கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

இலங்கையின் பயணம்?

Saturday 7 April 2012




யுத்தத்திற்குப் பிறகு அதிக நெருக்கடிகளைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது இலங்கை. உள்நாட்டு யுத்தத்தை முறியடித்த அரசாங்கம், வெளி நெருக்கடிகளை முறியடிக்க முடியாமற் தவிக்கிறது. யுத்தத்தினால் பெற்ற வெற்றியைப்பாதுகாக்க முடியாத ஒரு நிலையை நோக்கிக் கொழும்பு சென்று கொண்டிருக்கிறது. 

அதனால் சமாதானத்தை எட்டவும் முடியவில்லை. புதிய பொருளாதாரத் திட்டங்களை உருவாக்கவும் முடியவில்லை. அரசியற் தீர்வை முன்வைக்கவும் இயலவில்லை. எந்தப் பாதையிலும் பயணத்தைத் தொடர முடியாத நிலையில் இறுகித் தேங்கிப்போயுள்ளது அரசாங்கம்.

கடந்த இரண்டாண்டுகளில் கொழும்பு கொண்டாடிய விழாக்களையும் அது அடைந்த பெருமிதங்களையும் நினைத்துப் பாருங்கள். இன்றைய நிலையையும் அவதானியுங்கள். 

இன்று முன்னாள் நண்பர்களுக்கு எதிராக மக்களை வைத்து ஆர்ப்பாட்டங்களைச் செய்யும் நிலைக்கு அரசாங்கத்தின் கொள்கை அமைந்திருக்கிறது. யுத்தத்தில் முக்கிய பங்கை ஆற்றிய – அன்று தோழமை கொண்டாடிய அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுக்கு எதிரான முழக்கங்கள் கொழும்பில் அதிர வைக்கப்பட்டுள்ளன. 

மேலும் முக்கியமான அமைச்சர்களே பதற்றத்துக்கும் நிதானமிழப்புக்கும் உள்ளாகியிருக்கின்றனர். கடந்த வாரத்தில் ஜீ.எல்.பீரிஸின் கூற்றையே அரசாங்கம் மறுத்துரைத்த நிகழ்ச்சிகூட நடந்தது. இவ்வளவுக்கும் ஜீ.எல். ஒரு மூத்த அமைச்சர். வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பானவர். பேராசிரியர். சர்வதேச அபிப்பிராயங்களை உருவாக்கவேண்டிய பொறுப்பான பணியில் உள்ளவர். 

இந்த நிதானமிழப்பிற்கெல்லாம் காரணம், அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளே. இந்த நெருக்கடிகளுக்கு முக்கிய காரணம் அரசாங்கத்தின் அணுகுமுறைகளும் தவறான நடைமுறைகளும் என்பதே பெரும்பாலானோரின் அபிப்பிராயம். எதிர்க்கட்சிகளின் அபிப்பிராயமும் இதுதான். ஏன், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றவர்களில் சிலர் கூட இத்தகைய அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கின்றனர். 

யுத்த வெற்றியானது தனியே கொழும்பின் செயற் திறனால் பெற்ற வெற்றியோ அல்லது இந்த அரசாங்கத்தின் விசேட திட்டங்களினால் பெற்ற வெற்றியோ அல்ல. அது இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல சக்திகளின் ஆதரவோடு கொழும்பு பெற்ற, இந்த அரசாங்கம் பெற்ற வெற்றி. 

கொழும்பு யுத்தத்தில் தனியே வெற்றிபெறக்கூடிய திட்டமிடலையும் விவேகத்தையும் கொண்டிருந்தால், அது யுத்தத்திற்குப் பின்னர் சமாதானத்தையும் பொருளாதார சுபீட்சத்தையும் பெறக்கூடிய வகையில் முன்னோக்கிய அடிவைப்புகளைச் செய்யக்கூடியதாக இருந்திருக்கும். அந்த தனித்த ஆளுமையும் அதற்கான அர்ப்பணிப்பும் இல்லை என்பதே உண்மையானது. 

ஆனால், ஜனாதிபதியும் அரசாங்கத்தின் தலைமைக் குழுவும் தங்களின் குறுகிய நிலைப்பாட்டில் விடாப்பிடியாகவே நிற்கின்றனர். அவர்கள் உள்ளுர் அபிப்பிராயங்களையும் பொருட்படுத்தத் தயாராக இல்லை. வெளி அபிப்பிராயங்களையும் பொருட்படுத்தக் கூடிய நிலையில் இல்லை. குறிப்பாக இந்த அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வரும் சீனா போன்ற நாடுகளின் அபிப்பிராயங்களையும் செவிகொள்ளத் தயாரில்லை.

அவர்களைப் பொறுத்தவரையில் பலவீனமான எதிர்க்கட்சிகளின் மத்தியில், பலமான பீடமொன்றைத் தாம் நிர்மாணித்துள்ளதாக நம்புகிறார்கள். உள்நாட்டில் உறுதி மிக்க அரசாங்கமாக, பெரும்பான்மை பலத்தைக் கொண்ட அரசாங்கமாக தாம் உள்ளோம் என்ற எண்ணத்தோடு இருக்கிறார்கள். இதில் உண்மையுண்டு. ஆனால், அரசியலில் எதுவும் நடக்கும் எந்தச் சந்தர்ப்பத்திலும் நடக்கும், எஎந்த வடிவிலும் அது நடக்கும் என்ற இன்னொரு உண்மையுமுண்டு.

இதன்படி எதிர்பாராத கோணமொன்றிலிருந்து ஒரு புதிய சக்தியை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஒன்று கூட உருவாகலாம். முக்கியமாக உள்நாட்டில் மக்களிடமுள்ள அதிருப்தியைப் பயன்படுத்தி, வெளிச் சக்திகளோ அல்லது உள்ளுர்ச் சக்திகளோ ஒரு புதிய தரப்பை அல்லது தலைமையை களமிறக்கலாம். 

பதிnனேழு ஆண்டுகால ஆட்சிக்கு முடிவுகட்டுவதற்கு யாருமே எதிர்பார்த்திராத ஒரு திசையிலிருந்து 1994 இல், சந்திரிகா குமாரதுங்க வந்து சேர்ந்ததை – அவரை இப்போதைய ஜனாதிபதி உட்பட்ட அணியினர் அரங்கிற்குக் கொண்டு வந்ததை இந்த இடத்தில் நினைவு கூரலாம். 

சந்திரிகா குமாரதுங்கவைக் கொண்டு வருவதற்காக அன்று விக்டர் ஐவன், பி.பி.ஸியில் ஊடகவியலாளராகப் பணியாற்றிப் பின்னர் ரூபவாகினியின் தலைவராக இருந்த வசந்தராஜா உள்ளிட்ட பலர் அணிசேர்ந்து உழைத்ததையும் இங்கே சேர்த்து நினiவு கூரவேண்டும். 

எனவே எதிர்ப்புகள் எப்படி வரும், எந்த நேரத்தில் வரும், எப்படி வரும் என்று சொல்லமுடியாது. அவை மக்களிடமுள்ள அதிருப்தியைத் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்பது மட்டும் கவனிக்க வேண்டிய உண்மை. 

ஒரு சுயாதிபத்தியமுள்ள நாடு, ஆளுமையுள்ள தலைமை, அரசியற் பலத்தை கொண்டிருக்கும் அரசாங்கம் எப்பொழுதும் இப்படித்தான் சிந்திக்கும். அது எதற்கும் அஞ்சாது என்று சொல்வோரும் இந்த இடத்தில் உள்ளனர். 

ஆனால், எதற்கும் யதார்த்தம் என்ற ஒன்றுண்டு. நாடு என்பதும் தலைமை என்பதும் அரசாங்கம் என்பது மக்களுக்கானதே அன்றி, அது தனியே ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கானதல்ல. 

பலம் என்பது கையில் இருக்கும் அதிகாரம் அல்ல. அது மக்களின் மனங்களில் உள்ள நம்பிக்கையே. 

ஆகவே, மக்களைக் குறித்து, மக்களின் எதிர்காலத்தைக் குறித்துச் சிந்திப்பதே ஒரு தலைமையினுடைய பொறுப்பாகும். ஒரு பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் இந்த அடிப்படையில் நின்றே சிந்திக்கும்@ செயற்படும். 

இதற்கப்பால், அது தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு அதிக இடமளிக்குமானால் அதனுடைய விளைவுகள் குறிப்பிட்ட தரப்புக்கும் நெருக்கடிகளை ஏற்படுத்தி, நாட்டுக்கும் அதனுடைய மக்களுக்கும் நெருக்கடிகளையே தரும். 

இலங்கையின் இன்றைய நிலைவரம் குறித்து மக்களிடம் திருப்தி இல்லை. வெளிச் சமூகத்திற்கும் திருப்தி இல்லை. இந்த வெளிச் சக்திகள் நல்நோக்கமுடையவையா என்ற கேள்வி ஒரு புறமிருந்தாலும், கடப்பாடுகள், பொறுப்புக்கூறுதல்கள், மனித உரிமைகளை நிலைநாட்டுதல், ஜனநாயகத்தைப் பேணல், அதிகாரத்தைப் பகிர்தல் என்ற விசயங்களில் எழுப்பப்படும் கேள்விகள் தொடர்பில் அரசாங்கம் உறுதிப்பாட்டைக் காட்டவேண்டுமே. அது இல்லை என்றால், அது அரசாங்கத்தின் பலவீனத்தையே காட்டும்.

உள்நாட்டில், யுத்த முடிவிற்குப் பிறகு அமைதியும் சமாதானமும் கிட்டும் என்று எதிர்பார்த்த மக்கள் இன்று புதியவகையான நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

பொருளாதார நெருக்கடிகள் தீவிரமாகியுள்ளன. விலைவாசிகள், வரிகள் கட்டுப்பாட்டை மீறி உச்சநிலையை எட்டியுள்ளன. அரசியற் பிரச்சினைகள் தீரவில்லை. அமைதியின் மீது சந்தேகப்படுமளவுக்கு நிலைமைகள் மாறிச் செல்கின்றன. அரசாங்கம் பதற்றத்துக்குள்ளாகியுள்ளது. ஆகவே மக்கள் நம்பிக்கையிழந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

யுத்தத்தில் தாம் வெற்றிபெற்றதாகக் கூறிய ஜனாதிபதி, அதற்குப் பின்னர் எந்த வெற்றியையும் பெரிதாகக் கொண்டாடவில்லை. அப்படி எதையும் பெரிதாகக் கொண்டாடக்கூடிய நிலையிலும் இப்பொழுது நிலைமைகளில்லை. 

ஆனால், அவர் விசுவாசமாகவே நாட்டிற்கான நன்மைகளைக் குறித்துச் சிந்தித்திருந்தால், பல நெருக்கடிகளைத் தவிர்த்திருக்கலாம். முக்கியமாக அவரே நெருக்கடிகளிலிருந்து தன்னைப் பாதுகாத்திருக்கலாம். 

இப்போது மக்களையும் விட அதிக நெருக்கடிக்குள்ளாகியிருப்பது அரசாங்கமும் ஜனாதிபதியுமே. 

இதில் அயல் நாடான இந்தியாவுடன் உருவாகியுள்ள நெருக்கடி இன்னும் மோசமானது. இந்திய மேலாதிக்கம் என்பது ஒரு புறம் இருந்தாலும் 

இலங்கைக்கான பொருளாதார உதவிகள், பிராந்திய ரீதியிலான அரசியல் மற்றும் பாதுகாப்புத் தொடர்பான விவகாரங்கள், மனிதாபிமான உதவிகள் என்ற வகையில் இந்தியாவைப் பகைத்துக்கொள்ள முடியாத ஒரு நிலை இலங்கைக்குண்டு.

இந்த அடிப்படையில் சிங்கள இராசதந்திரம் இலங்கை - இந்திய உறவைப் பல நெருக்கடிகளின் மத்தியிலும் எதிர்பாராத வகையிலான அரசியல் விளைவுகளின் மத்தியிலும் பேணிவந்தது. 

இடையில் 1980 களின் மத்தியிலிருந்து நெருக்கடிக்குள்ளாகியிருந்த உறவைக்கூடச் சீர்ப்படுத்தி வென்றிருந்தது. 

ஆனால் இன்று?

இன்றைய நிலையில் இலங்கை தொடர்பான கொள்கை வகுப்பாளர்கள் சற்றுத் திகைப்புக்குள்ளாகியுள்ளனர் என்றே தோன்றுகிறது. 

வெளியுலகுடன் மோதுவது வேறு. அதை வென்றெடுப்பது வேறு. சிங்கள இராசதந்திரம் எப்பொழுதும் மோதுவதையும்விட வென்றெடுப்பதிலேயே தன்னுடைய பாரம்பரியத்தைக் கொண்டது. 

ஆனால், இன்றைய அரசாங்கத்தின் தலைமையானது, போர் வெற்றியைப் பெற்றதைப்போல இந்த நெருக்கடியையும் விட்டுக்கொடுக்காத நிலைப்பாட்டின் மூலமாக இறக்கமாக நின்ற வெற்றியைப் பெறலாம் எனச் சிந்திக்கின்றது.

இதனால், எதையும் அரசாங்கத்திற்கு எடுத்துரைக்க முடியாத ஒரு நிலையில் இலங்கையின் கொள்கை வகுப்பாளர்கள் தடுமாறுகின்றனர். இத்தகைய இறுக்கமான - மூடப்பட்ட ஒரு நிலைமை உருவாகும்போதே நாட்டில் தளம்பல் நிலை உருவாகின்றது. 

இத்தகைய தளம்பல் நிலையே அரசாங்கத்திற்கும் தலைமைக்கும் மக்களுக்கும் பாதகத்தைத் தருவதுண்டு. உள்நாட்டில் அதிருப்திக்கான அம்சங்களும் வெளி நெருக்கடிகளும் ஒரு சேர அமைந்தால் அந்த நாடு சடுதியாகவே ஆட்டம்காணத் தொடங்கிவிடும். இது பொதுவான விதி.

அரசாங்கத்தின் மீதான மக்களின் அதிருப்தியை ஒரு கருவியாக்கியே வெளிச்சக்திகள் தலையீடுகளைச் செய்கின்றன. அல்லது தங்களுக்குச் சாதகமான சக்திகளை உள்ளரங்கில் வளர்க்கின்றன. 

இன்றைய இலங்கையில் இந்த இரண்டுக்கும் தாராளமான வாய்ப்புகள் உள்ளன. 

இலங்கையில் இன்று நிலைப்படுத்த முடியாத அளவுக்குப் பொருளாதாரப் பிரச்சினைகள் தோன்றியுள்ளன. இதற்கு என்னதான் சாட்டுகளையும் காரணங்களையும் அரசாங்கம் சொன்னாலும் மக்களிடம் அவை எடுபடாது. 

இதனால் மக்கள் அரசாங்கத்தின் மீது நிச்சயமாகக் கோபம் கொண்டுள்ளனர். இந்தக் கோபத்தை எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம், எவ்வாறு எரிபற்று நிலைக்குக் கொண்டு செல்லலாம் என்றே வெளியார் சிந்திக்கின்றனர். 

இந்தக் கோபத்தை எப்படித் தணித்துக் கொள்ளலாம் என்று இந்த இடத்தில் அரசாங்கம் சிந்திக்க வேண்டும். இதிற்தான் இலங்கையின் இன்றைய நிலைவரமும் அணுகுமுறைகளும் தங்கியுள்ளன. 

இந்த இடத்தில் ஒரு சிறிய விசயத்தைச் சொல்லவேண்டும். 

இலங்கை மக்களின் இன்றைய நிலை என்ன? அவர்களுடைய எதிர்காலம் எப்படி அமையப்போகிறது? இலங்கை எத்தகைய சவால்களையெல்லாம் எதிர்கொள்ளவுள்ளது? என்ற கேள்விகளுக்கும்....

இன்றைய அரசாங்கத்தின் அணுகுமுறைகள் எப்படி அமைகின்றன? இதன் விளைவுகள் எப்படி அமையும்? இந்த அரசாங்கம் எதையெல்லாம் சாதிக்கப்போகிறது? இந்த அரசாங்கத் தலைமையின் எதிர்காலம்? என்ற கேள்விகளுக்கும்...

யாரும் விசேடமாக அரசியற் கணிப்புகளைச் செய்ய வேண்டியதும் இல்லை@ சோதிடம் சொல்லவும் தேவையில்லை.

தன்னிடமுள்ள எதிர்மறைக்கூறுகளைப் புறந்தள்ளாத எத்தகைய ஆட்சியும் எந்தத் தலைமையும் தன்னுடைய எதிர்காலத்தைத் தானே குறுக்கிக் கொள்கிறது. 

இலங்கையின் அரசியலில் முக்கியமான ஒரு அம்சமாக இருப்பது சோதிடம். அதிலும் தென்னிலங்கையின் அரசியற் தலைமைகளில் இது அதிக செல்வாக்கைச் செலுத்துகிறது. 

யுத்தம் தீவிரமாக நடைபெற்ற காலத்தில் சோதிடத்தின் மீது முழுமையான நம்பிக்கையைக் கொண்டிருந்தனர் கொழும்புத் தலைவர்கள். போதாக்குறைக்கு, திருப்பதிக்கும் கதிர்காமத்துக்கும் சாயிபாபாவிடமும் எனத் திரிந்து கொண்டிருந்தனர்.

இன்றைய தலைமையும் அப்படியான ஒரு கட்டத்திற்குச் செல்லத்தான் போகிறது. 

ஆனால், கடந்த கால அரசியற் தலைவர்கள் எவரும் புகழுடன் பதவியிறங்கிச் செல்லவில்லை. புகழுடன் தங்களின் இறுதிக் காலத்தைக் கழிக்கவும் இல்லை. 

0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB