கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

வடக்குக் கிழக்கில் பௌத்த விகாரைகள் எப்படிப் பெருக்கமடைகின்றன?

Tuesday, 5 June 2012
பௌத்த விகாரைகள், புத்தர் சிலைகள், சிங்களக் குடியேற்றங்கள், இராணுவத் தலையீடுகள், இனமுரண் அம்சங்கள் போன்றவற்றை சிங்கள ஆளும் தரப்பும் ஊக்குவிக்கின்றது. தமிழ்த் தேசிய சக்திகளும் ஊக்குவிக்கின்றன. இரண்டு தரப்புக்கும் இவை தேவையாகின்றன. இவற்றை மூலதனமாகக் கொண்டே இரண்டு தரப்பும் இனமுரணையும் இனவாதத்தையும் வளர்த்து லாபம் பெறுகின்றன. லங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் பௌத்த விகாரைகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டப்படுகிறது. யுத்தத்திற்குப் பின்னர் இந்த நிலைமையை ஓரளவு வெளிப்படையாகக் காணக்கூடியதாகவும் உள்ளது.

முன்னர் படையினரின் வழிபாட்டுக்காக, அவர்கள் புழங்குகின்ற இடங்களில் சிறிய அளவில் இருந்த பௌத்த விகாரைகள் இப்போது சற்றுப் பெருப்பிக்கப்பட்டு, நிலைப்படுத்தப்படுகின்றன.

ஆனால், இன்னும் இந்த விகாரைகளின் அமைப்பில் படைத்தரப்பே நேரடியாகச் சம்மந்தப்பட்டிருக்கின்றது. அரசாங்கத்தின் பிற அலகுகளோ, பௌத்த மத பீடத்தினரோ நேரடியாகச் சம்மந்தப்படுத்தப்படாமல் இந்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன. இது ஒரு தந்திராபாயமாகக் கூட இருக்கலாம்.

ஆனால், படையினரின் புழக்கம் அதிகமாக உள்ள இடங்களில், குறிப்பாக நிரந்தரப் படைமுகாம்கள் அமைந்துள்ள பிரதேசங்களில் இந்தப் புதிய விகாரைகளின் தோற்றம் அமைகின்றது.

இவற்றை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு பாதுகாப்பு அமைச்சுக்கு ஊடாக கிடைக்கின்றதா அல்லது பௌத்த சாசன அமைச்சின் மூலமாகக் கிடைக்கிறதா அல்லது ஜனாதிபதியின் விசேட ஒதுக்கீட்டின் மூலம் கிடைக்கின்றதா என்று சரியாகத் தெரியவில்லை.

வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் படையினரின் பிரசன்னம் அதிகமாக இருப்பதால், அவர்களுடைய வழிபாட்டுக்காக என்று இந்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன என்று சொல்லப்படுகின்றன. அவ்வாறெனில் படையினரின் விலகல் நிகழும்போது இந்த விகாரைகளும் அகன்று விடுமா?
முன்னர் பல இடங்களில் இவ்வாறு படையினரால் அமைக்கப்பட்டிருந்த விகாரைகள் அவர்கள் அந்த இடங்களைவ pட்டு அகன்றபோது இயல்பாகவே அகன்றுள்ளன.

ஆனால், அப்போது அமைக்கப்பட்டிருந்த விகாரைகளின் தன்மை வேறு. இப்பொழுது அமைக்கப்படும் விகாரைகளின் நிலைவேறு. இவை சற்றுப் பிரத்தியேகமான முறையில் அமைக்கப்படுகின்றன. நிரந்தரப் படைமுகாம்கள் என்ற கருவூலத்தின் அடிப்படையில் நிரந்தர விகாரைகளும் அமைக்கப்படுகின்றனவா என்பதே இங்கே எழுப்பப்படுகின்ற கேள்வியாகும்.
பொதுவாகவே படையெடுப்புகளை மேற்கொள்கின்ற தரப்புகள் தாம் கைப்பற்றிய இடங்களில் அல்லது தாம் ஆக்கிரமித்துள்ள பிரதேசங்களில் தமக்குரிய வழிபாட்டிடங்களை உருவாக்குவது வழமை.

படையினரின் உளவியல் இதில் பெரும் பங்கு வகிப்பதுண்டு. போர் என்பது எப்போதும் உயிரோடு சம்மந்தப்படும் ஒரு உணர்ச்சிகரமான விசயம் என்பதால், அந்த உணர்ச்சிகரமான உளவியற் சமநிலையைப் பேணுவதற்காக அவர்களுடைய வழிபாட்டுணர்வில் அதிகம் தலையிடாமல் அரசுகள் நடந்து கொள்கின்றன.

புரட்சிகரமான விடுதலை அமைப்புகளிற் கூட இத்தகைய ஒரு உளவியல் நிலையை நாம் காணலாம். விடுதலைப் புலிகள் மத விடயங்களில் வெளிப்படையாகவே இறுக்கமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த அமைப்பு. இருந்தபோதும் யுத்தத்திற்குச் செல்லும்போது போராளிகளிடையே காணப்படுகின்ற மத நம்பிக்கை சம்மந்தப்பட்ட விசயங்களில் அவர்கள் தலையிட்டதில்லை என்பது கவனத்திற்குரியது.

உலக வரலாறு என்பது படையெடுப்புகளோடு மதமும் படையெடுத்ததாகவே அமைந்துள்ளது. மதப் படையெடுப்புகள் நடந்தது தனியான வரலாறாகவும் உள்ளது.

இலங்கைக்கு ஐரோப்பியர்கள் படையெடுத்து வந்திருந்தபோது கூடவே மதத்தையும் கொண்டு வந்திருந்தனர்.

இன்று வடக்குக் கிழக்குப் பகுதிகளில் மட்டுமல்ல இலங்கைத்தீவின் அனைத்து இடங்களிலும் காணப்படுகின்ற பல்லாயிரக்கணக்கான தேவாலயங்கள் எதைச் சொல்கின்றன? இந்தத் தேவாலயங்களைக் காணும்போது ஐரோப்பியப்படையெடுப்பும் அவர்களுடைய மத விரிவாக்க மனோநிலையுமே தெரிகிறதல்லவா!

இதுதான் மொகலாயர்களின் படையெடுப்போடு இந்தியாவிலும் நடந்தது. இன்று டில்லியில் காணப்படுகின்ற இஸ்லாமியக் கட்டிடக் கலையின் பின்னணி என்ன? தாஜ்மஹாலின் சரித்திரத்துக்குப் பின்னே உறைந்திருக்கும் அரசியல் எத்தகையது?

இந்தோனேசியா, மலேசியா, பர்மா போன்ற நாடுகளில் இன்றும் காணப்படும் இந்து ஆலயங்கள் அன்றைய இந்தியப் படையெடுப்புகளை நினைவூட்டுகின்றன.

ஆகவே, படையெடுப்புகளும் போரும் ஆதிக்கமடையும் தரப்பின் மத விரிவாக்கத்தை உருவாக்குகின்றன. முதலில் படையினரின் வழிபாட்டுக்காக என அமைக்கப்படும் மத மையங்கள் பின்னர் நிரந்தர வழிபாட்டிடங்களாக மாறிவிடுகின்றன.

அடுத்த கட்டமாக அரசின் மூலமாக நலனைப் பெறவேண்டிய நிலையில் இருக்கும் மக்கள் இந்த மதத்தின் பக்கமாக இழுக்கப்படுகிறார்கள். ஆபிரிக்க நாடுகளில் இஸ்லாம் பரவியதும் கிறிஸ்தவம் பரவியதும் இதற்கான உதாரணங்களாகும்.

இத்தகைய ஒரு சுருக்கப் பின்னணில் இன்று வடக்குக் கிழக்கில் அமைக்கப்படுகின்ற பௌத்த விகாரைகள் குறித்து நாம் சிந்திக்கலாம்.
இலங்கையில் கடந்த 2500 ஆண்டுகளாக பௌத்தம் மிகச் செழிப்பாக இருந்துள்ளது என்பது வரலாற்றுத் தகவல்கள். மிகப் புகழுடைய மன்னர்கள் பௌத்தத்தின் வளர்ச்சிக்காக தங்களுடைய ஆட்சியில் இடமளித்திருக்கிறார்கள்.

இதற்கான ஆதரங்களாக இலங்கையின் வட மத்திய, மத்திய, மேற்கு மற்றும் தென்பிரதேசங்களெங்கும் ஏராளம் பௌத்த விகாரைகளும் அவற்றின் தொல் எச்சங்களும் காணப்படுகின்றன.

ஆனால், அப்போது வடக்குக் கிழக்கில் பௌத்தம் பெரிய அளவுக்குத் தன்னுடைய செல்வாக்கைச் செலுத்தியதாக இல்லை. அன்றைய சிங்கள மன்னர்கள் வடக்குக் கிழக்கில் பௌத்தத்தின் விரிவாக்கத்தை மேற்கொண்டதாகவும் வரலாற்றாதாரங்கள் துலக்கமாகக் கூறவில்லை.
பதிலாக இந்து ஆலயங்கள் தென்பகுதியில் இருந்துள்ளன. பொலனறுவ, அனுராதபுரம் போன்ற இடங்களில் இன்னும் காணப்படுகின்ற புராதன இந்து ஆலயங்கள் இதற்கு ஆதாரம்.

ஆகவே மிகப் புகழோடும் வலுவோடும் செழிப்பாகவும் இருந்த பௌத்தம் அன்றைய நாட்களில் வடக்குக் கிழக்குக்குப் பரவில்லை எனில் இதற்கு என்ன காரணம்? ஆதிக்க மனோநிலையை அந்த மன்னர்களும் அன்றைய மதபீடத்தினரும் கொண்டிருக்கவில்லையா? அல்லது அதற்கு ஏற்ற அரசியற் சூழல் வடக்குக் கிழக்கில் நிலவவில்லையா?

தமிழ்;ப்பிரதேசங்களில் காணப்படும் பௌத்த அடையாளங்கள் கூட தமிழ்ப் பௌத்தத்தின் எச்சங்களே தவிர, சிங்களப் பௌத்தத்தின் அடையாளங்கள் அல்ல என்பது இங்கே இன்னும் கூரிய கவனத்திற்குரியது.

ஆனால், 1500 களில் இலங்கைக்கு வந்திறங்கிய ஐரோப்பியர்கள் மிகக் குறுகிய 500 ஆண்டுகாலத்தினுள் எத்தனை ஆயிரக்கணக்கான தேவாலயங்களை நிறுவியிருக்கின்றனர்? இலங்கையின் கடற்கரை முழுவதும் தேவாலயங்களும் சிவைக் குறிகளும் எழுந்திருக்கின்றன.
அன்று கப்பல் வழியாகவே பயணங்கள் நடந்த காலமாகையால், வெளியே இருந்து பார்க்கும்போது அது ஒரு கிறிஸ்தவ நாட்டைப்போலத் தோற்றம் தெரிய வேண்டும் என்ற எண்ணத்தோடு கடற்கரைகளில் இத்தகைய ஏற்பாட்டை அன்று ஐரோப்பியர்கள் செய்தனர்.

இத்தகைய அடையாளப்படுத்தலை எல்லா ஆக்கிரமிப்பாளரும் ஒரு வாய்ப்பாட்டினைப் போலச் செய்கின்றனர். இது அவர்களுடைய ஒரு வகையான உளவியல் செயல் முறையாக உள்ளது.

இந்த நடைமுறையானது, காலமாற்றங்களால் மாறிவிடாத ஒன்றாகவே இன்னும் காணப்படுகிறது. இதில் இன வேறுபாடுகள், இட வேறுபாடுகள், கால வேறுபாடுகள் எதுவும் மாற்றங்களை ஏற்படுத்தவில்லை.

எனவே, இங்கே போரில் வெற்றியீட்டிய நிகழ்ச்சித்திட்டத்தின் அடிப்படையிலும் அது உருவாக்கிய உளவியலின் அடிப்படையிலும் அதன் விளைவாக உருவாகியிருக்கும் படையினரின் இருப்பை நிரந்தரப்படுத்தும் அடிப்படையிலும் பௌத்த விகாரைகளின் நிலைப்படுத்தல்களும் அமைகின்றன.

இது இலங்கையின் வரலாற்றிற்குப் புதியதல்ல. உலக வரலாற்றுக்கும் புதியதல்ல. ஆனால், எங்கே பிரச்சினை ஏற்படுகிறது என்றால், கடந்த காலத்தில்  இலங்கையில் செல்வாக்கோடு இருந்த சிங்கள ஆட்சியாளரும் பௌத்தமும் செய்யாத ஒரு வேலையை இன்றைய சிங்கள ஆட்சியாளரும் பௌத்தமும் செய்கின்றன என்பதே.

இங்கே இன்றைய சிங்கள ஆட்சியாளர் என்பது தனியே மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை மட்டும் குறிப்பிடவில்லை. அவருடைய ஆட்சி உட்பட, இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் நடந்து வருகின்ற அனைத்து ஆட்சிகளையும் குறிக்கிறது.

ஆனால், முன்னர் இத்தகைய அதீத நடவடிக்கைக்கான சூழல் இருக்கவில்லை. இப்போது போர் வெற்றி அந்தச் சூழலை அதிகரித்துள்ளது. எனவேதான் இத்தகைய நிலை இன்று தோன்றியுள்ளது.
இந்த நிலையை எப்படிக் கட்டுப்படுத்துவது? இதுவே இன்று எழுந்துள்ள முக்கியமான கேள்வியாகும்.

இந்த நிலையைக் கட்டுப்படுத்துவதற்கு பாராளுமன்றப் பேச்சுகளோ, பத்திரிகை அறிக்கைகளோ, மேசைப்பேச்சுகளோ, பெருமூச்சுகளோ உதவப்போவதில்லை.

பதிலாக இவையெல்லாம் மேலும் மேலும் அவர்களுடைய நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும். வலுப்படுத்தும். அதிகமாக்கும். அப்படியான ஒரு வரலாறுதான் கடந்த காலத்திலும் நடந்திருக்கிறது. சிங்களக் குடியேற்றங்களை எந்தப் பாராளுமன்றப் பேச்சாவது கட்டுப்படுத்தியதா? விகாரைகளை அமைப்பதை எதிர்த்து ஒரு பாராளுமன்ற உறுப்பினராவது போராட்டம் நடத்தத்தயாரா?

பதிலாக இப்படிப் பேசப் பேச அவர்கள் இதை இன்னும் இன்னும் அதிகமாகச் செய்கிறார்கள். இதை அவர்கள் ஒரு சவாலாகவே எடுத்துக் கொள்கிறார்கள். குடியேற்றங்களை எதிர்த்தபோது அது அதிகமாகியது. இராணுவப் பிரசன்னத்தை எதிர்த்தபோது அது இன்னும் வலுவாகியது. இன்று அது நிரந்தரமாகியுள்ள அளவுக்கு மாறியுள்ளது. அப்படியே இன்று விகாரைகளின் சமாச்சாரமும் அமைந்துள்ளது. பலவீனமான நிலையில் இருந்து கொண்டு சவால்விடுவோமாக இருந்தால் அதனால் பாதிப்புகளே ஏற்படும். ஆயுதப் போராட்டம் நடந்த வேளையில் மட்டும் இந்த எதிர்ப்புக்கும் சவாலுக்கும் ஒரு பெறுமதியிருந்தது. இன்று அத்தகைய நிலையில் இல்லை. இன்றைய சவால்கள் அவர்களை மேலும் ஊக்கப்படுத்துவதாகவே அமையும்.
அரசாங்கத்தரப்பும் சிங்களத்தரப்பும் இணைந்து செய்யும் இந்தச் செயல் நிச்சயமாகத் தவறானதே.

ஆனால் இதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எப்படியானது எனத் தெரிந்து கொள்ளாமல், வெறும் ஆராவராங்களை முன்னெடுப்பதே பயனற்றது – எதிர்விளைவைத்தரக்கூடியது என்று இங்கே வாதிடுகிறோம்.
இதேவேளை, இந்த நிலைiயைக் கட்டுப்படுத்த வேண்டும், மாற்ற வேண்டும் எனில் முதலில் படையினரைச் செயலிழக்க வைப்பது அவசியம். அவர்களுடைய வலுவையும் அவர்களுடைய நிரந்தர இருப்பையும் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் இருந்து அகற்ற வேண்டும்.

இது எப்படிச் சாத்தியமாகும்? இதுதான் பிரதான கேள்வியே!
படையினரை அகற்றுவதென்பது, படையினர் இருப்பதற்கான காரணங்களை இல்லாமற் செய்வதிலிருந்தே ஆரம்பிக்கும். இதற்கு இரண்டு வழிமுறைகளே உண்டு. ஒன்று அரசாங்கத்துக்கும் சிங்களத் தரப்புக்கும் இருக்கின்ற உளவியல் அச்சத்தைப் போக்குவது. மற்றது அவர்களுடைய மேலாதிக்க எண்ணத்துக்கு இடமளிக்காத வகையில் உபாயங்களை வகுப்பது. அடுத்தது, அதன்வழியாக அரசியல் தீர்வையும் உறுதிப்பாட்டையும் காண்பது.

ஆகவே மேற்குறித்த இந்த இரண்டுமே தீர்வைத் தரும். இந்த இரண்டையும் காணாதவரையில் எத்தகைய கண்டனங்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் சிங்களத் தரப்பையும் அரசையும் கட்டுப்படுத்தாது. வெளியுலக அழுத்தங்கள் எப்பொழுதும் எல்லாவற்றுக்கும் பொருந்திப்போகாது. அதை முழுதாக நம்புவதால் எத்தகைய பயனும் கிட்டிவிடப் போவதும் இல்லை.

00

0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB