கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

வரலாற்றுச் சுமையில் சிக்கிய இலங்கை

Thursday 28 June 2012



லங்கையின் இனப் பிரச்சினையில் வரலாற்று உணர்வும் அது ஏற்படுத்தியுள்ள உளச் சிக்கல்களும் முக்கியமானவை. குறிப்பாகத் தமிழ், சிங்களச் சமூகங்களிடம் உருவாக்கப்பட்டுள்ள வரலாற்று உணர்வென்பது அவற்றுக்கு ஒரு சுமையாகவே அமைந்துள்ளது.
 
அதிகாரப் போட்டிக்காக உருவாக்கப்பட்ட இந்த வரலாற்றுணர்வு அந்தப் போட்டிக்காகவே மேலும் மேலும் புனைவுருவாக்கம் செய்யப்படுகிறது. இத்தகைய அதிகாரம் வளப்பகிர்வுக்கான ஒரு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாகத் தொழிற்படுகிறது. வளப்பகிர்வென்பது பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே வரலாற்றுணர்வுக்கும் அடிப்படையாக இருப்பது பொருளாதாரமே. அதன் மேற்படையிலே வரலாற்றுணர்வு தொழிற்படுகிறது.
 
வரலாற்றுணர்வு என்பது சிலவேளைகளில் சில சமூகங்களில் சுமையாக அமைவதுண்டு. பல சமயங்களில் அது அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தி விடுவதும் உண்டு.
 
உலகத்தின் பெரும்பாலான போர்களும் பிணக்குகளும் சிக்கலான வரலாற்று வேர்களாலேயே ஏற்பட்டிருக்கின்றன. வரலாற்றுச் சிக்கல்களால் இன்றுங் கூட துயரங்களைச் சுமந்து கொண்டிருக்கும் சமூகங்கள் பல உள்ளன. அவை நிரந்தர அபாயத்தைத் தம்மகத்திற் கொண்டுள்ளன.
 
பலஸ்தீனத்தினியர்களின் வரலாற்றுக்குறிப்புகளுக்கும் இஸ்ரேலியர்களின் வரலாற்றுக்குறிப்புகளுக்கும் இடையில் செறிவு கொண்டுள்ள வேறுபாடுகளும் முரண்களும் இடைவெளிகளும் அங்குள்ள முரண்களாகியுள்ளன. அல்லது அந்தச் சமூகங்களின் இன்றைய முரண் அரசியலுக்கு இந்த ‘முரண்வரலாற்றுச் சிக்கல்கள்’ தாராளமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
 
கிறிஸ்தவர்களின் வரலாற்றுப் பார்வையும் இஸ்லாமியர்களின் வரலாற்றுப் பார்வையும் கொண்டுள்ள வேறுபாடுகளே சிலுவைப் போர்களாகவும் புனிதப்போர்களாகவும் மாறின. இத்தகைய முரண்பார்வையே புரொட்டஸ்தாந்துகளும் றோமன் கத்தோலிக்கர்களும் இரத்தம் சிந்துவதற்கும்  காரணமாகின.
 
இத்தகைய ‘முரண்வரலாற்றுநிலை’ யானது மேலும் முரண்பார்வையுடைய வரலாற்றுப்பார்வையைத்தான் வளர்த்துச் செல்லும். ஆகவே மேலும் மேலும் பகைமையே வளர்ந்து செல்லும்.
 
பகையின் அடியிலிருந்து முளைக்கும் வரலாற்றுப் பார்வையானது ஒரு போதுமே நிதானத்தைத் தராது. பதிலாகச் சமனிலைக் குலைவையே தரும். சமனிலைக் குலைவுடைய வரலாற்றுப் பார்வையைக் கொண்டுள்ள எந்தச் சமூகமும் தன்னுடைய துக்கங்களைத் தீர்த்துக் கொள்ளவும் முடியாது.
 
பதிலாக அது மீள மீள உளச் சிக்கலுக்கும் வாழ்க்கைச் சிக்கலுக்குள்ளுமே தள்ளப்படும்.
 
எத்தகைய வரலாற்றுப் பெருமையும் அல்லது சிறுமையும் நிகழ்கால, எதிர்காலச் சவால்களை எதிர்கொள்வதில்தான் அர்த்தம் பெறுகின்றன. நிகழ்கால, எதிர்காலச் சிக்கல்களை வெற்றிகொள்வதற்குத் தடையாக இருக்கும் வரலாற்றுணர்வு நிச்சயமாக அந்தச் சமூகங்களுக்குச் சுமையாகவே அமைகிறது.
 
இலங்கையும் சிக்கலான வரலாற்று வேர்களால் தன்னைச் சிறைப்படுத்தியுள்ளது. இது ஒரு வகையான உளவியற் குறைபாடே. தாழ்வுச் சிக்கல்களால் கட்டமைந்த உளவியற் குறைபாடு இது. இந்தத் தாழ்வுச் சிக்கல்களே ஒவ்வொரு சமூகத்திடமும் தன் தன் வரலாற்றைக் குறித்துப் பெருமிதங்களை உருவாக்கியுள்ளன. அடிப்படையில் இவை போலிப் பெருமிதங்கள். நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் சிதைப்பதற்கு ஒரு வகையில் இந்த வரலாற்றுப் போலிப் பெருமிதங்கள் காரணமாகியுள்ளன.
 
ஆனால், இதைக்குறித்து தமிழ் சிங்களச் சமூகங்கள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. பதிலாக மேலும் மேலும் வரலாற்றுச் சிக்கல்களுக்குள் தங்களின் தலைகளை நுழைத்துக் கொண்டிருக்கின்றன.
 
இதனாலேயே ‘இலங்கையின் ஆதிக்குடிகள் நாமே’ எனத் தமிழர்கள் கூறுகின்றனர். இப்படிச் சொல்வதன்மூலம் தங்களின் வரலாறு குறுக்கமடைகிறது எனச் சிங்களவர் கருதுகின்றனர். இதனால், அவர்கள் கலவரமடைகிறார்கள்.
 
பதிலுக்குத் ‘தமிழர்களுக்கு இந்த நாடு உரித்துடையதல்ல, இது சிங்களர்களுக்கே உரியது. தமிழர்கள் வந்தேறு குடிகள்’ எனச் சாடுகிறார்கள்.
 
இப்படி எதிர்மறையான விளக்கங்களை ஒவ்வொரு சமூகமும் கொண்டிருக்கும்போது எப்படி அவற்றிடையே அமைதியும் இணக்கமும் ஏற்படும்? இத்தகைய எதிர்நிலை எண்ணங்களைக் கொண்டிருக்கும் சமூகங்களைத் தன்னிடம் கொண்டுள்ள நாடு எவ்வாறு சமாதானத்தை எட்டமுடியும்? இத்தகைய நிலையில் அந்த நாட்டில் எவ்வாறு அமைதி நிலவும்? அது எப்படி முன்னோக்கிப் பயணிக்க முடியும்?
 
நிகழ்காலத்தில் எதிர்கொள்ளவேண்டிய பல்லாயிரம் சிக்கல்களும் சவால்களும்  உள்ளன. இந்தச் சவால்கள் பல வகைப்பட்டனவாக உள்ளன. பிராந்திய ரீதியிலானவையாக, சர்வதேச ரீதியிலானவையாக, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியின்பாற்பட்டவையாக, பொருளாதார ரீதியிலானவையாக, அதற்குப் பயன்படுத்தப்படும் அரசியல், இராசதந்திர ரீதியிலானவையாக எனப் பல வகைப்பட்டுள்ளன.  
 
ஆகவே இந்தச் சிக்கல்களையும் சவால்களையும் வெற்றிகொண்டாற்தான் எதிர்காலத்தை சுமுகமான முறையில் இலங்கையர்கள் நெருங்க முடியும். இல்லையெனில் துயரக்குழிகளில்தான் விழவேண்டும். துயரக்குழியில் வீழ்கின்ற சமூகங்களுக்கு எதிர்காலமே கிடையாது. அவை பின்னோக்கிய சமூகங்களாகவே இருக்கும்.
 
இலங்கை பின்னோக்கிய திசையில்தான் கடந்த காலத்திற் பயணித்துள்ளது. இதில் தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகங்கள் என்ற வேறுபாடுகளும் விலக்குகளும் கிடையாது.
 
பொருளாதார வளர்ச்சியிலும் வாழ்க்கைத் தரத்திலும் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியிலும் மிகப் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது இலங்கை.
 
இதிலிருந்து எப்படி மீள்வது? இதுவே இன்றைய முதன்மைக்கேள்வியாகும். இனப் பிணக்கும் முரண்களும் நாட்டையும் சமூகங்களையும் பின்னோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்றன.
 
எத்தகைய சிறப்பான அபிவிருத்தித்திட்டங்களையும் முன்னேற்ற நடவடிக்கைகளையும் சிதைத்துவிடும் அளவுக்கு இனமுரணும் பிணக்குகளும் உள்ளன. இதற்குக் காரணமான அல்லது காரணமாகப் பயன்படுத்தப்படும் வரலாற்றுணர்வு உள்ளது.
 
கடந்த காலம் பற்றிய தீவிர பிரக்ஞை நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் தீயிடுகிறது. இதன்மூலம் அபாயக்குழிகள் தாராளமாக முளைகொள்கின்றன. அரசியல் உள்நோக்கங்களால் செய்யப்பட்ட புனைவுருவாக்கங்கள் இன்று தமிழ் - சிங்களச் சமூகங்களின் உளவியலை நிர்ணயம் செய்யும் அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளன.
 
உலகத்தின் பெரும்பாலான வரலாற்றுச் சிக்கல்கள் இந்த மாதிரி அரசியல் நோக்கில் செய்யப்படும் புனைவினாலேயே ஏற்படுகின்றன. அந்த வகையிற்தான் இலங்கையின் வரலாறும் அமைகிறது.
 
இதை நாம் வரலாற்றுச் சுமை என்றே சொல்லலாம்.
 
தமிழர்கள் தங்களுடைய தொன்மையை ஆதாரமாகக் கொண்டு, தங்களுடைய இன்றைய இருப்பை உறுதி செய்ய முயற்சிக்கிறார்கள். அதற்காக அவர்கள் சங்ககாலம் வரையிற் பயணம் செய்கிறார்கள். இன்னும் சற்று அழுத்தமாகச் சொன்னால், சங்ககாலத்திலேயே அவர்கள் நிலைகொள்கிறார்கள்.
 
பொதுவாகவே தமிழர்கள் அதிகமதிகம் பெருமைப்படுவது, அவர்களுடைய சங்ககாலப் பெருமைகளிலேயே. அதற்குப்பின்னர் சோழர்காலத்தில்.
 
ஆனால், இந்தப் பெருமைகள் எதுவும் ஈழத்தமிழர்களுக்குரியதல்ல. அப்படி இவற்றை ஈழத்தமிழர்களும் கொள்ள முற்பட்டால், அது ‘இந்தியாவின் வழித்தோன்றல்களே ஈழத்தமிழர்கள்’ எனக் கொள்ளும் சிங்கள இனவாதிகளின் கூற்றுக்கு பொருத்தம் சேர்ப்பதாக அமையும்.
 
இதேவேளை சிங்கள வரலாறு இலங்கைப் பௌத்தத்தின் வரலாறாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் செறிவாகவும் இன்னும் துலக்கமான அடையாளங்களையுடையதாகவும் இந்தச் சிங்கள பௌத்த வரலாற்று ஆதாரங்கள் இருப்பது சிங்கள அதிகாரத்தரப்பினருக்கு அதிக வாய்ப்பை அளிக்கின்றது.
 
இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு சிங்களத்தரப்பு தன்னுடைய வரலாற்றுக் குறிப்புகளை மேம்படுத்த முனைகிறது.
 
இத்தகைய அரசியல் நோக்கங்கங்கொண்ட ஒரு ஏற்பாடாகவே அது மகாவம்சத்தை எழுதியதும் இன்னும் அதை முதன்மைப்படுத்துவதும்.
 
மகாவம்சத்துக்கு எதிரான ஒரு மனப்போக்கும் வரலாற்றுத் தேடலும் தமிழ்ச் சமூகத்தில் வலுவாக உள்ளதையும் நாம் அவதானிக்கலாம்.
ஆகவே இதுவொரு போட்டி நிலை – பகை நிலை – எதிர் நிலைச் செயற்பாடே.

ஒவ்வொரு சமூகத்திடமும் காணப்படும் அடையாளங்களைப் பயன்படுத்தி, அதிகாரத்தைப் பெற முனைகின்றன அதிகாரச் சக்திகள். இந்த நிலையில் இதற்குப் பலியாகின்றனர் அந்தச் சமூகங்களைச் சேர்ந்த மக்களும் எதிர் நிலையில் உள்ள சமூக மக்களும்.

உண்மையில் மக்களை எதிரெதிர் நிலைகளுக்குக் கொண்டு செல்வதும் அதிகார சக்திகளே. அவற்றின் அரசியல் நலன்களே வரலாற்றுணர்வை அதிகமதிகம் ஊட்டுகின்றன. பின்னர் இந்த வரலாற்றுணர்வென்பது அந்தந்தச் சமூகங்களின் உளவியலாகவும் பரிமாணம் பெறுகிறது. அது அப்படியே அந்தச் சமூகங்களின் ஆழ்மனதில் உறைந்து, அவற்றிற்குச் சுமையாகவும் அமைந்து விடுகிறது.

ஆகவே ஒரு வகையில் இலங்கையில் வரலாறு என்பதைத் தமிழர்களும் சிங்களவர்களும் ஒரு சுமக்க முடியாத சுமையாகச் சுமந்து கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்ல வேணும்.

அந்த அளவுக்கு வரலாற்றுச் சுமையினால் அவர்கள் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த வரலாற்றுச் சுமை அவர்களை இலகுவில் முன்னோக்கி நகரவிடாது.  

0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB