கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

பயங்கரவாதம் ஒரு குற்றச் செயலைப்போல தவறுகளை மட்டுமே உள்ளடக்கியது அல்ல“

Sunday 22 April 2012




















‘பயங்கரவாதம் ஒரு குற்றச் செயலைப்போல தவறுகளை மட்டுமே உள்ளடக்கியது அல்ல.அது அரசியற் பிரச்சினைகளை உள்ளடக்கியது. அந்தப் பிரச்சினைகளை செவிமடுக்கும் உரையாடலைச் செவிமடுக்காமல், வெறும் இராணுவ பலத்தால் பயங்கரவாதத்தை அழித்து விட முடியாது’- மீனா. (தீராநதி)

போரிலே வெற்றி பெற்றவர் மகிந்த ராஜபக்ஷ. போரிலே வெற்றியீட்டிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் இன்றைய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம். போரின் வெற்றிக்காக உழைத்த முக்கியமானவர்களில் முதன்மையானவர் ஜெனரல் சரத் பொன்சேகா. 2009 மே மாதத்தில் வெற்றிப் பெருமிதத்தில் மிதந்தவர்கள் இவர்கள் அனைவரும்.

ஆனால் இன்று?

இன்று அதிகமதிகம் நிம்மதியிழந்தவர்களாக, பதற்றத்துக்குள்ளாகியுள்ளவர்களாக இருப்பது மேற்குறிப்பிட்டோரே. ஒருவர் சிறையினுள்ளே இருக்கிறார். போர்க்குற்றங்களை ஆதாரப்படுத்தி ஏனையோரைச் சிறை குறித்துச் சிந்திக்க வைத்திருக்கிறது சர்வதேச சமூகம்.

ஆகவே, இன்றைய அரசாங்கமே அதிக நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

சர்வதேச நெருக்கடிகள், பிராந்திய சக்தியாகிய இந்தியாவுடனான முறுகல் நிலை, உள்நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் எனப் பலமான இறுக்க நிலையில் இலங்கை அரசும் நாட்டின் தலைமைப் பீடத்தினரும் சிக்குண்டுள்ளனர்.

இந்த நெருக்கடி நிலை அவர்களைப் பதற்றத்துக்குள்ளாக்குகிறது. மடியிற் கனமில்லை என்றால் வழியிற் பயமில்லை என்பார்கள். அரசாங்கத்துக்கு உள்ளடக்குகளிலும் வெளியடுக்குகளிலும் ஏகப்பட்ட அச்சநிலைகள் இருப்பது தெளிவாகவே தெரிகிறது. என்றபடியாற்தான் அது உச்சநிலையிலான அச்சத்திற்குள்ளாகியிருக்கிறது.

புலிகள் வெளிநாடுகளில் எழுச்சியடைகிறார்கள், புலிகளுக்கும் ஜே.வி.பி மற்றும் ஜே.வி.பி.யின் மாற்றுக் குழுவினருக்கும் இடையில் தொடர்புகள் இருக்கலாம், இந்தச் சக்திகளுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் உள்ள தொடர்புகள் என்ன? என்றெல்லாம் அரசாங்கம் அதீதமாகச் சிந்திப்பதற்குக் காரணம் அதனுடைய அச்சங்களே.

கடந்த வாரம் திமுது ஆட்டிக்கல மற்றும் சோமரட்ண ஆகிய இருவரும் கடத்தப்பட்டமையும் அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் விசாரணையும் இவற்றைத் தெளிவாக்குகின்றன.

இதற்கு முன்னர் லலித், குகன் போன்றோர் காணாமற்போனமையைக் குறித்துச் சிந்திக்கும்போதும் இத்தகைய புரிதலே ஏற்படுகிறது.

ஆகவே இதையிட்டு உச்ச நிலையில் கண்காணிப்பைக் கொண்டுள்ளது படைத்தரப்பு. தூக்கத்திலும் பதற்றத்தோடிருக்கிறார்கள் அமைச்சர்களும் அதிகாரிகளும். பெருமளவு நிதியை பாதுகாப்புக்காகவே இன்னும் ஒதுக்கிக் கொண்டிருக்க வேண்டிய நிலையில் உள்ளது அரசாங்கம்.

இதெல்லாம் எதற்காக?

போரிலே வெற்றியடைந்த ஒரு அரசாங்கம் இவ்வாறு குறுகிய காலத்திற்குள் கலக்கமடைவது ஏன்?

அப்படியாயின் அது பெற்ற வெற்றியின் பெறுமதிகள் என்ன? அதன் அர்த்தமென்ன?

மீண்டும் ஒரு கிளர்ச்சி அல்லது ஆயதப்போராட்டம் எழலாம் என்ற எதிர்பார்க்கையோ அல்லது அச்சமோ அரசாங்கத்திடம் உள்ளது என்றே எண்ணத் தோன்றுகிறது.

உள்நாட்டில் இதற்கான சூழலோ மன நிலையோ இல்லை என்றாலும் வெளிச் சக்திகளின் தூண்டுதலில் ஏதாவது அசம்பாவிதங்கள் நிகழலாம் என்ற அச்சம் அரசாங்கத்துக்கு உள்ளது போலுள்ளது.

உள்நாட்டிற் காணப்படும் அதிருப்தியான அம்சங்களைப் பிரதானப்படுத்தி, இத்தகைய குழப்பங்களை அல்லது கிளர்ச்சிகளை உருவாக்குவதற்கு வெளிச்சக்திகள் முயற்சிக்கலாம் என்பது அரசாங்கத்தின் சந்தேகமாக இருக்கலாம்.

அதாவது, பயங்கரவாதம் மீண்டும் தோற்றம் கொள்ளலாம் என்ற அச்சம்.

ஆனால், இது அநாவசியமான பதற்றமும் சிந்தனையும் தேவையற்ற அச்சமுமாகும்.

ஏனெனில், போரினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மக்களும் நாடும் இன்னும் மீளவில்லை. ஆயுதப்போராட்டங்களின் வீழ்ச்சியும் அவை ஏற்படுத்திய கசப்பான அனுபவங்களும் மக்களை விட்டு இன்னும் நீங்கவில்லை.

மக்கள் நிம்மதியான – அமைதியான – சுபீட்சமான ஒரு வாழ்வையும் எதிர்காலத்தையுமே விரும்புகிறார்கள்.

போரின் முடிவை சமாதானத்துக்கான தொடக்கமாக, அமைதிக்கான ஆரம்பமாக, நல்லிணக்குத்துக்கும் புரிந்துணர்வுக்கும் உரிய சந்தர்ப்பமாக, புதிய சகாப்தத்துக்கான ஒரு சூழலாகவே எண்ணினார்கள். போரின் பாதிப்புகள் மிகக் கடினமானவையாக இருந்தாலும் அதன் வடுக்கள் சக்திக்கு மீறியவையாக இருந்தாலும் புதிய தொடக்கம் சீராக இருக்குமானால் அது எல்லாக் காயங்களையும் மாற்றிவிடும் என்றே நம்பிக்கை கொண்டிருந்தனர்.

ஆனால், மக்களின் எதிர்பார்ப்பும், விருப்பமும் நம்பிக்கையும் கனவும் இன்று கேள்விக்குறியின் மீதே நிறுத்தப்பட்டுள்ளன. சாதாரண பிரச்சினைகளுக்குக் கூடத் தீர்வைக் காண முடியாத ஒரு நிலை உருவாகி வருவதாக அவர்கள் எண்ணுகின்றனர்.

முக்கியமாக பொருளாதார நெருக்கடிகளும் இனப்பிரச்சினையும் தீர்க்க முடியாத கணிதங்களாக உருப்பெருத்துக் கொண்டே செல்வதைக் கண்டு மக்கள் மீண்டும் கலக்கமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் மக்களின் நம்பிக்கைகளை வெற்றியடைய வைத்துத் தானும் வெற்றியைப் பெறுவதற்குப் பதிலாக அது எதிர்க்கணிதத்தில் சிந்திக்கக் கூடாது.

ஏனென்றால், ‘வெளித்தோற்றத்தில் அரசாங்கம் கலர் மயமாகித் தெரிந்தாலும் இன்று உள்ளே அது வெளிறிக் கொண்டேயிருக்கிறது’ என்று ஒரு ஆய்வாளர் தெரிவித்திருப்பது நமது கவனத்திற்குரியது.

எதற்கும் முதலில் யதார்த்தம், உண்மை என்பவற்றை ஒருவர் உணர்ந்து கொள்ள வேண்டும். இது அரசுக்கும் பொருந்தும். சாதாரணக் குடிமகனுக்கும் பொருந்தும். அரசியற் கட்சிக்கும் அரசியற் தலைவர்களுக்கும் நாட்டின் தலைமைப் பீடத்தினருக்கும் பொருந்தும்.

இலங்கையின் யதார்த்த நிலைமை என்பது மிகச் சவாலுக்குரியது. இன முரண்பாடுகளுக்குத் தீர்வு காண வேண்டிய யதார்த்தம். பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு காணவேண்டிய யதார்த்தம். ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் மீள் நிலைப்படுத்த வேண்டிய யதார்த்தம். சர்வதேச உறவுகளைச் சீர்ப்படுத்த வேண்டிய அவசியம் எனப் பல யதார்த்தமான விசயங்களில் கவனத்தைச் செலுத்த வேண்டியுள்ளது.

இதையெல்லாம் அரசாங்கத்தின் உயர் பீடத்திலுள்ளவர்கள் எந்த அளவுக்குப் புரிந்துள்ளனரோ தெரியவில்லை. அரசாங்கத்துடன் நெருங்கிய உறவைக்கொண்டுள்ளோர், நாட்டின் நன்மைகளைக் குறித்துச் சிந்திப்போர், மதபீடாதிபதிகள், சமாதான விரும்பிகள் போன்றோர் நிச்சயமாக இவற்றையிட்டுக் கவனத்தைச் செலுத்த வேண்டும். அத்துடன் இவர்கள் அரசாங்கத்துக்கும் இவற்றைக் குறித்து எடுத்துரைப்பது அவசியமானது.

உண்மை நிலைமையைக் குறித்தும் யதார்த்த நிலைமையைக் குறித்தும் அரசாங்கத்தையும் தலைவர்களையும் அழைத்து வருவது இன்றைய நிலையில் அவசியமான பணியாகும்.

போரின் வெற்றி என்பது மிகையான உணர்ச்சிகளையும் மிகையான விளங்குதல்களையும் ஏற்படுத்தியிருக்கலாம். எப்போதும் வெற்றி – தோல்விகளில் சமநிலைக்கு அப்பாலான உணர்ச்சிகளே ஏற்படுவது வழமை. ஏறக்குறையக் கொந்தளிப்பான நிலைமையே வெற்றி – தோல்விகளின்போது ஏற்படுவதுண்டு.

இதைக் கடந்து, நாட்டினதும் மக்களினதும் யதார்த்த நிலைமை என்ன? தேவைகள் என்ன? அவற்றை எட்டுவதற்கான வழிகள் என்ன? என்று பார்க்க வேண்டிய பக்குவத்தை வளர்த்துக் கொள்வதே பாதுகாப்பானதாகும்.

இதற்காகவே மேற்படி மேற்கோள் விளக்கப்பட்டுள்ளது. ‘பயங்கரவாதம் ஒரு குற்றச் செயலைப்போல தவறுகளை மட்டுமே உள்ளடக்கியது அல்ல. அது அரசியற் பிரச்சினைகளை உள்ளடக்கியது. அந்தப் பிரச்சினைகளை செவிமடுக்கும் உரையாடலைச் செவிமடுக்காமல், வெறும் இராணுவ பலத்தால் பயங்கரவாதத்தை அழித்து விட முடியாதுஎன.


எந்தப் பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கும் வெற்றியும் சந்தர்ப்பத்தை வழங்கும். தோல்வியும் சந்தர்ப்பத்தை வழங்கும். வெற்றி தோல்வியற்ற சமனிலையும் சந்தர்ப்பத்தை வழங்கும். ஆனால், இவற்றைக் கையாள்வதில்தான் தீர்வுக்கான வழிகள் பிறக்கின்றன. இதற்கான அர்ப்பணிப்பும் திடமான சிந்தனையும் இருந்தால் இதைச் சாத்தியப்படுத்த முடியும்.

இலங்கையின் துயரம் நீடிக்க வேண்டுமா அல்லது அது முடிவுக்கு வரவேண்டுமா என்று தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு இன்று எல்லோருடைய மூளைக்கும் உரியது.

இலங்கையின் துயரம் என்பதே இன்று இந்தப் பிராந்தியத்தில் சர்வதேசத் தரப்பின் அரசியல் பொருளாதார முதலீடாக மாறியுள்ளது என்பதைப் புரிந்து கொண்டால் நமது மூளையின் கதவுகள் தானாகவே திறபடும்.

இதையெல்லாம் உணர்ந்து கொள்வதும் உணர்த்துவம் எப்படி என்பதே இன்றும் என்றுமுள்ள சவால்.

இந்தச் சவாலை வெற்றி கொள்ளாதவரையில் துயரமும் பதற்றமும் அரசுக்கு மட்டுமல்ல மக்களுக்குந்தான். ஏனைய தலைவர்களுக்குந்தான். அதேபோல மக்களுக்கு மட்டுமல்ல, பிற தலைவர்களுக்கும் அரசுக்குந்தான்.

ஆகவே, இதைக் குறித்துச் சிந்திப்பதே பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் வழியாகும்.

ஆனால், அதற்கு முதலில் மனதில் மாண்புடைய தன்மைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அரசியல் நலன் என்பது துணிச்சலும் சரியான வழிமுறையும் உள்ள செயற்பாட்டிலேயே கிட்டுகிறது என்ற அடிப்படை உண்மையைப் புரிந்து கொண்டால் நிம்மதியும் வெற்றியும் நலனும் தாராளமாகக் கிட்டும்.

இலங்கை வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் கிடந்து இன்னும் தளம்பத்தேவையில்லை.

மறுபடியும் நினைவூட்ட வேண்டியது,
‘பயங்கரவாதம் ஒரு குற்றச் செயலைப்போல தவறுகளை மட்டுமே உள்ளடக்கியது அல்ல. அது அரசியற் பிரச்சினைகளை உள்ளடக்கியது. அந்தப் பிரச்சினைகளை செவிமடுக்கும் உரையாடலைச் செவிமடுக்காமல், வெறும் இராணுவ பலத்தால் பயங்கரவாதத்தை அழித்து விட முடியாது’ 
என்பதையே.

000

0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB