. நெருக்கடிகாலத்தில் பணியாற்றியவர்கள் இவர்கள். பற்றாக்குறைகளைத் தீர்ப்பதில், ஆசிரிய வளப்பற்றாக்குறைகளைப் போக்குவதில் பெரிதும் பங்களித்தவர்கள்.

ஆகவே, இவர்களுடைய சேவையை இன்னும் பெறவேண்டியிருப்பதால் இவர்களுக்கான நிரந்தர நியமனத்தை வழங்க வேண்டும். இதன்மூலம் பிரதேசங்களிலேயே பெருமளவுக்கான அனுபவம் மிக்க ஆசிரியவளத்தைப் பெற்றுக் கொள்ள முடியம் என்பதும்.

000



இலங்கை அரசியல் அரங்கில் நகர்த்தப்படும் காய்கள்

Friday 11 May 2012







இலங்கையில் இப்போது அரசியற் காரணங்களுக்காகச் சிறையிருக்கும் தலைவர் ஒரு சிங்களவரே. அவருடைய பெயரை இங்கே நாம் வெளிப்படுத்தாமலே அவர் யாரென்று எல்லோருக்குமே தெரியும். ஒரு காலத்தில் இலங்கை இராணுவத்தின் தளபதியாக இருந்தவர். விடுதலைப் புலிகளுடான இறுதி யுத்தத்தைத் தலைமை தாங்கி நடத்திய இராணுத்தளபதி. அதாவது வெற்றியின் நாயகர்களில் ஒருவர். ஒரு ஜனாதிபதி வேட்பாளர். ஏறக்குறைய நாட்டு மக்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோரின் வாக்குகளைப் பெற்ற மனிதர். எனினும் அவருடைய பெயரை இங்கே குறிப்பிட்டே ஆகவேணும். அவர் திரு. சரத் பொன்சேகா. மன்னிக்கவும் ஜெனரல் சரத் பொன்சேகா.

பிரிவினைவாதத்தைப் பற்றி, புலிகளைப் பற்றி அதிகமாகக் கதைக்கின்ற தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட அச்சமின்றி, மிகப் பகிரங்கமாகத் திரிகிறார்கள். புலிகளின் முக்கியஸ்தர்களாகவும் புலிகளின் சிரேஸ்ர மட்டத்தலைவர்களாகவும் இருந்தவர்கள் கூட இன்று மிகப் பாதுகாப்பாக – வெளியே நடமாடுகிறார்கள். ஆனால், நாட்டுக்காகப் போராடிய, அதற்காக மரணத்தின் விழிம்புவரை சென்று திரும்பிய சரத்பொன்சேகா சிறைக் கம்பிகளினுள்ளே நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்@ அல்லது தன்னுடைய தீர்மானங்களைக் குறித்துச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்@ அல்லது கடந்த காலத்தைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறார்@ அல்லது எதிர்காலத்தைப் பற்றித் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். அல்லது தன்னுடைய விடுதலையைப்பற்றி அல்லது தான் எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கிக் கொள்வதைப் பற்றி அல்லது எல்லாவற்றிலும் உச்ச தீவிரம் கொண்டியங்குவதைப் பற்றி, எப்படியோ....

ஆனால், நிச்சயமாக அவர் எதையோ பற்றி ஆழமாகச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். என்றாலும் படைகளின் தளபதி இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தேர்தலின்போது கூட்டு வைத்துக் கொண்டவர்கள்  கூட அவரைச் சென்று பார்க்கவில்லை.

அவரைக் களமிறக்கியவர்களும் அவரை ஆதரித்தவர்களும் இன்று அவரைக் கைவிட்டுள்ளனர் என்றே தெரிகிறது. அல்லது அவர்கள் சரத்தை மீட்க முடியாத நிலையில் வேறு தெரிவுகளுக்குச் சென்றுள்ளனர்.

சரத் எப்படியான சூழலில் களமிறங்கினார் என்று பார்ப்பதற்கு முன்னர், அவரை யார் களமிறக்கினார்கள்? எப்படிக் களமிறக்கப்பட்டார்? என்று பார்ப்பது இன்றைய அரசிற் சூழலை விளங்கிக் கொள்ள இலகுவாக இருக்கும்.

சரத்தைக் களமிறக்கியது அமெரிக்கா தலைமையிலான மேற்கே. இலங்கையில் தமக்குச் சாதமான தலைமைகளைத் தேடிக் கொண்டிருக்கிறது மேற்கு. அதற்குத் தோதாக யாரும் இல்லை என்ற நிலையில் சரத் பொன்சேகாவை அது தேர்ந்தெடுத்தது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்தத் தெரிவைச் செய்ய வேண்டிய அவசியம் மேற்கிற்கிருந்தது. மகிந்த ராஜபக்ஷ மேற்கின் ஆளில்லை என்று அதற்குத் தெளிவாகவே தெரியும். எனவே அது வேறு ஒருவரை அல்லது மகிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிக்கக் கூடிய – அவரை மேவக்கூடிய ஒருவரைத் தேடியது.

வழமையைப்போல ஐ.தே.க மேற்குக்குக் கை கொடுக்கும் இயல்போடிருந்தது என்றாலும் அதன் தலைமை அதற்குரிய ஆளுமையோடு இல்லை என்பதால் சரத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரணில் வெற்றிகளுக்குரியவரல்ல என்ற கணிப்பும் வருத்தமும் மேற்கிற்கு ஏற்பட்டிருந்தது. எனவே வெளியே இருந்த சரத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால், சரத் அரசியலுக்குப் பரிச்சயமில்லாதவர், புதியவர் என்பதால் அவருக்கு முழுமையான ஆதரவைக் கொடுத்து வெற்றியடைய வைக்க வேண்டிய ஒரு சூழலை மேற்கு உருவாக்கியது.

இதன்படி அது முதலில் சரத்தை ஒரு பொது வேட்பாளராக்கியது. இந்தப் பொது வேட்பாளரை ஐ.தே.க வும் ஆதரிக்கும். சிறுபான்மைத்தரப்புகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரிக்கும். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் ஆதரிக்கும். மனோ கணேசனும் ஆதரிப்பார் என்று ஒரு தோற்றத்தை அது ஏற்படுத்தியது. அதாவது சகல தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தலைவர் - ஒரு பொது ஆள் என்ற தோற்றத்தையும் உணர்வையும் நாட்டு மக்களிடையே ஏற்படுத்துவதே இதன் நோக்கம். இந்தப் பொதுப் பிம்பத்தின் மூலம் சரத்தை வெற்றிகொள்ள வைத்து தனக்குச் சாதகமான ஒரு நிலைமை உருவாக்கிக் கொள்வதே மேற்கின் நோக்கம். இதில் மேற்கிற்குக் கிடைக்கவிருந்த அனுகூலங்கள் அதிகம். குறிப்பாக தனக்குச் சார்பான ஆள் ஒருவரை இலங்கையில் அதிகாரத்தில் இருத்துவதன் மூலம் கிடைக்கின்ற நன்மைகளோடு பல தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவர் அதிகாரத்திலிருப்பது என்பது வெளியே ஜனநாயகத்தின் பார்வையாளருக்குத் திருப்தியை ஏற்படுத்துவதாகவும் இருக்கும் என்பது.

இதற்காக அது இன்னும் ஒரு விசயத்திலும் கவனஞ்செலுத்தியது.

சரத் போர் வெற்றியின் முக்கிய பங்காளி. (போர்க்குற்றத்தின் பங்காளியும்கூட என்றபோதும் இதை மறைத்து விட்டது மேற்கு). எனவே இந்தப் போர் வெற்றியை ஒரு முதலீடாக ஆக்கிக் கொள்வதற்கும், போர்  வெற்றியைத் தன்னுடையதாக்க முயன்ற மகிந்த ராஜபக்ஷவை நெருக்கடிக்குள் தள்ளும் முயற்சியாகவும் மேற்கு சிந்தித்தது.

அந்த நாட்களில் மிக நெருக்கடிப் பட்டே – பதற்றம் நிரம்பிய நிலையிலேயே மகிந்த ராஜபக்ஷ சரத்தை எதிர்கொண்டார்  அல்லது ஜனாதிபதித் தேர்தலை அவர் எதிர்கொண்டார் என்பது எல்லோருக்குமே தெரிந்த சங்கதி.

இதேவேளை இந்தச் சூழலுக்காக மேற்கு குறிப்பாக அமெரிக்கப்பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்புக்கும் பல தடவைகள் பயணம் செய்திருந்தார்கள். அங்கெல்லாம் பொதுமக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுவோரைச் சந்தித்தார்கள். மதகுருக்களைச் சந்தித்தனர். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும் கூடச் சந்தித்தனர். இன்னும் சொல்ல வேண்டுமானால், யாழ்ப்பாணத்தில் முதன்மைப் பத்திரிகையாகத் தோற்றம் காட்டும் உதயன் பத்திரிகையின் ஆசிரிய பீடத்தையும் கொழும்பில் தினக்குரல், வீரகேசரி போன்றவற்றின் பிற ஊடகவியலாளர்களையும் அமெரிக்கப் பிரதிநிதிகள் முக்கியத்துவம் கொடுத்துச் சந்தித்தனர். மேலும் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் எழுதும் ஊடகவியலாளர்களையும் மேற்கின் ராஜதந்திரிகள் தொடர்ந்து சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தனர்.

இதற்கெல்லாம் காரணம், தமக்குச் சாதகமான ஒரு சூழலை உருவாக்குவதே. அதன்படியே பிறகு அனைத்துத் தரப்பும் சரத்தை ஒருமித்த குரலில் வாய்ப்பாடாக ஆதரித்துக் ‘கோரஸ்’ பாடின.

ஆனாலும் சரத்தினால் கோல்போட முடியவில்லை. அவர் போரில் பெற்ற வெற்றியையும் பறித்துக்கொண்டதாகவே அவருடைய  அரசியல் பிரவேசம் அமைந்தது. அரசியல் அரங்கில் சரத் தடுமாறினார். போர்க்களத்தையும் விட அரசியற் களம் மிகக் கடினமானதாக சரத்திற்கிருந்தது.

விடுதலைப்புலிகள் நடத்திய கரும்புலித் தாக்குதலில் ஆபத்தான கட்டத்துக்குச் சென்று திரும்பியிருந்த – தப்பியிருந்த சரத், இந்த அரசியல் அரங்கு ஏற்படுத்திய அபாய நெருக்கடியிருந்து மீள முடியாத நிலைக்குள்ளானார். ஒரு ஜனாதிபதி வேட்பாளரின் நிலை, போரில் வெற்றியீட்டிய ஒரு இராணுவத்தளபதியின் நிலை இன்று இப்படித்தானுள்ளது.

மேற்கின் நம்பிக்கை நட்சத்திரம் அப்படியே ஒளிர முடியாமற் தணிந்தடங்கி விட்டது.

சரத் பொன்சேகாவின் நிலையை இத்துடன் நிறுத்திக் கொண்டு நாம் இப்போதுள்ள நிலைமையைப் பார்க்கலாம்.

சரத்தின் தோல்விக்குப் பிறகு வேறு தெரிவுகள் எதுவும் மேற்கிற்குச் சுலபமாகக்  கிடைக்கவில்லை. ஆகவே பிடியற்ற ஒரு நிலையிற்தான் இலங்கை விசயத்தில் மேற்குத் தொடர்ந்தும் உள்ளது.

ஐ.தே.கவிற்குள் தேடினால், ரணிலுக்கு அடுத்தபடியாக கரு ஜெயசூரியா தென்பட்டார். ஆனால் அவர் ஒரு சிரேஸ்ர உறுப்பினராக இருந்தாலும் காரியசித்தராக இல்லை. அடுத்த நிலையில் தெரிந்தவர் சஜித் பிரேமதாஸ. ஆனால், அவரும் மேற்கிற்குக் கவர்ச்சியை ஏற்படுத்தத் தக்க அளவில் செழிப்பான அடையாளங்களை வெளிப்படுத்தவில்லை. பதிலாக இன்னும் கட்சியையும் தன்னையும் பலவீனப்படுத்திக் கொண்டேயிருக்கிறார் சஜித்.

இந்த நிலையிற்தான் மேற்கு வேறு வழியின்றி மீண்டும் ரணிலை முன்னரங்குக்குக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறது. அதன்படியே ரணிலை அது பொது ஆளாக்குகிறது. ஐ.தே.கவுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கிற கொந்தளிப்பான சூழலின் மத்தியிலும் ரணில் இன்னும் தாக்குப் பிடித்துக் கொண்டு கட்சித் தலைவராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கிறார். இது ஒரு முக்கியமான விசயம்.

இந்தியாவுடனும் வெளியுலகத்துடனும் தொடர்புள்ள ஒரே தலைவர் ஐ.தே.கவுக்குள் ரணில்தான் என்ற அபிப்பிராயம் மேற்கிற்கு உள்ளதும் இதற்கு இன்னொரு காரணம்.

எனவே அது ரணிலைத் தேர்வு செய்து அவரைப் பொது ஆளாக்கிப் பலப்படுத்துவதற்கு யோசிக்கிறது. அதாவது வெற்றிக்கான நாயகனாக்குவதற்கு, நம்பிக்கை நட்சத்திரமாக்குவதற்கு முயற்சிக்கிறது.

இதன்படியே அது இப்பொழுது எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு ஒன்றை மீண்டும் உருவாக்க முனைகிறது. இந்தக் கூட்டமைப்பில் அரசாங்கத்தின் எதிர்ப்பாளர்களும் அதிருப்தியாளர்களும் ஒன்றிணைவதற்கான ஏது நிலைகளையும் அது உருவாக்கி வருகிறது. இதற்காக அமெரிக்கப் பிரதிநிதிகள் தொடர்ந்து பல சந்திப்புகளைப் பல தரப்பினருடனும் வெளிப்படையாகவும் இரகசியமாகவும் நடத்தி வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் பொது மக்கள் பிரதிநிதிகளுடனும் ஆயருடனும் நடக்கின்ற சந்திப்புகள் கூட இந்தப் பின்னணியைப் பெரிதும் கொண்டவையே. மேலும் அங்குள்ள பத்திரிகைகளையும். சில நாடாளுமன்ற உறுப்பினர்களையும். இதற்காக அது சில தரப்புகளுக்கு அள்ளியிறைக்கும் தொகையும் வழங்கும் சலுகைகளும் கொஞ்சமல்ல.

இப்போது இவ்வாறு உருவாக்கப்படும் பொது ஆளான ரணில் யாழ்ப்பாணம் வரையில் வந்து அரசியல் விவகாரங்களில் ஈடுபடுகிறார். அண்மையில் நடந்த மேதின நிகழ்வுகள் இதற்கொரு உதாரணம். இதற்கு அவருக்கு யாழ்ப்பாணத்திலிருக்கும் அவருடைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் (திருமதி விஜயகலா மகேஸ்வரன்) சில தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரும் ஆதரவாக இருக்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாக ரணிலுடன் கைகுலுக்குவதை அதிகம் விரும்பவில்லை என்றாலும் மேற்கின் விருப்பத்தை அதனால் மீறிட முடியவில்லை. எனவே அது நசிந்த நிலையில் மெல்லக் கையை நீட்டியுள்ளது. (யாழ்ப்பாணத்தை எரித்துக் களித்தவர்களும் யாழ்ப்பாணத்தை எரித்துவிட்டார்கள் என்று குற்றம் சாட்டியவர்களும் எப்போது எப்படி இணங்கினர் என்று கேட்கப்படும் கேள்வியும் ஒரு பக்கத்தில் கொதிநிலையிலேயே உள்ளது). மட்டுமல்ல சம்மந்தன் இலங்கையின் தேசியக் கொடியை ஏந்தியதும் (அதுவும் யாழ்ப்பாணத்தில்) மேற்கின் விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டதே. (இந்த இடத்தில் யாழ்ப்பாணம் ஆயர் வாய் திறக்காமல் கள்ள மௌனம் காப்பது கவனிக்கத்தக்கது. ஏனெனில் அவர் மேற்கின் விருப்பங்களுக்கு மாறாகச் சிந்திக்க மாட்டார். அப்படிச் சிந்தித்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளமாட்டார்).

ஆனால், எப்படியோ ரணில் இலங்கைத் தீவின் பல சமூகத்தினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட – அங்கீகரிக்கப்பட்ட ஒரு பொது ஆளாகத் தோற்றம் கொள்ள வைக்கப்படுகிறார்.

இந்த நிலையில் ‘இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இத்தகைய ஒரு பொதுத் தோற்றம் தேவை. பலருடைய ஒன்றிணைவுடன் வரும் ஒருவரே பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நிலையைக் கொண்டிருக்க முடியும்’ என்று இதனை அவதானிக்கும் சிலர் வாதிடுகிறார்கள். மட்டுமல்ல ‘ஜனநாயகத்தின் பேணுகைக்கும் இது அவசியம்’ என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

‘இல்லை. இது வெறும் தோற்றம் மட்டுமே தவிர, அதற்கப்பால் ஒன்றுமேயில்லை. எல்லாமே வழமைதான். தங்களுடைய நலன்களுக்காக எங்களின் கண்களில் மண்ணைத் தூவி மூளையைக் கறுப்பாக்க முயற்சிக்கிறார்கள். மேதின நிகழ்வில் யாழ்ப்பாணத்தில் ரணில் என்ன சொன்னார் தெரியுமா? ‘நாங்கள் யுத்தம் செய்யாமல் யாழ்ப்பாணம் வந்திருக்கிறோம். இப்போது யாழ்ப்பாணத்திலும் நாங்கள்’ என்கிறார். இது எதைக் காட்டுகிறது? தான் போர்க்குற்றங்களுக்கு அப்பாலானவன், இரத்தக்கறை படியாதவன் என்று சொல்லப்பார்க்கிறார். ஆனால், அவர் தீர்வைக் குறித்து என்ன சொல்கிறார்?  என்று கேட்கின்றனர் மறுப்பாளர்கள்.

‘இலங்கை மீது – மகிந்த ராஜபக்ஷ அரசின் மீது போர்க்குற்ற விசாரணைகள், மனித உரிமைகள் விவகாரங்கள் போன்றவற்றின் மூலம் நெருக்கடிகளைக் கொடுத்து வருகின்ற மேற்கு, அதேவேளை உள்நாட்டில் அரசுக்கு எதிராக – மாற்றணி ஒன்றை வலுவாக்க இந்த முயற்சியை முயற்சித்து வருகிறது. ஆகவே அந்த வேலைத் திட்டத்தின் தொடர்ச்சியாகவே இந்த நிகழ்ச்சிகள் இருக்கின்றன. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு இதை விட வேறு என்ன மார்க்கம் இருக்கிறது?’ என்று கேட்கிறார்கள் முதற் தரப்பினர்.

‘இல்;லை இது மேற்கின் சூழ்ச்சி, மேற்கு தொடர்ந்து கொண்டிருக்கிற இன்னொரு விடிவத்திலான ஆக்கிரமிப்பு முயற்சி. இதெல்லாம் அதனுடைய பொறியே தவிர, இலங்கையின் நிரந்தர அமைதி, சமாதானம், இன நல்லிணக்கம், அரசியற் தீர்வு என்ற எதுவும் இந்த நடவடிக்கையில் உள்ளடக்கப்படவில்லை. இலங்கை மக்களுக்கோ இலங்கையிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கோ இதில் எந்த நன்மைகளும் பெரிதாக இல்லை’ என்கின்றனர் மறுப்பாளர்கள். அதாவது ரணில் இந்த நாட்டுக்காக அல்ல, வெளித்தரப்புக்காகக் கோல் போடுவதற்காகவே தயாரிக்கப்படுகிறார்.

இப்படியே ‘இரு நிலை விவாதம்’ இன்றைய இலங்கை நிலைமை குறித்து பொதுவாகப் பேசப்படுகிறது.

இன்றைய மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இனங்களுக்கும் நாட்டுக்கும் விவகாரங்களுக்கும் பொதுவானதாக இருக்கவில்லை என்ற பலவீனமான நிலைமையை ஆதாரமாக வைத்துக்கொண்டு, அந்தப் பலவீன வெடிப்புகளுக்குள்ளால் எதிர்ப்பூற்றைச் சுரக்க வைக்க வெளிச் சக்திகள் முயற்சிக்கின்றன.

இங்கே ஒரு விசயத்தை நாம் மீளவும் திரும்பிப் பார்க்கலாம்.

ரணிலின் ‘பொது ஆள்’ தோற்றத்துக்கு உச்ச எதிர்ப்புக் காட்டுவது ஐ.தே.கவினுள் இருக்கும் ஒரு அணி. அதாவது ரணிலுக்கு எதிரான அணி. சஜித்தின் தலைமையிலான அணி.

கூடவே வேறு எதிர்ப்புகளும் சிறு அளவில் சிங்களத்தரப்பில் உண்டு. அதைப்போல தமிழ்த் தரப்பிலும் ரணிலை நம்பமுடியாது என்போர் பெருமளவில் இருக்கின்றனர். ரணில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமல்ல என்று கருதிய மக்களும் பெருமளவில் உள்ளனர்.

இந்த நிலையில் மேற்கின் பந்தயக் குதிரையாக ஆக்கப்பட்ட சரத்தைப் போல ரணிலும் பொறியொன்றினுள் சிக்கிக் கொள்வாரா? அல்லது வெற்றிக் கொடியோடு – நம்பிக்கை நட்சத்திரமாக - சிம்மாசனம் ஏறுவாரா? இது ஒரு பொல்லாத – கடினமான கேள்வியும் எதிர்பார்க்கையுமாகும்.

எப்படியோ இன்று தமிழ் அரசியற் தலைவர்களையும் விட சிங்கள அரசியற் தலைவர்களே அதிக நெருக்கடிகளைச் சந்திக்கிறார்கள். தமிழ் அரசியற் தலைவர் எவரும் நாடு கடத்தப்படவோ சிறையில் அடைக்கப்படவோ இல்லை. பதிலாக சிங்கள அரசியற் தலைவர்களே அப்படியான நிலைக்குள்ளாகியிருக்கிறார்கள். அண்மையில் ஜே.வி.பியின் உறுப்பினர்களான லலித், குகன் காணாமற்போனமை மற்றும் ஜே.வி.பியின் மாற்று அணியின் பிரமுகர்கள் பிரேம்குமார் குணரட்ணம், திமுது ஆட்டிக்கல போன்றோர் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டமை எல்லாம் இங்கே கவனத்திற்குரியது. இதைத்தவிர அனைத்துப் பல்கலைக்கழங்களின் தலைவர் உதுல் பிரமரத்தினவின் கைது நிகழ்ச்சிகள்.

எனவே அரசாங்கம் தமிழ்த் தலைமைகளையும் விட சிங்களத் தலைமைகளைக் குறித்தே அதிகம் அச்சமடைகிறது. மடியிற் கனமிருந்தால் வழியிற் பயம் என்று சொல்வார்கள். அரசாங்கத்தின் மடியிற் கனமிருக்கும் வரையில் அது இந்த வழிப்பயத்தை விட்டொழிக்கவே முடியாது.

இதற்கெல்லாம் காரணம் இலங்கைத் தீவில் ஜனநாயகத்தைத் தின்று தீர்த்தவர்களும் அதற்கு ஆதரவாக இருந்தவர்களுமே. இதை மாற்றியமைப்பதற்கு இன்று ஒரு ஒப்பற்ற ஜனநாயக ஆளுமை - தன்னை     ஒப்புக்கொடுத்துச் செயலாற்ற வல்ல, வரலாற்றை நகர்த்தக் கூடிய ஆற்றல் பொருந்திய தலைமை வேண்டும். ஆனால் அது இல்லை என்பதே இந்தத் துயர நீட்சிக்குக் காரணமாகும்.

எனவே ஜனநாயகத்தை இலங்கையில் மீளுருவாக்கம் செய்கிறோம் என்ற போர்வையில் வெளிச் சக்திகள் தங்களுக்கான வேர்களை இங்கே பதியம் வைக்க முயற்சிக்கின்றன. இதை அங்கீகரிப்பதைத் தவிர வேறு கதியில்லை என மக்களிற் பெரும்பாலானோர் கருதுகின்றனர். இதுதான் இன்றைய உலகத்தின் புதிய போக்காக வளர்ந்து வருகிறது.

0000



 

2009 ·. by TNB