கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

கேள்விகளைச் சுமக்கும் பயணங்கள்

Monday 20 February 2012
















மக்களை மகிழ்ச்சிக் கடலில் பயணம் செய்ய வைப்பதற்காக ஒரு அமைச்சை உருவாக்கக் கூடிய சூழல், இலங்கை அரசாங்கத்தின் கட்டமைப்பில் எதிர்காலத்தில் உருவாகலாம் போலுள்ளது.

அப்படி நடக்காது என்று மட்டும் கூறி விடாதீர்கள். ஏனென்றால், இலங்கையின் அரசியல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத இரண்டு அமைச்சுகளை இந்த அரசாங்கம் ஏற்கனவே உருவாக்கியுள்ளது. ஒன்று, மீள்குடியேற்ற அமைச்சு. அடுத்தது, புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சு.

இந்த இரண்டு அமைச்சுகளும் போரின் பின்னரான சூழலுக்காக உருவாக்கப்பட்டவை. இவை அந்த அர்த்தத்தில் செயற்படுகின்றனவோ இல்லையோ அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளன என்பது உண்மைதானே.

ஆகவே, இதைப்போல மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க வைப்பதற்காக புதியதொரு அமைச்சை உருவாக்குவதற்காக அரசாங்கம் கருதினால் அதில் தப்பென்ன இருக்கிறது?

அந்த அளவுக்கு ‘எப்போதும் எங்கும்’ என ஏராளம் கொண்டாட்டங்கள், வெகு விமரிசையாக நடந்த வண்ணம் இருக்கின்றன.

போர் வெற்றிக் கொண்டாட்டங்கள், சுதந்திர தினக்கொண்டாட்டங்கள் இரண்டையும் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மிக விமரிசையாகக் கொண்டாடி வருகிறது. தற்போதுகூட அனுராதபுரத்தில் தேசத்தின் மகுடம் என்ற பெயரில் பெரும் கண்காட்சியொன்று நடந்து கொண்டிருக்கிறது. நாடே அனுராதபுரத்தில் திரண்டிருக்கிறது. இந்தப் பத்தியை எழுதிக்கொண்டிருக்கும்போது தேசத்தின் மகுடத்தைப் பார்ப்பதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து புறப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் மாணவர்கள்.

இதைவிட நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களை ஒட்டியதாக அது பல நிகழ்ச்சிகளை உருவாக்கி மிக விமரிசையாகவே கொண்டாடுகிறது. ஆடலும் பாடலும் அலங்கார விளக்குகளின் ஒளியுமாக நாடே உற்சாக ஒளிவெள்ளத்தில்தான் மிதக்கப்போகிறது போலும்.

போரின் களைப்பிலிருந்து மீண்டுள்ள நாட்டுக்கு இந்த மாதிரியான உற்சாகமும் மகிழ்ச்சியும் தேவை என்று அதிகாரத்திலுள்ளவர்கள் சிந்தித்திருக்கக் கூடும். இருண்ட யுகத்தினுள் நீண்ட காலமாகவே சிக்கியிருந்த நாட்டுக்கு சிறிது ஆறுதலும் நெகிழ்ச்சியான நிலைமையும் அவசியம் என்றும் இவர்கள் எண்ணியிருக்கலாம். மட்டுமல்ல, எப்போதும் அச்சத்திலும் துக்கத்திலும்  உறைந்தவாறு இருந்த மக்கள் அதிலிருந்து விடுபட்டு சற்றுக் களிப்பாக இருக்கட்டும் என்றும் கருதியிருக்கக்கூடும்.

ஒரு பொறுப்பான அரசாங்கம் தன்னுடைய குடிமக்களின் மகிழ்ச்சியைக் குறித்துச் சிந்திக்காதிருக்க முடியாது. ஆகவே, மக்களைச் சந்தோசமாக வைத்திருப்பதற்காக அது எவ்வளவையும் செலவளிக்கத்தான் வேணும். ஆகவேதான் இந்த மாதிரியான தொடர் ஏற்பாட்டுக்கு – மகிழ்ச்சிகரமான உலாக்களுக்கும் வைபவங்களுக்குமாக ஒரு அமைச்சையே தனியாக உருவாக்குவதற்கு அரசாங்கம் சிந்திக்கலாம் என்கிறோம்.

அதேவேளை, பலரும் விமர்சித்து வருவதைப்போல போரின் வெற்றியை ஒரு முதலீடாக்கி அரசியல் ஆதாயங்களைத் தேடிக் கொள்வதற்காக இந்த மாதிரியான முதன்மைப்பாடான நிகழ்ச்சிகளை மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் திட்டமிட்டுத் தன்னுடைய நிகழ்ச்சி நிரலாக்கியுள்ளது என்றும் இவற்றைக் கொள்ளவும் முடியும்.

ஆனால், இதை மறுத்து, இதற்கெல்லாம் இன்னும் சில காரணங்களையும் வியாக்கியானங்களையும் அரச தரப்புக் கூறக்கூடும். போரின் வெற்றிக்காகப் பாடுபட்ட படையினருக்கு மரியாதை அளிக்க வேண்டும். அவர்களுடைய பங்களிப்பை நாட்டு மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்று ஒரு காரணம்.

நாடு முழுவதுமே இப்போதுதான் - தங்களுடைய ஆட்சிக் காலத்திற்தான் - ஒரு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆகவே, இதை - இந்த நிலையில் வருகின்ற சுதந்திரதினத்தை பிரமாண்டமான முறையில் முழுமைப்படுத்திக்  கொண்டாடுவது அவசியமே என்பது இன்னொரு காரணம்.

அபிவிருத்தியில் மக்களைப் பங்கேற்க வைப்பது, மக்களுக்கு அபிவிருத்தி பற்றிய எண்ணக்கருக்களை விதைத்தல், அவர்களை அபிவிருத்தியோடு இணைத்தல் என்ற நோக்கங்களுக்காகவே இந்தமாதிரியான கொண்டாட்டங்கள் நடக்கின்றன என்ற இன்னொரு காரணம்.

இப்படியே காரணங்களும் நியாயங்களும் தாராளமாகச் சொல்லப்படலாம். இவற்றில் நியாயமும் இருக்கலாம். அதேவேளை இந்தக் கொண்டாட்டங்களுக்கு நிகரான கேள்விகளும் எதிர்ப்புகளும் உள்ள என்பதையும் நாம் கவனிக்க வேணும். அவையும் மக்களுடன், நாட்டின் எதிர்காலத்துடன் சம்மந்தப்பட்ட கேள்விகளே. அவற்றைப் பின்னர் பார்க்கலாம்.

எப்படியானாலும் கொண்டாட்டங்களை அரசாங்கம் முதன்மையாக்கியுள்ளது.

ஜனாதிபதி நாடு முழுவதும் செல்கிறார். அவர் அப்படிச் செல்லும்போது பெருமெடுப்பிலான நிகழ்ச்சிகளும் ஏற்பாடுகளும் நடக்கின்றன. அவருடைய மகன் நாமல் ராஜபக்ஷ செல்கின்ற இடங்களுக்குக்கூட உலங்குவானூர்தியையே பயன்படுத்துகிறார். இவ்வளவுக்கும் அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே. இதிலும் இளம் பாராளுமன்ற உறுப்பினர். தவிர, இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவராக நாமல் இருப்பதால், அதற்காக அவர் உலங்கு வானூர்தியிற் பயணிக்கும் அளவுக்கு அவருக்கான இடம் அளிக்கப்பட்டிருக்கிறதா தெரியவில்லை. ஆனால், அவருடைய  உலங்குவானூர்திப் பயணங்கள் கோலாகலமாக நடக்கின்றன என்பது மட்டும் உண்மை. இதற்காக எவ்வளவு பணம் செலவாகிறது என்பதெல்லாம் கேள்விக்கு அப்பாற்பட்ட விசயங்கள்.

இதைவிட, ஜனாதிபதி வெளிநாடுகளுக்கான பயணங்களை அடிக்கடி மேற்கொள்கிறார். அதிகமான பிரதானிகளோடு வெளிநாட்டுக்குப் பயணம் செய்யும் இலங்கையின் தலைவர் மகிந்த ராஜபக்ஷதான் என்பது பலருடைய மதிப்பீடு. ஒரு தடவை சீனாவுக்கு அவர் பயணிக்கும்போது வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 300 க்கு மேற்பட்ட பிரதானிகளோடு பயணித்திருந்தார்.

எல்லாமே நாட்டுக்காகத்தான். ஆமாம், அவர்கள் அப்படித்தான் சிந்திக்கிறார்கள். மக்களையும் இதை ஏற்கும்படி கூறுகிறார்கள். எல்லாமே நாட்டுக்காகத்தான்.

இந்த மாதிரி இவ்வளவையும் இந்த அரசாங்கம் செய்வதற்கான தற்துணிவைக் கொடுத்தது, போரில் அது பெற்ற வெற்றியே. இந்த வெற்றியானது அரசாங்கத்தை கேள்விகளின் விசைக்கு அப்பாலான ஓரிடத்தில் கொண்டு போய் விட்டுள்ளது. ஆகவே, கேள்விகளற்ற உலகத்தில் எதற்குமே பதலளிக்க வேண்டிய அவசியமே இல்லை.

இதற்கெல்லாம் ஒரு முன்னுதாரணத்தை இந்த அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் காட்டியது, திருமதி சந்திரிகா குமாரதுங்கதான். அவருடைய ஆட்சிக்காலத்தில் அவர் பெற்றுக்கொண்ட, போரின் வெற்றிகள் அவரை நிதானமிழக்க வைத்தன. அல்லது எல்லையற்ற உற்சாகப் போதையை அவருக்கு ஏற்படுத்தின.

1995 இல் ‘றிவிரஸ’ என்ற இராணுவ நடவடிக்கையின் மூலம் யாழ்ப்பாணத்தைப் புலிகளிடமிருந்து படையினர் கைப்பற்றியபோது அதைப் பிரமாண்டமான வெற்றிவிழாவாக்கிக் கொண்டாடி இதற்கான முதற்புள்ளியை அவரே உருவாக்கினார்.

பிறகு, 1996 இல் ‘சத்ஜெய’ என்ற இன்னொரு இராணுவ நடவடிக்கையின் மூலமாக கிளிநொச்சியைப் படையினர் கைப்பற்றிய போதும் அதை விழாவாக்கினார் சந்திரிகா.

அடுத்த வெற்றி விழாவைக் கொண்டாடுவதற்காக ‘ஜெயசிக்குறு’ என்ற மிகப் பெரிய, நீண்ட இராணுவ நடவடிக்கையை அவர் நடத்தினார். ஆனால், அந்த நடவடிக்கையைப் புலிகள் முறியடித்துத் தோல்வியாக்கிய காரணத்தினால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் நோக்கம் நிறைவேறவில்லை.

ஆனால், அதை இந்த அரசாங்கம், தான் பெற்ற பிரமாண்டமான வெற்றிக்குப் பிறகு வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகிறது. போரில் பெற்ற பெரு வெற்றியானது, போர் வெற்றியை மட்டுமன்றி, தான் நினைக்கின்ற – தான் செய்கின்ற அத்தனையையும் விழாவாக்கிக் கொண்டாடுவதற்கான சூழலை உருவாக்கியுள்ளது.

இங்கேதான் நிச்சயமாகவே அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டிய கேள்வியை நாம் முன்னிறுத்த வேண்டியிருக்கிறது. போரின் வெற்றியை வைத்துக்கொண்டு நாட்டையும் மக்களையும் ஒரு கனவுலகத்துக்கு அழைத்துச் செல்ல முடியாது. அப்படி வைத்திருப்பது பொறுப்புள்ள அரசுக்கும் அரசியல் முதிர்ச்சியுடைய தலைமைக்கும் நல்லதுமல்ல.

போர் முடிந்த பின்னரும் நாடு பொருளாதார நெருக்கடிகளில்தான் தொடர்ந்துமிருக்கிறது. தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவில்லை. உற்பத்திகள் அதிகரிக்கப்படவில்லை. புதிய உற்பத்திகளுக்கான ஏற்பாடுகளின் வீதமும் தன்மையும் போதவில்லை. வாழ்க்கை நிலைவரம் மிக மோசமாகவே உள்ளது.

மேலும் அரசியற் தீர்வு முன்வைக்கப்படவில்லை. அரசியல் நெருக்கடிகள், ஜனநாயக மேம்பாடு, ஊடக சுதந்திரம், சனங்களுடைய மனக்குறைகள் எதுவும் உரியவாறு சீர்பெற்றதாக இல்லை.

இன்னும் இலங்கையின் சிறு பான்மைச் சமூகங்கள் இரண்டாம் நிலையில் அதே விலகல் மனவுணர்வுடன்தான் வைக்கப்பட்டுள்ளனர். பொதுவாகச் சொன்னால், நாடு சரியாக முறைப்படுத்தப்படாமலே இன்னும் உள்ளது.

காயங்களிலிருந்தும் வலிகளிலிருந்தும் துயரங்களிலிருந்தும் சனங்கள் இன்னும் விடுபடவில்லை. அதிலும் வடக்குக் கிழக்கு மக்கள் பிரச்சினைகளின் மையத்தை இன்னும் கடக்கவேயில்லை. ஏறக்குறைய இதே நிலைதான் மலையகத்திலும் நாட்டின் பிற பின்தங்கிய பிரதேசங்களிலும்.

இதைத்தினசரி ஊடகங்களின் வழியாகவும் நேரிலும் யாரும் பார்க்க முடியும். இதற்கெல்லாம் பூதக்கண்ணாடிகளோ, மூன்றாவது நான்காவது கண்களோ தேவையில்லை.

இல்லை. நாட்டில் முக்கியமான அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துக்கொண்டிருக்கிறது. கிராம மட்டத்திலான – சமனிலைப்பட்ட அபிவிருத்தியிலேயே அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளதே என யாரும் கேட்கக் கூடும். இருக்கலாம். ஆனால், இதன் அடைவு மட்டம் தேவையின் அளவுக்குப் போதாமலுள்ளது என்பதே இங்கே பிரச்சினை.

வெற்றியும் தோல்வியும் இருமுனையிலும் கூருள்ள கத்தியைப் போன்றன. கவனமாக இவற்றைக் கையாளவில்லை எனில், இரண்டுமே ஆபத்தானவை. இரண்டும் மிக மோசமான உளநிலையை உருவாக்கக் கூடியன. ஒன்;றில் மோசமான போதையும் அதிகார வெறியும் எல்லை கடந்த உற்சாகத்தையும் கொடுக்கக்கூடியது. கண்மண்தெரியாமல் நடக்கும் நிலை என்று சொல்வார்களே, அதை ஒத்த நிலையை உருவாக்கக் கூடியது.

மற்றது மோசமான உளச்சோர்வையும் பின்னடைவு மனநிலையையும் குரோத மனப்பாங்கையும் வளர்க்கக்கூடியது.

இதையெல்லாம் கணக்கிலெடுக்காமல் அரசாட்சி செய்வதும், இந்தப் போக்கைக் குறித்துச் சிந்திக்காமல், இதற்கே ஒத்துப்பாடி ஆதரவளித்து சிறு நன்மைகளைப் பெறுவதும் மிப்பேராபத்திலும் பேரழிவிலுந்தான் கொண்டு போய் விடும்.

இறுதியாக ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் ஒன்றைக் கூறலாம், ‘பெருங்கொண்டாட்டங்களுக்குச் செலவளிக்கும் நிதியில் மூன்றிலொரு பங்கை மக்களின் நல்வாழ்வுக்காக, பாதிக்கப்பட்ட மக்களின் அவசியத்தேவைகளுக்காக ஒதுக்குங்கள்.

நம்பிக்கையும் மகிழ்ச்சியும் நிம்மதியும் பாதுகாப்புணர்வுமே அமைதிக்குமான அத்திவாரத்தை அவை இடும்.’

0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB