கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா = இந்தியாவின் அரசியல் நலனில் இலங்கை இனப்பிரச்சினை

Saturday, 14 January 2012
















இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியாவின் பாத்திரத்தைப் பற்றித் தொடர்ச்சியாகப் பலரும் எழுதியும் பேசியும் வருகின்றனர். இதில் இந்திய அரசுக்கான கோரிக்கைகள், கண்டனங்கள், ஆலோசனைகள், நட்புடன் தெரிவிக்கப்படும் கவனிக்க வேண்டிய விசயங்கள், சுட்டிக் காட்டுதல்கள், குற்றச்சாட்டுகள், வசைகள், ஆதரவுகள் எனப் பலவகைகள் உள்ளன.

இந்தக் கருத்துகளை இலங்கைத் தமிழர்கள், சிங்களத் தரப்பினர், இந்தியர்கள், அதிலும் தமிழகத்தைச் சேர்ந்தோர், பிறத்தியார் எனப்படும் வெளியுலகத்தினர் எனப் பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தக் கருத்துகளில் சில முக்கியமானவை. பொருட்படுத்தத் தக்கவை. சில விழல்கள்.

இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவு, இந்த நாடுகளில் ஏற்படவேண்டிய அமைதி, பாதுகாப்பு, இந்த நாடுகளிலுள்ள சமூகங்களுக்கிடையிலான முரண்பாட்டு நீக்கத்துக்கான வழிவகைகள், அவற்றின் அவசியம் போன்றவற்றை, கடந்த கால - சமகால – எதிர்கால அடிப்படைகளில் வைத்து பொறுப்புடன் சிந்திப்போர் இந்தக் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.

அதிலும் பல ஆய்வுகள் இந்தப் பிராந்தியத்தின் அமைதியையும் இந்தப் பிராந்திய மக்களின் நலன்களையும் பாதுகாப்பையும் மையப்படுத்தியவை.

பிராந்தியத்திலுள்ள நாடுகளை மையப்படுத்திய ஆய்வுகள் என்பதற்குப் பதிலாக, அரசுகளின் நலனை மையப்படுத்தியவை என்பதற்கப்பால், இந்தப்; பிராந்தியத்தின் மக்கள் மற்றும் அவர்கள் அடையாளப்படுத்தும் சமூகங்களை மையப்படுத்திய ஆய்வுகளும் கவனங்களும் இதில் முக்கியமானவை.

இவ்வாறு தொடர்ச்சியாகவும் பரந்த அளவிலும் வெளிப்படுத்தப்பட்டு வரும் கருத்துகள் தொடர்பாக இந்திய அரசு எத்தகைய அக்கறையைக் கொண்டுள்ளது? அது எத்தகைய புரிதல்களைப் பெற்றிருக்கிறது? அல்லது அது இவைகுறித்து அக்கறைப்படவேயில்லையா?

இந்த மாதிரியான கேள்விகள் இன்று பதில் காணப்படவேண்டியவையாக உள்ளன.

ஏனெனில், ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியா வகித்த பாத்திரம் தவிர்க்க முடியாத ஒரு நெருக்கடி நிலையை இலங்கைத் தீவிலுள்ள அனைத்துச் சமூகங்களுக்கும் ஏற்படுத்தியுள்ளது.

இனப்பிரச்சினையைத் தீர்ப்பதிலும் சரி, இந்தப் பிரச்சினையைத் தனது நலன்களுக்காகப் பயன்படுத்தியதிலும் சரி, இந்தியா பெரும் பாத்திரமொன்றைக் கொண்டுள்ளது. இன்னும் அப்படியான ஒரு முக்கியத்துவத்தையே அது கொண்டுமிருக்கிறது.

இதை மேலும் கூறுவதானால், பிராந்தியத்தில் முக்கியமான சக்தி என்ற வகையிலும் இலங்கைச் சமூகங்களுடன் வரலாற்று ரீதியாக இந்தியாவுக்குள்ள பிணைப்புகள் தொடர்பாகவும் இந்தியா இலங்கை விவகாரங்களில் ஒரு தவிர்க்க முடியாத சக்தி என்ற பாத்திரத்தை வகித்து வருகிறது எனலாம்.

அந்த வகையிலே, இந்தப் பிரச்சினை தொடர்பாக இந்திய அரசும் இந்தியத் தலைவர்களும் உயர் மட்ட அதிகாரிகளும் இராச தந்திரிகளும் அடிக்கடி கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், நடைமுறையில் அவர்கள் தெரிவித்து வருகின்ற கருத்துகளுக்கும் வெளிப்படையான நடவடிக்கைகளுக்கும் முயற்சிகளுக்கும் மாறாகவே நிலைமையும் யதார்த்தமும் உள்ளன.

அதாவது, இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் இந்தியா திடசங்கற்பமான உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளது என்று இந்தியாவின் தலைவர்கள் அனைவரும் கட்சி பேதமின்றிக் கால பேதமின்றிச் சொல்லி வந்திருக்கின்றனர் - சொல்லி வருகின்றனர்.

ஆனால், அந்தத் திட சங்கற்பத்தின் தாற்பரியம் என்ன? அதன் அளவு என்ன? அது எத்தகையதாக இருக்கிறது? அதன் பெறுமானம் எத்தகையது? அல்லது அது வெறும் வாய்ப்பேச்சு என்ற அளவிற்தான் - சம்பிரதாயபூர்வமானதாக உள்ளதா?

இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதில் இந்தியா கரிசனை கொண்டுள்ளது என்று இன்னொரு தளத்தில் அறிவிப்புகள் வந்திருக்கின்றன. அப்படியானால், இந்தக் கரிசனையின் உண்மைத் தன்மை எத்தன்மையை உடையது? அல்லது இந்தக் கரிசனையின் வீச்செல்லையும் விசையும் எத்தகையன?

இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் இந்தியா தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வந்திருக்கிறது? இன்னும் அத்தகைய முயற்சிகளை அது முன்னெடுத்து வருகிறது என்று இந்தியத் தலைவர்கள் சொல்லி வருகிறார்கள். இலங்கை வரும் இந்திய இராசதந்திரிகளும் முக்கியஸ்தர்களும் அமைச்சர்களும் இதைத் தான் சொல்கிறார்கள்.

ஏறக்குறைய இப்படி அவர்கள் சொல்வது சம்பிரதாயமானதாகக் கூட இப்பொழுது மாறிவிட்டது. தாங்கள் சொல்லும் இந்தக் கூற்றுகளை இலங்கையில் இப்போது யாரும் நம்புவதும் இல்லை. பெரிதாகப் பொருட்படுத்திக் கொள்வதும் இல்லை என்றுகூட அவர்கள் யோசிப்பதில்லை.

ஆனால், தொடர்ந்து தங்கள் சம்பிரதாயபூர்வமான அறிவிப்புகளை இயந்திரமொன்றின் செயற்பாட்டைப்போல எந்த உணர்ச்சியுமின்றிச் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள்.

இந்தியாவின் இந்தச் செயலாண்மைக்குள்; - (இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்க்க இந்தியா எடுத்துக்கொண்டு திடசங்கற்பம் (உறுதிப்பாடு), கரிசனை, முயற்சிகள், நடவடிக்கைகள் எல்லாவற்றுக்குள்ளும்) தான், இலங்கையில் இனப்பிரச்சினைப் போர் தீவிரமடைந்ததும் அது மூன்று லட்சம் வரையான உயிர்களைக் குடித்ததும் நடந்திருக்கிறது.

அப்படியானால், இந்தியாவின் விசுவாசமான நடவடிக்கைகளும் திடசங்கற்பமும் கரிசனையும் செயற்பெறுமதியும் இந்தியாவின் செல்வாக்கும் இந்த விசயத்தில் எப்படியுள்ளன?

இந்தக் கேள்வியை இங்கே எழுப்பவேண்டியிருப்பதே மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்றுதான். ஏனெனில், இதையும் விடக் காட்டமான கேள்விகள் இந்தியாவை நோக்கி இந்த விசயத்தில் ஏற்கனவே பலர் எழுப்பியிருக்கிறார்கள். இப்போது மீண்டும் இதை இங்கே கேட்பது எல்லோருக்கும் சலிப்பூட்டலாம். ஆனால், என்ன செய்வது இந்தக் கேள்வி மீண்டும் எழுகிறதே!

இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஸ்ணா இலங்கைக்கு வரவுள்ளார் என்ற செய்தி கடந்த வாரத்தில் வெளியாகியபோது இலங்கை மற்றும் புலம்பெயர் நாடுகளில் உள்ள பல ஊடகங்களும் இந்தச் செய்தியைக் கேலிப்படுத்தியே பிரசுரித்தன.

சில ஊடகங்கள் கேலிச்சித்திரங்களைக் கூட வெளியிட்டிருந்தன. சில ஊடகங்களின் ஆசிரிய தலையங்கள், கிருஸ்ணாவினுடைய விஜயத்தின் மீது நம்பிக்கையற்ற தன்மையையும் இந்தியா தொடர்பான அவநம்பிக்கையையும் வெளிப்படுத்தியிருந்தன.

இந்தியா ஏன் இப்படி நடந்து கொள்கிறது? என்ற கேள்வி பெரும்பாலான தமிழர்களிடம் இன்று தீவிர நிலையில் எழுந்துள்ளது. ஆயிரம் விமர்சனங்களுக்கு அப்பாலும் இந்தியாவின் மீது பெரும்பான்மையான தமிழர்கள் பிடிப்பும் நம்பிக்கையும் கொண்டிருந்தனர் என்பது உண்மையானது.

தமிழர் தரப்பின் அரசியலாளர்களிற் பலரும் பெரும்பாலான ஆய்வாளர்களும் இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியாவின் பங்கையும் பாத்திரத்தையும் பெரிதாகவே பேசியும் கருதியும் வந்திருக்கின்றனர்.

ஆனால், இவர்களைக் கூட இந்தியா பொருட்படுத்தவில்லை. – அதாவது, தன்னை நம்பியவர்களையும் தனக்கு விசுவாசமாக இருப்போரையும்கூட அது கவனத்திற்கொள்ளவில்லை என்று சில விமர்சகர்கள் இந்த நிலைதொடர்பாகக் கூறுகின்றனர்.

இதனால், இந்தியாவை மட்டும் நம்பினாற் போதாது, அதற்கப்பால் மேற்குலகத்தையும் நம்ப வேண்டும். அவர்களுடைய ஆதரவையும் திரட்ட வேணும் என்ற கருதுகோளுக்கு இலங்கைத் தமிழர்களிற் பலரும் இன்று நகர்ந்துள்ளனர். தமிழர் சார்பான அரசியலாளர்களிற் பலரும்கூட இத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதை அவர்களுடைய அண்மைய கருத்துகள் தெரிவிக்கின்றன.

தமிழர்கள் மேற்குலகத்தை நம்பி, அதை நோக்கி நெருங்கிச் செல்ல இலங்கையோ இந்தியாவை நோக்கி நெருக்கமாகிறது. “என்னதான் இருந்தாலும் இலங்கையும் இந்தியாவும் மிகவும் நெருக்கத்துக்குரிய நாடுகள். எந்தச் சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு இந்தியாவே நட்புச் சக்தி“ என்று அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவும் வேறு பலரும் தெரிவித்திருந்ததையும் நாம் கவனிக்க வேணும்.

இலங்கையின் இனப்பிரச்சினை விசயத்தில் யார் என்ன சொன்னாலும் இந்தியா தனக்கென்று வகுத்துக் கொள்ளும் கொள்கையின் அடிப்படையில் மட்டுமே செயற்பட்டு வருகிறது. அதற்கேற்பவே அது நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதுவே துலக்கமான உண்மை.

இந்த உண்மைக்கு அப்பால், யாரும் அதன்மீது கண்டனங்களை வைப்பதும், பாராட்டுவதும் குற்றம்சாட்டுவதும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பதும் நம்பிக்கை வைப்பதும் எதிர்ப்பதும் பயனற்றது. அவற்றைக் குறித்து இந்தியா கவலைப்படுவதில்லை. அது அவற்றையிட்டுக் கவலைப்படும் நிலையிலும் இல்லை.

இந்தியாவைப் பொறுத்தவரையில் அது உள்நாட்டிலும் சர்வதேச நிலையிலும் பிராந்திய ரீதியிலும் தனக்கு எழுகின்ற நெருக்கடிகளையும் அபாயங்களையும் குறித்தே சிந்திக்கிறது. அதற்கேற்ப அது இப்போது அமெரிக்கா தலைமையிலான நாடுகளுடன் நட்பாக உள்ளது. முன்னர் ரஷ்யா தலைமையிலான அணியுடன் நட்பாக இருந்தது. இரண்டும் இந்தியாவின் தேவைகளைப் பொறுத்ததே.

இது முதலாவது.

அடுத்தது, தனக்கு சர்வதேச ரீதியாகவும் பிராந்திய ரீதியிலும் உள்நாட்டிலும் எத்தகைய நன்மைகள் கிட்டுகின்றன? என்ன வகையான நலன்கள் கிட்டும் என்பதற்கேற்பவே அது அசியற் கொள்கையையும் வெளியுறவுக் கொள்கையையும் இராசதந்திர நகர்வுகளையும் செய்கிறது. இதற்கேற்பவே அதனுடைய நிகழ்ச்சி நிரல்கள் அமைகின்றன.

இதுவே மறுக்க முடியாத உண்மை. இந்த உண்மை பரகசியமானதும்கூட. பல தடவைகள் இது பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டும் உள்ளது.

ஆனால், இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக இன்னும் பல ஆண்டுகளுக்கு இப்படியே இந்தியாவின் திடசங்கற்பத்தைக் குறித்தும் கரிசனையைக் குறித்தும் முயற்சிகளைக் குறித்தும் இந்தியத் தலைவர்கள் சொல்லிக் கொண்டிருக்கத்தான் போகிறார்கள்.

இந்தியத் தலைவர்களும் பிரதானிகளும் இலங்கைக்கு வரும்பொழுதெல்லாம் இனப்பிரச்சினை தொடர்பாகவும் அவர்கள் ஏதாவது கதைக்கத்தான் போகிறார்கள். அதேபோல, இலங்கையின் அரசியற் தலைவர்கள் இந்தியாவுக்குச் செல்லும்வேளையில் எல்லாம் இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பற்றிப் பேசத்தான் போகிறார்கள்.

இதெல்லாம் ஒரு சம்பிரதாய பூர்வமான விளையாட்டாக மாறியுள்ளது என்று இப்போது சிங்கள அதிகார வர்க்கத்தினருக்கும் தெரிந்து விட்டது. ஆனால்,  தமிழர்களில் ஒரு சாரார் இந்தக் கூற்றில் நம்பிக்கை வைத்துக் கொண்டிருக்கவே போகிறார்கள்.

பனிப்போர்க்காலத்தில் நிலவிய உலக ஒழுங்கின் காரணமாக - அன்றைய சர்வதேச அரசியல் நிலைமைகளையிட்டு இந்தியாவின் அணுகுமுறை தொடர்பாக இலங்கைக்கு அச்சங்கள் இருந்தன.

அத்துடன் தமிழர்களின் ஆயுதந்தாங்கிய அரசியற் போராட்டத்துக்கு இந்தியா வழங்கிய ஆதரவையிட்டும் இலங்கைக்கு நெருக்கடிகளும் இருந்தன. அச்சமும் இருந்தது.

ஆனால், பின்னர் - குறிப்பாக 1990 க்குப்பிந்திய நிலைமைகள் முற்று முழுதாகவே மாறின. பின்னர், இந்தியாவானது இலங்கை அரசை – சிங்களத் தரப்பை - அனுசரித்துப் போகும் ஒரு நிலைப்பாட்டுக்கு வந்துள்ளது, வரவேண்டியதாக உள்ளது என்பதை இலங்கை தெளிவாகவே புரிந்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை அது தமிழ்த் தரப்புக்கும் சிங்களத்தரப்பினருக்கும் இடையிலான ஒரு இரட்டை அணுகுமுறையைக் கடைப்பிடிக்க முற்படுகிறது. தமிழர்களுக்கு அரசியல் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று சொல்வதன் மூலம் தமிழ்த்தரப்புக்கான தன்னுடைய ஆதவைத் தெரிவித்துக்கொள்வது.

இதேவேளை, ஐக்கிய இலங்கைக்குள் ஒருமைப்பாட்டைச் சிதைக்காத வகையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட வேண்டும். அத்தகைய தீர்வொன்றுக்கு இந்தியா ஒத்துழைக்கும் என்று சொல்வதன் மூலமாக சிங்களத்தரப்பின் உளநிலையிற் கலவரத்தை உண்டு பண்ணாமல், அதைத் தனக்கு நெருக்கமாக வைத்துக் கொள்வது.

இந்தியாவின் இந்த சமாளிப்புத் தனமான நிலைப்பாட்டைத் தெளிவாகவே சிங்கள அதிகாரத் தரப்புப் புரிந்துள்ளது. எனவேதான், அது ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காணப்படும் என்றும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் ஒரு தோற்றப்பாட்டைத் தொடர்ச்சியாக – ஆனால், வௌ;வேறு விதங்களில் வெளிப்படுத்தி வருகின்றது.

இங்கே இந்தியாவுக்கு ஒரு முக்கிய பிரச்சினை தீர்ந்து விடுகிறது. அதனுடைய  நலன்கள் பாதுகாக்கப்படுகின்றன.

இன்றைய நிலையில் இலங்கை அரசு இந்தியாவை விட்டு வேறு பிராந்தியங்களின் ஈர்ப்பு விசைக்கு உட்பட்டு விடக்கூடாது என்பதே இந்தியாவின் கவலை. இந்தக் கவலை நீங்க வேண்டுமானால், இலங்கை – சிங்களத்தரப்பு – முகஞ்சுழிக்காதவாறு ஒரு அணுகுமுறையையும் நிலைப்பாட்டையும் இந்தியா மேற்கொள்ள வேண்டும்.

ஆகவேதான், சிங்களத்தரப்பின் - இலங்கையின் - விருப்பத்துக்கு மாறாக இலங்கையின் இனப்பிரச்சினை விசயத்தில் தமிழர்களுக்கு – தமிழ் பேசும் மக்களுக்குச் சாதகமான நிலைப்பாட்டை எடுக்க அது விரும்பவில்லை. ஆகையாற்தான் அது ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்று அழுத்தங்களற்ற வகையில் தன்னுடைய அறிவிப்புகளை வெளியிட்டுக்கொண்டிருக்கிறது.

இலங்கையைப் பொறுத்த இந்தியாவின் புரிதல் என்பது, சிங்களத் தரப்பின் முதன்மைப்பாட்டையே கொண்டதாக உள்ளது. அதாவது, இலங்கை என்பது சிங்களவர்களின் தலைமைத்துவத்தைக் கொண்டது, அவர்களுடைய விருப்பத்தையே பிரதானமாகக் கொண்டது என்பதாகும். அதாவது, இந்தியாவின் நலனுக்குத் தமிழர்களை அனுசரிப்பதையும் விடச் சிங்களவரை அனுசரிக்கலாம் என்பதே இந்தியாவின் முடிவு.

இதையே இந்தியாவின் நிலைப்பாடும் நடைமுறையும் அணுகுமுறைகளும் நிரூபிக்கின்றன. இதை மறுத்துரைப்போர் இந்தியாவின் பிற அணுகுமுறைகளைப் பற்றிய ஆதரங்களை முன்வைக்க வேணும்.

ஆகவே, இந்தியாவின் அரசியல் நலன்களுக்காகப் பலியிடப்படும் ஒரு விசயமாகவே இலங்கையின் இனப்பிரச்சினையும் இலங்கைத்தமிழ் பேசும் மக்களின் அரசியல் போராட்டங்களும் உள்ளன என்பது தெளிவாகும்.

இதனுடைய நீட்சி இன்னும் நீண்ட காலத்துக்குத் தொடரக்கூடும். இங்கே நாம் இந்தியாவைக் குறைத்து மதிப்பீடுவதாகவோ, குறை சொல்வதாகவோ இந்தக் குறிப்பை எழுதவில்லை. பதிலாக இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு என்ற அடிப்படையில் அது, அதனுடைய நலன்களைக்குறித்தே அக்கறைப் படும் என்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இதை இங்கே குறிப்பிடுகின்றோம்.

ஆகவே, இந்தியாவின் அறிவிப்புகளும் அணுகுமுறைகளும் சொல்லும்சேதிகளின் பின்னாலுள்ள “சொல்லாத சேதிகள்“ இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது இலங்கையர்களின் சொந்த விசயம் என்பதாகவே உள்ளது.

இதற்கப்பால், அது சிங்களத் தரப்பின் முகக்கோணலை விரும்பவில்லை என்பதாகவும் இருக்கிறது. எனவே, தமிழர்களின் அரசியல் அணுகுமுறைகள் மீள்பரிசீலனைக்கும் அனுபவ மீள்பார்வைக்கும் உரியதாகிறது.

இதை விடுத்து, இந்தியாவைக் குறைசொல்வதாலோ, இழிவு படுத்துவதாலோ, நம்பிக்கை கொள்வதாலோ விசுவாசமாக இருப்பதாலோ எதுவும் நடந்து விடப்போவதில்லை. – அரசியல் அநாதைகளாகுவதைத் தவிர.

00


உபாயமும் அதிகாரமும் -02

Monday, 9 January 2012














இரண்டாம் உலகப் போரின்போது யப்பானின் மீது அணுக்குண்டை வீசித் தாக்கியது அமெரிக்கா. இதற்குக் காரணம், அப்போது யப்பான் ஜேர்மனியோடு சேர்ந்து போரில் ஈடுபட்டதே. இதை அமெரிக்கா குற்றமாகக் கருதியது.

இதற்கான தண்டனையாகவே யப்பானின் மீதான அமெரிக்கத் தாக்குதல்.

இந்தத் தாக்குதலால் யப்பானின் இரண்டு முக்கிய நகரங்களான ஹிரோஸிமாவும் நகஸாகியும் அழிந்தன. இந்த அணுக்குண்டின் பாதிப்பை இப்போதும் இந்த நகரங்களில் காணலாம்.

யுத்தம் முடிந்து விட்டது. காலமும் மாறிவிட்டது. அரசியற் போக்குகளும் மாறிவிட்டன. இப்போது யப்பானும் அமெரிக்காவும் நண்பர்கள். பல விசயங்களில் கூட்டாளிகள். இது எப்படி நிகழ்ந்தது?

அதேவேளை, இன்னும் யப்பானில் அமெரிக்காவின் கடற்படைத்தளங்களும் விமானப்படைத்தளங்களும் உள்ளன. அதற்காக அமெரிக்காவின் அடிமையாக – கீழ்ப்படிந்திருக்கவில்லை யப்பான்.

இலங்கையின் சமாதானப் பேச்சுகளின்போது அடிக்கடி இலங்கைக்கு விஜயம் செய்திருந்த தூதுவர்களில் முக்கியமானவர் யஸ_ஷி அகாஸி. இவர் வன்னிக்கும் வந்து சென்றார். வந்தவர் வன்னியில் பத்திரிகையாளர்களை அடிக்கடி சந்திப்பார். அப்போது வன்னியில் அகாஸி சொன்னவை முக்கியமானவை. குறிப்பாக, அவை பெரும்பாலும் அரசியல் உபாயங்கள். இலங்கைத் தமிழர்கள் தங்கள் கவனத்திற் கொள்ள வேண்டிய உபாயங்கள்.

00
அகாஸி சொன்னவை:-

“உலகத்திலேயே அதிக இழப்பையும் அதிகமான கொடுமையையும் சந்தித்த மக்கள் நாங்கள்(யப்பானியர்கள்). இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா நடத்திய தாக்குதலின் விளைவுகளை இன்னும் நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

நாங்கள் சந்தித்த இழப்பின் அளவுக்கு இந்த உலகத்தில் வேறு யாரும் அதிக இழப்புகளையோ கொடுமையையோ சந்திக்கவில்லை. ஆனால், நாங்கள் இந்தத் தாக்குதலை நடத்திய அமெரிக்காவுடன் இப்பொழுது நண்பர்களாக இருக்கிறோம்.

எதிரியுடன், தாக்குதல் நடத்தியவர்களுடன், அழிவுகளைத் தந்தவர்களுடன், மன்னிக்கவே முடியாதவர்களுடன் எப்படி நட்புக் கொண்டாட முடியும்? என்று நீங்கள் கேட்கலாம். எங்களிடமும் இந்தக் கேள்வி இருக்கிறது.
இந்தத் தாக்குதலுக்குப் பின்னர் - யப்பானின் எதிர்காலம் குறித்துச் சிந்திக்கும் போது, புதிய உலக ஒழுங்கின்படி நாங்கள் அமெரிக்காவுடன் நட்புக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது.

ஆனால், அதை அங்கீகரிப்பதற்கு யப்பானிய மக்கள் தயாரில்லாத நிலையிலேயே இருந்தனர். காரணம், அந்த அளவுக்கு யப்பானியர்களின் மனதில் எதிர்ப்புணர்வை ஏற்படுத்தியிருந்தது. மனிதாபிமானமற்ற அந்தத் தாக்குதலை யாரும் மன்னிக்கத் தயாராக இல்லை. அப்படி அமெரிக்காவுடன் நட்பு வைத்துக் கொள்வதென்பது யப்பானை அடிமை நிலைக்கே கொண்டு செல்வதாக இருக்கும் என பெரும்பாலான யப்பானியர்கள் கருதினார்கள். அவர்கள் அப்படிக் கருதியதில் தவறும் இல்லை.

அந்த அளவுக்கு அமெரிக்காவின் மீது வெறுப்பும் நம்பிக்கையின்மையும் யப்பானிய மக்களுக்கிருந்தது. ஆனால், நாங்கள் எதிர்கால யப்பானைப் பற்றியே சிந்தித்தோம். எதிர்கால யப்பானைப் பற்றிச் சிந்திப்பதாக இருந்தால், விரும்பியோ விரும்பாமலோ நாங்கள் எங்கள் கசப்பான கடந்த காலத்தை மறக்க வேண்டியிருந்தது.

கடந்த காலத்தைப் பற்றிச் சிந்திப்பதாக இருந்தால், எதிர்காலத்தைச் சிறப்பாக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டோம். ஆகவே எதிர்கால யப்பானுக்காக கசப்பான – மறக்கவே முடியாத – மன்னிக்கவே முடியாத கடந்த காலத்தை மறக்கத்தான் வேண்டும் என்று யப்பானிய மக்களை உணரவைத்தோம். இது இலகுவான காரியமாக இருக்கவில்லை.

ஏனெனில், அந்த அளவுக்கு ஒவ்வொரு யப்பானியரும் அமெரிக்காவினால், வஞ்சிக்கப்பட்டிருந்தனர். எந்தத் தலைமுறையிலும் மன்னிக்கவோ மறக்கவோ முடியாத காயமாக இருந்த நாகஸாகி, ஹிரோஸிமா தாக்குதல்களை எவரும் இலகுவாக மறந்து விடமுடியாதிருந்தனர்.
ஆனாலும் நாங்கள் யதார்த்தத்தைப் பற்றி, எங்களுக்கிருந்த அவசியத்தைப் பற்றிச் சிந்தித்தோம். எனவே எப்படியோ எங்கள் மக்களைத் தயார்ப்படுத்தி அமெரிக்காவுடன் நட்புக்குக் கரம் நீட்டினோம்.

அதற்காக நாங்கள் (யப்பானியர்கள்) அமெரிக்காவுக்கு விசுவாசிகளாகவோ அடங்கியவர்களாகவோ மாறிவிடவில்லை. யப்பானியர்களின் தனித்துவத்தையும் அவர்களுடைய அடையாளத்தையும் அவர்களுடைய முதன்மையையும் இன்று உலகம் வியப்போடு அங்கீகரித்துள்ளது. மிகக் குறுகிய காலத்திலேயே யப்பான் வளர்ச்சியடைந்து உலகத்தின் முதன்மைப் பட்டியலில் தன்னை இணைத்துக் கொண்டது.

இப்பொழுதும் அமெரிக்கத் தளங்கள் யப்பானில் இருக்கின்றன. இதை நாங்கள் அரசியல் ரீதியாக சுமையற்ற முறையில் மாற்றி வைத்துள்ளோம்.
யப்பான் இன்று சுயாதீனமான நாடாக, முதன்மை நாடுகளில் ஓரங்கமாக, உங்களுடைய பிரச்சினைகளைத் தீர்வுக் கொண்டுவர உதவும் நாடாக, இலங்கைக்கும் உதவும் நாடாக மாறியிருக்கிறது.

நான் இலங்கைக்கு ஒரு நண்பனாக, உதவும் ஆளாக, யப்பானியர்களின் பாடங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒருவராக, இந்த உலகத்தில் நன்மைகளையும் அமைதியையும் விரும்புகின்ற யப்பானியராக இங்கே வந்திருக்கிறேன்.

யப்பானியர்களின் அனுபவங்கள் உங்களுக்கும் பாடங்களாக, வழிகாட்டிகளாக இருக்கட்டும்.

உங்களைப் பொறுத்தவரை (இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை) யில் உங்களுடைய கடந்த காலத் துயரங்கள் மறக்க முடியாதவை. ஆனால், உங்களின் எதிர்காலத்துக்காக – எதிர்காலத்தின் நன்மைகளுக்காக நீங்கள் உங்கள் கடந்த காலத்தை மன்னிக்கவும் மறக்கவுமே வேண்டும்.

கடந்த காலத்தையும் விட எதிர்காலமே எப்போதும் பெறுமதியானது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எதிர்காலம் என்பது உங்கள் இளைய சகோதரர்களுக்கும் பிள்ளைகளுக்கும் உரியது. அவர்களுக்கு நீங்கள் எதைக் கொடுக்கப் போகிறீர்கள். கடந்த காலத்தின் கறைகளையும் தேங்கிய கண்ணீர்த்துளிகளையுமா?

நிச்சயமாக அப்படி வேண்டாம். அவர்களுக்கு நிகரற்ற மகிழ்ச்சியான காலமொன்றைப் பரிசளியுங்கள். அந்தப் பரிசு உங்கள் திறமையாலும் சிந்தனையாலும் மனதாலுமே சாத்தியமாகும்.

இதற்கு ஊடகவியலாளர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. நீங்கள் மக்களுக்கு நன்மைகளை நோக்கிச் சிந்திக்கக் கற்றுக் கொடுங்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியான – சுமைகளும் அபாயங்களும் இல்லாத ஒரு எதிர்காலத்தைப் பரிசாகக் கொடுத்தால் அதுவே போதும்..”

இப்படி அகாஸி சொன்னபோது, இதை அப்போது பலவிதமாக பலரும் மொழிபெயர்த்தார்கள். ‘அகாஸி ஒரு தந்திரப் பொறியை வைக்கிறார்’ என்றனர் சிலர்.

‘தமிழர்களைச் சிங்களவர்களிடம் சரணடையும்படி தந்திரமாகச் சொல்கிறார் அகாஸி’ எனச் சொன்னார்கள் வேறு சிலர்.

‘இது அடிமைச் சாசனமொன்றுக்கான புதிய விளக்கம். இதை மிக அழகாகச் சொல்லி ஏமாற்றுகிறார்’ என்று வேறு சிலர் கூறினர்.

‘இல்லை, அகாஸியின் கூற்றை நாங்கள் முழுதாகப் புறக்கணிக்க முடியாது. இவரைப் பரிசீலிக்கலாம்’ என்றனர் வேறு சிலர்.

இப்படியே பலவிதமான கருத்துகள் அகாஸியின் கூற்றுத் தொடர்பாக முன்வைக்கப்பட்டன. ஆனால், அகாஸி சொன்னதைப் போலவோ அவர் எதிர்பார்த்ததைப் போலவோ எதுவும் நடந்து விடவில்லை.
மாறாக பகை முற்றிப் பாதகமாகவே எல்லாம் முடிந்தன.

என்னைப் பொறுத்தவரையில் அகாஸி சொன்னவை ஒரு உபாயத்தின் பாற்பட்டவை. பெரும் அழிவையும் இழப்பையும் சந்தித்தவர்கள், அதிலிருந்து மீண்ட – எதிர்த்தரப்பை நட்புக் கொள்ள வைத்த, நட்புடன் நடப்பதற்கு இணங்க வைத்த, யப்பானைத் தனிமைப்படுத்த முடியாத அளவுக்கு புத்திபூர்வமாக்கிய அணுகுமுறையை அவர் சொன்னார்.

அகாஸி பற்றி ஏகப்பட்ட விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், இன்றைய உலகத்தில் அந்தச் சிறிய தோற்றமுடைய முதிய மனிதர் மிகச் சிறந்த இராசதந்திரியாகவே எனக்குத் தெரிகிறார்.

இந்த இடத்தில் பொருத்தம் கருதி வன்னியில் அப்போது நடந்த இன்னொரு நிகழ்ச்சியையும் சொல்ல வேணும்.

விடுதலைப் புலிகளிடன் நடந்த சந்திப்புகளின் போது அகாஸி பல விசயங்களைப் புலிகளிடமும் சொல்லியிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் விடுதலைப் புலிகளின் அரசியற்றுறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப.தமிழ்ச்செல்வன் அகாஸியிடம் கேட்டார், “விடுதலைப் புலிகளை யப்பான் அங்கீகரிக்க வேண்டும். அதுவே தமிழ் மக்களுடைய விருப்பமும் தலைவர் பிரபாகரனின் விருப்பமும்” என்று.

இதற்குப் பதிலளித்த அகாஸி, “யப்பான் என்பது ஒரு பெரிய கப்பல். அதைச் சட்டெனத் திருப்பிவிட முடியாது” என்றார்.

இதன் அர்த்தம் பலவாக இருக்கலாம். ஆனால், முக்கியமாக யப்பான் என்ற நாட்டின் தீர்மானத்தையும் வெளியுறவுக் கொள்கையையும் சட்டென மாற்றிக் கொண்டுவிட முடியாது. யப்பான் பல நாடுகளுடன் தொடர்புகளையும் உறவுகளையும் கொண்டுள்ள நாடென்பதால், அவற்றைப் பாதிப்படையாத வகையில் பேணிக்கொண்டு, புலிகளை அங்கீகரிப்பதைப் பற்றிச் சிந்திக்கலாம். ஆனால், அதற்குக் கால அவகாசமும் கொஞ்சக்கால நட்புறவுப் பயணமும் (நம்பிக்கையும்) தேவை என்பதாக இருந்தது.

அகாஸியின் இந்தப் பதிலைத் தமிழ்ச்செல்வன் திரு. பிரபாகரனிடம் சொன்னார். இதைக் கேட்ட பிரபாகரன், சற்றுக் கோபத்துடன் அகாஸியிடம் சொல்லும்படி சொன்ன பதில்:-

“அப்படியென்றால், அந்தக் (யப்பான் என்ற) கப்பலை இந்தத் துறைமுகத்தில் (புலிகளிடம் - தமிழ்ப்பகுதியில்) கட்டமுடியாது” என்று.

விளைவு? - இப்போது எங்களுக்குத் துறைமுகமே இல்லை.

பின்னர் அகாஸி 2011 இல் மீண்டும் கிளிநொச்சிக்கு வந்திருந்தார். அதுவும் புலிகள் அவரை வரவேற்ற அதே இடத்துக்கு அவர் வந்திருந்தார்.

அப்போது அவரைச் சந்தித்தேன். அவர் முன்னர் பேசிய எதையும் பேசவில்லை.

என்னை அடையாளங்கண்டு சிரித்தார். ஆனால், அவருடைய சிரிப்பில் மெல்லிய துக்கம் படிந்திருந்ததைக் கண்டேன்.

00

சொல்லும் பொருளும் மனமும் அருள்வீர்!















கடந்த 2011 ஆம் ஆண்டின் இறுதி வாரத்தில் மேலும் ஒரு சிறுவர் இல்லம் வன்னியில் - முல்லைத்தீவில் - திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய ஆண்டின் தொடக்கத்தில் - இந்த வாரம் - கிளிநொச்சியில் மேலும் ஒரு முதியோர் இல்லம் புதிதாகத் திறக்கப்படுகிறது.

இது எதனைக் காட்டுகிறது? சமூகத்தில் ஆதரவற்றோரின் நிலை அதிகரித்துள்ளது. அவர்களைப்பராமரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களைப் பராமரிக்கும் முயற்சிகள், அந்த அரும்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதைத்தானே!

வன்னியில் நடந்த போர் அங்கே, ஆதரவற்றோரையும் உதவி தேவைப்படுவோரையும் பெருக்கியுள்ளது. ஆனால், இந்தத் தேவைகளுக்கான உதவிகளைச் செய்வோரை அது பெருக்கியுள்ளதா என்றால், சற்று வருத்தத்துடன்தான் இதற்கான பதிலைச் சொல்ல வேண்டியுள்ளது.
உதவிகளும் ஆதரவும் தேவைப்படும் அளவுக்கு அவற்றைச் செய்வோரின் தொகை குறைவு.

ஆதரவு தேவைப்படுவோருக்கு உதவுவதே சிறந்த பணி. தொண்டிற் சிறந்தது, தேவைப்படுவோருக்குத் தேவைப்படும் காலத்தில் செய்யும் பணியே!

எனவேதான் ‘காலத்திற் செய்யும் பணி, ஞாலத்திற் சிறந்தது’ என்று சொல்வார்கள். இடமறிந்து, நிலையறிந்து செய்யும் உதவியே பேருதவியாகும்.
போர் எப்போதும் வேர்களை அறுத்தெறியும். சிதைவுகளையும் அழிவுகளையும் ஏற்படுத்தும். அதிலும் நவீன போர்கள் மிக அதிகமான சேதாரங்களை ஏற்படுத்துவன. நவீன போர்களில் அதிக சேதங்களையும் அழிவுகளையும் சந்திப்பவர்கள் பொதுமக்களே.

இவர்களே, பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள். போர்ப்பயிற்சியோ, பாதுகாப்புக்கான ஆயுதங்களோ இல்லாத நிலையில் இருப்பவர்களும் இவர்களே.

மட்டுமல்ல, நவீன போரானது, வெடிபொருட்களை ஆதாரப் பொருளாகக் கொண்டிருப்பதால், அதன் தாக்கம் போர்க்களத்துக்கு அப்பாலும் ஏற்படுகிறது. இதைவிடப் பொது மக்களை மையப்படுத்தி, அவர்களை இலக்கு வைத்துத் தாக்குதலை நடத்தும் போர் முறையில் மக்களுக்கே அதிக சேதமேற்படுகிறது.
முதலாம், இரண்டாம் உலகப்போர்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் அந்தப் போர் நடந்த நாடுகளில் மிக உச்ச நிலையில் இருந்தன. மனித வரலாறு கண்டிராத அளவுக்கிருந்த அந்தத் தாக்கங்களினால், லட்சக்கணக்கான சனங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இவற்றை எப்படி நிவர்த்தி செய்வது என்றே தெரியாத நிலையில் திணறின அரசுகள். குறிப்பாகப் போரில் ஈடுபட்ட அரசுகள். மேலும் சமூக ஆர்வலர்களுக்கும் இந்த நிலை ஒரு சவாலாகவே இருந்தது.

இந்த நிலையானது மனித குலத்துக்கே பெரும் சவாலை ஏற்படுத்தியது.

பாதிக்கப்பட்டோரை அந்தப் பாதிப்புகளிலிருந்து மீட்டெடுப்பதற்காகச் சிந்திக்கவும் செயற்படவும் வேண்டிய அவசியமேற்பட்டது மனித குலத்திற்கு.
இதன் விளைவுகளாகவே, பல்வேறுபட்ட தொண்டு அமைப்புகள் தோற்றம்பெற்றன. மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வதற்காக அன்று தோற்றம் பெற்ற அமைப்புகளே, இன்று உலகெங்கும் மனித நேயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இலங்கையில் போர் நடந்த வேளையிலும் இப்போதும் தொண்டாற்றிக் கொண்டிருப்பவையும் இந்த அமைப்புகள்தான்.

(வெள்ளைக்காரன் - அந்நியநாட்டுக்காரன் எல்லாம் உதவுகிறான், ஆனால், எங்கட சொந்த உறவுகள்மட்டும் ஏதேதோ காரணங்களைச் சொல்லிக் காலத்தைக் கடத்தித் தங்களின் கைகளை இறுகப் பொத்திப் பிடிக்கின்றன. மனம் விரியாததே இதுக்கெல்லாம் காரணம். விடுதலையை உண்மையாக இவர்கள் விரும்பியிருந்தால், இவர்களிடம் நிச்சயமாக மனவிரிவு ஏற்பட்டிருக்கும். பாசாங்கு செய்பவர்களிடம் எப்படி மனவிரிவு ஏற்படும்?’ என்று கேட்கின்றார் வன்னியில் ஒரு முதியவர்.)

போரின் பாதிப்புகளுக்கு அப்பால், இயற்கை அனர்த்தம் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளைச் சந்திக்கும் மக்களைப் பராமரிப்பதிலும் இந்த அமைப்புகளின் பணியும் பங்களிப்பும் உள்ளது. அதாவது, அனர்த்தமோ இடரோ எந்த வகையில் வந்தாலும் அவற்றாற் பாதிக்கப்படும் சனங்களைப் பராமரிப்பது, பாதுகாக்க முற்படுவது, ஆதரிப்பது, இத்தகைய பணிகளினூடாக பாதிக்கப்பட்டோரின் உளநிலையைச் சீராக்கி அவர்களை இயல்பு வாழ்வில் மேம்பட வைப்பதே இந்தத் தொண்டு அமைப்புகளின் பணியாகும்.

இத்தகைய பணியை எந்தச் சமூகம் முன்னின்று செய்ய முனைகின்றதோ அதுவே பண்பாட்டிற் சிறந்த சமூகமாகும். மனிதாபிமானமும் மனித நேயமுமே சிறந்த ஒரு பண்பாட்டின் அடிப்படைகளாகும். இவை வரண்டநிலையில் இருக்கும் எந்தச் சமூகமும் தனது பண்பாட்டை இழந்ததாகவே மாறும். இதற்குப் பிறகு, அந்தச் சமூகம் பண்பாட்டுப் பெருமைகளைப் பேசுவதால் பயனே இல்லை.

ஆனால், போரை உச்சநிலையில் நடத்திய, அதை ஆதரித்த ஈழத்தமிழ்ச் சமூகமும் இலங்கை அரசும் போரினாற் பாதிக்கப்பட்ட சனங்களைப் பராமரிக்கும் விதம் மிகக் கவலைக்கும் கண்டனத்துக்கும் உரியதாகவே இருக்கிறது. அதிலும் போரினால் அநாதரவாக்கப்பட்ட மக்களின் நிலையைப் பற்றிய கரிசனை இந்தத் தரப்புகளுக்குப் போதாது என்றே கூற வேண்டும். (பண்பாட்டிலும் வரலாற்றிலும் தாம் சிறந்த சமூகத்தினர் என்று இவர்கள் கூறிக்கொண்டிருப்பது எதன் அடிப்படையில்?).

பிரதானப்படுத்தப்பட்டிருக்க வேண்டிய இந்தப் பணி பாராமுகமாக்கப்பட்டுள்ளது. அல்லது சில சில்லறைத் தரப்பினர் இந்தப் பாதிப்புகளையும் பாதிக்கப்பட்டோரையும் வைத்து அரசியல் நடத்துகிறார்கள். அல்லது வியாபாரம் செய்கின்றனர். இவர்களிற் பெரும்பாலானோர் புலம்பெயர் நாடுகளில் இருக்கும் அரசியற் செயற்பாட்டாளர்களும் சில இணையத்தளத்தினருமே!

இதனால், பாதிக்கப்பட்டோர் மனிதாபிமான எல்லைகளுக்கு அப்பால், நீதிக்கும் தர்மத்துக்கும் அப்பால், மிக மோசமான முறையில் விற்பனைப் பண்டங்களாகவும் காட்சிப் பொருட்களாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

இத்தகையதோர் அவலப் பின்னணியில், இந்த அவலநிலைக்கு மாறாகவும் இந்த அவலப்பரப்பிலிருந்து பாதிக்கப்பட்டோரை மீட்டுப் பராமரிப்பதாகவும் சில காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அத்தி பூத்தாற்போல என்பார்களே, அதைப்போல அருமையாகச் சில காரியங்கள்.

குறிப்பாக யாழ்ப்பாணத்திலுள்ள சில முக்கியமான – முன்னணிப் பாடசாலைகள், பாதிப்புக்குள்ளான சிறார்களை, போருக்குப் பின்னரான சூழலில் பொறுப்பேற்று அவர்களுடைய கல்வியை வழங்கி வருகின்றன. சென் ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, கொக்குவில் இந்துக்கல்லூரி போன்ற இதில் முன்னுதாரணமானவை.

இதைப்போல அங்குள்ள சில சிறார்  இல்லங்களும் குறிப்பிட்ட தொகையிலான ஆதரவற்ற சிறுவர்களைப் பொறுப்பேற்று அவர்களுடைய எதிர்காலத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.

ஆனால், இந்தத் தொகை மிகக் குறைவானவே. பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் - உதவி தேவைப்படுவோரின் தொகையுடன் ஒப்பிடும்போது இவ்வாறு பொறுப்பெடுக்கப்பட்டோரின் அளவு மிகமிகக் குறைவே.

வன்னியில் - கிளிநொச்சி மாவட்டத்தில் ‘மகா தேவ ஆச்சிரமம்’ மற்றும் ‘குருகுலம்’ போன்றவற்றில் சுமார் முன்னூறுக்கும் அதிகமான பிள்ளைகள் பராமரிக்கப்படுகிறார்கள். இந்த இல்லங்களில் ஆண்களும் பெண்களும் தனித்தனியாகவே பராமரிக்கப்படுகின்றனர். இந்த இல்லங்களுக்கான உதவிகளைப் பலர் முன்வந்து செய்வது குறிப்பிடத்தக்கது.

தவிர, முல்லைத்தீவு மாவட்டத்தில் - முத்தையன் கட்டில் இயங்கும் அன்பு இல்லத்தில் (புனித பூமி இல்லத்தில்) சுமார் அறுபது வரையான சிறார்கள் பொறுப்பேற்கப்பட்டுப் பராமரிக்கப்படுகிறார்கள். இந்தத் தொகை வரவர அதிகரித்து வருவதாக அங்குள்ள நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த இல்லத்துக்கான செலவீனங்களைப் பெருமளவிலும் புலம்பெயர் நாடுகளிலுள்ள உதவும் மனப்பாங்குடையோரே செய்து வருகின்றனர். இவர்கள் எந்த வகையான அரசியலையும் விட பாதிக்கப்பட்ட மக்களுக்கு – அநாதரவான சிறார்களுக்கு உதவுவதையே தங்களுடைய பிரதான அக்கறையாகக் கொண்டிருக்கின்றனர். சிலர் நேரிலேயே இந்த இல்லத்துக்கு வந்து நிலைமையைப் பார்த்து தங்களின் பங்களிப்பு எல்லையை விரிவாக்கம் செய்கின்றனர். அத்துடன், நிலைமையை நேரிற் பார்த்துச் செல்வதால், இவர்கள் இன்னும் பலரையும் இந்த இல்லத்துக்கான பங்களிப்பாளர்களாகவும் ஆக்குகின்றனர்.

‘முதலில் சொந்த உறவுகளுக்கு உதவுவோம். அவர்களைப் பராமரிப்போம். சிதைவு நிலையில் உள்ள சமூகத்தை நிலைப்படுத்துவோம். மீள் நிலைப்படுத்தப்படும் ஒரு சமூகத்தினாலேயே அதனுடைய எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும்.

இதற்கு ஆதரவும் வழிகாட்டலும் தேவை. முக்கியமாக உணவும் கல்வியும் அவசியமானவை. இதைச் செய்வோம்.  இதற்கு உதவுவோம்’ என்பதாக இருக்கிறது இவர்களுடைய நோக்கமும் சிந்தனையும் அபிப்பிராயமும்.
‘இந்த அடிப்படையில் உதவிகள் கிட்டினால், இளைய தலைமுறையை நல்லமுறையில் - சிதைவின்றி ஆற்றுப்படுத்தி வளர்த்தெடுக்க முடியும் என்று சொல்கிறார் அன்பு இல்லத்தின் நிர்வாகி.

‘முக்கியமாக கல்வியை இவர்களுக்கு ஊட்ட வேண்டும். அதற்கு ஏற்றவாறு இவர்கள் கல்வி கற்பதற்கான சூழல் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். வன்னியில் கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளில் கற்கின்ற சாதாரண மாணவர்கள் கூட ஒழுங்காகப் பாடசாலைகளுக்குச் செல்வதில்லை. அதற்கான வீட்டுச்சூழலும் இவர்களுக்கில்லை.

மேலும், இங்கே போதிய ஆசிரிய வளமும் இல்லை. இந்த நிலையில் இந்தப் பகுதிச் சிறார்கள் மிக மோசமான எதிர்காலத்தையே தங்கள் வாழ்வில் சந்திக்கும் அபாயமுண்டு. ஆகவே, இதைக் கவனத்திற் கொண்டே நாம் இந்த இளைய தலைமுறையைப் பொறுப்பெடுத்துப் பராமரிக்கும் பணியைச் செய்யத்தீர்மானித்தோம்’ என்கிறார் மேலும் இந்த நிர்வாகி.

‘நடந்த போரினால், உழைப்பாளர்களையும் தலைமை உறுப்பினர்களையும் இழந்த நிலையிலேயே வன்னியில் பெரும்பாலான குடும்பங்கள் இருக்கின்றன. இந்தக் குடும்பங்களினால், தங்களுடைய இளைய தலைமுறையைச் சீராகப் பராமரிக்க முடியாது.

மட்டுமல்ல, இன்னும் இந்தப் பகுதிகளுக்கு நல்ல வீதிகள் இல்லை. மின்சாரம் இல்லை. தொடர்பாடல் வசதிகள் இல்லை. இந்த மாதிரியான பற்றாக்குறைகள் எல்லாம் இளைய தலைமுறையையே அதிகமாகப் பாதிக்கிறது. ஏனெனில் இவர்களே எதிர்காலத்தை எதிர்கொள்ள வேண்டியவர்கள்.

தங்களுடைய எதிர்காலத்துக்கான தயாரிப்புகளை, ஆற்றல் மேம்பாடுகளை இவர்களுக்கு இப்போதே செய்யவில்லை என்றால், இந்தத் தலைமுறையினர் நிச்சயமாக நாளை சீரழிந்து போகும் நிலையே ஏற்படும்.

இவர்களுக்கான பாதுகாப்புத் தொடக்கம், கல்வி மற்றும் இதர அடிப்படைத் தேவைகளை உருவாக்கிக் கொடுப்பதே இன்றைய முக்கியமான மனிதாபிமானப் பணியாகும். அதுவே மிகச் சிறந்த சேவையாகவும் அமையும்.

இதைச் செய்வதே பாதிக்கப்பட்ட சமூகத்துக்கான அரசியற் செயற்பாடாகவும் இருக்கும்’ என வன்னியில் உள்ள மூத்த ஆசியரியர்கள் தெரிவிக்கின்றனர்.
‘போருக்காகவும் விடுதலைப் போராட்டத்துக்காகவும் தம்மை அர்ப்பணித்த ஒரு பிரதேசத்தின் மக்கள் தங்கள் சக்திக்கு மீறி, அளவுக்கதிகமான விலைகளைக் கொடுத்ததன் விளைவே இந்த அநாதரவான நிலைக்குக் காரணம்’ என்று துக்கப்படுகிறார் வன்னியிலுள்ள ஒரு சமூகச் செயற்பாட்டாளர்.

இத்தகைய ஒரு நிலையில், அன்பு இல்லைத்தைப்போல, பெண் சிறார்களுக்கான இன்னொரு இல்லத்தை – ‘பாரதி இல்லம்’ என்ற பெயரில் கடந்த வாரம் ஆரம்பித்திருக்கிறார்கள் அன்பு இல்லத்தைச் சேர்ந்த நிர்வாகத்தினர். இந்த இரண்டு இல்லங்களையும் வடக்குக் கிழக்குப் புனர்வாழ்வு அபிவிருத்தி நிறுவனமே மையமாக நின்று பராமரிக்கிறது.
இந்தப் பாரதி இல்லம் முன்னர் - போர்க்காலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளியவளையில் இயங்கியது. பின்னர் செயலிழந்திருந்தது. இப்பொழுது இந்த இல்லம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், முன்னரை விட இப்போதே இந்த இல்லத்தின் தேவை அதிகமாக உள்ளது. இந்த இல்லம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று சொல்வதையும் விட, இளைய தலைமுறைப் பிள்ளைகளுக்கான ஆதரிப்பு மையங்களின் தேவைகள் அதிகமாக உள்ளன என்பதே புரிதலுக்கானது.

முதலாம் இரண்டாம் உலகப் போர்களுக்குப் பின்னர், அதிகமான தொண்டு நிறுவனங்களும் தொண்டுப் பணியாளர்களும் மனிதாபிமான அடிப்படையில் அந்த நாடுகளில் பெருகியதைப் போல ஒரு நிலை ஈழத்தமிழ்ச் சமூகத்திலும் உருவாகியிருக்க வேணும்.

ஆனால், துரதிரஷ்டவசமாக அப்படியான பொது அமைப்புகள் எதுவும் மனிதாபிமான அடிப்படையில் உருவாகியதாக இல்லை. உருவாகிய அமைப்புகளைப் பற்றிய குறைகளைப் பேசுவதிலும் அவற்றைப் பற்றிய விமர்சனங்களை முன்வைப்பதிலும் இருக்கின்ற ஆர்வம் பாதிப்புக்குள்ளாகிய மக்களின் நலனில் இருக்கவில்லை.
இது கண்டிக்கப்பட வேண்டி ஒரு செயலாகும். திருத்தப்படவேண்டி ஒரு முக்கிய குறைபாடாகும்.

வீடு எரியும்போது அதை அணைப்பதற்குப் பதிலாக அது எரிவதைப் பற்றிய விமர்சனங்களைச் செய்வதும், அது எரிவதற்கான காரணங்களைப் பற்றி ஆராய்வதும் குற்றஞ்சாட்டுவதும் பொருத்தமானதல்ல.

வேண்டுமானால், வீட்டைப் பாதுகாத்துக் கொண்டு விமர்சனங்களை முன்வைக்கலாம். அப்போது வீடும் பாதுகாக்கப்பட்டிருக்கும். அதன் மீதான விமர்சனத்தை வைப்பதற்கான தகுதியும் கிடைத்து விடும்.

இத்தகைய ஒரு புரிதல் நிலையே இன்று தமிழ்ச் சூழலுக்கு அவசியமாக உள்ளது. இதுவே இன்றைய அவசியமான அரசியற் பணியாகவும் இருக்கிறது.
இந்த இளைய சமூகத்தினரே நாளைய பிரஜைகளாக வளரப் போகிறார்கள். இன்று இவர்களை யாரும் கவனிக்க வில்லை என்றால், நாளை இவர்கள் சீரழிந்த நிலையில் காணப்படுவர். அல்லது இன்றைய நிலையில் - உதவி தேவைப்படும் சந்தர்ப்பத்தில் அந்த உதவியைச் செய்யாததையிட்ட தரப்பினர் மீதான வன்மத்தோடே இவர்கள் வளருவர்.

இது எதிர்காலத்தில் வன்முறைச் சமூகமொன்றை நாம் எதிர்கொள்வதற்கான அடிப்படையையே ஏற்படுத்தும்.

ஆகவே, ‘காலத்திற் செய்யப்படும் உதவி, சிறிதெனினும் ஞாலனத்தால் மானப் பெரிது’ என்ற வள்ளுவரின் அறவாக்கினை, அரசியல் வாக்கினை, மனிதாபிமான வாக்கினை மனங்கொள்ளவேண்டும் நாம்.

வளரும் பயிர்களுக்கு நீர்வார்ப்பது பயிரை வளர்ப்பது மட்டுல்ல, சமூகத்துக்கான விளைச்சலைக் காண்பதற்கான ஒரு அருஞ்செயலாகுமல்லவா! அதுதான் அறிவியற் செயற்பாடுமாகும்.

ஒரு வகையில் இதுவும் நமது அரசியற் பணிதான். இன்னொரு வகையில் இது அறப்பணி. மனிதாபிமானப்பணி. உரிமையான பணி. இதையெல்லாம் விட்டு விட்டு போலித்தனமாகப் தேசியப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசிக் கவனத்தைத் திசை திருப்புவது என்பது, உண்மை நிலைமையை மறைக்கும் தந்திரோபாயமாகவே எதிர்காலத்திற் காணப்படும்.

பொய்களின் விளைச்சல்களும் தவறுகளின் பெருக்கங்களும் எப்போதும் பின்னடைவுகளையும் உட்பிளவுகளையுமே உருவாக்கும்.

ஆகவே இப்போது நாம் தவறுகளைத் திருத்திக் கொண்டு. காலப்பணிகளைச் செய்வோம். இல்லையெனில் இந்தத் தவறை வரலாறு மன்னிக்காது.

00

நோக்கங்கள் சிதையும் குடியேற்றங்கள்

Sunday, 8 January 2012















இலங்கையில் அரசியற் பிரச்சினைகளில் முக்கியமானது, குடியேற்றத்திட்டங்கள் தொடர்பானவை. பிரச்சினைகளின் உருவாக்கத்திலும் குடியேற்றங்கள் காரணமாக இருந்திருக்கின்றன. இப்போது பிரச்சினைகளைத் தீர்ப்பதைக் குறித்துப் பேசும்போதும் குடியேற்றத்திட்டங்கள் காரணமாக இருக்கின்றன.

ஆகவே, குடியேற்றங்கள் என்றாலே ஏதோ ஒரு வகையில் பிரச்சினைதான் என்ற மனப்பதிவே எல்லோரிடமும் உள்ளது.

ஆனால், மேற்சொன்ன குடியேற்றத்திட்டங்கள் திட்டமிடப்பட்ட – அரசியல் உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட – சிங்களக் குடியேற்றங்கள்.
இதைவிட இன்னொரு வகையான குடியேற்றங்கள் வடக்கிலே நடந்துள்ளன. அந்தக் குடியேற்றங்களின் கதையும் நிலையும் வேறு.

00

வடக்கிலே - வன்னிப் பிரதேசத்திலே - கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த குடியேற்றத்திட்டங்களுக்கு மூன்று பிரதான காரணங்களைச் சொல்வார்கள்.

1. யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட காணியில்லாப் பிரச்சினைக்கும் தொழில் வாய்ப்புப் பிரச்சினைக்கும் ஒரு தீர்வாக வன்னிப் பிரதேசத்தில் குடியேற்றத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. (படித்த வாலிபர் திட்டம், மத்திய வகுப்புத்திட்டம், படித்த மகளிர் திட்டம், கமக்காரர் திட்டம் என்று இந்தத் திட்டங்களுக்கான பெயர்களே சூட்டப்பட்டுத்தான் இந்தக் குடியேற்றங்கள் செய்யப்பட்டன. இந்த அடிப்படைகளில்தான் காணிப் பகிர்வும் நடந்தது).

2. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திட்டங்கள் வன்னிப்பகுதியில் ஏற்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான முன்னேற்பாடாக இந்தக் குடியேற்றத்திட்டங்கள் செய்யப்பட்டன.

3. விவசாய உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும் வேலைவாய்ப்பற்றவர்களுக்கு தொழில் வாய்ப்பாக விவசாயச் செய்கையை வழங்குவதற்காகவும் காணியற்றோருக்கான காணிகளை வழங்குவதற்காகவும் என்ற மூன்று பிரதான நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தக் குடியேற்றத்திட்டங்கள் செய்யப்பட்டன.

மேலே சுட்டப்பட்ட இந்த மூன்று காரணங்களும் ஏதோவகைகளில் ஏற்புடையதாக இருக்கலாம். அல்லது இவற்றில் ஒரு காரணமோ அல்லது இரண்டு காரணங்களோ அல்லது இந்த மூன்றுக்கும் அப்பால் இன்னும் பல காரணங்களோ ஏற்புடையனவாக இருக்கலாம்.

ஆனால், என்னதானிருந்தாலும் வன்னிப் பகுதிக் குடியேற்றங்களில் பிரதானப்படுத்தப்பட்டிருந்தது விவசாயச் செய்கையாகும். வன்னியின் மண்வளமும் நீர்வளமும் விவசாயத்துக்கே அதிக சாத்தியங்களைக் கொண்டன. வன்னியின் பூர்வீக அடிப்படையும் விவசாயத்தையே மையப்படுத்தியது. வன்னியர்களின் பிரதான தொழிலும் மையப் பொருளாதாரமும் விவசாயத்தையே ஆதாரமாகக் கொண்டவை.

எனவே, இந்த விவசாயச் செய்கையை மையப்படுத்தியே குடியிருப்புகள் அமைக்கப்பட்டன. பின்னாட்களில் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றத்திட்டங்களும் அமைந்தன. அதற்கமையவே குளங்களும் நீர்ப்பாசன ஏற்பாடுகளும் பிற கட்டுமானங்களும் செய்யப்பட்டன.

காணிப்பங்கீடுகள் கூட விவசாயச் செய்கையை மையப்படுத்தி – அதற்கேற்றவாறே வழங்கப்பட்டன. விவசாயச் செய்கையை மையப்படுத்தியே பிரதானமாக, மேட்டு நீர்ப்பாசன (Lift irrication ) வசதிகூட செய்யப்பட்டது.

நீர்ப்பாசன வசதியில்லாத காணிகளில் சேனைப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டது. சேனைப் பயிர்ச்செய்கைக்கேற்பவே காணியின் அளவுகளும் நிர்மாணிக்கப்பட்டன. அதாவது, மேற்கொள்கின்ற பயிர்ச்செய்கையின் தன்மைக்கு ஏற்றமாதிரியே அவரவர்களுக்கான காணிகளின் தொகையும் அமைந்தது. அதேவேளை, காணிகள் அமைந்த இடமும் இந்த அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட்டது.

இவற்றைச் சரியாகச் சொன்னால், அந்தந்தப் பயிர்ச்செய்கைக்கு ஏற்றவாறே காணிகள் தெரிவு செய்யப்பட்டன. அந்த அடிப்படையிலேயே அவை பகிர்ந்தளிக்கப்பட்டன@ பங்கீடு செய்யப்பட்டன.

சுpல திட்டங்களில் நெற்செய்கை பிரதானப்படுத்தப்பட்டது. ஆகவே, அதற்கேற்றவாறு காணிப் பங்கீட்டின் அளவு அமைந்தது. சில திட்டங்களில் மேட்டு நிலப்பயிர்ச்செய்கை மையப்படுத்தப்பட்டது. எனவே, அதற்கமைய காணித் தெரிவும் வழங்கலும் அமைந்தன. சில திட்டங்களில் சேனைப் பயிர்ச்செய்கைக்கான காணிகள் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டன.

அதாவது, இந்தத் திட்டங்களின் கீழ் பயிரிடுகையைச் செய்வதன்மூலமாக இவர்கள் தங்களின் வீட்டுக்கும் வருவாயைத் தேடிக் கொண்டனர்.

அதேவேளை, நாட்டின் தேவைக்கேற்ற உற்பத்தியை வழங்கி, நாட்டுக்கான உற்பத்திப் பங்களிப்பையும் பொருளாதாரப் பங்களிப்பையும் செய்தனர்.
இவ்வாறான ஒரு பொருளாதாரப் பங்களிப்புக்கும் ஏற்பாட்டுக்குமாகவே குடியேற்றவாசிகளுக்குக் காணிகள் வழங்கப்பட்டன. திட்டமிடப்பட்ட வகையில் அதற்கமைவாகக் காரியங்களும் நடந்தன.

இதன்படி சுமார் ஒரு இருபது தொடக்கம் நாற்பது ஆண்டுகாலம் இந்தக் காணிகளில் உரியவாறான பயிர்ச்செய்கைகள் செய்யப்பட்டன. அப்போது உழுந்தும் பயறும் நிலக்கடலையும் நெல்லும் எள்ளும் தாராளமாகவே விளைந்தன வன்னியில்.

பயிரிடப்படும் போகத்தை ஒட்டி வன்னியில் உழுந்தும் பயறும் எள்ளும் நிலக்கடலையும் எல்லா ஊர்களிலும் எல்லா வீடுகளிலும் போதிய அளவுக்குக் கிடைத்தன. அப்போது சேனைகளில் பயிரிட்டவர்களுக்கும் புலவுகளில் உழுந்தையும் பயற்றையும் பயிரிட்டவர்களுக்கும் இந்த நினைவுகள் இதைப் படிக்கும்பொழுது மீள எழும்.

முன்னர் துணுக்காய், மல்லாவி, முத்தையன்கட்டு, செட்டிகுளம், வவுனியா, நெடுங்கேணி போன்ற இடங்களில் மலிவாக உழுந்தையும் பயற்றையும் நிலக்கடலையையும் எள்ளையும் சோளத்தையும் வாங்கலாம்.
கொழும்பிலிருந்தும் நாட்டின் பிற இடங்களில் இருந்தும் இந்த இடங்களுக்கு வியாபாரிகள் வந்து இந்தப் பொருட்களைக் கொள்வனவு செய்துகொண்டு செல்வர்.

ஆனால், பிறகு நிலைமைகள் மாறிவிட்டன. ஒன்று போரின்காரணமான மாற்றங்கள். இதனால், விளைச்சல்களைச் செய்வதில் பலவிதமான பிரச்சினைகள் உருவாகின. அதையும் கடந்து விளைச்சலை மேற்கொண்டவர்கள் இருந்தாலும் அதன் வீதம் குறைவடைந்தது.

அடுத்தது நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நிலை மாற்றங்கள். இந்த மாற்றங்களால், விலைநிர்ணயம் பெரும் பிரச்சினையாகியது. உற்பத்தியையும் விட விளைச்சலின் மூலமான வருவாய் குறைவாக இருந்தது. இதனால், உற்பத்தியின் வீதமும் உற்பத்தியாளர்களின் வீதமும் குறைந்தது.

அதையும் விட முக்கியமானது, பயிர்ச்செய்கைக்காக வழங்கப்பட்ட காணிகளைக் குடியிருப்புக் காணிகளாகவும் குடியிருப்பை அடுத்து சந்தை, கடை, தொழிற் சாலைகள் என மாற்றிவருவதே.

பயிர்ச் செய்கைக் காணிகளைக் குடியிருப்புக் காணிகளாக மாற்றிவரும் இந்த நிலைமை மிகப் பயங்கரமானது. இது சட்டவிரோதமானது. காணி வழங்கற் சட்டத்தின்படி பயிர்ச்செய்கைக் காணிகளை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்த முடியாது. அப்படிச் சட்டவிரோதமான முறையில் அவற்றைப் பிறதேவைகளுக்காக வழங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஆனால், கண்ணுக்குள் மண்ணைத்தூவி விட்டு எப்படியோ இந்தக் காணிகளை வேறு தேவைகளுக்கே மாற்றி விட்டனர் பலரும். ஏறக்குறைய முக்காற்பங்குக் காணிகள் இப்படி மாற்றப்பட்டு விட்டன. இன்னும் அப்படி மாற்றப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

இதன்மூலம் முன்னர் இந்தக் காணிகளை வழங்குவதற்காகத் திட்டமிடப்பட்ட நோக்கங்கள் முற்றாகவே சிதைக்கப்படுகின்றன.

உழுந்து விளைந்த புலவில் இப்போது வீடுகளும் கடைத்தொகுதிகளும். பயறு விதைக்கப்பட்ட சேனையில் ஆலைகளும் இயந்திரம் திருத்தும் இடங்களும். எள்ளு விதைக்கப்பட்ட இடங்களில் கடைகளும் தெருக்களும் என்று முற்றாகவே அந்தப் பிராந்தியங்கள் மாறிவிட்டன.

சேனை என்றும் புலவு என்றும் சொல்லப்பட்ட இடங்கள் எல்லாம் ஊர்மனைகளாகவும் சிறு பட்டினங்களாகவும் மாறிவிட்டன. காலமாற்றத்தில் இதெல்லாம் சகஜம் என்று யாரும் சொல்லக்கூடும்.

ஆனால், பிரச்சினை அதுவல்ல. உண்மையும் அதுவல்ல.
மக்களின் பொருளாதார அடிப்படைகளும் தெரிவுகளும் மாறிவிட்டதே இதற்குப் பிரதான காரணம். அடுத்தது, கடந்த முப்பது ஆண்டுகளாக காணியற்றோருக்கான காணிப்பங்கீடுகள் வழங்கப்படாத காரணத்தினால், இருக்கின்ற காணிகளைப் பங்கீடு செய்ய வேண்டிய அவசியத்திற்கு ஒவ்வொருவரும் தள்ளப்பட்டனர். குடியிருப்புக்கான காணிகளைப் பெற முடியாத நிலையில் தம்மிடம் இருக்கின்ற காணிகளைக் குடியிருப்புகளாக மாற்ற வேண்டிய அவசியத்திற்குத் தள்ளப்பட்டனர் மக்கள்.

இதனால், விளைநிலங்கள் தொழில் மையங்களாகவும் வணிக வளாகங்களாகவும் குடியிருப்புகளாகவும் மாறிவருகின்றன.
இந்த நிலைமை முன்னர் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே காணப்பட்டது. அங்கே இருந்த ‘செம்பாட்டுத் தறை’ என்று சொல்லப்படும் வளங்கொழிக்கும் செம்மண் விளை நிலங்கள் குடியிருப்புக்காக மாற்றப்பட்டன.

இந்த நிலையைத் தடுப்பதற்காகவே – விவசாயக் காணிகளின் இழப்பைத் தடுப்பதற்காகவே - யாழ்ப்பாண மக்களை வன்னியில் குடியேற்றுவதற்குத் திட்டமிடப்பட்டது என்று சொல்லப்படுவதுண்டு.

ஆனாலும் மெல்ல மெல்ல யாழ்ப்பாணத்தின் தோட்டவெளிகள் - விளைநிலங்கள், பனந்தோப்புகள் எல்லாமே குடியிருப்புகளாகவும் தொழிற்பிரதேசங்களாகவும் கடைவளாகங்களாகவும் மாற்றப்பட்டுவிட்டன. மேலும் அவை அவ்வாறே மாற்றப்பட்டும் வருகின்றன. ஏனென்றால், முப்பது ஆண்டுகளுக்கு மேலாக யாழ்ப்பாண மக்களுக்கான காணி வழங்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

ஆகவே, அவர்கள் தங்களிடம் இருக்கின்ற காணிகளையே எல்லாவற்றுக்குமாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதேவேளை, யாழ்ப்பாணத்தவர்களின் பொருளாதாரத் தெரிவுகளும் முறைகளும் மாறிவிட்டன.அவர்கள் இப்போது பெருமளவுக்கும் நுகர்ச்சிப் பொருளாதாரத்தையே பிரதானப்படுத்தியுள்ளனர்.
இது என்னமாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்றால், அந்தப் பிரதேசத்தின் தனித்தன்மையையும் அடையாளத்தையும் மாற்றிச் சிதைத்து விடுகிறது.

உதாரணமாக, முன்னர் யாழ்ப்பாணத்தில் கரணைக்கிழங்கு, வெங்காயம், மரவெள்ளிக்கிழங்கு, குரக்கன், புகையிலை, மிளகாய், இராசவள்ளிக்கிழங்கு  போன்ற பயிர்கள் சில பகுதிகளில் மிகப் பிரசித்தமான அளவுக்கு விளையும். அந்தந்தப் பிரதேச மண்ணின் மணத்தைப்போல இந்த விளைபொருட்களின் சுவையும் இருக்கும்.

அப்படியிருக்கும்போது இந்தப் பொருட்களைப்பற்றிய நினைவுகளும் தனி அடையாளத்துக்குரிய நினைவையும் தகுதிப் பெறுமதியையும் கொண்டிருந்தன.

இவை இந்தப் பிரதேசத்தின் சூழல் அடையாளம், தொழில் முறை, பொருளாதார அடையாளம் எனப் பலவகைகளில் அமைந்திருந்தன.

ஆனால், குடியிருப்புகளாக இந்தப் பிரதேசங்கள் மாறும்போது இந்தப் பிரதேசத்தின் முகமாக இருந்த தனித்துவ அடையாளங்கள் குலைந்து போகின்றன.

இதைப்போலவே இன்று வன்னியில் விளைநிலங்களாக இருந்த இடங்களும் கால்நடைகள் வளர்க்கும் இடங்களாக இருந்த இடங்களும் மேய்ச்சற் தரைகளாக, நீர்நிலைகளாக, ஆற்றுப்படுகைகளாக இருந்த பகுதிகளும் மாற்றத்துக்குள்ளாகியுள்ளன.

இதன்மூலம் ‘வன்னிப் பகுதியானது ஒரு பெரும் விவசாயப் பிரதேசம்’ என்றிருந்த அடையாளம் குலைந்து, சனங்களின் குடியிருப்புப் பிரதேசங்களாக மாறிவருகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இது இந்தப் பகுதியிலுள்ள மக்களின் தொழில் மற்றும் பொருளாதார அடிப்படைகளிலும் பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன.
இதைவிட, இந்தப் பிரதேசங்களின் தனித்துவ அடையாளங்களும் மாறிவிட்டன.

‘முன்னர் ஒரு காலம் வவுனியாவில் உழுந்து விதைப்பார்கள்’ என்று சொல்லும்போது அதை நம்புவதற்கு இப்பொழுது கடினமாக இருக்கிறது என்றால், இந்த அடையாளச் சிதைவு எந்தளவுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை நாம் இலகுவாக விளங்கிக் கொள்ளலாம்.

எனவே, இiதைப்போல பல்வேறு பிரச்சினைகள், இன்று காணிப்பகிர்வின்மை தொடர்பாகவும் காணியற்ற நிலையினாலும் மாறியுள்ள பொருளாதாரப் போக்கினாலும் மக்களின் தெரிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களினாலும் ஏற்பட்டுள்ளன.

ஆனால், சிலவற்றுக்குச் சில அடிப்படைகள் உண்டு. விவசாயத்துக்குப் பொருத்தமான இடங்களில்தான் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளலாம்.

கடையை எங்கே வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம். வீட்டை எங்கே வேண்டுமானாலும் அமைத்துக்கொள்ளலாம். ஆனால், அப்படி நினைத்த இடத்திலெல்லாம் பயிர்களைச் செய்கைபண்ண முடியாது.

இங்கே, இப்படி இந்த அடிப்படையை மீறுவதே பிரச்சினையாகிறது. விவசாயத்தை மையப்படுத்தி வழங்கப்பட்ட காணிகள், அந்த அடிப்படையை மீறுவதே பிரச்சினை. இந்த இழப்பு நிரந்தரமான இழப்பாகும். இது ஒரு அடிப்படைப் பிரச்சினை. இது ஒரு அரசியற் பிரச்சினை.

இதன் விளைவாக இப்போது அரசி தொடக்கம், உழுந்து, பயறு, நிலக்கடலை, எள்ளு என எல்லாமே வேறு இடங்களில் இருந்து – வெளியே இருந்து வரவேண்டியுள்ளது.

பங்களாதேஸில் இருந்து உழுந்து வருகிறது. இந்தியாவில் இருந்து நிலக்கடலையும் பருப்பும் பயறும் வருகிறது. போதாக்குறைக்கு பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள். சீனாவில் இருந்தும் பர்மாவில் இருந்தும் அரிசி வருகிறது. ஜப்பானில் இருந்து வாகனங்களும் இலத்திரனியல் பொருட்களும் மட்டும் வரவில்லை, இலங்கைக்கு உணவுப் பொருட்களும் அங்கிருந்து எடுத்து வரப்படுகின்றன.

அதாவது, நாட்டிற்குத் தேவையான உற்பத்தியையும் வீட்டுக்குத் தேவையான பொருட்களையும் உற்பத்தி செய்யும் காலம் போய், எல்லாற்றுக்கும் வெளியே இருந்து எதிர்பார்க்கும் நிலை இது.

உள்நாட்டு மக்களுக்கான அரசியற் தீர்வை வெளியே இருந்து எதிர்பார்ப்பதைப் போல, இன்று தமிழர்கள் தங்களின் பொருளாதாரத்தை வெளியே இருந்து எதிர்பார்ப்பதைப்போல, தங்களுக்கான உற்பத்திகளையும் வெளியே இருந்து எதிர்பார்க்கும் காலம் வந்துள்ளது.

அதாவது, இது ஓர் வேரிழப்பு நிலையே! இந்த வேரிழப்பு நிச்சயமாக எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும். வேரற்ற சமூகம் அடிப்படைகளற்ற நிலைக்குத் தள்ளப்படும். அடிப்படைகளில் தளர்வுகள் ஏற்படுவது ஆபத்தானது.
இனப்பிரச்சினைக்கு நிகரானவை காணிப்பிரச்சினைகளும் குடியேற்றப் பிரச்சினைகளும். அவற்றில் இதுவும் ஒன்று.

00

ஊடகங்களின் பொறுப்புக் குறித்து...

Thursday, 5 January 2012









‘ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் இப்போது அரசியலையும் அரசியல்வாதிகளைப் பற்றியுமே எழுதுகிறார்கள். மக்களின் பிரச்சினைகளைப் பற்றி எழுதுவதில் அவர்கள் அதிக அக்கறை காட்டுவதில்லை’ என்று இலங்கையின் ஊடகங்களை அவதானித்த வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் ஒரு உரையாடலின் போது தெரிவித்தார்.

அவர் மேலும் தொடர்ந்து உரையாடும்போது, ‘...இலங்கையின் பிரச்சினைகளும் தேவைகளும் ஏராளமாக இருக்கின்றன. மக்களுடைய பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கப்பட வேண்டியிருக்கிறது.
நாடு யுத்தத்திலிருந்து மீண்டாலும் யுத்தகாலப் பாதிப்புகளிலிருந்தும் யுத்தகால நிலைமைகளிலிருந்தும் இன்னும் மீளவில்லை.
இது யுத்தத்தின் முடிவுக்குப் பிறகும் மக்களைப் புதிதாகச் சிந்திக்க விடவில்லை. ஆகவேதான் அவர்கள் இன்னும் யுத்தத்துக்கு முன்னரும் யுத்தகாலத்திலும் சிந்தித்ததைப் போல நம்பிக்கையீனமாகச் சிந்திக்கிறார்கள். அல்லது யுத்தகால நினைவுகளின் தொடர்ச்சியாகச் சிந்திக்கிறார்கள்.

இதிலிருந்து மீள வேண்டுமாயின் மக்களுடைய தேவைகளைப் பற்றியும் அவர்களுடைய பிரச்சினைகளைப் பற்றியும் அதிகமாக எழுதவேண்டும். அப்படி அவர்களுடைய பிரச்சினைகளைப் பற்றி எழுதி, உரியதரப்பினர்களின்  கவனத்துக்குட்படுத்தி, அவற்றுக்குத் தீர்வைக் காணும்போதே மாற்றங்கள் நிகழும்@ மக்களிடம் நம்பிக்கை பிறக்கும்’ என்றார்.

இந்த ஊடகவியலாளரின் கூற்றுகள் நிச்சயம் கவனத்திற்குரியவையே.
ஊடகவியலாளர்களின் பணி என்பது அரசியல்வாதிகளின் பணிகளாக அமைந்திருக்க வேண்டியதில்லை. அப்படி அது அமைந்து விடவும் கூடாது என்பது முதற்கவனத்திற்குரியது.

அத்துடன் ஊடகங்களும் அரசியல் அரங்காக சுருங்கி விடக்கூடாது என்பதும் முக்கியமானது.

‘ஊடகங்கள் எப்போதும் மக்களுடன் இருக்க வேண்டும். மக்களுக்காக இருக்க வேண்டும்’ என்பார்கள். எங்களுடைய சூழலில் பெரும்பாலான ஊடகங்கள் மக்களுடைய பிரச்சினைகளைப் பேசினாலும் அவற்றைச் சார்பு நிலையிலிருந்தே அதிகமாகப் பேசுகின்றன.

இதை இன்னும் தெளிவாகச் சொன்னால், எந்த விடயத்தையும் ஊடக முறைமை சார்ந்து – ஊடக அறநெறி சார்ந்து அணுகுவதை விடவும் அரசியல் விருப்பு - வெறுப்புச் சார்ந்தே அணுகுகின்றன.

இதனால் ஒரு விடயத்தின் பாதிப்பக்கம் மறைக்கப்படுகிறது. அல்லது மறுக்கமோ மறுபாதியோ பார்க்கப்படாது விடப்படுகிறது. இது மக்களை உண்மைகளிலிருந்தும் முழுமைகளிலிருந்தும் அந்நியப்படுத்தி விடுகிறது.

முழுமையை அறியாத மக்கள், உண்மைகளை அறியாத மக்கள் நிச்சயம் குறைபாடுடையவர்களாகவும் குறைச் சிந்தனைக்குட்பட்டவர்களாகவுமே இருப்பர்.

ஆகவே முதலில் ஊடகங்கள் ஒரு திறந்த வெளிக்கு தம்மைக் கொண்டு வரவேண்டும்.

யுத்தத்துக்குப் பின்னர் அப்படித் திறந்த வெளிக்கு வந்துள்ள ஊடகங்கள் இலங்கையில் எவை? அவற்றின் எண்ணிக்கை எந்தளவுக்கு நம்பிக்கையூட்டக்கூடியதாக இருக்கிறது?

இதேவேளை, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய காலகட்டத்தில் இயங்கிய மேற்குலக ஊடகங்கள் தமது கடந்தகாலப் படிப்பினைகளையும் யுத்த அழிவினையும் ஒரு பாடமாகக் கொண்டன என்பதை இங்கே நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.

ஜனநாயகத்தையும் மக்களின் வாழ்க்கையையும் மனித நேயத்தையும் உண்மையையும் முடிந்த அளவுக்கு வலிமைப்படுத்த இந்த ஊடகங்கள் முயன்றிருக்கின்றன. இதனையே பின்னர் இவை தமது கோட்பாடுகளாகவும் நெறிமுறைகளாகவும் பின்பற்றி வருகின்றன.

இலங்கையின் ஊடகங்களில் பெரும்பாலானவையும் இன்னும் சார்பு நிலைப்பட்டும், அரசியல் மயப்பட்டும், இனரீதியாகச் சிந்திப்பனவாகவுமே இருக்கின்றன.

சிங்கள ஊடகங்கள் சிங்களத்தரப்பின் மனோநிலையைப் பிரதிபலிப்பனவாக இருக்கின்றன. தமிழ் ஊடகங்கள் தமிழ்த்தரப்பின் மனோநிலையைப் பிரதிபலிப்பனவாக இருக்கின்றன.

யுத்தமோ அதன் விளைவான அழிவுகளோ மக்களின் துயரங்களோ இந்த ஊடகங்களின் சிந்தனை முறையை மாற்றவில்லை. அணுகுமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தவுமில்லை.

பதிலாக இன்னும் இனவாதத்தை வளர்க்கக்கூடிய மாதிரியான உணர்ச்சிகரமான விடயங்களையே எடுத்தாள்கின்றன. உணர்ச்சிகரமான மொழியையும் வெளிப்பாட்டையும் கையாள்கின்றன.

இது நிலைமையை பாதக நிலையில் - ஆபத்து நிலையில் வைத்திருக்கவே செய்கின்றது. சமூகங்களை எரிபற்று நிலையில் வைத்திருப்பதே இதில் முக்கிய உபாயமாகும்.

ஏட்டிக்குப் போட்டி, எரிபற்று நிலை என்பது எப்போதும் ஊடகங்களுக்கான தீனியை அதிகமாகத் தரும். அதேவேளை மக்களையும் இந்தத் தீனிகள் அதிகமாகக் கவரும். ஆனால், இந்தத் தீனிகள் மக்களையே தீனியாக்கி விடும். அவர்களறியாமலே அவர்கள் தீனியாகி விடுகின்றனர். இது மோசமானதொரு நிலையே.

இப்படியான அணுகுமுறையும் தந்திரோபயமும்தான் கடந்த காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இப்போதும் ஏறக்குறைய இந்த நிலைதான் தொடருகிறது.

அதாவது, எரிபற்று நிலைக்குரிய அரசியலில் மையங்கொள்ள வைப்பதன் மூலம் மக்களை ஒருவிதமான மயக்க நிலைக்கும் - போதைக்கும் உள்ளாக்கி வைத்திருப்பது இதுவாகும்.

இதனால், மக்களின் ஏராளம் பிரச்சினைகளும் தேவைகளும் கவனிக்கப்படாது திசை திருப்பப்படுகின்றன. மட்டுமல்ல தங்கள் பிரச்சினைகள் தொடர்பாகவும் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதைப் பற்றியும் மக்களிடம் உருவாகி வரும் புதிய அனுபவங்களும் புதிய நிலைப்பாடுகளும் கண்டு பிடிக்கப்படாது விடப்படுகின்றன.

எந்தப் பிரச்சினையையும் தீர்த்துக் கொள்ளக் கூடிய ஆற்றல் மனிதர்களுக்குண்டு. மனித இயல்பே அப்படித்தான். இல்லையென்றால், இத்தனை பெரிய வளர்ச்சியை மனிதகுலம் எட்டியிருக்க மாட்டாது. இதை நமது பெரும்பாலான ஊடகங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

சுருக்கமாகச் சொன்னால் பல சந்தர்ப்பங்களில் மக்களின் இயல்பான வாழ்க்கைக்கும் முன்னேற்றத்துக்கும் அரசியற்கட்சிகளும் அவற்றின் கொள்கைகளும் அரசியற் தலைவர்களின் செயற்பாடுகளும் காரணமாக அமைந்து விடுகின்றன.

இந்த அரசியற் கட்சிகளை ஆதரிப்பதன் மூலமாகவும் அரசியல்வாதிகளை முன்னிலைப்படுத்துவதன் வழியாகவும் மக்களைச் சிறுமைப்படுத்தி விடுகின்றன பல ஊடகங்கள்.

இதற்குக் காரணம் அவைகள் அரசியல் வாதிகளைப் போலவும் அரசியற் கட்சிகளைப் போலவுமே செயற்படுகின்றன என்பதேயாகும்.

அதாவது, மக்களின் குரல்களாக இருக்கவும் இயங்கவும் வேண்டிய ஊடகங்கள் மக்களை ஆள்வனவாக மாறிவிடுகின்றன. மக்களை அதிகாரம் செய்வனவாக மாறிவிடுகின்றன. மக்களின் ஜனநாய உரிமைகளை வென்றெடுக்கவும் பாதுகாக்கவும் வேண்டிய ஊடகங்கள் மக்களுக்குரிய ஜனநாயக அடிப்படைகளை மறுப்பனவாகச் செயற்படுகின்றன.

இப்படிச் சிந்தித்தால், பாதிப் பக்கத்தையே இந்த ஊடகங்களால் வெளிப்படுத்த முடியும். பாதி உண்மையை, தாம் விரும்புகின்ற விசயங்களை மட்டுமே மக்களுக்குக் கொடுக்க முடியும்.

அதற்கப்பால் மக்களை ஒளிமிக்க ஒரு பிரகாசமான வெளிக்கோ யுகத்துக்கோ அவற்றால் கொண்டு செல்ல முடியாது.

மக்களுக்குரிய ஊடகம் என்பது மக்களை விழிப்படைய வைப்பனவாகவும் மக்களுக்கு உண்மைகளைத் தெரியப்படுத்துவனவாகவும் இருக்க வேண்டும்.
அவை மக்களின் தரப்பிலிருந்து அதிகாரத்தரப்பை அணுகவேண்டும்.

மக்களுக்காக அதிகாரத்தரப்பை செயற்பட வைக்க வேண்டும். மக்களின் தேவைகளையும் அவர்களுடைய பிரச்சினைகளையும் அவர்களுடைய உணர்வுகளையும் வெளிப்படுத்துவதன் மூலம் மக்களின் குரலாக அவை தொழிற்படவேண்டும்.

உலகத்தின் வெற்றி பெற்ற முதன்மை ஊடகங்கள் சாத்தியப்படக்கூடிய எல்லைக்கு ஜனநாயகத்தை நோக்கியும் மக்களின் உரிமைகளை நோக்கியும் நகர்கின்றன. அவற்றின் செய்திகள் மற்றும் தகவல்களின் நம்பிக்கை – உண்மை நிலை போன்றவை அவற்றை மேன்மையை நோக்கி, வெற்றியை நோக்கி அவற்றை நகர்த்துகின்றன.

இந்த நகர்வுக்குக் குறுக்கே வரும் தடங்கல்களை அவை தமக்கான சவால்களாகவும் வெற்றிக்கான படிக்கற்களாகவும் பயன்படுத்திக் கொள்கின்றன.

ஊடகங்களின் வெற்றி என்பது மக்களுக்குரிய தேவைகளை இனங்காட்டுவதிலும் அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றி வைப்பதிலும் அவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதிலுமே தங்கியிருக்கிறது.

இந்தப் பணிகளில் அந்த ஊடகங்களுக்கு வருகின்ற நெருக்கடிகளும் நேர்கின்ற அபாயங்களும் அந்த ஊடகங்களை உலக அரங்கில் மேலும் அவற்றை ஸ்தாபித்துப் பலப்படுத்தி விடுகின்றன.

கூடவே அவை வலியுறுத்திய விடயங்களும் அவை வெளிப்படுத்திய உண்மைகளும் மக்களுக்கான நன்மைகளை – பயன்களை பெற்றுத் தருகின்றன.

ஏனெனில் இந்த மாதிரியான சவால்கள் என்பது மக்களின் வாழ்க்கைக்கான பாதுகாப்பையே வலியுறுத்துகின்றன.

இலங்கையில் போரை எதிர்த்த ஊடகங்களை விடவும் போரை ஆதரித்த ஊடகங்களே அதிகம். ஒருவகையில் இதற்கும் ஒரு நியாயம் இருந்தாலும் போரை இவை இனப்பிரச்சினைத் தீர்வுக்கான வழிமுறையாகக் கையாள்வதில் தவறி விட்டன என்பதில் யாருக்காவது மாற்றுக் கருத்து இருக்க முடியுமா?

போருக்குப் பின்னரும் நிலைமைகளில் மாற்றம் இல்லை என்பது இந்த ஊடகங்களின் கடந்த கால வழிமுறைகளில் குறைபாட்டையும் தோல்வியையுமே வெளிப்படுத்துகிறது.

உண்மையில் இலங்கையில் இன மத பேதங்களைக் கடந்த தேசிய ஊடகம் - தேசிய ஊடகவியலாளர்கள் என்பது மிகக் குறைவானதாகவே இருக்கிறது.

இதனால், மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் முதன்மைப்படுத்தும் போக்கும் துலக்கமாக வளர்ச்சியடையவில்லை.
தங்களுடைய பத்திரிகை, தங்களுடைய வானொலி, தங்களுடைய தொலைக்காட்சி என்று இலங்கையர்கள் கொண்டாடக்கூடிய  ஊடகங்கள் வந்திருக்குமானால் அல்லது அவ்வாறு அடையாளம் காணப்பட்டிருக்குமானால் அது பல பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழியைத் தந்திருக்கும்.

மக்கள் தங்களுடைய தேவைகளைப் பெறுவதற்கான வழிமுறைகளை மிக இயல்பாகத் தங்களிடம் வைத்திருக்;கிறார்கள். இது மனிதர்களின் சிறப்பியல்பாகும்.

இந்த இயல்பை மேலும் வலுவூட்டி அவர்களுடைய சிரமங்களைக் குறைப்பதற்கு ஊடகங்கள் முயற்சிப்பது அவசியம்.  இதற்கு மக்களுடன் அதிக தொடர்புடைய – மக்களில் அதிக கரிசனையுடை ஊடகவியலாளர்கள் வளர்த்தெடுக்கப்படுவது அவசியம். அப்படி வளர்த்தெடுக்கப்படும் ஊடகங்கள் தங்கள் ஊடகவியலாளர்களை மக்களிட் செல்லும்படி வற்புறுத்துகின்றன. அவர்கள் மக்களிடம் சென்று அவர்களிடம் இருக்கின்ற உண்மைகளையும் நிலவரங்களையம் வெளியே கொண்டு வருகிறார்கள்.

எங்கள் மக்களிடம் இருக்கின்ற பல விடயங்களை வெளி ஊடகங்கள் பல தடவைகள் வெளியே கொண்டு வந்திருக்கின்றன. அதற்குப் பிறகு அவற்றை மேற்கோள்காட்டி நமது ஊடகங்கள் மறு வெளியீடு செய்கின்றன. இது நமது பார்வைக்குறைபாட்டையும் மக்களைப் பொருட்படுத்தா மனோபாவத்தையும் உழைப்பின்மையையும் வெளிப்படுத்துகின்றது.

ஆனால், கடுமையான உழைப்பைச் செலவிடும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் மக்களிடம் செல்வதால் - அவர்களுடன் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்வதால் தமது ஊடகச் செல்வாக்கை மக்களிடம் வலுவானதாக்கிக் கொள்கிறார்கள்.

ஆகவேதான் தங்களுடைய தரப்பின் குரல் என்றவகையில் அந்த ஊடகங்களை மக்கள் ஆதரிக்கிறார்கள்.

பொதுவாக தங்கள் வாழ்வின் கணிசமான பகுதி நேரத்தையும் உழைப்பின் கணிசமான தொகையையும் அவர்கள் ஊடகங்களுக்காகச் செலவிடுகிறார்கள். தமக்கான குரல்களாகவும் வெளிப்பாட்டுச் சாதனங்களாகவும் ஊடகங்கள் செயற்படட்டும் என்றே மக்கள் கருதுகிறார்கள்.

ஆகவே மக்களின் நம்பிக்கைக்கும் அவர்களுடைய உரிமைகளுக்கும் அவர்களுடைய எதிர்காலத்துக்கும் பொறுப்புச் சொல்ல வேண்டிய கடப்பாடும் பண்பும் ஊடகங்களுக்குரியது.

இலங்கையில் இத்தகைய பண்பில் இயங்குகின்ற ஊடகங்களைப் பட்டியலிட்டால் நமக்கு எத்தனை ஊடகங்கள் தேறும்?

‘ஒப்பீட்டளவில் வானொலிகள் கொஞ்சம் பரவாயில்லை. அதிலும் எவ். எம் வானொலிகள் இன்னும் மேல்’ என்கிறார் உள்ளுர் ஊடகவியலாளர் ஒருவர். நிச்சயமாக இவர் இலத்திரனியல் ஊடகங்களில் பணியாற்றும் ஆள் அல்ல.

எப்படியோ இலங்கை ஊடகங்கள் ஒரு பொறுப்பு மிக்க காலகட்டத்தில் இப்போதிருக்கின்றன என்பது மட்டும் கூடிய கவனத்திற்குரியது. அது அரசியல் ரீதியாகவும் மக்களின் பிரச்சினைகள், தேவைகள், வாழ்க்கையின் அடிப்படைகள் அத்தனையைச் சார்ந்ததுமாகும்.

00

ஊருக்குத் திரும்ப முடியாத சனங்கள்

Monday, 2 January 2012

 
‘மயிலிட்டிக் கடல் மீன் தனிச் சுவையானது. அந்தக் கடலிலிருந்து றோலர் என்ற வகைப்படகுகளில் தொழிலுக்குப் போன காலங்கள் இனிமையானவை’ என்று தங்கள் நினைவுகளை மீட்டிக் கொண்டு அகதிக் கூடாரங்களில் இன்னும் இருக்கிறார்கள் வலிவடக்குக் கடலோர மக்கள்.

போர் முடிந்து இரண்டாண்டுகள் கழிந்து விட்டன. புதிய ஆண்டுகள் மாறிக் கொண்டிருக்கின்றன. இதோ இன்னொரு புதிய ஆண்டு பிறக்கிறது. ஒவ்வொரு புதிய ஆண்டும் புதிய வழியைத் திறக்கும் என்று சொல்கிறார்கள். ஆனால், இவர்களுக்கு அந்த வழிகள் திறக்கவேயில்லை. இந்தப் புதிய ஆண்டிலும் அதற்கான சாத்தியங்கள் இருக்குமென்று தோன்றவில்லை.

கால்நூற்றாண்டுக் காலத்தை அகதி வாழ்க்கையில் கழித்து விட்டனர் இவர்கள். இளைஞர்களாக அகதி முகாமுக்கு வந்தவர்கள் இப்பொழுது முதியவர்களாகி விட்டனர். முதியவர்கள் தங்கள் ஊருக்குப் போக வேணும் என்ற நிறைவேறாத கனவுகளுடன் அகதியாகவே இறந்து விட்டனர்.
நினைவுகளைச் சரியாகச் சேமிக்க முடியாத சின்னஞ்சிறுவர்களாக முகாமுக்கு வந்தவர்கள் இப்போது இளைஞர்களாகவும் நடுத்தர வயதுக்காரர்களாகவும் மாறிவிட்டனர்.

இவர்களுடைய பிள்ளைகளுக்குத் தங்கள் ஊர்களைப் பற்றி எதுவும் தெரியாது. சிலருக்கு மிகச் சிறிய வயது நினைவுகள் மட்டும் மங்கலாக உள்ளன.
பருவங்களை அகதி வாழ்க்கையே தின்கின்றது.

இந்த அகதிக் குடியிருப்புகள் யாழ்ப்பாணத்தில் சுன்னாகம், மல்லாகம், சங்கானை, சங்குவேலி, தெல்லிப்பழை போன்ற இடங்களில் உள்ளன.
பலாலி விமான நிலையத்தின் விரிவாக்கமும் பின்னர் அது மிகப் பெரும் படைத்தளமாக மாற்றப்பட்டதும் இந்தப் பிரதேச மக்களின் வாழிடங்களையும் விவசாய நிலங்களையும் கடலோரத்தையும் விழுங்கி விட்டன.

பலாலி செம்மண்ணில் விளையும் மரவள்ளிக் கிழங்கைச் சாப்பிட்டிருக்கிறீங்களா? அது அந்த மண்ணின் அளிக்க முடியாத ஒரு கொடை. ஆங்கேதான் குரக்கனையும் அதிகமாகப் பயிரிடுவார்கள் என்கிறார் அந்தப்பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாயி.

யாழ்ப்பாணத்தில் பலாலி மரவள்ளிக் கிழங்குக்கு என்று தனியான மாக்கற் இருந்திருக்கிறது ஒரு காலத்தில். ஆனால், இப்போது அங்கே மிதிவெடிகள்தான் விளைந்து கொண்டிருக்கின்றன. விளை நிலத்தையெல்லாம் படைவிரிவாக்கத்துக்காக எடுத்து விட்டார்கள் என்று துக்கத்தோடு சொல்கிறார் இந்த முதிய விவசாயி.

ஒரு விவசாய நாடு, விவசாயிகளுக்காக பல நலத்திட்டங்களைச் செய்யும் நாடு என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால், நாங்கள் தெருவிலே இருபத்தைந்து வருசமாக நிற்கிறோம். எங்களுக்கு ஒரு நீதியும் கிடைக்கவில்லை என்கின்றனர் வலிவடக்குப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள்.

இன்னும் சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாமல் - அங்கே செல்ல வேண்டும் என்ற பேரவாவுடன் (மீள்குடியேற்றத்துக்காகக்) காத்துக்கொண்டிருக்கிறார்கள் இவ்வாறான விவசாயிகளும் கடற்றொழிலாளர்களும்.

1985 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்தவர்கள் இதுவரையில் தங்களுடைய சொந்த இடங்களுக்குத் திரும்பமுடியாதிருக்கின்றனர்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகத் தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாதிருக்கும் மக்களின் நிலை, போர் முடிந்த பிறகும் துயரமும் அந்தரிப்புமாகவே இருக்கிறது.

1980 களின் நடுப்பகுதியில் முதன் முதலில் இடம்பெயர்ந்தவர்கள், யாழ்ப்பாணத்தில் பலாலிப் பகுதியை அண்மித்த மக்களும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்குக் கடலோர மக்களுமே.

இறுதியாக இடம்பெயர்ந்து தங்கள் சொந்த இடத்துக்குத் திரும்ப முடியாதிருப்பவர்கள் முல்லைத்தீவின் வடக்குக் கடலோரமான புதுமாத்தளன், பொக்கணை, வட்டுவாகல், வலைஞர்மடம் பகுதி மக்கள்.
இவர்களெல்லாம் மீண்டும் எப்போது தங்களுடைய சொந்த இடங்களுக்குச் செல்ல முடியும் என்று யாருக்கும் தெரியாது. சொந்த இடங்களுக்குச் செல்லக்கூடிய ஒரு நிலை என்றாவது வருமா என்றுகூடத் தெரியாத – அதை உறுதிப்படுத்த முடியாத நிலையில்தான் இவர்கள், வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அகதி வாழ்க்கையின் அலைச்சல்களின் மத்தியிலும் துயரத்தின் நிழலிலுமே  இவர்களுடைய பருவங்கள் கழிந்து கொண்டிருக்கின்றன.

இன்னும் அதிகமான மக்கள் மீள்குடியேற்றத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கும் மாவட்டங்கள் முல்லைத்தீவும் யாழ்ப்பாணமுமே.
முன்னரே குறிப்பிட்டதைப்போல இந்த மாவட்டங்களிலிருந்தே ஆரம்பத்தில் இடம்பெயர்வு நிகழ்ந்தது.

யாழ்ப்பாணத்தில், பலாலி, கட்டுவன் வடக்கு, மாவிட்டபுரம், காங்கேசன்துறை, மயிலிட்டி, வளலாய் மேற்கு போன்ற இடங்களைச் சேர்ந்த மக்களே முதலில் இடம்பெயர்ந்தனர்.

இதைப்போல, முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, தென்னமரவாடி, நாயாறு போன்ற பிரதேச மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர். இதில் சில பகுதிகளில் மக்கள் மீளக்குடியேற வரையறுக்கப்பட்ட அளவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏனையோரின் நிலையைப் பற்றி எந்தத் தீர்மானமும் இல்லை.

ஊருக்குத் திரும்ப முடியாத இந்தச் சனங்களைப் பற்றிய கதையாடல்கள் மெல்ல மெல்லக் குறைவடைந்தே போகின்றன.

யாழ்ப்பாணத்தின் வடக்குக் கடலோரப் பகுதிகளும் பலாலியை அண்டிய பிரதேசமும் உயர்பாதுகாப்பு வலயத்துக்குரியவை எனக் கூறப்படுவதால், அங்கே மீள்குடியேற்றத்தின் சாத்தியப்பாடுகள் குறித்த கேள்விகளே உள்ளன.

அப்படி அங்கே மீள்குடியேற்றம் நடைபெறுவதாக இருந்தாலும் அதற்கான கால எல்லையைக் குறித்து எந்தத் தீர்மானங்களும் இல்லை. பலாலி, கட்டுவன் வடக்கு, மாவிட்டபுரம், காங்கேசன்துறை, மயிலிட்டி, வளலாய் மேற்கு போன்ற பகுதிகள் பெரும்பாலும் மீள்குடியேற்றத்துக்கான சாத்தியங்களைக் குறைந்த அளவிலேயே கொண்டிருக்கின்றன.

அவ்வாறாயின் இந்த மக்களின் நிலை என்ன?

போருக்குப் பிந்திய நிலைமையிலும் இவர்கள் அகதி நிலையில், அடிப்படை வசதிகளையும் வாழ்க்கையையும இழந்துதான் வாழ வேண்டுமா?

போருக்குப் பிந்திய காலத்தின் உதவிகளும் புனரமைப்புகளும் நிவாரணங்களும் இவர்களுக்குக் கிடைக்கவில்லை. மீள் குடியேறிய மக்களுக்கே இந்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பினால், இவர்களுக்கு எதுவும் கிடைப்பதற்கு வழியில்லை.
ஆகவே, இவர்கள் நிரந்தர அகதிகள் என் பாத்திரத்தை ஏற்றுக்கொண்டு, முடிவற்ற சிரமங்களோடு வாழ வேண்டியதுதானா?

இந்த மக்கள் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? இந்த மக்களைப் பற்றிய தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடு என்ன? யார் இந்த மக்களைத் தங்களின் கைகளிலும் கருத்திலும் எடுப்பார்கள்?

இவர்களுக்கு மாற்று இடங்களைத் தேர்வு செய்து அங்கே குடியமர்த்தலாம் என்று சொல்கிறார்கள் சிலர். தொடரும் அகதி நிலையானது, இவர்களுடைய சமூக இருப்பைச் சிதைத்துவிடும். அகதி வாழ்க்கைக்குப் புதிய தலைமுறைகளும் நிர்ப்பந்திக்கப்படுவது எந்த வகையிலும் நியாயமில்லை என்கின்றனர் இவர்கள். அப்படி அகதி வாழ்க்கையில் இந்தச் சனங்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டால், அது இவர்களைச் சீரழிவு நிலைக்கே கொண்டு செல்லும் என்கின்றனர் மேலும்.

இந்த மக்களை வேறு இடங்களில் குடியமர்த்துவதைப் பற்றிச் சிந்தித்தால், அது அரசாங்கத்தின் நோக்கத்துக்குப் பலியாகும் - ஒத்துழைக்கும் நடவடிக்கையாகவே அமையும். இவர்கள் வேறு இடத்துக்கு நகர்த்தப்பட்டால், பின்னர், இவர்களுக்கான மீள்குடியேற்றத்தைப் பற்றி யாரும் பேச முடியாது.

இவர்கள் வேறு இடத்தில் குடியேறினால், அரசாங்கத்துக்கான அழுத்தமும் குறைந்து விடும். ஆகவே, இவர்கள் இப்படி இருப்பதே இவர்களுக்கான எதிர்காலப் பலமாகும். மட்டுமல்ல, இவர்களின் பிரதேசங்களை மீட்பதற்கும் இவர்களின் இந்த அகதி நிலையே ஒரு கருவியாக அமையும். எனவே, மாற்றிடங்களைக் குறித்து நாம் சிந்திக்கவே முடியாது என்கின்றனர் இன்னொரு தரப்பினர்.

இந்த இரண்டு தரப்பின் நியாயங்களும் புறக்கணிக்க முடியாத அளவுக்கு நியாயப்பாடுகளைக் கொண்டுள்ளன. இங்கே பிரச்சினை என்னவென்றால், இந்த மக்களுக்கான நீதி – வாழ்க்கை – எதிர்காலம் எல்லாம் எங்கே, எப்படிக் கிடைக்கும் என்பதுதான்.

அரசியலுக்காகவே பலியிடப்படும் இத்தகைய மக்களின் நிலையைக் குறித்து யார் கவனம் செலுத்துவது?

போருக்குப் பிந்திய நிலையில் அவரவர் தத்தமது இழந்து போன வாழ்க்கையை மீள்நிலைப்படுத்திக்கொள்வதற்கே முயன்று கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் இவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கும் சனங்களைப் பற்றிய கரிசனை குறைவடைந்தே செல்லும். அப்படித்தான் இந்தக் கரிசனை குறைவடைந்து செல்கிறது.

ஆனால், இவர்களுடைய அகதித் துயரம் முன்னரை விட அதிகரிக்கிறது. முன்னர், இடம்பெயர்ந்தோருக்கான உதவித்திட்டங்கள் அதிகமாக இருந்தன.

தவிர, எல்லோரும் இடம்பெயர்ந்து கொண்டிருந்ததால், மீளக்குடியேறும் நிலையொன்று வருமபோது தமக்கும் அதில் சாத்தியங்கள் கிட்டும் என்ற நிலை இருந்தது.

ஆனால், இப்பொழுது அந்த எதிர்பார்ப்பின் நிலை மாறி விட்டது. இப்போது மீள் குடியேறும் மக்களுக்கான உதவிகளே வழங்கப்படுகின்றன. இடம்பெயர்ந்தோருக்கான உதவிகளை வழங்குவதற்கு சர்வதேசத் தொண்டு நிறுவனங்களே மறுத்து வருகின்றன.



இடம்பெயர்ந்தோருக்கான உதவிகளைத் தொடர்ந்து வழங்கினால், அரசாங்கம் இந்த இடம்பெயர்தோரின் மீள் குடியேற்றம் பற்றிச் சிந்திப்பதைத் தவிர்த்து விடும். ஆகவே, மீள் குடியேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பதற்காக நாம் இந்த இடம்பெயர்ந்தோர் நிவாரணத்தைத் குறைக்க வேண்டியேற்பட்டுள்ளது என்கின்றார் சர்வதேசத் தொண்டு நிறுவனமொன்றின் உயர் அதிகாரி.

ஆகவே, கிடைத்த உதவிகளும் இல்லாத நிலையில், சொந்த ஊர்களுக்கும் திரும்ப முடியாதவர்களாக மாறியிருக்கும் இந்தச் சனங்கள் குறித்து உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும். இது ஒரு அடிப்படைப் பிரச்சினை.

வளமான பிரதேசங்களின் மீள் எழுச்சியும் அந்தப் பிரதேச மக்களின் புதிய வாழ்க்கையும் கேள்விகளின் முன்னேயும் அழிவுகளின் முன்னேயும் நிறுத்தப்படுவதை விட, இவற்றுக்கான நியாய பூர்வமான தீர்வைக் காண வேண்டும்.

இலங்கையில் அகதிப் பெருக்கம் குறைவடைந்துள்ளது என்று அரசாங்கத்தின் உயர் மட்டத் தலைவர்களில் ஒருவர் அண்மையில் பெருமையாகச் சொன்னார். ஆனால், அகதி நிலை மாறிவிட்டது என்று அவர் சொல்லவில்லை. அப்படிச் சொல்வதற்கு அவரால் முடியாது.

அவர் சொல்வதைப் போல அகதி நிலை மாறியிருந்தாலும் அல்லது அது குறைவடைந்திருந்தாலும், பாதிக்கப்பட்டோரின் நிலை மாறவேயில்லை. இதுதான் உண்மை.

00

போருக்குப் பின்னரான இலங்கையின் அரசியல் எப்படியுள்ளது?

Sunday, 1 January 2012



‘போருக்குப் பின்னரான இலங்கையின் அரசியல் எப்படியுள்ளது?’ என்று அண்மையில் சர்வதேச ஊடகமொன்றின் சார்பாக இலங்கைக்கு வந்திருந்த ஊடகவியலாள நண்பர் ஒருவர் ஒரு கேள்வியை எழுப்பினார்.

இந்தக் கேள்விக்கான பதிலை அளிப்பதற்காகச் சற்று யோசித்த போதே இலங்கையின் அரசியல் வரட்சியைத் துலக்கமாகத் தெரியக் கூடியதாக இருந்தது.

ஆகவே, ‘போருக்குப் பின்னரான இலங்கையின் அரசியல் என்பது, போர்க்காலத்தைப் போலவும் போருக்கு முந்திய காலத்தைப் போலவும் எந்த மாற்றங்களுமின்றிய – எந்த வளர்ச்சியுமற்ற நிலையிலேயே தொடர்கிறது’ என்றே பதிலளிக்க வேண்டியிருந்தது.

உண்மை இதுதானே.

அதே இனவாத அரசியல். அதே பாணியிலான அணுகுமுறைகள். அதே வகையான அரசியல் நடவடிக்கைகள். அதே மாதிரியான வாக்குறுதிகள். அதே வகையான கண்டனங்களும் குற்றச்சாட்டுகளும்.

முகங்கள் மாறியிருக்கின்றன. குரல்கள் மாறியிருக்கின்றன. கட்சிகள், அணிகள் போன்றவற்றின் பெயர்கள் மாறியிருக்கின்றன.

ஆனால், நிலைப்பாடுகளும் போக்குகளும் நிலைமைகளும் மாறவேயில்லை.

இதில் தமிழ்த்தரப்பு, சிங்களத்தரப்பு என்ற வேறுபாடுகளோ, சிங்களக்கட்சிகள், தமிழ்க்கட்சிகள் என்ற மாறுபாடுகளோ, அரசாங்கத் தரப்பு - எதிர்த்தரப்புக் கட்சிகள் என்ற வித்தியாசங்களோ கிடையாது.

எல்லாமே ஒரே மாதிரியான நடத்தைகளிலும் சிந்தனையிலும் ஒரே வகையான அணுகுமுறைகளிலுந்தான் செயற்படுகின்றன.

பழைய பல்லவி என்பார்களே! அதே கதைதான். பழைய கள்ளைப் பழைய மொந்தையிலேயே தருகிறார்கள். ‘மொந்தை’ எனப்படும் பாத்திரத்தைக் கூட மாற்றுவதற்கு இவர்கள் தயாராக இல்லை.

ஆனால், நாடு ஒரு பெரும் யுத்தத்தைக் கடந்திருக்கிறது. இந்த யுத்தத்தினால் பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளன. நாட்டின் பொருளாதார நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்க்கை பொருளாதார நெருக்கடியிலும் ஜனநாயக நெருக்கடியிலும் சிக்கித் தவிக்கிறது. அதிலும் யுத்தப் பிராந்திய மக்களின் வாழ்க்கையும் அந்தப் பிரதேசங்களின் நிலையும் மோசமான கட்டத்திலிருந்து இன்னும் மீளவில்லை.

பொதுவாகச் சொன்னால், யுத்தகால நெருக்கடிகள் சற்றுத் தணிந்திருந்தாலும் நம்பிக்கை கொள்ளக்கூடிய அரசியல் யதார்த்தம் ஒன்று இன்னும் உருவாகவில்லை. இப்போதைக்கு அது உருவாகும் போலவும் தெரியவில்லை.

ஆகவே மீண்டும் நாடு நெருக்கடி நிலைக்குள்தான் சிக்கப்போகிறது என்பது மட்டும் நன்றாகவே தெரிகிறது.

இப்படியான நிலைமைகள் இருக்கும்போதும், நடைமுறைகளிலும் அணுகுமுறைகளிலும் மாற்றங்கள் ஏற்படவில்லை என்றால், இதற்கு என்ன காரணம்?
புதிதாக யாரும் சிந்திக்கத் தயாரில்லை. புதிய மாற்றங்களுக்குச் செல்வதற்கு இவர்களிடம் உடன்பாடில்லை.

இனப்பிரச்சினையினால் சிக்கித்தவித்த நாட்டை மீள்நிலைப்படுத்த வேண்டும் என்ற அக்கறை இவர்களிடம் இல்லவே இல்லை.

பொதுவாகச் சொன்னால், போருக்குப்பின்னான அரசியலை முன்னெடுக்கக்கூடிய தகுதியுள்ள அரசியற் தலைவர்கள் இந்த நாட்டிலே இல்லை எனலாம். இதுதான் நமது பிரச்சினை. இதுதான் நமது அவலம்.

இதுதான் எங்களுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு. இதுதான் நாங்கள் சந்தித்துள்ள அபாயம்.

இனமுரண்பாடு தொடங்கிய காலத்திலிருந்த அரசியற் சூழல் இன்றில்லை.

பனிப்போரின் காலங்கள் மாறி, இருதுருவ அரசியல் முடிவுக்கு வந்து, நிலைமைகள் மாற்றமடைந்து, இன்று புதிய தொரு அணுகுமுறைச் சூழல் தோன்றியுள்ளது.

பிராந்தியத்திற்கூட சீனா, ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது.

பொருளாதார அடிப்படைகள் மாற்றத்துக்குள்ளாகியுள்ளன. ஆனால், இலங்கையின் உள்நாட்டு அரசியலோ அதே பழைய பாணியில், அதே அணுகுமுறைகளில், அதே பிரச்சினைகளுடன், அதே மாதிரியான சொற்களும் குற்றச்சாட்டுகளும் அதிருப்திகளும் மனக்குமுறல்களுடனும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலை நீடித்துக் கொண்டிருக்கும்போது பாதிப்புகளும் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. வெளிச்சக்திகளின் அழுத்தங்கள் நாட்டைப் பாதிக்கும் நிலைக்குச் சென்றுள்ளன. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீள் நிலைப்பட முடியாமற் தவிக்கின்றார்கள். இனமுரண் மேலும் கூர்மையடைந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நாட்டில் அமைதியைக் குறித்தும் எதிர்காலச் சுபீட்சத்தைக் குறித்தும் சிந்திப்போர் எவ்வாறு செயற்படுவர் என்பதை இங்கே விளக்கத் தேவையில்லை.

நிச்சயமாக இனங்களுக்கிடையே நல்லிணக்கத்துக்கும் புரிந்துணர்வுக்கும் ஏற்றமாதிரியான – நம்பிக்கையூட்டக்கூடிய நல்ல காரியங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்பட்டிருக்கும்.

நாட்டின் அமைதியை உறுதிப்படுத்தும் வகையில், ஜனநாயத்தன்மையை மேலும் செழுமைப்படுத்தும் விதமாக, இதற்கான ஒரு பொறிமுறை நிச்சமாக உருவாக்கப்பட்டிருக்கும்.

இதற்குரிய பொறிமுறையை உருவாக்கும் விதமாக நாட்டில் ஒரு சிந்தனையாளர் வட்டம் உருவாகியிருக்கும். அதற்கேற்ற மாதிரி, ஊடகங்களும் அரசியற் தரப்பினரும் செயற்பட்டிருப்பர்.

ஆனால், இவை எதுவுமே நடக்கவில்லை. பதிலாக நம்பிக்கையீனங்களை உருவாக்கும் விதமாகவே காரியங்கள் நடந்து கொண்டிருக்;கின்றன.
கவலைகளை அதிகரிக்கக் கூடியமாதிரியே நிலைமைகள் சென்று கொண்டிருக்கின்றன.

இதற்கெல்லாம் காரணமாக ஒரு சாரார் அரசாங்கத்தைக் குறை சொல்கிறார்கள்@ குற்றம் சாட்டுகின்றார்கள். இவர்களுடைய குற்றச்சாட்டில் நிச்சயமாக உண்மையுண்டு. நியாயமும் உண்டு.

ஆனால், அரசாங்கத்தை மட்டும் குற்றம் சாட்டுவதாலோ அல்லது அரசிடம் பொறுப்பைச் சுமத்தி விடுவதாலோ நாட்டில் அமைதி கிட்டிவிடப்போவதுமில்லை. மக்களின் வாழ்க்கையின் நிம்மதி கிட்டிவிடப் போவதுமில்லை. நாட்டிலுள்ள நெருக்கடியும் நாட்டின் மீதான பிற சக்திகளின் நெருக்கடிகளும் தீர்ந்து விடப்போவதுமில்லை.

நாட்டில் அமைதியை உருவாக்குவதற்கும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் அனைவருடைய பொறுப்பும் கடப்பாடுகளும் ஒத்துழைப்பும் அவசியமாகும்.

ஆனால், அதற்குரிய சூழலை, ஒத்துழைக்கும் நெகிழ்ச்சித் தன்மையை, ஏனைய தரப்பினருக்கான வரவேற்பை, பிற தரப்பினருக்கான மதிப்பை, எல்லோரும் சேர்ந்தியங்கக் கூடிய ஒரு வெளியை அரசாங்கம் - அரசாங்கத்தரப்பு - கொண்டிருக்கவில்லை என்பது ஏற்கக்கூடிய குற்றச்சாட்டே.

அதிலும் போரை முடிவுக்குக் கொண்டு வந்தபோதே அரசியற் தீர்வொன்றைக் காணவேண்டிய பொறுப்புக்கேற்ற வகையில், அரசியற் சூழலை அரசாங்கம் உருவாக்கியிருக்க வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கும் அரசுக்கும் இருந்தது.

ஆனால், அதை அவர்கள் செய்யவில்லை. பதிலாக மேலும் நாட்டைப் பதற்றத்திலும் அமைதியற்ற நிலையிலும் வைத்திருக்கவே முயற்சிகளை மேற்கொண்டனர்.

அத்துடன் போரில் வெற்றிபெற்ற தரப்பாக சிங்களத் தரப்பையும் போரிலே தோற்கடிக்கப்பட்ட தரப்பாக தமிழ்த்தரப்பையும் அணுகவும் முற்பட்டனர். ஏறக்குறைய இந்தப் போக்கே இன்னமும் நீடிக்கிறது.

குறிப்பாக வடக்குக்கு வருகின்ற சிங்கள மக்கள் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தைப் பார்க்கும் மனநிலையோடு வரவில்லை. அதைப்போல போரிலே பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றிய எந்த அக்கறையையும் இவர்கள் காட்டவில்லை.

இதில் தனியே சிங்கள மக்களை மட்டும் குறைசொல்ல முடியாது. பிற பிரதேசங்களில் இருந்து வருகின்ற தமிழ் மக்களும் இந்த அழிவடைந்த பிரதேசங்களை வெறுமனே பார்த்துச் செல்கிறார்களே தவிர, இந்தப் பிரதேசங்களை மீளக்கட்டுவதற்கு முயற்சிக்கவில்லை. அரசாங்கத்தின் நிலைப்பாடு தமக்கு ஒத்து வரவில்லை என்று சொல்கிறார்களே தவிர, அதற்கப்பால், இந்த மக்களுக்கு என்னமாதிரியான உதவிகளைச் செய்து இவர்களை மீள் நிலைப்படுத்தலாம் என்று சிந்திப்பதாக இல்லை.

ஆகையால், அரசாங்கத்தின் இந்தப் போக்கைச் சாட்டாக வைத்துக்; கொண்டு, ஏனைய தரப்பினர்கள் (தமிழ், சிங்கள, முஸ்லிம் கட்சிகள் அத்தனையும்) தமது பொறுப்பைத் தட்டிக் கழிப்பதும் மாற்று முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருப்பதும் புதிய பாதைகளைக் கண்டடையாமல் விடுவதும் பொருத்தமானதல்ல.

பதிலாக அரசாங்கத்தின் போக்குக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்தத் தரப்பினரின் அரசியல் நடவடிக்கைகளும் அரசியல் நிலைப்பாடுகளும் இருக்கின்றன.

எனவே அரசியல் ரீதியாகவும் சரி, சமூக நிலையிலும் சரி, பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகளைச் செய்வதாயினும் சரி, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதிலும் சரி போர் நடைபெற்ற காலத்தின் அணுகுமுறைகளே தொடர்ந்தும் பின்பற்றப்படுகின்றன.

அப்படியாயின், போர் கற்றுத்தந்த பாடங்கள் என்ன? அழிவுகளிலிருந்தும் இழப்புகளில் இருந்தும் நாம் எதைக்கற்றுக் கொண்டோம்? நம் கடந்த காலத்தின் படிப்பினைகள் என்ன?

ஊடகங்கள் அத்தனையும் ஏட்டிக்குப் போட்டியாக ஒரு தரப்புக்கு ஆதரவாகவும் இன்னொரு தரப்புக்கு எதிராகவுமே செயற்படுகின்றன.

புதுச் சிந்தனைதான் இந்த நாட்டுக்கு அவசியமானது என்று தெரிந்திருந்தும் அழிவைத்தந்த அதே பழைய பாணியிலான இனவாதத்தையே அரசும் அமூற்படுத்துகிறது. எதிர்க்கட்சிகளும் நடைமுறைப்படுத்துகின்றன.
புதிய சிந்தனையை முன்வைத்து அரசியலை மேற்கொள்வதற்கு யாரும் முன்வரத் தயாரில்லை. அப்படிப் புதிய சிந்தனையை முன்வைக்கக் கோருவோர் கடந்த காலத்தைப்போல இப்போதும் புறக்கணிக்கப்படுகிறார்கள். அல்லது இருட்டடிப்புச் செய்யப்படுகிறார்கள்.

அப்படிப் பார்த்தால் புதிய தடத்தில் ஓடுவதை விடவும் பழைய தடத்தில் - இனவாதத்திலேயே அரசியலை நடத்துவது சுலபம் என்றும் இனவாத அரசியலுக்கு அதிக உழைப்புத் தேவை இல்லை என்றும் இவர்கள் தீர்மானித்திருக்கின்றனர்.

என்ற படியாற்தான் இவர்கள் போராடுவதற்கு – மாற்று அரசிலுக்கு – போருக்குப் பின்னரான அரசியலுக்குத் துணியவில்லை. அரசாங்கம் தவறு செய்யுமாக இருந்தால், எதிரணிகள் ஓரணி திரளலாம் அல்லவா! ஆனால், அதற்கு எதிரணியில் உள்ள எந்தத் தரப்பும் தயாரில்லை.

அதாவது, சமாதானத்திற்கும் முன்னேற்றத்திற்கும் தீர்வுக்கும் ஜனநாயகத்திற்கும் இடமில்லை என்றால் இவற்றைக்குறித்துப் போராட வேண்டிய பொறுப்பு அரசியற் கட்சிகளுக்கும் அரசியற் தலைவர்களுக்கும் உண்டு. ஆனால், இந்தப் போராட்டங்களை நடத்துவதற்கு யார் தயார்? எந்தக் கட்சி இதுவரையில் அதற்காக முயன்றிருக்கிறது? இனியாவது யார் முன்வருவார் இந்த நாட்டை மீளுருவாக்கம் செய்வதற்கு?

அதாவது போருக்குப் பின்னரான இலங்கையைச் சமாதானத்திலும் அமைதியிலும் ஜனநாயகத்திலும் அபிவிருத்தியிலுமாகக் கட்டமைப்பதற்கு யார் வருவார்?
00
 

2009 ·. by TNB