கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

மனச்சாட்சியில் ஓட்டைகள்

Thursday 16 February 2012



நேர்காணல் -














‘வீடற்றவன்’ என்ற ஒரு நாவலை மலையகத்தின் மூத்த எழுத்தாளராக இருந்த சி.வி.வேலுப்பிள்ளை எழுதியிருந்தார். இலங்கையின் மத்தியிலுள்ள மலையகப் பகுதியில் இருக்கும் இந்திய வம்சாவழித் தமிழர்களுக்கு வீடற்ற வாழ்க்கை என்பது நூற்றாண்டுகளின் நீள்துயரம். அவர்களுடைய வீடுகள் என்பது, லயங்களே. ஏறக்குறைய சேரிப்புற வாழ்க்கை நிலவரத்தை ஒத்த அமைப்பு இந்தக் குடிசைகள். வசதிகளே இல்லாத லயங்களில் மந்தைகளைப் போல வாழ நிர்ப்பந்திங்கப்படும் நிலையை சி.வி வேலுப்பிள்ளை எழுதியிருந்தார். 


இந்த மக்களுக்கு வீடு மட்டுமல்ல காணியே இல்லை. ஆனால், நூற்றாண்டுகளாக இவர்கள்தான் தேயிலை, ரப்பர் தோட்டங்களில் மாடாக உழைத்து இலங்கையின் பெரும்பொருளாதாரத்தை ஈட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய காணியில்லாப் பிரச்சினையை மையப்படுத்தி ‘காளிமுத்துவின் பிரஜா உரிமை’ என்ற கதையை 1949 இல் எழுதியிருந்தார் அ.செ.மு. உரிமையற்ற மனிதர்களின் கதை என்ற வகையில் பின்னர், இது மிகப் புகழ்பெற்ற சிறுகதையாகியது. 


இதெல்லாம் மலையத்தின் - மலையகத்தமிழர்களின் நிலைமை. 


இப்பொழுது இதையும் விட மோசமான கட்டத்தில் இருக்கின்றனர் வடக்குக் கிழக்கில் வாழ்கின்ற தமிழர்கள். இந்தப் பிரதேசங்களில் வாழுகின்ற பல குடும்பங்களுக்குக் குடியிருப்பதற்கே ஒரு துண்டு காணி இல்லை. காணியில்லாதவர்களுக்கு வீடெப்படி இருக்க முடியும்? அகதி வாழ்க்கை முடிந்து ஊருக்குத் திரும்பினாலும் இவர்கள் குந்த ஒரு குடிநிலம் இல்லாத நிலை.  ஆனால், இவர்கள் போராட்டத்திலும் யுத்தத்திலும் ஏராளம் விலைகளைக் கொடுத்தவர்கள். 


இதேவேளை தமிழ் அரசியற் பிரமுகர்களிடமும் தலைவர்களிடமும் பெருந்தொகையான காணிகள் ஏக்கர்க்கணக்கில் பராமரிப்பின்றிய நிலையிலேயே உள்ளன. மேலும் புலம்பெயர்ந்திருக்கின்ற மக்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினருக்குத் தாராளமான அளவில் நாட்டில் காணிகள் உள்ளன. இந்தக் காணிகளில் ஒரு சிறு பகுதியை ‘மனம் உவந்து’ ஒவ்வொருவரும் பகிர்ந்தளித்தால் தங்களுடைய இன்றைய காணியில்லாத – வீடில்லாத அவலநிலை தீர்ந்து விடும் என்று சொல்கிறார்கள் காணியற்ற ஈழ மக்கள். 


மறுபக்கத்தில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வில் சர்ச்சைக்குரிய ஒரு விசயமாக இருப்பது காணி தொடர்பான பிணக்கு. காணி அதிகாரத்தைத் தமிழர் தரப்பு பிரதான அம்சமாகக் கோரிவருகிறது. இதைக் கொடுப்பதற்குப் பின்னடித்துக்கொண்டேயிருக்கிறது சிங்களத்தரப்பு. சிங்களத்தரப்பிடமிருந்து காணிக்கான அதிகாரத்தைப் பெற விரும்பும் நாம் காணியற்ற மக்களுக்கு எங்களிடம் இருக்கின்ற காணிகளில் ஒரு சிறு அளவைக் கொடுப்பதற்கு முன்வர வேண்டும் என்பதே பொது விருப்பமாகும். இந்த நிலையில் இந்தச் சுவையான முரண்களைக் குறித்துப் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களில் ஒருவராகிய ராதாகிருஸ்ணன் மாரியம்மா என்பவரிடம் உரையாடினோம். 


இவருடைய கணவர் போரின்போது நடந்த எறிகணை வீச்சில் கொல்லப்பட்டு விட்டார். ஒரு மகன் போராட்டத்தில் சாவடைந்துவிட்டார். 

00

யுத்தத்துக்குப் பிறகு எப்படி இருக்கிறீங்கள்? நிலைமை எப்பிடி இருக்கு?

என்னத்தைச் சொல்றது? எங்களுக்கு எப்பவும் பிரச்சினைதான். பாருங்க, இப்ப இருக்கிறதுக்கு காணியில்ல. காணியில்லைங்கிறதால வீடு குடுக்க முடியாதுங்கிறாங்க. அப்ப நாங்க என்ன பண்ண முடியும், சொல்லுங்க? இதப்போயி எல்லார்கிட்டயும் சொல்லியாச்சு. ம், பாக்கிறம். அப்பிடீன்னு சொல்றாங்களே தவிர, யாருமே ஒண்மே பண்ணல. நாங்க இன்னும் துன்பப்பட்டுக்கிட்டுத்தான் இருக்கோம்.

இதுக்கு முதல் எங்க இருந்தீங்க? 

இங்கதான் - கிளிநொச்சியிலதான் இருந்தம். அதுக்கு முன்னாடி கம்பளையில. 77 கலவரத்தில அடிச்சிக்கிட்டாங்க. ஓடி இங்கிட்டு வந்தம். அப்ப இந்தப் பக்கம் (கிளிநொச்சியின் மேற்கிலுள்ள உதயநகர்ப் பகுதியில்) காடு வெட்டி இருந்தம். நாங்க நாலு பொண்ணுங்க. அப்பாவுக்கு வயசாயிட்டு. அக்கா அவங்களுக்கு அந்தக் காணியக் குடுத்திட்டாச்சு. அப்புறம் எங்க ரண்டு பேருக்கு காணி கிடையாது. நாங்க மருத நகர்ப்பக்கம் கல்யாணமாகிப்பறம் இருந்தம். அதுல இருந்த பெரிய காணியில நாம குடியிருந்தம். ஏம் புருசன் அந்தப் பக்கத்திலதாங் இருந்தாரு. அவுங்க அப்பா, அம்மா எல்லாமே அந்தப் பக்கத்திலதான் ரெம்ப நாளா இருந்தாங்க. நாம்பளே அந்தக் காணியைப் பாத்து வெள்ளாமையைச் செஞ்சுட்டு வந்தம். இயக்கப் பெடியனுவள்கூட எங்களுக்குச் சப்போர்ட் பண்ணினாங்க. நாங்க அவுங்கள பாத்துக்குவோம்.

அதுக்குப் பின்னாடி, சண்டை வந்தப்பிறம் நாங்க ஓடிட்டுப் போறது, பின்னாடி வர்றது. இப்புடியே இருந்திச்சில்லா. கடைசீல நாங்க உசரப்பக்கமா அஞ்சாறு வருசத்துக்கு முன்னாடி ஒரு கொட்டில போட்டுக்கிட்டு இருந்தம். பெடியங்களும் (இயக்கம்) ஒத்தாசையா இருந்தாங்க.

ஆனா, எல்லாமே போயிட்டு. பின்னாடி, சண்டை வந்தப்பிறம், நாங்க ஓடிப்போயி, இந்தக் காடு கடெலெல்லாம் அலைஞ்சிட்டு, முகாமெல்லாம் போயி இப்ப வந்திருக்கம். இஞ்ச வந்தா...

இப்ப எப்படி இருக்கிறீங்க?

கடவுளே, அத என்னத்தச் சொல்ல? இப்ப நாம இருக்கிற இந்தக் காணிக்கு ஆளாளுக்கு ரண்டு பேர் வந்து அடிச்சிக்கிறாங்க. தங்க வீட்டுக் காணியாம். அவுங்க தாத்தாட காணி, அப்பாட காணின்னு என்னமோ சொல்லிக்கிறாங்க. இவ்வள நாளா எங்கிட்டு இருந்தாங்களோ... முன்னாடி ஒருத்தர்தான் என் வீட்டுக்காரர்ட அப்பா அவுங்கள இந்தக் காணீல கொண்டாந்து இருத்தினாராம். ஒரு அஞ்சாறு வருசத்துக்கப்பறம் அந்தாளும் வர்ல. வேற யாரும் இந்தப் பக்கமே வர்ல. நாமதான் எல்லாத்தையும் பாத்துக்கிட்டது. இல்லைன்னாக்கா இப்படி இந்த நிலம் இருக்குமா? காடெல்லாம் வளந்திருக்குமே. பாருங்க நாங்க வெச்ச தென்னப்புள்ளய காய்க்குது. இருவது புள்ள வெச்சம். இப்ப பதிமூணு இருக்கு.

இப்ப வந்திருக்காங்க. சண்டை முடிஞ்சிருக்கில்ல. இப்ப பாத்து எல்லாருமே வர்ராங்க. அந்தா அந்தப் பக்கங்கூட யாரோ வந்து தங்கவூட்டுக் காணி அப்பிடீன்னு சொல்றாங்களாம். அங்க இருக்கிறவங்க நம்பள மாதிரி அம்பது அறுவது வருமா அங்கனயே இருக்கிறாங்க. இப்ப வந்து இடத்தை விடு. எழுந்திட்டு எங்கிட்டாவது போ அப்பிடீன்னா என்ன பண்றது, சொல்லுங்க?

நம்ம கிட்டக் கூட வந்து நாங்க இங்க இருந்து எழுந்துக் கிட்டு எங்கயாச்சும் எடம் பாத்துக்கிட்டு போங்க அப்படீன்னுறாங்க. அவங்க கூடத்தான் ஜீ. எஸ்ஸ_ம் (கிராம அலுவலர் அல்லது விதானையார்) இருக்கார். பத்திரம் எல்லாம் வைச்சிருக்காங்க. ரண்டு பேருந்தான். அவுங்களுக்க அடிதடி வேற. யார் வூட்டுக்காணிங்கிறதே அவுங்களுக்கப் பிரச்சனை.

இம்புட்டு நாளும் வெளிநாட்டுல இருந்தாங்களாம். இப்ப வந்திருக்காங்க. இத்தினை நாள் நாங்கதான் இந்த நிலத்தப் பாத்தம். பாருங்க ஒரு பத்தை இருக்கா? ஒரு செடி இருக்கா. இந்தாளு எந்த நேரம்பாத்தாலும் எதையாவது செஞ்சிட்டிருப்பாரு. ராத்திரில – நிலாவில கூட காணிவேலை பாப்பாரு. எங்க வீட்டு வளவைப் போல இதைப் பாத்திருக்கோம். பிள்ளையைப் போல பாத்திருக்கோம். குடியிருக்கிற இடமெல்லா. ஆனா, இப்ப யாரோ வந்திருக்காங்க, தங்கவூட்டு நிலம்னு. என்ன பண்ண?

ஆர்.டி.எஸ் (கிராம அபிவிருத்திச் சங்கம்) கிட்ட போனா அவங்க ரண்டு பக்கத்துலயும் நியாயம் இருக்கெங்கிறாங்க. அவங்க கையில பத்திரம் இருக்காம். அதனால அவங்களுக்குத்தான் நிலம் சொந்தம்கிறாங்க. ஆனா நாம ரொம்பக் காலமாக, ரண்டு மூணு தலைமுறைங்களா இங்கிட்டே இருக்கிறதால எங்களுக்கும் உரித்துண்டுங்கிறாங்க.

அதெப்பிடி ரண்டு பக்கமும் ஞாயம் இருக்க முடியும், சொல்லுங்க? இந்த ஞாயத்தை ஏ.ஜி.ஏ ஏத்துக்கிட மாட்டேங்கிறாரு. அவருக்குச் சட்டந்தான் பெரிசுங்கிறார். பத்திரம் வைச்சிக்கிறவங்களத் தாம் எதுவும் பண்ண முடியாது. அவங்களா எதனாச்சும் பண்ணினாத்தாங்கிறாரு அவரு. அவங்க விரும்பி காணியைக் குடுத்தாத்தான் எதனாச்சும் செய்யலாம்கிறார் அவரு.

அவருகிட்ட நம்ப நிலமையை சொல்லிப் பாத்தாச்சு. அதுக்கு என்ன பண்ண முடியும்கிறாரு. வேணும்னாக்கா அரசாங்கத்துக்க காணியில தேடிப்பாத்து எதனாலும் செய்ய முடியுமாம்னு பாக்கறேன் ண்றாரு.

ஆனா நாம இத விட்டு இன்னொரு இடத்துக்க போகமுடியுமா? நாலு தலைமுறையா இங்க இருந்திட்டோம். இடமெல்லாம் பழகீட்டு. தொழில் பழகீட்டு. ஆட்களெல்லாம் பழகீட்டு. எல்லாத்தேயும் விட்டுட்டுப் போயிட முடியுமா? இன்னுமா பெட்டி படுக்கை எல்லாம் தூக்கிட்டு இடம்தேடி அலையணும்? இப்பிடியே அலைஞ்சிட்டிருக்க முடியுமா?

அங்கிட்டுப்போயி என்ன பண்ண முடியும்? இந்த பாருங்க, போன மாசம், இந்தியா கட்டிக் குடுத்த வீட்ட எடுத்திட்டு எங்க அக்கா பொண்ணு அங்க – அறிவியல் நகர்ப்பக்கத்தில ரொம்பக் கஸ்ரப்படுது. எடம் புதுசு. ஆக்களெல்லாம் புதுசு. அங்கிட்டு ஒரு தொழில் கிடையாது. அங்கிட்டிருக்கிற ஆக்கள்லாம் இங்கிட்டுத்தான் வயல் வேல, மேசன் வேலக்கெல்லாம் வர்ராங்க. எல்லாத்துக்கும் இது ஏலுமா?

அங்கிட்டு தண்ணிக்கே ரொம்பப் பாடு. ரண்டு மூணு நாளுக்கு ஒருக்கா தண்ணி விடுறாங்க. இருக்கி ஆக்கள்லாம் ரெம்பக் கஸ்ரப்படுதுகள். நாங் அங்கிட்டுப் போயிருந்தன். அங்க பாத்தா, ரொம்ப வருத்தமாயிருக்கு. புருசனை எழந்திட்டவங்க, புள்ளய எழந்திட்டவங்க அப்படீன்னுதான் எல்லாரும் இருக்காங்க. அக்கா பொண்ணுட புருசன் செல்லில செத்திட்டாரு. அவ ஒரு புள்ளயோட ரொம்பப் பாடுபர்ரா. இங்கிட்டு இருந்தப்ப, வயலுக்குப் போவ. ஒரு நாளைக்கு ஐநூறு ரூபாய் குடுத்தாங்க. எந்த நாளும் இல்லாட்டியும் நாலு ஐஞ்சு நாளுக்கு வேலை பாக்கும் அந்தப் புள்ள. ஆனா, அங்கிட்டு ஒண்ணுமே கிடையாது. நிவாரணம் கூட இல்லைன்னுட்டாங்களாம்.

சரி, இந்தப் பிரச்சினைகளை எல்லாம் நீங்கள் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் தெரியப்படுத்தவில்லையா?

சொல்லியிருக்கோம். ஆனா அவங்க இப்ப எதுவும் பண்ண முடியாதுங்கிறாங்க. காணிப் பிரச்சினை எல்லாமே இப்ப பாக்க முடியாது அப்பிடீன்னுட்டாங்க. அப்ப நாம என்ன பண்ணறது எண்ணு கேட்டா, அதுக்குப் பதில் கிடையாது.

இப்பிடி ஒரு நிலைமைல என்ன பண்ண முடியும்னு சொல்லுங்க. நம்பளுக்குத்தான் வீட்டுத் திட்டம் கூட இல்ல. இந்த மாதிரி எவ்ளவோ ஆட்கள் இருக்கிறாங்க. காணி இல்ல அப்பிடீன்னுட்டு வீட்டு உதவியைக் கான்சல்ட் பண்ணிடறாங்க.

திரும்ப இந்த உதவியெல்லாம் கிடையாது. ஆனா இதுக்கு எதுவும் பண்ண முடியாதுன்னு சொல்லிடுறாங்க.

அப்படியென்றால் இப்ப இதுக்கெல்லாம் நீங்கள் என்ன செய்யலாம் எண்டு நினைக்கிறீங்கள்?

ஒண்ணுமே பண்ண முடியாது. பாருங்க, இந்த மண்ணில இவ்வளவு காலமா இருந்திருக்கோம். இந்த இடத்திலதான் நாங்க வளந்தது. படிச்சது. கல்யாணம் பண்ணிக்கினதும் இங்கினதான். நம்பட புள்ளங்க பிறந்தது, நாம இருக்கிறது எல்லாம இங்கிட்;டுதான். ஆனா, இப்ப அவனவன் வந்து கிளம்பெங்கிறான். பாருங்கய்யா காலத்த.

இவ்வளவு நாள இவங்கெல்லாம் எங்கிட்டிருந்தாங்க? அட இப்பகூட இங்கவா இருக்கப்போறாங்க? நாளைக்கே போயிடுவாங்க. ஆனா சொத்த எடுத்துக்கப் போறாங்களாம். இது ஞாயமா சொல்லுங்க? இவ்வளவு காலமா இருந்து இந்த நிலத்தைப் பாத்திருக்கிறம். குடியிருந்திருக்கிறம். இப்ப வேரோட புடுங்கிறாங்கய்யா. அட இதுகூட அரசாங்க நிலந்தான். ஆனா அவங்க கையில பேமிற் (அத்தாட்சிப் பத்திரம்) இருக்குங்கிறாங்க. இதப்பத்தியெல்லாம் ஆருக்குத்தான் உண்மை தெரியுமோ!

............ (சற்று மௌனமாக இருந்த பின்னர் மீண்டும் தொடர்ந்தார்)

நம்மட துக்கம் போகாதய்யா. ஆளாளுக்கு வந்து துரத்திக்கிட்டே இருக்கிறாங்க. எல்லாருமே அதிகாரந்தான் பண்றாங்க. அதுக்கெல்லாம் ஒரு ஞாயம்.

காணிப்பத்திரம் இல்லைன்னா, வீடு குடுக்க முடியாதுன்னா நாம என்ன பண்ணுறது? எல்லாருக்கும் வீடு கிடைக்குது. நம்மளக்கு இல்லை. நாம புள்ள குட்டிக்காரங்க. இந்தச் சண்டைக்குள்ள எல்லாம் இருந்து எவ்ளவு கஸ்ரமெல்லாம் பட்டம். ஏன் புருசங்கூட செத்திட்டாரு. புள்ள ஒண்டில்ல. இந்த நிலைமையில என்ன பண்ண முடியும்? குடும்பத்தில உழைக்கிற ஆட்களெ இல்ல.

இந்த வயசில என்னால எல்லா இடத்துக்கும் ஓடித் திரிய முடியுமா?

காணியற்ற ஆட்களுக்குக் காணி வழங்குவதைப் பற்றி அரசாங்கம் ஆராய்ந்து கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறதே. அப்படியான ஒரு நிலை வந்தால் உங்களுடைய பிரச்சினை தீருமல்லவா?

ஆனா அதுக்கு யாரு பொறுப்புச் சொல்றது? சும்மா இப்பிடிச் சொல்லிக்கிறாங்க. ரொம்பப் பேர் காணியில்லாம அலைஞ்சிட்டிருக்காங்க. ஒருத்தருக்கும் காணி குடுக்கிறதாக் காணல்ல. இப்ப இந்தியன் வீட்டில கொஞ்சப் பேருக்குக் குடுத்திருக்காங்க.

எப்ப காணி குடுப்பாங்க? எப்ப நாங்க அதில வீடு கட்டிறது? இதெல்லாம் யாருக்குத் தெரியும்? ஒண்ணையுமே விவரமா யாரும் பேச மாட்;டேங்கிறாங்க. இந்த வீட்டுத் திட்டம் போயிடுச்சின்னா அவ்வளவுதான். பிறகு எதுவுமே கிடையாது. நாங்க குடிசைக்குள்ளதான்.

அதான் சொல்றேன். இதெல்லாம் நடகிற காரியம் இல்ல. அப்பிடி இருந்தா இப்பவே காணிக்கு ஒரு முடிவைச் சொல்லிடுவாங்க. இப்பதான காணிக்கு வழிவேணும். அப்புறம் எதுக்கு? இப்பதானே வீட்டைக்குடுக்கிறாங்க.

இப்பிடியே சொல்லிக் கொண்டிருந்தால் உங்களுடைய எந்தப் பிரச்சினையும் தீராது. ஆனால், நீங்கள் சொல்வதில் நியாயம் உண்டு. உங்களுடைய இந்தப்பிரச்சினையை விளங்கிக் கொண்டு உதவக்கூடிய ஆட்கள் யாரும் இல்லையா?

சிலர் உதவ வந்தாங்க. ஆனா அவங்க என்ன பண்ண முடியும்? காணிக்குப் பத்திரத்தை அவங்களால வழங்கிட முடியுமா என்ன? அவங்க ஜீ.எஸ், ஏ.ஜீ.ஏ, ஆர்.டி.எஸ், எல்.ஓ இப்பிடி எல்லார்கிட்டயும் பேசிப்பாத்துட்டாங்க. ஆனா ஒரு வழியும் கிடைக்கல்ல.

சட்டம் போட்டிருக்காம். நீதி மன்றத் தடை வந்திருக்காம். அப்பிடியெல்லாம் சொல்லிக்கிறாங்க. முன்னாடி நாங்க இருந்த காணிக்கு போம் போட்டாங்க. நாங்க அத நிரப்பிக் குடுத்திருக்கம். ஆனா அதெல்லாம் இப்ப செல்லாதுன்னுட்டாங்க. இப்பிடியே எதெல்லாமோ சொல்லிச் சொல்லிக் காலத்தப் போக்கிக்கிறாங்க.

எனக்கு என்ன பண்றதுன்னே புரியல்ல. இனி திரும்பி நாம கம்பளைக்குப் போக முடியுமா? அங்கிட்டு எனக்கு யாரத்தெரியும்? இப்ப இங்கிட்டும் இருக்க முடியாது. அங்கிட்டும் போவ முடியாது. கடவுளே! நாலு புள்ளங்களையும் வெச்சிக்கிட்டு என்னதான் பண்ணப்போறனோ!

அப்படியென்றால், இப்ப நீங்கள் இருக்கும் காணிக்கு உரிமை கோரிக்கொண்டு வந்திருப்பவர்களிடம் உங்களுக்குக் கொஞ்சக் காணியைத் தரும்படி கேட்கலாமே!

அதுக்கு அவங்க எங்களோட பேச மாட்டேங்கிறாங்க. இந்த மாதிரிப் பிரச்சினை எங்களுக்கு மட்டுமில்ல. அந்தப் பக்கமா இன்னும் பத்துக்குடும்பங்க இதே மாதிரி இருக்கிறாங்க. அவங்களும் அவங்க இருக்கிற காணிக்கு வந்திருக்கிற ஆட்கள் கூடப் பேசியிருக்கிறாங்க. ஆனா அவங்க அதுக்குச் சம்மதிக்கல்ல.

தங்கட காணிக்குள்ள வேற ஆட்களை வெச்சிருக்கிறது நல்லதில்லன்னு சொல்றாங்க. எப்பிடிருக்கு நிலைமை பாத்தீங்களா?

இவ்ளவு நாளா நாமளே காணியைப் பாக்கணும். இப்ப மட்டும் அவங்களுக்கு நாம தேவை இல்ல. காரியம் முடிஞ்சிருக்கல்ல. அவ்வளவுதான். இனி நாமெல்லாம் யாருக்கும் தேவையில்ல. என்ன மனுசங்கப்பா இவங்கெல்லாம். என்னதான் படிச்சிருக்கிறாங்களோ!

00

குறிப்பு – 

யுத்தம் முடிந்த பின்னர் வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்குத் திரும்பி வருவோர், தங்களுடைய காணி உறுதிகளைக் கொண்டு வந்து தங்களின் காணி மற்றும் சொத்து உரிமைகளை நிலைநாட்டிக் கொள்கிறார்கள். இதில் பலருக்கு ஏக்கர்க்கணக்கான காணிகள் பராமரிப்பின்றிய நிலையில் உள்ளன. சிலருடைய காணிகளை பல குடும்பங்கள் நீண்டகாலமாகவே பராமரித்து வந்திருக்கின்றன. ஆனால், காணி உறுதிகளைக் கொண்டு வருவோர் அந்த உறுதிகளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி இந்தக்குடியிருப்பாளர்களை வெளியேற்றி வருகின்றனர். இப்படி வெளியேற்றப்படும் குடும்பங்கள் பெரும்பாலும் மிக வறிய – ஏழைக்குடும்பங்களாகவே உள்ளன. 


இதில் அரசாங்கத்தினால் குடியேற்றத்திட்டங்களின் போது வழங்கப்பட்ட காணிகளை விட்டு வெளியேறிப்போனோரும் உண்டு. இந்தப் பெண் இப்படியான காணி ஒன்றிற்தான் நீண்டகாலமாக வசித்து வருகிறார். இப்படிப் பல குடும்பங்கள் வன்னியில் உள்ளன. ஆனால், இப்பொழுது உருவாகியிருக்கும் போருக்குப் பிந்திய சூழலில் பலரும் தங்களுடைய காணிகளுக்கான உரித்தாவணங்களைத் தூசி தட்டி எடுத்துக்கொண்டு வந்து உரிமை கொண்டாட முயல்கின்றனர். தங்களுடைய உரித்தைக் கொண்டாடும்போது, இதுவரையில் யுத்தத்தின் மையத்தில் வாழ்ந்து கொண்டு இந்தக் காணிகளைப் பார்த்துப் பராமரித்தவர்களையும் சற்று மனங்கொள்ள வேணும்.


இதனால் பல முரண்கள் ஏற்பட்டுள்ளன. யுத்தச் சூழலுக்குள் முப்பது, நாற்பது ஆண்டுகளாக காணிகளைப் பராமரித்து, அதற்குள்ளேயே வாழ்ந்து வந்த குடும்பங்களின் நிலைமையைக் கருத்தில் எடுக்காமல் உரித்துக் கொண்டாடும் மனோ நிலை மிகக் கவலை அளிக்கும் ஒன்றாகும். ஆனால், இதைக்குறித்து யாரும் வெட்கப்படுவதாகவோ சிந்திப்பதாகவோ இல்லை. 


தமிழ்ச் சமூகத்திற்கும் காணிக்கும் பெரும் பிணைப்புண்டு. காணிக்காகவே – காணியின் எல்லைத் தகராறுகளாலேயே சொந்தச் சகோதரர்களைக்கூடப் பகைத்துக்கொள்ளும் மனநிலை உள்ளவர்கள் ஈழத்தமிழர்கள். இந்தப் பின்னணியில் இந்தப்பிரச்சினையை - இந்த ஏழை மக்களின் நிலையை யாரும் எளிதிற் புரிந்து கொள்ளலாம். 


மேலும் அரச காணிகளைக் காணியற்ற பொதுமக்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்குப் பின்னடிக்கும் அதிகாரிகள், அரசாங்கத்தின் செல்வாக்கோடு வரும் தனியாருக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் தாராளமாகவே காணிகளை வழங்குகின்றனர். 


சட்டத்திலும் நிர்வாகத்திலும் தாராளமாக இந்தமாதிரி ஓட்டைகள் இருப்பதொன்றும் புதிதல்ல. ஆனால், மனச்சாட்சியில் ஓட்டைகள் விழுவதே ஏற்றுக்கொள்ளக் கடினமான விசயம். 

00

0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB