கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

ரணிலின் வடக்கு விஜயம் - நோக்கமென்ன?

Tuesday 27 March 2012


 











எதிர்க்கட்சித் தலைவர் திரு. ரணில் விக்கிரமசிங்க தன்னுடைய குழுவினருடன் கடந்த வாரம் வடக்கே யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ரணில், அங்கே சில பிரதேசங்களுக்குச் சென்று மக்களுடன் சந்திப்புகளை நடத்தினார். அங்குள்ள சில முக்கியஸ்தர்களையும் சந்தித்தார்.

‘ரணிலின் விஜயம், அங்குள்ள நிலைமைகளைக் கண்டறிவதும் ஐ.தே.கவின் நிலைப்பாட்டைப் புரியவைப்பதுமாகும். மேலும் யாழ்ப்பாண மக்களின் உணர்வுகளை அறிந்து கொள்வதுமாகும்’ என ரணிலின் பயணத்தில் கலந்து கொண்டிருந்த ஐ.தே.க வின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

ரணிலின் வருகையும் யாழ்ப்பாணத்தில் அவர் பேசியவையும் தலைப்புச் செய்திகளாகின ஊடகங்களில். அவர் அங்கே பேசத் தயங்கிய விசயங்களும் விதி விலக்காகத் தலைப்புச் செய்திகளாகின ஒரு சில ஊடகங்களில்.

இவையெல்லாம் புதினமல்ல. ரணில் யாழ்ப்பாண மக்களுக்குச் செய்த உபதேசங்களும் அவற்றைச் சில ஊடங்கள் தலைப்புச் செய்திகளாக்கியதுமே இங்கே புதினம்.

ரணில் சொன்னார்:

‘.....இலங்கையில் இப்பொழுதிருக்கும் ஆட்சி மாறினால் மட்டுமே தமிழர்களுக்குத் தீர்வு கிடைக்கும். யுத்தத்திற்குப் பின்னர் விரைவில் அரசியற் தீர்வு கிட்டப்படும் என்று அரசு காலத்துக்குக் காலம் கூறிவருகின்ற போதிலும் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு இன்றுவரை எந்த நடவடிக்கைகளையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, தமிழ் மக்களுக்கு இந்த அரசாங்கம் ஒருபோதுமே அரசியற் தீர்வைப் பெற்றுத்தரப்போவதில்லை. வடபகுதி மக்கள் பெரும் சுமையுடனும் அச்சத்துடனும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தென்னிலங்கையிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. ஊழல், லஞ்சம், அதிகாரம், குடும்ப ஆட்சி போன்ற எல்லாவற்றாலும் நாடு சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கிறது. நாடு இன்று அநீதியாளர்களின் கைகளிற் சிக்கியுள்ளது. இந்த அராஜகத்திலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும். அதற்காகத் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் அனைவரும் ஒன்றுபட்டுப் போராட முன்வர வேண்டும்....’ என்று.

ரணிலினுடைய இந்தக் கண்டு பிடிப்புக்கும் இந்த உபதேசத்திற்கும் அப்பாற் சென்று அவர் இப்போது உருவாக்கியிருக்கும் தமிழ் மக்களின் மீதான கருணை என்ற திரையை விலக்கிப் பார்த்தால் அவருடைய கடந்த காலக் காட்சிகள் தெரியும். மட்டுமல்ல ரணில் விக்கிரமசிங்கவையும் ஐ.தே.கட்சியின் கடந்த காலத்தையும் கண்டு கொள்ள முடியும்.

இதை வாசிக்கும்போது – குறிப்பாகத் தமிழ்பேசும் மக்களுக்கு, ரணில் விக்கிரமசிங்கவைப் பற்றியும் ஐ.தே.க. வைப்பற்றியும் எத்தகைய புரிதல் ஏற்படும்?

1.   இனவன்முறையை உச்சநிலைக்குக் கொண்டு சென்றது ஐ.தே.க.

2.   1977 - 83 இனக்கலவரங்களையும் 1981 யாழ் நூலக எரிப்புத் தொடக்கம் யாழ்ப்பாணத்தையே எரித்தது ஐ.தே.க.

3.   சிறைச்சாலையில் படுகொலைகளைச் செய்தது ஐ.தே.க.

4.   ஆயிரக்கணக்கான இளைஞர்களைத் தெருக்களிலே சுட்டுப் போட்டது தொடக்கம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களைச் சிறையிலடைத்தது ஐ.தே.க. (பூஸா போன்ற சிறைச்சாலைகள் இதற்காக விசேடமாகத் திறக்கப்பட்டன).

5.   படுகொலைகளும் பாலியல் வன்முறைகளும் செய்வதற்கான தாராள அனுமதியைப் படைகளுக்கு வழங்கி இராணுவத்துக்கு உச்ச அதிகாரத்தை வலுப்படுத்தியது ஐ.தே.க.

6.   எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அ.அமிர்தலிங்கத்தையும் அவருடைய தமிழர் விடுதலைக்கூட்டணியையும் பயங்கரவாத முத்திரை குத்தி நாட்டைவிட்டே தப்பியோட விரட்டியது ஐ.தே.க.

7.   மேலும் எதிர்க்கட்சியாக விளங்கிய அனைத்துத் தரப்பையும் பலவீனப்படுத்தி, இறுதியில் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையையும் பறித்தது ஐ.தே.க.

8.   வடக்குக் கிழக்கில் தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையில் முஸ்லிம் இளைஞர்களிற் சிலருக்கு ஆயுதம் வழங்கி நிலைமையை மோசமாக்கியது ஐ.தே.க.

9.   மக்களை மோசமான முறையிற் கட்டுப்படுத்தும் அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம், கடல்வலயச்சட்டம் என்று ஏராளம் சட்டங்களை அறிமுகப்படுத்தியது ஐ.தே.க.

10. இந்த நாட்டிலே நிறைவேற்று அதிகாரம் என்ற அதிகாரமிக்க ஜனாதிபதி ஆட்சி (பேயாட்சி) முறையை அறிமுகப்படுத்தி அதை அமூலாக்கியது ஐ.தே.க.

11. இலங்கை இந்திய உடன்படிக்கையின் வழியாக இந்திய இராணுவத்தை இலங்கைக்குள்ளே இறக்கியதால் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலியிட வைத்தது ஐ.தே.க.

12. மக்கள் வாழும் பகுதிகளின் மீது படையெடுப்புகளை மனிதாபிமானத்துக்கு அப்பாலான முறையில் (வடமராட்சியில் மேற்கொள்ளப்பட்ட ஒபரேஷன் லிபரேஷன்) செய்தது ஐ.தே.க.

13. குண்டு வீச்சுகளையும் விமானத்தாக்குதல்களையும் நடத்தியது ஐ.தே.க.

14. இனப்பிரச்சினைக்கு போரின் மூலமாக – அடக்குமுறையின் மூலமாகவே தீர்வு காணப்படும் என்பதை அரசியல் வழிமுறையாகக் கொண்டு செயற்பட்டது, செயற்படுவதற்கு முன்னுதாரணமாக இருந்தது ஐ.தே.க.


இப்படி ஐக்கிய தேசியக் கட்சி இலங்கைத் தீவுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் செய்த தவறுகள் ஏராளமுண்டு. இவை சாதாரணமானவையல்ல. எளிதில் மறந்து விடக்கூடியனவுமல்ல. இன்றைய இலங்கையின் சீரழிவிற்கும் கட்டற்ற அதிகாரத்துக்கும் தொடக்கப் புள்ளிகளை உருவாக்கியதில் ஐ.தே.கவிற்கே முக்கிய பங்குண்டு.

இந்த நாட்டிலே மிக மூத்த அரசியற் கட்சி ஐ.தே.க.தான். மிக நீண்டகாலம் ஆட்சியிலிருந்த கட்சியும் ஐ.தே.க. தான். அதேயளவுக்கு இந்த நாட்டிலே இனப் பிரச்சினை தொடக்கம், பொருளாதாரப் பிரச்சினைகள் வரையில் எல்லாப் பிரச்சினைகளையும் சிக்கலான நிலைமைக்குக் கொண்டு சென்றதும் ஐ.தே.க. வே.

இதனாற்தான் ஐ.தே.க. தன்னுடைய தலைவர்களை அதிகளவில் வன்முறைக்குப் பலி கொடுக்க வேண்டியிருந்தது. வன்முறையை விதைத்ததன் விளைவை பின்னாளில் அது அனுபவிக்க வேண்டியிருந்தது.

அதைப்போல எந்த அதிகார முறைமையை அது தன்னுடைய ஆட்சிக்காகப் பயன்படுத்தியதோ அதே அதிகார முறைமையினால் இப்போது அது தண்டனைக்குள்ளாகிக் கொண்டிருக்கிறது.

இவ்வளவுக்கும், மேலே குறிப்பிட்டுள்ள ஐ.தே.கவின் தவறுகள் அல்லது அதனுடைய ஆட்சிச் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்ட வேளையில் திரு. ரணில் விக்கிரமசிங்க மிகப் பொறுப்பான பதவியில் ஐ.தே.க.விலிருந்தவர்.

இதையெல்லாம் இப்போது இலங்கை மக்களோ அல்லது தமிழ் பேசும் மக்களோ எப்படி இலகுவாக மறந்து விட்டனர்? என்று அவர் நம்புகிறார். இவை அந்தளவுக்குச் சாதாரணமானவையா?

ரணிலினாலேயே, ஏன் அந்தக் கட்சியினாலேயே ஜீரணித்துக் கொள்ள முடியாத அளவுக்கு ஐ.தே.கவின் கடந்த காலம் அதற்குத் தண்டனையை வழங்கியதைக் கூடவா அவர் மறந்து விட்டார்?

இப்போது கூட தான் உருவாக்கிய சுற்றுச் சுவர்களுக்குள்ளிருந்தும் தான் வெட்டிய குழிக்குள்ளிருந்தும் தன்னால் உருவாக்கப்பட்ட நெருப்பு வளையங்களிலிருந்தும் வெளியேற முடியாமல் அந்தக் கட்சி இருப்பதைக் கூடவா ரணிலினால் புரிந்து கொள்ள முடியவில்லை?

இதையெல்லாம் மறந்து விட்டு, அல்லது மக்கள் மறந்திருப்பார்கள் என்ற நினைப்போடு புதிய கதைகளைச் சொல்ல முற்படுகிறார் அவர்.

இவை மட்டுமல்ல, விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்தபோது, அதை மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் யுத்த வெற்றியாகக் கொண்டாடியபோது அந்த வெற்றிக்கான அடித்தளத்தை இட்டுக் கொடுத்தது தானே என்று ரணில் பகிரங்கமாகவே அறிவித்திருந்தார்.

மேலும் புலிகளைப் பலவீனப்படுத்துவதற்காக புரிந்துணர்வு உடன்படிக்கையையும் போர் நிறுத்தத்தையும் தான் உருவாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன், புலிகளிடமிருந்து கருணாவைப் பிரித்தததும் தான் என்றும் இதன்மூலம் கிழக்கை இலகுவாக அரச கட்டுப்பாட்டிற்குக் கீழ் கொண்டு வர முடிந்ததென்றும் தொடர்ச்சியாக, கருணாவைக் கொண்டே புலிகளை மதிப்பிட்டதாகவும் அதை வைத்துக்கொண்டே அவர்களுடைய அணுகுமுறைகளையும் தந்திரோபயங்களையும் முறியடிக்கக்கூடியதாக இருந்ததாகவும் கூறினார் ரணில்.

இவையெல்லாம் எப்போது மறக்கப்பட்டன?

தவறுகளையும் குற்றங்களையும் எப்போதும் முன்னிலைப்படுத்தினால் புதிய பிராந்தியங்களை நோக்கி நகரமுடியாது என்பது அடிப்படையான உண்மை. இதை மறுக்க முடியாது. ஆனால், தவறுகளையும் குற்றங்களையும் திருத்தாமலும் முன்னே நகர முடியாது. இதுவும் உண்மை. மறுக்க முடியாது இதையும்.

இதேவேளை யுத்தக் குற்றங்களைக் குறித்தும் கடந்த கால போர் மற்றும் இனமுரண்களைக் குறித்தும் இன்றைய மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தையும் இப்படித்தானே நோக்க வேண்டும்? என்று யாரும் கேட்கலாம். உண்மை. இந்தக் கேள்வியும் நியாயமானதே.

தலைமைப்பொறுப்பிலிருக்கும் - ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் எவரொருவர் தவறுகளைச் செய்தாலும் பொறுப்புகளைத் தட்டிக் கழித்தாலும் அது தண்டிக்கப்படவேண்டியது. மன்னிக்க முடியாதது. குற்றத்திற்குரியதே. அதற்கான நெருக்கடிகளை இன்று தொடர்ச்சியாக ராஜபக்ஷ அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டியிருப்பது இதனாற்தான்.

ஆனால், இதற்குப் பதிலாக – அல்லது மாற்றாக தான் ஆட்சிக்கு வரும்போது மாற்றங்களையும் தீர்வுகளையும் முன்வைப்பேன் என்று எத்தகைய அடிப்படையில், என்ன துணிச்சலில், எத்தகைய மன உறுதிப்பாட்டுடன் ரணில் வாக்குறுதிகளை வழங்குகிறார்? அல்லது அறிவிப்புகளைச் செய்கிறார்?

அவருடைய கட்சிக்குள்ளேயே அவருக்கு இன்னும் ஏராளம் நெருக்கடிகள். அதையே சமாளிக்க முடியாமற் திணறும்போது புதிய கனவுகளும் ஆசைகளும் அவருக்கு ஏற்படுவது சிரிப்பிற்கிடமானது.

அரசியலில் எதுவும் நடக்கும். இன்று வீழ்ச்சியடைந்திருப்பவர் எதிர்பார்க்க முடியாதவாறு எழுச்சியடைவர் என்பது எதிர்பார்க்கக் கூடியது. ஆனால், ரணில் சொல்லும் தீர்வுகளுக்கான நியாயம் இதை விட வேறானது.

அவர் கூறுகிற படி, இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்க முடியும். நாட்டில் அமைதியையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்துவேன். அநீதியை ஒழிப்பேன். அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவேன் என்ற அவருடைய கதைகளுக்கான அடிப்படைகள் என்ன? இதற்கான உத்தரவாதங்கள் என்ன? அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தரவாதங்கள்தான் என்ன?

இதுவரையான அரசியற் தவறுகளுக்கும் நாடு சிதைந்ததற்குமான தார்மீகப் பொறுப்பை அந்தக் கட்சியோ அல்லது அதனுடைய எந்தத் தலைவரோ இதுவரையில் ஏற்றுக்கொண்டதாக இல்லை. ஏன் ரணில்கூட இதுகாலவரையான தம்முடைய தவறுகளுக்காக வருத்தம் தெரிவித்ததில்லை. அதுதான் போகட்டும்.

ஆகக்குறைந்தது, அவர் கூறுகின்றதை மெய்ப்பிப்பதற்கான அடிப்படைக்குரிய புதிய திட்டங்களையும் நிலைப்பாடுகளையுமாவது அவர் அறிவிக்கட்டும்.

இனப்பிரச்சினை தொடர்பாக, போர்க் குற்றவிவகாரங்கள் தொடர்பாக, பொருளாதார மறுசீரமைப்புத் தொடர்பாக, இன ஐக்கியம் அல்லது நாட்டின் சுபீட்சம் தொடர்பாக என ஏதாவது ஒன்றைப் பற்றியேனும்.

தேர்தற்காலங்களில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக தமிழ், முஸ்லிம், சிங்களக்  கட்சிகளுடன் பேச்சுகளை நடத்துகின்ற ரணில், இனமுரணைத் தீர்த்துக்கொள்வதற்காக ஏன் பேச்சுகளை முன்னெடுக்கக்கூடாது. அல்லது அதற்கான அடிப்படையை உருவாக்குவதற்காகத் தன்னுடைய பாத்திரத்தை வழங்கக்கூடாது. நாட்டில் மக்களின் சுமைகளைக் குறைப்பதற்கும், ஜனநாயக உரிமைகளை மீட்பற்கும் அவர் எத்தகைய போராட்டங்களை நடத்தினார். அல்லது அதற்குத் தயாராக உள்ளாரா?

எதற்கும் அவரால் பதிலளிக்க முடியாது. அத்தகைய உறுதிப்பாட்டையும் நிலைப்பாட்டையும் புதிய பார்வையையும் ஐ.தே.க இன்னும் கொள்ளவில்லை. அதைப் பற்றியே அது சிந்திக்கவும் இல்லை. எனவேதான் அது மிக மிகப் பின்னடைந்து சிதைந்து செல்கிறது.

ஒழுங்கான தலைமைத்துவம் இன்றி, ஒழுங்கான செயற்பாடின்றி இருப்பதற்குக் காரணம் சரியான உறுதிப்பாட்டையும் நிதியான நிலைப்பாட்டையும் புதிய பார்வையையும் அது கொண்டிருக்காமையே.

யாழ்ப்பாணத்தில் சில ஊடகவியலாளர்கள் சில கேள்விகளை திரு. ரணிலிடம் எழுப்பினார்கள். இனப்பிரச்சினைத்தீர்வுக்கான வழிமுறை குறித்தும், போர்க்குற்ற விவகாரங்களைக் குறித்தும், மக்களுடைய வாழ்க்கையைக் குறித்தும் அந்தக் கேள்விகள் இருந்தன.

இவை எவற்றுக்குமே அவர் பதிலளிக்கவில்லை.

அவருடைய கவனங்கள் நீதியைக் குறித்ததோ அமைதியைக் குறித்ததோ மக்களுடைய நல்வாழ்வைக் குறித்ததோ இல்லை என்பதற்கு அருடைய பதிலின்மை தெளிவூட்டுகிறது. பதிலாக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்வதற்கானதே.

இப்போது ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்தின் மீதான அதிருப்தியையும் போர்க்குற்றங்களின் அலை, தமிழ் மக்களிடம் உண்டாக்கிய மனநிலையையும் தனக்கான அறுவடையாக்கும் முயற்சியில், இந்தச் சற்றேனும் மனந்தளராத (ரணில்) விக்கிரம (hதித்தன்) சிங்க இறங்கியுள்ளார்.

வரலாறு ஒரு சக்கரம்தான். அதேவேளை அது மக்களின் மறதியினூடாகவும் அவர்களுடைய மூடத்தனங்களுக்கூடாகவும் திரும்பத்திரும்ப அதிகாரத்தை பொருத்தமற்றவர்களின் கைகளிற் கொடுத்துவிடுகிறது.

00






ஜெனிவா – மனித உரிமைகள் பேரவை - இலங்கைக்கு எதிரான பிரேரணை அமெரிக்கப் பிரேரணை –





இறுதியில் அது நடந்தே விட்டது. எது நடக்கக்கூடாது என்று இலங்கை விரும்பியதோ அது நடந்தே விட்டது. அது அப்படி நடப்பதை இலங்கை அரசினால் தடுக்க முடியவில்லை. அதைத் தடுப்பதற்காக அது எடுத்த அத்தனை முயற்சிகளும் இறுதியில் பயனற்றுப்போயின.

இலங்கைக்கு எதிரான பிரேரணையை இலங்கையர்களில் ஒரு பகுதியினராகிய இலங்கையர்களே வரவேற்றிருக்கிறார்கள். இலங்கைக்கு எதிரான இந்தப் பிரேரணை வெற்றியடைய வேண்டுமென்பதற்காக அவர்கள் கடுமையாக  வெளிப்படையாகவே முயற்சித்திருக்கிறார்கள்.

தாய்நாட்டுக்கெதிராகச் சிந்திக்கும் ஒரு உளநிலையும் அவசியமும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் எதிர்பார்ப்புகளுக்கும் நம்பிக்கைக்கும் எதிராக அதனுடைய நட்பு நாடான இந்தியாவே செயற்பட்டிருக்கிறது.

கடந்த இரண்டாண்டுகளாக உச்சநிலையிலிருக்கும் போர் வெற்றி இப்போது அச்சநிலையாக உருமாற்றம் பெற்றிருக்கிறது.

மிகச் செறிவும் கடினத்தன்மையும் வாய்ந்த சிங்கள இராசதந்திரத்துக்கு நெருக்கடியும் பின்னடைவும் ஏற்பட்டுள்ளது.

இனமுரணின் விளைவான போர் முடிந்த பிறகும் இனமுரண்கள் கொதிநிலையிலேயே இருக்கின்றன. இன்னும் பிளவுண்ட நிலையிலான அணுகுமுறைகளே தொடர்கின்றன.

இதெல்லாம் ஏன் நிகழ்கின்றன? அல்லது எப்படி நிகழ்கின்றன?

இவற்றுக்கான பதில்களைக் கண்டு பிடிப்பதிலிருந்தே இலங்கை அரசினதும் இலங்கையர்களுடையதும் எதிர்காலம் தங்கியுள்ளது.

இதைச் சற்று விரிவாகப் பார்க்கலாம். அதற்கு முன்னர் -

சொந்த மக்களைக் குறித்து எந்த அரசு அக்கறைகளைக்குறைக்கிறதோ அவர்களுடைய பாதுகாப்புக்கும் கௌரவத்துக்கும் எந்த அரசு உரிய கவனமெடுக்கத் தவறுகிறதோ அந்த அரசுக்கு வெளி நெருக்கடிகளும் அழுத்தங்களும் அதிகரிக்கும் என்பது இன்றைய அரசியல் ஒழுங்காகும். இதில் வாதங்கள், விருப்பு வெறுப்புகள், பிற நியாயங்கள் இருக்கலாம். ஆனால், இந்த வெளி நெருக்கடிகளை குறிப்பிட்ட அரசு எதிர்கொண்டே ஆக வேண்டும். இதற்கு அண்மைய உதாரணங்கள் ஏராளமுண்டு.

ஏனெனில் இது ஒற்றை மைய உலகாகும். தவிர, இவ்வாறான வெளி அழுத்தங்களுக்கு எதிராக மக்கள் ஒரு முகப்பட்டு நிற்பதற்குப் பதிலாக மக்களைப் பிளவு படுத்தி நிற்பது குறிக்கப்படும் உள்ளுர் அரசுகளே. இலங்கையிலும் இதுதான் நிலவரம்.

இலங்கையின் நெருக்கடி நிலைக்குக் காரணமாக உள்ளது இனமுரண். இனமுரணின் காரணமாகவே ஒரு பெரும்போரையும் இருண்ட யுகமொன்றையும் இலங்கையர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இனமுரண் உருவாக்கிய அபாயக் குழி பொதுமக்களையும் விழுங்கியது. தலைவர்களையும் விழுங்கியது. ஆனால், இப்பொழுது போர் முடிந்த பின்னரும் முடிவற்றுத் தொடர்கிறது இந்த இனமுரண். இப்பொழுது அது வெளி அழுத்தங்களுக்கும் இடமளித்துள்ளது.

இனமுரணைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியமையும் அதைக்குறித்துச் சிந்திக்கத் தவறியமையுமே – இன்னும் தவறுகின்றமையுமே இலங்கைக்கான பிரதான நெருக்கடிக்குக் காரணமாகும்.

இனமுரணின் காரணமாக இலங்கைக்கு முன்னரும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. அல்லது இனமுரணை இலங்கைக்கு எதிரான ஆயுதமாகப் பாவிக்கின்றன வெளிச் சக்திகள். இந்தியா தொடக்கம் அமெரிக்கா வரையில் இதைத்தான் செய்து வருகின்றன.

இதைப் புரிந்து கொள்வதிலேயே இலங்கையின் எதிர்காலம் தங்கியுள்ளது. அதாவது இலங்கையிலுள்ள அனைத்துச் சமூகத்தினருடைய எதிர்காலத்துக்குமானது.

சரி, இனி ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான பிரேரணையைக் குறித்துப் பார்க்கலாம்.

அமெரிக்காவின் இந்தப் பிரேரணை ‘இலங்கைக்கு எதிரானது’ என்று  வெளிப்படையாகவே பொருள் கொண்டுள்ளது. ஆகவே இதனால் ஏற்படும் பாதிப்புகளும் நெருக்கடிகளும் இலங்கையர் அனைவருக்கும் பொதுவானவை. இதில் தமிழர் சிங்களவர் என்ற பேதங்களும் வகைப்பாடுகளும் இருக்கப்போவதில்லை. ‘ஆட்டுக்குரியதே குட்டிக்கும்’ என்பார்கள். எனவேதான் இந்தப் பிரேரணையைக் குறித்து நிதானமாகச் சிந்திப்போர் இதை இலங்கையர்களுக்கு எதிரான பிரேரணை என்று வியாக்கியானப்படுத்துகின்றனர். இது மறுக்க முடியாதது.

தவிர, இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வை உருவாக்கும் எண்ணப்பாட்டுடன் இந்தப் பிரேரணை உருவாக்கப்படவில்லை என்பதும் வெளிப்படையானது. அவ்வாறு ஒரு சிந்திப்பு இந்தப் பிரேரணை உருவாக்கத்தில் இருந்திருக்குமானால், அதற்கான வழிமுறைகளும் வேறாகவே இருந்திருக்கும். ஆனால், அப்படி நடக்கவில்லை.

இந்தப் பிரேரணைக்கான ஆதரவை அமெரிக்கா வெளிநாடுகள் பலவற்றிடம் கோரியிருக்கிறது. குறிப்பாக இந்தியாவிடம் அது மிகக் கடுமையாக முயற்சித்திருக்கிறது.

ஆனால், இலங்கையிலுள்ள சிறுபான்மைச் சக்திகளிடம் அது ஆதரவைத் தேடவில்லை. ஏனெனில் அதற்கு இதைக் குறித்த அக்கறைகளில்லை. அப்படியான ஒரு உத்தரவாதத்தை அளிக்க வேண்டும் என்று அது சிந்திக்கவும் இல்லை. அப்படி அமெரிக்காவினால் சிந்திக்கவும் முடியாது. ஏனெனில், அமெரிக்காவின் அணுகுமுறையிலும் நிகழ்ச்சி நிரலிலும் ஒடுக்கப்பட்ட மக்களைக் குறித்தும் ஒடுக்கப்படும் இனங்களின் விடுதலையைக் குறித்தும் எத்தகைய நிகழ்ச்சித்திட்டமும் உருவாக்கப்பட்டிருக்கவில்லை.

ஆனால், உலகெங்கும் இனமுரணையும் அதன் விளைவாக உள்ளரங்கில் ஏற்பட்டிருக்கும் இடைவெளிகளையும் தனக்கான வாய்ப்பாகவே அமெரிக்கா பயன்படுத்துகிறது. இதையே சக்திமிக்க பிற  வெளித்தரப்புகளும் செய்து வருகின்றன.

இன்னும் சொல்லப்போனால் கூறப்படும் போர்க்குற்றங்களில் ஒரு பிரதான பங்கேற்பு அமெரிக்காவுக்கும் உண்டு. அதை விட போர்க்குற்றங்கள் நிகழ்வதைத் தடுக்காதிருந்த பொறுப்பும் அமெரிக்காவுக்குண்டு. இந்தக்குற்றச்சாட்டுகள் இந்தப் பிரேரணைக்கு ஆதரவளித்திருக்கும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்குமுண்டு.

போர்க்குற்றங்கள் நிகழ்கையில், சனங்கள் மரணக்குழிகளில் வீழ்த்தப்படுகையில் அதைத் தனக்கான சாட்சியங்களாக்கும் வகையில் செய்மதிகளினூடாக ஆதாரங்களைத் திரட்டிக் கொண்டிருந்தது அது.

இதற்குக் காரணம் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அது தனக்கான ஸ்திரத் தன்மையொன்றை ஸ்தாபித்துக்கொள்வதே. அமெரிக்காவுக்குச் சார்பான அல்லது மேற்குக்குச் சார்பான நிலையொன்றை இலங்கையில் உருவாக்குவதற்குக் கடினமான நிலையே தொடர்ந்து வருகிறது.

கடந்த ஜனாதிபதித்தேர்தலின்போது – ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிலைப்படுத்தி மேற்கு எடுத்த முயற்சியும் வெற்றியளிக்கவில்லை.  இதை உணர்ந்த அமெரிக்கா இப்போது தான் சேகரித்து வைத்திருந்த ஆதாரங்களைப் பயன்படுத்தி, இந்தப் பிரேரணையை அரங்கிற்குக் கொண்டு வந்துள்ளது. தனக்கான ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளது. அதில் அது கணிசமான அளவுக்கு வெற்றியுமடைந்துள்ளது.

அமெரிக்கா தலைமையிலான மேற்குலகிற்கு இந்த வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருப்பது இலங்கை அரசாங்கமே. போருக்குப் பின்னர் அது செய்திருக்க வேண்டிய கடமைகளை உரிய முறையிற் செய்யாமல், பாவனை காட்டியமையே அதற்கான நெருக்கடியை அதிகரித்திருக்கிறது. அல்லது அதைக் கடக்க முடியாமற்போனது.

இந்த இடத்தில் சிங்கள மக்களும் முற்போக்காளர்களும் இலங்கையின் ஜனாதிபதியும் கவனிக்க வேண்டிய விசயமொன்றுண்டு. இனமுரணைத் தீர்க்க வேண்டும், அதைத் தீர்ப்பதற்கு தந்திரங்களுக்கப்பால், விசுவாசமான முறையில் செயற்பட வேண்டும் என்று சிந்தித்திருந்தால் இன்றைய நெருக்கடி ஏற்பட்டிருக்கச் சந்தர்ப்பம் குறைவு. தவிர, இலங்கையர்களில் ஒரு சாராரின் ஆதரவான நிலையும் ஏற்பட்டிருக்காது.


இதேவேளை இதில் இந்தியாவும் அமெரிக்க நெருக்கடிக்குள்ளாகியுள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். பலரும் கருதுவதைப்போல தமிழ் நாட்டின் அழுத்தங்கள் காரணமாக இந்தியாவின் தீர்மானம் அமையவில்லை.

இலங்கைப் போரில் இந்தியா வகித்த பங்கு, பாத்திரம் தொடர்பாக இன்று அமெரிக்காவிடம் உள்ள ஆதாரங்கள் உருவாக்கும் நெருக்கடிகளைக் குறித்தும், எதிர்காலத்தில் அமெரிக்கா இந்த முயற்சியின் தொடர்ச்சியாக உண்டாக்கவுள்ள பிரச்சினைகளைக் குறித்துமே இந்தியா சிந்தித்திருக்கிறது. தனக்குக் கிடைத்த வாய்ப்புகளையும் அதிகாரத்iயும் பயன்படுத்தி, இலங்கை இனப்பிரச்சினையின் தீர்வை இந்தியா சாத்தியப்படுத்தியிருந்தால் இன்று இந்தியா நெருக்கடிக்குள் சிக்கியிருக்க வேண்டியிருந்திருக்காது.

எனவே இந்தப் பிரேரணையில் அதிக லாபங்களைச் சம்பாதிக்கப்போவது மேற்குலகமே. நீண்டகாலத்துக்குப் பின்னர் இலங்கை விவகாரத்தில் ஒரு முன்னேற்றகரமான கட்டத்தை எட்டியுள்ளது மேற்கு. ஆனால், இதற்காக அது கடுமையாகப் போராடியிருக்கிறது. நினைத்த மாத்திரத்தில் இலகுவாக நிலைமைகளைக் கையாள முடியவில்லை மேற்கினால் என்பதையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.

இதேவேளை மனித உரிமைகள் விடயத்தில் தன்னுடைய அக்கறைகளையும் மாண்பு மிக்க செயற்பாடுகளையும் தான் நிலைநிறுத்தியிருப்பதான ஒரு தோற்றப்பாட்டையும் உலக அரங்கில் அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் நிலைநிறுத்தியுள்ளன.

மனித உரிமை ஆர்வலர்களுக்கு இது குறித்த திருப்திகள் ஏற்படும். போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்ச்சியில் அமெரிக்காவின் பிரேரணை வரவேற்பான அம்சத்தைப் பெறும்.

இனவாதத்தை முன்னிறுத்துவோருக்கும் அதிகாரத்தில் அதிக மோகமும் நம்பிக்கையும் வைத்திருப்போருக்கும் இந்தப் பிரேரணை எரிச்சலையும் நெருக்கடியையும் ஏற்படுத்தும்.

ஆனால், எல்லாவற்றுக்கும் அப்பால் இறுதி விளைவுகள் என்று பார்த்தால், மனித குலத்திற்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தென்னாசியப்பிராந்தியத்திற்கும் இந்தப் பிரேரணையின் மூலமாக என்னென்ன அனுகூலங்கள் கிடைத்துள்ளன? என்ற கேள்வியே எழுகின்றது.

இந்தக் கேள்விக்கான பதிலை யார் சொல்வது? அல்லது வரலாற்றில் - எதிர்காலத்தில் எப்படி அமையும்?

ஆனால் ஒன்று, தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களுடைய கரகோசத்துக்கு அப்பால் எதுவும் நடந்து விடப்போவதில்லை.

இந்தியா ஆதரவு எப்படி ஒரு காலத்தில், தமிழர்களின் மனதில் பூமாரி மொழிந்தது என்பதை நினைத்துப் பார்த்தால் இதை எளிதில் விளங்கிக் கொள்ள முடியும்.

வல்லரசுகளின் இதயம் எப்போதும் தங்களின் நலன்களைக்குறித்தே செயற்படுகிறது. ஒடுக்கப்படும் மக்களின் பிரச்சினைகள் அவற்றுக்கு வாய்பான ருஸிகரமான பண்டமே.
00

Monday 19 March 2012



நேர்காணல் - 


ஆண்டியப்பன் வெள்ளைச்சாமி






போருக்குப் பிந்திய சூழலையும் சமூகத்தையும் ஒழுங்குபடுத்துவது மிகச் சவாலான காரியம். 


யுத்தத்தின் போது இருப்பிடம், தொழில், பொருட்கள், சேகரிப்புகள் எல்லாமே அழிந்தும் சிதைந்தும் விடுகின்றன. இடப்பெயர்வும் அகதி வாழ்க்கையும் மிக மோசமான அலைச்சலையும் அவலத்தையும் தருகின்;றன. இதனால் வாழ்க்கையின் கட்டமைப்பே தகர்ந்து விடுகிறது. போதாக்குறைக்கு உடல் உறுப்புகளின் இழப்பும் குடும்பத்தில் உயிரிழப்பும் ஏற்படும்போது இந்த நிலை இன்னும் மோசமாகிறது. இதனால், உளச் சிதைவு மிகப் பயங்கரமான அளவுக்கு சமூகத்தைப் பாதிக்கிறது. 


இவற்றையெல்லாம் மறுபடியும் மீள் நிலைப்படுத்துவதென்பது மிகச் சிக்கலான விசயம். 


போர் முடிந்த பின்னர், போரினாற் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைப் புனரமைப்புச் செய்வது, மக்களை மீள் நிலைப்படுத்துவது, இயல்புச் சூழலையும் இயல்பு வாழ்வையும் உருவாக்குவது என்பதெல்லாம் மிக உச்சமான பொறிமுறையினூடாகவும் கூட்டுச் செயற்பாடுகளினூடாகவுமே செய்யப்பட வேண்டியவை. 


ஆனால், துரதிர்ஷ்ட வசமாக இந்த விசயத்தில் இலங்கையின் அரசியற் சூழலும் அணுகுமுறையும் தமிழ் பேசும் மக்களின் தலைமைகளிடத்திலிருக்கின்ற குறைபாடுகளும் பெரும் இடைவெளிகளையே – பின்தங்கு நிலைகளையே ஏற்படுத்தியுள்ளன. உதவவேண்டிய நிலையிலிருக்கும் புலம்பெயர்ந்த சமூகத்திற் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்ட மக்களைக் குறித்துச் சிந்திப்பதையும் விட, இலங்கை அரசைப் பற்றிய சித்திரங்களையே தங்களுடைய மூளையில் நிரப்பி வைத்திருக்கிறார்கள். 


இதனால், இன்னமும் (போர் முடிந்து மூன்று ஆண்டுகள் நிறைவடையும் நிலையிலுள்ள இன்றைய கட்டத்திலும்) யுத்தப் பாதிப்புகளிலிருந்து மீள முடியாத நிலையிலேயே 60 வீதத்துக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். 


இவர்களுக்கு முறையான ஆதரவுகள் இல்லை. உதவிப் பணிகள் போதாது. எனவே இவர்கள் இன்னும் சிதைந்த வாழ்விலிருந்து மீண்டெழ முடியாமற் தவிக்கின்றனர். இந்த நிலையிலிருக்கும் ஆயிரக்கணக்கானோரில் ஒருவரான ஆண்டியப்பன் வெள்ளைச்சாமியை ‘வீரகேசரி வாரவெளியீட்டு’க்காகச் சந்தித்து உரையாடினோம். 


பரந்தனில் வசிக்கும் ஆண்டியப்பன் வெள்ளைச்சாமி, இறுதிக் கட்டப்போரில் காயப்பட்டவர். போர்க்களத்துக்குச் செல்லாமல், போரில் ஈடுபடாமலே காயப்பட்ட பல பொதுமக்களில் ஒருவர். இப்போது காயப்பட்டவர்களுக்கான உதவி ஏதாவது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்போடு, தனக்கான உதவியைக் கோருவதற்காக கண்டாவளைப் பிரதேச செயலகத்தில் காத்திருந்த வேளை இந்த உரையாடலை மேற்கொண்டோம். 


00

 யுத்தத்துக்குப் பிறகு உங்களுடைய நிலைமை – உங்களின் வாழ்க்கை எல்லாம் எப்படி இருக்கு?

 ரொம்ப மோசம். சண்டை இல்லை என்கிறது கொஞ்சம் ஆறுதல். சாவு என்கிறது இப்ப இல்லை. ஊருக்குத் திரும்பியிருக்கிறம். ஆனால், இன்னும் முழுசா எல்லாம் வந்திடவில்லை. இன்னும் நான் தொழிலுக்குப் போகயில்லை. சிலபேர் வீடுகளைக் கட்டியிருக்கிறாங்கள். அவங்களுக்கு வீட்டுத்திட்டம் கிடைச்சிருக்கு. எல்லாருக்கும் வீட்டுத்திட்;டம் கிடைக்கயில்லை. ஆனா வருமெண்டுதான் சொல்றாங்க. இந்திய வீட்டுத்திட்டம்தான் வரப்போகுது என்கிறார்கள். அதுக்காகக் காத்திட்டு இருக்கிறோம்.

முன்னர் என்ன தொழில் செய்தீங்கள்? இப்போது ஏன் அந்தத் தொழிலைச் செய்ய முடியவில்லை? அல்லது அந்தத் தொழிலை மீள ஆரம்பிக்கிறதில என்ன பிரச்சினைகள்?


முன்னர் நான் கடை வைச்சிருந்தேன். சிறிய கடைதான். ஆனால் எங்களுடைய குடும்பத்துக்கு அது போதும். சண்டைக் காலத்தில அது போயிட்டுது. இடம்பெயர்ந்து போகும்போது எல்லாத்தையும் இழந்திட்டம். அப்படியே மாத்தளன்வரையும் போனோம். மாத்தளனில் நான் காயப்பட்டேன். இந்தா, இந்த வலக் கையிற்தான் காயம். அங்கயிருந்தே புல்மோட்டைக்கு ஏத்தினாங்கள். குடும்பம் தனிச்சிப்போயிட்டு.

பிறகு, நான் சுகப்பட்டு, முகாமுக்கு வந்து தேடித்தான் குடும்பத்தைச் சந்திச்சேன். இப்ப மறுபடியும் எல்லாரும் ஒண்ணா இருக்கிறம். ஆனால் தொழிலும் வருமானமும்தான் இல்லை.

புதிசா அந்தக் கடையை ஆரம்பிக்கிறதா இருந்தால் ரண்டு லட்சம் ரூபாயாவது வேணும். முன்னர் நான் மோட்டார் சைக்கிளை வைச்சிருந்தேன். கடைக்கு அதில் பொருட்களை எடுத்துப் போவேன். இப்ப அது ஒரு பிரச்சினை. அதுக்கும் ஏதாவது ஏற்பாடு வேணும்.

ஏன், என்ன மாதிரியான கடையை வைத்திருந்தீர்கள்? நடமாடும் வியாபாரமா? இப்ப வங்கிகள் தாராளமாகக் கடனைக் கொடுக்கின்றனவே?

நாங்கள் இருக்கிறது பரந்தனில். கடையை வைச்சிருந்தது கட்டைக்காடு கடற்கரையில். எங்களுடைய வீட்டுக்கும் நாங்க கடை வைச்சிருந்த இடத்துக்கும் இடையில் 20 கிலோ மீற்றர் தூரம். இங்கே பரந்தனில் பழங்கள் கிடைக்கும். அல்லது கிளிநொச்சியிலுள்ள தோட்டங்களுக்குப் போய் நான் பழங்களை எடுப்பேன். காய்கறிகளை வாங்குவேன்.

அதே மாதிரி, இங்க பரந்தனில் தாராளமாகப் பால் வாங்க முடியும். எங்களிடம் மாடுகள் நின்றன. அதிலும் பால் எடுப்போம். தயிர் ஆக்குவோம். அதை விட இங்கே வேறு இடங்களிலம் தாராளமாகத் தயிரை எடுக்கலாம். இதையெல்லாம் எடுத்துக் கொண்டுபோய் அங்கே, கடற்கரையில் விற்பேன். அங்கே ஒரு கடை போட்டிருந்தேன். கடையில் வேறு பொருட்களும் போட்டிருந்தேன். அதேவேளை இந்தப் பழங்களையும் தயிரையும் சேர்த்து விற்பேன். கடற்கரையில் இந்தப் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு. அங்கே கடுமையான வெக்கை. அதற்காகத் தயிரும் பழங்களும் வாங்குவார்கள். அந்த மக்கள் செலவைப் பற்றி அதிகம் சிந்திக்க மாட்டார்கள். நல்ல உழைப்பாளிகள். தாராளமாக உழைப்பார்கள். அந்த அளவுக்குச் செலவழிப்பார்கள்.

அப்ப, இங்க – பரந்தனிலிருந்து இந்தப் பொருட்களை (பால், தயிர், பழங்கள், காய்கறி போன்றவற்றை) எடுத்துப் போவதற்கு மோட்டார் சைக்கிள் வேணும். பஸ் போக்குவரத்தெல்லாம் இன்னும் சரியாக இல்லை. இதுதான் பிரச்சினை.

வங்கிகள் கடன் கொடுக்கின்றன. ஆனால், முழுசாக் கடனை எடுத்து, தொழிலைப் பார்க்க முடியுமா? எனக்கும் முன்னரைப்போல இப்ப எல்லாத்துக்கும் ஏலாது. இந்தக் கையைப் பார்த்தீங்களா? பாரம் எல்லாம் தூக்க முடியாது. மாத்தளனில் ‘ஷெல்’ பட்டதால, ஆறுமாதம் ஆஸ்பத்திரியில் படுத்திருந்து சரிப்படுத்தியிருக்கிற கை.

ஏதாவது, உதவிகள் கிடைத்தால் அதையும் வைச்சு, வங்கியில் கடனையும் எடுத்து மறுபடியும் தொழிலைச் செய்யலாம் என்றே யோசிக்கிறேன். இல்லாவிட்டால் வங்கிக் கடனுக்காகவும் வட்டிக்காகவும்தான் உழைக்க முடியும். குடும்பத்துக்கான வருவாயும் தேவையல்லவா?

அதைவிட வங்கிகள் தாராளமாக கடனைக் கொடுத்தாலும் எங்களை மாதிரி ஆட்களுக்கு இலகுவாகக் கொடுக்க மாட்டார்கள். அதுக்கு இரண்டு அரசாங்க உத்தியோகத்தர்கள் பிணை நிற்க வேண்டும். அல்லது ஊரில் இருக்கிற பொது அமைப்புகள் சிபாரிசு செய்ய வேண்டும்.

விவசாயிகளுக்கு, கடற்றொழில் செய்கிறவர்களுக்கெல்லாம் அவர்களுடைய சங்கங்கள் இருக்கின்றன. நாங்கள் அந்தச் சங்கங்களில் இல்லை. இதையெல்லாம் செய்து கொண்டே இருக்கிறேன். அதாவது, வங்கிக் கடனுக்காக முயற்சி செய்து கொண்டேயிருக்கிறேன்.

யாரிடமாவது உதவிகளைக் கேட்டிருக்கிறீர்களா? அல்லது அரச உதவிகள் ஏதும் கிடைக்கவில்லையா?

அரசாங்க உதவிகள் இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் காயப்பட்டவர்களுக்கும் போரினால் இறப்புகளைச் சந்தித்த குடும்பங்களுக்கும் அரசாங்கத்தின் உதவிகள் வழங்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். அது தொடர்பாகத்தான் இங்கே – பிரதேச செயலரின் அலுவலகத்திற்கு – வந்திருக்கிறேன்.

ஆனால், இந்த உதவி எப்போது கிடைக்கும், எந்த அளவிற் கிடைக்கும் என்றெல்லாம் தெரியாது. அதுவரைக்கும் பொறுத்துக் கொண்டிருக்க முடியுமா? குடும்பத்துக்கு ஏதாவது செய்யவேணுமே!

 உங்களைப் போன்ற ஆட்களுக்கு சிறு தொழில் அல்லது சுயதொழில் முயற்சிக்கான உதவிகள் அல்லது கடன் போன்றவை வழங்கப்படுகின்றனவே! குறிப்பாக குறிப்பிட்ட சில திணைக்களங்கள் அவற்றை வழங்கி வருகின்றன அல்லவா?

விவசாயிகளுக்கும் கடற்றொழில் செய்கிற ஆட்களுக்கும் இலகு கடன் கொடுக்கப்படுகிறது. தொழில் செய்வதற்கான உபகரணங்களும் வழங்கப்படுகின்றன. அதைவிட பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள் என்று சொல்லப்படுகிறவைக்கும் உதவிகள் செய்யப்படுகின்றன. இந்த உதவிகளை பல தொண்டு அமைப்புகள் செய்கின்றன.

ஆனால், என்னைப்போல இருக்கிற பாதிக்கப்பட்ட ஆட்களுக்கு இன்னும் முழுமையான உதவிகள் கிடைக்கவில்லை. மாற்று வலுவுடையோர் என்ற வகையில் உடல் உறுப்புகளை இழந்தவர்களுக்கான சிறு உதவிகள் செய்யப்படுகின்றன. அதற்காக கிளிநொச்சியில் இயங்கிய நிறுவனம் இப்போது இயங்கவில்லை என்று சொல்கிறார்கள். அந்த அமைப்பு வவுனியாவில் இயங்குகிறதாம்.

எனக்கு கை இருக்கு. ஆனால், அந்தக் கையால் எந்த வேலையும் செய்ய முடியாது. என்னைப் போல இந்த மாதிரி நிலைமையில பலர் இருக்கிறார்கள். இவர்களுக்கு என்னவகையான உதவிகளைச் செய்யலாம் என்று பார்த்துச் சொல்லிறதுக்கு யாரும் இல்லை. இதுதான் எங்களின்ரை பிரச்சினை.

புனர்வாழ்வு அமைச்சு என்று ஒண்டிருக்கு. அதன் மூலமாக உதவி கிடைக்கும் என்று நம்பினோம். ஆனால், அந்த அமைச்சையே எங்களின் பகுதியில் காணவில்லை. கச்சேரியில் ஒரு கிளை இருக்கு. அங்கே போய்க்கேட்டால், விவரத்தை எடுக்கச் சொல்லியிருக்கு என்று மட்டும் சொல்கிறார்கள்.

அதன்படியே இஞ்ச வந்திருக்கிறன். பதிவு செய்வதற்காக.


உங்களுக்கு ஏதாவது உதவி கிடைத்தால் என்ன செய்வதற்குத் திட்டமிட்டிருக்கிறீர்கள்? 

எனக்குத் தெரிஞ்ச ஆட்கள் கடற்கரையில் இருக்கினம். அறிமுகமான இடத்தில் தொழில் செய்கிறது நல்லது. உதவியாகவும் இருக்கும். கடற்கரைக்கு வாங்கோ நாங்களும் உதவி செய்கிறோம் என்று அங்கே இருக்கிற ஆட்களும் கேட்டிருக்கினம். முன்னர் என்றால் அவர்கள் தாராளமாகவே உதவி செய்வினம். இப்ப அவர்களும் போரில் பாதிக்கப்பட்டு, அகதிகளாக இருந்து மீள்குடியேறியிருக்கினம். அதோட சுனாமியிலும் பாதிக்கப்பட்டவர்கள்.

இல்லையென்றால் இந்த நேரம் அவர்களே தாராளமாக உதவியிருப்பினம். ஆனால், நான் அங்கே போய்த்தொழிலைத் தொடங்கினால் அதுக்கு நல்ல உதவிகளைச் செய்வினம்.

உங்களுடைய நம்பிக்கை பாராட்டத்தக்கது. நிலைமைகளை நீங்கள் நன்றாகவே விளங்கி வைத்திருக்கிறீங்கள். உங்களுக்கு உதவியாக குடும்பத்தில் வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள்?

எனக்கு மூன்று பிள்ளைகள். மூன்றும் பெண்கள்தான். ரண்டு பேர் படிக்கிறார்கள். மூத்த பெண் வீட்டிலிருந்து கொண்டே பல உதவிகளைச் செய்வார். முன்னரும் வீட்டிலிருந்து கொண்டே பால் வாங்கித் தயிர் போட்டுக் கொண்டு பொயிருக்கிறேன். காய்களை வாங்கிப் பழுக்க வைத்து ஏற்பாடுகள் செய்வார்கள். எங்களுடைய வீடே இயங்கும். அப்படித்தான் எல்லாவற்றையும் செய்தோம்.

இப்ப கூட நாங்கள் எதையும் செய்வோம். தொழிலை ஆரம்பிக்கிறதுக்கு என்று ஒரு சிறு உதவிதான் தேவை. அது கடனாக இருந்தாலும் பரவாயில்லை.

உங்களை மாதிரி எவ்வளவு பேர் இப்படி இருக்கிறார்கள்? அவர்கள் என்ன செய்கிறார்கள்? அதாவது தங்களுடைய வாழ்க்கையை நடத்துவதற்காக என்னவெல்லாம் செய்கிறார்கள்?

என்னைப்போலப் பலர் இருக்கிறார்கள். கிராமங்கள் தோறும் இந்த மாதிரிப் பாதிக்கப்பட்டவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். எல்லோருடைய நிலைமையையும் கஸ்ரமாகத்தான் இருக்கு. எங்களுடைய ஊரில் மட்டும் என்னைப் போல பதினாறு பேர் இருக்கிறார்கள். ஆறு பேருக்கு கால் இல்லை. மூன்று பேருக்கு கைகளில்லை. ஒருதருக்கு ரண்டு கையும் ஒரு காலும் இல்லை. இந்த நிலைமையில்தான் எங்களுடைய வாழ்க்கை போய்க்கொண்டிருக்கு.

சில இடங்களில் புலம்பெயர்ந்த மக்களுடைய அமைப்புகள் உங்களைப் போன்றவர்களுக்கு உதவி செய்வதாக அறிகிறொம். உங்களை யாரும் தொடர்பு கொள்ளவில்லையா?

இல்லை. எங்களுடைய ஊருக்கு யாரும் அந்த மாதிரி வந்ததாகத் தெரியவில்லை. முன்னர் ஒரு தடவை யாரோ வந்து பெயர் விவரமெல்லாம் எடுத்துக்கொண்டு போனார்கள். ஆனால் உதவிகள் ஒன்றுமே கிடைக்கவில்லை. எனக்குக் கை நல்லாயிருக்கும் என்றால் நான் யாரிடமும் உதவிகளை எதிர்பார்க்க மாட்டேன். இப்ப வயசும் ஆச்சு.

00

நன்றி - வீரகேசரி

கருணையற்ற மனம் = தமிழ்ச் சமூகத்தின் இதயம்?
















பொறுப்புகளைத் தட்டிக்கழிக்கும் தலைவர்களும் கடமைகளைச் செய்யத் தவறும் பெற்றோரும் நிலைமைகளைப் புரிந்து கொள்ளாத மூத்தோரும் உண்மைகளை ஏற்றுக்கொள்ளாத ஊடகவியலாளரும் கருணையும் இரக்கமுமில்லா மக்களும் வரலாற்றாற் தண்டிக்கப்படுவர்.

இலங்கைத் தமிழர்களின் நிலை ஏறக்குறைய இதை ஒத்ததாகவே உள்ளது.

‘ஈழத்தமிழர்களுக்குப் பிறத்தியார் இழைத்த அநீதிகளுக்கு நிகரானவை அவர்களுக்குள்ளே இருக்கும் குறைபாடுகளும் தீங்குகளுமாகும்’ என்று ஒரு நண்பர் அடிக்கடி சொல்வார்.

உள்ளடுக்குகளில் ஜனநாயகமின்மையையும் தார்மீக நெறிகளிற் குறைபாடுகளையும் கொண்டது ஈழத்தமிழ்ச் சமூகம். குறிப்பாகச் சாதீயத்தாலும் பிரதேச வாதத்தினாலும் அறப்பிறழ்வைக் கொண்டது அது.

இதனால், அதனுடைய அரசியலிலும் விடுதலைச் சிந்தனையிலும் பலவீன நிலைகள் இலகுவிற் தொற்றிக் கொண்டன. விளைவு, அது தனது விடுதலைக்கான முயற்சிகளில் தொடர்ந்து பின்னடைவுகளையே சந்தித்துக் கொண்டிருக்கிறது.

இந்தப் பின்னடைவுகளுக்கான காரணங்களைக் குறித்து மீளாய்வு செய்யவோ சுயவிமர்சனம் செய்யவோ அது தயாராகவில்லை.

இது அரசியலில் ஏற்பட்ட வீழ்ச்சி மட்டுமல்ல.

தமிழ்ச் சமூகத்தின் பிற அம்சங்களான மனிதாபினமானத்திலும், கல்வி மற்றும் மருத்துவம் போன்ற அடிப்படையான சேவைமனப்பாங்கிலும் பெருங்குறைபாடுகளையே உருவாக்கியுள்ளது.

விடுதலைக்காக, சமூக ஈடேற்றத்துக்காகத் தம்மை முழுதாகவே அர்ப்பணிக்கும் இயல்பினரை அதிகளவில் கொண்டிருந்த ஈழத்தமிழ்ச் சமூகத்திற்தான் உச்சமான சுயநலமும் உள்ளது.

கடந்த காலத்தில் விடுதலைக்காகத் தம்மை அர்ப்பணித்தவர்களைத் தவிர, போராட்டத்தில் ஈடுபட்டோரைத் தவிர, இன்னொரு சாரார், கல்வியிலும் பிற தொழிற்றுறைகளிலும் தங்களை மேம்படுத்திக் கொண்டனர். என்னதான் இதற்கு நியாயங்கள் கூறினாலும் இது மறுக்க முடியாத உண்மை.

இன்று போராட்டத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளனர். இதில் தனியே விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மட்டும் சேர்த்தியல்ல. பிற போராட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்குவர்.

உண்மையில் தங்களுடைய சமகாலத்தவர்களான ஏனையவர்கள் தம்மை முழுமையாக அர்ப்பணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் இவர்கள் ஏதோ காரணங்களின் நிமித்தமாக அதில் முழுமையாக ஈடுபடாமல் தங்களுடைய கல்வியைப் பெற்றுக்கொண்டனர். அல்லது தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டனர். இதைத் தவறென்று இங்கே கூறவும் இல்லை. வாதிடவும் இல்லை. ஆனால், இவர்கள் ஏனையோரை விட அதிக பாதிப்புகளுக்கும் சேதங்களுக்கும் உட்படவில்லை.

அதேவேளை ஏனையோரின் போராட்டப் பணிகளுக்கு ஆதவரவாக  சமூகத்துக்கான பிற பணிகளில் இவர்களிற் சிலர் செயலாற்றினர் என்பதையும் நாம் மனதிற்கொள்ள வேண்டும்.

ஆனால், இன்று இந்த நிலைமை பெருமளவுக்கும் மாற்றமடைந்துள்ளது. அல்லது வீழ்ச்சியடைந்துள்ளது எனலாம்.

முன்னெப்போதையும் விட இப்போதே ஈழத்தமிழ்ச் சமூகம் பெரும்பாதிப்புகளையும் இழப்புகளையும் சந்தித்துள்ளது. குறிப்பாக 1958, 1977, 1983 ஆகிய காலகட்டங்களில் ஈழத்தமிழர்கள் இனவன்முறையின் மூலமாகச் சந்தித்த இழப்புகள், கொடுமைகளையும் விடப் பின்னர் சந்தித்த இழப்புகளும் பாதிப்புகளுமே அதிகம்.

சொந்த இடத்திலேயே அவர்கள் இந்தப் பாதிப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்ததால், ஈடுசெய்து கொள்ள முடியாத அளவுக்கு நெருக்கடிக்குள்ளாகினர்.

குறிப்பாகப் போக்கிடமற்ற ஒரு நிலைக்கு, மீட்சிகொள்ளக் கடினமான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதில் வடக்குக் கிழக்குத் தமிழர்களே அதிகமானவர்களாக இருந்தனர். அதிலும் வன்னியைச் சேர்ந்தவர்களும் வாகரை மற்றும் படுவான்கரையைச் சேர்ந்த மக்கள் சந்தித்த பாதிப்புகள் வரன்முறைகளுக்கு அப்பாலானவை.

ஆனால், இந்த மக்களின் துயரை ஆற்றுவதற்கு யாரும் முன்வரவில்லை. இனவன்முறையினால் தெற்கிலிருந்து வந்தோரை அப்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களிலிருந்து உள்ளுர்ப் பொது அமைப்புகள் வரையில் பராமரித்தன.

ஏனென்றால், அப்போது பாதிக்கப்பட்டு வந்தோரில் கணிசனமானவர்கள் மத்தியதர வர்க்கத்தினராக இருந்தனர். இதனால் இவர்களுக்கு உதவவேண்டும் என்ற அபிப்பிராயம் அப்பொழுது முன்னிலைப்படுத்தப்பட்டது.

வன்னியிலும் வாகரையிலும் படுவான்கரையிலும் பாதிக்கப்பட்டவர்கள் நகர்ப்புறத்து மக்களோ மத்தியதர வர்க்கத்தில் கவனத்தைக் குவிக்கத் தக்க நிலையிலிருந்தோரோ அல்ல.

ஆகவே, அவர்களுக்கு உதவவேண்டும் என்று சிந்திப்போரின் தொகை மிக மிகக் குறைவாகவே உள்ளது. அதைவிடக் குறைவு இவர்களுடைய பாதிப்பை நேரிற் பார்ப்பதற்கே விரும்பாத நிலை. அப்படி யாராவது வந்து பார்த்தாலும் கூட அதை வைத்தே தமது பிழைப்பையும் பிரச்சாரத்தையும் மேற்கொண்டு விடுகிறார்கள்.




அதாவது, இணையங்களிலும் பிற அச்சு ஊடகங்களிலும் அரசியற் தரப்பினரின் உரைகளிலும் இந்த மக்களின் அவல நிலை பேசு பொருளாக்கப்பட்டுள்ளதே தவிர,

இந்த நிலையில் இந்தச் சனங்களுக்கான ஆதரவையும் சேவையையும் வழங்கியிருக்க வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களின் அரசியற் தலைமைகளாகத் தம்மைப் பிரகடனஞ்செய்வோரைச் சேர்ந்தது. அதிலும் ஏகபிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்ளும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு இதில் அதி கூடிய பொறுப்புண்டு. அவர்களிடத்திற்தான் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிற தொடர்பாடல் வாய்ப்புகளும் உள்ளன.

இதற்கடுத்ததாக பிற அரசியற் தரப்பினர் அத்தனை பேருக்கும் இந்த மக்களின் அவலத்தைத் துடைப்பதில், இந்தச் சனங்களின் வாழ்க்கைக்குத் துணையிருப்பதில் பெரும் பங்களிப்புக்கு இடமுண்டு.

தவிர, போரில் அதிக பாதிப்புகளைச் சந்தித்திராத வடக்குக் கிழக்கின் நகர்ப்புறத்துத் தமிழர்களுக்கும் இதில் கூடுதலான கடமையுண்டு.

ஆனால் யாரும் இந்த மக்களுக்குச் செறிவான உதவிகள் செய்தது கிடையாது. புலம்பெயர் நாடுகளில் இருந்து நேசக்கரம் போன்ற ஒன்றிரண்டு அமைப்புகளும் உள்ளுரில் கருணைப்பாலம் - உதவும் கரங்கள் போன்ற சிறு தொண்டாளர் அமைப்பைச் சேர்ந்தவர்களும் உதிரியாகச் சிலரும் பங்களிப்புகளைச் செய்து வருகின்றனர்.

யுத்தம் முடிந்தபின்னர் தாமரைச்செல்வி, தமிழ்ப்பிரியா, நடேசன் போன்ற சில படைப்பாளிகள் குறிப்பிடத்தக்க உதவிகளைச் செய்தனர். இவர்கள் பிறருக்கும் நிலைமைகளைச் சொல்லி அவர்களுடைய ஆதரவையும் பெற்று இந்த உதவிப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால், இதெல்லாம் ஒரு சிறிய அளவிற்தான்.

மற்றும்படி நிலைமையில் பெரிய முன்னேற்றம் ஏதுமில்லை.

போரினாற் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிற நாடுகள் சில உதவிகளைச் செய்து வருகின்றன. சில சர்வதேசத் தொணடர் அமைப்புகளும் இந்த வகையான உதவிகளைச் செய்து வருகின்றன.

ஆனால், இந்த அளவுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்புகள் எந்தக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளையம் செய்ததாக இல்லை.  குறிப்பிடத்தக்க ஒழுங்கமைக்கப்பட்ட உதவிகள் எதையம் செய்ததாகத் தெரியவில்லை.

இவ்வளவுக்கும் உலகமெல்லாம் இருந்த யூதர்கள் ஒன்றிணைந்தே தமக்கென்ற புதிய தேசத்தை உருவாக்கினர். அதற்காக அவர்கள் செறிவான பங்களிப்பைச் செய்தனர் என்றமாதிரிக் கதைப்பதில் மட்டும் ஈழத்தமிழர்கள் கில்லாடிகளாக இருக்கின்றனர்.

ஆனால், தாங்கள் மட்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவோ, பாதிக்கப்பட்ட பிரதேசத்தின் மீளுருவாக்கத்துக்காகவோ எத்தகைய பங்களிப்புகளையம் செய்ய மாட்டார்கள்.

இதைப் பற்றிக் கதைக்கும்போது ‘வன்னியில் வீடில்லா நிலையில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அல்லற்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் நூற்றுக்கணக்கான திருமண மண்டபங்கள் கட்டப்படுகின்றன’ என்று சில நண்பர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறைந்த பட்சம் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொழில்வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகக்கூட யாரும் முயற்சிக்கவில்லை.

அண்மையில் கிளிநொச்சியிலுள்ள இந்திய வீட்டுத்திட்டத்தில் குடியிருக்கும் மக்களைப் புதிய தலைமுறை என்ற தொலைக்காட்சியினர் சந்தித்தபோது தங்களுக்கு எந்தத் தொழிலும் இல்லை. அதனால் மிகக் கஸ்ரமான சூழலில் வாழவேண்டியிருககிறது என்று அங்குள்ள மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இவர்கள் அனைவரும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள். அதிலும் பெரும்பாலானவர்கள் கணவரை அல்லது உழைப்பாளிகளை இழந்தவர்கள். குறைந்த பட்சம் இவர்களுக்கான தொழில்வாய்ப்பை யாராவது கொடுத்தால் அதன் மூலம் இவர்களும் பிழைக்க முடியும். முதலீட்டைச் செய்வொரும் வருவாயைப் பெற முடியும்.

ஆனால், இவ்வாறான தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்துவதை விடவும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள், மதுபானச் சாலைகள், உல்லாச விடுதிகள் போன்றவற்றைத் திறப்பதற்காகவே படையினர், அமைச்சர்கள், அரசியல்வாதிகள் என்பொரைத் தேடிப் படையெடுக்கின்றனர் பெரும்பாலான தமிழ் முதலீட்டாளர்கள். சில இடங்களில் சிங்கள முஸ்லிம் முதலீட்டாளர்களும் இந்த மாதிரியான தனிநபர் ஆதாயத்தை மையப்படுத்திய காரியங்களில் ஈடுபட:டு வந்தாலும் தமிழர்களே முதலிடத்திலிருககின்றனர்.

இதையெல்லாம் பார்க்கும்போது இந்த இனம்தானா விடுதலைக்காகப் போராடியது? இவர்களிடம்தானா தங்களை அர்ப்பணிக்கும் போராளிகள் இருந்தார்கள்? என்ற ஆச்சரியமான கேள்விகள் எழும்.

கருணையற்ற மனம் கல்லுக்குச் சமம் என்ற நிலையில் வரண்டுவிட்டது தமிழ்ச் சமூகத்தின் இதயம்.

எந்த ஊற்று இதனைக் குளிர்விக்குமோ!


குழப்பத்திலிருக்கும் டில்லி


இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச் சாட்டில் அதிகமதிகம் நெருக்கடிக்குள்ளாகியிருப்பது இந்தியாவே. இலங்கையையும் விட இந்தியா சந்தித்திருக்கும் நெருக்கடியே அதிகமானது. மகிந்த ராஜபக்ஷவையும் விட அதிகம் சிந்திக்க வேண்டியவராக மன்மோகன் சிங்கே காணப்படுகிறார். இலங்கையின் ராசதந்திரிகளையும் விட இந்திய ராசதந்திரிகளே தூக்கமில்லாத இரவுகளைக் கழிக்க வேண்டிய நிலையிலுள்ளனர்.

இலங்கையைப் பாதுகாக்க வேண்டிய ஒரு அவசியம் இந்தியாவுக்கு ஏற்பட்டதன் விளைவே இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நிலைக்கான காரணமாகும். ஆகவே, இலங்கையின் பாதுகாப்புக் கவசமாக (டீரகநச )  இந்தியா இன்றிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் இது தவிர்க்கவே முடியாத ஒரு நிலை.

ஒரு பக்கத்தில் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா தலைமையிலான அணி கொண்டு வரும் பிரேரணையை வெளிப்படையாக எதிர்க்க முடியாத நிலையில் இருக்கிறது. அப்படி எதிர்த்தால், இன்றைய உலகத்தில் இந்தியாவின் கண்ணியம் குன்றிவிடும்.

அதாவது, ‘மனித உரிமைகளைச் சீரழித்து மக்களின் படுகொலைகளுக்குக் காரணமான  ஒரு அரசைக் காப்பாற்ற முற்படுவது வரலாற்றில் இந்தியாவுக்கு அபகீர்த்தியைக் கொடுக்கும்.

இது அதனுடைய மாண்புக்கும் கீர்த்திக்கும் ஜனநாயக அடிப்படைகளுக்கும் பாதகமானது’ என்று இந்தியப் புத்திஜீவிகளும் முதன்நிலை ஊடகங்களும் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றன. இது ஒரு வகையான நெருக்கடி.

‘இலங்கையில் தமிழர்களின் மீதான இறுதி யுத்த நிகழ்ச்சிகளுக்கான பொறுப்பையும் அதன்கான தண்டனையையும் இலங்கை அரசு ஏற்றேயாக வேண்டும். எந்த நிலையிலும் இதனைத் தடுத்து விலக்குவதற்கு இந்தியா முயற்சிக்கக் கூடாது’ என்று தமிழ் நாடு அரசும் தமிழ்நாட்டின் ஏனைய கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் உள்ளன.

இவை இந்தியாவின் உள்ளே அதற்கிருக்கின்ற அடுத்த நெருக்கடிகள்.

இலங்கை மீதான குற்றப் பிரேணையை ஆதரித்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நல்லிணக்கம் பாதிக்கப்படும் என்பது இன்னொரு விதமான நெருக்கடி.

இந்தப் பிரேரணையை எதிர்த்தால் இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கும் சிங்களச் சமூகத்தினருக்குமிடையில் நல்லிணக்கம் கெட்டுவிடும். இது மேலும் மேலும் இந்தப் பிராந்தியத்தின் அமைதியின்மைக்கே வழியேற்படுத்தி விடும் என்ற நெருக்கடி.

இந்தப் பிரேரணையை ஆதரிக்காவிட்டால் மேற்குலகத்துடனான உறவில் கணிசனமான அளவில் திருப்தியின்மைகளைச் சந்திக்க வேண்டி வரும் என்ற நெருக்கடி.

இந்தப் பிரேரணையை இந்தியா எதிர்த்தால் இலங்கைத் தமிழ் மக்களின் கசப்புகளைப் பெற வேண்டும். பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்துக்கு எதிராக வரலாற்றில் செயற்பட்டதான ஒரு குற்றப் பாத்திரத்தை ஏற்றதாகி விடும் என்ற நெருக்கடி.

இப்ப மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தத்தளிப்பு நிலையிலிருக்கிறது இந்தியா.

உண்மையில் இதை ஆழ்ந்து நோக்கினால், இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை வகுப்பிலும் அதைக் கையாள்வதிலும் ஏற்பட்ட குறைபாடுளே இந்த நிலைக்குக் காரணம் என்பது புரியும்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்திலிருந்து பிரித்தானியர் வெளியேறிய பின், இலங்கையுடன் நல்லுறவைப் பேணிப் பிராந்திய ஆதிக்கத்தைத் தனக்கிசைவாக வைத்திருப்பதற்கு இந்தியா முயற்சித்தது.
எனவே அது அதற்கமைவான வெளியுறவுக்கொள்கையை வகுத்துச் செயற்பட்டது.

ஆனால், எதிர்பார்த்ததைப் போல நிலைமைகளிருக்கவில்லை. இலங்கையில் ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சியும் பனிப்போர் உலகும் இந்தியாவின் எதிர்பார்ப்புகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் மாறாகவே அமைந்தன. மேலும் இலங்கையின் இனமுரண்களும் இந்தியாவின் நிம்மதியைக் கெடுப்பனவாக மாறிவிட்டன.

ஆகவே, வகுக்கப்பட்ட கொள்கைக்கமைய நிலைமைகள் இலகுவானவையாக இருக்கவில்லை. இது இந்தியாவைத் தொடர்ந்து சிரமங்களுக்குள்ளாக்கியே வந்தது. இன்னும் இந்தச் சிரமங்களிலிருந்து இந்தியா மீளவில்லை. இப்போதைய தத்தளிப்பு நிலையும் இதன்பாற்பட்டதே.

கடந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இலங்கை பொறுத்து இந்தியா அளவுக்கதிகமான நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. இன்னும் சற்று விளக்கமாகச் சொன்னால், மிகக் கவலைகொள்ளுமளவுக்கு இந்தியா இலங்கையினால் துன்பப்பட்டிருக்கிறது.

இந்தியப்படைகளை இலங்கையில் இறக்கியது, இறங்கிய படைகள் போரைச் சந்திக்க வேண்டியேற்பட்டது, அதனால் ஆயிரத்துக்கு மேற்பட்ட படையினரின் இழப்புகளை ஏற்க வேண்டியிருந்தது, இந்தியத் தலையீட்டின் பெறுபேறுகள் எதுவும் வெற்றியடையாத நிலையில் அது தன்னுடைய படைகளைத் திருப்பியழைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது, பின்னர் இந்தியத் தலைவர்களில் ஒருவரான ராஜீவ் காந்தியை இழக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது, பின்னர் இலங்கை அரசு மேற்கொண்ட போருக்காக உதவ வேண்டியிருந்தது, இப்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் இலங்கையின் இறுதிப்போருக்கு உதவியது என்று பல நிகழ்ச்சிகளினூடாக இந்தியாவின் துயரம் தொடர்ந்திருக்கிறது.

இதேவேளை இந்தியா தன்னுடைய நலன்சார்ந்து அவ்வப்போது தமிழர்களையும் சிங்களவர்களையும் மாறி மாறிக் கையாண்டுமிருக்கிறது. அப்படிக் கையாண்ட போதும் இந்தியாவினால் தமிழர்களையும் திருப்திப் படுத்த முடியவில்லை. சிங்களவர்களையும் திருப்திப்படுத்த முடியவில்லை. இறுதியில் இப்போது எந்தப் பக்கம் நிற்பது என்று தெரியாத ஒரு அவல நிலைக்கு அது வந்து சேர்ந்துள்ளது.

அதாவது, இந்தத் துன்ப நிலையிலிருந்து இந்தியா இன்னும் மீளவில்லை.

பேய்க்குப் படைப்பதைப் போல அது என்னவெல்லாவற்றையும் தானமாகக் கொடுத்தாலும் இலங்கையை ஒரு நிலைக்குக் கொண்டு வரவும் முடியவில்லை. இலங்கை தொடர்பாக இந்தியாவின் உறவில் ஒரு சீர்நிலையை உருவாக்கவும் முடியவில்லை.

போரின்போது பிற நாடுகளின் உதவிகளை இலங்கை அதிகமாகப் பெறுமானால் அதற்குப் பின்னர் அந்த நாடுகளின் ஆதிக்கத்துக்கு அது உட்பட்டுவிடும் என்று கருதி தானாகவே முன்வந்து ‘ஏராளமான - தாராள உதவிகளை’ இந்தியா  இலங்கைக்குச் செய்தது.

போருக்குப் பின்னர் இந்தியாவுக்கு எதிரான  நாடுகளின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதற்காக மேலும் பல அபிவிருத்திக்கான உதவிகளையும் கடனையும் மனிதாபிமான உதவிகளையும் இலங்கைக்குச் செய்கிறது.

ஆனால், ‘என்னதான் செய்தாலும் இந்தியாவினால் இலங்கை தொடர்பான நெருக்கடிகளிலிருந்து மீளவே முடியவில்லை. எவ்வளவை அள்ளி இறைத்தாலும் என்னதான் செய்தாலும் ஒரு போதுமே இலங்கையைத் திருப்திப்படுத்தவும் முடியவில்லை என்று சலித்துக் கொண்டார்  இந்திய உதவித்திட்டத்தில் ஈடுபட்டுவரும் உயர் அதிகாரி ஒருவர்.

இத்தகைய கசப்பான பின்னணியிற்தான் இன்றைய இந்தியாவின் நிலவரம் உள்ளது.

இலங்கையை இப்போது ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடியிலிருந்து பாதுகாப்பதற்குத் தவறினால் அது சீனாவின் பக்கம் சாய்ந்து விடும். சீனாவின் செல்வாக்கு இலங்கையில் அதிகரிக்குமானால் அதனுடன் இணைந்து பாகிஸ்தானும் தன்னுடைய செல்வாக்கை இலங்கையில் விஸ்தரிக்கும். இதெல்லாம் இந்தியாவுக்கு மேலும் நெருக்கடிகளைத் தரக்கூடிய சங்கதிகள்.

ஏற்கனவே சீனாவின் தலையீடுகளும் செல்வாக்கும் இலங்கையில் அதிகரித்துக் காணப்படுகின்றன. தவிர, மறு பக்கத்தில் மேற்குலகின் மூக்குநுழைதலையும் மட்டுப்படுத்த வேண்டும். ஆனால், இவையெல்லாவற்றையும் அது நுட்பமாகவே செய்ய வேண்டும். எந்தச் சக்தியுடனும் பகை நிலைக்குச் செல்ல முடியாது. குறிப்பாக மேற்குடன்.

ஆகவேதான் டில்லி மிகமோசனமான நிலையில் சங்கடங்களுக்குள்ளாகியுள்ளது. இந்திய ராசதந்திரிகளும் தலைமைப் பொறுப்பிலிருப்போரும் வாயைத் திறக்கவும் முடியாமல் மூடிவைத்திருக்கவும் முடியாமலிருக்கின்றனர்.

இந்த நிலைமை தொடர்பாக டில்லியில் ஓய்வு பெற்ற மூத்த ராசதந்திரிகளையும் பதவியிறங்கிய தலைவர்களையும் குறைசொல்கிறார்கள் இன்றைய தலைவர்களும் ராசதந்திரிகளும் என்று சொல்லப்படுகிறது.

இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியா தீர்க்கமான ஒரு முடிவை எடுத்திருந்தால் இன்றைய நிலை ஏற்பட்டிருக்காது என்பது அவர்களுடைய அபிப்பிராயம்.

இலங்கையை ஒரு போதுமே தீவிர நிலையிற் கட்டுப்படுத்த முடியாது. அதனுடைய அரசியற் கேந்திரத்தின் இயல்பு அப்படிப் பட்டது என்கின்றனர் சில அவதானிகள்.

ஆனால், எப்படியோ இலங்கை பொறுத்து இந்தியா ஒரு தீர்மானத்துக்கு வந்தே ஆகவேண்டும். வெளிப்படையாக இல்லா விட்டாலும் அது எடுக்கவுள்ள நிலைப்பாடு தாக்கமுடையதாகவே இருக்கப்போகிறது.

போரின்பொழுது எவ்வாறு கொழும்பை டில்லி பாதுகாத்ததோ அதையொத்த தன்மையை அது இப்போதும் கடைப்பிடிக்கிறது.

ஆனால், இந்த இடத்தில் நாம் சில விடயங்களை முன்னிலைப்படுத்தலாம்.

1. இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக இந்தியாவின் அணுகுமுறைத் தவறுகளை இதற்கு முன்னர் சரியமான முறையில் இந்தியாவின் முன்னிலை ஊடகங்கள் பேசத்தவறியமை.

2. இந்தியத் தலைவர்களும் ராசதந்திரிகளும் இந்தப் பிரச்சினையில் நல்லதொரு தீர்மானத்தை எடுக்காதிருந்தமை.

3. தமிழகத்தின் அரசியற் கட்சிகள் தங்களுடைய அரசியல் நலன்களுக்கு அப்பால் இலங்கையின் இனப்பிரச்சினையில் நடைமுறைக்குப் பொருத்தமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்காமை.

4. இந்திய அரசு இலங்கை இனப்பிரச்சினையிலும் இலங்கையின் வெளியுறவுக்கொள்கையிலும் நழுவற்போக்கைக் கைக்கொண்டமை.
இன்று இவைபோன்ற குறைபாடுகள் எல்லாம் இந்தியாவைத் தாக்கும் விஷக் காய்ச்சலைப் போல மாறியிருக்கின்றன.

இந்த நோயைக் குணப்படுத்துவதற்கு இந்தியா முதலிற் தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அது யார் யாருக்காகவோ தானே தன்னை நோயாளியாக்கிக் கொள்ள வேண்டியேற்படும்.

குற்றம் செய்பவரைக் காட்டிலும் குற்றங்களுக்கு ஒத்துழைத்தவரே குற்றத்தை அதிகமாகச் செய்தவராவார், தண்டனைக்குரியவர் என்று சொல்லப்படுவதுண்டு. அதுதான் இந்தியாவைப் பொறுத்தும் பொருந்துகிறது இன்று.

00

கிழிந்த கொடிகள் மட்டும் ஆடிக்கொண்டேயிருக்கின்றன.

Sunday 11 March 2012












வாய்ப்புகள் எந்தச் சூழலிலும் ஏற்படும். அவற்றைக் கையாள்வதன் மூலமாகவே வெற்றியும் தோல்வியும் அமைகின்றன. வாய்ப்புகளைக் கையாள்வதன் மூலமே ஒரு தலைமைத்துவத்தின் சிறப்பும் ஆளுமையும் புலப்படும்.

மேலும் ஒரு சிறப்பான தலைமை தனக்கான வாய்ப்புகளை உருவாக்குவதுமுண்டு. அல்லது கிடைக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தித் தன்னுடைய வெற்றியை அது உறுதி செய்து கொள்ளும். அதுவே வரலாற்றில் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பினருக்கு அந்தத் தலைமை வழங்குகின்ற நன்றிக்கடனும் பங்களிப்புமாகும். அந்தத் தரப்பு மக்களுக்கு அந்தத் தலைமை அளிக்கின்ற கௌரவமுமாகும்.

மக்கள் எதற்காகத் தங்களுக்கான தலைமைகளை உருவாக்குகிறார்கள்?

தங்களுடைய நெருக்கடிகளைத் தீர்த்துக் கொள்வதற்காகவும் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவுமே அவர்களுக்குத் தலைமைகள் தேவைப்படுகின்றன. மேலும் சமூகப் பாதுகாப்பிற்காகவும் அடையாளத்திற்காகவும். இந்த அடையாளம் கௌரவத்தையும் மதிப்பையும் மாண்பையும் கொண்டது.

வெற்றிபெறும் தலைமைகளை, ஆளுமையுடைய தலைமைகளை, மதிப்பும் மாண்புமுடைய தலைமைகளை, வியப்புகளை ஏற்படுத்தும் தலைமைகளையே மக்கள் தங்களுடைய அடையாளமாகக் கொள்கின்றனர். அந்தத் தலைமைகள் அவர்களைப் பொறுத்தவரை ஒரு நிழல் விருட்சமாகவும் கனிமரமாகவும் விரிந்த வானமாகவும் குளிர் ஊற்றாகவும் அமைந்திருக்க வேண்டும்.

வரலாறு நெருக்கடிகளையே அதிகமாகத் தன் மடியிற்கொண்டது. இயற்கை நெருக்கடியும் சமூக நெருக்கடியும் கலந்தது மனித வரலாறு. இந்த இரண்டு நெருக்கடிகளையும் கடந்து வந்ததும் அதே மனித வரலாறே.

தன்முன்னேயிருக்கும் அல்லது தன்னை நோக்கி வருகின்ற நெருக்கடிகளை வென்று முன்னேறுவதே தலைமைகளின் கடமை. மனித குலத்தை முன்னகர்த்தி வந்த தலைமைகள் இத்தகைய பண்பைக் கொண்டவையே.

ஆனால், தமிழ்த் தலைமைகள் தொடர்ந்தும் பின்னடைவுகளையும் தோல்விகளையும் சந்திப்பது ஏன்?

தமிழர்களுக்கு வாய்ப்புகளே கிடைப்பதில்லையா? அல்லது அவர்களுடைய வரலாற்றில் தோல்விக்கான பாத்திரத்திற்கே இடமளிக்கப்பட்டுள்ளதா?

அல்லது கிடைக்கின்ற வாய்ப்புகளை அவர்கள் எப்போதும் பயன்படுத்தத் தவறுகின்றனரா? அல்லது வாய்ப்புகளைப் பயன்படுத்த அவற்றுக்குத் தெரியாதா?

இத்தகைய தவறுகள் எதனால், எவற்றால் ஏற்படுகின்றன?

அல்லது தமிழர்களால் தங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கவே முடியாதா?

தாம் கடிமாக உழைத்து உருவாக்கிய வாய்ப்புகளையே அவர்கள் மிக இலகுவாக இழப்பது ஏன்?

இந்த மாதிரியான கேள்விகள் ஈழத்தமிழர்களின் அரசியல் முன்னெடுப்புக்கு இன்று அவசியமானவை. மேலும் இவை கூர்மையாக அணுகப்பட வேண்டியவையும் கூட.

ஏனெனில், ஈழத்தமிழர்கள் இன்று மிகப் பின்தங்கிய அரசியல் நிலைமையிலும் வாழ்க்கை நிலையிலும் உள்ளனர் என்ற யதார்த்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

கடந்த நூறு ஆண்டு கால இலங்கையில் தமிழ்த் தலைமைகள் எத்தகைய பாத்திரத்தை இலங்கையின்  அரசியலிலும் தமிழ் பேசும் மக்களின் அரசியலிலும் வாழ்க்கையிலும் வகித்துள்ளன?  என்று நோக்கினால் இது இன்னும் தெளிவாகப் புலப்படும்.

அதிகம் படித்தவர்களாகவும் ஒரு காலத்தில் சிங்களச் சமூகத்தினராலேயே மதிக்கப்பட்டவர்களாகவும் இருந்த சேர்.பொன் இராமநாதன், அருணாசலம் சகோதரர்கள் தொடக்கம் இன்றைய இரா. சம்மந்தன் வரையில் பலர் இந்தத் தலைமைப் பாத்திரங்களை வகித்துள்ளனர்.

ஆங்கிலேயரிடத்திலும் சிங்களவர்களிடத்திலும் செல்வாக்கும் மதிப்பும் பெற்றிருந்த தலைவர்கள் எப்படித் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வைக் காணமுடியாமற் போனார்கள். எப்படி தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுத்து நிறுத்த முடியாமல் இருந்தனர்?

‘தந்தை’ செல்வா, தங்க மூளை ஜீ.ஜீ. பொன்னம்பலம், ‘தளபதி’ அமிர்தலிங்கம், ‘இரும்பு மனிதன்’ நாகநாதன், ‘அடங்காத் தமிழன்’ சுந்தரலிங்கம், தலைவர் பிரபாகரன், இப்பொழுது ஐயா சம்மந்தன் என்று பெருமித அடைமொழிகளோடு கொண்டாடப்பட்ட தலைவர்கள் எல்லாம் இருந்தும் தமிழர்களின் அரசியல் பின்னகர்ந்திருக்கிறதே தவிர, அது ஒரு அடிகூட முன்னகரவில்லை.

எல்லாத் தலைவர்களும் தோல்விக்கும் பின்னடைவுக்குமே தங்களுடைய அரசியல் அணுகுமுறைகளை உருவாக்கி வைத்திருந்தது ஏன்? ஏன் வெற்றியை நோக்கிச் செல்ல முடியாதிருந்தனர்? இன்னும் ஏன் வெற்றியை நோக்கிச் செல்வதற்கு முடியாமலிருக்கின்றனர்?

‘சிங்களவர்களை விடவும் தமிழர்களே அதிகம் படித்தவர்கள், அதிக மூளைசாலிகள்’ என்று சொல்லிக் கொள்ளும் ஐதீகம் தமிழர்களிடம் பொதுவாகவே உண்டு. ஆனால், இதைச் சொல்லிக் கொள்ள அவர்கள் ஏன் கூச்சப்படவில்லை? இப்படிச் சொல்லிக் கொள்ளவும் கருதவும் கூடிய அடிப்படைகள் என்ன?

தன்னை நோக்கி வருகின்ற அத்தனை நெருக்கடிகளையும் மிக நுட்பமாக வெற்றிகொள்ளும் சிங்களத் தரப்பை ஒரு அவதானமாகவும் பாடமாகவும் கொள்ளுவதற்குத் தமிழ்த்தரப்புத் தவறுவது ஏன்?

பதிலாக, இருக்கின்ற ஆதரவுச் சக்திகளையும் அது எதிர்நிலைக்கே கொண்டு சென்றதையும் ஏன் இன்னும் அது விளங்காதிருக்கிறது?

இந்தியா உள்ளிட்ட வெளித்தரப்புகளையும் உள்ளுரிலுள்ள நேயச க்திகளையும் அது புறந்தள்ளியது ஏன்?

கடந்த நூறு ஆண்டுகால தமிழ்த்தரப்பின் அரசியலில் அது தமிழ் மொழிபேசும் பிற சமூகங்களான முஸ்லிம்களையும் மலையக மக்களையும் எதிர்நிலைக்கே கொண்டு சென்றுள்ளது. இதையிட்ட கவலையைக் கூட அது கொள்ளாதிருப்பது எதற்காக?

அதாவது, மொழி ரீதியாக இருந்த ஒற்றுமையைக் கூடத் தமிழ்த்தரப்புப் பேண முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது. பதிலாக அந்தச் சமூகங்களை அரசை நோக்கித் தள்ளுவதையே தமது பிரதான தொழிற்பாடாகவும் அது கொண்டிருக்கிறது.

தமிழ்த்தேசியம் என்ற சொல்லாடல் முன்னிறுத்தப்பட்ட பிந்திய காலத்திற்கூட இந்தப் பின்னடைவு அம்சங்களைக் குறித்த விளக்கங்களை அது பெறாதிருப்பதன் நோக்கம் என்ன?

இந்த மாரியான குறை அம்சங்கள் தன்னுடைய எத்தகைய வீரியமிக்க செயற்பாடுகளையும் பாழக்கிக்கிச் சிதைத்து விடும் என்பதை ஏன் இன்னும் அது உணராதிருக்கிறது?

ஏனெனில், கடந்த நெருக்கடிக் காலங்கள் அத்தனையிலும் ஈழத்தமிழர்கள் பாதிக்கப்பட்டேயுள்ளனர். அந்தப் பாதிப்புகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்காக வெளிச்சக்திகள் ஆதரவளிக்கவும் இல்லை. உலகம் முழுவதுமுள்ள தமிழர்களால்  அது சாத்தியப்படவும் இல்லை.

குறிப்பாகத் தென்னிலங்கையிலிருந்து இனவன்முறை மூலம் தமிழர்கள் விரட்டப்பட்டபோது எவராலும் அதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அப்போது சிங்களத் தரப்பின் நிகழ்ச்சி நிரலின்படியே அந்த நிகழ்ச்சிகள் இறுதிவரையில் நடந்தன.

பின்னர் யுத்தத்தின் போதும் இதேதான் நிலை. இறுதிவரையில் சிங்களத்தரப்பின் நிகழ்ச்சி நிரலுக்கே வெளி ஆதரவுகள் கிடைத்துள்ளன.

இறுதிப் போர்க்காலத்திற்கூட சர்வதேச சமூகம் தமிழர்களுக்கு எதிராகவே இருந்தது.

அந்தச் சந்தர்ப்பத்தில் - வன்னியிலுள்ள மக்கள் பகிரங்கமாகவே மரணக்குழியினுள் தள்ளப்பட்டுக் கொண்டிருந்தபோது, உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. அதாவது யாராலும் போரைத் தடுத்து நிறுத்தவும் முடியவில்லை. போரிலிருந்து மக்களைக் காப்பாற்றவும் முடியவில்லை.

பின்னர் அகதி முகாம்களிலிருந்த மக்களைக் கூட எந்தத் தமிழராலும் மீட்க முடியவில்லை.

அதற்குப் பின்னர் மீள் குடியேற்றத்தைக் கூட தமிழர்கள் தங்களின் விருப்பத்தின் படியோ ஆலோசனையின்படியே முழுதாகச் செய்ய முடியவில்லை.

இவை எல்லாவற்றிலும் சிங்களத்தரப்பின் நிகழ்ச்சி நிரலே பிரதானப்படுத்தப்பட்டிருக்கிறது. அல்லது சிங்களத்தரப்பின் நிகழ்ச்சி நிரலே இறுதி வெற்றியாகியிருக்கிறது.

இந்த நிலையிற்தான் தமிழ்த் தலைமைகளின் ஆழுமையும் திறனும் தீர்க்கதரிசனங்களும் தீர்மானங்களும் தந்திரோபாயங்களும் உள்ளன.
தமிழ் அரசியல் அறிவும் ஊடக நிலையும் கூட இந்தப் பின்னடைவுப் பரப்பிலிருந்து விடுபட்டதாக இல்லை.

இப்போது கூட ஒரு அருமையான வாய்ப்புக் கிட்டியது. சிங்களத் தரப்போடு பேரம்பேசக் கூடிய ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது.

இலங்கையின் மீதான போர்க்குற்றங்கள் ஒரு நெருக்குவாரத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் முஸ்லிம் அரசியற் சக்திகளை தனக்குச் சார்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இதற்காக அது ஒவ்வொரு தரப்பையும் தனித்தனியே கையாண்டுள்ளது.

ஆனால், இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தச் சக்திகள் தங்களிடையே ஒரு பொது நிலைப்பாட்டைக் கொண்டு, ஒரு பொதுத் தீர்மானத்தை எடுத்திருக்கலாம்.

‘இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கையின் நிலைமையைக் கருத்திற் கொண்டு செயற்படுகிறோம். ஆனால், தமிழ் பேசும் மக்களுடைய அரசியற் பிரச்சினைகளையும் வாழ்க்கைப் பிரச்சினைகளையம் அரசாங்கம் தீர்க்க வேண்டும்.

அதை இப்போதே செய்ய வேண்டும்.

சிங்களச் சமூகத்தினரும் இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கை எதிர்நோக்கியுள்ள நெருக்கடியைப் புரிந்திருக்கின்றனர். எனவே இந்த நிலையில் எல்லாக் காயங்களையும் மறந்து, கடப்பதற்குக் கடினமான நிலையை மன்னித்து ஒரு பொது உடன்பாட்டுக்கு வருகிறோம்.

ஆனால், அதற்குப் பிரதியுபகாரமாக – நீதியாக – நிலைமையை உணர்ந்து இந்த உடன்பாட்டுக்குச் சிங்களச் சமூகத்தை நீங்கள் அழைத்து வரவேண்டும்’ என ஜனாதிபதியிடம் தமிழ் பேசும் தரப்பினர் நிபந்தனையை விதித்திருக்க முடியும்.

வாய்ப்புகளைப் பயன்படுத்துவது என்பது புத்திபூர்வமானது. அதேவேளை அதை எட்டுவதற்காக தன்னுடைய நேச சக்திகளை அணுகுவதில் தேவைப்படுவது பெருந்தன்மையாகும்.

இந்த இரண்டு குணங்களும் இல்லாத நிலையே இன்றைய தமிழ்பேசும் சூழலின் யதார்த்தம்.

இது மாலுமி இல்லாத கப்பலுக்குச் சமம்.

துடுப்புகளிருந்தாலும் அதைப் பயன்படுத்தத் தெரியாத எந்தக் கப்பலோட்டியும் ஒரு அங்குலம் கூட முன்னகர முடியாது.

இன்று தமிழரின் அரசியல் அரங்கில் இருப்போர் இரண்டு வகைப்பட்டோர். ஒரு தரப்பு ஆயுதப்போராட்டம், ஆயுதமற்ற அரசியல் வழிமுறை என்ற இரண்டு வழிகளிலும் பயின்றவர்கள். குறிப்பாக திரு. டக்ளஸ் தேவானந்தா, திரு. சுரேஷ் பிரேமச்சந்திரன், திரு. செல்வம் அடைக்கலநாதன், திரு.சித்தார்த்தன், திரு.சுகு சிறிதரன், திரு.வரதராஜப்பெருமாள் போன்றோர். அடுத்த தரப்பினர் திரு. சம்மந்தன், திரு. ஆனந்தசங்கரி, திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோர்.

ஆனால், தமிழர்களின் கப்பல் என்னவோ இன்னமும் தளம்பிக்கொண்டேயிருக்கிறது. அதற்குத் திசைகளும் இல்லை. போக்கிடமும் இல்லை.

அதில் பழைய பெருமை பேசும் கிழிந்த கொடிகள் மட்டும் ஆடிக்கொண்டேயிருக்கின்றன.

00

போருக்குப் பிந்திய இலங்கையில் நெருக்கடிகளைச் சந்திக்கும் தலைவர்கள்

Saturday 10 March 2012






                                                                  
போருக்குப் பிந்திய இலங்கையில் அதிகமதிகம் நெருக்கடிகளைச் சந்திக்கும் தலைவர்கள் நான்குபேர். ஒருவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ. அடுத்தவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க. மற்றவர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன். நான்காவது ஆள் சந்தர்ப்பவசம் காரணமாக அரசியலுக்கும் சிறைக்கும் இடையில் சிக்குண்டிருக்கும் ஜெனரல் சரத் பொன்சேகா.

முதலாவது நபர்,

போர் வெற்றியைத் தன்னுடைய அரசியல் வெற்றியாக்கியவர். அதேவேளை போர்க் குற்றங்கள் அவரைச் சுற்றி நெருப்பு வளையங்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. போர் வெற்றியையே எரித்து விடும் அளவுக்கு இந்த நெருப்பு வளையத்தைப் பாவிக்க முனைகின்றன இவருடைய எதிர்த்தரப்புகள்.

தவிர, குடும்ப மேலாதிக்கத்தினால் உருவாகிய அதிருப்திகள், பொருளாதார நெருக்கடிகள், ஜனநாயக நெருக்கடி குறித்த குற்றச் சாட்டுகள், சர்வதேச நாடுகளுக்கிடையிலான போட்டிகளின் விளைவான அழுத்தங்களும் அதிருப்திகளும் என்று இந்த நெருக்கடி வளையம் இன்னும் அதிகமாகிறது.

ஆகவே, அபாயக் குழியின் மேலே வைக்கப்பட்டிருக்கும் சிம்மாசனத்தில் இருந்து கொண்டே அவர் ஆட்சி செய்ய வேண்டியுள்ளது. எரிந்து கொண்டிருக்கும் மாளிகையில் மதுவருந்திக்கொண்டிருக்கும் மன்னரின் நிலை அவருடையது.

ஆனாலும் அவரைப் பாதுகாப்பதற்கென மிகத் தேர்ச்சியுடைய – வரலாற்று ரீதியாகவே நிபுணத்துவமுடைய ஒரு இராசதந்திரப் படை உள்ளது. சிங்கள இராசதந்திரிகளின் பாதுகாப்பரணில் அவர் பாதுகாக்கப்படுகின்றார்.

அந்த வியூகத்தை உடைத்து அவரைப் பலவீனப்படுத்தவென்று ஒரு பெரும் முயற்சி உள்நாட்டிலும் வெளியரங்கிலும் பலமாக நடந்து கொண்டிருக்கிறது.

அடுத்தவர் திரு. ரணில் விக்கிரமசிங்க.

தலைமைத்துவக் கனவுகளோடு நித்திரையுமில்லாமல் நிம்மதியுமில்லாமல் வெற்றியுமில்லாமல் அலைகின்ற விதி வாய்க்கப்பெற்றவர்.

ஒரு காலம் அமெரிக்கா தொடக்கம் மேற்குலகின் விருப்பத்திற்கும் எதிர்பார்க்கைகளுக்கும் உரிய ஒருவராக இருந்தார். அதைப்போல போரினால்  கூடுதலான முன்னணித் தலைவர்களை இழந்திருந்த ஐ.தே.கவின் தலைமையை நிரப்பக்கூடியவர் என்றும் கருதப்பட்டிருந்தார் ரணில்.

ஆனால் இப்போது எல்லோரின் நம்பிக்கையையும் இழந்தவராகவும் எதையும் செய்ய முடியாதவராகவும் மாறி, சொந்தக் கட்சிக்குள்ளேயே நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்.

மற்றவர் திரு. சம்மந்தன்.

கட்சிக்குள்ளும் நெருக்கடி. ஆதரவாளர்களிடமும் நெருக்கடி. தமிழ்ச் சமூகத்தினர் என்று அடையாளப்படுத்தும் அணிகளினாலும் நெருக்கடி. புலம்பெயர்ந்திருக்கின்ற சனங்கள், தமிழ் ஊடகங்கள் போன்றவற்றாலும் நெருக்கடி. அரசாங்கத்தினாலும் நெருக்கடி. மேற்குலகத்தினாலும் நெருக்கடி. நட்பு சக்தி என்று கருதிக் கொண்டிருந்த இந்தியாவினாலும் நெருக்கடி என எல்லாப் பக்கத்தினாலும் நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்த முதியவர், எதற்கும் எப்பொழுதும் பதற்றத்தோடேயே இருக்கிறார்.

தொலைபேசிகளைத் தவிர்த்து, ஆலோசனைகளைத் தவிர்த்து, நண்பர்களைத் தவிர்த்து, விசுவாசிகளைத் தவிர்த்து.... இப்படியே முழுதாகத் தனிமைப்பட்ட ஒரு சூழலுக்குள் தன்னை உட்படுத்திக் கொண்டிருக்கும் இவர், பெரும்பாலும் என்ன செய்கிறார், என்ன செய்யப்போகிறார், என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று எவருக்குமே தெரியாத நிலையில் இருக்கிறார்.

கூட்டமைப்பின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறினார், ‘புலிகளின் தலைவர் பிரபாகரனைப்போல ஒரு உத்தியைக் கடைப்பிடிக்கிறார் சம்மந்தன். யாருக்கும் பதில் சொல்லாத, யாருடைய குரலையும் கேட்காத, தானே எல்லாவற்றையும் முடிவெடுகின்ற ஒரு போக்காளராக மாறியிருக்கிறார் ஐயா’ என்று.

ஆனால், பிரபாகரனின் உபாயங்களும் ஒழுக்க விதிகளும் நடைமுறையும் வேறு. சம்மந்தனின் நிலை வேறு. எனவேதான் அவருடைய அறிக்கையின் மை காய்வதற்கு முன்னேயே அவருடைய கட்சிக்குள்ளிருந்து மறுத்தான் அறிக்கைகள் வருகின்றன. அவர் சொன்ன பதிலின் குரல் அடங்க முன்னரே மறுத்தான் குரல்கள் ஒலிக்கின்றன.

அடுத்த நபர் ஜெனரல் சரத் பொன்சேகா.

இராணுவத்தரப்பில் பறிக்கப்பட்ட தகுதி நிலையைவிட மேலதிகமாக அதிகமாகப் பெற விரும்பி, அரசியலில் குதித்தவர். போர்க்களத்தில் பெற்ற வெற்றியைப் போல அரசியற் களத்திலும் வெற்றிகளைக் குவிக்கலாம் என்று நம்பியவர். ஆனால், களத்தில் இறங்கியபோதே தெரிந்தது, இராணுவத்தரப்பிலிருந்த தளபதிகளையும் விட அரசியற் களத்தில் தனக்கு வாய்த்த தளபதிகள் அதிகம் திறன்களைக் காட்ட முடியாதவர்கள் என்று.

மேலும், இராணுவ அணுகுமுறையும் போருபாயமும் வேறு. அரசியல் அணுகுமுறையும் போருபாயமும் வேறு என்பதை அவர் மேலும் புரிந்து கொண்டது சிம்மாசனத்துக்குப் பதிலாகச் சிறைக் கதவுகள் திறக்கப்பட்டபோதே.

‘இராணுவத்தில் இழக்கப்பட்ட நிலையை விடவும் வேறொரு நிலை, பேறான நிலையைப் பெறலாம். அந்தப் போர்க்களத்தைப் போல இந்தப் போர்க்களத்தையும் - அரசியற் களத்தையும் வெல்லுங்கள். அது உங்களுக்கு இலகுவானது. ஏனென்றால் போரின் வெற்றியில் நீங்களும் பங்காளி’ என்று சொல்லி உற்சாகப்படுத்தியவர்கள், பக்கபலமாகவே நின்றவர்கள் ஜெனரலைத் தனியே சிறையில் வருடங்களை எண்ண விட்டுள்ளார்கள்.

ஆனால், ‘சிறையிலிருந்தாலும் ஏனைய நண்பர்களைவிட நான் நிம்மதியாக இருக்கிறேன்’ என்று தனக்கு நெருங்கிய சகா ஒருத்தரிடம் சொன்னாராம் ஜெனரல்.

இப்பொழுது ஜெனரல் வெளியே இருந்திருந்தால்,  அவரைச் சுற்றியும் ஆயிரம் கேள்விகள்@ கண்டனங்கள்@ குற்றச்சாட்டுகள் எல்லாம் எழுந்திருக்கும். அந்த வகையில் இது பரவாயில்லை என்று ஆறுதற் பட்டிருக்கிறார் ‘சீமான்’.

ஆகவே, இந்த நான்கு முன்னணித் தலைவர்களையும் கொண்டுள்ள நாடும் சமூகங்களும் எப்படி நெருக்கடி இல்லாமல் இருக்க முடியும்?

‘கோனைப் போலவே குடிகள்’ என்று முன்னோர் சொல்வர். தலைவர்களின் நிலை தளம்பும்பொழுது அந்தத் தலைவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் நிலையிலும் அந்தத் தளம்பல் பிரதிபலித்தே தீரும்.

ஈராக்கின் தலைவராக இருந்த சதாம் ஹ_சைனைப் பதவி இறக்கியபோது ஈராக்கிய மக்கள் பட்ட அவலம் இதற்குச் சாட்சி. சதாமின் மீதான போரை அமெரிக்கா தொடுத்தபோது ‘பாக்தாத் எரிகிறது’ என்றே பத்திரிகைகள் தலைப்புச் செய்தியிட்டன.

பிறகு ஈராக்கியத் தெருக்களில் கதறலும் சிதைவுமாக அவலத்தில் மிதந்த காட்சிகளே யதார்த்தமாகியது.

லிபியத்தலைவர் கேணரல் கடாபியைக் கவிழ்த்தபோது லிபிய மக்கள் தெருவிலே விடப்பட்டனர். ஒரேயொரு கடாபிக்காக எத்தனை லிபியர்கள் தங்களுடைய வாழ்க்கையை இழக்க வேண்டியிருந்தது?

வன்னியிலே புலிகளை ஒடுக்கியபோது அங்கிருந்த சனங்கள் அவலத்தில் வீழ்த்தப்பட்டனர்.

வரலாறு காணாத பேரவலத்தில் சிக்க வைக்கப்பட்டனர் சாதாரண மக்கள்.

சரி பிழைகள் வேறு. ஒவ்வொரு தலைமைகளும் தளர்ச்சியடையும்போது, தங்களின் தவறுகளால் அவை நெருக்கடிக்குள்ளாகும்போது அது மக்களையே அதிகமாகப் பாதிக்கிறது.

இலங்கையின் இன்றைய நிலைவரம் இதை ஒத்ததாகத்தான் உள்ளது.

வரலாற்றை முன்னகர்த்தக் கூடிய - சக்திமிக்க  - ஆளுமையைக் கொண்ட தலைமைகளைத் தங்களிடத்தே கொள்ளாத மக்களாகி விட்டனர் இலங்கை மக்கள்.

இந்தத் தேர்வுப் பரப்புக்கு வெளியே தங்களுக்கான தலைவர்களைத் தேட வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டவர்களாகவும் யாரும் இல்லை. ஏனென்றால் வாய்பாடுகளுக்குள்ளேயே அல்லது தங்களுக்குத் தெரிந்த சதுரங்களுக்குள்ளேயே தலைவர்களைத் தேடுவதற்குச் சிந்திக்கிறார்கள் ஒவ்வொரு தரப்பினரும், ஒவ்வொருவரும்.

இலங்கையின் அரசியலைப் பற்றி பேசுவோரிற் பெரும்பாலானோரும் ஐக்கியத்தைப் பற்றியும் ஐக்கிய இலங்கையைப் பற்றியுமே சிந்திக்கிறார்கள். இதை ஏற்றுக்கொண்டால், இந்த ஐக்கிய இலங்கைக்குள் எந்தச் சமூகத்தைச் சேர்ந்த எவரும் தலைவராக வரலாம். அது பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவராகத்தான் இருக்க வேணும் என்றில்லை.

வருகின்ற தலைவர் இலங்கையின் சுபீட்சத்துக்கும் இனங்களின் ஐக்கியத்துக்கும் அமைதிக்கும் தன்னுடைய ஆளுமையினால் பொருத்தமான பாத்திரத்தை வகிப்பவராக இருந்தாற் போதும்.

உண்மையில் அதுதான் சரியும்கூட.

ஆகவே தலைமைப் பொறுப்புக்கு வருகின்றவர் நிச்சயமாகச் சிங்களவராக இருக்க வேண்டும். அதிலும் பௌத்தச் சிங்களவராக இருக்க வேண்டும் என்றில்லை என்று அர்த்தமாகும்.

நாட்டுக்குப் பொருத்தமான தலைவர் என்பதே இங்கே முக்கியத்துவமடையும். இனங்களின் விருப்பத்துக்குரிய ஒருவர் என்று பார்த்தால் இப்போது தாங்களும் நெருக்கடிக்குள்ளாகி, மக்களையும் நெருக்கடிக்குள்ளாக்கி, நாட்டையும் நெருக்கடிக்குள்ளாக்கும் தலைவர்களே வரக்கூடும். அப்படி வந்தவர்களே நாட்டை இந்த நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர்.

எனவே நெருக்கடிகளிலிருந்த மீள்வதற்குச் சிந்தித்தால் புதிய தலைமைகளை, ஆளுமையும் மக்களிடம் விசுவாசமும் அர்ப்பணிப்புமுள்ள தலைமைகள் தேவை. அந்தத் தலைமைகளே தேசியத்தன்மை என்று சொல்லத் தக்க தலைமைகளாக இருக்கும்.

ஒரு சரியான தலைமை, நிறைவான தலைமை என்பது பிற சமூகத்தினரும் மதிக்கின்ற – நாடே மதிக்கின்ற தலைமையாக இருக்கும். அந்தத் தலைமையின் சொல்லுக்கு அனைத்துத் தரப்பினரும் மதிப்பளிப்பர். அந்தச் சொல்லுக்கு அனைவரும் கட்டுப்படுவர்.

ஆனால், அத்தகைய தலைமையை மக்களும் கண்டெடுக்கவில்லை. தலைவர்களாக தங்களைக் காண்பித்தவர்களும் தங்களைத் தலைவர்களாக வளர்த்துக்கொள்ளவில்லை.

இப்போது ஒவ்வொருவரைச் சுற்றியும் நெருக்கடிகள். பிறகு எல்லோரைச் சுற்றியும் நெருக்கடிகள். பிறகு நாட்டைச் சுற்றியே நெருக்கடி.

ஆளை ஆள் சொல்லிக் கொள்வதை விட, தரப்பைத் தரப்பு சொல்லிக் கொள்வதை விட எல்லோரும் நெருக்கடிக்குள்ளேயே இருக்கிறார்கள். எல்லோரும் நெருக்கடிக்குள்ளேயே இருக்கிறோம்.

00

இலங்கைத் தமிழ் மீனவர் பிரச்சினை - புரிந்துணர்வே தீர்வைத் தரும்




















இலங்கையின் வடபகுதியிலுள்ள மீனவர்கள் இன்னும் பிரச்சினைகளைச் சந்தித்துக் கொண்டேயிருக்கின்றனர். மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்ற நிலை. போர் முடிந்தாலும் பிரச்சினைகள் தீரவில்லை. 


முன்னர் கடல்வலயச்சட்டம், போர் போன்ற அரசியற் காரணங்களினால் மிகவும் பாதிக்கப்பட்ட இந்த மீனவர்கள் இப்போது அந்தத் தடைகளைக் கடந்துள்ளனர். இன்னும் வலி வடக்குப் பிரதேசத்தில் காங்கேசன்துறை – மயிலிட்டி போன்ற ஒரு வரையறுக்கப்பட்ட பிரதேசத்தைத் தவிர, ஏனைய இடங்களில் இயல்பாகத் தொழில் செய்யக்கூடிய நிலைமை உருவாகியிருக்கிறது. 


ஆனால், இந்த இயல்பு நிலையில், நீண்ட காலத்துக்குப் பின்னர் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பான சூழலில் புதிய பிரச்சினைகள் உருவாகியிருக்கின்றன. 


இந்திய மீனவர்கள் என்று சொல்லப்படும் தமிழக மீனவர்களின் அத்துமீறல்களால் வடக்கின் பெரும்பாலான இடங்களிலுள்ள இலங்கைத் தமிழ் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்தப் பிரச்சினை தொடர்பாக பல மட்டங்களிலும் பேசப்பட்டாலும் எந்தத் தீர்வும் இன்னும் கிட்டவேயில்லை. 


இதேவேளை வடக்கில் சில பிரதேசங்களில் உள்ளுர் மீனவர்களால் இன்னொரு பிரதேச மீனவர்கள் பாதிக்கப்படும் நிலையும் உள்ளது. ஆகவே இந்தப் பிரச்சினைகளைப் பற்றி வடபிராந்திய கடற்றொழிலாளர் சமாசத் தலைவர் திரு. எஸ்.தவரட்ணம் அவர்களுடன் “வீரகேசரி்“ வாரவெளியீட்டிற்காக உரையாடினோம். 

00

இந்திய மீனவர்களினால் ஏற்படும் பிரச்சினைகள் இப்பொழுது எந்த அளவில் உள்ளன? கடந்த வாரம் நீங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கச்சதீவுக்குச் சென்று அங்கும் பேச்சுகளை நடத்தியிருக்கிறீர்கள். இந்த நிலையில் இது தொடர்பாக ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்ன?

இந்தப் பிரச்சினைக்கு இன்னும் ஒரு தெளிவான தீர்வு – நிரந்தரத் தீர்வு கிட்டவில்லை. ஆனால் எங்களுடைய பிரச்சினையை, எங்களின் நியாயத்தைத் தமிழக மீனவர்கள் புரிந்திருக்கிறார்கள். அதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். கடந்த வாரம்கூட நாங்கள்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கச்சதீவில் சுமார் மூவாயிரம் வரையான தமிழக மீனவர்களையும் அவர்களுடைய பிரதிநிதிகளையும் சந்தித்தோம். மிக விரிவாக இது தொடர்பாக, எங்களுடைய நிலைமைகள் தொடர்பாக நாங்கள் பேசினோம். பலவிசயங்களிலும் ஒத்துக் கொள்கிறார்கள். முன்னர் இந்தியாவுக்குச் சென்றே பேசியிருக்கிறோம். ஆகவே எங்களுடைய பிரச்சினைகள் அவர்களுக்கு நன்றாகவே புரிந்துள்ளது.

இந்தப் பிரச்சினை இன்று இந்திய - இலங்கை அரசுகளின் உயர் மட்டம் வரையில் பேசப்படுகின்ற அளவுக்கு கவனத்தைப் பெற்றுள்ளன.

ஆனால், அதையெல்லாம் எப்படி நடைமுறைக்குக் கொண்டு வருவது என்பதில்தான் பிரச்சினைகள் உள்ளன.

ஏனென்றால் இது இரண்டு நாடுகளுடன் சம்மந்தப்பட்ட பிரச்சினை. இரண்டு நாடுகளின் சட்ட திட்டங்கள், தொழில்முறைகள் சம்மந்தப்பட்ட பிரச்சினையாக இருக்கிறது. எனவே இந்தப் பிரச்சினையில் இந்திய அரசாங்கமும் இந்திய அரசியற் தலைவர்களும் எடுக்கின்ற தீர்மானங்கள்தான் இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத்தீர்வை, நல்ல தீர்வைத் தரும். முக்கியமாகத் தமிழ் நாட்டு அரசும் அங்குள்ள அரசியற் தலைவர்களும் இந்த விசயத்தில் மிகவும் பொறுப்போடு செயற்பட வேண்டும்.

இதைச் சற்று விளக்கமாகச் சொல்லுங்கள்? உங்களுடைய பிரச்சினைகள் என்னமாதிரியுள்ளன? அவை எந்த அளவில் உள்ளன?

எங்களுக்கு இப்பொழுது தமிழக மீனவர்களால் ஏற்படும் பிரச்சினைகள் என்று பார்த்தால், நாகபட்டினம் பகுதியிலுள்ள மீனவர்களால் முல்லைத்தீவு தொடக்கம் வடமராட்சி கிழக்கு வரையான மீனவர்களுக்குப் பிரச்சினை ஏற்படுகிறது.

தொண்டி போன்ற பகுதி மீனவர்களால் வடமராட்சி மற்றும் வலிகாமம் மேற்குப் பகுதியான சுழிபுரம், மாதகல் போன்ற இடங்களைச் சேர்ந்த மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

ராமேஸ்வரம் பகுதி மீனவர்களால் மன்னார் வளைகுடாப் பகுதியில் தொழிற்செய்யும் எங்களுடைய கடற்றொழிலாளர்கள் பாதிப்புள்ளாகின்றனர்.

இந்திய மீனவர்கள் என்று சொல்லப்படும் தமிழக மீனவர்கள் செய்கின்ற தொழில்முறை வேறு. நாங்கள் செய்கின்ற தொழில்முறை வேறு. அவர்கள் பெரிய படகுகளில் வந்து மடிவலைகளைப் பயன்படுத்தித் தொழில் செய்கின்றனர். இது வளத்தை அழிக்கிறது. நாங்கள் கடலில் உள்ள வளத்தைப் பாதுகாத்துக்கொண்டே தொழிலைச் செய்ய வேணும். கடலில் கண்டமேடைகள் என்று சொல்லப்படும் மீன் வளப் பகுதிகளை நாங்கள் அழியவிட முடியாது. அந்தக் கண்ட மேடைகளே மீன்வள உற்பத்திக்கான ஆதாரமாகும்.

தமிழக மீனவர்கள் பயன்படுத்துகின்ற மடிவலைகள் இந்தக் கண்டமேடைகளுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. எங்களுடைய மீனவர்கள் சிறுரகமான வலைகளையே பாவிக்கின்றனர்.

இந்த நிலையில் மடிவலைகளுடன் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசிக்கும் தமிழக மீனவர்களால் எமது வலைகள் அறுக்கப்படுகின்றன.

இதை அவர்கள் திட்டமிட்டுச் செய்கிறார்களா?

அவர்களும் நாங்களும் உடன்பிறப்புகளைப் போன்றவர்கள். சகோதர உறவே எங்களுக்கிடையிலுள்ளது. சில சந்தர்ப்பங்களில் எங்களுடைய படகுகள் வள்ளங்கள் பாதிக்கப்பட்டால் அவை தமிழக மீனவர்களால் காப்பாற்றப்படுகின்றன. அதைப்போல அவர்கள் வழிமாறி வந்தாலும் நாங்களே அவர்களைக் காப்பாற்றி உரிய இடத்துக்கு அனுப்பி வைக்கிறோம்.

இப்படியான ஒரு உறவே எங்களுக்கிடையில் உள்ளது. ஆனால், இந்த அத்துமீறல் இதையெல்லாம் பாதிக்கிற மாதிரியே நடக்கிறது. முக்கியமாக இவர்கள் பயன்படுத்துகின்ற வலையும் செய்கிற தொழில்முறையும் எங்களின் எல்லைக்குள் பிரவேசிப்பதுமே எங்களுக்குப் பாதிப்பபைத் தருகின்றன.


எந்த அடிப்படையில் இந்தப் பிரச்சினையைத் தமிழக மீனவர்கள் புரிந்து கொண்டுள்ளனர்? இந்திய அரசும் தமிழக அரசும் அங்குள்ள அரசியற் தலைவர்களும் இந்தப் பிரச்சினையை எப்படிக் கையாள்கின்றன? 

நாங்கள் பாதிக்கப்படுகிறோம் என்பதை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். ஆனால், தங்களுக்கு வேறு தொழில்முறையைப் பற்றித் தெரியாது என்று சொல்கிறார்கள். அதேவேளை தங்களுக்கு இந்த இழுவைப்படகு - மடிவலையைப் பயன்படுத்துவதற்கு தடையில்லை என்றும் வேறு தொழில்களைச் செய்வதற்கான வசதிகள் - உபகரணங்கள்; தங்களிடம் இல்லை என்றும் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் தமிழக அரசும் இந்திய அரசும் இது தொடர்பாக ஒரு நிலைப்பாட்டுக்கு வரவேணும். அயல் மீனவர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்ற பொதுவான தார்மீக ரீதியான நடைமுறையொன்றை இவை பேண வேண்டும்.

இந்த மாதிரிக் கடல் மற்றும் காடு சார்ந்த எலலைப் பிரச்சினைகள் நாடுகளுக்கிடையில் ஏற்படுவதுண்டு. இதைத் தீர்த்துக்கொள்வதற்கு உரிய சர்வதேசச் சட்டங்களும் விதிமுறைகளும் உள்ளன. ஆனால், இதை யார் இப்போது நடைமுறைப்படுத்துவது?

இதைச் செய்யவேண்டியது தார்மீக அடிப்படைகளைப் பற்றிச் சிந்திக்கும் அறிஞர்களும் பொறுப்பான அரசியல்வாதிகளுமே. தமிழக அரசியல்வாதிகள் தங்களுடைய அரசியல் நலன்களைப் பற்றியே சிந்திக்கிறார்கள். இப்போது தமிழக அரசில் கடல்வளத்துறை கடற்றொழிற்றுறை அமைச்சராக இருப்பவருக்கே ஐந்து ஆறு வள்ளங்கள் இருப்பதாக தமிழக மீனவர்களே சொல்கிறார்கள். இப்படி இருக்கும்போது அவர்கள் எப்படி எங்களுக்காகச் சிந்திப்பார்கள்?

தமிழகத்தில் இருக்கின்ற பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு ஈழப்போராட்டம் ஒரு அரசியல் அந்தஸ்தைக் கொடுத்துள்ளது. அதற்காகவே அவர்கள் எப்போதும் அதைப் பற்றிக் கதைக்கிறார்கள். மற்றும்படி இந்த மாதிரியான நிலைமையில் ஈழமீனவர்கள் பாதிக்கப்படுவதைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.

தமிழகத்தில் செயற்படுகின்ற பல ஊடகங்களும் தவறான முறையிலேயே இந்தப் பிரச்சினைகளை எழுதி வருகின்றன.

எங்களுடைய பாதிப்பைப் பற்றி யாரும் உரியமுறையிற் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

சரி, அப்படியானால் இந்தப் பிரச்சினைக்கு என்னதான் முடிவு? இதை எப்படித் தீர்த்துக் கொள்வது?

இந்தப் பிரச்சினையைப் பேசித்தான் தீர்க்க முடியும். பேச்சுவார்த்தையின் மூலமே தீர்வைக் காண முடியும். ஆனால் அந்தத் தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கு அரசுகளால்தான் முடியும்

குறிப்பாக தொழில் முறையை மாற்றுவதைப் பற்றி, வள அழிவைத் தடுப்பதைப் பற்றி துறைசார்ந்த முறையில் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அரசுகளால்தான் முடியும். அதேபோல சட்டத்தை விதிப்பதற்கும் அதை நடைமுறைப்படுத்துவதற்கும் அதைக் கண்காணிப்பதற்கும் அரசாங்கங்களிடமே அதிகாரம் உள்ளது.

நாங்கள் இதுவரையில் பேசிக் காணப்பட்ட விசயங்களை நடைமுறைப்படுத்தியிருந்தாலே எவ்வளவோ பிரச்சினைகள் தீர்ந்திருக்கும். ஆனால், அதை நடைமுறைப்படுத்துவதற்கு எங்களிடம் அதிகாரம் எதுவும் இல்லை என்பதே காரணமாகும்.

ஆகவே, அரசுகள் எட்டப்படும் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும். அதற்குக் கால எல்லையை நிர்ணயிக்க வேண்டும். இப்படிச் செய்யும்பொழுது பகைமையற்ற ஒரு நிலைமை ஏற்படும்.

அப்படியென்றால் எங்கே பிரச்சினை உண்டு? எதற்காக இந்தப் பிரச்சினை இன்னும் நீண்டு செல்கிறது?

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலே கடல்வளக் கற்கை நெறி படிப்பிக்கப்படுகிறது. இலங்கையிலே இன்னும் வேறு பல பல்கலைக்கழகங்களிலும் கடற்றொழிற் கல்வி போதிக்கப்படுகிறது. கடற்றொழிலுக்கு என்று தனியான அமைச்சே உண்டு.

ஆனால், இந்தப் பிரச்சினையை யாரும் உரிய கவனத்திற்கொள்வதாகத் தெரியவில்லை. இப்போதுதான் நாங்கள் மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் ஒரு நல்ல நிலையில் தொழிலைச் செய்ய வாய்த்திருக்கிறது என்றால், அதற்கும் பிரச்சினை. முன்னர் போர் பிரச்சினையாக இருந்தது. இப்போது தமிழக மீனவர் விவகாரம் பிரச்சினையாக உள்ளது.

இந்தப் பிரச்சினையை மீனவர்கள்தான் பேசி முடிவு காண வேண்டும். நாங்கள் பேசி பிரச்சினைகளைப் புரிய வைத்துள்ளோம். இப்போது அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கு அதிகார மட்டத்திலுள்ளவர்களே முயற்சிக்க வேண்டும். அதிகாரிகள் தனியே பேசுகிறார்கள். அதிகாரிகளுக்குப் பிரச்சினைகளைப் பற்றித் தெரியாது. ஆகவே எல்லோரும் விசுவாசமாக இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முனைந்தால் இலகுவாகவே தீர்க்கப்பட்டு விடும்.

அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வந்திருந்தபோது இந்த மீனவர் பிரச்சினை பேசப்பட்டது. அவர் அதற்கு ஒரு திட்டத்தையும் முன்மொழிந்திருந்தாரே!

ஆமாம். அவரைச் சந்தித்திருந்தோம். அவர் எல்லாவற்றையும் கேட்டறிந்தார். இந்தப் பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வைப் பெற்றுத்தர முயற்சிக்கிறேன் என்று யாழ்ப்பாணத்தில் கூறிவிட்டுச் சென்றார்.

ஆனால், கொழும்பிலே அவர் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குச் சொன்ன அறிவுரை எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வாரத்தில் மூன்று நாட்கள் இலங்;கை மீனவர்களுக்கும் மூன்று நாட்கள் இந்திய மீனவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படட்டும். ஒருநாள் விடுமுறை நாளாகட்டும் என்று சொன்னார்.

அவர் ஒரு படித்த மனிதர். பலராலும் மதிக்கப்படுகிறவர். நாங்கள் கூட அவரை மதிக்கிறோம். அவரை விரும்புகிறொம். ஆனால், வாழ்வோடும் எதிர்காலத்தோடும் போராடிக்கொண்டிருக்கிறது எங்களொடு இந்த மாதிரி அவர் பேசுவது நல்லதல்ல.

கடல்வளம் அழிந்த பின்னர், அந்த வளத்தைப் பாதுகாப்பதைப் பற்றிச் சிந்திக்காமல் பொறுப்பற்ற முறையில் அரசியல் பேசுவது  அழகல்ல. அது நல்லதுமல்ல. எல்லோராலும் மதிக்கப்படுகின்ற அப்துல் கலாம் என்ற பெரிய அறிஞருக்கு – அதுவும் தமிழராகவே இருக்கின்ற அவருக்கு இது பொருத்தமானதல்ல.

 தமிழக மீனவர்களின் தொழில்முறையினால், கடல்வளங்கள் அழிக்கப்படுவதாகச் சொல்கிறீர்கள். ஆனால், கடல்வளத்தைக் கவனத்திற் கொண்டு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் தொழிற்தடையை விதித்து அதைப் பேணுவதாகவும் அறிகிறோம். ஆனால், நீங்கள் இதற்கு மாறாகச் சொல்கிறீங்கள். அவர்களுடைய தொழில்முறையில் வளப் பாதுகாப்பைப் பற்றிப் பொருட்படுத்தவில்லையென்று...?

அவர்கள் மீன்கள் பெருகுவதற்கான ஒரு பருவகாலத்தை மட்டுமே சிந்திக்கிறார்கள். எங்களுடைய கடலோ பவளப்பாறைகளால் ஆனது. இந்தப் பவளப்பாறைகள் எங்களுக்குக் கிடைத்துள்ள பெரும் வளம். இழுவைப்படகுகளின் தொழில் முறையினால் இந்த வளம் பாதிக்கப்படுகிறது என்பதே எங்களுடைய கருத்து. இதை எங்களுடைய கடல்வள ஆய்வுகளே எடுத்துக் கூறுகின்றன. கடல் வள அறிஞர்கள் இதைப் பற்றித் தெளிவாகவே சொல்லியிருக்கிறார்கள்.

ஆகவே வளத்தைப் பயன்படுத்தினால் அதன்மூலம் நாங்களும் பயன்பெறலாம். தமிழக மீனவர்களும் பயன்பெறலாம்.

பாரம்பரியத்தையும் நவீனத்தையும் இணைத்து வளத்தைப் பாதுகாத்து ஒரு தொழில் வடிவத்தை நாம் உருவாக்க வேண்டும். நாங்கள் இரண்டு தரப்பினரும்  உறவுகளாக – உடன்பிறப்புகளாக – சகோதரர்களாக வாழ்ந்த வரலாற்றை மறக்கவே கூடாது.

சரி, உள்ளுரிலும் பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக குருநகர்ப் பகுதி மீனவர்களால் பூநகரிப் பகுதி மீனவர்கள் தொடர்ந்து பாதிப்புகளைச் சந்திப்பதாகச் சொல்லி வருகிறார்கள். இது தொடர்பாக நீதிமன்றம்வரை சென்றுள்ள நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. இதைப் பற்றிச் சொல்லுங்கள்?

தமிழக மீனவர்களால் இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுவதைப்போலத்தான் இதுவும். குருநகர் மீனவர்கள் இலங்கை அரசினால் தடைசெய்யப்பட்ட தொழில்முறையைச் செய்கிறார்கள். இதை நாங்கள் (சமாசம்) தடுத்திருக்கிறது. ஆனால், அவர்கள் சட்டவிரோதமாக - இரகசியமான முறையில் அந்தத் தொழிலைச் செய்கிறார்கள். இது பிழையான நடவடிக்கையே. மனச்சாட்சிக்கும் சக தொழிலாளிக்கும் செய்கின்ற அநியாயம்.

ஆனால், இதை நாம் தடுப்பதற்கு எங்களிடம் அதிகாரம் இல்லை. அதைப் பற்றி எங்களுடைய சங்கவிதிகளில் குறிப்பிடவில்லை. ஆகவே இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது திணைக்களமே. ஆனால், அவர்கள் கண்டும் காணாமல் விடுகிறார்கள். இது அடுத்த தவறாகும்.

மற்றது, இந்தப் பிரச்சினை நீதிமன்றத்துக்குச் சென்றபோது அங்கே குறிப்பிட்ட நபருக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நான்கு படகுகளுக்கும் தலா ஒன்பது ஆயிரம் ரூபாய்ப்படி தண்டப்பணம் அறவிடப்பட்டதாக அறிகிறோம். அப்படிப் பார்த்தால் நான்கு படகுகளுக்கும் அன்று விதிக்கப்பட்ட தண்டப்பணத்தின் தொகை 36.000. ஆனால், அன்றைய அவர்களுடைய வருமானம் அதற்குப் பல மடங்காகும். அப்படியென்றால், எப்படி இதைத் தடுக்க முடியும்?

ஆகவே தண்டப்பணத்தை மிக அதிகமாக அறவிடவேண்டும்.

இதற்கெல்லாம் முதலில் புரிந்துணர்வு அவசியம். கள்ளனாகப் பார்த்துத் திருந்தாவிட்டால் இதைத் திருத்த முடியாது என்ற நிலைதான்.

00

கலங்கும் அரசும்...

Sunday 4 March 2012

















ஒரு அரசையும் அதனுடைய தலைமைத்துவத்தையும் காப்பாற்றுவதற்குப் போராட்டங்கள், மதநிலையங்களில் வழிபாடுகள், பிரார்த்தனைகள், ஊர்வலங்கள் என்று மக்கள் நிலைப்பட்ட நிகழ்ச்சிகளை அரசே முன்னின்று செய்ய வேண்டிய ஒரு நிலை உருவாகியிருக்கிறது வரலாற்றில்.

போதாக்குறைக்கு அரசையும் நாட்டையும் இயக்கும் அரச இயந்திரத்தைச் சேர்ந்த அதிகாரிகளையும் உத்தியோகத்தர்களையும் கூட அது பயன்படுத்த விளைகிறது.

மேலும் இரவு பகல் என்றில்லாமல், ஓய்வில்லாமல், அது தனக்குச் சார்பாக இயங்கக் கூடிய வெளிநாடுகளையெல்லாம் வளைத்துப் போடுவதற்காகப் பாடுபடுகிறது. இதற்காக அமைச்சர்களும் பிரதானிகளும் எண்திசையும் பறந்து திரிகிறார்கள்.

பேரங்கள், கெஞ்சல்கள், வேண்டுதல்கள் என்று படாத பாடெல்லாம் படுகின்றனர் அரச பிரதானிகள்.

இதெல்லாவற்றுக்கும் காரணம் கலக்கமே.

மனிதன் நிம்மதியை இழப்பதும் அரசு நிம்மதியை இழப்பதும் நாடு நிம்மதியை இழப்பதும் கலக்கத்தினாலேயே.

இந்தக் கலக்கம் எதனால்?

விட்ட தவறுகள். செய்த தவறுகள். விட்டுக் கொண்டும் செய்து கொண்டுமிருக்கும் தவறுகளே இந்தக் கலக்கத்தின் ஊற்றவாய்.

முன்செயல்கள் பின் விளைவைத் தருமென்பர். சனங்கள் கலங்கினால் அரசும் கலங்கும் என்பது முதுமொழி. அரசு கலங்கினால்...?

ஆனால், அந்த அரசே இப்போது கலங்கிக் கொண்டிருக்கிறது.

அதுவும் அம்பலத்தில்.

நாட்டைக் காப்பதற்கு எந்தப் படையும் எந்தப் போராயுதமும் போதாது. இதை நானே சில வாரங்களுக்கு முன்னே எழுதியிருந்தேன். (பார்க்கவும் ‘நிரந்தரப் படைமுகாம்கள்’).

கடவுளே! அது இவ்வளவு சீக்கிரம் உணரக்கூடியதாக மாறிவிடும் என்று நானே நம்பவில்லை.

ஆனால் அது நடந்திருக்கு.

எந்தப் படையினனும் இப்போது நாட்டைக் காப்பாற்றுவதற்குத் தேவையில்லை. எந்தத் தளபதியும் படை நடத்தத் தேவையில்லை. எந்த ஆயுதப்படைகளாலும் நாட்டையோ அரசையோ காப்பாற்ற முடியாது.

மட்டுமல்ல, அரசையும் அதனுடைய தலைமையையும் படைகளையும் அவற்றின் தளபதிகளையும் பாதுகாப்பதற்கு இப்போது மக்களே தேவை என்ற நிலை வந்துள்ளது.

மக்களின் காலடியில் வந்து நிற்கிறது அரசு.

இப்போது நாட்டைப் பாதுகாப்பது, அரசைப் பாதுகாப்பது, தலைமையைப் பாதுகாப்பது எல்லாமே சனங்கள்தான். ஆமாம் சனங்களே பாதுகாக்கிறார்கள்.

சனங்களின் தயவையே அரசு இன்று எதிர்பார்க்கிறது. அதையே அதன் தலைமையும் நம்பியிருக்கிறது.

மக்களின் தயவில்லையேல், அவர்கள் எதிர் முகம் கொண்டால், அரசில்லை@ ஆட்சியில்லை@ அதன் தலைமையில்லை என்ற நிலை இன்று வந்திருக்கிறது.

சனங்களின் ஆதரவை, அவர்களின் தேசிய உணர்வை நம்பியே அரசு இன்று தன்னுடைய இயங்குநிலையைப் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது.

மக்களை அதிகம் மதியாத அரசுகளின் வரலாறு இப்படித்தான் அமையும்.

எதிரிகளாகவே நடத்தப்பட்ட மக்களின் கால்களிலேயே மண்டியிடும் விதி ஒரு நாள் தானாகவே வந்து சேரும்.

அந்த விதியே இப்பொழுது வந்துள்ளது.

இதைத்தான் உயிர்ப்பிச்சை கேட்பது என்று சொல்வதா?

இதைத்தான் மன்னிப்பும் மறப்பும் என்று கொள்வதா?

வரலாறு விசித்திரங்கள் நிறைந்த ஒரு சக்கரந்தான். அது மிகக் குரூரமானதும்கூட.

இதெல்லாம் இதிகாச காலத்துச் சம்பவங்களல்ல. வரலாற்றின் பழைய பக்கங்களைப் புரட்டித்தான் இதையெல்லாம் அறிய வேண்டும் என்றும் இல்லை.

இதை வாசிக்கும் போது உங்கள் எல்லோருக்கும் எல்லாமே புரியும். ஏன், இதை உரிய தலைகள் வாசித்தாலே தங்களின் நிலையைப் புரிந்து கொள்ள முடியும்.

இப்போது உண்மையில் யார் தலைவர்கள்? யாரிடம் அதிகாரம் உள்ளது?

மக்களே! மக்களே இன்று தீர்மானிக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர்.

கலக்கத்திலிருக்கும் அரசுக்கு மக்களே ஆறுதற் பிச்சையிடுகிறார்கள். அவர்களே பாதுகாப்புக் கவசமாக இருக்கிறார்கள். அவர்களே பசித்த வயிற்றோடு ஆட்சிக்கான அருளை வழங்குகிறார்கள். அவர்களே ஆறாத காயங்களோடும் தீராத வலிகளோடும் மன்னிப்பை அளிக்கிறார்கள். மரணக் குழியில் வீழ்த்தப்பட்ட மக்கள். சாவிலிருந்து மீண்டு வந்த மக்கள் அவர்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாட்டின் தெருக்களில் அரசைக் காப்பாற்ற வேண்டும் என்ற குரலோடு நின்ற சனங்களைப் பார்த்தேன்.

கடவுளே! கடவுளே!!

இருளிற் புதைக்கப்பட்ட மனிதர்கள். ஏழ்மையிலும் துயரத்திலும் வீழ்த்தப்பட்ட மனிதர்கள்.

எல்லாவற்றையும் மறந்து வந்து நின்றார்களா? அல்லது எல்லாவற்றையும் மன்னித்து விட்டு வந்து நின்றார்களா?

உலகத்திலே கொடுமையானது மன்னிப்புத்தான். அதேயளவுக்குக் கொடுமையானது மன்னிப்பின்மையும்.

எல்லாவற்றையும் நினைத்துக் கொண்டு யாராலும் மன்னிப்பை வழங்கிவிட முடியாது.

மறப்பதே மன்னிப்புக்கான முதற்படி. ஆனால், மறப்பதொன்றும் அவ்வளவு கடினமானதல்ல.

சாவரங்கை, மரணக்குழிகளை, ஆறாத காயத்தை, தீராத வலியை, மறைக்க முடியாத அவமானத்தை எல்லாம் இலகுவில் மறந்து விட முடியாது.

அவ்வாறெனில் அதற்கு மாண்புடைய மனம் வேணும். அல்லது காயங்கள்  ஆற்றப்பட்ட ஒரு நிலை வேண்டும்.

மறக்கவே முடியாத கடந்த காலமொன்றை ஒவ்வொருவரும் வைத்திருக்கும்போது அதை எப்படிக் கடக்க முடியும்? அதை எப்படி மறக்க முடியும்?

காயங்களும் வலிகளும் இன்னும் ஆற்றப்படாதிருக்கும்போது எப்படி மறதி வரும்?

ஆனால், விதி வலியது. அது கோணங்களை மாற்றி, நிறங்களை மாற்றி, வடிவங்களை மாற்றி தன்னுடைய கோலங்களைக் காட்டும்.

மறக்க முடியாத சனங்களை அது மறதிக்குக் கோருகிறது. கடக்கவே முடியாத காலத்தைக் கடக்கக் கோருகிறது.

ஆகவே இன்னொரு யுத்த அரங்கில் நிறுத்தப்பட்டதைப்போல அவர்கள் வெற்றிக்கும் தோல்விக்குமிடையில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

எல்லாவற்றையும் மறவுங்கள். எல்லாவற்றையும் மன்னியுங்கள். என்ற கோரிக்கைகளை விடுகின்ற குரல்கள் எல்லாவற்றையும்

அவர்களின் நினைவுகளோடு வழிநடத்துவதற்கும் யாருமில்லை. (தமிழ்க்கட்சிகள் தொடக்கம் எதிர்க்கட்சிகள் வரையில்) அவர்களை மறதிகளோடு வழிநடத்துவதற்கும் யாரும் இல்லை. (புரிந்துணர்வையும் நல்லிணக்கத்தையும் பகை மறப்பையும் உருவாக்கி, நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் கொண்டு வரக்கூடிய சக்திகள்).

ஆனால் அவர்களை வைத்தே அவரவர் பயன்களைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

இந்த நிலையில் ஒன்றை மட்டும் மீண்டும் நினைவூட்டலாம்.

வரலாறு கண்டிப்பான ஒரு தாய்.

எத்தகைய தவறுகளையும் அது நீடிக்க விடுவதில்லை.

முன்செயல்கள் பின் விளைவைத் தந்தே தீரும்.

வரலாற்றுச் சக்கரம் சுழன்று கொண்டேயிருக்கிறது.

0




 

2009 ·. by TNB