கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

இரணமடுத்தண்ணீர் யாருக்குச் சொந்தம்? இன்று அது யாருக்காக? - மறைந்திருக்கும் அரசியல்!

Wednesday 27 June 2012



ரணமடுத்தண்ணீர் யாருக்காக? இந்தக் கேள்வி இலங்கையின் வடபகுதிச் சமகால அரசியலிலும் பொருளாதார நடவடிக்கைகளிலும் முக்கியமான ஒன்று. தவிர்க்க முடியாத ஒன்றும் கூட. மேலும் இந்தக் கேள்வியைக் குறித்து நாம் ஆழமாகச் சில விசயங்களைப் பார்க்க வேண்டியுமுள்ளது. அந்தளவுக்கு இந்தக் கேள்வியின் உள்ளே மறைந்திருக்கின்ற சேதிகளும் அரசியலும் மிகப் பெரியவை.

முக்கியமாக கிளிநொச்சியில், இரணமடுக்குளத்திற்கு மிகக் கிட்டிய பிரதேசத்தில் இருக்கின்ற 60 வீதமான மக்களுக்கு இரணமடுத்தண்ணீர் கிடைப்பதில்லை. அவர்களுக்குரிய குடிநீர் மற்றும் விவசாயத்துக்கான நீர் என்பதற்கே எந்த வகையான ஏற்பாடுகளும் இல்லை. ஆனால், யாழ்ப்பாணத்துக்கு மட்டும் நீர் கொண்டு செல்லப்படுவதைப் பற்றிச் சிந்திக்கப்படுகிறது. இதன் உள்ளரசியல், உள் நோக்கம் என்ன?

இரணமடுக்குளத்தின் தண்ணீரை இதுவரையிலும் அந்தப் பிரதேச விவசாயிகளே பெருமளவுக்கும் பயன்படுத்தி வந்தனர். வலது கரை, இடது கரை என இரண்டு பெரிய வாய்க்கால்கள் பாசன நீரைப் பல கிலோ மீற்றர்களுக்குக் கொண்டு செல்கின்றன. இரணமடுவின் பாசனப் பிரதேச எல்லை விவசாயிகளுக்கே இந்தக் குளமும் நீரும் சொந்தம். அவர்களே அதை ஆளுகை செய்கின்றனர். அவர்களைக் கேட்காமல் எவரும் எந்தத் தீர்மானத்தையும் எடுக்க முடியாது.

ஆகவே அங்கே விவசாயிகளின் குரலே மேலோங்கியிருக்கும். நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள், பணிப்பாளர்கள், அரசாங்க அதிபர், பிரதேச செயலர், விவசாயத் திணைக்களம், கமத்தொழிற் திணைக்களம் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகளையும் விட விவசாயிகளுக்கே அதிக சக்தி அங்கு.

இதனால், யாழ்ப்பாணத்துக்கு வேண்டிய குடிநீரை இரணமடுவிலிருந்து பெறலாம் என்று யோசித்தாலும் அதைப் பெறுவதற்கு இந்த விவசாயிகளின் சம்மதத்தைப் பெற வேண்டும். எனவே இது தொடர்பாகப் பல கூட்டங்கள் யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலுமாக நடத்தப்பட்டுள்ளன. என்றாலும் இன்னும் முழுமனதோடு கிளிநொச்சி விவசாயிகள் நீரை வழங்குவதற்குச் சம்மதம் தரவில்லை.

‘கிளிநொச்சி விவசாயிகளுக்கான வெகுமதிகளைத் தரலாம். அதாவது, இரணமடுவின் நீரேந்து அணையை மேலும் உயர்த்தி மேலதிக நீரைச் சேமிக்கலாம். வாய்க்கால்களைப் புனரமைக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் சேகரிக்கப்படும் நீரையே யாழ்ப்பாணத்துக்கு எடுத்துச் செல்வது. அதாவது வழமையாக விவசாயச் செய்கைக்குப் பயன்படுத்தப்படும் நீர்ப்பங்கீட்டுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் உபரியான நீரை மட்டுமே யாழ்ப்பாணத்துக்கு வழங்கப்படும்’  எனச் சொல்லப்பட்டாலும் கிளிநொச்சி விவசாயிகளின் சந்தேகங்கள் தீரவில்லை.

இப்பொழுது அவர்கள் பல நிபந்தனைகளுடன் காத்திருக்கிறார்கள். வாய்க்கால்கள் செம்மையாகப் புனரமைக்கப்பட வேணும். குளத்தின் அணைக்கட்டு உயர்த்தப்படவேண்டும். வழமையான பாசன நீரின் அளவு குறையக் கூடாது. கிளிநொச்சி மாவட்ட மக்களின் குடிநீர்ப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இவையெல்லாம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே யாழ்ப்பாணத்துக்கான நீரை வழங்குவதைப் பற்றிச் சிந்திக்கலாம் என்றவாறாக இந்த நிபந்தனைகள் உள்ளன.

இந்த நிபந்தனைகளெல்லாம் ஓரளவுக்கு திட்டத்தை முன்மொழிந்தோரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக ஆசிய அபிவிருத்தி மற்றும் இன்பா ஆகியவற்றின் நிதி உதவியும் பெறப்பட்டுள்ளது. வாய்க்கால் புனரமைப்புக்காக இன்பா என்ற அமைப்பு மட்டும் 3300 மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளது.

இதேவேளை, இரணமடுவின் நீரை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்லக் கூடாது எனப் பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்த ஒரேயொரு அரசியற் தலைவர் திரு. வீ. ஆனந்தசங்கரி மட்டுமே. (ஆனந்தசங்கரியின் அரசியல் கிளிநொச்சியை மையப்படுத்தியது என்பதாற்தான் அவர் இப்படிச் சொல்லியிருக்கிறார். ஆகவே அவரும் அரசியல் ரீதியாகத்தான் இந்தப் பிரச்சினையைக் கையாள்கிறார்).
ஏனையவர்கள் மதிலின்மேலே எந்தப் பக்மும் பாய முடியாமற் குந்தியிருக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரை, யாழ்ப்பாண மக்களையும் பகைத்துக் கொள்ள முடியாது. கிளிநொச்சி மக்களையும் பகைத்துக் கொள்ள முடியாது. அப்படிப் பகைத்துக் கொண்டால் அது அவர்களுடைய வாக்கு வங்கிகளைப் பாதிக்கும். எனவே தங்கள் விசயத்தில் கவனமாக இருக்கிறார்கள்.

ஆனாலும் பெரும்பாலானவர்களுக்கு யாழ்ப்பாணத்துக்குத் தண்ணீரைக் கொண்டு போவதற்கே உள்ளுர விருப்பம். அதை அவர்கள் வெளியே சொல்லவில்லை. அவ்வளவுதான்.

அதிகாரிகளைப் பொறுத்தவரையில் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் யாழ்ப்பாண அதிகாரியான திரு. பாரதிதாசன் யாழ்ப்பாணத்துக்குத் தண்ணீரைக் கொண்டு செல்வேன் எனப் பிடிவாதமாக நிற்கிறார். பாரதிதாசனே இந்தத்திட்டத்துக்குப் பொறுப்பான முதன்மை அதிகாரியாகவும் உள்ளார். அவரோடு வேறு பல அதிகாரிகளும் இதற்காக முயற்சிக்கிறார்கள்.

இதற்கான திட்டவரைவுகளும் தயாரிக்கப்பட்டு விட்டன.
நீரை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்லும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் ஓரளவுக்கு முதற்கட்ட நிறைவை எட்டியுள்ளன.

குறிப்பாக மதிப்பீடு, திட்ட வரைவு என்பன முடிவடைந்து, நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போதைய தகவலின்படி மிக விரைவில் யாழ்ப்பாணத்துக்கான நீர் விநியோக நடவடிக்கைகளுக்கான அடிப்படை வேலைகள் ஆரம்பமாகவுள்ளன. இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியில் 164 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்  சாதக பாதங்களைப் பற்றித் திட்ட மிட்ட முறையில் ஒரு கட்டப் பரப்புரையும் ஊடகங்களிற் செய்யப்பட்டுள்ளது. பாரதிதாசனே சில கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

அவருடைய திட்டம் வரவேற்க வேண்டியது என்பதில் ஒரு பக்க நியாயம் உண்டு. அவருடைய அபிப்பிராயம் மட்டுமல்ல, யாழ்ப்பாணத்துக்குத் தண்ணீரைக் கொண்டு செல்ல வேணும் என்று விரும்புகின்ற ஏனையவர்களின் விருப்பத்தையும் நாம் ஏற்றுக்கொள்ளலாம். இது தொடர்பாக கிளிநொச்சி மக்களுக்கும் நல்ல புரிதல் உண்டு.

குடிநீருக்காகக் கஸ்ரப்படுகின்ற ஒரு பிரதேச மக்களின் அவலத்தை யாரும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதை அனுமதிக்கவும் முடியாது என்பதில் கருத்து வேறுபாடுகள் இல்லை.

நீர்ப்பிரச்சினையால் மாநிலங்களுக்கிடையிலும்  நாடுகளுக்கிடையிலும் பலவிதமான பிரச்சினைகள் உலகெங்கும் உள்ளன. தமிழகத்தில் முல்லைப்பெரியாறு, காவிரி போன்ற நதிகளின் நீர்ப்பங்கீடு தொடர்பான பிரச்சினைகள் இன்னும் கொதிநிலையிலேயே உள்ளன. அத்தகைய ஒரு நிலை இங்கும் மாவட்டங்களுக்கிடையில் ஏற்படக்கூடாது.

ஆகவே யாழ்ப்பாண மக்களுக்கான நீரை வழங்குவதைப்பற்றிச் சிந்திப்பது  அவசியமானதே. ஆனால், பாரதிதாசன் உள்ளிட்ட பலரும் பார்க்கத் தவறும் விசயங்கள் பலவுண்டு. அவையே இங்கே கவனத்திற்குரியனவாகின்றன.

கிளிநொச்சியின் பல பிரதேச மக்கள் இரணமடுவின் நீரைப் பெற முடியாத நிலை இருக்கும்போது, அதைப் பயன்படுத்துதற்கான திட்டங்கள் இல்லாதபோது, அவற்றுக்கான தீர்வைக் காணாமல் எப்படி யாழ்ப்பாணத்துக்குத் தண்ணீரைக் கொண்டு செல்வதைப்பற்றிச் சிந்திக்கலாம்?

தற்போதைய திட்டத்தின்படி கிளிநொச்சி மாவட்டத்திலும் அறிவியல் நகர், பூநகரி, பரந்தன், கண்டாவளை, தருமபுரம், பளை, தட்டுவன்கொட்டி போன்ற இடங்களின் குடிதண்ணீர்ப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று சொல்லப்பட்டாலும் - இந்தப் பிரதேசங்களின் குடிநீர் வினியோகத்துக்கான திட்டங்கள் உள்வாங்கப்பட்டிருந்தாலும் ஏனைய விவசாயிகள் இரணமடுவின் நீரைப் பயன்படுத்துவதைப்போல கிளிநொச்சியில் இருக்கும் மலையகத் தமிழர்களுக்கான வாய்ப்புகள் இல்லை. இதைக்குறித்து ஏன் இவர்கள் சிந்திக்கவில்லை?

கிளிநொச்சி விவசாய மாவட்டமாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்குப்பிரதான காரணம் இந்த மாவட்டத்திலிருக்கும் குளங்களும் அவற்றின் மூலமான நீர்ப்பாசனமும் அதன் மூலமான பயிர்ச்செய்கை வசதிகளுமே. ஆனால், இந்த வசதிகளைப் பெறுவது பெரும்பாலும் யாழ்ப்பாணத்திலிருந்து ஏற்கனவே இந்தப் பகுதிகளுக்கு வந்து குடியேறியோரே.

இவர்களுக்குப் பின்னர் வந்து குடியேறிய மலையக மக்களுக்கு இங்கேயுள்ள எந்தக் குளத்திலும் உரிய முறையில் உரித்துகள் இல்லை. அவர்கள் வாழ்கின்ற, பயிர் செய்கின்ற பகுதிகளில் நீர்ப்பாசனத்திட்டங்கள் எதுவும் இல்லை. அவர்களுக்கு அப்படியொரு பாசனத்திட்டம் தேவை என யாரும் சிந்;தித்ததாகவும் இல்லை.

தேசிய அலைகளில் மறைக்கப்பட்ட விசயங்களில் இதுவும் ஒன்று. (மனோ கணேசன் இதைக்குறித்துக் கவனிப்பது நல்லது).

இப்போது 164 மில்லியன் அமெரிக்க டொலர் பில்லியன் செலவில் யாழ்ப்பாணத்துக்குத் தண்ணீரைக் கொண்டு போவதற்குத் திட்டமிட்டவர்களின் கண்களிலும் கவனத்திலும் இந்த மலைய மக்களின் முகங்கள் தெரியவில்லை. அவர்களுடைய நிலைமை புரியவில்லை.  பெரியவர்களின் கவனமெல்லாம் யாழ்ப்பாணத்தைப் பற்றியதே.

அம்பாந்தோட்டையிலேயே சூரியன் உதிக்க வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது. அனைத்துப் பாதைகளும் யாழ்ப்பாணத்திற்கே செல்ல வேண்டும்  என்று யோசிக்கிறார்கள் யாழ்ப்பாணவாசிகள்.

கிளிநொச்சியில் இருந்து – அதாவது இரணமடுவில் இருந்து தண்ணீரை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்வதற்கான சம்மதத்தைப் பெறும் கூட்டத்தில் இந்த (நீர்ப்பங்கீடு இல்லாத) மக்களின் ஒப்புதல் கேட்கப்படவில்லை. குளத்துக்கு உரிமையில்லாதவர்களிடம் எதற்காகச் சம்மதம் கேட்கவேண்டும் என யாரும் கேட்கலாம்.

அந்த உரிமை இன்னும் இந்த மக்களுக்கு வழங்கப்படாததே பெரும் தவறு.

கேட்கப்பட்ட ஒப்புதலானது, கிளிநொச்சியின் பாசன நிலத்தையுடைய விவசாயிகளிடம் மட்டுமே. இரணமடு தொடர்பாக இதுவரையான சட்ட ரீதியான உரித்து அவர்களுக்கு மட்டுமே உள்ளது என யாரும் வாதிடலாம். ஆனால், இந்த ஒப்புதலை கிளிநொச்சியிலுள்ள அனைத்துத் தரப்பு மக்களிடமே பெற்றிருக்கவேண்டும். இதை மனச்சாட்சிக்கும் அறிவுக்கும் முன்னால் யாரும் மறுக்க முடியுமா?

மட்டுமல்ல, இரணமடுக்குளம் கட்டப்பட்டதன் பின்னாலுள்ள இரகசியத்தையும் - உண்மையையும் நாம் இங்கே பார்க்க வேண்டும். கனகராயன் ஆற்றை வழிமறித்தே இரணமடுக்குளம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆற்றின் மூலம் முன்னர் பயனைப் பெற்றுச் செழிப்பைப் பெற்ற பிரதேசங்கள் கண்டாவளை மற்றும் வட்டக்கச்சி – பெரிய குளம் பகுதியைச் சேர்ந்தவை. கனகராயன் ஆற்றின் வண்டல் மண்ணினால் வளத்தைப் பெற்றுச் சிறப்பாக விளங்கின இந்தப் பிரதேசங்கள்.

ஆனால் இன்று?

இன்று இந்தப் பிரதேசங்கள் வரண்ட நிலையிலேயே உள்ளன. அல்லது இரணமடுவின் கசிவு நீரையே பெரும் பொக்கிஷமெனப் பெறவேண்டியுள்ளன.

இரணமடுவை நிர்மாணிப்பதற்குத் திட்டமிட்ட அந்த நாட்களில் இந்தப் பிரதேச மக்களுக்கு நீர் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. விவசாயம் பாதிக்கப்படாது, நீர்ப்பிரச்சினை ஏற்படாது என்று சொல்லப்பட்டது. ஆனால், நடந்தது என்ன? இந்தப் பிரதேசங்கள் நிரந்தர வரட்சிக்கும் ஒளியிழப்புக்கும் உள்ளாகின. அதாவது இந்தப் பிரதேச மக்கள் அப்படியே கைவிடப்பட்டு வஞ்சிக்கப்பட்டனர்.

அதைப்போலவே இப்போது இன்னொரு வஞ்சனையாக கிளிநொச்சியின் ஏனைய மக்களுக்குரிய நீரை வழங்குவதைப் பற்றிச் சிந்திக்காமல், யாழ்ப்பாணத்துக்கு நீரைக் கொண்டு செல்லும் முயற்சியும் அமைகிறது.

ஆகவேதான் இவை எல்லாவற்றிலும் ஒரு அரசியல் உள்ளது என்கிறோம். அது எவ்வளவுதான் மறைத்தாலும் வெளிப்படையாகத் தெரியக் கூடிய அரசியல். அது யாழ்ப்பாணத்தவரின் நலன்களை முதன்மைப்படுத்தும் அரசியலாகும்.

அடுத்தது, கிளிநொச்சியில் உள்ள விவசாயிகள் என்ற நிலவளமுடையோரைப் பற்றிச் சிந்திக்கும் அரசியலாகும். இந்த விவசாயிகளும் முன்னாள் யாழ்ப்பாணத்தவர்களே. அல்லது ‘யாழ்ப்பாணத்து வேர்கள்’ அல்லது ‘யாழ்ப்பாணத்தின் அடிக்கொடிகள்’ எனும் தொடர்ச்சியையுடைவர்கள். இவர்களுடைய தண்ணீர்ப்பிரச்சினை தீர்ந்தாற் போதும் என்று சிந்திக்கும் மனப்பாங்கு அது.

ஆகவே இந்த அரசியலின்படி எப்படியாவது யாழ்ப்பாணத்துக்குத் தண்ணீரைக் கொண்டு போகவேணும் என்று யாழ்ப்பாணத்துப் படித்த மேட்டுக்குடியினரும் அந்தச் சிந்தனை வயப்பட்டவர்களும் சிந்திக்கிறார்கள். அவர்கள் அதற்கேற்றவாறு ஆசிய அபிவிருத்தி வங்கி, ‘இன்பா’ வின் உதவி, இலங்கை அரசின் சம்மதம் எனப் பலவற்றையும் மிகக் கச்சிதமாகச் செய்துவிட்டனர்.

இதற்கு வசதியாக திட்டமிடற் செயலகங்கள், உயர் அதிகார பீடங்கள் போன்றவற்றில் இருக்கும் யாழ்ப்பாணத்தவர்கள் செயற்படுகிறார்கள். இந்த இடங்களில் - உயர் பீடங்களில் இவர்கள் தொடர்பையும் இருப்பையும் கொண்டிருப்பதால், அதற்கு வசதியாகச் சிந்திக்கிறார்கள்.  இவர்கள் யாழ்ப்பாணத்துக்கு வெளியே எதைப்பற்றியும் அதிகம் சிந்திப்பதில்லை.

எனவே, இந்த வகையில் சிந்தித்து, ‘எத்தகைய சவால்கள் வந்தாலும் பரவாயில்லை. அதை எதிர்கொண்டு யாழ்ப்பாணத்துக்கு இரணமடுவின் தண்ணீரைக் கொண்டு வருவேன்’ எனக் கடந்த ஆண்டு நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஸ் குணவர்த்தனாவையே யாழ்ப்பாணத்தில் சொல்லவைத்து விட்டனர்.

‘இனவாதி’ என அதிகமான யாழ்ப்பாணத்தவர்களால் நிராகரிக்கப்படுகின்ற தினேஸ் குணவர்த்தன இந்த விசயத்தில் மட்டும் பாயாசத்தைப் பாதாம் பருப்போடு கலந்து யாழ்ப்பாணத்தவர்களின் வாயில் ஊற்றும் ஒருவராகக் கருதப்படுகிறார்.

அந்த அளவுக்கு இந்தத் திட்டம் யாழ்ப்பாணத்தவர்களுக்கு வெற்றியைத்தரும் ஒன்றாக மாறிவருகிறது. அது அவர்களுக்கு நிச்சயமாக வெற்றியைத்தரத்தான் போகிறது.

இதேவேளை கிளிநொச்சியில் இரணமடுவின் நீரை கடந்த நாற்பது ஆண்டுகாலமாக அனுபவிக்க முடியாமல் ஒரு தொகுதி மக்கள் உள்ளனர் என்று சொன்னோம். அவர்கள் கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதியில்தான்  உள்ளனர் என்றும் குறிப்பிட்டோம். கனகபுரம், உதயநகர், விவேகானந்த நகர், ஆனந்தபுரம், ஆனந்தநகர், கிருஷ்ணபுரம், விநாயகபுரம், பாரதிபுரம், மலையாளபுரம், தொண்டமான்நகர், பொன்னகர், முறிகண்டி, சாந்தபுரம், திருநகர், ஜெயந்திநகர், செல்வாநகர் என ஒரு பெரும் பிரதேசத்தில் இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

ஆழக்கிணறுகளை அல்லது குழாய்க்கிணறுகளை நம்பியிருக்கிறது இவர்களுடைய சீவியம்.

இவ்வாறு இந்தப் பிரச்சினையின் உண்மை நிலையைச் சொல்வதன்மூலம் பிரதேசங்களுக்கிடையிலான முரண்பாடுகளை உருவாக்குவதாக யாரும் கவலைப்படவோ, குற்றம்சாட்டவோ வேண்டியதில்லை.

ஏனெனில், யாழ்ப்பாணத்துக்கு குடிநீரைக் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் என்ன?

யாழ்ப்பாணத்தில் வடமராட்சி, தென்மராட்சியின் பல இடங்கள், தீவுப்பகுதி, யாழ்நகரப்பகுதி போன்ற இடங்களில் குடிநீர்ப்பிரச்சினை என்பது நூற்றாண்டுகளின் பிரச்சினை. இதற்கான நிரந்தரத்திட்டம் பற்றிச் சிந்திக்க வேண்டும். ஆனால், அப்படி யாரும் சிந்தித்ததாக இல்லை. இதேவேளை அங்கே குடியிருப்பு நிலத்துக்கும் பிரச்சினையுண்டு. பெரும்பாலான செம்மண் - விவசாய நிலமே குடியிருப்புகளாக்கப்படுகின்றன. ஆகவே இந்தப் பெருங்குறைபாடுகளைப் பற்றி ஏன் யாரும் பொருட்படுத்தவில்லை?

அங்கே குடிநீர்ப்பிரச்சினை ஒரு தலைப் பிரச்சினையாக மாறியுள்ளது என்றால், அங்கே ஏற்பட்டு வரும் செறிவான குடிப்பரம்பலைப் பிற பிரதேசங்களுக்குப் பகிர்ந்து கொள்ளலாமே!

ஆனால், அதற்கு அவர்கள் தயாராக இல்லை. அவர்கள் யாழ்ப்பாண நகரை விட்டு தென்மராட்சி போன்ற இடங்களுக்கே செல்லத்தயாரில்லை. தென்மராட்சியிலுள்ளோர் யாழ்ப்பாண நகரை நோக்கிச் செல்ல விரும்புகிறார்கள். பலர் அப்படிச் சென்று விட்டார்கள். இதுதான் அங்குள்ள மனப்பாங்கும் யதார்த்தமும். எனவே மாற்று வழிகள் கிடையாது என்றே இத்தகைய நீரை எடுத்துச் செல்லும் திட்டம் பற்றி யோசிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, யாழ்ப்பாணத்துக்குக் குடிநீரைக் கொண்டு செல்ல முனைவோர் கிளிநொச்சியில் குடிநீரும் இல்லாமல், இரணமடுவின் நீரைச் சொந்தம் கொண்டாடவும் முடியாமல் இருக்கின்ற கிளிநொச்சி மேற்கு மற்றும் தென்பகுதி மக்களைப் பற்றி இப்பொழுது கட்டாயமாகச் சிந்திக்கவேண்டும். அந்தச் சிந்தனையைக் கோருகிறது இந்தப் பத்தி. அதேவேளை, இந்தப் பிரச்சினையை அரசாங்கமும் தெளிவாக அணுகவேண்டும்.

00

0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB