கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

புதிய தமிழ்த் தேசியத் தலைமை?

Sunday 22 April 2012



ஜெயலலிதா இலங்கையின் இனப்பிரச்சினைக்கு எத்தகைய அரசியற் தீர்வை முன்மொழிகிறார்? அதைச் செயற்படுத்துவதற்காக அவர் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்? அந்த நடவடிக்கைகளைச் செயற்படுத்துவதற்கான பொறிமுறைகளை அவர் எவ்வாறு உருவாக்குவார்? அதற்காக அவர் முழுமையான அளவில் விசுவாசமாக உழைக்கத்தயாரா?இதெற்கெல்லாம் அவரிடம் பதிலில்லை. 










போகிற போக்கைப் பார்த்தால் எதிர்காலத்தில் சுப்பிரமணியம் சுவாமி, சோ, ஹிந்து ராம் போன்றவர்கள் கூட தமிழ்த் தேசியவாதிகளாகக் கருதப்படக்கூடிய நிலை உருவாகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால், நீண்டகாலமாகவே விடுதலைப் புலிகளுக்கும் ஈழப்போராட்டத்துக்கும் எதிர்த்திசையில் நின்ற தமிழ்நாடு முதல்வர் செல்வி ஜெயலலிதா இன்று ஈழத்தமிழர்களின் அரசியல் பிரச்சினையில் முன்னணிப்போராளியாக பெரும்பாலான தமிழ் ஊடகங்களாற் கொண்டாடப்படுகிறார். நெடுமாறன், சீமான், திருமாவளவன், வைகோ, கொளத்தூர் மணி போன்ற நீண்டநாள் ஈழப் போராட்ட ஆதரவாளர்களையெல்லாம் பின்வரிசைக்குத் தள்ளி விட்டார் ஜெயலலிதா.

ஈழப் பிரச்சினையில் இன்று ஜெயலலிதா எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இவர்கள் மட்டுமல்ல, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் திரு. மு.கருணாநிதி கூடத் திணறிக் கொண்டிருக்கிறார். சற்று உன்னிப்பாக இதைப் பற்றிச் சொன்னால், ஈழ ஆதரவாளர்களையும் விட, மத்திய அரசையும் விட ஜெயலலிதா குறிவைத்திருப்பது வழக்கம்போல அவர் எதிரியாகக் கருதும் திரு. மு.கருணாநிதியையே.

ஆகவேதான் இலங்கையின் அரசியற் பிரச்சினைகளைக் குறித்து ஜெயலலிதா எடுக்கும் முடிவுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் - தனித்துத் தீர்மானமெடுக்க முடியாமல் திரு. கருணாநிதி ஜெயலலிதாவின் அறிவிப்புகளுக்குப் பின்னே இழுபடுகிறார். அந்த அளவுக்கு செல்வி ஜெயலலிதான் அதிரடிகள் விசைகூடியவையாக உள்ளன.

கடந்த மாதம் இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா, ஜெனிவாவில் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று ஓர் இரவு அதிரடி அறிவிப்பைக் கொடுத்து டில்லியைக் கலங்க வைத்தார் ஜெயலலிதா. ஆனால், ‘அவர் டில்லியைக் கலக்கவில்லை. திரு. கருணாநிதியையும் தி.மு.க.வையுமே கலங்க வைத்தார்’ என்று சொல்கிறார் தமிழ்நாட்டிலுள்ள ஒரு ஊடகத்துறை நண்பர். நண்பரின் கூற்றில் உண்மையுண்டு. அதுவரையும் மதில் மேற் பூனையாக இருந்த தி.மு.க. ஜெயலலிதாவின் அறிவிப்பை அடுத்து தானும் அதேமாதிரியான ஒரு அறிவிப்பை விடுத்தது.

அதற்கு முன்னர் மத்திய அரசின் தீர்மானம் எப்படி அமையப்போகிறது என்று தெரியாத நிலையில் தடுமாறிக்கொண்டிருந்த திரு. கருணாநிதி, ஜெயலலிதாவின் அறிவிப்பை அடுத்து துடித்தெழுந்தார். உடனடியாகவே இலங்கை விசயத்தில் இந்தியா விட்டுக்கொடுக்க முடியாது என்றும் போர்க்குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்றும் ஒரு அறிக்கையை விடுத்தார். ஏறக்குறைய ஜெயலலிதாவின் அறிவிப்பைச் சமனிலைப்படுத்திக் கொள்ளவும் அதன் மூலம் தன்னுடைய செல்வாக்கைச் சரியவிடாமற் பார்த்துக்கொள்ளவும் முயன்றார்.

இப்பொழுது இந்திய நாடாளுமன்றக் குழுவின் இலங்கை விஜயத்தை ஜெயலலிதா பகிஸ்கரித்தபோது விழுந்தடித்துக் கொண்டு தி.மு.க.வும் தன்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கான விஜயத்தைப் பகிஸ்கரிப்பதாகத் தெரிவித்துள்ளது. ஆகவே ஜெயலலிதாவின் முடிவுகளைப் பார்த்துத் தன்னுடைய தீர்மானங்களை எடுப்பவராகவே கருணாநிதி மாறியுள்ளார்.

கருணாநிதி ஈழ விசயத்தில் மட்டுமல்ல பொதுவாகவே ஏனைய விசயங்களிலும் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளையும் அறிவிப்புகளையும் பார்த்து, அதற்கு மறுப்பாகவோ போட்டியாகவோ தீர்மானங்களை எடுப்பவராகவும் அறிவிப்புகளை எடுப்பவராகவும் உள்ளார்.

கருணாநிதியின் இத்தகைய அணுகுமுறையானது நீண்ட பாரம்பரியத்தையுடையது. எம்.ஜி.ராமச்சந்திரன் காலத்திலிருந்தே அவர் இந்த மாதிரியான வழிமுறையைத்தான் கடைப்பிடித்து வருகிறார்;. ஆகவே இதுவொன்றும் புதியதல்ல. என்பதால் இங்கே நாம் கவனிக்க வேண்டியது கருணாநிதி மற்றும் ஜெயலலிதா போன்றோரின் அரசியல் அணுகுமுறைகளைப் பற்றியதல்ல. பதிலாக ஈழப்பிரச்சினையில், இவர்கள் எப்படியான நிலைப்பாடுகளை எடுக்கிறார்கள், அந்த நிலைப்பாடுகளின் உண்மைத்தன்மை என்ன? அவற்றின் பெறுமதி என்ன? என்பவற்றையே.

மெய்யாகவே ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைப் பிரச்சினையிலும் அதற்கான போராட்டத்திலும் பொருத்தமான தீர்மானங்களை ஜெயலலிலதாவும் எடுக்கவில்லை. கருணாநிதியும் எடுக்கவில்லை. அப்படி ஒரு எண்ணம்கூட இவர்கள் இருவரிடத்திலும் கிடையாது. அதற்கான உணர்வோ விருப்பமோ அவசியமோ கூட இருவருக்கும் இல்லை.

ஆனால், ஈழ அரசியற் பிரச்சினை இருவருக்கும் தேவைப்படுகிறது. ஒரு சுவைமாறாத பண்டமாக தமிழக மக்களுக்கும் அங்குள்ள ஊடகங்களுக்கும் ஈழப்பிரச்சினை இருக்கும் வரையில், ஜெயலலிதா, கருணாநிதி போன்றோருக்கு மட்டுமல்ல சுப்பிரமணியம் சுவாமி, சோ, திருமாவளவன், சீமான் தொடக்கம் குஷ்பு, ரீமா சென்வரை எல்லோருக்கும் அது தேவைப்படும். ஆகவே அவர்கள் அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இலங்கையின் இனப்பிரச்சினை அந்தளவுக்கு இன்று உலகம் முழுவதுக்கும் சுவையான ஒரு பண்டமாகியுள்ளது. அது இலங்கை அரசுக்கு மட்டுமன்னி, தமிழ் - சிங்கள இனத்துவ அரசியலாளர்களுக்கு மட்டுமன்றி, பிராந்திய நாடுகளுக்கு, சர்வதேச சமூகத்துக்கு, மனித உரிமைகள் அமைப்புகளுக்கு, ஆய்வாளர்களுக்கு, ஊடகங்களுக்கு, எழுத்தாளர்களுக்கு எனப் பலருக்கும் அது பயன்படுகிறது. ‘பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்குச் சீவன் போகிறது’ என்று ஊர்வழக்கிற் சொல்வார்கள். அதேபோல இவர்களுக்கெல்லாம் இனப்பிரச்சினை  விவகாரம் விளையாட்டுப் பொருளாக, லாபந்தரும் விசயமாக இருக்கிறது.

ஆனால்,  இனப்பிரச்சினை என்ற நெருப்பின் மத்தியில் வாழ்கின்ற (இலங்கை) மக்களுக்கு – குறிப்பாகத் தமிழர்களுக்கு இதெல்லாம் உயிரோடு விளையாடுவதைப்போலவே அமைகிறது.

காயங்களோடும் வலியோடும் உள்ள மக்களை இது மேலும் அவமானப்படுத்தும் சங்கதியாகும். அவர்களின் வலியை மேலும் அதிகரிப்பதாகவே அமையும்.

இலங்கையின் இனப்பிரச்சினை என்பது புதிய ஒரு விசயமுமல்ல, புதிய விவகாரமுமல்ல. இன்னும் அதைப் புதிதாக யாரும் ஆய்வு செய்ய வேண்டிய தேவையுமில்லை. போரினாற் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை, அவர்களுக்கான தேவைகள், அவர்களுடைய விருப்பங்கள், அவர்கள் எதிர்பார்க்கின்ற சங்கதிகள் கூடப் பகிரங்கமானவை.

இவற்றை அறிவதற்கு யாரும் புதிய பூதக்கண்ணாடிகளைத் தேடவேண்டியதில்லை. ஆனால், உலகம் இதையெல்லாம் விட்டுவிட்டு கண்ணாமூச்சியாடிக் கொண்டேயிருக்கிறது. இந்தக் கண்ணாமூச்சியாட்டத்தில் ஆளாளுக்கு தங்கள் பங்கு ஆட்டத்தை ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

உன்னிப்பாக அவதானிக்கும் எவருக்கும் இந்தச் சங்கதிகள் எல்லாம் சினத்தையே ஏற்படுத்தும். அல்லது சிரிப்பையூட்டும். அதிலும் ‘இனத்தாலும் பண்பாட்டாலும் ஒன்று பட்டவர்கள்’, ‘ரத்தத்தின் ரத்தங்கள்’, ‘உடன்பிறப்புகள்’ என்றெல்லாம் உணர்ச்சி பொங்கப் பேசும் தமிழகத்தினரின் இந்த மாதிரியான கீழ்த்தரமான அரசியல் அணுகுமுறைகள் வெட்கத்துக்குரியவை என்பது பொதுவான ஈழத்தமிழர்களின் கருத்தாகும்.

ஜெயலலிதாவைப் பொறுத்தவரையில், அவர் தன்னுடைய அதிரடித் தீர்மானங்களின் மூலமாகத் தன்னைச் சுற்றி ஒரு பிம்பத்தை ஏற்படுத்துவதில் வல்லவர். அதேபோல அவருடைய அதிரடி நடவடிக்கைகளே அவரைப் படு பாதாளத்திலும் தள்ளுவன. ஆனால், தன் முன்னே உள்ள நிலைமையைக் கையாள்வதில் அவர் வல்லவர், அசாத்தியமானவர் என்று சொல்லப்படுவதுண்டு.

இதை நிரூபிக்குமாற்போல, இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரத்தை இன்று அவர் கையாண்டு வருகிறார். சமநேரத்திலேயே அவர் மத்திய அரசுக்கும் தி.மு.க.வுக்கும் தனக்கு எதிரான சக்திகளுக்கும் சவாலை விடுமளவுக்கு இந்த விவகாரத்தைப் பயன்படுத்துகிறார்.

இதன்மூலம் தமிழகத்தில் அவருக்கு ஏற்படுகின்ற நெருக்கடிகளைச் சமாளித்துக் கொள்ள அவரால் முடிகிறது. எந்த அளவுக்கு ஜெயலலிதா கொழும்புடன் பகைத்துக்கொள்கிறாரோ அந்த அளவுக்கு அவர் தமிழகத்திலும் ஈழ ஆதரவாளர்களாலும் தமிழ்த் தேசிய சக்திகளாலும் கொண்டாடப்படுகிறார். அப்படிக் கொண்டாடப்படுவதையே ஜெயலலிதாவும் விரும்புகிறார்.

இப்பொழுது கொழும்பு ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சிக்கிறது. கொழும்புடன் பகைக்கும்போது அது தமிழர்களிடம் ஏகப்பெரும் மரியாதையை ஜெயலலிதாவுக்கு வழங்குகிறது. யார் கொழும்புடன் பகைக்கிறார்களோ அவர்கள் தமிழர்களின் கொண்டாட்டத்துக்குரியவர்களாகிறார்கள். எனவே கொழும்பைப் பற்றிக் கடுமையாக விமர்சிப்பதன் மூலம் தமிழர்களிடம் பேரபிமானத்துக்குரிய இடத்தை அவர் பெற்றுக் கொள்கிறார். இதன்மூலம் அவர் தமிழ்நாட்டின் ஏனைய உதவிகளைச் செய்யும் பொறுப்பிலிருந்தும் அதற்கான பொருளாதார இழப்பிலிருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொண்டார். ஆனால், வெளிப்படையாகப் பார்க்கும்போது தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பது போலத் தோன்றும். அதே வேளை இழப்புகளோ பொறுப்புகளோ இல்லாத ஒரு நிலையையும் பெற்றுக்கொள்ளலாம். இதையே ஜெயலலிதா எதிர்பார்த்தார். அதுவே நடக்கும்போது அவருக்கு இரட்டு மகிழ்ச்சியும் ஏகப்பட்ட நன்மையும் கிடைத்திருக்கிறது.

ஆனால் ஜெயலலிதா இலங்கையின் இனப்பிரச்சினைக்கு எத்தகைய அரசியற் தீர்வை முன்மொழிகிறார்? அதைச் செயற்படுத்துவதற்காக அவர் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்? அந்த நடவடிக்கைகளைச் செயற்படுத்துவதற்கான பொறிமுறைகளை அவர் எவ்வாறு உருவாக்குவார்? அதற்காக அவர் முழுமையான அளவில் விசுவாசமாக உழைக்கத்தயாரா?

இதெற்கெல்லாம் அவரிடம் பதிலில்லை. இதற்கான பதிலையோ விளக்கத்தையோ தமிழ்ப் பொதுவெளியினர் எதிர்பார்ப்பதும் இல்லை. பதிலாக எழுகின்ற அலையில் சேர்ந்த முழங்கிக்கொள்வதே பெரும்பாலானவர்களின் கதியாக உள்ளது.

வெளித்தோற்றத்துக்கு தமிழகக் கட்சிகளின் அல்லது தமிழக அரசின் இத்தகைய செயற்பாடுகள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவானவை போலத் தெரியலாம். ஆனால், இவை எத்தகைய அடிப்படைகளையும் கொண்டிராதவை என்பதைக் கடந்த கால, நிகழ்கால அவதானங்களைக் கொண்டே மதிப்பிட முடியும். எனினும் தமிழ் மனதுக்கு அதை ஏற்றுக்கொள்ளவும் நம்பவும் கடினமாகவே உள்ளது.

தமிழ் மனம் என்பது பெரும்பாலும் உணர்ச்சிகளால் கட்டமைக்கப்பட்டது. அதற்கு உணர்ச்சிகரமான விசயங்கள் எது நடந்தாலும் அதன்பால் அது சுலபமாக ஈர்க்கப்பட்டு விடும். இந்த அடிப்படையைத் தமிழ் அரசியலாளர்கள் நன்றாகவே புரிந்து வைத்துள்ளனர்.

எனவே அதற்குத் தகுந்த மாதிரி, அவர்கள் கவர்ச்சிகரமாக உணர்ச்சிகரமான விசயங்களை - இரத்தத்தில் தோய்த்த இறைச்சியாக - அடிக்கடி போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். புதிய இறைச்சிகளை மணந்தறியாத வரைக்கும் பழைய இறைச்சியே புதிய சரக்காக இருக்கும்.

ஆகவே, தற்போது ஜெயலலிதா தமிழ்நாட்டுக்கு மட்டும் “அம்மா“ என்ற அடையாளமாக அல்லாமல், மெல்ல மெல்ல ஈழத்தமிழர்களிடமும் அவர் “அம்மா“ என்ற அபிமான அடையாளத்தைப் பெறக் கூடிய நிலையை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கிறார்.

ஜெயலலிதா எந்த அளவுக்கு இந்தக் கோணத்தில் - புனிதப் பாத்திரமேற்று விஸ்வரூபம் எடுக்கிறாரோ அந்த அளவுக்குக் கருணாநிதி சிறுத்து தமிழர்களுக்கு எதிரானவர் என்ற சிறுமைப் பாத்திரத்தை ஏற்கவேண்டும்.

இதுவே தமிழர்களின் அளவு கோலின் முறைமையாகும். இதை உருவாக்கியதில் கருணாநிதிக்கும் பங்குண்டு.

அவரவர் உருவாக்கிய வகைமைகளுக்குள் அவர்களே சிக்கிக்கொள்ளும் அரசியல் விதியிற்தான் இன்றைய தமிழர்களின் அரசியல் எதிர்காலமும் நிகழ்காலமும் சிக்கியிருக்கிறது. ஏன் அவர்களுடைய கடந்த காலமுந்தான்.

00

0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB