கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

வன்னிக்கு வராத ஆசிரியர்கள்...

Friday 4 May 2012





அரசியல் அவலத்தின் பெரும் பரப்பை யாரும் எளிதிற் கடந்து விடமுடியாது என்பதற்கு ஈழப்போர் மட்டுமல்ல அதற்கு பின்னான நாட்களும் மிகத் தெளிவாகவே காட்டுகின்றன.

போர்க்கால நிகழ்ச்சிகள் ஒருவிதமான அவலத்தையும் வாழ்க்கைச் சிதைவுகளையும் ஏற்படுத்தின என்றால், போருக்குப் பின்னான கால நிலவரங்கள் இன்னொரு விதமான அவலத்தையும் சிதைவுகளையும் ஏற்படுத்தியுள்ளன.

முக்கியமாக கல்வியில் ஏற்படுத்திய தாக்கம் அல்லது சிதைவு மிகப் பெரிது. போர் நடந்த கிளிநொச்சி முல்லைத்தீவு மற்றும் வவுனியா வடக்கு, மன்னார் கிழக்குப் போன்ற இடங்களின் நிலை மிகப் பிந்தங்கியுள்ளது. அதிலும் கிளிநொச்சியின் நிலை இன்னும் மோசமானது.

வடமாகாணத்தில் கடைசி நிலையில் கிளிநொச்சியே உள்ளது. ஒன்பது பாடங்களிலும் சிறப்புச் சித்தியைப் பெற்றவர் ஒருவரே. ஒன்பது பாடங்களிலும் சித்தியடையாதோரோ 159. ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் முன்றில் இரண்டு பங்கு அதிகமான தொகை. இது கிளிநொச்சி மாவட்டத்தின் கடந்த ஆண்டுக்குரிய க. பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்று நிலை.

தற்போதைய அவதானிப்பின்படி நடப்பாண்டில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் அடைவுகளும் நெருக்கடி நிலையில் இருப்பதாகவே தெரிகிறது. மட்டுமல்ல தற்போது ஒன்பதாம், பத்தாம் ஆண்டுகளில் பயில்கின்ற மாணவர்களின் மதிப்பீடுகளும் சரிவு நிலையிலேயே காணப்படுகின்றன. இவர்களே அடுத்த ஆண்டுகளில் பரீட்சையை எதிர்கொள்;ளப்போகிறவர்கள்.

ஆகவே, இது அதிர்ச்சியளிக்கும் ஒரு நிலையாகும். கடந்த ஆண்டில் பெறுபேறுகளைப் பெற்றவர்கள் பாதிக்கப்பட்டது மட்டுமல்ல, தொடர்ந்து கற்போருக்கும் அவர்களுடைய பெற்றோருக்கும் சமூக அக்கறையுடையோருக்கும் பலவிதமான கேள்விகளை இந்த நிலை உருவாக்கியிருக்கிறது.

மாவட்டத்தின் கல்வியைக் குறித்து அக்கறைப்படுவோர் இந்த நிலையையிட்டுக் கவலையடைந்துள்ளனர். இதேவேளை இந்த நிலையானது பல பின்விளைவுகளை உருவாக்கக் கூடிய அபாயத்தைக் கொண்டிருக்கிறது. ஆகவே இதைக் குறித்த விவாதங்களும் மாற்று நடவடிக்கைகளும் மிக விரைவாகத் தேவைப்படுகின்றன.

‘போர்க்காலத்தில் - வசதிகளும் வளங்களும் குறைந்து செல்லும் நிலையில் கல்விச் செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருந்தது. ஆனால் இப்போது – போர் முடிந்த பின்னர் -  வளங்களும் வசதிகளும் அதிகரித்து வரும் சூழலில், கல்வியின் நிலையானது வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கு என்ன காரணம்?’ என்று இந்தப் பின்னடைவு நிலை குறித்து கடந்த வாரம் கிளிநொச்சியில் நடைபெற்ற ஆராய்வுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. முருகேசு சந்திரகுமார் கேட்ட கேள்வியே இன்று எல்லோருடைய மனதிலும் உள்ளது.

இதற்கு அந்தக் கூட்டத்தில் பலரும் பலவிதமான அபிப்பிராயங்களையும் காரணங்களையும் தெரிவித்திருந்தனர்.

1. போதிய ஆசிரிய வளமின்மை. கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற பாடங்களுக்குப் பல பாடசாலைகளில் ஆசிரியர்களில்லை. (பதிலாக வேறு வலயங்களில் தாராளமாகவே இந்தப் பாடங்களுக்குரிய ஆசிரியர்கள் உள்ளனர்).

2. அனுபவம் மிக்க ஆசிரிய வளக்குறைபாடு.

3. புதிய நியமனம் மற்றும் இடமாற்றம் செய்யப்படுகின்ற ஆசிரியர்கள் அனைவரும் உரிய முறையில் கடமையைப் பொறுப்பேற்பதில்லை. தங்களுக்கு வசதியான இடங்களுக்கு இடமாற்றம் பெறுவதற்காக முயற்சிக்கிறார்கள். இந்த இழுபறியில் அல்லது தாமதத்தில் மாணவர்களே பாதிக்கப்படுகின்றனர். இதற்கு உடந்தையாக இருக்கும் நிர்வாக நிலைமை மாற்றமடைய வேண்டும்.

4. வெளி மாவட்டங்களிலிருந்து தினமும் வந்து கற்பிக்கின்ற ஆசிரியர்கள் பெரும்பாலும் பிரதான சாலையோரப் பாடசாலைகளைத் தவிர, உள்ளுர்ப்பாடசாலைகளுக்கு நேரம்பிந்தியே கடமைக்குச் செல்கின்றனர். இதனால் ஒரு பாடவேளை தினமும் தவறுகிறது. மிகக் குறைந்த எண்ணிக்கையானவர்களே தங்கி நின்று கற்பிக்கின்றனர். விடுதிகள் இருக்கின்ற பாடசாலைகளில் கூட ஆசிரியர்கள் தங்கி நிற்பதற்குப் பின்னிற்கிறார்கள்.

5. வளங்களைச் சரியாகப் பகிர்ந்தளிப்பதிலும் பயன்படுத்துவதிலும் காணப்படும் குறைபாடுகள்.

6. கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம், ஐ.ஸீ.ரி ஆகிய பாடங்களுக்கான வளநிலையங்களின் செயற்பாடின்மை.

7. ஆய்வு கூடவசதிகள் போதாமை.

8. மின்சார வசதிக் குறைபாடு.

9. வகுப்பறைகளுக்கு வெளியேயான கற்றற் செயற்பாடுகள் குறைவு. (களப்பயணம், புத்தாக்கம், நூலகப் பயன்பாடு போன்றவை).

10. போரினால் ஏற்பட்ட உளத்தாக்கம், பெற்றோரை இழந்த பிள்ளைகளின் பெருக்கம், குடும்ப உறுப்பினர்களை இழந்திருக்கும் நிலை மற்றும் அலைச்சல்கள் போன்றவை ஏற்படுத்துகின்ற தாக்கங்கள்.

11. போருக்குப் பின்னான மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகள் பிள்ளைகளின் மீதான பெற்றோரின் அக்கறைகளைக் குறைத்துள்ளமை.


12. கடமையாற்றும் ஆசிரியர்கள் உயர்ந்த சேவையாற்றக் கூடிய சூழலை உருவாக்க வேண்டும். ஆசிரியர்களுக்கும் பாடசாலைக்கும் சமூகத்துக்கும் இடையிலான உறவின் போதாமை.

13. பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்குச் சென்று கடமையாற்றக் கூடிய, சேவை மனப்பாங்கை வளர்ப்பதற்குரிய – அந்த உணர்வை ஏற்படுத்தக் கூடிய - நடவடிக்கைகளிலுள்ள குறைபாடு. ஊடகங்கள் முதற்கொண்டு சமூக அமைப்புகள் வரையில் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

14. பாதிக்கப்பட்ட பிரதேச மாணவர்களின் நலனைக் கருத்திற் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் ஆசிரிய சங்கங்களும் மனித உரிமை அமைப்புகளும் செயற்பட முன்வர வேண்டும்.

15. யுத்தத்திற்குப் பின்னரான நிலைமையை எதிர்கொள்வதற்கான விசேட பொறிமுறைகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படியான பொறிமுறையும் அணுகுமுறையும் உருவாக்கப்படாமையே போர்நடந்த பகுதிகளின் பின்னடைவு நிலைக்கும் அவல நீடிப்புக்கும் காரணமாகும்.

16. போர்க்காலத்திலிருந்த ஊக்கப்படுத்தல்கள் இன்று தளர்வடைந்துள்ளன. ஆகவே அவற்றைச் செய்ய வேண்டும்.

17. பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் அரச நிர்வாகத்தை மட்டும் நம்பியிராமல் மாற்று ஏற்பாடுகளைக் குறித்தும் சிந்திக்க வேண்டும்.

18. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் தனி மாவட்டமாகக் கிளிநொச்சி பிரிக்கப்பட்டிருந்தாலும் இன்னும் அது யாழ்ப்பாண மாவட்டத்தில்தான் தங்கியிருக்கிறது. இதனால், ஆசிரிய வளத்தையும் பிற தேவைகளையும் இன்னும் வெளியே இருந்தே எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது.

19. இதற்குக் காரணம் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டிருந்த காலத்திலிருந்தே யுத்த நிலைமை காணப்பட்டதால் அது தனக்குரிய வளர்ச்சியைப் பெறமுடியாமற் போய்விட்டது.

இவ்வாறு பல காரணங்கள் சொல்லப்பட்டன. இங்கே கூறப்பட்ட காரணங்கள், கூறப்படாத காரணங்கள், கூறப்படவே முடியாத (உணர்ந்து கொள்ளப்பட வேண்டிய) காரணங்கள் எனப் பல இருக்கலாம். இந்தக் காரணங்களை எதிர்கொள்வதில் வௌ;வேறான உணர்முறைகளும் நிலைப்பாடுகளும் இருக்கலாம்.

ஆனால், எல்லாவற்றுக்கும் அப்பால், இவை எல்லாமே ஒரு பொது நோக்கின் அடிப்படையில் சிந்திக்கப்பட வேணும். பாதிக்கப்பட்ட பிரதேசத்திலுள்ள இளைய தலைமுறையின் கல்வி மற்றும் அவர்களுடைய எதிர்காலம் குறித்து இந்தச் சிந்தனை அமையவேணும்.

தமிழர்கள் தங்களுடைய கல்வியைமுன்னிலைப்படுத்தும் ஒரு பாரம்பரியத்தை உடையவர்கள் என்று சொல்லப்படுவதுண்டு. தங்களுடைய தேசிய உணர்வுக்காகவும் அந்த அடையாளத்துக்காகவுமே தங்களின் வாழ்வில் அதிக விலைகளைக் கொடுத்தவர்கள். இன்னும் அந்த அடையாளத்தையும் உணர்வையும் குறித்து மனதில் பாரங்களோடும் வெம்மையோடும் உள்ளவர்கள். இப்படியெல்லாம் உள்ள தமிழர்கள் இன்று பாதிக்கப்பட்ட பிரதேசத்தைப் பற்றிக் கொண்டுள்ள அக்கறை எத்தகையது?

தமிழ்த் தேசியம், வடக்குக் கிழக்கு இணைப்பு என்ற விசயங்கள் வெறுமனே அரசியற் சுலோகங்கள், அரசியல் அடையாளங்கள் என்பதற்கு அப்பால் அவை வாழ்வுடனும் யதார்த்தமாகவும் அமைந்திருக்க வேண்டும்.

வடக்குக் கிழக்கு இணைப்பைப் பற்றி சத்தமிட்டுக் கதைக்கும் பல உத்தியோகத்தர்கள் வன்னிக்குச் சென்று வேலை செய்ய விரும்புவதில்லை. அதைப் போல மட்டக்களப்பு நகரப்பகுதியில் இருப்போர் வாகரைக்கோ படுவான்கரைக்கோ செல்ல முன்வருவதில்லை. மிகக் குறைந்தளவானோரே சேவை மனப்பாங்குடன் பின்தங்கிய பிரதேசங்களுக்குச் செல்கின்றனர்.
ஆகவே ஏனையோர் அரசியற் சுலோகங்களுக்குள் தங்களை சுலமாக மறைத்துக் கொண்டு, தங்களின் நிலைப்பாட்டுக்கு மாறாகவே செயற்படுகின்றனர்.

ஒருவருடைய தேசிய உணர்வானது மெய்த்தன்மையுடையதாக இருக்குமானால், அவர் நிச்சயமாக அந்த உணர்வின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களை நேசித்து அவர்களுக்கு உதவ முன்வருவார். பின்தங்கிய பிரதேசத்தை நோக்கி அவருடைய மனமும் கால்களும் முன்னகரும்.

பெரும்பாலான யாழ்ப்பாணவாசிகள் வன்னிக்குப் போகாது விட்டாலும் பரவாயில்லை, தீவுப் பகுதிக்கோ வடமராட்சி கிழக்குப் பகுதிக்கோ கூடப் போகமாட்டார்கள்.

வடமராட்சி கல்வி வலயத்தில் மேலதிகமாக கணித பாட ஆசிரியர்கள் உண்டு. ஆனால், அவர்களில் ஒருவர் கூட வடமராட்சி கிழக்குக் கல்விக்கோட்டத்துக்குச் சென்று கற்பிக்கத் தயாரில்லை. இவ்வளவுக்கும் போக்குவரத்து வசதிகள் தாராளமாக உண்டு. விசேட போக்குவரத்துச் சேவையைச் செய்வதற்கு இலங்கைப் போக்குவரத்துச் சபையும் தனியார் போக்குவரத்துச் சேவையினரும் தயாராக உள்ளனர். இதைக் கடந்த மாதம் வடமராட்சி கிழக்கு – கட்டைக்காட்டில் நடந்த ஒரு கூட்டத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் குறிப்பிட்ட சபையினர் மக்கள் முன்னிலையில் தெரிவித்திருந்தனர். ஆனால், யாருடைய மனதிலும் மாற்றங்கள் நிகழவில்லை.

தீவுப் பகுதியின் நிலைமையும் இதுதான் என்று சொன்னோம். எனவேதான் வடமாகாணத்தில் மிகப் பின்தங்கிய கல்வி வலயமாக தீவுப் பகுதியும் இன்று மாறியுள்ளது. தீவுப் பகுதியின் கல்விமான்கள் அந்தப் பகுதியை விட்டு வெளியேறி விடடனர். அவர்கள் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் இருக்கின்றனர். ஏனையோர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். வெளியேற முடியாதவர்கள் காய்ந்த வெளியில் எல்லாவற்றுக்குமாக மாய்கிறார்கள் என்று குமுறுகிறார் அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர்.

இதைப்போல வவுனியா வடக்குப் பாடசாலைகளுக்குச் செல்லத்தயங்கும் பலர் ஏ9 வீதியை அண்மித்த பாடசாலைகளுடன் தங்களை நிறுத்திக் கொள்கிறார்கள். வவுனியாவில் உள்ள பாடசாலையொன்றில் மாணவர்களைவ விட ஆசிரியர்களின் தொகை அதிகமாக இருக்கிறது.

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு வருவோர் ஒன்றில் பளைக்கோட்டத்தில் தேங்குகிறார்கள். அல்லது பூநகரியின் முன்பகுதியில் இறங்கி விடுகிறார்கள். அதற்கப்பால் அவர்கள் செல்ல விரும்புவதேயில்லை.
இதுதான் துயரந்தரும் நிலை. இதை மாற்றுவதற்கு எத்தனையோ ஆலோசனைக்கூட்டங்கள், அறிவிப்புகள் என்றெல்லாம் நடத்திய பிறகும் நிலைமையில் மாற்றம் பெரிதாக இல்லை.

இதேவேளை ‘இந்தப் பிரச்சினைக்கு மாற்று ஏற்பாடுகளைக் குறித்து நாம் சிந்திக்க வேணும். ஆசிரியர்களையும் அதிபர்களையும் மாணவர்களையும் பாராட்டி ஊக்கப்படுத்த வேணும். புதிய முறையில் இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்க்கலாம் என்று சிந்திக்க வேணும். வளங்களைப் பெறுவதைப் பற்றி பல திசைகளிலிருந்தும் முயற்சிக்க வேணும். போருக்குப் பிந்திய சூழலை வளப்படுத்துவதற்கு விசேட பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

இப்போதிருக்கும் தேசிய ரீதியான பகிர்வு முறைகள், விதி முறைகளின் மூலம் இந்தப் பெரும் பிரச்சினையைத் தீர்ப்பது கடினம்’ என்று இந்த நிலைமையை எதிர்கொள்வதைப் பற்றிச் சொல்கிறார் கிளிநொச்சி மாவட்ட கல்வி அபிவிருத்தி நிதியத்தின் தலைவரும் வவுனியா மாவட்ட வைத்திய அத்தியட்சகருமான வைத்தியக் கலாநிதி சத்தியமூர்த்தி.

‘ஆசிரியர்களுடைய சேவை மனப்பாங்கின் விருத்தியும் அவர்கள் பின்தங்கிய பிரதேசங்களில் தங்கி நின்று சேவையாற்றக் கூடிய வசதிகளின் உருவாக்கமும் இந்தப் பிரச்சினையின் தீர்வுக்குப் பயனளிக்கும்’ என்கிறார் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன்.

போருக்குப் பிந்திய சூழலில் உளத்தாக்கமும் சமூகச் சிதைவுகளும் மிகப் பெரிய அளவில் உள்ளன. கல்விச் செயற்பாடானது, சமூக ஒன்றிணைவையும் கொண்டதால் சமூகத்தின் பாதிப்பு பிள்ளைகளின் கல்வியையும் பாதிக்கும் என்று விளக்குகிறார் கிளிநொச்சி மாவட்ட உளநல மருத்துவ அதிகாரி ஜெயராஜா.

கல்வி நிலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியைச் சீர்ப்படுத்துவதற்கு விசேட அவதானங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட எல்லா விசயங்களிலும் இருக்க வேண்டும் என்று சாரப்படுத்திச் சொல்கிறார் முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. த. குருகுலராஜா.

நெருக்கடிகால நிலைமைகளின் பாடங்களோடு புதிய சூழலின் சவால்களை எதிர்கொண்டு செயற்பட வேண்டும். இதற்கு உரிய முறையிலான பொறிமுறை அவசியம் என்கிறார் முன்னாள் மேலதி மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு. ப. அரியரத்தினம்.

பாடசாலைகளின் அவதானங்களின்படியும் பொதுவான மதிப்பீட்டின்படியும் பெறப்பட்ட தரவுகளையும் தகவல்களையும் வைத்துப் பார்க்கும்போது கல்விச் சவால்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் பலவாக உள்ளன. இதற்கு பல தரப்பினரின் முழுமையான அவதானமும் பங்களிப்புகளும் விசேட முயற்சிகளும் தேவை என்று கூறுகிறார் கிளிநொச்சி மாவட்ட கல்வி அபிவிருத்திக் குழுவின் பிரதிச் செயலாளரும் கிளிநொச்சி மகா வித்தியாலய அதிபருமான பங்கயற்செல்வன்.

இப்படிப் பலரும் தெரிவித்திருக்கும் கருத்துகளுக்கு உரிய செயல்வடிவங்கள் தேவை. இதுபோலப் பல சிந்தனைகள் இன்று  மேலெழுந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. ஆனால், மனமாற்றம் நிகழாத வரையில் எதுவுமே சாத்தியமில்லை. அப்படிச் சாத்தியப்பட்டாலும் அது முழு வெற்றியாகாது.

ஆகவே, விரிந்த சிந்தனையுடன் மெய்யான உணர்வுத் தளத்தில் செயற்படுவதற்கு அனைவரும் முன்வரவேணும். குறிப்பாக ஆசிரியர்கள் முன்வரவேணும். ஆசிரியர்களே சமூகத்தின் கண்கள். அவர்களே வழிகாட்டிகள் என்பதற்கிணங்க இந்தப் பொறுப்பு அவர்களிடமே வழங்கப்பட்டுள்ளது காலத்தினால்.
00

0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB