கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

பாதுகாப்பென்பது படைகளிடமா, மக்களிடமா?

Saturday, 21 January 2012






''பின்தங்கிய நாட்டை அடிமை கொள்வது உலகத்துக்கு மிகச் சுலபம். பின்தங்கிய நாட்டில் மக்கள் வாழ்வது மிகக் கடினம். ''







இலங்கையின் பிரச்சினைகளுக்கான தீர்வு அல்லது தீர்வுகள் என்ன? அந்தத் தீர்வை அல்லது தீர்வுகளை எப்படிக் காணமுடியும்? இலங்கையை ஒரு சுயாதிபத்தியமுள்ள நாடாக எப்படி மாற்ற முடியும்? என்ற கேள்விகள் நீண்டகாலமாகவே வௌ;வேறு அரங்குகளில் கேட்கப்பட்டு வரப்படுகிறது. அல்லது சில அரங்குகளில் இந்தக் கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்தக் கேள்விகள் பலருடைய மனதிலும் அடிக்கடி எழுவதும் உண்டு.

ஆகவே நீண்டகாலத் தொடர்ச்சியை உடைய இந்தக் கேள்விகளை – இவற்றுக்கான பதில்களையும் இவற்றுக்கான நடவடிக்கைகளையும் பெறமுடியாதிருக்கும் இந்தக் கேள்விகளை - மீளவும் இங்கே முன்னிறுத்தி இந்தப் பத்தியில் விவாதிக்கலாம் என்று தோன்றுகிறது.

1. இலங்கையின் பிச்சினைகளுக்கான தீர்வு அல்லது தீர்வுகள் என்ன?

இந்தக் கேள்விக்கான பதிலை நாம் காண்பதற்கு முன்னர், இலங்கையின் பிரச்சினைகள் என்ன? என்று நாம் பார்க்க வேண்டும். அதன்படி பார்த்தால், முதலாவதாக இனப்பிரச்சினை. இது தமிழ்பேசும் மக்களிடத்தில் அரசியற் போராட்டங்களையும் ஆயுதப்போராட்டத்தையும் தோற்றுவித்தது.

அதேவேளை அதற்குச் சமாந்தரமாக உள்ள இரண்டாவது பிரச்சினை - பொருளாதாரச் சமனற்ற நிலையும் பிரதேச ரீதியிலான சமனின்மைக் குறைபாடுகளும். இதுவே ஜே.வி.பி யின் தோற்றத்துக்கும் அதனுடைய போராட்டங்களுக்கும் காரணமாக இருந்தது.

ஆகவே, இலங்கையில் இரண்டு பிரச்சினைகள் மிக முக்கியமாகவும் முதன்மை நிலையிலும் உள்ளன. இந்த இரண்டு பிரச்சினைகளின் காரணமாகவும் இலங்கைத் தீவு அளவுக்கதிகமான இரத்தத்தைச் சிந்தியிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான – பல இலட்சக்கணக்கான உயிர்கள் பலியிடப்பட்டுள்ளன. பல கோடிக்கணக்கான பெறுமதியுடைய சொத்துக்களும் இயற்கை வளங்களும் அழிவடைந்துள்ளன.

மேலும், சமூகங்களுக்கிடையிலான இடைவெளி அதிகரித்து, முரண்பாடுகள் கூர்மையடைந்துள்ளன.

இதை இன்னும் வெளிப்படையாகவும் சுருக்கமாகவும் சொல்வதெனில், இந்த இரண்டு பிரச்சினைகளுக்காகவும் மிகத் தீவிரமான ஆயுதப்போராட்டங்கள் நீண்டகாலமாகவே நடந்துள்ளன.

இப்பொழுது இந்த ஆயுதப் போராட்டங்கள் முறியடிக்கப்பட்டிருந்தாலும், போராட்டங்கள் முளைவிடுவதற்குக் காரணமான பிரச்சினைகள் அப்படியேதான் உள்ளன. ஆகவே, அவற்றுக்குத் தீர்வுகள் காணப்பட வேண்டும். அப்படித் தீர்வைக் காண்பதே இலங்கைத் தீவின் அமைதியும் அபிவிருத்தியும் தன்னிறைவும் சுயாதிபத்தியமும் நிலைபெறுவதற்கான வழியை ஏற்படுத்தும்.

அவ்வாறெனில், இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வு என்ன? அல்லது தீர்வுகள் என்ன?

இங்கேதான் பிரச்சினை திரும்பவும் உருவாகிறது. தீர்வைப் பற்றி யோசிக்கும்போதே அல்லது தீர்வுக்காக முயற்சிக்கும்போதே தீர்வை நோக்கிச் செல்ல முடியாத ஒரு பயங்கரமான நிலை இலங்கை அரசியற் பண்பாட்டுச் சூழலில் நிலவுகிறது.

உதாரணமாக - இனப்பிரச்சினைக்கு அரசியற் தீர்வை முன்வைக்க அரசாங்கம் முயற்சிக்கும்போது அதை சிங்களத் தீவிரவாதக் கட்சிகளும் எதிர்க்கட்சியும் கடுமையாக எதிர்க்கும்.

அதைப்போல, தமிழ்க்கட்சிகள் வடக்குக் கிழக்கு இணைப்பையும் அரசியற் தீர்வையும் கோரும்போது முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பற்றியும் அவர்களின் நிலையைப்பற்றியும் சரியாக அக்கறைக்கு எடுப்பதில்லை.

மேலும் இலங்கைத்தீவின் யதார்த்தத்துக்கு ஏற்றவாறு சிந்திக்கும் முறைமையையும் இவை கைக்கொள்வதில்லை. ஆகவே, தீர்வைப்பற்றிச் சிந்திக்கும்போது இத்தகைய எதிர்நிலைகளும் குறைநிலைகளும் உள்ளடக்கங்கொண்டேயிருக்கின்றன.

எனவே, இலங்கைத்தீவில் முரண்பாடுகளுக்கான – பிரச்சினைகளுக்கான தீர்வைப் பற்றிச் சிந்திப்பதே தீர்வுக்கு எதிரானதாக அமைகிறது என்றே சொல்ல வேண்டும். உண்மையில் இதுதான் - இப்படியான ஒரு துயர நிலைதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலை தொடரும்வரை நிலைமை மேலும் மேலும் மோசமடையுமே தவிர, ஒருபோதுமே சீருக்குத் திரும்பாது. பிரச்சினைகளும் தணியாது. நெருக்கடிகளும் குறையாது.

ஆனால், அதற்காக தீர்வைப் பற்றியோ தீர்வுகளைப் பற்றியோ பேசாமலும் சிந்திக்காமலும் இருக்க முடியுமா?

எத்தகைய விலையைக் கொடுத்தேனும் தீர்வைக் கொண்டு வரவேண்டும் என்று சிந்திப்பதற்குப் பதிலாக தீர்வொன்றைப் பொருத்தமான முறையில் கொண்டு வருவதன் மூலம் அல்லது பொருத்தமான தீர்வொன்றைக் கொண்டு வருவதன் மூலம், ‘விலை’களையும் ‘தலை’களையும் கொடுக்கும் நிலையை மாற்றிவிடலாம்.

ஆனால், கடந்த காலங்களில் நடந்தது வேறு. தீர்வுக்குப் பதிலாக முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தும் காரியங்களே அரசியல் உபாயமாக்கப்பட்டது. இப்பொழுது நடந்து கொண்டிருப்பதும் இதுதான்.

இதனால், யுத்தத்தில் வெல்வதன் மூலம் தனியரசொன்றை உருவாக்கி இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காணமுடியும் எனத் தமிழர்கள் சிந்தித்தனர்.

யுத்தத்தில் வெல்வதன்மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் குறித்த அரசியற்குரல்கள் தணிந்து விடும் என்று அரசு சிந்தித்தது.

இதைப்போலவே, ஆயுதப்போராட்டத்தின் மூலம் இலங்கையில் பொருளாதாரச் சமநிலையுடைய அரசொன்றை ஸ்தாபித்து விடலாம் என்று ஜே.வி.பி சிந்தித்தது.

முடிவாக இலங்கை பேரழிவிற்குள்ளும் ஸ்திரமின்மைக்குள்ளும் தள்ளப்பட்டதே வரலாறாகவும் யதார்த்தமாகவும் உள்ளது.

ஆகவே, இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வைக் காண்பது அல்லது  தீர்வுகளைக் காண்பது என்பது இன்று மிக அவசியமாக உள்ள ஒன்றாகும்.

இதன்படி, இனப்பிரச்சினைக்குப் பொருத்தமான – நீதியான – சமூகங்களுக்கிடையில் கொந்தளிப்பைத் தணிக்கக்கூடிய வகையிலான – அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் உருவாக்கக்கூடிய – சமநிலையையுடைய – ஒவ்வொரு சமூகங்களின் இருப்புக்கும் உத்தரவாதமுடைய – அச்சநிலையைப் போக்கக்கூடிய - நிரந்தரத் தீர்வொன்றைக் காணவேண்டும்.

இதைப்போலவே பிரதேசங்களுக்கும் மக்களுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் அபிவிருத்திச் சமனிலையற்ற நிலையைப் போக்கக்கூடிய பொருளாதாரக் கொள்கையினையும் அரசியற் கொள்கையினையும் வகுத்து நடைமுறைப்படுத்துதல்.

இந்த இரண்டும் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படும்போது இலங்கைக்கான - இலங்கை அரசுக்கான உள்நாட்டு நெருக்கடியும் உள்நாட்டுச் சக்திகளின் அச்சுறுத்தலும் நீங்கிவிடும். இந்த அச்சுறுத்தல் நீங்குமானால், இலங்கையின் பாதுகாப்புச் செலவீனத்தில் ஐந்தில் மூன்று பங்கு மீதப்படுத்தப்படும். ஆளணிச் சக்தியும் மீதமாகும்.

அதேவேளை உள்நாட்டு முரண்பாடுகளைப் பயன்படுத்தி, உள்ளே இருக்கும் எதிர்ச் சக்திகளைப் பயன்படுத்தி தமது அரசியல் நலன்கனை முன்னெடுக்க முயலும் வெளிச்சக்திகளின் உபாயங்களும் தடுக்கப்படும்.

2. ஆகவே, இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வை அல்லது தீர்வுகளை       எப்படிக் காணமுடியும்?

இதற்கு முற்றிலும் புதிய முறையில் சிந்திக்க வேண்டும். முதலாவதாக  இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான சூழலை உருவாக்குவது அவசியம்.

இதன்படி, தீர்வுக்குத் தடையாக இருக்கின்ற சக்திகளையும் காரணிகளையும் அடையாளம் காண்பது முதலாவது பணியாகும்.

அடுத்ததாக, அந்த எதிர்ச் சக்திகளை எப்படித் தணிவு நிலைக்குக் கொண்டு வருவது? தடைக்காரணிகளை எவ்வாறு அகற்றுவது? என்று ஆராய்ந்து அதற்கான தீர்வைக் காண்பது.

இப்படிப் பார்க்கும்போது எதிர்ச்சக்திகளான தீவிர நிலையாளர்களையும் முஸ்லிம் விரோதப் போக்கையும் பலவீனப்படுத்த வேணும்.

அரசியல் அமைப்பு தடையாகவோ நெருக்கடியாகவோ இருக்குமானால், அதைத் திருத்துவதற்கு முயற்சிக்க வேணும். நாட்டினதும் மக்களினதும் தேவைகளுக்காகவே அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டது. அதற்கேற்பவே அது காலத்துக்குக்காலம் திருத்தத்துக்குட்படுத்தப்படுவதும். ஆனால், துரதிருஷ்ரவசமாக இலங்கையில் அரசியல் அமைப்பின் திருத்தம் அரசையும் ஆட்சியாளரையும் பாதுகாப்பதற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்தும் மக்களின் - சமூகங்களின் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் ஏற்றவாறு அமைக்கப்படவில்லை. ஆகவே, இதைக்குறித்துச் சிந்திக்க வேண்டும்.

இத்தகையதொரு அவசியச் சிந்தனைகளை மையப்படுத்திய அமுக்கக்குழுக்கள் (pசரளரசந பசழரிள)  இன்றைய நிலையில் மிக அவசியமாகத் தொழிற்படவேண்டியுள்ளன.

ஏனெனில், முன்னெப்போதையும் விட இப்பொழுதே இனப்பிரச்சினையைக் காண்பதற்குப் பொருத்தமான – பதமான சூழலொன்று அமைந்துள்ளது. போரினாலும் இன முரண்பாடுகளினாலும் பொருளாதாரப் பிரச்சினைகளாலும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட அனுபவங்களை இலங்கையிலுள்ள அனைத்துச் சமூகத்தினரும் சகல மக்களும் பெற்றிருக்கும் சந்தர்ப்பம் இது.

போரினால், முற்றுமுழுதாகவே பாதுகாப்பற்ற ஒரு நிலையில் இலங்கையிலுள்ள சமூகங்கள் இருந்தன. ஸ்திரமற்ற நிலையில் நாடு இருந்தது. இப்போது சகிக்கமுடியாத அளவுக்குத் துயரந்தரும் நிகழ்வுகளின் மத்தியில் போரின் பிடியிலிருந்து நாடு மீண்டுள்ளது.

எனவே இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, போரற்ற ஒரு நிலை எதிர்காலத்தில் நிரந்தரப்படுத்தப்பட வேண்டும் என்றும் அப்படியான ஒரு நிலையை உருவாக்கி, ஸ்திரப்படுத்துவதற்கான அடிப்படைகள் இப்போதே உருவாக்கப்பட வேண்டும் என்றும் மக்களிடையே அரசியல் வேலைகளைச் செய்வதற்கு இதுவே மிக வாய்ப்பான – பொருத்தமான சந்தர்ப்பமாகும். இதைப் புரிந்து கொண்டு, தமிழ், சிங்கள, முஸ்லிம், மலையச் சமூகங்களிலுள்ள அமுக்கக்குழுக்கள் தொழிற்பட வேண்டும்.

ஆனால், இந்த அமுக்கக்குழுக்கள் தங்கள் தங்கள் சமூகங்களின் அடையாளங்களின் வழியாக மேலும் தீவிரநிலைகளை – முரண்நிலைகளைக் கூர்மைப்படுத்தும் வகையிற் சிந்தித்தால் நிலைமை மேலும் விபரீதமாகும் என்பதையும் இங்கே கவனிப்பது அவசியம்.

இந்த அமுக்கக்குழுக்களானது, தங்களுக்கிடையில் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தை வரைந்து, அதில் இணைந்து தொழிற்படுவதன்மூலமாக இடைவெளிகளைக் குறைத்து தம்மைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். அது இயலுமானதுங்கூட.

அப்படிச் செய்யப்படும்போது, அப்படி இவை தொழிற்படும்போது, இலங்கையின் இனப்பிரச்சினைக்கும் பொருளாதாரப் பிரச்சினைக்குமான அரசில் நடவடிக்கைளை மேற்கொள்வதற்கு ஆட்சியாளர்களுக்கும் அரசியலைக் கைக்கொள்வோருக்கும் வாய்க்கும்.

ஆகவே, இப்போது அரசியலை முன்னெடுப்பதென்பதும் பிரச்சினைகளுக்கான தீர்வைக் கையாள்வதென்பதும் முழுமக்களினதும் முழு அக்கறைக்குரிய ஒன்றாக உள்ளது. இதில் முக்கிய பாத்திரத்தை ஏற்கவேண்டிய பணி அந்தந்தச் சமூகங்களைச் சேர்ந்த சிந்திக்கும் தரப்பினருடையதாகிறது.

மூன்றாவது கேள்வி. இலங்கையை ஒரு சுயாதிபத்தியமுள்ள நாடாக எப்படி மாற்ற முடியும்? என்பது.

இந்தக் கேள்விக்கான பதில் மிகச் சுலபமானது. மேற்படி கேள்விகளுக்கான பதிலைக் காண்பதன் மூலம் இந்தக் கேள்விக்கான பதிலும் இந்தக் கேள்வியின் உள்ளேயுள்ள நிலைமைக்கான பதிலும் கிடைக்கும்.

உள்நாட்டு நெருக்கடிகள் தீரும்போது, அரசின் ஒடுக்குமுறையும் தணிந்து விடும். அதனுடைய அச்சமும் தீர்ந்து போகும். இதன்மூலம் நாட்டில் முதலாவது நிலையிலான தளம்பலுக்கு முடிவுவந்து விடும். மக்களும் அரசும் எதிரெதிர்ச் சக்திகள் என்ற நிலை அநேகமாக மாறிவிடும். அப்படியான ஒரு நிலையில் மக்கள் அரசின் - ஆட்சியின் பாதுகாவலர்களாக இருப்பர். அதுவே சரியானதும். அந்தப் பாதுகாப்பே படைகளின் பாதுகாப்பையும் விடப் பலமானது. உறுதியானது.

அதேவேளை, உள்நாட்டிலுள்ள முரண்சக்திகளை வெளிச் சக்திகள் பயன்படுத்தி தமது காரியங்களைச் சாதிக்க முடியாத நிலையும் உருவாகும். அத்துடன் உள்நெருக்கடிகாரணமாக ஏற்படும் அழிவுகளும் சேதங்களும் ஆக்கத்திறனுக்கான ஏதுகளற்ற நிலையும் தடுக்கப்படும்போது, வெளியே கடன்படவும் கையேந்தவும் வேண்டிய நிலையும் ஏற்படாது. அத்துடன், உள்நாட்டு நெருக்கடிகளைக் கட்டுப்படுத்துவதற்காக வெளி உதவிகளை (புலிகளையும் ஜே.வி.பி யையும் அடக்குவதற்கு வெளி உதவிகளை இலங்கை அரசு நாடியிருந்தது) நாடவேண்டிய தேவையும் இருக்காது.

ஆகவே நாடு எந்த நிலையிலும் ஸ்திரத்தன்மையுடன் இருப்பதற்கு மேற்சொன்ன இரண்டு பிரதான கேள்விகளுக்கான பதில்களையும் காணும் நடவடிக்கைளை  மேற்கொள்ளும்போது மூன்றாவது கேள்விக்கான பதிலும் காணப்படுகிறது.

இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் தீர்வுக்கான முயற்சிகளோ – பேச்சுகளோ வழமையான பாரம்பரியத்தைக் கொண்டதாகவே உள்ளன. அரசு – தமிழ்த்தரப்பு என்ற எதிரெதிர்த்தரப்புகளின் மோதற்களமாகவே பேச்சுகளும் பேச்சுமேசையும் அமைந்துள்ளன. அப்படியே தோற்றங்காட்டவும் படுகிறது. அப்படியே புரிந்து கொள்ளவும் படுகிறது.

பேச்சுகள் தொடர்பாக இரண்டு தரப்பு வெளிப்படுத்தும் செய்திகளும் அறிக்கைகளும் இதையே நிரூபிக்கின்றன. பேச்சுகளைப் பற்றிய செய்திகளை வெளியிடும் இந்தத் தரப்புகளின் ஆதரவு ஊடகங்களும் இதே மனநிலையில்தான் இதை அணுகுகின்றன. ஒருவரை ஒருவர் தோற்கடிக்க அல்லது ஒருவரை ஒருவர் வெல்ல முயற்சிக்கின்ற எத்தனங்களே பேச்சுமேசையாகக் காணப்படுகிறது. இது அடிப்படையிலேயே தவறானது.

பேச்சுகளின் மூலமாகத் தீர்வொன்றைக் காணமுற்படும்போது இரண்டு தரப்பும் பதற்றங்களற்ற முறையில், சந்தேகங்களை மேலும் உருவாக்குவதற்கு இடமளிக்காமல் அரங்கிற் செயற்பட வேண்டும். ஆனால், அப்படியான நிலை உருவாகவேயில்லை. பதிலாக தட்டையான – ஒருவரை ஒருவர் தோற்கடிக்க முனைகிற அதே அமைப்பிற்தான் பேச்சுகள் நடக்கின்றன.

இந்த வழமையான – பழைய – தோற்றுப்போன பாரம்பரியத்தையுடைய பேச்சுவார்த்தையின் மூலம் எத்தகைய தீர்வையும் இந்த நாடு கண்டு விடமுடியாது.

பதிலாகக் காலம் கரையும். தீவிர நிலையாளர்கள் மேலும் பலம் பெறுவர். நெருக்கடிகள் மேலும் உக்கிரமடையும். வெளிச்சக்திகள் தாராளமாகவே இடைவெளியுள்ள சமூகங்களிடையே புகுந்து விளையாடும். நாடு அச்சத்திலும் நிம்மதியின்மையிலும் உழலும். பாதுகாப்புச் செலவினங்களும் சட்டங்களும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் படைகளின் பெருக்கமும் அதிகரிக்கும். ஸ்திரமற்ற தன்மை தாராளமாகவே ஏற்படும். நாடு மிகமிகப் பின்தங்கியே செல்லும்.

பின்தங்கிய நாட்டை அடிமை கொள்வது உலகத்துக்கு மிகச் சுலபம். பின்தங்கிய நாட்டில் மக்கள் வாழ்வது மிகக் கடினம்.

00

ஓட்டம் முடியவில்லை -- முன்னர் துரத்தியது போர். இன்று துரத்துவது கடன்

Tuesday, 17 January 2012

















ஒரு காலத்தில், வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி, சீட்டுக் கட்டிச் சம்பாதித்துச் சீதனத்துக்குக் காசு சேர்த்தவர்கள் ஈழத்தமிழர்கள். பிறகு, தங்களின் சம்பாத்தியங்களை வங்கிகளில் வைப்பிலிட்டுச் சேமித்தார்கள். வங்கிகளில் சேமிப்பது பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருந்தது அவர்களுக்கு. யுத்தச் சூழலில் இது இன்னும் பாதுகாப்பானதாகத் தோன்றியது.

இலக்கங்கள் கூடக்கூட சேமிப்பின் மகிழ்ச்சி உச்சத்துக்கு ஏறும். அதைவிட அதிலொரு பெருமை வேறு.

இதனால், தமிழ்ப்பகுதிகளில் இயங்கிய வங்கிகள் சேமிப்பில் முதலிடம் வகித்தன. ஆனால், தெற்கு மற்றும் மேற்கிலுள்ள சிங்களப்பகுதிகளின் வங்கிக் கிளைகள், சேமிப்புக்குப் பதிலாகக் கடனைத் தாராளமாக வழங்கிக் கொண்டிருந்தன. சிங்களவர்கள் சேமிப்பதற்குப் பதிலாகக் கடனை வாங்கிக் கொண்டிருந்தனர்.

இதை மறுவளமாகப் பார்த்தால், தமிழர்களின் காசில் சிங்களவர்கள் வாழ்ந்தனர் எனலாம். அவர்கள் வங்கிகளில் குறைந்த வட்டிக்குக் கடனை வாங்கி, தங்களுடைய தொழில் முயற்சிகளைச் செய்தனர். முதலீடுகளிலும் தாராளமாக ஈடுபட்டனர். வடக்குக் கிழக்கையும் விட ஏனைய பகுதிகளில் நிலவிய ஒப்பீட்டளவிலான அமைதிச் சூழல் இதற்கு மேலும் சாதகமான வாய்ப்புகளை வழங்கியது.

சேமிப்பதற்குப் பதிலாகத் தாராளமாகச் செலவு செய்யும் பழக்கம் சிங்களவர்களுக்கு எப்போதும் அதிகம். செலவு செய்வதற்காகவே சிங்களவர்கள் கடுமையாக உழைப்பார்கள் என்று தென்பகுதியில் நீண்டகாலம் இருந்த நண்பர்கள் சொல்வர்.  உழைப்பதைத் தாராளமாகச் செலவழிக்கும் இயல்பு அவர்களிடம் உண்டு. விதவிதமாகச் சாப்பாடுவதிலும் சுற்றுலாக்களுக்குப் போவதிலும் கொண்டாட்டங்களில் தாராளமாகச் செலவழிப்பதிலும் அலாதிப்பிரியம் அவர்களுக்கு.

நான் சிறுவனாக இருந்த காலத்தில் தெற்கிலிருந்து தினமும் பஸ் வண்டிகளில் சுற்றுலாவாக ஏராளம் சிங்களவர்கள் வடக்கே வருவர். வசதியுள்ளவர்கள்தான் இப்படி வருவதாக யாரும் எண்ணவேண்டாம். மிக வசதி குறைந்தவர்கள்கூட குடும்பம் குடும்பமாக வருவார்கள்.

அப்படி வருகிறவர்களுடைய உடற் தோற்றத்திலும் உடைகளிலும் அவர்கள் உடல் உழைப்புச் செய்யும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரியும். ஆனால், ஊர்களைப் பார்ப்பதிலும் பயணங்களைச் செய்வதிலும் அவர்களுக்கு நிறைய விருப்பம் என்றபடியால், செலவைப் பற்றிக் கவலைப்படாமல் இப்படி வருவார்கள்.

இப்படியான இயல்புள்ள சிங்களவர்கள் முதலீகளைச் செய்யவும் ஏதாவது தொழில்களை ஆரம்பிக்கவும் வங்கிகளில் தாராளமாகவே கடன்களை  எடுத்தார்கள். வடக்கிலே குறைந்த வட்டியைக் கொடுத்துத் தமிழர்களின் சேமிப்பைப் பெற்றுக் கொண்ட வங்கிகள், கூடுதலான வட்டிக்குச் சிங்களவர்களுக்குக் கடன்களைக் கொடுத்தன.

போதாக்குறைக்கு போர் நடந்த காலத்தில், அரசாங்கமே தமிழர்களின் சேமிப்பைப் போருக்குப் பயன்படுத்தியதாகவும் ஒரு அபிப்பிராயம் உண்டு. வெளிநாடுகளில் இருந்து போருக்காகப் பட்ட கடன் போதாதென்று வங்கிகளில் இருந்த சேமிப்பை அரசாங்கம் கடனாகப் பெற்றுப் போருக்குப் பயன்படுத்தியதாக அந்த நாட்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

எது எப்படியோ அன்று இப்படியாக இருந்த ஒரு நிலைமை இன்று  மாறியிருக்கிறது. இது யுத்தம் ஏற்படுத்திய மாற்றம். இப்பொழுது தமிழர்களும் வங்கிகளில் தாராளமாகக் கடன்களை எடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதிலும் வன்னியில் வங்கிக் கடன்களைப் பெறாத குடும்பங்களே இல்லை. கடன்படவில்லை என்றால் அவர்களால் வாழவே முடியாது என்ற நிலை. இந்த நிலையில் எப்படி கடனை எடுக்காமல் இருக்க முடியும்?

வன்னியில் நடந்த இறுதிப்போர், எல்லோரையும் அகதிகளாக்கியது. அகதிகளோ எல்லாவற்றையும் இழந்து விட்டவர்கள். எனவே, இந்தப் போர் இன்று எல்லோரையும் அகதிகளாக்கிக் கடனாளிகளாக்கி விட்டது.

இவர்கள் சாதாரண கடனாளிகளில்லை. பெருங்கடனாளிகள். எதற்கும் கடன் எடுக்க வேண்டும் என்பதால், எல்லோரும் இரண்டு மூன்று கடன் என்று எடுத்துப் பெருங்கடனாளிகளாகிக் கொண்டேயிருக்கிறார்கள். வட்டியைக் கட்ட முடியாமல், மேலும் புதிய கடனெடுத்து பழைய கடனின் வட்டியைக் கட்டுகிறார்கள். பிறகு புதிய கடனுக்காக வேறு கடனை எடுக்கிறார்கள். தொடர்கடன்கள். நிரப்பவே முடியாத கடன்கள்.

வங்கிகளும் தவிச்ச முயலை அடிப்பதைப் போல பாதிக்கப்பட்ட மக்களை வைத்துக் கடனைக் கொடுத்து வட்டியையும் முதலையும் கறக்கின்றன. கடன்கொடுப்பதற்காகவே ஏராளம் வங்கிகள். ஏராளம் கிளைகள். ஏராளம் திட்டங்கள்.

போருக்குப் பிந்திய வடக்கில் 64 நிதி நிறுவனங்கள் தங்களுடைய கிளைகளைத் திறந்து கடன் திட்டங்களை ஆரம்பித்திருக்கின்றன. ஊர் ஊராக, வீடு வீடாகக் கடன் திட்டங்களைப் பற்றிய பிரச்சாரம் வேறு.

சனங்களைக் கடனாளிகளாக்குவதற்கே அரசாங்கமும் திட்டமிட்டுள்ளது போலும். இல்லையென்றால், அது பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித்திட்டங்களையும் நிவாரணத்தையும் வழங்கியிருக்கும். அழிவுகளை முழுமையாகப் புனரமைத்திருக்கும்.

ஆனால், அப்படியான எதையும் அது செய்யவில்லை. அப்படியான எதையும் செய்யவும் அது யோசித்திருப்பதாகத் தெரியவில்லை.

சிறு உதவிகள் எந்த நிலையிலும் இந்த மக்களுக்குப் போதியதாக இருக்காது. முற்றாக இழந்த மக்களுக்கு முழுமைப்படுத்தப்பட்டதொரு உதவித்திட்டமே அடிப்படையான ஆதாரத்தை உருவாக்கும். அந்த அடிப்படையில் இருந்தே அவர்கள் தங்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்ப முடியும்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களாக இருப்பது வேறு. போரினால் முழுதாகவே அழிவடைந்த ஊர்களில் எல்லாவற்றையும் இழந்த மக்களாக இருக்கும் நிலை வேறு. இரண்டுக்கும் வித்தியாசமுள்ளது.

அரசாங்கம் எந்த வேறுபாட்டைப் பற்றியும் சிந்திக்கவும் இல்லை@ எந்த வித்தியாசங்களைப் பற்றியும் அக்கறைப்படவும் இல்லை. புலம்பெயர்ந்த தமிழர்களும் தாய்நிலத்தில் இருக்கின்ற தமிழர்களுக்காகப் பாசக்கண்ணீரை வடிக்கிறார்களே தவிர, பாசத்துடன் நடப்பதாகத் தெரியவில்லை.

போர் வாழ்க்கையையே மாற்றி விட்டது. தமிழர்களின் பொருளாதாரச் செயற்பாட்டையும் நோக்குநிலையையும் கூட மாற்றிவிட்டது.

அது சேமிப்புகளைச் சிதைத்து விட்டது. சேமிப்பாளர்களையும் சேமிப்புக்கான அடிப்படைகளையும்கூடச் சிதைத்தே விட்டது.

ஆகவே, சேமிப்புக்குப் பதிலாக இப்போது வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்கள் கடனுக்காகவே உழைக்கிறார்கள். கடனையும் வட்டியையும் கட்ட வேண்டும் என்ற கடப்பாட்டுக்காக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். கடன் அவர்களைத் துரத்துகிறது. ஓய்வில்லாமல் ஓடும்படி அது துரத்திக் கொண்டிருக்கிறது.

‘முன்னர் போர் துரத்தியது. இப்போது கடன்துரத்துகிறது’ என்று ஒரு கடனாளி வேடிக்கையாகச் சொன்னார். அவர் இப்படிச் சொன்னபோதும் அவருடைய இந்தப் பேச்சினுள்ளே ஒருவித துயரம் இழையோடியிருப்பதைக் காணலாம்.

போரின்போது கைகளை, கால்களை, கண்களை என்று உடல் உறுப்புகளை இழந்தவர்கள் கூட ஓட முடியாத நிலையில் கடனுக்காக ஓடிக் கொண்டிருக்கும் நிலையைக் காணமுடியும்.

ஏதாவதொரு தொழிலைச் செய்ய வேண்டும் என்ற நிலையிலேயே இவர்கள் வங்கிகளில் கடனாளியானார்கள். ஆனால், பட்ட கடனைக் கட்டக்கூடியவாறு உழைப்போ வருமானமோ இவர்களுக்கில்லை.

எவ்வளவுதான் முயன்றாலும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் போதிய வருமானத்தை யாராலும் எதிர்பார்க்க முடியாது.

ஏனென்றால், பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இருக்கும் சனங்களும் பாதிக்கப்பட்டவர்களே. ஆகவே, அவர்களிடம் தாரளாமாகச் செலவைச் செய்யக்கூடியவாறான நிதிவளம் இருப்பதில்லை. நிதிவளம் இல்லாத இடத்தில் எப்படி அதிக வருவாயை எதிர்பார்க்க முடியும்? வருவாய் குறைந்த நிலையில் எப்படிக் கடனுக்கும் வட்டிக்குமான உழைப்பை எதிர்பார்ப்பது?

ஆனால் ஒன்று - வங்கிகள் வந்த பிறகு, ஊர்களில் தவிச்ச முயல் அடிக்கிற நாள் வட்டி, அறா வட்டி, மீற்றர் வட்டிக் காரர்களின் கைகள் வீழ்ந்து விட்டன.

நாடே கடன் பட்டுக் கொண்டிருக்கும்போது குடிமக்கள் கடன்படுவதில் என்ன புதினம் என்று நீங்கள் கேட்கலாம்.

அப்படியான ஒரு கேள்வியைத்தான் ‘எத்தன்’ என்ற படத்திலும் கேட்கிறார், விமல். கடனிலேயே நாடும் மக்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், வாழ வேண்டியிருக்கிறது என்பதை மிகச் சுவாரஷ்யமாகச் சொல்லும் படம் இது. ஆனால், படத்தைச் சுவாரஷ்யமாகப் பார்ப்பதைப்போல வாழ்க்கை இருப்பதில்லை.

சேமிப்பையே தங்கள் வாழ்வாகக் கொண்டிருந்த ஒரு நிலை பெயர்ந்துள்ளதைப்போலவே தமிழர்களின் அடையாளங்களாக இருந்த பல சிறப்பம்சங்களும் போரினால் பெயர்ந்தும் சிதைந்தும் விட்டன. இவற்றை மீளுருச் செய்யும் காலம் எப்போது எந்த வடிவில் வருமோ!



00

இலங்கையில் தமிழ் பேசும் சமூகங்களின் எதிர்காலம் எப்படியிருக்கப்போகிறது?

Sunday, 15 January 2012
















மேற்படி தலைப்பை என்னிடம் கேள்வியாகக் கேட்டார் ஒரு நண்பர். அவருடைய இந்தக் கேள்விக்குள் பெருந்துக்கம் நிறைந்திருக்கிறது@ அத்துடன் எதிர்காலத்தைக் குறித்த அச்சமும் கலந்திருக்கிறது. இது தனியே ஒருவருடைய கேள்வியோ கவலையோ அல்ல. தமிழ்பேசும் சமூகத்தைச் சேர்ந்த பலருடைய கேள்வியும் இப்படித்தானிருக்கிறது. அவர்களுடைய கவலைகளும் அச்சங்களும் இந்தக் கேள்வியில் கலந்திருக்கின்றன. அப்படிப் பார்த்தால் இது இன்று தமிழ் பேசும் மக்களின் பொதுக்கேள்வியாகவும் பொதுக் கவலையாகவும் பொதுவான அச்சமாகவும் உள்ளது எனலாம்.

ஆகவே இந்தப் பொதுக் கேள்வி குறித்து நாம் சீரியஸாகச் சிந்திக்க வேண்டும். வெளியே சாதாரண கேள்வியாகத் தெரியும் இதனுள்ளே அசாதாரண நிலைமைகளே உள்ளடக்கமாகக் கொண்டுள்ளன. காரணம் இந்தக் கேள்வியின் பின்னால் ஏராளம் வலைப்பின்னல்களும் பொறிகளும் உள்ளன. அதேவேளை இந்தக் கேள்வியில் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தலைவிதியும் எதிர்காலமும் ஏன் நிகழ்காலமும் கூட பொதிந்திருக்கின்றன. ஆகவேதான். இந்தக் கேள்வி எழுந்ததற்கான பின்னணியைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

இந்தக் கேள்வி ஒரு சூழ்நிலையின் வெளிப்பாடு. தமிழ்பேசும் சமூகங்கள் இன்று எதிர்கொள்கின்ற அரசியல் வெறுமை நிலை உருவாக்கிய சூழ்நிலையிலிருந்தே இந்தக் கேள்வி பிறக்கின்றது. அறுபது ஆண்டுகால அரசியல் போராட்டங்களும் முயற்சிகளும் தோல்வியில் வந்ததன் விளைவு இது. அவ்வாறாயின் தமிழ் பேசும் மக்களின் மனதில் தற்போதிருக்கும் தலைமைச் சக்திகள் குறித்தும் கட்சிகள் குறித்தும் கேள்வி நிலை எழுந்திருக்கிறது@ அவநம்பிக்கை உருவாகியிருக்கிறது என்பதே பொருளாகும்.

தமிழ் பேசும் மக்கள் தங்களுக்குரிய தலைமைச் சக்திகள் குறித்த தெளிவையோ தெரிவையோ கொண்டிருக்கவில்லை. அப்படி அவர்கள் தமக்கான தெரிவைச் செய்யக் கூடிய அளவுக்கு இந்தச் சக்திகளும் இப்போதிருக்கும் தலைவர்களும் துலக்கமான நடவடிக்கைகளைச் செய்யவுமில்லை. அரசியல் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் மக்களுக்கான தலைமைத்துவப் பண்பையும் வினைத்திறனையும் இந்தத் தலைவர்கள் கொண்டிருக்கவும் இல்லை. அதாவது, அரசியல் உரிமைகளுக்காகப் போராடிப் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் மக்களின் மனதில் இவர்களில் எவரும் தக்கதொரு இடத்தைப் பிடிக்கவில்லை என்பதே இந்தக் கேள்விக்கான காரணமாகும்.
 
எவரும் இன்னும் மக்களின் மனதோடு நெருங்கவில்லை. மக்களின் பிரச்சினைகளோடும் அவர்களுடைய உணர்வுகளோடும் கலந்திருக்கவில்லை. மட்டுமல்ல, தமிழ் பேசும் சமூகங்களின் கடந்த கால, நிகழ்கால, எதிர்கால அரசியற் பிரக்ஞையோடும் இவர்களில்லை என்பதே இவர்களின் பெரிய பலவீனமாகும். சுpலரிடம் ஒரு மெல்லிய விகித வேறுபாடிருக்கலாம்.

இந்தத் தலைவர்கள் குறைந்த பட்சம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு நடவடிக்கைகளைக் கூடச் செயற்படுத்த முடியாத நிலையிலேயே அனைத்துத் தரப்பினரும் இருக்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொது உதவித்திட்டத்தை வரைய முடியாமலும் உதவி நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலாமலும் பொது உதவிநிதியமொன்றை உருவாக்க முடியாமலும் இவர்கள் இருக்கிறார்கள். அதாவது எதற்கும் வக்கற்ற நிலையிலும், எதற்கும் லாயக்கற்றவர்கள் என்று கூறுமளவுக்குமே இவர்கள் செயற்படுகிறார்கள்.

இப்போது தமிழ் பேசும் மக்களுக்கு என்று அதிக தலைவர்களும் அதிக கட்சிகளும் உருவாகியிருக்கின்றன. நாடு கடந்த நிலையில் கூட அரசியற் செயற்பாட்டு அணிகளும் ஆட்களும் தாராளமாக உருவாகியிருக்கும் சூழல் இது. அதிகளவான கட்சிகள் என்பதால் அதிகளவான நிலைப்பாடுகளும் செயற்பாடுகளும் உருவாகுவது இயல்பு. அதுவும் நீண்டகாலமாக ஒற்றைப் பரிமாண அரசியற் சூழலில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட தமிழ்பேசும் சமூகங்களுக்கு இந்த மாதிரி ஒரு நிலை உருவாகியிருப்பது எதிர்பார்க்க வேண்டியதே. அத்துடன் ஒரு ஜனநாயகக் சூழலில் இதுமாதிரி ஏராளம் அபிப்பிராயங்களோடும் நிலைப்பாடுகளோடும் பலரும் செயற்படுவது இயல்பானது என்று யாரும் சொல்லலாம். இது ஒரு வகையில் நியாயமானதாகவும் இருக்கலாம். ஆனால், இந்த நிலைப்பாடுகள் எல்லாம் அரசியல் ரீதியாகவும் வாழ்நிலை ரீதியாகவும்  பலவீனமடைந்திருக்கும் சமூகங்களை மேலும் பலவீனப்படுத்தும் என்பதே உண்மை. 
அதற்காக ஏகப்பிரதிநிதித்துவ நிலைப்பாடும் அணுகுமுறையும் பொருத்தமானது என்று அர்த்தம் அல்ல. தமிழ் முஸ்லிம் தரப்பினரிடையேயுள்ள கட்சிகளிலும் இந்தக் கட்சிகளின் தலைவர்களிடமும் எப்போதும் ஏகப்பிரதிநிதித்துவக் கொள்கையும் அணுகுமுறையுமே காணப்படுகிறது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தன்னையே ஏகபிரதிநிதித்துவ அமைப்பாகச் சொல்கிறது. முஸ்லிம் கொங்கிரஸ் சொல்கிறது முஸ்லிம் மக்களின் தலைமைத்துவ ஏக அமைப்பு தானே என்று. நாடுகடந்த தமிழீழ அரசினரும் இதற்கு விதிவிலக்கில்லை. எதிர்க்கட்சியை விரும்பாத, மாற்று அபிப்பிராயங்களைப் பொருட்படுத்தாத ஒரு சூழலில் அரசியல் நடத்தவே இந்தத் தரப்புகள் எப்போதும் விரும்புகின்றன. ஆனால், இது எந்த வகையிலும் பொருத்தமற்றது. அதுவும் இன்றைய உலகத்தின் போக்கில் இந்த ஏக விருப்பு அரசியல் எதிர் நிலை அம்சங்களையே பெருக்கும். (இதுகுறித்துப் பின்னர் தனியாகப் பார்த்துக் கொள்ளலாம்).
ஏகப் பிரதிநிதித்துவத்தைப் பற்றிப் பேசும் இந்தக் கட்சிகளும் தலைமைகளும் மக்களின் தேவைகள், பிரச்சினைகளைப் பற்றிக் கவலை கொள்வதில்லை என்பது துக்ககரமான இன்னொரு கதை. பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு இவை தீர்வு காண முயற்சிப்பது கூட இல்லை. பலவீனமான நிலையில் இருக்கும் சமூகங்களை மேல் நிலைப்படுத்தி அவற்றை வலுப்படுத்திக் கொண்டு அந்தச் சமூகங்களை வழிநடத்துவதே பொருத்தமானது என்றும் இவை சிந்திப்பதில்லை. ஆனால், என்னதான் இந்தச் சமூக மக்கள் கெட்டு நொந்தாலும் பரவாயில்லை, தமது அரசியல் இருப்பு முக்கியமானது. அதிலும் அதை மற்றவர்கள் பங்கு போடக் கூடாதது என்றே இவர்கள் விரும்புகிறார்கள். இது கண்டிக்கப்படவேண்டியது.


எனவே, இந்த நிலையில் தமிழ் முஸ்லிம் சமூகங்களின் இன்றைய நிலை, கடந்த காலத்துயரங்கள், கடந்த காலத்தில் இந்த மக்கள் அளித்த அரசியற் பங்களிப்புகள், போராட்டத்தையும் அரசியலையும் வழிநடத்திய சக்திகளின் தவறுகள், இந்தச் சமூகங்களின் எதிர்காலம் என்பவற்றைக் கணக்கிற் கொண்டு புதிய அரசியற் செயற்பாட்டை மிகப் பொறுப்போடு ஏற்று, புத்திப+ர்வமாகச் செயற்படும் அமைப்பும் தலைமைத்துவமுமே இன்றைய தேவை. இந்தத் தேவையின் பாற்பட்டே மேற்குறிப்பிட்ட பொதுக்கேள்வி மக்களிடையே எழுகிறது. ஆனால், இந்தக் கேள்விக்கான பதிலைக் காண முடியாத நிலையில்தான் மக்கள் துக்கத்தோடிருக்கிறார்கள். இந்தத் துக்கம் பல பத்தாண்டுகள் நீடித்தது. இன்னும் நீடித்துக் கொண்டிருப்பது. இது இன்னும் நீடிக்கக் கூடாதென்பதே இங்கே பொதுக் கேள்வியாகப் பரிணமித்திருக்கிறது.
02
விடுதலைப் புலிகள் இல்லாத இலங்கைத்தீவின் அரசியல் களம் இது. புலிகள் இருந்த கால நிலைமைகள் இன்று மாறிவிட்டன. புலிகளின் மேல் இனியும் பாரத்தைச் சுமத்திக் கொண்டு அரசாங்கமும் இருக்க முடியாது, சர்வதேச சமூகமும் இருக்க முடியாது, தமிழ் பேசும் தரப்பினரும் இருக்க முடியாது.
உள்நாட்டில் ஜனநாயக நடைமுறை சார்ந்த செயற்பாட்டில் பொதுவாக அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கின்றனர். ஆகவே இந்தத் தளத்திலிருந்து பிரச்சினைகளை அணுகவும் தீர்வுகளை நோக்கி முன்னேறவும் வேணும். கடந்த காலத்தின் தவறுகள் தடைகளாக இருக்கலாம். ஆனால் அதைக் கடந்து செல்ல வேண்டியது இன்றைய அரசியற் செயற்பாட்டாளர்களின் கடமை. அப்படி நடைபெறுகிறதா? என்றால் அதுதான் இல்லை.
விடுதலைப் புலிகள் இல்லையே தவிர அவர்கள் இருந்த காலகட்டத்தைப் போலவே பிரதான பிரச்சினைகள் அப்படியே இருக்கின்றன. அரசாங்கமோ பிற தரப்புகளோ இந்தப் பிரச்சினைகளைக் குறைக்கவும் தீர்க்கவும் முயற்சிக்கவில்லை. குறிப்பாக தமிழ், முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றம் இன்னும் முழுமைப்படுத்தப்படவில்லை. அரசியற் கைதிகள் விடுவிக்கப்படவில்லை. அரசியற் பிரச்சினைக்கான தீர்வு தேக்கநிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. தமிழ் பேசும் சமூகங்களின்மீதான பாரபட்சங்கள் நீங்கவில்லை. படைவிலகல் நிகழவில்லை. பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மேம்பாடடையவில்லை. தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான உறவு நிலை சீராகவில்லை. இடம் பெயர்ந்த மக்கள் முழுமையாக் குடியமர்த்தப்படவில்லை. வாழ்க்கைச் சுமைகள் குறையவில்லை. சட்டத்தால் சமூக உணர்வைக்கட்டுப் படுத்தும் நிலைமை மாறவில்லை. ஆகவே புலிகள் இல்லையே தவிர, பிரச்சினைகளும் பழைய நிலைமைகளும் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன.
எனவேதான் மேற்சொன்ன கேள்வி பொதுக்கேள்வியாக மக்களிடம் பரிமாணங் கொண்டிருக்கிறது. இதன் அர்த்தம் புலிகள் இருந்திருந்தால் இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வைக் கண்டிருப்பார்கள். மக்களெல்லாம் மகிழ்வோடும் நிம்மதியோடும் இருந்திருப்பார்கள். பிரச்சினைகளே இல்லாத உலகம் ஒன்று பிறந்திருக்கும் என்பதல்ல.


புலிகளைக் குற்றம் சுமத்தி, அவர்களின் மீது பழிகளைச் சுமத்திக் கொண்டிருக்கக்கூடியவாறு இன்று நிலைமை இல்லை என்பதே இங்கே கவனிக்க வேண்டியது. யாரும் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகளுக்கு இப்பொழுது புலிகளின் அச்சுறுத்தல், தடை இல்லை என்பதே இங்கே கவனிக்கவேண்டியது. ஆகையால் பந்து இப்போது அவரவர் காலில் உள்ளது. அவரவர் அதை திறம்பட விளையாடவேண்டியதுதான்.


தமிழ் முஸ்லிம் மக்களின் உறவு நிலையில் புதிய சாத்தியங்களைக் காண முடியும் என்ற உற்சாகத்தை இன்றைய சூழல் ஏற்படுத்தியுள்ளது. தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறவைப் பலப்படுத்தும் வேலைகளைச் செய்வோருக்கு அச்சுறுத்தல் இல்லை என்பது இன்னொரு பெரிய விசயம்.

ஆகவே, தமிழ் முஸ்லிம் மக்களிடையேயான உறவு நிலையைப் பலப்படுத்துவதன் மூலம் இந்த இரண்டு சமூகங்களும் முதற்கட்ட நெருக்கடியைக் கடக்கலாம். அதேவேளை அடிப்படையில் தமிழ் முஸ்லிம் மக்கள் பலம் பெறலாம். ஆனால், இதற்கு தமிழர்கள் முஸ்லிம் மக்களின் அனைத்து உரிமைகளையும் நலனையும் பேணவும் அவற்றை உத்தரவாதப்படுத்தவும் வேணும். அதைப்போலவே முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களின் வாழ்வு குறித்து கரிசனைகளைக் கொள்வது அவசியம். இதை நடைமுறைப் படுத்தும் அரசியற் செயற்பாட்டாளர்கள் யார்?

அடுத்தது ஜனநாயகச் சூழலை வளர்த்தெடுப்பது, மாற்றுக் கருத்துகளுக்கும் அபிப்பிராயங்களுக்கும் திறந்த மனதோடு இடமளிப்பது, வசைபாடுதல்களையும் துரோகி தியாகி போன்ற சட்டகங்களுக்குள் செயற்பாட்டாளர்களை அடைப்பதையும் முத்திரை குத்தி வகைப்படுத்துவதையும் நீக்குவது, மறுவாழ்வுப் பணி உள்ளிட்ட முக்கிய நிலைமைகளில் ஒன்றிணைந்து நிற்பது போன்ற புதிய முறைச் செயற்பாடுகள் இன்று அவசியமானவை. இதைச் செய்வது யார்? இதெல்லாம் முன்சொன்ன கேள்விக்கான அடிப்படைக்காரணங்களாகும்.



00

தமிழ் ஊடகங்கள் கறுப்பு வெள்ளை அரசியலுக்குள் சிக்கியிருக்கும் வரை அவற்றினால் மக்களின் யதார்த்தமான பிரச்சினைகள் குறித்துச் சிந்திக்க முடியாது. உண்மைக்கும் யதார்த்தத்துக்கும் அப்பால் இந்த ஊடகங்கள் கற்பனாவாதத்திலும் தவறுகளைக் களையாமலும் இருக்கின்றன. வியாபார நோக்கத்திற்காக உயிர்களையும் குருதியையும் கண்ணீரையும் அவலங்களையும் தாராளமாகப் பயன்படுத்திப் பழகி விட்டன. வேறு சூழலில் என்றால், இந்த மாதிரி ஊடகங்களைக் கையாள்வதற்குக் கூச்சப்படுவார்கள். ஆனால், தமிழில் இந்தக் கூச்சம், நாகரீகம் எல்லாம் கிடையாது.


நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பாணியில் - எந்த முன்னேற்றமும் இல்லாமல் ஊடகங்களை நடத்தும் சமூகம் என்றால், அது ஈழத்தமிழ்ச் சமூகமாகத்தானிருக்கும்.
ஊடக அறநெறி, தொழில்முறைப் பொறுப்பு, தொழில் நேர்த்தி எல்லாம் தமிழ் ஊடகங்களிடம் கிடையவே கிடையாது. அப்படியிருந்திருந்தால் இப்படித் தமிழ் ஊடகங்கள் சீரழிந்திருக்காது. சில ஊடகங்கள் இதற்கு விதிவிலக்காக இருந்தாலும் அவர்களால் ஒரு பிரத்தியேக வெளியை உருவாக்க முடியவில்லை. சிங்கள இனவாதத்துக்குப் பதிலாக தமிழ் இனவாதத்தை வளர்ப்பதிலேயே தமிழ் ஊடகத்தின் பொதுப் போக்கு இருக்கிறது.
 
எனவேதான் கறுப்பு வெள்ளை அரசியல் இந்த ஊடகங்களில் பேணப்படுகிறது. கறுப்பு வெள்ளை அரசியலில் ஒரு போதும் விரிந்த பார்வைக்கு இடமில்லை. விமர்சனங்களுக்கு இடமில்லை. நியாயங்களுக்கு இடமில்லை. இந்த நிலை இப்படியே வளர்ந்து உண்மைக்கும் இடமில்லாமற் போய் விடுகிறது.

இதனால், தமிழ் பேசும் மக்களின் அரசியற் குறைபாடுகளைப்போலவே தமிழ் ஊடகங்களின் குறைபாடுகளும் இருக்கின்றன. இந்த ஊடகங்களோ முறையான ஜனநாயகச் சூழலை தமிழ் ஊடகத்திலும் அரசியலிலும் வளர்த்திருக்கின்றனவா? அல்லது புதிய விவாதங்களுக்கான வாசல்களையாவது திறந்திருக்கின்றனவா? அல்லது நெருக்கடியான கட்டங்களில் அவற்றை எதிர்கொள்ளும் வகையில் மக்களைத் தயார்படுத்தும் காரியங்களுக்குப் பின்னணியாக இருந்திருக்கின்றனவா? அல்லது போரினாலும் அகதி வாழ்வினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளைப் பற்றிய விழிப்புணர்வை இந்த ஊடகங்கள் தமிழ் பேசும் சமூகங்களிடம் ஏற்படுத்தியிருக்கின்றனவா? அல்லது, அரசியல், பண்பாடு, மனிதாபிமானப் பணிகள் போன்றவற்றில் ஒரு அழுத்தத்தரப்பாக இந்த ஊடகங்கள் பணியாற்றக்கூடிய ஆலோசனை வழங்கக் கூடிய நிலையைப் பெற்றிருக்கின்றனவா?

அப்படியெல்லாம் நடந்ததாக இல்லையே! ஆனால், விடுதலைக்காகப் போராடிய சமூகங்கள் என்றவகையிலும் பெரும் அழிவுகளைச் சந்தித்த சமூகங்கள் என்றவகையிலும் இன்னும் நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் சமூகங்கள் என்ற வகையிலும் இந்த ஊடகங்கள் எப்படிச் செயற்பட்டிருக்க வேண்டும்?


ஆகவே தமிழ் பேசும் சமூகங்களின் மனதில் இருக்கும் பொதுக்கவலைகளுக்கும் பொதுக்கேள்விகளுக்கும் விடைகாண்பது என்பதே புதிய அரசியல் நடவடிக்கைதான். அ ந்த அரசியல் நடவடிக்கை என்பது அரசாங்கத்தை மட்டும் குறை சொல்லிக் கொண்டிருப்பதை விடுத்து புதிய அரசியற் பாதையை வழிமுறையை செயற்படு நிலையைக் கொண்டதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் வெற்றி வாய்ப்புகளை அரசுக்கும் அதன் அதிகார வர்க்கத்துக்கும் கொடுத்துக் கொண்டேயிருப்பதாகிவிடும். மக்களைத் தொடர்ந்தும் தோற்கடிக்கக் கூடாது. அப்படித் தோற்கடிக்கவும் முடியாது. அதன் ஒரு வெளிப்பாடே மக்களிடம் எழுந்துள்ள இந்தப் பொதுக் கவலைகளும் பொதுக் கேள்விகளும்.
 00

நன்றி- எதுவரை, புகைப்படம் - இணையம்

இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா = இந்தியாவின் அரசியல் நலனில் இலங்கை இனப்பிரச்சினை

Saturday, 14 January 2012
















இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியாவின் பாத்திரத்தைப் பற்றித் தொடர்ச்சியாகப் பலரும் எழுதியும் பேசியும் வருகின்றனர். இதில் இந்திய அரசுக்கான கோரிக்கைகள், கண்டனங்கள், ஆலோசனைகள், நட்புடன் தெரிவிக்கப்படும் கவனிக்க வேண்டிய விசயங்கள், சுட்டிக் காட்டுதல்கள், குற்றச்சாட்டுகள், வசைகள், ஆதரவுகள் எனப் பலவகைகள் உள்ளன.

இந்தக் கருத்துகளை இலங்கைத் தமிழர்கள், சிங்களத் தரப்பினர், இந்தியர்கள், அதிலும் தமிழகத்தைச் சேர்ந்தோர், பிறத்தியார் எனப்படும் வெளியுலகத்தினர் எனப் பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தக் கருத்துகளில் சில முக்கியமானவை. பொருட்படுத்தத் தக்கவை. சில விழல்கள்.

இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவு, இந்த நாடுகளில் ஏற்படவேண்டிய அமைதி, பாதுகாப்பு, இந்த நாடுகளிலுள்ள சமூகங்களுக்கிடையிலான முரண்பாட்டு நீக்கத்துக்கான வழிவகைகள், அவற்றின் அவசியம் போன்றவற்றை, கடந்த கால - சமகால – எதிர்கால அடிப்படைகளில் வைத்து பொறுப்புடன் சிந்திப்போர் இந்தக் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.

அதிலும் பல ஆய்வுகள் இந்தப் பிராந்தியத்தின் அமைதியையும் இந்தப் பிராந்திய மக்களின் நலன்களையும் பாதுகாப்பையும் மையப்படுத்தியவை.

பிராந்தியத்திலுள்ள நாடுகளை மையப்படுத்திய ஆய்வுகள் என்பதற்குப் பதிலாக, அரசுகளின் நலனை மையப்படுத்தியவை என்பதற்கப்பால், இந்தப்; பிராந்தியத்தின் மக்கள் மற்றும் அவர்கள் அடையாளப்படுத்தும் சமூகங்களை மையப்படுத்திய ஆய்வுகளும் கவனங்களும் இதில் முக்கியமானவை.

இவ்வாறு தொடர்ச்சியாகவும் பரந்த அளவிலும் வெளிப்படுத்தப்பட்டு வரும் கருத்துகள் தொடர்பாக இந்திய அரசு எத்தகைய அக்கறையைக் கொண்டுள்ளது? அது எத்தகைய புரிதல்களைப் பெற்றிருக்கிறது? அல்லது அது இவைகுறித்து அக்கறைப்படவேயில்லையா?

இந்த மாதிரியான கேள்விகள் இன்று பதில் காணப்படவேண்டியவையாக உள்ளன.

ஏனெனில், ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியா வகித்த பாத்திரம் தவிர்க்க முடியாத ஒரு நெருக்கடி நிலையை இலங்கைத் தீவிலுள்ள அனைத்துச் சமூகங்களுக்கும் ஏற்படுத்தியுள்ளது.

இனப்பிரச்சினையைத் தீர்ப்பதிலும் சரி, இந்தப் பிரச்சினையைத் தனது நலன்களுக்காகப் பயன்படுத்தியதிலும் சரி, இந்தியா பெரும் பாத்திரமொன்றைக் கொண்டுள்ளது. இன்னும் அப்படியான ஒரு முக்கியத்துவத்தையே அது கொண்டுமிருக்கிறது.

இதை மேலும் கூறுவதானால், பிராந்தியத்தில் முக்கியமான சக்தி என்ற வகையிலும் இலங்கைச் சமூகங்களுடன் வரலாற்று ரீதியாக இந்தியாவுக்குள்ள பிணைப்புகள் தொடர்பாகவும் இந்தியா இலங்கை விவகாரங்களில் ஒரு தவிர்க்க முடியாத சக்தி என்ற பாத்திரத்தை வகித்து வருகிறது எனலாம்.

அந்த வகையிலே, இந்தப் பிரச்சினை தொடர்பாக இந்திய அரசும் இந்தியத் தலைவர்களும் உயர் மட்ட அதிகாரிகளும் இராச தந்திரிகளும் அடிக்கடி கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், நடைமுறையில் அவர்கள் தெரிவித்து வருகின்ற கருத்துகளுக்கும் வெளிப்படையான நடவடிக்கைகளுக்கும் முயற்சிகளுக்கும் மாறாகவே நிலைமையும் யதார்த்தமும் உள்ளன.

அதாவது, இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் இந்தியா திடசங்கற்பமான உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளது என்று இந்தியாவின் தலைவர்கள் அனைவரும் கட்சி பேதமின்றிக் கால பேதமின்றிச் சொல்லி வந்திருக்கின்றனர் - சொல்லி வருகின்றனர்.

ஆனால், அந்தத் திட சங்கற்பத்தின் தாற்பரியம் என்ன? அதன் அளவு என்ன? அது எத்தகையதாக இருக்கிறது? அதன் பெறுமானம் எத்தகையது? அல்லது அது வெறும் வாய்ப்பேச்சு என்ற அளவிற்தான் - சம்பிரதாயபூர்வமானதாக உள்ளதா?

இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதில் இந்தியா கரிசனை கொண்டுள்ளது என்று இன்னொரு தளத்தில் அறிவிப்புகள் வந்திருக்கின்றன. அப்படியானால், இந்தக் கரிசனையின் உண்மைத் தன்மை எத்தன்மையை உடையது? அல்லது இந்தக் கரிசனையின் வீச்செல்லையும் விசையும் எத்தகையன?

இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் இந்தியா தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வந்திருக்கிறது? இன்னும் அத்தகைய முயற்சிகளை அது முன்னெடுத்து வருகிறது என்று இந்தியத் தலைவர்கள் சொல்லி வருகிறார்கள். இலங்கை வரும் இந்திய இராசதந்திரிகளும் முக்கியஸ்தர்களும் அமைச்சர்களும் இதைத் தான் சொல்கிறார்கள்.

ஏறக்குறைய இப்படி அவர்கள் சொல்வது சம்பிரதாயமானதாகக் கூட இப்பொழுது மாறிவிட்டது. தாங்கள் சொல்லும் இந்தக் கூற்றுகளை இலங்கையில் இப்போது யாரும் நம்புவதும் இல்லை. பெரிதாகப் பொருட்படுத்திக் கொள்வதும் இல்லை என்றுகூட அவர்கள் யோசிப்பதில்லை.

ஆனால், தொடர்ந்து தங்கள் சம்பிரதாயபூர்வமான அறிவிப்புகளை இயந்திரமொன்றின் செயற்பாட்டைப்போல எந்த உணர்ச்சியுமின்றிச் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள்.

இந்தியாவின் இந்தச் செயலாண்மைக்குள்; - (இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்க்க இந்தியா எடுத்துக்கொண்டு திடசங்கற்பம் (உறுதிப்பாடு), கரிசனை, முயற்சிகள், நடவடிக்கைகள் எல்லாவற்றுக்குள்ளும்) தான், இலங்கையில் இனப்பிரச்சினைப் போர் தீவிரமடைந்ததும் அது மூன்று லட்சம் வரையான உயிர்களைக் குடித்ததும் நடந்திருக்கிறது.

அப்படியானால், இந்தியாவின் விசுவாசமான நடவடிக்கைகளும் திடசங்கற்பமும் கரிசனையும் செயற்பெறுமதியும் இந்தியாவின் செல்வாக்கும் இந்த விசயத்தில் எப்படியுள்ளன?

இந்தக் கேள்வியை இங்கே எழுப்பவேண்டியிருப்பதே மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்றுதான். ஏனெனில், இதையும் விடக் காட்டமான கேள்விகள் இந்தியாவை நோக்கி இந்த விசயத்தில் ஏற்கனவே பலர் எழுப்பியிருக்கிறார்கள். இப்போது மீண்டும் இதை இங்கே கேட்பது எல்லோருக்கும் சலிப்பூட்டலாம். ஆனால், என்ன செய்வது இந்தக் கேள்வி மீண்டும் எழுகிறதே!

இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஸ்ணா இலங்கைக்கு வரவுள்ளார் என்ற செய்தி கடந்த வாரத்தில் வெளியாகியபோது இலங்கை மற்றும் புலம்பெயர் நாடுகளில் உள்ள பல ஊடகங்களும் இந்தச் செய்தியைக் கேலிப்படுத்தியே பிரசுரித்தன.

சில ஊடகங்கள் கேலிச்சித்திரங்களைக் கூட வெளியிட்டிருந்தன. சில ஊடகங்களின் ஆசிரிய தலையங்கள், கிருஸ்ணாவினுடைய விஜயத்தின் மீது நம்பிக்கையற்ற தன்மையையும் இந்தியா தொடர்பான அவநம்பிக்கையையும் வெளிப்படுத்தியிருந்தன.

இந்தியா ஏன் இப்படி நடந்து கொள்கிறது? என்ற கேள்வி பெரும்பாலான தமிழர்களிடம் இன்று தீவிர நிலையில் எழுந்துள்ளது. ஆயிரம் விமர்சனங்களுக்கு அப்பாலும் இந்தியாவின் மீது பெரும்பான்மையான தமிழர்கள் பிடிப்பும் நம்பிக்கையும் கொண்டிருந்தனர் என்பது உண்மையானது.

தமிழர் தரப்பின் அரசியலாளர்களிற் பலரும் பெரும்பாலான ஆய்வாளர்களும் இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியாவின் பங்கையும் பாத்திரத்தையும் பெரிதாகவே பேசியும் கருதியும் வந்திருக்கின்றனர்.

ஆனால், இவர்களைக் கூட இந்தியா பொருட்படுத்தவில்லை. – அதாவது, தன்னை நம்பியவர்களையும் தனக்கு விசுவாசமாக இருப்போரையும்கூட அது கவனத்திற்கொள்ளவில்லை என்று சில விமர்சகர்கள் இந்த நிலைதொடர்பாகக் கூறுகின்றனர்.

இதனால், இந்தியாவை மட்டும் நம்பினாற் போதாது, அதற்கப்பால் மேற்குலகத்தையும் நம்ப வேண்டும். அவர்களுடைய ஆதரவையும் திரட்ட வேணும் என்ற கருதுகோளுக்கு இலங்கைத் தமிழர்களிற் பலரும் இன்று நகர்ந்துள்ளனர். தமிழர் சார்பான அரசியலாளர்களிற் பலரும்கூட இத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதை அவர்களுடைய அண்மைய கருத்துகள் தெரிவிக்கின்றன.

தமிழர்கள் மேற்குலகத்தை நம்பி, அதை நோக்கி நெருங்கிச் செல்ல இலங்கையோ இந்தியாவை நோக்கி நெருக்கமாகிறது. “என்னதான் இருந்தாலும் இலங்கையும் இந்தியாவும் மிகவும் நெருக்கத்துக்குரிய நாடுகள். எந்தச் சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு இந்தியாவே நட்புச் சக்தி“ என்று அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவும் வேறு பலரும் தெரிவித்திருந்ததையும் நாம் கவனிக்க வேணும்.

இலங்கையின் இனப்பிரச்சினை விசயத்தில் யார் என்ன சொன்னாலும் இந்தியா தனக்கென்று வகுத்துக் கொள்ளும் கொள்கையின் அடிப்படையில் மட்டுமே செயற்பட்டு வருகிறது. அதற்கேற்பவே அது நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதுவே துலக்கமான உண்மை.

இந்த உண்மைக்கு அப்பால், யாரும் அதன்மீது கண்டனங்களை வைப்பதும், பாராட்டுவதும் குற்றம்சாட்டுவதும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பதும் நம்பிக்கை வைப்பதும் எதிர்ப்பதும் பயனற்றது. அவற்றைக் குறித்து இந்தியா கவலைப்படுவதில்லை. அது அவற்றையிட்டுக் கவலைப்படும் நிலையிலும் இல்லை.

இந்தியாவைப் பொறுத்தவரையில் அது உள்நாட்டிலும் சர்வதேச நிலையிலும் பிராந்திய ரீதியிலும் தனக்கு எழுகின்ற நெருக்கடிகளையும் அபாயங்களையும் குறித்தே சிந்திக்கிறது. அதற்கேற்ப அது இப்போது அமெரிக்கா தலைமையிலான நாடுகளுடன் நட்பாக உள்ளது. முன்னர் ரஷ்யா தலைமையிலான அணியுடன் நட்பாக இருந்தது. இரண்டும் இந்தியாவின் தேவைகளைப் பொறுத்ததே.

இது முதலாவது.

அடுத்தது, தனக்கு சர்வதேச ரீதியாகவும் பிராந்திய ரீதியிலும் உள்நாட்டிலும் எத்தகைய நன்மைகள் கிட்டுகின்றன? என்ன வகையான நலன்கள் கிட்டும் என்பதற்கேற்பவே அது அசியற் கொள்கையையும் வெளியுறவுக் கொள்கையையும் இராசதந்திர நகர்வுகளையும் செய்கிறது. இதற்கேற்பவே அதனுடைய நிகழ்ச்சி நிரல்கள் அமைகின்றன.

இதுவே மறுக்க முடியாத உண்மை. இந்த உண்மை பரகசியமானதும்கூட. பல தடவைகள் இது பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டும் உள்ளது.

ஆனால், இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக இன்னும் பல ஆண்டுகளுக்கு இப்படியே இந்தியாவின் திடசங்கற்பத்தைக் குறித்தும் கரிசனையைக் குறித்தும் முயற்சிகளைக் குறித்தும் இந்தியத் தலைவர்கள் சொல்லிக் கொண்டிருக்கத்தான் போகிறார்கள்.

இந்தியத் தலைவர்களும் பிரதானிகளும் இலங்கைக்கு வரும்பொழுதெல்லாம் இனப்பிரச்சினை தொடர்பாகவும் அவர்கள் ஏதாவது கதைக்கத்தான் போகிறார்கள். அதேபோல, இலங்கையின் அரசியற் தலைவர்கள் இந்தியாவுக்குச் செல்லும்வேளையில் எல்லாம் இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பற்றிப் பேசத்தான் போகிறார்கள்.

இதெல்லாம் ஒரு சம்பிரதாய பூர்வமான விளையாட்டாக மாறியுள்ளது என்று இப்போது சிங்கள அதிகார வர்க்கத்தினருக்கும் தெரிந்து விட்டது. ஆனால்,  தமிழர்களில் ஒரு சாரார் இந்தக் கூற்றில் நம்பிக்கை வைத்துக் கொண்டிருக்கவே போகிறார்கள்.

பனிப்போர்க்காலத்தில் நிலவிய உலக ஒழுங்கின் காரணமாக - அன்றைய சர்வதேச அரசியல் நிலைமைகளையிட்டு இந்தியாவின் அணுகுமுறை தொடர்பாக இலங்கைக்கு அச்சங்கள் இருந்தன.

அத்துடன் தமிழர்களின் ஆயுதந்தாங்கிய அரசியற் போராட்டத்துக்கு இந்தியா வழங்கிய ஆதரவையிட்டும் இலங்கைக்கு நெருக்கடிகளும் இருந்தன. அச்சமும் இருந்தது.

ஆனால், பின்னர் - குறிப்பாக 1990 க்குப்பிந்திய நிலைமைகள் முற்று முழுதாகவே மாறின. பின்னர், இந்தியாவானது இலங்கை அரசை – சிங்களத் தரப்பை - அனுசரித்துப் போகும் ஒரு நிலைப்பாட்டுக்கு வந்துள்ளது, வரவேண்டியதாக உள்ளது என்பதை இலங்கை தெளிவாகவே புரிந்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை அது தமிழ்த் தரப்புக்கும் சிங்களத்தரப்பினருக்கும் இடையிலான ஒரு இரட்டை அணுகுமுறையைக் கடைப்பிடிக்க முற்படுகிறது. தமிழர்களுக்கு அரசியல் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று சொல்வதன் மூலம் தமிழ்த்தரப்புக்கான தன்னுடைய ஆதவைத் தெரிவித்துக்கொள்வது.

இதேவேளை, ஐக்கிய இலங்கைக்குள் ஒருமைப்பாட்டைச் சிதைக்காத வகையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட வேண்டும். அத்தகைய தீர்வொன்றுக்கு இந்தியா ஒத்துழைக்கும் என்று சொல்வதன் மூலமாக சிங்களத்தரப்பின் உளநிலையிற் கலவரத்தை உண்டு பண்ணாமல், அதைத் தனக்கு நெருக்கமாக வைத்துக் கொள்வது.

இந்தியாவின் இந்த சமாளிப்புத் தனமான நிலைப்பாட்டைத் தெளிவாகவே சிங்கள அதிகாரத் தரப்புப் புரிந்துள்ளது. எனவேதான், அது ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காணப்படும் என்றும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் ஒரு தோற்றப்பாட்டைத் தொடர்ச்சியாக – ஆனால், வௌ;வேறு விதங்களில் வெளிப்படுத்தி வருகின்றது.

இங்கே இந்தியாவுக்கு ஒரு முக்கிய பிரச்சினை தீர்ந்து விடுகிறது. அதனுடைய  நலன்கள் பாதுகாக்கப்படுகின்றன.

இன்றைய நிலையில் இலங்கை அரசு இந்தியாவை விட்டு வேறு பிராந்தியங்களின் ஈர்ப்பு விசைக்கு உட்பட்டு விடக்கூடாது என்பதே இந்தியாவின் கவலை. இந்தக் கவலை நீங்க வேண்டுமானால், இலங்கை – சிங்களத்தரப்பு – முகஞ்சுழிக்காதவாறு ஒரு அணுகுமுறையையும் நிலைப்பாட்டையும் இந்தியா மேற்கொள்ள வேண்டும்.

ஆகவேதான், சிங்களத்தரப்பின் - இலங்கையின் - விருப்பத்துக்கு மாறாக இலங்கையின் இனப்பிரச்சினை விசயத்தில் தமிழர்களுக்கு – தமிழ் பேசும் மக்களுக்குச் சாதகமான நிலைப்பாட்டை எடுக்க அது விரும்பவில்லை. ஆகையாற்தான் அது ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்று அழுத்தங்களற்ற வகையில் தன்னுடைய அறிவிப்புகளை வெளியிட்டுக்கொண்டிருக்கிறது.

இலங்கையைப் பொறுத்த இந்தியாவின் புரிதல் என்பது, சிங்களத் தரப்பின் முதன்மைப்பாட்டையே கொண்டதாக உள்ளது. அதாவது, இலங்கை என்பது சிங்களவர்களின் தலைமைத்துவத்தைக் கொண்டது, அவர்களுடைய விருப்பத்தையே பிரதானமாகக் கொண்டது என்பதாகும். அதாவது, இந்தியாவின் நலனுக்குத் தமிழர்களை அனுசரிப்பதையும் விடச் சிங்களவரை அனுசரிக்கலாம் என்பதே இந்தியாவின் முடிவு.

இதையே இந்தியாவின் நிலைப்பாடும் நடைமுறையும் அணுகுமுறைகளும் நிரூபிக்கின்றன. இதை மறுத்துரைப்போர் இந்தியாவின் பிற அணுகுமுறைகளைப் பற்றிய ஆதரங்களை முன்வைக்க வேணும்.

ஆகவே, இந்தியாவின் அரசியல் நலன்களுக்காகப் பலியிடப்படும் ஒரு விசயமாகவே இலங்கையின் இனப்பிரச்சினையும் இலங்கைத்தமிழ் பேசும் மக்களின் அரசியல் போராட்டங்களும் உள்ளன என்பது தெளிவாகும்.

இதனுடைய நீட்சி இன்னும் நீண்ட காலத்துக்குத் தொடரக்கூடும். இங்கே நாம் இந்தியாவைக் குறைத்து மதிப்பீடுவதாகவோ, குறை சொல்வதாகவோ இந்தக் குறிப்பை எழுதவில்லை. பதிலாக இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு என்ற அடிப்படையில் அது, அதனுடைய நலன்களைக்குறித்தே அக்கறைப் படும் என்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இதை இங்கே குறிப்பிடுகின்றோம்.

ஆகவே, இந்தியாவின் அறிவிப்புகளும் அணுகுமுறைகளும் சொல்லும்சேதிகளின் பின்னாலுள்ள “சொல்லாத சேதிகள்“ இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது இலங்கையர்களின் சொந்த விசயம் என்பதாகவே உள்ளது.

இதற்கப்பால், அது சிங்களத் தரப்பின் முகக்கோணலை விரும்பவில்லை என்பதாகவும் இருக்கிறது. எனவே, தமிழர்களின் அரசியல் அணுகுமுறைகள் மீள்பரிசீலனைக்கும் அனுபவ மீள்பார்வைக்கும் உரியதாகிறது.

இதை விடுத்து, இந்தியாவைக் குறைசொல்வதாலோ, இழிவு படுத்துவதாலோ, நம்பிக்கை கொள்வதாலோ விசுவாசமாக இருப்பதாலோ எதுவும் நடந்து விடப்போவதில்லை. – அரசியல் அநாதைகளாகுவதைத் தவிர.

00


உபாயமும் அதிகாரமும் -02

Monday, 9 January 2012














இரண்டாம் உலகப் போரின்போது யப்பானின் மீது அணுக்குண்டை வீசித் தாக்கியது அமெரிக்கா. இதற்குக் காரணம், அப்போது யப்பான் ஜேர்மனியோடு சேர்ந்து போரில் ஈடுபட்டதே. இதை அமெரிக்கா குற்றமாகக் கருதியது.

இதற்கான தண்டனையாகவே யப்பானின் மீதான அமெரிக்கத் தாக்குதல்.

இந்தத் தாக்குதலால் யப்பானின் இரண்டு முக்கிய நகரங்களான ஹிரோஸிமாவும் நகஸாகியும் அழிந்தன. இந்த அணுக்குண்டின் பாதிப்பை இப்போதும் இந்த நகரங்களில் காணலாம்.

யுத்தம் முடிந்து விட்டது. காலமும் மாறிவிட்டது. அரசியற் போக்குகளும் மாறிவிட்டன. இப்போது யப்பானும் அமெரிக்காவும் நண்பர்கள். பல விசயங்களில் கூட்டாளிகள். இது எப்படி நிகழ்ந்தது?

அதேவேளை, இன்னும் யப்பானில் அமெரிக்காவின் கடற்படைத்தளங்களும் விமானப்படைத்தளங்களும் உள்ளன. அதற்காக அமெரிக்காவின் அடிமையாக – கீழ்ப்படிந்திருக்கவில்லை யப்பான்.

இலங்கையின் சமாதானப் பேச்சுகளின்போது அடிக்கடி இலங்கைக்கு விஜயம் செய்திருந்த தூதுவர்களில் முக்கியமானவர் யஸ_ஷி அகாஸி. இவர் வன்னிக்கும் வந்து சென்றார். வந்தவர் வன்னியில் பத்திரிகையாளர்களை அடிக்கடி சந்திப்பார். அப்போது வன்னியில் அகாஸி சொன்னவை முக்கியமானவை. குறிப்பாக, அவை பெரும்பாலும் அரசியல் உபாயங்கள். இலங்கைத் தமிழர்கள் தங்கள் கவனத்திற் கொள்ள வேண்டிய உபாயங்கள்.

00
அகாஸி சொன்னவை:-

“உலகத்திலேயே அதிக இழப்பையும் அதிகமான கொடுமையையும் சந்தித்த மக்கள் நாங்கள்(யப்பானியர்கள்). இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா நடத்திய தாக்குதலின் விளைவுகளை இன்னும் நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

நாங்கள் சந்தித்த இழப்பின் அளவுக்கு இந்த உலகத்தில் வேறு யாரும் அதிக இழப்புகளையோ கொடுமையையோ சந்திக்கவில்லை. ஆனால், நாங்கள் இந்தத் தாக்குதலை நடத்திய அமெரிக்காவுடன் இப்பொழுது நண்பர்களாக இருக்கிறோம்.

எதிரியுடன், தாக்குதல் நடத்தியவர்களுடன், அழிவுகளைத் தந்தவர்களுடன், மன்னிக்கவே முடியாதவர்களுடன் எப்படி நட்புக் கொண்டாட முடியும்? என்று நீங்கள் கேட்கலாம். எங்களிடமும் இந்தக் கேள்வி இருக்கிறது.
இந்தத் தாக்குதலுக்குப் பின்னர் - யப்பானின் எதிர்காலம் குறித்துச் சிந்திக்கும் போது, புதிய உலக ஒழுங்கின்படி நாங்கள் அமெரிக்காவுடன் நட்புக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது.

ஆனால், அதை அங்கீகரிப்பதற்கு யப்பானிய மக்கள் தயாரில்லாத நிலையிலேயே இருந்தனர். காரணம், அந்த அளவுக்கு யப்பானியர்களின் மனதில் எதிர்ப்புணர்வை ஏற்படுத்தியிருந்தது. மனிதாபிமானமற்ற அந்தத் தாக்குதலை யாரும் மன்னிக்கத் தயாராக இல்லை. அப்படி அமெரிக்காவுடன் நட்பு வைத்துக் கொள்வதென்பது யப்பானை அடிமை நிலைக்கே கொண்டு செல்வதாக இருக்கும் என பெரும்பாலான யப்பானியர்கள் கருதினார்கள். அவர்கள் அப்படிக் கருதியதில் தவறும் இல்லை.

அந்த அளவுக்கு அமெரிக்காவின் மீது வெறுப்பும் நம்பிக்கையின்மையும் யப்பானிய மக்களுக்கிருந்தது. ஆனால், நாங்கள் எதிர்கால யப்பானைப் பற்றியே சிந்தித்தோம். எதிர்கால யப்பானைப் பற்றிச் சிந்திப்பதாக இருந்தால், விரும்பியோ விரும்பாமலோ நாங்கள் எங்கள் கசப்பான கடந்த காலத்தை மறக்க வேண்டியிருந்தது.

கடந்த காலத்தைப் பற்றிச் சிந்திப்பதாக இருந்தால், எதிர்காலத்தைச் சிறப்பாக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டோம். ஆகவே எதிர்கால யப்பானுக்காக கசப்பான – மறக்கவே முடியாத – மன்னிக்கவே முடியாத கடந்த காலத்தை மறக்கத்தான் வேண்டும் என்று யப்பானிய மக்களை உணரவைத்தோம். இது இலகுவான காரியமாக இருக்கவில்லை.

ஏனெனில், அந்த அளவுக்கு ஒவ்வொரு யப்பானியரும் அமெரிக்காவினால், வஞ்சிக்கப்பட்டிருந்தனர். எந்தத் தலைமுறையிலும் மன்னிக்கவோ மறக்கவோ முடியாத காயமாக இருந்த நாகஸாகி, ஹிரோஸிமா தாக்குதல்களை எவரும் இலகுவாக மறந்து விடமுடியாதிருந்தனர்.
ஆனாலும் நாங்கள் யதார்த்தத்தைப் பற்றி, எங்களுக்கிருந்த அவசியத்தைப் பற்றிச் சிந்தித்தோம். எனவே எப்படியோ எங்கள் மக்களைத் தயார்ப்படுத்தி அமெரிக்காவுடன் நட்புக்குக் கரம் நீட்டினோம்.

அதற்காக நாங்கள் (யப்பானியர்கள்) அமெரிக்காவுக்கு விசுவாசிகளாகவோ அடங்கியவர்களாகவோ மாறிவிடவில்லை. யப்பானியர்களின் தனித்துவத்தையும் அவர்களுடைய அடையாளத்தையும் அவர்களுடைய முதன்மையையும் இன்று உலகம் வியப்போடு அங்கீகரித்துள்ளது. மிகக் குறுகிய காலத்திலேயே யப்பான் வளர்ச்சியடைந்து உலகத்தின் முதன்மைப் பட்டியலில் தன்னை இணைத்துக் கொண்டது.

இப்பொழுதும் அமெரிக்கத் தளங்கள் யப்பானில் இருக்கின்றன. இதை நாங்கள் அரசியல் ரீதியாக சுமையற்ற முறையில் மாற்றி வைத்துள்ளோம்.
யப்பான் இன்று சுயாதீனமான நாடாக, முதன்மை நாடுகளில் ஓரங்கமாக, உங்களுடைய பிரச்சினைகளைத் தீர்வுக் கொண்டுவர உதவும் நாடாக, இலங்கைக்கும் உதவும் நாடாக மாறியிருக்கிறது.

நான் இலங்கைக்கு ஒரு நண்பனாக, உதவும் ஆளாக, யப்பானியர்களின் பாடங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒருவராக, இந்த உலகத்தில் நன்மைகளையும் அமைதியையும் விரும்புகின்ற யப்பானியராக இங்கே வந்திருக்கிறேன்.

யப்பானியர்களின் அனுபவங்கள் உங்களுக்கும் பாடங்களாக, வழிகாட்டிகளாக இருக்கட்டும்.

உங்களைப் பொறுத்தவரை (இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை) யில் உங்களுடைய கடந்த காலத் துயரங்கள் மறக்க முடியாதவை. ஆனால், உங்களின் எதிர்காலத்துக்காக – எதிர்காலத்தின் நன்மைகளுக்காக நீங்கள் உங்கள் கடந்த காலத்தை மன்னிக்கவும் மறக்கவுமே வேண்டும்.

கடந்த காலத்தையும் விட எதிர்காலமே எப்போதும் பெறுமதியானது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எதிர்காலம் என்பது உங்கள் இளைய சகோதரர்களுக்கும் பிள்ளைகளுக்கும் உரியது. அவர்களுக்கு நீங்கள் எதைக் கொடுக்கப் போகிறீர்கள். கடந்த காலத்தின் கறைகளையும் தேங்கிய கண்ணீர்த்துளிகளையுமா?

நிச்சயமாக அப்படி வேண்டாம். அவர்களுக்கு நிகரற்ற மகிழ்ச்சியான காலமொன்றைப் பரிசளியுங்கள். அந்தப் பரிசு உங்கள் திறமையாலும் சிந்தனையாலும் மனதாலுமே சாத்தியமாகும்.

இதற்கு ஊடகவியலாளர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. நீங்கள் மக்களுக்கு நன்மைகளை நோக்கிச் சிந்திக்கக் கற்றுக் கொடுங்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியான – சுமைகளும் அபாயங்களும் இல்லாத ஒரு எதிர்காலத்தைப் பரிசாகக் கொடுத்தால் அதுவே போதும்..”

இப்படி அகாஸி சொன்னபோது, இதை அப்போது பலவிதமாக பலரும் மொழிபெயர்த்தார்கள். ‘அகாஸி ஒரு தந்திரப் பொறியை வைக்கிறார்’ என்றனர் சிலர்.

‘தமிழர்களைச் சிங்களவர்களிடம் சரணடையும்படி தந்திரமாகச் சொல்கிறார் அகாஸி’ எனச் சொன்னார்கள் வேறு சிலர்.

‘இது அடிமைச் சாசனமொன்றுக்கான புதிய விளக்கம். இதை மிக அழகாகச் சொல்லி ஏமாற்றுகிறார்’ என்று வேறு சிலர் கூறினர்.

‘இல்லை, அகாஸியின் கூற்றை நாங்கள் முழுதாகப் புறக்கணிக்க முடியாது. இவரைப் பரிசீலிக்கலாம்’ என்றனர் வேறு சிலர்.

இப்படியே பலவிதமான கருத்துகள் அகாஸியின் கூற்றுத் தொடர்பாக முன்வைக்கப்பட்டன. ஆனால், அகாஸி சொன்னதைப் போலவோ அவர் எதிர்பார்த்ததைப் போலவோ எதுவும் நடந்து விடவில்லை.
மாறாக பகை முற்றிப் பாதகமாகவே எல்லாம் முடிந்தன.

என்னைப் பொறுத்தவரையில் அகாஸி சொன்னவை ஒரு உபாயத்தின் பாற்பட்டவை. பெரும் அழிவையும் இழப்பையும் சந்தித்தவர்கள், அதிலிருந்து மீண்ட – எதிர்த்தரப்பை நட்புக் கொள்ள வைத்த, நட்புடன் நடப்பதற்கு இணங்க வைத்த, யப்பானைத் தனிமைப்படுத்த முடியாத அளவுக்கு புத்திபூர்வமாக்கிய அணுகுமுறையை அவர் சொன்னார்.

அகாஸி பற்றி ஏகப்பட்ட விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், இன்றைய உலகத்தில் அந்தச் சிறிய தோற்றமுடைய முதிய மனிதர் மிகச் சிறந்த இராசதந்திரியாகவே எனக்குத் தெரிகிறார்.

இந்த இடத்தில் பொருத்தம் கருதி வன்னியில் அப்போது நடந்த இன்னொரு நிகழ்ச்சியையும் சொல்ல வேணும்.

விடுதலைப் புலிகளிடன் நடந்த சந்திப்புகளின் போது அகாஸி பல விசயங்களைப் புலிகளிடமும் சொல்லியிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் விடுதலைப் புலிகளின் அரசியற்றுறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப.தமிழ்ச்செல்வன் அகாஸியிடம் கேட்டார், “விடுதலைப் புலிகளை யப்பான் அங்கீகரிக்க வேண்டும். அதுவே தமிழ் மக்களுடைய விருப்பமும் தலைவர் பிரபாகரனின் விருப்பமும்” என்று.

இதற்குப் பதிலளித்த அகாஸி, “யப்பான் என்பது ஒரு பெரிய கப்பல். அதைச் சட்டெனத் திருப்பிவிட முடியாது” என்றார்.

இதன் அர்த்தம் பலவாக இருக்கலாம். ஆனால், முக்கியமாக யப்பான் என்ற நாட்டின் தீர்மானத்தையும் வெளியுறவுக் கொள்கையையும் சட்டென மாற்றிக் கொண்டுவிட முடியாது. யப்பான் பல நாடுகளுடன் தொடர்புகளையும் உறவுகளையும் கொண்டுள்ள நாடென்பதால், அவற்றைப் பாதிப்படையாத வகையில் பேணிக்கொண்டு, புலிகளை அங்கீகரிப்பதைப் பற்றிச் சிந்திக்கலாம். ஆனால், அதற்குக் கால அவகாசமும் கொஞ்சக்கால நட்புறவுப் பயணமும் (நம்பிக்கையும்) தேவை என்பதாக இருந்தது.

அகாஸியின் இந்தப் பதிலைத் தமிழ்ச்செல்வன் திரு. பிரபாகரனிடம் சொன்னார். இதைக் கேட்ட பிரபாகரன், சற்றுக் கோபத்துடன் அகாஸியிடம் சொல்லும்படி சொன்ன பதில்:-

“அப்படியென்றால், அந்தக் (யப்பான் என்ற) கப்பலை இந்தத் துறைமுகத்தில் (புலிகளிடம் - தமிழ்ப்பகுதியில்) கட்டமுடியாது” என்று.

விளைவு? - இப்போது எங்களுக்குத் துறைமுகமே இல்லை.

பின்னர் அகாஸி 2011 இல் மீண்டும் கிளிநொச்சிக்கு வந்திருந்தார். அதுவும் புலிகள் அவரை வரவேற்ற அதே இடத்துக்கு அவர் வந்திருந்தார்.

அப்போது அவரைச் சந்தித்தேன். அவர் முன்னர் பேசிய எதையும் பேசவில்லை.

என்னை அடையாளங்கண்டு சிரித்தார். ஆனால், அவருடைய சிரிப்பில் மெல்லிய துக்கம் படிந்திருந்ததைக் கண்டேன்.

00

சொல்லும் பொருளும் மனமும் அருள்வீர்!















கடந்த 2011 ஆம் ஆண்டின் இறுதி வாரத்தில் மேலும் ஒரு சிறுவர் இல்லம் வன்னியில் - முல்லைத்தீவில் - திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய ஆண்டின் தொடக்கத்தில் - இந்த வாரம் - கிளிநொச்சியில் மேலும் ஒரு முதியோர் இல்லம் புதிதாகத் திறக்கப்படுகிறது.

இது எதனைக் காட்டுகிறது? சமூகத்தில் ஆதரவற்றோரின் நிலை அதிகரித்துள்ளது. அவர்களைப்பராமரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களைப் பராமரிக்கும் முயற்சிகள், அந்த அரும்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதைத்தானே!

வன்னியில் நடந்த போர் அங்கே, ஆதரவற்றோரையும் உதவி தேவைப்படுவோரையும் பெருக்கியுள்ளது. ஆனால், இந்தத் தேவைகளுக்கான உதவிகளைச் செய்வோரை அது பெருக்கியுள்ளதா என்றால், சற்று வருத்தத்துடன்தான் இதற்கான பதிலைச் சொல்ல வேண்டியுள்ளது.
உதவிகளும் ஆதரவும் தேவைப்படும் அளவுக்கு அவற்றைச் செய்வோரின் தொகை குறைவு.

ஆதரவு தேவைப்படுவோருக்கு உதவுவதே சிறந்த பணி. தொண்டிற் சிறந்தது, தேவைப்படுவோருக்குத் தேவைப்படும் காலத்தில் செய்யும் பணியே!

எனவேதான் ‘காலத்திற் செய்யும் பணி, ஞாலத்திற் சிறந்தது’ என்று சொல்வார்கள். இடமறிந்து, நிலையறிந்து செய்யும் உதவியே பேருதவியாகும்.
போர் எப்போதும் வேர்களை அறுத்தெறியும். சிதைவுகளையும் அழிவுகளையும் ஏற்படுத்தும். அதிலும் நவீன போர்கள் மிக அதிகமான சேதாரங்களை ஏற்படுத்துவன. நவீன போர்களில் அதிக சேதங்களையும் அழிவுகளையும் சந்திப்பவர்கள் பொதுமக்களே.

இவர்களே, பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள். போர்ப்பயிற்சியோ, பாதுகாப்புக்கான ஆயுதங்களோ இல்லாத நிலையில் இருப்பவர்களும் இவர்களே.

மட்டுமல்ல, நவீன போரானது, வெடிபொருட்களை ஆதாரப் பொருளாகக் கொண்டிருப்பதால், அதன் தாக்கம் போர்க்களத்துக்கு அப்பாலும் ஏற்படுகிறது. இதைவிடப் பொது மக்களை மையப்படுத்தி, அவர்களை இலக்கு வைத்துத் தாக்குதலை நடத்தும் போர் முறையில் மக்களுக்கே அதிக சேதமேற்படுகிறது.
முதலாம், இரண்டாம் உலகப்போர்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் அந்தப் போர் நடந்த நாடுகளில் மிக உச்ச நிலையில் இருந்தன. மனித வரலாறு கண்டிராத அளவுக்கிருந்த அந்தத் தாக்கங்களினால், லட்சக்கணக்கான சனங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இவற்றை எப்படி நிவர்த்தி செய்வது என்றே தெரியாத நிலையில் திணறின அரசுகள். குறிப்பாகப் போரில் ஈடுபட்ட அரசுகள். மேலும் சமூக ஆர்வலர்களுக்கும் இந்த நிலை ஒரு சவாலாகவே இருந்தது.

இந்த நிலையானது மனித குலத்துக்கே பெரும் சவாலை ஏற்படுத்தியது.

பாதிக்கப்பட்டோரை அந்தப் பாதிப்புகளிலிருந்து மீட்டெடுப்பதற்காகச் சிந்திக்கவும் செயற்படவும் வேண்டிய அவசியமேற்பட்டது மனித குலத்திற்கு.
இதன் விளைவுகளாகவே, பல்வேறுபட்ட தொண்டு அமைப்புகள் தோற்றம்பெற்றன. மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வதற்காக அன்று தோற்றம் பெற்ற அமைப்புகளே, இன்று உலகெங்கும் மனித நேயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இலங்கையில் போர் நடந்த வேளையிலும் இப்போதும் தொண்டாற்றிக் கொண்டிருப்பவையும் இந்த அமைப்புகள்தான்.

(வெள்ளைக்காரன் - அந்நியநாட்டுக்காரன் எல்லாம் உதவுகிறான், ஆனால், எங்கட சொந்த உறவுகள்மட்டும் ஏதேதோ காரணங்களைச் சொல்லிக் காலத்தைக் கடத்தித் தங்களின் கைகளை இறுகப் பொத்திப் பிடிக்கின்றன. மனம் விரியாததே இதுக்கெல்லாம் காரணம். விடுதலையை உண்மையாக இவர்கள் விரும்பியிருந்தால், இவர்களிடம் நிச்சயமாக மனவிரிவு ஏற்பட்டிருக்கும். பாசாங்கு செய்பவர்களிடம் எப்படி மனவிரிவு ஏற்படும்?’ என்று கேட்கின்றார் வன்னியில் ஒரு முதியவர்.)

போரின் பாதிப்புகளுக்கு அப்பால், இயற்கை அனர்த்தம் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளைச் சந்திக்கும் மக்களைப் பராமரிப்பதிலும் இந்த அமைப்புகளின் பணியும் பங்களிப்பும் உள்ளது. அதாவது, அனர்த்தமோ இடரோ எந்த வகையில் வந்தாலும் அவற்றாற் பாதிக்கப்படும் சனங்களைப் பராமரிப்பது, பாதுகாக்க முற்படுவது, ஆதரிப்பது, இத்தகைய பணிகளினூடாக பாதிக்கப்பட்டோரின் உளநிலையைச் சீராக்கி அவர்களை இயல்பு வாழ்வில் மேம்பட வைப்பதே இந்தத் தொண்டு அமைப்புகளின் பணியாகும்.

இத்தகைய பணியை எந்தச் சமூகம் முன்னின்று செய்ய முனைகின்றதோ அதுவே பண்பாட்டிற் சிறந்த சமூகமாகும். மனிதாபிமானமும் மனித நேயமுமே சிறந்த ஒரு பண்பாட்டின் அடிப்படைகளாகும். இவை வரண்டநிலையில் இருக்கும் எந்தச் சமூகமும் தனது பண்பாட்டை இழந்ததாகவே மாறும். இதற்குப் பிறகு, அந்தச் சமூகம் பண்பாட்டுப் பெருமைகளைப் பேசுவதால் பயனே இல்லை.

ஆனால், போரை உச்சநிலையில் நடத்திய, அதை ஆதரித்த ஈழத்தமிழ்ச் சமூகமும் இலங்கை அரசும் போரினாற் பாதிக்கப்பட்ட சனங்களைப் பராமரிக்கும் விதம் மிகக் கவலைக்கும் கண்டனத்துக்கும் உரியதாகவே இருக்கிறது. அதிலும் போரினால் அநாதரவாக்கப்பட்ட மக்களின் நிலையைப் பற்றிய கரிசனை இந்தத் தரப்புகளுக்குப் போதாது என்றே கூற வேண்டும். (பண்பாட்டிலும் வரலாற்றிலும் தாம் சிறந்த சமூகத்தினர் என்று இவர்கள் கூறிக்கொண்டிருப்பது எதன் அடிப்படையில்?).

பிரதானப்படுத்தப்பட்டிருக்க வேண்டிய இந்தப் பணி பாராமுகமாக்கப்பட்டுள்ளது. அல்லது சில சில்லறைத் தரப்பினர் இந்தப் பாதிப்புகளையும் பாதிக்கப்பட்டோரையும் வைத்து அரசியல் நடத்துகிறார்கள். அல்லது வியாபாரம் செய்கின்றனர். இவர்களிற் பெரும்பாலானோர் புலம்பெயர் நாடுகளில் இருக்கும் அரசியற் செயற்பாட்டாளர்களும் சில இணையத்தளத்தினருமே!

இதனால், பாதிக்கப்பட்டோர் மனிதாபிமான எல்லைகளுக்கு அப்பால், நீதிக்கும் தர்மத்துக்கும் அப்பால், மிக மோசமான முறையில் விற்பனைப் பண்டங்களாகவும் காட்சிப் பொருட்களாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

இத்தகையதோர் அவலப் பின்னணியில், இந்த அவலநிலைக்கு மாறாகவும் இந்த அவலப்பரப்பிலிருந்து பாதிக்கப்பட்டோரை மீட்டுப் பராமரிப்பதாகவும் சில காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அத்தி பூத்தாற்போல என்பார்களே, அதைப்போல அருமையாகச் சில காரியங்கள்.

குறிப்பாக யாழ்ப்பாணத்திலுள்ள சில முக்கியமான – முன்னணிப் பாடசாலைகள், பாதிப்புக்குள்ளான சிறார்களை, போருக்குப் பின்னரான சூழலில் பொறுப்பேற்று அவர்களுடைய கல்வியை வழங்கி வருகின்றன. சென் ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, கொக்குவில் இந்துக்கல்லூரி போன்ற இதில் முன்னுதாரணமானவை.

இதைப்போல அங்குள்ள சில சிறார்  இல்லங்களும் குறிப்பிட்ட தொகையிலான ஆதரவற்ற சிறுவர்களைப் பொறுப்பேற்று அவர்களுடைய எதிர்காலத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.

ஆனால், இந்தத் தொகை மிகக் குறைவானவே. பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் - உதவி தேவைப்படுவோரின் தொகையுடன் ஒப்பிடும்போது இவ்வாறு பொறுப்பெடுக்கப்பட்டோரின் அளவு மிகமிகக் குறைவே.

வன்னியில் - கிளிநொச்சி மாவட்டத்தில் ‘மகா தேவ ஆச்சிரமம்’ மற்றும் ‘குருகுலம்’ போன்றவற்றில் சுமார் முன்னூறுக்கும் அதிகமான பிள்ளைகள் பராமரிக்கப்படுகிறார்கள். இந்த இல்லங்களில் ஆண்களும் பெண்களும் தனித்தனியாகவே பராமரிக்கப்படுகின்றனர். இந்த இல்லங்களுக்கான உதவிகளைப் பலர் முன்வந்து செய்வது குறிப்பிடத்தக்கது.

தவிர, முல்லைத்தீவு மாவட்டத்தில் - முத்தையன் கட்டில் இயங்கும் அன்பு இல்லத்தில் (புனித பூமி இல்லத்தில்) சுமார் அறுபது வரையான சிறார்கள் பொறுப்பேற்கப்பட்டுப் பராமரிக்கப்படுகிறார்கள். இந்தத் தொகை வரவர அதிகரித்து வருவதாக அங்குள்ள நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த இல்லத்துக்கான செலவீனங்களைப் பெருமளவிலும் புலம்பெயர் நாடுகளிலுள்ள உதவும் மனப்பாங்குடையோரே செய்து வருகின்றனர். இவர்கள் எந்த வகையான அரசியலையும் விட பாதிக்கப்பட்ட மக்களுக்கு – அநாதரவான சிறார்களுக்கு உதவுவதையே தங்களுடைய பிரதான அக்கறையாகக் கொண்டிருக்கின்றனர். சிலர் நேரிலேயே இந்த இல்லத்துக்கு வந்து நிலைமையைப் பார்த்து தங்களின் பங்களிப்பு எல்லையை விரிவாக்கம் செய்கின்றனர். அத்துடன், நிலைமையை நேரிற் பார்த்துச் செல்வதால், இவர்கள் இன்னும் பலரையும் இந்த இல்லத்துக்கான பங்களிப்பாளர்களாகவும் ஆக்குகின்றனர்.

‘முதலில் சொந்த உறவுகளுக்கு உதவுவோம். அவர்களைப் பராமரிப்போம். சிதைவு நிலையில் உள்ள சமூகத்தை நிலைப்படுத்துவோம். மீள் நிலைப்படுத்தப்படும் ஒரு சமூகத்தினாலேயே அதனுடைய எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும்.

இதற்கு ஆதரவும் வழிகாட்டலும் தேவை. முக்கியமாக உணவும் கல்வியும் அவசியமானவை. இதைச் செய்வோம்.  இதற்கு உதவுவோம்’ என்பதாக இருக்கிறது இவர்களுடைய நோக்கமும் சிந்தனையும் அபிப்பிராயமும்.
‘இந்த அடிப்படையில் உதவிகள் கிட்டினால், இளைய தலைமுறையை நல்லமுறையில் - சிதைவின்றி ஆற்றுப்படுத்தி வளர்த்தெடுக்க முடியும் என்று சொல்கிறார் அன்பு இல்லத்தின் நிர்வாகி.

‘முக்கியமாக கல்வியை இவர்களுக்கு ஊட்ட வேண்டும். அதற்கு ஏற்றவாறு இவர்கள் கல்வி கற்பதற்கான சூழல் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். வன்னியில் கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளில் கற்கின்ற சாதாரண மாணவர்கள் கூட ஒழுங்காகப் பாடசாலைகளுக்குச் செல்வதில்லை. அதற்கான வீட்டுச்சூழலும் இவர்களுக்கில்லை.

மேலும், இங்கே போதிய ஆசிரிய வளமும் இல்லை. இந்த நிலையில் இந்தப் பகுதிச் சிறார்கள் மிக மோசமான எதிர்காலத்தையே தங்கள் வாழ்வில் சந்திக்கும் அபாயமுண்டு. ஆகவே, இதைக் கவனத்திற் கொண்டே நாம் இந்த இளைய தலைமுறையைப் பொறுப்பெடுத்துப் பராமரிக்கும் பணியைச் செய்யத்தீர்மானித்தோம்’ என்கிறார் மேலும் இந்த நிர்வாகி.

‘நடந்த போரினால், உழைப்பாளர்களையும் தலைமை உறுப்பினர்களையும் இழந்த நிலையிலேயே வன்னியில் பெரும்பாலான குடும்பங்கள் இருக்கின்றன. இந்தக் குடும்பங்களினால், தங்களுடைய இளைய தலைமுறையைச் சீராகப் பராமரிக்க முடியாது.

மட்டுமல்ல, இன்னும் இந்தப் பகுதிகளுக்கு நல்ல வீதிகள் இல்லை. மின்சாரம் இல்லை. தொடர்பாடல் வசதிகள் இல்லை. இந்த மாதிரியான பற்றாக்குறைகள் எல்லாம் இளைய தலைமுறையையே அதிகமாகப் பாதிக்கிறது. ஏனெனில் இவர்களே எதிர்காலத்தை எதிர்கொள்ள வேண்டியவர்கள்.

தங்களுடைய எதிர்காலத்துக்கான தயாரிப்புகளை, ஆற்றல் மேம்பாடுகளை இவர்களுக்கு இப்போதே செய்யவில்லை என்றால், இந்தத் தலைமுறையினர் நிச்சயமாக நாளை சீரழிந்து போகும் நிலையே ஏற்படும்.

இவர்களுக்கான பாதுகாப்புத் தொடக்கம், கல்வி மற்றும் இதர அடிப்படைத் தேவைகளை உருவாக்கிக் கொடுப்பதே இன்றைய முக்கியமான மனிதாபிமானப் பணியாகும். அதுவே மிகச் சிறந்த சேவையாகவும் அமையும்.

இதைச் செய்வதே பாதிக்கப்பட்ட சமூகத்துக்கான அரசியற் செயற்பாடாகவும் இருக்கும்’ என வன்னியில் உள்ள மூத்த ஆசியரியர்கள் தெரிவிக்கின்றனர்.
‘போருக்காகவும் விடுதலைப் போராட்டத்துக்காகவும் தம்மை அர்ப்பணித்த ஒரு பிரதேசத்தின் மக்கள் தங்கள் சக்திக்கு மீறி, அளவுக்கதிகமான விலைகளைக் கொடுத்ததன் விளைவே இந்த அநாதரவான நிலைக்குக் காரணம்’ என்று துக்கப்படுகிறார் வன்னியிலுள்ள ஒரு சமூகச் செயற்பாட்டாளர்.

இத்தகைய ஒரு நிலையில், அன்பு இல்லைத்தைப்போல, பெண் சிறார்களுக்கான இன்னொரு இல்லத்தை – ‘பாரதி இல்லம்’ என்ற பெயரில் கடந்த வாரம் ஆரம்பித்திருக்கிறார்கள் அன்பு இல்லத்தைச் சேர்ந்த நிர்வாகத்தினர். இந்த இரண்டு இல்லங்களையும் வடக்குக் கிழக்குப் புனர்வாழ்வு அபிவிருத்தி நிறுவனமே மையமாக நின்று பராமரிக்கிறது.
இந்தப் பாரதி இல்லம் முன்னர் - போர்க்காலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளியவளையில் இயங்கியது. பின்னர் செயலிழந்திருந்தது. இப்பொழுது இந்த இல்லம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், முன்னரை விட இப்போதே இந்த இல்லத்தின் தேவை அதிகமாக உள்ளது. இந்த இல்லம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று சொல்வதையும் விட, இளைய தலைமுறைப் பிள்ளைகளுக்கான ஆதரிப்பு மையங்களின் தேவைகள் அதிகமாக உள்ளன என்பதே புரிதலுக்கானது.

முதலாம் இரண்டாம் உலகப் போர்களுக்குப் பின்னர், அதிகமான தொண்டு நிறுவனங்களும் தொண்டுப் பணியாளர்களும் மனிதாபிமான அடிப்படையில் அந்த நாடுகளில் பெருகியதைப் போல ஒரு நிலை ஈழத்தமிழ்ச் சமூகத்திலும் உருவாகியிருக்க வேணும்.

ஆனால், துரதிரஷ்டவசமாக அப்படியான பொது அமைப்புகள் எதுவும் மனிதாபிமான அடிப்படையில் உருவாகியதாக இல்லை. உருவாகிய அமைப்புகளைப் பற்றிய குறைகளைப் பேசுவதிலும் அவற்றைப் பற்றிய விமர்சனங்களை முன்வைப்பதிலும் இருக்கின்ற ஆர்வம் பாதிப்புக்குள்ளாகிய மக்களின் நலனில் இருக்கவில்லை.
இது கண்டிக்கப்பட வேண்டி ஒரு செயலாகும். திருத்தப்படவேண்டி ஒரு முக்கிய குறைபாடாகும்.

வீடு எரியும்போது அதை அணைப்பதற்குப் பதிலாக அது எரிவதைப் பற்றிய விமர்சனங்களைச் செய்வதும், அது எரிவதற்கான காரணங்களைப் பற்றி ஆராய்வதும் குற்றஞ்சாட்டுவதும் பொருத்தமானதல்ல.

வேண்டுமானால், வீட்டைப் பாதுகாத்துக் கொண்டு விமர்சனங்களை முன்வைக்கலாம். அப்போது வீடும் பாதுகாக்கப்பட்டிருக்கும். அதன் மீதான விமர்சனத்தை வைப்பதற்கான தகுதியும் கிடைத்து விடும்.

இத்தகைய ஒரு புரிதல் நிலையே இன்று தமிழ்ச் சூழலுக்கு அவசியமாக உள்ளது. இதுவே இன்றைய அவசியமான அரசியற் பணியாகவும் இருக்கிறது.
இந்த இளைய சமூகத்தினரே நாளைய பிரஜைகளாக வளரப் போகிறார்கள். இன்று இவர்களை யாரும் கவனிக்க வில்லை என்றால், நாளை இவர்கள் சீரழிந்த நிலையில் காணப்படுவர். அல்லது இன்றைய நிலையில் - உதவி தேவைப்படும் சந்தர்ப்பத்தில் அந்த உதவியைச் செய்யாததையிட்ட தரப்பினர் மீதான வன்மத்தோடே இவர்கள் வளருவர்.

இது எதிர்காலத்தில் வன்முறைச் சமூகமொன்றை நாம் எதிர்கொள்வதற்கான அடிப்படையையே ஏற்படுத்தும்.

ஆகவே, ‘காலத்திற் செய்யப்படும் உதவி, சிறிதெனினும் ஞாலனத்தால் மானப் பெரிது’ என்ற வள்ளுவரின் அறவாக்கினை, அரசியல் வாக்கினை, மனிதாபிமான வாக்கினை மனங்கொள்ளவேண்டும் நாம்.

வளரும் பயிர்களுக்கு நீர்வார்ப்பது பயிரை வளர்ப்பது மட்டுல்ல, சமூகத்துக்கான விளைச்சலைக் காண்பதற்கான ஒரு அருஞ்செயலாகுமல்லவா! அதுதான் அறிவியற் செயற்பாடுமாகும்.

ஒரு வகையில் இதுவும் நமது அரசியற் பணிதான். இன்னொரு வகையில் இது அறப்பணி. மனிதாபிமானப்பணி. உரிமையான பணி. இதையெல்லாம் விட்டு விட்டு போலித்தனமாகப் தேசியப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசிக் கவனத்தைத் திசை திருப்புவது என்பது, உண்மை நிலைமையை மறைக்கும் தந்திரோபாயமாகவே எதிர்காலத்திற் காணப்படும்.

பொய்களின் விளைச்சல்களும் தவறுகளின் பெருக்கங்களும் எப்போதும் பின்னடைவுகளையும் உட்பிளவுகளையுமே உருவாக்கும்.

ஆகவே இப்போது நாம் தவறுகளைத் திருத்திக் கொண்டு. காலப்பணிகளைச் செய்வோம். இல்லையெனில் இந்தத் தவறை வரலாறு மன்னிக்காது.

00

நோக்கங்கள் சிதையும் குடியேற்றங்கள்

Sunday, 8 January 2012















இலங்கையில் அரசியற் பிரச்சினைகளில் முக்கியமானது, குடியேற்றத்திட்டங்கள் தொடர்பானவை. பிரச்சினைகளின் உருவாக்கத்திலும் குடியேற்றங்கள் காரணமாக இருந்திருக்கின்றன. இப்போது பிரச்சினைகளைத் தீர்ப்பதைக் குறித்துப் பேசும்போதும் குடியேற்றத்திட்டங்கள் காரணமாக இருக்கின்றன.

ஆகவே, குடியேற்றங்கள் என்றாலே ஏதோ ஒரு வகையில் பிரச்சினைதான் என்ற மனப்பதிவே எல்லோரிடமும் உள்ளது.

ஆனால், மேற்சொன்ன குடியேற்றத்திட்டங்கள் திட்டமிடப்பட்ட – அரசியல் உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட – சிங்களக் குடியேற்றங்கள்.
இதைவிட இன்னொரு வகையான குடியேற்றங்கள் வடக்கிலே நடந்துள்ளன. அந்தக் குடியேற்றங்களின் கதையும் நிலையும் வேறு.

00

வடக்கிலே - வன்னிப் பிரதேசத்திலே - கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த குடியேற்றத்திட்டங்களுக்கு மூன்று பிரதான காரணங்களைச் சொல்வார்கள்.

1. யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட காணியில்லாப் பிரச்சினைக்கும் தொழில் வாய்ப்புப் பிரச்சினைக்கும் ஒரு தீர்வாக வன்னிப் பிரதேசத்தில் குடியேற்றத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. (படித்த வாலிபர் திட்டம், மத்திய வகுப்புத்திட்டம், படித்த மகளிர் திட்டம், கமக்காரர் திட்டம் என்று இந்தத் திட்டங்களுக்கான பெயர்களே சூட்டப்பட்டுத்தான் இந்தக் குடியேற்றங்கள் செய்யப்பட்டன. இந்த அடிப்படைகளில்தான் காணிப் பகிர்வும் நடந்தது).

2. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திட்டங்கள் வன்னிப்பகுதியில் ஏற்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான முன்னேற்பாடாக இந்தக் குடியேற்றத்திட்டங்கள் செய்யப்பட்டன.

3. விவசாய உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும் வேலைவாய்ப்பற்றவர்களுக்கு தொழில் வாய்ப்பாக விவசாயச் செய்கையை வழங்குவதற்காகவும் காணியற்றோருக்கான காணிகளை வழங்குவதற்காகவும் என்ற மூன்று பிரதான நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தக் குடியேற்றத்திட்டங்கள் செய்யப்பட்டன.

மேலே சுட்டப்பட்ட இந்த மூன்று காரணங்களும் ஏதோவகைகளில் ஏற்புடையதாக இருக்கலாம். அல்லது இவற்றில் ஒரு காரணமோ அல்லது இரண்டு காரணங்களோ அல்லது இந்த மூன்றுக்கும் அப்பால் இன்னும் பல காரணங்களோ ஏற்புடையனவாக இருக்கலாம்.

ஆனால், என்னதானிருந்தாலும் வன்னிப் பகுதிக் குடியேற்றங்களில் பிரதானப்படுத்தப்பட்டிருந்தது விவசாயச் செய்கையாகும். வன்னியின் மண்வளமும் நீர்வளமும் விவசாயத்துக்கே அதிக சாத்தியங்களைக் கொண்டன. வன்னியின் பூர்வீக அடிப்படையும் விவசாயத்தையே மையப்படுத்தியது. வன்னியர்களின் பிரதான தொழிலும் மையப் பொருளாதாரமும் விவசாயத்தையே ஆதாரமாகக் கொண்டவை.

எனவே, இந்த விவசாயச் செய்கையை மையப்படுத்தியே குடியிருப்புகள் அமைக்கப்பட்டன. பின்னாட்களில் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றத்திட்டங்களும் அமைந்தன. அதற்கமையவே குளங்களும் நீர்ப்பாசன ஏற்பாடுகளும் பிற கட்டுமானங்களும் செய்யப்பட்டன.

காணிப்பங்கீடுகள் கூட விவசாயச் செய்கையை மையப்படுத்தி – அதற்கேற்றவாறே வழங்கப்பட்டன. விவசாயச் செய்கையை மையப்படுத்தியே பிரதானமாக, மேட்டு நீர்ப்பாசன (Lift irrication ) வசதிகூட செய்யப்பட்டது.

நீர்ப்பாசன வசதியில்லாத காணிகளில் சேனைப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டது. சேனைப் பயிர்ச்செய்கைக்கேற்பவே காணியின் அளவுகளும் நிர்மாணிக்கப்பட்டன. அதாவது, மேற்கொள்கின்ற பயிர்ச்செய்கையின் தன்மைக்கு ஏற்றமாதிரியே அவரவர்களுக்கான காணிகளின் தொகையும் அமைந்தது. அதேவேளை, காணிகள் அமைந்த இடமும் இந்த அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட்டது.

இவற்றைச் சரியாகச் சொன்னால், அந்தந்தப் பயிர்ச்செய்கைக்கு ஏற்றவாறே காணிகள் தெரிவு செய்யப்பட்டன. அந்த அடிப்படையிலேயே அவை பகிர்ந்தளிக்கப்பட்டன@ பங்கீடு செய்யப்பட்டன.

சுpல திட்டங்களில் நெற்செய்கை பிரதானப்படுத்தப்பட்டது. ஆகவே, அதற்கேற்றவாறு காணிப் பங்கீட்டின் அளவு அமைந்தது. சில திட்டங்களில் மேட்டு நிலப்பயிர்ச்செய்கை மையப்படுத்தப்பட்டது. எனவே, அதற்கமைய காணித் தெரிவும் வழங்கலும் அமைந்தன. சில திட்டங்களில் சேனைப் பயிர்ச்செய்கைக்கான காணிகள் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டன.

அதாவது, இந்தத் திட்டங்களின் கீழ் பயிரிடுகையைச் செய்வதன்மூலமாக இவர்கள் தங்களின் வீட்டுக்கும் வருவாயைத் தேடிக் கொண்டனர்.

அதேவேளை, நாட்டின் தேவைக்கேற்ற உற்பத்தியை வழங்கி, நாட்டுக்கான உற்பத்திப் பங்களிப்பையும் பொருளாதாரப் பங்களிப்பையும் செய்தனர்.
இவ்வாறான ஒரு பொருளாதாரப் பங்களிப்புக்கும் ஏற்பாட்டுக்குமாகவே குடியேற்றவாசிகளுக்குக் காணிகள் வழங்கப்பட்டன. திட்டமிடப்பட்ட வகையில் அதற்கமைவாகக் காரியங்களும் நடந்தன.

இதன்படி சுமார் ஒரு இருபது தொடக்கம் நாற்பது ஆண்டுகாலம் இந்தக் காணிகளில் உரியவாறான பயிர்ச்செய்கைகள் செய்யப்பட்டன. அப்போது உழுந்தும் பயறும் நிலக்கடலையும் நெல்லும் எள்ளும் தாராளமாகவே விளைந்தன வன்னியில்.

பயிரிடப்படும் போகத்தை ஒட்டி வன்னியில் உழுந்தும் பயறும் எள்ளும் நிலக்கடலையும் எல்லா ஊர்களிலும் எல்லா வீடுகளிலும் போதிய அளவுக்குக் கிடைத்தன. அப்போது சேனைகளில் பயிரிட்டவர்களுக்கும் புலவுகளில் உழுந்தையும் பயற்றையும் பயிரிட்டவர்களுக்கும் இந்த நினைவுகள் இதைப் படிக்கும்பொழுது மீள எழும்.

முன்னர் துணுக்காய், மல்லாவி, முத்தையன்கட்டு, செட்டிகுளம், வவுனியா, நெடுங்கேணி போன்ற இடங்களில் மலிவாக உழுந்தையும் பயற்றையும் நிலக்கடலையையும் எள்ளையும் சோளத்தையும் வாங்கலாம்.
கொழும்பிலிருந்தும் நாட்டின் பிற இடங்களில் இருந்தும் இந்த இடங்களுக்கு வியாபாரிகள் வந்து இந்தப் பொருட்களைக் கொள்வனவு செய்துகொண்டு செல்வர்.

ஆனால், பிறகு நிலைமைகள் மாறிவிட்டன. ஒன்று போரின்காரணமான மாற்றங்கள். இதனால், விளைச்சல்களைச் செய்வதில் பலவிதமான பிரச்சினைகள் உருவாகின. அதையும் கடந்து விளைச்சலை மேற்கொண்டவர்கள் இருந்தாலும் அதன் வீதம் குறைவடைந்தது.

அடுத்தது நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நிலை மாற்றங்கள். இந்த மாற்றங்களால், விலைநிர்ணயம் பெரும் பிரச்சினையாகியது. உற்பத்தியையும் விட விளைச்சலின் மூலமான வருவாய் குறைவாக இருந்தது. இதனால், உற்பத்தியின் வீதமும் உற்பத்தியாளர்களின் வீதமும் குறைந்தது.

அதையும் விட முக்கியமானது, பயிர்ச்செய்கைக்காக வழங்கப்பட்ட காணிகளைக் குடியிருப்புக் காணிகளாகவும் குடியிருப்பை அடுத்து சந்தை, கடை, தொழிற் சாலைகள் என மாற்றிவருவதே.

பயிர்ச் செய்கைக் காணிகளைக் குடியிருப்புக் காணிகளாக மாற்றிவரும் இந்த நிலைமை மிகப் பயங்கரமானது. இது சட்டவிரோதமானது. காணி வழங்கற் சட்டத்தின்படி பயிர்ச்செய்கைக் காணிகளை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்த முடியாது. அப்படிச் சட்டவிரோதமான முறையில் அவற்றைப் பிறதேவைகளுக்காக வழங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஆனால், கண்ணுக்குள் மண்ணைத்தூவி விட்டு எப்படியோ இந்தக் காணிகளை வேறு தேவைகளுக்கே மாற்றி விட்டனர் பலரும். ஏறக்குறைய முக்காற்பங்குக் காணிகள் இப்படி மாற்றப்பட்டு விட்டன. இன்னும் அப்படி மாற்றப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

இதன்மூலம் முன்னர் இந்தக் காணிகளை வழங்குவதற்காகத் திட்டமிடப்பட்ட நோக்கங்கள் முற்றாகவே சிதைக்கப்படுகின்றன.

உழுந்து விளைந்த புலவில் இப்போது வீடுகளும் கடைத்தொகுதிகளும். பயறு விதைக்கப்பட்ட சேனையில் ஆலைகளும் இயந்திரம் திருத்தும் இடங்களும். எள்ளு விதைக்கப்பட்ட இடங்களில் கடைகளும் தெருக்களும் என்று முற்றாகவே அந்தப் பிராந்தியங்கள் மாறிவிட்டன.

சேனை என்றும் புலவு என்றும் சொல்லப்பட்ட இடங்கள் எல்லாம் ஊர்மனைகளாகவும் சிறு பட்டினங்களாகவும் மாறிவிட்டன. காலமாற்றத்தில் இதெல்லாம் சகஜம் என்று யாரும் சொல்லக்கூடும்.

ஆனால், பிரச்சினை அதுவல்ல. உண்மையும் அதுவல்ல.
மக்களின் பொருளாதார அடிப்படைகளும் தெரிவுகளும் மாறிவிட்டதே இதற்குப் பிரதான காரணம். அடுத்தது, கடந்த முப்பது ஆண்டுகளாக காணியற்றோருக்கான காணிப்பங்கீடுகள் வழங்கப்படாத காரணத்தினால், இருக்கின்ற காணிகளைப் பங்கீடு செய்ய வேண்டிய அவசியத்திற்கு ஒவ்வொருவரும் தள்ளப்பட்டனர். குடியிருப்புக்கான காணிகளைப் பெற முடியாத நிலையில் தம்மிடம் இருக்கின்ற காணிகளைக் குடியிருப்புகளாக மாற்ற வேண்டிய அவசியத்திற்குத் தள்ளப்பட்டனர் மக்கள்.

இதனால், விளைநிலங்கள் தொழில் மையங்களாகவும் வணிக வளாகங்களாகவும் குடியிருப்புகளாகவும் மாறிவருகின்றன.
இந்த நிலைமை முன்னர் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே காணப்பட்டது. அங்கே இருந்த ‘செம்பாட்டுத் தறை’ என்று சொல்லப்படும் வளங்கொழிக்கும் செம்மண் விளை நிலங்கள் குடியிருப்புக்காக மாற்றப்பட்டன.

இந்த நிலையைத் தடுப்பதற்காகவே – விவசாயக் காணிகளின் இழப்பைத் தடுப்பதற்காகவே - யாழ்ப்பாண மக்களை வன்னியில் குடியேற்றுவதற்குத் திட்டமிடப்பட்டது என்று சொல்லப்படுவதுண்டு.

ஆனாலும் மெல்ல மெல்ல யாழ்ப்பாணத்தின் தோட்டவெளிகள் - விளைநிலங்கள், பனந்தோப்புகள் எல்லாமே குடியிருப்புகளாகவும் தொழிற்பிரதேசங்களாகவும் கடைவளாகங்களாகவும் மாற்றப்பட்டுவிட்டன. மேலும் அவை அவ்வாறே மாற்றப்பட்டும் வருகின்றன. ஏனென்றால், முப்பது ஆண்டுகளுக்கு மேலாக யாழ்ப்பாண மக்களுக்கான காணி வழங்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

ஆகவே, அவர்கள் தங்களிடம் இருக்கின்ற காணிகளையே எல்லாவற்றுக்குமாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதேவேளை, யாழ்ப்பாணத்தவர்களின் பொருளாதாரத் தெரிவுகளும் முறைகளும் மாறிவிட்டன.அவர்கள் இப்போது பெருமளவுக்கும் நுகர்ச்சிப் பொருளாதாரத்தையே பிரதானப்படுத்தியுள்ளனர்.
இது என்னமாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்றால், அந்தப் பிரதேசத்தின் தனித்தன்மையையும் அடையாளத்தையும் மாற்றிச் சிதைத்து விடுகிறது.

உதாரணமாக, முன்னர் யாழ்ப்பாணத்தில் கரணைக்கிழங்கு, வெங்காயம், மரவெள்ளிக்கிழங்கு, குரக்கன், புகையிலை, மிளகாய், இராசவள்ளிக்கிழங்கு  போன்ற பயிர்கள் சில பகுதிகளில் மிகப் பிரசித்தமான அளவுக்கு விளையும். அந்தந்தப் பிரதேச மண்ணின் மணத்தைப்போல இந்த விளைபொருட்களின் சுவையும் இருக்கும்.

அப்படியிருக்கும்போது இந்தப் பொருட்களைப்பற்றிய நினைவுகளும் தனி அடையாளத்துக்குரிய நினைவையும் தகுதிப் பெறுமதியையும் கொண்டிருந்தன.

இவை இந்தப் பிரதேசத்தின் சூழல் அடையாளம், தொழில் முறை, பொருளாதார அடையாளம் எனப் பலவகைகளில் அமைந்திருந்தன.

ஆனால், குடியிருப்புகளாக இந்தப் பிரதேசங்கள் மாறும்போது இந்தப் பிரதேசத்தின் முகமாக இருந்த தனித்துவ அடையாளங்கள் குலைந்து போகின்றன.

இதைப்போலவே இன்று வன்னியில் விளைநிலங்களாக இருந்த இடங்களும் கால்நடைகள் வளர்க்கும் இடங்களாக இருந்த இடங்களும் மேய்ச்சற் தரைகளாக, நீர்நிலைகளாக, ஆற்றுப்படுகைகளாக இருந்த பகுதிகளும் மாற்றத்துக்குள்ளாகியுள்ளன.

இதன்மூலம் ‘வன்னிப் பகுதியானது ஒரு பெரும் விவசாயப் பிரதேசம்’ என்றிருந்த அடையாளம் குலைந்து, சனங்களின் குடியிருப்புப் பிரதேசங்களாக மாறிவருகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இது இந்தப் பகுதியிலுள்ள மக்களின் தொழில் மற்றும் பொருளாதார அடிப்படைகளிலும் பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன.
இதைவிட, இந்தப் பிரதேசங்களின் தனித்துவ அடையாளங்களும் மாறிவிட்டன.

‘முன்னர் ஒரு காலம் வவுனியாவில் உழுந்து விதைப்பார்கள்’ என்று சொல்லும்போது அதை நம்புவதற்கு இப்பொழுது கடினமாக இருக்கிறது என்றால், இந்த அடையாளச் சிதைவு எந்தளவுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை நாம் இலகுவாக விளங்கிக் கொள்ளலாம்.

எனவே, இiதைப்போல பல்வேறு பிரச்சினைகள், இன்று காணிப்பகிர்வின்மை தொடர்பாகவும் காணியற்ற நிலையினாலும் மாறியுள்ள பொருளாதாரப் போக்கினாலும் மக்களின் தெரிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களினாலும் ஏற்பட்டுள்ளன.

ஆனால், சிலவற்றுக்குச் சில அடிப்படைகள் உண்டு. விவசாயத்துக்குப் பொருத்தமான இடங்களில்தான் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளலாம்.

கடையை எங்கே வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம். வீட்டை எங்கே வேண்டுமானாலும் அமைத்துக்கொள்ளலாம். ஆனால், அப்படி நினைத்த இடத்திலெல்லாம் பயிர்களைச் செய்கைபண்ண முடியாது.

இங்கே, இப்படி இந்த அடிப்படையை மீறுவதே பிரச்சினையாகிறது. விவசாயத்தை மையப்படுத்தி வழங்கப்பட்ட காணிகள், அந்த அடிப்படையை மீறுவதே பிரச்சினை. இந்த இழப்பு நிரந்தரமான இழப்பாகும். இது ஒரு அடிப்படைப் பிரச்சினை. இது ஒரு அரசியற் பிரச்சினை.

இதன் விளைவாக இப்போது அரசி தொடக்கம், உழுந்து, பயறு, நிலக்கடலை, எள்ளு என எல்லாமே வேறு இடங்களில் இருந்து – வெளியே இருந்து வரவேண்டியுள்ளது.

பங்களாதேஸில் இருந்து உழுந்து வருகிறது. இந்தியாவில் இருந்து நிலக்கடலையும் பருப்பும் பயறும் வருகிறது. போதாக்குறைக்கு பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள். சீனாவில் இருந்தும் பர்மாவில் இருந்தும் அரிசி வருகிறது. ஜப்பானில் இருந்து வாகனங்களும் இலத்திரனியல் பொருட்களும் மட்டும் வரவில்லை, இலங்கைக்கு உணவுப் பொருட்களும் அங்கிருந்து எடுத்து வரப்படுகின்றன.

அதாவது, நாட்டிற்குத் தேவையான உற்பத்தியையும் வீட்டுக்குத் தேவையான பொருட்களையும் உற்பத்தி செய்யும் காலம் போய், எல்லாற்றுக்கும் வெளியே இருந்து எதிர்பார்க்கும் நிலை இது.

உள்நாட்டு மக்களுக்கான அரசியற் தீர்வை வெளியே இருந்து எதிர்பார்ப்பதைப் போல, இன்று தமிழர்கள் தங்களின் பொருளாதாரத்தை வெளியே இருந்து எதிர்பார்ப்பதைப்போல, தங்களுக்கான உற்பத்திகளையும் வெளியே இருந்து எதிர்பார்க்கும் காலம் வந்துள்ளது.

அதாவது, இது ஓர் வேரிழப்பு நிலையே! இந்த வேரிழப்பு நிச்சயமாக எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும். வேரற்ற சமூகம் அடிப்படைகளற்ற நிலைக்குத் தள்ளப்படும். அடிப்படைகளில் தளர்வுகள் ஏற்படுவது ஆபத்தானது.
இனப்பிரச்சினைக்கு நிகரானவை காணிப்பிரச்சினைகளும் குடியேற்றப் பிரச்சினைகளும். அவற்றில் இதுவும் ஒன்று.

00

ஊடகங்களின் பொறுப்புக் குறித்து...

Thursday, 5 January 2012









‘ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் இப்போது அரசியலையும் அரசியல்வாதிகளைப் பற்றியுமே எழுதுகிறார்கள். மக்களின் பிரச்சினைகளைப் பற்றி எழுதுவதில் அவர்கள் அதிக அக்கறை காட்டுவதில்லை’ என்று இலங்கையின் ஊடகங்களை அவதானித்த வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் ஒரு உரையாடலின் போது தெரிவித்தார்.

அவர் மேலும் தொடர்ந்து உரையாடும்போது, ‘...இலங்கையின் பிரச்சினைகளும் தேவைகளும் ஏராளமாக இருக்கின்றன. மக்களுடைய பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கப்பட வேண்டியிருக்கிறது.
நாடு யுத்தத்திலிருந்து மீண்டாலும் யுத்தகாலப் பாதிப்புகளிலிருந்தும் யுத்தகால நிலைமைகளிலிருந்தும் இன்னும் மீளவில்லை.
இது யுத்தத்தின் முடிவுக்குப் பிறகும் மக்களைப் புதிதாகச் சிந்திக்க விடவில்லை. ஆகவேதான் அவர்கள் இன்னும் யுத்தத்துக்கு முன்னரும் யுத்தகாலத்திலும் சிந்தித்ததைப் போல நம்பிக்கையீனமாகச் சிந்திக்கிறார்கள். அல்லது யுத்தகால நினைவுகளின் தொடர்ச்சியாகச் சிந்திக்கிறார்கள்.

இதிலிருந்து மீள வேண்டுமாயின் மக்களுடைய தேவைகளைப் பற்றியும் அவர்களுடைய பிரச்சினைகளைப் பற்றியும் அதிகமாக எழுதவேண்டும். அப்படி அவர்களுடைய பிரச்சினைகளைப் பற்றி எழுதி, உரியதரப்பினர்களின்  கவனத்துக்குட்படுத்தி, அவற்றுக்குத் தீர்வைக் காணும்போதே மாற்றங்கள் நிகழும்@ மக்களிடம் நம்பிக்கை பிறக்கும்’ என்றார்.

இந்த ஊடகவியலாளரின் கூற்றுகள் நிச்சயம் கவனத்திற்குரியவையே.
ஊடகவியலாளர்களின் பணி என்பது அரசியல்வாதிகளின் பணிகளாக அமைந்திருக்க வேண்டியதில்லை. அப்படி அது அமைந்து விடவும் கூடாது என்பது முதற்கவனத்திற்குரியது.

அத்துடன் ஊடகங்களும் அரசியல் அரங்காக சுருங்கி விடக்கூடாது என்பதும் முக்கியமானது.

‘ஊடகங்கள் எப்போதும் மக்களுடன் இருக்க வேண்டும். மக்களுக்காக இருக்க வேண்டும்’ என்பார்கள். எங்களுடைய சூழலில் பெரும்பாலான ஊடகங்கள் மக்களுடைய பிரச்சினைகளைப் பேசினாலும் அவற்றைச் சார்பு நிலையிலிருந்தே அதிகமாகப் பேசுகின்றன.

இதை இன்னும் தெளிவாகச் சொன்னால், எந்த விடயத்தையும் ஊடக முறைமை சார்ந்து – ஊடக அறநெறி சார்ந்து அணுகுவதை விடவும் அரசியல் விருப்பு - வெறுப்புச் சார்ந்தே அணுகுகின்றன.

இதனால் ஒரு விடயத்தின் பாதிப்பக்கம் மறைக்கப்படுகிறது. அல்லது மறுக்கமோ மறுபாதியோ பார்க்கப்படாது விடப்படுகிறது. இது மக்களை உண்மைகளிலிருந்தும் முழுமைகளிலிருந்தும் அந்நியப்படுத்தி விடுகிறது.

முழுமையை அறியாத மக்கள், உண்மைகளை அறியாத மக்கள் நிச்சயம் குறைபாடுடையவர்களாகவும் குறைச் சிந்தனைக்குட்பட்டவர்களாகவுமே இருப்பர்.

ஆகவே முதலில் ஊடகங்கள் ஒரு திறந்த வெளிக்கு தம்மைக் கொண்டு வரவேண்டும்.

யுத்தத்துக்குப் பின்னர் அப்படித் திறந்த வெளிக்கு வந்துள்ள ஊடகங்கள் இலங்கையில் எவை? அவற்றின் எண்ணிக்கை எந்தளவுக்கு நம்பிக்கையூட்டக்கூடியதாக இருக்கிறது?

இதேவேளை, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய காலகட்டத்தில் இயங்கிய மேற்குலக ஊடகங்கள் தமது கடந்தகாலப் படிப்பினைகளையும் யுத்த அழிவினையும் ஒரு பாடமாகக் கொண்டன என்பதை இங்கே நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.

ஜனநாயகத்தையும் மக்களின் வாழ்க்கையையும் மனித நேயத்தையும் உண்மையையும் முடிந்த அளவுக்கு வலிமைப்படுத்த இந்த ஊடகங்கள் முயன்றிருக்கின்றன. இதனையே பின்னர் இவை தமது கோட்பாடுகளாகவும் நெறிமுறைகளாகவும் பின்பற்றி வருகின்றன.

இலங்கையின் ஊடகங்களில் பெரும்பாலானவையும் இன்னும் சார்பு நிலைப்பட்டும், அரசியல் மயப்பட்டும், இனரீதியாகச் சிந்திப்பனவாகவுமே இருக்கின்றன.

சிங்கள ஊடகங்கள் சிங்களத்தரப்பின் மனோநிலையைப் பிரதிபலிப்பனவாக இருக்கின்றன. தமிழ் ஊடகங்கள் தமிழ்த்தரப்பின் மனோநிலையைப் பிரதிபலிப்பனவாக இருக்கின்றன.

யுத்தமோ அதன் விளைவான அழிவுகளோ மக்களின் துயரங்களோ இந்த ஊடகங்களின் சிந்தனை முறையை மாற்றவில்லை. அணுகுமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தவுமில்லை.

பதிலாக இன்னும் இனவாதத்தை வளர்க்கக்கூடிய மாதிரியான உணர்ச்சிகரமான விடயங்களையே எடுத்தாள்கின்றன. உணர்ச்சிகரமான மொழியையும் வெளிப்பாட்டையும் கையாள்கின்றன.

இது நிலைமையை பாதக நிலையில் - ஆபத்து நிலையில் வைத்திருக்கவே செய்கின்றது. சமூகங்களை எரிபற்று நிலையில் வைத்திருப்பதே இதில் முக்கிய உபாயமாகும்.

ஏட்டிக்குப் போட்டி, எரிபற்று நிலை என்பது எப்போதும் ஊடகங்களுக்கான தீனியை அதிகமாகத் தரும். அதேவேளை மக்களையும் இந்தத் தீனிகள் அதிகமாகக் கவரும். ஆனால், இந்தத் தீனிகள் மக்களையே தீனியாக்கி விடும். அவர்களறியாமலே அவர்கள் தீனியாகி விடுகின்றனர். இது மோசமானதொரு நிலையே.

இப்படியான அணுகுமுறையும் தந்திரோபயமும்தான் கடந்த காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இப்போதும் ஏறக்குறைய இந்த நிலைதான் தொடருகிறது.

அதாவது, எரிபற்று நிலைக்குரிய அரசியலில் மையங்கொள்ள வைப்பதன் மூலம் மக்களை ஒருவிதமான மயக்க நிலைக்கும் - போதைக்கும் உள்ளாக்கி வைத்திருப்பது இதுவாகும்.

இதனால், மக்களின் ஏராளம் பிரச்சினைகளும் தேவைகளும் கவனிக்கப்படாது திசை திருப்பப்படுகின்றன. மட்டுமல்ல தங்கள் பிரச்சினைகள் தொடர்பாகவும் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதைப் பற்றியும் மக்களிடம் உருவாகி வரும் புதிய அனுபவங்களும் புதிய நிலைப்பாடுகளும் கண்டு பிடிக்கப்படாது விடப்படுகின்றன.

எந்தப் பிரச்சினையையும் தீர்த்துக் கொள்ளக் கூடிய ஆற்றல் மனிதர்களுக்குண்டு. மனித இயல்பே அப்படித்தான். இல்லையென்றால், இத்தனை பெரிய வளர்ச்சியை மனிதகுலம் எட்டியிருக்க மாட்டாது. இதை நமது பெரும்பாலான ஊடகங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

சுருக்கமாகச் சொன்னால் பல சந்தர்ப்பங்களில் மக்களின் இயல்பான வாழ்க்கைக்கும் முன்னேற்றத்துக்கும் அரசியற்கட்சிகளும் அவற்றின் கொள்கைகளும் அரசியற் தலைவர்களின் செயற்பாடுகளும் காரணமாக அமைந்து விடுகின்றன.

இந்த அரசியற் கட்சிகளை ஆதரிப்பதன் மூலமாகவும் அரசியல்வாதிகளை முன்னிலைப்படுத்துவதன் வழியாகவும் மக்களைச் சிறுமைப்படுத்தி விடுகின்றன பல ஊடகங்கள்.

இதற்குக் காரணம் அவைகள் அரசியல் வாதிகளைப் போலவும் அரசியற் கட்சிகளைப் போலவுமே செயற்படுகின்றன என்பதேயாகும்.

அதாவது, மக்களின் குரல்களாக இருக்கவும் இயங்கவும் வேண்டிய ஊடகங்கள் மக்களை ஆள்வனவாக மாறிவிடுகின்றன. மக்களை அதிகாரம் செய்வனவாக மாறிவிடுகின்றன. மக்களின் ஜனநாய உரிமைகளை வென்றெடுக்கவும் பாதுகாக்கவும் வேண்டிய ஊடகங்கள் மக்களுக்குரிய ஜனநாயக அடிப்படைகளை மறுப்பனவாகச் செயற்படுகின்றன.

இப்படிச் சிந்தித்தால், பாதிப் பக்கத்தையே இந்த ஊடகங்களால் வெளிப்படுத்த முடியும். பாதி உண்மையை, தாம் விரும்புகின்ற விசயங்களை மட்டுமே மக்களுக்குக் கொடுக்க முடியும்.

அதற்கப்பால் மக்களை ஒளிமிக்க ஒரு பிரகாசமான வெளிக்கோ யுகத்துக்கோ அவற்றால் கொண்டு செல்ல முடியாது.

மக்களுக்குரிய ஊடகம் என்பது மக்களை விழிப்படைய வைப்பனவாகவும் மக்களுக்கு உண்மைகளைத் தெரியப்படுத்துவனவாகவும் இருக்க வேண்டும்.
அவை மக்களின் தரப்பிலிருந்து அதிகாரத்தரப்பை அணுகவேண்டும்.

மக்களுக்காக அதிகாரத்தரப்பை செயற்பட வைக்க வேண்டும். மக்களின் தேவைகளையும் அவர்களுடைய பிரச்சினைகளையும் அவர்களுடைய உணர்வுகளையும் வெளிப்படுத்துவதன் மூலம் மக்களின் குரலாக அவை தொழிற்படவேண்டும்.

உலகத்தின் வெற்றி பெற்ற முதன்மை ஊடகங்கள் சாத்தியப்படக்கூடிய எல்லைக்கு ஜனநாயகத்தை நோக்கியும் மக்களின் உரிமைகளை நோக்கியும் நகர்கின்றன. அவற்றின் செய்திகள் மற்றும் தகவல்களின் நம்பிக்கை – உண்மை நிலை போன்றவை அவற்றை மேன்மையை நோக்கி, வெற்றியை நோக்கி அவற்றை நகர்த்துகின்றன.

இந்த நகர்வுக்குக் குறுக்கே வரும் தடங்கல்களை அவை தமக்கான சவால்களாகவும் வெற்றிக்கான படிக்கற்களாகவும் பயன்படுத்திக் கொள்கின்றன.

ஊடகங்களின் வெற்றி என்பது மக்களுக்குரிய தேவைகளை இனங்காட்டுவதிலும் அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றி வைப்பதிலும் அவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதிலுமே தங்கியிருக்கிறது.

இந்தப் பணிகளில் அந்த ஊடகங்களுக்கு வருகின்ற நெருக்கடிகளும் நேர்கின்ற அபாயங்களும் அந்த ஊடகங்களை உலக அரங்கில் மேலும் அவற்றை ஸ்தாபித்துப் பலப்படுத்தி விடுகின்றன.

கூடவே அவை வலியுறுத்திய விடயங்களும் அவை வெளிப்படுத்திய உண்மைகளும் மக்களுக்கான நன்மைகளை – பயன்களை பெற்றுத் தருகின்றன.

ஏனெனில் இந்த மாதிரியான சவால்கள் என்பது மக்களின் வாழ்க்கைக்கான பாதுகாப்பையே வலியுறுத்துகின்றன.

இலங்கையில் போரை எதிர்த்த ஊடகங்களை விடவும் போரை ஆதரித்த ஊடகங்களே அதிகம். ஒருவகையில் இதற்கும் ஒரு நியாயம் இருந்தாலும் போரை இவை இனப்பிரச்சினைத் தீர்வுக்கான வழிமுறையாகக் கையாள்வதில் தவறி விட்டன என்பதில் யாருக்காவது மாற்றுக் கருத்து இருக்க முடியுமா?

போருக்குப் பின்னரும் நிலைமைகளில் மாற்றம் இல்லை என்பது இந்த ஊடகங்களின் கடந்த கால வழிமுறைகளில் குறைபாட்டையும் தோல்வியையுமே வெளிப்படுத்துகிறது.

உண்மையில் இலங்கையில் இன மத பேதங்களைக் கடந்த தேசிய ஊடகம் - தேசிய ஊடகவியலாளர்கள் என்பது மிகக் குறைவானதாகவே இருக்கிறது.

இதனால், மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் முதன்மைப்படுத்தும் போக்கும் துலக்கமாக வளர்ச்சியடையவில்லை.
தங்களுடைய பத்திரிகை, தங்களுடைய வானொலி, தங்களுடைய தொலைக்காட்சி என்று இலங்கையர்கள் கொண்டாடக்கூடிய  ஊடகங்கள் வந்திருக்குமானால் அல்லது அவ்வாறு அடையாளம் காணப்பட்டிருக்குமானால் அது பல பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழியைத் தந்திருக்கும்.

மக்கள் தங்களுடைய தேவைகளைப் பெறுவதற்கான வழிமுறைகளை மிக இயல்பாகத் தங்களிடம் வைத்திருக்;கிறார்கள். இது மனிதர்களின் சிறப்பியல்பாகும்.

இந்த இயல்பை மேலும் வலுவூட்டி அவர்களுடைய சிரமங்களைக் குறைப்பதற்கு ஊடகங்கள் முயற்சிப்பது அவசியம்.  இதற்கு மக்களுடன் அதிக தொடர்புடைய – மக்களில் அதிக கரிசனையுடை ஊடகவியலாளர்கள் வளர்த்தெடுக்கப்படுவது அவசியம். அப்படி வளர்த்தெடுக்கப்படும் ஊடகங்கள் தங்கள் ஊடகவியலாளர்களை மக்களிட் செல்லும்படி வற்புறுத்துகின்றன. அவர்கள் மக்களிடம் சென்று அவர்களிடம் இருக்கின்ற உண்மைகளையும் நிலவரங்களையம் வெளியே கொண்டு வருகிறார்கள்.

எங்கள் மக்களிடம் இருக்கின்ற பல விடயங்களை வெளி ஊடகங்கள் பல தடவைகள் வெளியே கொண்டு வந்திருக்கின்றன. அதற்குப் பிறகு அவற்றை மேற்கோள்காட்டி நமது ஊடகங்கள் மறு வெளியீடு செய்கின்றன. இது நமது பார்வைக்குறைபாட்டையும் மக்களைப் பொருட்படுத்தா மனோபாவத்தையும் உழைப்பின்மையையும் வெளிப்படுத்துகின்றது.

ஆனால், கடுமையான உழைப்பைச் செலவிடும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் மக்களிடம் செல்வதால் - அவர்களுடன் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்வதால் தமது ஊடகச் செல்வாக்கை மக்களிடம் வலுவானதாக்கிக் கொள்கிறார்கள்.

ஆகவேதான் தங்களுடைய தரப்பின் குரல் என்றவகையில் அந்த ஊடகங்களை மக்கள் ஆதரிக்கிறார்கள்.

பொதுவாக தங்கள் வாழ்வின் கணிசமான பகுதி நேரத்தையும் உழைப்பின் கணிசமான தொகையையும் அவர்கள் ஊடகங்களுக்காகச் செலவிடுகிறார்கள். தமக்கான குரல்களாகவும் வெளிப்பாட்டுச் சாதனங்களாகவும் ஊடகங்கள் செயற்படட்டும் என்றே மக்கள் கருதுகிறார்கள்.

ஆகவே மக்களின் நம்பிக்கைக்கும் அவர்களுடைய உரிமைகளுக்கும் அவர்களுடைய எதிர்காலத்துக்கும் பொறுப்புச் சொல்ல வேண்டிய கடப்பாடும் பண்பும் ஊடகங்களுக்குரியது.

இலங்கையில் இத்தகைய பண்பில் இயங்குகின்ற ஊடகங்களைப் பட்டியலிட்டால் நமக்கு எத்தனை ஊடகங்கள் தேறும்?

‘ஒப்பீட்டளவில் வானொலிகள் கொஞ்சம் பரவாயில்லை. அதிலும் எவ். எம் வானொலிகள் இன்னும் மேல்’ என்கிறார் உள்ளுர் ஊடகவியலாளர் ஒருவர். நிச்சயமாக இவர் இலத்திரனியல் ஊடகங்களில் பணியாற்றும் ஆள் அல்ல.

எப்படியோ இலங்கை ஊடகங்கள் ஒரு பொறுப்பு மிக்க காலகட்டத்தில் இப்போதிருக்கின்றன என்பது மட்டும் கூடிய கவனத்திற்குரியது. அது அரசியல் ரீதியாகவும் மக்களின் பிரச்சினைகள், தேவைகள், வாழ்க்கையின் அடிப்படைகள் அத்தனையைச் சார்ந்ததுமாகும்.

00
 

2009 ·. by TNB