கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

பொறுப்புக்கூறல் : திரைகளை விட்டு வெளியே வருவது எப்போது?

Sunday 1 April 2012















இலங்கை அரசியலில் ‘பொறுப்புக்கூறுல்’ என்ற பதம் இன்று அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது மிக ஆழமான அர்த்தமுடைய ஒரு பதம். இந்தப் பதத்தின் உட்பொருளை அதன் பரிமாணங்களோடும் ஆழத்தோடும் புரிந்து கொண்டால், அந்தப் புரிதலின் வழியாக நடைமுறைகளை உருவாக்கினால், இலங்கையின் நீடித்த துக்கங்களையும் தீராப் பிரச்சினைகளையும் கடந்து விட முடியும்.

வரலாறு இத்தகைய சில தருணங்களை – புதிய வழிகளை எதிர்பாராத விதமாகத் தருவதுண்டு. அத்தகைய ஒரு தருணம் இப்போது, இந்தப் பதத்தின் வழியாக இலங்கைக்குக் கிடைத்துள்ளது. இது தனியே ஒரு சொல் அல்ல. இது ஒரு வழி@ ஒரு நிவாரணி. முரண்பாடுகளைத் தணித்துச் சமனிலைப்படுத்தும் ஆற்றலை வழங்கும் ஒரு திறவுகோல்.

இந்தப் பதத்தை அதன் அர்த்தத்தில் விளங்கிக் கொள்ள வேண்டுமானால், வரலாற்றுக்குப் பொறுப்புக்கூறல், காலத்துக்குப் பொறுப்புக்கூறல், காலங்கடத்தலுக்குப் பொறுப்புக் கூறல், நம்பிக்கைகளுக்குப் பொறுப்புக்கூறல், நம்பிக்கைத் துரோகங்களுக்குப் பொறுப்புக் கூறல், நடந்த அனர்த்தங்களுக்கு, நீதி மறுப்புக்கு, கொலைகளுக்கு, பழிக்குப் பாதகத்துக்கு, பாதிக்கப்பட்டோருக்கு, உலகத்துக்கு என எல்லாவற்றுக்கும் எல்லாத் தரப்புக்கும் பொறுப்புக் கூறல் என்று இது பல நிலைகளில் விரிந்து செல்வதை உணர முடியும்.

பொறுப்புக்கூறல் என்பது பொறுப்பை ஏற்றல், நடந்தவற்றுக்குரிய பொறுப்பை ஏற்றுக்கொள்ளுதல் என்ற ஒரு அடிப்படை அம்சத்தை ஏற்படுத்துகிறது. இது குற்றங்களையும் தவறுகளையும் விளைவுகளுக்கான பொறுப்புகளையும் தார்மீக அடிப்படையில் ஏற்றுக்கொள்வது என்று அமையும்.

கடந்த காலத்துக்குப் பொறுப்புக் கூறுவதன் மூலம் நடந்த நிகழ்ச்சிகளுக்கும் நிலைமைகளுக்கும் பொறுப்புக் கூறும் ஒரு நிலை ஏற்படுகிறது. இத்தகைய பொறுப்புக்கூறல் மறு அர்த்தத்தில் பொறுப்பேற்றல் என்று இன்னொரு விளக்கத்தையும் பெறுகிறது.

பொறுப்புக் கூறலும் பொறுப்பேற்றலும் என்பது உண்மையில் மிகப் பெரிய மாண்புடைய செயலாகும். தவறுகளையும் குற்றங்களையும் பொறுப்பேற்றல், காயங்களுக்கும் வலிகளுக்கும் வேதனைக்கும் கண்ணீருக்கும் பொறுப்பேற்றல் என்பது சாதாரணமானதல்ல. இவற்றைப் பொறுப்பேற்பதன்மூலமாக பிறரிடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முடிகிறது.

மட்டுமல்ல, இத்தகைய பொறுப்பேற்றல் தவறுகளுக்கும் குற்றங்களுக்கும் தாமதங்களுக்கும் நம்பிக்கையீனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கான முதற்புள்ளியாகவும் அமைகிறது. இனி எதையும் சீராகச் செய்வதற்கு, பொறுப்போடு செய்வதற்கு, தவறுகளற்றுச் செய்வதற்குரிய நிலையொன்றை இது உருவாக்குகிறது.

பொறுப்புக்கூறல் என்பதன் இன்னொரு அர்த்தம் நடைமுறையை நோக்கி, அமூலாக்கத்தை நோக்கி நகரத் தொடங்கிவிட்டதாக அமையும். மேலும் இது உண்மையை – நம்பிக்கையை நிரூபிக்க வேண்டிய ஒரு நிலையையும் உண்டாக்குகிறது.

இத்தகைய செயல்களும் நிலையும் மாண்புடையவை. மாண்புக்குரிய செயல்களிலிருந்தே புதிய தொடக்கங்களை ஏற்படுத்த முடியும். மாண்புடைய செயல்களின் மூலமாகவே உலகத்தின் மாற்றங்களும் திருப்பங்களும் நிகழ்ந்திருக்கின்றன. வரலாற்று இயக்கமே மாண்புறு நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டதுதான்.

கடந்த காலத்தின் இருண்ட பக்கங்களிலிருந்து ஒளியுடைய புதிய திசைகளை நோக்கிப் பயணிப்பதற்கு, சுமையும் தடைகளும் நிரம்பிய மேடுபள்ளங்களிலிருந்து சமதளத்தில் சுமையற்றுப் பயணிப்பதற்கு இத்தகைய மாண்புடைய நிலை அவசியம்.

ஆகவே பொறுப்புக்கூறல் என்பது வெறுமனே வாய்ப்பாட்டுக்குரிய பதம் அல்ல. ஆனால், இலங்கையின் அரசியலில் பொறுப்புக்கூறல் என்பது கடினமானதாகவும் பலவந்தத்திற்குரிய ஒன்றாகவுமே உணரப்பட்டுள்ளது. குறிப்பாக சிங்களத்தரப்பு பொறுப்புக்கூறலை நிர்ப்பந்தத்தின் விளைவு என்றும் வெளித்தரப்பின் தலையீடும் நெருக்கடியும் என்ற உணர்ந்துள்ளது.

இதேவேளை தமிழ்த்தரப்போ இந்தப் பொறுப்புக் கூறல் என்பது முற்று முழுதாக பிறருக்கானது, எதிர்த்தரப்புக்கு, சிங்களத்தரப்புக்கானது என்றே கருதுகிறது. கடந்த காலத்தின் அத்தனை நிகழ்ச்சிகளுக்கும் நிலைமைகளுக்கும் நிகழ்காலத்தின் இறுக்கங்களுக்கும் சிதைவுக்கும் மறுதரப்பே, எதிர்த்தரப்பே, சிங்களத்தரப்பே என்று கருதுகிறது.

மேலும் தான் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பங்களையும் புனிதங்களையும் இந்தப் பொறுப்புக்கூறல் சிதறடித்துவிடும் என்றும் அது அச்சப்படுகிறது.

அதனால் இந்தப் பொறுப்புக்கூறலைச் சிங்களத் தரப்பே செய்ய வேண்டும் என்று அது கருதுகிறது. அல்லது இந்த நிலைப்பாட்டில் அது பிடிவாதமாக நிற்கிறது.

சிங்களத் தரப்போ பொறுப்புக்கூறல் என்பதை தோல்வியின் ஒப்புக்கொள்ளலாக, குற்றங்களில் அமிழ்வதாக, தூக்குமேடைக்கொப்பானதாக எண்ணுகிறது. மேலும் தன்னுடைய அதிகாரத்தின் பிடி தளர்ந்து விடும் என்றும் அது அச்சமடைகிறது.

இத்தகைய உளவியற் சிக்கலுக்குள்ளும் தவறான புரிதல்களுக்கும் உள்ளாகியுள்ளது பொறுப்புக்கூறல் என்ற இந்தப் பதம்.

பலவீனங்களைக் களைவதற்கான – தவறுகளையும் குற்றங்களையும் திருத்திக் கொள்வதற்கான ஒரு நல்வாய்ப்பாக அமைந்திருக்கும் இந்தப் பொறுப்புக்கூறல் என்ற நிலை இவ்வாறான தவறான புரிதல்களில்களினாலும் அணுகுமுறையினாலும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.

இந்த இடத்தில் சற்றுப் பின்னோக்கிச் சென்று நாம் சில உண்மைகளைப் பார்க்க வேண்டும்.

இலங்கையில் இன ஒடுக்குமுறை என்பது பகிரங்கமாகவே மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. இந்த இனஒடுக்குமுறையின் காரணமாக ஒரு பெரிய யுத்தமே நடந்துள்ளது. இந்த இனஒடுக்குமுறையில் தாராளமாகவே வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. போதாக்குறைக்குத் தாராளமாகவே யுத்தக்குற்றங்கள் நடந்துள்ளன.

இதைவிட இலங்கையின் அரசியலமைப்பு, அரசாட்சி முறை மற்றும் பொருளாதார அசமத்துவம், ஜனநாயக நெருக்கடி போன்ற காரணங்களினால் கிளர்ச்சிகளும் அதற்கெதிரான ஒடுக்குமுறையும் நடந்துள்ளது. வடக்குக் கிழக்கில் மட்டுமின்றி பல ஆயிரக்கணக்கான மக்களும் இளைஞர்களும் பத்திரிகையாளர்களும் ஜனநாயக விரும்பிகளும் அரசியற்தலைவர்களும் போராட்டத்தலைவர்களும் தெற்கிலும் கொல்லப்பட்டுள்ளனர்.

இதைப்போன்று இலங்கை அரசாங்கத்தினால் மட்டுமன்றி, சிங்களத் தரப்பினால் மட்டுமன்றி தமிழ்த்தரப்பில் ஏராளம் வன்முறைகளும் உள்மோதல்களும் அவற்றின் விளைவான உட்காயங்களும் சிதைவுகளும் கண்ணீரும் குற்றங்களும் தவறுகளும் தாராளமாகவே உண்டு.

இயக்கங்களின் மோதல், ஜனநாயக மறுப்பு, படுகொலைகள், நீதியற்ற தண்டனைகள், தவறான வழிமுறைகள் என எண்ணற்ற குற்றங்களும் குறைபாடுகளும் தமிழ்த்தரப்பிலும் உண்டு. முஸ்லிம்களின் மீதான அதிகாரப் பிரயோகத்திலிருந்து சாதி ஒடுக்குமுறை வரை ஏராளம் குற்றங்களுக்கும் தவறுகளுக்கும் பின்னடைவுகளுக்கும் தமிழ்ச் சமூகமும் தன்னுடைய பொறுப்புக்கூறலைச் செய்ய வேண்டும்.

குற்றங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் விடுபட வேண்டுமாயின் முதலில் அவற்றைப் பொறுப்பெடுக்கும் மனப்பாங்கும் பண்பும் உருவாக வேண்டும். அதையே பொறுப்புக்கூறல் வலியுறுத்துகிறது. குற்றங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் விடுபட்டாலே – பொதுவெளியொன்றுக்கு வந்தாலே புதியனவற்றைப் பற்றிச் சிந்திக்கலாம். புதிதாக எதையும் செய்யலாம்.

ஆகவே, அமைதிக்கும் சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான வாசலை பொறுப்புக்கூறல் என்ற சாவியே திறக்கிறது.

ஆனால், இதுவரை அப்படியான நிகழ்வுகள் எதுவும் நடந்திருக்கிறதா?

இலங்கையில் எந்தக் கட்சி தன்னுடைய அரசியற் தவறுகளுக்காக – நடைமுறைப் பிறழ்வுகளுக்காகப் பகிரங்கமாகவே மன்னிப்பைக் கேட்டுள்ளது? வரலாற்றின் முன்னே தன்னுடைய குறைபாடுகளை எந்தத் தரப்பு ஒத்துக் கொண்டிருக்கிறது.

பாரம்பரிய அரசியற்கட்சிகளிடம் இதை எதிர்பார்க்க முடியாது. அவை சீரழிவுக் கலாச்சாரத்திலேயே தமது அரசியல் அடித்தளத்தை நிர்மாணித்திருப்பதால் அவற்றிடம் இதை எப்படி நீங்கள் எதிர்பார்க்க முடியும்? என ஒரு நண்பர் கேட்கிறார்.

நண்பருடைய வாதத்தில் நியாயமுண்டு. ஆனால், பொதுத்தளமொன்றிற் செயற்படும் எவரையும் வரலாறு அதற்குரிய அடிப்படையில் விசாரணைக்குட்படுத்தும். அந்த விசாரணைக்கான பதிலைச் சொல்ல வேண்டிய பொறுப்பிலிருந்து தப்பிவிட யாரும் முடியாது. வேண்டுமானால், இந்த விசாரணைக்காலத்தை ஒத்தி வைக்கலாம். அல்லது நீடித்துச் செல்லலாம். ஆனால், அதற்கும் ஒரு எல்லையுண்டு.

இதேவேளை புரட்சிகர இயக்கங்கள், இயக்கங்களின் வழியாக வந்த அரசியற்தரப்புகள், அவற்றின் தலைமைகள் எவையும் இதுவரையில் தமது தவறுகளைக் குறித்துப் பொறுப்புச் செல்லும் மனநிலைக்கு வந்துள்ளனவா?

அல்லது இலங்கை இனப்பிரச்சினையிலும் அதன் விளைவான போரிலும் இலங்கையின் அரசியலிலும் தலையீடுகளையும் செல்வாக்கினையும் செலுத்திய இந்தியா தொடக்கம் அமெரிக்கா வரையான சிறிதும் பெரிதுமான நாடுகள் தங்களின் செயற்பாடுகளினால் ஏற்பட்ட விளைவுகளுக்குப் பொறுப்புக்கூறத் தயாரா?

மேலும் ஊடகங்கள், மதபீடங்கள், மதத்தலைவர்கள், கலைஞர்கள், படைத்தளபதிகள், அரச அதிகாரிகள் எனப் பலரும் தங்களுடைய இதயங்களைக் கழுவுவதற்குத் தயாரா?

பொறுப்புக்கூறல் என்பது எல்லோருக்குமானதே. அது தனியே ஏதோ ஒரு தரப்புக்கானது மட்டுமல்ல.

யுத்தத்தை நடத்தியோருக்கும் அதை ஆதரித்தோருக்கும் அதற்கு உதவியோருக்கும் அதை விரும்பியோருக்கும் பொறுப்புக்கூறவேண்டிய பொறுப்புண்டு.

யுத்தத்தின்போது சனங்கள் கொல்லப்படுகிறார்கள் என்று தெரிந்து கொண்டே அதற்கான நடவடிக்கையை எடுக்கத்தவறிய சர்வதேச சமூகத்துக்கும் பிராந்திய சக்திகளுக்கும் தொண்டர் அமைப்புகளுக்கம் ஐ.நாவுக்கும் பொறுப்புக்கூறவேண்டியதில் பொறுப்புண்டு.

ஏனெனில் சனங்கள் முதலில் தலைவர்களை நம்புகிறார்கள். தாங்கள் நம்புகின்ற தலைமைகளும் தரப்புகளும் அவர்களைக் கைவிடும்போது அவர்கள் வெளியுலகை நம்புகிறார்கள். பின்னர் சர்வதேச சமூகத்தை – ஐ.நா.வை எதிர்பார்க்கிறார்கள். அவர்களுடைய குரலும் கோரிக்கையும் அப்படித்தான் அமைகின்றன.

இது உலகப் பொது நிலை.

இலங்கையிலும் இதுதான் நடந்தது.

ஆனால்?

எவரும் சனங்களைப் பொறுப்பெடுக்கவேயில்லை. அவர்களுடைய இன்னல்களிலிருந்தும் அவர்களுடைய நெருக்கடிகளிலிருந்தும் அவர்கள் சந்தித்த அபாயங்களிலிருந்தும் யாரும் அவர்களைப் பொறுப்பெடுக்கவேயில்லை.

அப்படிப் பொறுப்பெடுக்காதோரும் சனங்களின் இன்னல்களுக்கம் நெருக்கடிகளுக்கும் பொறுப்பானவர்களும் நிச்சயமாக இன்று பொறுப்புக்கூறியே ஆகவேண்டும்.

பொறுப்புக்கூறல் என்பதிலிருந்தே இனி நாம் எதையும் தொடங்கவும் தொடரவும் முடியும். பொறுப்புக்கூறாத எவரும் வரலாற்றுப் பாத்திரத்திற்குரியவர்களல்ல. இதை மீண்டும் மீண்டும் வரலாறு திரும்பத்திரும்ப நிரூபித்தே வருகிறது.

0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB