கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

மயானத்தை நோக்கிய நாடு

Sunday 10 June 2012



















லங்கையின் அரசியல் நிலவரங்களைக் குறித்து மதிப்பீடுகளைச் செய்வது இன்று மிகச் சவாலான ஒரு காரியம். அதேவேளை இது மிகமிகச் சுவாரஷ்யமான விசயமும் கூட. ஆனால், ஆழமாக நோக்கினால், இது மிகத் துயரந்தோய்ந்த ஒரு கட்டம்@ ஒரு வரலாற்று நிகழ்ச்சி என்பது புரியும்.

வெளிச்சக்திகளின் ஆதிக்கப்போட்டிக்குள் மிக நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டிய நிலையில் இலங்கை இன்று தள்ளப்பட்டிருக்கு.

அதேவேளை அது உள்நாட்டிலும் ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

இந்த நிலையில் இலங்கையின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றைக் குறித்து எத்தகைய மதிப்பீட்டுக்கு வரமுடியும்? இதுவே சவாலானது.

வெளிச்சக்திகளான அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக அணி, சீனா, இந்தியா ஆகியவை வௌ;வேறு கோணங்களில் பங்கேற்கும்  முக்கோணப்போட்டிக்குள் இலங்கையைச் சிக்க வைத்துள்ளன. வலையிற் சிக்கவைத்து மீனைப் பிடிப்பதைப்போன்ற நிலை இது.

இந்த நிலைமைக்குள் - நெருக்கடிக்குள் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என்ற வேறுபாடின்றி அனைவருமே சிக்கும் நிலையே காணப்படுகிறது.

ஏனெனில், இந்த நெருக்கடி இலங்கை என்ற அடையாளத்துக்கு ஏற்படும் நெருக்கடியாகவே உள்ளது.

மேற்படி முக்கோண அணியின் சிந்தனையிலும் இலங்கை என்ற பொது அடையாளமே காணப்படுகிறது.

ஆனால், தமது தலையீடுகளுக்கும் செல்வாக்கிற்கும் நலன்களுக்கும் அவை நாட்டினுள் காணப்படுகின்ற இடைவெளிகளை – பிரிநிலைகளை – முரண்களைத் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்துகின்றன.

அதேவேளை அரசாங்கத்தின் தவறுகளை நாட்டின் தவறாகச் சித்திரித்து அந்தத் தவறுகளைக் கண்டிப்பதாகவும் அவற்றை ஒரு கருவியாகப் பயன்படுத்தித் தமது தலையீட்டைச் செய்வதற்கும் இவை முயற்சிக்கின்றன.

இதில் முன்னணிப் பாத்திரத்தை வகிப்பது அமெரிக்கா தலைமையிலான மேற்குலக அணியே.

இந்தியா இனமுரண்களையும் பிற விவகாரங்களையும் தன்னுடைய நலன்களுக்காகப் பயன்படுத்த விளைகிறது.

சீனா இலங்கையின் பொருளாதாரத் தேவைகள், அரசியல் ஆதரவு போன்ற காரணங்களைப் பயன்படுத்தித் தன்னுடைய நலன்களைப் பெற்றுக்கொள்ளவும் செல்வாக்கை வளர்த்துக் கொள்ளவும் முயற்சிக்கிறது.

ஆகவே, அவரவருக்கு ஏற்றவாறு நிலைமைகளைக் கையாண்டு தமது நலன்களைப் பேண முற்படுகின்றனர்.

இவ்வாறு வெளிச் சக்திகளின் போட்டிக்குள் சிக்குண்டிருக்கும் எந்த நாடும் ஒரு போதும் நிம்மதியாக இருக்க முடியாது.

வளத்தைப் பேணவும் முடியாது. வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கவும் முடியாது.

இந்த ஆதிக்கப் போட்டிக்குள் மிகப் புத்திபூர்வமாகச் செயற்பட்டுத் தமது நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என உள்நாட்டு அரசியலாளர்களும் மக்கள் சமூகமும் சிந்திக்கலாம். அத்தகைய சிந்தனைப் போக்குகள் மெல்ல மெல்ல வளர்ந்து வருவதையும் நாம் அவதானிக்க முடிகிறது.

ஆனால், அது சிரிப்புக்கிடமானது.

வல்லரசுகளின் தேவைகளை மிஞ்சி, வெற்றிகளைப் பெற வேண்டுமானால், அது பிரிவுகளையும் இடைவெளிகளையும் கொண்டுள்ள நிலைமைகளில் சாத்தியமாகாது.

பதிலாக, ஒருங்கிணைந்த நடவடிக்கைகளினாலும் பிரிக்கப்படாத உறவினாலுமே முடியக் கூடியது.

ஆனால், இன்றைய நிலைமை மிகக் கவலையளிக்கும் நிலையிலேயே உள்ளது.

அரசாங்கமும் அதனுடைய தலைமையும் யதார்த்தத்தைக் கணக்கில் எடுக்கவேயில்லை.

மிகக் கடுமையான அழிவுகளின் மத்தியில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த அரசாங்கம் அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, அமைதியையும் நல்லிணக்கத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வருவதற்குத் தவறியுள்ளது.

அத்தகைய ஒரு நிலை எட்டப்பட்டிருக்குமானால், இன்று நாட்டுக்கும் அரசாங்கத்துக்கும் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளில் பாதிக்குமேலானவை உருவாகாமலே போயிருக்கும்.

குறிப்பாக, இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கி நகர்ந்திருந்தாலே பெரும்பாலான பிரச்சினைகள் தீர்ந்திருக்கும். நாட்டிலுள்ள மக்களில் ஒரு சாராராகிய தமிழர்களைப் பயன்படுத்தி, அவர்களுடைய மனக்குறைகளைப் பயன்படுத்தி, அவர்கள் சந்திக்கின்ற அரசியல் நெருக்கடிகளைப் பயன்படுத்தி, தமது நலன்களைப் பேணும் வெளிச் சக்திகளின் முயற்சிகள் தடுக்கப்பட்டிருக்கும்.

ஆனால், இதை மறுத்துரைப்போரும் உண்டு. அவர்கள் சொல்கிறார்கள், இலங்கையின் மீது முக்கோண வல்லரசுகள் ஆதிக்கம் செலுத்தும் காலகட்டம் இது. இதில் அவை எப்படியும் தங்கள் கரங்களை நுழைப்பதற்கு முயற்சித்தே ஆகும். இனப்பிரச்சினையைத் தீர்க்க விடாமல் வைத்திருப்பதே இந்தச் சக்திகள்தானே என்று.

இதில் ஒருவகையான உண்மைகள் இருக்கலாம். ஆனால், இன முரணைத் தீர்க்கும்போது இலங்கைச் சமூகங்களுக்கிடையிலான முரண்கள் தணிந்து விடும். அதன்மூலம் ஒரு கட்டிறுக்கமான நிலைமை பெரும்பாலும் நாட்டுக்குள் நிலவும்.

இதற்கு நாம் ஒரு உதாரணத்தை இங்கே முன்வைக்கலாம். இன்றைய அரசாங்கத்தின் மீது அளவுக்கதிகமான செறிவழுத்தங்கள் நிலவுகின்றபோதும் அது எல்லாவற்றையும் எவ்வாறு தாக்குப் பிடிக்கிறது? பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருப்பதனால்தானே! ஆனால் இந்தப் பெரும்பான்மைப் பலமானது தனியே சிங்கள மக்களை மட்டும் உள்ளடக்கியது. இதை முழுமைப்படுத்தி, அனைத்துச் சமூகங்களும் இணைந்த பெரும்பான்மைப் பலமாக ஆக்கினால், அது நாட்டை மேலும் உறுதிப்பாடுடையதாக்கியிருக்கும்.

அத்தகைய ஒரு நிலை உருவாக்கப்பட்டிருக்குமானால், இன்று மனித உரிமை விவகாரங்கள் பற்றிய குற்றச்சாட்டுகள், இயல்பு நிலையை உருவாக்க வேண்டும் என்ற அழுத்தங்கள், ஜனநாயகம் பற்றிய பேச்சுகள், யுத்தக்குற்றங்கள், நல்லிணக்கச் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கட்டளைகள், அரசியற் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நெருக்கடிகள் எல்லாம் கருவிகளாகப் பயன்படுத்தப்பட முடியாத ஒரு நிலை ஏற்பட்டிருக்கும்.

ஆனால், இதை அரசாங்கம் செய்யாமல் இன்று தன்னைச் சுற்றியும் நாட்டைச் சுற்றியும் நெருக்கடிகளை உருவாக்கி வைத்துள்ளது.

இது உண்மையில் அகங்காரமும் மூடத்தனமும் கலந்த ஒரு நிலைதான். இத்தகைய நிலையோடு ஆட்சிநடத்தினால் அதன் விளைவு மிகப் பயங்கரமானதாகவே இருக்கும்.

இந்தப் பயங்கரத்துக்கு ஆட்சியிலிருப்போர் மட்டுமல்ல, மக்களும் முழு நாடுமே விலையைக் கொடுக்க வேண்டியேற்படும். இங்கேதான் மக்களும் மக்கள் அமைப்புகளும் ஊடகங்களும் சிந்தனையாளர்களும் புத்திஜீவிகளும் சிந்திக்க வேண்டியுள்ளது. முன்னரங்குக்கு வந்து செயற்பட வேண்டியுள்ளது.

தங்களை நோக்கி வருகின்ற நெருக்கடிகள் அனைவருக்கும் பொதுவானவை, இலங்கையர்கள் என்ற வகையில் அனைவரும் இணைந்தே இதை முறியடிக்க வேண்டும் என இவர்கள் சிந்திக்க வேண்டும்.

ஆனால், அப்படிச் சிந்திக்கும் நிலை இல்லை என்பது இன்னும் அதிக வருத்தத்திற்குரியது. இலங்கைக்கு வரும் நெருக்கடிகள் என்பது, அரசாங்கத்துக்கு வரும் நெருக்கடிகளாகவும் அதிலும் ஆட்சியாளர்களுக்கு வரும் நெருக்கடிகளாகவும் சிங்கள மக்களுக்கு வருகின்ற நெருக்கடிகளாகவும் பார்க்கின்ற போக்குத் தமிழர்களிடம் உள்ளது.

இலங்கைக்கு வந்துள்ள இன்றைய நெருக்கடியானது இன்றைய ஆழந்தரப்புக்கே என்ற எதிர்க்கட்சிகள் சிந்திக்கின்றன.

இலங்கைக்கு – நாட்டுக்கு வருகின்ற நெருக்கடிகளைப் பார்த்துத் தமிழர்கள் சந்தோசப்படுகிறார்கள். ஆகவே அவர்கள் எதிரிகளாகத்தான் இருப்பார்கள் என்று அரசாங்கமும் சிங்கள மக்களும் கருதுகிறார்கள்.

இப்படி வௌ;வோறு கோணங்களில் முரண்நிலைகள் விரிவாக்கம் பெறுகின்றன. தங்கள் நாடு நெருக்கடிகளால் சூழப்பட்டிருப்பதை விளங்கிக் கொள்ளாமல் இப்படி ஆளாளுக்குக் கோணங்கித்தனமாகச் சிந்திக்கும் மக்களை என்ன என்று சொல்வது?

ஆனால், மக்கள் இப்படித்தான் தவறாகச் சிந்திக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை இப்படி வைத்தே அரசியல்வாதிகளும் கட்சிகளும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தங்களின் வாழ்வையும் வயிற்றையும் நிரப்பிக் கொள்கிறார்கள்.

போதாக்குறைக்கு மதவாதிகளும் இப்படித்தான் சிந்திக்கிறார்கள்.

முட்டாள்தனமாகச் சிந்திப்போரையும் மூடத்தனமாகச் செயற்படுவோரையும் கொண்டுள்ள நாடு கோமாளிகளைக் கொண்டுள்ள நாடாகவே இருக்கும். அல்லது துக்கத்துக்குரிய நாடாக இருக்கும். இன்றைய இலங்கை அப்படித்தான் உள்ளது.

யுத்தத்திலிருந்து நாடு மீண்டுள்ளது. அது அமைதிக்குத் திரும்பியுள்ளது எனக்கண்ட கனவுகளும் கொண்ட நம்பிக்கைகளும் சிதறடிக்கப்பட்டு வருகின்றன.

நாடு யுத்த காலத்தையும் விட மிக நெருக்கடியான – அபாயமான நிலைமைகளை எதிர்நோக்கியுள்ளது. எனவேதான் அது பிரச்சினைகளின் கனதியோடு உள்ளது.

யாராவது சொல்லுங்கள், இலங்கை அமைதியை நோக்கி, சுபீட்சத்தை நோக்கி, இன நல்லிணக்கத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று உங்களால் உறுதியாகக் கூற முடியுமா?

ஆகவேதான், இலங்கையின் அரசியல் நிலவரங்களைக் குறித்து மதிப்பீடுகளைச் செய்வது இன்று மிகச் சவாலான ஒரு காரியம். அதேவேளை இது மிகமிகச் சுவாரஷ்யமான விசயமும் கூட. ஆனால், ஆழமாக நோக்கினால், இது மிகத் துயரந்தோய்ந்த ஒரு கட்டம்@ ஒரு வரலாற்று நிகழ்ச்சி என்பது புரியும் என்று கூறவேண்டியுள்ளது.

00

0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB