கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

கூரை ஏறிக் கோழி பிடிக்க மாட்டாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்.

Saturday 28 April 2012













அரசியலில் எப்பொழுதும் நகைச்சுவையான விசயங்களுக்குக் குறையிருப்பதில்லை. இதற்கென்று ஆட்களுமிருப்பார்கள்.

இலங்கையில் இப்பொழுது இந்தப் பாத்திரத்தை வகிப்பவர் அமைச்சர் மேர்வின்.

மேர்வினைப் பற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாடு எப்படியோ தெரியாது, ஆனால், சனங்களைப் பொறுத்தவரையில் அவர் ஒரு கோமாளி. அதாவது சிரிப்புக்கிடமான மனிதர். (சிரிக்க வைக்கும் மனிதர் அல்ல).

ஆனால், நாங்கள் இங்கே பார்க்கப்போவது மேர்வினைப் பற்றி அல்ல.

நகைச்சுவையான விசயமொன்றை. வன்னி யுத்தத்தின் போது கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

கொத்துக்குண்டுகளின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் சார்பாக கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைக்குப் பொறுப்பான இலங்கைக்கான பிரதிநிதி அலன் பொஸ்ரர் சொல்லியிருக்கிறார்.

கொத்துக்குண்டுகளை தாம் பயன்படுத்தவில்லை என்று இராணுவம் சொல்லியிருக்கிறது. கொத்துக்குண்டுகள் எப்படிப் பாதிப்புகளை உண்டுபண்ணின என்று சனங்களுக்கு நன்றாகத் தெரியும். இப்படியே வரலாற்றில் நகை முரண்கள் தொடர்கின்றன.

இதைப் பற்றிக்கூட இங்கே நாங்கள் பேசவில்லை. இதற்கெல்லாம் அப்பால் தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. ரீ.ஆர். பாலுவும் திரு. தாமரைச்செல்வனும் அதன் தலைவர் திரு. மு. கருணாநிதியும் தெரிவித்து வரும் விசயங்களைப் பற்றியே பார்க்கிறோம். சிரிப்பதற்குச் சங்கதிகள் வேண்டுமல்லவா?

கடந்த புதன்கிழமை (25.04.2012) இந்திய நாடாளுமன்றத்தில் பாலு சொன்னார் - ‘தமிழீத் தனிநாட்டை உருவாக்குவதற்கு ஐ.நா. வை இந்தியா இணங்கச் செய்ய வேண்டும்’ என்று.

தாமரைச்செல்வன் சொன்னார் - ‘பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்காக இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட வீடுகள் பல சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாத் தகவல்கள் கிடைக்கின்றன’ என.

திரு. மு. கருணாநிதி இன்னொரு சந்தர்ப்பத்தில் சொல்லியுள்ளார் ‘உயிரைத் துறப்பதற்கு முன்னர் ஈழம் மலர்வதைக் காண்பேன்’ என்று.

இதற்கு மேல் நாம் அதிகம் விளக்கத் தேவையில்லை. உங்களுக்குச் சிரிப்பு வந்திருக்கும். அல்லது இதெல்லாம் என்ன பெரிய விசயங்கள் என்று நீங்கள் தூக்கிப் போட்டுவிட்டு உங்களுடைய வேலைகளைப் பார்க்கப்போய்விடுவீர்கள்.

ஆனால், இந்தப் பேச்சையெல்லாம் யாழ்ப்பாணத்துப் பத்திரிகைகளும் பெரும்பாலான ஈழத்தமிழ் இணையங்களும் பிரதான செய்திகளாக்கிப் பிரசுரித்து வருகின்றன. இதற்குத் தனியாக ஆசிரிய தலையங்கள் கூட எழுதப்படுகின்றன. அதிலும் யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் பத்திரிகை ஒன்று ரீ.ஆர்.பாலுவின் செய்தியை தலைப்புச் செய்தியாக்கி அவரைக் கௌரவித்தேயிருக்கிறது. கருணாநிதியின் செய்திக்குக் கட்டம் கட்டப்பட்டு, கவனக் குவிப்பைச் செய்திருக்கிறது.

ஆகவே இதையெல்லாம் எளிதில் நீங்கள் கருதி விட முடியாது.
நகைச்சுவையான விசயங்களுக்கு இத்தகைய முக்கியத்துவத்தை வழங்கும் இந்த ஊடகக் கலாச்சாரம் வளர்ந்தால் அரசியல் ரீதியாகப் பின்னடைவில் இருக்கும் ஈழத்தமிழர்களுக்குச் சற்று றிலாக்ஸாக இருக்கும்.

தமிழக அரசியல்வாதிகள் அனைவரும் ஈழத்தமிழரின் விசயத்தில் அல்லது இலங்கை இனப்பிரச்சினையின் விசயத்தில் இந்த மாதிரி நகைச்சுவையாகவே நடந்து கொள்வதுண்டு.

இதில் ஈழ ஆதரவுச் சக்திகள், எதிர்ப்புச் சக்திகள், ஆட்சி அதிகாரத்திலிருப்போர், ஆட்சியை விட்டு இறங்கியோர் என்ற பேதங்களெல்லாம் இருப்பதில்லை. சீமான், வை.கோ, நெடுமாறன், சுப்பிரமணியம் சுவாமி, திருமாவளவன், ஜெயலலிதா, மு.கருணாநிதி, சோ என்று யாரும் விலக்கில்லை. எல்லோரும் ஒரே மாதிரியே கதைக்கிறார்கள். அல்லது ஒரே விதமாகவே நடந்து கொள்கிறார்கள். உண்மைக்கும் யதார்த்தத்துக்கும் வெகு தொலைவிலேயே இவர்கள் இருக்கிறார்கள்.

இலங்கையின் இனப் பிரச்சினையைத் தீர்க்கும் உபாயங்களைக் குறித்து இலங்கையர்களுக்கே இன்னும் தெளிவில்லை. அதிலும் ஈழத்தமிழர்களே இந்த விசயத்தில் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் தடக்குப் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆளுக்கொரு கட்சி, கட்சிக்கொரு தலைவர் என்றெல்லாம் இருந்துங்கூட ஒரு வழிமுறையைக் கண்டு பிடிப்பதற்கு முடியாமலே இருக்கின்றனர். இந்த நிலையில் வெளியே – பிரச்சினைக்கும் அதனுடைய வலிக்கும் அப்பால் நின்று கொண்டே மருந்தைக் கண்டு பிடிக்க முண்டியடிக்கும் இந்த மருத்துவர்களை என்னவென்பது?
முதலில் ஒரு விசயத்தைப் பார்ப்போம்.

தமிழகத்தில் ஏராளம் பிரச்சினைகள் இருக்கின்றன. கூடங்குளம் அணுமின்னிலையம் பற்றிய விவகாரம். காவேரி நீர்ப்பிரச்சினை, முல்லைப்பெரியாறுப் பிரச்சினை, சீரான மின் வினியோகம் இன்மை, வேலைவாய்ப்புப் பிரச்சினைகள், ஊழல், என ஆயிரம் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள்.

இதைவிட மீனவர் விவகாரம் என்ற தலையாய பிரச்சினை வேறு இருக்கிறது. இதையெல்லாம் இவர்கள் தீர்ப்பதற்கு முயற்சிப்பதில்லை. இவற்றை இவர்கள் தீர்க்க வேண்டும். இவர்கள்தான் இவற்றுக்குத் தீர்வு காணவும் வேணும்.

ஆனால், இதையெல்லாம் விட்டுவிட்டு இலங்கையின் இனப்பிரச்சினைக்கு கடந்த முப்பது ஆண்டுகளாக மாறிமாறி சீசனுக்குத் தக்கமாதிரி ‘விளம்பர வைத்தியம்’ பார்க்க முயற்சிக்கிறார்கள். தங்களின் ஆட்சிப் பரப்பிலுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக சனங்களின் கவனத்தைத் திசை திருப்பும் காரியமாகவும் இதைத் தமிழகத்து அரசியற் தலைமைகள் ஈழப் பிரச்சினையைக் கையாள்கின்றன.

இது ஒரு புறமிருக்க, இப்பொழுது ‘தனித்தமிழ் ஈழத்துக்காக’ ஆதரவைத் தேடும் தி.மு.க. அல்லது அதனுடைய தலைவர்கள் தங்களுடைய ஆட்சிக்காலத்தில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

தி.மு.க. ஆட்சியிலிருந்தபோதே – தி.மு.க. பங்கேற்ற கூட்டரசு டில்லியில் ஆட்சியிலிருந்தபோதே ஈழப்போரின் இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கானவர்கள் பலியானார்கள். அப்பொழுது இதற்கெதிராக இந்தியா தலையிட்டு இந்தப் பலியைத் தடுப்பதற்கு தி.மு.கவினால் முடியாமற் போய்விட்டது. அல்லது இந்தியாவைக் கொண்டு ஐ.நா. மூலம் இந்தப் பலியை தடுக்க அதனால் முடியவில்லை.

அந்த நாட்களில் திரு. மு. கருணாநிதியும் அவருடைய கட்சியும் அவருடைய குடும்பத்தினரும் ஆடிய நாடகங்களை எல்லாம் இந்த உலகமே அறியும். உண்ணாவிரதம், மனித சங்கிலிப்போராட்டம் என்ற செல்லாக்காசு நடவடிக்கைகளை எல்லாம் கருணாநிதி அரங்கேற்றிக் கடைசியில் கோமாளியாகினார்.

இலங்கையின் நடந்த படுகொலைக்கெதிராக அவருடைய கட்சியைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கூட அன்று பதவியைத் துறக்கவில்லை. அப்போது அவருடைய செல்ல மகள் கனிமொழி கூட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

யுத்தம் முடிந்த பிறகு, இலங்கை அரசு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்தபோது அந்தக் குழுவில் இதே ரீ.ஆர்.பாலுவும் இதே கனிமொழியும் கூட வந்திருந்தார்கள். (அந்தக் குழுவில் திருமாவளவனும் வந்திருந்தார்).
வந்தவர்கள் யாழ்ப்பாணத்துக்கு, வவுனியாவில் இருந்த அகதிகளின் முகாம்களுக்கு எல்லாம் விஜயம் செய்திருந்தார்கள்.
வந்தவர்களிடம் கண்ணீர்மல்க, உருக்கமான வேண்டுகோள்களை ஈழத்தமிழர்கள் விடுத்தனர்.

எதற்காக?

உணர்வாலும் உறவினாலும் தொடர்புள்ளவர்கள் என்ற காரணத்திற்காகவே.
ஆனால், என்ன நடந்தது?

இதன் பிறகு, தி.மு.க. நடந்து கொண்ட முறைகள் தொடர்பாக திரு. மு. கருணாநிதியிடம் மதிப்பும் மரியாதையும் தொடர்பும் உள்ள ஈழத்தமிழர் ஒருவர் - நீண்டகாலமாகவே தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் அவர், அந்த நாட்களில் தன்னுடைய அதிருப்தி கலந்த கவலைகளை வெளியிட்டபோது கருணாநிதி அவருக்குச் சொன்னாராம், ‘ஈழத்தில் படுகொலை நடந்தபோது அங்கே இருந்த தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் அரசியற் தலைவர்களும் ஏன் பதவிகளைத் துறக்கவில்லை? நீங்கள் அதனைப் பற்றிக் கேட்டுவிட்டு பிறகு என்னிடம் இதைப் பற்றிக் கேளுங்கள்’ என்று.

ஆகவே, ஈழத்தமிழர் சிந்திய கண்ணீரையும் செந்நீரையும் அவர்களுடைய உருக்கமான குரல்களையும் அரசியல் ஆதாயமாக்கியதே தி.மு.க செய்த வேலை. இந்த வேலையைத்தான் தமிழகத்தின் பிற தரப்பினரும் செய்கிறார்கள். இன்று ஜெயலலிதா செய்வதும். பத்திரிகைகள் செய்வதும்.

மனச்சாட்சிக்கும் வெட்கத்துக்கும் அப்பால் இந்தக் காரியங்களை அவர்கள் செய்கின்றனர். இதுதான் இங்கே கவனத்திற்குரியது@ பெரும்பாலான ஈழத்தமிழர்களின் வேதனைக்குரியது.

ஈழத்தமிழர்களுடைய துயரங்களைத் துடைப்பதற்கும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதற்கும் இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் தமிழக அரசும் அங்குள்ள கட்சிகளும் தலைவர்களும் தொண்டர்களும் விசுவாசமாகவும் புத்திபூர்வமாகவும் இயங்கினால் அதனை முழுமனதோடு வரவேற்பதில் யாருக்கும் எந்தத் தயக்கமும் இல்லை. கேள்விகளும் இல்லை.
ஆனால், இவர்கள் எல்லாம் இலங்கை அரசின் இனவாத அணுகுமுறைக்கு மேலும் உதவுகிறார்கள் என்பதே இங்கே கவனிக்க வேண்டியது.

தமிழகத் தலைவர்களின் வீராவேச முழக்கங்களையெல்லாம் சிங்கள இனவாதத் தலைவர்களும் ஊடகங்களும் பெரு மகிழ்;ச்சியோடும் மனம் நிறைந்த புன்னகையோடும் வரவேற்கிறார்கள்.

தமிழகத்தில் வீர முழக்கங்கள் நிகழ நிகழ அது சிங்கள இனவாதத்தை மேலும் தீவிரப்படுத்தி வளர்ப்பதற்கான உரமாகவே மாறுகிறது. சிங்கள மக்களை இனவாத மயப்படுத்துவதற்கு – ‘சிங்கள மக்களுக்கு எதிரான தமிழ்ச் சக்திகளின் செயற்பாடுகளின் அபாய நடவடிக்கைகள்’ எனச் சிங்கள இனவாதச் சக்திகள் ஆதாரப்படுத்துவதற்கு இவை தாராளமாக உதவுகின்றன.

ஏனெனில் தமிழகத்தின் படையெடுப்புகளால் 22 தடவைகள் சிங்கள மக்கள் பேரழிவுகளைச் சந்தித்தனர் என்று வரலாற்றுச் சான்றுகள் சொல்கின்றன. அதாவது, ஈழத்தமிழர்கள் சந்தித்த ஒரு முள்ளிவாய்க்காலைப்போல சிங்களவர்கள் முன்னர் 22 முள்ளிவாய்க்கால்களைச் சந்தித்திருக்கின்றனர்.

எனவே இந்தப் பகையுணர்வை வளர்த்துக் கொள்வதற்கு, இந்த அச்ச நிலையைத் தொடர்ந்து பேணுவதற்கு தமிழக வீரர்களின் முழக்கங்கள் இன்றைய சிங்கள இனவாதிகளுக்குப் பெரும் வாய்ப்பைக் கொடுக்கின்றன.

தமிழகக் கட்சிகளின் வீர முழக்கங்கள் தமிழ் நாட்டு மக்களிடையே அவற்றுக்குத் தாராளமான ஆதரவைப் பெற்றுக் கொடுக்கலாம். அதைப்போல இலங்கையில் சிங்கள இனவாதக் கட்சிகளுக்கும் இனவாதத்தின் அடிப்படையில் செயற்படுவதற்கான தளத்தைத் தாராளமாக வழங்குகின்றன. இந்தச் செய்திகளைப் பிரசுரிக்கின்ற ஈழத்தமிழ் ஊடகங்களும் பிழைத்துக் கொண்டு விடுகின்றன.

ஆனால், ஈழத்தமிழர்களின் நிலையோ மிகமிக நெருக்கடிக்குள்ளாகிறது.
‘பூனைக்கு விளையாட்டு எலிக்குச் சீவன் போகிறது’ என்று சொல்வார்கள். ஏறக்குறைய அந்த நிலையில்தான் ஈழத்தமிழர்களுக்கான தமிழகத்தலைவர்களின் ஆதரவுக்குரல்கள்(?) இருக்கின்றன. மெய்யான அர்த்தத்தில் இந்தக் குரல்கள் எதிர்க்குரல்களே.

இவர்களைப் பொறுத்தவரையில் இலங்கையின் இனப்பிரச்சினை தீர்க்கப்படவே கூடாது. அது ஒரு சுவையான பண்டமாக – தமது அரசியற் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுவதற்கு அது எப்போதும் இருக்க வேண்டும்.

நாம் முன்னர் ஒரு பத்தியிற் குறிப்பிட்டதைப்போல ‘இரத்தத்திற் தோய்த்தெடுக்கப்படும் இறைச்சி’ யாக ஈழத்தமிழருடைய துயரங்களும் பிரச்சினைகளும் அவர்களுக்கு உள்ளது.

கருணாநிதி பல சினிமாக்களுக்கு வசனம் எழுதிப் பேர் எடுத்தவர். ‘பஞ்ச் டயலாக்’ மூலம் தொண்டர்களையும் அபிமானிகளையும் மயக்கி வைத்திருப்பவர். அதற்கெனவே ஒரு பாரம்பரியத்தை உருவாக்கி வெற்றி கண்டவர்.

ஆனால் அவர் பிறத்தியாரின் கண்ணீரில் சுவை காணக்கூடாது. இது அவருக்கு மட்டுமல்ல வரலாற்றுக்கு எதிராகச் சிந்திக்கும் அனைவருக்கும் பொதுவானது. பெருந்தக் கூடியது.

2 comments:

Anonymous said...

நட்புடன் கருணாகரனுக்கு...
அண்மைக்காலமாக இந்தியாவின் குறிப்பாக தமிழக அரசியல் தலைவர்கள் தொடர்பாக நீங்கள் எழுதி வருபவை மிகவும் முக்கியமானவை...
இதே நிலைப்பாட்டையே நானும் கொண்டிருக்கின்றேன்...
ஆனால் அவர்களுக்கு இது புரியாமா என்பது தான் தெரியவில்லை....
அவர்களுக்குத்தான் புரியாவிட்டாலும் நம் புலம் பெயர் தேசத்தது தேசியவாதிகளுக்காவது புரியுமா என்றால் அதுவும் கேள்விக்குறிதான்.....
இருந்தாலும் எழுத வேண்டியது நமது பொறுப்பு...
நன்றி....
நட்புடன்
மீராபாரதி

30 April 2012 at 09:30
Thakaththin oli said...

மிக்க நன்றி பாரதி...

2 May 2012 at 21:27

Post a Comment

 

2009 ·. by TNB