கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

உபாயமும் அதிகாரமும் - 01

Friday 16 December 2011

இலங்கையின் சமகால அரசியல் விவகாரங்களைக் குறித்து ஆய்வாளரான நண்பர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது ‘உபாயமும் அதிகாரமும்’ என்பதைப் பற்றிச் சொன்னார். அதிலும் இலங்கையின் தமிழ் பேசும் மக்களின் அரசியற் போராட்டங்களில் ‘உபாயமில்லாத அரசியலே’ நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நண்பர் குறிப்பிட்டார்.
நண்பரின் கூற்றுப் பெருமளவுக்கும் நிராகரிக்க முடியாதது.

உபாயங்கள் பல வகைப்பட்டன. அரசியற் செயற்பாடுகளிலும் உபாயங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. ஆயுதப் போராட்டத்திலும் போர் உபாயங்கள் கையாளப்படுகின்றன. தவிர, சமூக நடவடிக்கைகள் என்று சொல்லப்படும் வணிகம் தொடக்கம் சகலவற்றிலும் உபாயங்களின் பிரயோகமுண்டு.

இவற்றில் முக்கியமானது போருபாயங்களும் அரசியல் உபாயங்களுமாகும். ஆனால், அரசியலுக்காகவே போர் என்பதால் அரசியல் உபாயங்களே எல்லாவற்றுக்கும் மையமாக அமைகின்றன. இதில் தந்திரோபாயம், மூலோபாயம் என இருவகைப்பட்ட பிரதான உபாயங்கள் உண்டு.

மூலோபயத்துக்குட்பட்டே தந்திரோபாயம் இயங்குகின்றது.
மூலோபாயத்தை வெற்றிகொள்ளவைப்பதற்காகவே தந்திரோபாயம் பிரயோகிக்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் தந்திரோபாயம் வெற்றிகரமாக அமைவதுபோலப் படலாம். ஆனால் அடிப்படையற்ற தந்திரோபாயத்தினால், இறுதியில் மூலோபாயம் தோற்றுப் போகும். இதற்குப் பல உதாரணங்கள் உண்டு. கியூப அனுபவங்களைப் பெற்றிருந்த சேகுவேரா பொலிவியாவில் தோற்றார். இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படலாம். ஆனால் பொலிவியாவில் சே நடத்திய அல்லது நடத்தவேண்டியேற்பட்ட அத்தனை தாக்குதல்களும் வெற்றிகரமானவையாக – எதிர்த்தரப்புக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தியவை.

ஆனால் இறுதியில்?


அவை மூலோபாயத்தை ஒழுங்கமைப்பதற்கு முன்னர் ஏற்பட்ட நெருக்கடிகளால், உருவாகிய தந்திரோபாயத்தின் விளைவுகள்.


அதேபோல தந்திரோபாயம் தோற்றுப் போவதைப் போல அமையும். ஆனால், மூலோபாயம் வெற்றியடைந்து விடும்.

இதற்குச் சீனவிடுதலைப் போராட்டம் சிறந்த உதாரணமாகும். மாவோவின் விடுதலைப் படை பின்வாங்கி நீண்டதூரம் சென்றது தந்திரோபாயமாகும். இது மூலோபயத்தின் பாற்பட்ட தந்திரோபாயம். பார்வைக்கு பின்வாங்கிச் செல்வதைப்போல இருக்கும். ஆனால், இறுதியில் எதிரியைப் பலவீனப்படுத்தி தோற்கடிப்பதாக அமைந்த தந்திரோபாயம். மாவோ அதில் வெற்றியும் பெற்றார்.

உபாயத்தில் முக்கியமானது,  எதிரிகளைப் பலவீனப்படுத்துவதும் அவர்களைக் கையாள்வதுமாகும். எதிரிகளை அழிப்பது என்பது இரண்டாம் பட்சமானது. ஈழத்தமிழர்களின் அரசியல் முன்னெடுப்பாளர்கள் எப்போதும் எதிரிகளை அழிப்பதிலேயே குறியாக இருக்கின்றனர். அவர்களை வெற்றிகொள்வதையும் விட எதிர்ப்பது, அழிப்பது என்ற வகையிலேயே தமிழர்களின் சிந்தனை உள்ளது.

உலகத்தில் எதிரிகளை அழிப்பது என்பது எப்போதும் எதிர் நிலைகளையே உருவாக்கும். இது இறுதியில் எதிரிகளை அணிகளாக்குவதிலேயே போய் முடிகிறது. பதிலாக எதிரிகளைப் பலவீனப்படுத்துவது என்பது அவர்களைத் தனிமைப்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவதாகவும் இறுதியில் தோற்கடிப்பதாகவும் அமைகிறது.

எதிரியை அழிக்க முற்படும்போது அந்த எதிரி வேறு வடிவமெடுப்பதை நாம் ஈழப்போராட்டத்திலேயே பார்க்கலாம். புலிகள் அழித்த இயக்கங்கள் இன்றும் இருக்கின்றன. ஆனால், வெவ்வேறு வடிவங்களில். அதேவேளை அவை புலிகளுக்கு விரோதமான போக்கையே கடைப்பிடித்தன. அத்துடன் அவை இறுதியில் புலிகளுக்கு எதிரான தரப்புகளுடன் போய்ச் சேர்ந்தும் கொண்டன. இதனால், புலிகளின் எதிர்த்தரப்பே பலமாகியது.

இதைப்போல விடுதலைப் புலிகளையும் தமிழ் அரசியலையும் இலங்கை அரசாங்கம் அழிக்க முற்பட்டது. ஆனால், மிஞ்சிய புலிகள் வேறு வடிவங்களில் பல்வேறு இடங்களிலும் செயற்படுகிறார்கள். அவ்வாறே தமிழ் அரசியலின் செயற்பாட்டுக் களமும் வெவ்வேறு பிராந்தியங்களில் வேர்விட்டுள்ளது. வெவ்வேறு வடிவங்களில்.

இவையெல்லாம் உபாயமற்ற குறைபாடுகளின் விளைவுகளேயாகும்.
மிகவும் வீரஞ்செறிந்த ஒரு போராட்டம் ஈழத்தமிழர்களால் நடத்தப்பட்டுள்ளது. ஒரு சிறிய சமூகமான ஈழத்தமிழ்ச் சமூகம் தன் சக்திக்கு அப்பாலான உச்ச அர்ப்பணிப்புகளைச் செய்திருக்கிறது. இந்தப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும் இளம் பெண்களும் தங்கள் இளமைக்காலத்தைப் பலியிட்டிருக்கிறார்கள். இதில் பல்வேறு போக்குகளையிட்ட இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் கவனத்திற் கொள்ள வேணும்.

இதைவிட ஐம்பது ஆண்டுகளாக பல்வேறு வடிவங்களிலும் தமிழர்கள் தங்கள் அரசியல் உரிமைகளுக்காகப் போராடியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் பெற்றுக் கொண்டதை விட இழந்ததே அதிகமாகும்.

இந்திய வம்சாவழித் தமிழர்கள் என்று சொல்லப்பட்ட மலையகத் தமிழர்கள் முன்னர் இருப்பதற்கு இடமின்றியும் சொந்த நிலமின்றியும் இருந்ததைப் போல, வடக்குக் கிழக்கைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இன்று காணியும் வீடுமின்றி அகதிகளாகியிருக்கிறார்கள்.

இவர்கள் முன்னர் தங்களுக்கென்ற இருப்பிடங்களைக் கொண்டிருந்தவர்கள். வீடும் வளவும் தங்களுக்கென்ற சுயதொழிலுமாக வாழ்ந்தவர்கள். தங்களின் உழைப்பினாலும் வாழ்க்கை முறைமையினாலும் ஒரு தனிப் பண்பாட்டையுடைய சமூகமாக அடையாளம் பெற்றவர்கள்.

ஆனால், இன்று சொந்த ஊர்களுக்குத் திரும்பவே முடியாமல், தாங்கள் பிறந்த வளர்ந்த மண்ணைப் பார்க்கவே முடியாமல், அகதி என்ற நிலையிலும் ‘சிதறிகள்’ என்றவாறாகவும் இருக்கிறார்கள்.

‘நாங்க லயங்களில் இருந்து வீடுகளுக்கு மாறிக் கொண்டிருக்கிறம். ஆனால், நீங்க வீடுகளில் இருந்து தறப்பாள் கூடாரங்களுக்கு வந்திருக்கிறீங்க’ என்று கிளிநொச்சிக்கு வந்திருந்த மலையத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவர், இன்றைய கிளிநொச்சியைப் பார்த்து விட்டுச் சொன்னதை இங்கே குறிப்பிடலாம். இதில் சௌ. தொண்டமானின் உபாயத்தின் பெறுபேற்றையும் தமிழ்த்தலைமைகளின் உபாயப் பெறுபேற்றையும் நாம் கவனிக்க வேணும்.

ஆகவே இந்த நிலைக்குப் பின்தங்கியிருக்கும் ஈழத்தமிழ்ச் சமூகம், தன்னுடைய அரசியலில் எந்த வகையான உபாயங்களைக் கையாண்டிருக்கிறது? இவ்வளவு காலப் போராட்டங்களுக்குப் பின்னர், இவ்வளவு இழப்புகளுக்குப் பிறகு இப்போது எத்தகைய உபாயங்களைக் கையாள்கிறது? என்பது இன்றுள்ள முக்கியமான கேள்விகளாகும்.

அரசியலில் அதிகாரத்தைப் பெறுவதே முதன்மையான செயற்பாடாகக் கொள்ளப்படுகிறது. எத்தகையை கோட்பாடும் எந்த வகையான நிலைப்பாடும் அதிகாரத்தைப் பெற்றாலே அதை நடைமுறைப்படுத்தக் கூடியதாக இருக்கும். எனவே இந்த அதிகாரத்தைப் பெறுவதற்காகவே அனைத்துவகையான அரசியல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆயுதப் போராட்டமும் சரி, ஜனநாயக வழிமுறையிலான போராட்டமும் சரி அதிகாரத்தைப் பெறுவதையே குறியாகக் கொண்டிருக்கின்றன. அதிகாரத்தைப் பெறுவதன்மூலமாகவே ஆட்சியை நடாத்த முடியும். நல்விளைவுகளை உருவாக்க இயலும்.

ஆனால், இந்த அதிகாரத்தைப் பெறுவதில்தான் பிரச்சினையே இருக்கிறது. எந்த அரசியல் நடவடிக்கையிலும் எத்தகைய அரசியற் போராட்டங்களிலும் அதிகாரத்தைப் பெறுவதில் முக்கிய பங்காற்றுவது உபாயங்களேயாகும்.

அரசியல் என்பதே உபாயங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு செயற்பாடாகும். உபாயங்களற்ற கோட்பாடுகள் வெற்றிபெறுவது மிகக் கடினமானது. உண்மையில் அதிகாரத்தை வலுப்படுத்துவதே உபாயங்கள்தான். ஆட்சியை நீடிப்பதிலும் அதிகாரத்தைத் தக்க வைப்பதிலும் உபாயங்களுக்கே முக்கிய பங்குண்டு. உபாயங்களில்லாத அதிகாரம் எந்தச் சந்தர்ப்பத்திலும் நொருங்குண்டு சிதைந்து விடும்;.

தமிழர்களுடைய போராட்டங்களில் யாராவது உபாயங்களைக் காட்டவே முடிந்தால் அது அதிசயந்தான். தமிழர்கள் எப்பொழுதும் உபாயங்களற்ற அரசியலையே முன்னெடுத்து வந்துள்ளனர். அவர்கள் அதிகப்பிரசங்கித்தனமான அரசியலையே தங்களுடையதாகக் கையாண்டு வந்துள்ளனர். அவர்கள் அதிகமாகப் பத்திரிகை அறிக்கைகளிலேயே தமது அரசியலை முன்னெடுத்துள்ளனர்.

எல்லாவற்றையும் பகிரங்கப்படுத்துவது என்பது வெற்றிகரமான அரசியல் வழிமுறையாக இருப்பதில்லை. “திருமணத்தைப் பகிரங்கமாக வைத்துக் கொள்ளலாம். சாந்தி முகூர்த்தத்தை அப்படி வைத்துக் கொள்ள முடியாது“ என்பார்கள். இது அரசியலுக்கும் பொருந்தும்.

இராசதந்திர வழிமுறையில் பரகசியத்துக்கும் பகிரங்கத்துக்கும் அதிக இடமில்லை. இதைச் சீன, இந்திய, அரேபிய, ஐரோப்பிய அரசியற் பண்பாட்டில் நாம் காணமுடியும்.

ஆனால், தமிழ் மிதவாதத்தலைமைகள் எப்போதும் எதிர்த்தரப்புக்கு அதிக சாத்தியங்களை வழங்கும் அரசியலையே கையாண்டு வந்துள்ளன. பேச்சுவார்த்தை மேசைக்குப் போவதற்கு முன்பே தாம் என்ன பேசப் போகிறோம், எதைக் கேட்கப் போகிறோம், அதை எப்படிக் கேட்கப் போகிறோம், தமது திட்டங்கள் என்ன என்பதையெல்லாம் இவர்கள் முன்னரே பகிரங்கப்படுத்தி விடுவார்கள். சிறுபிள்ளைத்தனமான அரசியல் நடவடிக்கை இது.

இதனால், எதிர்த்தரப்பு இவர்களுக்குப் பதிலளிக்கக் கூடியவாறும் இவர்களை இலகுவாகத் தோற்கடிக்கக் கூடியமாதிரியும் முற்கூட்டியே தன்னைத் தயார்ப்படுத்தி விடுகிறது.

உண்மையில் ‘பேச்சுவார்த்தைக்கான மேசை’ என்பது ஒரு போர்க்களம்தான். அது ஒரு சதுரங்க விளையாட்டுக் களம். முற்றுமுழுதாக தந்திரோபாயங்கள் நிறைந்த ஒரு களம். எதிர்த்தரப்பைப் புத்திசாதுரியத்தால் தோற்கடிக்கும் களம். இன்னும் சரியாகச் சொன்னால், எதிர்த்தரப்பை வெல்லும் களம்.

ஆனால், ஈழத்தமிழரின் பேச்சுக் களம் என்பது எதிர்த்தரப்புக்கு வெற்றிவாய்ப்புகளை இலகுவாக உருவாக்கிக் கொடுக்கும் களமாகவே இருந்துள்ளது. அதிலும் சமநிலைத் தரப்புகளாக தமிழர்கள் ஒருபோதும் பேச்சுவார்த்தைக் களத்தில் இருக்கவாய்ப்பில்லை.

ஏனெனில் அதிகாரத்தை வைத்திருப்பது எப்போதுமே சிங்களத்தரப்பாகவே இருக்கிறது. பெரும்பான்மைத் தரப்பாகவும் சிங்களத் தரப்பே உள்ளது. அதாவது ஒடுக்கும் தரப்பிடமிருந்து ஒடுக்கப்படும் தரப்பு தனக்கான உரிமைகளையும் அதிகாரத்தையும் பெறுவதற்கான பேச்சுமேசையே இலங்கையின் பேச்சுவார்த்தைக் களமாகும்.

இந்தக் களத்தில் சமனிலைத் தரப்புகளாக தமிழ்பேசும்மக்களின் தரப்பு இருக்க வாய்ப்பில்லை. சமனிலையை எட்டுவதற்காகவே பேச்சு நடத்தப்படுகிறது. சமனிலை ஏற்கனவே இருக்குமானால், பின்னர் எதற்காகப் பேச்சுக்களை நடத்தவேண்டும்? எதற்காகப் பேச்சுமேசைக்குப் போகவேண்டும்?
ஆனால், இந்தச் சமநிலை குறித்துத் தவறான புரிதல்களே தமிழ் பேசும் மக்களின் தரப்பில் உள்ளது. பலத்துடன் பேச்சுமேசைக்குச் செல்வது என்பது உண்மையில் விவேகத்துடன் செல்வதையே – விவேகத்துடன் செயற்படுவதையே குறிக்கும். அதேவேளை பேச்சுக்குரிய சூழலை உருவாக்குவது – பேசவேண்டியதொரு நிர்ப்பந்தத்தை உருவாக்குவதையே நாம் பலத்துடன் செல்வது என்கிறோம்.

ஆனால், இதுவும் ஒரு உபாயந்தான். இதைப் பற்றிப் பின்னர் இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

ஆகவே, பேச்சுமேசையைத் தவறாகக் கையாளும் போக்கே இப்போதும் தமிழர்களின் அரசியலில் தொடர்கிறது. இதுதான் சோகமான கதை.

ஆயுதப் போராளிகளைப் பொறுத்தவரை இதற்குச் சற்று விலக்காக நடந்து கொண்டிருந்தாலும் அவர்களும் தமது நிலைப்பாடுகளை அறிவிப்பதிலும் அவற்றைக் கையாளும் முறைகளிலும் தந்திரோபாயங்களைக் கையாளத் தவறிவிட்டனர்.

புலிகள் நீண்டகால அரசியல் செயற்பாட்டில் முதன்மைப் பட்டிருந்தவேளை ஒப்பீட்டளவில் குறிப்பிடத்தக்க உபாயங்களைப் பின்பற்றியிருந்தனர். குறிப்பாக இந்திய இராணுவத்துடன் தொடங்கப்பட்ட போரை முடிவுக்குக் கொண்டு வந்ததில் முக்கிய பங்காற்றியவர் திரு. அன்ரன் பாலசிங்கம். இதுபோல வேறு சில சந்தர்ப்பங்களிலும் திரு. அன்ரன் பாலசிங்கம் குறிப்பிடத்தக்க உபாயங்களைக் கையாண்டு காரியங்களைச் சாதித்திருக்கிறார்.

இதற்குக் காரணம் அன்ரன் பாலசிங்கத்திடம் இது குறித்த புரிதல் இருந்தது. இதனை அவர் 1980 களின் முற்பகுதியில் எழுதிய ‘அரச பயங்கரவாதமும் ஆயுதப் போராட்டமும்’ என்ற புத்தகத்தில் ‘தூலமான நிலைமைகளில் இருந்து தூலமான ஆய்வு’ எனக் குறிப்பிடுவதிலிருந்து பார்க்கலாம். ஆனால், துரதிருஸ்ரவசமாக இந்த அணுகுமுறை ஒரு போதும் வெற்றிகரமாகத் தமிழ்ச் சூழலில் பிரயோகிக்கப்படவில்லை.

மேலும் ஈழ அரசியலில் உபாயங்களைக் குறித்து சிந்தித்தவர்களில் இ.இரத்தினசபாபதி இன்னொருவராவர். ஆனால், இரத்தினசபாபதி அடுத்த கட்டத்துக்கு நகரமுடியாமற் போய்விட்டது. அதேவேளை, அவருடைய அரசியற் செயற்பாட்டில் தொடர்ச்சியும் இல்லாமற்போய்விட்டது.

மற்றும்படி, தமிழ் மேட்டுக்குடியினரின் விருப்புகளே, தமிழ் மக்களின் அரசியல் விருப்புகளாக மாற்றப்பட்டன. இதை நாம் சேர். பொன். இராமநாதன் தொடக்கம் இன்றைய சம்மந்தன் வரையில் பார்க்கலாம். இவர்களுடைய அரசியல் வழிமுறை என்பது மாற்றங்களின்றிய நேர்கோட்டு அணுகுமுறையாகும். நேர்கோட்டு அணுகுமுறை என்பது எதிர்த்தரப்பின் தாக்குதலுக்கும் தடைக்கும் இலகுவானது.

இந்தக் குறைபாடுகள்தான் இந்த உலகத்தில் தமிழர்கள் தமக்கான ஆதரவுத்தளத்தைப் பெறுவதில் பெரும் பின்னடைவுகளை ஏற்படுத்தியது. இதற்குச் சிறந்த உதாரணமாக தமிழர்களின் அரசியற் போராட்டத்தில், இதுவரையில் அரசியல் உபாயங்களில் பேர் சொல்லக் கூடிய ஒருவரையாவது காட்டமுடிந்தால் அது ஆச்சரியமே.

அப்படியானால் இது எதைக் காட்டுகிறது? ஒரு நீடித்த அரசியற் போராட்டத்தில் நிச்சயமாக அரசியற் கொள்கை வகுப்பாளர்களும் அரசியல் இராசதந்திரிகளும் உருவாகியிருக்க வேணும். ஆனால், நிலைமையோ பூஜ்ஜியமாகவே இருக்கிறது.

இந்த நிலையில்தான் ஈழத்தமிழர்களின் அரசியற் சாணக்கியத்தின் பலவீனம்  உள்ளது. என்பதாலேயே ஈழத்தமிழர்களின் அரசியல் என்பது கேலிக்குரியதாக கணிக்கப்படுகிறது. மாரிகாலத் தவளைகளின் கத்தலை யாரும் பொருட்படுத்தாததைப் போல இந்தப் போராட்டக் குரல்களை யாரும் கவனத்திற் கொள்வதில்லை.

இதேவேளை சிங்களத் தரப்பில் உபாயங்களே பிரதான அரசியல் வழிமுறையாக கையாளப்படுகின்றன. உள்நாட்டு நெருக்கடிகளாலும் வெளி அழுத்தங்களாலும் இலங்கை அரசு பல சந்தர்ப்பங்களில் சிக்கித் திணறியிருக்கிறது. ஆனால், அதையெல்லாம் சிங்களத்தரப்பின் உபாயங்களே முறியடித்திருக்கின்றன.

குறிப்பாக 1987 இல் இந்திய நெருக்கடி இலங்கையைப் பெரும் சிக்கலுக்குரியதாக்கியது. ஆனால், பின்னர் புலிகளை முறியடிக்கும் பெரும் போருக்கு இந்தியா இலங்கைக்கு உதவியது. அந்த அளவுக்கு இலங்கையின் - உபாயம் - இராசதந்திரம் பெறுமதி மிக்கது.

இதைப்போல புலிகளுக்கு எதிரான தடைக்காகவும் போருக்காகவும் உலகத்தின் பெரும்பாலான சக்தி மிக்க நாடுகளை எல்லாம் இலங்கை வென்றெடுத்திருந்தது. இதை, இந்த வென்றெடுப்பை அது பரகசியமாகச் செய்யவில்லை. காதும் காதும் வைத்ததைத் போல மிக இரகசியமாகச் செய்து தன்னுடைய காரியத்தைச் சாதித்துக் கொண்டது.

இலங்கை மட்டுமல்ல, அனைத்து நாடுகளும் உபாயங்களையே தமது அரசியல் வழிமுறையில் கையாள்கின்றன. இல்லையெனில் உலகத்தில் பெரிய நாடுகளே எப்போதும் ஆதிக்கத்துடன் இருக்க முடியும். சிறிய நாடுகளின் கதை அதோகதியாவே மாறியிருக்க வேணும்.

ஆனால், சிறிய நாடுகளே உலகத்தில் அதிகமாக இருக்கின்றன. இந்தச் சிறிய நாடுகள் பெரிய நாடுகளுக்குச் சமதையாகவும் பெரிய நாடுகளிடமிருந்து பாதுகாப்பாகவும் இருக்கின்றன என்றால் அது எப்படிச் சாத்தியமாகிறது? இந்தச் சமனிலையைக் கொடுப்பது உபாயங்களே!

இதைப்போல பெரும்பான்மைச் சமூகங்களிடமிருந்து சிறுபான்மைச் சமூகங்கள் எப்படிப் பாதுகாப்பாக இருக்கின்றன என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

பெரிய பாறாங்கல்லை சிறு நெம்பு கோலைக் கொண்டு அசைத்து விடுகிறோம். இது எப்படி நடக்கிறது? இங்கே பயன்படுத்தப்படும் நெம்பு கோல் என்பது ஒரு உபாயமே.

பல சந்தர்ப்பங்களிலும் நாம் கோலியாத்தின் கதையைச் சொல்லிக் கொள்கிறோம். ஆனால், ஒரு சிறுவன் எப்படி பென்னாம் பெரிய வீரனை – தாவீதை - வென்றான். அவன் கைக்கொண்ட உபாயமே அவனுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.

ஆகவே உபாயங்களில்லாத எந்த விசயமும் வெற்றிகரமாக அமைவதில்லை. மட்டுமல்ல, உபாயங்களைக் கைக்கொண்டால், வெற்றியும் இலகுவாகக் கிடைத்து விடும். சிரமங்களும் அதிகமாக இருக்கப்போவதில்லை. தமிழர்கள் தங்கள் பாரம்பரிய அரசியல் வழிமுறையைக் கைவிட்டுப் புதிய உபாயங்கள் நிறைந்த அரசியல் வழிமுறைக்குச் செல்ல வேண்டும்.

இந்த உலகத்தில் வாய்ப்புகள் தாராளமாகக் கிடக்கின்றன. அந்த வாய்ப்புகளைத் தேர்ந்தெடுப்பதிலும் அவற்றைப் பயன்படுத்துவதிலுமே எங்களின் பெறுமதியும் எங்களுக்கான எதிர்காலமும் தங்கியிருக்கிறது.

00

0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB