கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

உணர்ச்சிகரமான அரசியல் அணுகுமுறையின் விளைவுகள் ?

Monday 11 June 2012







அரசியலில் உணர்ச்சிகரமான அணுகுமுறை ஏற்படுத்துகின்ற விளைவுகள் எப்போதும் பயங்கரமானவையாக - பாதகமானவையாகவே அமைவதுண்டு. அறிவுபூர்வமாக அணுகப்படும் விசயங்கள் நன்மைகளையும் வெற்றியையுமே தருவன. உலக அரசியல் வரலாறு இந்த இரண்டு பிரிகோடுகளில்தான் இயங்குகிறது. எதை நாம் விதைக்கின்றோமோ அதுவே பயிராகவும் விளைச்சலாகவும் நமக்கு மீண்டும் கிடைக்கும். இது அடிப்படை விதி.

இந்த விதியை எப்படிப் புறந்தள்ளிவிட முடியும்?

ஆனால், தமிழர்கள் இந்த விதியைப் புறந்தள்ளியே வருகிறார்கள். அவர்கள் வரலாற்றின் எதிர்த்திசையிலேயே நெடுங்காலமாகப் பயணிக்கிறார்கள். அதனாலேயே அவர்கள் தொடர்ந்தும் தோல்விப் பரப்பில் நின்று விம்ம வேண்டியுள்ளது. தங்களால் வெற்றியடைய முடியாத போதெல்லாம் எதிரியைச் சபிக்கிறார்கள். எப்போதுமே எதிர்த்தரப்பை வசைபாடுவோரும் எல்லை கடந்த அளவுக்கு எதிர்ப்போரும் தோல்வியை நிரந்தரமாக்கியோராகவே இருப்பர். இதுவும் ஒரு அடிப்படை விதியே. வெற்றியடைவோர் எதிர்த்தரப்பைப் பற்றி அதிகம் பொருட்படுத்துவதில்லை. தோல்விகண்டவர்களின் உள்ளம் எப்போதும் குமுறிக் கொண்டும் கொந்தளித்துக் கொண்டுமிருக்கும்.

இதனால், தோல்வியை நிரந்தரமாகவே தங்களிடம் கொண்டுள்ள சமூகங்கள், எதிர்த்தரப்பின் மீதான சபித்தலிலும் கடிந்து கொள்ளுதலிலும் ஒரு வித சுகத்தைக் காண்கிறன. அதுவும் உணர்ச்சி மயப்பட்டே நிகழ்கிறது. அவை மேற்கொள்கின்ற எதிர்ப்பு நடவடிக்கைகள் கூட உணர்ச்சிகரமானவையாகவே உள்ளன.

வெற்றிதோல்வி என்பதற்கு அப்பால் எதிர்த்தரப்பை வசைவதிலேயே தமிழர்களும்  சமனிலை அடைகிறார்கள்@ அல்லது திருப்தியடைகிறார்கள். யதார்த்தத்தில் தோல்வியின் மீதே அவர்கள் வாழ்கிறார்கள்@ உறங்கிக் கொண்டிருக்கின்றனர்.

உணர்ச்சிகரமாக அணுகப்படும் அரசியலானது அழிவிலும் பின்னடைவிலுமே போய்ச் சேர்கிறது. ஆனால், அந்த அரசியலுக்கு ஒரு கட்டம் வரையில் மக்களிடம் கிடைக்கின்ற பேராதரவு மிகப் பெரிது. இது ஒரு விளங்கிக் கொள்ளக் கடினமான விசயந்தான். ஆயினும் அப்படித்தான் யதார்த்தம் உள்ளது.

எதன்பாற்பட்டதாயினும் ஒரு சிறு உணர்ச்சிப் பொறிபோதும், மிகப் பெரிய தீயை மூட்டிவிடுவதற்கு. அது மூண்டெரியும் காட்டுத்தீயைப்போல விளாசி எரிந்து எல்லாவற்றையும் அழித்துவிட்டு அப்படியே அடங்கிவிடும். அதனுடைய இறுதிச்சேரிடம் மயானமே. இன, மதக் கலவரங்கள் எல்லாம் உணர்ச்சிகரமான அணுகுமுறையின் விளைவுகள். இந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படும் யுத்தமும் சரி, அரசியலும் சரி மயானத்திலேயே போய் முடிகின்றன.

ஈழத்தமிழர்களின் அரசியற் போராட்டமும் பெரும்பாலும் உணர்ச்சிமையத்தையே அடிப்படையாகக் கொண்டது.

இதற்கு அண்மைக் கால உதாரணம் ஒன்று.

பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத் பதவியேற்று 60 ஆண்டு நிறைவு பெற்றதையடுத்த கொண்டாட்டத்துக்காக கடந்த 03.06. 2012 இல் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ லண்டனுக்குச் சென்றவேளை அங்கே புலம்பெயர் தமிழர்கள் மிகப்பெரிய அளவில் தீவிர எதிர்ப்பு நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளால் மகிந்த ராஜபக்ஷ மிகுந்த நெருக்கடிக்குள்ளாகியுள்ளார். இது இலங்கைக்கு மேலுமொரு நெருக்கடியாக அமைந்துள்ளது. ஏற்கனவே போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் போன்ற குற்றச்சாட்டுகளால் துவண்டு போயிருக்கும் இலங்கைக்கு இந்த எதிர்ப்பு மேலும் ஒரு சங்கடமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய ஒரு நெருக்கடியை மகிந்த ராஜபக்ஷ 2010 டிசம்பரிலும்  லண்டனில் சந்தித்திருந்தார். அப்போது அவர் லண்டனில் உள்ள சிங்களச் சமூகத்தின் அழைப்பின் பேரில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஒக்ஸ்போர்ட் சங்கத்தில் உரையாற்றுவதற்காகச் சென்றிருந்தார். அங்கே புலம்பெயர் தமிழர்கள் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகளால் உரையாற்ற முடியாத நிலையிலே திரும்பியிருந்தார். இதனால், நிகழ்ச்சி நிரலைச் சீராகப் பேணமுடியாத நிலைமைக்குள் அவர் தள்ளப்பட்டார்.

இது குறித்து சர்வதேச ஊடகங்களும் கூடுதல் கவனிப்பைச் செலுத்தியிருந்தன.

இந்த அளவில் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் புலம்பெயர் தமிழர்கள் உட்பட ஏனைய தமிழர்களுக்கும் வெற்றியாக அமைந்துள்ளதாக ஒரு தோற்றமுண்டு. இவை தமக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என வாதிடுவோரும் உள்ளனர். அவர்கள் அதை அப்படித்தான் நம்புகின்றனர். அதிலும் முழு அளவில் நம்புகின்றனர்.

அதேவேளை, இந்த நடவடிக்கை வெளிப்பார்வையிலும் முதற் கட்டத்திலும் ஒரு எல்லைவரையில் கணிசமான வெற்றியைத் தமிழ்த்தரப்பிற்குக் கொடுத்துள்ளது என்பது உண்மையே.

ஆனால், அது அத்தகைய வெற்றியைப் பெற்றுள்ளதா? அல்லது அது நிர்ணயிக்கத்தக்க வெற்றியைத் தரக்கூடிய அணுகுமுறையாக அமைந்துள்ளதா என்பதே இங்கே உள்ள கேள்வியாகும். அதாவது, இதன் இறுதி விளைவுகள் எப்படி அமைந்துள்ளன? மேலும் எவ்வாறு அமையவுள்ளன? என்பதே அந்தக் கேள்விகளாகும்.

இதை மேலும் விவாதிப்பதற்கும் விளங்கிக் கொள்வதற்கும் முன்னர் இதற்குப் பொருத்தமான நாமறிந்த இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம்.

விடுதலைப்புலிகள் தங்களின் போர் மற்றும் அரசியல் நடவடிக்கைகளால் பல வெற்றிகளைக் குவித்தவர்கள். மிகப் பெரிய இராணுவ வியப்புகளையும் வெற்றிகளையும் சாதனைகளையும் பெற்றவர்கள். இதனையிட்டுத் தமிழ்ச் சமூகம் தன் மீதும் புலிகளின் செயற்பாடுகளின் மீதும் பெருமையும் நம்பிக்கையும் கொண்டது.

மட்டுமல்ல, புலிகள் இருபது ஆண்டுகளாக இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை அரங்கில் செலுத்திய செல்வாக்கு இன்னொரு வகையில் தமிழ் மக்களிற் பெரும்பாலானோரை வியப்படைய வைத்தது. அவ்வாறே அரசியல் எழுச்சி நடவடிக்கைகளிலும் புலிகள் பெருந்திரளான மக்களை அணிதிரள வைத்தனர். புலிகளின் மேதின ஊர்வலங்கள், அரச எதிர்ப்பு அடையாளக் கூட்டங்கள், பொங்குதமிழ் போன்ற எழுச்சி அரங்குகள் மிகப் பெரிய வெற்றியின் சின்னங்களாகவே உணரப்பட்டன. அதாவது இந்த மதீப்பீடென்பது பொதுநிலைப்பட்டது அல்லது பெரும்பான்மையோரின் உணர்தலாக இருந்தது.

ஆனால், இறுதி விளைவு? அது அனைவரும் அறிந்ததே. எதிர்பார்த்ததையும் விடப் பேரழிவில், பெரும் பின்னடைவில் எல்லாமே முடிந்தன. உணர்ச்சிகரமான அரசியலின் செல்வாக்கு இந்தப்போராட்டத்தில் அதிகரித்திருந்தமையே இத்தகைய நிலைக்குக் காரணமாகும். எதையும் உணர்ச்சி மயப்பட்டு அணுகியதன் விளைவு அது.

இந்த இடத்தில் இன்னொரு உதாரணத்தையும் நாம் பார்க்கலாம்.

இலங்கை இந்திய உடன்படிக்கையை எதிர்த்து புலிகளுக்கும் இந்தியப் படைகளுக்கும் இடையில் நடந்த போரின் பின்னர் இந்தியப் படைகள் வெளியேறிச் சென்றன. இந்த வெளியேற்றத்துக்கான உண்மைக் காரணங்கள் பலவாக இருந்தாலும் புலிகளின் கூற்றானது, தமது நடவடிக்கையின் விளைவாகவே இந்தியப் படைகள் வெளியேற வேண்டியிருந்தது என்று அமைந்தது. ‘உலகத்தின் நான்காவது வல்லரசுடன் மோதி வெற்றிபெற்றோம்’ என்று பகிரங்கமாகவே புலிகள் கூறிவந்தனர்.

ஆனால், இறுதியில் (பத்தொன்பது ஆண்டுகளின் தாமதத்தின் பிறகு) இந்தியா புலிகளைத் தோற்கடித்தது.

ஆகவே, வெளித்தெரிந்த வெற்றித் தோற்றப்பாடுகளின் இறுதி விளைவுகள் பயங்கரமானவையாக – பாதகமானவையாகவே அமைந்தன.

ஆனால், இனவாத அரசாக இருப்பினும் அதை எதிர்கொள்கின்ற இலங்கை அரசின் அணுகுமுறை பெரும்பாலும் அறிவுபூர்வமானது. குறிப்பாகச் சிங்களத் தரப்பின் அரசியல் அடித்தளம் அறிவினால் கட்டப்பட்டுள்ளது. ஆகவேதான் அவர்களிடம் ஒரு செழிப்பான ராஜதந்திரப் பாரம்பரியம் வளர்ந்துள்ளது. எதிரிகளையே நண்பர்களாக்கிக் கொள்ளும் தந்திரோபாயத்தில் சிங்களத்தரப்பு தேர்ச்சியுடையது. எதிரியைத் தனிமைப்படுத்தி எதிரியின் எதிரிகளைக் கொண்டே தன்னுடைய எதிரியை முறியடிக்கும் உபாயத்தையும் அவர்கள் மிக இலகுவாகக் கையாண்டு வருகிறார்கள். எனவேதான் அவர்கள் மிகக் கடினமான நிலைமைகளிலும் வெற்றியைப் பெறுகிறார்கள்.

கூடவே ஈழப்போராட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தியா மற்றும் வெளிச் சக்திகள்  அனைத்தினது அணுகுமுறைகளும் அறிவுபூர்வமாகவே உள்ளன. எனவேதான் அவை கண்ணுக்குப் புலனாகாத வகையில் மிகக் கச்சிதமாக வெற்றிகரமான அரசியல் அடைவுகளைப் பெறுகின்றன.

ஆகவே வெளித்தெரியும் தோற்றங்கள், மேலோட்டமான உணர்கை சார்ந்த  மதிப்பீட்டுக்கும் அப்பால் செறிந்திருக்கின்ற அறிவுசார் அணுகுமுறைகளே வெற்றியை நிர்ணயிக்கின்றன.

இந்தப் பின்னணியில் நாம் முன்னே கூறிய மகிந்த ராஜபக்ஷவின் லண்டன் விஜயத்தை ஒட்டிய புலம்பெயர் தமிழர்களின் அரசியல் அணுகுமுறைகளைப் பார்க்கலாம்.

புலம்பெயர் தமிழர்கள் மேற்கொண்ட நடவடிக்கை உணர்ச்சிகரமாகவே அமைந்துள்ளது. இந்த நடவடிக்கை ஒழுங்கு படுத்தப்பட்ட விதத்திலிருந்து, அது வழிநடத்தப்பட்டமை, அதன் வெளிப்பாடு, அதன் விளைவு அனைத்தும் உணர்ச்சிகரமானவையாகவே அமைந்துள்ளன.

புலிக்கொடிகளைத் தாங்கியவாறு, இலங்கை அரசுக்கும் அதன்படைகளுக்கும் அதிபருக்கும் எதிரான கோஷங்களை உரத்துக் கூவியவாறு அதிபரின் பயண வழிகள், பங்கேற்பிடங்கள் போன்றவற்றில் எதிர்ப்பாளர்கள் நின்றுள்ளனர். மிக ஆக்ரோஷமாகத் தங்களின் எதிர்ப்பை அதிபருக்குக் காட்டியுள்ளனர்.

ஒரு காலத்தில் இலங்கையிலே சுமுகமாக வாழ்வதற்கான சூழ்நிலை இல்லை என்று வெளியேறி, வெளிநாடுகளில் தஞ்சமடைந்த தமிழர்கள் அங்கே இன்று அரசியற் சக்தியாக இவ்வாறு உருத்திரண்டிருக்கிறார்கள் என்பது இலங்கை அரசுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் உணர்த்தப்பட்டுள்ளது.

தாங்கள் பட்ட வதைகளுக்காகவும் தமது இனத்தவர் பட்ட துயரங்களுக்காகவும் இந்த எதிர்ப்பை இவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இதைத் தவிர அவர்களுக்கு வேறு வழிகள் தெரியவில்லை. முன்னர் உள்நாட்டில் - தாம் பிறந்த தாய் நாட்டில் - அவமானப்படுத்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் இன்று இரவல் தாய்நாட்டில் நின்று தங்களுடைய அவமானங்களைத் துடைத்தெறிய முற்படுகிறார்கள். அல்லது தங்களுக்கு நெருக்கடியைத் தந்த அரசின் தலைவர்களை எதிர்க்கிறார்கள் அல்லது அவர்களுக்கு நெருக்கடிகளைக் கொடுக்க முற்படுகிறார்கள். இதெல்லாம் புரிந்து கொள்ளக் கூடியதே.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையைக் குறித்த செய்திகளை இலங்கை தொடக்கம் உலகத்தின் பல திசைகளிலும் இருக்கும் பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் முக்கியத்துவமளித்து வெளிப்படுத்தியுள்ளன.

இதேவேளை, வெளிநாடொன்றிற்கு விருந்தாளியாகச் செல்லும்போது அங்கே உள்ள சொந்த நாட்டின் மக்களாலே வரவேற்கப்படுவதற்குப் பதிலாக இவ்வாறு நெருக்கடிக்குள்ளாக்கப்படும் நிலையை ஒரு தலைவர் சந்திப்பதென்பது சாதாரணமானதல்ல. இதற்குக் காரணம் இன ஒடுக்குமுறையும் அது ஏற்படுத்திய வரலாற்றுக் காயங்களும் நீதி மறுப்பின் எதிர்விளைவுகளுமேயாகும்.

இதைத்தான் கால மாற்றம் அல்லது வரலாற்றின் முரண்சுவை என்பதா?

ஆனால் புலம்பெயர் தமிழர்களின் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் எதிர்பார்ப்பதையும் விட எதிர்நிலை அம்சங்களையே அதிகமாக உருவாக்கக் கூடியனவாக உள்ளன.

1.   இந்த எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டவர்கள் புலிகளின் ஆதரவாளர்கள் மட்டுமே. ஆகவேதான் அவர்கள் புலிக்கொடிகளை ஏந்தியிருந்தனர். எனவே இது தோல்வியைச் சந்தித்த புலிகளின் எச்சங்கள் மேற்கொண்ட ஒரு நடவடிக்கை என இலங்கை அரசு சிங்கள மக்களுக்கும் உலகத்துக்கும் சொல்லிச் சமாளித்துக் கொள்ள வாய்ப்பை அளித்துள்ளது.

2.   புலிகளின் எச்சங்கள் இன்னும் இலங்கை அரசுக்கும் அமைதிக்கும் எதிராகவே செயற்படுகின்றன. ஆகவே இதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அவசியம் என்ற பேரில் இலங்கையில் படைத்துறைக்கான முக்கியத்துவத்தை மேலும் வழங்கவும் அதிகரிக்கவும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



3.   விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் இன்னும் உள்ளது. தப்பியோடிய புலிகளும் வெளிநாடுகளில் உள்ள புலிகளுமாக அவர்கள் இன்னும் அபாய நிலையை உருவாக்குதற்காக முயற்சிக்கிறார்கள் என்ற தோற்றப்பாட்டைச் சிங்களச் சமூகத்துக்கு காட்ட முற்படும்.



4.   இதேவேளை தமிழ்ப் பிரதேசங்களிலும் புலிப்பயத்தைக் காரணம் காட்டி அவற்றை இறுக்கமான சூழலுக்குள் தொடர்ந்தும் வைத்திருக்க முயற்சிப்பதற்கான காரணத்தையும் இதன் மூலமாக அரசாங்கம் பெற்றுக்கொண்டதாகும்.

5.   தமிழ்ப்பிரதேசங்களில் படைக்குறைப்பைச் செய்யாமல் அதை நியாயப்படுத்துவதற்கான ஒரு காரணத்தை அரசாங்கத்துக்கு இந்த எதிர்ப்பு நடவடிக்கை வழங்கியுள்ளது.

6.   மறுபக்கத்தில் வெளிநாட்டில் புலிகளின் ஆதரவாளர்களால் ஜனாதிபதிக்கு எதிர்ப்புக் காண்பிக்கப்பட்டது, அவமரியாதை செய்யப்பட்டது என்ற கோபத்தை ஏற்படுத்தி, மேலும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான சிங்கள மக்களின் ஆதரவுப் பலத்தை மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கும் சாத்தியங்களை உருவாக்கியுள்ளது.

7.   முன்னர் தமிழர்களைச் சிங்களத் தரப்புக்கு எதிராகச் செயற்படத்தூண்டி, அதன் மூலம் உருவாகிய இடைவெளியைப் பயன்படுத்தித் தன்னுடைய நலன்களை எவ்வாறு இந்தியா பெற்றுக் கொள்ள முயன்றதோ அதைப்போன்ற ஒரு அணுகுமுறையை இப்போது பிரிட்டன் கையாள்கிறது. இதற்குத் தமிழர்கள் பலியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

8.   மிகப் பெறுமதியாக வாய்த்த இந்தப் போராட்டம் ஒரு எதிர்ப்பு நடவடிக்கையாகச் சுருக்கப்பட்டு விட்டது.

ஆகவே இந்த எதிர்ப்பு நடவடிக்கையானது அதனுடைய உள்ளடக்கத்தில் எதிர்த்தரப்புக்கான அனுகூலங்களை நீண்ட கால அடிப்படையில் வழங்கியுள்ளது. அந்த அளவுக்கு அது தமிழர்களுக்குப் பலவீனங்களைத் தந்துள்ளது.

இதற்குக் காரணம், இந்த எதிர்ப்பு நடவடிக்கையை ஒழுங்கு படுத்திய முறையும் இதை நடத்திய விதமும் இதைப் அரசியல் ரீதியாகப் பலவீனமானதோர் நடவடிக்கையாக மாற்றிவிட்டன.

நல்லதொரு வாய்ப்பாகக் கிடைத்த இந்த நடவடிக்கையை மேற்கொண்ட அமைப்புகளோ அல்லது தரப்பினரோ எத்தகைய தெளிவான சேதிகளையும் சிங்களச் சமூகத்துக்கும் சொல்லவில்லை@ சர்வதேச சமூகத்திற்கும் சொல்லவில்லை. இந்த எதிர்ப்பு நடவடிக்கையானது நியாயத்தின் பாற்பட்டது, தவிர்க்க முடியாதது, இது ஒரு பரந்து பட்ட தரப்பினரின் எதிர்ப்பு நடவடிக்கையாகும், இது அரசியல் ரீதியான அணுகுமுறையின் வெளிப்பாடு, ஜனநாயக முறைமைகளையும் அரசியல் நாகரீகத்தையும் பேணிக்கொண்டு எதிர்ப்புக் காட்டப்பட்டுள்ளது என்றவாறு இதை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

அவ்வாறு செய்வதற்கான சிந்தனை – பொறிமுறையைப் பற்றிய அறிவு - இல்லாமற் போனமை துரதிருஷ்ரவசமானது. பதிலாக உணர்ச்சி வசப்பட்ட நிலையில் நடத்தியுள்ள ஒரு நடவடிக்கையாக மாறிவிட்டது.

இதனால், தன்னுடைய கடும்போக்கையும் தவறான அணுகுமுறைகளையும் தொடர்ந்தும் கடைப்பிடிப்பதற்கு இலங்கை அரசாங்கத்துக்கான வாய்ப்பை இந்த எதிர்ப்பு நடவடிக்கை வழங்கியுள்ளது.

ஆனால், ஜனாதிபதியை புலம்பெயர் தமிழர்கள் நெருக்கடிக்குள்ளாக்க வேண்டிய நிலைமை அவர்களைப் பொறுத்தவரையில் தவிர்க்க முடியா ஒன்று எனச் சொன்னோம். அரசாங்கமும் விளங்கிக் கொள்ள வேண்டும். ஜனாதிபதியும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

லண்டனுக்கு ஜனாதிபதி செல்லும்போது அங்கே உள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களாகிய இலங்கையர்கள் அனைவரும் அவருக்குப் பூச்செண்டுக் கொடுத்து வரவேற்கும் ஒரு நிலையை ஏற்படுத்தாத வரையில் இந்த மாதிரியான அசௌகரியங்களும் நெருக்கடிகளும் இருந்தே தீரும். அவற்றுக்கு முகங்கொடுத்தேயாக வேணும்.

இது லண்டனுடன் நின்று விடப்போவதில்லை. அதற்கப்பால் வௌ;வேறு நாடுகளிலும் வௌ;வேறு அளவுகளில் நடைபெறத்தான் போகிறது. ஏற்கனவே சில சம்பவங்கள் நடந்தும் உள்ளன. இதே காலப்பகுதியில் இலங்கை அமைச்சரில் ஒருவரான சிறிசேன கூரே இந்தியாவில் கோயம்புத்தூருக்குச் சென்றவேளை அங்கே தமிழர்கள் காட்டிய எதிர்ப்பை அடுத்துத் திரும்பியுள்ளார்.

உண்மையில் போர் முடிந்த பின்னராவது, நிலைமைகளை அமைதியை நோக்கிக் கொண்டு சென்றிருக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் இலங்கை அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் சிங்களச் சமூகத்தைச் சேர்ந்தோருக்கும் உண்டு.

அரசியற் பிணக்குகளைத் தீர்ப்பதில் தமிழ்த்தரப்புகளின் ஒத்துழைப்புகள் போதாமலுள்ளன என்று ஒரு பலமான குற்றச்சாட்டினை அரசாங்கத்தரப்போ அல்லது பிறரோ முன்வைக்கலாம். ஆனால், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடுகளைச் செய்வதற்கும் அவர்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கும் இதுவரையில்  அரசாங்கமோ சிங்களச் சமூகமோ முன்வந்ததா?

நல்லெண்ண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசியலுக்கு அப்பாலான பல புள்ளிகள் உள்ளன. இவற்றில் ஒரு புள்ளியில் இருந்து கூட நம்பிக்கைகளைக் குறித்த சித்திரங்கள் வரையப்படவில்லை.

ஆகவே மனதில் கசப்பும் கோபமும் உள்ள தமிழர்கள் தங்களுடைய உணர்வை வெளிப்படுத்தும்போது அது அப்படித்தான் அமையும். அங்கே யாரும் பூங்கொத்துகளையும் இனிப்புப் பண்டங்களையம் எதிர்பார்க்க முடியாது.

ஆனால், இந்த எதிர்ப்பானது புலிக்கொடியுடன் நடத்தப்பட்டிருப்பதற்குப் பதிலாக கறுப்புக் கொடிகளை ஏந்தி நடத்தியிருந்தால் இதன் பெறுமதி மிக அதிகமாக இருந்திருக்கும். கறுப்புக்கொடிகளோடு, உலக மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் சொல்ல வேண்டிய சேதிகளையும் சேர்த்து அவர்கள் ஏந்தியிருந்தால் இந்த எதிர்ப்படையாளம் இன்னும் வலுப்பெற்றிருக்கும்.


இந்தச் சேதியானது - 

'அன்பான சிங்கள மக்களே, சர்வதேச சமூகத்தினரே, நாங்கள் பிறந்த நாட்டிலிருந்;து அதன் தலைவர் இங்கே (லண்டனுக்கு ) வருகை தரும்போது அவரை மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்க வேண்டிய நாம், கறுப்புத் துணிகளுடன் அணிவகுத்திருக்க வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளோம். இது வருத்தத்திற்குரியதே. ஆனாலும் இதை எங்களால் இதைத் தவிர்க்க முடியவில்லை. இந்த நிலையை உருவாக்கியது இனவாத அரசியல் நடவடிக்கைகளும் அரசாங்கத்தின் பொறுப்பற்ற நடவடிக்கைகளுமே. 


இன ஒதுக்கல் நடவடிக்கைகளால் எங்களின் உறவுகளும் இனத்தவரும் கண்ணீரின் மத்தியிலும் காயங்களின் மத்தியிலும் இன்னும் இருக்கும்பொழுது, அங்கே இன நல்லிணக்கத்தையும் நிவாரணத்தையும் இன்னும் முறையாக வழங்காதபோது, பிரச்சினைகளுக்கான தீர்வைக் காணாதபோது எப்படி அவரை நாம் மனப்பூர்வமாக வரவேற்க முடியும்? அது எந்த அளவுக்கு ஏற்புடையதாகும்? அப்படி நாம் அவரை வரவேற்பதாக இருந்தால், அது எங்களின் மனச்சாட்சிக்கு நாங்கள் இழைக்கின்ற தவறாகுமல்லவா!


எனவேதான் நாங்கள் இத்தகைய எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தவேண்டியிருந்தது. இதைத் தவிர வேறு மார்க்கங்கள் எங்களுக்கு இல்லை. எங்களுடைய பிரச்சினைகளை எடுத்துச் சொல்வதற்கும் எங்கள் பிரச்சினைகளைத் தீர்க்குமாறு அழுத்தம் கொடுப்பதற்கும் இதை ஒரு அடையாளமாக நாங்கள் வெளிப்படுத்துகிறோம். ஒரு அழுத்தத்தைக் கொடுப்பதற்கு இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம்.  இந்தப் போராட்டத்தின் தாற்பரியத்தைச் சர்வதேச சமூகமும் சிங்கள மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். நீதிக்கும் நியாயத்துக்கும் பதிலாற்றவேண்டிய கடப்பாட்டை வலியுறுத்துமாறு கேட்பதே இந்தப் போராட்த்தின் நோக்கமாகும்' என்றவாறு கேட்டிருந்தால், அதற்கான அரசியற் பெறுமானம் மிக உச்சமாக இருந்திருக்கும்.

இத்தகைய அரசியற் கோரிக்கையையும் வெளிப்பாட்டையும் அணுகுமுறையையும் யாரும் புறந்தள்ளவும் முடியாது. இதைக் குறுகலாக்கி ஒதுக்கவும் முடியாது. இதற்குப் புலி அடையாளத்தைப் பூசியிருக்கவும் முடியாது. பதிலாக இது சிங்களச் சமூகத்தினரையும் சிந்திக்க வைத்திருக்கும். அவர்களிடம் பகைமையைத் தோற்றுவிப்பதற்குப் பதிலாக இதைக் குறித்த சிந்தனையை உருவாக்கியிருக்கும். அரசாங்கத்துக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இது நெருக்கடியைக் கொடுத்துமிருக்கும். 

ஒரு அரசியல் நடவடிக்கை என்பது அதை நடத்தும் முறையிலும் அதை ஒழுங்கமைக்கும் வகையிலுமே தங்கியுள்ளது. அப்படிச் சீராக ஒழுங்கமைத்து, வழி நடத்தும்போதே அது உரிய பயனை, உச்சப் பயனைத் தரும்.

கறுப்புத் துணிகளைக் கட்டிக் கொண்டும் அவற்றை ஏந்திக்கொண்டும், நின்ற மக்களை உலகம் பார்க்கின்ற விதமும் வேறாக இருந்திருக்கும். அரசியல் முதிர்ச்சியும் பக்குவமும் திறனுமுள்ள சமூகமாக தமிழர்கள் உயர்ந்திருக்கக் கூடிய இன்னொரு வாய்ப்பும் இப்படிச் சிறுத்துக் குறுகி விட்டது.

உணர்ச்சிகரமான நடவடிக்கைகள் பெரும்பாலும் இப்படித்தான் அமைந்து விடுகின்றன. இங்கே கோபத்தையும் வெறுப்பையும் வெளிக்காட்டுவதைத்தவிர, அதற்கப்பாலான அரசியல் விளைவுகள் அதிகம் ஏற்படவில்லை. கோபத்தையும் வெறுப்பையும் உமிழ்வதால் மட்டும் நன்மைகள் விளைந்து விடப்போவதில்லை என்பதை மீண்டும் குறிப்பிடவேண்டியுள்ளது.

உணர்ச்சிகரமான அரசியலில் கட்டப்படும் எத்தகைய பிரமாண்டமான எழுச்சியையும் அறிவுபூர்வமான அணுகுமுறை எளிதில் உடைத்துத் தகர்த்து விடும். மிகப் பெரிய பாறாங்கல்லை ஒரு சிறிய நெம்பு கோல் நகர்த்தி விடுகிறது என்பதை அறிவோம். இங்கே நெம்புகோல் என்பது அறிவின் விளைவாகச் செயற்படும் ஒரு கருவி. அந்தக் கருவியைப் பயன்படுத்துவதிலேயே வெற்றியும் முற்போக்கான சமூகமொன்றின் வளர்ச்சியும் தங்கியுள்ளது.

அறிவுசார் நடவடிக்கைகள் எப்போதும் பொறிமுறைகளை உடையன. பொறிமுறைகள் இலகுவான வழிமுறைகளைக் கொண்டவை. அதேவேளை உச்சபயனை விளைவிப்பன. அறிவின் வளர்ச்சியானது பொறிமுறைகளையே விளைவுக்குப் பயன்படுத்துகின்றது. அதை நம்பிக்கையுடன் பின்பற்றும் தரப்புகள் வெற்றியைப் பெறுகின்றன.

உணர்ச்சிகரமான அரசியல் எழுச்சிகள் பொறிமுறைகளைப் பற்றிச் சிந்திப்பது குறைவு. அவற்றின் அடித்தளம் எப்போதும் அறிவுசார் நடவடிக்கைக்கு எதிர்ப்புறத்தில், வெகுளித்தனமும் அறியாமையும் நிறைந்ததாகவே உள்ளது. விவேகம், சாதுரியம், நிதானம், அறம்பற்றிய விழிப்புணர்வு, ஜனநாயக விழுமியங்கள், உலகப் போக்கு, நீடித்த வெற்றி, யதார்த்தம் போன்றவற்றைப் பற்றி உணர்ச்சி மையத்தில் இயங்குவோர் சிந்திப்பது குறைவு. உணர்ச்சியின் திரைகள் இவற்றை மறைத்து விடுகின்றன

இதை எத்தனை தடவைதான் படித்தாலும் தமிழரின் சிந்தனைக்கு இந்த ஒளி புலப்படுவதேயில்லை.

000

0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB