கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

அபாய விளக்குகள் - வன்னியில் ஊழல் - லஞ்சம் - முறைகேடுகள்

Tuesday 28 February 2012



00
முன்னர் வன்னி மக்கள் இரத்தம் சிந்தும் அரசியற் சூழலில் தங்களின் வாழ்வை இழந்தனர். இப்போது அதே மக்கள் இரத்தத்தை உறிஞ்சும் அரச அதிகாரிகளின், ஒப்பந்தகாரரின் அதிகாரச் சூழலில் தங்களின் எதிர்காலத்தை இழந்து கொண்டிருக்கின்றனர். 
00










முன்னர் வன்னி மக்கள் இரத்தம் சிந்தும் அரசியற் சூழலில் தங்களின் வாழ்வை இழந்தனர். இப்போது அதே மக்கள் இரத்தத்தை உறிஞ்சும் அரச அதிகாரிகளின், ஒப்பந்தகாரரின் அதிகாரச் சூழலில் தங்களின் எதிர்காலத்தை  இழந்து கொண்டிருக்கின்றனர்.

அவ்வாறாயின் காயங்களோடும் கண்ணீரோடும்தான் வன்னி மக்களின் எதிர்காலமும் கழியப்போகிறதா?  என்று கேட்கும் நிலையிலேயே வன்னியின் நிலைவரங்கள் இருக்கின்றன. யுத்தம் ஓய்ந்த பின்னர் உருவாகிய புதிய சூழலை இலங்கையின் பிற பிரதேசத்தினர் அனுபவிக்கிற அளவுக்கு வன்னியிலுள்ள மக்கள் பெறவில்லை.

வன்னியில் பெரும்பாலான இடங்களில் இன்னும் இருள்தான் நிறைந்திருக்கு. அங்கே இன்னமும் புழுதிபெருகிய தெருக்கள்தான் நீண்டுகிடக்கின்றன. இடிந்த பாலங்களிற் பலவும் அந்த நிலையிலேயே உள்ளன. சிதைந்த வாய்க்கால்கள் முழுமையாகச் சீரமைக்கப்படவில்லை.

ஆனால், யுத்தத்திற்குப் பிறகு வன்னிக்கெனப் பெருந்தொகையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குளங்களைப் புனரமைப்பதற்கு, மின்சாரம் வழங்குவதற்கு, வீதிகளைத் திருத்துவதற்கு, பாடசாலைக் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு, ஆஸ்பத்திரிகளைக் கட்டுவதற்கு, ஊர்கள் தோறும் பொதுநோக்கு மண்டபங்களை அமைப்பதற்கு, விவசாயிகளை ஊக்குவித்து விவசாயச்செய்கையை மேம்படுத்துவதற்கு, கடற்றொழிலை விரிவாக்கம் செய்வதற்கு, சிறு கைத்தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதற்கு, வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு, நீர் விநியோகத்துக்கு, வீடுகளை அமைப்பதற்கு, கால்நடை வளர்ப்புக்கு, கலாச்சார மேம்பாட்டுக்கு, தொழிற்றுறைக் கல்விக்கு, சமூக அபிவிருத்திக்கு, மீள்குடியேற்றத்துக்கு, கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு, வாய்க்கால்களைச் சீர்ப்படுத்துவதற்கு, உள்ளுர் மூலவளப் பயன்பாட்டுக்கு எனப் பல கோடிக்கணக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியின் மூலமாக போரினாற் சிதைந்து போயிருக்கும் உட்கட்டமைப்புகளை மீளமைப்பதும் மிகப் பின்னடைந்திருக்கும் மக்களின் வாழ்நிலையை மேம்படுத்துவதுமே பிரதான நோக்கம்.

போரினாற் பாதிக்கப்பட்ட சமூகங்களை மீள் கட்டமைப்புச் செய்யும் வேலைத்திட்டத்தில் அரசும் பிற நாடுகளும் சர்வதேச மற்றும் உள்ளுர் அமைப்புகளும் ஈடுபடுவது வழக்கம்.

அந்த வகையில் இலங்கையிலே போர் நடைபெற்ற வடக்குக் கிழக்குப் பகுதிகளில் இத்தகைய மீள் கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு, அபிவிருத்தி ஆகியனவற்றின் திட்ட நோக்குகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதற்காக அரசாங்கம் நேரடியாகவும் பிற நாடுகள் மற்றும் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றிடமிருந்து கடனடிப்படையிலும் நிதியைப் பெற்று இந்த வேலைத்திட்டங்களைச் செயற்படுத்துகிறது. இதைவிட சர்வதேசத் தொண்டர் அமைப்புகளும் சில வெளிநாடுகளும் மனிதாபிமான உதவித்திட்டங்களின் கீழ் குறிப்பிட்டளவு நிதியை வழங்குகின்றன.

எனவே யுத்தத்துக்குப் பின்னரான காலப்பகுதியில் பெருமளவு நிதி வன்னிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வன்னியின் இழப்புக்கு, வன்னி மக்கள் இழந்தவற்றுக்கு இது ஈடாகாது. போரினாலும் இயற்கை அழிவுகளினாலும் ஏற்படும் இழப்புகளை எதனாலும் முழுமையாக ஈடுசெய்து விடமுடியாது. எனினும் ஓரளவுக்கு அவற்றைச் சீர்ப்படுத்துதவற்கு முயற்சிப்பது அவசியம். அது ஒரு பொது நிலையும்கூட.

என்பதால் வன்னிக்கான நிதி ஒதுக்கீடுகள் யுத்தத்துக்குப் பிந்திய இந்த இரண்டாண்டுகளில் மிக அதிகமாகவே உள்ளன.

எந்த வழியினால் இந்த நிதி மூலம் பெறப்பட்டாலும் அல்லது இந்த நிதிப் பங்களிப்புகள் வந்தாலும் அதை வேலைத்திட்டமாக நடைமுறைப்படுத்துவதும் பயனாளர்களைத் தேர்வு செய்வதும் உள்ளுர் அரச நிர்வாகமே. அதாவது அரச அதிகாரிகளும் உத்தியோகத்தர்களுமே.

இங்கேதான் பிரச்சினை.

இந்த நிதி மூலத்துக்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப் படுத்துவதிலும் உதவித்திட்டங்களை மேற்கொள்வதிலும் முறைகேடுகளும் ஊழல்களும் தாராளமாகியுள்ளன.

போருக்குப் பிறகு கிளிநொச்சி மாவட்டத்தில் புனரமைப்புச் செய்யப்பட்ட கல்மடுக்குளம், அக்கராயன்குளம் போன்றன உடனடியாகவே பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளன. அக்கராயன் குளத்தின் கட்டை மேலும் உயர்த்துவதற்கும் மேலதிக நீரை வெளியேற்றும் பகுதியைப் புனரமைப்பதற்கும், வாய்க்கால்களைச் சீரமைப்பதற்கும் என கடந்த ஆண்டு 300 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

ஆனால், இந்த வேலைகளைச் செய்த ஒரு சிலமாதங்களிலேயே  மேலதிக நீரை வெளியேற்றும் பகுதி முற்றாகச்சிதைந்து முன்னர் இருந்த நிலையையும் விடப் பெரும்பாதிப்புக்குள்ளாகியுள்ளது. போதாக்குறைக்கு முறிகண்டி – ஜெயபுரம் பிரதான வீதியின் ஒரு பகுதியும் முழுதாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

திட்டமிடலில் ஏற்பட்ட குறைபாடா அல்லது வேலையை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முறைகேடா இதற்குக் காரணம்? நிச்சயமாக முறைகேடுதான் என்று தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக ஆராயும் கூட்டமொன்றும் சம்மந்தப்பட்ட குளப்பகுதியில் நடைபெற்றது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார், வடமாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர், மேலதி அரசாங்க அதிபர், உதவி அரச அதிபர், நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள், வீதி அபிவிருத்தித் திணைக்களப் பொறியிலாளர், விவசாயத்திணைக்களப் பணிப்பாளர் போன்ற உயர் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் கலந்திருந்தனர்.

தற்போது கரியாலை நாகபடுவான் என்ற குளப்பகுதியிலும் இத்தகைய குறைபாடான – திட்டத்துக்கு மாறான வகையில் புனரமைப்புப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக பிரதேச விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அண்மையில் பூநகரியில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தின்போது விவசாயிகள் தங்களுடைய ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளர்.

சுமார் 6.5 கிலோ மீற்றர் நீளமுடைய குளத்தின் அணைக்கட்டினைப் புனரமைப்புச் செய்வதற்கென திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான நிதியும் பெறப்பட்டுள்ளது. ஆனால், வேலையை நடைமுறைப்படுத்தும் கட்டத்தில் குறித்த குளத்தின் அணைக்கட்டுப் பகுதியில் கண்ணிவெடி அபாயம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒதுக்கப்பட்ட நிதியை அதே குளத்தின் பிறிதொரு முக்கியத்துவமற்ற வேலைக்கு மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த விவசாயிகள் கூறுகின்றனர்.

மிதிவெடி அபாயம் இருக்குமானால், அதை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை உதவி அரசாங்க அதிபர், அரசாங்க அதிபர் ஊடாக மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறான முயற்சிகள் எடுக்கப்படாமல், ஒப்பந்தகாரரின் வசதிப்படியே திட்ட ங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்று குற்றம் சாட்டுகின்றன கமக்காரர் அமைப்புகள்.

இத்தகைய ஒரு நடவடிக்கை கல்மடுக்குளத்தின் புனரமைப்பின் போதும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விவசாயத்திலும் நீர்ப்பாசனத்திலும் செழிப்பான பாரம்பரியத்தையுடைய இலங்கையின் இன்றைய நீர்ப்பாசன நிலைவரம் இப்படியா இருக்கிறது என்று அக்கராயன் குளக்கட்டில் ஒரு விவசாயி வருத்தத்தோடு உயர் அதிகாரிகளிடம் எழுப்பிய கேள்வியே இந்த இடத்தில் நினைக்கு வருகிறது.

இந்த நிலையில் இரணமடுக்குளத்தின் புனரமைப்புப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 3300 பில்லியன் ரூபாய்க்கு என்ன நடக்கப்போகிறது என்று கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

அடுத்த முறைகேடு மின்சார வழங்கலில் நடைபெறுகிறது. வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ், இலவச மின்சாரத்தை வழங்கி வருகிறது அரசாங்கம். மின்சார இணைப்பும் குறிப்பிட்ட காலத்துக்கான சேவையும் இலவசமாகவே வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த இலவச இணைப்பை வழங்குவதற்கு இரகசியமாகப் பணத்தை அறவிடுகின்றனர் மின்சார சபையின் ஊழியர்கள் சிலர். இதற்கான ஒரு பொறிமுறையையே அவர்கள் மிக நுட்பமாக உருவாக்கியுள்ளனர்.

மின்சாரத்தைப் பெறுவதற்காக பயனாளிகள் விண்ணப்பிக்கும் படிவங்கள் தவறிவிட்டன. அவற்றைக் காணவில்லை என்று பயனாளிகளுக்கு முததற்கட்டமாகக் கூறப்படும். இதனால், நடையோ நடையென்றும் அலையோ அலை என்று அலைந்து களைத்து விடுகின்றனர் பயனாளிகள். ஒரு கட்டத்தில் மின்சாரத்தை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்திற்குப் பயனாளிகள் வரும்போது பேரம் பேசப்படுகிறது. அடுத்த கட்டமாக இலவச மின்சாரம் இரகசியக் கட்டணம் பெறப்பட்டு வழங்கப்படுகிறது.

இந்த நடைமுறை ஒன்றும் மிக இரகசியமானதல்ல. மிகப் பகிரங்கமான அளவுக்கு வந்துள்ளது.

இதைப்போல நீர் இறைக்கும் இயந்திரங்களை வழங்குவதில், விவசாய உபகரணங்களை பகிர்வதில், வாழ்வாதார உதவிளுக்கான பெயர்களைத் தெரிவு செய்வதில் எல்லாம் முறைகேடுகள் தாராளமாகவே நடக்கின்றன. விவசாயம் செய்யாதவர்களே நீர்ப்பம்புகள், மருந்து தெளிகருவிகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர். பயனாளிகளைத் தேர்வு செய்வதில் உள்ள லஞ்சம் பெறுகையே இதற்குக் காரணம்.

இதைப்போல கூட்டுறவுத்துறையில், வீட்டுத்திட்டத் தேர்வுகளில் என இந்த முறைகேடுகள் மேலும் விரிவடைகின்றன.

தனியார் பேருந்துகளுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குதல், தென்பகுதியிலிருந்து வரும் முதலீட்டாளர்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல் என்ற வகையிலும் சில உயர் அதிகாரிகள் தாராளமாகவே கைகளை நீட்டிப் பெற்றுக்கொள்கிறார். சில அதிகாரிகள் சட்டத்துக்கு மாறான வகையில் தங்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி, தங்களுடைய பேருந்துகளைப் போக்குவரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர்.

இதைப்போல வீதி அபிவிருத்திக்கும் வீதிகளின் புனரமைப்புக்கும் என ஒதுக்கப்பட்ட நிதியில் எந்த உள்ளுர் வீதிகளும் சீராகப் புனரமைக்கப்பட்டதாக இல்லை. உள்ளுராட்சிச் சபைகளுக்கான தேர்தலை முன்னிட்டு அரசாங்கத்தினால் அவசர கதியில் முன்னெடுக்கப்பட்ட வீதிப் புனரமைப்புகள் தேர்தல் முடிந்த கையோடு மீண்டும் புழுதி மயமாகிவிட்டன.

அவசர அவசர அவசர அவசர அவசரகதியிலே பூசப்பட்ட தார் பெய்த மழையோடும் அடித்த காற்றோடும் காணாமலே போய்விட்டது. அதோடு பெருமளவு பணமும் காணாமற்போய்விட்டது.

இந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம் ஒப்பந்தகாரரும் அவர்களுக்கு அனுசரணையாக இருக்கும் அதிகாரிகளுமே கொழுக்கிறார்கள்.

இதை விட வீட்டுத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் தொண்டு நிறுவனப்பணியாளர்கள் கிராமங்களில் செய்கின்ற அட்டகாசங்கள் சாதாரணமானதல்ல.

வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் - கண்காணிக்கும் பணிகளில் ஈடுபடும் இவர்களிற் சிலர், தங்களிடமே கட்டிட மூலப்பொருட்களை வாங்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கின்றனர். அவ்வாறு இவர்களிடம் வாங்கவில்லை என்றால், கட்டம் கட்டமாக வழங்கப்படும் பயனாளிகளுக்கான நிதியை வழங்குவதில் இழுத்தடிப்புகளைச் செய்வதும், கட்டப்படும் வீடுகளின் கட்டுமாணப் பணிகளில் குறைபாடுகளைக் கண்டு பிடித்து நெருக்கடிக்குள்ளாக்கும் காரியங்களும் நடக்கின்றன. இது பலவந்தப்படுத்தித் தங்களுடைய வியாபாரத்தைச் செய்யும் அதிகாரமின்றி வேறென்ன?

கிராம மக்களின் அறியாமையையும் இயலாமையையும் பயன்படுத்தி இந்த மாதிரியான காரியங்களைச் செய்கின்றனர் இவர்கள்.

இப்படி ஊரையே கொள்ளையிடும் காரியங்கள் தாராளமாகவே நடக்கின்றன. சிறிய மட்டத்திலான உத்தியோகத்தர்களிற் தொடங்கி, உயர் அதிகாரிகள் வரையில் ஒரு கூட்டம் இந்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்திக் கொள்கிறது. தொண்டு நிறுவனங்களின் பணியாளர்களும் இதிற் சேர்த்தி.

போருக்குப் பிறகு, உருவாகிய சூழலில் ஒருவிதமான கட்டற்ற நிலை – தாராளவாத நிலை - வடக்கிலே அறிமுகமாகியுள்ளது. முன்னர் விடுதலைப் புலிகளுக்குப் பதிலளிக்க வேண்டிய நிலை இருந்தது. அல்லது புலிகள் எல்லாவற்றையும் கண்காணிப்பார்கள். குறைந்த பட்சம் அரசுக்கும் பதில் சொல்ல வேண்டிய கடப்பாடிருந்தது. ஆனால், அந்தக் காலத்திற்கூட புலிகளுக்கும் அரசுக்கும் சமநேரத்திலேயே தண்ணி காட்டிய அதிகாரிகள் இருந்திருக்கிறார்கள்.

இப்போது புலிகளே களத்தில் இல்லை என்றால் நிலைமையைச் சொல்ல வேண்டுமா? அதுவும் ஊழல்கள் மலிந்துள்ள இன்றைய இலங்கைச் சூழலில் சிறிய இடைவெளி போதும் பெரிய மலைகளையே தூக்கிக் கொண்டு போய்விடுவார்கள்.

வன்னி மக்கள் மயிரிழையில் உயிர் தப்பி – தப்பிய அந்த உயிரை மட்டுமே கொண்டு முகாம்களுக்குப் போனதிலிருந்து தொடங்கியது இந்த இரத்தத்தை உறிஞ்சும் காரியங்கள். அல்லது மலைகளைக் காவிக்கொண்டு போகும் விசயங்கள்.

அகதிகளுக்கென்று வரும் உடைகளில், அவர்களுக்கான தண்ணீரில், அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய சாப்பாட்டில், அகதிகளுக்கென்று கொடுக்கப்படும் உதவிப் பொருட்களில், அவர்களுக்கான உணவுப் பொருட்களில் என்று இந்தக் ‘கை வைப்புகள்’ ஆரம்பமாகின.

சனங்களையும் அரசாங்கத்தையும் சமநேரத்தில் உறிஞ்சும் ‘சுழியன்கள்’ இந்தச் சந்தர்ப்பத்தில் மிக உச்சமாகத் தங்களின் கைத்திறனைக் காட்டினார்கள்.

மெனிக் பாமில் உழைத்தவர்கள் - மெனிக் பாமின் பேரில் (வன்னி அகதிகளின் மிகப் பெரிய அகதி முகாம் இங்கேதான் இருந்தது) உழைத்தவர்கள் என்றொரு பெரும் பட்டியலே இன்று உண்டு. அந்தளவுக்குத் தாராளமாக அங்கே, அப்போது உழைத்தார்கள்.

போரிலே உழைத்தவர்கள் பலருண்டு. ஆயுதக் கொள்வனவு தொடக்கம் அகதிகளுக்கான உதவிப்பொருட்களின் வழங்கல்வரை ஏராளம் வழிகளில் தங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டவர்கள் பலர்.

போருக்குப் பிறகு இன்னொரு சூழல் உருவாகிய போது அதில் இன்னொரு சாரார் உழைக்கத்தொடங்கியிருக்கின்றனர். ஆனால், இது எல்லாற்றையும் இழந்திருக்கும் மக்களின் கண்ணீரிலிருந்து - அவர்களடைந்திருக்கும் காயங்களிலிருந்து உறிஞ்சிக்கொள்ளும் காரியங்கள்.

புலிகளின் வீழ்ச்சியோடு ஆரம்பமாகிய இந்த இரத்தத்தை உறிஞ்சும் போக்கானது, அடுத்து வந்த நாட்களில் மிக வேகமாக வளர்சியடைந்து இன்று அது எல்லா இடங்களிலும் மிகப் பயங்கரமான ஒரு வியாதியாகப் பரவியுள்ளது.

இதனால் வன்னியே இப்போது ஊழலின், லஞ்சம் வாங்கிகளின் பெரும் பரப்பினால் நிறைந்துள்ளது என்ற நிலைக்காளாகியுள்ளது. மீள்குடியேற்றத்தின்போது தொடங்கியது இந்தக் கேள்விக்கிடமற்ற போக்கு.

போர் முடிந்த பின்னர் வெறுமையாக இருந்த வன்னியில் மக்களுடைய சொத்துகளும் புலிகளின் உடமைகளும் அரச உரித்துகளும் தாராளமாகவே எங்கும் இருந்தன. இதில் படையினர் தமக்குத் தேவையானவற்றை முதலில் எடுத்தனர்.

பிறகு, மீள் குடியேற்ற நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக வன்னிக்கு வருகை தந்த அதிகாரிகளிற் சிலரும் அவர்களோடு இணைந்து வேலை செய்த உத்தியோகத்தர்களிற் பலரும் எடுக்கக் கூடியவற்றை எடுத்துக் கொண்டனர். குறிப்பாக புலிகளின் கட்டிடங்களைக்கூடப் பல அதிகாரிகள் உடைத்து எடுத்துக் கொண்ட சம்பவங்கள் நடந்தன. சிதைந்திருக்கும் அரச கட்டிடங்களைப் புனரமைப்பதற்கு என்று படையினரிடம் கூறி இந்தக் காரியங்களைப் பார்த்துக்கொண்டனர் இவர்கள்.

அதற்குப் பிறகு மக்களுக்குக் கொடுக்கப்பட்ட சீமெந்தில், தகரத்தில், பெட்சீற்றில், பாயில் என்று தொடங்கி, இப்போது மில்லியன் கணக்கிலான நிதியில் கையை வைத்துப் பையை நிரப்பிக்கொள்ளும் நிலைக்கு இது வளர்ந்துள்ளது.

இதைத் தடுப்பதற்கு உள்ள ஒரேயொரு வழி மக்கள் விழிப்படைவது மட்டுமே. அந்த விழிப்பை ஏற்படுத்துவதில் பெரும்பங்கு ஊடகங்களுக்கும் சமூக சிந்தனையுடையோருக்குமே உண்டு.

தேசியவாத – எதிர்த்தேசிய வாத அரசியலின் குருட்டுத்தனங்கள் எல்லாச் சீரழிவுக்கும் கதவுகளைத் திறந்துள்ளன என்பதே கவலைக்குரியது.

00

இலங்கை மீதான மேற்கின் சமகால அழுத்தங்கள்?

Saturday 25 February 2012





00


‘சிங்கங்கள் கர்ச்சிக்கலாம். ஆனால், குகையின் வாசல் மூடப்படாதிருக்க வேண்டும்’ 

நிலைமைகள் ஒரு திலூட்டும் திரைப்படத்தைப் பார்ப்பதைப்போல புதிர்த்தன்மைகள் நிறைந்தனவாகவே உள்ளன. 

00




இலங்கையின் கீர்த்திக்கும் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கும் ஒரு நெருக்கடி நிலை – ஆபத்தான கண்டம் - உருவாகிக் கொண்டிருப்பதான தோற்றம் ஒன்றுண்டு.

மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய ஒரு நிலைமையை நோக்கி, இலங்கை அரசாங்கத்தைக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா தலைமையிலான அணி எடுத்து வரும் முயற்சிகளே மேற்கூறிய நெருக்கடிக்குக் காரணம்.

அமெரிக்க அணி எதற்காக இந்தத் தீவிர அழுத்தத்தை இலங்கைக்கு – மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்குக் கொடுக்கிறது என்று எல்லோருக்குமே தெரியும்.

இலங்கையைத் தனது காலுக்குக் கீழே கொண்டு வருவதே இதன் நோக்கம்.

ராஜபக்ஷ அரசாங்கம் அதிகம் மேற்கிலிருந்து விலகி, சீனா, ஈரான், பாகிஸ்தான், கியூபா, சிரியா, லிபியா, ரஷ்யா மற்றும் இந்தியா சார்பான அணியைத் தன்னுடைய உறவிலும் நெருக்கத்திலும் கொண்டது.

மகிந்த ராஜபக்ஷ பதவியேற்றதற்குப் பிறகு இந்த நாடுகளுடன் அவர் கொண்டுள்ள, காட்டிக் கொண்ட உறவைத் தொடர்ச்சியாக அவதானித்தவர்கள் இதை இலகுவாகவே விளங்கிக் கொள்ள முடியும்.

குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளே அதிகமான முதலீடுகளையும் உதவித்திட்டங்களையும் அண்மைய காலத்தில் இலங்கையில் மேற்கொண்டுள்ளன.

வர்த்தகம்,  தொழிற்றுறை, பாதுகாப்பு போன்ற விசயங்களில் அதிகமான உடன்படிக்கைகளைக் கைச்சாத்திட்டிருக்கும் தரப்புகளும் சமகால இலங்கையில் இந்த அணியே.

யுத்தத்துக்குப் பிறகு இந்தப் போக்கு மேலும் தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்கா தலைமையிலான மேற்கின் அணி ஏறக்குறைய பின்தள்ளப்பட்டிருப்பது போன்றதொரு நிலையே காணப்படுகிறது. இதை இந்த அணி நன்றாகவே உணர்ந்துமுள்ளது.

ஆனால், இதை இந்த அணியினால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவேதான் அது இலங்கையில் தனக்கு வாய்ப்பான ஒரு தரப்பை ஆட்சியில் அமர்த்த முயன்றது.

அதற்கான தெரிவே முன்னாள் ராணுவத்தளபதியான சரத் பொன்சேகா.

மகிந்த ராஜபக்ஷ ஒரு போதுமே மேற்குக்குச் சார்பாக வரமாட்டார் என்று தெரிந்து கொண்ட மேற்கு சரத்தைத் தெரிவு செய்தது. சரத்தை விட வேறு கவர்ச்சிகரமான தெரிவுகள் இல்லாத நிலையிலேயே மேற்கு இந்த முடிவுக்கு வந்தது. ரணில் மேற்கின் விருப்பத்தை நிறைவேற்றக் கூடிய கவர்ச்சிகரமான தலைவர் என்ற தகுதியை இழந்து விட்டார். யு.என்.பியில் வேறு தெரிவுகளும் இல்லை. எனவேதான் சரத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இலங்கையின் அரசியலானது உணர்ச்சி மயப்பட்டது. அது உணர்ச்சியின் மையத்திலேயே கட்டப்பட்டது. யுத்தத்தின் வெற்றியை அரசியல் முதலீடாக்கும் ஒரு அணுகுமுறையை மகிந்த ராஜபக்ஷ கையாண்டபோது அதற்குப் பொருத்தமான – மாற்றான - அந்த உணர்ச்சிக்குச் சமனிலை வலுவைப் பெறக்கூடிய தெரிவாக சரத் பொன்சேகாவே இருந்தார்.

இதைப் புரிந்து கொண்ட மேற்குலகம் யுத்த வெற்றியில் பங்காளியும் யுத்தக் கதாநாயகர்களில் ஒருவருமாகிய சரத் பொன்சேகாவை தெரிவு செய்தது.

ஆனால், மேற்கு எதிர்பார்த்தவாறு சரத்தை வெற்றி பெறவைக்க முடியவில்லை. சரத்தும் தன்னுடைய வெற்றிக்கான தகுதியை நிரூபிக்கவில்லை.

எனவே வெற்றியடைந்த மகிந்த ராஜபக்ஷ மேற்கை மேலும் விலக்கினார். அவருக்கு எதிராகவே உள்வீட்டிலிருந்து ஒருவரை உருவியெடுத்த அமெரிக்காவின் தந்திரத்தை அவரால் எப்படி மன்னிக்க முடியும்? எப்படி மறக்க முடியும்?

ஆனால், யுத்தத்தை நடத்துவதற்கான மைய உதவிகளைச் செய்த அமெரிக்கா, இப்போது யுத்த வெற்றியைப் பெற்ற பின்னர் இலங்கையானது தன்னைக் கைகழுவி விடுவதை அனுமதிக்கத் தயாராக இல்லை. அது தனது நலன்களை விட்டுக்கொடுக்கவும் முடியாது.

எனவே அது தொடர்ந்து மகிந்த ராஜபக்ஷவை நெருக்கடிக்குள்ளாக்கத் தொடங்கியிருக்கிறது. இதற்காக அது போர்க்குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் அடுத்த ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. மேலும் அமெரிக்க உதவிக்குறைப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகள் இடைநிறுத்தம், ஜி.எஸ்.பி வரிச்சலுகை நீக்கம் என்ற வாறான நெருக்கடிகளையும் அது ஏற்படுத்தியிருக்கிறது.

இதன்படி இலங்கைக்கு எதிரான மனப்பாங்கொன்றை அது சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கூடாகவும் சக்தி மிக்க ஊடகங்களில் வழியாகவும் உருவாக்கி வருகிறது.

இத்தகைய அமெரிக்;க அணுகுமுறையானது அமெரிக்காவுக்குப் பணியாத நாடுகளைப் பணிய வைப்பதற்கான வாய்பாடாகவும் உபாயமாகவும் உள்ளதை நாம் கவனிக்கலாம். இதற்கு நேற்றுவரை நிறைய உதாரணங்கள் உண்டு.

அதேவேளை இந்த அணுகுமுறைக்கு வாய்ப்பை அளிக்கும் விதமாகவே அமெரிக்காவினால் நெருக்கடிக்குள்ளாகும் நாடுகளின் விவகாரங்கள் அமைந்து விடுவதையும் நாம் கவனிக்க வேண்டும். இதில் இலங்கையும் அடக்கம்.

உள் வீட்டைச் சுத்தமாக வைத்திருந்தால் எத்தகைய வெளிச்சக்திகளுக்கும் சட்டங்களுக்கும் பணிய வேண்டியதில்லை. எந்த நடவடிக்கைக்கும் இடமளிக்கத்தேவையில்லை என்பது சாதாரண நடைமுறை வாழ்விலேயே தெரிகின்ற உண்மை.

ஆனால், இந்த உண்மையைப் பெரும்பாலான அரசியற் தலைவர்களும் அவர்களுக்கான ஆலோசகர்களும் வழிகாட்டிகளும் மறந்து விடுகிறார்கள். அல்லது நினைவிற்கொள்வதற்கு விரும்பாதிருக்கிறார்கள்.

இத்தகைய ஒரு நிலைதான் இன்றைய இலங்கையின் நிலவரமாகவும் இருக்கிறது.

எனவேதான் அது இன்று அமெரிக்கா இலங்கையைச் சுற்றித் தனது கயிற்றை இருக்குகிறது.

‘சிங்கங்கள் இதற்கெதிராகக் கர்ச்சிக்கலாம். ஆனால், குகையின் வாசல் மூடப்படாதிருக்க வேண்டும்’ என்று அவை சிந்திக்கவும் வேணும்.

எனவே முடிந்த வரையில் வாசல்களை மூடுவதைப் போன்ற ஒரு இறுக்க நிலையை ஏற்படுத்த இப்பொழுது இந்த மேற்கணி விரும்புகிறது.

இதேவேளை இலங்கை தொடர்பான விசயத்தில் அமெரிக்கா இந்தக் காலப்பகுதியில் நிறையப் பின்னடைவுகளைச் சந்தித்திருக்கிறது. தன்னுடைய விருப்பங்களை இலகுவில் நிறைவேற்றிக் கொள்ள முடியாத ஒரு நிலையிலான பின்னடைவு.

இதைச் சரிக்கட்ட அது சரத் பொன்சேகாவைக் களத்தில் இறக்கியதைப்போல இப்போது போர்க்குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் கருவியாக்கியிருக்கிறது என்று கண்டோம்.

ஆனால், அமெரிக்காவின் இந்த அணுகுமுறையானது உண்மையில் இலங்கைக்கான நெருக்கடி என்பதையும் விட இந்தியாவிற்கான நெருக்கடியாக அமைகிறது என்பதே இங்கே கவனிப்பிற்குரியது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கை மேற்கின் பக்கம் சாய்வதை அது பெரிதாக விரும்பவில்லை. மேற்கின் பக்கம் இலங்கை சாயுமாக இருந்தால் இந்தியாவிற்கான பிடியோ செல்வாக்கோ இலங்கையில் இப்போதைக்கு இருக்காது என்பது இந்தியாவுக்குத் தெரியும்.

இலங்கையில் மகிந்த ராஜபக்ஷவுக்குப் பதிலாக ரணிலோ சரத்தோ அல்லது மேற்குக்கு விருப்பமான பிரதிநிதியொருவரோ ஆட்சிக்கு வந்தால், சிங்களத்தரப்பும் மேற்குக்குச் சார்பாகிவிடும். தமிழர்களும் மேற்கோடு சார்ந்திருப்பார்கள். ஆகவே இந்தியா தனிமைப்பட்டு விடும். எனவே விருப்பங்களுக்கும் உடன்பாடின்மைகளுக்கும் அப்பால் மகிந்த ராஜபக்ஷ அரசைப் பாதுகாப்பமே இந்தியாவுக்கு இப்போதைக்குப் பரவாயில்லை என்ற நிலை.

இதற்குக் காரணம், தென்னாசியப்பிராந்தியத்தில் இலங்கை என்ற கேந்திரத்தின் முக்கியத்துவத்தை இந்தியா இழந்து விடக்கூடிய அபாயமே அதனுடைய அச்சம்.

சீனாவுடன் ராஜபக்ஷ அரசு நெருக்கமாக இருந்தாலும் அது தனக்கு அதிக பாதிப்பைத் தராது என்று இந்தியா கருதுகிறது. இதற்குள் தன்னுடைய நலன்கள் பாதிக்கப்படாத ஒரு சமனிலையைத் தக்க வைத்துக் கொள்ளமுடியும் என்பது இந்தியாவின் நம்பிக்கை. அப்படியே அது தற்போதும் செயற்பட்டு வருகிறது.

அதாவது, இப்போதுள்ள நிலையின்படி சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இலங்கை கடைப்பிடித்து வரும் ஒரு நிலையைப் பேணிக் கொண்டால் பரவாயில்லை என்ற நிலை இந்தியாவுக்குண்டு. இலங்கையில் மேற்குச்  செல்வாக்குச் செலுத்துவதையும் விட சீனாவின் செல்வாக்குப் பரவாயில்லை என்றே இந்தியா கருதுகிறது.

இதற்குக் காரணம், மேற்குக்கு ஆதரவான சக்திகள் இலங்கையின் உள்ளே மிகச் சாதாரண மட்டங்களில் எல்லாம் உள்ளன. அதேவேளை சீனாவுக்குச் சார்பாக அவ்வாறான சக்திகள் இல்லை என்பது இந்தியாவின் அவதானிப்பு.

எனவே இந்த ஒப்பு நிலையில் மேற்கின் கை மேலோங்குவதை இந்தியா அதிகம் விரும்பவில்லை. எனவேதான் இலங்கையின் மீதான நெருக்கடிகளை இந்தியா அதிகம் விரும்பாமற் தடுக்கிறது. அப்படி ஒரு நெருக்கடி வருமானால் அது தனக்கு வரும் நெருக்கடி என்றே இந்தியா கருதுகிறது.

இந்த யதார்த்தத்திற்குள்தான் இன்றைய இலங்கை மீதான போர்க்குற்றச் சாட்டுகளும் பிற எதிர் நடவடிக்கைகளும் அமையப்போகின்றன.

ஆகவே இலங்கை மீதான போர்க்குற்றச் சாட்டுகளையும் நெருக்கடிகளையும் இந்தியா தானும் எதிர்க்க வேண்டிய, முறியடிக்க வேண்டிய ஒரு நிலையில் உள்ளது. இதே நிலை சீனாவுக்கும் உண்டு. மேலும் இலங்கையின் நட்பு வளையத்தில் இன்றிருக்கும் பிற நாடுகளுக்கும் உண்டு. ஆனால், ஏனைய நாடுகளின் நிலை இந்தியாவையும் விட அழுத்தம் குறைந்தவை.

ஆகவே, இலங்கையின் மீதான நெருக்கடி என்பது இன்று இந்தியாவின் மீதான நெருக்கடியாக மாறியிருக்கிறது. இந்த நிலையிற்தான் போர்க்குற்றம் தொடர்பான நடவடிக்கைகள் அமையப்போகின்றன.

ஆனால், இந்தியாவை நேரடியாகப் பகைத்துக் கொள்ளாமல், இலங்கையை நெருக்கடிக்குள்ளாக்குவதன் மூலம் தென்னாசியப் பிராந்தியத்தில் பலவீனமடைந்திருக்கும் தன்னுடைய செல்வாக்கை மீண்டும் பலப்படுத்துவதற்கு மேற்கு – அமெரிக்க அணி – முயற்சிக்கிறது.

ஆகவேதான் இலங்கையின் மீதான நெருக்கடிகள் மேலும் மேலும் தீவிரமடைந்து வரும் தோற்றம் பெரிதாக்கப்படுகிறது. இந்த மாதிரி நிலைமைகளில் சர்வதேச அபிப்பிராயம் என்ற ஒரு தோற்றமே பெரிதும் எதையம் தீர்மானிப்பது. ஆகவே, இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் என்ற அபிப்பிராயம் பொதுமைப்படுத்தப்படும்போது அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது சற்றுச் சிந்திக்கக் கூடியதே.

ஆனால், சிங்கள இராச தந்திரமானது, இந்த இடத்தில் மிக நுட்பமாகச் செயற்படக்கூடியது. அது அதிக சாகசங்களைக் காண்பித்து விட்டு, தீடீரெனச் சாதுவாகி விடும் ஒரு இயல்பைத் தன்னகத்திலே கொண்டது.

ஏறக்குறைய இப்போது இலங்கைக்கு மேற்கிலிருந்து ஏற்பட்டுள்ள நெருக்கடியைப்போல 1980 களில் இந்தியாவினால் ஏற்பட்டிருந்தது. 1987 இல் வெளிப்படையாகவே இந்தியா தன்னுடைய கயிற்றால் இலங்கையை இறுக்கியது.

அப்பொழுது தமிழர்கள் உட்படப் பலரும் சிங்கள அரசியலைக் குறித்து சிரித்துக்கொண்டேயிருந்தனர். அன்று அதிகாரத்திலிருந்த ஜே.ஆரின் மூக்குடைபடுகிறது என்றே பலரும் கருதினர்.

ஆனால், அந்த நெருக்கடியிலிருந்து குறுகிய காலத்திலேயே மீண்ட இலங்கை – சிங்கள அரசியல் - தனக்குச் சேதாரங்களில்லாமல் பிற தரப்புக்கான சேதாரங்களையே ஏற்படுத்தியது.

இதில் இந்தியா ராஜீவ் காந்தியையும் பல நூறு படையினரையும் பெருமளவு நிதியையும் இழந்தது. தமிழர்களின் இழப்புக்குக் கணக்கில்லை.

பின்னர், இலங்கைக்குச் சேவகம் செய்யும் நிலையில் இன்றுவரை இந்தியாவைக் கொண்டு வந்து நிறுத்தியது சிங்கள இரசதந்திரம்.

ஆகவே, இப்போதைய நெருக்கடி நிலையிலும் அது எத்தகைய தீர்மானங்களை எடுக்கும். எப்படியான காய்களை நகர்த்தும் என்று யாருக்குமே தெரியாது. அது எப்போதும் நேரடியான பகை முரணுக்குப் போவதில்லை. தன்னை மீறக்கூடிய சக்திகளுடன் அது ஒரு போதுமே நேரடியாக மோதிக் கொள்வதில்லை. ஆகையால் அடுத்து வரும் நாட்கள் எப்படியான அணுகுமுறைகள், காய் நகர்த்தல்களின் மத்தியில் நகரப்போகின்றன என்பதை அறிவதே உலகிலுள்ள அரசியல் அவதானிப்பாளர்களுக்குச் சுவாரஷ்யமான விசயம்.

ஆனால், நிலைமைகள் ஒரு திலூட்டும் திரைப்படத்தைப் பார்ப்பதைப்போல புதிர்த்தன்மைகள் நிறைந்தனவாகவே உள்ளன.

உண்மையில் இந்த நிலையானது கம்பியின் மேல் நடப்பதைப்போன்றதே. தவறினால், கீழேயிருக்கும் கத்தியின்மேல் வீழ்வதற்குச் சமம்.

இதேவேளை இன்னொரு முக்கியமான விசயத்தையும் நாம் கணக்கிற் கொள்ள வேண்டியுள்ளது.

போர்க்குற்றங்களை வலுவாக்கக் கோரும்போது அதையிட்டுச் சிங்களவர்கள் தமிழர்களைப் பகையாளிகளாவே பார்க்கும் ஒரு யதார்த்தம் உண்டு. அதேவேளை போர்க்குற்றங்களைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாத நிலை தமிழர்களுக்குண்டு.

எனவே இப்பொழுது நெருக்கடிக்குள் சிக்கியிருப்பது தமிழ் மக்கள், இலங்கை அரசு, இந்தியா ஆகிய மூன்று தரப்புகளே!

ஆனால், இருப்பக்க நெருக்கடிக்குள் தமிழ்த்தரப்பு இன்று சிக்கியுள்ளது. ஒன்று இந்தியாவை அது எப்படி முகங்கொள்வது என்பது. இரண்டாவது, வெளிச்சக்திகளுடன் கைகோர்த்து விட்டு எப்படிச் சிங்களவர்களுடன் சமாதானத்துக்குப்போவதென்பது.

அNவேளை இது சிங்களத்தரப்புக்கு உடனடி நெருக்கடிக் காலமாகவும் நீண்ட கால அடிப்படையில் அவர்கள் பிராந்திய நாடுகளையும் சர்வதேச நாடுகளையும் மோதவிட்டுவிட்டுத் தங்களின் நலன்களைப்பாதுகாத்துக் கொள்வதாகவும் அமையப்போகிறது.

எப்படிப் பார்த்தாலும் தமிழர்களுக்கே நீண்ட கால அடிப்படையில் இது நெருக்கடியாக அமையப்போகிறது.

00

மே 18 படிப்பினைகளும் யதார்த்தமும்

Thursday 23 February 2012



















மே – 18 என்பது ஒரு யதார்த்தம். ஒரு படிப்பினை.

என்னதான் கசப்பானதாக இருந்தாலும் இந்த நாளின் முடிவும் விதியும் ஒரு யதார்த்தமே. ஒரு உண்மையே!

2006 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தொலைக் காட்சியான தமிழீழத் தேசியத் தொலைக் காட்சியின் ‘நிலவரம்’ என்ற அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது ஆய்வாளர் நிலாந்தன் ஒரு விடயத்தைத் தெளிவுபடக்கூறியிருந்தார்.

அவர் கூறியது இதுதான்.

‘தென்னாசியப் பிராந்தியத்தில் தமிழீழம் அமையவேண்டுமானால் முற்றிலும் வேறானதோர் தீர்க்கதரிசனமிக்க அரசியல் அணுகுமுறையும் கடினமான உழைப்பும் தேவை. ஏனெனில் தென்னாசிய விடுதலைப் போராட்டங்களுக்கான பிராந்திய – சர்வதேச யதார்த்தமானது இலகுவானதாக அமையவில்லை. இந்தப் பிராந்தியத்தின் போராட்டங்களெல்லாம் குரூரமான முறையி்ல் ஒடுக்கப்பட்டதே யதார்தமாக இருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும் ’

நிலாந்தனுடைய இந்தக் கருத்தை அப்போது புலிகளின் மையப்பகுதியினர் ஏற்றுக் கொள்ளவும் இல்லை. விரும்பவும் இல்லை. ஆனால், தன்னுடைய இந்தக் கருத்துக்கான ஆதாரங்களை நிலாந்தன் அந்த நிகழ்ச்சியில் தெளிவாக்கியிருந்தார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நிலாந்தன் நிலவரம் நிகழ்ச்சியில் பங்கேற்பது தவிர்க்கப்பட்டது. பின்னர் ஈழநாதம் பத்திரிகையில் அவர் எழுதி வந்த அரசியற்பத்தியும் இடைநிறுத்தப்பட்டது.

ஏறக்குறைய இதே கருத்தை ஈரோஸ் இயக்கத்தின் தலைவராகவும் பின்னாளில் விடுதலைப் புலிகளின் முக்கியத்தராகவும் இருந்த திரு வே. பாலகுமாரனும் கொண்டிருந்தார்.

இவர்கள் சொன்னமாதிரியும் எதிர்பார்த்த மாதிரியுமே நிகழ்ச்சிகள் நடந்துமுடிந்தன.

அதாவது மே 18 நிகழ்ச்சிகள் என்பது தென்னாசியப் பிராந்திய – சர்வதேசிய நிகழ்ச்சிப் போக்கின் யதார்த்தமும் உண்மையும் என்பதையே நிரூபித்தன.

00
தென்னாசியப் பிராந்தியத்தில் ஆயுதந்தாங்கிய விடுதலைப் போராட்டங்களின் முடிவுகள் அமைந்த யதார்த்தத்திலேயே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் விதியும் விடுதலைப் புலிகளின் முடிவும் அமைந்திருக்கிறது.

தென்னாசியாவில் நடைபெற்ற போராட்டங்கள் அத்தனையையும் அந்தந்த நாடுகள் மிகக் குரூரமாக ஒடுக்கியிருக்கின்றன. இதற்காக அவை, பிராந்திய நாடுகளின் உதவிகளையும் தேவையேற்படும் பட்சத்தில் சார்புக்கமைவான சர்வதேச நாடுகளின் உதவிகளையும் பெற்றுள்ளன. இலங்கையில் நடந்ததும் இதுவே.

இவ்வாறு ஆதிக்க சக்திகள் போராட்டங்களை ஒடுக்கும்போது அதில் பெருமளவு பாதிக்கப்படுகிறவர்கள் சாதாரண மக்களே.

இலங்கையில் ஏற்கனவே நசுக்கப்பட்ட ஆயுதப் போராட்டங்களினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஒடுக்குதலின்போது தமிழ் சிங்கள மக்கள் என்ற பேதங்களை அரசு இயந்திரம் வேறு படுத்திப் பார்க்கவில்லை. அரசைப் பொறுத்தவரையில் தனக்கெதிராக இயங்குவோர் என்பதையே அது குறியாகக் கொள்கிறது.

ஜே.வி.பியின் எழுச்சிகள் இரண்டுதடவைகள் ஒடுக்கப்பட்டுள்ளன. இதற்குச் சிங்கள இளைஞர்களையே (சிங்கள இராணுவத்தையே) சிங்கள அரசு பயன்படுத்தியிருக்கிறது என்பதை நாம் கவனத்திற் கொள்ளவேணும். இந்த இரண்டு கிளர்ச்சிகளிலும் ஏறக்குறைய ஒரு லட்சம் வரையானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

தமிழர்களின் ஆயுதப் போராட்டமும் பல வடிவங்களில் தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்டு வரப்பட்டது. எனினும் இறுதியாக 2009 மே 18 டுடன் அதற்கு இறுதி ஆணி அடிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையானது பிராந்திய - சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் நடத்தப்பட்டுள்ளது என்பதுவும் நமது கவனத்திற்குரியது.

இதைப்போல இந்தியாவில் நடந்த பல போராட்டங்களும் இத்தகைய ஒடுக்குமுறையின் மூலமே நசுக்கப்பட்டுள்ளன. அந்த அளவுக்கு இந்த விசயத்தில் பிராந்திய நாடுகளுக்கிடையிலான உறவும் சர்வதேச வலைப்பின்னலின் ஒழுங்கமைப்பும் உள்ளன.

ஆகவே, இதுவொரு தென்னாசியப் பிராந்திய யதார்த்தம். தென்னாசியப்பிராந்தியத்திற்குரியதொரு படிப்பினை.

எனவே -

இந்த யதார்த்தம் நமக்கு பல புதிய புரிதல்களையும் படிப்பினைகளையும் அனுபவபூர்வமாகவே இன்று தந்துள்ளது.


‘இந்த யதார்த்தத்துக்கு அப்பால் - இந்த யதார்த்தத்தை உடைத்து நாம் வெற்றியடைந்து விடலாம்’ என்றிருந்த நம்பிக்கை இப்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்த நம்பி்க்கை வெற்றியடைந்திருக்க வேண்டுமானால், போராட்டத்தின் போக்கிலும் அணுகுமுறையிலும் அடிப்படையிலும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும். நிகழ வேண்டும் என்பது இன்று தெளிவாக்கப்பட்டுள்ளது.

ஆனால் அத்தகைய தெளிவு எந்த மட்டத்தில் நிகழ்ந்துள்ளது? அதைப் பொதுச் சூழலானது எந்த அளவிற் புரிந்து கொண்டுள்ளது என்ற கேள்விகள் எழுகின்றன.

இதைத்தவிர்த்து - இத்தகைய படிப்பினைகளைத் தமது அரசியல் முன்னெடுப்புகளுக்கான பாடங்களாகக் கொள்வதைத் தவிர்த்து - வழமையான சிந்தனை முறையில் அரசியலைத் தொடர்வோர் நிலைமைகளை மேலும் மோசமாக்குகின்றனர்.

ஆனால், என்னதானிருந்தாரும் இலங்கையின் வரலாற்றில் மே18 – 2009 என்பது எத்தகைய படிப்பினைகளைத் தந்துள்ளது? என்பது முக்கியமான கேள்வி. நிராகரிக்கவே முடியாத கேள்வி. எப்படி அந்த நிகழ்ச்சி ஒரு யதார்த்தமோ எப்படி அது உண்மையான ஒரு அரசியல் விளைவோ அந்த அளவுக்கு அது ஏற்படுத்திய படிப்பினைகளும் கேள்வியும் முக்கியமானவை.

இந்தக் கேள்வியும் படிப்பினைகளும் தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் உரியது.

2009 மே18க்குப் பின்னர் இப்பொழுது இரண்டாண்டுகள் கழிந்து விட்டன.

அதாவது யுத்தம் முடிந்து இரண்டாண்டுகள் கடந்துள்ளன.

இந்த இரண்டாண்டுகளில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சிகள் என்ன? முன்னேற்றங்கள் என்ன? மாற்றங்கள் என்ன? திருத்தங்கள் என்ன? படிப்பினைகள் என்ன?

சுருக்கமாகச் சொன்னால், போருக்குப் பிறகும் இலங்கையில் இனமுரண்பாடு அப்படியேதான் இருக்கிறது. பெரும்பாலான தமிழர்களும் சிங்களவர்களும் வௌ;வேறுவிதமாகவே – போருக்கு முன்னரும் போர்க்காலத்திலும் சிந்தித்ததைப் போலவே சிந்திக்கிறார்கள். யுத்தம் இவர்களுக்கு எந்தப் படிப்பினைகளையும் தந்ததாகத் தெரியவில்லை.

இதன் விளைவாக அரசியல் முரண்பாடும் இடைவெளியும் நீடிக்கின்றன. ஆகையால் இலங்கையில் வெளிச்சக்திகளின் தலையீடும் நெருக்கடியும் அதிகரித்தவாறே இருக்கிறது. மக்களின் உரிமைகளும் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுக் கொண்டே செல்கிறது.

எனவே நிலைமையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகச் சொல்வதற்கில்லை.

குறிப்பாக, இலங்கையில் இனமுரண்பாட்டின் காரணமாக – விளைவாக - உருவாகிய போர் ஏற்படுத்திய விளைவுகள் - படிப்பினைகள் - யாரையாவது நிதானமாகச் சிந்திக்கத் தூண்டியிருக்கிறதா? என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். இதற்குப் புதிய சிந்தனை முறை உருவாகினால்தான் மாற்றங்களுக்கும் வளர்ச்சிக்கும் சாத்தியங்கள் உண்டு.

தமிழ் ஊடகங்களும் பெரும்பாலான தமிழ் அரசியற் கட்சிகளும் பழைய அலைவரிசையிலேயே பேசிக் கொண்டிருக்கின்றன. அரசியற் தலைவர்களின் பாராளுமன்ற உரைகளும் அறிக்கைகளும் இதற்கு நல்ல உதாரணங்கள்.

அப்படியே இலங்கை அரசும் சிங்களத் தலைவர்களும் அவர்களுடைய கட்சிகளும் பழைய பாணியிலேயே பேசியும் சிந்தித்தும் வருகின்றன. சிங்கள ஊடகங்கள் பாதை விலகாமலே பயணம் செய்கின்றன.

ஆகவே யுத்தத்தின் முடிவு எந்த முன்னேற்றத்தையும் இலங்கைத் தீவில் ஏற்படுத்தவில்லை. எத்தகைய படிப்பினைகளையும் யாருக்கும் தந்ததாக இல்லை.

எனவே இலங்கையில் ஐக்கியத்துக்கும் வழியில்லை. பிரிவினைக்கும் இடமளிப்பில்லை.

இதற்குக் காரணம் யுத்தத்தின் முடிவை இலங்கை அரசு தவறான அர்த்தத்தில் புரிந்து கொண்டதும் அந்த வகையிலேயே மக்களைச் சிந்திக்கத் தூண்டியதுமாகும்.

யுத்தத்தின் முடிவை யுத்த வெற்றியாகக் கருதியதால் வந்த வினை இது. இதுவே அடிப்படையான பிரச்சினையாகும். இந்தப் புரிதல் முற்றிலும் தவறானது.

யுத்த வெற்றி என்பது ஒருதலைப் பட்சமானது. யுத்தத்தில் பெற்றது வெற்றி என்று உணரப்படும்போது அதன் மறுப்பக்கம் தோல்வி என்றே அர்த்தப்படும்.

இதுதான் இலங்கையில் நிகழ்ந்திருப்பது. ஆகவேதான் யுத்தத்தின் முடிவுக்குப் பிறகும் இலங்கையின் நிலைமைகள் மாற்றமடைய முடியாமல் இருக்கின்றன.

யுத்த வெற்றி என்றால் அது சிங்களத் தரப்பிற்குரிய வெற்றியாகும். அவ்வாறே கருதவும் படுகிறது. அதன் பெருமையும் பங்கும் தமக்கே என்று சிங்களத் தரப்பு கருதியுள்ளமை இதற்கு நல்ல சான்று.

இவ்வாறு சிங்களத் தரப்புக் கருதியதால் இந்த யுத்தத்தின் அடுத்த முனையிலிருந்த தமிழர்களை அது வேறுவிதமாகச் சிந்திக்கத் தூண்டியிருக்கிறது.

இந்த யுத்தத்தில் தமிழர்கள் தோற்றவர்களாகவும் தோற்கடிக்கப்பட்டவர்களாகவும் கருதப்படுகிறார்கள். தமிழர்களும் இவ்வாறே கருதுகிறார்கள். அவ்வாறு தமிழர்களைக் கரும்படியே நடவடிக்கைகளும் அமைந்துள்ளன.

ஆகவே, யுத்தத்தின் முடிவு என்பது நல்விளைவுகளுக்குப் பதிலாக – மீண்டும் பகையை உள்ளே தூண்டும் விதமாகவே காணப்படுகிறது. இந்த நிலையில் முன்னேற்றங்களைப் பற்றி எப்படி எதிர்பார்க்க முடியும்?

ஆனால், யுத்தத்தின் முடிவினால் சில நன்மைகள் கிட்டியிருக்கின்றன. யுத்தத்தின் அழுத்தங்களும் நேரடியான உயிர் இழப்புகள், சொத்திழப்புகள், அகதியாக இடம்பெயர்தல் போன்ற பாதிப்புகளும் நீங்கியுள்ளன. போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் தடைகள் விலகியுள்ளன. சனங்கள் இறுக்கங்களிலிருந்தும் அழுத்தங்களிலிருந்தும் விடுபட்டிருக்கிறார்கள்.

ஆனால், யுத்தம் முடிந்த பின்னர் காணப்பட்டிருக்க வேண்டிய இலங்கையின் பிரதான பிரச்சினையாகிய இனமுரண்பாட்டுக்குத் தீர்வு காணப்பட்டிருக்கிறதா?

அல்லது அந்த இனமுரண்பாட்டைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு சம்மந்தப்பட்டவர்களிடம் விசுவாசமாக ஏற்பட்டுள்ளதா?

அல்லது இனப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் நேர்மையாக மேற்கொள்ளப்படுகின்றனவா?

அல்லது நாடு அமைதியடைந்திருக்கிறதா? அல்லது அது அபிவிருத்திப் பாதையில் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறது?

பிரிவினைக்கோ அல்லது ஐக்கியத்துக்கோ செல்லக்கூடிய வழிவகைகளைப் பற்றி நேர்மையாகச் சிந்திக்கப்பட்டிருக்கிறதா?

குறைந்த பட்சம் நாட்டைப் பாதிக்கின்ற வகையிலான உள்நாட்டு நெருக்கடியும் வெளிச் சக்திகளின் அழுத்தங்களும் நீங்கியிருக்கின்றனவா?

சுருக்கமாகச் சொன்னால் யுத்தம் முடிந்து விட்டது என்று மக்கள் உணர்ந்து கொள்வதற்கான ஏதுக்கள் எதுவும் இல்லை. அதிலும் யுத்தப் பாதிப்புகளை நீக்கக் கூடிய நடவடிக்கைகள் கூட ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் மேற்கொள்ளப்படவில்லை.

ஆனால், நடைபெற்ற யுத்தம் தமிழ் பேசும் மக்களை மட்டும் பாதிக்கவில்லை. தமிழர்கள் அதிகமான பாதிப்பைச் சந்தித்திருக்கிறார்கள். ஆனால், அதேவேளை அது ஏனைய சமூகங்களையும் நெருக்கடிக்குள்ளாக்கியது.

பதற்றத்திலும் பாதிப்பிலுமே இலங்கையின் கடந்த காலம் கழிந்தது.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த யுத்தம் முடிந்திருப்பது என்பது சாதாரணமானதல்லத்தான்.

அதிலும் பல்லாயிரக்கணக்கான உயிர்களைத் தின்ற யுத்தம் இது. மட்டுமல்ல, பல கோடிக்கணக்கான சொத்துகளையும் இயற்கை வளங்களையும் அழித்த யுத்தம். பலருடைய எதிர்காலத்தைச் சிதைத்த யுத்தம்.

ஆனால், இந்த யுத்தம் முடிவுக்கு வந்தபோது யுத்தத்துக்குக் காரணமாக இருந்த பிரச்சினைகள் தீர்ந்திருக்க வேணும். யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளில் பாதியாவது குறைந்திருக்க வேணும். யுத்தத்துக்குப் பின்னரான மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வேணும்.

ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இதுதான் பிரச்சினை.

ஆகவே,  யுத்தம் முடிவுக்கு வந்த மே 18 என்பது நிச்சயமாக ஒரு படிப்பினைக்கான நாள். அது இலங்கையர்களுக்கு பல தரிசனங்களைத் தந்திருக்க வேண்டிய நாள்.

சிங்களவர்களைப் பொறுத்த அளவில், இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான பெரும் பொறுப்பைப் பெற்றுக் கொண்ட நாள்.

தமிழர்களைப் பொறுத்தவரை தமிழ்ச் சமூகத்தின் விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் புலிகளின் இயங்குநிலை முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட நாள்.

அதாவது, முப்பது ஆண்டுகளாகத் தமிழர்களின் அரசியற் சக்தியாக செல்வாக்குப் பெற்றிருந்த விடுதலைப் புலிகளிடமிருந்து வேறுபட்டதொரு அரசியல் முறைமைக்கு மாறிய நாள். இதை இன்னும் தெளிவாகச் சொன்னால், பிரபாகரனுக்குப் பின்னரான – பிரபாகரன் அற்ற - அரசியல் செயற்பாட்டைத் தொடரவேண்டிய நாள்.

இந்த நாளில் - மே 18 இல் - யுத்தத்தின் முடிவை இலங்கை அரசும் சிங்களவர்களும் யுத்தவெற்றியாகவும் தமிழர்களைத் தோற்கடித்ததாகவும் கருதியிருந்தால் -

தமிழர்கள் இந்த நாளை தங்களின் வாழ்க்கைக்கும் வரலாற்றுக்கும் ஒரு படிப்பினையாகக் கொள்வது அவசியமாகும்.

00


இனப்பிரச்சினைக்கான தீர்வு?

Wednesday 22 February 2012



















இலங்கையின் இனப்பிரச்சினை போருக்குப் பிறகும் தொடர்கிறது. இந்த நூற்றாண்டிலும் தொடர்கிறது. புலிகள் இல்லாத சூழலிலும் தொடர்கிறது. தமிழ் இயக்கங்களின் கைகளில் ஆயுதங்கள் அற்ற நிலையிலும் தொடர்கிறது. சமாதானத்தை விரும்புகிறவர்கள்(?), அதற்காக முயற்சிப்பவர்கள்(?) என்று கூறுகின்றவர்களின் ஆட்சிக் காலத்திலும் தொடர்கிறது.

வட்டமேசை மாநாடு, அனைத்துக்கட்சிக்குழு, சர்வகட்சி மாநாடு, பேச்சுவார்த்தைகள் எனப் பல சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட பிறகும் தொடர்கிறது. இந்தியாவின் தலையீடு, நோர்வேயின் மத்தியஸ்தம் என்றெல்லாம் நடந்த பிறகும் தொடர்கிறது. இனப்பிரச்சினை சர்வதேச விவகாரமாகிய பின்னரும் தொடர்கிறது.

ஆட்சி மாறிப் புதிய ஆட்சிகள் வந்துள்ளன. தலைவர்கள் மாறி மாறி புதிது புதிதாக வந்திருக்கின்றனர். ஆனால், பிரச்சினை மட்டும் அதே நிலையில், அதே வலியுடனும் அதே மணத்துடனும் அதே எரிநிலையிலும் உள்ளன.

ஆகவே, இப்போதைக்கு இந்தப் பிரச்சினை முடியாது போலவேயுள்ளது எனக் கேட்டார் ஒரு நண்பர். அமைதிக்கான முயற்சிகள் ஒவ்வொன்றின்போதும் இந்த நண்பர் இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படவேண்டும் என்று விசுவாசமாகவே விரும்புகின்றவர். அவருடைய நாற்பதாண்டுகால அரசியல் அனுபவத்தில் அவர், ஏமாற்றப்பட்டதும், நம்பிக்கையிழக்க வைக்கப்பட்டதுமே அதிகமாக உள்ளது. இப்போது இந்த நண்பருக்கு வயது 71. இனப்பிரச்சினைக்கு வயது....? சுதந்திரத்துக்குப் பிறகான காலம் என்று பார்த்தாலும் 62 ஆண்டுகள்.

காலங்கள் மாறிவிட்டன. உலக ஓட்டம் மாறிவிட்டது. அரசியற் போக்குகளும் வாழ்க்கை அமைப்புகளும் எவ்வளவோ மாறியிருக்கின்றன. சிந்தனைகளும் நம்பிக்கைகளும் எண்ணங்களும் வௌ;வேறு அனுபவங்களையும் அறிவையும் பெற்றுள்ளன.

கடந்த நூற்றாண்டின் பிரதான அரசியற் போக்குகளாக இருந்த இடதுசாரி, வலதுசாரிய அரசியல், பனிப்போர் நிலைமைகள் எல்லாம் மாறிவிட்டன. அதையொட்டிய அரசியல் பிரயோகங்கள் எல்லாம் வெளிறிப்போய்விட்டன.

ஆனால், இலங்கையின் இனப்பிரச்சினை மட்டும் கொதித்துக்கொண்டேயிருக்கிறது. அதே தீவிரத்துடன், அதே கொதிப்புடன்.

பேச்சுகள் நடக்கின்றன. நம்பிக்கையீனங்களின் மத்தியில், இழுபாடுகளின் மத்தியில், உடன்பாடின்மைகளின் மத்தியில் அமைதிக்கான - இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுகள் நடக்கின்றன.

இந்தப் பேச்சுகள் வெற்றியடையுமா? நடக்கின்ற இந்தப் பேச்சுகளில் ஏதாவது அர்த்தம் உண்டா? இவை உண்மையானவையா? என்ற கேள்விகள் இன்று சராசரியான பொதுமக்களிடம் முக்கியமான கேள்வியாக எழுந்துள்ளன.

அப்படியானால், இதைவிட்டால் அடுத்த கட்டம் என்ன? இனித் திரும்பி ஆயுதப்போராட்டம் ஒன்றுக்குப் போக முடியுமா? அதற்கான சாத்தியங்கள் உண்டா? அப்படியிருந்தாலும் அது வெற்றியளிக்குமா? அல்லது பேச்சுவார்த்தையை விட்டு வெளியே வந்து அரசியற் போராட்டங்களை நடத்துவதா? அப்படி நடத்துவதானால், அந்தப் போராட்டத்தை எவ்வாறு நடத்துவது? அது சாத்தியமா? அது வெற்றியளிக்குமா? அதற்கான ஆதரவை எப்படித் திரட்டுவது? அந்தப் போராட்டத்துக்கு பிராந்திய சக்தியாகிய இந்தியா மற்றும் சர்வதேச சமூகத்தின் ஆதரவுகள் எல்லாம் எப்படியிருக்கும்?

இந்தக் கேள்விகள் எல்லாமே பதிலற்ற நிலையிற்தான் உள்ளன. யாரும் இதற்குரிய பதில்களைக் கூறுவார்கள் என்று தோன்றவில்லை. ஆனால், பரபரப்பாக அரசியற் செய்திகள் தினமும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எந்த முன்னேற்றத்தையும் எட்டாத முயற்சிகளைப் பற்றிய செய்திகளாக அவை இருக்கின்றன என்பதை அரசியலாளர்களும் சிந்திக்கவில்லை. அறிஞர்களும் சிந்திப்பதாக இல்லை. ஊடகவியலாளர்களும் சிந்திப்பதாகத் தெரியவில்லை.

மனதிலே இருக்கின்ற ஆத்திரத்தையும் இயலாமையின் நிமித்தமாக எழுகின்ற ஆற்றாமையையும் கொட்டித் தீர்க்கும் விதமாக இலங்கை அரசையும் அதன் ஆட்சியாளரையும் சிங்கள அதிகார வர்க்கத்தையும் திட்டித் தீர்த்து விடுவதுடன் தமிழரின் அரசியற் பணிகளின் முதற்பகுதி நிறைவடைகிறது.

அடுத்தபகுதியில் இந்தியா மற்றும் மேற்குலகு, ஐ.நா போன்றவற்றிடம் இலங்கை அரசைப்பற்றியும் தமிழ் மக்களுடைய நிலையைப் பற்றியும் முறையிடுவதுடன் மீதி அரசியற் பணிகள் நிறைவடைகின்றன.

ஆனால், இவை இரண்டினாலும் மட்டும் நிச்சயமாக தமிழ் பேசும் மக்களுடைய இனப்பிரச்சினையோ அரசியல் அதிகாரப் பகிர்வோ சாத்தியமாகிவிடாது. அவ்வாறு ஒரு சாத்தியப்பாடு கிட்டுமானால், இலங்கையில் அது எப்போதோ கிட்டியிருக்க வேணும். இலங்கைக்கு வெளியே இந்த  மாதிரிப் பிரச்சினை உள்ள நாடுகளில் எப்போதோ எல்லாம் அவற்றின் பிரச்சினைகள் தீர்ந்திருக்கும்.

ஆனால், அப்படி எந்த அதிசயமோ அற்புதமோ எங்கும் நடந்ததாக இல்லை.

பதிலாக - நிலைமைகள், உலக அரசியற் போக்கின் அசைவுகள், மக்களின் மனவுறுதியைக் கட்டமைத்தல், அவர்களுடைய வாழ்க்கையை இணைந்து நின்று மேம்படுத்திப் பாதுகாத்தல், மக்கள் தொடக்கம் எதிர்த்தரப்பின் நட்புச் சக்திகள் மற்றும் சர்வதேச சமூகங்கள் வரையான உரையாடல் போன்றவற்றை உன்னிப்பாக அவதானித்து அவற்றைச் செயற்படுத்தினாலே பேச்சுகளில் வெற்றியை ஏற்படுத்த முடியும். பிரச்சினைக்கான தீர்வினை எட்ட முடியும்.

ஆனால், இதெல்லாம் இலகுவான வழிமுறைகள் அல்ல. மிகக் கடினமான – கடுமையான உழைப்பைக் கோரும் வழிமுறைகளாகும். இதற்கு அந்த உழைப்பை வழங்கக் கூடிய மனநிலையும் ஆற்றலும் ஆளுமை மிக்க தலைமைத்துவதும் தேவை.

அது இலங்கைச் சிறுபான்மைச் சமூகத்தினரிடத்திலே உண்டா?

சிங்களத் தரப்பைக் குற்றம் சாட்டுகின்ற சிறுபான்மைத் தரப்பினரிடம் ஒரு பொது உடன்பாட்டைக் காணவோ எட்டவோ முடியாத நிலையே இன்னமும் உண்டு. தேர்தற்காலக் கூட்டுகள், சந்தர்ப்பத்துக்கேற்ற அணி உருவாக்கங்கள், தேவைக்கேற்ற சமரசங்கள் என்பதற்கு அப்பால், பொது நோக்கில், மக்களின் நலனை முதன்மைப்படுத்தி, எதிர்த்தரப்பை - அரசைப் பலவீனப்படுத்தும் நோக்கில் எவரும் ஒரு கட்டமைப்பை உருவாக்கத் தயாராக இல்லை.

கடந்த காலத்தில் உருவாக்கப்பட்ட கூட்டுகள் கூட சிதைந்த நிலையிலேயே உள்ளன. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்த தமிழ்க் கட்சிகளின் அரங்கம் இன்று உறைநிலைக்குப் போய் விட்டது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உடைந்து சிறு துண்டாகியுள்ளது. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அணி தனிக்கட்சி அடையாளத்துடன் இன்று இன்னொரு கூறாகச் செயற்பட்டு வருகிறது.

மிஞ்சியிருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் ஈ.பி.ஆர்.எல்.எவ் அணிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்குமிடையில் வெளிப்படையாகவே பலத்த இழுபறிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ரெலோ, புளொட், தமிழர் விடுதலைக்கூட்டணி போன்றவற்றுக்குக் குரலே இல்லை. ஏதோ இருக்கிறோம் என்ற அளவில் அவ்வப்போது எதைப் பற்றியாவது கதைப்பார்கள்.

ஆனால், எவரும் தனித்துப்போய் நின்று தாக்குப் பிடிக்க முடியாதென்ற நிலையில் இழுபட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர, மற்றும்படி கொள்கையின்படியோ, செயலொன்றை ஆற்ற வேண்டும் என்ற முனைப்பின்படியோ, தீர்மானத்தின் படியோ பிரச்சினைக்கான தீர்வினைக் கண்டடையவேண்டும் என்றோ, பொது உடன்பாட்டின் வழியாகச் சிறுபான்மைச் சமூகங்களைத் திரட்சியாக்கி, சிங்களத் தரப்பிலுள்ள நியாயவாதிகளை அணிப்படுத்த வேண்டும் என்றோ கருதவில்லை.

எனவேதான் எதிர்த்தரப்பான அரசுக்கும் சிங்கள இனவாதிகளுக்கும் இனப்பிரச்சினையை நீடித்துச் செல்ல முடிகிறது. பலவீனமான தரப்பாக சிறுபான்மையினர் இருக்கும் வரையில்; அவர்களைக் கையாள்வது இலகு என்ற மனவுணர்வும் அனுபவமும் சிங்களத்தரப்புக்குத் தாராளமாகவே உண்டு. ஆகவேதான் அது புதிய புதிய அறிவிப்புகளை விடுத்துக் கொண்டிருக்கிறது.

இதன்படி அது தெரிவுக்குழு என்ற புதிய அறிவிப்பைச் செய்துள்ளது. இது ஒரு நெருக்கடி நிலையை ஏற்படுத்தும் அரசின் உத்தியே. இந்தத் தெரிவுக்குழுவில் பங்கேற்பதில்லை என்று இதுவரையிற் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சொல்லி வருகின்றனர். ஆனால், என்னதான் சொன்னாலும் இதைத் தீர்மானமாக மறுத்துரைத்து வெளியே வருவதற்கு கூட்டமைப்பினால் முடியாது.

கூட்டமைப்புத் தெரிவுக்குழுவில் பங்கேற்பது தவிர்க்க முடியாது. அதில் பெரிய தப்பேதும் இல்லை என்று கூட்டமைப்பை ஆதரிக்கும் அரசியற்பத்தியாளர்கள் தொடர்ந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் வலியுறுத்தி வருகின்றனர். கூடவே எதிர்காலத்தில் மாகாணசபைத் தேர்தலை முன்வைத்தாலும் அதிலும் கூட்டமைப்புப் போட்டியிடலாம் என்பது  இவர்களுடைய கருத்து. அதாவது, கூட்டமைப்பு எடுத்த எடுப்பிலே பொறியில் வீழ்ந்து விடாமல் கவனமாக இருப்பதாகக் காட்டிக் கொண்டு, பிகு பண்ணிவிட்டுப் பின்னர் சத்தமில்லாமல் விசயத்தில் இறங்கப்போகிறது.

ஆனால், தெரிவுக்குழுவில் இடம்பெறுவதும், மாகாணசபைத் தேர்தலில் பங்கேற்பதும் தற்கொலைக்கொப்பானது என்று இதை மறுத்து விமர்சிக்கும் தரப்பும் உண்டு.

என்னதான் இருந்தாலும் யதார்த்தம் என்பதற்கே எப்போதும் முதலுரிமை உண்டு. அதுவே எதையும் தீர்மானித்து விடுகிறது.

கூட்டமைப்புக்குள்கூட தெரிவுக்குழுவில் பங்கேற்பதா இல்லையா, மாகாணசபையில் போட்டியிடுவதா இல்லையா என்ற முடிவெடுக்கும் பிரச்சினை வந்தாலும் யாரும் முரண்பாடுகளின் வாயிலாக வெளியே போவதற்குத் தயாரில்லை. அப்படி வெளியே போனால் அது அரசியற் துறவாகி விடும் என்று அவர்களுக்குத் தெரியும்.

ஆகவே இந்தப் பலவீனங்களை எல்லாம் அவதானித்திருக்கும் சிங்கள அதிகார வர்க்கம் நிச்சமயமாக எத்தகைய விட்டுக்கொடுப்புக்கும் வராது. அப்படி வரவேண்டிய தேவையும் அதற்கில்லை.

ஆனால், பிராந்தியத்தின் அமைதி, சீனா போன்ற பிற சக்திகளின் தலையீட்டுக்கான வாய்ப்பு போன்ற வித்தியாசமான காரணங்களுக்காக சில வகையான முன்னெடுப்புகளின் நிமித்தமாக அமைதிப் பேச்சுகளில் சில மாற்றங்கள் ஏற்படலாம். முன்னேற்றங்கள் எட்டலாம்.

என்றாலும் இப்போதைக்கு அவை முயற்கொம்புகளே!

அப்படியானால் அடுத்தது என்ன? இதைத் தான் பலரும் கேட்கிறார்கள். ஏன் பேச்சுகளில் ஈடுபடுவோருக்கும் அடுத்தது என்ன என்று தெரியாது. என்றபடியாற்தான் அரசாங்கம் நெருக்கடிகளை ஏற்படுத்த, ஏற்படுத்த அதை முறியடிக்க முடியாமல் அதனுடைய வலையில் சிக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. குறைந்த பட்சம் ஒரு தீர்வு யோசனையைக் கூட முன்வைக்க முடியாமல் வாய்பாடுகள், பழைய பாடல்கள், தேய்ந்த குரல்களையே சனங்களுக்குப் பரிசளித்துக் கொள்ள வேண்டியேற்படுகிறது.

அவ்வாறெனில் சிறுபான்மைச் சமூகங்களின் அரசியற் தலைவிதி எவ்வாறு அமையப் போகிறது? இதுவே எளிய கேள்வி. இதுவே கடினமான கேள்வியும். இதுவே எல்லோருடைய கேள்வியும்.

முற்றிலும் புதிய அரசியல் வழிமுறைக்கும் அரசியற் சிந்தனைக்கும் தமிழ் பேசும் தரப்பினர் செல்ல வேண்டும். இது படிப்பினைகளின் காலம். மீள் பரிசீலனைகளின் காலம். புதியவற்றுக்காக முயற்சிக்கும் சூழல். கடந்த கால அரசியற் பாதைகளிலும் பயணங்களிலும் செயற்பாடுகளிலும் நோக்கிலும் சிந்தனையிலும் அனுபவங்களிலும் கற்றுக்கொண்ட அரசியல் அறிவை, வரலாற்றறிவைப் பயன்படுத்த வேண்டிய காலமும் சூழலும்.

இதைச் செய்வதே இன்றைய அரசியற் செயற்றிட்டமாகும். இத்தகைய ஒரு நிகழ்ச்சித் திட்டத்தில் உலகத்திசைகளில் இருக்கும் செயற்பாட்டாளர்களும் தீர்வை விரும்புவோரும் நெருங்கி, ஒருங்கிணைந்து வரக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.

நிலைமைகளும் அவற்றைக் கையாளும் முறைகளுமே யாரையும் ஒருங்கிணைப்பன. எதுவும் வெற்றியை நோக்கி நகர்த்துவன என்பதற்கு ஏராளம் அடையாளங்கள் வரலாற்றில் உண்டு.

ஆகவே இன்று இதைக் குறித்துச் சிந்திப்பதே இன்றைய – நாளைய அரசியலாகும். இதன் வெற்றியே கடந்த காலத் தோல்விகளையும் காயங்களையும் ஆற்றுப்படுத்தும்.

எந்தத் தோல்வியும் எத்தகைய பின்னடைவும் சிந்திக்கும் செயற்படும் தரப்பினருக்கு நிரந்தரமாக அமைவதில்லை.

நூற்றாண்டுத் துயரங்களும் நூற்றாண்டுத் தூரங்களும் கூரிய சிந்தனையில் எளிதாகக் கடக்கப்படும் என்பதை இதை விட எப்படி விளக்குவது?
00



கேள்விகளைச் சுமக்கும் பயணங்கள்

Monday 20 February 2012
















மக்களை மகிழ்ச்சிக் கடலில் பயணம் செய்ய வைப்பதற்காக ஒரு அமைச்சை உருவாக்கக் கூடிய சூழல், இலங்கை அரசாங்கத்தின் கட்டமைப்பில் எதிர்காலத்தில் உருவாகலாம் போலுள்ளது.

அப்படி நடக்காது என்று மட்டும் கூறி விடாதீர்கள். ஏனென்றால், இலங்கையின் அரசியல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத இரண்டு அமைச்சுகளை இந்த அரசாங்கம் ஏற்கனவே உருவாக்கியுள்ளது. ஒன்று, மீள்குடியேற்ற அமைச்சு. அடுத்தது, புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சு.

இந்த இரண்டு அமைச்சுகளும் போரின் பின்னரான சூழலுக்காக உருவாக்கப்பட்டவை. இவை அந்த அர்த்தத்தில் செயற்படுகின்றனவோ இல்லையோ அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளன என்பது உண்மைதானே.

ஆகவே, இதைப்போல மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க வைப்பதற்காக புதியதொரு அமைச்சை உருவாக்குவதற்காக அரசாங்கம் கருதினால் அதில் தப்பென்ன இருக்கிறது?

அந்த அளவுக்கு ‘எப்போதும் எங்கும்’ என ஏராளம் கொண்டாட்டங்கள், வெகு விமரிசையாக நடந்த வண்ணம் இருக்கின்றன.

போர் வெற்றிக் கொண்டாட்டங்கள், சுதந்திர தினக்கொண்டாட்டங்கள் இரண்டையும் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மிக விமரிசையாகக் கொண்டாடி வருகிறது. தற்போதுகூட அனுராதபுரத்தில் தேசத்தின் மகுடம் என்ற பெயரில் பெரும் கண்காட்சியொன்று நடந்து கொண்டிருக்கிறது. நாடே அனுராதபுரத்தில் திரண்டிருக்கிறது. இந்தப் பத்தியை எழுதிக்கொண்டிருக்கும்போது தேசத்தின் மகுடத்தைப் பார்ப்பதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து புறப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் மாணவர்கள்.

இதைவிட நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களை ஒட்டியதாக அது பல நிகழ்ச்சிகளை உருவாக்கி மிக விமரிசையாகவே கொண்டாடுகிறது. ஆடலும் பாடலும் அலங்கார விளக்குகளின் ஒளியுமாக நாடே உற்சாக ஒளிவெள்ளத்தில்தான் மிதக்கப்போகிறது போலும்.

போரின் களைப்பிலிருந்து மீண்டுள்ள நாட்டுக்கு இந்த மாதிரியான உற்சாகமும் மகிழ்ச்சியும் தேவை என்று அதிகாரத்திலுள்ளவர்கள் சிந்தித்திருக்கக் கூடும். இருண்ட யுகத்தினுள் நீண்ட காலமாகவே சிக்கியிருந்த நாட்டுக்கு சிறிது ஆறுதலும் நெகிழ்ச்சியான நிலைமையும் அவசியம் என்றும் இவர்கள் எண்ணியிருக்கலாம். மட்டுமல்ல, எப்போதும் அச்சத்திலும் துக்கத்திலும்  உறைந்தவாறு இருந்த மக்கள் அதிலிருந்து விடுபட்டு சற்றுக் களிப்பாக இருக்கட்டும் என்றும் கருதியிருக்கக்கூடும்.

ஒரு பொறுப்பான அரசாங்கம் தன்னுடைய குடிமக்களின் மகிழ்ச்சியைக் குறித்துச் சிந்திக்காதிருக்க முடியாது. ஆகவே, மக்களைச் சந்தோசமாக வைத்திருப்பதற்காக அது எவ்வளவையும் செலவளிக்கத்தான் வேணும். ஆகவேதான் இந்த மாதிரியான தொடர் ஏற்பாட்டுக்கு – மகிழ்ச்சிகரமான உலாக்களுக்கும் வைபவங்களுக்குமாக ஒரு அமைச்சையே தனியாக உருவாக்குவதற்கு அரசாங்கம் சிந்திக்கலாம் என்கிறோம்.

அதேவேளை, பலரும் விமர்சித்து வருவதைப்போல போரின் வெற்றியை ஒரு முதலீடாக்கி அரசியல் ஆதாயங்களைத் தேடிக் கொள்வதற்காக இந்த மாதிரியான முதன்மைப்பாடான நிகழ்ச்சிகளை மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் திட்டமிட்டுத் தன்னுடைய நிகழ்ச்சி நிரலாக்கியுள்ளது என்றும் இவற்றைக் கொள்ளவும் முடியும்.

ஆனால், இதை மறுத்து, இதற்கெல்லாம் இன்னும் சில காரணங்களையும் வியாக்கியானங்களையும் அரச தரப்புக் கூறக்கூடும். போரின் வெற்றிக்காகப் பாடுபட்ட படையினருக்கு மரியாதை அளிக்க வேண்டும். அவர்களுடைய பங்களிப்பை நாட்டு மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்று ஒரு காரணம்.

நாடு முழுவதுமே இப்போதுதான் - தங்களுடைய ஆட்சிக் காலத்திற்தான் - ஒரு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆகவே, இதை - இந்த நிலையில் வருகின்ற சுதந்திரதினத்தை பிரமாண்டமான முறையில் முழுமைப்படுத்திக்  கொண்டாடுவது அவசியமே என்பது இன்னொரு காரணம்.

அபிவிருத்தியில் மக்களைப் பங்கேற்க வைப்பது, மக்களுக்கு அபிவிருத்தி பற்றிய எண்ணக்கருக்களை விதைத்தல், அவர்களை அபிவிருத்தியோடு இணைத்தல் என்ற நோக்கங்களுக்காகவே இந்தமாதிரியான கொண்டாட்டங்கள் நடக்கின்றன என்ற இன்னொரு காரணம்.

இப்படியே காரணங்களும் நியாயங்களும் தாராளமாகச் சொல்லப்படலாம். இவற்றில் நியாயமும் இருக்கலாம். அதேவேளை இந்தக் கொண்டாட்டங்களுக்கு நிகரான கேள்விகளும் எதிர்ப்புகளும் உள்ள என்பதையும் நாம் கவனிக்க வேணும். அவையும் மக்களுடன், நாட்டின் எதிர்காலத்துடன் சம்மந்தப்பட்ட கேள்விகளே. அவற்றைப் பின்னர் பார்க்கலாம்.

எப்படியானாலும் கொண்டாட்டங்களை அரசாங்கம் முதன்மையாக்கியுள்ளது.

ஜனாதிபதி நாடு முழுவதும் செல்கிறார். அவர் அப்படிச் செல்லும்போது பெருமெடுப்பிலான நிகழ்ச்சிகளும் ஏற்பாடுகளும் நடக்கின்றன. அவருடைய மகன் நாமல் ராஜபக்ஷ செல்கின்ற இடங்களுக்குக்கூட உலங்குவானூர்தியையே பயன்படுத்துகிறார். இவ்வளவுக்கும் அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே. இதிலும் இளம் பாராளுமன்ற உறுப்பினர். தவிர, இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவராக நாமல் இருப்பதால், அதற்காக அவர் உலங்கு வானூர்தியிற் பயணிக்கும் அளவுக்கு அவருக்கான இடம் அளிக்கப்பட்டிருக்கிறதா தெரியவில்லை. ஆனால், அவருடைய  உலங்குவானூர்திப் பயணங்கள் கோலாகலமாக நடக்கின்றன என்பது மட்டும் உண்மை. இதற்காக எவ்வளவு பணம் செலவாகிறது என்பதெல்லாம் கேள்விக்கு அப்பாற்பட்ட விசயங்கள்.

இதைவிட, ஜனாதிபதி வெளிநாடுகளுக்கான பயணங்களை அடிக்கடி மேற்கொள்கிறார். அதிகமான பிரதானிகளோடு வெளிநாட்டுக்குப் பயணம் செய்யும் இலங்கையின் தலைவர் மகிந்த ராஜபக்ஷதான் என்பது பலருடைய மதிப்பீடு. ஒரு தடவை சீனாவுக்கு அவர் பயணிக்கும்போது வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 300 க்கு மேற்பட்ட பிரதானிகளோடு பயணித்திருந்தார்.

எல்லாமே நாட்டுக்காகத்தான். ஆமாம், அவர்கள் அப்படித்தான் சிந்திக்கிறார்கள். மக்களையும் இதை ஏற்கும்படி கூறுகிறார்கள். எல்லாமே நாட்டுக்காகத்தான்.

இந்த மாதிரி இவ்வளவையும் இந்த அரசாங்கம் செய்வதற்கான தற்துணிவைக் கொடுத்தது, போரில் அது பெற்ற வெற்றியே. இந்த வெற்றியானது அரசாங்கத்தை கேள்விகளின் விசைக்கு அப்பாலான ஓரிடத்தில் கொண்டு போய் விட்டுள்ளது. ஆகவே, கேள்விகளற்ற உலகத்தில் எதற்குமே பதலளிக்க வேண்டிய அவசியமே இல்லை.

இதற்கெல்லாம் ஒரு முன்னுதாரணத்தை இந்த அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் காட்டியது, திருமதி சந்திரிகா குமாரதுங்கதான். அவருடைய ஆட்சிக்காலத்தில் அவர் பெற்றுக்கொண்ட, போரின் வெற்றிகள் அவரை நிதானமிழக்க வைத்தன. அல்லது எல்லையற்ற உற்சாகப் போதையை அவருக்கு ஏற்படுத்தின.

1995 இல் ‘றிவிரஸ’ என்ற இராணுவ நடவடிக்கையின் மூலம் யாழ்ப்பாணத்தைப் புலிகளிடமிருந்து படையினர் கைப்பற்றியபோது அதைப் பிரமாண்டமான வெற்றிவிழாவாக்கிக் கொண்டாடி இதற்கான முதற்புள்ளியை அவரே உருவாக்கினார்.

பிறகு, 1996 இல் ‘சத்ஜெய’ என்ற இன்னொரு இராணுவ நடவடிக்கையின் மூலமாக கிளிநொச்சியைப் படையினர் கைப்பற்றிய போதும் அதை விழாவாக்கினார் சந்திரிகா.

அடுத்த வெற்றி விழாவைக் கொண்டாடுவதற்காக ‘ஜெயசிக்குறு’ என்ற மிகப் பெரிய, நீண்ட இராணுவ நடவடிக்கையை அவர் நடத்தினார். ஆனால், அந்த நடவடிக்கையைப் புலிகள் முறியடித்துத் தோல்வியாக்கிய காரணத்தினால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் நோக்கம் நிறைவேறவில்லை.

ஆனால், அதை இந்த அரசாங்கம், தான் பெற்ற பிரமாண்டமான வெற்றிக்குப் பிறகு வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகிறது. போரில் பெற்ற பெரு வெற்றியானது, போர் வெற்றியை மட்டுமன்றி, தான் நினைக்கின்ற – தான் செய்கின்ற அத்தனையையும் விழாவாக்கிக் கொண்டாடுவதற்கான சூழலை உருவாக்கியுள்ளது.

இங்கேதான் நிச்சயமாகவே அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டிய கேள்வியை நாம் முன்னிறுத்த வேண்டியிருக்கிறது. போரின் வெற்றியை வைத்துக்கொண்டு நாட்டையும் மக்களையும் ஒரு கனவுலகத்துக்கு அழைத்துச் செல்ல முடியாது. அப்படி வைத்திருப்பது பொறுப்புள்ள அரசுக்கும் அரசியல் முதிர்ச்சியுடைய தலைமைக்கும் நல்லதுமல்ல.

போர் முடிந்த பின்னரும் நாடு பொருளாதார நெருக்கடிகளில்தான் தொடர்ந்துமிருக்கிறது. தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவில்லை. உற்பத்திகள் அதிகரிக்கப்படவில்லை. புதிய உற்பத்திகளுக்கான ஏற்பாடுகளின் வீதமும் தன்மையும் போதவில்லை. வாழ்க்கை நிலைவரம் மிக மோசமாகவே உள்ளது.

மேலும் அரசியற் தீர்வு முன்வைக்கப்படவில்லை. அரசியல் நெருக்கடிகள், ஜனநாயக மேம்பாடு, ஊடக சுதந்திரம், சனங்களுடைய மனக்குறைகள் எதுவும் உரியவாறு சீர்பெற்றதாக இல்லை.

இன்னும் இலங்கையின் சிறு பான்மைச் சமூகங்கள் இரண்டாம் நிலையில் அதே விலகல் மனவுணர்வுடன்தான் வைக்கப்பட்டுள்ளனர். பொதுவாகச் சொன்னால், நாடு சரியாக முறைப்படுத்தப்படாமலே இன்னும் உள்ளது.

காயங்களிலிருந்தும் வலிகளிலிருந்தும் துயரங்களிலிருந்தும் சனங்கள் இன்னும் விடுபடவில்லை. அதிலும் வடக்குக் கிழக்கு மக்கள் பிரச்சினைகளின் மையத்தை இன்னும் கடக்கவேயில்லை. ஏறக்குறைய இதே நிலைதான் மலையகத்திலும் நாட்டின் பிற பின்தங்கிய பிரதேசங்களிலும்.

இதைத்தினசரி ஊடகங்களின் வழியாகவும் நேரிலும் யாரும் பார்க்க முடியும். இதற்கெல்லாம் பூதக்கண்ணாடிகளோ, மூன்றாவது நான்காவது கண்களோ தேவையில்லை.

இல்லை. நாட்டில் முக்கியமான அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துக்கொண்டிருக்கிறது. கிராம மட்டத்திலான – சமனிலைப்பட்ட அபிவிருத்தியிலேயே அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளதே என யாரும் கேட்கக் கூடும். இருக்கலாம். ஆனால், இதன் அடைவு மட்டம் தேவையின் அளவுக்குப் போதாமலுள்ளது என்பதே இங்கே பிரச்சினை.

வெற்றியும் தோல்வியும் இருமுனையிலும் கூருள்ள கத்தியைப் போன்றன. கவனமாக இவற்றைக் கையாளவில்லை எனில், இரண்டுமே ஆபத்தானவை. இரண்டும் மிக மோசமான உளநிலையை உருவாக்கக் கூடியன. ஒன்;றில் மோசமான போதையும் அதிகார வெறியும் எல்லை கடந்த உற்சாகத்தையும் கொடுக்கக்கூடியது. கண்மண்தெரியாமல் நடக்கும் நிலை என்று சொல்வார்களே, அதை ஒத்த நிலையை உருவாக்கக் கூடியது.

மற்றது மோசமான உளச்சோர்வையும் பின்னடைவு மனநிலையையும் குரோத மனப்பாங்கையும் வளர்க்கக்கூடியது.

இதையெல்லாம் கணக்கிலெடுக்காமல் அரசாட்சி செய்வதும், இந்தப் போக்கைக் குறித்துச் சிந்திக்காமல், இதற்கே ஒத்துப்பாடி ஆதரவளித்து சிறு நன்மைகளைப் பெறுவதும் மிப்பேராபத்திலும் பேரழிவிலுந்தான் கொண்டு போய் விடும்.

இறுதியாக ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் ஒன்றைக் கூறலாம், ‘பெருங்கொண்டாட்டங்களுக்குச் செலவளிக்கும் நிதியில் மூன்றிலொரு பங்கை மக்களின் நல்வாழ்வுக்காக, பாதிக்கப்பட்ட மக்களின் அவசியத்தேவைகளுக்காக ஒதுக்குங்கள்.

நம்பிக்கையும் மகிழ்ச்சியும் நிம்மதியும் பாதுகாப்புணர்வுமே அமைதிக்குமான அத்திவாரத்தை அவை இடும்.’

உபாயமும் அதிகாரமும் - 03

Friday 17 February 2012





















தென்னாசியப் பிராந்தியத்தில் சிங்கள இராசதந்திரத்தைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிடுவார்கள்.

குறிப்பாக 'இந்தியா என்ற பென்னாம் பெரிய நாட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் இலங்கை தன்னுடைய இராசதந்திரத்தினாலேயே – உபாயத்தினாலேயே - தாக்குப் பிடித்துக்கொண்டிருக்கிறது. இதில் சிங்கள இராசதந்திரத்தின் சிறப்பைக் காணலாம்” என்று பல ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அதாவது “யானைக்குத் தும்பிக்கை பலம் என்றால் எலிக்கு வளை பலம் என்பதைப் புரிந்து கொண்டவர்கள் சிங்கள இராசதந்திரிகள்” என்று குறிப்பிடுகிறார் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு.

இந்தியாவின் அச்சுறுத்தல் - தமிழ் நாட்டின் படையெடுப்பு அபாயங்கள் - சிங்களவர்களைத் தேர்ந்த இராசதந்திரத்தை நோக்கி அவர்களைச் சிந்திக்கத் தூண்டியிருக்கலாம்.
மேலும் கடந்த அறுநூறு ஆண்டுகளாக பல தரப்பினரின் ஆதிக்கப்போட்டிக்கான களமாக இலங்கை இருப்பது இன்னும் அவர்களை இந்தத் துறையில் தேர்ச்சியுடையவர்களாக்கியிருக்கலாம்.

என்றபடியால்தான் அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொண்டதுடன் துலக்கமான தனியான அடையாளங்களைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அதிலும் தென்னாசியப் பிராந்தியத்தில் - ஏன் உலகிலேயே – மிகச் சிறிய தரப்பினராக இருந்துகொண்டே வலுவானவர்களாக – தாக்குப் பிடிக்கும் திறனுடையவர்களாக - சிங்களவர்கள்  இருக்கிறார்கள்.

சிங்களவர்களிடம் உருவாகிய இந்த இராசதந்திரம் அவர்களை அதிகாரத் தரப்பினர் ஆக்கியதுடன், மேலும் உபாயங்களில் நம்பிக்கையுள்ளவர்களாகவும் தேர்ச்சியுடையவர்களாகவுமாக ஆக்கியது.

‘அரசும் அதிகார வர்க்கமும் தொடர்ச்சியாக இருக்கும் போது அதையொட்டி உபாயங்களும் தேர்ச்சியுறும்@ வளரும்’ என்று சொல்வார்கள். இது சிங்களத்தரப்புக்கும் பொருந்தும்.

என்றபடியால்தான் இலங்கையில் மிகச் செழிப்பான இராச்சியங்களைக் கொண்டவர்களாகவும் புகழுடைய மன்னர்களைக் கொண்டதாகவும் சிங்கள வரலாறு இருக்கிறது.

மகாவம்சம் புனைவுகளை அதிகமாகக் கொண்ட வரலாற்று நூலாக இருப்பினும் அது சிங்கள ஆதிக்கத்தரப்பினுடைய உபாயத்தின் விளைவு அல்லது வெளிப்பாடு எனலாம்.

இவ்வளவு சக்திவாய்ந்த சிங்களத்தரப்பின் உபாயம் இப்போது நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறது. இதற்குக் காரணம் அது இனவாதத்திற்குள் சிக்கியிருப்பதே. இனவாதம் என்பது குறுகிய அரசியல் எண்ணமாகும். அதேவேளை அது தவறானதாகும்.
ஆனால், உபாயங்களில் தேர்ச்சியுடைய தரப்புகள் இந்த மாதிரித் தவறான அரசிலிலும் கணிசமான காலம் வெற்றிகளைப் பெற்றேயிருக்கும்.  இதற்குக் காரணம் இவற்றின் தேர்ச்சியான உபாயங்களின் மூலம் இவை, தங்கள் நெருக்கடிகளை மிக இலகுவாகக் கடந்த விடக் கூடியனவாக இருப்பதேயாகும்.

ஆனாலும் இறுதியில் இந்த வகையான அரசியலுக்குப் பயன்படுத்தப்படும் உபாயம் நிச்சயம் தோல்வியிலேயே போய்முடியும். இதற்கு வரலாறு நெடுகிலும் ஏராளம் உதாரணங்கள் உண்டு.

கடந்த கால் நூற்றாண்டுக் காலத்தில் அதிக நெருக்கடியை இலங்கையில் – சிங்கள இராசதந்திரம் சந்தித்திருக்கிறது. அந்த நெருக்கடிகளைத் தன்னுடைய தேர்ச்சியான அணுகுமுறையின் மூலம் அது வென்றும் வந்திருக்கிறது.

உதாரணமாக, இந்திய நெருக்கடி 1987 இல் இலங்கைக்குப் பெரிய சவாலாகவே இருந்தது. அதையும் விட 1980 களில் தமிழ்ப் போராளிகளை இந்தியா தனக்குச் சாதகமாக வளர்த்துக் கையாண்டது. ஆனால் அத்தனை இயக்கங்களையும் இன்று இலங்கை (சிங்கள உபாயம்) தோற்கடித்துத் தன்வசப்படுத்தி விட்டது.

இதுதான் சிங்கள உபாயத்தின் வெற்றி. இந்தியா வளர்த்த குழந்தைகள் இப்போது இலங்கையின் பிள்ளைகளாகி விட்டனர்.

ஆனாலும் ஒரு வகையில் சிங்கள அதிகார வர்க்கமும் அதைத் தாங்கும் சிங்கள உபாயமும் தோல்விகளை அல்லது சரிவுகளை இந்தக் காலகட்டத்தில் சந்தித்திருக்கிறது எனலாம்.

தமிழர்களை ஒடுக்க முற்பட்டவேளையிலேயே சிங்கள உபாயத்தின் தோல்வி ஆரம்பமாகியது.

ஒடுக்குமுறை என்பது தவறான அரசியல் வழிமுறையாகும் என்று கண்டோம். என்னதான் நுட்பங்களையும் தந்திரோபாயங்களையும் பயன்படுத்தினாலும் ஒடுக்குமுறையை ஒரு போதும் தளர்வற்றுத் தொடரமுடியாது. எவ்வளவு பலத்தோடிருந்தாலும் ஆதிக்கம் ஒருநாள் முடிவுக்கு வந்தே தீரும்.

ஆபிரிக்காவை மேற்குலகம் ஆக்கிரமித்திருந்தது. கறுப்பர்களை வெள்ளையர்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். இறுதியில் என்ன நடந்தது? ஒரு நாள் வெள்ளையர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டியிருந்தது. ஒடுக்குமுறைக்கு முடிவுகட்டவும் வேண்டியிருந்தது. இங்கே வெள்ளையர்களின் அத்தனை உபாயங்களும் தோற்றுப்போயின.

ஒருகாலம் சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜித்தை வைத்திருந்த பிரித்தானியா – ஒடுக்குமுறைக்குப் பயன்படுத்தும் பிரித்தாளும் தந்திரத்தில் பேர் பெற்ற பிரித்தானியா-  தன்னுடைய ஆதிக்கக் கரங்களை உலகெங்கிலும் இருந்து  பின்னே எடுக்க வேண்டிவந்தது.

இன்னும் சொல்லப்போனால், கி.பி 1400 களிலிருந்து ஏறக்குறைய ஆறுநூற்றாண்டுகள் வரையில் உலகத்தின் ஏனைய பகுதிகளைத் தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தது ஐரோப்பா.

ஆனால், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இந்த நிலைமைகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. இன்று இந்த நிலைமை இன்னும் மாறியுள்ளது. இப்போது பல நாடுகள் சுயாதீனமாகவே இருக்கின்றன. பல சமூகங்களும் சுயாதீனமுடையவையாக மாறியுள்ளன.

அறுநூறு ஆண்டுகால ஆதிக்கத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த உபாயம் ஒருபோது முடிவுக்கு வந்ததே உண்மை. இதை நாம் கவனித்துக் கொள்ள வேணும்;.

இலங்கையில் தமிழர்களை ஒடுக்குவதில் குறியாக இருக்கும் சிங்கள அதிகார வர்க்கம் அதற்கான உபாயங்களைப் பற்றியே அதிகமாகச் சிந்திக்கிறது. இதனால், அது, வெளிச் சக்திகளையும் உள்நாட்டுச் சக்திகளையும் தனது ஒடுக்குமுறை அரசியலுக்குச் சார்பாக – சாதகமாகப் பயன்படுத்த விளைகிறது. இதற்காகவே அது தன்னுடைய மூளையின் பெரும்பகுதியையும் செலவழிக்கிறது.

இதேவேளை சிங்கள அதிகாரவர்க்கத்தைப் பணிய வைக்க விரும்பும் உள் மற்றும் வெளிச் சக்திகள் சிங்களத் தரப்பிற்கு எதிராக இருக்கும் தமிழ்த்தரப்பை தேவைக் கேற்றமாதிரியும் இனவாதத்தை சந்தர்ப்பத்திற்கு ஏற்றமாதிரியும் பயன்படுத்திக் கொள்கின்றன.

இது சிங்களத் தரப்புக்குப் பல சந்தர்ப்பங்களிலும் நெருக்கடிகளையே கொடுக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகாலத்தினுள், சிங்கள அதிகார வர்க்கம்  பல நெருக்கடிகளை உள்நாட்டுச் சக்திகளாலும் வெளிச் சக்திகளாலும் சந்தித்துள்ளது.

இந்தியா, மேற்குலகம், ஐ.நா அமைப்புகள், மற்றும் மனித உரிமை அமைப்புகள் என வெளி நெருக்கடிகளாலும் போராட்ட இயக்கங்கள் - குறிப்பாக விடுதலைப் புலிகள் என உள் நெருக்கடிகளாலும் சிங்கள அதிகார வர்க்கம் நெருக்கடிப் பட்டிருக்கிறது.

இந்த நெருக்கடிகளால் இலங்கைத் தீவே பெரும் அழிவுகளையும் இழப்புகளையும் பின்னடைவையும் சந்திக்க வேண்டியேற்பட்டது.

என்னதான் உபாயங்களைக் கையாண்டபோதும் சிங்கள அதிகார வர்க்கம் நினைத்ததைப் போல ஒடுக்குமுறை என்பது இலகுவானதாக இருக்கவில்லை. எவ்வளவுதான் சிறப்பான உபாயங்களைப் பிரயோகித்தாலும் ஒடுக்குமுறையின் எதிர்விளைவுகளால் ஏற்பட்ட நெருக்கடிகளைத் தடுக்க சிங்கள அதிகார வர்க்கத்தினால் முடியவில்லை.

சிங்கள ஒடுக்குமுறையினால் தமிழர்கள் மட்டும் அழிவுகளையும் இழப்புகளையும் வேதனைகளையும் துயரத்தையும் பதற்றத்தையும் பெறவில்லை. சிங்களவர்களும் அழிவுக்கும் இழப்புக்கும் வேதனைக்கும் நெருக்கடிக்கும் பதற்றத்துக்கும் உள்ளானார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.

இந்த ஒடுக்குமுறையின் விளைவுகளால், சிங்களத் தலைவர்கள் பலரை அது  இழந்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் இனப்போரினால் பலியிடப்பட்டிருக்கின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காலிழந்தும் கையிழந்தும் இருக்கின்றனர். பல கோடிக்கணக்கான சொத்திழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

இன ஒடுக்குமுறையினால் இலங்கைத் தீவே பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது. இது சிங்கள மக்களின் வாழ்க்கையையும் பாதித்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், இன்று ஏற்பட்டிருக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் அத்தனைக்கும் சிங்கள அதிகார வர்க்கம் உருவாக்கிய போரே காரணமாகும்.

இவை மட்டுமல்ல, இன ஒடுக்குமுறைப் போர் தீவிரம் பெற்று அது மனிதாபிமான எல்லைகளுக்கப்பால், பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்களையே பலியிட்டது.

இவையெல்லாம் இன்று பெரும் மனித உரிமை மீறல்களாக்கப்பட்டு சர்வதேசத்தின் முன் விசாரணை நடத்தும் அளவுக்கும் தண்டனையைப் பெறவேண்டிய நிலைக்கும் கொண்டு வந்து விட்டுள்ளன. இப்போது தமிழர்களை விடவும் சிங்களத் தரப்பினரே அதிகமாகக் கலங்குகின்றனர்.

உலகத்தின் முன்னே சிங்களவர்கள் தலைகுனியும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
புலிகளும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிந்தாலும் அது ஒட்டுமொத்தமான தமிழ்ச் சமூகத்தை அடையாளப்படுத்தவில்லை. ஆனால், சிங்களத் தரப்பில் ஒட்டுமொத்தச் சிங்களச் சமூகமும் இதைத் தன்னுடைய தலையில் விழுந்துள்ள அடியாகக் கருதும் அளவுக்கே நிலைமையுள்ளது. இதை ஏற்படுத்தியதே சிங்கள இனவாதந்தான். அதாவது, சிங்கள இனவாதத்தைப் பாதுகாக்கும் அதிகாரத்தரப்பின் உபாயமே.

சிங்கள உபாயம் எல்லா நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வெற்றி பெற்று வந்தாலும் அதை ஒரு தீய பிசாசைப்போலச் சூழ்ந்து கொண்டிருக்கும் தொடர் நெருக்கடிகளை அதனால் தடுக்க முடியவில்லை. இதற்குக் காரணம் முன்னரே குறிப்பிட்டிருப்பதைப் போல அது பின்பற்றும் இனவாதமேயாகும். அதாவது தவறான அரசியல் அணுகுமுறைகளேயாகும்.

சனங்களை அழித்து, சொத்துகளை அழித்து, நாட்டை அழித்து, இன்று தன்னுடைய கழுத்தில் தானே சுருக்குக் கயிற்றைப் போட்டிருக்கிறது இந்தத் தவறான உபாயம்.

ஆனால், இந்த நெருக்கடியிலிருந்தும் நாளைக்கு சிங்களத் தரப்பு மீண்டு விடலாம். போரைச் செய்வதற்கும் புலிகளை ஒடுக்குவதற்கும் சர்வதேச சமூகத்தைத் தன்னுடைய உபாயங்களால் வெற்றி கொண்ட சிங்களத்தரப்பு இதிலும் வெற்றியடையலாம்.

ஆனால், இனவாதத்தைத் தொடரும்வரையில் அதனைத் தொடர்ந்து கொண்டேயிருக்கும் பல நெருக்கடிகள். இதைத் தடுப்பதற்கு எந்த உபாயத்தினாலும் முடியாது. இறுதியில் ஒருநாள் இந்த உபாயம் தோல்வியில் முடிந்து சமாதிக்குச் சென்று விடும். இது விதி.

ஆகவே, உபாயங்கள் என்பது எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதில்தான் அவற்றின் வெற்றியும் தோல்வியும் அமைந்திருக்கின்றன.

கத்தியைப் பயன்படுத்தி மரத்தையும் வெட்டலாம். மனிதரையும் வெட்டலாம். இதில் எதைச் செய்ய அதைப் பயன்படுத்தப் போகிறோம் என்பதில்தான் நமது அறிவு தங்கியிருக்கிறது. நமது பண்பும் தங்கியுள்ளது.

00

மனச்சாட்சியில் ஓட்டைகள்

Thursday 16 February 2012



நேர்காணல் -














‘வீடற்றவன்’ என்ற ஒரு நாவலை மலையகத்தின் மூத்த எழுத்தாளராக இருந்த சி.வி.வேலுப்பிள்ளை எழுதியிருந்தார். இலங்கையின் மத்தியிலுள்ள மலையகப் பகுதியில் இருக்கும் இந்திய வம்சாவழித் தமிழர்களுக்கு வீடற்ற வாழ்க்கை என்பது நூற்றாண்டுகளின் நீள்துயரம். அவர்களுடைய வீடுகள் என்பது, லயங்களே. ஏறக்குறைய சேரிப்புற வாழ்க்கை நிலவரத்தை ஒத்த அமைப்பு இந்தக் குடிசைகள். வசதிகளே இல்லாத லயங்களில் மந்தைகளைப் போல வாழ நிர்ப்பந்திங்கப்படும் நிலையை சி.வி வேலுப்பிள்ளை எழுதியிருந்தார். 


இந்த மக்களுக்கு வீடு மட்டுமல்ல காணியே இல்லை. ஆனால், நூற்றாண்டுகளாக இவர்கள்தான் தேயிலை, ரப்பர் தோட்டங்களில் மாடாக உழைத்து இலங்கையின் பெரும்பொருளாதாரத்தை ஈட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய காணியில்லாப் பிரச்சினையை மையப்படுத்தி ‘காளிமுத்துவின் பிரஜா உரிமை’ என்ற கதையை 1949 இல் எழுதியிருந்தார் அ.செ.மு. உரிமையற்ற மனிதர்களின் கதை என்ற வகையில் பின்னர், இது மிகப் புகழ்பெற்ற சிறுகதையாகியது. 


இதெல்லாம் மலையத்தின் - மலையகத்தமிழர்களின் நிலைமை. 


இப்பொழுது இதையும் விட மோசமான கட்டத்தில் இருக்கின்றனர் வடக்குக் கிழக்கில் வாழ்கின்ற தமிழர்கள். இந்தப் பிரதேசங்களில் வாழுகின்ற பல குடும்பங்களுக்குக் குடியிருப்பதற்கே ஒரு துண்டு காணி இல்லை. காணியில்லாதவர்களுக்கு வீடெப்படி இருக்க முடியும்? அகதி வாழ்க்கை முடிந்து ஊருக்குத் திரும்பினாலும் இவர்கள் குந்த ஒரு குடிநிலம் இல்லாத நிலை.  ஆனால், இவர்கள் போராட்டத்திலும் யுத்தத்திலும் ஏராளம் விலைகளைக் கொடுத்தவர்கள். 


இதேவேளை தமிழ் அரசியற் பிரமுகர்களிடமும் தலைவர்களிடமும் பெருந்தொகையான காணிகள் ஏக்கர்க்கணக்கில் பராமரிப்பின்றிய நிலையிலேயே உள்ளன. மேலும் புலம்பெயர்ந்திருக்கின்ற மக்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினருக்குத் தாராளமான அளவில் நாட்டில் காணிகள் உள்ளன. இந்தக் காணிகளில் ஒரு சிறு பகுதியை ‘மனம் உவந்து’ ஒவ்வொருவரும் பகிர்ந்தளித்தால் தங்களுடைய இன்றைய காணியில்லாத – வீடில்லாத அவலநிலை தீர்ந்து விடும் என்று சொல்கிறார்கள் காணியற்ற ஈழ மக்கள். 


மறுபக்கத்தில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வில் சர்ச்சைக்குரிய ஒரு விசயமாக இருப்பது காணி தொடர்பான பிணக்கு. காணி அதிகாரத்தைத் தமிழர் தரப்பு பிரதான அம்சமாகக் கோரிவருகிறது. இதைக் கொடுப்பதற்குப் பின்னடித்துக்கொண்டேயிருக்கிறது சிங்களத்தரப்பு. சிங்களத்தரப்பிடமிருந்து காணிக்கான அதிகாரத்தைப் பெற விரும்பும் நாம் காணியற்ற மக்களுக்கு எங்களிடம் இருக்கின்ற காணிகளில் ஒரு சிறு அளவைக் கொடுப்பதற்கு முன்வர வேண்டும் என்பதே பொது விருப்பமாகும். இந்த நிலையில் இந்தச் சுவையான முரண்களைக் குறித்துப் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களில் ஒருவராகிய ராதாகிருஸ்ணன் மாரியம்மா என்பவரிடம் உரையாடினோம். 


இவருடைய கணவர் போரின்போது நடந்த எறிகணை வீச்சில் கொல்லப்பட்டு விட்டார். ஒரு மகன் போராட்டத்தில் சாவடைந்துவிட்டார். 

00

யுத்தத்துக்குப் பிறகு எப்படி இருக்கிறீங்கள்? நிலைமை எப்பிடி இருக்கு?

என்னத்தைச் சொல்றது? எங்களுக்கு எப்பவும் பிரச்சினைதான். பாருங்க, இப்ப இருக்கிறதுக்கு காணியில்ல. காணியில்லைங்கிறதால வீடு குடுக்க முடியாதுங்கிறாங்க. அப்ப நாங்க என்ன பண்ண முடியும், சொல்லுங்க? இதப்போயி எல்லார்கிட்டயும் சொல்லியாச்சு. ம், பாக்கிறம். அப்பிடீன்னு சொல்றாங்களே தவிர, யாருமே ஒண்மே பண்ணல. நாங்க இன்னும் துன்பப்பட்டுக்கிட்டுத்தான் இருக்கோம்.

இதுக்கு முதல் எங்க இருந்தீங்க? 

இங்கதான் - கிளிநொச்சியிலதான் இருந்தம். அதுக்கு முன்னாடி கம்பளையில. 77 கலவரத்தில அடிச்சிக்கிட்டாங்க. ஓடி இங்கிட்டு வந்தம். அப்ப இந்தப் பக்கம் (கிளிநொச்சியின் மேற்கிலுள்ள உதயநகர்ப் பகுதியில்) காடு வெட்டி இருந்தம். நாங்க நாலு பொண்ணுங்க. அப்பாவுக்கு வயசாயிட்டு. அக்கா அவங்களுக்கு அந்தக் காணியக் குடுத்திட்டாச்சு. அப்புறம் எங்க ரண்டு பேருக்கு காணி கிடையாது. நாங்க மருத நகர்ப்பக்கம் கல்யாணமாகிப்பறம் இருந்தம். அதுல இருந்த பெரிய காணியில நாம குடியிருந்தம். ஏம் புருசன் அந்தப் பக்கத்திலதாங் இருந்தாரு. அவுங்க அப்பா, அம்மா எல்லாமே அந்தப் பக்கத்திலதான் ரெம்ப நாளா இருந்தாங்க. நாம்பளே அந்தக் காணியைப் பாத்து வெள்ளாமையைச் செஞ்சுட்டு வந்தம். இயக்கப் பெடியனுவள்கூட எங்களுக்குச் சப்போர்ட் பண்ணினாங்க. நாங்க அவுங்கள பாத்துக்குவோம்.

அதுக்குப் பின்னாடி, சண்டை வந்தப்பிறம் நாங்க ஓடிட்டுப் போறது, பின்னாடி வர்றது. இப்புடியே இருந்திச்சில்லா. கடைசீல நாங்க உசரப்பக்கமா அஞ்சாறு வருசத்துக்கு முன்னாடி ஒரு கொட்டில போட்டுக்கிட்டு இருந்தம். பெடியங்களும் (இயக்கம்) ஒத்தாசையா இருந்தாங்க.

ஆனா, எல்லாமே போயிட்டு. பின்னாடி, சண்டை வந்தப்பிறம், நாங்க ஓடிப்போயி, இந்தக் காடு கடெலெல்லாம் அலைஞ்சிட்டு, முகாமெல்லாம் போயி இப்ப வந்திருக்கம். இஞ்ச வந்தா...

இப்ப எப்படி இருக்கிறீங்க?

கடவுளே, அத என்னத்தச் சொல்ல? இப்ப நாம இருக்கிற இந்தக் காணிக்கு ஆளாளுக்கு ரண்டு பேர் வந்து அடிச்சிக்கிறாங்க. தங்க வீட்டுக் காணியாம். அவுங்க தாத்தாட காணி, அப்பாட காணின்னு என்னமோ சொல்லிக்கிறாங்க. இவ்வள நாளா எங்கிட்டு இருந்தாங்களோ... முன்னாடி ஒருத்தர்தான் என் வீட்டுக்காரர்ட அப்பா அவுங்கள இந்தக் காணீல கொண்டாந்து இருத்தினாராம். ஒரு அஞ்சாறு வருசத்துக்கப்பறம் அந்தாளும் வர்ல. வேற யாரும் இந்தப் பக்கமே வர்ல. நாமதான் எல்லாத்தையும் பாத்துக்கிட்டது. இல்லைன்னாக்கா இப்படி இந்த நிலம் இருக்குமா? காடெல்லாம் வளந்திருக்குமே. பாருங்க நாங்க வெச்ச தென்னப்புள்ளய காய்க்குது. இருவது புள்ள வெச்சம். இப்ப பதிமூணு இருக்கு.

இப்ப வந்திருக்காங்க. சண்டை முடிஞ்சிருக்கில்ல. இப்ப பாத்து எல்லாருமே வர்ராங்க. அந்தா அந்தப் பக்கங்கூட யாரோ வந்து தங்கவூட்டுக் காணி அப்பிடீன்னு சொல்றாங்களாம். அங்க இருக்கிறவங்க நம்பள மாதிரி அம்பது அறுவது வருமா அங்கனயே இருக்கிறாங்க. இப்ப வந்து இடத்தை விடு. எழுந்திட்டு எங்கிட்டாவது போ அப்பிடீன்னா என்ன பண்றது, சொல்லுங்க?

நம்ம கிட்டக் கூட வந்து நாங்க இங்க இருந்து எழுந்துக் கிட்டு எங்கயாச்சும் எடம் பாத்துக்கிட்டு போங்க அப்படீன்னுறாங்க. அவங்க கூடத்தான் ஜீ. எஸ்ஸ_ம் (கிராம அலுவலர் அல்லது விதானையார்) இருக்கார். பத்திரம் எல்லாம் வைச்சிருக்காங்க. ரண்டு பேருந்தான். அவுங்களுக்க அடிதடி வேற. யார் வூட்டுக்காணிங்கிறதே அவுங்களுக்கப் பிரச்சனை.

இம்புட்டு நாளும் வெளிநாட்டுல இருந்தாங்களாம். இப்ப வந்திருக்காங்க. இத்தினை நாள் நாங்கதான் இந்த நிலத்தப் பாத்தம். பாருங்க ஒரு பத்தை இருக்கா? ஒரு செடி இருக்கா. இந்தாளு எந்த நேரம்பாத்தாலும் எதையாவது செஞ்சிட்டிருப்பாரு. ராத்திரில – நிலாவில கூட காணிவேலை பாப்பாரு. எங்க வீட்டு வளவைப் போல இதைப் பாத்திருக்கோம். பிள்ளையைப் போல பாத்திருக்கோம். குடியிருக்கிற இடமெல்லா. ஆனா, இப்ப யாரோ வந்திருக்காங்க, தங்கவூட்டு நிலம்னு. என்ன பண்ண?

ஆர்.டி.எஸ் (கிராம அபிவிருத்திச் சங்கம்) கிட்ட போனா அவங்க ரண்டு பக்கத்துலயும் நியாயம் இருக்கெங்கிறாங்க. அவங்க கையில பத்திரம் இருக்காம். அதனால அவங்களுக்குத்தான் நிலம் சொந்தம்கிறாங்க. ஆனா நாம ரொம்பக் காலமாக, ரண்டு மூணு தலைமுறைங்களா இங்கிட்டே இருக்கிறதால எங்களுக்கும் உரித்துண்டுங்கிறாங்க.

அதெப்பிடி ரண்டு பக்கமும் ஞாயம் இருக்க முடியும், சொல்லுங்க? இந்த ஞாயத்தை ஏ.ஜி.ஏ ஏத்துக்கிட மாட்டேங்கிறாரு. அவருக்குச் சட்டந்தான் பெரிசுங்கிறார். பத்திரம் வைச்சிக்கிறவங்களத் தாம் எதுவும் பண்ண முடியாது. அவங்களா எதனாச்சும் பண்ணினாத்தாங்கிறாரு அவரு. அவங்க விரும்பி காணியைக் குடுத்தாத்தான் எதனாச்சும் செய்யலாம்கிறார் அவரு.

அவருகிட்ட நம்ப நிலமையை சொல்லிப் பாத்தாச்சு. அதுக்கு என்ன பண்ண முடியும்கிறாரு. வேணும்னாக்கா அரசாங்கத்துக்க காணியில தேடிப்பாத்து எதனாலும் செய்ய முடியுமாம்னு பாக்கறேன் ண்றாரு.

ஆனா நாம இத விட்டு இன்னொரு இடத்துக்க போகமுடியுமா? நாலு தலைமுறையா இங்க இருந்திட்டோம். இடமெல்லாம் பழகீட்டு. தொழில் பழகீட்டு. ஆட்களெல்லாம் பழகீட்டு. எல்லாத்தேயும் விட்டுட்டுப் போயிட முடியுமா? இன்னுமா பெட்டி படுக்கை எல்லாம் தூக்கிட்டு இடம்தேடி அலையணும்? இப்பிடியே அலைஞ்சிட்டிருக்க முடியுமா?

அங்கிட்டுப்போயி என்ன பண்ண முடியும்? இந்த பாருங்க, போன மாசம், இந்தியா கட்டிக் குடுத்த வீட்ட எடுத்திட்டு எங்க அக்கா பொண்ணு அங்க – அறிவியல் நகர்ப்பக்கத்தில ரொம்பக் கஸ்ரப்படுது. எடம் புதுசு. ஆக்களெல்லாம் புதுசு. அங்கிட்டு ஒரு தொழில் கிடையாது. அங்கிட்டிருக்கிற ஆக்கள்லாம் இங்கிட்டுத்தான் வயல் வேல, மேசன் வேலக்கெல்லாம் வர்ராங்க. எல்லாத்துக்கும் இது ஏலுமா?

அங்கிட்டு தண்ணிக்கே ரொம்பப் பாடு. ரண்டு மூணு நாளுக்கு ஒருக்கா தண்ணி விடுறாங்க. இருக்கி ஆக்கள்லாம் ரெம்பக் கஸ்ரப்படுதுகள். நாங் அங்கிட்டுப் போயிருந்தன். அங்க பாத்தா, ரொம்ப வருத்தமாயிருக்கு. புருசனை எழந்திட்டவங்க, புள்ளய எழந்திட்டவங்க அப்படீன்னுதான் எல்லாரும் இருக்காங்க. அக்கா பொண்ணுட புருசன் செல்லில செத்திட்டாரு. அவ ஒரு புள்ளயோட ரொம்பப் பாடுபர்ரா. இங்கிட்டு இருந்தப்ப, வயலுக்குப் போவ. ஒரு நாளைக்கு ஐநூறு ரூபாய் குடுத்தாங்க. எந்த நாளும் இல்லாட்டியும் நாலு ஐஞ்சு நாளுக்கு வேலை பாக்கும் அந்தப் புள்ள. ஆனா, அங்கிட்டு ஒண்ணுமே கிடையாது. நிவாரணம் கூட இல்லைன்னுட்டாங்களாம்.

சரி, இந்தப் பிரச்சினைகளை எல்லாம் நீங்கள் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் தெரியப்படுத்தவில்லையா?

சொல்லியிருக்கோம். ஆனா அவங்க இப்ப எதுவும் பண்ண முடியாதுங்கிறாங்க. காணிப் பிரச்சினை எல்லாமே இப்ப பாக்க முடியாது அப்பிடீன்னுட்டாங்க. அப்ப நாம என்ன பண்ணறது எண்ணு கேட்டா, அதுக்குப் பதில் கிடையாது.

இப்பிடி ஒரு நிலைமைல என்ன பண்ண முடியும்னு சொல்லுங்க. நம்பளுக்குத்தான் வீட்டுத் திட்டம் கூட இல்ல. இந்த மாதிரி எவ்ளவோ ஆட்கள் இருக்கிறாங்க. காணி இல்ல அப்பிடீன்னுட்டு வீட்டு உதவியைக் கான்சல்ட் பண்ணிடறாங்க.

திரும்ப இந்த உதவியெல்லாம் கிடையாது. ஆனா இதுக்கு எதுவும் பண்ண முடியாதுன்னு சொல்லிடுறாங்க.

அப்படியென்றால் இப்ப இதுக்கெல்லாம் நீங்கள் என்ன செய்யலாம் எண்டு நினைக்கிறீங்கள்?

ஒண்ணுமே பண்ண முடியாது. பாருங்க, இந்த மண்ணில இவ்வளவு காலமா இருந்திருக்கோம். இந்த இடத்திலதான் நாங்க வளந்தது. படிச்சது. கல்யாணம் பண்ணிக்கினதும் இங்கினதான். நம்பட புள்ளங்க பிறந்தது, நாம இருக்கிறது எல்லாம இங்கிட்;டுதான். ஆனா, இப்ப அவனவன் வந்து கிளம்பெங்கிறான். பாருங்கய்யா காலத்த.

இவ்வளவு நாள இவங்கெல்லாம் எங்கிட்டிருந்தாங்க? அட இப்பகூட இங்கவா இருக்கப்போறாங்க? நாளைக்கே போயிடுவாங்க. ஆனா சொத்த எடுத்துக்கப் போறாங்களாம். இது ஞாயமா சொல்லுங்க? இவ்வளவு காலமா இருந்து இந்த நிலத்தைப் பாத்திருக்கிறம். குடியிருந்திருக்கிறம். இப்ப வேரோட புடுங்கிறாங்கய்யா. அட இதுகூட அரசாங்க நிலந்தான். ஆனா அவங்க கையில பேமிற் (அத்தாட்சிப் பத்திரம்) இருக்குங்கிறாங்க. இதப்பத்தியெல்லாம் ஆருக்குத்தான் உண்மை தெரியுமோ!

............ (சற்று மௌனமாக இருந்த பின்னர் மீண்டும் தொடர்ந்தார்)

நம்மட துக்கம் போகாதய்யா. ஆளாளுக்கு வந்து துரத்திக்கிட்டே இருக்கிறாங்க. எல்லாருமே அதிகாரந்தான் பண்றாங்க. அதுக்கெல்லாம் ஒரு ஞாயம்.

காணிப்பத்திரம் இல்லைன்னா, வீடு குடுக்க முடியாதுன்னா நாம என்ன பண்ணுறது? எல்லாருக்கும் வீடு கிடைக்குது. நம்மளக்கு இல்லை. நாம புள்ள குட்டிக்காரங்க. இந்தச் சண்டைக்குள்ள எல்லாம் இருந்து எவ்ளவு கஸ்ரமெல்லாம் பட்டம். ஏன் புருசங்கூட செத்திட்டாரு. புள்ள ஒண்டில்ல. இந்த நிலைமையில என்ன பண்ண முடியும்? குடும்பத்தில உழைக்கிற ஆட்களெ இல்ல.

இந்த வயசில என்னால எல்லா இடத்துக்கும் ஓடித் திரிய முடியுமா?

காணியற்ற ஆட்களுக்குக் காணி வழங்குவதைப் பற்றி அரசாங்கம் ஆராய்ந்து கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறதே. அப்படியான ஒரு நிலை வந்தால் உங்களுடைய பிரச்சினை தீருமல்லவா?

ஆனா அதுக்கு யாரு பொறுப்புச் சொல்றது? சும்மா இப்பிடிச் சொல்லிக்கிறாங்க. ரொம்பப் பேர் காணியில்லாம அலைஞ்சிட்டிருக்காங்க. ஒருத்தருக்கும் காணி குடுக்கிறதாக் காணல்ல. இப்ப இந்தியன் வீட்டில கொஞ்சப் பேருக்குக் குடுத்திருக்காங்க.

எப்ப காணி குடுப்பாங்க? எப்ப நாங்க அதில வீடு கட்டிறது? இதெல்லாம் யாருக்குத் தெரியும்? ஒண்ணையுமே விவரமா யாரும் பேச மாட்;டேங்கிறாங்க. இந்த வீட்டுத் திட்டம் போயிடுச்சின்னா அவ்வளவுதான். பிறகு எதுவுமே கிடையாது. நாங்க குடிசைக்குள்ளதான்.

அதான் சொல்றேன். இதெல்லாம் நடகிற காரியம் இல்ல. அப்பிடி இருந்தா இப்பவே காணிக்கு ஒரு முடிவைச் சொல்லிடுவாங்க. இப்பதான காணிக்கு வழிவேணும். அப்புறம் எதுக்கு? இப்பதானே வீட்டைக்குடுக்கிறாங்க.

இப்பிடியே சொல்லிக் கொண்டிருந்தால் உங்களுடைய எந்தப் பிரச்சினையும் தீராது. ஆனால், நீங்கள் சொல்வதில் நியாயம் உண்டு. உங்களுடைய இந்தப்பிரச்சினையை விளங்கிக் கொண்டு உதவக்கூடிய ஆட்கள் யாரும் இல்லையா?

சிலர் உதவ வந்தாங்க. ஆனா அவங்க என்ன பண்ண முடியும்? காணிக்குப் பத்திரத்தை அவங்களால வழங்கிட முடியுமா என்ன? அவங்க ஜீ.எஸ், ஏ.ஜீ.ஏ, ஆர்.டி.எஸ், எல்.ஓ இப்பிடி எல்லார்கிட்டயும் பேசிப்பாத்துட்டாங்க. ஆனா ஒரு வழியும் கிடைக்கல்ல.

சட்டம் போட்டிருக்காம். நீதி மன்றத் தடை வந்திருக்காம். அப்பிடியெல்லாம் சொல்லிக்கிறாங்க. முன்னாடி நாங்க இருந்த காணிக்கு போம் போட்டாங்க. நாங்க அத நிரப்பிக் குடுத்திருக்கம். ஆனா அதெல்லாம் இப்ப செல்லாதுன்னுட்டாங்க. இப்பிடியே எதெல்லாமோ சொல்லிச் சொல்லிக் காலத்தப் போக்கிக்கிறாங்க.

எனக்கு என்ன பண்றதுன்னே புரியல்ல. இனி திரும்பி நாம கம்பளைக்குப் போக முடியுமா? அங்கிட்டு எனக்கு யாரத்தெரியும்? இப்ப இங்கிட்டும் இருக்க முடியாது. அங்கிட்டும் போவ முடியாது. கடவுளே! நாலு புள்ளங்களையும் வெச்சிக்கிட்டு என்னதான் பண்ணப்போறனோ!

அப்படியென்றால், இப்ப நீங்கள் இருக்கும் காணிக்கு உரிமை கோரிக்கொண்டு வந்திருப்பவர்களிடம் உங்களுக்குக் கொஞ்சக் காணியைத் தரும்படி கேட்கலாமே!

அதுக்கு அவங்க எங்களோட பேச மாட்டேங்கிறாங்க. இந்த மாதிரிப் பிரச்சினை எங்களுக்கு மட்டுமில்ல. அந்தப் பக்கமா இன்னும் பத்துக்குடும்பங்க இதே மாதிரி இருக்கிறாங்க. அவங்களும் அவங்க இருக்கிற காணிக்கு வந்திருக்கிற ஆட்கள் கூடப் பேசியிருக்கிறாங்க. ஆனா அவங்க அதுக்குச் சம்மதிக்கல்ல.

தங்கட காணிக்குள்ள வேற ஆட்களை வெச்சிருக்கிறது நல்லதில்லன்னு சொல்றாங்க. எப்பிடிருக்கு நிலைமை பாத்தீங்களா?

இவ்ளவு நாளா நாமளே காணியைப் பாக்கணும். இப்ப மட்டும் அவங்களுக்கு நாம தேவை இல்ல. காரியம் முடிஞ்சிருக்கல்ல. அவ்வளவுதான். இனி நாமெல்லாம் யாருக்கும் தேவையில்ல. என்ன மனுசங்கப்பா இவங்கெல்லாம். என்னதான் படிச்சிருக்கிறாங்களோ!

00

குறிப்பு – 

யுத்தம் முடிந்த பின்னர் வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்குத் திரும்பி வருவோர், தங்களுடைய காணி உறுதிகளைக் கொண்டு வந்து தங்களின் காணி மற்றும் சொத்து உரிமைகளை நிலைநாட்டிக் கொள்கிறார்கள். இதில் பலருக்கு ஏக்கர்க்கணக்கான காணிகள் பராமரிப்பின்றிய நிலையில் உள்ளன. சிலருடைய காணிகளை பல குடும்பங்கள் நீண்டகாலமாகவே பராமரித்து வந்திருக்கின்றன. ஆனால், காணி உறுதிகளைக் கொண்டு வருவோர் அந்த உறுதிகளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி இந்தக்குடியிருப்பாளர்களை வெளியேற்றி வருகின்றனர். இப்படி வெளியேற்றப்படும் குடும்பங்கள் பெரும்பாலும் மிக வறிய – ஏழைக்குடும்பங்களாகவே உள்ளன. 


இதில் அரசாங்கத்தினால் குடியேற்றத்திட்டங்களின் போது வழங்கப்பட்ட காணிகளை விட்டு வெளியேறிப்போனோரும் உண்டு. இந்தப் பெண் இப்படியான காணி ஒன்றிற்தான் நீண்டகாலமாக வசித்து வருகிறார். இப்படிப் பல குடும்பங்கள் வன்னியில் உள்ளன. ஆனால், இப்பொழுது உருவாகியிருக்கும் போருக்குப் பிந்திய சூழலில் பலரும் தங்களுடைய காணிகளுக்கான உரித்தாவணங்களைத் தூசி தட்டி எடுத்துக்கொண்டு வந்து உரிமை கொண்டாட முயல்கின்றனர். தங்களுடைய உரித்தைக் கொண்டாடும்போது, இதுவரையில் யுத்தத்தின் மையத்தில் வாழ்ந்து கொண்டு இந்தக் காணிகளைப் பார்த்துப் பராமரித்தவர்களையும் சற்று மனங்கொள்ள வேணும்.


இதனால் பல முரண்கள் ஏற்பட்டுள்ளன. யுத்தச் சூழலுக்குள் முப்பது, நாற்பது ஆண்டுகளாக காணிகளைப் பராமரித்து, அதற்குள்ளேயே வாழ்ந்து வந்த குடும்பங்களின் நிலைமையைக் கருத்தில் எடுக்காமல் உரித்துக் கொண்டாடும் மனோ நிலை மிகக் கவலை அளிக்கும் ஒன்றாகும். ஆனால், இதைக்குறித்து யாரும் வெட்கப்படுவதாகவோ சிந்திப்பதாகவோ இல்லை. 


தமிழ்ச் சமூகத்திற்கும் காணிக்கும் பெரும் பிணைப்புண்டு. காணிக்காகவே – காணியின் எல்லைத் தகராறுகளாலேயே சொந்தச் சகோதரர்களைக்கூடப் பகைத்துக்கொள்ளும் மனநிலை உள்ளவர்கள் ஈழத்தமிழர்கள். இந்தப் பின்னணியில் இந்தப்பிரச்சினையை - இந்த ஏழை மக்களின் நிலையை யாரும் எளிதிற் புரிந்து கொள்ளலாம். 


மேலும் அரச காணிகளைக் காணியற்ற பொதுமக்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்குப் பின்னடிக்கும் அதிகாரிகள், அரசாங்கத்தின் செல்வாக்கோடு வரும் தனியாருக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் தாராளமாகவே காணிகளை வழங்குகின்றனர். 


சட்டத்திலும் நிர்வாகத்திலும் தாராளமாக இந்தமாதிரி ஓட்டைகள் இருப்பதொன்றும் புதிதல்ல. ஆனால், மனச்சாட்சியில் ஓட்டைகள் விழுவதே ஏற்றுக்கொள்ளக் கடினமான விசயம். 

00

எல்லைகடந்த அதிகாரம் = ஜனநாயக நெருக்கடி

Sunday 5 February 2012
















அதிகாரத்தின் வரம்புகளே மக்களையும் வரலாற்றையும் சேதமற்ற முறையில் பாதுகாக்கின்றன. எல்லையற்ற அதிகாரம் எல்லாற்றையும் சிதைத்து விடுகிறது.

உலக அரசியல் வரலாற்றில் இந்தப் பாடம் பெரும்போதனைகளைத் தந்துள்ளது. ஆனால், அதேயளவுக்கு இந்தப் பாடத்தை எள்ளி நகையாடி நிராகரித்த வரலாறும் உண்டு.

இலங்கை அரசியலில் தமிழ், சிங்களத் தரப்புகள் என்ற பேதங்களின்றின்றி அதிகாரத்தின் எல்லைகளை உச்சமாகக் கடந்த நிகழ்ச்சிகள் தாராளமாக உண்டு. அதிலும் சிங்களத்தரப்பின் எல்லைகடத்தல் கட்டற்றது. இடையறாத தொடர்ச்சியைக் கொண்டது.

இத்தகைய கட்டற்ற, தொடர்ச்சியான, எல்லைகடந்த அதிகாரப் பிரயோகத்தின் போதே ஜனநாயகமும் சுதந்திரமும் கேள்விக்குள்ளாகும் நிலை ஏற்படுகின்றது. இந்தச்சந்தர்ப்பத்திற்தான் மக்கள் மிகப் பெரும் நெருக்கடிகளைச் சந்திக்கிறார்கள்.

இலங்கையின் நெருக்கடிகள் இன்னமும் தீரவில்லை. முன்னர் இருந்த நெருக்கடிகளுக்குப் போர் காரணமாகக் காட்டப்பட்டது. இப்போது போர் முடிந்த பிறகு, காரணங்களைக் காட்ட முடியாது விட்டாலும் தேசிய பாதுகாப்பு என்றொரு காரணமும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற அரசாங்கமே ஆட்சியிலிருக்கிறது என்பதும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை தனிநபருக்கான அதிகாரத்தைச் செறிவாக்கியுள்ளது என்ற காரணமும் பெரும்பாலான கட்சிகள் அங்கத்துவம் செய்யும் அரசாங்கமாக அது இருக்கிறது என்பதும் அதிகாரத்தை அரசுக்குக் குவித்துள்ளன.

இதன்காரணமாக ஆட்சியின் மையப்பகுதியில் இருக்கும் தலைவர்கள் தங்களின் சக்தியை மிகவலுவுடையதாக்கியிருக்கின்றனர்.

வீதியிலே ஓடுகின்ற பஸ் வண்டிகளில் இருந்து அரசாங்கத்தின் உயர் பீடங்கள் வரையில் இந்த அதிகாரத்தின் அடையாளங்களைக் காணமுடியும்.

எங்கும் ஒரே அடையாளம் என்ற வகையில் நாட்டின் தலைவரும் அவருடைய குடும்பத்தினரும் காட்சிப்படுத்தப்படுகின்றனர்.

இதற்கு யாரும் சில நியாயங்களைக் கற்பிக்கலாம். ஆனால், இதெல்லாம் நிச்சயமாக ஒரு ஜனநாயக நாட்டுக்கு அழகானவையே அல்ல. இது மன்னராட்சிக் காலமோ குடும்ப ஆட்சிக்கான சட்டங்கள் இயற்றப்பட்ட நாடோ அல்ல.

பிறருக்கு இடமளித்தல், பிறருக்கும் பிறவற்றுக்கும் விட்டுக்கொடுத்தல், ஏனையவற்றையும் முன்னிலைப்படுத்தல், சமமாக நடந்து கொள்ளுதல் என்ற அம்சங்களை வளர்ப்பதே போருக்குப் பிந்திய நாட்டின் அவசியத் தேவைகள்.

கடப்பாடுகளைப் பற்றிய அக்கறையற்ற மீறல்களாலும் உச்சகட்ட அடக்குதல்களாலும் மோசமாகக் காயடிக்கப்பட்ட ஜனநாயகச் சூழலை மீண்டும் உருவாக்க வேண்டியுள்ளது. மக்களுக்கு ஜனநாயகத்தைப் பற்றிய புரிதலையும் அதன் மீதான நம்பிக்கையையும் ஏற்படுத்த வேண்டும்.

அதிலும் இனரீதியான போர் நடைபெற்றதொரு நாட்டில் நல்ல சமிக்ஞைகள் காண்பிக்கப்பட வேண்டும். மக்களின் நம்பிக்கையை அந்தச் சமிக்ஞைகள் உருவாக்க வேண்டும்.

மக்கள் பல எதிர்பார்ப்புகளுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நம்பிக்கையளிப்பதன் மூலமாக அவர்களின் மனதில் நிரந்தரமாகவே குடியேற முடியும். இதற்கொன்றும் கடினமாக வேலை செய்ய வேண்டியதில்லை.

சனங்களுக்கு விசுவாசமாக நடந்தாற் போதும். யாருடையதையும் யாருக்கும் எடுத்துக் கொடுக்க மாட்டோம் என்ற உறுதிப்பாட்டுடன் காரியங்களைச் செய்தால், அவற்றைப்பற்றி மக்களுக்கு முறையாக எடுத்துச் சொன்னால், இன ஐக்கியத்தின் அத்திபாரத்தை உருவாக்க முடியும்.

ஆனால், இதற்குப் பதிலாக தான்தோன்றித் தனமாகப் பேசுவதும் எழுந்தமானமாக நடந்து கொள்வதும் கேள்விகளுக்கு அப்பாலான பிராந்தியத்தில் தங்களை வைத்துக்கொள்வதும் எதிர்விளைவுகளையே உருவாக்கும்.

இன்றைய இலங்கை அச்சத்தினால் உழன்று கொண்டிருக்கிறது. வெளிநாடுகளின் அழுத்தங்கள் ஒரு பக்கம் இலங்கையைக் கலங்கடிக்கின்றன. உள்நாட்டுச் சக்திகளின் கொந்தளிப்பான மனநிலையை இட்டும் அரசாங்கம் கலங்கிக் கொண்டிருக்கிறது.

ஆகவே, அரசாங்கத்தின் உளநிலை அமைதியில் இல்லை. இந்த நிலையில் அதனால் எப்படி நாட்டின் சுபீட்சத்தைப் பற்றிச் சிந்திக்க முடியும்? என்று கேட்கிறார் ஒரு மூத்த சிங்கள ஊடகவியலாளர்.

உளநிலையில் அச்சத்தின் பாரம் அதிகரித்தால் குழப்பமும் பதற்றமும் சந்தேகமும் ஏற்படும். இலங்கையின் சுதந்திரத்துக்குப் பிந்திய காலம் என்பது இலங்கையைப் பதற்றமான சூழலுக்குள்தான் தொடர்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறது.

இலங்கையின் கொள்கை வகுப்பாளர்களும் சிந்தனையாளர்களும் நாட்டை இந்த நிலையில் இருந்து மீட்பதற்காகப் பாடுபடவில்லை.

நாட்டின் பிரதான மதங்களாக இருக்கின்ற பௌத்தமும் கிறிஸ்தவமும் சைவமும் இஸ்லாமும் கூட இரத்தத்தில் தோய்ந்தனவாகவோ இரத்தத்தில் தோய்க்கப்பட்டதாகவோதான் இருக்கின்றன.

இரண்டாம் உலகப் போரின் பொழுது ஜேர்மனியில் ஹிட்லருக்கு ஆதரவளித்ததைப் போன்ற ஒரு மனநிலையிலும் நியாய உருவாக்கத்திலுந்தான் இலங்கையின் மக்கள் இருக்கின்றனர்.

ஒருவரின் மீது ஒருவர் பழிதீர்ப்பதற்காக அவர்கள் வெட்கப்படவேயில்லை. ஒரு சமூகத்தின் வாழ்வின் மீது இன்னொரு சமூகம் நஞ்சை ஊற்றுவதற்கும் பின்னிற்கவில்லை. இதெல்லாம் தவறு என்று அவை கருதவும் இல்லை.

இல்லையெனில், அமைதியும் வளமும் நீண்ட பாரம்பரியமும் மதக் கட்டுப்பாடுகளை அடியொற்றித் தமது பண்பாட்டையும் ஒழுக்கத்தையும் வகுத்துக்கொண்ட இலங்கையின் சமூகங்கள் இவற்றுக்கெதிராக வன்முறையில் ஈடுபட்டதை என்னவென்பது?

சுதந்திரத்துக்குப் பிந்திய இலங்கையின் வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட இனவன்முறைகளுக்கான அடிப்படைகள் எப்படி உருவாகின? இந்த வன்முறைகளின்போது ஒருவரின் மீது ஒருவர் பழிதீர்ப்பதற்காக யாரும்  வெட்கப்படவேயில்லை. ஒரு சமூகத்தினுடைய வாழ்வின் மீது இன்னொரு சமூகம் நஞ்சை ஊற்றுவதற்குப் பின்னிற்கவில்லையே. இதெல்லாம் தவறு என்று அவை கருதவும் இல்லையே.

இந்த இடத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடும் விசயத்தை மீள்பதியலாம். அது இரண்டாம் போரின்போது யூதர்களின் மீது, நாஜிகள் உச்ச வன்முறையை நிகழ்த்திக்கொண்டிருந்த காலம்.

அந்தச் சூழலைப் பற்றிய தன்னுடைய கேள்விகளை ஜெயமோகன் எழுப்புகிறார்.

‘சாதாரண மக்கள் எப்படி இந்தக் கொலைகளை ஒத்துக்கொண்டு ஹிட்லரின் அணியில் திரண்டார்கள்? எளிய படைவீரர்கள் எப்படி இந்த படுகொலைகளைச் செய்தார்கள்? அதைவிட நாஜிகளை ஆதரித்த எழுத்தாளர்களும் கலைஞர்களும் எப்படி இப்படுகொலைகளை ஏற்றுக்கொண்டார்கள்?

நாஜிகளின் படுகொலை அமைப்பில் மருத்துவர்களும் அறிவியலாளர்களும் இணைந்திருந்தார்கள். யூதர்களைக் கொல்ல சான்றிதழ் வழங்கியது மருத்துவர்களே. அறிவியலாளர்கள் யூதர்களை தங்கள் ஆய்வுக்கூடங்களில் பரிசோதனை மிருகங்களாக பயன்படுத்திக் கொண்டார்கள்’.

இதெல்லாம் எப்படி நிகழ்ந்தன?

காலம் மாறியிருக்கிறது. இது இரண்டாம் உலகப்போர் முடிந்து அறுபது ஆண்டுகளுக்குப் பிந்திய காலம். அந்த நூற்றாண்டு முடிவுற்று இன்னொரு புதிய நூற்றாண்டு பிறந்து விட்டது. மனிதனின் அறிவியல் வளர்ச்சிகள் மிகப் பெரும் எல்லையை நோக்கி விரிந்துள்ளது.

தவறுகளில் இருந்தும் குற்றங்களில் இருந்தும் போதாமைகளில் இருந்தும் மனிதனையும் அவனுடைய சமூகத்தையும் விடுவித்துக்கொள்வதற்கான சிந்தனையும் தத்துவங்களும் தொழில் நுட்பமும் அறிவும் விஞ்ஞானமும் உழைப்பும் பண்பாடும் உருவாகியுள்ளன.

ஆனால், இவையெல்லாவற்றையும் நிராகரித்து விட்டு அல்லது இவற்றின் இடுக்குகளுக்குள்ளால் அதிகாரத்தைக் கைப்பற்றும் மனோபாவம் மட்டும் அதே விலங்குநிலையில் இன்னும் உள்ளது.

இதுதான் மானுட குலத்தின் துயரவிதியா? இப்படி எண்ணும்படியே நிலைமைகள் உள்ளன. அரசியல் என்பது எதையும் எவரையும் பாதுகாப்பது, உருவாக்குவது, மேம்படுத்துவது என்ற அர்த்தத்துக்கு அப்பால், எல்லாவற்றையும் சிதைப்பது என்ற முறைமையில் - பழைய சுவடுகளின் தடத்தில் பயணிப்பது பொருத்தமானதே அல்ல.

இத்தகைய அரசியலின் பலவீனங்களை முதலீடாக்கிக் கொண்டு மேற்குலகின் எஜமானர்களும் ஏகாதிபத்தியர்களும் தங்களின் மூக்கை நுழைத்துக் கால்களைப் பதித்துக் கொள்கிறார்கள் உலகெங்கும்.

இத்தகைய நிலையிற்தான் இன்றைய இலங்கையின் நிலைவரமும் உள்ளது. பதற்றமும் அந்நியச் சக்திகளுக்கான வாய்ப்புகளைத் திறந்து விடக்கூடிய நிலையும் அதிகரித்துள்ள சூழலில்தான் இலங்கை அரசியலும் ஆட்சியம் நடந்து கொண்டிருக்கின்றன.

வெளியாரின் தலையீட்டினால் வெளியாரைத் தவிர வேறு யாருக்குமே நன்மைகள் கிட்டாது. இதை மக்கள் புரிந்து கொள்வதும் குறைவு. மக்களுடன் உரையாடலைச் செய்வதற்கு யாருக்கும் நேரம் இல்லை. அதை யாரும் விரும்பிக் கொள்வதும் இல்லை.

மக்களின் கேள்விகள் தங்களைக் காயப்படுத்தி விடக்கூடும். அல்லது நிர்வாணப்படுத்தி விடக்கூடும் என்று ஆட்சியாளர்களும் அரசியல் செய்வோரும் அஞ்சுகின்றனர்.

ஆனால், அரசியலைப் பொறுத்து மக்களின் கேள்விகளே அரசியலைச் சுத்தப்படுத்தும் மருந்தாகவும் பயிருக்கு ஊற்றப்படும் நீரைப் போன்றும் இருக்கிறது.

சனங்களின் கேள்வி அரசியலாளர்களை யதார்த்தத்துடனும் உண்மையுடனும் இணைத்து வைத்திருக்கின்றன. இப்படியான ஒரு நிலைமை ஏற்படும்போது சனங்களின் மனங்களில் அந்த அரசியலாளர்களும் அவர்களுடைய கொடிகளும் இடையறாது பறந்து கொண்டிருக்கும்.

ஆனால், இது மக்களுக்கும் தங்களுக்கும் இடையிலான வெளியைக் குறைத்து ஒன்றாக்கி விடும் என்று ஆட்சியாளர்களும் அரசியலாளர்களும் கருதுகிறார்கள். இடைவெளியொன்றில் இருக்கும் அதிகாரப் படிநிலையில் இருக்கின்ற சுவை மற்ற ருஸிகளைச் சுவையற்றதாக்கி விடுகிறது.

அதிகாரத்தின் ருஸியைச் சுவைத்த நாக்கு, ஒரு போதுமே பிற சுவைகளை விரும்புவதில்லை. அது மரணத்தின்வரையிலும் அதற்காகவே ஏங்கிக் கொண்டிருக்கும்.

வரலாறு என்னதான் மகத்தான பாடங்களைக் கற்றுக் கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்வதற்கான மனம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. பேராழுமைகள் என்று சொல்லத்தக்க மனிதர்கள் தங்களைத் தாங்களே உருவாக்காத வரையில் - ஒவ்வொரு மனிதரும் தன்னை மனிதராக, மனச்சாட்சியின் பாற்பட்டவராக, தன்னைத் தானே உணர்ந்து கொள்ளும்வரையில் அரசியலும் அறமும் வாழ்க்கையும் நாடும் பிழைத்தேயிருக்கும்.

மறுபடியும் திரும்பச் சொல்வதானால், அதிகாரத்தின் வரம்புகளே மக்களையும் வரலாற்றையும் சேதமற்ற முறையில் பாதுகாக்கின்றன. எல்லையற்ற அதிகாரம் எல்லாற்றையும் சிதைத்து விடுகிறது.

உலக அரசியல் வரலாற்றில் இந்தப் பாடம் பெரும்போதனைகளைத் தந்துள்ளது. ஆனால், அதேயளவுக்கு இந்தப் பாடத்தை எள்ளி நகையாடி நிராகரித்த வரலாறும் உண்டு.

இலங்கை அரசியலிலும் தமிழ் சிங்களத் தரப்புகள் என்ற பேதங்களின்றின்றி அதிகாரத்தின் எல்லைகளை உச்சமாகக் கடந்த நிகழ்ச்சிகள் தாராளமாக உண்டு. அதிலும் சிங்களத்தரப்பின் எல்லைகடத்தல் கட்டற்றது. இடையறாத தொடர்ச்சியைக் கொண்டது.

இத்தகைய கட்டற்ற, தொடர்ச்சியான, எல்லைகடந்த அதிகாரப் பிரயோகத்தின் போதே ஜனநாயகமும் சுதந்திரமும் கேள்விக்குள்ளாகும் நிலை ஏற்படுகின்றது இந்தச்சந்தர்ப்பத்திற்தான் மக்கள் மிகப் பெரும் நெருக்கடிகளைச் சந்திக்கிறார்கள்.

இலங்கையின் நெருக்கடிகள் இன்னமும் தீரவில்லை. இந்த நிலை நீடிக்குமானால், தொடருமானால் எந்த நெருக்கடியும் தீராது@ வளரும்.

00

இலங்கையில் இந்தியாவும் சீனாவும்


















இலங்கையில் இந்தியா. இலங்கையில் இன்று இந்தியா. இலங்கையில் சீனா. இலங்கையில் இன்று சீனா. இலங்கையில் (இன்று) இந்தியாவும் சீனாவும்.

இவற்றைத் தனித்தனியாக ஆராய்ந்து பார்த்தால், இலங்கையின் உள்நாட்டு அரசியலையும் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையையும் இலங்கை தொடர்பான சர்வதேச நாடுகளின் வெளியுறவுக்கொள்கைகளையும் ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடியும்.

இதன்மூலம் இலங்கையின் சமகால அரசியலைக் குறித்த விளக்கத்தைப் பெறலாம். மேலும் தமிழ்பேசும் மக்களின் அரசியற் பிரச்சினைகளுக்கான தீர்வைக் குறித்தும் அறிந்து கொள்ள முடியும். இதன் அடிப்படையில் முதலில் நாம் இலங்கையில் இந்தியா, இலங்கையில் இன்று இந்தியா என்பதைப் பார்க்கலாம்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரசியல் மற்றும் பிற தொடர்புகள், உறவுகள் எல்லாம் நீண்ட பாரம்பரியத்தை உடையவை. உலகின் வேறெந்த நாடுகளுடனும் இல்லாத அளவுக்கு முக்கியத்துவத்தையும் நீண்ட தொடர்ச்சியையும் உடையது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இந்த உறவும் தொடர்பும்.

இந்தப் பிராந்தியத்தை ஐரோப்பியர் ஆட்சி செய்த காலத்திலும்கூட இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மானசீகமான ஒரு உணர்வோட்டம் நெருக்கமாகவே இருந்துள்ளது.

ஆனால், கடந்த நூற்றாண்டில் உலக அரங்கில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார நிகழ்ச்சிகளின் விளைவாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான அதிகார நிகழ்ச்சி நிரல் ஒரு புதிய வடிவத்தை எடுத்தது.

இது இந்தப் பிராந்தியத்தில் நிலவிய அந்நியர் ஆட்சிக்காலத்தின் நிகழ்ச்சி நிரலையும் அதற்கு முன்னர் தொன்மைக் காலத்தில் நிலவிய நிகழ்ச்சி நிரலையும் விட வேறு பட்டிருந்தது.

உலக அரங்கில் ஏற்பட்ட அதிகார வலுப்போட்டிகள், பூமிப்பந்தை வேறு விதமாக வகைப்படுத்தியிருந்தன. இதன் தாக்கத்தை இந்து சமுத்திரப் பிராந்தியமும் இலங்கை இந்தியா ஆகிய நாடுகளும் எதிர்கொண்டன. அல்லது இந்த வகைப்படுத்தல் விசையில் இந்த நாடுகளும் உள்ளீர்த்துக்கொள்ளப்பட்டன. ஆகவே, இந்த விசைக்கமையவே இலங்கையின் வெளியுறவுக்கொள்கையும் உள்நாட்டரசியலும் பெருமளவுக்கும் அமைந்தது. அவ்வாறே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும் அதனுடைய உள்நாட்டரசியலும் அமைந்தது. மட்டுமல்ல, இலங்கை - இந்திய உறவும் அவற்றின் நிகழ்ச்சி நிரலும் கூட இந்த அடிப்படையிலேயே நிகழ்ந்தது.

இதை மேலும் விளங்கிக் கொள்வதானால், சுதந்திரத்துக்குப் பின்னர், இலங்கையில் ஏற்பட்ட அரசியற் தலைமைகளின் போக்குகளுக்கும் கொள்கைகளுக்கும் ஏற்ப இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நிகழ்ச்சி நிரல் வகுக்கப்பட்டது. அல்லது அமைந்தது எனலாம்.

ஐ.தே.க ஆட்சிக்கு வரும்போது அது மேற்குலகைச் சார்ந்தும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வரும்போது ஆசிய மண்டலத்தைச் சார்ந்தும் நிகழ்ச்சி நிரல் வகுக்கப்பட்டது. என்றபோதும் இந்தியாவுடனான உறவை இலங்கை பகை நிலைக்குக் கொண்டு சென்றதில்லை.

ஆனால், இந்தியா இலங்கையை ஒரே விதமாக நோக்கவில்லை. குறிப்பாக இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் அல்லது இலங்கையில் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் காலத்தில் (1977 க்குப் பின்னர்) இருந்து இந்தியா சற்றுக் கடினமான ஒரு நிலைப்பாட்டை இலங்கை தொடர்பாக எடுத்தது. 1990 வரையில் இந்தக் கடினப் போக்கு நிலவியது.

ஜே.ஆர். வெளிப்படையாகவும் சற்றுத் தூக்கலாகவும் மேற்கைச் சார்ந்து இயங்கினார். அன்று நிலவிய பனிப்போர்க் கால அரசியலில் - இரு துருவ அரசியலில் - ஜே.ஆரின் இத்தகைய நிலைப்பாடு இந்தியாவுக்கு நெருக்கடியைக் கொடுத்தது.

ஆகவே, இந்தியா – அன்று பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் அணுகுமுறை - இலங்கையின் உள்நாட்டரசியலில் ஒரு தீர்மானகரமான சக்தியாக மாறியது.

இன்றுவரை இந்தியா தன்னுடைய இந்தப் பிடியைத் தளர்த்தவேயில்லை. அது தனக்கேற்றவாறு தமிழர்களையும் சிங்களவர்களையும் கையாள்கிறது. அல்லது இனமுரண்பாட்டைக் கையாள்கிறது. அல்லது இலங்கையின் உள்நாட்டு முரண்களைப் பயன்படுத்திக் கொள்கிறது.

இதன்விளைவாக இந்தியா இன்று இலங்கையில் அரசியல் ரீதியாக நேரடித் தன்மைவாய்ந்த ஒரு முக்கிய தலையீட்டைச் செய்கிறது. மட்டுமல்ல, உள்முரண்பாடுகளின் விளைவாக அழிவடைந்திருக்கும் இலங்கையில் பொருளாதாரப் பிரச்சினைகளின் - பலவீனங்களின் - வழியே அது முதலீடுகளையும் செய்கிறது.

இலங்கையின் சந்தையை இந்திய உற்பத்திகளே பெருமளவுக்கும் நிறைக்கின்ற ஒரு நிலையை இந்த முப்பது ஆண்டுகாலத்துக்குள் இந்தியா பெற்றுள்ளது. இன்னும் இதைச் சற்று விளக்கமாகச் சொல்வதாயின், இந்தியாவை விட்டு விலகி மேற்குலகைச் சார்ந்த ஜே.ஆரின் அணுகுமுறை ஒருவாக்கிய விளைவே இதுவாகும்.

ஆகவே, இன்று இந்தியா இந்தப் பின்னணியினூடாக இலங்கையில் செல்வாக்குச் செலுத்தும் ஒரு வலுவான சக்தியாக மாறியுள்ளது.

இதேவேளை இதன் மீதியாக, இன்றுள்ள சர்வதேச அரசியல் இந்தியாவை மேலும் இலங்கையில் தலையிடவும் ஆதிக்கம் செலுத்தவும் வைக்கிறது.

இலங்கையில் இந்தியாவுக்குப் போட்டியாகச் சீனா மாறியிருக்கும் சூழல் இந்தியாவுக்குப் பெரும் பிரச்சினை. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கியத்துவத்தையும் பாத்திரத்தையும் கேள்விக்குள்ளாக்கும் ஒரு நடவடிக்கையைச் சீனா முன்னெடுத்து வருகிறது. இதை இந்தியாவினால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. எனவே அது இலங்கையை பிறர் தட்டிப்பறித்து விடக்கூடாது என்பதற்காக அழுத்திப் பிடிக்கிறது. இவ்வாறு இலங்கை என்ற குழந்தையை இந்தியா அழுத்திப்பிடிக்கப் பிடிக்க குழந்தைக்கே பாதிப்பு அதிகமாகிறது.

இலங்கை என்ற குழந்தையை யார் சொந்தம் கொண்டாடுவது என்ற ஒரு நிலையில் இந்தியாவும் சீனாவும் இன்றுள்ளன.

இலங்கை இந்தியாவுக்குப் பதிலாக வெளியே செல்லச் செல்ல இந்தியாவின் பிடி மேலும் அழுத்தமாகும். ஆனால், இப்போது மேற்குலகின் பக்கம் இலங்கை சாய்ந்தால் இந்தியா முன்னரைப்போல அதிக அழுத்தத்தைக் கொடுக்காது. அப்படி அதனால் மேற்குலகத்துக்கு எதிராகச் செயற்படவும் முடியாது. இப்போது மேற்கின் கூட்டாளியான ஒரு பாத்திரத்தையும் ஒரு எல்லைவரையில் இந்தியா கொண்டுள்ளதே இதற்குக் காரணமாகும்.

ஆனால், இப்போது இந்தியாவின் ஆதிக்கத்தைச் சமனிலைப்படுத்த சீனாவுடனான உறவையும் தொடர்புகளையும் இலங்கை கையாள்கிறது. சீனாவின் பக்கம் இலங்கை அதிக சாய்வைக் கொள்ளுமானால் இந்தியாவின் பிடி நிச்சயமாக அழுத்தம் பெறும். (இதை மிக நன்றாக உணர்ந்துள்ளது சிங்களத்தரப்பு அல்லது மகிந்த ராஜபக்ஷ அரசு).

ஆகவே, இந்தியா இன்று சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தும் அவசியத்திலும் மேற்குலகின் அசைவைச் சமனிலைப்படுத்துவதிலும் தன்னுடைய சந்தையை வலுப்படுத்துவதிலும் என்ற முக்கோண அணுகுமுறையில் இலங்கையில் தன்னுடைய செயற்களத்தை விரித்துள்ளது.

இதன் அடிப்படையிலேயே இந்தியத் தலைவர்கள், பிரதானிகளின் வருகைகள் அமைகின்றன. உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படுகின்றன. இலங்கையின் உள்நாட்டரசியல் பற்றிய கேள்விகளை இந்தியா எழுப்பும் அளவுக்கு இலங்கையின் நிலையும் இந்தியாவின் செல்வாக்கும் உள்ளது. இதன் விளைவு இன்று இந்தியாவைக் கடந்து எதையும் செய்ய முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளது.

இனி நாம் இலங்கையில் சீனா, இலங்கையில் இன்று சீனா என்பதைப் பார்க்கலாம். இலங்கையில் சீனா என்றால், வரலாற்றில் சீனாவுக்கும் இலங்கைக்குமான தொடர்புகளைப் பற்றியும் அதன் வழியான செல்வாக்கு மண்டலத்தைப் பற்றியும் பார்ப்பதாகும்.

சீனாவிலும் பௌத்தம் முதன்மை மதம். இலங்கையிலும் பௌத்தமே முதன்மையான மதம். ஆனால், இரண்டு பௌத்தங்களுக்குமிடையில் வேறுபாடுகள் உண்டு. என்றபோதும் இலங்கைக்கும் சீனாவுக்குமிடையில் நீண்டகாலத் தொடர்ச்சியான உறவுண்டு. ஆனால், அது இந்தியாவைப் போல நெருக்கமும் பண்பாட்டு ஒற்றுமைகளும் கொண்டதல்ல.

சுதந்திரத்துக்குப் பிந்திய இலங்கையில் சீனாவுக்கும் இலங்கைக்கும் செழிப்பான உறவெழுச்சியுடைய காலமாக இருந்தது சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்திலேயாகும். ஐ.தே.க கடைப்பிடித்த மேற்குச் சார்பை மாற்றிச் சீனாவுடன் நெருக்கத்தைக் கொண்டார் சிறிமாவோ.

பிறகு மீண்டும் ஐ.தே.க ஆட்சியைக் கைப்பற்றி மேற்குக்குச் சார்பாக இலங்கையை நகர்த்தினாலும் பின்னர் நாட்டில் நிலவிய யுத்தம் சீனாவை நோக்கித் திரும்ப வேண்டிய நிலைக்குள்ளாக்கியது. இன்று சீனா இலங்கையில் தீவிரமாகச் செல்வாக்கைச் செலுத்தும் நாடாக மாறியுள்ளது.

ஆனால், இதைச் சீனா மிக நுட்பமாகச் செய்கிறது. இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களிலோ வேறு விசயங்களிலோ தான் சம்மந்தப்பட்டுக்கொள்ளாமல் தூர நிற்பதைப்போன்ற ஒரு தோற்றத்தைக் காண்பித்துக் கொண்டு தன்னுடைய கால்களை மிக நிதானமாக உள்ளே வைத்துக்கொண்டிருக்கிறது.

இந்தியத் தலைவர்களின் வருகைகளைப் போல, அமெரிக்கத் தரப்பின் விஜயங்கள், அறிவிப்புகளைப் போல சீனப் பிரதிநிதிகளும் தலைவர்களும் இலங்கைக்கு அடிக்கடி படையெடுப்பதும் இல்லை@ விஜயங்களைச் செய்வதும் இல்லை@ அறிவிப்புகளை விடுப்பதும் இல்லை.

அபூர்வமாகச் சிலவேளைகளில் இலங்கைக்கு வரும் சீனத்தலைவர்களோ பிரதானிகளோ இலங்கையின் அரசியற் தலைவர்களையும் கட்சிகளையும் சந்திப்பதில்லை. மேலும் இலங்கையின் அரசியலைப் பற்றி வாய் திறப்பதும் இல்லை. அறிக்கைகள் விடுவதும் இல்லை.

ஆனால், சீன முதலீடுகளும் உதவிகளும் சீனப் பொருட்களுக்கான சந்தையும் இலங்கையில் தாராளமாகியுள்ளன.

இதேவேளை, சீனா இலங்கையை இந்தியாவிடமிருந்தும் மேற்குலகத்திடமிருந்தும் நகர்த்தி தனக்கும் பொதுவான முக்கோணத்தன்மையுடைய ஒரு பொது – சமநிலை அரங்கில் நிறுத்தியுள்ளது.

ஆகவே, இன்று சீனா இலங்கையின் நிராகரிக்கவே முடியாத ஒரு பாத்திரமாகத் தன்னை நிலைப்படுத்தியுள்ளது.

சீனாவின் இத்தகைய நிலைப்படுத்தலைச் சமாளிப்பதற்கும் இதைச் சிதைப்பதற்கும் இந்தியா நிச்சயமாக இலங்கையின் உள்விவகாரங்களையே நிச்சயமாகக் கையாளும். இதையே நாம் முன்னரும் பார்த்திருக்கிறோம்.

எனவே, இன்று இலங்கையில் இந்த இரண்டு நாடுகளின் ஆதிக்கப்போட்டி பகிரங்கமாக நடைபெற்று வருகின்றது. இரண்டு யானைகள் மோதும்போது செடிகளே சேதமடைவது என்று சொல்வார்கள். ஏறக்குறைய அத்தகைய ஒரு நிலையே இந்தப் பிராந்திய நாடுகளுக்கிடையிலான பிராந்திய ஆதிப்போட்டியாகி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்தப் போட்டியில் - அல்லது இந்த மோதுகையில் எப்படி இலங்கையின் அரசியல் ஸ்திரத்தன்மையும் பொருளாதார மேம்பாடுகளும் அமைதியும் இனங்களுக்கிடையிலான பிணக்குகள் தீர்வதும் சாத்தியமாகும்?

பிராந்தியச் சக்திகளின் பின்னணியில் மேலும் சர்வதேச வல்லரசுகளின் ஆதிக்கப்போட்டியும் நலன் சார்ந்த நிகழ்ச்சி நிரல்களும் உள்ளன.

இவற்றையெல்லாம் வென்று நாட்டைப் பாதுகாக்கக்கூடிய சாணக்கியம் யாருக்குண்டு? இந்த நிகழ்ச்சி நிரல்களுக்குச் சமதையான நிகழ்ச்சி நிரல்களை உருவாக்கிக் காய்களை நகர்த்தி இலங்கை மக்களைக் காப்பாற்றக்கூடிய ஆற்றல் எவரிடம் இருக்கிறது?  அல்லது, உள்நாட்டரசியலை தமது நலன்களுக்காகக் கையாள அனுமதிக்காத ஒரு நிலையை ஏற்படுத்தக்கூடிய செயற்றிறன் யாரிடம் உள்ளது?

இவையெல்லாம் இல்லாத பட்சத்தில் எதிர்காலத்தில் இலங்கையில் இன்னும் பல ஆதிக்கச் சக்திகள் தங்களின் செல்வாக்கு மண்டலத்தை விரிவாக்கம் செய்வது தவிர்க்க முடியாமற்போகும்.

வெளியாரின் கொல்லைக் களமாக உங்களின் முற்றம் இருந்தால் அது எப்படி இருக்கும் என்பதை இதற்கு மேல் இங்கே விவரிக்கத் தேவையில்லை என நினைக்கிறேன்.

00

 

2009 ·. by TNB