கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

‘மனிதாபிமானி’யின் கண்களில் பாதிக்கப்பட்ட மக்களின் முகங்களே தெரியும்

Wednesday 4 April 2012

நேர்காணல் -


கனடாவிலிருந்து வன்னிக்கு வந்து மனிதநேயப் பணிகளைச் செய்து கொண்டிருக்கிறார் ‘சரா மாஸ்ரர்’ என்றழைக்கப்படும் எஸ். சரத்சந்திரன். இவர் எஸ்.பொ. என்று இலக்கிய உலகத்தினராற் கூறப்படும் ஈழத்தின் முக்கிய எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரையின் சகோதரர். அண்மையில் விபத்துக்குள்ளாகி, இன்னும் சீராக நடமாட முடியாத நிலையில் ஊன்றுகோலின் உதவியுடன் நடமாடும்; சரா, வன்னியின் புழுதித்தெருக்களில் உற்சாகமாகத் திரிந்து, தொண்டுப் பணிகளைச் செய்து கொண்டிருக்கிறார். குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் முத்தையன்கட்டுப் பகுதியில் இயங்குகின்ற ‘புனித பூமி’ என்ற அன்புச்சோலை சிறுவர் பராமரிப்பு இல்லத்தின் சிறார்களுக்கான பணிகளில் தன்னை முழுமையாகவே இணைத்துள்ளார் சரா.


இது ஒரு மாறுதலான விசயம். போருக்கு அளித்த உற்சாகத்தைப் போர் முடிந்த பின்னர் உருவாகியிருக்கும் உதவிக்கான சூழலில் புலம்பெயர் சமூகத்தினர் அளிக்கவில்லை என்று கூறப்படும் நிலையில், சரத்சந்திரனின் முயற்சி நிச்சயமாக வித்தியாசமான ஒன்றே.


தான் மட்டுமில்லாமல், புலம்பெயர் தேசத்திலிருந்து இன்னும் பலரும் வன்னிக்கு வர வேண்டும், அவர்களுடைய பணிகளையும் பங்களிப்பையும் அதிகரிக்க வேண்டும் என்று அழைத்துக் கொண்டிருக்கிறார் சரா. ‘உதவி செய்வதற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருப்பதற்கும் எதற்கு விவாதங்கள்? மனிதாபிமானத்தை விவாதப்பொருளாக்கும் சமூகமாகத் தமிழ்ச் சமூகம் மாறியிருப்பது வருத்தத்திற்குரியது’ என்கிறார் சரத்சந்திரன். முப்பது ஆண்டுகாலப்போரின்போது சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் ஆற்றிவரும் பணிகளைப் பெற்ற தமிழ்ச் சமூகம் அந்த உதவிப் பணிகள் பிற நாடுகளிலுள்ள பிற இனத்தவர்களின் பங்களிப்பாகும். அவர்கள் அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடந்த இழுபறிகள் - சிக்கல்களின் மத்தியில் தங்களுடைய பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். அவர்களுடைய கண்களுக்குத் தெரிந்ததெல்லாம் அதிகார அமைப்புகளல்ல. பதிலாக பாதிக்கப்பட்ட – நெருக்கடி நிலையிலிருந்த மக்களே. ஆகவே ஒரு மனிதாபிமானியின் கண்ணில் பாதிக்கப்பட்ட மக்களின் முகங்களே தெரியும் என்று சொல்லும் சரா வை சந்தித்தேன்.

நீங்கள் கனடாவிலிருந்து வன்னிக்கு அல்லது இலங்கைக்கு வந்த நோக்கம்? எப்போது வந்தீர்கள்?

நான் கடந்த ஆண்டில் இலங்கைக்கு வந்திருந்தேன். போர் முடிந்த பிறகு, அங்கே என்ன நிலைமை? மக்கள் என்ன செய்கிறார்கள்? யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சந்தித்திருக்கும் மக்களுக்கு எங்களால் என்னவகையான உதவிகளைச் செய்ய முடியும்? என்று அறிவதற்காக சில நண்பர்கள் வந்திருந்தார்கள். அவர்களுடன் நானும் வந்திருந்தேன். முக்கியமாக முல்லைத்தீவு மாவட்டத்தில், முத்தையன்கட்டு என்ற இடத்தில் ஆதரவு தேவைப்படும் சிறார்களைப் பராமரிக்கும் ‘புனித பூமி – அன்புச்சோலை’ என்ற சிறுவர் இல்லத்தின் மீளாரம்ப நிகழ்வில் கலந்து கொள்வதும் எங்களுடைய நிகழ்ச்சி நிரலில் இருந்தது.

வந்து இங்குள்ள (வன்னியிலுள்ள) நிலைமைகளைப் பார்த்தேன். அதை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு எங்களுடைய மக்கள் சிதைந்து போயிருக்கிறார்கள். பிரதேசங்கள் அழிந்து போயுள்ளன. சமூக அடிக்கட்டுமானமே தகர்ந்து போயிருக்கிறது. அடையாளங்களை பிரதேசங்கள் மட்டும் இழந்து விடவில்லை. மக்களும் இழந்திருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை இழந்து விட்டது. மக்கள் மிகவும் சிரமங்களோடு, சலிப்போடு காணப்பட்டனர். இந்த நிலையில் நம்பிக்கையையும் எதிர்காலம் பற்றிய கனவையும் ஒரு சமூகம் இழக்கவே கூடாது என எண்ணினேன். அப்படியென்றால், அவர்களுக்கு நாங்கள் ஆதரவாக இருக்க வேணும். உதவியாக இருக்க வேணும் என்று யோசித்தோம். என்னுடன் வந்திருந்த ஏனைய நண்பர்களின் நோக்கமும் இதுதான். எனவே நாங்கள் இதைப் பற்றி எங்களுக்குள் கதைத்தோம். அதிலும் சிறார்களின் கல்வியைப் பற்றியே நாங்கள் அதிக கவனமெடுத்துக் கதைத்தோம். நான் ஒரு ஆசிரியனாக என்னுடைய வாழ்வில் தொழில் செய்தவன் என்ற வகையில் இளம்பிராயத்தினர் நிச்சயமாகக் கல்வி அறிவைப் பெற வேண்டும் என்று விரும்பினேன். இளமையிற் கல்வியை இழந்தவர்கள் பின்னர் அதைப் பெறுவது மிகக் கடினமானது. கல்வியை இழந்தவர்களால் சமூகத்தில் போட்டியிடுவதும் நிலைப்படுத்திக் கொள்வதும் பெரும் சிரமத்துக்குரிய விசயம். எனவே இதைக் குறித்துச் சிந்தித்தேன். ஏனையவர்களின் விருப்பமும் நிலைப்பாடும் அதுவாகவே இருந்தது. ஆகவே நாங்கள் ‘புனித பூமி – அன்புச்சோலைச் சிறுவர் இல்லத்தை’ மையப்படுத்தி எங்களுடைய முதற்கட்டப்பணிகளை மேற்கொள்வது, அதற்கு முழுமையான ஆதரவை வழங்குவது என்று தீர்மானித்தோம்.

நாங்கள் புனிதபூமி – அன்புச் சோலைச் சிறார் இல்லத்தின் மீள் திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டபோது 48 பிள்ளைகள் அங்கே இணைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் நிலைமையை நேரிற்பார்த்தேன். போர் தின்ற சமூகத்தின் எச்சங்களாக, தங்களைக்குறித்து எதையுமே சிந்திக்க முடியாதவர்களாக, இதயத்தைப் பிழியும் வகையில் அவர்களிருந்தனர். அந்த நிகழ்வில் ஒரு மாணவர் உரையாற்றினார். அவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே படித்துக் கொண்டிருந்தார் என்று சொன்னார்கள். ஆனால், அவர் முன்னர் - யுத்தகாலத்தில் இந்தப் புனித பூமி அன்புச்சோலை சிறார் இல்லத்திலே தங்கிப் படித்தவர். எனவே மீண்டும் அந்தச் சிறார் இல்லத்தை, தன்னைப்போல ஆதரவு தேவைப்படும் சிறார்களுக்காக ஆரம்பிப்பதற்காக பாடுபட்டுக்கொண்டிருந்தார். இந்த நிலையில் அந்தச் சிறார் இல்லம் வடக்குக் கிழக்கு அபிவிருத்திப் புனர்வாழ்வு மையத்தினால் மீளவும் ஆரம்பிக்கப்படுவது, அவருக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தது. எனவே, அவர் இந்தச் சிறார் இல்லத்தின் பங்களிப்பைப் பற்றியும் அதனால் தங்கள் அடைந்த நன்மைகளைப் பற்றியும் அங்கே எடுத்துச் சொன்னார். குறிப்பாக போரின் இறுதி நாட்களில் தாங்கள் பட்ட சிரமங்களையெல்லாம் அவர் சொன்னபோது அங்கே, அந்த ஆரம்ப நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரும் கண்ணீர் சிந்தினார்கள். அந்த அளவுக்கு அந்தப் பிள்ளைகளின் இறுதிக் கணங்கள் இருந்தன. இதையெல்லாம் பார்த்தபோது நான் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்திருந்தேன்.

ஏனென்றால், நாங்கள் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவளித்தவர்கள். இதற்காக என்னுடைய குடும்பமே ஒரு காலத்தில் முழுமையாகப் பங்களித்தது. அப்படிப் பங்களித்தவர்கள், இந்தப் போராட்டத்தையும் போரையும் ஆதரவளித்தவர்கள் நிச்சயமாக இன்றைய நிலையில் அதனால் பாதிக்கப்பட்ட மக்களையும் பாதுகாக்க வேண்டும். அவர்களுக்கு ஆதரவளித்து அவர்களுடைய வாழ்க்கையைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று தீர்மானித்தேன். இந்த எண்ணத்துடன் நான் மீண்டும் கனடாவுக்குத் திரும்பிச் சென்றேன். அங்கே என்னுடைய குடும்பத்துக்கு நிலைமைகளைத் தெளிவு படுத்தினேன். பிறகு சில நண்பர்களுடனும் பேசினேன். அங்குள்ள சில ஊடகங்களிலும் இந்த நிலைமைகளைக் குறித்து வெளிப்படுத்தினேன். குறிப்பாக கனடாவிலிருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிகையில் இந்த நிலைமைகளைப் பற்றி, வன்னியிலுள்ள மக்களின் தேவைகளைப் பற்றியெல்லாம் தொடராக எழுதினேன். அதற்கு உரிய வரவேற்புக் கிடைத்தது. கனடாவில் இந்த விசயத்தை அறிந்த பலர் உதவ முன்வந்தனர். மக்களிற் பலருக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மனமுள்ளது. ஆனால் அவர்களுக்கு வழிகளைத் தெரியவில்லை. அத்துடன் புலம்பெயர் நாடுகளிலுள்ள இன்னொரு சாபக்கேடு. பொய்களையும் வதந்திகளையும் பரப்புகின்ற சிலரும் சில ஊடகங்களும் மக்களுக்குக் குழப்பமான செய்திகளைப் பரப்புகின்றனர். இதனால், உதவும் விருப்பத்தோடு உள்ள மக்கள் குழப்பத்துக்குள்ளாகின்றனர்.

எனவே, அங்கேயிருந்து எம்மைப்போன்ற சிலர், அங்கிருந்து வரக்கூடியவர்கள் இங்கே நேரில் வந்து நின்று சேவையாற்றும்போது அது அங்குள்ள மக்களுக்கு ஒரு நம்பிக்கையையும் தெளிவையும் தரும் என்றும் சிந்தித்தேன். இதனால் இங்கே வந்து இப்போது பணிகளைச் செய்து கொண்டிருக்கிறேன்.

உங்களுடைய இந்தத் தீர்மானத்தை உங்களுடைய குடும்பத்தினர் எப்படி எடுத்தார்கள்? உங்களுடைய தொழில் மற்றும் வருமானம் போன்ற விசயங்களை இது பாதிக்கவில்லையா?

பாதிப்புத்தான். ஆனால், என்னையும் விடப் பாதிக்கப்பட்ட மக்கள் இங்கே (வன்னியில்) இருக்கிறார்கள். ஆகவே இதுதான் என்னைப் பாதித்தது. இதுவே எனக்கு முக்கியமாகப் பட்டது. அங்கே (கனடாவில்) என்னுடைய குடும்பம் நிலைமைகளைச் சமாளித்துக் கொள்ளக்கூடிய அளவுக்குள்ளது. பிள்ளைகள் ஓரளவுக்கு வளர்ந்துள்ளனர். இதனால் என்னுடைய நிலைப்பாட்டைப் புரிந்து கொண்டு என்னுடைய தீர்மானத்துக்கு ஆதரவைத்தந்தார்கள். அவர்கள் அங்கே தங்களுடைய தேவைகளைச் சமாளித்துக் கொள்வதாகச் சொன்னார்கள். ஆகவே நான் இங்கே (வன்னிக்கு) வந்தேன்.

இதேவேளை அங்கே இருந்து பணத்தை அனுப்பலாம். ஆனால், அது மட்டும் போதாதென்று உணர்ந்தேன். என்னைப்போல எல்லோருக்கும் இங்கே வந்து சேவையாற்றுவது சாத்தியப்படாது. அப்படியானவர்கள் பொருளாதார உதவிகள், பிள்ளைகளின் கற்றலுக்கும் பராமரிப்புக்கும் தேவையான உதவிகள் போன்றவற்றைச் செய்யலாம்.


உங்களுடைய குடும்பத்தினருக்கு இந்த இடத்தில் நன்றிகளைச் சொல்ல வேணும். ஏனென்றால், அவர்களுடைய ஒத்துழைப்பில்லாமல் நீங்கள் இந்தப் பங்களிப்பை முழுமையாகச் செய்ய முடியாது. அதேவேளை நீங்கள் முதற்தடவை இங்கே வந்ததற்கும் பின்னர் இப்போது வந்துள்ளதற்கும் இடையில் என்னவகையான மாற்றங்களை – வளர்ச்சிகளை உணர்கிறீங்கள்?

அன்புச்சோலையைப் பொறுத்தவரையில் முன்னர் இருந்த நிலைமைக்கும் இப்போதுள்ள நிலைமைக்கும் இடையில் பெரும் வேறுபாடுகள் உண்டு. இப்பொழுது 100 பிள்ளைகள் வரையில் உள்ளனர். பிள்ளைகளுக்குத் தேவைப்படும் உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான பண்ணை இயங்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த போகத்திற் பண்ணையில் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கை மிகப் பயனைத்தந்துள்ளது. மரக்கறிப் பயிர்ச்செய்கை நடக்கிறது. மாடுகள் வளர்க்கிறோம். இது பிள்ளைகளுக்கான பாலையும் ஓரளவு வருமானத்தையும் தரக்கூடியதாக உள்ளது. மேலும் இரண்டு மாடுகளை வாங்கித்தருவதாக இதைப் பார்த்த லண்டன் வாழ் நண்பர் ஒருவர் கூறியுள்ளார்.

கோழிப்பண்ணையையும் அமைத்துள்ளோம். பிள்ளைகளுக்குத் தேவையான முட்டையை இதிலிருந்து பெறுவதுடன் இறைச்சித்தேவையையும் பூர்த்தி செய்து கொள்கிறோம். இல்லையென்றால் ஒரு நாள் உணவுக்கான கோழியை வெளியே இருந்து பெறுவதாக இருந்தால் அறுபது ஆயிரம் ரூபாய் தேவைப்படும். எதிர்காலத்தில் கோழியையும் முட்டையையும் நாம் வருவாயை நோக்கிச்  சந்தைப்படுத்தவும் முடியும். இந்தப் பண்ணைத்திட்டத்தில் பலருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. இதில் நீங்கள் ஒன்றைக் கவனிக்கலாம். இந்தப் பண்ணைகளில் வேலைசெய்யும் மக்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்குரிய வேலைவாய்ப்பையும் நாங்கள் வழங்கியுள்ளோம். அப்படியே சிறார் இல்லத்தைப் பராமரிப்பதிலும் பலர் வேலைவாய்ப்பைப் பெற்றுச் சேவை செய்கின்றனர்.

நிரந்தர உதவியாளர்கள், சிறப்பு உதவியாளர்கள், பருவகால உதவியாளர்கள் என ஒவ்வொரு வகையிலும் பலரும் அன்புச்சோலைக்கு உதவி வந்தாலும் பிள்ளைகளுக்கான நிரந்தர வருமானத்திட்டத்தைப் பற்றியும் இதனுடைய நிர்வாகிகள் சிந்தித்திருப்பது வரவேற்கத்தக்கது. இது பிள்ளைகளுடைய அனுபவத்துக்கும் நல்லது.

இதேவேளை அன்புச்சோலையில் இப்பொழுது 30 வரையான பெண்பிள்ளைகளும் கற்கின்றனர். பெண்களுக்கான விடுதி – விரைவில், அநேகமாக எதிர்வரும்  ஏப்ரல் மாதத்தில், பாரதி இல்லம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அவர்கள் அங்கே சென்றபின்னர் இன்னும் பல ஆண் சிறார்கள் அன்புச்சோலையில் இணையமுடியும். சமூகத்தில் ஏராளம் பிள்ளைகள் பராமரிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளனர். இதேவேளை புதிய கட்டிடங்கள் தேவை. பிற வளங்களும் அவசியமாக உள்ளன. சில நண்பர்களின் உதவியினால் ஒரு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மேலும் நிறையத் தேவைகள் உள்ளன. குழந்தைகள் வளரும் இடமல்லவா! அவர்களுடைய மகிழ்ச்சிக்கும் அறிவு வளர்ச்சிக்கும் பல காரியங்களைச் செய்ய வேணும்.

இதேவேளை முன்னர் நான் வந்த பார்த்ததையும் விட இப்பொழுது நிலைமைகள் சற்று மாற்றமடைந்துள்ளன. ஆனால், இந்த மாற்றங்கள் மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்குப் போதாது. நிறையப் பங்களிப்புகள் தேவைப்படுகின்றன. நான் முன்னரே சொல்லியிருப்பதைப்போல முற்றாகவே சிதைந்த சமூகத்தையும் பிரதேசங்களையும் நினைத்த மாத்திரத்தில் சீர்ப்படுத்தி விட முடியாது.

வன்னி மக்கள் மிகுந்த உழைப்பாளிகள். எந்தச் சிரமத்தையும் தாங்கிக் கொண்டு முன்னே செல்லக்கூடியவர்கள். அன்புச்சோலை என்ற இந்த இல்லத்தைக்கூட அவர்கள் கட்டியெழுப்புவதற்காகப் பாடுபடுகிறார்கள்.

இந்த மக்களுக்கு நாங்கள் உதவிகளைச் செய்தால், எங்களுடைய ஆதரவை ஒரு குறிப்பிட்ட காலம்வரையில் வழங்கினால் அவர்கள் மிக விரைவாகத் தங்களை நிலைப்படுத்திக் கொள்வார்கள். அரசாங்கத்தின் உதவிகளும் நிறையத்தேவைப்படுகின்றன. இலங்கை அரசுக்கு இந்த விசயத்தில் கூடுதற் பொறுப்புண்டு. ஆகவே, அதற்கான ஏற்பாடுகளையும் சம்பந்தப்பட்டவர்கள் செய்ய வேண்டும்.

கனடாவில் அதிகளவு புலம்பெயர் தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய பங்களிப்பு இந்த விசயத்தில் எப்படியுள்ளது? அவர்களுடைய நிலைப்பாடுகள் எப்படியிருக்கின்றன?

கூடுதலான புலம்பெயர் தமிழர்கள் கனடாவிற்தான் இருக்கிறார்கள். தமிழர்களிடம் இருக்கிற குறைபாடு அவர்களிற் பெரும்பாலானவர்கள் சுயமாகச் சிந்திப்பது குறைவு. யாராவது எதையாவது சொன்னால், அதைக் கண்மூடித்தனமாக நம்பிவிடுவார்கள். இதற்குக் கனடா வாழ் தமிழர்களும் விதிவிலக்கல்ல. இதனால், அங்கே தவறான அபிப்பிராயங்களை உருவாக்குவோருக்கும்  ஊடகங்களுக்கும் பின்னால் இழுபடுகின்ற ஒரு நிலை இன்னும் உள்ளது. இந்தநிலை மாறவேண்டும்.

மக்கள் சுயமாகச் சிந்திக்கப் பழக வேண்டும். எதையும் ஆராய்ந்து அறியும் பண்பு வளரவேணும். பாதிக்கப்பட்ட மக்கள் யார்? அவர்கள் எதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்? இப்போது இந்தப் பாதிப்பிலிருந்து அவர்கள் எப்படி மீள்வது? அதற்கு யார் உதவுவது? எங்களுக்கு அந்தப் பொறுப்புகளில்லையா? நாங்கள் உதவாமல் இருந்து கொண்டு, பிறரை உதவும்படி கேட்பது எவ்வளவுக்கு நியயமானது? பிற உதவிகளின் அளவு போதுமானதா? இப்படியான கேள்விகளை ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளே கேட்கவேண்டும்.

இங்கே பாதிக்கப்பட்டுள்ள மக்கள் போராட்டத்துக்காக முழுமையாகப் பங்களித்தவர்கள். அதேவேளை அவர்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுமிருக்கிறார்கள். ஆகவே இவர்களைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு புலம்பெயர் தமிழர்களுக்கு நிச்சயமாக உள்ளது. மற்றது இவர்கள் வேறு யாருமல்ல. எங்களுடைய உறவினர். எங்களுடைய அயலவர்கள்.

அடுத்தது, நீங்கள் கேட்டதைப்போல அங்குள்ள மக்களின் பங்களிப்பைப் பொறுத்தவரையில் நாம் எதிர்பார்க்கிற புள்ளிவிபரத்தில் உதவிகள் கிடைக்கவில்லை என்பது உண்மை. ஆனால், தெளிவுள்ளவர்கள், நிலைமைகளைக் கூர்ந்து அவதானிப்போர் உதவுகிறார்கள். மகிழ்ச்சியளிக்கும் விதமாக இந்தப் புள்ளிவிபரம் அதிகரித்து வருகிறது. ஆனால், இன்னும் படித்த மட்டத்திலேயே – அங்கே மருத்துவர்களாக, மேல் நிலைப்பதவிகளில் இருப்போர் - குழப்பமானவர்கள் அதிகமாக உள்ளனர். இவர்கள் உதவ முன்வருவோரைக் குழப்பித் திசைதிருப்பி விடுகின்றனர்.

முப்பது ஆண்டுகாலப்போரின்போது சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் ஆற்றிவரும் பணிகளைப் பெற்றது தமிழ்ச் சமூகம். அந்த உதவிப் பணிகள் பிற நாடுகளிலுள்ள பிற இனத்தவர்களின் பங்களிப்பாகும். அவர்கள் அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடந்த இழுபறிகள் - சிக்கல்களின் மத்தியிலும் தங்களுடைய பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். அவர்களுடைய கண்களுக்குத் தெரிந்ததெல்லாம் அதிகார அமைப்புகளல்ல. பதிலாக பாதிக்கப்பட்ட – நெருக்கடி நிலையிலிருந்த மக்களே. ஆகவே ஒரு மனிதாபிமானியின் கண்ணில் பாதிக்கப்பட்ட மக்களின் முகங்களே தெரியும். இதை நாங்கள் புரிந்து கொள்வது அவசியம்.

உதவும் மக்களுக்குத் தொலைபேசி எடுத்து அவர்களுக்கு இல்லாத செய்திகளை எல்லாம் சொல்வோரும் அங்கே உள்ளனர். ஆனால் இவ்வாறான எதிர்ப்புகளின் மத்தியிலும் பலரும் உதவ முன்வருகிறார்கள். சிலருக்கு தாங்கள் எப்படி, யார் மூலமாக உதவுவதென்று தெரிவதில்லை. அதற்குத்தான் எம்மைப்போன்றவர்களின் இத்தகைய முன்மாதிரியான பங்களிப்புகள் தேவைப்படுகின்றன.

இதைச் சற்றுத் தெளிவாகச் சொல்லுங்கள்?

நான் இந்த அன்புச்சோலை சிறார் இல்லத்துக்கு வந்து வேலைசெய்கிறேன். இதேவேளை என்னுடைய மகன் அமெரிக்கச் சட்டத்துக்குக்கு மாறாக, சட்டவிரோதமாகச் செயற்பட்டார் என்று குற்றச்சாட்டின் பேரில் - இந்தப் போராட்டத்துக்கு உதவிசெய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் - அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுச் சிறையிலிருக்கிறார். அப்படியிருக்கும்போதும், குடும்பத்தின் நிலை, அதனுடைய பொருளாதாரப் பிரச்சினை போன்றவற்றுக்கு அப்பாலும் நான் இங்கே வந்திருப்பதை அறிந்தவர்கள் இந்தப் பணியையும் என்னுடைய நோக்கத்தையும் மதித்துத் தாங்களும் உதவ வேண்டும் என்று முன்வந்திருக்கிறார்கள். இது அங்குள்ள மக்களிடம் ஒருவிதமான விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

இதேவேளை நீங்கள் செய்கின்ற உதவிகள் அப்படியே அன்புச்சோலையில் உள்ள பிள்ளைகளுக்கு நேரடியாகவே செல்கிறது. அதற்கான வழிமுறைகளும் ஏற்பாடுகளும் உள்ளன. இதற்கிசைவான ஒரு நிர்வாக ஏற்பாட்டை அன்பு இல்லத்திற் செய்திருக்கிறார்கள்.

அதைப்போல பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளைச் செய்வதற்கான வழிகளும் உள்ளன என்பதைத் தெளிவு படுத்தி வருகிறோம். அதற்கான ஆதாரங்களையும் வெளிப்படுத்தியுள்ளோம். இங்கே வந்து செல்கின்றவர்கள் நிலைமைகளையும் உண்மைகளையும் நேரிற் கண்டுகொண்டு செல்கிறார்கள். இங்குள்ள பணியாளர்களுடன் வருவோர் உரையாடுகிறார்கள். பிள்ளைகளுடன் கதைக்கிறார்கள். படங்களை எடுத்துச் செல்கிறார்கள். நிலைமைகளையும் தேவைகளையும் அறிந்து செல்கிறார்கள். விரைவில் பெண் பிள்ளைகளுக்கான பாரதி இல்லத்தை(செஞ்சோலை இல்லத்தை) ஆரம்பிக்கும் நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த இல்லம் முள்ளியவளையில் முன்னர் இயங்கி வந்த இடத்திலேயே இயங்கவுள்ளது. பிள்ளைகளைப் பராமரிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் சிறுவர் நன்னடைத்தைச் சட்டவிதிமுறைகள் உள்ளன. அதன்படியே – நீதிமன்றப் பதிவுகள் செய்யப்பட்டே பிள்ளைகள் சேர்த்துக்கொள்ளப்படவேண்டும்.

ஆனால், உங்களுடைய இந்த உதவிகளையும் இந்தச் செயற்பாடுகளையும் அங்கே வேறு தரப்பினர்கள் விமர்சனத்துக்குட்படுத்தவில்லையா? ஏனென்றால் இன்றைய புலம்பெயர் சூழல் என்பது அணிகளாகவும் பிரிவுகளாகவும் பிரிந்திருந்து போட்டி நிலைக்குள்ளாகியிருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. என்பதால் இவ்வாறு கேட்கிறேன்.

எல்லாவற்றுக்கும் விமர்சனங்கள் இருக்கும். அல்லது அப்படி விமர்சனங்கள் வரும். ஆனால், நான் ஒரு அரசியல்வாதியல்ல எல்லாவற்றுக்கும் போட்டி போடவும் மறுப்பு அறிக்கைகளை விடவும்.

நாங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வந்து உதவுகிறோம். அதுவும் பாதிக்கப்பட்ட குடும்பச் சூழலிலிருந்து. இதற்கு மேல் நான் எதைச் சொல்வது?



நீங்கள் வந்து செல்வதைப்போல வேறு எப்படியானவர்கள் வருகிறார்கள்?

வேறு பல நண்பர்களும் பிற நாடுகளில் இருந்து நேரில் வந்து உதவிகளைச் செய்து செல்கிறார்கள். நிறையப்பேர். ‘ஒரு நாள் உணவை வழங்குவதற்கான செலவை நான் பொறுப்பேற்கிறேன்’, ’30 பிள்ளைகளுக்கான விசேட உடைகளை நாங்கள் இருவர் பொறுப்பேற்கிறோம்’ என்றெல்லாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தேவைகளைப் பொறுப்பேற்க முன்வருகிறார்கள். இதெல்லாம் மேலும் பலருக்கும் நம்பிக்கையையும் விழிப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. இந்தச் செய்திகளை நாங்கள் பரவலாக்க வேண்டியுள்ளது.


அன்புச்சோலையில் நீங்கள் இருக்கும்போது எத்தகைய உணர்வைப் பெறுகிறீர்கள்?

நான் இந்த நாட்டிலே நீண்டகாலமாக ஆசிரியனாகத் தொழில் செய்தவன். பிள்ளைகளுடன், பாடசாலைகளுடன் நெருங்கிய உறவையும் பழகிய அனுபவத்தையும் கொண்ட ஒருவன். ஆனால், இன்று அதையெல்லாம் கடந்து இங்கே இந்தப் பாதிக்கப்பட்ட நிலையில், ஆதரவும் உதவியும் தேவைப்படுகின்ற இந்தப் பிள்ளைகளுடன் வாழ்வது என்பது என்வாழ்வில் எனக்குக் கிடைத்த கொடை என்றே சொல்வேன். இந்தப் பிள்ளைகளுடன் வாழ்வதிலும் இவர்களுக்கு உதவிகளைச் செய்வதிலும் நான் முழுமையான ஆன்ம திருப்தியை அடைகிறேன். என்னுடைய தேவை என்பது இந்தத் திருப்தியே.

இந்த உண்மையை - இந்த உணர்வை அனுபவிக்கும்போதுதான் தெரியும் அதனுடைய மகத்துவமும் மாண்பும். மக்கள் சேவை என்பது மகேசன் தொண்டு என்பதை உணர்ந்தே சொல்லியிருக்கிறார்கள். வேண்டுமானால் நேரிலேயே இங்கே வந்து பாருங்கள். உங்கள் மனக்கதவுகள் தானாகவே திறந்து கொள்ளும். உங்களின் கைகள் உதவுவதற்காக நீளும். உங்களின் கால்கள் ஆதரவு தேவைப்படுவோரை அரவணைக்க நகரும். அகவிழி திறக்கும்போதே மனிதன் மாண்படைகிறான் என்பார்கள். ஆனால், எங்களுடைய பெரும்பாலான உறவுகள் இணைய ஊடகங்களிற் சிக்குண்டுபோய்ச் சிறைப்பட்டிருக்கிறார்கள். விடுதலைக்காகப் போராடிய ஒரு சமூகம் இப்படி அறியாமைச் சிறையில் சிக்கியிருப்பது வேதனைக்குரியதே.


கனடாவில் நீண்டகாலம் வாழ்ந்து பழக்கப்பட்ட நீங்கள் இங்கே வந்து, இப்படி சீராக நடக்கவே முடியாத நிலையில் - ஊன்று கோலுடன் எப்படிச் செயற்படக்கூடியதாக உள்ளது?

கனடாவுடன் ஒப்பிடும்போது இங்கே ஐந்த வீத வசதிகள் கூட இல்லை. வசதி என்று பார்த்தால் மிகக்கடினம்தான். ஆனால், மற்றவர்களின் மகிழ்ச்சியில் தன்னை நிறைவாக்கிக்கொள்ளும் ஒரு இயல்பை வளர்த்துக்கொண்டால் இந்தச் சுமைகளும் வசதிக்குறைபாடுகளும் பெரிதாகத் தெரியாது.

மனிதனுக்கு இரண்டு விதமான ருஸிகள் உண்டென்பது என்னுடைய அவதானிப்பு. ஒன்று சேவையினால் ஏற்படுகின்ற ருஸி. மற்றது அதிகாரத்தினால் ஏற்படுகிறது ருஸி. சேவையாற்றுவதற்கு ஒருவர் முன்வந்தால் வசதிகளைத் துறக்க வேண்டும். அல்லது அதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. அதிகாரத்தின் ருஸியை விரும்புவோர் வசதிகளைக் கைவிட முடியாது. வசதியின் ருஸியே அதிகாரத்தின் ருஸியை விரும்புகிறது.

சரி இந்த நிலையில் நீங்கள் பொதுவாக என்ன சொல்ல விரும்புகிறீங்கள்?

இன்னும் உதவுவதைப் பற்றிச் சிந்திக்காதவர்கள் அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். இங்கே மக்களுக்கு ஏராளம் தேவைகளிருக்கின்றன. முக்கியமாக ஆறுதல் தேவைப்படுகிறது. இந்த மக்களின் நிலைமைகளை உணராமல் அங்கே இன்னொரு வகையான கற்பனை உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது இந்த மக்களுக்கும் உண்மை நிலைக்கும் இடையில் வேறுபடுத்தியே அவர்களை வைத்திருக்கும். அது எதிர்காலத்துக்கு நல்லதல்ல.

சுயநலப்போக்கையும் தப்பிக்கும் மனப்பாங்கையும் கைவிட்டு, உதவுவதற்கு முன்வரவேண்டும். உருவாக்கப்பட்டிருக்கும் பொய்யான திரைகளைக் கிழித்து உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல ஒரு கட்டமைப்பை நாம் உருவாக்க வேண்டும். அங்குள்ள மக்களிற் பலர் மிக நல்ல மனப்பாங்கைக் கொண்டவர்கள். ஆனால், அவர்கள் திசைதிருப்பப்பட்டுள்ளார்கள். பொய்யான பரப்புரைகளால். உண்மையை வெளிப்படுத்துவது ஆரம்பத்திற் கடினமாக இருந்தாலும் அது இலகுவானது. ஆனால், பொய்யுங்கு ஆயிரமாயிரம் அலங்காரங்கள் செய்ய வேண்டும். நாங்கள் உண்மையோடு நிற்பதால் எங்களின் பணிகள் வெளிப்படையானவையாக இருக்கின்றன. தெளிவாக உள்ளன.

புலம்பெயர் மக்களாக இருப்போரிற்பலர் இந்தியாவுக்குச் சென்று தல யாத்திரை எல்லாம் செய்கிறார்கள். அந்தப் பணத்தில் ஐந்தில் ஒரு பங்கைக் கொடுத்தாற் போதும் அன்புச்சோலையைப்போல இந்த மண்ணில் இருக்கும் எத்தனையோ இளஞ்சிறார்களின் எதிர்காலத்திற்கான பாதைக்கு ஒளியூட்டலாம்.

ஆகவே முடிந்தவரையில் எல்லோரும் வாருங்கள். வீழ்ந்து கிடக்கும் இந்த மக்களைத் தூக்கி விடுங்கள். கண்ணீருடன் நடுத்தெருவில் நிற்கும் இந்தப் பிள்ளைகளின் கண்ணீரைத் துடைத்து ஆதரவு கொடுங்கள் என்று கேட்கிறேன்.

முக்கியமாக சிறு பெண்பிள்ளைகள் இன்று மிகப் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தப் பிள்ளைகளின் மீதான கொடுமைகளைப் பற்றியும் இவர்கள் படுகின்ற அவலங்களைப் பற்றியும் தினமும் செய்திவழியே அறிந்து கொண்டிருக்கிறோம். பெற்றோரை இழந்த நிலையிலிருக்கும் இந்தப் பிள்ளைகளைப் பராமரித்து ஆளாக்குவது மிகப் பொறுப்புவாய்ந்த பணி. இது மிக முக்கியமான பணியும்கூட. பெண்களையும் சிறார்களையும் சிதையவிட்ட எந்தச் சமூகமும் முன்னோக்கி வளரமுடியாது. தன்னுடைய பண்பாட்டின் அடையாளத்தை அது இழந்தும் விடும். ஆகவே இந்த அபாயநிலையிலிருந்தெல்லாம் நாம் மீண்டெழவேண்டும். என்னைப் பொறுத்தவரையில் அவலப்பரப்பிலிலிருந்து மீளாதவரையில் நாம் யுத்தச் சூழலை ஒத்த நிலைமையிற்தான் இருப்போம்.

00

0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB