கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

வரலாற்றுச் சுமையில் சிக்கிய இலங்கை

Thursday 28 June 2012



லங்கையின் இனப் பிரச்சினையில் வரலாற்று உணர்வும் அது ஏற்படுத்தியுள்ள உளச் சிக்கல்களும் முக்கியமானவை. குறிப்பாகத் தமிழ், சிங்களச் சமூகங்களிடம் உருவாக்கப்பட்டுள்ள வரலாற்று உணர்வென்பது அவற்றுக்கு ஒரு சுமையாகவே அமைந்துள்ளது.
 
அதிகாரப் போட்டிக்காக உருவாக்கப்பட்ட இந்த வரலாற்றுணர்வு அந்தப் போட்டிக்காகவே மேலும் மேலும் புனைவுருவாக்கம் செய்யப்படுகிறது. இத்தகைய அதிகாரம் வளப்பகிர்வுக்கான ஒரு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாகத் தொழிற்படுகிறது. வளப்பகிர்வென்பது பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே வரலாற்றுணர்வுக்கும் அடிப்படையாக இருப்பது பொருளாதாரமே. அதன் மேற்படையிலே வரலாற்றுணர்வு தொழிற்படுகிறது.
 
வரலாற்றுணர்வு என்பது சிலவேளைகளில் சில சமூகங்களில் சுமையாக அமைவதுண்டு. பல சமயங்களில் அது அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தி விடுவதும் உண்டு.
 
உலகத்தின் பெரும்பாலான போர்களும் பிணக்குகளும் சிக்கலான வரலாற்று வேர்களாலேயே ஏற்பட்டிருக்கின்றன. வரலாற்றுச் சிக்கல்களால் இன்றுங் கூட துயரங்களைச் சுமந்து கொண்டிருக்கும் சமூகங்கள் பல உள்ளன. அவை நிரந்தர அபாயத்தைத் தம்மகத்திற் கொண்டுள்ளன.
 
பலஸ்தீனத்தினியர்களின் வரலாற்றுக்குறிப்புகளுக்கும் இஸ்ரேலியர்களின் வரலாற்றுக்குறிப்புகளுக்கும் இடையில் செறிவு கொண்டுள்ள வேறுபாடுகளும் முரண்களும் இடைவெளிகளும் அங்குள்ள முரண்களாகியுள்ளன. அல்லது அந்தச் சமூகங்களின் இன்றைய முரண் அரசியலுக்கு இந்த ‘முரண்வரலாற்றுச் சிக்கல்கள்’ தாராளமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
 
கிறிஸ்தவர்களின் வரலாற்றுப் பார்வையும் இஸ்லாமியர்களின் வரலாற்றுப் பார்வையும் கொண்டுள்ள வேறுபாடுகளே சிலுவைப் போர்களாகவும் புனிதப்போர்களாகவும் மாறின. இத்தகைய முரண்பார்வையே புரொட்டஸ்தாந்துகளும் றோமன் கத்தோலிக்கர்களும் இரத்தம் சிந்துவதற்கும்  காரணமாகின.
 
இத்தகைய ‘முரண்வரலாற்றுநிலை’ யானது மேலும் முரண்பார்வையுடைய வரலாற்றுப்பார்வையைத்தான் வளர்த்துச் செல்லும். ஆகவே மேலும் மேலும் பகைமையே வளர்ந்து செல்லும்.
 
பகையின் அடியிலிருந்து முளைக்கும் வரலாற்றுப் பார்வையானது ஒரு போதுமே நிதானத்தைத் தராது. பதிலாகச் சமனிலைக் குலைவையே தரும். சமனிலைக் குலைவுடைய வரலாற்றுப் பார்வையைக் கொண்டுள்ள எந்தச் சமூகமும் தன்னுடைய துக்கங்களைத் தீர்த்துக் கொள்ளவும் முடியாது.
 
பதிலாக அது மீள மீள உளச் சிக்கலுக்கும் வாழ்க்கைச் சிக்கலுக்குள்ளுமே தள்ளப்படும்.
 
எத்தகைய வரலாற்றுப் பெருமையும் அல்லது சிறுமையும் நிகழ்கால, எதிர்காலச் சவால்களை எதிர்கொள்வதில்தான் அர்த்தம் பெறுகின்றன. நிகழ்கால, எதிர்காலச் சிக்கல்களை வெற்றிகொள்வதற்குத் தடையாக இருக்கும் வரலாற்றுணர்வு நிச்சயமாக அந்தச் சமூகங்களுக்குச் சுமையாகவே அமைகிறது.
 
இலங்கையும் சிக்கலான வரலாற்று வேர்களால் தன்னைச் சிறைப்படுத்தியுள்ளது. இது ஒரு வகையான உளவியற் குறைபாடே. தாழ்வுச் சிக்கல்களால் கட்டமைந்த உளவியற் குறைபாடு இது. இந்தத் தாழ்வுச் சிக்கல்களே ஒவ்வொரு சமூகத்திடமும் தன் தன் வரலாற்றைக் குறித்துப் பெருமிதங்களை உருவாக்கியுள்ளன. அடிப்படையில் இவை போலிப் பெருமிதங்கள். நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் சிதைப்பதற்கு ஒரு வகையில் இந்த வரலாற்றுப் போலிப் பெருமிதங்கள் காரணமாகியுள்ளன.
 
ஆனால், இதைக்குறித்து தமிழ் சிங்களச் சமூகங்கள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. பதிலாக மேலும் மேலும் வரலாற்றுச் சிக்கல்களுக்குள் தங்களின் தலைகளை நுழைத்துக் கொண்டிருக்கின்றன.
 
இதனாலேயே ‘இலங்கையின் ஆதிக்குடிகள் நாமே’ எனத் தமிழர்கள் கூறுகின்றனர். இப்படிச் சொல்வதன்மூலம் தங்களின் வரலாறு குறுக்கமடைகிறது எனச் சிங்களவர் கருதுகின்றனர். இதனால், அவர்கள் கலவரமடைகிறார்கள்.
 
பதிலுக்குத் ‘தமிழர்களுக்கு இந்த நாடு உரித்துடையதல்ல, இது சிங்களர்களுக்கே உரியது. தமிழர்கள் வந்தேறு குடிகள்’ எனச் சாடுகிறார்கள்.
 
இப்படி எதிர்மறையான விளக்கங்களை ஒவ்வொரு சமூகமும் கொண்டிருக்கும்போது எப்படி அவற்றிடையே அமைதியும் இணக்கமும் ஏற்படும்? இத்தகைய எதிர்நிலை எண்ணங்களைக் கொண்டிருக்கும் சமூகங்களைத் தன்னிடம் கொண்டுள்ள நாடு எவ்வாறு சமாதானத்தை எட்டமுடியும்? இத்தகைய நிலையில் அந்த நாட்டில் எவ்வாறு அமைதி நிலவும்? அது எப்படி முன்னோக்கிப் பயணிக்க முடியும்?
 
நிகழ்காலத்தில் எதிர்கொள்ளவேண்டிய பல்லாயிரம் சிக்கல்களும் சவால்களும்  உள்ளன. இந்தச் சவால்கள் பல வகைப்பட்டனவாக உள்ளன. பிராந்திய ரீதியிலானவையாக, சர்வதேச ரீதியிலானவையாக, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியின்பாற்பட்டவையாக, பொருளாதார ரீதியிலானவையாக, அதற்குப் பயன்படுத்தப்படும் அரசியல், இராசதந்திர ரீதியிலானவையாக எனப் பல வகைப்பட்டுள்ளன.  
 
ஆகவே இந்தச் சிக்கல்களையும் சவால்களையும் வெற்றிகொண்டாற்தான் எதிர்காலத்தை சுமுகமான முறையில் இலங்கையர்கள் நெருங்க முடியும். இல்லையெனில் துயரக்குழிகளில்தான் விழவேண்டும். துயரக்குழியில் வீழ்கின்ற சமூகங்களுக்கு எதிர்காலமே கிடையாது. அவை பின்னோக்கிய சமூகங்களாகவே இருக்கும்.
 
இலங்கை பின்னோக்கிய திசையில்தான் கடந்த காலத்திற் பயணித்துள்ளது. இதில் தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகங்கள் என்ற வேறுபாடுகளும் விலக்குகளும் கிடையாது.
 
பொருளாதார வளர்ச்சியிலும் வாழ்க்கைத் தரத்திலும் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியிலும் மிகப் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது இலங்கை.
 
இதிலிருந்து எப்படி மீள்வது? இதுவே இன்றைய முதன்மைக்கேள்வியாகும். இனப் பிணக்கும் முரண்களும் நாட்டையும் சமூகங்களையும் பின்னோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்றன.
 
எத்தகைய சிறப்பான அபிவிருத்தித்திட்டங்களையும் முன்னேற்ற நடவடிக்கைகளையும் சிதைத்துவிடும் அளவுக்கு இனமுரணும் பிணக்குகளும் உள்ளன. இதற்குக் காரணமான அல்லது காரணமாகப் பயன்படுத்தப்படும் வரலாற்றுணர்வு உள்ளது.
 
கடந்த காலம் பற்றிய தீவிர பிரக்ஞை நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் தீயிடுகிறது. இதன்மூலம் அபாயக்குழிகள் தாராளமாக முளைகொள்கின்றன. அரசியல் உள்நோக்கங்களால் செய்யப்பட்ட புனைவுருவாக்கங்கள் இன்று தமிழ் - சிங்களச் சமூகங்களின் உளவியலை நிர்ணயம் செய்யும் அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளன.
 
உலகத்தின் பெரும்பாலான வரலாற்றுச் சிக்கல்கள் இந்த மாதிரி அரசியல் நோக்கில் செய்யப்படும் புனைவினாலேயே ஏற்படுகின்றன. அந்த வகையிற்தான் இலங்கையின் வரலாறும் அமைகிறது.
 
இதை நாம் வரலாற்றுச் சுமை என்றே சொல்லலாம்.
 
தமிழர்கள் தங்களுடைய தொன்மையை ஆதாரமாகக் கொண்டு, தங்களுடைய இன்றைய இருப்பை உறுதி செய்ய முயற்சிக்கிறார்கள். அதற்காக அவர்கள் சங்ககாலம் வரையிற் பயணம் செய்கிறார்கள். இன்னும் சற்று அழுத்தமாகச் சொன்னால், சங்ககாலத்திலேயே அவர்கள் நிலைகொள்கிறார்கள்.
 
பொதுவாகவே தமிழர்கள் அதிகமதிகம் பெருமைப்படுவது, அவர்களுடைய சங்ககாலப் பெருமைகளிலேயே. அதற்குப்பின்னர் சோழர்காலத்தில்.
 
ஆனால், இந்தப் பெருமைகள் எதுவும் ஈழத்தமிழர்களுக்குரியதல்ல. அப்படி இவற்றை ஈழத்தமிழர்களும் கொள்ள முற்பட்டால், அது ‘இந்தியாவின் வழித்தோன்றல்களே ஈழத்தமிழர்கள்’ எனக் கொள்ளும் சிங்கள இனவாதிகளின் கூற்றுக்கு பொருத்தம் சேர்ப்பதாக அமையும்.
 
இதேவேளை சிங்கள வரலாறு இலங்கைப் பௌத்தத்தின் வரலாறாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் செறிவாகவும் இன்னும் துலக்கமான அடையாளங்களையுடையதாகவும் இந்தச் சிங்கள பௌத்த வரலாற்று ஆதாரங்கள் இருப்பது சிங்கள அதிகாரத்தரப்பினருக்கு அதிக வாய்ப்பை அளிக்கின்றது.
 
இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு சிங்களத்தரப்பு தன்னுடைய வரலாற்றுக் குறிப்புகளை மேம்படுத்த முனைகிறது.
 
இத்தகைய அரசியல் நோக்கங்கங்கொண்ட ஒரு ஏற்பாடாகவே அது மகாவம்சத்தை எழுதியதும் இன்னும் அதை முதன்மைப்படுத்துவதும்.
 
மகாவம்சத்துக்கு எதிரான ஒரு மனப்போக்கும் வரலாற்றுத் தேடலும் தமிழ்ச் சமூகத்தில் வலுவாக உள்ளதையும் நாம் அவதானிக்கலாம்.
ஆகவே இதுவொரு போட்டி நிலை – பகை நிலை – எதிர் நிலைச் செயற்பாடே.

ஒவ்வொரு சமூகத்திடமும் காணப்படும் அடையாளங்களைப் பயன்படுத்தி, அதிகாரத்தைப் பெற முனைகின்றன அதிகாரச் சக்திகள். இந்த நிலையில் இதற்குப் பலியாகின்றனர் அந்தச் சமூகங்களைச் சேர்ந்த மக்களும் எதிர் நிலையில் உள்ள சமூக மக்களும்.

உண்மையில் மக்களை எதிரெதிர் நிலைகளுக்குக் கொண்டு செல்வதும் அதிகார சக்திகளே. அவற்றின் அரசியல் நலன்களே வரலாற்றுணர்வை அதிகமதிகம் ஊட்டுகின்றன. பின்னர் இந்த வரலாற்றுணர்வென்பது அந்தந்தச் சமூகங்களின் உளவியலாகவும் பரிமாணம் பெறுகிறது. அது அப்படியே அந்தச் சமூகங்களின் ஆழ்மனதில் உறைந்து, அவற்றிற்குச் சுமையாகவும் அமைந்து விடுகிறது.

ஆகவே ஒரு வகையில் இலங்கையில் வரலாறு என்பதைத் தமிழர்களும் சிங்களவர்களும் ஒரு சுமக்க முடியாத சுமையாகச் சுமந்து கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்ல வேணும்.

அந்த அளவுக்கு வரலாற்றுச் சுமையினால் அவர்கள் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த வரலாற்றுச் சுமை அவர்களை இலகுவில் முன்னோக்கி நகரவிடாது.  

இரணமடுத்தண்ணீர் யாருக்குச் சொந்தம்? இன்று அது யாருக்காக? - மறைந்திருக்கும் அரசியல்!

Wednesday 27 June 2012



ரணமடுத்தண்ணீர் யாருக்காக? இந்தக் கேள்வி இலங்கையின் வடபகுதிச் சமகால அரசியலிலும் பொருளாதார நடவடிக்கைகளிலும் முக்கியமான ஒன்று. தவிர்க்க முடியாத ஒன்றும் கூட. மேலும் இந்தக் கேள்வியைக் குறித்து நாம் ஆழமாகச் சில விசயங்களைப் பார்க்க வேண்டியுமுள்ளது. அந்தளவுக்கு இந்தக் கேள்வியின் உள்ளே மறைந்திருக்கின்ற சேதிகளும் அரசியலும் மிகப் பெரியவை.

முக்கியமாக கிளிநொச்சியில், இரணமடுக்குளத்திற்கு மிகக் கிட்டிய பிரதேசத்தில் இருக்கின்ற 60 வீதமான மக்களுக்கு இரணமடுத்தண்ணீர் கிடைப்பதில்லை. அவர்களுக்குரிய குடிநீர் மற்றும் விவசாயத்துக்கான நீர் என்பதற்கே எந்த வகையான ஏற்பாடுகளும் இல்லை. ஆனால், யாழ்ப்பாணத்துக்கு மட்டும் நீர் கொண்டு செல்லப்படுவதைப் பற்றிச் சிந்திக்கப்படுகிறது. இதன் உள்ளரசியல், உள் நோக்கம் என்ன?

இரணமடுக்குளத்தின் தண்ணீரை இதுவரையிலும் அந்தப் பிரதேச விவசாயிகளே பெருமளவுக்கும் பயன்படுத்தி வந்தனர். வலது கரை, இடது கரை என இரண்டு பெரிய வாய்க்கால்கள் பாசன நீரைப் பல கிலோ மீற்றர்களுக்குக் கொண்டு செல்கின்றன. இரணமடுவின் பாசனப் பிரதேச எல்லை விவசாயிகளுக்கே இந்தக் குளமும் நீரும் சொந்தம். அவர்களே அதை ஆளுகை செய்கின்றனர். அவர்களைக் கேட்காமல் எவரும் எந்தத் தீர்மானத்தையும் எடுக்க முடியாது.

ஆகவே அங்கே விவசாயிகளின் குரலே மேலோங்கியிருக்கும். நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள், பணிப்பாளர்கள், அரசாங்க அதிபர், பிரதேச செயலர், விவசாயத் திணைக்களம், கமத்தொழிற் திணைக்களம் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகளையும் விட விவசாயிகளுக்கே அதிக சக்தி அங்கு.

இதனால், யாழ்ப்பாணத்துக்கு வேண்டிய குடிநீரை இரணமடுவிலிருந்து பெறலாம் என்று யோசித்தாலும் அதைப் பெறுவதற்கு இந்த விவசாயிகளின் சம்மதத்தைப் பெற வேண்டும். எனவே இது தொடர்பாகப் பல கூட்டங்கள் யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலுமாக நடத்தப்பட்டுள்ளன. என்றாலும் இன்னும் முழுமனதோடு கிளிநொச்சி விவசாயிகள் நீரை வழங்குவதற்குச் சம்மதம் தரவில்லை.

‘கிளிநொச்சி விவசாயிகளுக்கான வெகுமதிகளைத் தரலாம். அதாவது, இரணமடுவின் நீரேந்து அணையை மேலும் உயர்த்தி மேலதிக நீரைச் சேமிக்கலாம். வாய்க்கால்களைப் புனரமைக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் சேகரிக்கப்படும் நீரையே யாழ்ப்பாணத்துக்கு எடுத்துச் செல்வது. அதாவது வழமையாக விவசாயச் செய்கைக்குப் பயன்படுத்தப்படும் நீர்ப்பங்கீட்டுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் உபரியான நீரை மட்டுமே யாழ்ப்பாணத்துக்கு வழங்கப்படும்’  எனச் சொல்லப்பட்டாலும் கிளிநொச்சி விவசாயிகளின் சந்தேகங்கள் தீரவில்லை.

இப்பொழுது அவர்கள் பல நிபந்தனைகளுடன் காத்திருக்கிறார்கள். வாய்க்கால்கள் செம்மையாகப் புனரமைக்கப்பட வேணும். குளத்தின் அணைக்கட்டு உயர்த்தப்படவேண்டும். வழமையான பாசன நீரின் அளவு குறையக் கூடாது. கிளிநொச்சி மாவட்ட மக்களின் குடிநீர்ப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இவையெல்லாம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே யாழ்ப்பாணத்துக்கான நீரை வழங்குவதைப் பற்றிச் சிந்திக்கலாம் என்றவாறாக இந்த நிபந்தனைகள் உள்ளன.

இந்த நிபந்தனைகளெல்லாம் ஓரளவுக்கு திட்டத்தை முன்மொழிந்தோரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக ஆசிய அபிவிருத்தி மற்றும் இன்பா ஆகியவற்றின் நிதி உதவியும் பெறப்பட்டுள்ளது. வாய்க்கால் புனரமைப்புக்காக இன்பா என்ற அமைப்பு மட்டும் 3300 மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளது.

இதேவேளை, இரணமடுவின் நீரை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்லக் கூடாது எனப் பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்த ஒரேயொரு அரசியற் தலைவர் திரு. வீ. ஆனந்தசங்கரி மட்டுமே. (ஆனந்தசங்கரியின் அரசியல் கிளிநொச்சியை மையப்படுத்தியது என்பதாற்தான் அவர் இப்படிச் சொல்லியிருக்கிறார். ஆகவே அவரும் அரசியல் ரீதியாகத்தான் இந்தப் பிரச்சினையைக் கையாள்கிறார்).
ஏனையவர்கள் மதிலின்மேலே எந்தப் பக்மும் பாய முடியாமற் குந்தியிருக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரை, யாழ்ப்பாண மக்களையும் பகைத்துக் கொள்ள முடியாது. கிளிநொச்சி மக்களையும் பகைத்துக் கொள்ள முடியாது. அப்படிப் பகைத்துக் கொண்டால் அது அவர்களுடைய வாக்கு வங்கிகளைப் பாதிக்கும். எனவே தங்கள் விசயத்தில் கவனமாக இருக்கிறார்கள்.

ஆனாலும் பெரும்பாலானவர்களுக்கு யாழ்ப்பாணத்துக்குத் தண்ணீரைக் கொண்டு போவதற்கே உள்ளுர விருப்பம். அதை அவர்கள் வெளியே சொல்லவில்லை. அவ்வளவுதான்.

அதிகாரிகளைப் பொறுத்தவரையில் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் யாழ்ப்பாண அதிகாரியான திரு. பாரதிதாசன் யாழ்ப்பாணத்துக்குத் தண்ணீரைக் கொண்டு செல்வேன் எனப் பிடிவாதமாக நிற்கிறார். பாரதிதாசனே இந்தத்திட்டத்துக்குப் பொறுப்பான முதன்மை அதிகாரியாகவும் உள்ளார். அவரோடு வேறு பல அதிகாரிகளும் இதற்காக முயற்சிக்கிறார்கள்.

இதற்கான திட்டவரைவுகளும் தயாரிக்கப்பட்டு விட்டன.
நீரை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்லும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் ஓரளவுக்கு முதற்கட்ட நிறைவை எட்டியுள்ளன.

குறிப்பாக மதிப்பீடு, திட்ட வரைவு என்பன முடிவடைந்து, நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போதைய தகவலின்படி மிக விரைவில் யாழ்ப்பாணத்துக்கான நீர் விநியோக நடவடிக்கைகளுக்கான அடிப்படை வேலைகள் ஆரம்பமாகவுள்ளன. இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியில் 164 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்  சாதக பாதங்களைப் பற்றித் திட்ட மிட்ட முறையில் ஒரு கட்டப் பரப்புரையும் ஊடகங்களிற் செய்யப்பட்டுள்ளது. பாரதிதாசனே சில கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

அவருடைய திட்டம் வரவேற்க வேண்டியது என்பதில் ஒரு பக்க நியாயம் உண்டு. அவருடைய அபிப்பிராயம் மட்டுமல்ல, யாழ்ப்பாணத்துக்குத் தண்ணீரைக் கொண்டு செல்ல வேணும் என்று விரும்புகின்ற ஏனையவர்களின் விருப்பத்தையும் நாம் ஏற்றுக்கொள்ளலாம். இது தொடர்பாக கிளிநொச்சி மக்களுக்கும் நல்ல புரிதல் உண்டு.

குடிநீருக்காகக் கஸ்ரப்படுகின்ற ஒரு பிரதேச மக்களின் அவலத்தை யாரும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதை அனுமதிக்கவும் முடியாது என்பதில் கருத்து வேறுபாடுகள் இல்லை.

நீர்ப்பிரச்சினையால் மாநிலங்களுக்கிடையிலும்  நாடுகளுக்கிடையிலும் பலவிதமான பிரச்சினைகள் உலகெங்கும் உள்ளன. தமிழகத்தில் முல்லைப்பெரியாறு, காவிரி போன்ற நதிகளின் நீர்ப்பங்கீடு தொடர்பான பிரச்சினைகள் இன்னும் கொதிநிலையிலேயே உள்ளன. அத்தகைய ஒரு நிலை இங்கும் மாவட்டங்களுக்கிடையில் ஏற்படக்கூடாது.

ஆகவே யாழ்ப்பாண மக்களுக்கான நீரை வழங்குவதைப்பற்றிச் சிந்திப்பது  அவசியமானதே. ஆனால், பாரதிதாசன் உள்ளிட்ட பலரும் பார்க்கத் தவறும் விசயங்கள் பலவுண்டு. அவையே இங்கே கவனத்திற்குரியனவாகின்றன.

கிளிநொச்சியின் பல பிரதேச மக்கள் இரணமடுவின் நீரைப் பெற முடியாத நிலை இருக்கும்போது, அதைப் பயன்படுத்துதற்கான திட்டங்கள் இல்லாதபோது, அவற்றுக்கான தீர்வைக் காணாமல் எப்படி யாழ்ப்பாணத்துக்குத் தண்ணீரைக் கொண்டு செல்வதைப்பற்றிச் சிந்திக்கலாம்?

தற்போதைய திட்டத்தின்படி கிளிநொச்சி மாவட்டத்திலும் அறிவியல் நகர், பூநகரி, பரந்தன், கண்டாவளை, தருமபுரம், பளை, தட்டுவன்கொட்டி போன்ற இடங்களின் குடிதண்ணீர்ப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று சொல்லப்பட்டாலும் - இந்தப் பிரதேசங்களின் குடிநீர் வினியோகத்துக்கான திட்டங்கள் உள்வாங்கப்பட்டிருந்தாலும் ஏனைய விவசாயிகள் இரணமடுவின் நீரைப் பயன்படுத்துவதைப்போல கிளிநொச்சியில் இருக்கும் மலையகத் தமிழர்களுக்கான வாய்ப்புகள் இல்லை. இதைக்குறித்து ஏன் இவர்கள் சிந்திக்கவில்லை?

கிளிநொச்சி விவசாய மாவட்டமாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்குப்பிரதான காரணம் இந்த மாவட்டத்திலிருக்கும் குளங்களும் அவற்றின் மூலமான நீர்ப்பாசனமும் அதன் மூலமான பயிர்ச்செய்கை வசதிகளுமே. ஆனால், இந்த வசதிகளைப் பெறுவது பெரும்பாலும் யாழ்ப்பாணத்திலிருந்து ஏற்கனவே இந்தப் பகுதிகளுக்கு வந்து குடியேறியோரே.

இவர்களுக்குப் பின்னர் வந்து குடியேறிய மலையக மக்களுக்கு இங்கேயுள்ள எந்தக் குளத்திலும் உரிய முறையில் உரித்துகள் இல்லை. அவர்கள் வாழ்கின்ற, பயிர் செய்கின்ற பகுதிகளில் நீர்ப்பாசனத்திட்டங்கள் எதுவும் இல்லை. அவர்களுக்கு அப்படியொரு பாசனத்திட்டம் தேவை என யாரும் சிந்;தித்ததாகவும் இல்லை.

தேசிய அலைகளில் மறைக்கப்பட்ட விசயங்களில் இதுவும் ஒன்று. (மனோ கணேசன் இதைக்குறித்துக் கவனிப்பது நல்லது).

இப்போது 164 மில்லியன் அமெரிக்க டொலர் பில்லியன் செலவில் யாழ்ப்பாணத்துக்குத் தண்ணீரைக் கொண்டு போவதற்குத் திட்டமிட்டவர்களின் கண்களிலும் கவனத்திலும் இந்த மலைய மக்களின் முகங்கள் தெரியவில்லை. அவர்களுடைய நிலைமை புரியவில்லை.  பெரியவர்களின் கவனமெல்லாம் யாழ்ப்பாணத்தைப் பற்றியதே.

அம்பாந்தோட்டையிலேயே சூரியன் உதிக்க வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது. அனைத்துப் பாதைகளும் யாழ்ப்பாணத்திற்கே செல்ல வேண்டும்  என்று யோசிக்கிறார்கள் யாழ்ப்பாணவாசிகள்.

கிளிநொச்சியில் இருந்து – அதாவது இரணமடுவில் இருந்து தண்ணீரை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்வதற்கான சம்மதத்தைப் பெறும் கூட்டத்தில் இந்த (நீர்ப்பங்கீடு இல்லாத) மக்களின் ஒப்புதல் கேட்கப்படவில்லை. குளத்துக்கு உரிமையில்லாதவர்களிடம் எதற்காகச் சம்மதம் கேட்கவேண்டும் என யாரும் கேட்கலாம்.

அந்த உரிமை இன்னும் இந்த மக்களுக்கு வழங்கப்படாததே பெரும் தவறு.

கேட்கப்பட்ட ஒப்புதலானது, கிளிநொச்சியின் பாசன நிலத்தையுடைய விவசாயிகளிடம் மட்டுமே. இரணமடு தொடர்பாக இதுவரையான சட்ட ரீதியான உரித்து அவர்களுக்கு மட்டுமே உள்ளது என யாரும் வாதிடலாம். ஆனால், இந்த ஒப்புதலை கிளிநொச்சியிலுள்ள அனைத்துத் தரப்பு மக்களிடமே பெற்றிருக்கவேண்டும். இதை மனச்சாட்சிக்கும் அறிவுக்கும் முன்னால் யாரும் மறுக்க முடியுமா?

மட்டுமல்ல, இரணமடுக்குளம் கட்டப்பட்டதன் பின்னாலுள்ள இரகசியத்தையும் - உண்மையையும் நாம் இங்கே பார்க்க வேண்டும். கனகராயன் ஆற்றை வழிமறித்தே இரணமடுக்குளம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆற்றின் மூலம் முன்னர் பயனைப் பெற்றுச் செழிப்பைப் பெற்ற பிரதேசங்கள் கண்டாவளை மற்றும் வட்டக்கச்சி – பெரிய குளம் பகுதியைச் சேர்ந்தவை. கனகராயன் ஆற்றின் வண்டல் மண்ணினால் வளத்தைப் பெற்றுச் சிறப்பாக விளங்கின இந்தப் பிரதேசங்கள்.

ஆனால் இன்று?

இன்று இந்தப் பிரதேசங்கள் வரண்ட நிலையிலேயே உள்ளன. அல்லது இரணமடுவின் கசிவு நீரையே பெரும் பொக்கிஷமெனப் பெறவேண்டியுள்ளன.

இரணமடுவை நிர்மாணிப்பதற்குத் திட்டமிட்ட அந்த நாட்களில் இந்தப் பிரதேச மக்களுக்கு நீர் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. விவசாயம் பாதிக்கப்படாது, நீர்ப்பிரச்சினை ஏற்படாது என்று சொல்லப்பட்டது. ஆனால், நடந்தது என்ன? இந்தப் பிரதேசங்கள் நிரந்தர வரட்சிக்கும் ஒளியிழப்புக்கும் உள்ளாகின. அதாவது இந்தப் பிரதேச மக்கள் அப்படியே கைவிடப்பட்டு வஞ்சிக்கப்பட்டனர்.

அதைப்போலவே இப்போது இன்னொரு வஞ்சனையாக கிளிநொச்சியின் ஏனைய மக்களுக்குரிய நீரை வழங்குவதைப் பற்றிச் சிந்திக்காமல், யாழ்ப்பாணத்துக்கு நீரைக் கொண்டு செல்லும் முயற்சியும் அமைகிறது.

ஆகவேதான் இவை எல்லாவற்றிலும் ஒரு அரசியல் உள்ளது என்கிறோம். அது எவ்வளவுதான் மறைத்தாலும் வெளிப்படையாகத் தெரியக் கூடிய அரசியல். அது யாழ்ப்பாணத்தவரின் நலன்களை முதன்மைப்படுத்தும் அரசியலாகும்.

அடுத்தது, கிளிநொச்சியில் உள்ள விவசாயிகள் என்ற நிலவளமுடையோரைப் பற்றிச் சிந்திக்கும் அரசியலாகும். இந்த விவசாயிகளும் முன்னாள் யாழ்ப்பாணத்தவர்களே. அல்லது ‘யாழ்ப்பாணத்து வேர்கள்’ அல்லது ‘யாழ்ப்பாணத்தின் அடிக்கொடிகள்’ எனும் தொடர்ச்சியையுடைவர்கள். இவர்களுடைய தண்ணீர்ப்பிரச்சினை தீர்ந்தாற் போதும் என்று சிந்திக்கும் மனப்பாங்கு அது.

ஆகவே இந்த அரசியலின்படி எப்படியாவது யாழ்ப்பாணத்துக்குத் தண்ணீரைக் கொண்டு போகவேணும் என்று யாழ்ப்பாணத்துப் படித்த மேட்டுக்குடியினரும் அந்தச் சிந்தனை வயப்பட்டவர்களும் சிந்திக்கிறார்கள். அவர்கள் அதற்கேற்றவாறு ஆசிய அபிவிருத்தி வங்கி, ‘இன்பா’ வின் உதவி, இலங்கை அரசின் சம்மதம் எனப் பலவற்றையும் மிகக் கச்சிதமாகச் செய்துவிட்டனர்.

இதற்கு வசதியாக திட்டமிடற் செயலகங்கள், உயர் அதிகார பீடங்கள் போன்றவற்றில் இருக்கும் யாழ்ப்பாணத்தவர்கள் செயற்படுகிறார்கள். இந்த இடங்களில் - உயர் பீடங்களில் இவர்கள் தொடர்பையும் இருப்பையும் கொண்டிருப்பதால், அதற்கு வசதியாகச் சிந்திக்கிறார்கள்.  இவர்கள் யாழ்ப்பாணத்துக்கு வெளியே எதைப்பற்றியும் அதிகம் சிந்திப்பதில்லை.

எனவே, இந்த வகையில் சிந்தித்து, ‘எத்தகைய சவால்கள் வந்தாலும் பரவாயில்லை. அதை எதிர்கொண்டு யாழ்ப்பாணத்துக்கு இரணமடுவின் தண்ணீரைக் கொண்டு வருவேன்’ எனக் கடந்த ஆண்டு நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஸ் குணவர்த்தனாவையே யாழ்ப்பாணத்தில் சொல்லவைத்து விட்டனர்.

‘இனவாதி’ என அதிகமான யாழ்ப்பாணத்தவர்களால் நிராகரிக்கப்படுகின்ற தினேஸ் குணவர்த்தன இந்த விசயத்தில் மட்டும் பாயாசத்தைப் பாதாம் பருப்போடு கலந்து யாழ்ப்பாணத்தவர்களின் வாயில் ஊற்றும் ஒருவராகக் கருதப்படுகிறார்.

அந்த அளவுக்கு இந்தத் திட்டம் யாழ்ப்பாணத்தவர்களுக்கு வெற்றியைத்தரும் ஒன்றாக மாறிவருகிறது. அது அவர்களுக்கு நிச்சயமாக வெற்றியைத்தரத்தான் போகிறது.

இதேவேளை கிளிநொச்சியில் இரணமடுவின் நீரை கடந்த நாற்பது ஆண்டுகாலமாக அனுபவிக்க முடியாமல் ஒரு தொகுதி மக்கள் உள்ளனர் என்று சொன்னோம். அவர்கள் கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதியில்தான்  உள்ளனர் என்றும் குறிப்பிட்டோம். கனகபுரம், உதயநகர், விவேகானந்த நகர், ஆனந்தபுரம், ஆனந்தநகர், கிருஷ்ணபுரம், விநாயகபுரம், பாரதிபுரம், மலையாளபுரம், தொண்டமான்நகர், பொன்னகர், முறிகண்டி, சாந்தபுரம், திருநகர், ஜெயந்திநகர், செல்வாநகர் என ஒரு பெரும் பிரதேசத்தில் இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

ஆழக்கிணறுகளை அல்லது குழாய்க்கிணறுகளை நம்பியிருக்கிறது இவர்களுடைய சீவியம்.

இவ்வாறு இந்தப் பிரச்சினையின் உண்மை நிலையைச் சொல்வதன்மூலம் பிரதேசங்களுக்கிடையிலான முரண்பாடுகளை உருவாக்குவதாக யாரும் கவலைப்படவோ, குற்றம்சாட்டவோ வேண்டியதில்லை.

ஏனெனில், யாழ்ப்பாணத்துக்கு குடிநீரைக் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் என்ன?

யாழ்ப்பாணத்தில் வடமராட்சி, தென்மராட்சியின் பல இடங்கள், தீவுப்பகுதி, யாழ்நகரப்பகுதி போன்ற இடங்களில் குடிநீர்ப்பிரச்சினை என்பது நூற்றாண்டுகளின் பிரச்சினை. இதற்கான நிரந்தரத்திட்டம் பற்றிச் சிந்திக்க வேண்டும். ஆனால், அப்படி யாரும் சிந்தித்ததாக இல்லை. இதேவேளை அங்கே குடியிருப்பு நிலத்துக்கும் பிரச்சினையுண்டு. பெரும்பாலான செம்மண் - விவசாய நிலமே குடியிருப்புகளாக்கப்படுகின்றன. ஆகவே இந்தப் பெருங்குறைபாடுகளைப் பற்றி ஏன் யாரும் பொருட்படுத்தவில்லை?

அங்கே குடிநீர்ப்பிரச்சினை ஒரு தலைப் பிரச்சினையாக மாறியுள்ளது என்றால், அங்கே ஏற்பட்டு வரும் செறிவான குடிப்பரம்பலைப் பிற பிரதேசங்களுக்குப் பகிர்ந்து கொள்ளலாமே!

ஆனால், அதற்கு அவர்கள் தயாராக இல்லை. அவர்கள் யாழ்ப்பாண நகரை விட்டு தென்மராட்சி போன்ற இடங்களுக்கே செல்லத்தயாரில்லை. தென்மராட்சியிலுள்ளோர் யாழ்ப்பாண நகரை நோக்கிச் செல்ல விரும்புகிறார்கள். பலர் அப்படிச் சென்று விட்டார்கள். இதுதான் அங்குள்ள மனப்பாங்கும் யதார்த்தமும். எனவே மாற்று வழிகள் கிடையாது என்றே இத்தகைய நீரை எடுத்துச் செல்லும் திட்டம் பற்றி யோசிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, யாழ்ப்பாணத்துக்குக் குடிநீரைக் கொண்டு செல்ல முனைவோர் கிளிநொச்சியில் குடிநீரும் இல்லாமல், இரணமடுவின் நீரைச் சொந்தம் கொண்டாடவும் முடியாமல் இருக்கின்ற கிளிநொச்சி மேற்கு மற்றும் தென்பகுதி மக்களைப் பற்றி இப்பொழுது கட்டாயமாகச் சிந்திக்கவேண்டும். அந்தச் சிந்தனையைக் கோருகிறது இந்தப் பத்தி. அதேவேளை, இந்தப் பிரச்சினையை அரசாங்கமும் தெளிவாக அணுகவேண்டும்.

00

அமைதிக்குத் திரும்புதல் அல்லது அமைதியை உருவாக்குதல்

Tuesday 19 June 2012














ன்றைய உலகத்தின் பொது உரையாடல் அல்லது பொது உரையாடலுக்கான அழைப்பு அல்லது பொதுச் சிந்தனையைக் கோருதல் என்பதெல்லாம்  அமைதியைக் குறித்ததாகவே அமைகின்றன. அதாவது அமைதிக்குத் திரும்புதல் அல்லது அமைதியை உருவாக்குதல் என்பதை நோக்கியதே இது. எல்லா வழிகளும் எல்லா வழிமுறைகளும் இறுதி இலக்கில் அமைதிக்கானவையே என்பது இதன் அர்த்தம். அமைதியற்ற நிலையில் உருவாக்கப்படும் எத்தகைய முன்னேற்றங்களும் நிலையற்றவை, பாதுகாப்பற்றவை என தெளிவாக உணரப்பட்டுள்ளதன் விளைவே இதுவாகும். ஆகவே, அமைதியின்மையின் மீது எதையும் எழுப்பிப் பிரயோசனமில்லை. எல்லாவற்றுக்கும் முதலில் அமைதியை உருவாக்க வேண்டும் என்று சிந்திக்கப்படுகிறது.
அமைதிக்கான அவா என்பது, இன்றைய உலகத்தில் 98 வீதத்திற்கும் அதிகமான மக்களிடம் உள்ளது. எல்லா மத பீடங்களும் அமைதிக்காகப் பிரார்த்திருக்கின்றன. உலகிலுள்ள பெரும்பாலான ஊடகங்களும் அமைதியைக் குறித்தே எழுதுகின்றன, பேசுகின்றன. கட்சிகள், தலைவர்கள், அமைப்புகள் என அனைத்துத் தரப்புகளும் அமைதியை உருவாக்குவதற்காகவே தாம் உழைத்து வருவதாகச் சொல்வதைக் காண்கிறோம். அமைதிக்காகவே உலகெங்கும் ஏராளம் மன்றங்களும் அமைப்புகளும் உருவாகியுள்ளன. அமைதியை உருவாக்குவதற்காக அல்லது அமைதிக்குத் திரும்பிச் செல்வதற்காக பல  வழிமுறைகள் பிரஸ்தாபிக்கப்படுகின்றன. இந்த வழிமுறைகளைப் பற்றிய விளக்கங்கள், பிரயோக நிலைக்குரிய ஏற்பாடுகள், திட்டமிடல்கள் என ஏராளம் ஏராளம் முயற்சிகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. இவை ஒவ்வொன்றுக்குமாகத் தாராளமாக பணம் வாரியிறைக்கப்படுகிறது. அமைதி முயற்சியில் ஈடுபடுவோருக்கான அல்லது அமைதிக்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதாகக் கூறும் அமைப்புகளுக்கான மதிப்பும் மரியாதையும் தாராளமாக வழங்கப்படுகிறது.
ஆனால், இவ்வாறு வழங்கப்படும் முன்னுரிமைக்கும் முயற்சியின் அளவுக்கும்  அமைதி சாத்தியப்படவில்லை. அது இலகுவில் எட்டமுடியாத கனியாகவே உள்ளது. அமைதி என்பது ஒரு வானவில்லைப்போல அழகியதாகத் தோற்றம் காண்பிக்கிறதே தவிர, அது பூமியில் மலர்வதன் சாத்தியங்கள் மிகமிக அபூர்வமானது என்பதே பலருடைய அனுபவம். ஒலிவ் இலையைத் தன் அலகுகளில் ஏந்திய சமாதானப் புறாக்கூடக் களைப்படைந்து விட்டது. ஆகவே, அமைதிக்குத் திரும்புவது இலகுவானதல்ல. உலகமே இதையே சொல்கிறது. உலகத்தின் அனுபவமே இதுதான். சிங்களவர்களும் இதையே சொல்கிறார்கள். தமிழர்களும் இதையே கூறுகிறார்கள். கறுப்பர்கள், அரேபியர்கள் எல்லோருடைய அனுபவமும் இதுதான். எப்படி அமைதிக்குத் திரும்புவது என்றுதான் ஒருவருக்கும் புரியவில்லை.
அப்படியென்றால், அமைதிக்குத் திரும்புதல் என்பதன் அர்த்தம் என்ன? அமைதியை உருவாக்குதல் என்பதன் பொருள் என்ன? இன்றைய உலகத்தில் மிகக்கடினமான ஒரு பதம் இது. மிகக் கடினமான ஒரு செயல்முறையும் திட்டமும் கூட. எனவே புறக்கணிக்க முடியாதது. அவசியமான எதுவும் புறக்கணிக்க முடியாததே. எனவே, அமைதியை உருவாக்குவது, அமைதியை அடைவது என்ற இலக்கில் பயணிப்பது தவிர்க்க முடியாததாகிறது.
அவசியமான ஒன்றை, புறக்கணிக்க முடியாத ஒன்றை, உலகம் தழுவிய ஒன்றை நாமும் கண்டடைய வேண்டியுள்ளது, அதை நாமும் உருவாக்க வேண்டியிருக்கிறது. இலங்கையர்கள் ஒவ்வொருவருக்கும் முன்னுள்ள சவாலும் தேவையும் இதுவாகும். நீண்ட யுத்தத்தைச் சந்தித்தவர்கள் இலங்கையர்கள். முரண்களால் சிதைவுண்ட சமூகங்களாக இலங்கை மக்களும் அப்படியான சமூகங்களை உள்ளடக்கிய நாடாக இலங்கையும் உள்ளன. முரண்களை உள்ளடக்கியிருக்கும் சமூகங்கள் அவற்றைக் களையவில்லை எனில் பிரச்சினைகளால் துவண்டு விடும். முடிவற்ற பிரச்சினைகள் முன்னேற்றத்துக்குத் தடையானவை. அதேவேளை அவை பெரும் பாதிப்பையே ஏற்படுத்துவன. கடந்த காலத்தில் சிந்தப்பட்ட இரத்தமும் கண்ணீரும் இதைத் தெளிவாகவே  சொல்லுகின்றன. இந்த இரத்தமும் கண்ணீருமே இன்று அமைதியையும் கோருகின்றன.
ஆகவே கடந்த காலத்தைச் சாட்சியப்படுத்திக்கொண்டு, அதைப் படிப்பினையாகக் கொண்டு, வாழ்வனுபவமாகக் கொண்டு, அமைதிக்காக ஒவ்வொருவரும் தங்களின் மனதில் முன்னகரும் அடிகளை முன்வைக்க வேண்டியுள்ளது. இதை இங்கே உரைப்பதைப்போல மிக எளிதில் செய்து விட முடியாதென்பதே மீண்டும் நாம் வலியுறுத்துவது. அமைதிக்கான வழி என்பது மிகமிகக் கடினமானது. இன்னும் சொல்லப்போனால் யுத்தத்தை நடத்துவது இலகுவானது,அமைதியைக் கண்டடைவதையும் விட, அதை உருவாக்குவதையும் விட.
யுத்தத்தில் வெற்றி தோல்வி என்ற இரண்டு பரிமாணங்களே உண்டு. ஆனால், அமைதி அத்தகையதல்ல. அது பல்பரிமாணமுடையது. இந்தப் பல்பரிமாணமே அமைதியின் முழுமையாகும்.
யுத்தத்தில் முரண்களே அடிப்படை. அமைதியில் அல்லது சமாதானத்தில் இணக்கமே அடிப்படையானது. முரண்களை உருவாக்குவது மிக எளிது. ஆனால், முரண்களை அகற்றுவதும் இணக்கத்தை ஏற்படுத்துவதும் மிகக் கடினமானது. முரண்கள் வளர வளர யுத்தச் சூழல் தீவிரமடைந்து கனியும். அது மேலும் தீவிரமடையும்போது யுத்தம் உச்சகட்டத்தை எட்டும். அல்லது கொதிநிலைகொள்ளும். ஆனால், சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு, அமைதி உருவாக்குவதற்கு முரண்நிலை அம்சங்கள் களையப்பட வேண்டும். அந்த இடத்தில் நம்பிக்கையும் புரிந்துணர்வும் கட்டியெழுப்பப்படுதல் வேண்டும். இவ்வாறு கட்டியெழுப்பப்படும் நம்பிக்கையும் புரிந்துணர்வும் முரண்களால் உருவான காயங்களை ஆற்றும். பகைமையை மறக்க வைக்கும். பகைமையை மறக்கடிக்காத வரையில் காயங்களை மாற்ற முடியாது. காயங்கள் மாறாத வரையில் அது உண்டாக்கிய வலிகளும் அவற்றின் நினைவுகளும் மாறாது. காயங்களும் வலிகளும் அவற்றின் நினைவுகளும் முரண்களையே வளர்க்கும். அல்லது முரண்களை வளர்க்கும் சக்திகளுக்கு வாய்ப்பளிக்கும்.
இலங்கையில் நடந்து கொண்டிருப்பது காயங்களைப் புதுப்பிக்கும் நிகழ்ச்சிகளே. யுத்தத்துக்குப் பின்னர் அமைதிச் சூழல் தோன்றி விட்டது என்று சனங்கள் கருதினாலும் சரி, அல்லது அவர்களை அப்படி நம்பவைத்தாலும் சரி, உண்மையில் சனங்கள் உண்மைக்கு அப்பால், அமைதிக்கு வெகு தொலைவில், முரண்களின் மத்தியிலேயே நிறுத்தப்பட்டுள்ளனர். இது அபாயங்களின் மத்தியில், அவர்களைக் குடியிருத்தியிருப்பதற்குச் சமனாகும். சனங்களைச் சுற்றி மீண்டும் அபாய வலைகள் பின்னப்படுகின்றன. அவர்களுடைய நாளாந்தச் செயற்பாடுகளில் இருந்து, மத – கலாச்சார விசயங்கள், வாழிடங்கள், நம்பிக்கைகள் அனைத்துமே முரண்களுக்குள் இட்டுச் செல்லப்படுகின்றன. தினமும் நம்பிக்கையீனமான – அபாயமூட்டும் செய்திகளையே அவர்கள் அறிகிறார்கள். அரசியல் அரங்கில் நகர்த்தப்படும் காய்கள் அமைதிப் பிராந்தியத்திலிருந்து ஒவ்வொருவரையும் வெளியகற்றிக் கொண்டேயிருக்கின்றன. பெரும்பாலான அரசியல்வாதிகள் மனங்களில் தீயையும் விசத்தையும் கத்தியையும் ஏந்திக் கொண்டேயிருக்கிறார்கள். ஏன் ஊடகங்களிற் பலவும் கூட இப்படித்தான் உள்ளன. பெரும்பாலான ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள் எல்லோரும் நடு நிலையைத் தவறிக் கொண்டிருக்கின்றனர். அதாவது அமைதிக்கு மறுதிசையில் சென்று கொண்டிருக்கின்றனர். இது எங்கே கொண்டு நிறுத்தும் என்பதை யாரும் அறியாததல்ல.
யுத்தத்தத்திலிருந்த மீண்ட நாடு என்ற அடையாளங்களும் யுத்தத்திலிருந்து தப்பிய மக்கள் எனும் அனுபவங்களும் இங்கே கேலிக்குரியனவாகி விட்டன. மறக்கடிக்கப்பட்டு வருகின்றன. யுத்தத்தின் சுவையை உலக மக்கள் உணர்ந்த விதத்திற்கும் இலங்கையர்கள் உணர்ந்த விதத்திற்கும் இடையே வேறுபாடுகள் அதிகம். குறிப்பாக இரண்டாம் உலகப்போரில் மோதுண்ட சமூகங்களும் நாடுகளும் அதற்குப் பின்னர் இணக்கப் புள்ளிகளை நோக்கி நகரத் தொடங்கின. தென்னாபிரிக்காவில் இறுக்கமான மனதோடும் கடினமான நடைமுறைகளோடும் இருந்த வெள்ளையர்களும் கறுப்பர்களும் இணக்கப் புள்ளிகளை நோக்கி நகர்ந்திருக்கின்றனர். வரலாற்றின் வழிநெடுகலும் முரண்களோடு பயணித்த இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் முரண்களைக் களைந்து விட்டனர். அல்லது முரண் உருவாக்கங்களைத் தவிர்த்து வருகின்றனர். இல்லையெனில் சிலுவை யுத்தங்கயும் புனிதப் போர்களும் இன்னும் முடிவுக்கு வந்திராது.
ஆகவே இணக்கப் புள்ளிகளைக் களைய வேண்டியுள்ளது. ஆனால் அது எளிதானதல்ல. சமாதானத்துக்கும் அமைதிக்கும் எப்போதுமிருப்பவை எதிர்நிலைகள். இந்த எதிர்நிலைகள் மாற்றுச் சிந்தனையாளர்களையும் யதார்த்தவாதிகளையும் அமைதியைக் குறித்து விசுவாசமாகச் சிந்திப்போரையும் அங்கீகரிப்பதில்லை. சாத்தியமான விசயங்களைக் குறித்துச் சிந்திப்போர், மாற்று உபாயங்களை முன்மொழிவோர், எப்போதும் எதிர்நிலைச் சக்திகளால் எதிராளிகளாகவே அடையாளப்படுத்தப்படுகின்றனர். அல்லது பெறுமதியற்றோர் ஆக்கப்படுகின்றனர். இன்று இலங்கை அரசுக்குள் இருந்து அமைதியைப் பற்றிச் சிந்திக்கும் முற்போக்காளர்கள் கூட அரசாங்கத்திற்குள் இருக்கும் எதிர்நிலைகளால் அவ்வாறுதான் நோக்கப்படுகிறார்கள். அரசுக்கு வெளியேயும் இதுதான் நிலைமை. ஊடகங்களிற்கூட இத்தகைய நோக்கு நிலைதான் உண்டு.
எனவே, இந்த அமைதியைச் சாத்தியப்படுத்திகளை இவை முழுமூச்சுடன் எதிர்க்கின்றன.
அப்படியானால் எதிர்நிலைகளைக் கையாள்வது எவ்வாறு?
கடினமான எதுவும் உரிய பொறிமுறைகளின் மூலமே இலகுவாக்கப்படுகின்றது. எனில், இதற்குரிய பொறிமுறையும் உருவாக்கப்பட வேண்டும். அந்தப் பொறிமுறையை இயக்கமுற வைக்கவும் வேண்டும். இதற்குச் சிறந்த, ஆளுமை மிக்க, விசுவாசமும் உண்மை உணர்வும் நிரம்பிய மனிதர்களின் சேர்க்கை தேவை. இந்தச் சேர்க்கையில் நிகழும் உரையாடல் தேவை. இந்த உரையாடலை அலைகளாக்கும் விதங்கள் தேவை. இவை உண்டாக்கும் விளைச்சலே அமைதிக்கு நிரந்தரமாகத் திரும்ப வைக்கும். அல்லது அமைதியை உருவாக்கும்.
இங்கே அமைதிக்குத்திரும்புவதற்கான ஒரே வழி பகை மறப்பும் நல்லிணக்கமுந்தான். ஆனால், அது இன்றைய இலங்கை அரசாங்கம் கூறும் வகையில் அல்ல. அது அர்த்தப்படுத்தும் விதமாகவும் அல்ல. அதற்கப்பால், அது உணரவே முடியாத உண்மை வெளியில் – சனங்களின் மத்தியில், அவர்களுடைய விருப்பங்களின் மையத்தில் உள்ளது. இதைக்குறித்துச் சிந்திப்போர் யார் என்பதே இன்றைய கேள்வி. இந்தக் கேள்வியே அமைதிக்குத் திரும்புதல் அல்லது அமைதியை உருவாக்குதல் எப்படி என்பதிலும் உள்ளது.
00

உணர்ச்சிகரமான அரசியல் அணுகுமுறையின் விளைவுகள் ?

Monday 11 June 2012







அரசியலில் உணர்ச்சிகரமான அணுகுமுறை ஏற்படுத்துகின்ற விளைவுகள் எப்போதும் பயங்கரமானவையாக - பாதகமானவையாகவே அமைவதுண்டு. அறிவுபூர்வமாக அணுகப்படும் விசயங்கள் நன்மைகளையும் வெற்றியையுமே தருவன. உலக அரசியல் வரலாறு இந்த இரண்டு பிரிகோடுகளில்தான் இயங்குகிறது. எதை நாம் விதைக்கின்றோமோ அதுவே பயிராகவும் விளைச்சலாகவும் நமக்கு மீண்டும் கிடைக்கும். இது அடிப்படை விதி.

இந்த விதியை எப்படிப் புறந்தள்ளிவிட முடியும்?

ஆனால், தமிழர்கள் இந்த விதியைப் புறந்தள்ளியே வருகிறார்கள். அவர்கள் வரலாற்றின் எதிர்த்திசையிலேயே நெடுங்காலமாகப் பயணிக்கிறார்கள். அதனாலேயே அவர்கள் தொடர்ந்தும் தோல்விப் பரப்பில் நின்று விம்ம வேண்டியுள்ளது. தங்களால் வெற்றியடைய முடியாத போதெல்லாம் எதிரியைச் சபிக்கிறார்கள். எப்போதுமே எதிர்த்தரப்பை வசைபாடுவோரும் எல்லை கடந்த அளவுக்கு எதிர்ப்போரும் தோல்வியை நிரந்தரமாக்கியோராகவே இருப்பர். இதுவும் ஒரு அடிப்படை விதியே. வெற்றியடைவோர் எதிர்த்தரப்பைப் பற்றி அதிகம் பொருட்படுத்துவதில்லை. தோல்விகண்டவர்களின் உள்ளம் எப்போதும் குமுறிக் கொண்டும் கொந்தளித்துக் கொண்டுமிருக்கும்.

இதனால், தோல்வியை நிரந்தரமாகவே தங்களிடம் கொண்டுள்ள சமூகங்கள், எதிர்த்தரப்பின் மீதான சபித்தலிலும் கடிந்து கொள்ளுதலிலும் ஒரு வித சுகத்தைக் காண்கிறன. அதுவும் உணர்ச்சி மயப்பட்டே நிகழ்கிறது. அவை மேற்கொள்கின்ற எதிர்ப்பு நடவடிக்கைகள் கூட உணர்ச்சிகரமானவையாகவே உள்ளன.

வெற்றிதோல்வி என்பதற்கு அப்பால் எதிர்த்தரப்பை வசைவதிலேயே தமிழர்களும்  சமனிலை அடைகிறார்கள்@ அல்லது திருப்தியடைகிறார்கள். யதார்த்தத்தில் தோல்வியின் மீதே அவர்கள் வாழ்கிறார்கள்@ உறங்கிக் கொண்டிருக்கின்றனர்.

உணர்ச்சிகரமாக அணுகப்படும் அரசியலானது அழிவிலும் பின்னடைவிலுமே போய்ச் சேர்கிறது. ஆனால், அந்த அரசியலுக்கு ஒரு கட்டம் வரையில் மக்களிடம் கிடைக்கின்ற பேராதரவு மிகப் பெரிது. இது ஒரு விளங்கிக் கொள்ளக் கடினமான விசயந்தான். ஆயினும் அப்படித்தான் யதார்த்தம் உள்ளது.

எதன்பாற்பட்டதாயினும் ஒரு சிறு உணர்ச்சிப் பொறிபோதும், மிகப் பெரிய தீயை மூட்டிவிடுவதற்கு. அது மூண்டெரியும் காட்டுத்தீயைப்போல விளாசி எரிந்து எல்லாவற்றையும் அழித்துவிட்டு அப்படியே அடங்கிவிடும். அதனுடைய இறுதிச்சேரிடம் மயானமே. இன, மதக் கலவரங்கள் எல்லாம் உணர்ச்சிகரமான அணுகுமுறையின் விளைவுகள். இந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படும் யுத்தமும் சரி, அரசியலும் சரி மயானத்திலேயே போய் முடிகின்றன.

ஈழத்தமிழர்களின் அரசியற் போராட்டமும் பெரும்பாலும் உணர்ச்சிமையத்தையே அடிப்படையாகக் கொண்டது.

இதற்கு அண்மைக் கால உதாரணம் ஒன்று.

பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத் பதவியேற்று 60 ஆண்டு நிறைவு பெற்றதையடுத்த கொண்டாட்டத்துக்காக கடந்த 03.06. 2012 இல் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ லண்டனுக்குச் சென்றவேளை அங்கே புலம்பெயர் தமிழர்கள் மிகப்பெரிய அளவில் தீவிர எதிர்ப்பு நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளால் மகிந்த ராஜபக்ஷ மிகுந்த நெருக்கடிக்குள்ளாகியுள்ளார். இது இலங்கைக்கு மேலுமொரு நெருக்கடியாக அமைந்துள்ளது. ஏற்கனவே போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் போன்ற குற்றச்சாட்டுகளால் துவண்டு போயிருக்கும் இலங்கைக்கு இந்த எதிர்ப்பு மேலும் ஒரு சங்கடமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய ஒரு நெருக்கடியை மகிந்த ராஜபக்ஷ 2010 டிசம்பரிலும்  லண்டனில் சந்தித்திருந்தார். அப்போது அவர் லண்டனில் உள்ள சிங்களச் சமூகத்தின் அழைப்பின் பேரில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஒக்ஸ்போர்ட் சங்கத்தில் உரையாற்றுவதற்காகச் சென்றிருந்தார். அங்கே புலம்பெயர் தமிழர்கள் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகளால் உரையாற்ற முடியாத நிலையிலே திரும்பியிருந்தார். இதனால், நிகழ்ச்சி நிரலைச் சீராகப் பேணமுடியாத நிலைமைக்குள் அவர் தள்ளப்பட்டார்.

இது குறித்து சர்வதேச ஊடகங்களும் கூடுதல் கவனிப்பைச் செலுத்தியிருந்தன.

இந்த அளவில் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் புலம்பெயர் தமிழர்கள் உட்பட ஏனைய தமிழர்களுக்கும் வெற்றியாக அமைந்துள்ளதாக ஒரு தோற்றமுண்டு. இவை தமக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என வாதிடுவோரும் உள்ளனர். அவர்கள் அதை அப்படித்தான் நம்புகின்றனர். அதிலும் முழு அளவில் நம்புகின்றனர்.

அதேவேளை, இந்த நடவடிக்கை வெளிப்பார்வையிலும் முதற் கட்டத்திலும் ஒரு எல்லைவரையில் கணிசமான வெற்றியைத் தமிழ்த்தரப்பிற்குக் கொடுத்துள்ளது என்பது உண்மையே.

ஆனால், அது அத்தகைய வெற்றியைப் பெற்றுள்ளதா? அல்லது அது நிர்ணயிக்கத்தக்க வெற்றியைத் தரக்கூடிய அணுகுமுறையாக அமைந்துள்ளதா என்பதே இங்கே உள்ள கேள்வியாகும். அதாவது, இதன் இறுதி விளைவுகள் எப்படி அமைந்துள்ளன? மேலும் எவ்வாறு அமையவுள்ளன? என்பதே அந்தக் கேள்விகளாகும்.

இதை மேலும் விவாதிப்பதற்கும் விளங்கிக் கொள்வதற்கும் முன்னர் இதற்குப் பொருத்தமான நாமறிந்த இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம்.

விடுதலைப்புலிகள் தங்களின் போர் மற்றும் அரசியல் நடவடிக்கைகளால் பல வெற்றிகளைக் குவித்தவர்கள். மிகப் பெரிய இராணுவ வியப்புகளையும் வெற்றிகளையும் சாதனைகளையும் பெற்றவர்கள். இதனையிட்டுத் தமிழ்ச் சமூகம் தன் மீதும் புலிகளின் செயற்பாடுகளின் மீதும் பெருமையும் நம்பிக்கையும் கொண்டது.

மட்டுமல்ல, புலிகள் இருபது ஆண்டுகளாக இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை அரங்கில் செலுத்திய செல்வாக்கு இன்னொரு வகையில் தமிழ் மக்களிற் பெரும்பாலானோரை வியப்படைய வைத்தது. அவ்வாறே அரசியல் எழுச்சி நடவடிக்கைகளிலும் புலிகள் பெருந்திரளான மக்களை அணிதிரள வைத்தனர். புலிகளின் மேதின ஊர்வலங்கள், அரச எதிர்ப்பு அடையாளக் கூட்டங்கள், பொங்குதமிழ் போன்ற எழுச்சி அரங்குகள் மிகப் பெரிய வெற்றியின் சின்னங்களாகவே உணரப்பட்டன. அதாவது இந்த மதீப்பீடென்பது பொதுநிலைப்பட்டது அல்லது பெரும்பான்மையோரின் உணர்தலாக இருந்தது.

ஆனால், இறுதி விளைவு? அது அனைவரும் அறிந்ததே. எதிர்பார்த்ததையும் விடப் பேரழிவில், பெரும் பின்னடைவில் எல்லாமே முடிந்தன. உணர்ச்சிகரமான அரசியலின் செல்வாக்கு இந்தப்போராட்டத்தில் அதிகரித்திருந்தமையே இத்தகைய நிலைக்குக் காரணமாகும். எதையும் உணர்ச்சி மயப்பட்டு அணுகியதன் விளைவு அது.

இந்த இடத்தில் இன்னொரு உதாரணத்தையும் நாம் பார்க்கலாம்.

இலங்கை இந்திய உடன்படிக்கையை எதிர்த்து புலிகளுக்கும் இந்தியப் படைகளுக்கும் இடையில் நடந்த போரின் பின்னர் இந்தியப் படைகள் வெளியேறிச் சென்றன. இந்த வெளியேற்றத்துக்கான உண்மைக் காரணங்கள் பலவாக இருந்தாலும் புலிகளின் கூற்றானது, தமது நடவடிக்கையின் விளைவாகவே இந்தியப் படைகள் வெளியேற வேண்டியிருந்தது என்று அமைந்தது. ‘உலகத்தின் நான்காவது வல்லரசுடன் மோதி வெற்றிபெற்றோம்’ என்று பகிரங்கமாகவே புலிகள் கூறிவந்தனர்.

ஆனால், இறுதியில் (பத்தொன்பது ஆண்டுகளின் தாமதத்தின் பிறகு) இந்தியா புலிகளைத் தோற்கடித்தது.

ஆகவே, வெளித்தெரிந்த வெற்றித் தோற்றப்பாடுகளின் இறுதி விளைவுகள் பயங்கரமானவையாக – பாதகமானவையாகவே அமைந்தன.

ஆனால், இனவாத அரசாக இருப்பினும் அதை எதிர்கொள்கின்ற இலங்கை அரசின் அணுகுமுறை பெரும்பாலும் அறிவுபூர்வமானது. குறிப்பாகச் சிங்களத் தரப்பின் அரசியல் அடித்தளம் அறிவினால் கட்டப்பட்டுள்ளது. ஆகவேதான் அவர்களிடம் ஒரு செழிப்பான ராஜதந்திரப் பாரம்பரியம் வளர்ந்துள்ளது. எதிரிகளையே நண்பர்களாக்கிக் கொள்ளும் தந்திரோபாயத்தில் சிங்களத்தரப்பு தேர்ச்சியுடையது. எதிரியைத் தனிமைப்படுத்தி எதிரியின் எதிரிகளைக் கொண்டே தன்னுடைய எதிரியை முறியடிக்கும் உபாயத்தையும் அவர்கள் மிக இலகுவாகக் கையாண்டு வருகிறார்கள். எனவேதான் அவர்கள் மிகக் கடினமான நிலைமைகளிலும் வெற்றியைப் பெறுகிறார்கள்.

கூடவே ஈழப்போராட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தியா மற்றும் வெளிச் சக்திகள்  அனைத்தினது அணுகுமுறைகளும் அறிவுபூர்வமாகவே உள்ளன. எனவேதான் அவை கண்ணுக்குப் புலனாகாத வகையில் மிகக் கச்சிதமாக வெற்றிகரமான அரசியல் அடைவுகளைப் பெறுகின்றன.

ஆகவே வெளித்தெரியும் தோற்றங்கள், மேலோட்டமான உணர்கை சார்ந்த  மதிப்பீட்டுக்கும் அப்பால் செறிந்திருக்கின்ற அறிவுசார் அணுகுமுறைகளே வெற்றியை நிர்ணயிக்கின்றன.

இந்தப் பின்னணியில் நாம் முன்னே கூறிய மகிந்த ராஜபக்ஷவின் லண்டன் விஜயத்தை ஒட்டிய புலம்பெயர் தமிழர்களின் அரசியல் அணுகுமுறைகளைப் பார்க்கலாம்.

புலம்பெயர் தமிழர்கள் மேற்கொண்ட நடவடிக்கை உணர்ச்சிகரமாகவே அமைந்துள்ளது. இந்த நடவடிக்கை ஒழுங்கு படுத்தப்பட்ட விதத்திலிருந்து, அது வழிநடத்தப்பட்டமை, அதன் வெளிப்பாடு, அதன் விளைவு அனைத்தும் உணர்ச்சிகரமானவையாகவே அமைந்துள்ளன.

புலிக்கொடிகளைத் தாங்கியவாறு, இலங்கை அரசுக்கும் அதன்படைகளுக்கும் அதிபருக்கும் எதிரான கோஷங்களை உரத்துக் கூவியவாறு அதிபரின் பயண வழிகள், பங்கேற்பிடங்கள் போன்றவற்றில் எதிர்ப்பாளர்கள் நின்றுள்ளனர். மிக ஆக்ரோஷமாகத் தங்களின் எதிர்ப்பை அதிபருக்குக் காட்டியுள்ளனர்.

ஒரு காலத்தில் இலங்கையிலே சுமுகமாக வாழ்வதற்கான சூழ்நிலை இல்லை என்று வெளியேறி, வெளிநாடுகளில் தஞ்சமடைந்த தமிழர்கள் அங்கே இன்று அரசியற் சக்தியாக இவ்வாறு உருத்திரண்டிருக்கிறார்கள் என்பது இலங்கை அரசுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் உணர்த்தப்பட்டுள்ளது.

தாங்கள் பட்ட வதைகளுக்காகவும் தமது இனத்தவர் பட்ட துயரங்களுக்காகவும் இந்த எதிர்ப்பை இவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இதைத் தவிர அவர்களுக்கு வேறு வழிகள் தெரியவில்லை. முன்னர் உள்நாட்டில் - தாம் பிறந்த தாய் நாட்டில் - அவமானப்படுத்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் இன்று இரவல் தாய்நாட்டில் நின்று தங்களுடைய அவமானங்களைத் துடைத்தெறிய முற்படுகிறார்கள். அல்லது தங்களுக்கு நெருக்கடியைத் தந்த அரசின் தலைவர்களை எதிர்க்கிறார்கள் அல்லது அவர்களுக்கு நெருக்கடிகளைக் கொடுக்க முற்படுகிறார்கள். இதெல்லாம் புரிந்து கொள்ளக் கூடியதே.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையைக் குறித்த செய்திகளை இலங்கை தொடக்கம் உலகத்தின் பல திசைகளிலும் இருக்கும் பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் முக்கியத்துவமளித்து வெளிப்படுத்தியுள்ளன.

இதேவேளை, வெளிநாடொன்றிற்கு விருந்தாளியாகச் செல்லும்போது அங்கே உள்ள சொந்த நாட்டின் மக்களாலே வரவேற்கப்படுவதற்குப் பதிலாக இவ்வாறு நெருக்கடிக்குள்ளாக்கப்படும் நிலையை ஒரு தலைவர் சந்திப்பதென்பது சாதாரணமானதல்ல. இதற்குக் காரணம் இன ஒடுக்குமுறையும் அது ஏற்படுத்திய வரலாற்றுக் காயங்களும் நீதி மறுப்பின் எதிர்விளைவுகளுமேயாகும்.

இதைத்தான் கால மாற்றம் அல்லது வரலாற்றின் முரண்சுவை என்பதா?

ஆனால் புலம்பெயர் தமிழர்களின் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் எதிர்பார்ப்பதையும் விட எதிர்நிலை அம்சங்களையே அதிகமாக உருவாக்கக் கூடியனவாக உள்ளன.

1.   இந்த எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டவர்கள் புலிகளின் ஆதரவாளர்கள் மட்டுமே. ஆகவேதான் அவர்கள் புலிக்கொடிகளை ஏந்தியிருந்தனர். எனவே இது தோல்வியைச் சந்தித்த புலிகளின் எச்சங்கள் மேற்கொண்ட ஒரு நடவடிக்கை என இலங்கை அரசு சிங்கள மக்களுக்கும் உலகத்துக்கும் சொல்லிச் சமாளித்துக் கொள்ள வாய்ப்பை அளித்துள்ளது.

2.   புலிகளின் எச்சங்கள் இன்னும் இலங்கை அரசுக்கும் அமைதிக்கும் எதிராகவே செயற்படுகின்றன. ஆகவே இதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அவசியம் என்ற பேரில் இலங்கையில் படைத்துறைக்கான முக்கியத்துவத்தை மேலும் வழங்கவும் அதிகரிக்கவும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



3.   விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் இன்னும் உள்ளது. தப்பியோடிய புலிகளும் வெளிநாடுகளில் உள்ள புலிகளுமாக அவர்கள் இன்னும் அபாய நிலையை உருவாக்குதற்காக முயற்சிக்கிறார்கள் என்ற தோற்றப்பாட்டைச் சிங்களச் சமூகத்துக்கு காட்ட முற்படும்.



4.   இதேவேளை தமிழ்ப் பிரதேசங்களிலும் புலிப்பயத்தைக் காரணம் காட்டி அவற்றை இறுக்கமான சூழலுக்குள் தொடர்ந்தும் வைத்திருக்க முயற்சிப்பதற்கான காரணத்தையும் இதன் மூலமாக அரசாங்கம் பெற்றுக்கொண்டதாகும்.

5.   தமிழ்ப்பிரதேசங்களில் படைக்குறைப்பைச் செய்யாமல் அதை நியாயப்படுத்துவதற்கான ஒரு காரணத்தை அரசாங்கத்துக்கு இந்த எதிர்ப்பு நடவடிக்கை வழங்கியுள்ளது.

6.   மறுபக்கத்தில் வெளிநாட்டில் புலிகளின் ஆதரவாளர்களால் ஜனாதிபதிக்கு எதிர்ப்புக் காண்பிக்கப்பட்டது, அவமரியாதை செய்யப்பட்டது என்ற கோபத்தை ஏற்படுத்தி, மேலும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான சிங்கள மக்களின் ஆதரவுப் பலத்தை மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கும் சாத்தியங்களை உருவாக்கியுள்ளது.

7.   முன்னர் தமிழர்களைச் சிங்களத் தரப்புக்கு எதிராகச் செயற்படத்தூண்டி, அதன் மூலம் உருவாகிய இடைவெளியைப் பயன்படுத்தித் தன்னுடைய நலன்களை எவ்வாறு இந்தியா பெற்றுக் கொள்ள முயன்றதோ அதைப்போன்ற ஒரு அணுகுமுறையை இப்போது பிரிட்டன் கையாள்கிறது. இதற்குத் தமிழர்கள் பலியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

8.   மிகப் பெறுமதியாக வாய்த்த இந்தப் போராட்டம் ஒரு எதிர்ப்பு நடவடிக்கையாகச் சுருக்கப்பட்டு விட்டது.

ஆகவே இந்த எதிர்ப்பு நடவடிக்கையானது அதனுடைய உள்ளடக்கத்தில் எதிர்த்தரப்புக்கான அனுகூலங்களை நீண்ட கால அடிப்படையில் வழங்கியுள்ளது. அந்த அளவுக்கு அது தமிழர்களுக்குப் பலவீனங்களைத் தந்துள்ளது.

இதற்குக் காரணம், இந்த எதிர்ப்பு நடவடிக்கையை ஒழுங்கு படுத்திய முறையும் இதை நடத்திய விதமும் இதைப் அரசியல் ரீதியாகப் பலவீனமானதோர் நடவடிக்கையாக மாற்றிவிட்டன.

நல்லதொரு வாய்ப்பாகக் கிடைத்த இந்த நடவடிக்கையை மேற்கொண்ட அமைப்புகளோ அல்லது தரப்பினரோ எத்தகைய தெளிவான சேதிகளையும் சிங்களச் சமூகத்துக்கும் சொல்லவில்லை@ சர்வதேச சமூகத்திற்கும் சொல்லவில்லை. இந்த எதிர்ப்பு நடவடிக்கையானது நியாயத்தின் பாற்பட்டது, தவிர்க்க முடியாதது, இது ஒரு பரந்து பட்ட தரப்பினரின் எதிர்ப்பு நடவடிக்கையாகும், இது அரசியல் ரீதியான அணுகுமுறையின் வெளிப்பாடு, ஜனநாயக முறைமைகளையும் அரசியல் நாகரீகத்தையும் பேணிக்கொண்டு எதிர்ப்புக் காட்டப்பட்டுள்ளது என்றவாறு இதை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

அவ்வாறு செய்வதற்கான சிந்தனை – பொறிமுறையைப் பற்றிய அறிவு - இல்லாமற் போனமை துரதிருஷ்ரவசமானது. பதிலாக உணர்ச்சி வசப்பட்ட நிலையில் நடத்தியுள்ள ஒரு நடவடிக்கையாக மாறிவிட்டது.

இதனால், தன்னுடைய கடும்போக்கையும் தவறான அணுகுமுறைகளையும் தொடர்ந்தும் கடைப்பிடிப்பதற்கு இலங்கை அரசாங்கத்துக்கான வாய்ப்பை இந்த எதிர்ப்பு நடவடிக்கை வழங்கியுள்ளது.

ஆனால், ஜனாதிபதியை புலம்பெயர் தமிழர்கள் நெருக்கடிக்குள்ளாக்க வேண்டிய நிலைமை அவர்களைப் பொறுத்தவரையில் தவிர்க்க முடியா ஒன்று எனச் சொன்னோம். அரசாங்கமும் விளங்கிக் கொள்ள வேண்டும். ஜனாதிபதியும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

லண்டனுக்கு ஜனாதிபதி செல்லும்போது அங்கே உள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களாகிய இலங்கையர்கள் அனைவரும் அவருக்குப் பூச்செண்டுக் கொடுத்து வரவேற்கும் ஒரு நிலையை ஏற்படுத்தாத வரையில் இந்த மாதிரியான அசௌகரியங்களும் நெருக்கடிகளும் இருந்தே தீரும். அவற்றுக்கு முகங்கொடுத்தேயாக வேணும்.

இது லண்டனுடன் நின்று விடப்போவதில்லை. அதற்கப்பால் வௌ;வேறு நாடுகளிலும் வௌ;வேறு அளவுகளில் நடைபெறத்தான் போகிறது. ஏற்கனவே சில சம்பவங்கள் நடந்தும் உள்ளன. இதே காலப்பகுதியில் இலங்கை அமைச்சரில் ஒருவரான சிறிசேன கூரே இந்தியாவில் கோயம்புத்தூருக்குச் சென்றவேளை அங்கே தமிழர்கள் காட்டிய எதிர்ப்பை அடுத்துத் திரும்பியுள்ளார்.

உண்மையில் போர் முடிந்த பின்னராவது, நிலைமைகளை அமைதியை நோக்கிக் கொண்டு சென்றிருக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் இலங்கை அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் சிங்களச் சமூகத்தைச் சேர்ந்தோருக்கும் உண்டு.

அரசியற் பிணக்குகளைத் தீர்ப்பதில் தமிழ்த்தரப்புகளின் ஒத்துழைப்புகள் போதாமலுள்ளன என்று ஒரு பலமான குற்றச்சாட்டினை அரசாங்கத்தரப்போ அல்லது பிறரோ முன்வைக்கலாம். ஆனால், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடுகளைச் செய்வதற்கும் அவர்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கும் இதுவரையில்  அரசாங்கமோ சிங்களச் சமூகமோ முன்வந்ததா?

நல்லெண்ண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசியலுக்கு அப்பாலான பல புள்ளிகள் உள்ளன. இவற்றில் ஒரு புள்ளியில் இருந்து கூட நம்பிக்கைகளைக் குறித்த சித்திரங்கள் வரையப்படவில்லை.

ஆகவே மனதில் கசப்பும் கோபமும் உள்ள தமிழர்கள் தங்களுடைய உணர்வை வெளிப்படுத்தும்போது அது அப்படித்தான் அமையும். அங்கே யாரும் பூங்கொத்துகளையும் இனிப்புப் பண்டங்களையம் எதிர்பார்க்க முடியாது.

ஆனால், இந்த எதிர்ப்பானது புலிக்கொடியுடன் நடத்தப்பட்டிருப்பதற்குப் பதிலாக கறுப்புக் கொடிகளை ஏந்தி நடத்தியிருந்தால் இதன் பெறுமதி மிக அதிகமாக இருந்திருக்கும். கறுப்புக்கொடிகளோடு, உலக மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் சொல்ல வேண்டிய சேதிகளையும் சேர்த்து அவர்கள் ஏந்தியிருந்தால் இந்த எதிர்ப்படையாளம் இன்னும் வலுப்பெற்றிருக்கும்.


இந்தச் சேதியானது - 

'அன்பான சிங்கள மக்களே, சர்வதேச சமூகத்தினரே, நாங்கள் பிறந்த நாட்டிலிருந்;து அதன் தலைவர் இங்கே (லண்டனுக்கு ) வருகை தரும்போது அவரை மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்க வேண்டிய நாம், கறுப்புத் துணிகளுடன் அணிவகுத்திருக்க வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளோம். இது வருத்தத்திற்குரியதே. ஆனாலும் இதை எங்களால் இதைத் தவிர்க்க முடியவில்லை. இந்த நிலையை உருவாக்கியது இனவாத அரசியல் நடவடிக்கைகளும் அரசாங்கத்தின் பொறுப்பற்ற நடவடிக்கைகளுமே. 


இன ஒதுக்கல் நடவடிக்கைகளால் எங்களின் உறவுகளும் இனத்தவரும் கண்ணீரின் மத்தியிலும் காயங்களின் மத்தியிலும் இன்னும் இருக்கும்பொழுது, அங்கே இன நல்லிணக்கத்தையும் நிவாரணத்தையும் இன்னும் முறையாக வழங்காதபோது, பிரச்சினைகளுக்கான தீர்வைக் காணாதபோது எப்படி அவரை நாம் மனப்பூர்வமாக வரவேற்க முடியும்? அது எந்த அளவுக்கு ஏற்புடையதாகும்? அப்படி நாம் அவரை வரவேற்பதாக இருந்தால், அது எங்களின் மனச்சாட்சிக்கு நாங்கள் இழைக்கின்ற தவறாகுமல்லவா!


எனவேதான் நாங்கள் இத்தகைய எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தவேண்டியிருந்தது. இதைத் தவிர வேறு மார்க்கங்கள் எங்களுக்கு இல்லை. எங்களுடைய பிரச்சினைகளை எடுத்துச் சொல்வதற்கும் எங்கள் பிரச்சினைகளைத் தீர்க்குமாறு அழுத்தம் கொடுப்பதற்கும் இதை ஒரு அடையாளமாக நாங்கள் வெளிப்படுத்துகிறோம். ஒரு அழுத்தத்தைக் கொடுப்பதற்கு இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம்.  இந்தப் போராட்டத்தின் தாற்பரியத்தைச் சர்வதேச சமூகமும் சிங்கள மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். நீதிக்கும் நியாயத்துக்கும் பதிலாற்றவேண்டிய கடப்பாட்டை வலியுறுத்துமாறு கேட்பதே இந்தப் போராட்த்தின் நோக்கமாகும்' என்றவாறு கேட்டிருந்தால், அதற்கான அரசியற் பெறுமானம் மிக உச்சமாக இருந்திருக்கும்.

இத்தகைய அரசியற் கோரிக்கையையும் வெளிப்பாட்டையும் அணுகுமுறையையும் யாரும் புறந்தள்ளவும் முடியாது. இதைக் குறுகலாக்கி ஒதுக்கவும் முடியாது. இதற்குப் புலி அடையாளத்தைப் பூசியிருக்கவும் முடியாது. பதிலாக இது சிங்களச் சமூகத்தினரையும் சிந்திக்க வைத்திருக்கும். அவர்களிடம் பகைமையைத் தோற்றுவிப்பதற்குப் பதிலாக இதைக் குறித்த சிந்தனையை உருவாக்கியிருக்கும். அரசாங்கத்துக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இது நெருக்கடியைக் கொடுத்துமிருக்கும். 

ஒரு அரசியல் நடவடிக்கை என்பது அதை நடத்தும் முறையிலும் அதை ஒழுங்கமைக்கும் வகையிலுமே தங்கியுள்ளது. அப்படிச் சீராக ஒழுங்கமைத்து, வழி நடத்தும்போதே அது உரிய பயனை, உச்சப் பயனைத் தரும்.

கறுப்புத் துணிகளைக் கட்டிக் கொண்டும் அவற்றை ஏந்திக்கொண்டும், நின்ற மக்களை உலகம் பார்க்கின்ற விதமும் வேறாக இருந்திருக்கும். அரசியல் முதிர்ச்சியும் பக்குவமும் திறனுமுள்ள சமூகமாக தமிழர்கள் உயர்ந்திருக்கக் கூடிய இன்னொரு வாய்ப்பும் இப்படிச் சிறுத்துக் குறுகி விட்டது.

உணர்ச்சிகரமான நடவடிக்கைகள் பெரும்பாலும் இப்படித்தான் அமைந்து விடுகின்றன. இங்கே கோபத்தையும் வெறுப்பையும் வெளிக்காட்டுவதைத்தவிர, அதற்கப்பாலான அரசியல் விளைவுகள் அதிகம் ஏற்படவில்லை. கோபத்தையும் வெறுப்பையும் உமிழ்வதால் மட்டும் நன்மைகள் விளைந்து விடப்போவதில்லை என்பதை மீண்டும் குறிப்பிடவேண்டியுள்ளது.

உணர்ச்சிகரமான அரசியலில் கட்டப்படும் எத்தகைய பிரமாண்டமான எழுச்சியையும் அறிவுபூர்வமான அணுகுமுறை எளிதில் உடைத்துத் தகர்த்து விடும். மிகப் பெரிய பாறாங்கல்லை ஒரு சிறிய நெம்பு கோல் நகர்த்தி விடுகிறது என்பதை அறிவோம். இங்கே நெம்புகோல் என்பது அறிவின் விளைவாகச் செயற்படும் ஒரு கருவி. அந்தக் கருவியைப் பயன்படுத்துவதிலேயே வெற்றியும் முற்போக்கான சமூகமொன்றின் வளர்ச்சியும் தங்கியுள்ளது.

அறிவுசார் நடவடிக்கைகள் எப்போதும் பொறிமுறைகளை உடையன. பொறிமுறைகள் இலகுவான வழிமுறைகளைக் கொண்டவை. அதேவேளை உச்சபயனை விளைவிப்பன. அறிவின் வளர்ச்சியானது பொறிமுறைகளையே விளைவுக்குப் பயன்படுத்துகின்றது. அதை நம்பிக்கையுடன் பின்பற்றும் தரப்புகள் வெற்றியைப் பெறுகின்றன.

உணர்ச்சிகரமான அரசியல் எழுச்சிகள் பொறிமுறைகளைப் பற்றிச் சிந்திப்பது குறைவு. அவற்றின் அடித்தளம் எப்போதும் அறிவுசார் நடவடிக்கைக்கு எதிர்ப்புறத்தில், வெகுளித்தனமும் அறியாமையும் நிறைந்ததாகவே உள்ளது. விவேகம், சாதுரியம், நிதானம், அறம்பற்றிய விழிப்புணர்வு, ஜனநாயக விழுமியங்கள், உலகப் போக்கு, நீடித்த வெற்றி, யதார்த்தம் போன்றவற்றைப் பற்றி உணர்ச்சி மையத்தில் இயங்குவோர் சிந்திப்பது குறைவு. உணர்ச்சியின் திரைகள் இவற்றை மறைத்து விடுகின்றன

இதை எத்தனை தடவைதான் படித்தாலும் தமிழரின் சிந்தனைக்கு இந்த ஒளி புலப்படுவதேயில்லை.

000

மயானத்தை நோக்கிய நாடு

Sunday 10 June 2012



















லங்கையின் அரசியல் நிலவரங்களைக் குறித்து மதிப்பீடுகளைச் செய்வது இன்று மிகச் சவாலான ஒரு காரியம். அதேவேளை இது மிகமிகச் சுவாரஷ்யமான விசயமும் கூட. ஆனால், ஆழமாக நோக்கினால், இது மிகத் துயரந்தோய்ந்த ஒரு கட்டம்@ ஒரு வரலாற்று நிகழ்ச்சி என்பது புரியும்.

வெளிச்சக்திகளின் ஆதிக்கப்போட்டிக்குள் மிக நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டிய நிலையில் இலங்கை இன்று தள்ளப்பட்டிருக்கு.

அதேவேளை அது உள்நாட்டிலும் ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

இந்த நிலையில் இலங்கையின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றைக் குறித்து எத்தகைய மதிப்பீட்டுக்கு வரமுடியும்? இதுவே சவாலானது.

வெளிச்சக்திகளான அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக அணி, சீனா, இந்தியா ஆகியவை வௌ;வேறு கோணங்களில் பங்கேற்கும்  முக்கோணப்போட்டிக்குள் இலங்கையைச் சிக்க வைத்துள்ளன. வலையிற் சிக்கவைத்து மீனைப் பிடிப்பதைப்போன்ற நிலை இது.

இந்த நிலைமைக்குள் - நெருக்கடிக்குள் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என்ற வேறுபாடின்றி அனைவருமே சிக்கும் நிலையே காணப்படுகிறது.

ஏனெனில், இந்த நெருக்கடி இலங்கை என்ற அடையாளத்துக்கு ஏற்படும் நெருக்கடியாகவே உள்ளது.

மேற்படி முக்கோண அணியின் சிந்தனையிலும் இலங்கை என்ற பொது அடையாளமே காணப்படுகிறது.

ஆனால், தமது தலையீடுகளுக்கும் செல்வாக்கிற்கும் நலன்களுக்கும் அவை நாட்டினுள் காணப்படுகின்ற இடைவெளிகளை – பிரிநிலைகளை – முரண்களைத் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்துகின்றன.

அதேவேளை அரசாங்கத்தின் தவறுகளை நாட்டின் தவறாகச் சித்திரித்து அந்தத் தவறுகளைக் கண்டிப்பதாகவும் அவற்றை ஒரு கருவியாகப் பயன்படுத்தித் தமது தலையீட்டைச் செய்வதற்கும் இவை முயற்சிக்கின்றன.

இதில் முன்னணிப் பாத்திரத்தை வகிப்பது அமெரிக்கா தலைமையிலான மேற்குலக அணியே.

இந்தியா இனமுரண்களையும் பிற விவகாரங்களையும் தன்னுடைய நலன்களுக்காகப் பயன்படுத்த விளைகிறது.

சீனா இலங்கையின் பொருளாதாரத் தேவைகள், அரசியல் ஆதரவு போன்ற காரணங்களைப் பயன்படுத்தித் தன்னுடைய நலன்களைப் பெற்றுக்கொள்ளவும் செல்வாக்கை வளர்த்துக் கொள்ளவும் முயற்சிக்கிறது.

ஆகவே, அவரவருக்கு ஏற்றவாறு நிலைமைகளைக் கையாண்டு தமது நலன்களைப் பேண முற்படுகின்றனர்.

இவ்வாறு வெளிச் சக்திகளின் போட்டிக்குள் சிக்குண்டிருக்கும் எந்த நாடும் ஒரு போதும் நிம்மதியாக இருக்க முடியாது.

வளத்தைப் பேணவும் முடியாது. வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கவும் முடியாது.

இந்த ஆதிக்கப் போட்டிக்குள் மிகப் புத்திபூர்வமாகச் செயற்பட்டுத் தமது நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என உள்நாட்டு அரசியலாளர்களும் மக்கள் சமூகமும் சிந்திக்கலாம். அத்தகைய சிந்தனைப் போக்குகள் மெல்ல மெல்ல வளர்ந்து வருவதையும் நாம் அவதானிக்க முடிகிறது.

ஆனால், அது சிரிப்புக்கிடமானது.

வல்லரசுகளின் தேவைகளை மிஞ்சி, வெற்றிகளைப் பெற வேண்டுமானால், அது பிரிவுகளையும் இடைவெளிகளையும் கொண்டுள்ள நிலைமைகளில் சாத்தியமாகாது.

பதிலாக, ஒருங்கிணைந்த நடவடிக்கைகளினாலும் பிரிக்கப்படாத உறவினாலுமே முடியக் கூடியது.

ஆனால், இன்றைய நிலைமை மிகக் கவலையளிக்கும் நிலையிலேயே உள்ளது.

அரசாங்கமும் அதனுடைய தலைமையும் யதார்த்தத்தைக் கணக்கில் எடுக்கவேயில்லை.

மிகக் கடுமையான அழிவுகளின் மத்தியில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த அரசாங்கம் அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, அமைதியையும் நல்லிணக்கத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வருவதற்குத் தவறியுள்ளது.

அத்தகைய ஒரு நிலை எட்டப்பட்டிருக்குமானால், இன்று நாட்டுக்கும் அரசாங்கத்துக்கும் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளில் பாதிக்குமேலானவை உருவாகாமலே போயிருக்கும்.

குறிப்பாக, இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கி நகர்ந்திருந்தாலே பெரும்பாலான பிரச்சினைகள் தீர்ந்திருக்கும். நாட்டிலுள்ள மக்களில் ஒரு சாராராகிய தமிழர்களைப் பயன்படுத்தி, அவர்களுடைய மனக்குறைகளைப் பயன்படுத்தி, அவர்கள் சந்திக்கின்ற அரசியல் நெருக்கடிகளைப் பயன்படுத்தி, தமது நலன்களைப் பேணும் வெளிச் சக்திகளின் முயற்சிகள் தடுக்கப்பட்டிருக்கும்.

ஆனால், இதை மறுத்துரைப்போரும் உண்டு. அவர்கள் சொல்கிறார்கள், இலங்கையின் மீது முக்கோண வல்லரசுகள் ஆதிக்கம் செலுத்தும் காலகட்டம் இது. இதில் அவை எப்படியும் தங்கள் கரங்களை நுழைப்பதற்கு முயற்சித்தே ஆகும். இனப்பிரச்சினையைத் தீர்க்க விடாமல் வைத்திருப்பதே இந்தச் சக்திகள்தானே என்று.

இதில் ஒருவகையான உண்மைகள் இருக்கலாம். ஆனால், இன முரணைத் தீர்க்கும்போது இலங்கைச் சமூகங்களுக்கிடையிலான முரண்கள் தணிந்து விடும். அதன்மூலம் ஒரு கட்டிறுக்கமான நிலைமை பெரும்பாலும் நாட்டுக்குள் நிலவும்.

இதற்கு நாம் ஒரு உதாரணத்தை இங்கே முன்வைக்கலாம். இன்றைய அரசாங்கத்தின் மீது அளவுக்கதிகமான செறிவழுத்தங்கள் நிலவுகின்றபோதும் அது எல்லாவற்றையும் எவ்வாறு தாக்குப் பிடிக்கிறது? பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருப்பதனால்தானே! ஆனால் இந்தப் பெரும்பான்மைப் பலமானது தனியே சிங்கள மக்களை மட்டும் உள்ளடக்கியது. இதை முழுமைப்படுத்தி, அனைத்துச் சமூகங்களும் இணைந்த பெரும்பான்மைப் பலமாக ஆக்கினால், அது நாட்டை மேலும் உறுதிப்பாடுடையதாக்கியிருக்கும்.

அத்தகைய ஒரு நிலை உருவாக்கப்பட்டிருக்குமானால், இன்று மனித உரிமை விவகாரங்கள் பற்றிய குற்றச்சாட்டுகள், இயல்பு நிலையை உருவாக்க வேண்டும் என்ற அழுத்தங்கள், ஜனநாயகம் பற்றிய பேச்சுகள், யுத்தக்குற்றங்கள், நல்லிணக்கச் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கட்டளைகள், அரசியற் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நெருக்கடிகள் எல்லாம் கருவிகளாகப் பயன்படுத்தப்பட முடியாத ஒரு நிலை ஏற்பட்டிருக்கும்.

ஆனால், இதை அரசாங்கம் செய்யாமல் இன்று தன்னைச் சுற்றியும் நாட்டைச் சுற்றியும் நெருக்கடிகளை உருவாக்கி வைத்துள்ளது.

இது உண்மையில் அகங்காரமும் மூடத்தனமும் கலந்த ஒரு நிலைதான். இத்தகைய நிலையோடு ஆட்சிநடத்தினால் அதன் விளைவு மிகப் பயங்கரமானதாகவே இருக்கும்.

இந்தப் பயங்கரத்துக்கு ஆட்சியிலிருப்போர் மட்டுமல்ல, மக்களும் முழு நாடுமே விலையைக் கொடுக்க வேண்டியேற்படும். இங்கேதான் மக்களும் மக்கள் அமைப்புகளும் ஊடகங்களும் சிந்தனையாளர்களும் புத்திஜீவிகளும் சிந்திக்க வேண்டியுள்ளது. முன்னரங்குக்கு வந்து செயற்பட வேண்டியுள்ளது.

தங்களை நோக்கி வருகின்ற நெருக்கடிகள் அனைவருக்கும் பொதுவானவை, இலங்கையர்கள் என்ற வகையில் அனைவரும் இணைந்தே இதை முறியடிக்க வேண்டும் என இவர்கள் சிந்திக்க வேண்டும்.

ஆனால், அப்படிச் சிந்திக்கும் நிலை இல்லை என்பது இன்னும் அதிக வருத்தத்திற்குரியது. இலங்கைக்கு வரும் நெருக்கடிகள் என்பது, அரசாங்கத்துக்கு வரும் நெருக்கடிகளாகவும் அதிலும் ஆட்சியாளர்களுக்கு வரும் நெருக்கடிகளாகவும் சிங்கள மக்களுக்கு வருகின்ற நெருக்கடிகளாகவும் பார்க்கின்ற போக்குத் தமிழர்களிடம் உள்ளது.

இலங்கைக்கு வந்துள்ள இன்றைய நெருக்கடியானது இன்றைய ஆழந்தரப்புக்கே என்ற எதிர்க்கட்சிகள் சிந்திக்கின்றன.

இலங்கைக்கு – நாட்டுக்கு வருகின்ற நெருக்கடிகளைப் பார்த்துத் தமிழர்கள் சந்தோசப்படுகிறார்கள். ஆகவே அவர்கள் எதிரிகளாகத்தான் இருப்பார்கள் என்று அரசாங்கமும் சிங்கள மக்களும் கருதுகிறார்கள்.

இப்படி வௌ;வோறு கோணங்களில் முரண்நிலைகள் விரிவாக்கம் பெறுகின்றன. தங்கள் நாடு நெருக்கடிகளால் சூழப்பட்டிருப்பதை விளங்கிக் கொள்ளாமல் இப்படி ஆளாளுக்குக் கோணங்கித்தனமாகச் சிந்திக்கும் மக்களை என்ன என்று சொல்வது?

ஆனால், மக்கள் இப்படித்தான் தவறாகச் சிந்திக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை இப்படி வைத்தே அரசியல்வாதிகளும் கட்சிகளும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தங்களின் வாழ்வையும் வயிற்றையும் நிரப்பிக் கொள்கிறார்கள்.

போதாக்குறைக்கு மதவாதிகளும் இப்படித்தான் சிந்திக்கிறார்கள்.

முட்டாள்தனமாகச் சிந்திப்போரையும் மூடத்தனமாகச் செயற்படுவோரையும் கொண்டுள்ள நாடு கோமாளிகளைக் கொண்டுள்ள நாடாகவே இருக்கும். அல்லது துக்கத்துக்குரிய நாடாக இருக்கும். இன்றைய இலங்கை அப்படித்தான் உள்ளது.

யுத்தத்திலிருந்து நாடு மீண்டுள்ளது. அது அமைதிக்குத் திரும்பியுள்ளது எனக்கண்ட கனவுகளும் கொண்ட நம்பிக்கைகளும் சிதறடிக்கப்பட்டு வருகின்றன.

நாடு யுத்த காலத்தையும் விட மிக நெருக்கடியான – அபாயமான நிலைமைகளை எதிர்நோக்கியுள்ளது. எனவேதான் அது பிரச்சினைகளின் கனதியோடு உள்ளது.

யாராவது சொல்லுங்கள், இலங்கை அமைதியை நோக்கி, சுபீட்சத்தை நோக்கி, இன நல்லிணக்கத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று உங்களால் உறுதியாகக் கூற முடியுமா?

ஆகவேதான், இலங்கையின் அரசியல் நிலவரங்களைக் குறித்து மதிப்பீடுகளைச் செய்வது இன்று மிகச் சவாலான ஒரு காரியம். அதேவேளை இது மிகமிகச் சுவாரஷ்யமான விசயமும் கூட. ஆனால், ஆழமாக நோக்கினால், இது மிகத் துயரந்தோய்ந்த ஒரு கட்டம்@ ஒரு வரலாற்று நிகழ்ச்சி என்பது புரியும் என்று கூறவேண்டியுள்ளது.

00

வடக்குக் கிழக்கில் பௌத்த விகாரைகள் எப்படிப் பெருக்கமடைகின்றன?

Tuesday 5 June 2012








பௌத்த விகாரைகள், புத்தர் சிலைகள், சிங்களக் குடியேற்றங்கள், இராணுவத் தலையீடுகள், இனமுரண் அம்சங்கள் போன்றவற்றை சிங்கள ஆளும் தரப்பும் ஊக்குவிக்கின்றது. தமிழ்த் தேசிய சக்திகளும் ஊக்குவிக்கின்றன. இரண்டு தரப்புக்கும் இவை தேவையாகின்றன. இவற்றை மூலதனமாகக் கொண்டே இரண்டு தரப்பும் இனமுரணையும் இனவாதத்தையும் வளர்த்து லாபம் பெறுகின்றன. 



லங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் பௌத்த விகாரைகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டப்படுகிறது. யுத்தத்திற்குப் பின்னர் இந்த நிலைமையை ஓரளவு வெளிப்படையாகக் காணக்கூடியதாகவும் உள்ளது.

முன்னர் படையினரின் வழிபாட்டுக்காக, அவர்கள் புழங்குகின்ற இடங்களில் சிறிய அளவில் இருந்த பௌத்த விகாரைகள் இப்போது சற்றுப் பெருப்பிக்கப்பட்டு, நிலைப்படுத்தப்படுகின்றன.

ஆனால், இன்னும் இந்த விகாரைகளின் அமைப்பில் படைத்தரப்பே நேரடியாகச் சம்மந்தப்பட்டிருக்கின்றது. அரசாங்கத்தின் பிற அலகுகளோ, பௌத்த மத பீடத்தினரோ நேரடியாகச் சம்மந்தப்படுத்தப்படாமல் இந்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன. இது ஒரு தந்திராபாயமாகக் கூட இருக்கலாம்.

ஆனால், படையினரின் புழக்கம் அதிகமாக உள்ள இடங்களில், குறிப்பாக நிரந்தரப் படைமுகாம்கள் அமைந்துள்ள பிரதேசங்களில் இந்தப் புதிய விகாரைகளின் தோற்றம் அமைகின்றது.

இவற்றை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு பாதுகாப்பு அமைச்சுக்கு ஊடாக கிடைக்கின்றதா அல்லது பௌத்த சாசன அமைச்சின் மூலமாகக் கிடைக்கிறதா அல்லது ஜனாதிபதியின் விசேட ஒதுக்கீட்டின் மூலம் கிடைக்கின்றதா என்று சரியாகத் தெரியவில்லை.

வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் படையினரின் பிரசன்னம் அதிகமாக இருப்பதால், அவர்களுடைய வழிபாட்டுக்காக என்று இந்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன என்று சொல்லப்படுகின்றன. அவ்வாறெனில் படையினரின் விலகல் நிகழும்போது இந்த விகாரைகளும் அகன்று விடுமா?
முன்னர் பல இடங்களில் இவ்வாறு படையினரால் அமைக்கப்பட்டிருந்த விகாரைகள் அவர்கள் அந்த இடங்களைவ pட்டு அகன்றபோது இயல்பாகவே அகன்றுள்ளன.

ஆனால், அப்போது அமைக்கப்பட்டிருந்த விகாரைகளின் தன்மை வேறு. இப்பொழுது அமைக்கப்படும் விகாரைகளின் நிலைவேறு. இவை சற்றுப் பிரத்தியேகமான முறையில் அமைக்கப்படுகின்றன. நிரந்தரப் படைமுகாம்கள் என்ற கருவூலத்தின் அடிப்படையில் நிரந்தர விகாரைகளும் அமைக்கப்படுகின்றனவா என்பதே இங்கே எழுப்பப்படுகின்ற கேள்வியாகும்.
பொதுவாகவே படையெடுப்புகளை மேற்கொள்கின்ற தரப்புகள் தாம் கைப்பற்றிய இடங்களில் அல்லது தாம் ஆக்கிரமித்துள்ள பிரதேசங்களில் தமக்குரிய வழிபாட்டிடங்களை உருவாக்குவது வழமை.

படையினரின் உளவியல் இதில் பெரும் பங்கு வகிப்பதுண்டு. போர் என்பது எப்போதும் உயிரோடு சம்மந்தப்படும் ஒரு உணர்ச்சிகரமான விசயம் என்பதால், அந்த உணர்ச்சிகரமான உளவியற் சமநிலையைப் பேணுவதற்காக அவர்களுடைய வழிபாட்டுணர்வில் அதிகம் தலையிடாமல் அரசுகள் நடந்து கொள்கின்றன.

புரட்சிகரமான விடுதலை அமைப்புகளிற் கூட இத்தகைய ஒரு உளவியல் நிலையை நாம் காணலாம். விடுதலைப் புலிகள் மத விடயங்களில் வெளிப்படையாகவே இறுக்கமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த அமைப்பு. இருந்தபோதும் யுத்தத்திற்குச் செல்லும்போது போராளிகளிடையே காணப்படுகின்ற மத நம்பிக்கை சம்மந்தப்பட்ட விசயங்களில் அவர்கள் தலையிட்டதில்லை என்பது கவனத்திற்குரியது.

உலக வரலாறு என்பது படையெடுப்புகளோடு மதமும் படையெடுத்ததாகவே அமைந்துள்ளது. மதப் படையெடுப்புகள் நடந்தது தனியான வரலாறாகவும் உள்ளது.

இலங்கைக்கு ஐரோப்பியர்கள் படையெடுத்து வந்திருந்தபோது கூடவே மதத்தையும் கொண்டு வந்திருந்தனர்.

இன்று வடக்குக் கிழக்குப் பகுதிகளில் மட்டுமல்ல இலங்கைத்தீவின் அனைத்து இடங்களிலும் காணப்படுகின்ற பல்லாயிரக்கணக்கான தேவாலயங்கள் எதைச் சொல்கின்றன? இந்தத் தேவாலயங்களைக் காணும்போது ஐரோப்பியப்படையெடுப்பும் அவர்களுடைய மத விரிவாக்க மனோநிலையுமே தெரிகிறதல்லவா!

இதுதான் மொகலாயர்களின் படையெடுப்போடு இந்தியாவிலும் நடந்தது. இன்று டில்லியில் காணப்படுகின்ற இஸ்லாமியக் கட்டிடக் கலையின் பின்னணி என்ன? தாஜ்மஹாலின் சரித்திரத்துக்குப் பின்னே உறைந்திருக்கும் அரசியல் எத்தகையது?

இந்தோனேசியா, மலேசியா, பர்மா போன்ற நாடுகளில் இன்றும் காணப்படும் இந்து ஆலயங்கள் அன்றைய இந்தியப் படையெடுப்புகளை நினைவூட்டுகின்றன.

ஆகவே, படையெடுப்புகளும் போரும் ஆதிக்கமடையும் தரப்பின் மத விரிவாக்கத்தை உருவாக்குகின்றன. முதலில் படையினரின் வழிபாட்டுக்காக என அமைக்கப்படும் மத மையங்கள் பின்னர் நிரந்தர வழிபாட்டிடங்களாக மாறிவிடுகின்றன.

அடுத்த கட்டமாக அரசின் மூலமாக நலனைப் பெறவேண்டிய நிலையில் இருக்கும் மக்கள் இந்த மதத்தின் பக்கமாக இழுக்கப்படுகிறார்கள். ஆபிரிக்க நாடுகளில் இஸ்லாம் பரவியதும் கிறிஸ்தவம் பரவியதும் இதற்கான உதாரணங்களாகும்.

இத்தகைய ஒரு சுருக்கப் பின்னணில் இன்று வடக்குக் கிழக்கில் அமைக்கப்படுகின்ற பௌத்த விகாரைகள் குறித்து நாம் சிந்திக்கலாம்.
இலங்கையில் கடந்த 2500 ஆண்டுகளாக பௌத்தம் மிகச் செழிப்பாக இருந்துள்ளது என்பது வரலாற்றுத் தகவல்கள். மிகப் புகழுடைய மன்னர்கள் பௌத்தத்தின் வளர்ச்சிக்காக தங்களுடைய ஆட்சியில் இடமளித்திருக்கிறார்கள்.

இதற்கான ஆதரங்களாக இலங்கையின் வட மத்திய, மத்திய, மேற்கு மற்றும் தென்பிரதேசங்களெங்கும் ஏராளம் பௌத்த விகாரைகளும் அவற்றின் தொல் எச்சங்களும் காணப்படுகின்றன.

ஆனால், அப்போது வடக்குக் கிழக்கில் பௌத்தம் பெரிய அளவுக்குத் தன்னுடைய செல்வாக்கைச் செலுத்தியதாக இல்லை. அன்றைய சிங்கள மன்னர்கள் வடக்குக் கிழக்கில் பௌத்தத்தின் விரிவாக்கத்தை மேற்கொண்டதாகவும் வரலாற்றாதாரங்கள் துலக்கமாகக் கூறவில்லை.
பதிலாக இந்து ஆலயங்கள் தென்பகுதியில் இருந்துள்ளன. பொலனறுவ, அனுராதபுரம் போன்ற இடங்களில் இன்னும் காணப்படுகின்ற புராதன இந்து ஆலயங்கள் இதற்கு ஆதாரம்.

ஆகவே மிகப் புகழோடும் வலுவோடும் செழிப்பாகவும் இருந்த பௌத்தம் அன்றைய நாட்களில் வடக்குக் கிழக்குக்குப் பரவில்லை எனில் இதற்கு என்ன காரணம்? ஆதிக்க மனோநிலையை அந்த மன்னர்களும் அன்றைய மதபீடத்தினரும் கொண்டிருக்கவில்லையா? அல்லது அதற்கு ஏற்ற அரசியற் சூழல் வடக்குக் கிழக்கில் நிலவவில்லையா?

தமிழ்;ப்பிரதேசங்களில் காணப்படும் பௌத்த அடையாளங்கள் கூட தமிழ்ப் பௌத்தத்தின் எச்சங்களே தவிர, சிங்களப் பௌத்தத்தின் அடையாளங்கள் அல்ல என்பது இங்கே இன்னும் கூரிய கவனத்திற்குரியது.

ஆனால், 1500 களில் இலங்கைக்கு வந்திறங்கிய ஐரோப்பியர்கள் மிகக் குறுகிய 500 ஆண்டுகாலத்தினுள் எத்தனை ஆயிரக்கணக்கான தேவாலயங்களை நிறுவியிருக்கின்றனர்? இலங்கையின் கடற்கரை முழுவதும் தேவாலயங்களும் சிவைக் குறிகளும் எழுந்திருக்கின்றன.
அன்று கப்பல் வழியாகவே பயணங்கள் நடந்த காலமாகையால், வெளியே இருந்து பார்க்கும்போது அது ஒரு கிறிஸ்தவ நாட்டைப்போலத் தோற்றம் தெரிய வேண்டும் என்ற எண்ணத்தோடு கடற்கரைகளில் இத்தகைய ஏற்பாட்டை அன்று ஐரோப்பியர்கள் செய்தனர்.

இத்தகைய அடையாளப்படுத்தலை எல்லா ஆக்கிரமிப்பாளரும் ஒரு வாய்ப்பாட்டினைப் போலச் செய்கின்றனர். இது அவர்களுடைய ஒரு வகையான உளவியல் செயல் முறையாக உள்ளது.

இந்த நடைமுறையானது, காலமாற்றங்களால் மாறிவிடாத ஒன்றாகவே இன்னும் காணப்படுகிறது. இதில் இன வேறுபாடுகள், இட வேறுபாடுகள், கால வேறுபாடுகள் எதுவும் மாற்றங்களை ஏற்படுத்தவில்லை.

எனவே, இங்கே போரில் வெற்றியீட்டிய நிகழ்ச்சித்திட்டத்தின் அடிப்படையிலும் அது உருவாக்கிய உளவியலின் அடிப்படையிலும் அதன் விளைவாக உருவாகியிருக்கும் படையினரின் இருப்பை நிரந்தரப்படுத்தும் அடிப்படையிலும் பௌத்த விகாரைகளின் நிலைப்படுத்தல்களும் அமைகின்றன.

இது இலங்கையின் வரலாற்றிற்குப் புதியதல்ல. உலக வரலாற்றுக்கும் புதியதல்ல. ஆனால், எங்கே பிரச்சினை ஏற்படுகிறது என்றால், கடந்த காலத்தில்  இலங்கையில் செல்வாக்கோடு இருந்த சிங்கள ஆட்சியாளரும் பௌத்தமும் செய்யாத ஒரு வேலையை இன்றைய சிங்கள ஆட்சியாளரும் பௌத்தமும் செய்கின்றன என்பதே.

இங்கே இன்றைய சிங்கள ஆட்சியாளர் என்பது தனியே மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை மட்டும் குறிப்பிடவில்லை. அவருடைய ஆட்சி உட்பட, இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் நடந்து வருகின்ற அனைத்து ஆட்சிகளையும் குறிக்கிறது.

ஆனால், முன்னர் இத்தகைய அதீத நடவடிக்கைக்கான சூழல் இருக்கவில்லை. இப்போது போர் வெற்றி அந்தச் சூழலை அதிகரித்துள்ளது. எனவேதான் இத்தகைய நிலை இன்று தோன்றியுள்ளது.
இந்த நிலையை எப்படிக் கட்டுப்படுத்துவது? இதுவே இன்று எழுந்துள்ள முக்கியமான கேள்வியாகும்.

இந்த நிலையைக் கட்டுப்படுத்துவதற்கு பாராளுமன்றப் பேச்சுகளோ, பத்திரிகை அறிக்கைகளோ, மேசைப்பேச்சுகளோ, பெருமூச்சுகளோ உதவப்போவதில்லை.

பதிலாக இவையெல்லாம் மேலும் மேலும் அவர்களுடைய நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும். வலுப்படுத்தும். அதிகமாக்கும். அப்படியான ஒரு வரலாறுதான் கடந்த காலத்திலும் நடந்திருக்கிறது. சிங்களக் குடியேற்றங்களை எந்தப் பாராளுமன்றப் பேச்சாவது கட்டுப்படுத்தியதா? விகாரைகளை அமைப்பதை எதிர்த்து ஒரு பாராளுமன்ற உறுப்பினராவது போராட்டம் நடத்தத்தயாரா?

பதிலாக இப்படிப் பேசப் பேச அவர்கள் இதை இன்னும் இன்னும் அதிகமாகச் செய்கிறார்கள். இதை அவர்கள் ஒரு சவாலாகவே எடுத்துக் கொள்கிறார்கள். குடியேற்றங்களை எதிர்த்தபோது அது அதிகமாகியது. இராணுவப் பிரசன்னத்தை எதிர்த்தபோது அது இன்னும் வலுவாகியது. இன்று அது நிரந்தரமாகியுள்ள அளவுக்கு மாறியுள்ளது. அப்படியே இன்று விகாரைகளின் சமாச்சாரமும் அமைந்துள்ளது. பலவீனமான நிலையில் இருந்து கொண்டு சவால்விடுவோமாக இருந்தால் அதனால் பாதிப்புகளே ஏற்படும். ஆயுதப் போராட்டம் நடந்த வேளையில் மட்டும் இந்த எதிர்ப்புக்கும் சவாலுக்கும் ஒரு பெறுமதியிருந்தது. இன்று அத்தகைய நிலையில் இல்லை. இன்றைய சவால்கள் அவர்களை மேலும் ஊக்கப்படுத்துவதாகவே அமையும்.
அரசாங்கத்தரப்பும் சிங்களத்தரப்பும் இணைந்து செய்யும் இந்தச் செயல் நிச்சயமாகத் தவறானதே.

ஆனால் இதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எப்படியானது எனத் தெரிந்து கொள்ளாமல், வெறும் ஆராவராங்களை முன்னெடுப்பதே பயனற்றது – எதிர்விளைவைத்தரக்கூடியது என்று இங்கே வாதிடுகிறோம்.
இதேவேளை, இந்த நிலைiயைக் கட்டுப்படுத்த வேண்டும், மாற்ற வேண்டும் எனில் முதலில் படையினரைச் செயலிழக்க வைப்பது அவசியம். அவர்களுடைய வலுவையும் அவர்களுடைய நிரந்தர இருப்பையும் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் இருந்து அகற்ற வேண்டும்.

இது எப்படிச் சாத்தியமாகும்? இதுதான் பிரதான கேள்வியே!
படையினரை அகற்றுவதென்பது, படையினர் இருப்பதற்கான காரணங்களை இல்லாமற் செய்வதிலிருந்தே ஆரம்பிக்கும். இதற்கு இரண்டு வழிமுறைகளே உண்டு. ஒன்று அரசாங்கத்துக்கும் சிங்களத் தரப்புக்கும் இருக்கின்ற உளவியல் அச்சத்தைப் போக்குவது. மற்றது அவர்களுடைய மேலாதிக்க எண்ணத்துக்கு இடமளிக்காத வகையில் உபாயங்களை வகுப்பது. அடுத்தது, அதன்வழியாக அரசியல் தீர்வையும் உறுதிப்பாட்டையும் காண்பது.

ஆகவே மேற்குறித்த இந்த இரண்டுமே தீர்வைத் தரும். இந்த இரண்டையும் காணாதவரையில் எத்தகைய கண்டனங்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் சிங்களத் தரப்பையும் அரசையும் கட்டுப்படுத்தாது. வெளியுலக அழுத்தங்கள் எப்பொழுதும் எல்லாவற்றுக்கும் பொருந்திப்போகாது. அதை முழுதாக நம்புவதால் எத்தகைய பயனும் கிட்டிவிடப் போவதும் இல்லை.

00

சுற்றி வளைக்கப்பட்டிருக்கும் இலங்கை

Sunday 3 June 2012





இலங்கை சுற்றி வளைக்கப்பட்டுள்ளது என்பதையும் விட இலங்கையர்கள் இப்போது சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே சரியாகும். அதாவது ஒரு நிழல் யுத்தத்திற்குள் இலங்கை மக்கள் சிக்கியிருக்கிறார்கள். இது வல்லரசுகள் இலங்கை மீது மேற்கொள்ளும் நிழல் யுத்தம். இந்த யுத்தம் பொறிகளால் ஆனது.

ராசதந்திரப் பொறிகள். பொருளாதாரப் பொறிகள். அரசியல் தலையீட்டுப் பொறிகள். இவை எல்லாற்றையும் இணைத்துள்ள வல்லாதிக்கப் பொறிகள் என்ற பல பொறிகளுக்குள் இலங்கைத்தீவின் மக்கள் வசமாகச் சிக்கியிருக்கிறார்கள். ஏறக்குறைய ஒரு வலையமைப்பை ஒத்த பொறிகளாக இவை உள்ளன.

ஒவ்வொரு பொறியும் ஒவ்வொரு கண்ணிவெடியைப் போன்றன. ஆனால், இந்தப் பொறிகள் சாதாரண கண்ணிவெடிகளைப் போல சிறியவை அல்ல. கண்ணுக்குப் புலப்படக் கூடியவையும் அல்ல. ஆகவே, இலகுவில் அகற்றப்படக் கூடியவையும் அல்ல. இவை மாபெரும் கண்ணிகள். நாட்டையே பலியெடுக்கும் கண்ணிகள். அரசாங்கத்தையே தின்று தீர்க்கக்கூடிய அபாயக் கண்ணிகள். அப்படியே மக்களையுந் தின்றுவிடக் கூடியவை.

நுட்பத்தினாலும் விவேகத்தினாலும் அர்ப்பணிப்பினாலும் நாட்டைக்குறித்த,  மக்களைக்குறித்த, எதிர்காலத்தைக் குறித்த சிந்தனை அலகினாலும் மட்டுமே இந்தக் கண்ணிகளை அகற்ற முடியும். இதற்கு அரசாங்கம் மட்டும் போதாது, நாட்டைக்குறித்து, மக்களைக் குறித்துச் சிந்திக்கும் அனைவரும் செயற்பட வேணும்.

ஆனால், மக்களை மிக இலகுவில் தனியாக எடுத்துப் பின்தள்ளி விட்டு, அரசாங்கத்தை மட்டும் முன்னிலைப்படுத்தி, அதனுடைய தவறுகளையும் குற்றங்களையும் பிரதானப் படுத்தி, அதற்குத் தண்டனை அளிப்பதாக ஒரு தோற்றத்தைக் காண்பித்து உள்விவகாரங்களில் இந்த ஆதிக்கச் சக்திகள் தலையிடுகின்றன. அரசாங்கத்துக்கும் பிற தரப்புகளுக்கும் இடையில் முரண்பாடுகளை உருவாக்கி அல்லது இருக்கின்ற முரண்பாடுகளை பெரும்பிம்பமாக்கி இந்தக் காரியத்தைச் சாதிக்கின்றது மேற்குலகம்.

இதற்கு ஏஜென்டுகளாக அது உள்ளுரில் உள்ள அரசியற் சக்திகளையும் புத்திஜீவிகளையும் சில ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் மதபீடத்தினரையும் பயன்படுத்துகின்றது.

இதற்கான வாய்;ப்புகளை அதிகாரத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள் உருவாக்கிக் கொடுக்கின்றனர். முன்னர் ஈராக்கில், கியூபாவில் நடந்ததெல்லாம் இதுதான். ஜனநாயக நெருக்கடிகள், மனித உரிமை மீறல்கள் போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகள் அங்கே நடக்கின்றன என்று சொல்லி, அவற்றைச் சீர்ப்படுத்தும் நடவடிக்கை என்ற பேரில் வெளியார் நுழைவுகள் நடக்கின்றன.

அதாவது, தாம் பயன்படுத்தும் இந்தப் பொறிகளுக்கான ஆயுதமாக ஜனநாயக நெருக்கடி மற்றும் மனித உரிமைகள் விவகாரத்தை மேற்குலகம் கையாள்கிறது. அண்மைய உலக அரசியலானது, மனித உரிமைகள் விவகாரத்தைச் சாட்டாக வைத்தே கையாளப்படுகின்றது. இந்த ஆயுதத்தை மிக நுட்பமாகவும் பகிரங்கமாகவும் மேற்குப் பயன்படுத்தி வருகிறது. இதற்கு அது சாதகமாக ஐக்கிய நாடுகள் சபையைப் பயன்படுத்துகிறது.

சர்வதேச சமூகம் என்ற பெருந்திரையில் வரையப்பட்டிருக்கும் அமெரிக்க – மேற்குலக - முகமே இன்று இந்தப் பொறிகளின் பிரதான நாயகன். இன்னொரு பக்கத்தில் துணைப் பாத்திரத்தை வகிக்கும் இந்தியா தன் பங்கிற்கும் சில பொறிகளை சிறிதும் பெரிதுமாக வைத்திருக்கிறது. வில்லனைப்போலச் சித்திரிக்கப்படும் சீனா இன்னொரு பக்கத்தில் தன்னுடைய பொறிகளை வைத்துள்ளது. ஆக, எல்லாத்தரப்புமே பொறிகளுடன்தான் நிற்கின்றன.

எல்லோருக்கும் அவரவர் நலன்களே முக்கியம். அதற்காகவே அவர்களுடைய அரசியல்இ பொருளாதார, ராஜதந்திர, மனித உரிமைகளின் அளவுகோல்கள் அமைந்துள்ளன. அரவணைப்பும் புறக்கணிப்பும் கூட இந்த அளவுகோல்களின் பாற்பட்டே அமைகின்றன.

இந்த அளவு கோல்களால்தான் இலங்கை இன்று அளக்கப்படுகிறது. இலங்கை மட்டுமல்ல உலகமே இவற்றாற்தான் அளக்கப்படுகிறது. ஆக, ஒரு வித்தியாசம், பிற பிராந்தியங்களில் அந்தந்தப் பிராந்திய சக்திகள் சிலவேளை துணைப் பாத்திரமேற்கின்றன. இலங்கைக்கு இந்தியாவைப் போல.

ஆகவே பொறிகளால் சூழப்பட்டிருக்கும் இலங்கையின் இன்றைய நிலைமை எப்படி உள்ளது? அதனுடைய எதிர்காலம் எப்படி அமைகிறது? என்று சிந்திப்பதே இந்தப் பத்தியின் நோக்கம்.

உலகப் பொருளாதார இயக்கப்போட்டி மீண்டும் உச்சகட்டத்துக்கு வந்துள்ளது. கி.பி 1500 ஆம் ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகள் தங்களுடைய கண்டங்களை விட்டுப் பொருளாதாரத் தேவைகளுக்காகப் பிற கண்டங்களை நோக்கிப் பயணித்தது போலஇ பிற கண்டங்களிலுள்ள நாடுகளை ஆக்கிரமித்ததைப்போல இன்று வல்லரசுகள் பொருளாதார – அரசியல் ஆதிக்கப் போட்டியில் பகிரங்கமாக ஈடுபடுகின்றன. ஆனால் வெளிப்படையாகப் பிடிகொடுக்காமல் மிகத் தந்திரமாக, நாகரீகமாக(?). இந்த நாகரீகத்துக்குப் போடப்படும் கவசமே – மேலாடையே - மனித உரிமைகள் என்ற திரை. இதைச் சீனா போன்ற இரண்டாவது அணியினர் இன்னும் கையாளவில்லை.

ஆகவேஇ இத்தகைய செயற் பின்னணியில் இலங்கை இன்று மிகச் சிக்கலான ஒரு நிலைக்குட்பட்டிருக்கிறது@ பொறிகளால் சூழப்பட்டிருக்கிறது.

வெளியே பெரும் பொறிகளால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கும் சூழலில் அதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், அதற்கு வாய்ப்பாக இலங்கையர்கள் தங்களுக்குள் முரண்பட்டுப் பிரிந்திருக்கிறார்கள். ஒரு நிழல் யுத்தத்தினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணராமல் தங்களுக்குள் இன, மத ரீதியான நிழல் யுத்தங்களை அவர்கள் நடத்திக் கொண்டிருக்கின்றனர். ‘ஊர் இரண்டு பட்டிருந்தால் வெளியாளுக்குக் கொண்டாடம்’ என்று சொல்வார்கள். அதுவே இப்போது இலங்கையில் நடந்து கொண்டிருக்கிறது. தங்களின் தலைகளில் ஒவ்வொருவரும் தீயை மூட்டிக் கொண்டிருக்கின்றனர்.

சிங்களவர்களும் தமிழர்களும் பிரிந்திருக்கிறார்கள். தமிழர்களும் முஸ்லிம்களும் பிரிந்திருக்கிறார்கள். முஸ்லிம்களும் சிங்களவர்களும் பிரிந்திருக்கிறார்கள். மக்களும் அரசும் பிரிந்திருக்கின்றன. தனக்குப் பெரும்பான்மை மக்களின் ஆதரவு உள்ளது என்று சொல்லும் அரசு அந்த மக்களைவிட்டுத் தொலைவிவேயே உள்ளது.

அரசின் மீதான அதிருப்தி காரணமாக வெளித்தரப்பை நம்பியிருக்கின்றன பல அணிகள். இந்தத் தரப்புகளின் பிரிவும் ஒன்றாக உள்ளது. இப்படியே ஏராளம் பிரிவுகள் வெளித்தரப்புகளுக்கு வாய்ப்புகளையும் சாதகங்களையும் வழங்கிக் கொண்டுள்ளன.

அமைதியற்றுஇ யுத்தத்திலும் அழிவிலும் நிம்மதியின்மையிலும் சிக்கியிருந்த இலங்கையை சமாதானம்இ அமைதி, யுத்த முடிவு என்ற பொறிகளை வைத்துப் பிடித்தது வெளித்தரப்பு.

அதாவது, இலங்கையின் நெருக்கடிகளுக்குப் பிரதான காரணம் புலிகளும் அவர்களுடைய நடவடிக்கைகளுமே என்று பலரையும் நம்பவைத்த இந்தத் தரப்புகள், புலிகளை அழிப்பதற்கு உதவுவதாகக் கூறி இலங்கையுடன் நெருக்கமாகிக் கொண்டன.

இதில் அவை இரண்டு வகையான உத்திகளைப் பிரயோகித்தன.

1. புலிகளை அழிப்பதற்கு ஆயுத உதவி மற்றும் படைத்துறை உதவிகளைச் செய்தன. கூடவே அரசியல் ரீதியாகவும் ராசதந்திர ரீதியாகவும் அரசாங்கத்துக்கு இயைபாக நடந்தன. இதன்மூலம் இலங்கை அரசைத் தமக்கு நெருக்கமாகக் கொண்டு வர முயற்சித்தன.

2. புலிகளை அழிப்பதற்கு உதவிக்கொண்டே – போருக்கு உதவிக் கொண்டே - போர்க்குற்றங்களுக்குத் தூண்டின. பின்னர்இ இந்தப் போர்க்குற்றங்களையே தமக்கான பிடியாக வைத்துக் கொள்வதற்காக இந்த உபாயத்தை அவை கையாண்டன.

இப்பொழுது இந்த உபாயங்களின் வழியாகவே இலங்கையைச் சுற்றி வளைத்து நெருக்கடிக்குள்ளாக்கிக் கொண்டிருக்கின்றன இந்தத் தரப்புகள்.

ஆனால், இதைக் குறித்த தெளிவு இலங்கையர்களுக்குப் பொதுவாக இல்லை.

இலங்கையின் பொது வெளி என்பது உளவியற் சிக்கல்களாலும் அவநம்பிக்கையாலும் முரண்பாடுகளாலும் நிரம்பியுள்ளது. இனமுரண், மத வேறுபாடுகள் என்பவற்றின் வழியாக விளைந்திருக்கும் வரலாற்று ரீதியான நெருக்கடிகள் இத்தகைய உளவியற் சிக்கல்களையும் அவநம்பிக்கையையும் உருவாக்கியுள்ளன.

இதுவே ஆதிக்கச் சக்திகளுக்குத் தேவையாது.
உதாரணமாக, மேற்குச் சார்ப்பான வெளிநாடுகளின் அரச பிரதிநிதிகள் பெரும்பாலும் தமிழ் அரசியற் தரப்புகளைத் தொடர்ச்சியாகச் சந்திக்கின்றனர். அதைப்போல, தவறாமல் தமிழ்ப்பகுதிகளில் உள்ள கிறிஸ்தவப் பாதிரிமாரையும் ஆயர்களையும் அவர்கள் சந்தித்துப் பேசுகின்றனர்.

இதன்மூலம் சிங்கள பௌத்தத்துறவிகளை முக்கியத்துவமற்றவர்களாக்கி, அவர்களை ஒரு தீவிர நிலையை நோக்கித் தள்ளவே இவர்கள் விரும்புகின்றனர். சிங்களத் துறவிகள் புறக்கணிப்பதாகக் காட்டப்படும் அதேவேளை சிங்கள பௌத்தத் துறவிகளல்லாத பிற மதகுருமாரை முன்னிலைப்படுத்தும் ஒரு தோற்றப்பாட்டின் மூலம் முரண்பாட்டையும் எதிர் நிலைகளையும் வலுவாக்கி விடுகின்றன வெளித்தரப்புகள்.

இதுவே இன்று நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தமிழ்த்தரப்பு வெளிச்சக்திகளை அதிகம் நம்புகிறது. தமிழ்த்தரப்பு வெளிச்சக்திகளின் மீது – மேற்கின்மீது நெருக்கத்தை அதிகரிக்கும்போது சிங்களத்தரப்பு இதை முற்றாகவே எதிர்க்கிறது. இத்தகைய முரண் வளர்ச்சியை மிகக் கச்சிதமாகக் கையாள்கிறது மேற்கு.

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தத் தரப்புகள் ஒவ்வொன்றும் தமது நியாயப்பாடுகளை விவாதிப்பதற்கான அகப் புற நிலைமைகளை இந்தப் பொறிமுறையில் வெளிச்சக்திகள் உருவாக்கி வைத்திருப்பதுதான்.
இப்படி வெளிச்சக்திகளை எடுத்த எடுப்பிலேயே குற்றம் சாட்டுவது எவ்வளவு பொருத்தமானது என்று நீங்கள் கேட்கலாம்.

அவ்வாறெனில் இந்த வெளிச்சக்திகள் இலங்கைத்தீவின் சமாதானத்துக்காக முழு அர்ப்பணிப்போடும் பொருத்தமான செயல்முறைகளோடும் செயலாற்ற முன்வந்தனவா? இப்போது கூட இலங்கையில் சமாதானத்தை உருவாக்கும் எண்ணம் இவற்றுக்கு உண்டா? அவ்வாறாயின் இவற்றின் செயற்றிட்டங்கள் என்ன? அதை எப்படி அவை முன்மொழிகின்றன? என்ற கேள்விகளை நாம் பகிரங்கமாக முன்வைக்க முடியும்.

அமைதிக்கும் சமாதானத்துக்கும் புலிகளே தடை நிலைக்குரிய ஒரு சக்தி எனில் புலிகளற்ற இந்த மூன்று ஆண்டுகளில் வெளித்தரப்பின் - சர்வதேச சமூகத்தின் சமாதானத்தின் அர்ப்பணிப்பு எத்தகையது? அதன் எடை என்ன? அதனுடைய பெறுமதி என்ன?

ஆகவேஇ இலங்கைச் சமூகங்களிடையே உளவியற் சிக்கல்களையும் அவநம்பிக்கையையும் உருவாக்கிஇ அதன் மூலம் இடைவெளிகளை உருவாக்கிஇ அந்த இடைவெளிகளில் தங்களின் கால்களை இறக்கி விடவே இவை முயற்சிக்கின்றன என்பது நிரூபணமாகிறது.

ஆகவே, இந்தப் பொறியில் உளவியற் சிக்கல்களும் அவநம்பிக்கையும் நாட்டைப் பிசாசைப்போலப் பீடித்திருக்கிறது. இதனால், மத பீடங்கள் அரசியல் மன்றங்களாகி விட்டன. மதத்தலைவர்கள் கத்திகளைத் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். போதாக்குறைக்கு அரசியல்வாதிகளைப் போல அவ்வப்போது அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டுமிருக்கிறார்கள்.

சனங்களின் கழுத்தில் அரசாங்கமும் சுருக்குக் கயிற்றை மாட்டுகிறது. சர்வதேச சமூகமும் சுருக்கை மாட்டுகிறது. உள்ளுர்ப்பிரமுகர்களும் சுருக்கிடுகிறார்கள். ஊழல் தலைவிரித்தாடுகிறது. அரசாங்கம் பலவீனப்படப்பட அது மேலும் தீவிர நிலையில் இறுக்கங்களையே உருவாக்கும். இதுவே தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

இயல்பான நிலைமைகளில்தான் இயல்பாக அரசும் நாடும் இருக்கும். இயல்பற்ற நிலைகளில் பதற்றமும் குழப்பங்களும்தான் மிஞ்சும். இன்று மிஞ்சியிருப்பது பதற்றங்களும் குழப்பங்களுமே. அதாவது, யுத்தகாலத்தை ஒத்த நிலைமை. பொறிகளால் சுற்றிவளைக்கப்பட்டிருக்கும் நாடு வேறு எப்படி இருக்கும் என இப்போது நீங்கள் கேட்கிறீர்கள். இது உண்மைதான்.

இந்த நிலையில் நாட்டின் சித்திரம் எப்படியிருக்கும் என்று அதிகம் சொல்லத்தேவையில்லை. பலவீனங்களின் பின்னலில் அது முழுதாகவே சிக்கியிருக்கிறது. எனவேதான் நாட்டில் எத்தகைய பிரச்சினைகளுக்கும் எத்தகைய தீர்வையும் காணமுடியவில்லை.

இனப்பிரச்சினைக்கான தீர்வு, பொருளதார நெருக்கடிகளுக்கான தீர்வு, ஜனநாயக அச்சுறுத்தலுக்கான தீர்வு, வெளிநாடுகளுடனான உறவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கான தீர்வு, உள்ளுரில் காணப்படும் அரசியற் பிரச்சினைகளுக்கான தீர்வு என எதற்கும் எத்தகைய தீர்வையும் காணமுடியாமல் இலங்கை தத்தளித்துக் கொண்டுள்ளது.

இலங்கையின் இன்றைய நிலையைக் குறித்துச் சிந்திப்பதற்கு ஒரு ஆளுமை மிக்க தலைமைச் சக்தி உருவாக வேண்டும். வரலாற்றை முன்னகர்த்தக் கூடிய ஆளுமையாக, ஆற்றலாக அந்தச் சக்தி இருக்க வேண்டும். மக்களைக் குறித்தும் நாட்டைக்குறித்தும் யதார்த்தத்தைக் குறித்தும் சிந்திக்கும் ஒரு அரசியல் இயக்கமே இதற்கு அவசியமானது.

ஆனால், இவை எதுவும் இலங்கை அரசியலில் இல்லை. இலங்கையின் அரசியலில் மட்டுமல்ல, அரசியல் வெளிக்கு அப்பால் சமூக வெளியிலும் இல்லை. ஒரு நல்ல மதத்துறவி போதும் மாற்றங்களை உருவாக்குவதற்கு. ஒரு சமூக அக்கறையுள்ள கலைஞர் போதும் வரலாற்றைப் புதிய விதமாகப் படைப்பதற்கு. அர்ப்பணிப்பும் மக்கள் நேசிப்பும் உள்ள ஒரு நல்ல அமைப்புப் போதும் நெருக்கடிகளிலிருந்து மக்களையும் நாட்டையும் விடுவிப்பதற்கு.

கூரிய நுண்ணுணர்வும் அர்ப்பணிப்பும் நேர்மையும் அறிவாற்றலும் துணிச்சலும் பொதுமைப்பட்ட விரிந்த சிந்தனையும் உடைய எவரும் இந்த நெருக்கடி நிலையை மாற்றி விட முடியும்.

வரலாறு சிலவேளை அத்தகைய மனிதர்களை அல்லது அமைப்புகளை ஒரு சூழலுக்குப் பரிசளிப்பதுண்டு. ஆனால் , இலங்கை இந்த விசயத்தில் இன்னும் மலட்டுத்தன்மையோடே உள்ளது.

பதிலாக இலங்கையில் மூடர்களின் சாம்ராஜ்ஜியமே எல்லா இடங்களிலும் விரிகின்றது. எல்லோரும் இந்த நாட்டின் சக்கரவர்த்திகள் என்று நினைத்துக் கொண்டு அவரவர் குட்டிக் குட்டி ராஜாங்கம் செய்கிறார்கள். மதவாதிகளுக்கு ஒரு ராஜாங்கம். பத்திரிகையாளர்களுக்கு ஒரு ராஜாங்கம். அரசியல்வாதிகளுக்கு ஒரு ராஜாங்கம். ஆய்வாளர்களுக்கு ஒரு ராஜாங்கம்...

சலிப்பூட்டும் வரலாற்றில் தலைகளை விலையாகக் கொடுத்துக்கொண்டு சுவாரஷ்யமாக அரசியல் விவாதங்களைச் செய்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக இருப்பதில் என்னதான் லாபங்கள்? மனச்சாட்சிக்கும் அறிவுக்குமிடையில் தவித்துக் கொண்டிருக்கும் ஒரு சிந்தனையாளனின் எண்ணங்களுக்கு வேறு என்ன அர்த்தமுண்டு?

00

















 

2009 ·. by TNB