கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

மனச்சாட்சியில் ஓட்டைகள்

Thursday, 16 February 2012



நேர்காணல் -














‘வீடற்றவன்’ என்ற ஒரு நாவலை மலையகத்தின் மூத்த எழுத்தாளராக இருந்த சி.வி.வேலுப்பிள்ளை எழுதியிருந்தார். இலங்கையின் மத்தியிலுள்ள மலையகப் பகுதியில் இருக்கும் இந்திய வம்சாவழித் தமிழர்களுக்கு வீடற்ற வாழ்க்கை என்பது நூற்றாண்டுகளின் நீள்துயரம். அவர்களுடைய வீடுகள் என்பது, லயங்களே. ஏறக்குறைய சேரிப்புற வாழ்க்கை நிலவரத்தை ஒத்த அமைப்பு இந்தக் குடிசைகள். வசதிகளே இல்லாத லயங்களில் மந்தைகளைப் போல வாழ நிர்ப்பந்திங்கப்படும் நிலையை சி.வி வேலுப்பிள்ளை எழுதியிருந்தார். 


இந்த மக்களுக்கு வீடு மட்டுமல்ல காணியே இல்லை. ஆனால், நூற்றாண்டுகளாக இவர்கள்தான் தேயிலை, ரப்பர் தோட்டங்களில் மாடாக உழைத்து இலங்கையின் பெரும்பொருளாதாரத்தை ஈட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய காணியில்லாப் பிரச்சினையை மையப்படுத்தி ‘காளிமுத்துவின் பிரஜா உரிமை’ என்ற கதையை 1949 இல் எழுதியிருந்தார் அ.செ.மு. உரிமையற்ற மனிதர்களின் கதை என்ற வகையில் பின்னர், இது மிகப் புகழ்பெற்ற சிறுகதையாகியது. 


இதெல்லாம் மலையத்தின் - மலையகத்தமிழர்களின் நிலைமை. 


இப்பொழுது இதையும் விட மோசமான கட்டத்தில் இருக்கின்றனர் வடக்குக் கிழக்கில் வாழ்கின்ற தமிழர்கள். இந்தப் பிரதேசங்களில் வாழுகின்ற பல குடும்பங்களுக்குக் குடியிருப்பதற்கே ஒரு துண்டு காணி இல்லை. காணியில்லாதவர்களுக்கு வீடெப்படி இருக்க முடியும்? அகதி வாழ்க்கை முடிந்து ஊருக்குத் திரும்பினாலும் இவர்கள் குந்த ஒரு குடிநிலம் இல்லாத நிலை.  ஆனால், இவர்கள் போராட்டத்திலும் யுத்தத்திலும் ஏராளம் விலைகளைக் கொடுத்தவர்கள். 


இதேவேளை தமிழ் அரசியற் பிரமுகர்களிடமும் தலைவர்களிடமும் பெருந்தொகையான காணிகள் ஏக்கர்க்கணக்கில் பராமரிப்பின்றிய நிலையிலேயே உள்ளன. மேலும் புலம்பெயர்ந்திருக்கின்ற மக்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினருக்குத் தாராளமான அளவில் நாட்டில் காணிகள் உள்ளன. இந்தக் காணிகளில் ஒரு சிறு பகுதியை ‘மனம் உவந்து’ ஒவ்வொருவரும் பகிர்ந்தளித்தால் தங்களுடைய இன்றைய காணியில்லாத – வீடில்லாத அவலநிலை தீர்ந்து விடும் என்று சொல்கிறார்கள் காணியற்ற ஈழ மக்கள். 


மறுபக்கத்தில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வில் சர்ச்சைக்குரிய ஒரு விசயமாக இருப்பது காணி தொடர்பான பிணக்கு. காணி அதிகாரத்தைத் தமிழர் தரப்பு பிரதான அம்சமாகக் கோரிவருகிறது. இதைக் கொடுப்பதற்குப் பின்னடித்துக்கொண்டேயிருக்கிறது சிங்களத்தரப்பு. சிங்களத்தரப்பிடமிருந்து காணிக்கான அதிகாரத்தைப் பெற விரும்பும் நாம் காணியற்ற மக்களுக்கு எங்களிடம் இருக்கின்ற காணிகளில் ஒரு சிறு அளவைக் கொடுப்பதற்கு முன்வர வேண்டும் என்பதே பொது விருப்பமாகும். இந்த நிலையில் இந்தச் சுவையான முரண்களைக் குறித்துப் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களில் ஒருவராகிய ராதாகிருஸ்ணன் மாரியம்மா என்பவரிடம் உரையாடினோம். 


இவருடைய கணவர் போரின்போது நடந்த எறிகணை வீச்சில் கொல்லப்பட்டு விட்டார். ஒரு மகன் போராட்டத்தில் சாவடைந்துவிட்டார். 

00

யுத்தத்துக்குப் பிறகு எப்படி இருக்கிறீங்கள்? நிலைமை எப்பிடி இருக்கு?

என்னத்தைச் சொல்றது? எங்களுக்கு எப்பவும் பிரச்சினைதான். பாருங்க, இப்ப இருக்கிறதுக்கு காணியில்ல. காணியில்லைங்கிறதால வீடு குடுக்க முடியாதுங்கிறாங்க. அப்ப நாங்க என்ன பண்ண முடியும், சொல்லுங்க? இதப்போயி எல்லார்கிட்டயும் சொல்லியாச்சு. ம், பாக்கிறம். அப்பிடீன்னு சொல்றாங்களே தவிர, யாருமே ஒண்மே பண்ணல. நாங்க இன்னும் துன்பப்பட்டுக்கிட்டுத்தான் இருக்கோம்.

இதுக்கு முதல் எங்க இருந்தீங்க? 

இங்கதான் - கிளிநொச்சியிலதான் இருந்தம். அதுக்கு முன்னாடி கம்பளையில. 77 கலவரத்தில அடிச்சிக்கிட்டாங்க. ஓடி இங்கிட்டு வந்தம். அப்ப இந்தப் பக்கம் (கிளிநொச்சியின் மேற்கிலுள்ள உதயநகர்ப் பகுதியில்) காடு வெட்டி இருந்தம். நாங்க நாலு பொண்ணுங்க. அப்பாவுக்கு வயசாயிட்டு. அக்கா அவங்களுக்கு அந்தக் காணியக் குடுத்திட்டாச்சு. அப்புறம் எங்க ரண்டு பேருக்கு காணி கிடையாது. நாங்க மருத நகர்ப்பக்கம் கல்யாணமாகிப்பறம் இருந்தம். அதுல இருந்த பெரிய காணியில நாம குடியிருந்தம். ஏம் புருசன் அந்தப் பக்கத்திலதாங் இருந்தாரு. அவுங்க அப்பா, அம்மா எல்லாமே அந்தப் பக்கத்திலதான் ரெம்ப நாளா இருந்தாங்க. நாம்பளே அந்தக் காணியைப் பாத்து வெள்ளாமையைச் செஞ்சுட்டு வந்தம். இயக்கப் பெடியனுவள்கூட எங்களுக்குச் சப்போர்ட் பண்ணினாங்க. நாங்க அவுங்கள பாத்துக்குவோம்.

அதுக்குப் பின்னாடி, சண்டை வந்தப்பிறம் நாங்க ஓடிட்டுப் போறது, பின்னாடி வர்றது. இப்புடியே இருந்திச்சில்லா. கடைசீல நாங்க உசரப்பக்கமா அஞ்சாறு வருசத்துக்கு முன்னாடி ஒரு கொட்டில போட்டுக்கிட்டு இருந்தம். பெடியங்களும் (இயக்கம்) ஒத்தாசையா இருந்தாங்க.

ஆனா, எல்லாமே போயிட்டு. பின்னாடி, சண்டை வந்தப்பிறம், நாங்க ஓடிப்போயி, இந்தக் காடு கடெலெல்லாம் அலைஞ்சிட்டு, முகாமெல்லாம் போயி இப்ப வந்திருக்கம். இஞ்ச வந்தா...

இப்ப எப்படி இருக்கிறீங்க?

கடவுளே, அத என்னத்தச் சொல்ல? இப்ப நாம இருக்கிற இந்தக் காணிக்கு ஆளாளுக்கு ரண்டு பேர் வந்து அடிச்சிக்கிறாங்க. தங்க வீட்டுக் காணியாம். அவுங்க தாத்தாட காணி, அப்பாட காணின்னு என்னமோ சொல்லிக்கிறாங்க. இவ்வள நாளா எங்கிட்டு இருந்தாங்களோ... முன்னாடி ஒருத்தர்தான் என் வீட்டுக்காரர்ட அப்பா அவுங்கள இந்தக் காணீல கொண்டாந்து இருத்தினாராம். ஒரு அஞ்சாறு வருசத்துக்கப்பறம் அந்தாளும் வர்ல. வேற யாரும் இந்தப் பக்கமே வர்ல. நாமதான் எல்லாத்தையும் பாத்துக்கிட்டது. இல்லைன்னாக்கா இப்படி இந்த நிலம் இருக்குமா? காடெல்லாம் வளந்திருக்குமே. பாருங்க நாங்க வெச்ச தென்னப்புள்ளய காய்க்குது. இருவது புள்ள வெச்சம். இப்ப பதிமூணு இருக்கு.

இப்ப வந்திருக்காங்க. சண்டை முடிஞ்சிருக்கில்ல. இப்ப பாத்து எல்லாருமே வர்ராங்க. அந்தா அந்தப் பக்கங்கூட யாரோ வந்து தங்கவூட்டுக் காணி அப்பிடீன்னு சொல்றாங்களாம். அங்க இருக்கிறவங்க நம்பள மாதிரி அம்பது அறுவது வருமா அங்கனயே இருக்கிறாங்க. இப்ப வந்து இடத்தை விடு. எழுந்திட்டு எங்கிட்டாவது போ அப்பிடீன்னா என்ன பண்றது, சொல்லுங்க?

நம்ம கிட்டக் கூட வந்து நாங்க இங்க இருந்து எழுந்துக் கிட்டு எங்கயாச்சும் எடம் பாத்துக்கிட்டு போங்க அப்படீன்னுறாங்க. அவங்க கூடத்தான் ஜீ. எஸ்ஸ_ம் (கிராம அலுவலர் அல்லது விதானையார்) இருக்கார். பத்திரம் எல்லாம் வைச்சிருக்காங்க. ரண்டு பேருந்தான். அவுங்களுக்க அடிதடி வேற. யார் வூட்டுக்காணிங்கிறதே அவுங்களுக்கப் பிரச்சனை.

இம்புட்டு நாளும் வெளிநாட்டுல இருந்தாங்களாம். இப்ப வந்திருக்காங்க. இத்தினை நாள் நாங்கதான் இந்த நிலத்தப் பாத்தம். பாருங்க ஒரு பத்தை இருக்கா? ஒரு செடி இருக்கா. இந்தாளு எந்த நேரம்பாத்தாலும் எதையாவது செஞ்சிட்டிருப்பாரு. ராத்திரில – நிலாவில கூட காணிவேலை பாப்பாரு. எங்க வீட்டு வளவைப் போல இதைப் பாத்திருக்கோம். பிள்ளையைப் போல பாத்திருக்கோம். குடியிருக்கிற இடமெல்லா. ஆனா, இப்ப யாரோ வந்திருக்காங்க, தங்கவூட்டு நிலம்னு. என்ன பண்ண?

ஆர்.டி.எஸ் (கிராம அபிவிருத்திச் சங்கம்) கிட்ட போனா அவங்க ரண்டு பக்கத்துலயும் நியாயம் இருக்கெங்கிறாங்க. அவங்க கையில பத்திரம் இருக்காம். அதனால அவங்களுக்குத்தான் நிலம் சொந்தம்கிறாங்க. ஆனா நாம ரொம்பக் காலமாக, ரண்டு மூணு தலைமுறைங்களா இங்கிட்டே இருக்கிறதால எங்களுக்கும் உரித்துண்டுங்கிறாங்க.

அதெப்பிடி ரண்டு பக்கமும் ஞாயம் இருக்க முடியும், சொல்லுங்க? இந்த ஞாயத்தை ஏ.ஜி.ஏ ஏத்துக்கிட மாட்டேங்கிறாரு. அவருக்குச் சட்டந்தான் பெரிசுங்கிறார். பத்திரம் வைச்சிக்கிறவங்களத் தாம் எதுவும் பண்ண முடியாது. அவங்களா எதனாச்சும் பண்ணினாத்தாங்கிறாரு அவரு. அவங்க விரும்பி காணியைக் குடுத்தாத்தான் எதனாச்சும் செய்யலாம்கிறார் அவரு.

அவருகிட்ட நம்ப நிலமையை சொல்லிப் பாத்தாச்சு. அதுக்கு என்ன பண்ண முடியும்கிறாரு. வேணும்னாக்கா அரசாங்கத்துக்க காணியில தேடிப்பாத்து எதனாலும் செய்ய முடியுமாம்னு பாக்கறேன் ண்றாரு.

ஆனா நாம இத விட்டு இன்னொரு இடத்துக்க போகமுடியுமா? நாலு தலைமுறையா இங்க இருந்திட்டோம். இடமெல்லாம் பழகீட்டு. தொழில் பழகீட்டு. ஆட்களெல்லாம் பழகீட்டு. எல்லாத்தேயும் விட்டுட்டுப் போயிட முடியுமா? இன்னுமா பெட்டி படுக்கை எல்லாம் தூக்கிட்டு இடம்தேடி அலையணும்? இப்பிடியே அலைஞ்சிட்டிருக்க முடியுமா?

அங்கிட்டுப்போயி என்ன பண்ண முடியும்? இந்த பாருங்க, போன மாசம், இந்தியா கட்டிக் குடுத்த வீட்ட எடுத்திட்டு எங்க அக்கா பொண்ணு அங்க – அறிவியல் நகர்ப்பக்கத்தில ரொம்பக் கஸ்ரப்படுது. எடம் புதுசு. ஆக்களெல்லாம் புதுசு. அங்கிட்டு ஒரு தொழில் கிடையாது. அங்கிட்டிருக்கிற ஆக்கள்லாம் இங்கிட்டுத்தான் வயல் வேல, மேசன் வேலக்கெல்லாம் வர்ராங்க. எல்லாத்துக்கும் இது ஏலுமா?

அங்கிட்டு தண்ணிக்கே ரொம்பப் பாடு. ரண்டு மூணு நாளுக்கு ஒருக்கா தண்ணி விடுறாங்க. இருக்கி ஆக்கள்லாம் ரெம்பக் கஸ்ரப்படுதுகள். நாங் அங்கிட்டுப் போயிருந்தன். அங்க பாத்தா, ரொம்ப வருத்தமாயிருக்கு. புருசனை எழந்திட்டவங்க, புள்ளய எழந்திட்டவங்க அப்படீன்னுதான் எல்லாரும் இருக்காங்க. அக்கா பொண்ணுட புருசன் செல்லில செத்திட்டாரு. அவ ஒரு புள்ளயோட ரொம்பப் பாடுபர்ரா. இங்கிட்டு இருந்தப்ப, வயலுக்குப் போவ. ஒரு நாளைக்கு ஐநூறு ரூபாய் குடுத்தாங்க. எந்த நாளும் இல்லாட்டியும் நாலு ஐஞ்சு நாளுக்கு வேலை பாக்கும் அந்தப் புள்ள. ஆனா, அங்கிட்டு ஒண்ணுமே கிடையாது. நிவாரணம் கூட இல்லைன்னுட்டாங்களாம்.

சரி, இந்தப் பிரச்சினைகளை எல்லாம் நீங்கள் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் தெரியப்படுத்தவில்லையா?

சொல்லியிருக்கோம். ஆனா அவங்க இப்ப எதுவும் பண்ண முடியாதுங்கிறாங்க. காணிப் பிரச்சினை எல்லாமே இப்ப பாக்க முடியாது அப்பிடீன்னுட்டாங்க. அப்ப நாம என்ன பண்ணறது எண்ணு கேட்டா, அதுக்குப் பதில் கிடையாது.

இப்பிடி ஒரு நிலைமைல என்ன பண்ண முடியும்னு சொல்லுங்க. நம்பளுக்குத்தான் வீட்டுத் திட்டம் கூட இல்ல. இந்த மாதிரி எவ்ளவோ ஆட்கள் இருக்கிறாங்க. காணி இல்ல அப்பிடீன்னுட்டு வீட்டு உதவியைக் கான்சல்ட் பண்ணிடறாங்க.

திரும்ப இந்த உதவியெல்லாம் கிடையாது. ஆனா இதுக்கு எதுவும் பண்ண முடியாதுன்னு சொல்லிடுறாங்க.

அப்படியென்றால் இப்ப இதுக்கெல்லாம் நீங்கள் என்ன செய்யலாம் எண்டு நினைக்கிறீங்கள்?

ஒண்ணுமே பண்ண முடியாது. பாருங்க, இந்த மண்ணில இவ்வளவு காலமா இருந்திருக்கோம். இந்த இடத்திலதான் நாங்க வளந்தது. படிச்சது. கல்யாணம் பண்ணிக்கினதும் இங்கினதான். நம்பட புள்ளங்க பிறந்தது, நாம இருக்கிறது எல்லாம இங்கிட்;டுதான். ஆனா, இப்ப அவனவன் வந்து கிளம்பெங்கிறான். பாருங்கய்யா காலத்த.

இவ்வளவு நாள இவங்கெல்லாம் எங்கிட்டிருந்தாங்க? அட இப்பகூட இங்கவா இருக்கப்போறாங்க? நாளைக்கே போயிடுவாங்க. ஆனா சொத்த எடுத்துக்கப் போறாங்களாம். இது ஞாயமா சொல்லுங்க? இவ்வளவு காலமா இருந்து இந்த நிலத்தைப் பாத்திருக்கிறம். குடியிருந்திருக்கிறம். இப்ப வேரோட புடுங்கிறாங்கய்யா. அட இதுகூட அரசாங்க நிலந்தான். ஆனா அவங்க கையில பேமிற் (அத்தாட்சிப் பத்திரம்) இருக்குங்கிறாங்க. இதப்பத்தியெல்லாம் ஆருக்குத்தான் உண்மை தெரியுமோ!

............ (சற்று மௌனமாக இருந்த பின்னர் மீண்டும் தொடர்ந்தார்)

நம்மட துக்கம் போகாதய்யா. ஆளாளுக்கு வந்து துரத்திக்கிட்டே இருக்கிறாங்க. எல்லாருமே அதிகாரந்தான் பண்றாங்க. அதுக்கெல்லாம் ஒரு ஞாயம்.

காணிப்பத்திரம் இல்லைன்னா, வீடு குடுக்க முடியாதுன்னா நாம என்ன பண்ணுறது? எல்லாருக்கும் வீடு கிடைக்குது. நம்மளக்கு இல்லை. நாம புள்ள குட்டிக்காரங்க. இந்தச் சண்டைக்குள்ள எல்லாம் இருந்து எவ்ளவு கஸ்ரமெல்லாம் பட்டம். ஏன் புருசங்கூட செத்திட்டாரு. புள்ள ஒண்டில்ல. இந்த நிலைமையில என்ன பண்ண முடியும்? குடும்பத்தில உழைக்கிற ஆட்களெ இல்ல.

இந்த வயசில என்னால எல்லா இடத்துக்கும் ஓடித் திரிய முடியுமா?

காணியற்ற ஆட்களுக்குக் காணி வழங்குவதைப் பற்றி அரசாங்கம் ஆராய்ந்து கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறதே. அப்படியான ஒரு நிலை வந்தால் உங்களுடைய பிரச்சினை தீருமல்லவா?

ஆனா அதுக்கு யாரு பொறுப்புச் சொல்றது? சும்மா இப்பிடிச் சொல்லிக்கிறாங்க. ரொம்பப் பேர் காணியில்லாம அலைஞ்சிட்டிருக்காங்க. ஒருத்தருக்கும் காணி குடுக்கிறதாக் காணல்ல. இப்ப இந்தியன் வீட்டில கொஞ்சப் பேருக்குக் குடுத்திருக்காங்க.

எப்ப காணி குடுப்பாங்க? எப்ப நாங்க அதில வீடு கட்டிறது? இதெல்லாம் யாருக்குத் தெரியும்? ஒண்ணையுமே விவரமா யாரும் பேச மாட்;டேங்கிறாங்க. இந்த வீட்டுத் திட்டம் போயிடுச்சின்னா அவ்வளவுதான். பிறகு எதுவுமே கிடையாது. நாங்க குடிசைக்குள்ளதான்.

அதான் சொல்றேன். இதெல்லாம் நடகிற காரியம் இல்ல. அப்பிடி இருந்தா இப்பவே காணிக்கு ஒரு முடிவைச் சொல்லிடுவாங்க. இப்பதான காணிக்கு வழிவேணும். அப்புறம் எதுக்கு? இப்பதானே வீட்டைக்குடுக்கிறாங்க.

இப்பிடியே சொல்லிக் கொண்டிருந்தால் உங்களுடைய எந்தப் பிரச்சினையும் தீராது. ஆனால், நீங்கள் சொல்வதில் நியாயம் உண்டு. உங்களுடைய இந்தப்பிரச்சினையை விளங்கிக் கொண்டு உதவக்கூடிய ஆட்கள் யாரும் இல்லையா?

சிலர் உதவ வந்தாங்க. ஆனா அவங்க என்ன பண்ண முடியும்? காணிக்குப் பத்திரத்தை அவங்களால வழங்கிட முடியுமா என்ன? அவங்க ஜீ.எஸ், ஏ.ஜீ.ஏ, ஆர்.டி.எஸ், எல்.ஓ இப்பிடி எல்லார்கிட்டயும் பேசிப்பாத்துட்டாங்க. ஆனா ஒரு வழியும் கிடைக்கல்ல.

சட்டம் போட்டிருக்காம். நீதி மன்றத் தடை வந்திருக்காம். அப்பிடியெல்லாம் சொல்லிக்கிறாங்க. முன்னாடி நாங்க இருந்த காணிக்கு போம் போட்டாங்க. நாங்க அத நிரப்பிக் குடுத்திருக்கம். ஆனா அதெல்லாம் இப்ப செல்லாதுன்னுட்டாங்க. இப்பிடியே எதெல்லாமோ சொல்லிச் சொல்லிக் காலத்தப் போக்கிக்கிறாங்க.

எனக்கு என்ன பண்றதுன்னே புரியல்ல. இனி திரும்பி நாம கம்பளைக்குப் போக முடியுமா? அங்கிட்டு எனக்கு யாரத்தெரியும்? இப்ப இங்கிட்டும் இருக்க முடியாது. அங்கிட்டும் போவ முடியாது. கடவுளே! நாலு புள்ளங்களையும் வெச்சிக்கிட்டு என்னதான் பண்ணப்போறனோ!

அப்படியென்றால், இப்ப நீங்கள் இருக்கும் காணிக்கு உரிமை கோரிக்கொண்டு வந்திருப்பவர்களிடம் உங்களுக்குக் கொஞ்சக் காணியைத் தரும்படி கேட்கலாமே!

அதுக்கு அவங்க எங்களோட பேச மாட்டேங்கிறாங்க. இந்த மாதிரிப் பிரச்சினை எங்களுக்கு மட்டுமில்ல. அந்தப் பக்கமா இன்னும் பத்துக்குடும்பங்க இதே மாதிரி இருக்கிறாங்க. அவங்களும் அவங்க இருக்கிற காணிக்கு வந்திருக்கிற ஆட்கள் கூடப் பேசியிருக்கிறாங்க. ஆனா அவங்க அதுக்குச் சம்மதிக்கல்ல.

தங்கட காணிக்குள்ள வேற ஆட்களை வெச்சிருக்கிறது நல்லதில்லன்னு சொல்றாங்க. எப்பிடிருக்கு நிலைமை பாத்தீங்களா?

இவ்ளவு நாளா நாமளே காணியைப் பாக்கணும். இப்ப மட்டும் அவங்களுக்கு நாம தேவை இல்ல. காரியம் முடிஞ்சிருக்கல்ல. அவ்வளவுதான். இனி நாமெல்லாம் யாருக்கும் தேவையில்ல. என்ன மனுசங்கப்பா இவங்கெல்லாம். என்னதான் படிச்சிருக்கிறாங்களோ!

00

குறிப்பு – 

யுத்தம் முடிந்த பின்னர் வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்குத் திரும்பி வருவோர், தங்களுடைய காணி உறுதிகளைக் கொண்டு வந்து தங்களின் காணி மற்றும் சொத்து உரிமைகளை நிலைநாட்டிக் கொள்கிறார்கள். இதில் பலருக்கு ஏக்கர்க்கணக்கான காணிகள் பராமரிப்பின்றிய நிலையில் உள்ளன. சிலருடைய காணிகளை பல குடும்பங்கள் நீண்டகாலமாகவே பராமரித்து வந்திருக்கின்றன. ஆனால், காணி உறுதிகளைக் கொண்டு வருவோர் அந்த உறுதிகளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி இந்தக்குடியிருப்பாளர்களை வெளியேற்றி வருகின்றனர். இப்படி வெளியேற்றப்படும் குடும்பங்கள் பெரும்பாலும் மிக வறிய – ஏழைக்குடும்பங்களாகவே உள்ளன. 


இதில் அரசாங்கத்தினால் குடியேற்றத்திட்டங்களின் போது வழங்கப்பட்ட காணிகளை விட்டு வெளியேறிப்போனோரும் உண்டு. இந்தப் பெண் இப்படியான காணி ஒன்றிற்தான் நீண்டகாலமாக வசித்து வருகிறார். இப்படிப் பல குடும்பங்கள் வன்னியில் உள்ளன. ஆனால், இப்பொழுது உருவாகியிருக்கும் போருக்குப் பிந்திய சூழலில் பலரும் தங்களுடைய காணிகளுக்கான உரித்தாவணங்களைத் தூசி தட்டி எடுத்துக்கொண்டு வந்து உரிமை கொண்டாட முயல்கின்றனர். தங்களுடைய உரித்தைக் கொண்டாடும்போது, இதுவரையில் யுத்தத்தின் மையத்தில் வாழ்ந்து கொண்டு இந்தக் காணிகளைப் பார்த்துப் பராமரித்தவர்களையும் சற்று மனங்கொள்ள வேணும்.


இதனால் பல முரண்கள் ஏற்பட்டுள்ளன. யுத்தச் சூழலுக்குள் முப்பது, நாற்பது ஆண்டுகளாக காணிகளைப் பராமரித்து, அதற்குள்ளேயே வாழ்ந்து வந்த குடும்பங்களின் நிலைமையைக் கருத்தில் எடுக்காமல் உரித்துக் கொண்டாடும் மனோ நிலை மிகக் கவலை அளிக்கும் ஒன்றாகும். ஆனால், இதைக்குறித்து யாரும் வெட்கப்படுவதாகவோ சிந்திப்பதாகவோ இல்லை. 


தமிழ்ச் சமூகத்திற்கும் காணிக்கும் பெரும் பிணைப்புண்டு. காணிக்காகவே – காணியின் எல்லைத் தகராறுகளாலேயே சொந்தச் சகோதரர்களைக்கூடப் பகைத்துக்கொள்ளும் மனநிலை உள்ளவர்கள் ஈழத்தமிழர்கள். இந்தப் பின்னணியில் இந்தப்பிரச்சினையை - இந்த ஏழை மக்களின் நிலையை யாரும் எளிதிற் புரிந்து கொள்ளலாம். 


மேலும் அரச காணிகளைக் காணியற்ற பொதுமக்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்குப் பின்னடிக்கும் அதிகாரிகள், அரசாங்கத்தின் செல்வாக்கோடு வரும் தனியாருக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் தாராளமாகவே காணிகளை வழங்குகின்றனர். 


சட்டத்திலும் நிர்வாகத்திலும் தாராளமாக இந்தமாதிரி ஓட்டைகள் இருப்பதொன்றும் புதிதல்ல. ஆனால், மனச்சாட்சியில் ஓட்டைகள் விழுவதே ஏற்றுக்கொள்ளக் கடினமான விசயம். 

00

எல்லைகடந்த அதிகாரம் = ஜனநாயக நெருக்கடி

Sunday, 5 February 2012
















அதிகாரத்தின் வரம்புகளே மக்களையும் வரலாற்றையும் சேதமற்ற முறையில் பாதுகாக்கின்றன. எல்லையற்ற அதிகாரம் எல்லாற்றையும் சிதைத்து விடுகிறது.

உலக அரசியல் வரலாற்றில் இந்தப் பாடம் பெரும்போதனைகளைத் தந்துள்ளது. ஆனால், அதேயளவுக்கு இந்தப் பாடத்தை எள்ளி நகையாடி நிராகரித்த வரலாறும் உண்டு.

இலங்கை அரசியலில் தமிழ், சிங்களத் தரப்புகள் என்ற பேதங்களின்றின்றி அதிகாரத்தின் எல்லைகளை உச்சமாகக் கடந்த நிகழ்ச்சிகள் தாராளமாக உண்டு. அதிலும் சிங்களத்தரப்பின் எல்லைகடத்தல் கட்டற்றது. இடையறாத தொடர்ச்சியைக் கொண்டது.

இத்தகைய கட்டற்ற, தொடர்ச்சியான, எல்லைகடந்த அதிகாரப் பிரயோகத்தின் போதே ஜனநாயகமும் சுதந்திரமும் கேள்விக்குள்ளாகும் நிலை ஏற்படுகின்றது. இந்தச்சந்தர்ப்பத்திற்தான் மக்கள் மிகப் பெரும் நெருக்கடிகளைச் சந்திக்கிறார்கள்.

இலங்கையின் நெருக்கடிகள் இன்னமும் தீரவில்லை. முன்னர் இருந்த நெருக்கடிகளுக்குப் போர் காரணமாகக் காட்டப்பட்டது. இப்போது போர் முடிந்த பிறகு, காரணங்களைக் காட்ட முடியாது விட்டாலும் தேசிய பாதுகாப்பு என்றொரு காரணமும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற அரசாங்கமே ஆட்சியிலிருக்கிறது என்பதும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை தனிநபருக்கான அதிகாரத்தைச் செறிவாக்கியுள்ளது என்ற காரணமும் பெரும்பாலான கட்சிகள் அங்கத்துவம் செய்யும் அரசாங்கமாக அது இருக்கிறது என்பதும் அதிகாரத்தை அரசுக்குக் குவித்துள்ளன.

இதன்காரணமாக ஆட்சியின் மையப்பகுதியில் இருக்கும் தலைவர்கள் தங்களின் சக்தியை மிகவலுவுடையதாக்கியிருக்கின்றனர்.

வீதியிலே ஓடுகின்ற பஸ் வண்டிகளில் இருந்து அரசாங்கத்தின் உயர் பீடங்கள் வரையில் இந்த அதிகாரத்தின் அடையாளங்களைக் காணமுடியும்.

எங்கும் ஒரே அடையாளம் என்ற வகையில் நாட்டின் தலைவரும் அவருடைய குடும்பத்தினரும் காட்சிப்படுத்தப்படுகின்றனர்.

இதற்கு யாரும் சில நியாயங்களைக் கற்பிக்கலாம். ஆனால், இதெல்லாம் நிச்சயமாக ஒரு ஜனநாயக நாட்டுக்கு அழகானவையே அல்ல. இது மன்னராட்சிக் காலமோ குடும்ப ஆட்சிக்கான சட்டங்கள் இயற்றப்பட்ட நாடோ அல்ல.

பிறருக்கு இடமளித்தல், பிறருக்கும் பிறவற்றுக்கும் விட்டுக்கொடுத்தல், ஏனையவற்றையும் முன்னிலைப்படுத்தல், சமமாக நடந்து கொள்ளுதல் என்ற அம்சங்களை வளர்ப்பதே போருக்குப் பிந்திய நாட்டின் அவசியத் தேவைகள்.

கடப்பாடுகளைப் பற்றிய அக்கறையற்ற மீறல்களாலும் உச்சகட்ட அடக்குதல்களாலும் மோசமாகக் காயடிக்கப்பட்ட ஜனநாயகச் சூழலை மீண்டும் உருவாக்க வேண்டியுள்ளது. மக்களுக்கு ஜனநாயகத்தைப் பற்றிய புரிதலையும் அதன் மீதான நம்பிக்கையையும் ஏற்படுத்த வேண்டும்.

அதிலும் இனரீதியான போர் நடைபெற்றதொரு நாட்டில் நல்ல சமிக்ஞைகள் காண்பிக்கப்பட வேண்டும். மக்களின் நம்பிக்கையை அந்தச் சமிக்ஞைகள் உருவாக்க வேண்டும்.

மக்கள் பல எதிர்பார்ப்புகளுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நம்பிக்கையளிப்பதன் மூலமாக அவர்களின் மனதில் நிரந்தரமாகவே குடியேற முடியும். இதற்கொன்றும் கடினமாக வேலை செய்ய வேண்டியதில்லை.

சனங்களுக்கு விசுவாசமாக நடந்தாற் போதும். யாருடையதையும் யாருக்கும் எடுத்துக் கொடுக்க மாட்டோம் என்ற உறுதிப்பாட்டுடன் காரியங்களைச் செய்தால், அவற்றைப்பற்றி மக்களுக்கு முறையாக எடுத்துச் சொன்னால், இன ஐக்கியத்தின் அத்திபாரத்தை உருவாக்க முடியும்.

ஆனால், இதற்குப் பதிலாக தான்தோன்றித் தனமாகப் பேசுவதும் எழுந்தமானமாக நடந்து கொள்வதும் கேள்விகளுக்கு அப்பாலான பிராந்தியத்தில் தங்களை வைத்துக்கொள்வதும் எதிர்விளைவுகளையே உருவாக்கும்.

இன்றைய இலங்கை அச்சத்தினால் உழன்று கொண்டிருக்கிறது. வெளிநாடுகளின் அழுத்தங்கள் ஒரு பக்கம் இலங்கையைக் கலங்கடிக்கின்றன. உள்நாட்டுச் சக்திகளின் கொந்தளிப்பான மனநிலையை இட்டும் அரசாங்கம் கலங்கிக் கொண்டிருக்கிறது.

ஆகவே, அரசாங்கத்தின் உளநிலை அமைதியில் இல்லை. இந்த நிலையில் அதனால் எப்படி நாட்டின் சுபீட்சத்தைப் பற்றிச் சிந்திக்க முடியும்? என்று கேட்கிறார் ஒரு மூத்த சிங்கள ஊடகவியலாளர்.

உளநிலையில் அச்சத்தின் பாரம் அதிகரித்தால் குழப்பமும் பதற்றமும் சந்தேகமும் ஏற்படும். இலங்கையின் சுதந்திரத்துக்குப் பிந்திய காலம் என்பது இலங்கையைப் பதற்றமான சூழலுக்குள்தான் தொடர்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறது.

இலங்கையின் கொள்கை வகுப்பாளர்களும் சிந்தனையாளர்களும் நாட்டை இந்த நிலையில் இருந்து மீட்பதற்காகப் பாடுபடவில்லை.

நாட்டின் பிரதான மதங்களாக இருக்கின்ற பௌத்தமும் கிறிஸ்தவமும் சைவமும் இஸ்லாமும் கூட இரத்தத்தில் தோய்ந்தனவாகவோ இரத்தத்தில் தோய்க்கப்பட்டதாகவோதான் இருக்கின்றன.

இரண்டாம் உலகப் போரின் பொழுது ஜேர்மனியில் ஹிட்லருக்கு ஆதரவளித்ததைப் போன்ற ஒரு மனநிலையிலும் நியாய உருவாக்கத்திலுந்தான் இலங்கையின் மக்கள் இருக்கின்றனர்.

ஒருவரின் மீது ஒருவர் பழிதீர்ப்பதற்காக அவர்கள் வெட்கப்படவேயில்லை. ஒரு சமூகத்தின் வாழ்வின் மீது இன்னொரு சமூகம் நஞ்சை ஊற்றுவதற்கும் பின்னிற்கவில்லை. இதெல்லாம் தவறு என்று அவை கருதவும் இல்லை.

இல்லையெனில், அமைதியும் வளமும் நீண்ட பாரம்பரியமும் மதக் கட்டுப்பாடுகளை அடியொற்றித் தமது பண்பாட்டையும் ஒழுக்கத்தையும் வகுத்துக்கொண்ட இலங்கையின் சமூகங்கள் இவற்றுக்கெதிராக வன்முறையில் ஈடுபட்டதை என்னவென்பது?

சுதந்திரத்துக்குப் பிந்திய இலங்கையின் வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட இனவன்முறைகளுக்கான அடிப்படைகள் எப்படி உருவாகின? இந்த வன்முறைகளின்போது ஒருவரின் மீது ஒருவர் பழிதீர்ப்பதற்காக யாரும்  வெட்கப்படவேயில்லை. ஒரு சமூகத்தினுடைய வாழ்வின் மீது இன்னொரு சமூகம் நஞ்சை ஊற்றுவதற்குப் பின்னிற்கவில்லையே. இதெல்லாம் தவறு என்று அவை கருதவும் இல்லையே.

இந்த இடத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடும் விசயத்தை மீள்பதியலாம். அது இரண்டாம் போரின்போது யூதர்களின் மீது, நாஜிகள் உச்ச வன்முறையை நிகழ்த்திக்கொண்டிருந்த காலம்.

அந்தச் சூழலைப் பற்றிய தன்னுடைய கேள்விகளை ஜெயமோகன் எழுப்புகிறார்.

‘சாதாரண மக்கள் எப்படி இந்தக் கொலைகளை ஒத்துக்கொண்டு ஹிட்லரின் அணியில் திரண்டார்கள்? எளிய படைவீரர்கள் எப்படி இந்த படுகொலைகளைச் செய்தார்கள்? அதைவிட நாஜிகளை ஆதரித்த எழுத்தாளர்களும் கலைஞர்களும் எப்படி இப்படுகொலைகளை ஏற்றுக்கொண்டார்கள்?

நாஜிகளின் படுகொலை அமைப்பில் மருத்துவர்களும் அறிவியலாளர்களும் இணைந்திருந்தார்கள். யூதர்களைக் கொல்ல சான்றிதழ் வழங்கியது மருத்துவர்களே. அறிவியலாளர்கள் யூதர்களை தங்கள் ஆய்வுக்கூடங்களில் பரிசோதனை மிருகங்களாக பயன்படுத்திக் கொண்டார்கள்’.

இதெல்லாம் எப்படி நிகழ்ந்தன?

காலம் மாறியிருக்கிறது. இது இரண்டாம் உலகப்போர் முடிந்து அறுபது ஆண்டுகளுக்குப் பிந்திய காலம். அந்த நூற்றாண்டு முடிவுற்று இன்னொரு புதிய நூற்றாண்டு பிறந்து விட்டது. மனிதனின் அறிவியல் வளர்ச்சிகள் மிகப் பெரும் எல்லையை நோக்கி விரிந்துள்ளது.

தவறுகளில் இருந்தும் குற்றங்களில் இருந்தும் போதாமைகளில் இருந்தும் மனிதனையும் அவனுடைய சமூகத்தையும் விடுவித்துக்கொள்வதற்கான சிந்தனையும் தத்துவங்களும் தொழில் நுட்பமும் அறிவும் விஞ்ஞானமும் உழைப்பும் பண்பாடும் உருவாகியுள்ளன.

ஆனால், இவையெல்லாவற்றையும் நிராகரித்து விட்டு அல்லது இவற்றின் இடுக்குகளுக்குள்ளால் அதிகாரத்தைக் கைப்பற்றும் மனோபாவம் மட்டும் அதே விலங்குநிலையில் இன்னும் உள்ளது.

இதுதான் மானுட குலத்தின் துயரவிதியா? இப்படி எண்ணும்படியே நிலைமைகள் உள்ளன. அரசியல் என்பது எதையும் எவரையும் பாதுகாப்பது, உருவாக்குவது, மேம்படுத்துவது என்ற அர்த்தத்துக்கு அப்பால், எல்லாவற்றையும் சிதைப்பது என்ற முறைமையில் - பழைய சுவடுகளின் தடத்தில் பயணிப்பது பொருத்தமானதே அல்ல.

இத்தகைய அரசியலின் பலவீனங்களை முதலீடாக்கிக் கொண்டு மேற்குலகின் எஜமானர்களும் ஏகாதிபத்தியர்களும் தங்களின் மூக்கை நுழைத்துக் கால்களைப் பதித்துக் கொள்கிறார்கள் உலகெங்கும்.

இத்தகைய நிலையிற்தான் இன்றைய இலங்கையின் நிலைவரமும் உள்ளது. பதற்றமும் அந்நியச் சக்திகளுக்கான வாய்ப்புகளைத் திறந்து விடக்கூடிய நிலையும் அதிகரித்துள்ள சூழலில்தான் இலங்கை அரசியலும் ஆட்சியம் நடந்து கொண்டிருக்கின்றன.

வெளியாரின் தலையீட்டினால் வெளியாரைத் தவிர வேறு யாருக்குமே நன்மைகள் கிட்டாது. இதை மக்கள் புரிந்து கொள்வதும் குறைவு. மக்களுடன் உரையாடலைச் செய்வதற்கு யாருக்கும் நேரம் இல்லை. அதை யாரும் விரும்பிக் கொள்வதும் இல்லை.

மக்களின் கேள்விகள் தங்களைக் காயப்படுத்தி விடக்கூடும். அல்லது நிர்வாணப்படுத்தி விடக்கூடும் என்று ஆட்சியாளர்களும் அரசியல் செய்வோரும் அஞ்சுகின்றனர்.

ஆனால், அரசியலைப் பொறுத்து மக்களின் கேள்விகளே அரசியலைச் சுத்தப்படுத்தும் மருந்தாகவும் பயிருக்கு ஊற்றப்படும் நீரைப் போன்றும் இருக்கிறது.

சனங்களின் கேள்வி அரசியலாளர்களை யதார்த்தத்துடனும் உண்மையுடனும் இணைத்து வைத்திருக்கின்றன. இப்படியான ஒரு நிலைமை ஏற்படும்போது சனங்களின் மனங்களில் அந்த அரசியலாளர்களும் அவர்களுடைய கொடிகளும் இடையறாது பறந்து கொண்டிருக்கும்.

ஆனால், இது மக்களுக்கும் தங்களுக்கும் இடையிலான வெளியைக் குறைத்து ஒன்றாக்கி விடும் என்று ஆட்சியாளர்களும் அரசியலாளர்களும் கருதுகிறார்கள். இடைவெளியொன்றில் இருக்கும் அதிகாரப் படிநிலையில் இருக்கின்ற சுவை மற்ற ருஸிகளைச் சுவையற்றதாக்கி விடுகிறது.

அதிகாரத்தின் ருஸியைச் சுவைத்த நாக்கு, ஒரு போதுமே பிற சுவைகளை விரும்புவதில்லை. அது மரணத்தின்வரையிலும் அதற்காகவே ஏங்கிக் கொண்டிருக்கும்.

வரலாறு என்னதான் மகத்தான பாடங்களைக் கற்றுக் கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்வதற்கான மனம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. பேராழுமைகள் என்று சொல்லத்தக்க மனிதர்கள் தங்களைத் தாங்களே உருவாக்காத வரையில் - ஒவ்வொரு மனிதரும் தன்னை மனிதராக, மனச்சாட்சியின் பாற்பட்டவராக, தன்னைத் தானே உணர்ந்து கொள்ளும்வரையில் அரசியலும் அறமும் வாழ்க்கையும் நாடும் பிழைத்தேயிருக்கும்.

மறுபடியும் திரும்பச் சொல்வதானால், அதிகாரத்தின் வரம்புகளே மக்களையும் வரலாற்றையும் சேதமற்ற முறையில் பாதுகாக்கின்றன. எல்லையற்ற அதிகாரம் எல்லாற்றையும் சிதைத்து விடுகிறது.

உலக அரசியல் வரலாற்றில் இந்தப் பாடம் பெரும்போதனைகளைத் தந்துள்ளது. ஆனால், அதேயளவுக்கு இந்தப் பாடத்தை எள்ளி நகையாடி நிராகரித்த வரலாறும் உண்டு.

இலங்கை அரசியலிலும் தமிழ் சிங்களத் தரப்புகள் என்ற பேதங்களின்றின்றி அதிகாரத்தின் எல்லைகளை உச்சமாகக் கடந்த நிகழ்ச்சிகள் தாராளமாக உண்டு. அதிலும் சிங்களத்தரப்பின் எல்லைகடத்தல் கட்டற்றது. இடையறாத தொடர்ச்சியைக் கொண்டது.

இத்தகைய கட்டற்ற, தொடர்ச்சியான, எல்லைகடந்த அதிகாரப் பிரயோகத்தின் போதே ஜனநாயகமும் சுதந்திரமும் கேள்விக்குள்ளாகும் நிலை ஏற்படுகின்றது இந்தச்சந்தர்ப்பத்திற்தான் மக்கள் மிகப் பெரும் நெருக்கடிகளைச் சந்திக்கிறார்கள்.

இலங்கையின் நெருக்கடிகள் இன்னமும் தீரவில்லை. இந்த நிலை நீடிக்குமானால், தொடருமானால் எந்த நெருக்கடியும் தீராது@ வளரும்.

00

இலங்கையில் இந்தியாவும் சீனாவும்


















இலங்கையில் இந்தியா. இலங்கையில் இன்று இந்தியா. இலங்கையில் சீனா. இலங்கையில் இன்று சீனா. இலங்கையில் (இன்று) இந்தியாவும் சீனாவும்.

இவற்றைத் தனித்தனியாக ஆராய்ந்து பார்த்தால், இலங்கையின் உள்நாட்டு அரசியலையும் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையையும் இலங்கை தொடர்பான சர்வதேச நாடுகளின் வெளியுறவுக்கொள்கைகளையும் ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடியும்.

இதன்மூலம் இலங்கையின் சமகால அரசியலைக் குறித்த விளக்கத்தைப் பெறலாம். மேலும் தமிழ்பேசும் மக்களின் அரசியற் பிரச்சினைகளுக்கான தீர்வைக் குறித்தும் அறிந்து கொள்ள முடியும். இதன் அடிப்படையில் முதலில் நாம் இலங்கையில் இந்தியா, இலங்கையில் இன்று இந்தியா என்பதைப் பார்க்கலாம்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரசியல் மற்றும் பிற தொடர்புகள், உறவுகள் எல்லாம் நீண்ட பாரம்பரியத்தை உடையவை. உலகின் வேறெந்த நாடுகளுடனும் இல்லாத அளவுக்கு முக்கியத்துவத்தையும் நீண்ட தொடர்ச்சியையும் உடையது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இந்த உறவும் தொடர்பும்.

இந்தப் பிராந்தியத்தை ஐரோப்பியர் ஆட்சி செய்த காலத்திலும்கூட இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மானசீகமான ஒரு உணர்வோட்டம் நெருக்கமாகவே இருந்துள்ளது.

ஆனால், கடந்த நூற்றாண்டில் உலக அரங்கில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார நிகழ்ச்சிகளின் விளைவாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான அதிகார நிகழ்ச்சி நிரல் ஒரு புதிய வடிவத்தை எடுத்தது.

இது இந்தப் பிராந்தியத்தில் நிலவிய அந்நியர் ஆட்சிக்காலத்தின் நிகழ்ச்சி நிரலையும் அதற்கு முன்னர் தொன்மைக் காலத்தில் நிலவிய நிகழ்ச்சி நிரலையும் விட வேறு பட்டிருந்தது.

உலக அரங்கில் ஏற்பட்ட அதிகார வலுப்போட்டிகள், பூமிப்பந்தை வேறு விதமாக வகைப்படுத்தியிருந்தன. இதன் தாக்கத்தை இந்து சமுத்திரப் பிராந்தியமும் இலங்கை இந்தியா ஆகிய நாடுகளும் எதிர்கொண்டன. அல்லது இந்த வகைப்படுத்தல் விசையில் இந்த நாடுகளும் உள்ளீர்த்துக்கொள்ளப்பட்டன. ஆகவே, இந்த விசைக்கமையவே இலங்கையின் வெளியுறவுக்கொள்கையும் உள்நாட்டரசியலும் பெருமளவுக்கும் அமைந்தது. அவ்வாறே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும் அதனுடைய உள்நாட்டரசியலும் அமைந்தது. மட்டுமல்ல, இலங்கை - இந்திய உறவும் அவற்றின் நிகழ்ச்சி நிரலும் கூட இந்த அடிப்படையிலேயே நிகழ்ந்தது.

இதை மேலும் விளங்கிக் கொள்வதானால், சுதந்திரத்துக்குப் பின்னர், இலங்கையில் ஏற்பட்ட அரசியற் தலைமைகளின் போக்குகளுக்கும் கொள்கைகளுக்கும் ஏற்ப இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நிகழ்ச்சி நிரல் வகுக்கப்பட்டது. அல்லது அமைந்தது எனலாம்.

ஐ.தே.க ஆட்சிக்கு வரும்போது அது மேற்குலகைச் சார்ந்தும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வரும்போது ஆசிய மண்டலத்தைச் சார்ந்தும் நிகழ்ச்சி நிரல் வகுக்கப்பட்டது. என்றபோதும் இந்தியாவுடனான உறவை இலங்கை பகை நிலைக்குக் கொண்டு சென்றதில்லை.

ஆனால், இந்தியா இலங்கையை ஒரே விதமாக நோக்கவில்லை. குறிப்பாக இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் அல்லது இலங்கையில் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் காலத்தில் (1977 க்குப் பின்னர்) இருந்து இந்தியா சற்றுக் கடினமான ஒரு நிலைப்பாட்டை இலங்கை தொடர்பாக எடுத்தது. 1990 வரையில் இந்தக் கடினப் போக்கு நிலவியது.

ஜே.ஆர். வெளிப்படையாகவும் சற்றுத் தூக்கலாகவும் மேற்கைச் சார்ந்து இயங்கினார். அன்று நிலவிய பனிப்போர்க் கால அரசியலில் - இரு துருவ அரசியலில் - ஜே.ஆரின் இத்தகைய நிலைப்பாடு இந்தியாவுக்கு நெருக்கடியைக் கொடுத்தது.

ஆகவே, இந்தியா – அன்று பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் அணுகுமுறை - இலங்கையின் உள்நாட்டரசியலில் ஒரு தீர்மானகரமான சக்தியாக மாறியது.

இன்றுவரை இந்தியா தன்னுடைய இந்தப் பிடியைத் தளர்த்தவேயில்லை. அது தனக்கேற்றவாறு தமிழர்களையும் சிங்களவர்களையும் கையாள்கிறது. அல்லது இனமுரண்பாட்டைக் கையாள்கிறது. அல்லது இலங்கையின் உள்நாட்டு முரண்களைப் பயன்படுத்திக் கொள்கிறது.

இதன்விளைவாக இந்தியா இன்று இலங்கையில் அரசியல் ரீதியாக நேரடித் தன்மைவாய்ந்த ஒரு முக்கிய தலையீட்டைச் செய்கிறது. மட்டுமல்ல, உள்முரண்பாடுகளின் விளைவாக அழிவடைந்திருக்கும் இலங்கையில் பொருளாதாரப் பிரச்சினைகளின் - பலவீனங்களின் - வழியே அது முதலீடுகளையும் செய்கிறது.

இலங்கையின் சந்தையை இந்திய உற்பத்திகளே பெருமளவுக்கும் நிறைக்கின்ற ஒரு நிலையை இந்த முப்பது ஆண்டுகாலத்துக்குள் இந்தியா பெற்றுள்ளது. இன்னும் இதைச் சற்று விளக்கமாகச் சொல்வதாயின், இந்தியாவை விட்டு விலகி மேற்குலகைச் சார்ந்த ஜே.ஆரின் அணுகுமுறை ஒருவாக்கிய விளைவே இதுவாகும்.

ஆகவே, இன்று இந்தியா இந்தப் பின்னணியினூடாக இலங்கையில் செல்வாக்குச் செலுத்தும் ஒரு வலுவான சக்தியாக மாறியுள்ளது.

இதேவேளை இதன் மீதியாக, இன்றுள்ள சர்வதேச அரசியல் இந்தியாவை மேலும் இலங்கையில் தலையிடவும் ஆதிக்கம் செலுத்தவும் வைக்கிறது.

இலங்கையில் இந்தியாவுக்குப் போட்டியாகச் சீனா மாறியிருக்கும் சூழல் இந்தியாவுக்குப் பெரும் பிரச்சினை. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கியத்துவத்தையும் பாத்திரத்தையும் கேள்விக்குள்ளாக்கும் ஒரு நடவடிக்கையைச் சீனா முன்னெடுத்து வருகிறது. இதை இந்தியாவினால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. எனவே அது இலங்கையை பிறர் தட்டிப்பறித்து விடக்கூடாது என்பதற்காக அழுத்திப் பிடிக்கிறது. இவ்வாறு இலங்கை என்ற குழந்தையை இந்தியா அழுத்திப்பிடிக்கப் பிடிக்க குழந்தைக்கே பாதிப்பு அதிகமாகிறது.

இலங்கை என்ற குழந்தையை யார் சொந்தம் கொண்டாடுவது என்ற ஒரு நிலையில் இந்தியாவும் சீனாவும் இன்றுள்ளன.

இலங்கை இந்தியாவுக்குப் பதிலாக வெளியே செல்லச் செல்ல இந்தியாவின் பிடி மேலும் அழுத்தமாகும். ஆனால், இப்போது மேற்குலகின் பக்கம் இலங்கை சாய்ந்தால் இந்தியா முன்னரைப்போல அதிக அழுத்தத்தைக் கொடுக்காது. அப்படி அதனால் மேற்குலகத்துக்கு எதிராகச் செயற்படவும் முடியாது. இப்போது மேற்கின் கூட்டாளியான ஒரு பாத்திரத்தையும் ஒரு எல்லைவரையில் இந்தியா கொண்டுள்ளதே இதற்குக் காரணமாகும்.

ஆனால், இப்போது இந்தியாவின் ஆதிக்கத்தைச் சமனிலைப்படுத்த சீனாவுடனான உறவையும் தொடர்புகளையும் இலங்கை கையாள்கிறது. சீனாவின் பக்கம் இலங்கை அதிக சாய்வைக் கொள்ளுமானால் இந்தியாவின் பிடி நிச்சயமாக அழுத்தம் பெறும். (இதை மிக நன்றாக உணர்ந்துள்ளது சிங்களத்தரப்பு அல்லது மகிந்த ராஜபக்ஷ அரசு).

ஆகவே, இந்தியா இன்று சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தும் அவசியத்திலும் மேற்குலகின் அசைவைச் சமனிலைப்படுத்துவதிலும் தன்னுடைய சந்தையை வலுப்படுத்துவதிலும் என்ற முக்கோண அணுகுமுறையில் இலங்கையில் தன்னுடைய செயற்களத்தை விரித்துள்ளது.

இதன் அடிப்படையிலேயே இந்தியத் தலைவர்கள், பிரதானிகளின் வருகைகள் அமைகின்றன. உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படுகின்றன. இலங்கையின் உள்நாட்டரசியல் பற்றிய கேள்விகளை இந்தியா எழுப்பும் அளவுக்கு இலங்கையின் நிலையும் இந்தியாவின் செல்வாக்கும் உள்ளது. இதன் விளைவு இன்று இந்தியாவைக் கடந்து எதையும் செய்ய முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளது.

இனி நாம் இலங்கையில் சீனா, இலங்கையில் இன்று சீனா என்பதைப் பார்க்கலாம். இலங்கையில் சீனா என்றால், வரலாற்றில் சீனாவுக்கும் இலங்கைக்குமான தொடர்புகளைப் பற்றியும் அதன் வழியான செல்வாக்கு மண்டலத்தைப் பற்றியும் பார்ப்பதாகும்.

சீனாவிலும் பௌத்தம் முதன்மை மதம். இலங்கையிலும் பௌத்தமே முதன்மையான மதம். ஆனால், இரண்டு பௌத்தங்களுக்குமிடையில் வேறுபாடுகள் உண்டு. என்றபோதும் இலங்கைக்கும் சீனாவுக்குமிடையில் நீண்டகாலத் தொடர்ச்சியான உறவுண்டு. ஆனால், அது இந்தியாவைப் போல நெருக்கமும் பண்பாட்டு ஒற்றுமைகளும் கொண்டதல்ல.

சுதந்திரத்துக்குப் பிந்திய இலங்கையில் சீனாவுக்கும் இலங்கைக்கும் செழிப்பான உறவெழுச்சியுடைய காலமாக இருந்தது சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்திலேயாகும். ஐ.தே.க கடைப்பிடித்த மேற்குச் சார்பை மாற்றிச் சீனாவுடன் நெருக்கத்தைக் கொண்டார் சிறிமாவோ.

பிறகு மீண்டும் ஐ.தே.க ஆட்சியைக் கைப்பற்றி மேற்குக்குச் சார்பாக இலங்கையை நகர்த்தினாலும் பின்னர் நாட்டில் நிலவிய யுத்தம் சீனாவை நோக்கித் திரும்ப வேண்டிய நிலைக்குள்ளாக்கியது. இன்று சீனா இலங்கையில் தீவிரமாகச் செல்வாக்கைச் செலுத்தும் நாடாக மாறியுள்ளது.

ஆனால், இதைச் சீனா மிக நுட்பமாகச் செய்கிறது. இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களிலோ வேறு விசயங்களிலோ தான் சம்மந்தப்பட்டுக்கொள்ளாமல் தூர நிற்பதைப்போன்ற ஒரு தோற்றத்தைக் காண்பித்துக் கொண்டு தன்னுடைய கால்களை மிக நிதானமாக உள்ளே வைத்துக்கொண்டிருக்கிறது.

இந்தியத் தலைவர்களின் வருகைகளைப் போல, அமெரிக்கத் தரப்பின் விஜயங்கள், அறிவிப்புகளைப் போல சீனப் பிரதிநிதிகளும் தலைவர்களும் இலங்கைக்கு அடிக்கடி படையெடுப்பதும் இல்லை@ விஜயங்களைச் செய்வதும் இல்லை@ அறிவிப்புகளை விடுப்பதும் இல்லை.

அபூர்வமாகச் சிலவேளைகளில் இலங்கைக்கு வரும் சீனத்தலைவர்களோ பிரதானிகளோ இலங்கையின் அரசியற் தலைவர்களையும் கட்சிகளையும் சந்திப்பதில்லை. மேலும் இலங்கையின் அரசியலைப் பற்றி வாய் திறப்பதும் இல்லை. அறிக்கைகள் விடுவதும் இல்லை.

ஆனால், சீன முதலீடுகளும் உதவிகளும் சீனப் பொருட்களுக்கான சந்தையும் இலங்கையில் தாராளமாகியுள்ளன.

இதேவேளை, சீனா இலங்கையை இந்தியாவிடமிருந்தும் மேற்குலகத்திடமிருந்தும் நகர்த்தி தனக்கும் பொதுவான முக்கோணத்தன்மையுடைய ஒரு பொது – சமநிலை அரங்கில் நிறுத்தியுள்ளது.

ஆகவே, இன்று சீனா இலங்கையின் நிராகரிக்கவே முடியாத ஒரு பாத்திரமாகத் தன்னை நிலைப்படுத்தியுள்ளது.

சீனாவின் இத்தகைய நிலைப்படுத்தலைச் சமாளிப்பதற்கும் இதைச் சிதைப்பதற்கும் இந்தியா நிச்சயமாக இலங்கையின் உள்விவகாரங்களையே நிச்சயமாகக் கையாளும். இதையே நாம் முன்னரும் பார்த்திருக்கிறோம்.

எனவே, இன்று இலங்கையில் இந்த இரண்டு நாடுகளின் ஆதிக்கப்போட்டி பகிரங்கமாக நடைபெற்று வருகின்றது. இரண்டு யானைகள் மோதும்போது செடிகளே சேதமடைவது என்று சொல்வார்கள். ஏறக்குறைய அத்தகைய ஒரு நிலையே இந்தப் பிராந்திய நாடுகளுக்கிடையிலான பிராந்திய ஆதிப்போட்டியாகி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்தப் போட்டியில் - அல்லது இந்த மோதுகையில் எப்படி இலங்கையின் அரசியல் ஸ்திரத்தன்மையும் பொருளாதார மேம்பாடுகளும் அமைதியும் இனங்களுக்கிடையிலான பிணக்குகள் தீர்வதும் சாத்தியமாகும்?

பிராந்தியச் சக்திகளின் பின்னணியில் மேலும் சர்வதேச வல்லரசுகளின் ஆதிக்கப்போட்டியும் நலன் சார்ந்த நிகழ்ச்சி நிரல்களும் உள்ளன.

இவற்றையெல்லாம் வென்று நாட்டைப் பாதுகாக்கக்கூடிய சாணக்கியம் யாருக்குண்டு? இந்த நிகழ்ச்சி நிரல்களுக்குச் சமதையான நிகழ்ச்சி நிரல்களை உருவாக்கிக் காய்களை நகர்த்தி இலங்கை மக்களைக் காப்பாற்றக்கூடிய ஆற்றல் எவரிடம் இருக்கிறது?  அல்லது, உள்நாட்டரசியலை தமது நலன்களுக்காகக் கையாள அனுமதிக்காத ஒரு நிலையை ஏற்படுத்தக்கூடிய செயற்றிறன் யாரிடம் உள்ளது?

இவையெல்லாம் இல்லாத பட்சத்தில் எதிர்காலத்தில் இலங்கையில் இன்னும் பல ஆதிக்கச் சக்திகள் தங்களின் செல்வாக்கு மண்டலத்தை விரிவாக்கம் செய்வது தவிர்க்க முடியாமற்போகும்.

வெளியாரின் கொல்லைக் களமாக உங்களின் முற்றம் இருந்தால் அது எப்படி இருக்கும் என்பதை இதற்கு மேல் இங்கே விவரிக்கத் தேவையில்லை என நினைக்கிறேன்.

00

நெருக்கடிக்குள்ளிருந்து மீளத் துடிக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு

Thursday, 2 February 2012





















அரசாங்கத்தையும் விட தற்போது அதிக நெருக்கடிகளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே சந்தித்துள்ளது.

1. கட்சிக்குள் தொடர்ந்து கொந்தளித்துக் கொண்டிருக்கும் நெருக்கடி.
2. இலங்கை அரசாங்கத்துடன் நடக்கின்ற பேச்சுகள் உருவாக்கியுள்ள நெருக்கடி.
3. தீவிரத் தமிழ்த் தேசிய உணர்வாளர்களால் எழுந்துள்ள நெருக்கடி.
4. ‘சிவில் சமூகம்’ என்று கூறப்படுவோரின் மூலமாக உருவாகியுள்ள நெருக்கடி.
5. அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் மாற்றுச் சிந்தனையாளர்கள் ஏற்படுத்தியுள்ள நெருக்கடி.
6. சர்வதேச சமூகத்தின் ஒரு அங்கத்தினர் (இந்தியா மற்றும் மேற்குலகம் ஆகியவை) ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடி.
7. வரலாறு உருவாக்கியுள்ள நெருக்கடி.

இதில் முக்கியமான நெருக்கடி, வரலாறு உருவாக்கியுள்ள நெருக்கடியாகும். வரலாற்றின் நெருக்கடியே எப்போதும் மிகப் பெரிய சவாலாகவும் விளைவுகளின் விசையை அதிகப்படுத்துவதாகவும் அமைகிறது. இந்த நெருக்கடியே பெரும்பாலும் பிற நெருக்கடிகளுக்கும் அடிப்படையாக உள்ளது. இங்கும் அதுதான் நடந்துள்ளது.

வரலாற்றின் எச்சரிக்கையே – அது உருவாக்கியிருக்கும் நெருக்கடியே - கூட்டமைப்பைச் சிந்திக்கத் தூண்டியுள்ளது. எனவே, அது தன்னுள்ளும் தன்னைச் சுற்றியும் எழுந்துள்ள நெருக்கடிகளையும் சமாளித்துக்கொள்வதற்காக சில உபாயங்களைநோக்கிச் சிந்திக்கிறது. அதிலொன்றே இலங்கை அரசுடன் நடக்கின்ற பேச்சுகளுக்கு மூன்றாந்தரப்பொன்றின் மத்தியஸ்தம் வேண்டும் என்ற அறிப்பாகும்.

‘சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களை ஏமாற்றுகிறார்கள். இப்போதும் அப்படி ஏமாற்றவே முயற்சிக்கின்றனர். அதிலும் மகிந்த ராஜபக்ஷ அரசு போரின் வெற்றிக்குப் பின்னர் இன்னும் அதிகார மமதையுடன் நடந்து கொள்கிறது.

‘போரில் கிடைத்த வெற்றியின் மூலமாக தான் கருதுகிற – விரும்புகிற தீர்வொன்றைத் தமிழர்களின் தலையில் கட்டிவிடுவதற்கு அது முயற்சிக்கிறது. இந்த நிலையில் மிகுந்த எச்சரிக்கையுடன், பேச்சுகளில் ஈடுபடும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நடந்து கொள்ள வேண்டும்’ என்று சிந்திக்கும் ஒரு போக்கு வரலாற்றின் எச்சரிக்கையாக முன்னிற்கிறது.

இந்த எச்சரிக்கையே கூட்டமைப்பிற்கு, தீவிரத் தமிழ்த் தேசிய உணர்வாளர்களாலும் ‘சிவில் சமூகம்’ என்று கூறப்படுவோரின் மூலமாகவும் உருவாகியுள்ள நெருக்கடியாகும். மேலும் அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் மாற்றுச் சிந்தனையாளர்கள் ஏற்படுத்தியுள்ள நெருக்கடியிற் பாதியும் இவ்வாறான நெருக்கடியைக் கூட்டமைப்புக்கு உருவாக்கியுள்ளன.

அதாவது, ‘போரில் வெற்றியடைந்திருக்கும் அரசு தமிழர்களுக்கான தீர்வை உரிய முறையில் முன்வைக்காமல், தான் விரும்புகின்ற ஒரு முழுமைப்படுத்தாத தீர்வைத் திணித்து விடும். இதை எந்தச் சூழ்நிலையிலும் தமிழ்த்தரப்புப் பெற்றுவிடக்கூடாது.

‘அப்படிப் பெற்றுக்கொண்டால், அது இதுவரையில் தமிழர்கள் நடத்திய போராட்டத்துக்கும் இதுவரை செய்த தியாகங்களுக்கும் ஈடாகாது. மேலும்  எதிர்காலத் தமிழ்ச் சமூகத்தின் அரசியற் தலைவிதியை அது பலவீனப்படுத்தி விடும்’ என்றும் இந்தத் தரப்பினர் கருதுகின்றனர்.

இதற்கு அவர்கள் மறைபொருளில் கூறுகின்ற விசயம் அல்லது நியாயம், ‘இலங்கை அரசு போரில் வெற்றியடைந்திருந்தாலும் அந்த வெற்றியை அது செய்த போர்க்குற்றங்கள் பாதிக்கின்றன. அதாவது, போரின் வெற்றியை அதனுடைய போர்க்குற்றங்கள் சமனிலைப்படுத்துகின்றன’ என்று.

மேலும், ‘இந்த நிலையில் இலங்கை அரசின் போர்க்குற்றங்களை ஆதாரப்படுத்தி, அதை ஒரு வலுவான நெருக்கடியாக மாற்றினால், போரினால் பின்னடைந்திருக்கும் அல்லது பலவீனப்பட்டிருக்கும் தமிழ்த்தரப்புக்கான பலமாக அது மாறும். ஆகவே அப்படி இதை மாற்ற வேண்டும்.

அதற்குக் கூட்டமைப்பு தீவிர நிலையிற் செயற்பட வேண்டும். அப்படிச் செயலாற்றினால், அது தமிழ்த்தரப்பின் பலமாக மாறி, இலங்கை அரசுக்கு மாற்றான ஒரு சமனிலைப் பலத்தை தமிழ்த்தரப்புக்கு வழங்கும்’ என்பது இந்தத் தரப்பின் கணிப்பு.

இத்தகைய கணிப்பொன்றை தீவிரத் தமிழ்த்தேசியச் சக்திகள் தர்க்க பூர்வமாக இதுவரையில் முன்வைக்கவில்லையாயினும் அவர்களின் கூற்றுகளும் அணுகுமுறைகளும் இதையே மறைபொருளில் உணர்த்துகின்றன.

இதை மீறி அல்லது இதைப் பொருட்படுத்தாமல் அரசுடன் மென்தன்மையாகக் கூட்டமைப்பினர் நடந்து கொண்டால், அது நிலைமையை மோசமாக்கி விடும் என்பதே இந்தத்தரப்பினரின் எச்சரிக்கையாகவும் நிர்ப்பந்தமாகவும் உள்ளது. இதை இவர்கள் வரலாற்றின் எச்சரிக்கையாகவும் நெருக்கடியாகவும் கூட்டமைப்பின் முன் வைத்துள்ளனர்.

ஆனால், இந்த எச்சரிக்கைகளையும் நிபந்தனைகளையும் எதிர்கொள்வதில் கூட்டமைப்புக்கு இயலாத நிலையே தென்படுகின்றது. ஆகவேதான் அது வெளிப்படையாகப் பதிலளிக்க முடியாமல் தன்மீது முன்வைக்கப்படும் கண்டனங்களையும் குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் கனத்த மௌனத்தின் மூலம் கடக்க முயற்சிக்கிறது. இதை அது ஒரு உபாயமாகவே கொண்டுமிருக்கிறது.

இப்படியான உத்தியொன்றை அது கடைப்பிடித்து ஒரு எல்லைவரை நகரலாம். ஆனால், தொடர்ந்தும் வெற்றிகரமாக இந்தப் பாதையிற் பயணிக்க முடியாது.
எனவேதான், கூட்டமைப்புக்கு இன்று பலவகையான நெருக்கடிகள் உள்ளும் புறமுமாகக் குவிந்துள்ளன.

அவற்றை மீளவும் இங்கே வரிசைப்படுத்தினால்,

1. கட்சிக்குள் தொடர்ந்து கொந்தளித்துக் கொண்டிருக்கும் நெருக்கடி.
2. இலங்கை அரசாங்கத்துடன் நடக்கின்ற பேச்சுகள் உருவாக்கியுள்ள நெருக்கடி.
3. தீவிரத் தமிழ்த் தேசிய உணர்வாளர்களால் எழுந்துள்ள நெருக்கடி.
4. ‘சிவில் சமூகம்’ என்று கூறப்படுவோரின் மூலமாக உருவாகியுள்ள நெருக்கடி.
5. அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் மாற்றுச் சிந்தனையாளர்கள் ஏற்படுத்தியுள்ள நெருக்கடி.
6. சர்வதேச சமூகத்தின் ஒரு அங்கத்தினர் (இந்தியா மற்றும் மேற்குலகம் ஆகியவை) ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடி.
7. வரலாறு உருவாக்கியுள்ள நெருக்கடி.

என்றவாறாக இந்தப் பட்டியலின் சுருக்கம் அமையும்.

கூட்டமைப்பை ஒரு அமைப்பாக மாற்றுவதிலும் கட்சியாக வடிவமைப்பதிலும் அதற்கான செயற்பொறிமுறைத் திட்டமொன்றை வகுப்பதிலும் அது கொண்டுள்ள இடர்ப்பாடுகள் பெரிது.

பல அணிகளின் கூட்டாக அது இருப்பது வெளித்தோற்றத்துக்கு கவர்ச்சிகரமானதாகவும் பலம்பொருந்தியதாகத் தெரிந்தாலும் உள்ளே அதற்குள் ஏகப்பட்ட உள்விலகல்களும் நெருக்கடிகளும் செயல்முறைத் தளர்வுகளும் இருப்பதை அவதானிக்க முடியும்.

இதற்கு அண்மைய உதாரணம், கூட்டமைப்பைக் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியத்தை உணர்ந்துள்ளதாகவும் அதற்கான முயற்சிகளில் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளதாகவும் திரு.சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளமை.

ஆனால், இதேகாலப்பகுதியில் கொழும்பிலே தமிழரசுக் கட்சியின் கிளை நிலையத்தைப் பலப்படுத்தும் முயற்சிகள் நடந்துள்ளன. கொழும்புக்கிளைக்குச் செயலாளராக ஊடகவியலாளரான திரு. வித்தியாதரன் தெரிவு செய்யப்பட்டிருப்பது.

இதைத் தவிர, மேலும் பல உள்விலகல்கள் கூட்டமைப்புக்குள்ளே உண்டு. கட்சியின் தலைமைப் பதவிகளை நோக்கிய குறிவைப்புகளோடு போட்டி நிலையில் பலர் இருப்பதும்,  எனினும், தனித்து நிற்க முடியாத நிலையில் விருப்பின்மைகளின் மத்தியில் ஒரு அமைப்பாக இவர்கள் இணைந்திருக்க வேண்டியிருப்பதும் இந்த உள்விலகல்களை அப்படியே பேணிவருகின்றன.

இதற்கான நிரந்தரப் பரிகாரத்தைக் காணுவதற்கு இதுவரையில் கூட்டமைப்பு முயற்சிக்கவில்லை. அதை அது செய்யப்போவதும் இல்லை என்கின்றனர் அவதானிகள். ஏனெனில் முன்னர் திரு. ஆனந்தசங்கரிக்கும் திரு.சம்மந்தனுக்கும் இடையில் நடந்த அதிகாரப்போட்டியில் பிளவு ஏற்;பட்டதை இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆகவே, உள்நெருக்கடியைத் தீர்க்கும் முயற்சிகளில் இப்போதைக்குக் கூட்டமைப்பு ஈடுபடப்போவதில்லை. இதேவேளை இந்த நெருக்கடியைத் தொடர்ந்து பேணவும் முடியாது. ஆகவே இந்தப் பிரச்சினையைத் திசைதிருப்பி வைத்துக் கொள்வதற்கு கூட்டமைப்புக்கு உள்ள ஒரு உபாயம் பேச்சுவார்த்தையாகும்.

ஆனால், பேச்சுகளின் தேக்கத்தைப் பற்றியும் அதன் போக்கைப் பற்றியும் வெளியே எழுப்பப்படும் கேள்விகளுக்கு அவரவர் தமக்கேற்றவாறு பதிலளித்து வருகின்றனர். இது அமைப்பினுள்ளே உள்விலகல்களை மேலும் அதிகரிப்பது மட்டுமல்ல, அரசுடன் பேச்சுகளைத் தொடர்வதில் சிலவேளை நெருக்கடிகளையும் உருவாக்கி வருவதாக கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் கவலையுடன் சொல்கிறார்.

எனவே, இந்த நிலையில் மூன்றாந்தரப்பின் மத்தியஸ்தத்துடன் பேசுவதானால், முன்னர் குறிப்பிட்டதைப்போல பாவமோ பழியோ அந்த மூன்றாந்தரப்புக்கும் சேர்ந்தது. தான் மட்டும் முழுக்குற்றவாளி இல்லை என்பதாகும். இது சற்று ஆறுதலை அளிக்கும். நெருக்கடியைக் குறைக்கும் என்று கூட்டமைப்புக் கணித்துள்ளது.

அடுத்தது, இலங்கை அரசுடன் நடக்கின்ற பேச்சுகள் உருவாக்கியிருக்கும் நெருக்கடிகள்.

பேச்சுகளின்போது தீர்வை முன்வைக்கும் யோசனைகளும் சமிக்ஞைகளும் அரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை எனத் தெரிவிக்கும் கூட்டமைப்பு இந்த நிலையில் எப்படிப் பேசுவதென்று தெரியாமல் திணறுகிறது. ஆனால், எப்படியான நிலையிலும் பேச்சுகளிலிருந்து வெளியேற முடியாத நிர்ப்பதந்ததும் அதற்குண்டு. சர்வதேச அழுத்தம் உட்பட. பேச்சுகளை விட்டால் அதற்கு மாற்றுவழி என்ன என்ற கேள்வியை முன்வைத்தாலே இந்த நிலைமையை விளங்கிக் கொள்ள முடியும்.

தவிர, தான் உருவாக்க முயற்சிக்கும் தெரிவுக்குழுவில் கூட்டமைப்பும் பங்கெடுக்க வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது கூட்டமைப்புக்கு ஒரு நெருக்கடி நிலையே. பேச்சுகளைத் தொடருமாறும் தீர்வொன்றைக் காணுமாறும் வலியுறுத்தி வருகின்ற இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றன ஜனநாயக மயப்படுத்தப்பட்ட நிலையிலான பேச்சுகளையும் அணுகுமுறைகளையுமே ஆதரிக்கிறது. இதன்படி இலங்கை அரசின் தெரிவுக்குழு முறைமையை இவை நிராகரிக்காது. இந்த நிலையில் தெரிவுக்குழுவில் பங்கேற்கும்படியா ஒரு அழுத்தம் கூட்டமைப்புக்கு ஏற்படுகிறது. ஆனால், தெரிவிக்குழுவில் பங்கேற்பது காலத்தைக் கடத்தும் செயல் என்ற வரலாற்றனுபவங்களும் அதை நிபந்தனையாக்கும் பிறதரப்பின் அழுத்தங்களும் கூட்டமைப்பைத் தெரிவுக்குழுவுக்கு வெளியே நிறுத்துகின்றன. இது ஒரு நெருக்கடி நிலையே.

இதைத் தவிர்த்து, அரசாங்கம் தொடர்ந்தும் பேச்சுவார்த்தையை அல்லது தீர்வை இழுத்தடிக்குமானால், அடுத்த கட்ட நிலை என்ன என்ற கேள்வியும் நெருக்கடியாக எழுகின்றது.

அடுத்த நெருக்கடியானது, சர்வதேச சமூகத்தின் ஒரு அங்கத்தினராக விளங்கும் இலங்கை அரசியலில் தாக்கத்தை விளைவிக்கும் தரப்பினராகிய இந்தியா மற்றும் மேற்குலகம் ஆகியவை ஏற்படுத்தும் நெருக்கடி.

இந்தத் தரப்புக்கு இலங்கை அரசும் தேவை. சிங்களச் சமூகத்தின் ஆதரவும் அவசியம். தமிழர்களின் அபிப்பிராயத்தையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். ஆகவே, இவை இவற்றுக்கமைவான ஒரு மென்போக்கு – நழுவல் நிலை - இரண்டுக்கும் நடுவிலான ஒரு அணுகுமுறை – சமாளித்து ஓடுதல் என்றவாறான ஒருவகை அரசியல் உபாயத்தைக் கையாள்கின்றன. இந்த உபாயத்துக்கு இடமளிப்பதா இல்லையா என்ற நெருக்கடி இப்பொழுது கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது. (சரி பிழைகளுக்கு அப்பால், புலிகள் இந்த மாதிரி இடத்தில் வெட்டொன்று துண்டு இரண்டு என்ற மாரியாகக் கறாராக முடிவெடுத்து விடுவர்). இந்த இடத்தில் கூட்டமைப்பின் நிலை தர்மசங்கடமானது.

தீவிர நிலைப்பாட்டைக் கூட்டமைப்பு எடுப்பதையும் பேச்சுமேசையில் இருந்து  அது வெளியேறுவதையும் இந்தத் தரப்புகள் விரும்பவில்லை. ஆகவே ஒரு அழுத்த நிலையில் இருந்து இந்த நிலையை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது. இந்த அழுத்தத்துக்கு இணங்கினால், தீவிரத் தமிழ்த் தேசியவாதிகளாலும் ஊடகங்களாலும் கடுமையான எதிர்ப்புக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாக வேண்டிய நிலை. இணங்காது விட்டால், இந்தத் தரப்பின் அறிவுறுத்தல்களுக்குப் பதிலளிக்க முடியாத நிலை. ஆகவே, இரண்டுபக்க அழுத்தங்களுக்குட்பட்டுத் தவிக்கின்றது கூட்டமைப்பு.

எனவே இந்த நெருக்கடிகளில் இருந்தெல்லாம் விடுபட்டுக்கொள்வதற்கே அது மூன்றாந்தரப்பொன்றின் மத்தியஸ்தத்தைக் கோருகிறது. அதேவேளை சேர்த்துக்கொள்ளப்படும் மூன்றாந்தரப்பின் மூலம் இலங்கை அரசையும் மேற்கூறிய சர்வதேசத் தரப்பையும் நெருக்கடிக்குள்ளாக்கி விடலாம் என்றும் அது கருதுகிறது. இது ஒப்பீட்டளவில் புத்திசாதுரியமான ஒரு நடவடிக்கையே.

ஆகவே, மூன்றாந்தரப்பொன்றைக் களத்திற்குக் கொண்டு வருவதன் மூலம் எல்லா நெருக்கடிகளிலும் அந்த மூன்றாந்தரப்பைப் பொறுப்பாளியாகவும் பங்காளியாகவும் ஆக்கிவிடலாம். இதன்மூலம் தன் மீது வைக்கப்படும் குற்றச் சாட்டுகள், நம்பிக்கையீனங்கள் போன்றவற்றைப் பகிர்ந்தளித்து, வெற்றிக்கும் தோல்விக்கும் தான் மட்டும் பொறுப்பாளியல்ல - இத்தகைய நிலைமைகளுக்கு பிற சாட்சியமும் உண்டு என்று கூறிவிடலாம் என்பதே இன்றைய தெரிவாகக் கூட்டமைப்புக்கு உள்ளது.

ஆனால், என்னதானிருந்தாலும் அரசுக்கு தற்போதிருக்கும் நெருக்கடிகளையும் விடக் கூட்டமைப்புக்கிருக்கும் நெருக்கடிகளே அதிகமாக உள்ளன. அரசு போர்க்குற்ற விசாரணைகளை அழுத்தப் பிராந்தியத்திற்கு அப்பால் தள்ள முயன்று கொண்டிருக்கிறது. அதற்கான சர்வதேச வியூகமொன்றை அது வகுத்துமுள்ளது. இதன்படி அது இந்தியா, சீனா, மேற்கு என்ற விசைநிலையைச் சமாந்தரப் புள்ளியை நோக்கித் தற்காலிகமாக நகர்த்தியுள்ளது.



00

பாதுகாப்பென்பது படைகளிடமா, மக்களிடமா?

Saturday, 21 January 2012






''பின்தங்கிய நாட்டை அடிமை கொள்வது உலகத்துக்கு மிகச் சுலபம். பின்தங்கிய நாட்டில் மக்கள் வாழ்வது மிகக் கடினம். ''







இலங்கையின் பிரச்சினைகளுக்கான தீர்வு அல்லது தீர்வுகள் என்ன? அந்தத் தீர்வை அல்லது தீர்வுகளை எப்படிக் காணமுடியும்? இலங்கையை ஒரு சுயாதிபத்தியமுள்ள நாடாக எப்படி மாற்ற முடியும்? என்ற கேள்விகள் நீண்டகாலமாகவே வௌ;வேறு அரங்குகளில் கேட்கப்பட்டு வரப்படுகிறது. அல்லது சில அரங்குகளில் இந்தக் கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்தக் கேள்விகள் பலருடைய மனதிலும் அடிக்கடி எழுவதும் உண்டு.

ஆகவே நீண்டகாலத் தொடர்ச்சியை உடைய இந்தக் கேள்விகளை – இவற்றுக்கான பதில்களையும் இவற்றுக்கான நடவடிக்கைகளையும் பெறமுடியாதிருக்கும் இந்தக் கேள்விகளை - மீளவும் இங்கே முன்னிறுத்தி இந்தப் பத்தியில் விவாதிக்கலாம் என்று தோன்றுகிறது.

1. இலங்கையின் பிச்சினைகளுக்கான தீர்வு அல்லது தீர்வுகள் என்ன?

இந்தக் கேள்விக்கான பதிலை நாம் காண்பதற்கு முன்னர், இலங்கையின் பிரச்சினைகள் என்ன? என்று நாம் பார்க்க வேண்டும். அதன்படி பார்த்தால், முதலாவதாக இனப்பிரச்சினை. இது தமிழ்பேசும் மக்களிடத்தில் அரசியற் போராட்டங்களையும் ஆயுதப்போராட்டத்தையும் தோற்றுவித்தது.

அதேவேளை அதற்குச் சமாந்தரமாக உள்ள இரண்டாவது பிரச்சினை - பொருளாதாரச் சமனற்ற நிலையும் பிரதேச ரீதியிலான சமனின்மைக் குறைபாடுகளும். இதுவே ஜே.வி.பி யின் தோற்றத்துக்கும் அதனுடைய போராட்டங்களுக்கும் காரணமாக இருந்தது.

ஆகவே, இலங்கையில் இரண்டு பிரச்சினைகள் மிக முக்கியமாகவும் முதன்மை நிலையிலும் உள்ளன. இந்த இரண்டு பிரச்சினைகளின் காரணமாகவும் இலங்கைத் தீவு அளவுக்கதிகமான இரத்தத்தைச் சிந்தியிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான – பல இலட்சக்கணக்கான உயிர்கள் பலியிடப்பட்டுள்ளன. பல கோடிக்கணக்கான பெறுமதியுடைய சொத்துக்களும் இயற்கை வளங்களும் அழிவடைந்துள்ளன.

மேலும், சமூகங்களுக்கிடையிலான இடைவெளி அதிகரித்து, முரண்பாடுகள் கூர்மையடைந்துள்ளன.

இதை இன்னும் வெளிப்படையாகவும் சுருக்கமாகவும் சொல்வதெனில், இந்த இரண்டு பிரச்சினைகளுக்காகவும் மிகத் தீவிரமான ஆயுதப்போராட்டங்கள் நீண்டகாலமாகவே நடந்துள்ளன.

இப்பொழுது இந்த ஆயுதப் போராட்டங்கள் முறியடிக்கப்பட்டிருந்தாலும், போராட்டங்கள் முளைவிடுவதற்குக் காரணமான பிரச்சினைகள் அப்படியேதான் உள்ளன. ஆகவே, அவற்றுக்குத் தீர்வுகள் காணப்பட வேண்டும். அப்படித் தீர்வைக் காண்பதே இலங்கைத் தீவின் அமைதியும் அபிவிருத்தியும் தன்னிறைவும் சுயாதிபத்தியமும் நிலைபெறுவதற்கான வழியை ஏற்படுத்தும்.

அவ்வாறெனில், இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வு என்ன? அல்லது தீர்வுகள் என்ன?

இங்கேதான் பிரச்சினை திரும்பவும் உருவாகிறது. தீர்வைப் பற்றி யோசிக்கும்போதே அல்லது தீர்வுக்காக முயற்சிக்கும்போதே தீர்வை நோக்கிச் செல்ல முடியாத ஒரு பயங்கரமான நிலை இலங்கை அரசியற் பண்பாட்டுச் சூழலில் நிலவுகிறது.

உதாரணமாக - இனப்பிரச்சினைக்கு அரசியற் தீர்வை முன்வைக்க அரசாங்கம் முயற்சிக்கும்போது அதை சிங்களத் தீவிரவாதக் கட்சிகளும் எதிர்க்கட்சியும் கடுமையாக எதிர்க்கும்.

அதைப்போல, தமிழ்க்கட்சிகள் வடக்குக் கிழக்கு இணைப்பையும் அரசியற் தீர்வையும் கோரும்போது முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பற்றியும் அவர்களின் நிலையைப்பற்றியும் சரியாக அக்கறைக்கு எடுப்பதில்லை.

மேலும் இலங்கைத்தீவின் யதார்த்தத்துக்கு ஏற்றவாறு சிந்திக்கும் முறைமையையும் இவை கைக்கொள்வதில்லை. ஆகவே, தீர்வைப்பற்றிச் சிந்திக்கும்போது இத்தகைய எதிர்நிலைகளும் குறைநிலைகளும் உள்ளடக்கங்கொண்டேயிருக்கின்றன.

எனவே, இலங்கைத்தீவில் முரண்பாடுகளுக்கான – பிரச்சினைகளுக்கான தீர்வைப் பற்றிச் சிந்திப்பதே தீர்வுக்கு எதிரானதாக அமைகிறது என்றே சொல்ல வேண்டும். உண்மையில் இதுதான் - இப்படியான ஒரு துயர நிலைதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலை தொடரும்வரை நிலைமை மேலும் மேலும் மோசமடையுமே தவிர, ஒருபோதுமே சீருக்குத் திரும்பாது. பிரச்சினைகளும் தணியாது. நெருக்கடிகளும் குறையாது.

ஆனால், அதற்காக தீர்வைப் பற்றியோ தீர்வுகளைப் பற்றியோ பேசாமலும் சிந்திக்காமலும் இருக்க முடியுமா?

எத்தகைய விலையைக் கொடுத்தேனும் தீர்வைக் கொண்டு வரவேண்டும் என்று சிந்திப்பதற்குப் பதிலாக தீர்வொன்றைப் பொருத்தமான முறையில் கொண்டு வருவதன் மூலம் அல்லது பொருத்தமான தீர்வொன்றைக் கொண்டு வருவதன் மூலம், ‘விலை’களையும் ‘தலை’களையும் கொடுக்கும் நிலையை மாற்றிவிடலாம்.

ஆனால், கடந்த காலங்களில் நடந்தது வேறு. தீர்வுக்குப் பதிலாக முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தும் காரியங்களே அரசியல் உபாயமாக்கப்பட்டது. இப்பொழுது நடந்து கொண்டிருப்பதும் இதுதான்.

இதனால், யுத்தத்தில் வெல்வதன் மூலம் தனியரசொன்றை உருவாக்கி இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காணமுடியும் எனத் தமிழர்கள் சிந்தித்தனர்.

யுத்தத்தில் வெல்வதன்மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் குறித்த அரசியற்குரல்கள் தணிந்து விடும் என்று அரசு சிந்தித்தது.

இதைப்போலவே, ஆயுதப்போராட்டத்தின் மூலம் இலங்கையில் பொருளாதாரச் சமநிலையுடைய அரசொன்றை ஸ்தாபித்து விடலாம் என்று ஜே.வி.பி சிந்தித்தது.

முடிவாக இலங்கை பேரழிவிற்குள்ளும் ஸ்திரமின்மைக்குள்ளும் தள்ளப்பட்டதே வரலாறாகவும் யதார்த்தமாகவும் உள்ளது.

ஆகவே, இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வைக் காண்பது அல்லது  தீர்வுகளைக் காண்பது என்பது இன்று மிக அவசியமாக உள்ள ஒன்றாகும்.

இதன்படி, இனப்பிரச்சினைக்குப் பொருத்தமான – நீதியான – சமூகங்களுக்கிடையில் கொந்தளிப்பைத் தணிக்கக்கூடிய வகையிலான – அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் உருவாக்கக்கூடிய – சமநிலையையுடைய – ஒவ்வொரு சமூகங்களின் இருப்புக்கும் உத்தரவாதமுடைய – அச்சநிலையைப் போக்கக்கூடிய - நிரந்தரத் தீர்வொன்றைக் காணவேண்டும்.

இதைப்போலவே பிரதேசங்களுக்கும் மக்களுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் அபிவிருத்திச் சமனிலையற்ற நிலையைப் போக்கக்கூடிய பொருளாதாரக் கொள்கையினையும் அரசியற் கொள்கையினையும் வகுத்து நடைமுறைப்படுத்துதல்.

இந்த இரண்டும் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படும்போது இலங்கைக்கான - இலங்கை அரசுக்கான உள்நாட்டு நெருக்கடியும் உள்நாட்டுச் சக்திகளின் அச்சுறுத்தலும் நீங்கிவிடும். இந்த அச்சுறுத்தல் நீங்குமானால், இலங்கையின் பாதுகாப்புச் செலவீனத்தில் ஐந்தில் மூன்று பங்கு மீதப்படுத்தப்படும். ஆளணிச் சக்தியும் மீதமாகும்.

அதேவேளை உள்நாட்டு முரண்பாடுகளைப் பயன்படுத்தி, உள்ளே இருக்கும் எதிர்ச் சக்திகளைப் பயன்படுத்தி தமது அரசியல் நலன்கனை முன்னெடுக்க முயலும் வெளிச்சக்திகளின் உபாயங்களும் தடுக்கப்படும்.

2. ஆகவே, இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வை அல்லது தீர்வுகளை       எப்படிக் காணமுடியும்?

இதற்கு முற்றிலும் புதிய முறையில் சிந்திக்க வேண்டும். முதலாவதாக  இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான சூழலை உருவாக்குவது அவசியம்.

இதன்படி, தீர்வுக்குத் தடையாக இருக்கின்ற சக்திகளையும் காரணிகளையும் அடையாளம் காண்பது முதலாவது பணியாகும்.

அடுத்ததாக, அந்த எதிர்ச் சக்திகளை எப்படித் தணிவு நிலைக்குக் கொண்டு வருவது? தடைக்காரணிகளை எவ்வாறு அகற்றுவது? என்று ஆராய்ந்து அதற்கான தீர்வைக் காண்பது.

இப்படிப் பார்க்கும்போது எதிர்ச்சக்திகளான தீவிர நிலையாளர்களையும் முஸ்லிம் விரோதப் போக்கையும் பலவீனப்படுத்த வேணும்.

அரசியல் அமைப்பு தடையாகவோ நெருக்கடியாகவோ இருக்குமானால், அதைத் திருத்துவதற்கு முயற்சிக்க வேணும். நாட்டினதும் மக்களினதும் தேவைகளுக்காகவே அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டது. அதற்கேற்பவே அது காலத்துக்குக்காலம் திருத்தத்துக்குட்படுத்தப்படுவதும். ஆனால், துரதிருஷ்ரவசமாக இலங்கையில் அரசியல் அமைப்பின் திருத்தம் அரசையும் ஆட்சியாளரையும் பாதுகாப்பதற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்தும் மக்களின் - சமூகங்களின் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் ஏற்றவாறு அமைக்கப்படவில்லை. ஆகவே, இதைக்குறித்துச் சிந்திக்க வேண்டும்.

இத்தகையதொரு அவசியச் சிந்தனைகளை மையப்படுத்திய அமுக்கக்குழுக்கள் (pசரளரசந பசழரிள)  இன்றைய நிலையில் மிக அவசியமாகத் தொழிற்படவேண்டியுள்ளன.

ஏனெனில், முன்னெப்போதையும் விட இப்பொழுதே இனப்பிரச்சினையைக் காண்பதற்குப் பொருத்தமான – பதமான சூழலொன்று அமைந்துள்ளது. போரினாலும் இன முரண்பாடுகளினாலும் பொருளாதாரப் பிரச்சினைகளாலும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட அனுபவங்களை இலங்கையிலுள்ள அனைத்துச் சமூகத்தினரும் சகல மக்களும் பெற்றிருக்கும் சந்தர்ப்பம் இது.

போரினால், முற்றுமுழுதாகவே பாதுகாப்பற்ற ஒரு நிலையில் இலங்கையிலுள்ள சமூகங்கள் இருந்தன. ஸ்திரமற்ற நிலையில் நாடு இருந்தது. இப்போது சகிக்கமுடியாத அளவுக்குத் துயரந்தரும் நிகழ்வுகளின் மத்தியில் போரின் பிடியிலிருந்து நாடு மீண்டுள்ளது.

எனவே இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, போரற்ற ஒரு நிலை எதிர்காலத்தில் நிரந்தரப்படுத்தப்பட வேண்டும் என்றும் அப்படியான ஒரு நிலையை உருவாக்கி, ஸ்திரப்படுத்துவதற்கான அடிப்படைகள் இப்போதே உருவாக்கப்பட வேண்டும் என்றும் மக்களிடையே அரசியல் வேலைகளைச் செய்வதற்கு இதுவே மிக வாய்ப்பான – பொருத்தமான சந்தர்ப்பமாகும். இதைப் புரிந்து கொண்டு, தமிழ், சிங்கள, முஸ்லிம், மலையச் சமூகங்களிலுள்ள அமுக்கக்குழுக்கள் தொழிற்பட வேண்டும்.

ஆனால், இந்த அமுக்கக்குழுக்கள் தங்கள் தங்கள் சமூகங்களின் அடையாளங்களின் வழியாக மேலும் தீவிரநிலைகளை – முரண்நிலைகளைக் கூர்மைப்படுத்தும் வகையிற் சிந்தித்தால் நிலைமை மேலும் விபரீதமாகும் என்பதையும் இங்கே கவனிப்பது அவசியம்.

இந்த அமுக்கக்குழுக்களானது, தங்களுக்கிடையில் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தை வரைந்து, அதில் இணைந்து தொழிற்படுவதன்மூலமாக இடைவெளிகளைக் குறைத்து தம்மைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். அது இயலுமானதுங்கூட.

அப்படிச் செய்யப்படும்போது, அப்படி இவை தொழிற்படும்போது, இலங்கையின் இனப்பிரச்சினைக்கும் பொருளாதாரப் பிரச்சினைக்குமான அரசில் நடவடிக்கைளை மேற்கொள்வதற்கு ஆட்சியாளர்களுக்கும் அரசியலைக் கைக்கொள்வோருக்கும் வாய்க்கும்.

ஆகவே, இப்போது அரசியலை முன்னெடுப்பதென்பதும் பிரச்சினைகளுக்கான தீர்வைக் கையாள்வதென்பதும் முழுமக்களினதும் முழு அக்கறைக்குரிய ஒன்றாக உள்ளது. இதில் முக்கிய பாத்திரத்தை ஏற்கவேண்டிய பணி அந்தந்தச் சமூகங்களைச் சேர்ந்த சிந்திக்கும் தரப்பினருடையதாகிறது.

மூன்றாவது கேள்வி. இலங்கையை ஒரு சுயாதிபத்தியமுள்ள நாடாக எப்படி மாற்ற முடியும்? என்பது.

இந்தக் கேள்விக்கான பதில் மிகச் சுலபமானது. மேற்படி கேள்விகளுக்கான பதிலைக் காண்பதன் மூலம் இந்தக் கேள்விக்கான பதிலும் இந்தக் கேள்வியின் உள்ளேயுள்ள நிலைமைக்கான பதிலும் கிடைக்கும்.

உள்நாட்டு நெருக்கடிகள் தீரும்போது, அரசின் ஒடுக்குமுறையும் தணிந்து விடும். அதனுடைய அச்சமும் தீர்ந்து போகும். இதன்மூலம் நாட்டில் முதலாவது நிலையிலான தளம்பலுக்கு முடிவுவந்து விடும். மக்களும் அரசும் எதிரெதிர்ச் சக்திகள் என்ற நிலை அநேகமாக மாறிவிடும். அப்படியான ஒரு நிலையில் மக்கள் அரசின் - ஆட்சியின் பாதுகாவலர்களாக இருப்பர். அதுவே சரியானதும். அந்தப் பாதுகாப்பே படைகளின் பாதுகாப்பையும் விடப் பலமானது. உறுதியானது.

அதேவேளை, உள்நாட்டிலுள்ள முரண்சக்திகளை வெளிச் சக்திகள் பயன்படுத்தி தமது காரியங்களைச் சாதிக்க முடியாத நிலையும் உருவாகும். அத்துடன் உள்நெருக்கடிகாரணமாக ஏற்படும் அழிவுகளும் சேதங்களும் ஆக்கத்திறனுக்கான ஏதுகளற்ற நிலையும் தடுக்கப்படும்போது, வெளியே கடன்படவும் கையேந்தவும் வேண்டிய நிலையும் ஏற்படாது. அத்துடன், உள்நாட்டு நெருக்கடிகளைக் கட்டுப்படுத்துவதற்காக வெளி உதவிகளை (புலிகளையும் ஜே.வி.பி யையும் அடக்குவதற்கு வெளி உதவிகளை இலங்கை அரசு நாடியிருந்தது) நாடவேண்டிய தேவையும் இருக்காது.

ஆகவே நாடு எந்த நிலையிலும் ஸ்திரத்தன்மையுடன் இருப்பதற்கு மேற்சொன்ன இரண்டு பிரதான கேள்விகளுக்கான பதில்களையும் காணும் நடவடிக்கைளை  மேற்கொள்ளும்போது மூன்றாவது கேள்விக்கான பதிலும் காணப்படுகிறது.

இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் தீர்வுக்கான முயற்சிகளோ – பேச்சுகளோ வழமையான பாரம்பரியத்தைக் கொண்டதாகவே உள்ளன. அரசு – தமிழ்த்தரப்பு என்ற எதிரெதிர்த்தரப்புகளின் மோதற்களமாகவே பேச்சுகளும் பேச்சுமேசையும் அமைந்துள்ளன. அப்படியே தோற்றங்காட்டவும் படுகிறது. அப்படியே புரிந்து கொள்ளவும் படுகிறது.

பேச்சுகள் தொடர்பாக இரண்டு தரப்பு வெளிப்படுத்தும் செய்திகளும் அறிக்கைகளும் இதையே நிரூபிக்கின்றன. பேச்சுகளைப் பற்றிய செய்திகளை வெளியிடும் இந்தத் தரப்புகளின் ஆதரவு ஊடகங்களும் இதே மனநிலையில்தான் இதை அணுகுகின்றன. ஒருவரை ஒருவர் தோற்கடிக்க அல்லது ஒருவரை ஒருவர் வெல்ல முயற்சிக்கின்ற எத்தனங்களே பேச்சுமேசையாகக் காணப்படுகிறது. இது அடிப்படையிலேயே தவறானது.

பேச்சுகளின் மூலமாகத் தீர்வொன்றைக் காணமுற்படும்போது இரண்டு தரப்பும் பதற்றங்களற்ற முறையில், சந்தேகங்களை மேலும் உருவாக்குவதற்கு இடமளிக்காமல் அரங்கிற் செயற்பட வேண்டும். ஆனால், அப்படியான நிலை உருவாகவேயில்லை. பதிலாக தட்டையான – ஒருவரை ஒருவர் தோற்கடிக்க முனைகிற அதே அமைப்பிற்தான் பேச்சுகள் நடக்கின்றன.

இந்த வழமையான – பழைய – தோற்றுப்போன பாரம்பரியத்தையுடைய பேச்சுவார்த்தையின் மூலம் எத்தகைய தீர்வையும் இந்த நாடு கண்டு விடமுடியாது.

பதிலாகக் காலம் கரையும். தீவிர நிலையாளர்கள் மேலும் பலம் பெறுவர். நெருக்கடிகள் மேலும் உக்கிரமடையும். வெளிச்சக்திகள் தாராளமாகவே இடைவெளியுள்ள சமூகங்களிடையே புகுந்து விளையாடும். நாடு அச்சத்திலும் நிம்மதியின்மையிலும் உழலும். பாதுகாப்புச் செலவினங்களும் சட்டங்களும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் படைகளின் பெருக்கமும் அதிகரிக்கும். ஸ்திரமற்ற தன்மை தாராளமாகவே ஏற்படும். நாடு மிகமிகப் பின்தங்கியே செல்லும்.

பின்தங்கிய நாட்டை அடிமை கொள்வது உலகத்துக்கு மிகச் சுலபம். பின்தங்கிய நாட்டில் மக்கள் வாழ்வது மிகக் கடினம்.

00

ஓட்டம் முடியவில்லை -- முன்னர் துரத்தியது போர். இன்று துரத்துவது கடன்

Tuesday, 17 January 2012

















ஒரு காலத்தில், வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி, சீட்டுக் கட்டிச் சம்பாதித்துச் சீதனத்துக்குக் காசு சேர்த்தவர்கள் ஈழத்தமிழர்கள். பிறகு, தங்களின் சம்பாத்தியங்களை வங்கிகளில் வைப்பிலிட்டுச் சேமித்தார்கள். வங்கிகளில் சேமிப்பது பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருந்தது அவர்களுக்கு. யுத்தச் சூழலில் இது இன்னும் பாதுகாப்பானதாகத் தோன்றியது.

இலக்கங்கள் கூடக்கூட சேமிப்பின் மகிழ்ச்சி உச்சத்துக்கு ஏறும். அதைவிட அதிலொரு பெருமை வேறு.

இதனால், தமிழ்ப்பகுதிகளில் இயங்கிய வங்கிகள் சேமிப்பில் முதலிடம் வகித்தன. ஆனால், தெற்கு மற்றும் மேற்கிலுள்ள சிங்களப்பகுதிகளின் வங்கிக் கிளைகள், சேமிப்புக்குப் பதிலாகக் கடனைத் தாராளமாக வழங்கிக் கொண்டிருந்தன. சிங்களவர்கள் சேமிப்பதற்குப் பதிலாகக் கடனை வாங்கிக் கொண்டிருந்தனர்.

இதை மறுவளமாகப் பார்த்தால், தமிழர்களின் காசில் சிங்களவர்கள் வாழ்ந்தனர் எனலாம். அவர்கள் வங்கிகளில் குறைந்த வட்டிக்குக் கடனை வாங்கி, தங்களுடைய தொழில் முயற்சிகளைச் செய்தனர். முதலீடுகளிலும் தாராளமாக ஈடுபட்டனர். வடக்குக் கிழக்கையும் விட ஏனைய பகுதிகளில் நிலவிய ஒப்பீட்டளவிலான அமைதிச் சூழல் இதற்கு மேலும் சாதகமான வாய்ப்புகளை வழங்கியது.

சேமிப்பதற்குப் பதிலாகத் தாராளமாகச் செலவு செய்யும் பழக்கம் சிங்களவர்களுக்கு எப்போதும் அதிகம். செலவு செய்வதற்காகவே சிங்களவர்கள் கடுமையாக உழைப்பார்கள் என்று தென்பகுதியில் நீண்டகாலம் இருந்த நண்பர்கள் சொல்வர்.  உழைப்பதைத் தாராளமாகச் செலவழிக்கும் இயல்பு அவர்களிடம் உண்டு. விதவிதமாகச் சாப்பாடுவதிலும் சுற்றுலாக்களுக்குப் போவதிலும் கொண்டாட்டங்களில் தாராளமாகச் செலவழிப்பதிலும் அலாதிப்பிரியம் அவர்களுக்கு.

நான் சிறுவனாக இருந்த காலத்தில் தெற்கிலிருந்து தினமும் பஸ் வண்டிகளில் சுற்றுலாவாக ஏராளம் சிங்களவர்கள் வடக்கே வருவர். வசதியுள்ளவர்கள்தான் இப்படி வருவதாக யாரும் எண்ணவேண்டாம். மிக வசதி குறைந்தவர்கள்கூட குடும்பம் குடும்பமாக வருவார்கள்.

அப்படி வருகிறவர்களுடைய உடற் தோற்றத்திலும் உடைகளிலும் அவர்கள் உடல் உழைப்புச் செய்யும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரியும். ஆனால், ஊர்களைப் பார்ப்பதிலும் பயணங்களைச் செய்வதிலும் அவர்களுக்கு நிறைய விருப்பம் என்றபடியால், செலவைப் பற்றிக் கவலைப்படாமல் இப்படி வருவார்கள்.

இப்படியான இயல்புள்ள சிங்களவர்கள் முதலீகளைச் செய்யவும் ஏதாவது தொழில்களை ஆரம்பிக்கவும் வங்கிகளில் தாராளமாகவே கடன்களை  எடுத்தார்கள். வடக்கிலே குறைந்த வட்டியைக் கொடுத்துத் தமிழர்களின் சேமிப்பைப் பெற்றுக் கொண்ட வங்கிகள், கூடுதலான வட்டிக்குச் சிங்களவர்களுக்குக் கடன்களைக் கொடுத்தன.

போதாக்குறைக்கு போர் நடந்த காலத்தில், அரசாங்கமே தமிழர்களின் சேமிப்பைப் போருக்குப் பயன்படுத்தியதாகவும் ஒரு அபிப்பிராயம் உண்டு. வெளிநாடுகளில் இருந்து போருக்காகப் பட்ட கடன் போதாதென்று வங்கிகளில் இருந்த சேமிப்பை அரசாங்கம் கடனாகப் பெற்றுப் போருக்குப் பயன்படுத்தியதாக அந்த நாட்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

எது எப்படியோ அன்று இப்படியாக இருந்த ஒரு நிலைமை இன்று  மாறியிருக்கிறது. இது யுத்தம் ஏற்படுத்திய மாற்றம். இப்பொழுது தமிழர்களும் வங்கிகளில் தாராளமாகக் கடன்களை எடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதிலும் வன்னியில் வங்கிக் கடன்களைப் பெறாத குடும்பங்களே இல்லை. கடன்படவில்லை என்றால் அவர்களால் வாழவே முடியாது என்ற நிலை. இந்த நிலையில் எப்படி கடனை எடுக்காமல் இருக்க முடியும்?

வன்னியில் நடந்த இறுதிப்போர், எல்லோரையும் அகதிகளாக்கியது. அகதிகளோ எல்லாவற்றையும் இழந்து விட்டவர்கள். எனவே, இந்தப் போர் இன்று எல்லோரையும் அகதிகளாக்கிக் கடனாளிகளாக்கி விட்டது.

இவர்கள் சாதாரண கடனாளிகளில்லை. பெருங்கடனாளிகள். எதற்கும் கடன் எடுக்க வேண்டும் என்பதால், எல்லோரும் இரண்டு மூன்று கடன் என்று எடுத்துப் பெருங்கடனாளிகளாகிக் கொண்டேயிருக்கிறார்கள். வட்டியைக் கட்ட முடியாமல், மேலும் புதிய கடனெடுத்து பழைய கடனின் வட்டியைக் கட்டுகிறார்கள். பிறகு புதிய கடனுக்காக வேறு கடனை எடுக்கிறார்கள். தொடர்கடன்கள். நிரப்பவே முடியாத கடன்கள்.

வங்கிகளும் தவிச்ச முயலை அடிப்பதைப் போல பாதிக்கப்பட்ட மக்களை வைத்துக் கடனைக் கொடுத்து வட்டியையும் முதலையும் கறக்கின்றன. கடன்கொடுப்பதற்காகவே ஏராளம் வங்கிகள். ஏராளம் கிளைகள். ஏராளம் திட்டங்கள்.

போருக்குப் பிந்திய வடக்கில் 64 நிதி நிறுவனங்கள் தங்களுடைய கிளைகளைத் திறந்து கடன் திட்டங்களை ஆரம்பித்திருக்கின்றன. ஊர் ஊராக, வீடு வீடாகக் கடன் திட்டங்களைப் பற்றிய பிரச்சாரம் வேறு.

சனங்களைக் கடனாளிகளாக்குவதற்கே அரசாங்கமும் திட்டமிட்டுள்ளது போலும். இல்லையென்றால், அது பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித்திட்டங்களையும் நிவாரணத்தையும் வழங்கியிருக்கும். அழிவுகளை முழுமையாகப் புனரமைத்திருக்கும்.

ஆனால், அப்படியான எதையும் அது செய்யவில்லை. அப்படியான எதையும் செய்யவும் அது யோசித்திருப்பதாகத் தெரியவில்லை.

சிறு உதவிகள் எந்த நிலையிலும் இந்த மக்களுக்குப் போதியதாக இருக்காது. முற்றாக இழந்த மக்களுக்கு முழுமைப்படுத்தப்பட்டதொரு உதவித்திட்டமே அடிப்படையான ஆதாரத்தை உருவாக்கும். அந்த அடிப்படையில் இருந்தே அவர்கள் தங்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்ப முடியும்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களாக இருப்பது வேறு. போரினால் முழுதாகவே அழிவடைந்த ஊர்களில் எல்லாவற்றையும் இழந்த மக்களாக இருக்கும் நிலை வேறு. இரண்டுக்கும் வித்தியாசமுள்ளது.

அரசாங்கம் எந்த வேறுபாட்டைப் பற்றியும் சிந்திக்கவும் இல்லை@ எந்த வித்தியாசங்களைப் பற்றியும் அக்கறைப்படவும் இல்லை. புலம்பெயர்ந்த தமிழர்களும் தாய்நிலத்தில் இருக்கின்ற தமிழர்களுக்காகப் பாசக்கண்ணீரை வடிக்கிறார்களே தவிர, பாசத்துடன் நடப்பதாகத் தெரியவில்லை.

போர் வாழ்க்கையையே மாற்றி விட்டது. தமிழர்களின் பொருளாதாரச் செயற்பாட்டையும் நோக்குநிலையையும் கூட மாற்றிவிட்டது.

அது சேமிப்புகளைச் சிதைத்து விட்டது. சேமிப்பாளர்களையும் சேமிப்புக்கான அடிப்படைகளையும்கூடச் சிதைத்தே விட்டது.

ஆகவே, சேமிப்புக்குப் பதிலாக இப்போது வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்கள் கடனுக்காகவே உழைக்கிறார்கள். கடனையும் வட்டியையும் கட்ட வேண்டும் என்ற கடப்பாட்டுக்காக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். கடன் அவர்களைத் துரத்துகிறது. ஓய்வில்லாமல் ஓடும்படி அது துரத்திக் கொண்டிருக்கிறது.

‘முன்னர் போர் துரத்தியது. இப்போது கடன்துரத்துகிறது’ என்று ஒரு கடனாளி வேடிக்கையாகச் சொன்னார். அவர் இப்படிச் சொன்னபோதும் அவருடைய இந்தப் பேச்சினுள்ளே ஒருவித துயரம் இழையோடியிருப்பதைக் காணலாம்.

போரின்போது கைகளை, கால்களை, கண்களை என்று உடல் உறுப்புகளை இழந்தவர்கள் கூட ஓட முடியாத நிலையில் கடனுக்காக ஓடிக் கொண்டிருக்கும் நிலையைக் காணமுடியும்.

ஏதாவதொரு தொழிலைச் செய்ய வேண்டும் என்ற நிலையிலேயே இவர்கள் வங்கிகளில் கடனாளியானார்கள். ஆனால், பட்ட கடனைக் கட்டக்கூடியவாறு உழைப்போ வருமானமோ இவர்களுக்கில்லை.

எவ்வளவுதான் முயன்றாலும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் போதிய வருமானத்தை யாராலும் எதிர்பார்க்க முடியாது.

ஏனென்றால், பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இருக்கும் சனங்களும் பாதிக்கப்பட்டவர்களே. ஆகவே, அவர்களிடம் தாரளாமாகச் செலவைச் செய்யக்கூடியவாறான நிதிவளம் இருப்பதில்லை. நிதிவளம் இல்லாத இடத்தில் எப்படி அதிக வருவாயை எதிர்பார்க்க முடியும்? வருவாய் குறைந்த நிலையில் எப்படிக் கடனுக்கும் வட்டிக்குமான உழைப்பை எதிர்பார்ப்பது?

ஆனால் ஒன்று - வங்கிகள் வந்த பிறகு, ஊர்களில் தவிச்ச முயல் அடிக்கிற நாள் வட்டி, அறா வட்டி, மீற்றர் வட்டிக் காரர்களின் கைகள் வீழ்ந்து விட்டன.

நாடே கடன் பட்டுக் கொண்டிருக்கும்போது குடிமக்கள் கடன்படுவதில் என்ன புதினம் என்று நீங்கள் கேட்கலாம்.

அப்படியான ஒரு கேள்வியைத்தான் ‘எத்தன்’ என்ற படத்திலும் கேட்கிறார், விமல். கடனிலேயே நாடும் மக்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், வாழ வேண்டியிருக்கிறது என்பதை மிகச் சுவாரஷ்யமாகச் சொல்லும் படம் இது. ஆனால், படத்தைச் சுவாரஷ்யமாகப் பார்ப்பதைப்போல வாழ்க்கை இருப்பதில்லை.

சேமிப்பையே தங்கள் வாழ்வாகக் கொண்டிருந்த ஒரு நிலை பெயர்ந்துள்ளதைப்போலவே தமிழர்களின் அடையாளங்களாக இருந்த பல சிறப்பம்சங்களும் போரினால் பெயர்ந்தும் சிதைந்தும் விட்டன. இவற்றை மீளுருச் செய்யும் காலம் எப்போது எந்த வடிவில் வருமோ!



00

இலங்கையில் தமிழ் பேசும் சமூகங்களின் எதிர்காலம் எப்படியிருக்கப்போகிறது?

Sunday, 15 January 2012
















மேற்படி தலைப்பை என்னிடம் கேள்வியாகக் கேட்டார் ஒரு நண்பர். அவருடைய இந்தக் கேள்விக்குள் பெருந்துக்கம் நிறைந்திருக்கிறது@ அத்துடன் எதிர்காலத்தைக் குறித்த அச்சமும் கலந்திருக்கிறது. இது தனியே ஒருவருடைய கேள்வியோ கவலையோ அல்ல. தமிழ்பேசும் சமூகத்தைச் சேர்ந்த பலருடைய கேள்வியும் இப்படித்தானிருக்கிறது. அவர்களுடைய கவலைகளும் அச்சங்களும் இந்தக் கேள்வியில் கலந்திருக்கின்றன. அப்படிப் பார்த்தால் இது இன்று தமிழ் பேசும் மக்களின் பொதுக்கேள்வியாகவும் பொதுக் கவலையாகவும் பொதுவான அச்சமாகவும் உள்ளது எனலாம்.

ஆகவே இந்தப் பொதுக் கேள்வி குறித்து நாம் சீரியஸாகச் சிந்திக்க வேண்டும். வெளியே சாதாரண கேள்வியாகத் தெரியும் இதனுள்ளே அசாதாரண நிலைமைகளே உள்ளடக்கமாகக் கொண்டுள்ளன. காரணம் இந்தக் கேள்வியின் பின்னால் ஏராளம் வலைப்பின்னல்களும் பொறிகளும் உள்ளன. அதேவேளை இந்தக் கேள்வியில் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தலைவிதியும் எதிர்காலமும் ஏன் நிகழ்காலமும் கூட பொதிந்திருக்கின்றன. ஆகவேதான். இந்தக் கேள்வி எழுந்ததற்கான பின்னணியைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

இந்தக் கேள்வி ஒரு சூழ்நிலையின் வெளிப்பாடு. தமிழ்பேசும் சமூகங்கள் இன்று எதிர்கொள்கின்ற அரசியல் வெறுமை நிலை உருவாக்கிய சூழ்நிலையிலிருந்தே இந்தக் கேள்வி பிறக்கின்றது. அறுபது ஆண்டுகால அரசியல் போராட்டங்களும் முயற்சிகளும் தோல்வியில் வந்ததன் விளைவு இது. அவ்வாறாயின் தமிழ் பேசும் மக்களின் மனதில் தற்போதிருக்கும் தலைமைச் சக்திகள் குறித்தும் கட்சிகள் குறித்தும் கேள்வி நிலை எழுந்திருக்கிறது@ அவநம்பிக்கை உருவாகியிருக்கிறது என்பதே பொருளாகும்.

தமிழ் பேசும் மக்கள் தங்களுக்குரிய தலைமைச் சக்திகள் குறித்த தெளிவையோ தெரிவையோ கொண்டிருக்கவில்லை. அப்படி அவர்கள் தமக்கான தெரிவைச் செய்யக் கூடிய அளவுக்கு இந்தச் சக்திகளும் இப்போதிருக்கும் தலைவர்களும் துலக்கமான நடவடிக்கைகளைச் செய்யவுமில்லை. அரசியல் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் மக்களுக்கான தலைமைத்துவப் பண்பையும் வினைத்திறனையும் இந்தத் தலைவர்கள் கொண்டிருக்கவும் இல்லை. அதாவது, அரசியல் உரிமைகளுக்காகப் போராடிப் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் மக்களின் மனதில் இவர்களில் எவரும் தக்கதொரு இடத்தைப் பிடிக்கவில்லை என்பதே இந்தக் கேள்விக்கான காரணமாகும்.
 
எவரும் இன்னும் மக்களின் மனதோடு நெருங்கவில்லை. மக்களின் பிரச்சினைகளோடும் அவர்களுடைய உணர்வுகளோடும் கலந்திருக்கவில்லை. மட்டுமல்ல, தமிழ் பேசும் சமூகங்களின் கடந்த கால, நிகழ்கால, எதிர்கால அரசியற் பிரக்ஞையோடும் இவர்களில்லை என்பதே இவர்களின் பெரிய பலவீனமாகும். சுpலரிடம் ஒரு மெல்லிய விகித வேறுபாடிருக்கலாம்.

இந்தத் தலைவர்கள் குறைந்த பட்சம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு நடவடிக்கைகளைக் கூடச் செயற்படுத்த முடியாத நிலையிலேயே அனைத்துத் தரப்பினரும் இருக்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொது உதவித்திட்டத்தை வரைய முடியாமலும் உதவி நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலாமலும் பொது உதவிநிதியமொன்றை உருவாக்க முடியாமலும் இவர்கள் இருக்கிறார்கள். அதாவது எதற்கும் வக்கற்ற நிலையிலும், எதற்கும் லாயக்கற்றவர்கள் என்று கூறுமளவுக்குமே இவர்கள் செயற்படுகிறார்கள்.

இப்போது தமிழ் பேசும் மக்களுக்கு என்று அதிக தலைவர்களும் அதிக கட்சிகளும் உருவாகியிருக்கின்றன. நாடு கடந்த நிலையில் கூட அரசியற் செயற்பாட்டு அணிகளும் ஆட்களும் தாராளமாக உருவாகியிருக்கும் சூழல் இது. அதிகளவான கட்சிகள் என்பதால் அதிகளவான நிலைப்பாடுகளும் செயற்பாடுகளும் உருவாகுவது இயல்பு. அதுவும் நீண்டகாலமாக ஒற்றைப் பரிமாண அரசியற் சூழலில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட தமிழ்பேசும் சமூகங்களுக்கு இந்த மாதிரி ஒரு நிலை உருவாகியிருப்பது எதிர்பார்க்க வேண்டியதே. அத்துடன் ஒரு ஜனநாயகக் சூழலில் இதுமாதிரி ஏராளம் அபிப்பிராயங்களோடும் நிலைப்பாடுகளோடும் பலரும் செயற்படுவது இயல்பானது என்று யாரும் சொல்லலாம். இது ஒரு வகையில் நியாயமானதாகவும் இருக்கலாம். ஆனால், இந்த நிலைப்பாடுகள் எல்லாம் அரசியல் ரீதியாகவும் வாழ்நிலை ரீதியாகவும்  பலவீனமடைந்திருக்கும் சமூகங்களை மேலும் பலவீனப்படுத்தும் என்பதே உண்மை. 
அதற்காக ஏகப்பிரதிநிதித்துவ நிலைப்பாடும் அணுகுமுறையும் பொருத்தமானது என்று அர்த்தம் அல்ல. தமிழ் முஸ்லிம் தரப்பினரிடையேயுள்ள கட்சிகளிலும் இந்தக் கட்சிகளின் தலைவர்களிடமும் எப்போதும் ஏகப்பிரதிநிதித்துவக் கொள்கையும் அணுகுமுறையுமே காணப்படுகிறது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தன்னையே ஏகபிரதிநிதித்துவ அமைப்பாகச் சொல்கிறது. முஸ்லிம் கொங்கிரஸ் சொல்கிறது முஸ்லிம் மக்களின் தலைமைத்துவ ஏக அமைப்பு தானே என்று. நாடுகடந்த தமிழீழ அரசினரும் இதற்கு விதிவிலக்கில்லை. எதிர்க்கட்சியை விரும்பாத, மாற்று அபிப்பிராயங்களைப் பொருட்படுத்தாத ஒரு சூழலில் அரசியல் நடத்தவே இந்தத் தரப்புகள் எப்போதும் விரும்புகின்றன. ஆனால், இது எந்த வகையிலும் பொருத்தமற்றது. அதுவும் இன்றைய உலகத்தின் போக்கில் இந்த ஏக விருப்பு அரசியல் எதிர் நிலை அம்சங்களையே பெருக்கும். (இதுகுறித்துப் பின்னர் தனியாகப் பார்த்துக் கொள்ளலாம்).
ஏகப் பிரதிநிதித்துவத்தைப் பற்றிப் பேசும் இந்தக் கட்சிகளும் தலைமைகளும் மக்களின் தேவைகள், பிரச்சினைகளைப் பற்றிக் கவலை கொள்வதில்லை என்பது துக்ககரமான இன்னொரு கதை. பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு இவை தீர்வு காண முயற்சிப்பது கூட இல்லை. பலவீனமான நிலையில் இருக்கும் சமூகங்களை மேல் நிலைப்படுத்தி அவற்றை வலுப்படுத்திக் கொண்டு அந்தச் சமூகங்களை வழிநடத்துவதே பொருத்தமானது என்றும் இவை சிந்திப்பதில்லை. ஆனால், என்னதான் இந்தச் சமூக மக்கள் கெட்டு நொந்தாலும் பரவாயில்லை, தமது அரசியல் இருப்பு முக்கியமானது. அதிலும் அதை மற்றவர்கள் பங்கு போடக் கூடாதது என்றே இவர்கள் விரும்புகிறார்கள். இது கண்டிக்கப்படவேண்டியது.


எனவே, இந்த நிலையில் தமிழ் முஸ்லிம் சமூகங்களின் இன்றைய நிலை, கடந்த காலத்துயரங்கள், கடந்த காலத்தில் இந்த மக்கள் அளித்த அரசியற் பங்களிப்புகள், போராட்டத்தையும் அரசியலையும் வழிநடத்திய சக்திகளின் தவறுகள், இந்தச் சமூகங்களின் எதிர்காலம் என்பவற்றைக் கணக்கிற் கொண்டு புதிய அரசியற் செயற்பாட்டை மிகப் பொறுப்போடு ஏற்று, புத்திப+ர்வமாகச் செயற்படும் அமைப்பும் தலைமைத்துவமுமே இன்றைய தேவை. இந்தத் தேவையின் பாற்பட்டே மேற்குறிப்பிட்ட பொதுக்கேள்வி மக்களிடையே எழுகிறது. ஆனால், இந்தக் கேள்விக்கான பதிலைக் காண முடியாத நிலையில்தான் மக்கள் துக்கத்தோடிருக்கிறார்கள். இந்தத் துக்கம் பல பத்தாண்டுகள் நீடித்தது. இன்னும் நீடித்துக் கொண்டிருப்பது. இது இன்னும் நீடிக்கக் கூடாதென்பதே இங்கே பொதுக் கேள்வியாகப் பரிணமித்திருக்கிறது.
02
விடுதலைப் புலிகள் இல்லாத இலங்கைத்தீவின் அரசியல் களம் இது. புலிகள் இருந்த கால நிலைமைகள் இன்று மாறிவிட்டன. புலிகளின் மேல் இனியும் பாரத்தைச் சுமத்திக் கொண்டு அரசாங்கமும் இருக்க முடியாது, சர்வதேச சமூகமும் இருக்க முடியாது, தமிழ் பேசும் தரப்பினரும் இருக்க முடியாது.
உள்நாட்டில் ஜனநாயக நடைமுறை சார்ந்த செயற்பாட்டில் பொதுவாக அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கின்றனர். ஆகவே இந்தத் தளத்திலிருந்து பிரச்சினைகளை அணுகவும் தீர்வுகளை நோக்கி முன்னேறவும் வேணும். கடந்த காலத்தின் தவறுகள் தடைகளாக இருக்கலாம். ஆனால் அதைக் கடந்து செல்ல வேண்டியது இன்றைய அரசியற் செயற்பாட்டாளர்களின் கடமை. அப்படி நடைபெறுகிறதா? என்றால் அதுதான் இல்லை.
விடுதலைப் புலிகள் இல்லையே தவிர அவர்கள் இருந்த காலகட்டத்தைப் போலவே பிரதான பிரச்சினைகள் அப்படியே இருக்கின்றன. அரசாங்கமோ பிற தரப்புகளோ இந்தப் பிரச்சினைகளைக் குறைக்கவும் தீர்க்கவும் முயற்சிக்கவில்லை. குறிப்பாக தமிழ், முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றம் இன்னும் முழுமைப்படுத்தப்படவில்லை. அரசியற் கைதிகள் விடுவிக்கப்படவில்லை. அரசியற் பிரச்சினைக்கான தீர்வு தேக்கநிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. தமிழ் பேசும் சமூகங்களின்மீதான பாரபட்சங்கள் நீங்கவில்லை. படைவிலகல் நிகழவில்லை. பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மேம்பாடடையவில்லை. தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான உறவு நிலை சீராகவில்லை. இடம் பெயர்ந்த மக்கள் முழுமையாக் குடியமர்த்தப்படவில்லை. வாழ்க்கைச் சுமைகள் குறையவில்லை. சட்டத்தால் சமூக உணர்வைக்கட்டுப் படுத்தும் நிலைமை மாறவில்லை. ஆகவே புலிகள் இல்லையே தவிர, பிரச்சினைகளும் பழைய நிலைமைகளும் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன.
எனவேதான் மேற்சொன்ன கேள்வி பொதுக்கேள்வியாக மக்களிடம் பரிமாணங் கொண்டிருக்கிறது. இதன் அர்த்தம் புலிகள் இருந்திருந்தால் இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வைக் கண்டிருப்பார்கள். மக்களெல்லாம் மகிழ்வோடும் நிம்மதியோடும் இருந்திருப்பார்கள். பிரச்சினைகளே இல்லாத உலகம் ஒன்று பிறந்திருக்கும் என்பதல்ல.


புலிகளைக் குற்றம் சுமத்தி, அவர்களின் மீது பழிகளைச் சுமத்திக் கொண்டிருக்கக்கூடியவாறு இன்று நிலைமை இல்லை என்பதே இங்கே கவனிக்க வேண்டியது. யாரும் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகளுக்கு இப்பொழுது புலிகளின் அச்சுறுத்தல், தடை இல்லை என்பதே இங்கே கவனிக்கவேண்டியது. ஆகையால் பந்து இப்போது அவரவர் காலில் உள்ளது. அவரவர் அதை திறம்பட விளையாடவேண்டியதுதான்.


தமிழ் முஸ்லிம் மக்களின் உறவு நிலையில் புதிய சாத்தியங்களைக் காண முடியும் என்ற உற்சாகத்தை இன்றைய சூழல் ஏற்படுத்தியுள்ளது. தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறவைப் பலப்படுத்தும் வேலைகளைச் செய்வோருக்கு அச்சுறுத்தல் இல்லை என்பது இன்னொரு பெரிய விசயம்.

ஆகவே, தமிழ் முஸ்லிம் மக்களிடையேயான உறவு நிலையைப் பலப்படுத்துவதன் மூலம் இந்த இரண்டு சமூகங்களும் முதற்கட்ட நெருக்கடியைக் கடக்கலாம். அதேவேளை அடிப்படையில் தமிழ் முஸ்லிம் மக்கள் பலம் பெறலாம். ஆனால், இதற்கு தமிழர்கள் முஸ்லிம் மக்களின் அனைத்து உரிமைகளையும் நலனையும் பேணவும் அவற்றை உத்தரவாதப்படுத்தவும் வேணும். அதைப்போலவே முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களின் வாழ்வு குறித்து கரிசனைகளைக் கொள்வது அவசியம். இதை நடைமுறைப் படுத்தும் அரசியற் செயற்பாட்டாளர்கள் யார்?

அடுத்தது ஜனநாயகச் சூழலை வளர்த்தெடுப்பது, மாற்றுக் கருத்துகளுக்கும் அபிப்பிராயங்களுக்கும் திறந்த மனதோடு இடமளிப்பது, வசைபாடுதல்களையும் துரோகி தியாகி போன்ற சட்டகங்களுக்குள் செயற்பாட்டாளர்களை அடைப்பதையும் முத்திரை குத்தி வகைப்படுத்துவதையும் நீக்குவது, மறுவாழ்வுப் பணி உள்ளிட்ட முக்கிய நிலைமைகளில் ஒன்றிணைந்து நிற்பது போன்ற புதிய முறைச் செயற்பாடுகள் இன்று அவசியமானவை. இதைச் செய்வது யார்? இதெல்லாம் முன்சொன்ன கேள்விக்கான அடிப்படைக்காரணங்களாகும்.



00

தமிழ் ஊடகங்கள் கறுப்பு வெள்ளை அரசியலுக்குள் சிக்கியிருக்கும் வரை அவற்றினால் மக்களின் யதார்த்தமான பிரச்சினைகள் குறித்துச் சிந்திக்க முடியாது. உண்மைக்கும் யதார்த்தத்துக்கும் அப்பால் இந்த ஊடகங்கள் கற்பனாவாதத்திலும் தவறுகளைக் களையாமலும் இருக்கின்றன. வியாபார நோக்கத்திற்காக உயிர்களையும் குருதியையும் கண்ணீரையும் அவலங்களையும் தாராளமாகப் பயன்படுத்திப் பழகி விட்டன. வேறு சூழலில் என்றால், இந்த மாதிரி ஊடகங்களைக் கையாள்வதற்குக் கூச்சப்படுவார்கள். ஆனால், தமிழில் இந்தக் கூச்சம், நாகரீகம் எல்லாம் கிடையாது.


நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பாணியில் - எந்த முன்னேற்றமும் இல்லாமல் ஊடகங்களை நடத்தும் சமூகம் என்றால், அது ஈழத்தமிழ்ச் சமூகமாகத்தானிருக்கும்.
ஊடக அறநெறி, தொழில்முறைப் பொறுப்பு, தொழில் நேர்த்தி எல்லாம் தமிழ் ஊடகங்களிடம் கிடையவே கிடையாது. அப்படியிருந்திருந்தால் இப்படித் தமிழ் ஊடகங்கள் சீரழிந்திருக்காது. சில ஊடகங்கள் இதற்கு விதிவிலக்காக இருந்தாலும் அவர்களால் ஒரு பிரத்தியேக வெளியை உருவாக்க முடியவில்லை. சிங்கள இனவாதத்துக்குப் பதிலாக தமிழ் இனவாதத்தை வளர்ப்பதிலேயே தமிழ் ஊடகத்தின் பொதுப் போக்கு இருக்கிறது.
 
எனவேதான் கறுப்பு வெள்ளை அரசியல் இந்த ஊடகங்களில் பேணப்படுகிறது. கறுப்பு வெள்ளை அரசியலில் ஒரு போதும் விரிந்த பார்வைக்கு இடமில்லை. விமர்சனங்களுக்கு இடமில்லை. நியாயங்களுக்கு இடமில்லை. இந்த நிலை இப்படியே வளர்ந்து உண்மைக்கும் இடமில்லாமற் போய் விடுகிறது.

இதனால், தமிழ் பேசும் மக்களின் அரசியற் குறைபாடுகளைப்போலவே தமிழ் ஊடகங்களின் குறைபாடுகளும் இருக்கின்றன. இந்த ஊடகங்களோ முறையான ஜனநாயகச் சூழலை தமிழ் ஊடகத்திலும் அரசியலிலும் வளர்த்திருக்கின்றனவா? அல்லது புதிய விவாதங்களுக்கான வாசல்களையாவது திறந்திருக்கின்றனவா? அல்லது நெருக்கடியான கட்டங்களில் அவற்றை எதிர்கொள்ளும் வகையில் மக்களைத் தயார்படுத்தும் காரியங்களுக்குப் பின்னணியாக இருந்திருக்கின்றனவா? அல்லது போரினாலும் அகதி வாழ்வினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளைப் பற்றிய விழிப்புணர்வை இந்த ஊடகங்கள் தமிழ் பேசும் சமூகங்களிடம் ஏற்படுத்தியிருக்கின்றனவா? அல்லது, அரசியல், பண்பாடு, மனிதாபிமானப் பணிகள் போன்றவற்றில் ஒரு அழுத்தத்தரப்பாக இந்த ஊடகங்கள் பணியாற்றக்கூடிய ஆலோசனை வழங்கக் கூடிய நிலையைப் பெற்றிருக்கின்றனவா?

அப்படியெல்லாம் நடந்ததாக இல்லையே! ஆனால், விடுதலைக்காகப் போராடிய சமூகங்கள் என்றவகையிலும் பெரும் அழிவுகளைச் சந்தித்த சமூகங்கள் என்றவகையிலும் இன்னும் நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் சமூகங்கள் என்ற வகையிலும் இந்த ஊடகங்கள் எப்படிச் செயற்பட்டிருக்க வேண்டும்?


ஆகவே தமிழ் பேசும் சமூகங்களின் மனதில் இருக்கும் பொதுக்கவலைகளுக்கும் பொதுக்கேள்விகளுக்கும் விடைகாண்பது என்பதே புதிய அரசியல் நடவடிக்கைதான். அ ந்த அரசியல் நடவடிக்கை என்பது அரசாங்கத்தை மட்டும் குறை சொல்லிக் கொண்டிருப்பதை விடுத்து புதிய அரசியற் பாதையை வழிமுறையை செயற்படு நிலையைக் கொண்டதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் வெற்றி வாய்ப்புகளை அரசுக்கும் அதன் அதிகார வர்க்கத்துக்கும் கொடுத்துக் கொண்டேயிருப்பதாகிவிடும். மக்களைத் தொடர்ந்தும் தோற்கடிக்கக் கூடாது. அப்படித் தோற்கடிக்கவும் முடியாது. அதன் ஒரு வெளிப்பாடே மக்களிடம் எழுந்துள்ள இந்தப் பொதுக் கவலைகளும் பொதுக் கேள்விகளும்.
 00

நன்றி- எதுவரை, புகைப்படம் - இணையம்
 

2009 ·. by TNB