கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

யுத்தத்துக்குப் பிந்திய நாட்கள் என்பது...

Sunday 8 April 2012








யுத்தகால நிலைமைகளை விட யுத்தத்துக்குப் பின்னான நிலைமைகள் மிகக் கடினமானவையாக இருக்கும் என்பது பொதுவிதி.

யுத்தத்தில் கேள்விகளுக்கு இடமிருப்பதில்லை. யுத்தத்தின்போது கட்டளைகளே முதன்மையானவை. கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே அங்கே நடைமுறை. கீழ்ப்படியாதவர்களின் தலைகளை யுத்தம் தின்று விடும். யுத்த களத்திலிருந்து சனங்களின் பதுங்குகுழி வரையில் இதுதான் நடைமுறை. இதுதான் யதார்த்தம்.

அங்கே யாரையும் யாரும் கேள்வி கேட்கமுடியாது. யுத்த அரங்கிலாயினும் சரி, யுத்த அரங்கிற்கு வெளியேயும் சரி, கேள்விகள் துப்பாக்கிக் குண்டுகளையும் விட அபாயகரமானவையாகவே கருதப்படுகின்றன.

என்பதாற்தான் அங்கே நீதியும் உணர்வுகளும் குரல்களும் செத்துவிடுகின்றன. யுத்தத்தில் முதலில் பலியாவது உண்மையே என்று சொல்வதும் இதனாற்தான். கேள்வி கேட்க அனுமதிக்கப்படாத இடத்தில், பதில் சொல்லப்பட வேண்டிய கடப்பாடு இல்லாமற் போகிறது. பதிலளிக்க வேண்டிய கடப்பாடில்லாத சூழலில் எதுவும் நடக்கலாம். எப்படியும் நடக்கலாம். அங்கே எதற்கும் மதிப்பில்லை. எவருக்கும் மதிப்பில்லை.

யுத்த விதி, யுத்த தர்மம் என்பதையெல்லாம் யார், எப்போது, எங்கே ஒழுங்காகக் கடைப்பிடித்தார்கள்? யுத்தத்தின் உருவாக்கமே நீதி மறுப்பிலிருந்துதானே நிகழ்கிறது? நீதியும் நியாயமும் அறமும் பேணப்படுமானால் யுத்தத்திற்கே இடமில்லை. அவை மீறப்படும்போதுதானே யுத்தம் முளைவிடுகிறது. ஆகவே, நீதி மறுப்பிலிருந்து உருவாகும் யுத்தத்தத்தினால் எப்படி விதிகளையும் அறத்தையும் பேணமுடியும்? எனவே யுத்த தர்மம், யுத்த விதி என்பதெல்லாம் மிகப் பெரிய கண்கட்டு வித்தைதான்.

என்பதாற்தான் கேள்விகளே இல்லாத, கேள்விகளுக்கு இடமேயில்லாத  பரப்பொன்றை யுத்தம் தன்முன்னே உருவாக்கி வைத்திருக்கிறது என்கிறேன்.

ஆனால், யுத்தத்திற்குப் பின்னான நிலைமை அப்படியானதல்ல. அது கேள்விகளால் நிரம்பிய பரப்பு. எல்லாவற்றுக்கும் கேள்விகள். எந்த நிலையிலும் கேள்விகள். கேள்விகளால் சுற்றிவளைக்கப்பட்டதொரு காலச் சூழலே யுத்தத்துக்குப் பின்னான நாட்கள் என்பது.

யுத்தத்திற்குப் பின்னான காலத்தை எதிர்கொள்வதில் யுத்தத்தத்தை நடத்திய நாடுகளும் யுத்தத்தை எதிர்கொண்ட நாடுகளும்; பேரிடர்ப்பட்டிருக்கின்றன. நாடுகளுக்கப்பால் சமூகங்களுக்கிடையிலான, இனங்களுக்கிடையிலான யுத்தமும் கூட இத்தகைய பேரிடரையே சந்தித்துள்ளன. யுத்தம் என்பது எப்போதும் நெருக்கடியிலிருந்தே உருவாகிறது. நெருக்கடிகளைத் தீர்க்க முடியாத உச்ச நிலையிலேயே யுத்தம் உருவாகிறது. அப்படி உருவாகிய யுத்தம் தொடர்ந்து நெருக்கடிகளையே விதைத்துக் கொண்டும் செல்கிறது. இந்த நிலை யுத்தத்திற்குப் பின்னரும் உடனடியாக நின்று விடுவதில்லை. யுத்தத்துப் பின்னரும் அது பல விதங்களில் நெருக்கடிநிலையாக, கேள்விகளை உற்பத்தி செய்தபடியே இருக்கிறது.

முக்கியமாக யுத்தத்தினால் சிதைந்தவற்றை மீள் நிலைப்படுத்துவது மிகப்பெரிய சவால். அதை விட அழிந்து போனவற்றை உருவாக்குவதும் இழப்புகளை  ஈடுசெய்வதும் மிகக் கடினமானது. மேலும் காயங்களை ஆற்றுவது, வலிகளைத் தீர்ப்பது எல்லாமே சிரமமான காரியங்கள். ஆனால், எல்லாவற்றையும் சீர்ப்படுத்த வேண்டும். இல்லையெனில் மிகப் பெரிய அவலத்திலிருந்து மீளவே முடியாது. நிலைமைகளைச் சீர்ப்படுத்த முடியாத. ஆகவே இந்த இடத்தில் ஏராளம் கேள்விகள் எழுகின்றன. எல்லாவற்றைப் பற்றியும் கேள்விகள். எதற்கும் கேள்விகள்.

இப்பொழுது அந்த மாதிரியான ஏராளம் கேள்விகள் இலங்கையில் எழுந்துள்ளன.

யுத்தகாலத்திற் காணாமற்போனவர்களைப் பற்றிய கேள்விகள். யுத்தத்தின் போது சரணடைந்தவர்களைப் பற்றிய கேள்விகள். அரசியற் கைதிகளாகத் தடுத்து வைத்திருப்போரைப் பற்றிய கேள்விகள். அவர்களுடைய விடுதலையைப் பற்றிய, விடுதலையைப் பற்றிய கேள்விகள். யுத்தக் குற்றங்களைப் பற்றிய கேள்விகள். யுத்தக் குற்ற விசாரணையைப் பற்றிய கேள்விகள். யுத்தத்துக்குப்பின்னரான நிலைமைகளைக் குறித்த கேள்விகள். மீள்குடியேற்றம் பற்றிய கேள்விகள். புனர்வாழ்வுப் பணிகளைப் பற்றிய கேள்விகள். பாதிக்கப்பட்டோரைப் பற்றிய கேள்விகள். பாதிக்கப்பட்டோருக்கான உதவிகளைப் பற்றிய கேள்விகள். புனரமைப்புப் பற்றிய கேள்விகள். சீராக்கல் நடவடிக்கைகளைப் பற்றிய கேள்விகள். யுத்தத்தில் பலியாகிய ஜனநாயகத்தை மீள்நிலைப்படுத்துவதைப் பற்றிய கேள்விகள். இயல்பு நிலை உருவாக்கத்தைப் பற்றிய கேள்விகள். இயல்பு நிலைக்குத் தடையான காரணிகளைப் பற்றிய கேள்விகள். சிவில் தன்மையை நோக்கி நிலைமைகள் நகர்கின்றனவா என்ற கேள்விகள். போருக்குப் பிந்திய நிலையிலும் முரண்பாடுகளை நீக்குவதற்கான நடவடிக்கைiளைப் பற்றிய கேள்விகள். அமைதியைக் குறித்து, சமாதானத்தைக் குறித்து விசுவாசமாகச் சிந்திப்பதைப் பற்றிய கேள்விகள்... இப்படிப் பல.

இந்தக் கேள்விகளையெல்லாம் பதில்களால் சீர்ப்படுத்துவதற்குச் சீரான பொறிமுறைகள் அவசியம். உச்சநிலையிலான மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் விசயங்கள் அணுகப்பட வேண்டும். சிதைவடைந்த நிலையிலிருக்கும் உளநிலை தொடக்கம், இழப்புகள், பாதிப்புகள் எல்லாவற்றையும் மீள்நிலைப்படுத்துவதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட பொறிமுறைகளும் நடைமுறைப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பும் செயற்றிறனும் அவசியம்.

குறிப்பாக படைத்தரப்பை யுத்தத்தை ஒத்த சூழலிலிருந்து – மன நிலையிலிருந்து, ஆதிக்கத்திலிருந்து விலக்கிக் கொள்வதற்கு உச்சமான திட்டங்கள் அவசியம். இதைக் கையாள்வதே கடினம் என்று சொல்லப்படுகிறது. காரணம், யுத்தத்தில் வெற்றியைப் பெற்ற படைகள் அந்த வெற்றிக்கான தகுதியைத் தாமே பெற்றுக்கொடுத்ததாகவே சிந்திக்கும். ஆகவே அந்தச்சிந்தனையிலிருந்தே அவை தங்களுக்கான அந்தஸ்தையும் உரிமைகளையும் வளங்களையும் வசதிகளையும் எதிர்பார்க்கும்.

ஆனால், அரசைப் பொறுத்தவரையில் அது அரசியல் நிலைமைகளுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டிய யதார்த்தத்திலிருக்கும். அரசியல் அம்சங்களுக்கு முன்னுரிமை வழங்கத் தவறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அது உள்ளேயும் வெளியேயும் கண்டனங்களையும் நெருக்கடிகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். அதேவேளை அது அரசியல் அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்க முற்படுகையில் அது படைத்தரப்பையே முதலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் படைத்தரப்பின் அதிருப்தியைச் சந்திக்க வேண்டியிருக்கும். படைத்தரப்பின் அதிருப்தியைச் சந்திப்பது யுத்தத்தில் வெற்றியைப் பெற்ற ஒரு அரசினால் முடியாத காரியம். இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

1. யுத்தத்தில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்த உரிமையைப் படைத்தரப்பு கொண்டுள்ளது. ஆகவே வெற்றியில் அரசுக்கிருக்கும் உரிமையிலும் அந்தஸ்திலும் படைகளுக்கும் பங்குண்டு என்பது. வெற்றியைப் பெற்றுத்தந்து விட்டு ஓரங்கட்டப்படுவதை படைகள் ஒருபோதுமே விரும்புவதில்லை. அதை அவை அனுமதிக்கவும் மாட்டா. அதேவேளை வெற்றியைக் குறித்த பெருமிதங்களிலும் புகழிலும் அவை பங்கெடுக்கவே முனையும். எனவே யுத்தத்தில் வெற்றியடைந்த அரசொன்றின் படைகள் தமது ஸ்தானத்தைக் குறித்து விட்டுக்கொடுப்பற்ற நிலையிலேயே இருக்கும். அதற்குக் காரணமாக யுத்த வெற்றிக்காக தாம் செயற்பட்ட திறன்களையும் தமது தரப்பின் அர்ப்பணிப்பையும் அவை முன்னிறுத்தும்.

2. யுத்தத்தின் தேவைக்காக அரசு படையைப் பெருக்கி விடுகிறது. அப்படியொரு தேவை அதற்கு தவிர்க்க முடியாமல் ஏற்பட்டுள்ளதால் இந்தப் பெருக்கத்தை அது செய்கிறது. யுத்தத்தின் முடிவுக்குப் பிறகு பெருகிய படைகளை ஒரே நாளில் வீட்டுக்குப் போகும்படி எந்த அரசினாலும் சொல்ல முடியாது. அப்படி அரசு கட்டளையிட்டால் அரசின்மீதே படைகள் பாயும். யுத்தத்தின் வெற்றியை எடுத்துக்கொண்டு அரசு தங்களை வீதியில் விட்டதாக படைகள் கருதக்கூடிய அபாயம் இதிலுண்டு. எனவே யுத்த காலத்தையும் விட யுத்தத்திற்குப் பிந்திய காலத்தில் படைகளைக் கையாள்வதே கடினமானது என்கிறார் எட்வேர்ட் சைமன். இவர், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய சூழலைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட ஒரு அரசியற் பகுப்பாளர்.

இரண்டாம் உலகப் போருக்காகப் பெருக்கிய படைகளை வீட்டுக்கு அனுப்பவும் முடியாமல் பணிகளிலும் வைத்திருக்க முடியாமல் அவஸ்தைப்பட்டன யுத்தத்தில் ஈடுபட்ட நாடுகள். தோற்றுப்போன நாடுகளின் கதை வேறு. அவர்கள் எல்லாப் பிரச்சினைகளையும் தோல்வியில் போட்டுவிடுவார்கள். அதைவிட தோற்றுப்போனவர்களிடம் யாரும் அதிகமாகப் பொறுப்புகளைப் பற்றிக் கேட்க மாட்டார்கள். கேள்விகளையும் எழுப்ப மாட்டார்கள். ஆனால், வென்றவர்களின் நிலை அப்படியல்ல. அவர்கள் எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல வேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர். எல்லாவற்றுக்கும் அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்கிறார் சைமன்.

இயற்கையினால் ஏற்படும் இடர்களையும் அழிவுகளையும் சந்திக்கும் மனம் சமனிலை அடைவதற்கும் யுத்தத்தினால் ஏற்படும் அழிவுகளையும் இடர்களையும் சந்திக்கும் மனம் சமனிலை கொள்வதற்கும் வேறுபாடுகளுண்டு. இயற்கையின் இடரில் யாரையும் கோவித்துக்கொள்வதற்கு இடமில்லை. அங்கே குற்றவாளியாக - இடருக்குக் காரணமாக -  இருப்பது இயற்கையே. இயற்கையை எப்படிக் கோவித்துக் கொள்ள முடியும். அப்படிக் கோவித்துக் கொண்டாலும் அது வானத்தைப் பார்த்துக் கர்ச்சிப்பதற்கு அப்பால் வேறெதுவாகவும் ஆவதில்லை. ஆகவே இயற்கையினால் ஏற்படும் பாதிப்பைப் பற்றிய கோபம் சடுதியாகவே வடிந்து காணாமற் போய்விடும்.

சுனாமி அலைகளாற் பாதிக்கப்பட்ட மக்கள் அந்தக் கணத்தில் கடலைத் திட்டித்தீர்த்தார்கள். ஆனால், சற்றுக் காலத்துக்குப் பிறகு அவர்கள் கடலின் மடியில் மீண்டும் தவழத் தொடங்கி விட்டனர். கடல் மீண்டும் அவர்களுக்கு வரமளிக்கும் - அரவணைக்கும் தாயாகிவிட்டது. இனிய தோழனாகிவிட்டது.

இயற்கையின் இடருக்குப் பிறகு ஏற்படுகின்ற கோபம் சற்றுக்காலம் நீடித்தாலும் பின்னர் அது அந்த இடருக்குப் பிறகு செய்யப்படும் நிவாரணப்பணிகள், உதவித்திட்டங்கள், மீளுருவாக்கச் செயற்பாடுகளில் ஏற்படுகின்ற பிரச்சினைகளினால் உருமாற்றம் பெற்றுவிடும். இந்தப் பணிகளில் நடக்கின்ற பாரபட்சங்கள், குறைபாடுகள், திருப்தியின்மைகள் போன்றன அடிப்படைக் கோபத்தை மாற்றிவிடுகிறது.

ஆனால் யுத்தகாலப் பாதிப்புகளும் அவை உருவாக்குகின்ற உள நெருக்கடிகளும் மிகப் பயங்கரமானவை. யுத்தம் அரசியற் காரணங்களினால் ஏற்படுவது என்பதால், அந்த அரசியற் காரணிகளின் காயங்கள் ஆறாத நிலையிலேயே இருக்கும். இந்த அரசியற் காரணங்கள் மக்களிடையே கொந்தளிப்பான மனநிலையை ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கின்றன. யுத்தத்தில் இது இன்னும் அதிகமாக வளர்ந்திருக்கிறது. யுத்தத்தில் மக்களின் குரல் மேலெழுவதற்கு வாய்ப்புகள் குறைந்திருப்பதால், இது உள்ளே அடங்கி, உள்ளே கொதித்துக் கொண்டிருக்கிறது. வெளிப்பட முடியாக் கோபம் உள்ளே அடங்கும்போது அது கொந்தளிப்பாக, கொதிநிலைக்குப் பரிமாற்றமடைகிறது.

யுத்தத்திற்குப் பின்னரான சூழலில், ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டிருக்கும் சூழலில் பொத்துக்கொண்டு அவை மேற்கிளம்புகின்றன. அதுவரையிலும் மௌனமாக இருந்த சனங்கள் யுத்தத்துக்குப் பிறகு பேசத் தொடங்குகிறார்கள். அதுவரை பேசாதிருந்த, பேசுவதற்கு அனுமதிக்காதிருந்த எல்லாவற்றையும் இந்தச் சூழலிற் பேசத் துடிக்கிறார்கள். அதுவரையில் கேட்க முடியாதிருந்த கேள்விகளையெல்லாம் கேட்கத் தவிக்கிறார்கள்.

யுத்தத்தை நடத்திய அரசை, யுத்தத்திற்கு இடமளித்த சூழலை, யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை எல்லாம் அவர்கள் கேள்விக்குட்படுத்துகிறார்கள். போதாக்குறைக்கு யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள், சிதைவுகள், இழப்புகளைக்குறித்தும் அவர்கள் கேள்விகளை எழுப்புகிறார்கள். கேள்விகளைக் கேட்பதற்கான ஒரு தார்மீக நிலையும் யுத்தத்திற்குப் பின்னர் அவர்களுக்குக் கிடைத்து விடுகிறது. இதற்குக் காரணம், யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளும் அழிவுகளும். இந்த அழிவுகளும் இழப்புகளும் பாதிக்கப்பட்ட சனங்களைக் குறித்த ஒரு அனுதாபத்தை வெளியுலகில் உருவாக்குகிறது. ஆகவே அவர்கள் அந்த அனுதாப அலை உருவாக்குகின்ற ஆதரவு அலையின் துணையைக் கொண்டு தங்களின் கேள்விகளை இன்னும் அழுத்தமாக முன்வைக்கிறார்கள்.

அத்துடன், யுத்தகாலத்தில் மட்டுமன்றி, யுத்தத்துக்குப் பின்னரான சூழலை எதிர்கொள்வதிலும் மக்கள் பெரிதும் சிரமமடைகிறார்கள். யுத்தத்தில் எல்லாவற்றையும் இழந்திருக்கும் மக்கள் வாழ்வதற்கு, வாழ்க்கையை எதிர்கொள்வதற்கு மிகமிகச் சிரமப்படுவது இந்தக் கழிவிரக்கத்தைப் பிறரிடம் இரண்டு மடங்காக ஏற்படுத்துகிறது. ஏனெனில், அவர்கள் எதிர்ப்பாயுதங்கள் எதுவுமில்லாத பலியாடுகள். எனவே இந்தக் கழிவிரக்கம் பிறரைக் குற்றவுணர்ச்சிக்குள்ளாக்குகிறது. வெற்றி தோல்விகளுக்கு அப்பால் இந்தக் கழிவிரக்கம் குற்றவுணர்ச்சியைக் கிளப்புகிறது.

இந்தக் குற்றவுணர்ச்சி மக்களைக்குறித்து விசுவாசமாகச் சிந்திப்போருக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதில் அரசும் அடக்கம். மனிதாபிமானப் பணியாளர்களும் அடக்கம். மக்களுக்காகக் குரல் கொடுக்கும் அனைவரும் சேர்த்தி.

00

0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB