கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

உலகம் எப்படி இருக்கிறது? உலகத்தின் கண்களும் மனமும் எப்படியுள்ளது?

Friday 19 October 2012
















ருவகால மழை வன்னியில் ஆரம்பமாகிவிட்டது. இனி விதைப்பு அமளிதான். எல்லா வயல்களுக்குள்ளும் ஆட்களும் உழவு மெசின்களுமாக ஒரே அமர்க்களம். காடுகள் எல்லாம் களனிகளாகும். காய்ந்து தரிசாகிக் கிடந்த நிலமெல்லாம் பச்சைப் பசேலென மாறும். கண்ணுக்கெட்டிய தூரம் வரையில், வானம் தொடும் தூரம் வரையில் பச்சைதான் தெரியும்.

ஆனால், இந்த மழையோடு வன்னியில் இன்னொரு அமர்க்களத்துக்கும் இடமிருக்கு. இப்பவே இந்த அமர்க்களம் தொடங்கிவிட்டது. மழையோடு, வீடில்லாத சனங்கள், வீட்டை இழந்த சனங்கள் எல்லாம் பெரும் அவதிக்குள் சிக்கியுள்ளனர். வீடில்லாதவருக்கு வெயிலும் பிரச்சினைதான். மழையும் பிரச்சினைதான். வெயிலுக்கு மரநிழலில் ஒதுங்கிக்கொள்ளலாம். மழைக்கு?

மீள் குடியேற்றத்தோடு வந்த மக்களுக்கு தற்காலிக வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இந்தத் தற்காலிகம் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமானது. இப்போது மூன்று ஆண்டுகளாகி விட்டன. ஒரு ஆண்டு மேலதிகம். அடுத்து வரப்போவது நான்காவது ஆண்டு. இரண்டு ஆண்டுக்குரிய வீடுகள் எப்படி நான்கு ஆண்டுகளுக்கு, அதாவது இன்னொரு மடங்கு காலம் அதிகமாகத் தாக்குப் பிடிக்க முடியும்?

எனவே இந்த ஆண்டு பெய்யப் போகிற பருவமழைக்கு வன்னியில் ஒரு பேரவலம் நடக்கத்தான் போகிறது. மீண்டும் சனங்கள் அகதிகளாகப் போகிறார்கள். ஆனால், இந்தத் தொகை அதிகமாக இருக்காது. மிகக் குறைந்த அளவில் என்றாலும் அகதிப் பிரச்சினை வரத்தான் போகிறது.

உண்மையில் இதற்குக் காரணங்கள் பலவாக இருந்தாலும் கவனிக்க வேண்டியது இந்திய வீட்டுத்திட்டம் மற்றும் அரசாங்கத்தின் வீடமைப்பு நடவடிக்கைகளில் உள்ள குறைபாடுகளையே.

இந்திய அரசாங்கம் மிகப் பிரமாண்டப்படுத்தி அறிவித்த ஐம்பது ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் பாதிகூடக் கட்டுப்படவில்லை. பாதி என்று சொல்வதை விட நான்கில் ஒரு பகுதி அதாவது காற்பங்கு கூடக் கட்டுப்படவில்லை. ஏன் பத்தில் ஒரு பங்களவில் கூடக் கட்டி முடிக்கப்படவில்லை.

ஏதோ சாட்டுக்குச் செய்வதைப் போல மாதிரி வீடுகளாக இரண்டாயிரம் வீடுகள் மட்டும் கட்டப்பட்டுள்ளன. இது யானைப் பசிக்குச் சோளப்பொரி. பசியறியாதவன் பந்தி வைப்பதைப் போல. யுத்தத்தின் வடுக்களோடும் வலிகளோடும் இருக்கின்ற சனங்களை இப்படித் தொடர்ந்தும் அநாதைகளாக விடுவது பொருத்தமேயல்ல.

நடந்த யுத்தத்தில் இந்தியாவுக்கும் பங்குண்டு. இதை வெளிவந்து கொண்டிருக்கின்ற செய்திகளும் ஆதாரங்களும் தாரளமாக உறுதிப்படுத்துகின்றன. இதையெல்லாம் இந்தியா மறுக்கவும் இல்லை.

ஆகவே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சனங்களுக்கு உதவ வேண்டிய தார்மீகப் பொறுப்பு இந்தியாவுக்குண்டு. ஆனால், அரசியல் வரலாற்றில் ஆளும் தரப்புகள் அனைத்தும் நலன்களின் அடிப்படையிலேயே சிந்திப்பதால் மக்களைக் குறித்து அவை முழுமையாக – நீதியாகச் சிந்திக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. என்றாலும் குறைந்த பட்ச நாகரீகம் கருதி, ஏற்றுக்கொள்ளப்பட்டவற்றையாவது செய்யலாம். செய்ய வேண்டும்.

இதேவேளை போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்பில் ஈடுபட்டு வரும் சுவிஸ் மற்றும் செஞ்சிலுவைச் சங்க வீடமைப்பு நடவடிக்கைகள் பாராட்டுத்தக்கதாக உள்ளன. வீடமைப்பில் கடைப்பிடிக்கப்படும் சுயாதீனத்தன்மை, விரைவுத்தன்மை, ஒழுங்கு என்பன முக்கியமானது.

அதிக சத்தமில்லாமல் தங்கள் உதவிப் பணிகளை மேற்கொண்டு வரும் இந்தத் தரப்புகள் வீடமைப்புக்கு அப்பாலும் பல உதவிகளைப் பாதிக்கப்பட்ட சனங்களுக்குச் செய்கின்றன. வாழ்வாதார உதவிகளாக, பிரதேசத்துக்குத் தேவையான உட்கட்டமைப்பு வேலைகளாக என இது விரிவடைந்துள்ளது.

ஆனால், இந்திய, இலங்கை அரசுகளின் உதவிகள் இந்த அளவுக்கு இல்லை. இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் ஒரு லட்சம் வீட்டுத்திட்டத்தைப் பற்றி அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆனால், பசித்தவருக்கு அவை பகிரப்படவேயில்லை.

தேசிய வீடமைப்பு அதிகார சபை மற்றும் வீடமைப்பு அமைச்சு எதுவும் கூட உருப்படியாக இந்தச் சனங்களுக்குச் செய்ததாக இல்லை. எனவே மாரிகாலத்தில் மழைக்குள்ளே சிக்கிச் சீரழியப் போகின்றனர் வன்னியின் மீள்குடியேறிகள்.

அதிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப் பற்றுப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள்தான் இந்தப் பொறியில் வசமாகச் சிக்கப் போகிறார்கள். இவர்களில் பலர் இன்னும் தங்கள் சொந்த இடங்களுக்கே செல்லவில்லை. உதாரணமாக கேப்பாப்பிலவு மக்கள்.

தற்காலிக வீடு மாத்திரம் அல்ல. இவர்கள் இருக்கின்ற இடமும் தற்காலிகமானதாகவே இருக்கிறது. இதனால் இவர்கள் இன்னமும் அகதிகள்தான். மீள் குடியேறிகள் என்று சொல்லப்பட்டாலும் வாழ்தலின் அர்த்தத்தில் இவர்கள் அகதிகளே.

யுத்த முடிவோ, அதற்குப் பின்னான மூன்றாண்டு கால நீட்சியோ, பிரதேசத்துக்குத் திரும்புதலோ, இந்தச் சனங்களுக்கு எந்தத் தீர்வையும் கொண்டு வரவில்லை. பதிலாக தொடரும் நிழலாகத் துயரத்தையும் அலைக்கழிவையும் நிச்சயமற்ற தன்மையையும் உத்தரிப்பையுமே தருகின்றன.

ஆனால், இந்தச் சனங்களின் உண்மை நிலைமையைப் பற்றி அரசாங்கமோ அரசியற் தரப்பினரோ பொது அமைப்புகளோ உணர்ந்ததாகத் தெரியவில்லை.

தொண்டு நிறுவனங்கள் பலவும் தங்களிடம் நிதி முடிந்து விட்டது என்று சொல்கின்றன. அல்லது இந்த மக்களுடைய தேவைகளைப் பற்றி தங்களின் மேலிடத்துக்கு எழுதியுள்ளோம். அங்கிருந்து பதில் வந்தால் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்று தெரிவிக்கின்றன.

சில தொண்டு நிறுவனங்கள் குறிப்பிட்ட திட்டங்களுக்கு அப்பால் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கையை விரிக்கின்றன.

ஏறக்குறைய இதே நிலைமைதான் யுத்தகாலத்திலும் இருந்தது. சனங்களைக் காப்பாற்றவோ யுத்தத்தின் போக்கைத் தணிக்கவோ எந்தத் தரப்பும் முயற்சிக்கவில்லை. பதிலாக ஏதோ சாட்டுப் போக்குகளைச் சொல்லிக் கொண்டிருந்தன.

அதை ஒத்த பதில்களும் காரணங்களுமே இன்றும் சொல்லப்படுகின்றன. ஆகவே சனங்களைப் பொறுத்த வரையில் உள்ளுர் நிலைமையும் மாறவில்லை. உள்நாட்டு அரசியலும் மாறவில்லை. அதைப் போல சர்வதேச அரசியலும் மாறவில்லை. அதனுடைய அணுகுமுறையும் மாறவில்லை.

எல்லாமே ஒரு வகையில் நாடகம்தான். சந்தேசமேயில்லை. இது சனங்களை ஏமாற்றும் நாடகம். இந்த நாடகத்தில் அவரவர் ஒவ்வொரு பாத்திரத்தை வகிக்கிறார்கள். அவ்வளவுதான். பல தரப்பும் இணைந்த ஒரு கூட்டு நாடகம் இது.

யுத்தத்தை எப்படி இந்த மேலாதிக்கச் சக்திகள் ஆதரிக்கின்றனவோ, எவ்வாறு கூட்டுச் சேர்ந்து அதை நடத்துகின்றனவோ அவ்வாறே யுத்தகால நிலைமையையும் அதற்குப் பின்பான நிலைமையையும் இவை கூட்டாக இணைந்து தொழிற்படுத்துகின்றன.

இல்லையென்றால், அமெரிக்காவின் யு.எஸ் எயிட், ஐரோப்பிய ஒன்றியம், அரபு லீக், சார்க் அமைப்பு, கொமென்வெல்த் என்ற அமைப்புகள் இந்த மக்களுக்கு எவ்வளவோ உதவிகளைச் செய்திருக்க முடியும். அப்படிச் செய்திருக்கவும் வேண்டும். ஆனால், அது நடக்கவே இல்லை.

இதைக் குறித்து யாரும் பெரிதாகச் சிந்தித்ததாகவும் இல்லை. தமிழ் அரசியற் தரப்பினர் கூட இந்த அமைப்புகள் மற்றும் நாடுகளிடம் ஒரு வலுவான கோரிக்கையை முன்வைத்துப் பேசியதோ வற்புறுத்தல்களை மேற்கொண்டதோ இல்லை.

ஆனால், மக்கள் தங்களுக்கான முதலுதவித்தேவையுடனேயே காத்துக்கொண்டிருக்கின்றனர்.

துயரவெளியில் அவர்கள் தனித்து விடப்பட்டுள்ளனர். அவர்களைச் சுற்றி பல புயல்கள் வீசிக் கொண்டிருக்கின்றன. ஒரு நாளை, ஒரு கணத்தைக் கழிப்பதற்கே அவர்கள் பெரும்பாடு படுகிறார்கள்.

இதேவேளை இந்தச் சனங்களின் வாழ்க்கையை தினமும் வந்து பலரும் பார்த்துப் போகின்றனர் வெளியூர்வாசிகள். அதிலும் அதிகமானவர்கள் தென்னிலங்கை மக்கள்.

இவர்களிடம் கூட யாரும் வாய்திறப்பதில்லை. இந்தச் சனங்களைக் குறித்து எவரும் அவர்களிடம் பேசுவதில்லை.

அவர்களும் இந்தச் சனங்களைக் குறித்து எதையும் கேட்டறிவதில்லை. இந்தச் சனங்களின் கதையை, நிலையை அறிய விரும்புவதுமில்லை.

ஏன், வருவோரெல்லாம் புலிகளின் சுவடுகளைத் தேடுகிறார்களே தவிர, மிஞ்சியிருக்கும் அகதிச் சனங்களைப் பற்றிப் பார்க்கிறார்களில்லை.
எங்களைக் குறித்து யாரும் கண்களையும் திறக்கவில்லை. இதயத்தையும் திறக்கவில்லை என்று வருத்தத்தோடு புதுக்குடியிருப்பு திம்பிலி என்ற இடத்தில் தற்காலிக குடியிருப்பில் தற்காலிகக் குடிசையொன்றில் வாழும் அந்திரஸ் பிலோமினா சொன்ன கருத்து புறக்கணிக்கவே முடியாதது. மறுத்துப் பேசவும் முடியாதது.

உலகம் எப்படி இருக்கிறது? உலகத்தின் கண்களும் மனமும் எப்படியுள்ளது? என்பதற்கு இன்றைய இந்த வன்னி நிலைமைகள் மேலும் ஒரு வலுவான சாட்சியம்.

மாரி மழை யாருக்காகவும் பொறுத்துப் பெய்வதுமில்லை. அது யாரையும் காப்பாற்றுவதுமில்லை. யாரையும் விலக்குவதுமில்லை. அது பெய்யத்தான் போகிறது. அகதிகளை, அகதிகளாகவே இருக்கும் மீள் குடியேறிகளை அலைக்கழிக்கத்தான் போகிறது.

நிலாந்தன் என்ற கவிஞர் சொன்னதைப் போல அது ‘நீச மழை’யாகப் பொழியத்தான் போகிறது. அகதிகளின் கண்ணீரை மேலும் பெருக்கும் விதமாகப் பொழியத்தான் போகிறது.

காலங்கள் நகர்ந்திருக்கலாம். கள நிலை மாறியிருக்கலாம். ஆனால், சனங்களின் நிலை இன்னும் முழுதாக நகரவில்லை.

தனியொரு குடும்பம் தன் வீட்டுக்கு, தன்னுடைய ஊருக்குப் போகாத வரையில் எதுவும் நிறைவில்லை. மீள்குடியேற்றமுந்தான். இயல்பு வாழ்க்கையும்தான்.

எத்தனை படிக்கட்டுகளை எறிச்சென்றாலும் சிகரத்தைத் தொடாத பயணமாகவே அது இருக்கும்.

வன்னியில் பெய்யவுள்ள பருவமழை நிலத்தைப் பச்சையாக்கலாம். ஆனால், சனங்களின் வாழ்வில் இருக்கின்ற பாலையை சுலபமாகப் பச்சையாக்கிவிட முடியாது.

00  



0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB