கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

நிரந்தரப் படைமுகாம்கள்

Friday 30 December 2011

00


இலங்கையின் வரவு செலவுத்திட்டத்தில் அதிக செல்வாக்கைச் செலுத்துவது அச்சத்தின் காரணமாக உருவாகும் ஒருவகை உளவியலே. இதற்காகவே அது அதிக நிதி ஒதுக்கீட்டையும் மனிதவளப்பயன்பாட்டையும் பாதுகாப்புக்கெனக் கோருகிறது.

தற்போது வடக்குக் கிழக்கில் நிரந்தரப் படைமுகாம்களை அமைப்பதற்காக அரசு தீர்மானித்திருப்பதும் அதற்காகத் தனியாகவே நிதி ஒதுக்கீட்டைச் செய்திருப்பதும் இத்தகைய அச்சத்தின் காரணமாகவே.

மீண்டும் கிளர்ச்சிகளோ ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளோ நிகழலாம் என்ற அச்சத்தின் வெளிப்பாடே இது.

எந்த நிலையிலும் ‘எதிர்ப்பு முளைகள்’ மேற்கிளம்பிவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையின் விளைவு இது.

இந்த முன்னெச்சரிக்கையின் உள்ளே வலைப்பின்னலாக இருப்பது அச்சமே.
உண்மையில் வடக்குக் கிழக்கில் மட்டுமல்ல, இலங்கை முழுவதுமே இராணுவ மயப்படுத்தப்பட்ட ஒரு சூழலே இன்றுள்ளது. இது இப்போதைக்கு நீங்கப் போவதும் இல்லை.

கடந்த காலத்தில், வடக்குக் கிழக்கிலிருந்து மட்டும் அரசுக்கு நெருக்கடிகளும் அபாயங்களும் ஏற்படவில்லை. தெற்கிலிருந்தும் அபாயங்கள் வந்திருந்தன. எனவே நாடு முழுவதையும் இராணுவக் கண்காணிப்பின் கீழ் வைத்திருப்பதே அரசின் நோக்கமாகும்.

அரசுக்கு எப்போதும் எல்லோரின் மீதும் ஒரு அவநம்பிக்கை உண்டு. இந்த அவநம்பிக்கையே அச்சத்தின் காரணமாக உருவாகியதுதான். இது ஒரு தீரா நோயைப்போல நீடித்துக்கொண்டே செல்கிறது.

என்றபடியாற்தான், அது ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், கட்சிகள், அரசியற் செயற்பாட்டாளர்கள், மாற்றுச் சிந்தனையாளர்கள், தொழிற்சங்கங்கள், அறிவுசார் தொழிற்பாட்டாளர்கள் போன்ற அனைத்துத் தரப்பையும் தனக்குச் சார்பாக வைத்திருக்க முயற்சிக்கிறது. அல்லது தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சிக்கிறது. அல்லது தன்னாற் கட்டுப்படுத்த முடியாத போது அவற்றை நிர்மூலமாக்க நினைக்கிறது.

ஆகவே, ஆட்சி பீடமென்பது அதனை அறியாமலே அச்ச உளவியல் நெருக்கடிக்குள் உட்பட்டுக் கொண்டு போகிறது. அல்லது அதற்குள் சிக்கிக் கொண்டே போகிறது. இவ்வாறான ஒரு நிலையிற் பயணிக்கும் எந்த அரசும், எந்தத் தரப்பும் மீண்டதாக வரலாறே இல்லை. எல்லாக் கதவுகளையும் மூடி மூடி இறுதியில் முற்றாகவே மூடுண்ட ஒரு நிலையையே இது சென்றடையும்.
இறுதியில் இது பேரழிவிற்தான் போய் முடியும்.

இதற்கு வரலாற்றில் ஏராளம் முன்னுதாரணங்கள் உள்ளன. அண்மைய நிகழ்கால வரலாற்றுண்மைகள்கூட இதற்குச் சான்று. ஏனெனில் மனித இயக்கம் எப்போதும் வெளியை நோக்கியே இயங்குகிறது. அது எத்தகைய மூடல்களையும் ஒரு போதும் ஏற்றுக்கொள்வதில்லை.

இலங்கைக்கான அச்சம் அல்லது அபாயம், வெளித்தரப்பினால் ஏற்படவில்லை. பதிலாக உள்நாட்டுச் சக்திகளாலேயே ஏற்படுகிறது.
அதாவது, அரசு தன்னுடைய சொந்தக் குடிமக்களைக் குறித்தே அச்சமடைகிறது. குடிமக்களிலிருந்து உருவாகக் கூடிய அதிருப்திக்கும் கிளர்ச்சிக்கும் போராட்டத்துக்குமே அது அச்சடைகிறது.

சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில் சொந்தக் குடிமக்களுடன்தான் அரசு மோதிக் கொண்டிருக்கிறது. சொந்தக் குடிமக்களுடன்தான் அது யுத்தம் செய்து கொண்டிருக்கிறது. சொந்தக் குடிமக்களைத்தான் அது கொன்று கொண்டிருக்கிறது. சொந்தக்குடிமக்களைக் கொன்ற குற்றங்களுக்காகவே அது சர்வதேச அரங்கில் நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில் கொல்லப்பட்ட மக்கள் அல்லது பலியாகிய சனங்களின் தொகையையும் விட ஐநூறு ஆண்டுகால அந்நியரின் ஆட்சியில் கொல்லப்பட்டவர்கள் குறைவு. சிந்தப்பட்ட இரத்தமும் குறைவு.
இப்போதுகூட சொந்தக் குடிமக்களைக் குறித்தே அது அச்சடைகிறது.

எதிர்காலத்திலும் சொந்தக் குடிமக்களின் தரப்பிலிருந்தே தனக்கு அபாயம் வரலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே தற்போது அதிக நிதி ஒதுக்கீட்டைப் பாதுகாப்புக்காக ஒதுக்க வேண்டிய நிலையில் உள்ளது.
ஆகவே சொந்த மக்களைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பதற்காகவே அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இந்த அடிப்படையில் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு தொடர்ந்து நிகழுமானால், அது நாட்டைப் பொருளாதார அடிப்படையில் மட்டும் பாதிக்காது.

ஜனநாயக ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும். சுதந்திரத்துக்கும் இயல்புச் சூழலுக்கும் ஒவ்வாமைகளை ஏற்படுத்தும்.

இன்று இலங்கையில் நடந்திருப்பது இதுதான். தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதும் இதுதான்.

வெளிச் சக்திகளுடன் மோதுவதற்கோ, வெளியிலிருந்து வரும் அபாயங்களைத் தடுப்பதற்கோ இந்தப் பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு பயன்படுத்தப்படவில்லை. அப்படிப் பயன்படுத்தப்படப்போவதுமில்லை.

இலங்கையுடன் வெளித்தரப்பு மோதுவதற்கான ஒரு சூழல் உருவாகும் என்றால், அது பிராந்திய வல்லரசுகளாகவோ அல்லது சர்வதேச வல்லரசுகளாகவோதான் இருக்கும்.

அத்தகைய ஒரு நிலை வருமானால், அந்த மோதற்களத்தில் என்னதான் முயன்றாலும் படைத்துறை சார்ந்த நடவடிக்கையால் இலங்கை தாக்குப் பிடிக்கவே முடியாது.

ஆகவே பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடென்பது, நிச்சயமாக வெளிச்சக்திகளின் அபாயத்தைத் தடுப்பதற்கானதல்ல. அது, உள்நாட்டில் இருந்து உருவாகக் கூடிய அபாயங்களைத் தடுப்பதற்காகவே என்பது தெளிவாகும்.

கடந்த காலத்தில் நடந்ததும் தற்போது நடந்து கொண்டிருப்பதும் இதுதான்.

அதாவது, சொந்த மக்களைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக, அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கே அதிக நிதியும் அதிக மனித வளமும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது நிரூபணமாகிறது.

இலங்கையின் நிதி ஒதுக்கீட்டில் முன்னுரிமையும் கூடிய நிதி ஒதுக்கீடும் தேசிய பாதுகாப்பு என்பதற்காகவே அமைகிறது.

சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் வரவு செலவுத்திட்டத்தைப் பார்த்தால், இந்த நிதி ஒதுக்கீடு என்பது செங்குத்தாக விரைந்தேறியிருப்பதைக் காணமுடியும்.

இப்போது போர் முடிந்த பிறகும் அது கீழ்நோக்கிச் சரிவதாக இல்லை.
இதற்கு என்ன காரணம்?

நாம் மேலே கூறியிருப்பதைப் போல, ஆட்சியாளர்களிடமுள்ள அச்சத்தின் விளைவே அதிக நிதி ஒதுக்கீட்டை பாதுகாப்புக்காகக் கோருகிறது.

உள்நாட்டில் பொருளாதாரச் சீரின்மைகளை ஒழுங்கு படுத்தி மக்களின் வாழ்வை மேம்படுத்துவதன் மூலமாக அரசுக்கு ஏற்படும் நெருக்கடிகளையும் தொந்தரவுகளையும் நீக்க முடியும்.

ஜே.வி.பியினால் உருவாகிய நெருக்கடிகளுக்கான அடிப்படை பொருளாதாரச் சீரின்மைகளை மையப்படுத்தியதே.

அடுத்தது, அரசியல் அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பிரிவினையைக் குறித்த நெருக்கடிகளைக் கட்டுப்படுத்தலாம்@ நெருக்டிக்கான காரணிகளை இல்லாதொழிக்கலாம்.

தமிழரின் ஆயுதப்போராட்டம் இந்த அதிகாரப் பகிர்வைக் குறித்த பிணக்குகளின் அடிப்படையில் எழுந்ததே.

ஆகவே உள்நாட்டில் உள்ள முரண்நிலைகளை அகற்றுவதற்கான கவனத்தையும் அக்கறையையும் அரசு முதனிலைப்படுத்துவது அவசியம்.

முரண்நிலைகள் அகற்றப்படும்போது அச்சநிலை தணிந்து விடும்.

அபாயங்களை உருவாக்குவதற்கும் நெருக்கடிகளை ஏற்படுத்துவதற்குமான காரணிகளை நீக்கினால், அவை ஏற்படுவதற்கான சந்தர்ப்பமும் அற்றுப் போய்விடும்.

இல்லையெனில் கோடிக்கணக்கான ரூபாய்களைத் தேவையற்ற முறையில் செலவழித்து, உள்நாட்டு நெருக்கடிகளைப் பராமரிப்பதாகவே அமையும்.

இதற்கு நிரந்தரப் படைமுகாம்களோ, படைவிருத்தியோ பொருளாதாரச் செலவுகளோ நிரந்தரத் தீர்வைத் தந்து விடாது.

பதிலாக முரண்நிலைகளை அகற்றுவதன் மூலம் நாட்டின் அமைதியும் அபிவிருத்தியும் ஜனநாயகமும் செழித்தோங்கும்.

உள்நாட்டு நெருக்கடி மட்டுமல்ல, உள்நாட்டுச் சக்திகளைப் பயன்படுத்தி வெளிச் சக்திகள் உள்விவகாரங்களில் தலையிடுவதையும் கட்டுப்படுத்தலாம்.

ஆகவே, நிரந்தர சுபீட்சத்தை நோக்கிச் சிந்திக்கும் ஒரு முறைக்கு – மரபான சிந்தனை முறையைக் கடந்து புதிய சிந்தனை முறைக்கு அரசும் தலைவர்களும் செல்லவேண்டும்.

இன்றைய சூழல் நமக்கெல்லாம் பெரும் படிப்பினைகளைத் தந்திருக்கும் சூழல். இதை ஒரு வளமான அடிப்படையாகக் கொண்டு புதிய வெளிகளைத் திறக்கவேண்டும்.

இது கதவுகளைத் திறக்கும் காலம்.

மனித விதியென்பதே எல்லாவற்றையும் திறப்பதில்தான் அமைகிறது.

புதிர்களை அவிழ்ப்பதும் நெருக்கடிகளைத் தவிர்ப்பதும் அவற்றை இல்லாதொழிப்பதுமே அரசியல் அறிவும் அரசியல் அறமுமாகும்.

ஆகவே, பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் நிரந்தரப் படைமுகாம்களை அமைப்பதற்கான முயற்சிகள் என்பதையும் விட தீர்வுகளை நோக்கிய பயணத்தைப் பற்றிச் சிந்திப்பதே இன்றைய தேவையாகிறது. அதுவே தேசிய பாதுகாப்பையும் சமூகங்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும்.

00

அரசு – தமிழ்த்தரப்பு என்ற பேச்சு முறைமை மாற்றப்பட வேண்டும்.

Tuesday 27 December 2011



00
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இது சோதனைக் காலம். ‘குருவியின் தலையிற் பனம்பழத்தை வைத்ததைப் போல’ என்று ஊர்மொழியிற் சொல்வார்கள். அதேநிலையில் இப்பொழுது கூட்டமைப்பு இருக்கிறது.

நெருக்கடிகளின் மேல் நெருக்கடிகள். அழுத்தங்களின் மேல் அழுத்தங்கள். உள் அழுத்தங்கள், வெளி அழுத்தங்கள் என பலமுனை நெருக்குவாரங்கள். இதிலிருந்து எப்படித் தப்பிப் பிழைக்கப்போகிறது கூட்டமைப்பு? இந்த நெருக்கடிகளையெல்லாம் எப்படி அது கடக்கப்போகிறது என்பதே இன்றுள்ள கேள்விகளாகும். நமக்கு மட்டுமல்ல, கூட்டமைப்பினருக்கும் இதே கேள்விகளே உண்டு.

எத்தகைய விமர்சனங்களுக்கும் அப்பால், இலங்கையில் இப்போது சற்று பிடிமானமுள்ள ஒரு எதிர்ச் சக்தியாக இருப்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே. ஐ.தே.க, ஜே.வி.பி எல்லாமே களநிலையில் பலவீனமாகவே உள்ளன. உள் நெருக்கடிகள் அந்தக் கட்சிகளை உட்குவியச் செய்து கொண்டிருக்கின்றன.

ஆகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுந்தான் இவற்றை விட ‘ஏதோ’ என்ற அளவில், அரசாங்கத்துக்கு எதிர்த்தரப்பாகச் செயலாற்றக் கூடியதாக உள்ளது.

ஏறக்குறைய 1977 இல் அ.அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, எதிர்க்கட்சியாக இருந்ததையும் விட, இப்போது கூட்டமைப்பு பெற்றுள்ள இடம் தாக்கமுடையது.

என்றபடியாற்தான், உடன்பாடே இல்லாத நிலையிலும் அரசாங்கம் கூட்டமைப்புடன் பேசுகிறது. அதனுடன் பேச்சுகளை எப்படியாவது நடத்த வேண்டியுள்ளது. என்பதாற்தான், கூட்டமைப்பை முக்கியப்படுத்தி, ராஜபக்ஷ சகோதரர்கள் அடிக்கடி அபிப்பிராயங்களைச் சொல்கிறார்கள். கடைசியாக ஜனாதிபதியும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவும் இதன் அடிப்படையில், கூட்டமைப்பைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள்.

ஆனால், இதைக் கூட்டமைப்பு உணர்ந்திருக்கிறதா? இந்த வாய்ப்பைப் புரிந்து கொண்டு அது விவேகமாகச் செயற்படுமா என்ற கேள்விகள் இன்னொரு புறத்தில் அதிக தாக்கத்துடன் இருக்கின்றன. அவை பற்றிப் பிறகு பார்க்கலாம்.

இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தத்தைப் பிரயோகிக்கக் கூடிய உள்நாட்டு அரசியற் சக்திகள் எதுவும் இல்லாத நிலையில், கூட்டமைப்பை அமெரிக்கா தலைமையிலான வெளியுலகம் பயன்படுத்த முயற்சிக்கிறது. ஆகவே, முதலில் அந்தத் தரப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு கூட்டமைப்பு ஒத்துழைக்க வேணும்.

அடுத்ததாக, இந்தியாவின் நட்புறவை முறித்துக் கொள்ளாத வகையில் காரியங்களைச் செய்யவும் வேண்டும். மறுபக்கத்தில் புலம்பெயர் தமிழர்களின் ‘தேசிய’ விருப்பத்தையும் நோக்கங்களையும் நிறைவேற்ற வேணும். அல்லது அவர்களுடைய கண்டனங்களுக்கும் எதிர்ப்புக்கும் ஆட்படாமல் பாதுகாத்துக் கொள்ள வேணும்.

இன்னொரு புறத்தில், அரசாங்கத்துடன் பேச வேணும். ஆனால், அரசாங்கத்துடன் பேச முடியாது. ஆனால், அரசாங்கத்துடன் பேசியே தீர வேணும். ஆனால், பேச முடியாது என்ற நிலைக்கு முகங்கொடுக்க வேண்டும். ‘விழுங்கவும் முடியாது, துப்பவும் முடியாது’ என்பார்களே, அதுதான் இது. அதாவது, மிகப் பயங்கரமான ஒரு நிலை கூட்டமைப்புக்கு.

இதைவிட, வெளிப்படைத்தன்மையாகவும் நிதானமாகவும் விட்டுக்கொடுப்புகளின்றியும் பேச வேண்டும் என வற்புறுத்தும் உள்ளுர்ச் சக்திகள். கடந்த வாரம் சிவில் சமூகம் என்ற பேரில் ஒரு அணியினர் இந்த நிலைப்பாட்டைச் சுட்டிக்காட்டி அறிக்கையொன்றைக் கூட்டமைப்பிடம் கொடுத்தது நினைவிருக்கலாம்.

மேலும் கூட்டமைப்பினுள் வழமையாகவே இருக்கின்ற அணி முரண்கள்@ உள் நெருக்கடிகள். அத்துடன் வடக்குக் கிழக்கு இணைப்பு மற்றும் அரசியற் தீர்வு குறித்த பேச்சுகளின் தொடர்ச்சியில் உருவாகும் முஸ்லிம் தரப்பின் நெருக்கடிகள். ஆகவே, அந்தத் தரப்பையும் கையாள வேண்டிய நிலை.

மைதானத்தின் நடுவிலுள்ள ஒரு பந்தைப்போல அது நிறுத்தப்பட்டுள்ளது.  எல்லாராலும் விளையாடப்படும் நிலையில் அது இருக்கப்போகிறதா, அல்லது தன்னுடைய மையத்தை நோக்கி எல்லாத்தரப்பையும் கவர்ந்திழுக்கும் ஒரு காந்தவலுச் சக்தியுடைய தன்மையை உருவாக்கப்போகிறா? எனவே, மிகச் சிக்கலான நிலைமையில் கூட்டமைப்பு இருக்கிறது என்பது நிரூபணமாகிறது.

‘இந்த நிலையில் நாங்கள் என்ன செய்ய முடியும்? யார்தான் எங்களின் நிலையையும் நெருக்கடியையும் புரிந்துகொள்கிறார்கள்? வெளியே இருந்து பார்க்கிறவைக்கு நாங்கள் என்ன செய்யலாம் என்று தெரியாது?’ என  கூட்டமைப்பின் மூத்த  நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மனம்திறந்து சொல்வது, நாம் மேலே குறிப்பிட்டவற்றுக்கு ஆதாரமாகும்.

ஆனால், ஒரு அரசியற் கட்சி என்ற வகையில், ‘ஒரு இனத்தின் தலைமைச் சக்தி தானே’ என்று பிரகடனப்படுத்திக் கொண்ட நிலையில், நீண்ட யுத்தத்தின் பின்னர், மிகப் பெரும் அழிவுகளைச் சந்தித்த மக்களுக்கு வாக்குறுதி அளித்துத் தேர்தலில் மக்களின் ஆதரவைக் கோரிப் பெற்றுக்கொண்ட கட்சி என்ற அடிப்படையில், விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு, தமிழ்ச் சமூகத்தின் அரசியல் முன்னெடுப்புக்குப் பாத்திரவாளியாக தானே என்று சொன்ன நிலையில், கூட்டமைப்பு இந்த நெருக்கடிகளைச் சந்தித்தே ஆகவேண்டும்.

இந்தச் சவால்களை முறியடித்து முன்சென்றே ஆகவேணும்.

ஆனால், அது சாத்தியமா?

ஏனென்றால், கூட்டமைப்பு ஒரு மிகப் பலவீனமான அமைப்பாகவே தொடர்ந்தும் இருக்கிறது. அதனுள் வெளித்தெரியும் முரண்பாடுகள் தொடக்கம் அதற்குள் ஏராளம் பிரச்சினைகள். எந்தப் பிரச்சினைக்கும் அது தீர்வைக் கண்டதாக இல்லை. எனவேதான் ஆளாளுக்கு ஏற்றமாதிரிக் கதைக்கிறார்கள். ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு செல்வாக்கு வளையங்களை உருவாக்கிக் கொள்ள முற்படுகிறார்கள்.

தவிர, ஒழுங்கமைப்பட்ட வேலைத்திட்டம் எதுவும் கூட இதுவரை கூட்டமைப்பினால் மேற்கொள்ளப்படவில்லை. அப்படியானதொரு வேலைத்திட்டத்தை மேற்கொள்ளவேண்டியதன் அவசியத்தைப் பலரும் வலியுறுத்தியபோதும் கூட்டமைப்பினர் அதைக்குறித்துச் சிந்தித்ததாக இல்லை.

போரையும் போருக்குப் பிந்திய நெருக்கடிகளையும் மக்கள் தாங்களாகவே கடந்து வந்திருக்கிறார்கள். இன்னும் அவர்கள் தாங்களாகவே தங்களின் நெருக்கடிகளைக் கடந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த விசயமெல்லாம் மிகப் பகிரங்கமானவை.

எனவேதான் கூட்டமைப்புத் தொடர்ச்சியாகக் கண்டனங்களுக்கும் விமர்சனங்களுக்கும் கேலிப்படுத்தல்களுக்கும் உள்ளாகிறது. ‘மக்களைக் காப்பாற்ற வேண்டாம். மக்களின் நெருக்கடிகளைக் குறைப்பதற்கு முயலவேண்டாம். தனக்குள் இருக்கிற பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டு, அரசியற் தீர்வு விசயத்திலாவது அது ஆக்கபூர்வமாக ஏதாவது செய்யட்டும்’ என்று கூறுகிறார்கள் சிலர்.

‘புலிகளற்ற வெற்றிடத்தில், தமிழ் மக்களின் தேர்வாகக் கூட்டமைப்பு மாறியுள்ளது. நீண்டகாலமாக உருப்படுத்தப்பட்ட தமிழ்த் தேசியம் என்ற கருத்து நிலையை மையப்படுத்தி அவர்களே மேற்கிளம்பியிருக்கிறார்கள். அதிலும் புலிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமைப்பாகவும் கூட்டமைப்பே உள்ளது. எனவே, அவர்கள் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பையும் அங்கீகாரத்தையும் பயன்படுத்தி, அரசியற்பிரச்சினையை தீர்வுக்குக் கொண்டு வரட்டும்’ என்று சொல்கிறார்கள் ஒருசாரார்.

ஆனால், இதை மறுத்துரைக்கும் தரப்பும் உள்ளது. ‘புலிகளின் வீழ்ச்சி ஏற்படுத்திய அனுதாபமும் அரசின் மீதான கோபமுமே கூட்டமைப்புக்கு  வெற்றி வாய்ப்பைக் கொடுத்தது. மற்றும்படி அதனிடத்தில் நம்பிக்கையளிக்கத் தக்க பெருஞ்சிறப்பெதுவும் இல்லை’ என இன்னொரு தரப்பினர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

இவையெல்லாம் பகிரங்கமானவையே. இங்கே பிரச்சினை என்னவென்றால், யதார்த்தத்தில் எல்லாப் பிரச்சினைகளுக்கும் எல்லாத் தரப்பினர்களுக்கும் முகங்கொடுக்க வேண்டிய ஒரு நிலையில் - இக்கட்டான புள்ளியொன்றில் கூட்டமைப்பு இன்று வந்து நிற்கிறது என்பதே.

இதை, இந்தக் கட்டத்தை கூட்டமைப்பும் அதனுடைய தலைமையும் எப்படிக் கடக்கப்போகிறது? ஆகவே, மீண்டும் அதன்மீது கேள்விகளே உருவாகின்றன. ஒரு அமைப்பைச் சுற்றிக் கேள்விகள் அதிகமாக எழுகின்றன என்றால், அந்த அமைப்பின் செயற்றிறனிலும் கட்டமைப்பிலும் அதன் நம்பகத்தன்மையிலும் ஐயப்பாடுகள் ஏற்பட்டுள்ளன என்றே அர்த்தமாகும்.

எனவேதான் நாம் தொடர்ச்சியாகக் கூட்டமைப்புத் தொடர்பாக சில விடயங்களை வலியுறுத்தி வருகிறோம். சரி பிழைகளுக்கு அப்பால் தேர்தலின் மூலமாகத் தேர்வு செய்யப்பட்ட ஒரு அமைப்பு என்ற வகையிலும் தமிழ் மக்களின் சார்பாக பேச்சு மேசைக்குப் போகக்கூடிய வாய்ப்பைப் பெற்றுள்ள அமைப்பு என்ற வகையிலும் அது செயற்பட வேண்டியிருப்பதால், அது அதற்கான தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு அரசியற் கட்சிக்குள் இருக்கக்கூடிய அக முரண்பாடுகளை நாம் புரிந்து கொள்ளலாம்.  அதிலும் பல கட்சிகளையும் தேர்தலுக்காக சேர்த்துக் கொள்ளப்பட்ட உறுப்பினர்களையும் கொண்ட ஒரு அமைப்பில் முற்றுமுழுதாகவே சீரானதொரு ஒழுக்க முறைமை இருக்கும் என்றும் நாம் கருதவில்லை. அப்படி எதிர்பார்க்கவும் முடியாது.

ஆனால், போரால் முற்றாகவே பாதிக்கப்பட்டதொரு சமூகத்தின் அரசியலை முன்னெடுக்க வேண்டியதொரு சந்தர்ப்பத்தில் - அந்த மக்கள் தங்களின் நம்பிக்கையை முன்னிறுத்தி ஆதரவளித்திருக்கும் ஒரு அமைப்பானது அந்த மக்களின் வாழ்க்கையைப் பாதுகாக்கும் பொறுப்பை எந்த நிலையிலும் தட்டிக்கழித்து விடமுடியாது. ஆகவே, அதற்குத் தக்கவாறு தன்னை அது நெறிப்படுத்திக் கொள்ள வேண்டும். தன்னுடைய பொறுப்புகளையும் கடமையையும் உணர்ந்து கொள்வது அவசியம்.

ஆனால், தீர்மானிக்கப்பட்ட – ஒழுங்கமைக்கப்பட்ட வேலைத்திட்டங்களோ, தலைமைச் சக்திகளிலிருந்து உறுப்பினர்கள் வரையில் தம்மை அர்ப்பணிக்கும் மனோநிலையோ இன்னும் கூட்டமைப்பிடம் உருவாகவில்லை என்ற நிலையே தொடர்கிறது.

கூட்டமைப்பின் தலைமைச் சக்தியாகக் கருதப்படும் திரு. சம்மந்தனே கடுமையான விமர்சனங்களுக்குள்ளாக்கப்படுகிறார். அவரைச் சுற்றி ஏராளம் கேள்விகளும் சந்தேகங்களும் எழுப்பப்படுகின்றன. கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தொடக்கம் சிவில் சமூகத்தின் அறிக்கை வரையில் அனைவரிடமும்  திரு. சம்மந்தனின் மீதான நம்பிக்கையீனத்தின் வெளிப்பாடுகளை நாம் பார்க்க முடியும்.

ஆகவே, கூட்டமைப்பு தன்னை ஒரு தலைமைச் சக்தியாக நிரூபிக்க வேண்டியுள்ளது. அதனுடைய தலைமையானது கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியிலும் ஆளுமையும் நேர்மையும் அர்ப்பணிப்பும் உறுதியும் நம்பிக்கையும் உள்ள தலைமையாகத் தன்னை வளர்த்துக் கொள்வது அவசியம். உள்முரண்களைக் களையக்கூடிய ஆற்றலை அது கொள்ள வேண்டிய கடப்பாட்டிலுள்ளது.

இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை, அவர்கள் ஆள், கட்சி என்ற அடிப்படையில் தேர்வு செய்வதையும் விட கொள்கைக்காகவே வாக்களிக்கிறார்கள் என்று தமிழ்த் தேசியவாதிகள் சொல்வதுண்டு. ஆனால், அதைக் கடந்து அரசியல் நெறியிலும் அரசியலைக் கையாக்கூடிய முறைமையிலும் தன்னை வளர்;த்துக் கொள்ளும் ஒரு தலைமையாக – பிற சமூகத்தினரும் மதிப்பளிக்கும் ஒரு தலைமையாக தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு அது மாற வேண்டும். இதற்குச் சில அடிப்படையான விசயங்களை மேற்கொள்ள வேணும்.

நாம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருவதன் அடிப்படையில், முதலில் கூட்டமைப்பு வலுவான ஒரு கட்டமைப்பாக மாற்றப்பட வேண்டும். இதுகாலவரையும் மேற்கொள்ளப்பட்ட அரசியல் வழிமுறையை மாற்றி – பட்டறிந்த அனுபவங்களின் வழியாகவும் தோற்றுப்போன வழிமுறைகளையும் அணுகுமுறைகளையும் மாற்றி புதிய வழிகளையும் புதிய பயணத் திசைகளையும் காண வேண்டும்.

வழமையான பாணியில் அரசு – தமிழ்த்தரப்பு என்ற பேச்சு முறைமை மாற்றப்பட வேண்டும். இதுபோல பல அடிப்படை மாற்றங்களைச் செய்யாத வரையில் காலம் கடத்தும் காரியங்களும் தோல்விகளும் நெருக்கடிகளும் ஏற்படுமே தவிர, உருப்படியாக ஏதும் நடந்து விட வாய்ப்பில்லை.

இந்த நெருக்கடிகள் உச்சநிலையை அடையும்போது மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில், அதன் தலைவர் திரு. சம்மந்தன் அறிவிப்புளைச் செய்வதையும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதையும் நாம் அவதானிக்கலாம். இது பதற்றத்தின் வெளிப்பாடாகும்.

தவிர, நேரத்துக்குத் தக்கமாதிரியும் நிலைமைக்கு ஏற்றமாதிரியும் மக்களின் இரத்தத்தைச் சூடேற்றும் அறிக்கைகளோ பேச்சுகளோ பயனுள்ள விளைவுகளைத் தருவதில்லை. ஏட்டிக்குப் போட்டியாக வார்த்தையாடல்களை மேற்கொள்ளும்போது அதில் ஒரு வகையான சுவாரஷ்யம் இருக்கும்.

எனில், மீண்டும் சிங்கள அதிகார வர்க்கத்திற்கு ஏகப் பெரு வெற்றியை வெகுமதியாகவே அளிக்கும் காரியங்கள் தொடரத்தான் போகின்றன போலும்.

00

ஜனநாயகமும் ஜனநாயக துஷ்பிரயோகமும்

Thursday 22 December 2011



வன்னியில் போர் மிக உக்கிரமாக நடந்து கொண்டிருந்த நாட்கள் அவை.

தினமும் சாவு. நூற்றுக்கணக்கானவர்கள் காயம். இரத்தம் பெருக்கெடுத்தோடிய நாட்கள். அவலம் பெரும் நாடகமாடியது. மனிதர்கள் செயற்றுப் போனார்கள். செயலற்றுப் போகும்போது எதுவும் வெறும் சடமே என்ற நிலை உருவாகிறது. அப்படித்தான் மனிதர்கள் அப்போது அங்கே இருந்தார்கள். காற்றில் எற்றுண்டு போகும் சருகுகளாக, ஆற்றில் அள்ளுண்டு போகும் துரும்பாக.

அங்கே அப்பொழுது எவரிடமும் கனவுகளிருக்கவில்லை.

எதிர்காலம் பற்றிய எந்த எண்ணங்களுமில்லை. நினைவுகள் மங்கிக் கொண்டிருந்தன. கண்ணீர் நிரம்பி, அந்தப் பாரம் தாங்க முடியாமல்; கால்கள் புதைய மணலில் தள்ளாடி நடக்கும் மனிதர்களே அந்தச் சிறிய, ஒடுங்கிய கடற்கரையில் நிறைந்து கிடந்தார்கள்.

போரில் கிழிபடும் மனிதர்கள். குருதியொழுக ஒழுக கிழிபடும் மனிதர்களைக் காப்பாற்ற எந்தத் தமிழர்களாலும் முடியவில்லை. யுத்தத்தை நிறுத்தவும் முடியவில்லை. அதாவது வன்னிக்கு வெளியே இருந்த மக்களால். அது புலம் பெயர் தமிழர்களாக இருந்தாலும் சரி, தமிழகத்துத் தமிழர்களாலும் சரி எவராலும் எதையும் செய்ய முடியவில்லை. தமிழ் அரசியலாளர்களாலும் இயலவில்லை. மட்டுமல்ல தமிழ் ஊடகங்கள, அமைப்புகள் எதனாலும் அந்த நெருக்கடியில் ஒரு சிறு இடைவெளியைக் கூட ஏற்படுத்த முடியவில்லை.

இது ஏன்?

இவ்வளவுக்கும் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் கட்சி பேதங்களின்றி, குழு பேதங்களின்றி, எல்லாத்தரப்பினரும் ஈழத்தமிழர்களுக்காக தெருவிலிறங்கிப் போராடினார்கள். மக்கள் பெரும் எழுச்சியோடு தங்களின் உணர்வை வெளிப்படுத்தினர். சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மத்திய அரசிலும் கவனப்படுத்தப்பட்டது. ஊடகங்கள் எல்லாம் ஈழத்தமிழர்களின் நிலை குறித்த செய்திகளுக்கு முன்னுரிமை அளித்திருந்தன.

அதைப்போல புலத்திலும் பெரும் போராட்டங்கள் நடந்தன. சனங்கள் கொட்டும் பனியில், கடுங்குளிரில் எல்லாம் நின்று போராடினார்கள். வன்னிப் போரை நிறுத்துவதற்காக, அங்கே சிக்கியிருந்த மக்களைக் காப்பாற்றுவதற்காக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தார்கள்.

உண்ணாவிரதங்கள்,  தீக்குளிப்புகள் என்றுகூட பெரும் முயற்சிகள் நடந்தன.

வல்லரசு நாடுகளிடம் சில தமிழ்ப் பிரமுகர்கள் தொடர்பு கொண்டு ஏதொவெல்லாம் பேசிப்பார்த்தார்கள். தொலைபேசிகள் இரவு பகலாக வேலை செய்து கொண்டேயிருந்தன. ஆயிரம் வரையான இணையங்கள் பல செய்திகளையும் கோரிக்கைகளையும் வெளிப்படுத்தியபடியிருந்தன.

ஆனால்இ வன்னியில் போரில் சிக்கிக் கிழிபட்டுக் கொண்டிருந்த மக்களை யாராலும் பாதுகாக்க முடியவில்லை. போரையும் நிறுத்த முடியவில்லை.

இது ஏன்?

அப்போது நாங்கள் வன்னியிலிருந்தோம். எங்களுக்குத் தெரிந்திருந்தது, எவராலும் போரை நிறுத்த முடியாது என்று. அந்தப் போரின் பின்னாலிருந்த தரப்புகளின் அரசியல் நோக்கங்கள் அந்தளவுக்குப் பலமாக இருந்தன.

மட்டுமல்ல, தமிழ் மக்களும் ஊடகங்களும் என்னதான் போராட்டங்களை நடத்தினாலும் அவற்றினால் எந்த விளைவுகளையும் ஏற்படுத்த முடியாது என்பதும் எங்களுக்குத் தெரிந்திருந்தது. காரணம்இ தமிழர்களின் போராட்ட முறைமையும் ஊடகங்களும் அவற்றின் அணுகுமுறைகளும் மிகப் பலவீனமாக – ஒற்றைப்படைத்தன்மையானவையாக இருந்தன. குறிப்பாக அவற்றில் எப்போதும் பன்மைத்தன்மை, ஜனநாயகம், பக்கஞ்சாராமை என்பவை இருக்கவில்லை. அதாவது அந்த நடவடிக்கைகள் எல்லாவற்றிலும் எப்போதும் ‘ஒரு பக்கம்’ தானிருந்தது.

‘ஒரு பக்கம்’ மட்டும் என்பது பக்கச் சார்புடையது. இன்னொரு பக்கத்தை மறைப்பது. அப்படிப் பக்கச் சார்புடையது என்பதை யாரும் அதிகம் ஏற்றுக் கொள்வதில்லை. இன்னொரு பக்கம் மறைக்கப்படுவதை யாரும் விரும்புவதில்லை. அதுவும் மேற்குலகம் தனக்கு உவப்பில்லாத ‘ஒரு பக்கத்’தை என்றுமே விரும்புவதில்லை. இந்த ‘ஒரு பக்கம்’ என்பது மற்றவரை – பிறரை – எதிர்த்தரப்பை எப்போதும் குறை சொல்வதிலும் குற்றஞ்சாட்டுவதிலுமே குறியாக இருக்கும். அப்படித்தான் அது இருந்ததும்கூட.

போராட்டத்தை நடத்தியவர்களோ மேற்குலகத்திடமே தங்களின் கோரிக்கைகளை முன்வைத்தனர். அவர்களிடமே நியாயத்தைக் கேட்டனர். எனவே, மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை நியாயமான முறையில் வெளிப்படுத்தக் கூடிய ஒரு பொது அமைப்பையோ ஒரு சூழலையோ உருவாக்க வேண்டும் என்று வன்னியில் நாங்கள் பொதுவாகப் பலரிடமும் சொன்னோம்.

அதாவது வெளிச்சமூகம் நம்பிக்கை வைக்கக்கூடிய ‘மக்கள் அமைப்பொன்று’ மூன்றாந்தரப்பாக இருக்க வேண்டும் எனக் கூறினோம். (இங்கே ‘நாங்கள்’ என்பது அங்கே இருந்து போரில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த, யதார்த்த நிலைமைகளைக் கணக்கிலெடுத்துக் கொண்ட, உண்மையில் போரைத் தணிக்க வேண்டும் என்று விரும்பிய ஒரு சிறியஅணியினர். அவ்வளவு பேரும் பொதுமக்களே).

ஆனால், அந்தக் குரல், அந்தக் கோரிக்கை கவனிக்கப்படவில்லை. அல்லது செயல் முனைப்படையவில்லை. தவறுகளை ஒப்புக் கொள்ளுதல், உண்மைகளை வெளிப்படுத்துதல், களத்தில் என்ன நிலைமை என்பதை விருப்பு வெறுப்புகளுக்கப்பால் வெளிப்படுத்துதல் அல்லது பகிரங்கப்படுத்துதல் அவசியம் என்பதே எங்கள் நிலைப்பாடு. அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால், எந்தப் பெரிய அர்ப்பணிப்பான போராட்டத்தினாலும் எதையும் சாதிக்க முடியாது என்று வலியுறுத்தினோம்.

எப்படி வலியுறுத்தியபோதும் அந்தக் கோரிக்கை, அந்தக் குரல் செயல்வடிவம் பெற அனுமதிக்கப்படவில்லை. இறுதியில் நடந்தது முழுத்தோல்வி- ‍ முழு அழிவுதான்.

இங்கேதான் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும்.

இவ்வளவு பெருங்காரியங்களை எல்லாம் செய்து விட்டும் எதுவும் கிடைக்காமல் இன்று தோற்றுப்போய், பின்னடைந்து நொந்து போயிருக்கிறோம் என்றால் அதற்கு என்ன காரணம்?

இப்போதாவது இதற்கான காரணங்களை நாம் காணத்தவறினால், எதிர்காலமும் எங்களுக்கு தோல்வி நிரம்பியதாகவும் சோதனைகளுக்குட்பட்டதாகவும்தானிருக்கும்.

எனவே நாம் எல்லாவற்றையும் மீளாய்வுக்குட்படுத்த வேண்டியுள்ளது.

ஏனென்றால், அப்போதுதான் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் சரியான முறையில் ஒழுங்குபடுத்த முடியும். சிதைவுகளிலிருந்து மீண்டெழக் கூடியதாக இருக்கும்.

அறுபது ஆண்டுகளாகப் போராடிவிட்டு, பல ஆயிரம் உயிர்களைப் பலிகொடுத்துவிட்டு, பல தலைமுறைகளின் வாழ்வை இழந்து விட்டு,  சொத்துக்களை, வாழ்க்கையை இழந்த பின், இன்னும் பின்னடைவுகளிலும் தோல்விகளிலும் வாழமுடியாது.

ஆகவே பிரச்சினைகளின் மையத்திலிருந்தவர்களின் அபிப்பிராயங்கள்,  அனுபவங்கள் கவனப்படுத்தப்பட வேணும். பாதிக்கப்பட்டவர்கள், அந்தப் பாதிப்புகளிலிருந்து மீண்டெழுவதற்காக இன்னும் கஷ்ட‌ப்பட்டுக் கொண்டிருப்பவர்களின் நிலைகளையும் கவனத்திலெடுத்து எதையும் சிந்திப்பது அவசியம்.

ஈழத்தமிழர்களின் தோல்விகளுக்கும் பின்னடைவுகளுக்கும் காரணங்கள் பலவுண்டு. அதில் முதன்மையானது ஜனநாயகமின்மையாகும். ஜனநாயக துஸ்பிரயோகம் இன்னொன்று. இந்தக் குறைபாட்டைப் பற்றி ஏற்கனவே பலரும் எழுதியும் விவாதித்தும் விட்டனர். ஆனால், அவ்வாறு இந்தக் குறைபாட்டைச் சுட்டிக் காட்டியோர் புறக்கணிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனரே தவிர, இதைக் கவனத்திலெடுத்து நிலைமைகளைச் சீர்செய்யவில்லை.

இதனால்இ வன்னியில் நடந்த பல விசயங்களைப் பற்றி வெளியே வந்த செய்திகளை எல்லாம் வெளியுலகம் நிராகரித்தது. (மறுபக்கத்தில் இப்போதும் வன்னி மக்கள் சொல்லும்பல செய்திகளை தமிழர்களில் பெரும்பான்மையானோரும் நிராகரிக்கின்றனர். தமிழ்ப் பத்திரிகைகள் சில வன்னியில் நடந்த ‘உயிர்வலிக்கும் கணங்களை’ப் பற்றி ‘ஒரு பக்கச் செய்தி’களையே வெளியிட்டு தமது ‘தேசியக் கடமையை?’ செய்துவருகின்றன). இதுதான் மிகவும் கவலைக்குரிய சங்கதி.

வெளியுலகத்தின் கணிப்பின்படி அந்தச் செய்திகள் புலிகளின் செய்திகள். அல்லது புலிகளுக்குச் சார்பான செய்திகள் என்பதாகும். ‘புலிகளின் பகுதியில் புலிகள் சம்மந்தமில்லாமல் எதுவுமே இல்லை’ என்ற அனுபவம் இத்தகைய ஒரு நிலைப்பாட்டை வெளியுலகம் எடுப்பதற்குக் காரணமாகியது. அத்துடன் ஜனநாயக நடவடிக்கைகளில் புலிகளின் நிலைப்பாடும் அணுகுமுறையும் பாதகமானது என்பதும் வெளியுலகம் அறிந்த விசயங்கள்.

இதை ஈடு செய்திருக்க வேண்டியது ஊடகங்களும் புலம்பெயர் சமூகமுமே. ஆனால் அவை அதைச் செய்யவில்லை. அதனால் வன்னி அவலத்தைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளும் நடத்தப்பட்ட அவ்வளவு போராட்டங்களும் பயனற்றுப் போயின. அவ்வளவு செய்திகளும் இணையத்தகவல்களும் ஒரு பக்கச் சார்புடையவைஇ நம்பத்தன்மையற்றவை என்று இலகுவில் புறக்கணிக்கப்பட்டன.

இத்தனை பெரிய முயற்சிகளைச் செய்தும் அந்தப் பெரிய அழிவிலிருந்து மக்களைக் காப்பாற்ற முடியவில்லை என்றால்இ அதற்கான காரணங்கள் என்ன என்று நாம் சிந்திக்க வேண்டாமா?

ஆனால், இதற்குப்பின்னரும் தமிழ்த்தரப்பின் போக்கில் எந்த மாற்றங்களையும் காணவில்லை. குறிப்பாக பல இணையத்தளங்கள் மற்றும் ஊடகங்களிலும் தமிழ்த் தேசிய அரசியலிலும் இந்த ஜனநாயகமின்மையும் ஜனநாயக துஷ்பிரயோகமும் இன்னும் கோலோச்சுகின்றது.

 ‘புலிகளிடம் கையில் துவக்கிருந்தது. இவர்களிடம் அது வாயிலும் பேனாவிலும் இருக்கிறது. பொதுவாக இன்னும் ஆயுதக் கலாசாரத்தை விட்டு தமிழ்ச் சமூகம் விலகவில்லை. அதன் மனதில் அது அத்தனை துப்பாக்கிகளையும் காவிக்கொண்டே திரிகிறது. எனவேதான் அது ஜனநாயகத்துக்கு தயாராகவில்லை’ என்று ஒரு நண்பர் சொல்வது மிகச் சரியானதே. இதைச் சொல்பவர் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் என்பது இன்னும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியதாகும்.

ஜனநாயகத்துக்குத் தயாராகாதவரையில் எந்தக் கதவுகளையும் நாம் திறப்பதற்குத் தயாராகவில்லை என்றே அர்த்தமாகும். அத்துடன் சகிப்புத்தன்மைக்கும் விட்டுக்கொடுப்புக்கும் ஏற்றுக் கொள்ளல்களுக்கும் ஆயத்தமில்லை. மாற்றுக் கருத்துகள், அபிப்பிராயங்கள், மாற்றுச் செயற்பாடுகள் என எதற்கும் இடமில்லை என்றுமாகும். இது உலகத்தின் பொதுப் போக்கிலிருந்து எம்மைத் தனிமைப்படுத்தி விடும். அத்துடன் வெளியுலகத்திலிருந்தும் அக நிலையிலும் நம் சமூகத்தையும் சுருக்கி விடும். இதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

அதாவது ஜனநாயகத்தை மறுப்பது, அதைத் துஷ்பிரயோகம் செய்வது என்ற நிலை வளர்ந்து கொண்டே போகிறது. இதை இந்தமுறை ஜனாதிபதித் தேர்தலின்போதும் வன்னி நிலவரங்களைப் பற்றி மே 17க்குப்பின்னர் வரும் பலவிதமான செய்திகள், தகவல்களை தமிழ்த் தரப்பு அணுகுவதிலும் அவதானிக்கலாம்.

மற்றையவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பதில்லை, இடமளிப்பதில்லை என்பதிலேயே ஜனநாயகமின்மையை வளர்த்தெடுக்கும் நிகழ்ச்சிகள் வளரத் தொடங்குகின்றன.

ஒரு தரப்புச் செய்திகள் - கருத்துகள் - நிலைப்பாடுகளுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்தல், அந்தத் தரப்பை நியாயப்படுத்துதல், தருக்கங்களற்ற விளக்கங்கள், ஊகநிலைத் தகவல்களை வழங்குதல், தனிப்பட்ட விருப்பங்களைப் பொது அபிப்பிராயமாக்குதல் போன்றவை ஒருபக்கத்தை மட்டும் மக்களுக்குக் காட்டும் முயற்சியாகும்.

இதன் மூலம் மக்கள் ஏனைய பக்கங்களைப்பற்றி அறிய முடியாத நிலைக்குள்ளாக்கப்படுகின்றனர். இது அவர்களுடைய அரசியல் அறிவையும் பொதுப்புத்தியையும் பாதிக்கிறது. உலக அனுபவங்கள்இ சர்வதேச விவகாரங்களைப் பற்றி அறியவோ, அவற்றைப் பகுத்தாராயவோ முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர்.

இதனால், எளிதில் அவர்கள் பிறரால் ஏமாற்றப்படவும் அவர்களுடைய உழைப்பும் நம்பிக்கையும் வீணடிக்கப்படவும் ஏதுவாகிறது. குறிப்பாக ஜனநாயகம் பராமரிக்கப்படவில்லை என்றால், அங்கே மக்கள் மந்தைகளாக்கப்படுகின்றனர். மந்தைகளை இலகுவாக விரும்பிய பக்கம் சாய்த்து விடலாம். அப்படித் தாம் விரும்பிய பக்கம் சாய்த்துக் கொள்வதற்காகவே இப்படி மந்தைத்தனத்தைப் பராமரிக்கின்றனர் இந்தத் ‘தமிழ்த் தேசியர்கள்’.

என்னதான் வேசமிட்டாலும் அடிமனதில் இருக்கும் சரக்கு எப்படியோ வெளியே தெரிந்து விடும் என்பார்கள். அதுமாதிரி,  தமிழ்ச் சூழலின் ‘ஜனநாயக வேசங்கள்’ சிரிப்புக்கிடமாக உள்ளன. துலாம்பரமான ஜனநாயக மறுப்பை அவை தாராளமாகச் செய்கின்றன. இந்த ஜனநாயக மறுப்பு ஒற்றைப்படைத்தன்மையான ஒரு கருத்துலகத்தை மீண்டும் மிக வேகமாக வளர்க்கின்றன. இது மீண்டும் ஒரு அபாயப்பிரந்தியத்தை உருவாக்கப் போகிறது.

ஏற்கவே இந்தப் போக்குகளால் பாதிக்கப்பட்டது போதாதென்று இன்னும் அதே தவறான வழியையே இவை பின்பற்றுவது எவ்வளவு கொடுமையானது? எவ்வளவு முட்டாள்தனமானது? இந்த மன வன்மத்தை என்னவென்று சொல்வது? எதற்காக இப்படிப் பிடிவாத குணத்துடன் இந்த அரசியலாளர்களும் ஊடகர்களும் நடந்து கொள்கிறார்கள்?

இப்போது தமிழர்கள் அடைந்து கொண்டிருக்கும் பின்னடைவையும் தோல்வியையும் ஒப்பிடும்போது, ஏற்கனவே அடைந்த பின்னடைவுகளும் தோல்வியும் உண்மையில் பெரிதல்ல.

ஆனால், இதுவரையில் தமிழர்கள் அடைந்திருக்கும் தோல்வியையும் பின்னடைவையும் பிறர் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். ஒரு சிறிய இனம் தன் வல்லமைக்கு ஏற்றவரையில், தனக்குத் தெரிந்த வழிமுறைகளில் சரியோ பிழையோ போராடியிருக்கிறது. அதில் தோல்விகள், பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன.

ஆனால், அந்தத் தோல்விகளிலிருந்தும் பின்னடைவுகளிலிருந்தும் அது எதைக் கற்றுக் கொண்டது? அந்தப் பாடங்களிலிருந்து அது தனது போராட்டப்பாதையை எப்படி மாற்றி வடிவமைத்துள்ளது? என்றே எல்லோரும் பார்ப்பார்கள். அதுவே மற்றவர்களின் அங்கீகாரத்துக்கும் ஆதரவுக்கும் வழிதரும்.

ஆனால், ஏற்பட்ட பின்னடைவுகளிலிருந்தும் தவறுகள், தோல்விகளிலிருந்தும் தமிழ்த்தரப்பு அரசியலாளர்களும் ஊடகர்களும் எந்த வழிமுறைகளையும் மாற்றிக் கொள்ளவில்லை.

குறிப்பாக ஜனநாயகச் சூழலை எப்படி புத்தாக்கமாக வளர்த்தெடுக்க வேண்டும்? அதன் மூலம் திறந்த உரையாடல்களின் வழியே பல கருத்தியர்களையும் ஒருங்கிணைத்து முன்னே செல்வதற்கான உபாயங்களை வகுத்துக் கொள்ள வேண்டும் என இவர்கள் சிந்திப்பதாக இல்லை.

 ஒரு முன்வைப்பை, ஒரு கருத்தை நிராகரிப்பது,அந்தத் தரப்பை மறுப்பது, அதற்கெதிராக வசைபாடுவது,பழிசுமத்திப் புறக்கணிப்பது என்ற வகையிலேயே அனைத்துக் காரியங்களும் நடக்கின்றன. எனவே, முன்னரே குறிப்பிட்டிருப்பதைப்போல, தமிழ்மக்களைச் சுற்றி ஒரு அபாயப்பிராந்தியம் மீண்டும் உருவாக்கப்படுகிறது, இந்தத் தமிழ்த் தேசியர்களால்.

இந்த அபாயப்பிராந்தியம் இரண்டு வகையில் அமையும். ஒன்று, மீண்டும் நாட்டில் ஒரு ஜனநாயக மறுப்புச் சூழல் உருவாக இது வழியேற்படுத்தும். அடுத்தது மறுபடியும் தமிழர்கள் அரசியல் அநாதைகளாக, அகதிகளாக, தோற்றுப் போனவர்களாக ஆகப்போகிறார்கள்.

எனவே கிடைத்திருக்கின்ற சூழலை உரிய முறையில் பயன்படுத்தி வெற்றியடைவதற்கான வழிகளைக் காணவேண்டும். மீண்டும் மீண்டும் சிங்கள இனவாதம் வெற்றி பெற தமிழர்கள் உதவக்கூடாது.

சர்வதேச வலைப் பொறியமைப்பில் குருட்டுத்தனமாக தமிழர்கள் விழுந்து கொண்டிருக்கவும் முடியாது.

இதில் புலம் பெயர்ந்தோரின் பங்களிப்பு அதிகமாக இருப்பது அவசியம். அவர்கள் செழிப்பான ஜனநாயகச் சூழலில் வாழ்ந்து அனுபவம் பெற்றவர்கள். ஒரு ஜனநாயகச் சூழலின் அவசியம் ஏன் என்று தெரியும் அவர்களுக்கு. ஜனநாயகத்தின் சிறப்புகளால் என்ன பலன்களை அடையலாம்? எப்படி ஒரு ஜனநாயகச் சூழல் இருக்கவேண்டும்? அதை எப்படி உருவாக்குவது? அதை எப்படிப் பராமரிப்பது? என்றெல்லாம் தெரிந்தவர்கள் அவர்கள்.

இலங்கையில் தமிழர்களுக்கு ஜனநாயகத்தை அறிமுகப்படுத்த வேண்டும். அவர்களை அந்த ஜனநாயகச் சூழலுக்குப் பழக்கப்படுத்த வேண்டும். இதுவொரு கடினமான பணிதான். ஆனாலும் இதையெல்லாம் இப்போதே அவசியமாக நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையெனில் கிடைத்திருக்கும் ஜனநாயகம் துஷ்பிரயோகமே செய்யப்படும். ஜனநாயக துஷ்பிரயோகம் என்பது எல்லாவற்றையும் எதிர் நிலைக்கே கொண்டு செல்லும்.

00

அரசியல் வீழ்ச்சியின் விளைவு - அபாய வலயத்தில் மக்கள்

Wednesday 21 December 2011

















அது ஒரு நண்பகல். வன்னியில் தருமபுரம் என்ற கிராமத்தின் புழுதி பறக்கும் தெருக்கரையில் மூன்று பெண்கள் பஸ்ஸ_க்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு பெண்ணுடன் அவருடைய எட்டு வயதுப் பிள்ளை ஒன்றும் நின்றது.

அவர்கள் போகவிருந்த இடம் காலியிலுள்ள பூஸா. அங்கேதான் அவர்களுடைய உறவினர்களான ‘முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள்’ என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டோர் இருக்கின்றனர். அவர்களைப் பார்க்கப் போவதற்காகவே இந்தப் பெண்கள் பஸ்ஸை எதிர்பாத்திருக்கிறார்கள்.

எதிர்பாராத வகையில் அவர்களைச் சந்தித்தேன்.

அவர்களில் ஒருவர் ஏற்கனவே, இரண்டு தடவைகள் பூஸாவுக்குப் போய் வந்திருக்கிறார். அவருடைய கணவரை அங்கே ஆறு மாதங்களாகத் தடுத்து வைத்திருக்கிறார்கள். ஆகவே, அவரைப் பார்ப்பதற்காக இந்தப் பெண் அங்கே போய் வந்திருக்கிறார். மற்றவர்கள் இப்போதுதான் முதற்தடவையாக பூஸாவுக்குப் போகிறார்கள்.

முதற்தடவையாகப் போவதால், அவர்களுடைய முகத்தில் பெரும் கலவரம் தெரிந்தது. வாடி, ஒட்டியுலர்ந்திருக்கும் அந்த முகங்களில் துக்கத்தைத் தவிர வேறு எந்தச் சாயலுமே இல்லை.

அந்தப் பகற்பொழுதில் (நான் அவர்களைச் சந்திக்கும்போது ஏறக்குறைய நண்பகல் 12.00 மணியிருக்கும்) அவர்கள் இந்தக் கிராமத்திலிருந்து புறப்பட்டால், மீண்டும் ஊருக்குத் திரும்ப மூன்று நாட்களாகும் என்றார்கள். அதாவது மூன்று நாட்கள் பயணத்திலும் அலைச்சலிலும் தங்களின் பொழுது கழியப்போகிறது என்று சொல்லித் துக்கப்பட்டார்கள்.

இரவு பகல் எல்லாம் பயணத்திலும் எங்காவது கடைத்தெருவிலும்தான் தங்களின் வாழ்க்கை என்றார்கள்.

முதற்தடவை போகும்போது தான் மிகவும் சிரமப்பட்டதாக ஏற்கனவே பூஸாவுக்குப் போய் வந்தவர் சொன்னார். இடம் புதிது. ஆட்கள் புதிது. அந்நிய மொழி. ஆகவே, பாஷை புரியாது. நீண்ட பயணம். எங்கே தங்குவது? எங்கே தூங்குவது? எங்கே சாப்பிடுவது? எங்கே குளிப்பது? எங்கே உடைகளை மாற்றிக் கொள்வது?

இடையில் பயணத்தைப் பற்றியும் பிற தேவைகளைப்பற்றியும் யாரிடம் விசாரிப்பது? ஒன்றுமே தெரியாத நிலையில் இரண்டாவது தடவையும் எப்படியோ எல்லாவற்றையும் சமாளித்துக் கொண்டு போய், வந்திருக்கிறார்.
பெரும்பாலும் பஸ் நிலையத்தில் இருக்கும் பொதுக்கழிப்பறை, பொதுக்குளியல் அறை ஆகியவற்றைப் பாவித்து, பஸ் நிலையங்களில் தங்கி, தன்னுடைய கணவரைப் பார்க்கப் போயிருக்கிறார்.

வெளியே தனி அறை எடுத்துத் தங்கிக் குளித்து, உடைமாற்றிச் சாப்பிட்டுத் தூங்கி, ஆறுதலாகப் போய் வருவதற்குத் தங்களிடம் வசதி (பணம்) இல்லை என்கிறார் இந்தப் பெண்.

ஆகவே பஸ்ஸிலும் ரெயினிலும்தான் தூக்கம். ஏனைய அத்தியாவசியத் தேவைகளுக்கு பொதுக்கழிப்பறையும் பொதுக்குளியல் இடமும்.
‘வீட்டுக்கு வெளியே – ஊருக்கு வெளியே - மூன்று நாட்கள் ஒரு பெண் இருப்பது என்றால் சும்மாவா? எவ்வளவு சிரமமாக இருக்கும்? கொஞ்சம் எங்கட நிலைமையை எண்ணிப் பாருங்கள்’ என்று என்னைப்பார்த்துக் கேட்டார் அவர். அவருடைய கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. அவருடைய கண்களை என்னால் பார்க்கவே முடியவில்லை.

இதைத் தவிர, தங்களுக்கு வேறு தெரிவு இல்லை என்பதே இவர்களுடைய பதில். உண்மையும் அதுதான். காரணம், உழைப்பில்லை. வருமானம் இல்லை. பிற உதவிகள் இல்லை. ஆகவே மிகச் சிரமப்பட்டு, இப்படிப் போய், தங்களின் உறவுகளைப் பார்க்கிறார்கள்.

புலிகளுடனான அரசாங்கத்தின் இறுதிப் போருக்குப் பின்னர் வன்னியிலிருந்த மக்களின் வாழ்க்கை இப்படித்தான் பல வகையிலும் சிதைந்தே போயுள்ளது. அதிலும் போராளி குடும்பங்களின் நிலை மிகவும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது.

ஒரு காலம் விடுதலைக்காகப் போராடியவர்களின் குடும்பங்கள் இன்று நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அவைகள் இப்பொழுது, இப்படித்தான் எல்லாவற்றுக்காகவும் நெருக்கடிப்பட வேண்டியிருக்கிறது. அல்லது அலைய வேண்டியிருக்கிறது.

அரசியல் வீழ்ச்சிகளும் எழுச்சிகளும் வரலாற்றில் மிகச் சாதாரணமாக நடந்து விடுவதுண்டு. ஆனால், அந்த வீழ்ச்சிகளும் எழுச்சிகளும் ஏற்படுத்தும் விளைவுகளும் மாற்றங்களும் சாதாரணமாக அமைவதில்லை.
அதிலும் வீழ்ச்சியினால் ஏற்படும் விளைவு என்பது மிகக் கொடியது. அது மக்களையே அதிகமாகப் பாதிக்கின்றது.

1945 இல் ஜேர்மனி தோற்கடிக்கப்பட்டபோது ஜேர்மனிய மக்கள் நடத்தப்பட்ட விதமும் அவர்கள் அடைந்த துயரங்களும் சாதாரணமானவையல்ல. அந்த மக்களின் விருப்பங்களுக்கு மாறாகவே ஜேர்மனி என்ற நாடு கிழக்கு ஜேர்மனி என்றும் மேற்கு ஜேர்மனி என்றும் துண்டாடப்பட்டது. அந்த மக்களின் விருப்பங்களுக்கு மாறாகவே, அவர்களுடைய ஆன்மாவின் மீதே பெர்லின் சுவர் எழுப்பப்பட்டது.

நாற்பத்தியைந்து ஆண்டுகளாக – 1989 இல் ‘பெரொஸ்ரொய்கா’ என்ற மறுசீரமைப்புத் திட்டத்தை அப்போதைய ரஷ்ய அதிபராக இருந்த கொர்பசேவ் கொண்டு வரவில்லை என்றால், பனிப் போர் முடிவுக்கு வரவில்லை என்றால், இன்னமும் ஜேர்மனி அப்படித்தான் - பிரிந்த நிலையிலேயே இருந்திருக்கக்கூடும்.

அதுவரை, நாற்பத்தியைந்து ஆண்டுகளாக, ஜேர்மனிய மக்கள், கணவன் இங்கே, மனைவி அங்கே, சகோதரன் இங்கே, சகோதரி அங்கே, தாய் இங்கே, பிள்ளை அங்கே என்ற நிலையில்தான் வாழ வேண்டியிருந்தது.
இந்த நிலையில் உலகத்தின் அத்தனை கருணைக் கண்களும் இறுக மூடியிருந்தன. இல்லையென்றால், அவ்வளவு காலமாக அந்த மக்கள் இப்படிப் பிரிந்திருக்க வேண்டியிருந்திருக்குமா?

ஏறக்குறைய ஜேர்மனிய மக்கள் சந்தித்த அவலத்தைப் போல, ஒரு நெருக்கடி நிலையில், அதற்கும் மேலான அவலத்தில்தான் இன்று வன்னிச் சனங்கள் வாழ்கின்றனர். அதிலும்  போராளி குடும்பங்கள் அல்லது புலிகளின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டோரின் குடும்பங்கள் இன்று சந்தித்திருக்கும் நெருக்கடியும் அவலமும் மிகக் கொடுமையானது.

சில பேருக்குத் தங்கள் பிள்ளையோ கணவரோ எங்கே என்றே தெரியாத நிலை. அதனால் வாழ்க்கை முழுவதும் காணாமற் போனோரைத் தேடியலையும் துயரம்.

வேறு சிலருக்குத் தடுப்பு முகாம்கள் என்று சொல்லப்படும் புனர்வாழ்வு முகாம்களிலோ அல்லது பூஸா முகாம், வெலிக்கடச் சிறைச்சாலை போன்ற இடங்களிலோ இருக்கின்றவர்களைப் பார்க்கவென அலைகின்ற அவலம்.
இது மிகவுந் துயரந்தரும் ஒரு நிலை.

தடுப்பு முகாம்கள் என்று மக்களால் சொல்லப்படுகின்ற இந்தப் புனர்வாழ்வு முகாம்களில், இன்னும் நான்காயிரத்துக்கு மேற்பட்ட விடுதலைப்புலிகளின்; முன்னாள் உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

இவர்கள் காலி – பூஸா, வெலிக்கந்த, வவுனியா, ஓமந்தை, வெலிக்கட போன்ற பல இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் பலர் திருமணமானவர்கள். சிலர் படிக்கின்ற பிராயத்தினர். சிலர் முதியோர்.

இப்படிப் பல வகையில் - பல வயதினராக - இருக்கும் இவர்களைப் பார்ப்பதற்காக இவர்களுடைய உறவினர்கள் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் இருந்து பூஸாவுக்கும் வெலிக்கடவுக்கும் வெலிக்கந்தவுக்கும் வவுனியாவுக்கும் என்று அலைகின்றனர்.

இதில் வவுனியா போன்ற தமிழ்ப்பகுதிகளுக்குச் செல்வதில் அதிக பிரச்சினை இருப்பதில்லை. மொழி தெரியும் என்பதாலும் உறவினர்கள் யாராவது இந்தப் பகுதிகளில் இருப்பதாலும் அதிக சிரமமில்லாமலே இவர்கள் தங்கள் உறவுகளைப் பார்த்துத் திரும்பக்கூடியதாக இருக்கிறது.

ஏனைய இடங்களான பூஸா, வெலிக்கந்த, சேனாபுர போன்ற இடங்களுக்குச் செல்வது என்பதே இவர்களுக்கு இருக்கின்ற பெரிய பிரச்சினை.

பெரும்பாலும் உழைப்பாளிகளை இழந்த நிலையில் இருக்கும் இந்தக் குடும்பங்கள் இவ்வளவு தூரத்துக்குச் சென்று தங்கள் உறவினரைப் பார்ப்பதற்கு மாதந்தோறும் பெரும் செலவைச் செய்ய வேண்டியிருக்கிறது.

அதைவிடக் கொடுமையும் மிகவும் கவலையும் அளிக்கின்ற விடயம், இப்படிப் பார்க்கப்போவோரில் அதிகமானவர்கள் பெண்கள். எனவே இவர்களை இந்தப் பயணத்தில் பலரும் ஏமாற்றி விடுகின்றனர். சிலர் இவர்களை ஏமாற்றிப் பணத்தைப் பறிக்கின்றார்கள். இடம் புதிது, மொழி புதிது என்பதாலும் விடுதலைப் புலிகளின் குடும்பங்கள் என்று வேறு அச்சுறுத்தியும் பணம் பறிக்கப்படுகிறது.

அடுத்த பக்கத்தில், இவர்கள் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுகிறார்கள். பெரும்பாலும் இளம் பெண்களாக இருக்கும் இவர்களை வழி நீளத்துக்கு ஓட்டோச் சாரதிகள், வழி காட்டிகள், கடைக்காரர்கள் என இருக்கும் சிலர்  உதவி செய்வதாக நடித்து ஏமாற்றி விடுகின்றனர்.

இதனால், ஏறக்குறைய பாதிக்கப்பட்ட நிலையில், சீரழிந்த நிலையிலேயே இந்தக் குடும்பங்களின் இன்றைய யதார்த்தம் உள்ளது.

இதை இவர்களால் தவிர்க்கவும் முடியவில்லை. என்னதான் இருந்தாலும் தடுப்பில் இருக்கும் தங்கள் உறவினர்களை எப்படித் தங்களால் பார்க்காமல் இருக்க முடியும்? அதுவும் தாம் பார்க்கப் போகாமல் விட்டால், அங்கே – உள்ளே - இருப்போரின் மனநிலை எப்படியிருக்கும்? என்று கேட்கிறார்கள் இவர்கள்.

இவர்களுடைய கேள்வி நியாயமானதே. ஆகவே என்னதான் கொடுமைகள் நடந்தாலும் அதையெல்லாம் சமாளித்துக் கொண்டு போய், தங்கள் உறவுகளைப் பார்க்கத் தான் வேணும். அப்படித்தான் பார்க்கின்றார்கள் இவர்கள்.

ஆனால், இப்படிப் பெருந்தொகையான அரசியற் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் போது, இந்தக் கைதிகளை, அவர்களுடைய உறவினர்கள்  பார்ப்பதற்கும் சந்திப்பதற்குமான ஒழுக்கு ஒன்றை அரசாங்கம் நிச்சயம் செய்திருக்க வேண்டும். அது அவசியமானது மட்டுமல்ல, அடிப்படை உரிமையானதும் கூட.

சமூகப் பாதுகாப்பு அற்ற நிலையில், ஏற்கனவே நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் ஒரு பெருந்திரளான மக்களை மேலும் அவலத்திற்குள்ளாக்குவது எந்த வகையிலும் நியாயப்படுத்தக் கூடியதல்ல. ஏற்கக்கூடியதும் அல்ல.

முன்னர், 1971 இல் ஜே.வி.பியின் கிளர்ச்சி முறியடிக்கப்பட்ட பின்னர், கைது செய்யப்பட்ட ஜே.வி.பி உறுப்பினர்கள் அப்போதைய அரசினால், பல இடங்களிலும் இப்படித் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

குறிப்பாக வன்னியில் - கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள அக்கராயன் என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான ஜே.வி.பி உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களைப் பார்க்க வருகின்ற தென்னிலங்கையைச் சேர்ந்த அந்த மக்களுக்கான வசதிகளை அன்றைய அரசாங்கம் செய்திருந்தது. பயண ஒழுங்குகள், தங்குமிட வசதிகள், உணவு போன்றவற்றை அது செய்திருந்தது.
இப்பொழுது அக்கராயன் மகா வித்தியாலயமாக இருக்கும் கட்டிடத் தொகுதியிலேயே முன்னர் ஜே.வி.பி உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதற்கு முன்னே இருக்கின்ற விடுதிக்கட்டிடங்களாக இருக்கும் ஆறு பெரிய கட்டிடத் தொகுதிகளிலேயே ஜே.வி.பி உறுப்பினர்களைப் பார்க்க வருகின்ற உறவினர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால், அதையும் விடப் பல மடங்கு அதிகமாக இருக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படும் இந்த உறுப்பினர்களின் உறவினர்கள் எந்தப் பாதுகாப்பும் அற்ற நிலையில், எந்தப் பராமரிப்பும் உதவியும் இல்லாத நிலையில் அவலத்திற்குள்ளாகின்றனர்.

இவர்களுடைய இந்த அவல நிலைகுறித்து எவரும் இதுவரை அக்கறைப்பட்டதாக இல்லை. அரசாங்கமோ, பிற அரசியற் கட்சிகளோ, தமிழ்த்தலைவர்களாகச் சொல்லிக்கொள்ளும் தரப்பினர்களோ இந்தப் பிரச்சினையைப் பொருட்படுத்தவேயில்லை.

இரண்டாண்டுகளாக அலைந்து கொண்டிருக்கும் இந்தக் குடும்பங்களின் பொருளாதார நிலை, பாதுகாப்பு, இவ்வாறான அலைச்சல்கள், இவற்றால் ஏற்படும் சீரழிவுகள் என எதைப்பற்றியும் எவரும் கவலைப்பட்டதாக இல்லை.
இதுகுறித்த கவலை இந்தக் குடும்பங்களுக்கு உள்ளது.

உறவினர்களைப் பார்க்கச் செல்வதற்கான வழிச்செலவுக்காக - ஒரு சிறு உதவியாக, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மாதம் ஒன்றுக்கு 3000 ஆயிரம் ரூபாயை வழங்குகிறது. ஆனால், தாங்கள் ஒரு தடவை பூஸாவுக்குச் சென்று திரும்புவதற்கு குறைந்தது எட்டாயிரம் அல்லது அதற்கு மேல் செலவாகிறது என்கின்றனர் இந்த உறவினர்கள்.

தடுப்பில் இருப்போருக்கான சவர்க்காரம், சம்பூ, உடைகள், சிற்றுண்டிகள், முகச் சவரம் செய்வதற்கான உபகரணங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களையும் இந்தப் பயணத்தின் போது இவர்கள் வாங்கிக் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது.

ஆகவே குறைந்தது எட்டாயிரத்துக்கு மேல் ஆகும் செலவு என்பது தவிர்க்க முடியாததே. இப்படிச் செலவாகும்போது தங்களால் அடிக்கடி சென்று பார்க்க முடியாதிருப்பதாகவும் இவர்கள் சொல்கிறார்கள்.

தருமபுரம் பகுதியில் இருக்கும் இன்னொரு முதியவரையும் அன்று சந்தித்தேன். அவருடைய ஒரு மகன் ஏற்கனவே போரில் இறந்து விட்டார். அடுத்த இரண்டு மகன்கள் தடுப்பு முகாம்களில் இருக்கின்றனர். இன்னும் இவர்கள் விடுதலையாகவில்லை.

வேலப்பன் என்கின்ற இந்த முதியவர், நுவரெலியாவில் இருந்து 1977 இல் இடம்பெயர்ந்து தருமபுரத்துக்கு வந்தவர். கூலித்தொழிலாளியாக இருக்கும் வேலப்பனுக்கு இப்போது வயது 65.

‘ஒன்பது பிள்ளைகள்ள மூணு பிள்ளைக இப்பிடி ஆகீட்டாங்க. உழைக்கிற வயசில இப்பிடி போனா நா என்ன பண்றது?’ என்று துக்கத்தோடு கேட்கிறார் வேலப்பன். அவருடைய கண்கள் கலங்கிவிட்டன.

வேலப்பனும் பிள்ளைகளைப் பார்ப்பதற்காக பூஸாவுக்கும் வெலிக்கந்தவுக்குமாக அலைந்து கொண்டிருக்கிறார். ஆனால், இவர் மூன்று மாதத்துக்கு ஒரு தடவைதான் போய்ப்பார்க்கிறார்.

‘அடிக்கடி போய்ப்பாக்கிறதுக்கு இஸ்டந்தான். ஆனா பணம் வேணுமே. நம்பளால அது முடியுமா? இருக்குற மத்தப் புள்ளங்களுக்கு சோறு போடணுமே. கொறைஞ்சது கஞ்சியாவது ஊத்தணுமே’ என்று நம்மைப் பார்த்துக் கேட்கிறார் அவர்.

இந்த மாதிரியான கவலைகள் என்பது உள்ளே தடுத்து வைக்கப்பட்டிருப்போருக்கும் அதிக வேதனையைக் கொடுக்கக் கூடியது. தங்களுடைய குடும்பங்கள் இன்று இத்தகைய ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என்பதையிட்டு இவர்கள் வேதனைப்படுகிறார்கள். இந்த நிலையில் இருந்து எப்படி மீள்வது என்றும் இவர்களுக்குத் தெரியவில்லை.
பொதுவாக ஒரு உளவியல் நெருக்கடி இந்தக் குடும்பங்களுக்கு இன்று ஏற்பட்டுள்ளது. இது சாதாரணமான நெருக்கடி அல்ல. ஒரு சமூகத்தில் இந்த மாதிரியான அவலம் நிகழ்கிறது என்றால், அதனால், ஒரு குறிப்பிட்டோர் மட்டும் பாதிக்கப்படுவதல்ல. அந்தச் சமூகமே பாதிக்கப்படுகிறது.

ஆகவே, இந்த நிலை குறித்து உடனடிக் கவனத்தை அனைத்துத் தரப்பினர்களும் கொள்ள வேணும்.

இல்லையெனில் இந்தக் குடும்பங்களின் சிதைவும் அதன் மூலம் இந்தக் குடும்பங்களிலுள்ள சிறார்களின் எதிர்காலமும் சிதைந்து போகும். அது பின்னர் பேரபாயமான நிலைமைகளையே தோற்றுவிக்கும்.

00

இலங்கையின் பிம்பக் கலாசாரம்

Monday 19 December 2011

தெற்கிலே அதிவேக நெடுஞ்சாலையைக் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திறந்து வைத்திருந்தார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ. இலங்கையின் வரலாற்றிலே முதல் அதிவேக நெடுஞ்சாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சரித்திரம் தன்னுடைய பொன்னெழுத்துகளால் இந்தச் சம்பவத்தைப் பொறித்துக் கொண்டுள்ளது.

புதிதாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள இந்தச் சாலையில் 100 கிலோ மீற்றர் வேகத்துக்குக் குறைவாக வாகனங்கள் ஓட்டப்படுமானால் தண்டம் அறவிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது அதிவேக நெடுஞ்சாலைகளில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை என்றாலும் இலங்கையில் இப்படியொரு நிலை உருவாக்கப்பட்டிருப்பதையிட்டு ஆச்சரியமே ஏற்படுகிறது.

அதிலும் எல்லா விசயங்களிலும் நாடு சமனிலைகளை அடைவதற்கு இன்னும் எவ்வளவோ தூரம் பயணிக்க வேண்டியிருக்கும் சூழலில், இப்படியான  அறிவிப்புகளுடன் செய்யப்படும் அதிரடிக் காரியங்கள் மக்களுக்கு ஆச்சரியத்தையே ஏற்படுத்துகின்றன.

இந்த ஆச்சரியம் மகிழ்ச்சியினாலோ பெருமிதத்தினாலோ ஏற்படுவதில்லை. குறைபாடுகளின் மத்தியில் உருவாக்கப்படும் மாஜா ஜால மாதிரிகளால் உருவாகும் ஆச்சரியமே இது. இதன் அடித்தளத்தில் மக்கள் ஏமாற்றப்படுவதற்கான புள்ளிகளே அதிகமாக உண்டு.

சமனிலைப்படுத்தப்பட்ட விசயங்களின் வளர்ச்சிகளினால் ஏற்படும் ஆச்சரியங்கள் நிச்சமாக மக்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். அதுவே நாட்டின் அபிவிருத்தியைச் சிறப்பாக்கும். அதுவே நாட்டின் அபிவிருத்திக்கும் பிரதேசங்களிடையேயான வேறுபாடுகளற்ற வளர்ச்சிக்கும் மூலாதாரமாகும்.

ஆனால், இலங்கையில் இன்னும் அப்படியான சிந்தனையோ நடைமுறையோ ஏற்படவில்லை. அப்படி அவை ஏற்படுத்தப்படவும் இல்லை. ஆனால், அப்படியான ஒரு பொது நடைமுறை உருவாக்கப்படவேண்டும்@ அப்படியான ஒரு பொதுமைப்படுத்தப்பட்ட சிந்தனையை வளர்த்தெடுக்க வேணும் என்று யாரும் கருதியதாகவும் தெரியவில்லை.

தெற்கிலே ஆரம்பித்து வைக்கப்பட்ட அதிவேக நெடுஞ்சாலையைப் பற்றி அரசாங்கம் மிகப் பிரமாண்டமான பெருமிதப் புகழாரப் பிரச்சாரங்களைச் செய்திருந்தது.

இந்த நெடுஞ்சாலையைப் பற்றி தெற்கின் ஊடகங்களிற் பலவும்கூட பெருமிதச் செய்திகளை எழுதியிருந்தன.

ஆனால், வடக்கிலும் கிழக்கிலும் நாட்டின் பிற, பின்தங்கிய மாவட்டங்களிலும் வீதிகளும் மக்களின் வாழ்நிலையும் மிகப் பிந்தங்கியே உள்ளன.

குறிப்பாக, வடக்கில் – வன்னிப் பிராந்தியத்தில் ஒரு மணித்தியாலத்தில் 10 கிலோ மீற்றர் வேகத்தில் வாகனத்தை ஓட்டினாலே அது பெரும் சாதனை. அந்தளவுக்குச் சீரழிந்து போயுள்ளன இந்த வீதிகள். இங்குள்ள ‘ஏ’ தர வீதிகளே இந்த நிலையிற்தான் உள்ளன. (இதை வன்னியில் எந்தப் பகுதிக்குப் போய்ப்பார்த்தாலும் நீங்கள் காணலாம்).

இந்த வீதிகளால் அடிக்கடி பயணிக்கும் இராணுவத்தினரைக் கேட்டாலே அவர்கள் தாங்கள் படுகின்ற அவலத்தையும் அவஸ்தையையும் சொல்வார்கள்.

போர் முடிந்து இரண்டரை ஆண்டுகள் கழிந்து விட்டன. ஆனால், அடிப்படையான விசயங்களில், அவசியமான தேவைகளிற் கூட இன்னமும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படவில்லை.

இடையில் தேர்தற் தேவைகள் மற்றும் அபிவிருத்தி வேலைகள் என்பதற்காக அவசர அவசரமாகச் செய்யப்படும் புனரமைப்புப் பணிகள் வெறும் கண்துடைப்பு முயற்சிகளாகவே உள்ளன. அவசரமாக ஊற்றப்பட்ட தண்ணித் தார், ஊற்றப்பட்ட அவசரத்தோடேயே காணாமற் போய்விட்டது.

வன்னியில் உள்ள முக்கியமான வீதிகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல தடவைகள் திருத்தப்பட்டுள்ளன. ஆனால், இப்படித் திருத்தப்படும் வீதிகள் மூன்று நான்கு மாதங்களுக்கு மேல் தாக்குப்பிடித்து நிற்பதில்லை. (இது சர்வதேசத் தரத்தில் எந்த வகையைச் சேர்ந்தது என்று தெரியவில்லை).
பெருமளவு பணத்தைச் செலவழித்துப் புனரமைப்பப்படும் வீதிகள், இப்படிப் பழுதடைவதற்குக் காரணம், அவற்றை உரிய முறையில் புனரமைப்புச் செய்யாமையே!

வெறுமனே கிறவல் மண்ணை அள்ளி வீதியில் நிறைப்பதனூடாக சூழலையே பாதிப்படையச் செய்ய முடியும். ஒப்பந்த வேலைகளை எடுப்போரின் பொக்கற்றுகள் நிறையும். மற்றப்படி வீதியைச் செப்பனிட முடியாது. ஆனால், இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

கிறவலைப் போடுவதன் மூலமாக வீதியிற் பயணிப்போர் தூசியினால் அவதிப்படுகின்றனர். இது சுவாச நோய்களை உண்டாக்குகிறது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். கிறவலை வீதிக்காக அதிக அளவில் தோண்டி எடுப்பதனால், கிறவல் எடுக்கப்படும் பகுதிகளில் சூழற்தாக்கம் - நில அமைப்பில் பாதிப்பு - ஏற்படுகிறது. இதைப் பற்றி கிராமவாசிகள் கவலைப்படுகிறார்கள்.

ஆகவே, பணத்தைச் செலவழித்து, சூழற் பாதிப்பை ஏற்படுத்தும் காரியங்கள் நிகழ்கின்றனவே தவிர, வீதிப் புனரமைப்பு நடைபெறவில்லை.
இதனால், அதி தாமதப் பாதைகளே உருவாக்கப்படுகின்றன. இப்பொழுது வன்னியில் உள்ள 100 வீதமான வீதிகளும் அதி தாமதப் பாதைகளாகவே உள்ளன.

ஆகவே, இலங்கையின் வரலாற்றில் அதிவேகப் பாதைகளையும் அதிதாமதப் பாதைகளையும் ஒருங்கே கொண்டுள்ள பெருமையையும் இலங்கை பெற்றுள்ளது என்பதையும் சரித்திரம் தன்னுடைய பொன்னெழுத்துகளால் பொறித்துக்கொள்கிறது.

அதிவேகப் பாதையைப் பற்றி பெருமையான முறையிற் செய்திகளை வெளியிட்ட ஊடங்களின் பார்வையில் நாட்டின் இன்னொரு பகுதியில் உள்ள அதிதாமதப் பாதைகளின் நிலைமையைப் பற்றி அறிய முடியவில்லை.
ஊடகதர்மமும் ஊடகநிலையும் தகவற் பெறுமானச் சமனிலைச் சிறப்பும் இப்படித்தான் உள்ளது. எந்தவொரு ஊடகத்திலும் இதுவரையில் இத்தகைய சமனிலைக் குறைபாடுகளைச் சுட்டி, ஆசிரியர் குறிப்புகள்கூட எழுதப்பட்டதில்லை.

ஒரு சின்னஞ் சிறிய நாட்டில் வௌ;வேறு பகுதிகளில் நடக்கும் சமனிலைத் தளம்பலை அறியமுடியாத நிலையில் அல்லது அறிந்திருந்தாலும் அவற்றை வெளிப்படுத்த விரும்பாத நிலையிற்தான் யதார்த்தம் உள்ளது.

இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் இப்படித்தான் யதார்த்தத்தை மூடிமறைத்துப் பெருமிதப் புள்ளிகள் உருவாக்கப்படுகின்றன. ‘மேன்மை தங்கிய’ ஜனாதிபதி அவர்களாலும் தற்போதுள்ள அரசாங்கத்தினாலும் பொன்னெழுத்துகளாற் பொறிக்கப்படக்கூடிய பல சாதனைகள் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது, அதன்மூலம் நாடு முழுவதையும் ஒரே நிர்வாக அலகின் கீழ் மீண்டும் கொண்டு வந்தது, நாட்டிலுள்ள முக்கியமான பாலங்களை நிர்மாணித்துத் திறந்து வைத்தது, புதிய பொருளாதார இலக்குகளை நோக்கி அபிவிருத்திப் பயணத்தை மேற்கொண்டிருப்பது, அதிவேக நெடுஞ்சாலையை ஆரம்பித்திருப்பது என இந்தப் பட்டியலைச் சிலர் வாசிக்கிறார்கள்.

ஆனால், ஜனநாயக நெருக்கடியும் அபிவிருத்திச் சமனின்மையும் இனமுரண்பாட்டுப் புள்ளிகளின் விரிவாக்கமும் அதிகாரக் குவிப்பும் மேலே சுட்டப்பட்ட பெருமிதங்களைச் சிதைக்கும் வெடிகுண்டுகளாகவே உள்ளன.

நாடு புறவயமான யுத்தத்தைக் கடந்திருக்கலாம். ஆனால், அது அகவயத்திற் கொண்டுள்ள அபாய வெடிகுண்டுகளை தன்னுள்ளே உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது. இது பொறிக்கப்பட்டு வரும் அத்தனை பொன்னெழுத்துகளையும் பாழடித்து விடும்.

தற்போது நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் நேரிற் சென்று வரக்கூடிய தாராள நிலை தோன்றியுள்ளது. ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடக்கம் ஊடகவியலாளர்கள் வரை எவரும் எங்கும் சென்று வரக்கூடிய நிலை உண்டு. அப்படி அவர்கள் எல்லா இடங்களுக்கும் சென்றும் வருகிறார்கள்.

இப்படியானதொரு நிலை உருவாகியிருப்பதால், இனிமேலாவது, வடக்குக் கிழக்குப் பகுதிகளின் உண்மை நிலையை இவர்கள் அறியக் கூடியதாக இருக்கும். அதன்படி அந்தப் பகுதிகளில் அபிவிருத்தியிலும் முன்னேற்றங்கள் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஜனாதிபதியின் புத்திரரான திரு. நாமல் ராஜபக்ஷவே எல்லா இடங்களுக்கும் செல்கிறார் என்பதால், அவர் நிலைமைகளை நேரிற் கண்டறியக் கூடிய வாய்ப்புண்டு.

இதனால், ‘முன்னேற்றங்கள் நிச்சயமாக ஏற்படும். அதிலும் அவை விரைவாகவே நிகழும்’ என்றும் சனங்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், எதிர்பார்த்தவை நிகழவில்லை. அவர்களுடைய நம்பிக்கைகள் மாயமான்களாகவே பொய்யுரைத்து மறைந்து கொண்டிருக்கின்றன.
ஆகவே, பிம்பங்களாற் கட்டமைக்கப்படும் அரசியற் பொருளாதாரக் கலாச்சாரத்தில் நாடு தேங்க வைக்கப்படுகின்றதா என்றே எண்ணத்தோன்றுகிறது. பிம்பங்கள் மக்களுக்கு எந்த நிலையிலும் ஆபத்தானவையே. பிம்பங்கள் உச்சச் சுரண்டலுக்கும் சனங்களின் சிந்தனை மயக்கத்துக்குமே அதிக சாத்தியங்களை வழங்குகின்றன. எத்தகைய பிம்பங்களிலும் உச்ச நலன்களைப் பெறுவது, அவற்றை உருவாக்கும் தரப்பினரே!

இலங்கை இன்று பிம்பக் கலாசாரத்துக்குள் ஆழமாகப் பயணிக்கத் தொடங்கியுள்ளது. யுத்த வெற்றியில் ஆரம்பிக்கப்பட்ட – அல்லது யுத்த வெற்றியிலிருந்த உருவாக்கப்பட்ட இந்தப் பிம்பக் கலாச்சாரம் ஏனைய எல்லா விசயங்களுக்குமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

தமிழர்களும் பிம்பக் கலாச்சார நிழலிலேயே உறங்கிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு வசதியாகத் தமிழ்க் கலாசாரத்தின் முகமே பிம்பக்கலாசாரத்தினாற் கட்டமைக்கப்பட்டு வருகிறது என்பதையும் நாம் கவனிக்க முடியும்.

பிம்பம் என்பது யதார்த்தத்துக்கும் உண்மைக்கும் எதிரானது. பிம்பத்துக்கு எதிரான உண்மை மிகக் கொடியதாகவே இருக்கும். அப்படியான நிலையிற்தான் இலங்கையின் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையும் அவர்கள் வாழ்கின்ற பிரதேசங்களின் நிலையும் உள்ளன.

இதைக்குறித்து சிந்திக்க வேண்டியது, பிம்ப உருவாக்கத்துக்கு எதிரான சிந்தனையாளர்களின் பணியும் அவசியமுமாகும்.

அதாவது, அகவயமாக உருவாக்கப்படும் யுத்தச் சூழலிலிருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இது.

அரசனின் மாளிகையில் நடக்கும் விருந்துதான் நாட்டிலுள்ள குடிமக்களின் வீட்டுச் சாப்பாடாகவும் இருக்கிறது என்று காண்பிப்பதை எந்த ஜனநாயக சக்தியும் அங்கீகரிக்க முடியாது.

ஜனநாயகத்தில் அரசனுக்கும் அரச முறைமைக்கும் இடமும் இல்லை.
இதையும் இலங்கை தன்னுடைய சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால் பொறித்துக் கொள்ள வேண்டும்.

00

பலவீனமான எதிர்க்கட்சி - நெருக்கடிக்குள் யூஎன்பி.

Sunday 18 December 2011

'ஊடகவியலாளர்களுக்கு வெள்ளைவான்களை வழங்குங்கள்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் தெரிவித்திருக்கிறார். ரணிலின் இந்தக் கூற்று அதிர்ச்சிகரமான ஒன்றாகும்.

கொந்தளிக்கும் உணர்ச்சிகரமான ஒரு விடயமாக ஊடகவியலாளர்கள் குறித்த பிரச்சினைகள் இருக்கும்போது இவ்வாறான ஒரு வலுவான அபிப்பிராயம் நிச்சயமாக அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

அவருடைய ஆளுமை குறித்த கேள்விகள் உள்நாட்டிலும் சர்வதேசப் பரப்பிலும் எழுப்பப்பட்டிருக்கும் சூழலில் தன்னைச் சுதாகரித்துக்கொண்டு, ரணில் தன்னை ஒரு வலுவான ஆளுமையாக நிரூபிக்க முயன்றிருக்கிறார் போலுள்ளது.

இலங்கையின் அரசியல் நிலைவரத்தில், ஊடக சுதந்திரம் பற்றிய வாதப்பிரதிவாதங்களில், ஊடக சுதந்திரத்துக்குப் பதிலாக அரசாங்கம் ஊடகவியலாளர்களுக்கு சில சலுகைகளை வழங்கி மகிழ்விக்கச் சிந்தித்திருக்கும் பின்னணியில், ஜனநாயக நெருக்கடிகள் பற்றி விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், ரணில் இப்படித் தெரிவித்திருப்பது எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதைப்போல ரணிலின் அண்மைய அறிவிப்புகளும் பாராளுமன்ற உரைகளும் சற்றுக் கனதியாக மாறிவருவதையும் நாம் அவதானிக்கலாம்.

ஆனால், இந்த அறிவிப்புகள் மட்டும் ரணிலையோ அல்லது அவருடைய கட்சியையோ மேலே உயர்த்தி விடாது. அல்லது அவரும் அவருடைய கட்சியும் சந்தித்துவருகின்ற தொடர் நெருக்கடிகளை இவை எந்த வகையிலும் குறைத்தும் விடாது.

அதற்கு நிறையக் காரியங்களைச் செய்ய வேண்டும். அப்படி நிறையக் காரியங்களைச் செய்ய வேண்டுமென்றால், நிறையத் தியாகங்களைச் செய்ய வேண்டும். நிறையத் தியாகங்களைச் செய்ய வேண்டும் என்றால், அதற்கு மிகப் பரந்த மனமும் விரிந்த சிந்தனையும் வேண்டும் கடுமையான உழைப்பும் தேவை.

ஆனால், ஐ.தே.கவில் அப்படியான ஒரு சூழலோ ஒரு நிலையோ ஒரு தன்மையோ காணப்படவில்லை. தடைகளையும் உறைநிலைகளையும் உடைத்துக்கொண்டு மேற்கிளம்பி வரக்கூடிய ஆளுமைகள் இப்போதைய சூழலில் அந்தக் கட்சிக்குள் இருப்பதாகப் படவில்லை.

கரு ஜெயசூரியா சற்று மிதப்பானவராகத் தெரிந்தார். ஐ.தே.கவில் அவர் மூத்த உறுப்பினராகவும் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் இருக்கிறார். இதன்காரணமாக ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் ஆதரவு கட்சிக்குள்ளே அவருக்குண்டு. ஆனால், அவர் தன்னைத் தலைமைக்குரிய ஒருவராகவோ, ஒரு குறிப்பிடத்தக்க ஆளுமையாகவோ நிரூபிக்கத் தவறிவிட்டார்.

ரணிலை முந்தும் ஒரு பந்தையக் காரனைப்போலத் தோற்றங்காட்டினாரே தவிர, மற்றும்படி அவர் பின்வரிசையிலேயே தொடர்ந்தும் இருக்கிறார்.

கருவுக்குப் பிறகு, ஐ.தே.க.வில் இன்னொரு நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரிந்தவர் முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸவின் மகன் சஜித் பிரேமதாஸ.

தந்தையின் கடுமையான உழைப்பும் அதன் வழியாக வந்த ஸ்தானமும் சஜித்துக்கு ஒரு அடிப்படையை உருவாக்கிக் கொடுத்திருந்தது. அதனால், அவர் கட்சிக்குள்ளும் வெளியேயும் அதிகம் அறியப்பட்ட ஒருவராக மாறியிருந்தார்.

ரணிலுக்குப் பதிலாக அல்லது மாற்றீடாக சஜித் வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்பை ஐ.தே.க வின் அனுதாபிகளும் ஆதரவாளர்களும் உள்நாட்டில் கொண்டிருந்தபோது, சஜித்தை ஓடக்கூடிய ஒரு குதிரையாக ஆக்கலாமா என வெளியுலகம் எதிர்பார்த்தது.

ஆனால், சஜித்தும் தனக்கான வாய்ப்புகளை இனங்காணத் தவறிவிட்டார். மேலும் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் முடியாதிருக்கிறார். தந்தையின் உழைப்பினாற் கிடைத்திருந்த வளங்களைக் கூட அவர் பெறுமதியற்ற நிலையிலேயே வைத்திருக்கிறார்.

ஆளுமை மிக்க தலைமைத்துவத்துக்குரிய ஒருவர் வீரியமுள்ள ஒரு முளையைப்போல எல்லாத் தடைகளையும் உடைத்துத் தகர்த்துக்கொண்டு, மேற்கிளம்பி வருவார்.

அத்தகைய ஆளுமைகள் எனச் சொல்லக்கூடிய அளவுக்கு இன்றைய ஐ.தே.க இல்லை என்றே சொல்லலாம்.

என்றபடியாற்தான் அந்தக் கட்சி ஒரு முதிய தீராத வியாதிக்காரனைப் போல பலவீனப்பட்டுக்கொண்டே போகிறது. உள்முரண்பாடுகளாலும் செயற்பாடுகளற்ற வெறும் உரையாடல்களாலும் அதிகாரப் போட்டியாலும் உடைந்துடைந்து உள்ளுக்குள்ளே மட்கிக் கொண்டிருக்கிறது அது.

எதிர்த்தரப்பினால் ஏற்படுகின்ற நெருக்கடிகளை விடவும் அது தனக்குள் கொண்டிருக்குள் உள் நெருக்கடிகளாலேயே திணறிக்கொண்டிருக்கிறது.  

இலங்கைத்தீவின் மூத்த கட்சிகளில் ஒன்றாகிய ஐ.தே.க இப்படியான ஒரு நிலைக்கு வரும் என அதனுடைய பிதாமகர்களும் அந்தக்கட்சியின் மூத்த தலைவர்களும் நினைத்திருக்கவே மாட்டார்கள்.

ஆனால், அவர்கள் பறித்த குழிகளிலேயே அந்தக் கட்சி வீழ்ந்திருக்கிறது. இப்போது மீண்டெழ முடியாத அளவுக்குக் கட்சியின் பலத்தையெல்லாம் முந்திய தலைவர்களின் தவறுகள் நோய்க்கிருமிகளாகி உறிஞ்சிக் கொண்டிருக்கின்றன. அல்லது, அவர்களுடைய எஜமானர்கள் ஐ.தே.கவின் ஆற்றலையெல்லாம் உறிஞ்சிவிட்டனர்.

பதினேழு ஆண்டுகால ஆட்சியில் கொடிகட்டிப் பறந்த அந்தப் பொற்காலத்தில்தான், ஐ.தே.கவின் வீழ்ச்சிக்கான மூலவித்துகள் வினைத்திறனுடன் முளைத்தன என்று சொல்வார்கள். அதாவது, அந்தக் கட்சியின் மிகப் புகழ்வாய்ந்த தலைவராகவும் ஆளுமையாகவும் இருந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா தான் ஐ.தே.கவை அதிகம் பின்னடைவுக்குக் கொண்டு போகக் காரணமாக இருந்தவர் என்று இன்று மதிப்பிடுகிறார்கள்.

கட்சிக்குள் இருந்த ஜனநாயகத்தை உறிஞ்சியெடுத்துத் தன்னுடைய அதிகாரத்தைப் பலப்படுத்தியவர் ஜெயவர்த்தனா என்பதால், ஜனநாயக உள்ளடக்கத்தாற் பலவீனமடைந்த ஒரு கட்சியாக ஐ.தே.க மாறிவிட்டது.

இப்பொழுது ஐ.தே.கவிற்குள் நடக்கின்ற மோதல் என்பது ஜனநாயக நெருக்கடியின் விளைவே. ‘கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை’ எனப் பகிரங்கமாகவே மூத்த உறுப்பினர்களே சொல்லி வருகிறார்கள்.

ஜனநாயக உள்ளடக்கத்ததிற் பலவீமானமாகக் காணப்படும் எந்தக் கட்சியும் எந்த அமைப்பும் தொடர்ந்து பலமாகவும் முடியாது, வீரியத்துடன் செயற்படவும் முடியாது என்பது விதி. ஐ.தே.கவும் இப்போது இந்த விதிக்குட்பட்டுள்ளது.

இலங்கை போன்ற நாடுகளில் நீண்டகாலமாக இயங்கி வருகின்ற கட்சிகளுக்குள்ளும் அமைப்புகளுக்குள்ளும் இத்தகைய ஜனநாயக நெருக்கடி ஏற்படுவது இன்று வழமை. அதிகாரத்தை நோக்கிய சிந்தனையே இதற்குப் பிரதான காரணம்.

ஆனால், இதை - இந்தப் பகிரங்கமான உண்மையை - இந்தப் பலவீனத்தை - இந்த அசிங்கத்தை வைத்துப் பராமரிப்பதற்கே ஐ.தே.க விரும்புகிறதே தவிர, இதைக் களைவதற்கு அது தயாராகவில்லை.

எந்த நிலையிலும் கட்சிக்குள் அதிகாரத்தைத் தன்னுடைய பிடியில் வைத்திருப்பதற்காகக் கடுமையாகப் பாடுபடும் ரணில் விக்கிரமசிங்க, வெளியே அரசியல் அரங்கில் மிகப் பலவீனமானவராகவே உணரப்பட்டிருக்கிறார்.

இதற்கு அவருடைய நிகழ்காலச் செயற்பாடுகள் மட்டும் காரணமல்ல. கடந்த காலத்தில் அவர் நிரூபிக்கத்தவறிய பல விடயங்களே அவரைப் பற்றிய இத்தகைய உணர்தலைக் கொடுத்துள்ளன.

ரணில், 2002 இல் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அதற்கு முன்னர், 1992 இலும் அவர் பிரதமராக இருந்துள்ளார். (இது பிரேமதாஸவின் மரணம் அளித்த பரிசு என்று சொல்லப்படுவதுண்டு). அதற்கு முன்னும் அவர் வலுவான பதவிகளில் இருந்துள்ளார். இதைவிட அவருக்குக் கட்சிக்குள் ஒரு பாரம்பரியச் செல்வாக்கும் அவருக்கு இருக்கிறது. இந்தச் செல்வாக்குக் குடும்பத்தின் வழியாக வந்தது.

ஆனாலும் இதையெல்லாம் வைத்துக்கொண்டு, ரணிலினால், எந்தச் சிறுமுயலையும் பிடிக்க முடியவில்லை.

நாட்டில் செல்வாக்குச் செலுத்தும் நிலை தளர்ந்து இப்போது கட்சிக்குள்ளும் அவருடைய செல்வாக்கு வட்டம் சுருங்கத் தொடங்கியுள்ளது. ஐ.தே.க விலிருந்த முக்கியமான ஆளுமைகள் வெளியேறிச் சென்றதற்கு அதனுள்ளிருந்த தலைமைத்துவக் குறைபாடும் ஜனநாயக வெளியிலிருந்த போதாமையுமே  காரணம் என்பதையும் நாம் இங்கே இணைத்துப் பார்க்கலாம்.

எனவே, இப்போதைக்கு ஐ.தே.க தன்னுடைய நெருக்கடிகளிலிருந்து மீளும்போலத் தெரியவில்லை. அல்லது புதிய உள்ளடக்கமொன்றை உருவாக்கும்போலவும் தோன்றவில்லை.

இதற்குப் பிரதான காரணம், கட்சிக்குள்ளே ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டியே. ஆனால், உண்மையில் இந்த அதிகாரப் போட்டி அவசியமற்ற ஒன்று. அதிகாரம் இருந்தாற்தான் எதையாவது செய்யலாம் என்று யாராவது சிந்திப்பாராக இருந்தால், அதிகாரம் தனக்குக் கிடைத்தாற்தான் தன்னால் எதையும் செய்ய முடியும் என ஒருவர் நம்புவாராக இருந்தால், அவர் ஒரு தலைமைத்துவத்துக்கான தகுதியைக் கொண்டிருக்கக் கூடியவரல்ல.

இதற்கு நல்ல உதாரணம், இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ.

ஜே.ஆரினால் துவைத்துப் பிழியப்பட்டிருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியை, அதனுடைய இயலாமை நிலையிலிருந்து மீண்டும் புத்தெழுச்சியடைய வைத்தவர் மகிந்த ராஜபக்ஸ.

அப்போது அவர் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கவில்லை. அல்லது கட்சியில் அதிகம் பிரபலமாகிய ஒருவராகவும் இருக்கவில்லை. ஏன், இலங்கையின் அரசியற் பரப்பில் அதிகம் தெரியவந்த ஆளாகவும் அன்று அவர் இருக்கவில்லை.

ஆனால், தலைமைத்துவமே இல்லாதிருந்த கட்சியை மெல்ல மெல்லக் கட்டியெழுப்பி வந்தார் அவர். அதற்காக அவர் பின்னாலிருந்து கடுமையாக உழைத்தார். கட்சிக்குத் தலைமைப் பொறுப்பைத் தான் ஏற்பதிலும் பார்க்க, பொருத்தமான ஒருவரைக் கொண்டு வருவதன் மூலமாகவே கட்சியையும் பலப்படுத்தி, தனக்கான இடத்தையும் நிர்மாணித்துக்கொள்ள முடியும் என அவர் கருதினார்.

இதன்படியே அவர் மிகத் தொலைவிலிருந்த திருமதி சந்திரிகா குமார ரணதுங்கவை அழைத்துவந்தார். சந்திரிகாவின் வருகை நிச்சயமாகக் கட்சியைப் பலப்படுத்தும். அது தன்னையும் பலப்படுத்தும் என்று அவர் நம்பினார்.

பிறகு அவருடைய நம்பிக்கை வெற்றியளித்தது@ நிரூபணமாகியது.

அதிக முயற்சியோ கடுமையான உழைப்போ இல்லாமல் பதிவிக்கு வந்தவர் திருமதி சந்திரிகா குமார ரணதுங்க என்பதை இந்த இடத்தில் நாம் நினைவு கூரலாம். சந்திரிகாவுக்கு இருந்ததெல்லாம் அவருடைய குடும்பத்தின் அரசியற் பின்னணியும் அவருடைய கணவரான திரு. விஜயகுமார ரணதுங்கவின் மூலமான அறிமுகமுந்தான்.

மகிந்த ராஜபக்ஸவே சந்திரிகாவுக்கான சிம்மாசனத்தை வழங்கினார். பிறகு அவரே அதைப் பறித்தும் கொண்டார். ஆனால், அவர் மிகவும் நிதானமாகத் தன்னை – தன்னுடைய தலைமைத்துவ ஆளுமையை நிலைப்படுத்தியவர்@ நிரூபித்தவர்.

அதேவேளை, ஒரு தலைமைத்துவம் என்பது, தனியே அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் மட்டும் தங்கியிருப்பதில்லை.

அதற்கப்பால், அது மற்றவர்களுக்கு இடமளிப்பதிலும், வரலாற்றை முன்னகர்த்தும் செயல்களை ஆற்றுவதிலும் தன்னுடைய மதிப்பார்ந்த நிலைகளை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

மேலும், எதற்காக ஒரு தலைமைத்துவம் இருக்கிறது, ஒரு தலைமைத்துவத்தின் செயல்விளைவுகள் எப்படி அமைய வேண்டும் என்பதிலும் தெளிவுடையதாக இருக்க வேண்டும். இதெல்லாம் இலங்கையின் இன்றைய அரசியற் தலைமைத்துவங்களிடையே இருக்கின்றனவா என்றால்.... முயலுக்குக் கொம்பிருந்தாலும் இவர்களுக்கு அந்தப் பண்பில்லை என்பதே நிலைமை.

ஆகவே, இலங்கையின் நீண்டகால ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியுமாகிய ஐ.தே.க தன்னுடைய கால்களை நிரந்தரப் பலவீனங்களில் இருந்து காப்பாற்குவதற்காக மிகக் கடுமையாகப் பாடுபட வேண்டியுள்ளது. (இந்த நிலைமைதான் ஏனைய கட்சிகளுக்கும் உள்ளது).

வலுவான எதிர்க்கட்சிகளே இல்லாத ஒரு நிலை இலங்கையின் அரசியலாகக்கூடிய அபாயமே உருவாகி வருகிறது. அதைக்குறித்த எச்சரிக்கையே இந்தப்பத்தியாகும்.
(நன்றி - வீரகேசரி)

உபாயமும் அதிகாரமும் - 01

Friday 16 December 2011

இலங்கையின் சமகால அரசியல் விவகாரங்களைக் குறித்து ஆய்வாளரான நண்பர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது ‘உபாயமும் அதிகாரமும்’ என்பதைப் பற்றிச் சொன்னார். அதிலும் இலங்கையின் தமிழ் பேசும் மக்களின் அரசியற் போராட்டங்களில் ‘உபாயமில்லாத அரசியலே’ நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நண்பர் குறிப்பிட்டார்.
நண்பரின் கூற்றுப் பெருமளவுக்கும் நிராகரிக்க முடியாதது.

உபாயங்கள் பல வகைப்பட்டன. அரசியற் செயற்பாடுகளிலும் உபாயங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. ஆயுதப் போராட்டத்திலும் போர் உபாயங்கள் கையாளப்படுகின்றன. தவிர, சமூக நடவடிக்கைகள் என்று சொல்லப்படும் வணிகம் தொடக்கம் சகலவற்றிலும் உபாயங்களின் பிரயோகமுண்டு.

இவற்றில் முக்கியமானது போருபாயங்களும் அரசியல் உபாயங்களுமாகும். ஆனால், அரசியலுக்காகவே போர் என்பதால் அரசியல் உபாயங்களே எல்லாவற்றுக்கும் மையமாக அமைகின்றன. இதில் தந்திரோபாயம், மூலோபாயம் என இருவகைப்பட்ட பிரதான உபாயங்கள் உண்டு.

மூலோபயத்துக்குட்பட்டே தந்திரோபாயம் இயங்குகின்றது.
மூலோபாயத்தை வெற்றிகொள்ளவைப்பதற்காகவே தந்திரோபாயம் பிரயோகிக்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் தந்திரோபாயம் வெற்றிகரமாக அமைவதுபோலப் படலாம். ஆனால் அடிப்படையற்ற தந்திரோபாயத்தினால், இறுதியில் மூலோபாயம் தோற்றுப் போகும். இதற்குப் பல உதாரணங்கள் உண்டு. கியூப அனுபவங்களைப் பெற்றிருந்த சேகுவேரா பொலிவியாவில் தோற்றார். இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படலாம். ஆனால் பொலிவியாவில் சே நடத்திய அல்லது நடத்தவேண்டியேற்பட்ட அத்தனை தாக்குதல்களும் வெற்றிகரமானவையாக – எதிர்த்தரப்புக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தியவை.

ஆனால் இறுதியில்?


அவை மூலோபாயத்தை ஒழுங்கமைப்பதற்கு முன்னர் ஏற்பட்ட நெருக்கடிகளால், உருவாகிய தந்திரோபாயத்தின் விளைவுகள்.


அதேபோல தந்திரோபாயம் தோற்றுப் போவதைப் போல அமையும். ஆனால், மூலோபாயம் வெற்றியடைந்து விடும்.

இதற்குச் சீனவிடுதலைப் போராட்டம் சிறந்த உதாரணமாகும். மாவோவின் விடுதலைப் படை பின்வாங்கி நீண்டதூரம் சென்றது தந்திரோபாயமாகும். இது மூலோபயத்தின் பாற்பட்ட தந்திரோபாயம். பார்வைக்கு பின்வாங்கிச் செல்வதைப்போல இருக்கும். ஆனால், இறுதியில் எதிரியைப் பலவீனப்படுத்தி தோற்கடிப்பதாக அமைந்த தந்திரோபாயம். மாவோ அதில் வெற்றியும் பெற்றார்.

உபாயத்தில் முக்கியமானது,  எதிரிகளைப் பலவீனப்படுத்துவதும் அவர்களைக் கையாள்வதுமாகும். எதிரிகளை அழிப்பது என்பது இரண்டாம் பட்சமானது. ஈழத்தமிழர்களின் அரசியல் முன்னெடுப்பாளர்கள் எப்போதும் எதிரிகளை அழிப்பதிலேயே குறியாக இருக்கின்றனர். அவர்களை வெற்றிகொள்வதையும் விட எதிர்ப்பது, அழிப்பது என்ற வகையிலேயே தமிழர்களின் சிந்தனை உள்ளது.

உலகத்தில் எதிரிகளை அழிப்பது என்பது எப்போதும் எதிர் நிலைகளையே உருவாக்கும். இது இறுதியில் எதிரிகளை அணிகளாக்குவதிலேயே போய் முடிகிறது. பதிலாக எதிரிகளைப் பலவீனப்படுத்துவது என்பது அவர்களைத் தனிமைப்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவதாகவும் இறுதியில் தோற்கடிப்பதாகவும் அமைகிறது.

எதிரியை அழிக்க முற்படும்போது அந்த எதிரி வேறு வடிவமெடுப்பதை நாம் ஈழப்போராட்டத்திலேயே பார்க்கலாம். புலிகள் அழித்த இயக்கங்கள் இன்றும் இருக்கின்றன. ஆனால், வெவ்வேறு வடிவங்களில். அதேவேளை அவை புலிகளுக்கு விரோதமான போக்கையே கடைப்பிடித்தன. அத்துடன் அவை இறுதியில் புலிகளுக்கு எதிரான தரப்புகளுடன் போய்ச் சேர்ந்தும் கொண்டன. இதனால், புலிகளின் எதிர்த்தரப்பே பலமாகியது.

இதைப்போல விடுதலைப் புலிகளையும் தமிழ் அரசியலையும் இலங்கை அரசாங்கம் அழிக்க முற்பட்டது. ஆனால், மிஞ்சிய புலிகள் வேறு வடிவங்களில் பல்வேறு இடங்களிலும் செயற்படுகிறார்கள். அவ்வாறே தமிழ் அரசியலின் செயற்பாட்டுக் களமும் வெவ்வேறு பிராந்தியங்களில் வேர்விட்டுள்ளது. வெவ்வேறு வடிவங்களில்.

இவையெல்லாம் உபாயமற்ற குறைபாடுகளின் விளைவுகளேயாகும்.
மிகவும் வீரஞ்செறிந்த ஒரு போராட்டம் ஈழத்தமிழர்களால் நடத்தப்பட்டுள்ளது. ஒரு சிறிய சமூகமான ஈழத்தமிழ்ச் சமூகம் தன் சக்திக்கு அப்பாலான உச்ச அர்ப்பணிப்புகளைச் செய்திருக்கிறது. இந்தப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும் இளம் பெண்களும் தங்கள் இளமைக்காலத்தைப் பலியிட்டிருக்கிறார்கள். இதில் பல்வேறு போக்குகளையிட்ட இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் கவனத்திற் கொள்ள வேணும்.

இதைவிட ஐம்பது ஆண்டுகளாக பல்வேறு வடிவங்களிலும் தமிழர்கள் தங்கள் அரசியல் உரிமைகளுக்காகப் போராடியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் பெற்றுக் கொண்டதை விட இழந்ததே அதிகமாகும்.

இந்திய வம்சாவழித் தமிழர்கள் என்று சொல்லப்பட்ட மலையகத் தமிழர்கள் முன்னர் இருப்பதற்கு இடமின்றியும் சொந்த நிலமின்றியும் இருந்ததைப் போல, வடக்குக் கிழக்கைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இன்று காணியும் வீடுமின்றி அகதிகளாகியிருக்கிறார்கள்.

இவர்கள் முன்னர் தங்களுக்கென்ற இருப்பிடங்களைக் கொண்டிருந்தவர்கள். வீடும் வளவும் தங்களுக்கென்ற சுயதொழிலுமாக வாழ்ந்தவர்கள். தங்களின் உழைப்பினாலும் வாழ்க்கை முறைமையினாலும் ஒரு தனிப் பண்பாட்டையுடைய சமூகமாக அடையாளம் பெற்றவர்கள்.

ஆனால், இன்று சொந்த ஊர்களுக்குத் திரும்பவே முடியாமல், தாங்கள் பிறந்த வளர்ந்த மண்ணைப் பார்க்கவே முடியாமல், அகதி என்ற நிலையிலும் ‘சிதறிகள்’ என்றவாறாகவும் இருக்கிறார்கள்.

‘நாங்க லயங்களில் இருந்து வீடுகளுக்கு மாறிக் கொண்டிருக்கிறம். ஆனால், நீங்க வீடுகளில் இருந்து தறப்பாள் கூடாரங்களுக்கு வந்திருக்கிறீங்க’ என்று கிளிநொச்சிக்கு வந்திருந்த மலையத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவர், இன்றைய கிளிநொச்சியைப் பார்த்து விட்டுச் சொன்னதை இங்கே குறிப்பிடலாம். இதில் சௌ. தொண்டமானின் உபாயத்தின் பெறுபேற்றையும் தமிழ்த்தலைமைகளின் உபாயப் பெறுபேற்றையும் நாம் கவனிக்க வேணும்.

ஆகவே இந்த நிலைக்குப் பின்தங்கியிருக்கும் ஈழத்தமிழ்ச் சமூகம், தன்னுடைய அரசியலில் எந்த வகையான உபாயங்களைக் கையாண்டிருக்கிறது? இவ்வளவு காலப் போராட்டங்களுக்குப் பின்னர், இவ்வளவு இழப்புகளுக்குப் பிறகு இப்போது எத்தகைய உபாயங்களைக் கையாள்கிறது? என்பது இன்றுள்ள முக்கியமான கேள்விகளாகும்.

அரசியலில் அதிகாரத்தைப் பெறுவதே முதன்மையான செயற்பாடாகக் கொள்ளப்படுகிறது. எத்தகையை கோட்பாடும் எந்த வகையான நிலைப்பாடும் அதிகாரத்தைப் பெற்றாலே அதை நடைமுறைப்படுத்தக் கூடியதாக இருக்கும். எனவே இந்த அதிகாரத்தைப் பெறுவதற்காகவே அனைத்துவகையான அரசியல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆயுதப் போராட்டமும் சரி, ஜனநாயக வழிமுறையிலான போராட்டமும் சரி அதிகாரத்தைப் பெறுவதையே குறியாகக் கொண்டிருக்கின்றன. அதிகாரத்தைப் பெறுவதன்மூலமாகவே ஆட்சியை நடாத்த முடியும். நல்விளைவுகளை உருவாக்க இயலும்.

ஆனால், இந்த அதிகாரத்தைப் பெறுவதில்தான் பிரச்சினையே இருக்கிறது. எந்த அரசியல் நடவடிக்கையிலும் எத்தகைய அரசியற் போராட்டங்களிலும் அதிகாரத்தைப் பெறுவதில் முக்கிய பங்காற்றுவது உபாயங்களேயாகும்.

அரசியல் என்பதே உபாயங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு செயற்பாடாகும். உபாயங்களற்ற கோட்பாடுகள் வெற்றிபெறுவது மிகக் கடினமானது. உண்மையில் அதிகாரத்தை வலுப்படுத்துவதே உபாயங்கள்தான். ஆட்சியை நீடிப்பதிலும் அதிகாரத்தைத் தக்க வைப்பதிலும் உபாயங்களுக்கே முக்கிய பங்குண்டு. உபாயங்களில்லாத அதிகாரம் எந்தச் சந்தர்ப்பத்திலும் நொருங்குண்டு சிதைந்து விடும்;.

தமிழர்களுடைய போராட்டங்களில் யாராவது உபாயங்களைக் காட்டவே முடிந்தால் அது அதிசயந்தான். தமிழர்கள் எப்பொழுதும் உபாயங்களற்ற அரசியலையே முன்னெடுத்து வந்துள்ளனர். அவர்கள் அதிகப்பிரசங்கித்தனமான அரசியலையே தங்களுடையதாகக் கையாண்டு வந்துள்ளனர். அவர்கள் அதிகமாகப் பத்திரிகை அறிக்கைகளிலேயே தமது அரசியலை முன்னெடுத்துள்ளனர்.

எல்லாவற்றையும் பகிரங்கப்படுத்துவது என்பது வெற்றிகரமான அரசியல் வழிமுறையாக இருப்பதில்லை. “திருமணத்தைப் பகிரங்கமாக வைத்துக் கொள்ளலாம். சாந்தி முகூர்த்தத்தை அப்படி வைத்துக் கொள்ள முடியாது“ என்பார்கள். இது அரசியலுக்கும் பொருந்தும்.

இராசதந்திர வழிமுறையில் பரகசியத்துக்கும் பகிரங்கத்துக்கும் அதிக இடமில்லை. இதைச் சீன, இந்திய, அரேபிய, ஐரோப்பிய அரசியற் பண்பாட்டில் நாம் காணமுடியும்.

ஆனால், தமிழ் மிதவாதத்தலைமைகள் எப்போதும் எதிர்த்தரப்புக்கு அதிக சாத்தியங்களை வழங்கும் அரசியலையே கையாண்டு வந்துள்ளன. பேச்சுவார்த்தை மேசைக்குப் போவதற்கு முன்பே தாம் என்ன பேசப் போகிறோம், எதைக் கேட்கப் போகிறோம், அதை எப்படிக் கேட்கப் போகிறோம், தமது திட்டங்கள் என்ன என்பதையெல்லாம் இவர்கள் முன்னரே பகிரங்கப்படுத்தி விடுவார்கள். சிறுபிள்ளைத்தனமான அரசியல் நடவடிக்கை இது.

இதனால், எதிர்த்தரப்பு இவர்களுக்குப் பதிலளிக்கக் கூடியவாறும் இவர்களை இலகுவாகத் தோற்கடிக்கக் கூடியமாதிரியும் முற்கூட்டியே தன்னைத் தயார்ப்படுத்தி விடுகிறது.

உண்மையில் ‘பேச்சுவார்த்தைக்கான மேசை’ என்பது ஒரு போர்க்களம்தான். அது ஒரு சதுரங்க விளையாட்டுக் களம். முற்றுமுழுதாக தந்திரோபாயங்கள் நிறைந்த ஒரு களம். எதிர்த்தரப்பைப் புத்திசாதுரியத்தால் தோற்கடிக்கும் களம். இன்னும் சரியாகச் சொன்னால், எதிர்த்தரப்பை வெல்லும் களம்.

ஆனால், ஈழத்தமிழரின் பேச்சுக் களம் என்பது எதிர்த்தரப்புக்கு வெற்றிவாய்ப்புகளை இலகுவாக உருவாக்கிக் கொடுக்கும் களமாகவே இருந்துள்ளது. அதிலும் சமநிலைத் தரப்புகளாக தமிழர்கள் ஒருபோதும் பேச்சுவார்த்தைக் களத்தில் இருக்கவாய்ப்பில்லை.

ஏனெனில் அதிகாரத்தை வைத்திருப்பது எப்போதுமே சிங்களத்தரப்பாகவே இருக்கிறது. பெரும்பான்மைத் தரப்பாகவும் சிங்களத் தரப்பே உள்ளது. அதாவது ஒடுக்கும் தரப்பிடமிருந்து ஒடுக்கப்படும் தரப்பு தனக்கான உரிமைகளையும் அதிகாரத்தையும் பெறுவதற்கான பேச்சுமேசையே இலங்கையின் பேச்சுவார்த்தைக் களமாகும்.

இந்தக் களத்தில் சமனிலைத் தரப்புகளாக தமிழ்பேசும்மக்களின் தரப்பு இருக்க வாய்ப்பில்லை. சமனிலையை எட்டுவதற்காகவே பேச்சு நடத்தப்படுகிறது. சமனிலை ஏற்கனவே இருக்குமானால், பின்னர் எதற்காகப் பேச்சுக்களை நடத்தவேண்டும்? எதற்காகப் பேச்சுமேசைக்குப் போகவேண்டும்?
ஆனால், இந்தச் சமநிலை குறித்துத் தவறான புரிதல்களே தமிழ் பேசும் மக்களின் தரப்பில் உள்ளது. பலத்துடன் பேச்சுமேசைக்குச் செல்வது என்பது உண்மையில் விவேகத்துடன் செல்வதையே – விவேகத்துடன் செயற்படுவதையே குறிக்கும். அதேவேளை பேச்சுக்குரிய சூழலை உருவாக்குவது – பேசவேண்டியதொரு நிர்ப்பந்தத்தை உருவாக்குவதையே நாம் பலத்துடன் செல்வது என்கிறோம்.

ஆனால், இதுவும் ஒரு உபாயந்தான். இதைப் பற்றிப் பின்னர் இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

ஆகவே, பேச்சுமேசையைத் தவறாகக் கையாளும் போக்கே இப்போதும் தமிழர்களின் அரசியலில் தொடர்கிறது. இதுதான் சோகமான கதை.

ஆயுதப் போராளிகளைப் பொறுத்தவரை இதற்குச் சற்று விலக்காக நடந்து கொண்டிருந்தாலும் அவர்களும் தமது நிலைப்பாடுகளை அறிவிப்பதிலும் அவற்றைக் கையாளும் முறைகளிலும் தந்திரோபாயங்களைக் கையாளத் தவறிவிட்டனர்.

புலிகள் நீண்டகால அரசியல் செயற்பாட்டில் முதன்மைப் பட்டிருந்தவேளை ஒப்பீட்டளவில் குறிப்பிடத்தக்க உபாயங்களைப் பின்பற்றியிருந்தனர். குறிப்பாக இந்திய இராணுவத்துடன் தொடங்கப்பட்ட போரை முடிவுக்குக் கொண்டு வந்ததில் முக்கிய பங்காற்றியவர் திரு. அன்ரன் பாலசிங்கம். இதுபோல வேறு சில சந்தர்ப்பங்களிலும் திரு. அன்ரன் பாலசிங்கம் குறிப்பிடத்தக்க உபாயங்களைக் கையாண்டு காரியங்களைச் சாதித்திருக்கிறார்.

இதற்குக் காரணம் அன்ரன் பாலசிங்கத்திடம் இது குறித்த புரிதல் இருந்தது. இதனை அவர் 1980 களின் முற்பகுதியில் எழுதிய ‘அரச பயங்கரவாதமும் ஆயுதப் போராட்டமும்’ என்ற புத்தகத்தில் ‘தூலமான நிலைமைகளில் இருந்து தூலமான ஆய்வு’ எனக் குறிப்பிடுவதிலிருந்து பார்க்கலாம். ஆனால், துரதிருஸ்ரவசமாக இந்த அணுகுமுறை ஒரு போதும் வெற்றிகரமாகத் தமிழ்ச் சூழலில் பிரயோகிக்கப்படவில்லை.

மேலும் ஈழ அரசியலில் உபாயங்களைக் குறித்து சிந்தித்தவர்களில் இ.இரத்தினசபாபதி இன்னொருவராவர். ஆனால், இரத்தினசபாபதி அடுத்த கட்டத்துக்கு நகரமுடியாமற் போய்விட்டது. அதேவேளை, அவருடைய அரசியற் செயற்பாட்டில் தொடர்ச்சியும் இல்லாமற்போய்விட்டது.

மற்றும்படி, தமிழ் மேட்டுக்குடியினரின் விருப்புகளே, தமிழ் மக்களின் அரசியல் விருப்புகளாக மாற்றப்பட்டன. இதை நாம் சேர். பொன். இராமநாதன் தொடக்கம் இன்றைய சம்மந்தன் வரையில் பார்க்கலாம். இவர்களுடைய அரசியல் வழிமுறை என்பது மாற்றங்களின்றிய நேர்கோட்டு அணுகுமுறையாகும். நேர்கோட்டு அணுகுமுறை என்பது எதிர்த்தரப்பின் தாக்குதலுக்கும் தடைக்கும் இலகுவானது.

இந்தக் குறைபாடுகள்தான் இந்த உலகத்தில் தமிழர்கள் தமக்கான ஆதரவுத்தளத்தைப் பெறுவதில் பெரும் பின்னடைவுகளை ஏற்படுத்தியது. இதற்குச் சிறந்த உதாரணமாக தமிழர்களின் அரசியற் போராட்டத்தில், இதுவரையில் அரசியல் உபாயங்களில் பேர் சொல்லக் கூடிய ஒருவரையாவது காட்டமுடிந்தால் அது ஆச்சரியமே.

அப்படியானால் இது எதைக் காட்டுகிறது? ஒரு நீடித்த அரசியற் போராட்டத்தில் நிச்சயமாக அரசியற் கொள்கை வகுப்பாளர்களும் அரசியல் இராசதந்திரிகளும் உருவாகியிருக்க வேணும். ஆனால், நிலைமையோ பூஜ்ஜியமாகவே இருக்கிறது.

இந்த நிலையில்தான் ஈழத்தமிழர்களின் அரசியற் சாணக்கியத்தின் பலவீனம்  உள்ளது. என்பதாலேயே ஈழத்தமிழர்களின் அரசியல் என்பது கேலிக்குரியதாக கணிக்கப்படுகிறது. மாரிகாலத் தவளைகளின் கத்தலை யாரும் பொருட்படுத்தாததைப் போல இந்தப் போராட்டக் குரல்களை யாரும் கவனத்திற் கொள்வதில்லை.

இதேவேளை சிங்களத் தரப்பில் உபாயங்களே பிரதான அரசியல் வழிமுறையாக கையாளப்படுகின்றன. உள்நாட்டு நெருக்கடிகளாலும் வெளி அழுத்தங்களாலும் இலங்கை அரசு பல சந்தர்ப்பங்களில் சிக்கித் திணறியிருக்கிறது. ஆனால், அதையெல்லாம் சிங்களத்தரப்பின் உபாயங்களே முறியடித்திருக்கின்றன.

குறிப்பாக 1987 இல் இந்திய நெருக்கடி இலங்கையைப் பெரும் சிக்கலுக்குரியதாக்கியது. ஆனால், பின்னர் புலிகளை முறியடிக்கும் பெரும் போருக்கு இந்தியா இலங்கைக்கு உதவியது. அந்த அளவுக்கு இலங்கையின் - உபாயம் - இராசதந்திரம் பெறுமதி மிக்கது.

இதைப்போல புலிகளுக்கு எதிரான தடைக்காகவும் போருக்காகவும் உலகத்தின் பெரும்பாலான சக்தி மிக்க நாடுகளை எல்லாம் இலங்கை வென்றெடுத்திருந்தது. இதை, இந்த வென்றெடுப்பை அது பரகசியமாகச் செய்யவில்லை. காதும் காதும் வைத்ததைத் போல மிக இரகசியமாகச் செய்து தன்னுடைய காரியத்தைச் சாதித்துக் கொண்டது.

இலங்கை மட்டுமல்ல, அனைத்து நாடுகளும் உபாயங்களையே தமது அரசியல் வழிமுறையில் கையாள்கின்றன. இல்லையெனில் உலகத்தில் பெரிய நாடுகளே எப்போதும் ஆதிக்கத்துடன் இருக்க முடியும். சிறிய நாடுகளின் கதை அதோகதியாவே மாறியிருக்க வேணும்.

ஆனால், சிறிய நாடுகளே உலகத்தில் அதிகமாக இருக்கின்றன. இந்தச் சிறிய நாடுகள் பெரிய நாடுகளுக்குச் சமதையாகவும் பெரிய நாடுகளிடமிருந்து பாதுகாப்பாகவும் இருக்கின்றன என்றால் அது எப்படிச் சாத்தியமாகிறது? இந்தச் சமனிலையைக் கொடுப்பது உபாயங்களே!

இதைப்போல பெரும்பான்மைச் சமூகங்களிடமிருந்து சிறுபான்மைச் சமூகங்கள் எப்படிப் பாதுகாப்பாக இருக்கின்றன என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

பெரிய பாறாங்கல்லை சிறு நெம்பு கோலைக் கொண்டு அசைத்து விடுகிறோம். இது எப்படி நடக்கிறது? இங்கே பயன்படுத்தப்படும் நெம்பு கோல் என்பது ஒரு உபாயமே.

பல சந்தர்ப்பங்களிலும் நாம் கோலியாத்தின் கதையைச் சொல்லிக் கொள்கிறோம். ஆனால், ஒரு சிறுவன் எப்படி பென்னாம் பெரிய வீரனை – தாவீதை - வென்றான். அவன் கைக்கொண்ட உபாயமே அவனுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.

ஆகவே உபாயங்களில்லாத எந்த விசயமும் வெற்றிகரமாக அமைவதில்லை. மட்டுமல்ல, உபாயங்களைக் கைக்கொண்டால், வெற்றியும் இலகுவாகக் கிடைத்து விடும். சிரமங்களும் அதிகமாக இருக்கப்போவதில்லை. தமிழர்கள் தங்கள் பாரம்பரிய அரசியல் வழிமுறையைக் கைவிட்டுப் புதிய உபாயங்கள் நிறைந்த அரசியல் வழிமுறைக்குச் செல்ல வேண்டும்.

இந்த உலகத்தில் வாய்ப்புகள் தாராளமாகக் கிடக்கின்றன. அந்த வாய்ப்புகளைத் தேர்ந்தெடுப்பதிலும் அவற்றைப் பயன்படுத்துவதிலுமே எங்களின் பெறுமதியும் எங்களுக்கான எதிர்காலமும் தங்கியிருக்கிறது.

00

test

Wednesday 26 October 2011

 

2009 ·. by TNB