கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

வரலாற்றுக் குற்றங்களும் குற்றவாளிகளும்

Monday 19 November 2012



எத்தகைய வரலாற்றுத் தவறும் மக்களையே மிகப் பாதிக்கும். சில தவறுகளின் பாதிப்பு இலேசானது. சில தவறுகளின் பாதிப்பு மோசமானது. இலங்கையின் இனப்பிரச்சினை ஒரு பெரிய தவறு. அதன் தொடர்ச்சியான போர் அதைவிடப் பெரிய தவறு. போரின்போது நடந்த போர்க்குற்றங்கள் ஆகப்பெரிய தவறு. போர்க்குற்றங்கள் நடப்பதற்கு அனுமதித்தது எல்லாவற்றையும் விடப் பெரிய தவறு. எல்லாத்தவறுகளையும் தலையில் ஏற்றனர் மக்கள்.

இப்பொழுது இந்தத் தவறுகளைப் பற்றிய விளக்கங்களும் வியாக்கியானங்களும் தாராளமாக நடக்கின்றன. ஐ.நா செயலாளர் கூட நடந்த தவறுகளைப் பற்றி விளக்கம் அளித்திருக்கிறார். போதாக்குறைக்கு மன்னிப்புவரை கேட்டிருக்கிறார். ‘என்னமாதிரியான ஒரு காலம்’ எங்களுக்கு வாய்த்திருக்கிறது!

ஆனால், இந்தத் தவறுகள் எல்லாம் பல ஆயிரக்கணக்கானோரின் வாழ்வையும் உயிரையும் அல்லவா அழித்திருக்கின்றன! ஒரு நீண்ட காலத்தை இரத்தத்தில் அல்லவா தோய்த்து எடுத்துள்ளன!! பல்லாயிரக்கணக்கானோரை நடுத்தெருவில் அல்லவா கைவிட்டுள்ளன!!!

அப்படியென்றால் இவற்றுக்கான பதில் என்ன? தீர்வு என்ன? நிவாரணம் என்ன?

வெறும் வார்த்தைகளுக்குள்ளும் வெள்ளை அறிக்கைகளுக்குள்ளும் எத்தகைய நன்மைகளும் உருவாகுவதில்லை.

மேலே சொல்லப்பட்ட தவறுகள் எல்லாம் உண்மையில் சாதாரண தவறுகளே அல்ல. அவை குற்றங்கள். பெருங்குற்றங்கள். தொடர்ச்சியான குற்றங்கள். ஒன்றிலிருந்து ஒன்றாகப் பலவாக உற்பத்தியாகிய குற்றங்கள். திட்டமிட்டு நடத்தப்பட்ட குற்றங்கள். அந்தந்தத்தரப்பின் தேவைகளின் நிமித்தமாக நடத்தப்பட்ட குற்றங்கள்.

ஒரு குற்றம் பல குற்றங்களை உருவாக்கும் என்று நன்றாகத் தெரிந்தும் அந்தக் குற்றம் தொடர்ந்தும் நடைபெற அனுமதித்த குற்றம். மாபெருங்குற்றம்.
இதில் இலங்கை அரசுக்கும் பொறுப்புண்டு. எதிர்த்தரப்பில் இருந்த தமிழ்ச்சக்திகளுக்கும் பொறுப்புண்டு. பிராந்திய சக்தியாக இருந்து இலங்கைப் பிரச்சினையை வளர்த்துக்கொண்டிருக்கும் இந்தியாவுக்கும் பொறுப்புண்டு. சர்வதேச சமூகம் என்றபெயரோடு இயங்கும் வல்லரசு நாடுகள் அத்தனைக்கும் பொறுப்புண்டு. இந்தச் சர்வதேச சமூகத்துக்குத் தொண்டு செய்து கொண்டிருக்கும் ஐ.நாவுக்கும் பொறுப்புண்டு. ஐ.நாவின் அனுசரணையோடும் ஆதரவோடும் இயங்குகின்ற பிற பொது அமைப்புகளுக்கும் மனித உரிமை அமைப்புகளுக்கும் பொறுப்புண்டு. இந்த விவகாரத்தில் ஏட்டிக்குப் போட்டியான கருத்துலகத்தைக் கட்டியெழுப்பிய ஊடகங்களுக்கும் பொறுப்புண்டு.

ஆனால், யாரும் இந்தப் பொறுப்பை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. ஏற்றுக்கொள்ளவும் இல்லை.

எனவே நடந்தவை அத்தனையும் மறுக்க முடியாத, மறைக்க முடியாத குற்றங்கள். தொடர்ந்து நடந்து கொண்டிருப்பவையும் அத்தகைய பகிரங்கக் குற்றங்களே. அதிலும் பெருங்குற்றங்கள். தொடர் குற்றங்கள்.

அப்படியானால், குற்றங்களை இழைத்தோருக்கான தண்டனை என்ன?

இதுதான் இன்றைய நம் கேள்வி. இந்தக் கேள்வி அறிவுலகத்திலுள்ள அனைவரும் எழுப்ப வேண்டிய கேள்வி. சனங்களைக் குறித்து சிந்திப்போர் சகலரும் எழுப்ப வேண்டிய கேள்வி. மனித உரிமைவாதிகள் அத்தனை பேரும் கேட்க வேண்டிய கேள்வி. பாதிக்கப்பட்ட சனங்கள் எழுப்பவேண்டிய கேள்வி.

மிகச் சாதாரணமாக, ஒற்றைவரியில் மன்னிப்பு என்று சொல்லிவிட்டுக் கடந்து போகக்கூடிய குற்றங்களை இவர்கள் யாரும் செய்யவில்லை. கூட்டாகச் சேர்ந்து இழைக்கப்பட்ட கூட்டுக் குற்றங்களே இவை.
எனவே இதை எதிர்ப்பதற்கும் இதைக் கண்டிப்பதற்கும் ஒரு கூட்டு நடவடிக்கையே இன்று தேவை. இது உலகளாவிய அளவில், அந்த ரீதியில் ஏற்பட வேண்டும்.

ஏனெனில் குற்றவாளிகளாக இருப்போர் இன்னும் உயர் பீடங்களிலேயே உள்ளனர். வலுவான நிலையிலேயே உள்ளனர். அதிகாரத்தோடும் வளங்களோடுமே உள்ளனர். பாதிப்புகள் எதையும் தங்களின் தோள்களிலே உணாராமலே உள்ளனர்.

ஆகவே, இந்தக் கேள்விகளை அனைவரும் ஒன்றிணைந்து எழுப்புவதன் மூலம் நடந்த தவறுகளுக்கும் நிகழ்த்தப்பட்ட குற்றங்களுமான தண்டனையை இவர்களுக்கு வழங்க வேண்டும். அந்தத் தண்டனையைப் பெறக்கூடிய வழிகளையும் நிலையையும் உருவாக்க வேண்டும். அதற்குரிய அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

அப்போதுதான் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். குற்றங்கள் தடுக்கப்படும். மட்டுமல்ல, குற்றவாளிகளிடமிருந்து பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணமும் கிட்டும்.

இந்த நிவாரணம் என்பது முக்கியமானது. தண்டனை என்பது குற்றவாளிகளைக் கட்டுப்படுத்திக் குற்றங்களைத் தடுப்பதற்கும் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணத்தை வழங்குவதற்குமான அடிப்படையைக் கொண்டது.

இலங்கையில் இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் அமைப்புகள் என்ற பேரிலும் உதவும் நாடுகள் என்ற வகையிலும் சிறு உதவிகளை சம்மந்தப்பட்ட தரப்புகள் செய்து வருகின்றன.

இது ஒரு ஏமாற்று நடவடிக்கையே. தங்களுடைய குற்றங்களில் இருந்து தப்புவதற்கான ஒரு உபாயமே. இதிலும் மறைந்திருப்பது அதிகார நிலையே.
இயல்பாகவே வளர்ந்திருந்த ஒரு நாட்டை, சுய நிலையிலிருந்த சமூகங்களை  அழிவடைய வைத்து, கையேந்தும் நிலைக்குள்ளாக்கியது இலங்கையின் ஆட்சியாளர்களும் அரசியலாளர்களும் இந்தியாவும் சர்வதேச சமூகமும் ஐ.நாவுமே.

இன்று குட்டிச் சுவராக்கப்பட்ட நாட்டுக்கு உதவியென்றும் ஊக்குவிப்பு என்றும் கடன் என்றும் பிச்சைபோடுகின்றன இந்தத் தரப்புகள்.

போரினால் துவண்டு போயிருக்கும் சனங்களுக்கு இந்தப் பிச்சைகள் உண்மையில் அவர்களுக்குச் செய்யும் அவமானமே.

போரின்போது நடந்த குற்றங்களுக்கு இன்று மன்னிப்புக் கேட்கிறது ஐ.நா. ஆனால், போர் நடந்தபோதே போர்க்குற்றங்கள் நடக்கின்றன என்று பகிரங்கமாகத் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் யுத்தக்குற்றங்கள் தொடர்பாக அறிக்கையிட்டன. தங்களின் கண்டனங்களைத் தெரிவித்தன.

ஏன், ஐ.நாவின் தொடர்பாளராக, அதிகாரிகளாக, பொறுப்புவாய்ந்த ஆணையாளர்களாக இருந்தோர் கூட அன்று இலங்கையின் நிலைமை தொடர்பாக, நடக்கும் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக தங்களின் மதிப்பீடுகளையும் அறிதல்களையும் வெளிப்படுத்தியே வந்தனர்.

ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாமல், அன்று ஐ.நாவும் அதன் செயலர் பான்கி மூனும் யுத்தக் குற்றவாளிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துழைத்தனர்.

ஐ.நாவில் பொறுப்பான இடங்களில் இருந்தவர்களில் ஒருவரான நம்பியார் குற்றங்களுக்கு ஆதரவளித்திருக்கிறார்.

இன்னொருவரான கோடன் வைஸ் குற்றங்களைப் பகிரங்கப்படுத்துகிறார்.

ஆகவே, யுத்தத்தை எப்படி நடத்துவது? அதன் இறுதி முடிவு எப்படி அமையவேண்டும்? என்ற நோக்கத்தோடு இயங்கிய கூட்டுச் சக்திகளின் விருப்பத்துக்கு இடமளித்தது ஐ.நா. இது வெளிப்படையான உண்மை.
இன்று இன்னொரு நிலையில், பகிரங்க நெருக்கடிகள் எதிர்காலத்தில் ஏற்படலாம் என்ற நிலையில், யுத்தக் குற்றங்களை இலங்கையின் தலையில் மட்டுமே சுமத்த வேண்டும் என்ற நிலையில் தன் பக்கத்தில் தவறு நடந்து விட்டதாக ஐ.நா சொல்கிறது.

இதுவும் ஒரு அரசியலே. இதுவும் ஒரு பொறுப்பற்ற தவறே. இதுவும் ஒரு குற்றமே.

ஆனால், எல்லாக்குற்றங்களுக்கும் இறுதியில் தேவையானது தண்டனையும் நிவாரணமுமே.

இன்று இந்த இரண்டுக்காகவும் நாம் போராட வேண்டும்.

அதில் முக்கியமானது நிவாரணமாகும். அந்த நிவாரணம் சலுகை அடிப்படையிலான பொருட்களோ, உதவிகளோ அல்ல. அவற்றையும் உள்ளடக்கிய நிரந்தரத் தீர்வே.

இழப்புகளுக்கான ஈடு என்பது தீர்வே. அது அரசியல் தீர்வு. வாழ்வாதாரத் தீர்வு. நிலையான அமைதிக்கும் சமத்துவத்துக்கும் ஜனநாயக மேம்பாட்டுக்குமான தீர்வு. சுயாதிபத்தியத்துக்கான தீர்வு என அமையவேண்டும்.

இதையே ஐ.நா செய்ய வேண்டும். இதையே சர்வதேச சமூகம் செய்ய வேண்டும். இதையே இந்தியா செய்ய வேண்டும். இதையே இலங்கையும் தமிழ் அரசியற் தலைமைகளும் செய்ய வேண்டும்.

யுத்தத்தை ஆதரித்தோரும் அதை நடத்தியோரும் அதை உருவாக்கியோரும் இந்தத் தீர்வுக்கு உதவ வேண்டும். அதைப் பொறுப்பெடுத்துச் செய்ய வேண்டும்.

இல்லையென்றால் இன்னும் குற்றங்கள் பெருகும். தவறுகள் தொடரும் வரையில், குற்றங்கள் தொடரும் வரையில் யாரும் அமைதியாக இருக்க முடியாது. எங்கும் அமைதி நீடிக்க முடியாது.


00

Monday 12 November 2012




வலுவற்ற நிலையில் ஒரு சமூகம் இருக்கும்போது அது எளிதில் பிறருடைய (எவருடையதும்) காலில் வீழ்ந்து விடும் என்பது மிக எளிய உண்மை.


சமூகத்தை வலுவாக்கம் செய்யாமல், அதற்கான தயாரிப்புகளைச் செய்யாமல் வைத்துக் கொண்டு வாய்புலம்புவதிற் பயனேதுமில்லை. 

“““






போரிலே சிக்கிய பெண்களிற் சிலரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெண்போராளிகளாக முன்னர் இருந்தோரிற் சிலரும் பாலியற் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று குறிப்பிட்டு, பெண்போராளியொருவரின் நேர்காணல் ஒன்றை ‘ஆனந்த விகடன்’ இதழ் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது. இதற்குப் பிரதான காரணம் வறுமையே என்றும் கூறப்படுகிறது. அதிலும் இந்தப் பெண்போராளி, தமிழர்களின் கலாச்சார மையங்களில் ஒன்றான யாழ்ப்பாண நகரத்திலே பாலியற்தொழிலைச் செய்து வருகின்றார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நேர்காணலைத் தொடர்ந்து உலகத் தமிழ்ப்பரப்பில் அதிர்ச்சி அலைகளும் கண்டனக் குரல்களும் எழுந்துள்ளன. ஊடகங்களிலும் இணைய வெளியிலும் கடந்த இரண்டு வாரங்களில் அதிக எண்ணிக்கையான வாசகர்களை ஈர்த்த விசயம் இதுதான்.

இந்த நேர்காணல் உண்மையானதா? இல்லையா? இந்த நேர்காணலில் சொல்லப்படும் விசயங்கள் உண்மையானவையா? இல்லையா? இவையெல்லாம் திட்டமிட்டுப் புனையப்பட்டவையா? என்ற மாதிரியான விவாதங்கள் சூடுபறக்கின்றன.

போராட்ட விசுவாசிகளாக நடிப்பவர்களும் ஆதரவாளர்களும் தேசியப் பற்றாளர்களும் இந்த நேர்காணலைப் படித்துக் கொதித்துப் போயிருக்கிறார்கள். இதேவேளை நியாயமாகச் சிந்திப்போர், இந்த நேர்காணலில் சொல்லப்பட்ட விசயங்கள் அனைத்தும் புறக்கணிக்கக் கூடியவை அல்ல என்று சொல்கிறார்கள்.

இந்தப் பேட்டியைக் குறித்து நடந்து கொண்டிருக்கும் விவாதங்களில் சில கருத்துகள் இப்படி உள்ளன.

 ‘ஆனந்த விடகனில் வெளிவந்த ஆக்கம் புனையப்பட்டதாக கூட இருக்கலாம். ஆனாலும் பல பெண் போராளிகளின் வாழ்வில் இது தானே நிஜம். பெண் போராளிகளுக்கு தங்களையும் தமது குழந்தைகளையும் காப்பாற்றிக் கொள்ள அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உத்தரவாதம் தான் என்ன? ஒரு பெண்போராளி தனது வாழ்வாதாரத்திற்காக பாலியல் தொழில் செய்வது தமிழ்க் கலாச்சாரத்தைக் கட்டிக்காப்பவர்களுக்கும் புலித் தேசியவாதிகளுக்கும் தமிழ்க் (வேட்டிக்) கலாச்சாரத்தின் புனிதம் உடைந்துவிட்டதே என அவமானமாக உள்ளதா?. இதை விமர்சித்து எதிர்வினை எழுதி தங்களுடைய வேட்டிக் கலாச்சாரத்தை காப்பாற்ற முனைகிறார்கள்’ என ஒரு கருத்துள்ளது.

 இன்னொன்று இப்படி இருக்கிறது - ‘அந்த செவ்வி மிகைப்படுத்தப்பட்டதாகவோ அல்லது தேசியவாதிகள் எனத் தம்மை குறிப்பிடுபவர்கள் சொல்வது போல புலனாய்வு வேலையாகவோ இருக்கலாம். ஆனால் அதில் குறிப்பிடப்பட்ட மூன்று விடயங்களை எவரும் மறுக்க முடியாது.

1. பெண் போராளிகள் மட்டுமல்ல போரினால் பாதிக்கப்பட்ட பெண்களும் பாலியல் தொழிலாளிகளாக மாற்றப்பட்டுள்ளார். இது உண்மை என்பதை எவரும் மறுக்க முடியாது. பெண் போராளிகள் மட்டுமல்ல. போரினால் பாதிக்கப்பட்ட பெண்களும் பாலியல் தொழிலாளிகளாக மாற்றப்பட்டமைக்கான காரணம் என்ன? அதற்கான பொறுப்பு யாரிடம் உள்ளது என்பதற்கு இந்த தேசியவாதிகள் பதில் சொல்ல வேண்டும். மேலும் இதற்கு புலம்பெயர் சமூகமே பொறுப்புபெடுக்க வேண்டும்.

2. தலைவர் இருக்கிறார் - போராட்டம் மீண்டும் வெடிக்கும் என முழக்கமிடும் தமிழக அரசியல்வாதிகளிடம் இந்த தேசிய வாதிகள் கேள்வி கேட்கட்டும்.

3. போராளிகளை பராமரிப்பதற்கு இந்த தேசியவாதிகள் வைத்திருக்கின்ற வேலைத்திட்டம் என்ன என்பதை அவர்கள் சொல்லட்டும்’ என்று.

இன்னொன்று இப்படியுள்ளது – ‘உலகத்தில் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டமை புதிதான விடயம் அல்ல. ஆனால், பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கமுடியும். அவையாவன: ஒன்று – வறுமை. இரண்டு -  குறுகிய காலத்தில் அதிகளவு பணத்தை உழைக்கும் நோக்கம். .....போர் என்பது கொடுமையானது. போர் நடைபெறும், நடைபெற்ற ஒவ்வொரு நாட்டிலும், கற்பழிப்பும், பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதும் இருந்தே வந்துள்ளது. இரண்டாவது உலகப் போரைத் தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகளில் பெருமெண்ணிக்கையான பெண்கள் தங்களது பிள்ளைகளை வளர்க்கப் பாலியல் தொழிலில் இடுபட்டு வந்துள்ளனர். போர் அற்ற காலத்திலேயே வறுமை காரணமாகப் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த பெண்கள், யாழ் குடாவின் சகல கிராமங்களிலும் இருந்துள்ளனர்! இந்த நிலையில், கொடுமையான போர் நடைபெற்ற எமது பிராந்தியத்தில், பெண் போராளிகளாயினும் சரி, சாதாரண குடும்பப் பெண்ணாயினும்சரி, கொடுமையான வறுமையில் இருந்து விடுவிக்கப்பட திட்டமிட்ட விதத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். போர் முடிவடைந்து மூன்று வருடங்கள் கழிந்து விட்டன. ஆனால், இந்த மிகமுக்கிய காரியத்தினை எந்தத் தரப்பும் இன்றுவரை திட்டமிட்ட விதத்தில் செய்யவேயில்லை என்பதுதான் கசப்பான உண்மை’ என.

இன்னொன்று – ‘வாழ்வின் எந்தத் தருணங்களையும் இழக்காமல் கொண்டாடியபடி, படித்து, பட்டம்பெற்று, தொழில் பெற்று, கல்யாணமாகி பிள்ளை பெற்று வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், தங்களைப் போன்ற உணர்வுள்ள ஒரு மனிதப்பிறவியாகவே அவர்களையும் அணுக வேண்டும். அவர்களும் வாழ்வின் மீது எல்லாவிதமான தாகமுமுடையவர்கள். எல்லா தருணங்களையும் வாழ்ந்துவிட வேண்டுமென்ற துடிப்புள்ளவர்கள். ஆகவே இந்த வாழ்க்கையை – அதனை வாழ்ந்து முடிக்க சாதாரண மனிதர்களிற்கு எப்படியான சவால்களிருக்கிறதோ, அதே சவால்களை எதிர்கொண்டபடி- வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களிற்கு இந்த உலகம் எந்தவிதமான சாத்தியங்களை வழங்கியுள்ளதோ, அவற்றினூடாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வேளை தவறாமல் பசியைக் கிளறும் வயிறு அவர்களிற்குமுள்ளது’ இப்படிப் பல கருத்துகள் உள்ளன.


போரிலே சிக்கிப் பாதிப்புக்குள்ளாகிய குடும்பங்களைச் சேர்ந்த பெரும்பாலான பெண்களும் விடுதலைப் புலிகள் அமைப்பில் செயற்பட்ட பெண்போராளிகளிற் பலரும் பொதுவெளியில் சந்தித்து வரும் வாழ்க்கை நெருக்கடிகள் மிகக் கொடுமையானவை. கணவரை இழந்த பெண்களும் உழைப்பாளரை இழந்த குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் மிக மோசமான வறுமைச் சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இதுதான் அடிப்படைப் பிரச்சினை. இதுவே ஏனைய பல பிரச்சினைகளுக்கான வேராகும்.

பொருளாதாரப் பற்றாக்குறை அல்லது வறுமை, தொழில்வாய்ப்பின்மை, தொழில் செய்யமுடியாத உடல்நிலை, வாழ்க்கைத்துணை இல்லாத நிலை,  திருமணம் மற்றும் பாதுகாப்பான எதிர்காலம் குறித்த கேள்விகள் எல்லாம் இவர்களுக்கு முக்கியமான பிரச்சினைகளாக உள்ளன.

இதேவேளை, இவர்களிற் குறிப்பிட்டளவினருக்கான வாழ்வாதார உதவிகளை அரசாங்கமும் தொண்டு நிறுவனங்களும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வழங்கியிருக்கின்றபோதும், அந்த உதவியானது இவர்களுடைய வாழ்க்கையைக் கொண்டு நகர்த்துவற்கும் அதற்கு அடித்தளத்தை அமைப்பதற்கும் போதவே போதாது.

இதைப் பற்றி ஒரு தொண்டு நிறுவன அதிகாரியிடம் கேட்டேன். அவர் சொன்னார், ‘தொண்டு நிறுவனங்களின் மூலமாக வழங்கப்படுகின்ற உதவிகள் எதுவும் மீளக்குடியேறிய மக்களுக்குப் போதாது. அதிலும் போரிலே சிக்கி, அகதி முகாம்களில் இருந்து மீண்டவர்களுக்குப் போதவே போதாது. இதை நாங்கள் அவர்களுக்கான பணிகளின் போது தெளிவாக அவதானித்திருக்கிறோம்.

சிலருக்கு உறவினர்கள் மூலமாக வெளி உதவிகள் கிடைக்கின்றன. அவர்கள்  அதை வைத்துக் கொண்டு சமாளிக்கிறார்கள். ஏனையோரின் நிலை மோசமானதே. ஆனால், எங்களாலும் ஒரு எல்லைக்கு மேலே உதவ முடியாது. அதற்குரிய நிதியும் திட்ட அனுமதியும் எங்களிடம் இல்லை.

இந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்றால் அதற்கெனத் தனியான, விசேட திட்டங்களும் மேலதிக உதவி நடவடிக்கைகளும் தேவை. இல்லையென்றால், சுயதொழிலுக்காக வழங்கப்படுகின்ற வாழ்வாதார உதவிகளை அவர்கள் அடிப்படைத்தேவைகளுக்கே பயன்படுத்துவார்கள். இதில் எனக்குத் தெரிந்த பல உதாரணங்கள் உண்டு. இங்கே ஒன்றை மட்டும் சொல்கிறேன்’ என்று தொடர்ந்த அவர், மேலும் விளக்கினார் -

‘பெண்ணொருவர் தலைமை தாங்கும் குடும்பமொன்றுக்கு வாழ்வாதார உதவியாக கோழிகளைக் கொடுத்திருந்தோம். சில வாரங்களுக்குப் பிறகு அவருடைய முன்னேற்றத்தை அவதானிக்கச் சென்றோம். அங்கே நாம் கொடுத்த கோழிகளைக் காணவில்லை. என்ன நடந்தது என்று விசாரித்தபோது, அவர் சொன்னார், ஐயா, நீங்கள் தந்த கோழிகளை நல்ல மாதிரி வளர்த்து இந்தப் பிள்ளைகளைக் காப்பாற்றலாம் எண்டுதான் நானும் பாடுபட்டன். ஆனால், பிள்ளைக்குச் சுகமில்லை. ஆஸ்பத்திரிச் செலவுக்காக கடனெல்லாம் வாங்கியும் சமாளிக்க முடியேல்ல. வேற ஆட்களிடமிருந்தும் உதவிகள் கிடைக்கவில்லை. இந்த நிலைமையில என்னால் என்ன செய்ய முடியும்? வீட்டில நிற்கிற கோழிகளை விற்றாவது பிள்ளையைக் காப்பாற்ற வேணும் எண்டு, அதுகளை வித்திட்டன். அப்பிடிக் கோழிகளை விற்றதால எனக்குத்தான் நட்டம். ஆனால், பிள்ளையைக் காப்பாற்றிறதுக்கு எனக்கு வேற வழியில்லை என்று சொன்னார் அந்தப் பெண்.

இன்னொருவர் அவருக்கு வழங்கிய நீர் இறைக்கும் இயந்திரத்தை விற்றே மனைவியின் வைத்தியச்செலவைச் செய்திருக்கிறார்’ இப்படித்தான் இந்த மாதிரிக் குடும்பங்களின் நிலைமை இருக்கிறது’ என்றார்.

கொடுக்கப்பட்ட வாழ்வாதார உதவிகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு, தங்களின் வாழ்வைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக அவற்றை விற்க வேண்டிய நிலை பல சந்தர்ப்பங்களிலும் அவர்களுக்கு ஏற்படுகிறது. இந்தப் பொருட்களை ஒரு தடவை மட்டும்தான் விற்கலாம். ஒரேயொரு தடவை மட்டுந்தான் நெருக்கடி நிலைமையையும் சமாளிக்கலாம்.

அதற்குப் பிறகு?

அதற்குப் பிறகு அவர்களிடம் கையில் எதுவும் இருப்பதில்லை. மிஞ்சியிருப்பது ஒன்றே ஒன்றுதான். அவர்களுடைய உடல். புதுமைப்பித்தனின் ‘பொன்னகரம்’ கதையில் வருவதைப்போல, கணவரைக் காப்பாற்ற வேண்டும், அவருக்கு மருந்து வாங்க வேண்டும் என்றால், தன்னுடலை விற்றே அதைச் செய்ய வேண்டும். அதைத் தவிர அவளுக்கு வேறு கதியில்லை என்ற நிலை.

இங்கும் இதுதான் கதை@ இதுதான் உண்மை நிலை.

ஆகவே, போரிலே சிக்கிய பெண்களிற் சிலரும் முன்னர் போராளிகளாக இருந்தோரிற் சிலரும் இன்று இந்த நிலைக்குத்தான் வந்தடைந்திருப்பது தவிர்க்க முடியாததே. இனி இந்தக் கதைதான் தொடரப்போகிறது. இதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் இல்லையென்றால், உரிய திட்டங்கள் இல்லையென்றால், பொருத்தமான சிந்தனை இல்லையென்றால் இந்த அவல நிலை பெருகும். அது சீரழிவையே கொண்டு வரும்.

பொதுவாகப் போரினால் பலவகையான பாதிப்புகள் ஏற்படுவதுண்டு. பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுவதுண்டு. இதில் பெண்கள் சந்திக்கின்ற பாதிப்புகளே அதிகமானதும் தாக்கங்கள் கூடியதும். பொதுவாகவே போர் பெண்களையே கூடுதலாகப் பாதிக்கிறது.

போரினால் உழைப்பாளரை இழக்கின்ற குடும்பங்கள் பொருளாதார ரீதியிலும் உளவியல் ரீதியிலும் மிக மோசமான சிதைவுக்குள்ளாகின்றன. வன்னியில் ஏறக்குறைய ஐயாயிரம் வரையான பெண்கள் கணவரை இழந்த நிலையில் உள்ளனர். இவர்களின் எழுபது வீதமானவர்கள் இளம்பெண்கள். 40 வயதுக்குக் குறைந்தவர்கள். இதிலும் அதிகமானவர்கள், 30 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களைப் போல இன்னொரு தொகையிலானவர்கள் கிழக்கில் உள்ளனர். ஏறக்குறைய பதின்நான்காயிரம் வரையான பெண்கள்.

ஆகவே ஏறக்குறைய பதினைந்தாயிரம் வரையான பெண்களின் நிகழ்காலமும் எதிர்காலமும் எப்படி இருக்கும் என ஒரு கணம் நினைத்துப்பாருங்கள்.

இவர்களில் இளம்பெண்களாக இருப்போருக்குப் பல பிரச்சினைகள் உள்ளன. இவர்களின் பிள்ளைகள் வளர்வதற்கு இன்னும் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகள் செல்லும். அதுவரையிலும் பிள்ளைகளை வளர்த்தே ஆகவேணும். பிள்ளைகள் வளர்ந்து ஆளாகும் வரையில் நீண்ட காலத்துக்கு இந்தப் பொறுப்பு இவர்களுடைய தலையில் சுமையாகிறது.

எனவே இந்த நீண்ட காலச் சுமையை தொடர்ந்து தாக்குப்பிடிக்க இவர்களால் முடிவதில்லை. அதனால், தவிர்க்க முடியாமல் வேறு வழிகளில், இந்த மாதிரிப் பாலியல் தொழில்வரை இறங்குகின்றனர். பின்னர் அதுவே வாழ்வாகிப்போகிறது.

இந்தப் பெண்களின் இயலா நிலையைப் பயன்படுத்தித் தமிழர்களில் ஒரு சாராரும் படையினரில் ஒரு சாராரும் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர். ஆனால் விளைவு சமூகச் சிதைவாக, சீரழிவாக மாறிவிடுகிறது.

இது தனியே குறிப்பிட்ட பெண்களையோ ஏற்கனவே பெண் போராளிகளாக இருந்தோரையோ மட்டும் பாதிப்பதில்லை. ஆனால், ஒரு மாற்றுத் தீர்வை முன்வைக்காமல், அதை நடைமுறைப்படுத்தி இவர்களை ஒரு நிலைப்படுத்தாமல் விட்டுக்கொண்டு எத்தகைய விமர்சனங்களை முன்வைப்பதும் பொருத்தமானதல்ல. அது இவர்களை மேலும் மேலும் நெருக்கடிக்குள்ளேயே கொண்டு செல்லும். அதாவது, பாலியற் தொழிலிலும் சீரழிவிலும் ஈடுபடும் பெண்களை மட்டுமல்ல, அவர்களுடைய பிள்ளைகளையும் குடும்பங்களையும் சீரழிக்கும். தொடர்ந்து அது ஒரு சமூக நோயாகிவிடும்.

இந்த அபாய நிலையைக் குறித்து தொடர்ச்சியாக ஒரு சாரார் குறிப்பிட்டே வந்துள்ளனர். அதைப் பொறுப்பானவர்கள் தங்களுடைய கடமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஊடகங்கள் கூட இதைக் கவனிக்க வேண்டிய ஒரு விவாதமாக எடுத்துச் செல்லவும் இல்லை. எல்லோருக்கும் பரபரப்புக்கும் வியாபாரத்துக்கும் இந்த மாதிரி விசயங்கள் தேவை.

புலம்பெயர் தமிழர்களிற் பெரும்பாலானவர்கள் கூட பரபரப்பான செய்திக்காக காத்திருக்கும் மனநிலைக்கு வளர்ந்துள்ளனரே தவிர ஆக்கபூர்வமான முறையில் ‘பிணிநீக்கத்தை’ச் செய்ய முன்வருவதில்லை. மிகக் குறைந்தளவு ஆட்களே ‘நன்செய்’ மனப்பாங்குடன் இயங்குகின்றனர். ஏனையோரின் மனதில் நிறுவைக் கருவியும் அடையாளப்படுத்தும் லேபிள்களுமே உள்ளன.

போரினால் பாதிக்கப்பட்ட பெண்களையும் சமூகத்தையும் வளப்படுத்தக் கூடிய திட்டங்களுடன் பொருத்தமான தொழிற்றுறையை ஆரம்பிக்க வேண்டியவர்கள் அதைச் செய்யவில்லை. இதைக்குறித்து நானே ஆரம்பத்தில் - இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியிருக்கிறேன்.

வலுவற்ற நிலையில் ஒரு சமூகம் இருக்கும்போது அது எளிதில் பிறருடைய (எவருடையதும்) காலில் வீழ்ந்து விடும் என்பது மிக எளிய உண்மை.

சமூகத்தை வலுவாக்கம் செய்யாமல், அதற்கான தயாரிப்புகளைச் செய்யாமல் வைத்துக் கொண்டு வாய்புலம்புவதிற் பயனேதுமில்லை.

வன்னியிலும் கிழக்கிலும் தொழிற்றுறை மேம்பாடுகளைச் செய்து, சனங்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி, அவர்களை உழைக்கும் மக்களாக மாற்றியிருந்தால் சமூகத்திற்கும் வளர்ச்சி ஏற்பட்டிருக்கும். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பொருளாதார நிலையும் பலம்பெற்றிருக்கும்.

ஆனால், அதைச் செய்வதற்குப் பின்னிற்கும் நிதிவளமுடைய புலம்பெயர் சமூகம் இன்று இந்த மாதிரிச் செய்திகளைக் கண்டு கொதிக்கிறது. குமுறுகிறது. இது ஒரு முரண்நிலை மட்டுமல்ல தவறான விசயமும் கூட. அதைப்போல நிலவளமுடையோர் பலர், நாட்டை விட்டுப் பெயர்ந்திருக்கின்றனர். அவர்கள் தங்களின் நிலத்தில் ஒரு சிறுபகுதியை நிலமற்ற சனங்களுக்குக் கொடுக்கலாம். அவர்கள் தங்களுக்கென்று ஒரு வீட்டை அமைப்பதற்கும் அங்கே வாழ்வாதாரத்துக்கான தொழிலொன்றைச் செய்வதற்கும். பலருடைய அடிப்படைவ வாழ்க்கை சிதைவதற்குக் காரணம், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் இல்லாமையே.

இதேவேளை இங்கே ஏதாவது வேலைகளுக்குச் செல்லலாம் என்றால், அவர்களை வேலைக்கு அமர்த்துவோர் அடிமாட்டுக் கூலியே கொடுக்கிறார்கள். போரினால் பாதிக்கப்பட்டவர்களை எப்படியும் கையாளலாம் என்ற துணிச்சலே இதற்குக் காரணம்.

கணவரை இழந்த பெரும்பாலான பெண்கள் வன்னியில் வீதி திருத்தத்தில்  கூலிகளாகியிருக்கிறார்கள். பல பெண்கள் கண்ணிவெடி அகற்றும் கடினமான பணிகளில் ஈடுபடுகிறார்கள். சிலர் கட்டுமான வேலைகளைச் செய்கிறார்கள். இன்னும் சிலர் புகையிரதப்பாதை அமைக்கிறார்கள். இவற்றில் கணிசமான அளவுக்கு போராளிகளும் உள்ளனர்.

இவர்கள் இளமையில் கல்விக்கான வாய்ப்பை இழந்தவர்கள். அப்படித்தான் படித்திருந்தாலும் தொழில் அனுபவம் இல்லாதவர்கள். சிலருக்குத் தொழில் அனுபவமும் துறைசார் அறிவும் இருந்தாலும் அதை ஒரு அங்கீகாரமாகக் கொள்வதற்கு சமூகத்தில் யாரும் தயாராக இல்லை.

இதேவேளை, போராளிகளாக இருந்த காலத்தில் சில துறைகளில் பணியாற்றியவர்களுக்கு அந்தத் துறைசார் அறிவும் அனுபவமும் உண்டு.  ஆனால், இந்தத் துறைசார் அனுபவத்தையும் அறிவையும் ஒரு தகமையாகக் கொண்டு எவரும் வேலைகளை இவர்களுக்கு வழங்கவில்லை.

அப்படி வேலைவாய்ப்பை வழங்கியவர்களும் மிகக் குறைந்த சம்பளத்துக்கே அந்தப்போராளிகளை வேலைக்கு அமர்த்தியுள்ளனர். யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு என எங்கும்  இதனைத் தாரளமாகக் காணலாம். ஏன் தமிழகத்துக்குச் சென்றுள்ள போராளிகளின் நிலையும் இதுதான். ‘எப்படித்தான் நல்லா வேலைசெய்தாலும் அடிமாட்டுக் கூலியே தருகிறார்கள். யாரும் மதிக்கிறார்களில்லை. அதற்கு மேல் கேட்டால் வேறிடத்தைப் பார் என்கிறார்கள் என்று சொல்கிறார்கள்’ என்று கவலைதெரிவிக்கின்றனர் ‘முன்னாள் போராளிகள்’.

ஆனால், இவர்கள் புலிகள் இயக்கத்தில் அந்தத்துறைகளில் இருந்தபோது இதே ஆட்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர்கள்.  இப்பொழுது அந்த மதிப்பு தலைகீழாக இறக்கம் கண்டுள்ளது. ஒரு தோல்வி சமூகத்தின் மனப்பாங்கையும் மதிப்பீட்டையும் இப்படியெல்லாம் மாற்றிவிட்டுள்ளது? இதனால் இந்த ‘முன்னாள் போராளி’களுக்கு வேறு வழியோ கதியோ இல்லை.

இந்த நிலையில் வேலை வாய்ப்பைப் பெறமுடியாதவர்களின் கதி எப்படியிருக்கும்? அவர்களுடைய தெரிவுகள் பெரும்பாலும் கையறு நிலைக்குரியனவே. எனவேதான் இறுதியில் அவர்கள் தங்களின் உடலை முதலீடாக்குகின்றனர். இந்த இடத்தில் இவர்களை எவர், எப்படிக் குறை சொல்ல முடியும்?

ஆனால், குற்றவாளியாக இருக்கும் சமூகம் அதை மறைத்துக் கொண்டு தன்னுடைய கையில் அதிகாரத்தை எடுத்து தீர்ப்பை வழங்கத் துடிக்கிறது. மேலும் போதாதென்று இவர்களுடைய கதையை, நிலையை எழுதிப் பரப்பி மேலும் மேலும் தன்னுடைய பிழைப்பை வளர்த்துக்கொள்கிறது. உண்மையில் இது கண்டிக்க வேண்டியது. பதிலாக உடனடியாக இதற்கு மாற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான விசேட உதவித்திட்டங்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் தேவை. அதை அரசாங்கம் பொறுப்புடன் செய்ய வேண்டும். அரசிடம் அதற்கான அமைச்சுகளும் உண்டு. அதிகாரிகளும் இருக்கிறார்கள். ஆனால், வேலைதான் நடக்கவில்லை. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். இதற்கு அரசாங்கத்துடன் தொடர்புடைய தமிழ் அரசியற் தலைமைகளும் சிங்கள முற்போக்குச் சக்திகளும் முயற்சிக்க வேண்டும்.

மறுபக்கத்தில் தமிழ்த் தேசிய அரசியல் எண்ணப்பாட்டுடன் செயற்படுவோருக்கு இதில் கூடுதல் பொறுப்புண்டு. அவர்கள் முன்சொன்னவாறு பாதிக்கப்பட்ட மக்களை மீள் நிலைப்படுத்துவதற்கான அத்தனை சாத்தியப்பாடுகளையும் உருவாக்க வேண்டும். வலுவான சமூக உருவாக்கத்துக்கு அர்ப்பணிப்புடன்; செயற்பட வேண்டும். இது ஒரு அவசியப் பணி. உடனடிப்பணி என்ற உணர்வோடு செயலாற்ற வேண்டும். இதில் புலம்பெயர் சமூகமும் தமிழகத்தின் ஆதரவாளர்களும் கூடுதற் பொறுப்புடன் பங்களிக்க வேண்டும்.

00

உலகம் எப்படி இருக்கிறது? உலகத்தின் கண்களும் மனமும் எப்படியுள்ளது?

Friday 19 October 2012
















ருவகால மழை வன்னியில் ஆரம்பமாகிவிட்டது. இனி விதைப்பு அமளிதான். எல்லா வயல்களுக்குள்ளும் ஆட்களும் உழவு மெசின்களுமாக ஒரே அமர்க்களம். காடுகள் எல்லாம் களனிகளாகும். காய்ந்து தரிசாகிக் கிடந்த நிலமெல்லாம் பச்சைப் பசேலென மாறும். கண்ணுக்கெட்டிய தூரம் வரையில், வானம் தொடும் தூரம் வரையில் பச்சைதான் தெரியும்.

ஆனால், இந்த மழையோடு வன்னியில் இன்னொரு அமர்க்களத்துக்கும் இடமிருக்கு. இப்பவே இந்த அமர்க்களம் தொடங்கிவிட்டது. மழையோடு, வீடில்லாத சனங்கள், வீட்டை இழந்த சனங்கள் எல்லாம் பெரும் அவதிக்குள் சிக்கியுள்ளனர். வீடில்லாதவருக்கு வெயிலும் பிரச்சினைதான். மழையும் பிரச்சினைதான். வெயிலுக்கு மரநிழலில் ஒதுங்கிக்கொள்ளலாம். மழைக்கு?

மீள் குடியேற்றத்தோடு வந்த மக்களுக்கு தற்காலிக வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இந்தத் தற்காலிகம் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமானது. இப்போது மூன்று ஆண்டுகளாகி விட்டன. ஒரு ஆண்டு மேலதிகம். அடுத்து வரப்போவது நான்காவது ஆண்டு. இரண்டு ஆண்டுக்குரிய வீடுகள் எப்படி நான்கு ஆண்டுகளுக்கு, அதாவது இன்னொரு மடங்கு காலம் அதிகமாகத் தாக்குப் பிடிக்க முடியும்?

எனவே இந்த ஆண்டு பெய்யப் போகிற பருவமழைக்கு வன்னியில் ஒரு பேரவலம் நடக்கத்தான் போகிறது. மீண்டும் சனங்கள் அகதிகளாகப் போகிறார்கள். ஆனால், இந்தத் தொகை அதிகமாக இருக்காது. மிகக் குறைந்த அளவில் என்றாலும் அகதிப் பிரச்சினை வரத்தான் போகிறது.

உண்மையில் இதற்குக் காரணங்கள் பலவாக இருந்தாலும் கவனிக்க வேண்டியது இந்திய வீட்டுத்திட்டம் மற்றும் அரசாங்கத்தின் வீடமைப்பு நடவடிக்கைகளில் உள்ள குறைபாடுகளையே.

இந்திய அரசாங்கம் மிகப் பிரமாண்டப்படுத்தி அறிவித்த ஐம்பது ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் பாதிகூடக் கட்டுப்படவில்லை. பாதி என்று சொல்வதை விட நான்கில் ஒரு பகுதி அதாவது காற்பங்கு கூடக் கட்டுப்படவில்லை. ஏன் பத்தில் ஒரு பங்களவில் கூடக் கட்டி முடிக்கப்படவில்லை.

ஏதோ சாட்டுக்குச் செய்வதைப் போல மாதிரி வீடுகளாக இரண்டாயிரம் வீடுகள் மட்டும் கட்டப்பட்டுள்ளன. இது யானைப் பசிக்குச் சோளப்பொரி. பசியறியாதவன் பந்தி வைப்பதைப் போல. யுத்தத்தின் வடுக்களோடும் வலிகளோடும் இருக்கின்ற சனங்களை இப்படித் தொடர்ந்தும் அநாதைகளாக விடுவது பொருத்தமேயல்ல.

நடந்த யுத்தத்தில் இந்தியாவுக்கும் பங்குண்டு. இதை வெளிவந்து கொண்டிருக்கின்ற செய்திகளும் ஆதாரங்களும் தாரளமாக உறுதிப்படுத்துகின்றன. இதையெல்லாம் இந்தியா மறுக்கவும் இல்லை.

ஆகவே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சனங்களுக்கு உதவ வேண்டிய தார்மீகப் பொறுப்பு இந்தியாவுக்குண்டு. ஆனால், அரசியல் வரலாற்றில் ஆளும் தரப்புகள் அனைத்தும் நலன்களின் அடிப்படையிலேயே சிந்திப்பதால் மக்களைக் குறித்து அவை முழுமையாக – நீதியாகச் சிந்திக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. என்றாலும் குறைந்த பட்ச நாகரீகம் கருதி, ஏற்றுக்கொள்ளப்பட்டவற்றையாவது செய்யலாம். செய்ய வேண்டும்.

இதேவேளை போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்பில் ஈடுபட்டு வரும் சுவிஸ் மற்றும் செஞ்சிலுவைச் சங்க வீடமைப்பு நடவடிக்கைகள் பாராட்டுத்தக்கதாக உள்ளன. வீடமைப்பில் கடைப்பிடிக்கப்படும் சுயாதீனத்தன்மை, விரைவுத்தன்மை, ஒழுங்கு என்பன முக்கியமானது.

அதிக சத்தமில்லாமல் தங்கள் உதவிப் பணிகளை மேற்கொண்டு வரும் இந்தத் தரப்புகள் வீடமைப்புக்கு அப்பாலும் பல உதவிகளைப் பாதிக்கப்பட்ட சனங்களுக்குச் செய்கின்றன. வாழ்வாதார உதவிகளாக, பிரதேசத்துக்குத் தேவையான உட்கட்டமைப்பு வேலைகளாக என இது விரிவடைந்துள்ளது.

ஆனால், இந்திய, இலங்கை அரசுகளின் உதவிகள் இந்த அளவுக்கு இல்லை. இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் ஒரு லட்சம் வீட்டுத்திட்டத்தைப் பற்றி அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆனால், பசித்தவருக்கு அவை பகிரப்படவேயில்லை.

தேசிய வீடமைப்பு அதிகார சபை மற்றும் வீடமைப்பு அமைச்சு எதுவும் கூட உருப்படியாக இந்தச் சனங்களுக்குச் செய்ததாக இல்லை. எனவே மாரிகாலத்தில் மழைக்குள்ளே சிக்கிச் சீரழியப் போகின்றனர் வன்னியின் மீள்குடியேறிகள்.

அதிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப் பற்றுப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள்தான் இந்தப் பொறியில் வசமாகச் சிக்கப் போகிறார்கள். இவர்களில் பலர் இன்னும் தங்கள் சொந்த இடங்களுக்கே செல்லவில்லை. உதாரணமாக கேப்பாப்பிலவு மக்கள்.

தற்காலிக வீடு மாத்திரம் அல்ல. இவர்கள் இருக்கின்ற இடமும் தற்காலிகமானதாகவே இருக்கிறது. இதனால் இவர்கள் இன்னமும் அகதிகள்தான். மீள் குடியேறிகள் என்று சொல்லப்பட்டாலும் வாழ்தலின் அர்த்தத்தில் இவர்கள் அகதிகளே.

யுத்த முடிவோ, அதற்குப் பின்னான மூன்றாண்டு கால நீட்சியோ, பிரதேசத்துக்குத் திரும்புதலோ, இந்தச் சனங்களுக்கு எந்தத் தீர்வையும் கொண்டு வரவில்லை. பதிலாக தொடரும் நிழலாகத் துயரத்தையும் அலைக்கழிவையும் நிச்சயமற்ற தன்மையையும் உத்தரிப்பையுமே தருகின்றன.

ஆனால், இந்தச் சனங்களின் உண்மை நிலைமையைப் பற்றி அரசாங்கமோ அரசியற் தரப்பினரோ பொது அமைப்புகளோ உணர்ந்ததாகத் தெரியவில்லை.

தொண்டு நிறுவனங்கள் பலவும் தங்களிடம் நிதி முடிந்து விட்டது என்று சொல்கின்றன. அல்லது இந்த மக்களுடைய தேவைகளைப் பற்றி தங்களின் மேலிடத்துக்கு எழுதியுள்ளோம். அங்கிருந்து பதில் வந்தால் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்று தெரிவிக்கின்றன.

சில தொண்டு நிறுவனங்கள் குறிப்பிட்ட திட்டங்களுக்கு அப்பால் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கையை விரிக்கின்றன.

ஏறக்குறைய இதே நிலைமைதான் யுத்தகாலத்திலும் இருந்தது. சனங்களைக் காப்பாற்றவோ யுத்தத்தின் போக்கைத் தணிக்கவோ எந்தத் தரப்பும் முயற்சிக்கவில்லை. பதிலாக ஏதோ சாட்டுப் போக்குகளைச் சொல்லிக் கொண்டிருந்தன.

அதை ஒத்த பதில்களும் காரணங்களுமே இன்றும் சொல்லப்படுகின்றன. ஆகவே சனங்களைப் பொறுத்த வரையில் உள்ளுர் நிலைமையும் மாறவில்லை. உள்நாட்டு அரசியலும் மாறவில்லை. அதைப் போல சர்வதேச அரசியலும் மாறவில்லை. அதனுடைய அணுகுமுறையும் மாறவில்லை.

எல்லாமே ஒரு வகையில் நாடகம்தான். சந்தேசமேயில்லை. இது சனங்களை ஏமாற்றும் நாடகம். இந்த நாடகத்தில் அவரவர் ஒவ்வொரு பாத்திரத்தை வகிக்கிறார்கள். அவ்வளவுதான். பல தரப்பும் இணைந்த ஒரு கூட்டு நாடகம் இது.

யுத்தத்தை எப்படி இந்த மேலாதிக்கச் சக்திகள் ஆதரிக்கின்றனவோ, எவ்வாறு கூட்டுச் சேர்ந்து அதை நடத்துகின்றனவோ அவ்வாறே யுத்தகால நிலைமையையும் அதற்குப் பின்பான நிலைமையையும் இவை கூட்டாக இணைந்து தொழிற்படுத்துகின்றன.

இல்லையென்றால், அமெரிக்காவின் யு.எஸ் எயிட், ஐரோப்பிய ஒன்றியம், அரபு லீக், சார்க் அமைப்பு, கொமென்வெல்த் என்ற அமைப்புகள் இந்த மக்களுக்கு எவ்வளவோ உதவிகளைச் செய்திருக்க முடியும். அப்படிச் செய்திருக்கவும் வேண்டும். ஆனால், அது நடக்கவே இல்லை.

இதைக் குறித்து யாரும் பெரிதாகச் சிந்தித்ததாகவும் இல்லை. தமிழ் அரசியற் தரப்பினர் கூட இந்த அமைப்புகள் மற்றும் நாடுகளிடம் ஒரு வலுவான கோரிக்கையை முன்வைத்துப் பேசியதோ வற்புறுத்தல்களை மேற்கொண்டதோ இல்லை.

ஆனால், மக்கள் தங்களுக்கான முதலுதவித்தேவையுடனேயே காத்துக்கொண்டிருக்கின்றனர்.

துயரவெளியில் அவர்கள் தனித்து விடப்பட்டுள்ளனர். அவர்களைச் சுற்றி பல புயல்கள் வீசிக் கொண்டிருக்கின்றன. ஒரு நாளை, ஒரு கணத்தைக் கழிப்பதற்கே அவர்கள் பெரும்பாடு படுகிறார்கள்.

இதேவேளை இந்தச் சனங்களின் வாழ்க்கையை தினமும் வந்து பலரும் பார்த்துப் போகின்றனர் வெளியூர்வாசிகள். அதிலும் அதிகமானவர்கள் தென்னிலங்கை மக்கள்.

இவர்களிடம் கூட யாரும் வாய்திறப்பதில்லை. இந்தச் சனங்களைக் குறித்து எவரும் அவர்களிடம் பேசுவதில்லை.

அவர்களும் இந்தச் சனங்களைக் குறித்து எதையும் கேட்டறிவதில்லை. இந்தச் சனங்களின் கதையை, நிலையை அறிய விரும்புவதுமில்லை.

ஏன், வருவோரெல்லாம் புலிகளின் சுவடுகளைத் தேடுகிறார்களே தவிர, மிஞ்சியிருக்கும் அகதிச் சனங்களைப் பற்றிப் பார்க்கிறார்களில்லை.
எங்களைக் குறித்து யாரும் கண்களையும் திறக்கவில்லை. இதயத்தையும் திறக்கவில்லை என்று வருத்தத்தோடு புதுக்குடியிருப்பு திம்பிலி என்ற இடத்தில் தற்காலிக குடியிருப்பில் தற்காலிகக் குடிசையொன்றில் வாழும் அந்திரஸ் பிலோமினா சொன்ன கருத்து புறக்கணிக்கவே முடியாதது. மறுத்துப் பேசவும் முடியாதது.

உலகம் எப்படி இருக்கிறது? உலகத்தின் கண்களும் மனமும் எப்படியுள்ளது? என்பதற்கு இன்றைய இந்த வன்னி நிலைமைகள் மேலும் ஒரு வலுவான சாட்சியம்.

மாரி மழை யாருக்காகவும் பொறுத்துப் பெய்வதுமில்லை. அது யாரையும் காப்பாற்றுவதுமில்லை. யாரையும் விலக்குவதுமில்லை. அது பெய்யத்தான் போகிறது. அகதிகளை, அகதிகளாகவே இருக்கும் மீள் குடியேறிகளை அலைக்கழிக்கத்தான் போகிறது.

நிலாந்தன் என்ற கவிஞர் சொன்னதைப் போல அது ‘நீச மழை’யாகப் பொழியத்தான் போகிறது. அகதிகளின் கண்ணீரை மேலும் பெருக்கும் விதமாகப் பொழியத்தான் போகிறது.

காலங்கள் நகர்ந்திருக்கலாம். கள நிலை மாறியிருக்கலாம். ஆனால், சனங்களின் நிலை இன்னும் முழுதாக நகரவில்லை.

தனியொரு குடும்பம் தன் வீட்டுக்கு, தன்னுடைய ஊருக்குப் போகாத வரையில் எதுவும் நிறைவில்லை. மீள்குடியேற்றமுந்தான். இயல்பு வாழ்க்கையும்தான்.

எத்தனை படிக்கட்டுகளை எறிச்சென்றாலும் சிகரத்தைத் தொடாத பயணமாகவே அது இருக்கும்.

வன்னியில் பெய்யவுள்ள பருவமழை நிலத்தைப் பச்சையாக்கலாம். ஆனால், சனங்களின் வாழ்வில் இருக்கின்ற பாலையை சுலபமாகப் பச்சையாக்கிவிட முடியாது.

00  



கிழக்கில் தேர்தல் முடியவில்லை - ஹக்கீமின் தீர்ப்பு எப்படி?

Sunday 16 September 2012





















கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் முடிவுகளை அடுத்து, புதிர் நிறைந்த முடிச்சொன்றை வைத்துக்கொண்டிருக்கிறார் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம். இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கும் 2012. 09.14 காலைவரையில் இந்த முடிச்சை ஹக்கீம் அவிழ்க்கவில்லை. ஹக்கீம் அவிழ்க்கவுள்ள முடிச்சில்தான் மாகாணசபையின் கதையும் விதியும் உள்ளது. ஆகவேதான் அதற்கு இந்தப் புதிர்த்தன்மை அதிகம். கவர்ச்சியும் அதிகம்.

நடந்த தேர்தலில் மூன்றாம் நிலையில் இருக்கும் கட்சி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ். அந்தக் கட்சியில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆக ஏழு மட்டுமே.

ஆனால், கிழக்கு மாகாணசபையின் தலைவிதியைத் தீர்மானிக்கக் கூடிய நிலையில் மு.காவும் ஹக்கீமும் பெற்றிருப்பதே இங்கே கவனத்தை ஈர்ப்பது. இதற்குக் காரணம், அந்தக் கட்சி தேர்தலுக்கு முன்னர் எடுத்த தீர்மானந்தான்.  மிகக் கடினமான ஒரு நிலையில் அந்தத் தீர்மானத்தை மு.கா எடுத்தது.
அரசாங்கத்துடன் சேர்ந்திருந்து கொண்டே அரசாங்கத்தரப்பின் கூட்டிற்குள் அடங்காமல், விலகித் தேர்தலில் தனித்து நின்றமை இதில் முக்கியமான ஒன்று. இது ஒரு புத்திபூர்வமான, துணிச்சமல் மிக்க முடிவு. ஆனால், நெருக்கடிகள் நிறைந்தது.

இதற்காக ஒரு கட்டத்தில் அந்தக் கட்சியின் முக்கிய நிலையில் இருக்கும் பஷீர் சேகுதாவூத், தன்னுடைய பிரதி அமைச்சர் பதவியையே துறந்தார்.
அதேவேளை மறுபக்கத்தில் ஹக்கீமையும் மு.காவையும் வளைத்துப் போடுவதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் சம்மந்தனும் கடுமையாக முயற்சித்தனர். தமிழ்பேசும மக்கள் என்ற அடிப்படையிலும் சிறுபான்மைச் சமூகங்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடிகள் என்ற வகையிலும் ஒரு கூட்டிணைவு தேவை என்ற வகையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மு.காவுக்கு அழைப்பு விடுத்தது.

இதிலும் மு.காவும் ஹக்கீமும் சிக்கக்கொள்ளவில்லை.
அதாவது தேர்தற்காலத்தில் வழமையாக ஏற்படுத்தப்படுகின்ற சந்தர்ப்பவாதக் ‘கூட்டு’ என்ற பொதுவிதியை அது கடந்தது.

இதற்கான வெகுமதியாக இன்று மு.காவுக்கு ஒரு வலுவான ஸ்தானம் கிடைத்துள்ளது@ ஒரு சிறந்த வாய்ப்புக் கிட்டியுள்ளது.
அரசாங்கத்துடன், இணைந்து தேர்தலில் மு.கா நின்றிருந்தால், அரசின் தீர்மான வளையத்துக்குட்பட்டே இருந்திருக்க வேண்டும். அதாவது அரசாங்கம் தீர்மானிக்கும் எல்லைப் பரப்புக்குள்ளும் அதனுடைய நிபந்தனைகளுக்குட்பட்டும் நின்றிருக்க வேண்டும்.
அப்படி நின்றிருந்தால், இன்றிருக்கும் வலுநிலை மு.காவுக்குக் கிடைத்திருக்காது.

அதைப்போலவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் நின்றிருந்தாலும் அதற்கு இத்தகைய ஒரு நிலை வாய்த்திருக்காது. கூட்டமைப்புடன் ஆட்சியைப் பகிர்ந்து கொண்டிருக்க முடியுமே தவிர, அதற்கப்பால் வலுவைப் பிரயோகிக்கும் ஒரு நிலை ஏற்பட்டிருக்காது.

இந்த இடத்தில்தான் மு.கா பலருடைய கவனிப்பையும் பெற்றிருக்கிறது.
அரசியலில் உபாயங்களும் தந்திரோபாயங்களும் முக்கியமானவை. பலவீனமான நிலையிலும் பலத்தைக் கொடுப்பதிலும் நெருக்கடிச் சந்தர்ப்பங்களில் நெருக்கடி வளையத்தைத் தகர்ப்பதிலும் உபாயங்களுக்கும் தந்திரோபாயங்களுக்கும் முக்கிய பங்குண்டு.
மு. கா தெரிந்தோ தெரியாமலோ நல்லதொரு உபாயத்தைக் கையாண்டுள்ளது.

ஒரு சமூகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற கட்சியும் அதனுடைய தலைமையும் எடுக்கின்ற தீர்மானத்தைப் பொறுத்தே அந்தச் சமூகத்தினுடைய பாதுகாப்பும் எதிர்கால முன்னேற்றமும் அமையும்.

மு.கா எடுத்த முதற்கட்டத் தீர்மானம் அதற்கு ஒரு கட்ட வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது. ஆனால், இந்த வெற்றி இன்னும் முழுமைப்படுத்தப்படவில்லை. இதற்கு அந்தக் கட்சியும் அதனுடைய தலைமையும் இன்னும் போராட வேண்டியுள்ளது. இன்னும் நிதானமாகவும் புத்திபூர்வமாகவும் இயங்க வேண்டியுள்ளது. இதுதான் இன்று மு.காவுக்கும் அதனுடைய தலைமைக்கும் உள்ள பெருஞ்சவால்.

அப்படிப் பார்த்தால், இன்னொரு நெருக்கடிச் சூழலுக்குள்தான்  மு.காவும் அதனுடைய தலைமையும் உள்ளது எனலாம்.

இந்த நிலையில் இந்தச் சவாலை எதிர்கொள்ளவும் இந்த நெருக்கடியை முறியடிப்பதற்காகவும் மு.கா தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
எனவே, அடுத்ததாக ஹக்கீம் என்ன சொல்லப்போகிறார், எந்தப் பக்கும் திரும்புவார், யாருக்குப் பச்கைக் கொடியைக் காட்டுவார் என யாருக்குமே ஒன்றும் தெரியவில்லை. ஏன் அவருக்கே அதைப்பற்றி இன்னும் தெரியாதிருக்கலாம். ஏனெனில் அந்த அளவுக்குக் கட்சிக்குள்ளே குழப்பங்களும் அபிப்பிராய பேதங்களும் விவாதங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

எனவே இந்த இடைநிலையில் ஊகங்கள் பலவிதமாகக் கிளம்பித் தாராளமாக  அலைகின்றன.

அரசாங்கம் சொல்கிறது, தனக்கே மு.காவின் ஆதரவு கிடைக்கும் என்று.
சம்மந்தனும் அவருடைய சகாக்களும் சொல்கிறார்கள், தமிழ்பேசும் மக்களின் உணர்வுகளை மு.கா புறக்கணிக்காது எனத் தாம் நம்புவதாக.

மு.கா அரசாங்கத்தின் பக்கம் சாய்ந்து கொள்ளக்கூடிய சாத்தியங்களே அதிகமாக உள்ளதாக சில ஆய்வாளர்கள் ஆருடம் சொல்கின்றனர்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பக்கம் மு.கா வரவேண்டும் எனச் சில இணையத்தளங்கள் கருத்துக் கணிப்புச் செய்துள்ளன.

ஆனால், மு.கா எல்லாவற்றுக்கும் பதிலாக இன்னும் கதவைத்திறக்காமல், சத்தத்தை எழுப்பாமல், வெளியே பூட்டை மட்டும் தொங்க விட்டுள்ளது.
இதனால், (ஹக்கீமின் பதில் வரும்வரையில்) பதற்றத்தோடிருக்கிறது அரசாங்கம்.

அதே பதற்றத்தோடிருக்கிறது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.
மேலும் மு.காவுக்கு வாக்களித்த மக்கள்.

மேலும் அதனுடைய ஆதரவாளர்கள்.

மேலும் ஊடகங்கள்.

மேலும் அரசியல் அவதானிகள்.

எல்லாவற்றுக்கும் அப்பாலான உச்ச பதற்றத்திலிருக்கின்றன அமெரிக்காவும் இந்தியாவும்.

இப்படி எல்லோரையும் எல்லாத்தரப்பையும் பதற்றத்துக்குள் வைத்திருப்பவர் நிச்சயமாக ஒரு ‘கிங் மேக்கரா’கவே இருக்க முடியும்.

ஆம், ஹக்கீம் இன்று கிழக்கில், இலங்கையின் அரசியலில் ஒரு ‘கிங் மேக்கராகவே’ மாறியிருக்கிறார்.

எனவே இந்தக் ‘கிங் மேக்கர்’ என்ன சொல்லப்போகிறார்? என்ன செய்யப்போகிறார்? யாரை அணைத்துக் கொள்ளப்போகிறார்? என்ற கேள்விகள் புதிராகவே உள்ளன.

ஆகவே ஒரு வகையில் இந்த மாதிரியான நிலை என்பது வெளித்தோற்றத்துக்கு பெரும் வாய்ப்பாகத் தெரிந்தாலும் உள்ளே நெருக்கடிகளும் சிக்கல்களும் நிறைந்த ஒன்றாகவே இருப்பதுண்டு.
வரலாற்றில் எல்லோருக்கும் வாய்ப்புகள் கிட்டுவதுண்டு. சில வாய்ப்புகள் அபூர்வமானவை. எதிர்பார்த்திராதவை. எதிர்பார்த்திராத அளவுக்கானவை.

இப்பொழுது மு.காவுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பும் அத்தகைய ஒன்றே.
மு.கா தனியாக அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றிருந்தாற்கூட இத்தகைய ஒரு வாய்ப்பைப் பெற்றிருக்காது. அது தனியே அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுத் தனியாக ஆட்சியமைத்திருந்தாலும் அதிகாரப் பகிர்விலும் வள ஒதுக்கீடுகளிலும் பிற விசயங்களிலும் அரசாங்கத்துடன் இழுபறிப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், இந்த மாதிரிப் பேரம் பேசும் நிலையொன்றினூடாக ஆட்சியில் பங்குபற்றும்போது அதனுடைய மதிப்பும் லாபங்களும் அதிகம். இது பின்னர் இலகுவான வழிமுறை ஒன்றும் கூட. இந்த ஆட்சிப் பகிர்வென்பது இரண்டு தரப்பையும் மனதிற்கொண்டே அணுகப்படுகிறது.

இதேவேளை, இன்னும் மு.காவின் முடிவுகள் வெளிவராத நிலையில் முன்னனுமானங்களை இங்கே நாம் அடுக்கிக் கொண்டிருக்க முடியாது. அது பொருத்தமானதும் அல்ல.

முஸ்லிம் காங்கிரஸ் அடைந்திருக்கும் முதற்கட்ட வெற்றியை அல்லது பாதி வெற்றியை முழுவெற்றியாக மாற்ற வேண்டுமானால், அது அடுத்ததாக எடுக்கவுள்ள தீர்மானமும் அதைச் செயற்படுத்துவதற்கு அது கையாளப்போகும் தந்திரோபாயங்களும் உறுதிப்பாடும் முக்கியமானவை.
இல்லையெனில் கைக்கெட்டியது வாய்க்குக் கிடைக்கவில்லை என்ற கதையாகிவிடும்.

இங்கேதான் நாம் இந்தப் பிரச்சினையைப் பற்றி ஆராயவேண்டியுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் முதலில் தன்னுடைய தரப்பு மக்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது. அப்படிச் சிந்திக்கும்போதே கட்சியின் நலனும் அதனுடைய எதிர்காலமும் ஒரு எல்லைவரையில் பேணப்படும். இதைக்குறித்த விவாதங்கள் கட்சிக்குள் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன என அறிய முடிகிறது.

இதேவேளை கட்சியின் நலனும் எதிர்காலமும் தனியே முஸ்லிம் மக்களுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டு நிற்பதில்லை. அது அவர்களையும் உள்ளடக்கிக்கொண்டு, அரசியலுடன் தொடர்புடைய ஏனைய தரப்புகளையும் சேர்த்து இயங்குவது.

அப்படிப் பிற தரப்புகளையும் சேர்த்துக்கொண்டு இயங்கும்போதே கட்சியின் நலனும் அதனுடைய எதிர்காலமும் உறுதிப்படுத்தப்படும். இது அந்தக் கட்சி பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்களையும் அது இயங்குகின்ற அரசியற் தளத்தையும் முன்னேற்றும்@ பாதுகாக்கும்.

எனவே முஸ்லிம் மக்களின் அபிலாஷைகள், அவர்களுடைய பிரச்சினைகள் என்பவற்றுடன் கிழக்கில் உள்ள ஏனைய சமூகத்தினரைப் பற்றியும் மு.கா சிந்திக்க வேண்டியுள்ளது.

அத்துடன், இலங்கையில் ஆட்சியை நடத்தும் தரப்பையும் கவனத்திற் கொள்ள வேண்டியிருக்கிறது.

சிறுபான்மைத் தரப்பினர் என்ற அடிப்படையில் சவால்களையும் நெருக்கடிகயைம் சந்திக்கும் தமிழ்த்தரப்பைப் பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது.

மேலும் இலங்கை அரசியல் மற்றும் சமூக நிலைமைகளில் நேரடி மற்றும் மறைமுகத் தலையீடுகளையும் உள்நுழைவுகளையும் மேற்கொள்ளும் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் நிபந்தனைகளைப் பற்றியும் மு.கா கவனிக்க வேண்டியிருக்கிறது.

எனவே இத்தகைய பல தரப்பின் எதிர்பார்க்கைகள், நிபந்தனைகள், இழுபறிகளின் மத்தியிலேயே தன்னுடைய கப்பலைப் பாதுகாப்பாக ஒரு துறைமுகத்தில் நிறுத்த வேண்டிய பொறுப்பில் மு.கா வின் தலைவர் ஹக்கீம் உள்ளார்.

ஒரு காலத்தில் கப்பற்துறை அமைச்சை வழிப்படுத்தியது மு.கா. பல கப்பல்கள் நங்கூரமிடுவதற்கும் அவை துறைமுகத்தைச் சேர்வதற்கும் அன்றைய மு.கா தலைவர் வழிப்படுத்தியாக இருந்தார்.
இப்போது நீதி அமைச்சுப் பொறுப்பில் இருந்து நீதித்துறையின் பொறுப்பை வழிப்படுத்துகிறார் ஹக்கீம்.

ஹக்கீமின் தராசு, அவருடைய தீர்ப்பு, அவருடைய நியாயம், அவருடைய வழிகாட்டல், அவருடைய தீர்மானம் எப்படி இருக்கப்போகிறது?

அது கிழக்கில் மேலும் கொந்தளிப்புகளை ஏற்படுத்துமா? அல்லது புதிய சகாப்தத்தை உருவாக்குமா? அல்லது கிடைத்த வாய்ப்பையே ஹக்கீம் கை நழுவ விடுவாரா?

அவருடைய மனம் எங்கே திருப்பப்போகிறது? எங்கே நங்கூரமிடப்போகிறது?
00

இலங்கையைப் பாதுகாக்க எவ்வளவோ போராட வேண்டியுள்ளது

Friday 7 September 2012



இலங்கையின் பெரும்பாலான ஊடகங்களில் (தமிழில் அல்ல) அண்மையில் வெளியான கார்ட்டூன்கள் பல்கலைக் கழகங்களை அரசாங்கம் கையாளும் முறைமை தொடர்பாகவே இருந்தன. இவற்றில் ஒரு கார்ட்டூன் மிக உச்சமாக ரசிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால், அது சொல்கின்ற யதார்த்தத்தையும் உண்மையையும் ஏற்கக் கடினமாக உள்ளது.

மூடப்பட்ட பல்கலைக்கழகத்தின் கேற்றுக்கு முன்னால் நின்று ஒரு நாய் காலை உயர்த்தி அந்தக் கேற்றுக்கே சலம் அடிக்கிறது. காலை உயர்த்திச் சலம் அடிக்கும் அந்த முகம் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவினுடையது.

பல்கலைக்கழகங்களை அரசாங்கம் எத்தகைய நிலையில்  அணுகுகிறது, புரிந்து வைத்திருக்கிறது என்று உணர்ந்து கொள்வதற்கு இதை விடச் சிறந்த வேறு வார்த்தைகள் தேவையில்லை.

ஒரு நாட்டின் அறிவையும் ஆற்றலையும் வளர்ப்பதில் கல்வியும் அதன் உச்சச் செயற்களமாகப் பல்கலைக் கழகங்களும் இயங்குகின்றன.

இலங்கையின் கல்வி முறைமை தொடர்பாகக் கடுமையான விமர்சனங்கள் நீண்டகாலமாக உள்ளன. அந்த விமர்சனங்களையும் புதிய சிந்தனைகளையும் இலங்கை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. அப்படி இலங்கை அவற்றை ஏற்றுக்கொண்டாலும் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு உலக வங்கியோ உதவும் நாடுகளோ முழுமையாக ஒத்துழைக்கப்போவதுமில்லை. ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை.

இலங்கையின் கல்வித்துறைக்கு மட்டுமன்றி, இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளிலும் ஆட்சிக்கும் கூட இவையே அனுசரணை வழங்குவதால் இந்தத் தரப்புகளின் கட்டுப்பாடுகளை அரசாங்கம் எடுத்தெறிந்து விடவும் முடியாது. மீறி விடவும் முடியாது.

இதைவிட இலங்கைப் பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் சிந்திப்போரிடம் நீண்டகாலமாக உண்டு. ஆனால் இதைக் குறித்தும் அரசாங்கம் எதையும் செய்வதாக இல்லை.

இப்பொழுது எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கை முழுவதிலுமுள்ள பல்கலைக் கழகங்கள் கால எல்லையின்றி மூடப்பட்டுள்ளன. பல்கலைக் கழகங்களை மூடுவதென்ற தீர்மானத்தை அரசாங்கமே எடுத்திருக்கிறது.

தொடக்கத்தில் பல்கலைக்கழகங்களின் கல்வி சாராத ஊழியர்கள் தங்களுடைய போதாக்குறைகளை முன்வைத்துப் போராட்டங்களை நடத்தினார்கள். இதனால், சில வாரங்கள் பல்கலைக்கழகங்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெறவில்லை.

அடுத்த கட்டமாக, விரிவுரையாளர்கள் தங்களின் குறைபாடுகளை முன்னிறுத்திப் பணிப்புறக்கணிப்புப் போராட்டங்களை ஆரம்பித்தார்கள். இந்தப் போராட்டம் வாரங்களைக் கடந்து மாதங்களாகிக் கொண்டிருக்கிறது.

ஆனால், அரசாங்கத் தரப்பில் இருந்து எந்த நல்ல சமிக்ஞையும் கிடைக்கவில்லை. பதிலாக அங்கிருந்து அபாய விளக்குகளே எரிகின்றன.
இன்றைய பொது அபிப்பிராயம் மற்றும் பொது அச்சம் இலவசக் கல்விக்கு நெருக்கடியைக் கொடுப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறதா என்பதே.

இந்த அறிவிப்பைப் பகிரங்கமாகவே கொழும்பிலும் ஏனைய இடங்களிலும் (தமிழ்ப்பகுதிகளில் இது குறைவு அல்லது இந்த உணர்கை இல்லை எனலாம்) இலங்கையின் சிந்தனையாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

மட்டுமல்ல, அரச கல்வியைப் பாதுகாப்போம், தனியார் மயப்படுத்தப்படும் கல்வியை எதிர்ப்போம் என்ற குரல்களோடு போராட்டங்களையும் இந்தச் சிந்தனையாளர்கள் நடத்தி வருகிறார்கள். கடந்த 23.08.2012 வியாழக்கிழமை கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் ‘அரச கல்வியைப் பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில் பெரியதொரு ஆர்ப்பாட்டமும் பொதுக்கூட்டமும் நடந்துள்ளது.

ஆனால், அரசாங்கம் எல்லாவற்றுக்கும் மௌனத்தையே – புறக்கணிப்பையே கடைப்பிடிக்கிறது. அதேவேளை அது தன்னுடைய கள்ளத்தனங்களின் வழியிலேயே தன்னிச்சையான முடிவுகளை எடுத்துச் செயற்படுகிறது.

தனியார் பல்கலைக் கழகங்களின் வருகை, அல்லது உருவாக்கும், அவற்றின் பெருக்கம் என்பன எதிர்காலத்தில் நாட்டின் கல்வியை, நாட்டுக்கான கல்வியை அழித்து விடும்.

அத்தகைய கல்வி ஒன்று பெருக்கமடையுமானால் பிறருக்கான கல்வியும் சிந்தனைமுறையும் அவர்களுக்கான கருவியாக்கலுமே இலங்கையில் நிகழும் என சிலர் அபிப்பிராயப் படுகிறார்கள். இது வெறும் அபிப்பிராயமாக அல்லாமல் கலக்கமாகவும் உள்ளது.

தனியார் பல்கலைக்கழகங்களின் வருகை என்பது அல்லது அவற்றின் உருவாக்கம் என்பது அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ், நிபந்தனைகளின் கீழ் இருக்குமானால் அதை வரவேற்கலாம்.

தனியார் பல்கலைக்கழகங்களின் கல்வியானது வழமையை விட அகன்ற பரப்பைக் கொண்டதாக இருக்கும். அது போட்டியை அடிப்படையாகக் கொண்டதால் போட்டிக்கான சிறப்பியல்புகள் அதைத் தரமுயர்த்திக் கொண்டே இருக்கும். ஒரு சர்வதேச முகத்தைக் கொண்டதான கல்வியை இலங்கையிலும் பெறக்கூடியதாக இருக்கும் என்கின்றனர் இன்னொரு சாரார்.

அரச பல்கலைக் கழகங்களும் அவற்றின் கல்வி முறைமையும் பெரும்பாலும் சம்பிரதாய பூர்வமானதாக மாறிவிட்டன. சில மாற்றங்கள் அதில் நிகழ்ந்தாலும் அது மிக மிகத் தாமதம் கொண்டதாகவே இருக்கிறது. அதிலும் பல்கலைக்கழகங்களில் அவற்றை நடைமுறைப்படுத்துவதும் அவற்றை பல்கலைக் கழகங்கள் கையாளும் விதமும் மந்த நிலைக்குரியன என்று வாதிடுகின்றனர் மற்றொரு தரப்பினர்.

தனியார் பல்கலைக்கழகங்களின் வருகையை ஆதரிப்பதென்பது, அரச பல்கலைக்கழங்களைச் சுறுசுறுப்பாக்குவதற்கான ஒரு விசேட ஏற்பாடே என ஒரு நண்பர் குறிப்பிடுகிறார்.  தூசி படிந்து போயிருக்கின்ற அரச பல்கலைக்கழங்களைத் துப்புரவாக்கிப் புதுமைப்படுத்தும் ஒரு காரியமே இது என்கிறார் மேலும் அவர்.

இப்படி விவாதங்களை உருவாக்கியுள்ள அரசாங்கம் வெளிப்படையாகத் தன்னுடைய நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை.

அதேவேளை அது அரச பல்கலைக் கழகங்களின் செயற்பாட்டை முடக்கும் விதமாக நடந்து கொள்கிறது.

இந்த அடிப்படையிலேயே பல்கலைக் கழகம் சார்ந்தோரின் கோரிக்கைகளை அது பொருட்படுத்தவில்லை. இதற்கான ஒரு குறியீடாகவே இந்தப் பத்தியின் ஆரம்பத்தில் கூறப்பட்டது போல உயர் கல்வி அமைச்சரின் கார்ட்டூன் அமைந்துள்ளது.

மூடப்பட்டிருக்கும் பல்கலைக் கழகத்தை திறப்பதற்குப் பதிலாக அதற்குச் சலம் அடிக்கும் எண்ணத்திலும் செயற்பாட்டிலும் இருக்கின்றது அரசாங்கம் என்தே இதன் அர்த்தம்.

காலவரையின்றிய அளவுக்குப் பல்கலைக் கழகங்களை மூடி நாட்டின் கைநாடியைப் பிடித்துப் பார்க்கிறது அரசாங்கம் என்று சொல்லப்படுகிறது.

அதாவது, மூடப்பட்டுள்ள பல்கலைக் கழகங்களைத் திறக்கச்சொல்லி நடக்கும் கோரிக்கையின் வலுவையும் அந்தக் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடுவோரின் வலுவையும் அரசாங்கம் பரிசோதித்துப் பார்க்கிறது.

இப்படிப் பார்ப்பதன் மூலமாக அது தனக்கெதிராக உள்ள எதிர்ப்பு மனநிலையையும் எதிர்ச்செயற்பாட்டு வலுவையும் கணக்கெடுக்க முயற்சிக்கிறது. தன்னுடைய எதிர்கால அரசியற் தேவைகளுக்காக இவ்வாறு இந்த அரசாங்கம் செயற்படுகிறது என்று சில விமர்சகர்கள் இந்த நிலை தொடர்பாக அபிப்பிராயம் தெரிவிக்கின்றனர்.

பல்கலைக்கழங்களில் கைவைத்தால் அது நாடு தீப்பற்றி எரிவதற்குச் சமம் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், இலங்கையில் அந்த நிலைமை ஏற்படுமா என்று தெரியவில்லை.

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை பலவீனப்படுத்தியும் ஒடுக்கியும் வந்த ஒரு பாரம்பரியமே இலங்கையில் உள்ளது. ஆட்சியில் எந்த அரசாங்கம் இருந்தாலும் இதுதான் கதை. போராட்டங்களிலுள்ள நியாயங்களை அவை ஒரு போதும் உணர்ந்து கொண்டதோ ஏற்றுக்கொண்டதோ இல்லை.

ஒரு தரப்பை இன்னொரு தரப்புக் குற்றம் சாட்டினாலும் அனைத்துத் தரப்பினதும் அடிப்படை இயல்புகளும் நோக்கங்களும் ஒன்றே.

இதையே மக்கள் எப்போதும் விளங்கிக் கொள்ள வேண்டியதாக உள்ளது. மக்கள் மட்டுமல்ல, மக்களைச் சிந்திக்கத் தூண்டும் சமூகச் செயற்பாட்டாளர்களும் சிந்தனையாளர்களும் இதைத் தாமும் விளங்கிப் பிறருக்கும் விளக்க வேண்டும்.

நாட்டுக்கு ஏற்படுகின்ற நன்மைகள் மற்றும் தீமைகளைப் பற்றிய விழிப்புணர்வை மக்கள் கொண்டிருக்க வேண்டியது அவசியம். இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு அதை ஏற்படுத்தத் தகுதியுடையோரைச் சேர்ந்தது.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதரைக் கடிப்பது என்று சொல்வார்கள். ஏறக்குறைய அத்தகைய ஒரு நிலையில்தான் இன்றைய இலங்கைச் சூழல் உள்ளது.

இனங்களுக்கிடையிலான நெருக்கடிகள், மத நெருக்கடி, அனவருக்குமான பொருளாதார நெருக்கடி, ஜனநாயக நெருக்கடி, அரசியல் நெருக்கடி என விரிந்து சென்று கொண்டிருக்கும் நெருக்கடியில் இப்போது பல்கலைக்கழங்களும் அவற்றின் கல்விச் செயற்பாடுகளும் சிக்கியுள்ளன.

ஒரு அரசாங்கமானது தான் பிரதிநிதித்துவப் படுத்துகிற மக்களையும் நாட்டையும் பாதுகாத்து முன்னோக்கிப் பயணிக்க வழிகாண வேண்டும். அது மக்களுக்கான அடிப்படைகளை உருவாக்க வேண்டும். குறைந்த பட்சம் ஏற்கனவே இருக்கின்ற அடிப்படைகளையேனும் பாதுகாக்க வேண்டும்.

ஆனால், இலங்கையில் இந்தத் தன்மைகள் குறைவு. ஆட்சியில் இருந்த அரசாங்கள் ஒவ்வொன்றும் ஏற்கனவே இருந்த அடிப்படைகளையே தகர்த்துத்தான் வந்துள்ளன.

இதில், இன்றைய அரசாங்கமானது, அடிப்படைகளைத் தகர்ப்பதில் மிகக்கடுமையாகத் தொழிற்படுகிறது.

நாட்டின் நலன்கள் மற்றும் மக்களின் நலன்கள் என்று சிந்திப்பதற்குப் பதிலாக ஆட்சியில் அங்கம் வகிக்கின்ற சிலரின் அல்லது ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் நலன்களுக்காக மட்டுமே அது இயங்குகிறது. அதிலும் வெளிச்சக்திகளின் நலன்களுக்காக நாட்டையும் மக்களையும் பலியிட்டுத் தன்னுடைய வயிற்றை நிரப்பிக் கொள்கிற அரசாங்கமாக இது உள்ளது.

இப்படி இயங்கும் அரசை தரகு அரசாங்கம் என்று அழைப்பதே பொருத்தமானது.

இங்கேதான் மீண்டும் நாம் கவனிக்க வேண்டிய விசயங்கள் இருக்கின்றன. அரசாங்கத்தை விமர்சிப்பது (மேற்குறிப்பிட்ட கார்ட்டூன் உட்பட) அதைக் கண்டிப்பது, அதைக் குற்றம் சாட்டுவது என்பதற்கப்பால், விழிப்புணர்வோடு அதை எதிர்த்துப்போராடுவது என்பது இன்று அவசியமானது.

ஆனால், இந்தப் போராட்டங்கள் மறுபடியும் இன்னொரு அதிகாரத் தரப்பைப் பலப்படுத்துவதாகவோ, அல்லது பிற சக்திகளுடைய நலன்களைப் பாதுகாப்பதாகவே அமைந்து விடக்கூடாது. ஆனால், பிற சக்திகள் இதற்காகவே காத்திருக்கின்றன.

அவை அரசாங்கத்தைத் தமக்குச் சார்பாக இயங்க வைக்கும். அதேவேளை அரசாங்கத்தை எதிர்க்கின்ற தரப்பையும் அவை தமக்குச் சாதமாகக் கையாளும். எந்தத் தரப்புப் பலம்பெறுகிறதோ அல்லது எந்தத் தரப்பு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுகிறதோ அந்தத் தரப்பைத் தமது கால்களுக்கிடையில் வைத்துக் கொள்வதே இவற்றின் நோக்கம்.

எனவே உச்சமான விழிப்புணர்வுடைய செயற்பாடுகளின் மூலமே ஒரு நாட்டின் அடிப்படைகளையும் அதனுடைய கல்வியையும் மக்களையும் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்பானவை. ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. ஆகவே, பல்கலைக் கழகங்கள் இன்று எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளும் சவால்களும் முழு நாட்டுக்கும் முழு அடிப்படைகளுக்கும் எதிரான நெருக்கடிகளும் சவால்களுமாகும்.

இங்கே நாம் இன்னொரு முக்கியமான விசயத்தையும் கவனிக்க வேண்டும்.

நாட்டினுடைய புத்திஜீவிகளின் மையமாக இருக்கின்ற பல்கலைக்கழகத்தினர் சிந்திப்போரைப் பெருமளவுக்குக் கொண்ட பல்கலைக்கழகங்கள், போராடும் ஆற்றலையும் பொறுப்பையும் உடைய பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் இந்தச் சவால்களையும் நெருக்கடிகளையம் எதிர்நோக்கிப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய வரலாற்றுப் பொறுப்பைக் கொண்டுள்ளனர்.

இந்தப் பொறுப்பை அவர்கள் முழு நாட்டு மக்களுக்கும் மாற்றி ஒரு எழுச்சியான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இலங்கையைப் பாதுகாப்பதற்கு எவ்வளவோ போராட வேண்டியுள்ளது. அதாவது இலங்கையர் ஒவ்வொருவரும் இலங்கையில் வாழ்வதற்கு நிறையப் போராட வேண்டியுள்ளது.

ஏனெனில் அந்தளவுக்கு இலங்கை நெருக்கடிகளாலும் சவால்களாலும் அபாயங்களாலும் நிரப்பிப் போயுள்ளது.

00

கிழக்குத் தேர்தல் - வெற்றி யாருக்கு?

Thursday 6 September 2012




-  

இலங்கையில் மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தல் நடந்தாலும் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலே பெரும்பாலான தமிழ் ஊடகங்களிலும் மையப்படுத்திப் பேசப்பட்டது. இணைய வெளியிலும் இதுதான் நிலை. புலம்பெயர் தமிழர்களில் பெரும்பகுதியினரும் இலங்கையில் இருக்கும் தமிழர்களில் அநேகரும் கூட கிழக்குத் தேர்தலைக் குறித்தே சிந்தித்தார்கள். அதைப் பற்றியே கதைத்தார்கள்.

இதனால், தவிர்க்க முடியாமல் இந்தப் பத்தி கூட கிழக்குத் தேர்தல் முக்கியப் படுத்தப்பட்டதைப் பற்றியும் அதன் முடிவுகளைப் பற்றியுமே எழுதப்படுகிறது.

கிழக்குத் தேர்தலில் தமிழ்த்தரப்பு போட்டியிடக்கூடாது என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. இதற்காக தமிழ்ப் புத்திஜீவிகள் என்று சொல்லிக்கொள்ளும் அமைப்பொன்று அறிக்கை கூட வெளியிட்டது. தமிழ்த்தேசிய விடுதலை முன்னணி என்ற கட்சியும் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டிருந்தது. ஆனால் இந்த மாதிரியான விருப்பங்கள், கோரிக்கைகள் எல்லாவற்றையும் புறக்கணித்து விட்டு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிட்டது.

தேர்தல் என்று வந்த விட்டால் வெற்றியடைய வேண்டும் என்ற வெறியும் கூடவே வந்து விடும். இந்த வெற்றியைப் பெற வேண்டும் என்றால், எதைச் சொல்லியும் யாரைப் பிடித்தும் எதைச் செய்தும் அதைப் பெற வேண்டும் என்பதே விதி. இதில் வெட்கப்படுவதற்கோ, மனச்சாட்சிப்படி நடந்து கொள்வதற்கோ அறிவு பூர்வமாகச் செயற்படுவதற்கோ எதுவும் இருப்பதில்லை.

ஆளாளுக்கு ஒரு நியாயத்தைச் சொல்லிக்கொண்டாலும் அடிப்படையில் எல்லோருக்கும் தங்கள் நலமே முதன்மை. நிச்சயமாக மக்களின் நலன் இல்லை. தத்தம் கட்சிகள் வெல்ல வேண்டும் என்று தொண்டர்களும் அபிமானிகளும் விரும்புகிறார்கள். தொண்டர்களை தங்களின் ‘அடிப்பொடி’களாகக் கட்சிகளும் தலைவர்களும் வைத்திருப்பது ஒரு பாரம்பரிம்.

போதாக்குறைக்கு இனவாத அடிப்படையில் கட்சிகள் தங்கள் பாரம்பரியத்தைப் பேணுவதால் இனவாதச் சிந்தனையில் ஊறிப்போன சனங்களும் அந்த அடிப்படையிலேயே சிந்திக்கத் தலைப்படுகிறார்கள். யாருக்கும் நீதி, நியாயம், சரி, பிழை எதுவும் புலப்படுவதில்லை.

எனவே தேர்தற் பரப்புரையும் தேர்தல் முடிவுகளும் அந்த அடிப்படையில்தான் அமையும். இதில் வேறு மாற்றங்களைக் காணவே முடியாது.

சனங்கள் எல்லாவற்றையும் இனவாதம் என்ற கண்ணாடியினூடாகத்தான் பார்க்கிறார்கள். அவ்வாறே அவர்கள் பழக்கப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்குத் தோதாக கட்சிகளும் தலைவர்களும் பொருத்தமான“ வாதங்களைக்“ கண்டு பிடித்து அடுக்கி வைத்திருக்கிறார்கள். சற்று வித்தியாசமாகச் சிந்திப்பதற்கு இடைவெளியை – மாற்றங்களை யாரும் விட்டு வைப்பதில்லை.

ஆகவே, எல்லாக் கட்சிகளும் தங்கள் தங்கள் சாத்தியப்பாடுகளுக்கு ஏற்றமாதிரி, குத்துக்கரணங்கள், கோமாளித்தனங்கள், அயோக்கியத்தனங்கள், தகிடு தித்தங்கள் என்று என்னென்னவெல்லாவற்றையுமோ செய்து, தேர்தல் திருவிழாவை நடத்தியுள்ளன.

கிழக்குத் தேர்தலில் மட்டும்தான் இந்த மாதிரியான சீர்கேடுகள் நடந்தன என்றில்லை. இலங்கையில் எங்கே தேர்தல் நடந்தாலும், யார் அதிலே போட்டியிட்டாலும் அதில் அயோக்கியத்தனங்களுக்கும் பொய்களுக்கும் எந்தக் குறையும் இருப்பதில்லை.

2004 இல் பாராளுமன்றத் தேர்தல் நடந்தபோது வடக்குக் கிழக்கிலே போட்டியிட்ட த.தே.கூட்டமைப்பை வெற்றியடைய வைப்பதற்காக விடுதலைப் புலிகளே ஏராளம் தகிடுதித்தங்களைச் செய்தார்கள். அந்த நாட்களில் வாக்களிக்கச் சென்ற பலரும் ஐந்துக்கு மேற்பட்ட வாக்குகளையே போட்டிருந்தார்கள். அந்த நாட்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களாக இருந்த ஒவ்வொருவரும் தலா பத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் போட்டதாக இன்னும் பெருமையோடு சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். அப்போது தேர்தல் உத்தியோகத்தர்களும் இதற்குத் தோதாகத்தான் நடந்தார்கள். 

வன்னியில் புலிகளின் நகைக்கடைகளுக்கு கொழும்பில் இருந்தே ஆட்கள் வருவார்கள். சிலர் வெளிநாடுகளில் இருந்து வந்து தங்களுக்கான நகைகளை வாங்கிக் கொண்டு போயிருக்கிறார்கள். அந்த அளவுக்கு தரமான தங்கத்தை, கலப்படமற்ற தங்கத்தை வியாபாரம் செய்த புலிகள் தேர்தல் என்று வந்தபோது தலைகீழாகிப் போனார்கள்.

இந்த நிலையில் மற்றவர்களின் கதையையும் கதியையும் சொல்ல வேணுமா?

இப்போது கிழக்குத் தேர்தலில் வெற்றிக்கான வாக்குகளைத் தேடி, வாய்ப்பைத்தேடி  அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஒரு சுற்றுப் பயணம் நடத்தியிருக்கிறார்.

தேர்தலுக்கு முன்னரே செய்ய வேண்டியதைச் செய்திருந்தால், தேர்தற்காலத்தில் சிரமங்களைப் படவேண்டியதில்லை என்பதே என்னுடைய கருத்து. தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலைத் தாக்கல் செய்து விட்டு மக்களிடம் வருவதெல்லாம் பொய். வீண் வேலை. இதை நான் அவருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பொதுவாகவே கூறுவேன். 

கிழக்கில் அரசாங்கம் பல முன்னேற்ற நடவடிக்கைகளைச் செய்திருக்கலாம்;. அதைப் பற்றிய பெரும் பட்டியல்கள் தேர்தல் மேடைகளில் சொல்லப்பட்டன. என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும் பிள்ளையான் என்ற சந்திரகாந்தனை கிழக்கில் மறக்கமுடியாது என்று சொல்வோரும் உள்ளனர். பார்ப்போருக்கும் இதைப் பற்றித் தெரியும். ஆனால், அதற்கும் அப்பால், முக்கியமான காரியங்கள் செய்யப்பட்டிருக்க வேணும்.

இனரீதியாகப் பிளவுண்ட சமூகங்களை ஒருங்கிணைப்பதில் அரசாங்கம் இன்னும் வெற்றியடையவில்லை. பதிலாக இன்னும் அது முரண்பாடுகளை அதிகரிக்கும் விதமாகவே நடந்து கொள்கிறது.

இதற்குக் கொஞ்சமும் குறைவில்லாமலே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளும் அமைந்துள்ளன. இனவாதத்தை ஏட்டிக்குப் போட்டியாக வளர்ப்பதில், வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதையும் விட இலகுவாக தமிழ்ச்சனங்களின் இதயங்களில் விசமுள்ளை ஏற்றுவதில் தமிழரசுக் கட்சித் தலைகள் பலே கில்லாடிகள். இதனால், தமிழ் மக்களின் வாக்குகளை மட்டும் பெறக்கூடிய அளவுக்கே வீட்டுச் சின்னம் இன்று மாறியிருக்கிறது.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இதே வீட்டுச் சின்னத்துக்கு முஸ்லிம் மக்களும் வாக்களித்தார்கள். இப்போது அவர்கள் மரச் சின்னத்துக்கு வாக்களிக்கிறார்கள். வீட்டுச் சின்னத்துக்கு முஸ்லிம்கள் வாக்களிக்கப்போவதில்லை என்பதைப்போல மரச்சின்னத்துக்கு தமிழர்கள் வாக்களிக்கப்போவதில்லை. 

இதுதான் கிழக்குத் தேர்தலின் உண்மையான நிலைவரம்.

ஆனால், அரசாங்கம் முன்னிறுத்தியிருக்கும் வெற்றிலைச்சின்னத்துக்கு தமிழர்களில் ஒரு தொகுதியினரும் (இவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பினும்) முஸ்லிம்களில் ஒரு சாராரும் (இவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கும்) சிங்கள மக்களும் வாக்களிக்கப்போகிறார்கள். இவர்கள் இனவாதத்தைக் கடந்தவர்கள் என்று சொல்ல முடியாது விட்டாலும் ஒரு பொதுநிலையில் ஒன்றிணைகிறார்கள் என்பது கவனித்திற்குரிய ஒன்று.

ஆனால், இந்த மக்களை அரசாங்கமும் ஏனைய கட்சிகளைப் போலவே பயன்படுத்தி விட்டுவிடும். அதற்கப்பால், இந்த மக்களை சமாதானத்தின் அடித்தளத்தைக் கட்டுவோராகவோ, நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான வழிமுறையாளர்களாகவோ வளர்த்தெடுக்கப்போவதில்லை. இந்த மாதிரி ஐக்கியப்படும் ஒரு சமூக சக்திகளாக இவர்கள் கவனிக்கப்படப்போவதும் இல்லை.

இதேவேளை இந்த மூன்று தரப்பின் வாக்குகளும் அரசாங்கத் தரப்பை வெற்றியடைய வைக்குமா என்பதும் வலுவான சந்தேகத்துக்குரிய ஒன்று.

மறுவளத்தில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இந்தத் தடவை கிழக்கில் அதிகூடிய வாக்குகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்த்தேசியப் பற்றுடன் மக்கள் தேர்தற்களத்துக்கு நிச்சயம் செல்லவேண்டும் எனவும் சர்வதேசத்துக்கு தமிழ் மக்கள் இன்னொரு தடவை தங்களை நிரூபிக்க வேண்டும் எனவும் தமிழரசுக்கட்சி மன்னிக்கவும் த.தே.கூ சொல்லியிருக்கிறது.

தொடக்கத்தில் தந்திரமாக முஸ்லிம்களின் வாக்குகளை எப்படியாவது கறந்து விடவேண்டும் என்று முயற்சித்தார் சம்மந்தன். ஆனால், பிடிவாதமாகவே முஸ்லிம் கட்சிகள் சம்மந்தனை நிராகரித்து, அவரைப் பகிரங்கமாக அவமதித்து விட்டன. (ஆனால், இன்னும் முஸ்லிம்களின் ஆதரவைக் கோரியவாறே சம்மந்தன் நிற்கிறார். இது அவருக்குத் தவிர்க்க முடியாத ஒன்று. தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரும் த.தே.கூ வுக்கு முஸ்லிம்களின் ஆதரவு தேவைப்படும் நிலையுண்டு).
 
இறுதியில் தமிழ் மக்களையே நம்ப வேண்டியதாகிவிட்டது சம்மந்தனுக்கு. எனவே அவர், இது இறைவன் தந்த இறுதிச் சந்தர்ப்பம் என்று மனமுருகி கண்ணீர் சிந்தியிருக்கிறார். போதாக்குறைக்கு அந்தக் கட்சி வழமையைப்போல தமிழர்கள் யார் என்று காட்ட வேண்டும், சிங்களவர்களுக்குத் தமிழர்கள் அடிமையில்லை என்று தெரிவிக்க வேண்டும். சர்வதேசத்துக்கு தமிழர்களின் உணர்வு எத்தகையது என்று சொல்ல வேண்டும் என்றெல்லாம் பழைய  நாடகத்தை ஒரு முறை ஆடி முடித்திருக்கிறது.

என்னதான் நரம்பு சிலிர்க்க துடித்தெழும் தமிழ்த் தேசியவாதிகள் எல்லாம் ஒன்று திரண்டு த.தே. கூவை வெற்றியடைய வைப்பர் என எதிர்பார்க்கப்பட்டாலும் கூட்டமைப்பினரால் சுமுகமான ஒரு ஆட்சியை கிழக்கில் ஏற்படுத்த முடியாது என்பதே உண்மையானதாகும்.

பதிலாக கொந்தளிப்பும் சீர்கேடுமான ஒரு ஆட்சியே கிழக்கில் நடைமுறையில் இருக்கும். இது நிச்சயமாகக் கிழக்கின் அமைதியைக் குலைக்கும். அரச தரப்பு ஆட்சிக்கு வந்தாலும் இதுதான் நிலை. கிழக்கில் வலுவான இணைச் சமூகமாக இருக்கும் முஸ்லிம்தரப்புடன் நீதியான – வெளிப்படையான உறவுக்கு தமிழ்கூட்டமைப்புச் செல்லாத வரையில், அல்லது அரசு செல்லாத வரையில் அங்கே அமைதியை ஏற்படுத்தவும் முடியாது. நீதியை நிலைநிறுத்தவும் இயலாது.

தமிழ்க்கூட்டமைப்பு கிழக்கில் ஆட்சியைத் தக்க வைக்க வேண்டுமானால் அது தவிர்க்க முடியாமல் முஸ்லிம் தரப்பின் ஆதரவைப் பெற்றே தீரவேணும். ஆனால், அந்த ஆதரவை இலகுவில் பெற்றுவிட முடியாது. இலவசமாகவும் பெறமுடியாது.

அதற்கான விலைகள் அதிகம். ஆதரவளிக்கும் முஸ்லிம்தரப்பு முதலில் தமக்கே முதலமைச்சர் பதவி என்றுகூடக் கோரலாம். அல்லது அமைச்சரவையில் வலுவான பங்கைக் கேட்கலாம். அத்தோடு, ஆட்சிக் காலத்தில் பல தேவைகளையும் உதவிகளையும் பங்குகளையும் கோரலாம். இதெல்லாம் அவர்களைப் பொறுத்தவரையில் தவிர்க்க முடியாதவை.

இதற்குக் கூட்டமைப்பினால் எந்த அளவுக்கு நெகிழ்ந்து கொடுக்க முடியும்? என்பது முக்கியமான கேள்வி. மற்றவர்களை இணைத்துப் பயணித்த அனுபவம் தமிழர்களுக்குப் பொதுவாகவே குறைவு. அவர்கள் எப்போதும் தம்மை முன்னிலைப்படுத்தியே பழக்கப்பட்டவர்கள். சிங்களத் தரப்பிலும் இதுதானே குறைபாடு. ஆனால், தமிழர்கள் மிகச் சிறுபான்மையினராக இருப்பதாலும் பலவீனமான நிலையில் இருப்பதாலும் சி்ங்களவர் தமிழரை ஆட்டிப்படைக்கிறார்கள். ஆனால், இங்கே முஸ்லிம்களின் நிலை அவ்வாறல்ல.  இங்கே முஸ்லிம்கள் பலமான அல்லது வலுவான நிலையில் இருக்கும்போது கூட்டமைப்புக்கு அது நெருக்கடியாக அமையலாம். ஆகவே தமிழ்த் தரப்போடு நிச்சயமாக முஸ்லிம்களுக்கு மோதல்களே ஏற்படும்.

இதேவேளை இன்னொரு வலுவான தரப்பைப் பற்றியும் நாம் பார்க்க வேண்டும். முஸ்லிம் முதலமைச்சர் கனவோடு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் களமிறங்கியது. அதற்காக அது கடுமையான போராட்டங்கள், முயற்சிகளின் பின்னர் அரசாங்கத்தை விட்டுத் தனியே களத்தில் இறங்கியது. ஒரு கட்டத்தில் - இந்த நாடகத்தின் உச்சக் கட்டத்தில் கட்சியின் முக்கியஸ்தரான பஸீர் சேகுதாவூத்தே தன்னுடைய துணை அமைச்சர் பதியைத் துறந்திருந்தார்.

போதாக்குறைக்கு அரசாங்கத்தை முடிந்தவரையில் குற்றம்சாட்டித் தேர்தற்காலப் பகைமை உணர்வை வெளிப்படுத்தினார் ஹக்கீம் . இந்த நிகழ்ச்சிகளின் உச்சக்கட்டமாக அவர் அரசாங்கம் வேறு, முஸ்லிம் காங்கிரஸ் வேறு என்று வெளிப்படுத்தினார்.

இதன்மூலம் ஹக்கீமும் முஸ்லிம் காங்கிரசும் வெற்றியடைந்துள்ளன என்றே சொல்ல வேணும். அரசாங்கத்தில் இன்னும் பொறுப்பான அமைச்சுப் பதவியில் ஹக்கீம் இருக்கிறார். அரசாங்கத்துக்கு எதிராக அவருடைய கட்சி தேர்தல் களத்தில் நிற்கிறது. அவர் அரசை எதிர்த்துப்பேசுகிறார். அப்பப்பா... என்ன சாகஸம். பஸீர் நாளை கூட இழந்த பதவியையோ அல்லது அதற்கும் கூடுதலான பதவியையோ பெறலாம். அதற்கான நிகழ்தகவு அதிகம்.

அதேவேளை தன்னுடைய தனித்துவத்தை முஸ்லிம் கொங்கிரஸ் இழக்கவில்லை. அது அரசாங்கத்தை எதிர்த்து, தனித்து தேர்தலில் நின்றது. அண்மையநாட்களில் முஸ்லிம்களின் மீதான சிங்களக் கடும்போக்காளர்களின் எதிர்ப்புகளைக் கண்டும் காணாதிருக்கும் அரசாங்கத்துக்கு அது தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறது என்ற தோற்றப்பாட்டை உருவாக்கியும் விட்டது. 

மேலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடனும் அது தேர்தற் கூட்டை வைத்துக் கொள்ளவில்லை. இந்த நிலையில் தேர்தலில் யார் ஆட்சியை அமைப்பதாக இருந்தாலும் அவர்களுக்கு முஸ்லிம் கொங்கிரசின் உதவி, ஆதரவு தேவை. இதை வலுவான நிலையில் இருந்து நிபந்தனையுடன் வழங்கும் நிலையில் முஸ்லிம் கொங்கிரஸ் உள்ளது. இதன்மூலம் அது தனக்கானவற்றைப் பெற்றுக்கொள்ளும். தன்னுடைய தனித்துவத்தையும் முடிந்தவரையில் காத்துக்கொள்ளும்.

மற்றவர்களை விடவும் இப்போது அதிக நன்மைகளைப் பெறும் நிலையில் இருப்பதும் பாதுகாப்பாகவும் இருப்பதும் மு.காவே.

இதேவேளை தமிழர்கள் யாருக்கு வாக்களித்தாலும் - தமிழ்க் கூட்டமைப்புக்கோ அல்லது அரசாங்கத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கோ அல்லது மு.காவுக்கோ யாருக்குத்தான் வாக்களித்தாலும் அவர்களுக்கு அதிகமாக எதுவும் கிட்டப்போவதில்லை.

தமிழர்கள் எதிர்பார்ப்பதைப் போலச் சர்வதேச சமூகம் என்ற பொய்யர்கள் இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்போவதும் இல்லை. சர்வதேச சமூகத்துக்கு யார் பயன்படுத்தக் தக்க நிலையிலும் யார் லாபத்தை அதிகமாகத் தரக்கூடியவாறும் உள்ளனர் என்பதே அக்கறைக்குரிய ஒன்று. ஆனால், தேர்தல் வியாபாரிகள் சிலர் மட்டும் இதில் லாபம் பெறுவர். வெற்றியடையமுடியாத அரசாங்கம் மேலும் வன்மத்தையே பிரயோகிக்க முயலும். இதுதான் வழமையும் யதார்த்தமும் உண்மையும். 

எப்படியோ கிழக்கின் இந்தத் தேர்தலும் சகல மட்டத்திலும் இடைவெளிகளையே அதிகரிக்கும் ஏது நிலைகளே அதிகமாகக் காணப்படுகின்றன. அவ்வாறெனில்  முரண்நிலைகள் மேலும் கூடத்தான் போகின்றன. பிரிவினை வாதிகள் மக்களை ஒன்று சேர என்றும் விடுவதேயில்லை.

00 


‘நாங்கள் யுத்தகாலத்தில் நடந்து செல்வதற்கே பாதைகள் இருக்கவில்லை

Tuesday 28 August 2012
















இலங்கையின் கொந்தளிப்புகள் இன்னும் நீங்கவில்லை. பதிலாக அவை வெவ்வேறு வடிவங்களை எடுத்துள்ளன. இதன் விளைவாக முரண்பாடுகள் அதிகரித்துள்ளன. நிரந்தரத்தன்மையைப் பெற்று வருகிறது பகைமை. இனங்களுக்கிடையிலும் சமூகங்களுக்கிடையிலும் ஒரு தொற்றுநோயைப் போலப் பரவி வருகிறது அச்சமும் சந்தேகமும். பல தரப்புகளாலும் திட்டமிட்டு வளர்க்கப்படுகிறது இந்த நிலை.

அரசியலுக்குத் தேவை எரியும் பிரச்சினைகள். மேலும் பிரச்சினைகள். கொந்தளிப்புகள். நெருப்பை ஒத்த சூடு. சனங்களின் அவலம், கண்ணீர், இரத்தம் எல்லாம்.

ஊடகங்களுக்கும் தேவை இவையெல்லாம். சனங்களுடைய உளவியலும் இதை நோக்கியே கட்டமைக்கப்பட்டுள்ளது. வன்முறைச்செய்திகள், கொந்தளிப்பான தகவல்கள், பரபரப்பு.

போர் முடிந்திருக்கிறது என்பது உண்மை. ஆனால், யுத்த அபாயத்துக்கு அப்பால் மக்களுடைய பிரச்சினைகள் தீரவில்லை. மக்களுடைய எண்ணங்களும் மாறவில்லை. குற்றச்சாட்டுகள் ஏவுகணைகளை விடவும் உச்சமாகப் பாய்ந்து கொண்டிருக்கின்றன.

எல்லோரும் யுத்த காலத்தை ஒத்த மனநிலையில்தான் உள்ளனர். அல்லது அத்தகைய ஒரு நிலையைப் பராமரிக்கின்றனர்.

அமைதிக்காகச் சிந்திப்போர் பரிகசிக்கப்படுகிறார்கள். அல்லது சந்தேகிக்கப்படுகிறார்கள். பல வேளைகளிலும் புறக்கணிப்பப்படுகிறார்கள். சிலசமயங்களில் தண்டிக்கவும் படுகிறார்கள்.

மீண்டும் நெருப்புத் துண்டங்களைத் தின்பதற்கே பலரும் விரும்புகின்றனர். கொழுந்து விட்டு எரிந்த தங்களுடைய கடந்த காலத்தை இவ்வளவு எளிதாகப் பலரும் மறந்து வருவதே கவலையளிப்பது.

‘நீ எதை விரும்புகிறாய்? யுத்தத்தையா அல்லது சமாதானத்தையா?’ எனக் கேட்டேன் ஒரு நண்பரிடம்.

‘சமாதானத்தையே’ என்றார் அவர் உடனடியாக.

‘ஆனால், நிரந்தர சமாதானத்தை’ என்றார் பின்னர், சற்று அழுத்தி.

‘சமாதானம் என்ற வெறும் சொல்லை அல்ல’ என்று சற்று நேரத்தின் பின்னர் நிதானமாகச் சொன்னார்.

அவர் சொன்னதின் பின்னாலுள்ள அர்த்தத்தை நீங்கள் நன்றாகவே உணர்வீர்கள்.

அமைதி என்பதும் சமாதானம் என்பதும் எவ்வளவு சந்தேகத்திற்குரிய ஒரு விசயமாக, ஒரு சொல்லாக மாறியுள்ளது என்பதை.

அமைதியைப் பற்றியும் சமாதானத்தைப் பற்றியும் கதைக்கும் போது மக்களும் அதைப் பற்றி அதிகம் பொருட்படுத்துவதில்லை.

அரசியல்வாதிகளும் தரப்புகளும் ஊடகங்களும் சர்வதேச சமூகமும் இந்தச் சொற்களின் அர்த்தத்தை, இவற்றின் உண்மைத்தன்மையைப் பாழாக்கி விட்டன.

எனவே சனங்கள் நம்பிக்கையற்ற ஒன்றின் பின்னால் நிற்பதற்குத் தயங்குகிறார்கள்.

ஆனால், மிகச் சவாலான விசயமே இதுதான்.

மிக முக்கியமான விசயமும் இதுதான்.

அமைதியைப் பற்றிச் சிந்தித்தல் அல்லது அமைதிக்குத் திரும்புதல் அல்லது அமைதியை உருவாக்குதல் என்பது.

என்றபோதும் கொந்தளிக்கும் நிலையை மாற்ற வேண்டுமானால் இதைத் தவிர வேறு வழியில்லை.

முரண்பாடுகளையும் அழிவையும் பாதகமான விளைவுகளையும் தவிர்க்க வேண்டுமானால், சமாதானத்தை நடைமுறைப் படுத்துவதைத் தவிர, வேறு மார்க்கமேயில்லை.

ஆனால், சமாதானத்தை உருவாக்குவதொன்றும் அத்தனை எளிதான காரியமில்லை.

அது யுத்தத்தைப் போன்றதல்ல. யுத்தத்தை உருவாக்குவதற்கான பொறிகள் மிக எளியவை. அவை அதிகமாகவும் உண்டு. மட்டுமல்ல அவற்றின் எரிபற்று நிலையும் மிக உச்சமானது.

ஒரு கணம், ஒரு சொல் போதும் மாபெரும் யுத்தத்தை மூட்டிவிடுவதற்கு. திரௌபதியின் ஒரு சொல், ஒரு சபதமே மகாபாரத யுத்தம்.

அதைப்போல கைகேயிக்கு வழங்கப்பட்ட ஒரு சொல்லே இராமாயணத்துக்கு அடிப்படை.

இதிகாசங்களில் மட்டுமல்ல உலகம் முழுவதுமுள்ள நடைமுறையும் அப்படித்தான்.

ஒரு தீக்குச்சியில் இருக்கும் தீயை மூட்டும் தன்மையையும் விட யுத்தத்தை மூட்டுவதற்கான சொல்லில் இருக்கும் எரிபற்று நிலை அதிகம்.

ஆனால், அமைதிக்குத் திரும்புவதென்பது மிக மிகக் கடினமான ஒன்று.

அது ஏராளம் சொற்களைக் கொண்டு உருவாக்கப்படும் நம்பிக்கையின் அத்திவாரம். ஏராளம் நடைமுறைகளை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட வேண்டிய ஒரு நிர்மாணம். ஒரு சிறு கவனப் பிசகு எல்லாவற்றையும் சிதறடித்து விடும். அவ்வளவு மென்மையான இழைகள் சமாதானத்தினுடையவை.

சமாதானத்துக்கான அடிப்படையாக இருக்கும் பரஸ்பர புரிந்துணர்வொன்றை உருவாக்குவதற்கான முன் முயற்சிகளுக்கே ஏராளம் விசயங்கள் தேவை. ஏராளம் நடைமுறைகள் அவசியம்.

அவை இல்லாத போது ஒரு சிறு அசைவைக் கூட நிகழ்த்தி விட முடியாது.

குறிப்பாக சமாதானத்தைக் குறித்த செயற்பாடுகளை நோக்கிய அதிக அர்ப்பணிப்பும் தியாக மனப்பாங்கும் உறுதியும் அவசியம்.

அமைதியை நோக்கிய உயரிய சிந்தனையும் அதை நடைமுறைப்படுத்துவதற்கு செய்ய வேண்டிய விட்டுக் கொடுப்புகளும் ஏற்றுக்கொள்ளல்களுமான ஒரு நடைமுறையும் வேண்டும்.

இதற்கு விரிவாகச் சிந்திக்கக் கூடிய மேதமைத்தன்மையும் அதை நடைமுறைப்படுத்தும் துணிச்சலும் அரசியல் லாபங்களுக்கு அப்பாலான மக்கள் விசுவாசமும் தேவை.

இவை சாதாரணமாக அமைந்து விடுவதில்லை. மிகப் பெரிய ஆளுமையுடன் கூடிய, ஆற்றல் நிரம்பிய ஒரு செயற்பாட்டினாலேயே இவற்றை நாம் உருவாக்க முடியும்.

முரண்பாட்டு உருவாக்கத்தின் மூலம், பகை அரசியலின் வழியாக லாபங்களைப் பெற்ற தரப்புகள் எவையும் கடினமும் சவால்களும் நிரம்பிய வழிகளைப் பின்பற்ற மாட்டா.

அவற்றின் வழிமுறைகளே வேறு. அவை இந்தப் பெரிய சோதனைகள் நிரம்பிய வழிமுறையை, மக்களுக்கான அர்ப்பணிப்பைத் தேர்வதைப் பற்றிச் சிந்திக்கவே விரும்பாது.

எல்லாவற்றையும் விடப் பகை அரசியலில் லாபங்களும் அதிகம். அவற்றை எட்டுவதும் சுலபம். அபாயங்கள் நிறைந்த வழிமுறை அது என்றாலும் அது ஒரு சதுரங்கப் பலகையைப் போன்றிருப்பதால், போதைத் தன்மையுடன் அதில் இறங்கி ஈடுபடலாம்.

கத்திகளை லாவகமாகச் சுற்றக் கூடிய ஒரு பயிற்சி இருந்தாற் போதும் தாரளமாக வெற்றிகளைப் பெற்று விட முடியும்.

எனவேதான் எல்லோரும் முரண்பாட்டு அரசியலை – பகை அரசியலைத் தேர்ந்து கொள்கிறார்கள்.

இதில் இன்னொரு லாபமும் உண்டு. பகை அரசியலில் மக்களுக்கு வேண்டியவற்றை அதிகம் செய்யத் தேவையும் இல்லை. மக்களை எப்போதும் தங்களை நோக்கித் தங்கியிருக்கும் நிலையில் வைத்திருக்க வேண்டுமானால், அவர்களைப் பற்றாக்குறைகளுடன் வைத்திருக்க வேண்:டும்.

பற்றாக்குறைகளுடன் இருப்போருக்கே எஜமான்கள் தேவை. எல்லாம் நிறைந்திருப்போருக்கு எஜமானன்கள் அவசியப்படுவதில்லை.

ஆகவே, சனங்களைப் பற்றாக்குறைகளுடன், அவலப்படுவோராகவும் அல்லற்படுவோராகவும் வைத்திருக்க வேண்டும். அதற்குப் பகை அரசியலே கை கொடுக்கும்.

பகை அரசியலில் இன்னொரு நன்மையும் உண்டு. அதில் குற்றச் சாட்டுகளை பரஸ்பரம் சுமத்திவிட்டுப் பேசாதிருந்து விடலாம். எதையும் மக்களுக்குச் செய்யத் தாம் தயாராக இருப்பதாகவும் ஆனால், எதிர்த்தரப்பு அதற்கு ஒத்துழைக்கவில்லை என்றும் சுலபமாகப் பழியை எதிர்த்தரப்பிடம் சுமத்திவிட்டுப் பேசாதிருந்து விட முடியும்.

சனங்களும் அதை நம்பி விடுவர், மிக எளிதாக.

அத்துடன் பகை அல்லது முரண்பாட்டு அரசியலில் எப்போதும் இருக்கின்ற சுவாரஷ்யம், சனங்களுக்குக் கவர்ச்சியானது. அவர்கள் தங்களுடைய நிலைமையை மறந்து விட்டே இந்த முரண்பாட்டில் இருக்கும் சூட்டையும் அதனுள்ளிருக்கும் போதைத் தன்மையையும் ரசிக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

கதாநாயகன் வில்லன், கறுப்பு வெள்ளை, எதிரி, தியாகி என்ற எளிய சூத்திரம் மனதில் எளிதாகவே தங்கி விடுகிறது.

மிக எளிய ஒரு சினிமாவைப் பார்ப்பதைப் போல தங்களின் முன்னே இருக்கின்ற போதையூட்டும், கிளர்ச்சிகளின் ஊற்றாக இருக்கும் முரண்பாட்டு அரசியலை ரசிக்கிறார்கள்.

இந்தப் பலவீனமான உளவியலை அரசியல்வாதிகளும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் மிகச் சுலபமாகக் கையாள்கின்றனர்.

வெளித்தோற்றத்துக்கு நியாயத்தன்மை உடையதாகத் தெரியும் முரண்களின் உள்ளே எத்தகைய வழிகளுக்கான ஒளியும் நன்மைகளுக்கான வித்துகளும் இருப்பதேயில்லை.

பதிலாக முரண்பாட்டு அரசியலில், பகை அரசியலில், எதிர் அரசியலில் இருப்பது அத்தனையும் நச்சு விதைகள்.

என்றபடியாற்தானே கடந்த காலம் தீயில் கருகியது. ஆனால் யாருடைய கடந்த காலம் தீயிற் கருகியது என்பதே இங்கே உள்ள முக்கியமான அவதானமாகும்.

சனங்களின் கடந்த காலமே தீயில் கருகியது. அவர்களே இன்னும் மீள முடியாத அவலப்பரப்பில் உள்ளனர்.

ஆகவேதான் அவர்கள் விழிப்போடு இருக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். இந்தப் பத்தி கூட அவர்களை நோக்கியே சிந்திக்கவும் எழுதவும் படுகிறது. முரண்பாட்டு அரசியலை, முரண்பாட்டு நிலைகளை உருவாக்கும் வியாபாரிகளை நோக்கியல்ல.

மெய்யான ஊழியம் செய்வோரைக் கனம்பண்ணியே இந்தச் சொற்கள் இங்கே நிர்மாணிக்கப்படுகின்றன.


உண்மையில் சனங்களை நோக்கிய அரசியல் என்பதும் ஊடகப் பணி என்பதும் நன்மைகளை உருவாக்குவதாகவே அமைய வேண்டும்.

பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவே ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வொரு சொல்லும் பயன்படுத்தப்பட வேண்டும். தீர்வை நோக்கிய, பிரச்சினைகளிலிருந்து விடுபடுதலை நோக்கிய, பிரச்சினைகளை இல்லாதொழிப்பதை நோக்கிய  செயற்பாடுகளை உருவாக்குவதே அவசியமானது.

ஆனால், நடந்து கொண்டிருப்பது என்ன?

பிரச்சினைகளை உருவாக்கும் காரியங்களே கணமும் நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நொடியிலும் முரண்களைக் கூர்மைப்படுத்தும் செயற்பாடுகளே மேற்கொள்ளப்படுகின்றன.

இது யாருக்காகச்  செய்யப்படுகிறது?

இலங்கைத் தீவில் இன்று சமூகங்களுக்கிடையிலான - இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை யார் செய்கிறார்கள்? அவர்கள் எதற்காகச் செய்கிறார்கள்?

லாபங்களைப் பெறும் நோக்கோடு, நலன்களைப் பேணும் நோக்கோடு சர்வதேச சமூகம் என்ற ஆதிக்கச் சக்திகளும் உள்ளுர் அரசியல் ஊடக அதிகாரத் தரப்புகளும் இந்த பிரச்சினைகளை உருவாக்கும் அரசியலை – முரண்பாட்டு அரசியலைச் செய்கின்றன.

ஆகவே இந்தத் தரப்புகளுக்கு உதவும் முகமாகவே பல உள்ளுர் சக்திகளும் தங்களை அறியாமலே செயற்படுகின்றன.

இந்த முரண் அரசியலுக்கு, பகை உணர்வரசியலுக்கு இன்னொரு சிறிய உதாரணம்.

விஜய், விஜயகாந்த், விக்ரம், அர்ஜூன், ரஜினி போன்றோரின் அதிரடிப் படங்களில் வருகின்ற வில்லன் - கதாநாயகன் பாத்திரங்களைப் போன்றதே, அந்தப் படங்களில் மையப்படுத்தப்படும் கதைகளைப் போன்றதே இந்த அரசியலும்.

அங்கேயும் தொடர்ந்து வில்லன் - கதாநாயகன் நிகழ்ச்சி இருந்து கொண்டிருக்கும். அதுதான் அதன் கவர்ச்சிமையம்.

பார்வையாளருக்கு இந்த கதாநாயகன் - வில்லன் கவர்ச்சி குறைவதில்லை. அதைப்போல அதிலே வருகின்ற வில்லன்களும் ஒரு போதுமே இல்லாமற் போய்விடுவதில்லை. பார்க்கின்றவர்களுக்கு ஒரு கணநேர இன்பம் கிட்டுகிறது. அதற்கப்பால் எதுவும் அதிலே நிகழ்வதில்லை.

அவற்றிலே வருகின்ற நாயகர்களைப் போல அசாத்தியமான துணிச்சலோடு யாரும் போரிடுவதும் இல்லை. நியாயங்களை நிலைநிறுத்துவதற்காகப் போராடுவதும் இல்லை.

அத்தகைய படங்களைப் பார்ப்பதன் மூலம் அல்லது அந்தப் படங்களில் பேசப்படும் விசயங்களின் மூலம் எந்தப் பிரச்சினையும் தீர்ந்து விடுவதில்லை.
ஆனால், பதிலாக அந்தப் படங்களை உற்பத்தி செய்வோரும் அதில் நடிப்போரும் தாராளமாக உழைத்து விடுகிறார்கள். அவர்களுடைய கதாநாயக அந்தஸ்து, பிரமுகர் நிலை, புகழ் எல்லாம் அந்தச் சினிமாவையும் விட உச்சமாக உயர்ந்து விடுகிறது. அதிலும் நிஜத்தில். அவர்கள் லட்சாதிபதிகளாக, கோடீஸ்வரர்களாக மாறிவிடுகிறார்கள்.

இவர்களுக்கு ஊடகங்களிலும் பெரும் செல்வாக்கு மண்டலம் உண்டு. ஊடகங்கள் இவர்களை வைத்தே, இவர்களுடைய இந்தப் போக்கை வைத்தே தங்கள் உழைப்பைச் செய்கின்றன. அதுவும் பகிரங்கமாக.

ஏறக்குறைய இதே தன்மைதான் முரண்பாட்டு அரசியலில் ஈடுபடுவோரிடமும் உண்டு. அவர்களும் லட்சாதிபதிகளாக, புகழாழர்களாக, செல்வாக்குடையோராக, ஊடகங்களில் கொண்டாடப்படுவோராக, ஊடகங்களுக்குத் தேவைப்படுவோராக உள்ளனர்.

(இப்பொழுது உங்களில் பலருக்கு யார் விஜய், யார் எம்.ஜி.ஆர், யார் விஜயகாந், யார் அர்ஜூன், யார் விக்ரம் என்று விளங்கியிருக்கும்.

ஆகவே இத்தகைய (தன்) நலன்விரும்பிகள் எப்படி சமாதானத்துக்கான அடித்தளத்தை நிர்மாணிக்க முனைவர்? எவ்வாறு அமைதிக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொள்வர்?

மக்களிடம் இறங்கி, அவர்களோடு வாழ்ந்து, அவர்களுக்காக அரசியற் பணியாற்றுவது என்பது, மக்களோடு அவர்களைக் கரைத்து அவர்களை ஒன்றிணைக்க விரும்புவது. அங்கே பிரமுகர்த்தனத்துக்கும் அதிகாரத்தனத்துக்கும் இடமிருக்காது.

இதிலேதான் நம்பிக்கையும் அர்ப்பணிப்பும் பற்றுறுதியும் உருவாகும். ஆனால், அதற்கான சூழ்நிலைகள் தென்படவேயில்லை.

பதிலாக கொந்தளிப்ப நிலையே உருவாக்கப்படுகிறது. அதுவே தொடர்ந்து பேணப்படுகிறது.

ஆனால், நாம் ஒன்றை நினைவிற்கொள்ள வேண்டும். அதை மறந்து விடவே முடியாது.

எல்லாப் பாதைகளும் அடைக்கப்பட்டே யுத்த நிலை உருவாக்கப்பட்டது.

அல்லது யுத்தம் எல்லாப் பாதைகளையும் அடைத்து விடும்.

முரண்பாட்டு அரசியலில் பாதைகளே இருப்பதில்லை.

முரண்பாட்டு அரசியலை வளர்க்கும் சக்திகள் பாதைகள் திறக்கப்படுவதை ஒரு பொழுதும் விரும்புவதுமில்லை.

அவை எப்போதும் பாதைகளை அடைப்பதையே அடிப்படையாகக் கொண்டவை. அவற்றின் நோக்கமும் அதுதான். பாதைகளின்றி பயணங்கள் நிகழாது.

மீண்டும் இன்னொரு நண்பர் சொன்ன ஒரு கூற்றை இங்கே நினைவு படுத்துவது பொருத்தமாகும்.

‘நாங்கள் யுத்தகாலத்தில் நடந்து செல்வதற்கே பாதைகள் இருக்கவில்லை. அவர்கள் (அரசியல்வாதிகள்) பறந்து சென்று கொண்டிருந்தார்கள். (விமானங்களில் நாடு நாடாகப் பறந்து திரிந்தார்கள்)’ என்று.

எனவே சமாதானத்துக்கான பாதை பொதுவாகவே மிகக் கடினமானது. அது பலமான மிகப் பெரிய எதிர்ப்புகளின் மத்தியில் உருவாக்கப்பட வேண்டியது.

வெறும் அபிலாஷைகளினாலும் பிரார்த்தனைகளாலும் எதிர்பார்ப்புகளாலும் உருவாக்கப்பட முடியாதது. அதை உருவாக்கக் கூடியவர்களை அடையாளம் காண்பது, அல்லது அதற்கு நாம் தயாராவதே இன்றுள்ள முதன்மைப் பணியாகும்.

00



 

2009 ·. by TNB