கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

அரசியல் வீழ்ச்சியின் விளைவு - அபாய வலயத்தில் மக்கள்

Wednesday 21 December 2011

















அது ஒரு நண்பகல். வன்னியில் தருமபுரம் என்ற கிராமத்தின் புழுதி பறக்கும் தெருக்கரையில் மூன்று பெண்கள் பஸ்ஸ_க்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு பெண்ணுடன் அவருடைய எட்டு வயதுப் பிள்ளை ஒன்றும் நின்றது.

அவர்கள் போகவிருந்த இடம் காலியிலுள்ள பூஸா. அங்கேதான் அவர்களுடைய உறவினர்களான ‘முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள்’ என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டோர் இருக்கின்றனர். அவர்களைப் பார்க்கப் போவதற்காகவே இந்தப் பெண்கள் பஸ்ஸை எதிர்பாத்திருக்கிறார்கள்.

எதிர்பாராத வகையில் அவர்களைச் சந்தித்தேன்.

அவர்களில் ஒருவர் ஏற்கனவே, இரண்டு தடவைகள் பூஸாவுக்குப் போய் வந்திருக்கிறார். அவருடைய கணவரை அங்கே ஆறு மாதங்களாகத் தடுத்து வைத்திருக்கிறார்கள். ஆகவே, அவரைப் பார்ப்பதற்காக இந்தப் பெண் அங்கே போய் வந்திருக்கிறார். மற்றவர்கள் இப்போதுதான் முதற்தடவையாக பூஸாவுக்குப் போகிறார்கள்.

முதற்தடவையாகப் போவதால், அவர்களுடைய முகத்தில் பெரும் கலவரம் தெரிந்தது. வாடி, ஒட்டியுலர்ந்திருக்கும் அந்த முகங்களில் துக்கத்தைத் தவிர வேறு எந்தச் சாயலுமே இல்லை.

அந்தப் பகற்பொழுதில் (நான் அவர்களைச் சந்திக்கும்போது ஏறக்குறைய நண்பகல் 12.00 மணியிருக்கும்) அவர்கள் இந்தக் கிராமத்திலிருந்து புறப்பட்டால், மீண்டும் ஊருக்குத் திரும்ப மூன்று நாட்களாகும் என்றார்கள். அதாவது மூன்று நாட்கள் பயணத்திலும் அலைச்சலிலும் தங்களின் பொழுது கழியப்போகிறது என்று சொல்லித் துக்கப்பட்டார்கள்.

இரவு பகல் எல்லாம் பயணத்திலும் எங்காவது கடைத்தெருவிலும்தான் தங்களின் வாழ்க்கை என்றார்கள்.

முதற்தடவை போகும்போது தான் மிகவும் சிரமப்பட்டதாக ஏற்கனவே பூஸாவுக்குப் போய் வந்தவர் சொன்னார். இடம் புதிது. ஆட்கள் புதிது. அந்நிய மொழி. ஆகவே, பாஷை புரியாது. நீண்ட பயணம். எங்கே தங்குவது? எங்கே தூங்குவது? எங்கே சாப்பிடுவது? எங்கே குளிப்பது? எங்கே உடைகளை மாற்றிக் கொள்வது?

இடையில் பயணத்தைப் பற்றியும் பிற தேவைகளைப்பற்றியும் யாரிடம் விசாரிப்பது? ஒன்றுமே தெரியாத நிலையில் இரண்டாவது தடவையும் எப்படியோ எல்லாவற்றையும் சமாளித்துக் கொண்டு போய், வந்திருக்கிறார்.
பெரும்பாலும் பஸ் நிலையத்தில் இருக்கும் பொதுக்கழிப்பறை, பொதுக்குளியல் அறை ஆகியவற்றைப் பாவித்து, பஸ் நிலையங்களில் தங்கி, தன்னுடைய கணவரைப் பார்க்கப் போயிருக்கிறார்.

வெளியே தனி அறை எடுத்துத் தங்கிக் குளித்து, உடைமாற்றிச் சாப்பிட்டுத் தூங்கி, ஆறுதலாகப் போய் வருவதற்குத் தங்களிடம் வசதி (பணம்) இல்லை என்கிறார் இந்தப் பெண்.

ஆகவே பஸ்ஸிலும் ரெயினிலும்தான் தூக்கம். ஏனைய அத்தியாவசியத் தேவைகளுக்கு பொதுக்கழிப்பறையும் பொதுக்குளியல் இடமும்.
‘வீட்டுக்கு வெளியே – ஊருக்கு வெளியே - மூன்று நாட்கள் ஒரு பெண் இருப்பது என்றால் சும்மாவா? எவ்வளவு சிரமமாக இருக்கும்? கொஞ்சம் எங்கட நிலைமையை எண்ணிப் பாருங்கள்’ என்று என்னைப்பார்த்துக் கேட்டார் அவர். அவருடைய கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. அவருடைய கண்களை என்னால் பார்க்கவே முடியவில்லை.

இதைத் தவிர, தங்களுக்கு வேறு தெரிவு இல்லை என்பதே இவர்களுடைய பதில். உண்மையும் அதுதான். காரணம், உழைப்பில்லை. வருமானம் இல்லை. பிற உதவிகள் இல்லை. ஆகவே மிகச் சிரமப்பட்டு, இப்படிப் போய், தங்களின் உறவுகளைப் பார்க்கிறார்கள்.

புலிகளுடனான அரசாங்கத்தின் இறுதிப் போருக்குப் பின்னர் வன்னியிலிருந்த மக்களின் வாழ்க்கை இப்படித்தான் பல வகையிலும் சிதைந்தே போயுள்ளது. அதிலும் போராளி குடும்பங்களின் நிலை மிகவும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது.

ஒரு காலம் விடுதலைக்காகப் போராடியவர்களின் குடும்பங்கள் இன்று நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அவைகள் இப்பொழுது, இப்படித்தான் எல்லாவற்றுக்காகவும் நெருக்கடிப்பட வேண்டியிருக்கிறது. அல்லது அலைய வேண்டியிருக்கிறது.

அரசியல் வீழ்ச்சிகளும் எழுச்சிகளும் வரலாற்றில் மிகச் சாதாரணமாக நடந்து விடுவதுண்டு. ஆனால், அந்த வீழ்ச்சிகளும் எழுச்சிகளும் ஏற்படுத்தும் விளைவுகளும் மாற்றங்களும் சாதாரணமாக அமைவதில்லை.
அதிலும் வீழ்ச்சியினால் ஏற்படும் விளைவு என்பது மிகக் கொடியது. அது மக்களையே அதிகமாகப் பாதிக்கின்றது.

1945 இல் ஜேர்மனி தோற்கடிக்கப்பட்டபோது ஜேர்மனிய மக்கள் நடத்தப்பட்ட விதமும் அவர்கள் அடைந்த துயரங்களும் சாதாரணமானவையல்ல. அந்த மக்களின் விருப்பங்களுக்கு மாறாகவே ஜேர்மனி என்ற நாடு கிழக்கு ஜேர்மனி என்றும் மேற்கு ஜேர்மனி என்றும் துண்டாடப்பட்டது. அந்த மக்களின் விருப்பங்களுக்கு மாறாகவே, அவர்களுடைய ஆன்மாவின் மீதே பெர்லின் சுவர் எழுப்பப்பட்டது.

நாற்பத்தியைந்து ஆண்டுகளாக – 1989 இல் ‘பெரொஸ்ரொய்கா’ என்ற மறுசீரமைப்புத் திட்டத்தை அப்போதைய ரஷ்ய அதிபராக இருந்த கொர்பசேவ் கொண்டு வரவில்லை என்றால், பனிப் போர் முடிவுக்கு வரவில்லை என்றால், இன்னமும் ஜேர்மனி அப்படித்தான் - பிரிந்த நிலையிலேயே இருந்திருக்கக்கூடும்.

அதுவரை, நாற்பத்தியைந்து ஆண்டுகளாக, ஜேர்மனிய மக்கள், கணவன் இங்கே, மனைவி அங்கே, சகோதரன் இங்கே, சகோதரி அங்கே, தாய் இங்கே, பிள்ளை அங்கே என்ற நிலையில்தான் வாழ வேண்டியிருந்தது.
இந்த நிலையில் உலகத்தின் அத்தனை கருணைக் கண்களும் இறுக மூடியிருந்தன. இல்லையென்றால், அவ்வளவு காலமாக அந்த மக்கள் இப்படிப் பிரிந்திருக்க வேண்டியிருந்திருக்குமா?

ஏறக்குறைய ஜேர்மனிய மக்கள் சந்தித்த அவலத்தைப் போல, ஒரு நெருக்கடி நிலையில், அதற்கும் மேலான அவலத்தில்தான் இன்று வன்னிச் சனங்கள் வாழ்கின்றனர். அதிலும்  போராளி குடும்பங்கள் அல்லது புலிகளின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டோரின் குடும்பங்கள் இன்று சந்தித்திருக்கும் நெருக்கடியும் அவலமும் மிகக் கொடுமையானது.

சில பேருக்குத் தங்கள் பிள்ளையோ கணவரோ எங்கே என்றே தெரியாத நிலை. அதனால் வாழ்க்கை முழுவதும் காணாமற் போனோரைத் தேடியலையும் துயரம்.

வேறு சிலருக்குத் தடுப்பு முகாம்கள் என்று சொல்லப்படும் புனர்வாழ்வு முகாம்களிலோ அல்லது பூஸா முகாம், வெலிக்கடச் சிறைச்சாலை போன்ற இடங்களிலோ இருக்கின்றவர்களைப் பார்க்கவென அலைகின்ற அவலம்.
இது மிகவுந் துயரந்தரும் ஒரு நிலை.

தடுப்பு முகாம்கள் என்று மக்களால் சொல்லப்படுகின்ற இந்தப் புனர்வாழ்வு முகாம்களில், இன்னும் நான்காயிரத்துக்கு மேற்பட்ட விடுதலைப்புலிகளின்; முன்னாள் உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

இவர்கள் காலி – பூஸா, வெலிக்கந்த, வவுனியா, ஓமந்தை, வெலிக்கட போன்ற பல இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் பலர் திருமணமானவர்கள். சிலர் படிக்கின்ற பிராயத்தினர். சிலர் முதியோர்.

இப்படிப் பல வகையில் - பல வயதினராக - இருக்கும் இவர்களைப் பார்ப்பதற்காக இவர்களுடைய உறவினர்கள் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் இருந்து பூஸாவுக்கும் வெலிக்கடவுக்கும் வெலிக்கந்தவுக்கும் வவுனியாவுக்கும் என்று அலைகின்றனர்.

இதில் வவுனியா போன்ற தமிழ்ப்பகுதிகளுக்குச் செல்வதில் அதிக பிரச்சினை இருப்பதில்லை. மொழி தெரியும் என்பதாலும் உறவினர்கள் யாராவது இந்தப் பகுதிகளில் இருப்பதாலும் அதிக சிரமமில்லாமலே இவர்கள் தங்கள் உறவுகளைப் பார்த்துத் திரும்பக்கூடியதாக இருக்கிறது.

ஏனைய இடங்களான பூஸா, வெலிக்கந்த, சேனாபுர போன்ற இடங்களுக்குச் செல்வது என்பதே இவர்களுக்கு இருக்கின்ற பெரிய பிரச்சினை.

பெரும்பாலும் உழைப்பாளிகளை இழந்த நிலையில் இருக்கும் இந்தக் குடும்பங்கள் இவ்வளவு தூரத்துக்குச் சென்று தங்கள் உறவினரைப் பார்ப்பதற்கு மாதந்தோறும் பெரும் செலவைச் செய்ய வேண்டியிருக்கிறது.

அதைவிடக் கொடுமையும் மிகவும் கவலையும் அளிக்கின்ற விடயம், இப்படிப் பார்க்கப்போவோரில் அதிகமானவர்கள் பெண்கள். எனவே இவர்களை இந்தப் பயணத்தில் பலரும் ஏமாற்றி விடுகின்றனர். சிலர் இவர்களை ஏமாற்றிப் பணத்தைப் பறிக்கின்றார்கள். இடம் புதிது, மொழி புதிது என்பதாலும் விடுதலைப் புலிகளின் குடும்பங்கள் என்று வேறு அச்சுறுத்தியும் பணம் பறிக்கப்படுகிறது.

அடுத்த பக்கத்தில், இவர்கள் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுகிறார்கள். பெரும்பாலும் இளம் பெண்களாக இருக்கும் இவர்களை வழி நீளத்துக்கு ஓட்டோச் சாரதிகள், வழி காட்டிகள், கடைக்காரர்கள் என இருக்கும் சிலர்  உதவி செய்வதாக நடித்து ஏமாற்றி விடுகின்றனர்.

இதனால், ஏறக்குறைய பாதிக்கப்பட்ட நிலையில், சீரழிந்த நிலையிலேயே இந்தக் குடும்பங்களின் இன்றைய யதார்த்தம் உள்ளது.

இதை இவர்களால் தவிர்க்கவும் முடியவில்லை. என்னதான் இருந்தாலும் தடுப்பில் இருக்கும் தங்கள் உறவினர்களை எப்படித் தங்களால் பார்க்காமல் இருக்க முடியும்? அதுவும் தாம் பார்க்கப் போகாமல் விட்டால், அங்கே – உள்ளே - இருப்போரின் மனநிலை எப்படியிருக்கும்? என்று கேட்கிறார்கள் இவர்கள்.

இவர்களுடைய கேள்வி நியாயமானதே. ஆகவே என்னதான் கொடுமைகள் நடந்தாலும் அதையெல்லாம் சமாளித்துக் கொண்டு போய், தங்கள் உறவுகளைப் பார்க்கத் தான் வேணும். அப்படித்தான் பார்க்கின்றார்கள் இவர்கள்.

ஆனால், இப்படிப் பெருந்தொகையான அரசியற் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் போது, இந்தக் கைதிகளை, அவர்களுடைய உறவினர்கள்  பார்ப்பதற்கும் சந்திப்பதற்குமான ஒழுக்கு ஒன்றை அரசாங்கம் நிச்சயம் செய்திருக்க வேண்டும். அது அவசியமானது மட்டுமல்ல, அடிப்படை உரிமையானதும் கூட.

சமூகப் பாதுகாப்பு அற்ற நிலையில், ஏற்கனவே நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் ஒரு பெருந்திரளான மக்களை மேலும் அவலத்திற்குள்ளாக்குவது எந்த வகையிலும் நியாயப்படுத்தக் கூடியதல்ல. ஏற்கக்கூடியதும் அல்ல.

முன்னர், 1971 இல் ஜே.வி.பியின் கிளர்ச்சி முறியடிக்கப்பட்ட பின்னர், கைது செய்யப்பட்ட ஜே.வி.பி உறுப்பினர்கள் அப்போதைய அரசினால், பல இடங்களிலும் இப்படித் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

குறிப்பாக வன்னியில் - கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள அக்கராயன் என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான ஜே.வி.பி உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களைப் பார்க்க வருகின்ற தென்னிலங்கையைச் சேர்ந்த அந்த மக்களுக்கான வசதிகளை அன்றைய அரசாங்கம் செய்திருந்தது. பயண ஒழுங்குகள், தங்குமிட வசதிகள், உணவு போன்றவற்றை அது செய்திருந்தது.
இப்பொழுது அக்கராயன் மகா வித்தியாலயமாக இருக்கும் கட்டிடத் தொகுதியிலேயே முன்னர் ஜே.வி.பி உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதற்கு முன்னே இருக்கின்ற விடுதிக்கட்டிடங்களாக இருக்கும் ஆறு பெரிய கட்டிடத் தொகுதிகளிலேயே ஜே.வி.பி உறுப்பினர்களைப் பார்க்க வருகின்ற உறவினர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால், அதையும் விடப் பல மடங்கு அதிகமாக இருக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படும் இந்த உறுப்பினர்களின் உறவினர்கள் எந்தப் பாதுகாப்பும் அற்ற நிலையில், எந்தப் பராமரிப்பும் உதவியும் இல்லாத நிலையில் அவலத்திற்குள்ளாகின்றனர்.

இவர்களுடைய இந்த அவல நிலைகுறித்து எவரும் இதுவரை அக்கறைப்பட்டதாக இல்லை. அரசாங்கமோ, பிற அரசியற் கட்சிகளோ, தமிழ்த்தலைவர்களாகச் சொல்லிக்கொள்ளும் தரப்பினர்களோ இந்தப் பிரச்சினையைப் பொருட்படுத்தவேயில்லை.

இரண்டாண்டுகளாக அலைந்து கொண்டிருக்கும் இந்தக் குடும்பங்களின் பொருளாதார நிலை, பாதுகாப்பு, இவ்வாறான அலைச்சல்கள், இவற்றால் ஏற்படும் சீரழிவுகள் என எதைப்பற்றியும் எவரும் கவலைப்பட்டதாக இல்லை.
இதுகுறித்த கவலை இந்தக் குடும்பங்களுக்கு உள்ளது.

உறவினர்களைப் பார்க்கச் செல்வதற்கான வழிச்செலவுக்காக - ஒரு சிறு உதவியாக, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மாதம் ஒன்றுக்கு 3000 ஆயிரம் ரூபாயை வழங்குகிறது. ஆனால், தாங்கள் ஒரு தடவை பூஸாவுக்குச் சென்று திரும்புவதற்கு குறைந்தது எட்டாயிரம் அல்லது அதற்கு மேல் செலவாகிறது என்கின்றனர் இந்த உறவினர்கள்.

தடுப்பில் இருப்போருக்கான சவர்க்காரம், சம்பூ, உடைகள், சிற்றுண்டிகள், முகச் சவரம் செய்வதற்கான உபகரணங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களையும் இந்தப் பயணத்தின் போது இவர்கள் வாங்கிக் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது.

ஆகவே குறைந்தது எட்டாயிரத்துக்கு மேல் ஆகும் செலவு என்பது தவிர்க்க முடியாததே. இப்படிச் செலவாகும்போது தங்களால் அடிக்கடி சென்று பார்க்க முடியாதிருப்பதாகவும் இவர்கள் சொல்கிறார்கள்.

தருமபுரம் பகுதியில் இருக்கும் இன்னொரு முதியவரையும் அன்று சந்தித்தேன். அவருடைய ஒரு மகன் ஏற்கனவே போரில் இறந்து விட்டார். அடுத்த இரண்டு மகன்கள் தடுப்பு முகாம்களில் இருக்கின்றனர். இன்னும் இவர்கள் விடுதலையாகவில்லை.

வேலப்பன் என்கின்ற இந்த முதியவர், நுவரெலியாவில் இருந்து 1977 இல் இடம்பெயர்ந்து தருமபுரத்துக்கு வந்தவர். கூலித்தொழிலாளியாக இருக்கும் வேலப்பனுக்கு இப்போது வயது 65.

‘ஒன்பது பிள்ளைகள்ள மூணு பிள்ளைக இப்பிடி ஆகீட்டாங்க. உழைக்கிற வயசில இப்பிடி போனா நா என்ன பண்றது?’ என்று துக்கத்தோடு கேட்கிறார் வேலப்பன். அவருடைய கண்கள் கலங்கிவிட்டன.

வேலப்பனும் பிள்ளைகளைப் பார்ப்பதற்காக பூஸாவுக்கும் வெலிக்கந்தவுக்குமாக அலைந்து கொண்டிருக்கிறார். ஆனால், இவர் மூன்று மாதத்துக்கு ஒரு தடவைதான் போய்ப்பார்க்கிறார்.

‘அடிக்கடி போய்ப்பாக்கிறதுக்கு இஸ்டந்தான். ஆனா பணம் வேணுமே. நம்பளால அது முடியுமா? இருக்குற மத்தப் புள்ளங்களுக்கு சோறு போடணுமே. கொறைஞ்சது கஞ்சியாவது ஊத்தணுமே’ என்று நம்மைப் பார்த்துக் கேட்கிறார் அவர்.

இந்த மாதிரியான கவலைகள் என்பது உள்ளே தடுத்து வைக்கப்பட்டிருப்போருக்கும் அதிக வேதனையைக் கொடுக்கக் கூடியது. தங்களுடைய குடும்பங்கள் இன்று இத்தகைய ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என்பதையிட்டு இவர்கள் வேதனைப்படுகிறார்கள். இந்த நிலையில் இருந்து எப்படி மீள்வது என்றும் இவர்களுக்குத் தெரியவில்லை.
பொதுவாக ஒரு உளவியல் நெருக்கடி இந்தக் குடும்பங்களுக்கு இன்று ஏற்பட்டுள்ளது. இது சாதாரணமான நெருக்கடி அல்ல. ஒரு சமூகத்தில் இந்த மாதிரியான அவலம் நிகழ்கிறது என்றால், அதனால், ஒரு குறிப்பிட்டோர் மட்டும் பாதிக்கப்படுவதல்ல. அந்தச் சமூகமே பாதிக்கப்படுகிறது.

ஆகவே, இந்த நிலை குறித்து உடனடிக் கவனத்தை அனைத்துத் தரப்பினர்களும் கொள்ள வேணும்.

இல்லையெனில் இந்தக் குடும்பங்களின் சிதைவும் அதன் மூலம் இந்தக் குடும்பங்களிலுள்ள சிறார்களின் எதிர்காலமும் சிதைந்து போகும். அது பின்னர் பேரபாயமான நிலைமைகளையே தோற்றுவிக்கும்.

00

0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB