கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

கிழக்கில் தேர்தல் முடியவில்லை - ஹக்கீமின் தீர்ப்பு எப்படி?

Sunday, 16 September 2012





















கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் முடிவுகளை அடுத்து, புதிர் நிறைந்த முடிச்சொன்றை வைத்துக்கொண்டிருக்கிறார் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம். இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கும் 2012. 09.14 காலைவரையில் இந்த முடிச்சை ஹக்கீம் அவிழ்க்கவில்லை. ஹக்கீம் அவிழ்க்கவுள்ள முடிச்சில்தான் மாகாணசபையின் கதையும் விதியும் உள்ளது. ஆகவேதான் அதற்கு இந்தப் புதிர்த்தன்மை அதிகம். கவர்ச்சியும் அதிகம்.

நடந்த தேர்தலில் மூன்றாம் நிலையில் இருக்கும் கட்சி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ். அந்தக் கட்சியில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆக ஏழு மட்டுமே.

ஆனால், கிழக்கு மாகாணசபையின் தலைவிதியைத் தீர்மானிக்கக் கூடிய நிலையில் மு.காவும் ஹக்கீமும் பெற்றிருப்பதே இங்கே கவனத்தை ஈர்ப்பது. இதற்குக் காரணம், அந்தக் கட்சி தேர்தலுக்கு முன்னர் எடுத்த தீர்மானந்தான்.  மிகக் கடினமான ஒரு நிலையில் அந்தத் தீர்மானத்தை மு.கா எடுத்தது.
அரசாங்கத்துடன் சேர்ந்திருந்து கொண்டே அரசாங்கத்தரப்பின் கூட்டிற்குள் அடங்காமல், விலகித் தேர்தலில் தனித்து நின்றமை இதில் முக்கியமான ஒன்று. இது ஒரு புத்திபூர்வமான, துணிச்சமல் மிக்க முடிவு. ஆனால், நெருக்கடிகள் நிறைந்தது.

இதற்காக ஒரு கட்டத்தில் அந்தக் கட்சியின் முக்கிய நிலையில் இருக்கும் பஷீர் சேகுதாவூத், தன்னுடைய பிரதி அமைச்சர் பதவியையே துறந்தார்.
அதேவேளை மறுபக்கத்தில் ஹக்கீமையும் மு.காவையும் வளைத்துப் போடுவதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் சம்மந்தனும் கடுமையாக முயற்சித்தனர். தமிழ்பேசும மக்கள் என்ற அடிப்படையிலும் சிறுபான்மைச் சமூகங்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடிகள் என்ற வகையிலும் ஒரு கூட்டிணைவு தேவை என்ற வகையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மு.காவுக்கு அழைப்பு விடுத்தது.

இதிலும் மு.காவும் ஹக்கீமும் சிக்கக்கொள்ளவில்லை.
அதாவது தேர்தற்காலத்தில் வழமையாக ஏற்படுத்தப்படுகின்ற சந்தர்ப்பவாதக் ‘கூட்டு’ என்ற பொதுவிதியை அது கடந்தது.

இதற்கான வெகுமதியாக இன்று மு.காவுக்கு ஒரு வலுவான ஸ்தானம் கிடைத்துள்ளது@ ஒரு சிறந்த வாய்ப்புக் கிட்டியுள்ளது.
அரசாங்கத்துடன், இணைந்து தேர்தலில் மு.கா நின்றிருந்தால், அரசின் தீர்மான வளையத்துக்குட்பட்டே இருந்திருக்க வேண்டும். அதாவது அரசாங்கம் தீர்மானிக்கும் எல்லைப் பரப்புக்குள்ளும் அதனுடைய நிபந்தனைகளுக்குட்பட்டும் நின்றிருக்க வேண்டும்.
அப்படி நின்றிருந்தால், இன்றிருக்கும் வலுநிலை மு.காவுக்குக் கிடைத்திருக்காது.

அதைப்போலவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் நின்றிருந்தாலும் அதற்கு இத்தகைய ஒரு நிலை வாய்த்திருக்காது. கூட்டமைப்புடன் ஆட்சியைப் பகிர்ந்து கொண்டிருக்க முடியுமே தவிர, அதற்கப்பால் வலுவைப் பிரயோகிக்கும் ஒரு நிலை ஏற்பட்டிருக்காது.

இந்த இடத்தில்தான் மு.கா பலருடைய கவனிப்பையும் பெற்றிருக்கிறது.
அரசியலில் உபாயங்களும் தந்திரோபாயங்களும் முக்கியமானவை. பலவீனமான நிலையிலும் பலத்தைக் கொடுப்பதிலும் நெருக்கடிச் சந்தர்ப்பங்களில் நெருக்கடி வளையத்தைத் தகர்ப்பதிலும் உபாயங்களுக்கும் தந்திரோபாயங்களுக்கும் முக்கிய பங்குண்டு.
மு. கா தெரிந்தோ தெரியாமலோ நல்லதொரு உபாயத்தைக் கையாண்டுள்ளது.

ஒரு சமூகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற கட்சியும் அதனுடைய தலைமையும் எடுக்கின்ற தீர்மானத்தைப் பொறுத்தே அந்தச் சமூகத்தினுடைய பாதுகாப்பும் எதிர்கால முன்னேற்றமும் அமையும்.

மு.கா எடுத்த முதற்கட்டத் தீர்மானம் அதற்கு ஒரு கட்ட வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது. ஆனால், இந்த வெற்றி இன்னும் முழுமைப்படுத்தப்படவில்லை. இதற்கு அந்தக் கட்சியும் அதனுடைய தலைமையும் இன்னும் போராட வேண்டியுள்ளது. இன்னும் நிதானமாகவும் புத்திபூர்வமாகவும் இயங்க வேண்டியுள்ளது. இதுதான் இன்று மு.காவுக்கும் அதனுடைய தலைமைக்கும் உள்ள பெருஞ்சவால்.

அப்படிப் பார்த்தால், இன்னொரு நெருக்கடிச் சூழலுக்குள்தான்  மு.காவும் அதனுடைய தலைமையும் உள்ளது எனலாம்.

இந்த நிலையில் இந்தச் சவாலை எதிர்கொள்ளவும் இந்த நெருக்கடியை முறியடிப்பதற்காகவும் மு.கா தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
எனவே, அடுத்ததாக ஹக்கீம் என்ன சொல்லப்போகிறார், எந்தப் பக்கும் திரும்புவார், யாருக்குப் பச்கைக் கொடியைக் காட்டுவார் என யாருக்குமே ஒன்றும் தெரியவில்லை. ஏன் அவருக்கே அதைப்பற்றி இன்னும் தெரியாதிருக்கலாம். ஏனெனில் அந்த அளவுக்குக் கட்சிக்குள்ளே குழப்பங்களும் அபிப்பிராய பேதங்களும் விவாதங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

எனவே இந்த இடைநிலையில் ஊகங்கள் பலவிதமாகக் கிளம்பித் தாராளமாக  அலைகின்றன.

அரசாங்கம் சொல்கிறது, தனக்கே மு.காவின் ஆதரவு கிடைக்கும் என்று.
சம்மந்தனும் அவருடைய சகாக்களும் சொல்கிறார்கள், தமிழ்பேசும் மக்களின் உணர்வுகளை மு.கா புறக்கணிக்காது எனத் தாம் நம்புவதாக.

மு.கா அரசாங்கத்தின் பக்கம் சாய்ந்து கொள்ளக்கூடிய சாத்தியங்களே அதிகமாக உள்ளதாக சில ஆய்வாளர்கள் ஆருடம் சொல்கின்றனர்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பக்கம் மு.கா வரவேண்டும் எனச் சில இணையத்தளங்கள் கருத்துக் கணிப்புச் செய்துள்ளன.

ஆனால், மு.கா எல்லாவற்றுக்கும் பதிலாக இன்னும் கதவைத்திறக்காமல், சத்தத்தை எழுப்பாமல், வெளியே பூட்டை மட்டும் தொங்க விட்டுள்ளது.
இதனால், (ஹக்கீமின் பதில் வரும்வரையில்) பதற்றத்தோடிருக்கிறது அரசாங்கம்.

அதே பதற்றத்தோடிருக்கிறது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.
மேலும் மு.காவுக்கு வாக்களித்த மக்கள்.

மேலும் அதனுடைய ஆதரவாளர்கள்.

மேலும் ஊடகங்கள்.

மேலும் அரசியல் அவதானிகள்.

எல்லாவற்றுக்கும் அப்பாலான உச்ச பதற்றத்திலிருக்கின்றன அமெரிக்காவும் இந்தியாவும்.

இப்படி எல்லோரையும் எல்லாத்தரப்பையும் பதற்றத்துக்குள் வைத்திருப்பவர் நிச்சயமாக ஒரு ‘கிங் மேக்கரா’கவே இருக்க முடியும்.

ஆம், ஹக்கீம் இன்று கிழக்கில், இலங்கையின் அரசியலில் ஒரு ‘கிங் மேக்கராகவே’ மாறியிருக்கிறார்.

எனவே இந்தக் ‘கிங் மேக்கர்’ என்ன சொல்லப்போகிறார்? என்ன செய்யப்போகிறார்? யாரை அணைத்துக் கொள்ளப்போகிறார்? என்ற கேள்விகள் புதிராகவே உள்ளன.

ஆகவே ஒரு வகையில் இந்த மாதிரியான நிலை என்பது வெளித்தோற்றத்துக்கு பெரும் வாய்ப்பாகத் தெரிந்தாலும் உள்ளே நெருக்கடிகளும் சிக்கல்களும் நிறைந்த ஒன்றாகவே இருப்பதுண்டு.
வரலாற்றில் எல்லோருக்கும் வாய்ப்புகள் கிட்டுவதுண்டு. சில வாய்ப்புகள் அபூர்வமானவை. எதிர்பார்த்திராதவை. எதிர்பார்த்திராத அளவுக்கானவை.

இப்பொழுது மு.காவுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பும் அத்தகைய ஒன்றே.
மு.கா தனியாக அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றிருந்தாற்கூட இத்தகைய ஒரு வாய்ப்பைப் பெற்றிருக்காது. அது தனியே அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுத் தனியாக ஆட்சியமைத்திருந்தாலும் அதிகாரப் பகிர்விலும் வள ஒதுக்கீடுகளிலும் பிற விசயங்களிலும் அரசாங்கத்துடன் இழுபறிப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், இந்த மாதிரிப் பேரம் பேசும் நிலையொன்றினூடாக ஆட்சியில் பங்குபற்றும்போது அதனுடைய மதிப்பும் லாபங்களும் அதிகம். இது பின்னர் இலகுவான வழிமுறை ஒன்றும் கூட. இந்த ஆட்சிப் பகிர்வென்பது இரண்டு தரப்பையும் மனதிற்கொண்டே அணுகப்படுகிறது.

இதேவேளை, இன்னும் மு.காவின் முடிவுகள் வெளிவராத நிலையில் முன்னனுமானங்களை இங்கே நாம் அடுக்கிக் கொண்டிருக்க முடியாது. அது பொருத்தமானதும் அல்ல.

முஸ்லிம் காங்கிரஸ் அடைந்திருக்கும் முதற்கட்ட வெற்றியை அல்லது பாதி வெற்றியை முழுவெற்றியாக மாற்ற வேண்டுமானால், அது அடுத்ததாக எடுக்கவுள்ள தீர்மானமும் அதைச் செயற்படுத்துவதற்கு அது கையாளப்போகும் தந்திரோபாயங்களும் உறுதிப்பாடும் முக்கியமானவை.
இல்லையெனில் கைக்கெட்டியது வாய்க்குக் கிடைக்கவில்லை என்ற கதையாகிவிடும்.

இங்கேதான் நாம் இந்தப் பிரச்சினையைப் பற்றி ஆராயவேண்டியுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் முதலில் தன்னுடைய தரப்பு மக்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது. அப்படிச் சிந்திக்கும்போதே கட்சியின் நலனும் அதனுடைய எதிர்காலமும் ஒரு எல்லைவரையில் பேணப்படும். இதைக்குறித்த விவாதங்கள் கட்சிக்குள் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன என அறிய முடிகிறது.

இதேவேளை கட்சியின் நலனும் எதிர்காலமும் தனியே முஸ்லிம் மக்களுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டு நிற்பதில்லை. அது அவர்களையும் உள்ளடக்கிக்கொண்டு, அரசியலுடன் தொடர்புடைய ஏனைய தரப்புகளையும் சேர்த்து இயங்குவது.

அப்படிப் பிற தரப்புகளையும் சேர்த்துக்கொண்டு இயங்கும்போதே கட்சியின் நலனும் அதனுடைய எதிர்காலமும் உறுதிப்படுத்தப்படும். இது அந்தக் கட்சி பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்களையும் அது இயங்குகின்ற அரசியற் தளத்தையும் முன்னேற்றும்@ பாதுகாக்கும்.

எனவே முஸ்லிம் மக்களின் அபிலாஷைகள், அவர்களுடைய பிரச்சினைகள் என்பவற்றுடன் கிழக்கில் உள்ள ஏனைய சமூகத்தினரைப் பற்றியும் மு.கா சிந்திக்க வேண்டியுள்ளது.

அத்துடன், இலங்கையில் ஆட்சியை நடத்தும் தரப்பையும் கவனத்திற் கொள்ள வேண்டியிருக்கிறது.

சிறுபான்மைத் தரப்பினர் என்ற அடிப்படையில் சவால்களையும் நெருக்கடிகயைம் சந்திக்கும் தமிழ்த்தரப்பைப் பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது.

மேலும் இலங்கை அரசியல் மற்றும் சமூக நிலைமைகளில் நேரடி மற்றும் மறைமுகத் தலையீடுகளையும் உள்நுழைவுகளையும் மேற்கொள்ளும் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் நிபந்தனைகளைப் பற்றியும் மு.கா கவனிக்க வேண்டியிருக்கிறது.

எனவே இத்தகைய பல தரப்பின் எதிர்பார்க்கைகள், நிபந்தனைகள், இழுபறிகளின் மத்தியிலேயே தன்னுடைய கப்பலைப் பாதுகாப்பாக ஒரு துறைமுகத்தில் நிறுத்த வேண்டிய பொறுப்பில் மு.கா வின் தலைவர் ஹக்கீம் உள்ளார்.

ஒரு காலத்தில் கப்பற்துறை அமைச்சை வழிப்படுத்தியது மு.கா. பல கப்பல்கள் நங்கூரமிடுவதற்கும் அவை துறைமுகத்தைச் சேர்வதற்கும் அன்றைய மு.கா தலைவர் வழிப்படுத்தியாக இருந்தார்.
இப்போது நீதி அமைச்சுப் பொறுப்பில் இருந்து நீதித்துறையின் பொறுப்பை வழிப்படுத்துகிறார் ஹக்கீம்.

ஹக்கீமின் தராசு, அவருடைய தீர்ப்பு, அவருடைய நியாயம், அவருடைய வழிகாட்டல், அவருடைய தீர்மானம் எப்படி இருக்கப்போகிறது?

அது கிழக்கில் மேலும் கொந்தளிப்புகளை ஏற்படுத்துமா? அல்லது புதிய சகாப்தத்தை உருவாக்குமா? அல்லது கிடைத்த வாய்ப்பையே ஹக்கீம் கை நழுவ விடுவாரா?

அவருடைய மனம் எங்கே திருப்பப்போகிறது? எங்கே நங்கூரமிடப்போகிறது?
00

இலங்கையைப் பாதுகாக்க எவ்வளவோ போராட வேண்டியுள்ளது

Friday, 7 September 2012



இலங்கையின் பெரும்பாலான ஊடகங்களில் (தமிழில் அல்ல) அண்மையில் வெளியான கார்ட்டூன்கள் பல்கலைக் கழகங்களை அரசாங்கம் கையாளும் முறைமை தொடர்பாகவே இருந்தன. இவற்றில் ஒரு கார்ட்டூன் மிக உச்சமாக ரசிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால், அது சொல்கின்ற யதார்த்தத்தையும் உண்மையையும் ஏற்கக் கடினமாக உள்ளது.

மூடப்பட்ட பல்கலைக்கழகத்தின் கேற்றுக்கு முன்னால் நின்று ஒரு நாய் காலை உயர்த்தி அந்தக் கேற்றுக்கே சலம் அடிக்கிறது. காலை உயர்த்திச் சலம் அடிக்கும் அந்த முகம் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவினுடையது.

பல்கலைக்கழகங்களை அரசாங்கம் எத்தகைய நிலையில்  அணுகுகிறது, புரிந்து வைத்திருக்கிறது என்று உணர்ந்து கொள்வதற்கு இதை விடச் சிறந்த வேறு வார்த்தைகள் தேவையில்லை.

ஒரு நாட்டின் அறிவையும் ஆற்றலையும் வளர்ப்பதில் கல்வியும் அதன் உச்சச் செயற்களமாகப் பல்கலைக் கழகங்களும் இயங்குகின்றன.

இலங்கையின் கல்வி முறைமை தொடர்பாகக் கடுமையான விமர்சனங்கள் நீண்டகாலமாக உள்ளன. அந்த விமர்சனங்களையும் புதிய சிந்தனைகளையும் இலங்கை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. அப்படி இலங்கை அவற்றை ஏற்றுக்கொண்டாலும் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு உலக வங்கியோ உதவும் நாடுகளோ முழுமையாக ஒத்துழைக்கப்போவதுமில்லை. ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை.

இலங்கையின் கல்வித்துறைக்கு மட்டுமன்றி, இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளிலும் ஆட்சிக்கும் கூட இவையே அனுசரணை வழங்குவதால் இந்தத் தரப்புகளின் கட்டுப்பாடுகளை அரசாங்கம் எடுத்தெறிந்து விடவும் முடியாது. மீறி விடவும் முடியாது.

இதைவிட இலங்கைப் பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் சிந்திப்போரிடம் நீண்டகாலமாக உண்டு. ஆனால் இதைக் குறித்தும் அரசாங்கம் எதையும் செய்வதாக இல்லை.

இப்பொழுது எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கை முழுவதிலுமுள்ள பல்கலைக் கழகங்கள் கால எல்லையின்றி மூடப்பட்டுள்ளன. பல்கலைக் கழகங்களை மூடுவதென்ற தீர்மானத்தை அரசாங்கமே எடுத்திருக்கிறது.

தொடக்கத்தில் பல்கலைக்கழகங்களின் கல்வி சாராத ஊழியர்கள் தங்களுடைய போதாக்குறைகளை முன்வைத்துப் போராட்டங்களை நடத்தினார்கள். இதனால், சில வாரங்கள் பல்கலைக்கழகங்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெறவில்லை.

அடுத்த கட்டமாக, விரிவுரையாளர்கள் தங்களின் குறைபாடுகளை முன்னிறுத்திப் பணிப்புறக்கணிப்புப் போராட்டங்களை ஆரம்பித்தார்கள். இந்தப் போராட்டம் வாரங்களைக் கடந்து மாதங்களாகிக் கொண்டிருக்கிறது.

ஆனால், அரசாங்கத் தரப்பில் இருந்து எந்த நல்ல சமிக்ஞையும் கிடைக்கவில்லை. பதிலாக அங்கிருந்து அபாய விளக்குகளே எரிகின்றன.
இன்றைய பொது அபிப்பிராயம் மற்றும் பொது அச்சம் இலவசக் கல்விக்கு நெருக்கடியைக் கொடுப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறதா என்பதே.

இந்த அறிவிப்பைப் பகிரங்கமாகவே கொழும்பிலும் ஏனைய இடங்களிலும் (தமிழ்ப்பகுதிகளில் இது குறைவு அல்லது இந்த உணர்கை இல்லை எனலாம்) இலங்கையின் சிந்தனையாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

மட்டுமல்ல, அரச கல்வியைப் பாதுகாப்போம், தனியார் மயப்படுத்தப்படும் கல்வியை எதிர்ப்போம் என்ற குரல்களோடு போராட்டங்களையும் இந்தச் சிந்தனையாளர்கள் நடத்தி வருகிறார்கள். கடந்த 23.08.2012 வியாழக்கிழமை கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் ‘அரச கல்வியைப் பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில் பெரியதொரு ஆர்ப்பாட்டமும் பொதுக்கூட்டமும் நடந்துள்ளது.

ஆனால், அரசாங்கம் எல்லாவற்றுக்கும் மௌனத்தையே – புறக்கணிப்பையே கடைப்பிடிக்கிறது. அதேவேளை அது தன்னுடைய கள்ளத்தனங்களின் வழியிலேயே தன்னிச்சையான முடிவுகளை எடுத்துச் செயற்படுகிறது.

தனியார் பல்கலைக் கழகங்களின் வருகை, அல்லது உருவாக்கும், அவற்றின் பெருக்கம் என்பன எதிர்காலத்தில் நாட்டின் கல்வியை, நாட்டுக்கான கல்வியை அழித்து விடும்.

அத்தகைய கல்வி ஒன்று பெருக்கமடையுமானால் பிறருக்கான கல்வியும் சிந்தனைமுறையும் அவர்களுக்கான கருவியாக்கலுமே இலங்கையில் நிகழும் என சிலர் அபிப்பிராயப் படுகிறார்கள். இது வெறும் அபிப்பிராயமாக அல்லாமல் கலக்கமாகவும் உள்ளது.

தனியார் பல்கலைக்கழகங்களின் வருகை என்பது அல்லது அவற்றின் உருவாக்கம் என்பது அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ், நிபந்தனைகளின் கீழ் இருக்குமானால் அதை வரவேற்கலாம்.

தனியார் பல்கலைக்கழகங்களின் கல்வியானது வழமையை விட அகன்ற பரப்பைக் கொண்டதாக இருக்கும். அது போட்டியை அடிப்படையாகக் கொண்டதால் போட்டிக்கான சிறப்பியல்புகள் அதைத் தரமுயர்த்திக் கொண்டே இருக்கும். ஒரு சர்வதேச முகத்தைக் கொண்டதான கல்வியை இலங்கையிலும் பெறக்கூடியதாக இருக்கும் என்கின்றனர் இன்னொரு சாரார்.

அரச பல்கலைக் கழகங்களும் அவற்றின் கல்வி முறைமையும் பெரும்பாலும் சம்பிரதாய பூர்வமானதாக மாறிவிட்டன. சில மாற்றங்கள் அதில் நிகழ்ந்தாலும் அது மிக மிகத் தாமதம் கொண்டதாகவே இருக்கிறது. அதிலும் பல்கலைக்கழகங்களில் அவற்றை நடைமுறைப்படுத்துவதும் அவற்றை பல்கலைக் கழகங்கள் கையாளும் விதமும் மந்த நிலைக்குரியன என்று வாதிடுகின்றனர் மற்றொரு தரப்பினர்.

தனியார் பல்கலைக்கழகங்களின் வருகையை ஆதரிப்பதென்பது, அரச பல்கலைக்கழங்களைச் சுறுசுறுப்பாக்குவதற்கான ஒரு விசேட ஏற்பாடே என ஒரு நண்பர் குறிப்பிடுகிறார்.  தூசி படிந்து போயிருக்கின்ற அரச பல்கலைக்கழங்களைத் துப்புரவாக்கிப் புதுமைப்படுத்தும் ஒரு காரியமே இது என்கிறார் மேலும் அவர்.

இப்படி விவாதங்களை உருவாக்கியுள்ள அரசாங்கம் வெளிப்படையாகத் தன்னுடைய நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை.

அதேவேளை அது அரச பல்கலைக் கழகங்களின் செயற்பாட்டை முடக்கும் விதமாக நடந்து கொள்கிறது.

இந்த அடிப்படையிலேயே பல்கலைக் கழகம் சார்ந்தோரின் கோரிக்கைகளை அது பொருட்படுத்தவில்லை. இதற்கான ஒரு குறியீடாகவே இந்தப் பத்தியின் ஆரம்பத்தில் கூறப்பட்டது போல உயர் கல்வி அமைச்சரின் கார்ட்டூன் அமைந்துள்ளது.

மூடப்பட்டிருக்கும் பல்கலைக் கழகத்தை திறப்பதற்குப் பதிலாக அதற்குச் சலம் அடிக்கும் எண்ணத்திலும் செயற்பாட்டிலும் இருக்கின்றது அரசாங்கம் என்தே இதன் அர்த்தம்.

காலவரையின்றிய அளவுக்குப் பல்கலைக் கழகங்களை மூடி நாட்டின் கைநாடியைப் பிடித்துப் பார்க்கிறது அரசாங்கம் என்று சொல்லப்படுகிறது.

அதாவது, மூடப்பட்டுள்ள பல்கலைக் கழகங்களைத் திறக்கச்சொல்லி நடக்கும் கோரிக்கையின் வலுவையும் அந்தக் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடுவோரின் வலுவையும் அரசாங்கம் பரிசோதித்துப் பார்க்கிறது.

இப்படிப் பார்ப்பதன் மூலமாக அது தனக்கெதிராக உள்ள எதிர்ப்பு மனநிலையையும் எதிர்ச்செயற்பாட்டு வலுவையும் கணக்கெடுக்க முயற்சிக்கிறது. தன்னுடைய எதிர்கால அரசியற் தேவைகளுக்காக இவ்வாறு இந்த அரசாங்கம் செயற்படுகிறது என்று சில விமர்சகர்கள் இந்த நிலை தொடர்பாக அபிப்பிராயம் தெரிவிக்கின்றனர்.

பல்கலைக்கழங்களில் கைவைத்தால் அது நாடு தீப்பற்றி எரிவதற்குச் சமம் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், இலங்கையில் அந்த நிலைமை ஏற்படுமா என்று தெரியவில்லை.

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை பலவீனப்படுத்தியும் ஒடுக்கியும் வந்த ஒரு பாரம்பரியமே இலங்கையில் உள்ளது. ஆட்சியில் எந்த அரசாங்கம் இருந்தாலும் இதுதான் கதை. போராட்டங்களிலுள்ள நியாயங்களை அவை ஒரு போதும் உணர்ந்து கொண்டதோ ஏற்றுக்கொண்டதோ இல்லை.

ஒரு தரப்பை இன்னொரு தரப்புக் குற்றம் சாட்டினாலும் அனைத்துத் தரப்பினதும் அடிப்படை இயல்புகளும் நோக்கங்களும் ஒன்றே.

இதையே மக்கள் எப்போதும் விளங்கிக் கொள்ள வேண்டியதாக உள்ளது. மக்கள் மட்டுமல்ல, மக்களைச் சிந்திக்கத் தூண்டும் சமூகச் செயற்பாட்டாளர்களும் சிந்தனையாளர்களும் இதைத் தாமும் விளங்கிப் பிறருக்கும் விளக்க வேண்டும்.

நாட்டுக்கு ஏற்படுகின்ற நன்மைகள் மற்றும் தீமைகளைப் பற்றிய விழிப்புணர்வை மக்கள் கொண்டிருக்க வேண்டியது அவசியம். இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு அதை ஏற்படுத்தத் தகுதியுடையோரைச் சேர்ந்தது.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதரைக் கடிப்பது என்று சொல்வார்கள். ஏறக்குறைய அத்தகைய ஒரு நிலையில்தான் இன்றைய இலங்கைச் சூழல் உள்ளது.

இனங்களுக்கிடையிலான நெருக்கடிகள், மத நெருக்கடி, அனவருக்குமான பொருளாதார நெருக்கடி, ஜனநாயக நெருக்கடி, அரசியல் நெருக்கடி என விரிந்து சென்று கொண்டிருக்கும் நெருக்கடியில் இப்போது பல்கலைக்கழங்களும் அவற்றின் கல்விச் செயற்பாடுகளும் சிக்கியுள்ளன.

ஒரு அரசாங்கமானது தான் பிரதிநிதித்துவப் படுத்துகிற மக்களையும் நாட்டையும் பாதுகாத்து முன்னோக்கிப் பயணிக்க வழிகாண வேண்டும். அது மக்களுக்கான அடிப்படைகளை உருவாக்க வேண்டும். குறைந்த பட்சம் ஏற்கனவே இருக்கின்ற அடிப்படைகளையேனும் பாதுகாக்க வேண்டும்.

ஆனால், இலங்கையில் இந்தத் தன்மைகள் குறைவு. ஆட்சியில் இருந்த அரசாங்கள் ஒவ்வொன்றும் ஏற்கனவே இருந்த அடிப்படைகளையே தகர்த்துத்தான் வந்துள்ளன.

இதில், இன்றைய அரசாங்கமானது, அடிப்படைகளைத் தகர்ப்பதில் மிகக்கடுமையாகத் தொழிற்படுகிறது.

நாட்டின் நலன்கள் மற்றும் மக்களின் நலன்கள் என்று சிந்திப்பதற்குப் பதிலாக ஆட்சியில் அங்கம் வகிக்கின்ற சிலரின் அல்லது ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் நலன்களுக்காக மட்டுமே அது இயங்குகிறது. அதிலும் வெளிச்சக்திகளின் நலன்களுக்காக நாட்டையும் மக்களையும் பலியிட்டுத் தன்னுடைய வயிற்றை நிரப்பிக் கொள்கிற அரசாங்கமாக இது உள்ளது.

இப்படி இயங்கும் அரசை தரகு அரசாங்கம் என்று அழைப்பதே பொருத்தமானது.

இங்கேதான் மீண்டும் நாம் கவனிக்க வேண்டிய விசயங்கள் இருக்கின்றன. அரசாங்கத்தை விமர்சிப்பது (மேற்குறிப்பிட்ட கார்ட்டூன் உட்பட) அதைக் கண்டிப்பது, அதைக் குற்றம் சாட்டுவது என்பதற்கப்பால், விழிப்புணர்வோடு அதை எதிர்த்துப்போராடுவது என்பது இன்று அவசியமானது.

ஆனால், இந்தப் போராட்டங்கள் மறுபடியும் இன்னொரு அதிகாரத் தரப்பைப் பலப்படுத்துவதாகவோ, அல்லது பிற சக்திகளுடைய நலன்களைப் பாதுகாப்பதாகவே அமைந்து விடக்கூடாது. ஆனால், பிற சக்திகள் இதற்காகவே காத்திருக்கின்றன.

அவை அரசாங்கத்தைத் தமக்குச் சார்பாக இயங்க வைக்கும். அதேவேளை அரசாங்கத்தை எதிர்க்கின்ற தரப்பையும் அவை தமக்குச் சாதமாகக் கையாளும். எந்தத் தரப்புப் பலம்பெறுகிறதோ அல்லது எந்தத் தரப்பு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுகிறதோ அந்தத் தரப்பைத் தமது கால்களுக்கிடையில் வைத்துக் கொள்வதே இவற்றின் நோக்கம்.

எனவே உச்சமான விழிப்புணர்வுடைய செயற்பாடுகளின் மூலமே ஒரு நாட்டின் அடிப்படைகளையும் அதனுடைய கல்வியையும் மக்களையும் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்பானவை. ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. ஆகவே, பல்கலைக் கழகங்கள் இன்று எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளும் சவால்களும் முழு நாட்டுக்கும் முழு அடிப்படைகளுக்கும் எதிரான நெருக்கடிகளும் சவால்களுமாகும்.

இங்கே நாம் இன்னொரு முக்கியமான விசயத்தையும் கவனிக்க வேண்டும்.

நாட்டினுடைய புத்திஜீவிகளின் மையமாக இருக்கின்ற பல்கலைக்கழகத்தினர் சிந்திப்போரைப் பெருமளவுக்குக் கொண்ட பல்கலைக்கழகங்கள், போராடும் ஆற்றலையும் பொறுப்பையும் உடைய பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் இந்தச் சவால்களையும் நெருக்கடிகளையம் எதிர்நோக்கிப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய வரலாற்றுப் பொறுப்பைக் கொண்டுள்ளனர்.

இந்தப் பொறுப்பை அவர்கள் முழு நாட்டு மக்களுக்கும் மாற்றி ஒரு எழுச்சியான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இலங்கையைப் பாதுகாப்பதற்கு எவ்வளவோ போராட வேண்டியுள்ளது. அதாவது இலங்கையர் ஒவ்வொருவரும் இலங்கையில் வாழ்வதற்கு நிறையப் போராட வேண்டியுள்ளது.

ஏனெனில் அந்தளவுக்கு இலங்கை நெருக்கடிகளாலும் சவால்களாலும் அபாயங்களாலும் நிரப்பிப் போயுள்ளது.

00

கிழக்குத் தேர்தல் - வெற்றி யாருக்கு?

Thursday, 6 September 2012




-  

இலங்கையில் மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தல் நடந்தாலும் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலே பெரும்பாலான தமிழ் ஊடகங்களிலும் மையப்படுத்திப் பேசப்பட்டது. இணைய வெளியிலும் இதுதான் நிலை. புலம்பெயர் தமிழர்களில் பெரும்பகுதியினரும் இலங்கையில் இருக்கும் தமிழர்களில் அநேகரும் கூட கிழக்குத் தேர்தலைக் குறித்தே சிந்தித்தார்கள். அதைப் பற்றியே கதைத்தார்கள்.

இதனால், தவிர்க்க முடியாமல் இந்தப் பத்தி கூட கிழக்குத் தேர்தல் முக்கியப் படுத்தப்பட்டதைப் பற்றியும் அதன் முடிவுகளைப் பற்றியுமே எழுதப்படுகிறது.

கிழக்குத் தேர்தலில் தமிழ்த்தரப்பு போட்டியிடக்கூடாது என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. இதற்காக தமிழ்ப் புத்திஜீவிகள் என்று சொல்லிக்கொள்ளும் அமைப்பொன்று அறிக்கை கூட வெளியிட்டது. தமிழ்த்தேசிய விடுதலை முன்னணி என்ற கட்சியும் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டிருந்தது. ஆனால் இந்த மாதிரியான விருப்பங்கள், கோரிக்கைகள் எல்லாவற்றையும் புறக்கணித்து விட்டு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிட்டது.

தேர்தல் என்று வந்த விட்டால் வெற்றியடைய வேண்டும் என்ற வெறியும் கூடவே வந்து விடும். இந்த வெற்றியைப் பெற வேண்டும் என்றால், எதைச் சொல்லியும் யாரைப் பிடித்தும் எதைச் செய்தும் அதைப் பெற வேண்டும் என்பதே விதி. இதில் வெட்கப்படுவதற்கோ, மனச்சாட்சிப்படி நடந்து கொள்வதற்கோ அறிவு பூர்வமாகச் செயற்படுவதற்கோ எதுவும் இருப்பதில்லை.

ஆளாளுக்கு ஒரு நியாயத்தைச் சொல்லிக்கொண்டாலும் அடிப்படையில் எல்லோருக்கும் தங்கள் நலமே முதன்மை. நிச்சயமாக மக்களின் நலன் இல்லை. தத்தம் கட்சிகள் வெல்ல வேண்டும் என்று தொண்டர்களும் அபிமானிகளும் விரும்புகிறார்கள். தொண்டர்களை தங்களின் ‘அடிப்பொடி’களாகக் கட்சிகளும் தலைவர்களும் வைத்திருப்பது ஒரு பாரம்பரிம்.

போதாக்குறைக்கு இனவாத அடிப்படையில் கட்சிகள் தங்கள் பாரம்பரியத்தைப் பேணுவதால் இனவாதச் சிந்தனையில் ஊறிப்போன சனங்களும் அந்த அடிப்படையிலேயே சிந்திக்கத் தலைப்படுகிறார்கள். யாருக்கும் நீதி, நியாயம், சரி, பிழை எதுவும் புலப்படுவதில்லை.

எனவே தேர்தற் பரப்புரையும் தேர்தல் முடிவுகளும் அந்த அடிப்படையில்தான் அமையும். இதில் வேறு மாற்றங்களைக் காணவே முடியாது.

சனங்கள் எல்லாவற்றையும் இனவாதம் என்ற கண்ணாடியினூடாகத்தான் பார்க்கிறார்கள். அவ்வாறே அவர்கள் பழக்கப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்குத் தோதாக கட்சிகளும் தலைவர்களும் பொருத்தமான“ வாதங்களைக்“ கண்டு பிடித்து அடுக்கி வைத்திருக்கிறார்கள். சற்று வித்தியாசமாகச் சிந்திப்பதற்கு இடைவெளியை – மாற்றங்களை யாரும் விட்டு வைப்பதில்லை.

ஆகவே, எல்லாக் கட்சிகளும் தங்கள் தங்கள் சாத்தியப்பாடுகளுக்கு ஏற்றமாதிரி, குத்துக்கரணங்கள், கோமாளித்தனங்கள், அயோக்கியத்தனங்கள், தகிடு தித்தங்கள் என்று என்னென்னவெல்லாவற்றையுமோ செய்து, தேர்தல் திருவிழாவை நடத்தியுள்ளன.

கிழக்குத் தேர்தலில் மட்டும்தான் இந்த மாதிரியான சீர்கேடுகள் நடந்தன என்றில்லை. இலங்கையில் எங்கே தேர்தல் நடந்தாலும், யார் அதிலே போட்டியிட்டாலும் அதில் அயோக்கியத்தனங்களுக்கும் பொய்களுக்கும் எந்தக் குறையும் இருப்பதில்லை.

2004 இல் பாராளுமன்றத் தேர்தல் நடந்தபோது வடக்குக் கிழக்கிலே போட்டியிட்ட த.தே.கூட்டமைப்பை வெற்றியடைய வைப்பதற்காக விடுதலைப் புலிகளே ஏராளம் தகிடுதித்தங்களைச் செய்தார்கள். அந்த நாட்களில் வாக்களிக்கச் சென்ற பலரும் ஐந்துக்கு மேற்பட்ட வாக்குகளையே போட்டிருந்தார்கள். அந்த நாட்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களாக இருந்த ஒவ்வொருவரும் தலா பத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் போட்டதாக இன்னும் பெருமையோடு சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். அப்போது தேர்தல் உத்தியோகத்தர்களும் இதற்குத் தோதாகத்தான் நடந்தார்கள். 

வன்னியில் புலிகளின் நகைக்கடைகளுக்கு கொழும்பில் இருந்தே ஆட்கள் வருவார்கள். சிலர் வெளிநாடுகளில் இருந்து வந்து தங்களுக்கான நகைகளை வாங்கிக் கொண்டு போயிருக்கிறார்கள். அந்த அளவுக்கு தரமான தங்கத்தை, கலப்படமற்ற தங்கத்தை வியாபாரம் செய்த புலிகள் தேர்தல் என்று வந்தபோது தலைகீழாகிப் போனார்கள்.

இந்த நிலையில் மற்றவர்களின் கதையையும் கதியையும் சொல்ல வேணுமா?

இப்போது கிழக்குத் தேர்தலில் வெற்றிக்கான வாக்குகளைத் தேடி, வாய்ப்பைத்தேடி  அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஒரு சுற்றுப் பயணம் நடத்தியிருக்கிறார்.

தேர்தலுக்கு முன்னரே செய்ய வேண்டியதைச் செய்திருந்தால், தேர்தற்காலத்தில் சிரமங்களைப் படவேண்டியதில்லை என்பதே என்னுடைய கருத்து. தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலைத் தாக்கல் செய்து விட்டு மக்களிடம் வருவதெல்லாம் பொய். வீண் வேலை. இதை நான் அவருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பொதுவாகவே கூறுவேன். 

கிழக்கில் அரசாங்கம் பல முன்னேற்ற நடவடிக்கைகளைச் செய்திருக்கலாம்;. அதைப் பற்றிய பெரும் பட்டியல்கள் தேர்தல் மேடைகளில் சொல்லப்பட்டன. என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும் பிள்ளையான் என்ற சந்திரகாந்தனை கிழக்கில் மறக்கமுடியாது என்று சொல்வோரும் உள்ளனர். பார்ப்போருக்கும் இதைப் பற்றித் தெரியும். ஆனால், அதற்கும் அப்பால், முக்கியமான காரியங்கள் செய்யப்பட்டிருக்க வேணும்.

இனரீதியாகப் பிளவுண்ட சமூகங்களை ஒருங்கிணைப்பதில் அரசாங்கம் இன்னும் வெற்றியடையவில்லை. பதிலாக இன்னும் அது முரண்பாடுகளை அதிகரிக்கும் விதமாகவே நடந்து கொள்கிறது.

இதற்குக் கொஞ்சமும் குறைவில்லாமலே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளும் அமைந்துள்ளன. இனவாதத்தை ஏட்டிக்குப் போட்டியாக வளர்ப்பதில், வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதையும் விட இலகுவாக தமிழ்ச்சனங்களின் இதயங்களில் விசமுள்ளை ஏற்றுவதில் தமிழரசுக் கட்சித் தலைகள் பலே கில்லாடிகள். இதனால், தமிழ் மக்களின் வாக்குகளை மட்டும் பெறக்கூடிய அளவுக்கே வீட்டுச் சின்னம் இன்று மாறியிருக்கிறது.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இதே வீட்டுச் சின்னத்துக்கு முஸ்லிம் மக்களும் வாக்களித்தார்கள். இப்போது அவர்கள் மரச் சின்னத்துக்கு வாக்களிக்கிறார்கள். வீட்டுச் சின்னத்துக்கு முஸ்லிம்கள் வாக்களிக்கப்போவதில்லை என்பதைப்போல மரச்சின்னத்துக்கு தமிழர்கள் வாக்களிக்கப்போவதில்லை. 

இதுதான் கிழக்குத் தேர்தலின் உண்மையான நிலைவரம்.

ஆனால், அரசாங்கம் முன்னிறுத்தியிருக்கும் வெற்றிலைச்சின்னத்துக்கு தமிழர்களில் ஒரு தொகுதியினரும் (இவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பினும்) முஸ்லிம்களில் ஒரு சாராரும் (இவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கும்) சிங்கள மக்களும் வாக்களிக்கப்போகிறார்கள். இவர்கள் இனவாதத்தைக் கடந்தவர்கள் என்று சொல்ல முடியாது விட்டாலும் ஒரு பொதுநிலையில் ஒன்றிணைகிறார்கள் என்பது கவனித்திற்குரிய ஒன்று.

ஆனால், இந்த மக்களை அரசாங்கமும் ஏனைய கட்சிகளைப் போலவே பயன்படுத்தி விட்டுவிடும். அதற்கப்பால், இந்த மக்களை சமாதானத்தின் அடித்தளத்தைக் கட்டுவோராகவோ, நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான வழிமுறையாளர்களாகவோ வளர்த்தெடுக்கப்போவதில்லை. இந்த மாதிரி ஐக்கியப்படும் ஒரு சமூக சக்திகளாக இவர்கள் கவனிக்கப்படப்போவதும் இல்லை.

இதேவேளை இந்த மூன்று தரப்பின் வாக்குகளும் அரசாங்கத் தரப்பை வெற்றியடைய வைக்குமா என்பதும் வலுவான சந்தேகத்துக்குரிய ஒன்று.

மறுவளத்தில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இந்தத் தடவை கிழக்கில் அதிகூடிய வாக்குகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்த்தேசியப் பற்றுடன் மக்கள் தேர்தற்களத்துக்கு நிச்சயம் செல்லவேண்டும் எனவும் சர்வதேசத்துக்கு தமிழ் மக்கள் இன்னொரு தடவை தங்களை நிரூபிக்க வேண்டும் எனவும் தமிழரசுக்கட்சி மன்னிக்கவும் த.தே.கூ சொல்லியிருக்கிறது.

தொடக்கத்தில் தந்திரமாக முஸ்லிம்களின் வாக்குகளை எப்படியாவது கறந்து விடவேண்டும் என்று முயற்சித்தார் சம்மந்தன். ஆனால், பிடிவாதமாகவே முஸ்லிம் கட்சிகள் சம்மந்தனை நிராகரித்து, அவரைப் பகிரங்கமாக அவமதித்து விட்டன. (ஆனால், இன்னும் முஸ்லிம்களின் ஆதரவைக் கோரியவாறே சம்மந்தன் நிற்கிறார். இது அவருக்குத் தவிர்க்க முடியாத ஒன்று. தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரும் த.தே.கூ வுக்கு முஸ்லிம்களின் ஆதரவு தேவைப்படும் நிலையுண்டு).
 
இறுதியில் தமிழ் மக்களையே நம்ப வேண்டியதாகிவிட்டது சம்மந்தனுக்கு. எனவே அவர், இது இறைவன் தந்த இறுதிச் சந்தர்ப்பம் என்று மனமுருகி கண்ணீர் சிந்தியிருக்கிறார். போதாக்குறைக்கு அந்தக் கட்சி வழமையைப்போல தமிழர்கள் யார் என்று காட்ட வேண்டும், சிங்களவர்களுக்குத் தமிழர்கள் அடிமையில்லை என்று தெரிவிக்க வேண்டும். சர்வதேசத்துக்கு தமிழர்களின் உணர்வு எத்தகையது என்று சொல்ல வேண்டும் என்றெல்லாம் பழைய  நாடகத்தை ஒரு முறை ஆடி முடித்திருக்கிறது.

என்னதான் நரம்பு சிலிர்க்க துடித்தெழும் தமிழ்த் தேசியவாதிகள் எல்லாம் ஒன்று திரண்டு த.தே. கூவை வெற்றியடைய வைப்பர் என எதிர்பார்க்கப்பட்டாலும் கூட்டமைப்பினரால் சுமுகமான ஒரு ஆட்சியை கிழக்கில் ஏற்படுத்த முடியாது என்பதே உண்மையானதாகும்.

பதிலாக கொந்தளிப்பும் சீர்கேடுமான ஒரு ஆட்சியே கிழக்கில் நடைமுறையில் இருக்கும். இது நிச்சயமாகக் கிழக்கின் அமைதியைக் குலைக்கும். அரச தரப்பு ஆட்சிக்கு வந்தாலும் இதுதான் நிலை. கிழக்கில் வலுவான இணைச் சமூகமாக இருக்கும் முஸ்லிம்தரப்புடன் நீதியான – வெளிப்படையான உறவுக்கு தமிழ்கூட்டமைப்புச் செல்லாத வரையில், அல்லது அரசு செல்லாத வரையில் அங்கே அமைதியை ஏற்படுத்தவும் முடியாது. நீதியை நிலைநிறுத்தவும் இயலாது.

தமிழ்க்கூட்டமைப்பு கிழக்கில் ஆட்சியைத் தக்க வைக்க வேண்டுமானால் அது தவிர்க்க முடியாமல் முஸ்லிம் தரப்பின் ஆதரவைப் பெற்றே தீரவேணும். ஆனால், அந்த ஆதரவை இலகுவில் பெற்றுவிட முடியாது. இலவசமாகவும் பெறமுடியாது.

அதற்கான விலைகள் அதிகம். ஆதரவளிக்கும் முஸ்லிம்தரப்பு முதலில் தமக்கே முதலமைச்சர் பதவி என்றுகூடக் கோரலாம். அல்லது அமைச்சரவையில் வலுவான பங்கைக் கேட்கலாம். அத்தோடு, ஆட்சிக் காலத்தில் பல தேவைகளையும் உதவிகளையும் பங்குகளையும் கோரலாம். இதெல்லாம் அவர்களைப் பொறுத்தவரையில் தவிர்க்க முடியாதவை.

இதற்குக் கூட்டமைப்பினால் எந்த அளவுக்கு நெகிழ்ந்து கொடுக்க முடியும்? என்பது முக்கியமான கேள்வி. மற்றவர்களை இணைத்துப் பயணித்த அனுபவம் தமிழர்களுக்குப் பொதுவாகவே குறைவு. அவர்கள் எப்போதும் தம்மை முன்னிலைப்படுத்தியே பழக்கப்பட்டவர்கள். சிங்களத் தரப்பிலும் இதுதானே குறைபாடு. ஆனால், தமிழர்கள் மிகச் சிறுபான்மையினராக இருப்பதாலும் பலவீனமான நிலையில் இருப்பதாலும் சி்ங்களவர் தமிழரை ஆட்டிப்படைக்கிறார்கள். ஆனால், இங்கே முஸ்லிம்களின் நிலை அவ்வாறல்ல.  இங்கே முஸ்லிம்கள் பலமான அல்லது வலுவான நிலையில் இருக்கும்போது கூட்டமைப்புக்கு அது நெருக்கடியாக அமையலாம். ஆகவே தமிழ்த் தரப்போடு நிச்சயமாக முஸ்லிம்களுக்கு மோதல்களே ஏற்படும்.

இதேவேளை இன்னொரு வலுவான தரப்பைப் பற்றியும் நாம் பார்க்க வேண்டும். முஸ்லிம் முதலமைச்சர் கனவோடு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் களமிறங்கியது. அதற்காக அது கடுமையான போராட்டங்கள், முயற்சிகளின் பின்னர் அரசாங்கத்தை விட்டுத் தனியே களத்தில் இறங்கியது. ஒரு கட்டத்தில் - இந்த நாடகத்தின் உச்சக் கட்டத்தில் கட்சியின் முக்கியஸ்தரான பஸீர் சேகுதாவூத்தே தன்னுடைய துணை அமைச்சர் பதியைத் துறந்திருந்தார்.

போதாக்குறைக்கு அரசாங்கத்தை முடிந்தவரையில் குற்றம்சாட்டித் தேர்தற்காலப் பகைமை உணர்வை வெளிப்படுத்தினார் ஹக்கீம் . இந்த நிகழ்ச்சிகளின் உச்சக்கட்டமாக அவர் அரசாங்கம் வேறு, முஸ்லிம் காங்கிரஸ் வேறு என்று வெளிப்படுத்தினார்.

இதன்மூலம் ஹக்கீமும் முஸ்லிம் காங்கிரசும் வெற்றியடைந்துள்ளன என்றே சொல்ல வேணும். அரசாங்கத்தில் இன்னும் பொறுப்பான அமைச்சுப் பதவியில் ஹக்கீம் இருக்கிறார். அரசாங்கத்துக்கு எதிராக அவருடைய கட்சி தேர்தல் களத்தில் நிற்கிறது. அவர் அரசை எதிர்த்துப்பேசுகிறார். அப்பப்பா... என்ன சாகஸம். பஸீர் நாளை கூட இழந்த பதவியையோ அல்லது அதற்கும் கூடுதலான பதவியையோ பெறலாம். அதற்கான நிகழ்தகவு அதிகம்.

அதேவேளை தன்னுடைய தனித்துவத்தை முஸ்லிம் கொங்கிரஸ் இழக்கவில்லை. அது அரசாங்கத்தை எதிர்த்து, தனித்து தேர்தலில் நின்றது. அண்மையநாட்களில் முஸ்லிம்களின் மீதான சிங்களக் கடும்போக்காளர்களின் எதிர்ப்புகளைக் கண்டும் காணாதிருக்கும் அரசாங்கத்துக்கு அது தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறது என்ற தோற்றப்பாட்டை உருவாக்கியும் விட்டது. 

மேலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடனும் அது தேர்தற் கூட்டை வைத்துக் கொள்ளவில்லை. இந்த நிலையில் தேர்தலில் யார் ஆட்சியை அமைப்பதாக இருந்தாலும் அவர்களுக்கு முஸ்லிம் கொங்கிரசின் உதவி, ஆதரவு தேவை. இதை வலுவான நிலையில் இருந்து நிபந்தனையுடன் வழங்கும் நிலையில் முஸ்லிம் கொங்கிரஸ் உள்ளது. இதன்மூலம் அது தனக்கானவற்றைப் பெற்றுக்கொள்ளும். தன்னுடைய தனித்துவத்தையும் முடிந்தவரையில் காத்துக்கொள்ளும்.

மற்றவர்களை விடவும் இப்போது அதிக நன்மைகளைப் பெறும் நிலையில் இருப்பதும் பாதுகாப்பாகவும் இருப்பதும் மு.காவே.

இதேவேளை தமிழர்கள் யாருக்கு வாக்களித்தாலும் - தமிழ்க் கூட்டமைப்புக்கோ அல்லது அரசாங்கத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கோ அல்லது மு.காவுக்கோ யாருக்குத்தான் வாக்களித்தாலும் அவர்களுக்கு அதிகமாக எதுவும் கிட்டப்போவதில்லை.

தமிழர்கள் எதிர்பார்ப்பதைப் போலச் சர்வதேச சமூகம் என்ற பொய்யர்கள் இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்போவதும் இல்லை. சர்வதேச சமூகத்துக்கு யார் பயன்படுத்தக் தக்க நிலையிலும் யார் லாபத்தை அதிகமாகத் தரக்கூடியவாறும் உள்ளனர் என்பதே அக்கறைக்குரிய ஒன்று. ஆனால், தேர்தல் வியாபாரிகள் சிலர் மட்டும் இதில் லாபம் பெறுவர். வெற்றியடையமுடியாத அரசாங்கம் மேலும் வன்மத்தையே பிரயோகிக்க முயலும். இதுதான் வழமையும் யதார்த்தமும் உண்மையும். 

எப்படியோ கிழக்கின் இந்தத் தேர்தலும் சகல மட்டத்திலும் இடைவெளிகளையே அதிகரிக்கும் ஏது நிலைகளே அதிகமாகக் காணப்படுகின்றன. அவ்வாறெனில்  முரண்நிலைகள் மேலும் கூடத்தான் போகின்றன. பிரிவினை வாதிகள் மக்களை ஒன்று சேர என்றும் விடுவதேயில்லை.

00 


‘நாங்கள் யுத்தகாலத்தில் நடந்து செல்வதற்கே பாதைகள் இருக்கவில்லை

Tuesday, 28 August 2012
















இலங்கையின் கொந்தளிப்புகள் இன்னும் நீங்கவில்லை. பதிலாக அவை வெவ்வேறு வடிவங்களை எடுத்துள்ளன. இதன் விளைவாக முரண்பாடுகள் அதிகரித்துள்ளன. நிரந்தரத்தன்மையைப் பெற்று வருகிறது பகைமை. இனங்களுக்கிடையிலும் சமூகங்களுக்கிடையிலும் ஒரு தொற்றுநோயைப் போலப் பரவி வருகிறது அச்சமும் சந்தேகமும். பல தரப்புகளாலும் திட்டமிட்டு வளர்க்கப்படுகிறது இந்த நிலை.

அரசியலுக்குத் தேவை எரியும் பிரச்சினைகள். மேலும் பிரச்சினைகள். கொந்தளிப்புகள். நெருப்பை ஒத்த சூடு. சனங்களின் அவலம், கண்ணீர், இரத்தம் எல்லாம்.

ஊடகங்களுக்கும் தேவை இவையெல்லாம். சனங்களுடைய உளவியலும் இதை நோக்கியே கட்டமைக்கப்பட்டுள்ளது. வன்முறைச்செய்திகள், கொந்தளிப்பான தகவல்கள், பரபரப்பு.

போர் முடிந்திருக்கிறது என்பது உண்மை. ஆனால், யுத்த அபாயத்துக்கு அப்பால் மக்களுடைய பிரச்சினைகள் தீரவில்லை. மக்களுடைய எண்ணங்களும் மாறவில்லை. குற்றச்சாட்டுகள் ஏவுகணைகளை விடவும் உச்சமாகப் பாய்ந்து கொண்டிருக்கின்றன.

எல்லோரும் யுத்த காலத்தை ஒத்த மனநிலையில்தான் உள்ளனர். அல்லது அத்தகைய ஒரு நிலையைப் பராமரிக்கின்றனர்.

அமைதிக்காகச் சிந்திப்போர் பரிகசிக்கப்படுகிறார்கள். அல்லது சந்தேகிக்கப்படுகிறார்கள். பல வேளைகளிலும் புறக்கணிப்பப்படுகிறார்கள். சிலசமயங்களில் தண்டிக்கவும் படுகிறார்கள்.

மீண்டும் நெருப்புத் துண்டங்களைத் தின்பதற்கே பலரும் விரும்புகின்றனர். கொழுந்து விட்டு எரிந்த தங்களுடைய கடந்த காலத்தை இவ்வளவு எளிதாகப் பலரும் மறந்து வருவதே கவலையளிப்பது.

‘நீ எதை விரும்புகிறாய்? யுத்தத்தையா அல்லது சமாதானத்தையா?’ எனக் கேட்டேன் ஒரு நண்பரிடம்.

‘சமாதானத்தையே’ என்றார் அவர் உடனடியாக.

‘ஆனால், நிரந்தர சமாதானத்தை’ என்றார் பின்னர், சற்று அழுத்தி.

‘சமாதானம் என்ற வெறும் சொல்லை அல்ல’ என்று சற்று நேரத்தின் பின்னர் நிதானமாகச் சொன்னார்.

அவர் சொன்னதின் பின்னாலுள்ள அர்த்தத்தை நீங்கள் நன்றாகவே உணர்வீர்கள்.

அமைதி என்பதும் சமாதானம் என்பதும் எவ்வளவு சந்தேகத்திற்குரிய ஒரு விசயமாக, ஒரு சொல்லாக மாறியுள்ளது என்பதை.

அமைதியைப் பற்றியும் சமாதானத்தைப் பற்றியும் கதைக்கும் போது மக்களும் அதைப் பற்றி அதிகம் பொருட்படுத்துவதில்லை.

அரசியல்வாதிகளும் தரப்புகளும் ஊடகங்களும் சர்வதேச சமூகமும் இந்தச் சொற்களின் அர்த்தத்தை, இவற்றின் உண்மைத்தன்மையைப் பாழாக்கி விட்டன.

எனவே சனங்கள் நம்பிக்கையற்ற ஒன்றின் பின்னால் நிற்பதற்குத் தயங்குகிறார்கள்.

ஆனால், மிகச் சவாலான விசயமே இதுதான்.

மிக முக்கியமான விசயமும் இதுதான்.

அமைதியைப் பற்றிச் சிந்தித்தல் அல்லது அமைதிக்குத் திரும்புதல் அல்லது அமைதியை உருவாக்குதல் என்பது.

என்றபோதும் கொந்தளிக்கும் நிலையை மாற்ற வேண்டுமானால் இதைத் தவிர வேறு வழியில்லை.

முரண்பாடுகளையும் அழிவையும் பாதகமான விளைவுகளையும் தவிர்க்க வேண்டுமானால், சமாதானத்தை நடைமுறைப் படுத்துவதைத் தவிர, வேறு மார்க்கமேயில்லை.

ஆனால், சமாதானத்தை உருவாக்குவதொன்றும் அத்தனை எளிதான காரியமில்லை.

அது யுத்தத்தைப் போன்றதல்ல. யுத்தத்தை உருவாக்குவதற்கான பொறிகள் மிக எளியவை. அவை அதிகமாகவும் உண்டு. மட்டுமல்ல அவற்றின் எரிபற்று நிலையும் மிக உச்சமானது.

ஒரு கணம், ஒரு சொல் போதும் மாபெரும் யுத்தத்தை மூட்டிவிடுவதற்கு. திரௌபதியின் ஒரு சொல், ஒரு சபதமே மகாபாரத யுத்தம்.

அதைப்போல கைகேயிக்கு வழங்கப்பட்ட ஒரு சொல்லே இராமாயணத்துக்கு அடிப்படை.

இதிகாசங்களில் மட்டுமல்ல உலகம் முழுவதுமுள்ள நடைமுறையும் அப்படித்தான்.

ஒரு தீக்குச்சியில் இருக்கும் தீயை மூட்டும் தன்மையையும் விட யுத்தத்தை மூட்டுவதற்கான சொல்லில் இருக்கும் எரிபற்று நிலை அதிகம்.

ஆனால், அமைதிக்குத் திரும்புவதென்பது மிக மிகக் கடினமான ஒன்று.

அது ஏராளம் சொற்களைக் கொண்டு உருவாக்கப்படும் நம்பிக்கையின் அத்திவாரம். ஏராளம் நடைமுறைகளை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட வேண்டிய ஒரு நிர்மாணம். ஒரு சிறு கவனப் பிசகு எல்லாவற்றையும் சிதறடித்து விடும். அவ்வளவு மென்மையான இழைகள் சமாதானத்தினுடையவை.

சமாதானத்துக்கான அடிப்படையாக இருக்கும் பரஸ்பர புரிந்துணர்வொன்றை உருவாக்குவதற்கான முன் முயற்சிகளுக்கே ஏராளம் விசயங்கள் தேவை. ஏராளம் நடைமுறைகள் அவசியம்.

அவை இல்லாத போது ஒரு சிறு அசைவைக் கூட நிகழ்த்தி விட முடியாது.

குறிப்பாக சமாதானத்தைக் குறித்த செயற்பாடுகளை நோக்கிய அதிக அர்ப்பணிப்பும் தியாக மனப்பாங்கும் உறுதியும் அவசியம்.

அமைதியை நோக்கிய உயரிய சிந்தனையும் அதை நடைமுறைப்படுத்துவதற்கு செய்ய வேண்டிய விட்டுக் கொடுப்புகளும் ஏற்றுக்கொள்ளல்களுமான ஒரு நடைமுறையும் வேண்டும்.

இதற்கு விரிவாகச் சிந்திக்கக் கூடிய மேதமைத்தன்மையும் அதை நடைமுறைப்படுத்தும் துணிச்சலும் அரசியல் லாபங்களுக்கு அப்பாலான மக்கள் விசுவாசமும் தேவை.

இவை சாதாரணமாக அமைந்து விடுவதில்லை. மிகப் பெரிய ஆளுமையுடன் கூடிய, ஆற்றல் நிரம்பிய ஒரு செயற்பாட்டினாலேயே இவற்றை நாம் உருவாக்க முடியும்.

முரண்பாட்டு உருவாக்கத்தின் மூலம், பகை அரசியலின் வழியாக லாபங்களைப் பெற்ற தரப்புகள் எவையும் கடினமும் சவால்களும் நிரம்பிய வழிகளைப் பின்பற்ற மாட்டா.

அவற்றின் வழிமுறைகளே வேறு. அவை இந்தப் பெரிய சோதனைகள் நிரம்பிய வழிமுறையை, மக்களுக்கான அர்ப்பணிப்பைத் தேர்வதைப் பற்றிச் சிந்திக்கவே விரும்பாது.

எல்லாவற்றையும் விடப் பகை அரசியலில் லாபங்களும் அதிகம். அவற்றை எட்டுவதும் சுலபம். அபாயங்கள் நிறைந்த வழிமுறை அது என்றாலும் அது ஒரு சதுரங்கப் பலகையைப் போன்றிருப்பதால், போதைத் தன்மையுடன் அதில் இறங்கி ஈடுபடலாம்.

கத்திகளை லாவகமாகச் சுற்றக் கூடிய ஒரு பயிற்சி இருந்தாற் போதும் தாரளமாக வெற்றிகளைப் பெற்று விட முடியும்.

எனவேதான் எல்லோரும் முரண்பாட்டு அரசியலை – பகை அரசியலைத் தேர்ந்து கொள்கிறார்கள்.

இதில் இன்னொரு லாபமும் உண்டு. பகை அரசியலில் மக்களுக்கு வேண்டியவற்றை அதிகம் செய்யத் தேவையும் இல்லை. மக்களை எப்போதும் தங்களை நோக்கித் தங்கியிருக்கும் நிலையில் வைத்திருக்க வேண்டுமானால், அவர்களைப் பற்றாக்குறைகளுடன் வைத்திருக்க வேண்:டும்.

பற்றாக்குறைகளுடன் இருப்போருக்கே எஜமான்கள் தேவை. எல்லாம் நிறைந்திருப்போருக்கு எஜமானன்கள் அவசியப்படுவதில்லை.

ஆகவே, சனங்களைப் பற்றாக்குறைகளுடன், அவலப்படுவோராகவும் அல்லற்படுவோராகவும் வைத்திருக்க வேண்டும். அதற்குப் பகை அரசியலே கை கொடுக்கும்.

பகை அரசியலில் இன்னொரு நன்மையும் உண்டு. அதில் குற்றச் சாட்டுகளை பரஸ்பரம் சுமத்திவிட்டுப் பேசாதிருந்து விடலாம். எதையும் மக்களுக்குச் செய்யத் தாம் தயாராக இருப்பதாகவும் ஆனால், எதிர்த்தரப்பு அதற்கு ஒத்துழைக்கவில்லை என்றும் சுலபமாகப் பழியை எதிர்த்தரப்பிடம் சுமத்திவிட்டுப் பேசாதிருந்து விட முடியும்.

சனங்களும் அதை நம்பி விடுவர், மிக எளிதாக.

அத்துடன் பகை அல்லது முரண்பாட்டு அரசியலில் எப்போதும் இருக்கின்ற சுவாரஷ்யம், சனங்களுக்குக் கவர்ச்சியானது. அவர்கள் தங்களுடைய நிலைமையை மறந்து விட்டே இந்த முரண்பாட்டில் இருக்கும் சூட்டையும் அதனுள்ளிருக்கும் போதைத் தன்மையையும் ரசிக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

கதாநாயகன் வில்லன், கறுப்பு வெள்ளை, எதிரி, தியாகி என்ற எளிய சூத்திரம் மனதில் எளிதாகவே தங்கி விடுகிறது.

மிக எளிய ஒரு சினிமாவைப் பார்ப்பதைப் போல தங்களின் முன்னே இருக்கின்ற போதையூட்டும், கிளர்ச்சிகளின் ஊற்றாக இருக்கும் முரண்பாட்டு அரசியலை ரசிக்கிறார்கள்.

இந்தப் பலவீனமான உளவியலை அரசியல்வாதிகளும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் மிகச் சுலபமாகக் கையாள்கின்றனர்.

வெளித்தோற்றத்துக்கு நியாயத்தன்மை உடையதாகத் தெரியும் முரண்களின் உள்ளே எத்தகைய வழிகளுக்கான ஒளியும் நன்மைகளுக்கான வித்துகளும் இருப்பதேயில்லை.

பதிலாக முரண்பாட்டு அரசியலில், பகை அரசியலில், எதிர் அரசியலில் இருப்பது அத்தனையும் நச்சு விதைகள்.

என்றபடியாற்தானே கடந்த காலம் தீயில் கருகியது. ஆனால் யாருடைய கடந்த காலம் தீயிற் கருகியது என்பதே இங்கே உள்ள முக்கியமான அவதானமாகும்.

சனங்களின் கடந்த காலமே தீயில் கருகியது. அவர்களே இன்னும் மீள முடியாத அவலப்பரப்பில் உள்ளனர்.

ஆகவேதான் அவர்கள் விழிப்போடு இருக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். இந்தப் பத்தி கூட அவர்களை நோக்கியே சிந்திக்கவும் எழுதவும் படுகிறது. முரண்பாட்டு அரசியலை, முரண்பாட்டு நிலைகளை உருவாக்கும் வியாபாரிகளை நோக்கியல்ல.

மெய்யான ஊழியம் செய்வோரைக் கனம்பண்ணியே இந்தச் சொற்கள் இங்கே நிர்மாணிக்கப்படுகின்றன.


உண்மையில் சனங்களை நோக்கிய அரசியல் என்பதும் ஊடகப் பணி என்பதும் நன்மைகளை உருவாக்குவதாகவே அமைய வேண்டும்.

பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவே ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வொரு சொல்லும் பயன்படுத்தப்பட வேண்டும். தீர்வை நோக்கிய, பிரச்சினைகளிலிருந்து விடுபடுதலை நோக்கிய, பிரச்சினைகளை இல்லாதொழிப்பதை நோக்கிய  செயற்பாடுகளை உருவாக்குவதே அவசியமானது.

ஆனால், நடந்து கொண்டிருப்பது என்ன?

பிரச்சினைகளை உருவாக்கும் காரியங்களே கணமும் நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நொடியிலும் முரண்களைக் கூர்மைப்படுத்தும் செயற்பாடுகளே மேற்கொள்ளப்படுகின்றன.

இது யாருக்காகச்  செய்யப்படுகிறது?

இலங்கைத் தீவில் இன்று சமூகங்களுக்கிடையிலான - இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை யார் செய்கிறார்கள்? அவர்கள் எதற்காகச் செய்கிறார்கள்?

லாபங்களைப் பெறும் நோக்கோடு, நலன்களைப் பேணும் நோக்கோடு சர்வதேச சமூகம் என்ற ஆதிக்கச் சக்திகளும் உள்ளுர் அரசியல் ஊடக அதிகாரத் தரப்புகளும் இந்த பிரச்சினைகளை உருவாக்கும் அரசியலை – முரண்பாட்டு அரசியலைச் செய்கின்றன.

ஆகவே இந்தத் தரப்புகளுக்கு உதவும் முகமாகவே பல உள்ளுர் சக்திகளும் தங்களை அறியாமலே செயற்படுகின்றன.

இந்த முரண் அரசியலுக்கு, பகை உணர்வரசியலுக்கு இன்னொரு சிறிய உதாரணம்.

விஜய், விஜயகாந்த், விக்ரம், அர்ஜூன், ரஜினி போன்றோரின் அதிரடிப் படங்களில் வருகின்ற வில்லன் - கதாநாயகன் பாத்திரங்களைப் போன்றதே, அந்தப் படங்களில் மையப்படுத்தப்படும் கதைகளைப் போன்றதே இந்த அரசியலும்.

அங்கேயும் தொடர்ந்து வில்லன் - கதாநாயகன் நிகழ்ச்சி இருந்து கொண்டிருக்கும். அதுதான் அதன் கவர்ச்சிமையம்.

பார்வையாளருக்கு இந்த கதாநாயகன் - வில்லன் கவர்ச்சி குறைவதில்லை. அதைப்போல அதிலே வருகின்ற வில்லன்களும் ஒரு போதுமே இல்லாமற் போய்விடுவதில்லை. பார்க்கின்றவர்களுக்கு ஒரு கணநேர இன்பம் கிட்டுகிறது. அதற்கப்பால் எதுவும் அதிலே நிகழ்வதில்லை.

அவற்றிலே வருகின்ற நாயகர்களைப் போல அசாத்தியமான துணிச்சலோடு யாரும் போரிடுவதும் இல்லை. நியாயங்களை நிலைநிறுத்துவதற்காகப் போராடுவதும் இல்லை.

அத்தகைய படங்களைப் பார்ப்பதன் மூலம் அல்லது அந்தப் படங்களில் பேசப்படும் விசயங்களின் மூலம் எந்தப் பிரச்சினையும் தீர்ந்து விடுவதில்லை.
ஆனால், பதிலாக அந்தப் படங்களை உற்பத்தி செய்வோரும் அதில் நடிப்போரும் தாராளமாக உழைத்து விடுகிறார்கள். அவர்களுடைய கதாநாயக அந்தஸ்து, பிரமுகர் நிலை, புகழ் எல்லாம் அந்தச் சினிமாவையும் விட உச்சமாக உயர்ந்து விடுகிறது. அதிலும் நிஜத்தில். அவர்கள் லட்சாதிபதிகளாக, கோடீஸ்வரர்களாக மாறிவிடுகிறார்கள்.

இவர்களுக்கு ஊடகங்களிலும் பெரும் செல்வாக்கு மண்டலம் உண்டு. ஊடகங்கள் இவர்களை வைத்தே, இவர்களுடைய இந்தப் போக்கை வைத்தே தங்கள் உழைப்பைச் செய்கின்றன. அதுவும் பகிரங்கமாக.

ஏறக்குறைய இதே தன்மைதான் முரண்பாட்டு அரசியலில் ஈடுபடுவோரிடமும் உண்டு. அவர்களும் லட்சாதிபதிகளாக, புகழாழர்களாக, செல்வாக்குடையோராக, ஊடகங்களில் கொண்டாடப்படுவோராக, ஊடகங்களுக்குத் தேவைப்படுவோராக உள்ளனர்.

(இப்பொழுது உங்களில் பலருக்கு யார் விஜய், யார் எம்.ஜி.ஆர், யார் விஜயகாந், யார் அர்ஜூன், யார் விக்ரம் என்று விளங்கியிருக்கும்.

ஆகவே இத்தகைய (தன்) நலன்விரும்பிகள் எப்படி சமாதானத்துக்கான அடித்தளத்தை நிர்மாணிக்க முனைவர்? எவ்வாறு அமைதிக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொள்வர்?

மக்களிடம் இறங்கி, அவர்களோடு வாழ்ந்து, அவர்களுக்காக அரசியற் பணியாற்றுவது என்பது, மக்களோடு அவர்களைக் கரைத்து அவர்களை ஒன்றிணைக்க விரும்புவது. அங்கே பிரமுகர்த்தனத்துக்கும் அதிகாரத்தனத்துக்கும் இடமிருக்காது.

இதிலேதான் நம்பிக்கையும் அர்ப்பணிப்பும் பற்றுறுதியும் உருவாகும். ஆனால், அதற்கான சூழ்நிலைகள் தென்படவேயில்லை.

பதிலாக கொந்தளிப்ப நிலையே உருவாக்கப்படுகிறது. அதுவே தொடர்ந்து பேணப்படுகிறது.

ஆனால், நாம் ஒன்றை நினைவிற்கொள்ள வேண்டும். அதை மறந்து விடவே முடியாது.

எல்லாப் பாதைகளும் அடைக்கப்பட்டே யுத்த நிலை உருவாக்கப்பட்டது.

அல்லது யுத்தம் எல்லாப் பாதைகளையும் அடைத்து விடும்.

முரண்பாட்டு அரசியலில் பாதைகளே இருப்பதில்லை.

முரண்பாட்டு அரசியலை வளர்க்கும் சக்திகள் பாதைகள் திறக்கப்படுவதை ஒரு பொழுதும் விரும்புவதுமில்லை.

அவை எப்போதும் பாதைகளை அடைப்பதையே அடிப்படையாகக் கொண்டவை. அவற்றின் நோக்கமும் அதுதான். பாதைகளின்றி பயணங்கள் நிகழாது.

மீண்டும் இன்னொரு நண்பர் சொன்ன ஒரு கூற்றை இங்கே நினைவு படுத்துவது பொருத்தமாகும்.

‘நாங்கள் யுத்தகாலத்தில் நடந்து செல்வதற்கே பாதைகள் இருக்கவில்லை. அவர்கள் (அரசியல்வாதிகள்) பறந்து சென்று கொண்டிருந்தார்கள். (விமானங்களில் நாடு நாடாகப் பறந்து திரிந்தார்கள்)’ என்று.

எனவே சமாதானத்துக்கான பாதை பொதுவாகவே மிகக் கடினமானது. அது பலமான மிகப் பெரிய எதிர்ப்புகளின் மத்தியில் உருவாக்கப்பட வேண்டியது.

வெறும் அபிலாஷைகளினாலும் பிரார்த்தனைகளாலும் எதிர்பார்ப்புகளாலும் உருவாக்கப்பட முடியாதது. அதை உருவாக்கக் கூடியவர்களை அடையாளம் காண்பது, அல்லது அதற்கு நாம் தயாராவதே இன்றுள்ள முதன்மைப் பணியாகும்.

00



நாலு வார்த்தை பேச

Sunday, 26 August 2012

இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலவரங்கள் திருப்தியளிக்கும் நிலையில்  இருப்பதாக அரசாங்கம் அடித்துச் சொல்கிறது. ஆனால், அரசாங்கத்துக்கு அப்பாலான அனைத்துத் தரப்பினரும் இது தொடர்பாக மாற்று அபிப்பிராயத்தையே கொண்டுள்ளனர்.

யுத்தத்துக்குப் பிந்திய இலங்கையை அமைதியை நோக்கியும் சமாதானத்தை நோக்கியும் கொண்டு செல்வதில் குறிப்பிடத்தக்க பணியை யாருமே செய்யவில்லை. எந்தத்தரப்பும் இதற்காக அர்ப்பணிப்போடு செயற்பட வில்லை.

ஆகவே இனவாதக் கட்சிகளும் அதை ஊக்குவிக்கின்ற தலைவர்களும் மீண்டும் பலமடைந்து விட்டனர்.

இத்தகைய நிலைமையைத்தான் இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளும் ஊக்குவிக்கின்றன. அல்லது தோற்றுவிக்க முயற்சிக்கின்றன.

இலங்கையர்களாக இருப்போருக்கு இது மிகக் கவலை தருகின்ற ஒரு விசயமே.

வாழ்க்கையை இந்தக் களத்தினுள்ளே வைத்திருப்போருக்கு இத்தகைய நிலை மிகக் கவலைககுரிய ஒன்று.

ஆனால் தனியாட்களால் இவற்றை மாற்றமுறச் செய்வது மிகக் கடினமானது. ஆனால் அவர்களால் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.

அரசியல்வாதிகளும் ஊடகங்களும் மிகமிகத் தாழ்நிலைக்குச் சென்றுள்ள நிலையே இன்றைய யதார்த்தம்.

ஆனால் சனங்கள் இவற்றினால் கட்டுப்படுத்தப்படுகின்றனர்.

அவர்களுக்கு இந்தத் தரப்புகளின் போதையுட்டல்கள் தேவைப்படுகின்றன.

இத்தகைய ஒரு நெருக்கடிக்குள்தான் மாற்றுச் சிந்தனையைக் குறித்து யாரும் சிந்திக்க முடியும்.

எனவே இதைக்குறித்து இந்தப் பக்கத்தில் தொடர்நது எழுதி வரும் பக்கங்கள் விவாதங்களை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டவையாக உள்ளன.

இந்த விவாதங்களிலும் முன் வைப்புகளிலும் உங்களுக்கும் பொறுப்பும் பங்கும் உண்டு.

எழுதுங்கள்.



4 பக்கம் 4 வார்த்தை

Friday, 24 August 2012












நாலு பக்கத்தைச் சில நாட்களாக பதிவிட முடியாமற் போய் விட்டது. இதன் மூலம் வாசகர்களுக்கு ஏற்பட்ட தடங்கல்களுக்கு பொறுப்போடு மன்னிக்க வேண்டுகிறேன். இனித் தொடர்ந்து பதிவிடப்படும். பேசப்படும் விசயங்கள் குறித்து நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். பேசவேண்டியவை குறித்தும் கூறுங்கள். சாத்தியமானதை, தெரிந்து கொள்ள முடிந்ததை எழுதலாம்.

பதிவுகளின் முறையை மாற்றலாமா என்று ஒரு யோசினையும் உண்டு. உரையாடல், தகவல் பரிமாறல் என்ற வகையில் புதிய பதிவுகளைச் செய்யலாமா என்று சிந்திக்கிறேன். சாத்தியமானால் அப்படி முயற்சிக்கலாம்.

சிலவேளை குறுந்தகவல்களாகவும் சில பதிவுகளைச் செய்யலாம் என்ற எண்ணமுண்டு. இது உங்களை மேலும் சிந்திக்கத் தூண்டும்.

பல நண்பர்களுடைய அபிப்பிராயங்களை மனதிற் கொண்டு இந்த மாதிரியான ஒரு அணுகுமுறைக்கும் செயல்முறைக்கும் தயாராகியிருக்கிறேன். இது ஒரு முயற்சிதான்.

சரி பிழைகள், வெற்றி தோல்விகள், போதாமைகள், நிறைவுகள் என இருக்க வாய்ப்புண்டு. அதையும் நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

நன்றியுடன்,

கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்










களைப்படைந்த இலங்கையர் அல்லது காயப்பட்ட இலங்கையர்கள்

Monday, 16 July 2012





இலங்கையில் யுத்தத்துக்கு கொடுக்கப்பட்ட ஒத்துழைப்பையும் ஆதரவையும் கவனத்தையும் முயற்சிகளையும் உழைப்பையும் சமாதானத்துக்குக் கொடுப்பதற்கு யாரும் முன்வரவில்லை. இலங்கையர்களும் முன்வரவில்லை. இலங்கைக்கு வெளியே இருப்போரும் முன்வரவில்லை. இதனால், அமைதி என்பது அபாயப்பிராந்தியத்தை நோக்கி நகர்கிறது.
யுத்தத்தின் பங்காளிகள் அனைவரும் சமாதானத்துக்கு வெகு தொலைவிலேயே நிற்கிறார்கள். யுத்தம் முடிந்தவுடன் அந்த அரங்கிலிருந்து அவர்கள் இரகசியமாக மறைந்து விட்டார்கள். பதிலாக மேலும் ஆயுதமற்ற ஒரு யுத்தத்தை இலங்கையில் நிகழ்த்தி வருகிறார்கள். முரண்பாடுகளைப் பலப்படுத்தி, அவற்றை விரிவாக்கம் செய்கிறார்கள். தங்களுடைய நலன் விஸ்தரிப்புவாத அரசியலுக்காக இத்தகைய முரண்பாட்டு விரிவாக்கத்தை அவர்கள் பயன்படுத்த முயற்சிக்கின்றனர்.
இலங்கையில் சமாதானத்தைக் குறித்து விசுவாசமாகச் சிந்திப்போர் யார் என்று யாராலும் அடையாளப்படுத்த முடியாத நிலையே காணப்படுகிறது. இதேவேளை இனமுரண் அரசியலை மேலும் கூர்மைப்படுத்தும் முயற்சிகள் தாராளமாக நடக்கின்றன. அதுவும் வெளிப்படையாக. என்னதான் நியாயப்பாடுகளை முன்வைத்தாலும் முரண்பாட்டை வளர்ப்பதன் மூலம் அமைதியைப் பெற முடியாது, சமாதானத்தை எட்ட முடியாது என்பது நமது அனுபவம். ஆனால், யுத்தத்தின் களைப்பு அடங்க முன்னரே இப்படியொரு விபரீதிய அரசியல் விளையாட்டு நிகழ்கிறது.
இதொன்றும் புதிய விசயமல்ல. இலங்கையில் முன்னர் நடந்ததும் இதுதான். உலகத்தின் பல திசைகளிலும் நடந்தது, நடந்து கொண்டிருப்பதும் இதுதான். பிரித்து ஆளுந்தந்திரத்தினூடே அதிகாரத் தரப்புகள் தங்கள் நலன்களைப் பெறுதல் என்பது.
ஆகவே இலங்கையின் சமாதானத்துக்கான வானம் இருண்டேயிருக்கிறது. ஆனால்,  முக்கியமாக சமாதானத்தை உருவாக்குவதற்காக ஒரு அரசியியல் ஆட்சி இருக்க வேண்டியது அவசியம். போரை நடத்துவதற்கு மட்டும்தான் பிரச்சாரம் மற்றும் சந்தைப்படுத்தல் இருக்க வேண்டும் என்பதல்ல. சமாதானத்தை காண்பதற்கும் அது தேவை. உண்மையில் யுத்தத்தை தொடர்வதற்காக அடையாளங்களை விற்பனை செய்த சமூகத்தவரிடையே சமாதானத்தை தேடுவதற்கான மிகவும் உக்கிரமான வடிவத்திலான பிரச்சாரம் மற்றும் சந்தைப்படுத்தல் என்பன அவசியம். என அண்மையில் ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
போரையும் விடச் சமாதானத்தை உருவாக்குவதற்கே அதிக உழைப்பும் முயற்சிகளும் திட்டமிடல்களும் தேவை. ஏனெனில் சமாதானத்துக்கு எதிராளிகள் அதிகம். போர் உணர்ச்சிகளின் மையத்தில் உருவாக்கப்படுவது. சமாதானம் நம்பிக்கைகளின் மையத்தில் உருவாக்கப்படுவது. பகைமையை ஒரு சொல்லின் மூலம் இலகுவாக உருவாக்கிவிட முடியும். ஆனால், சமாதானத்தை உருவாக்குவதற்கு ஆயிரம் சொற்களும் போதாது. ஆகவே அதை உருவாக்குவது மிகக் கடினம்.  
சமாதானத்தை அறைகூவல் செய்ய வேண்டியவர்கள், அதற்கு ஒத்துழைப்பும் ஆதரவும் தரவேண்டியவர்கள், சமாதானத்துக்காக உழைக்கவேண்டியவர்கள் அந்த அரங்கிற்கு வெளியே கள்ளத்தனமான நடவடிக்கைகளுடன் கூடாரம் அமைத்துள்ளனர்.
இதுதான் இன்றைய பிரச்சினையும் கடினமான முரணுமாக உள்ளது.
போருக்குப் பிந்திய நாட்களைக் கையாள்வது போர்க்காலத்தைக் கையாள்வதையும் விடக் கடினமானது. அதிலும் இலங்கை நிலவரம் முற்றிலும் வேறுபட்ட யதார்த்தத்தைக் கொண்டது.
இலங்கையில் அரசுக்கும் அதனுடைய எதிர்த்தரப்பான புலிகளுக்கும் இடையிலான போராக நடைபெற்ற யுத்தம் அமையவில்லை. அப்படியான ஒரு தோற்றப்பாட்டை உருவாக்குவதற்கு இலங்கை அரசும் சர்வதேச சமூகமும் முயற்சித்தன. புலிப்பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற பிரகடனத்தையே அவை செய்தன. ஆனால், நடைமுறையில் இலங்கை அரசு தமிழர்கள் அனைவரையும் புலிகள் என்று கருதியதால், சந்தேகித்ததால் புலிகள் மீதான போர் என்பது, தமிழர்களின் மீதான போராக மாறியது.
இதேபோல சிங்களச் சமூகங்களின் மீதான புலிகளின் போர்ப் பிரயோகங்கள் சிங்கள மக்களின் மனதில் தமிழ் – சிங்களச் சமூகங்களின் போர் என்ற மனப்பதிவை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அது தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையேயான போராகவே இரண்டு சமூகங்களின் உணர்வில் பரிமாணம் பெற்றுள்ளது. இதன் விளைவாக போரின் முடிவு அல்லது அதில் ஏற்பட்ட வெற்றி தோல்வி என்பன எதிர்விளைவுகளை உருவாக்கின.
அரசின் வெற்றி என்பதைச் சிங்களத் தரப்பின் வெற்றியாகவும் புலிகளின் தோல்வி என்பதைத் தமிழரின் தோல்வி எனவுமே பெரும்பாலான தமிழர்கள் உணர்கிறார்கள். இவ்வாறான ஒரு சமன்பாட்டையே சிங்கள மக்களும் கொண்டுள்ளனர்.
போர் நடைபெற்ற இடங்களுக்குப் பயணித்து வருகின்ற சிங்கள மக்களின் மனநிலையும் ஆட்சியாளரின் கூற்றுகளும் நடவடிக்கைகளும் கூட ஏறக்குறைய அப்படித்தான் உள்ளன.
வென்றவர்கள், வெற்றியின் புரிப்புடன் தோற்றவர்களையும் தோற்றவர்களின் இடங்களையும் பார்க்கும், அணுகும் நிலை இது.
இதனால், தமிழ் மக்களின் உளநிலை மேலும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. அது உளவியல் ரீதியாக எதிர்மறையான அம்சங்களைக் கொண்டுள்ளது. இதன்விளைவாகவே அரசாங்கமும் வெளியுலகமும் சமாதான விரும்பிகளும் சொல்லி வருகின்ற பகை மறப்பு என்ற மதிப்பார்ந்த விசயத்தை தமிழர்கள் தங்களுக்கு வெளியே வைத்துள்ளனர். பகை மறப்பு என்பதைத் தங்களின் சரணாகதி என்ற விளக்கமே பெரும்பாலான தமிழர்களிடம் காணப்படுகிறது.
பகை மறப்பென்பது, ஆதிக்கத்திலிருக்கும் சிங்களத் தரப்பிடமிருந்து முதலில் வரட்டும் என அவர்கள் சொல்வதற்கான காரணம் இந்த அடிப்படையிற்தான் பிறந்துள்ளது.
போரினால் ஏற்பட்ட காயங்கள், வடுக்களோடு வாழ்கின்ற தமிழ் மக்களை ஆற்றுப்படுத்தும் ஒரு சிறப்புப் பணியை இதயக் கதவுகளைத் திறந்து இலங்கை அரசு நடத்தியிருந்தால், சிங்கள மக்களை இந்தக் காயங்களை ஆற்றுப்படுத்தும் தர்மப் பணியில் ஈடுபடுத்தியிருந்தால், இன்று நிலைமை சற்று மாற்றமடைந்திருக்கும்.
ஆனால், இதற்கு முற்றிலும் மாறான வகையில் அது யுத்த வெற்றிகளைச் சிங்கள மக்களுக்குப் பரிசளித்து வருகிறது. தன்னுடைய அரசியல் இருப்புக்காக அந்த வெற்றியை கொண்டாடுவதன் மூலம் தமிழ் மக்களின் மனதில் எதிர்நிலை உணர்வுச் சித்திரங்களை அது ஆழமாக வரைந்துள்ளது. இதனால், நிலைமை மேலும் கடினமாகியுள்ளது. சமூகங்களுக்கிடையிலான இடைவெளியும் மேலும் அதிகரித்துள்ளது.
நேர் முகங்கொள்ள வேண்டிய அரசியற் பயணம் மீண்டும் எதிர்நிலையைக் கொண்டு பயணிக்கிறது.
இதேவேளை யுத்த முடிவுக்குப் பிறகு இலங்கை கடும்போக்கினைக் கொண்டுள்ளது. உள்ளரங்கிலும் சரி, வெளியரங்கிலும் சரி இன்றைய இலங்கை அரசாங்கத்தின் போக்கு அப்படித்தானுள்ளது.
அது யுத்தத்தின் போது நண்பர்களாக இருந்த பலரையும் கைவிட்டுள்ளது. அமைதிக்காகவும் சமாதானத்துக்காகவும் உழைப்போரையும் சிந்திப்போரையும் தூர வைத்துள்ளது. இதற்குக் காரணங்கள் பலவுண்டு. அவற்றில் முதன்மையானது, வெளிச்சக்திகளை இலங்கை தூர வைத்திருப்பது அல்லது தூர வைத்திருக்க முயற்சிப்பது.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவது, புலிகளின் அச்சுறுத்தலை நீக்குவது என்ற தேவையைப் பயன்படுத்தி இலங்கையைப் பொறிக்குள் சிக்க வைக்கும் முயற்சிகள் வெளியுலகின் மூலம் நடக்கின்றன என்பதை இலங்கை ஏற்கனவே முன்னுணர்ந்திருந்தது.
இலங்கையின் தேவை, அது எதிர்கொண்டுள்ள நெருக்கடிநிலை என்பவற்றைப் பயன்படுத்தி, இலங்கையைத் தமது பிடிக்குள் கொண்டு வருவதற்கு ஒவ்வொரு தரப்பும் போட்டியிட்டன. ஆகவே எந்த ஒரு சக்திக்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல் தற்காத்துக் கொள்வதற்கு ஏற்றவாறு, இலங்கை ஒரு மாற்றுப் பொறிமுறையைக் கையாண்டது.
இதன்படி அது அனைத்துத் தரப்பிடமிருந்தும் தனக்கான உதவிகளைப் பெற்றுக்கொண்டது. ஒரு சமாந்தரப்பட்ட உதவி பெறல் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கி இதைச் சாதித்து வந்தது இலங்கை. ஆனால், யாருடைய பொறிக்குள்ளும் முழுமையாகச் சிக்கிவிடாதிருக்க முயற்சித்தது.
இதன்மூலம் அது இந்தியாவிடமும் நெருங்கியிருந்தது. இந்தியாவுக்கு எதிரான சீனாவுடனும் நெருக்கமாக இருந்தது. சீனாவுக்கு எதிரான அமெரிக்காவுடனும் கூட்டு வைத்திருந்தது, அமெரிக்காவுக்கு எதிரான ரஷ்யோவோடும் உறவு வைத்துக் கொண்டது. ரஷ்யாவுக்கு எதிரான இஸ்ரேலோடும் நெருக்கமாக இருந்தது.
ஆனால், யுத்த முடிவுக்காகவும் புலிகளின் அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகவும் உதவிய நாடுகள், இன்று அந்த உதவியை வைத்துக் கொண்டு இலங்கையைத் தங்களது பிடிக்குள் கொண்டு வர முயற்சிக்கின்றன.
யுத்தத்திற்காக படைக்கலங்கள், ஆலோசனைகள், பயிற்சிகள், வேவுநடவடிக்கைகள், நிதியுதவி, யுத்தத்திற்கான அரசியல் ஆதரவு என எல்லாவற்றையும் தாராளமாக வழங்கிய உலகம், எதற்காக அதைச் செய்தது? சோளியன் குடுமி சும்மா ஆடுவதில்லை.
ஆகவே தாங்கள் வழங்கிய உதவிகளுக்காக அவர்கள் லாபங்களை எதிர்பார்க்கிறார்கள். அதை அரசாங்கம் கொடுக்க மறுக்கிறபோது நெருக்கடிகளை உருவாக்குகிறார்கள். இந்த நெருக்கடிகள் இன முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தும் வகையிலும் பொருளாதார இறுக்கத்தை உருவாக்குதன் மூலமும் ஏற்படுத்தப்படுகின்றன.
இதற்காக உள்ளரங்கில் உள்ளவர்களும் வெளியரங்கில் உள்ளவர்களும் சேர்ந்தியங்குகிறார்கள். அதிருப்தியாளர்களைக் கையாண்டு இந்தக் காரியத்தை வெளியுலகம் செய்கிறது. அல்லது அதிருப்தியாளர்களிடையே இருக்கின்ற இடைவெளி இதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
இதனால், நாடு மிக மோசமான உளவியற் சிக்கலுக்குள்ளும் பொருளாதார நெருக்கடிக்குள்ளும் பகைப் பிராந்தியத்திற்குள்ளும் தள்ளப்படுகிறது.
எனவே துரதிருஷ்டவசமாக அமைதிக்கான அத்தனை முனைகளும் மழுக்கமடைந்து விட்டன. சமாதானத்தின் ஊற்றுக்காகக் கனவு கண்ட மக்கள் மீண்டும் ஒரு கோடையைநோக்கி, நகர்த்தப்படுகிறார்கள்.
இதேவேளை யுத்தத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை ஆற்றுவதற்கு அரசாங்கத்தின் மனவிரிவற்ற நிலையும் சிங்களச் சமூகத்தின் உறங்கு நிலை அல்லது பாராநிலை என்பதும் தமிழர்களை சந்தேகத்துக்கும் அச்சத்துக்கும் கொண்டு செல்கிறது.
தமிழ் மக்களின் விலகலை ஒரு வலுக் காரணியாகக் கொண்டு, மேலும் இன அடையாள அரசியலை விரிவாக்கம் செய்து, அதைப் பலமாக்குகிறது அரசும் அதிகாரச் சக்திகளும். மறுவளத்தில் தமிழ் அரசியற் சக்திகளின் போக்கிலும் இதுவே நடைமுறை. குறிப்பாகத் தமிழ்ப்புலம்பெயரிகளின் செயலியக்கம் அடையாள அரசியலை மேலும் வளர்த்து யதார்த்தத்துக்கு அப்பாலான பிராந்தியத்தை நோக்கித் தள்ளுகிறது.
அரசாங்கத்தின் யுத்த முன்னெடுப்புக்கு சிங்கத் தரப்பினரிடமிருந்து ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைத்தது. இலங்கையின் வளங்களை அல்லது அதற்கான அதிகாரத்தைத் தாமே முதல் நிலையில் பெற்றுக்கொள்வது என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்த ஆதரவு பெறப்பட்டது. இன அடையாளத்தை முன்னிறுத்திய அரசியல் மூலம் இதற்கான ஆதரவு திரட்டப்பட்டது.
அவ்வாறே, இதற்கெதிரான தமிழ்த் தரப்பின் யுத்த முன்னெடுப்புக்கும் அரசாங்கத்தை எதிர்க்கும் நடவடிக்கைக்கும் இன அடையாள அரசியல் பயன்படுத்தப்பட்டது. இதனால், தமிழ் ஆயுதப் போராட்டத்தின் விரிவாக்கம் இனரீதியான பிரிவிலும் வேற்றுமையிலும் தீவிரமாகத் தகவமைத்துக் கொண்டது.
இது சிங்கள மக்களை அரசின் யுத்த ஆதரவுச் சக்திகளாக்கியது. இதன் மறுபுறத்தில் அரசின் வேற்றுமை நடவடிக்கைகள் புலிகளின் யுத்த முன்னெடுப்புக்கும் பிரிவினைக் கோரிக்கைக்கும் தமிழ் மக்களை ஆதரவணியிற் சேர்த்தது.
ஆகவே, இரண்டு தரப்பிலும் இன அடையாளத்தை மையப்படுத்தி, அவற்றைப் பகைமைக்குப் பயன்படுத்தும் அரசியலே முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய ஒரு யுத்த ஆதரவுச் சிந்தனைத் தூண்டிலின் படியே கடந்த காலத்தின் இருட்பரப்பு இலங்கையில் உறைந்தது. ஆனால், அதற்குப் பிறகும் யுத்தத்தினால் களைப்படைந்த மக்களைக் கொண்டே அமைதிக்கெதிராகச் சிந்திக்கும் இன்றைய இலங்கை உள்ளது. இதுவே நமது கவனத்திற்குரியது.
அமைதிக்கான ஏக்கம், சமாதானத்துக்கான விருப்பு, அதன் மீதான ஈடுபாடு எல்லாம் யுத்தத்தின் போது முன்னிலை வகித்தன. யுத்தத்தின் காய உற்பத்தியும் இரத்தப் பெருக்கும் துயர வலியும் இத்தகைய விருப்பு நிலையை உருவாக்கியிருந்தன.
இன்று இந்த நிலைமை  மாற்றமடைந்துள்ளது. அரசாங்கத்தை நெருங்கியிருந்த தமிழ், முஸ்லிம் சமூகத்தினர்கூட அதனைவிட்டுத் தூர விலகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கு தமிழ் அரசியற் தரப்புகள் ஒரு தூண்டற்காரணமாக இருந்தாலும் அரசிடம் காணப்படும் சமாதானத்துக்கு எதிரான, இயல்பும் அமைதியைப் பற்றிச் சிந்திக்காத அசமந்தப் போக்குமே பிரதான காரணமாகும்.
இதை எப்படி நீக்குவது என்பதே இன்றைய பிரச்சினையாகும். அமைதிக்குத் திரும்புவதைப் பற்றிச் சிந்திக்காத அரசாங்கமும் மக்களும் அதை வற்புறுத்தாத வெளியுலகமும் திரட்சி பெற்ற இலங்கையே இன்றுள்ளது. இது எதிர்காலத்தில் எதிர்விளைவுகளை உருவாக்கும் சாத்தியங்களையே கொண்டுள்ளது.
ஏற்கனவே, அறுபது ஆண்டு கால இலங்கையின் ஜனநாயக வரட்சி இரத்தக்கறைகளையும் ஒடுக்குமுறைச் சட்டங்களையும் தாராளமாக உற்பத்தி செய்திருக்கிறது.  இனப்பிளவையும் அடையாளச் சிக்கல்களையும் அமைதிக்கெதிரான கடின நிலைமைகளையும் இந்த ஜனநாயகச் வரட்சி உற்பவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி, வறுமை, வேலைவாய்ப்பின்மை, வெளியுலக அழுத்தங்கள் அல்லது நெருக்கடிகள் என்ற வலைப்பின்னல்களையும் அது தாராளமாக்கியுள்ளது. இனத்துவ அடையாளங்களை முன்னிறுத்திய அரசியல் மேலாண்மை பிளவுண்ட சமூக நிலையை வளர்த்துள்ளது. திரும்பிச் செல்ல முடியாத ஒற்றை வழிப்பாதை என்ற சிக்கலுக்குள் இலங்கையில் அரசியல் பகுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று கூட இவையெல்லாம் பெரும் யுத்தத்தையும் கிளர்ச்சிகளையும் அதிருப்தி நிலைமைகளையும் கடந்த பின்னும் தொடர்கின்றன.
சுதந்திரத்துக்குப் பின்னர் செய்யப்பட்ட அரசியற் திருத்தங்கள் நாட்டைப் பாதுகாப்பதற்குப் பதிலாகச் சிதைத்துள்ளன. அதி பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ஆட்சித்தலைவர்கள் பின்னோக்கிய திசையி்ல் நாட்டையும் மக்களையும் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே இருண்ட மயானத்திலேயே மக்கள் நிறுத்தப்பட வேண்டியதாயிற்று. வெளிநாடுகளின் உதவியும் அனுசரணையும் யுத்தத்தை வழிப்படுத்தவும் வெற்றி கொள்ளவும் மட்டுமே இருந்துள்ளன.
மக்களுடைய நிரந்தர அமைதிக்காவும் சுபீட்சத்துக்காகவும் எதுவும் முக்கியத்துவப்படுத்தப்படவி்லலை. சுயாதீனமுள்ள ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என சிங்கச் சுதேசிகள் விரும்புகிறார்கள். வெளிச்சக்திகளின் ஆதிக்கத்தை அவர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். இன்றைய அரசாங்கத்தின் சிந்தனையும் இதுதான்.
ஆனால், யதார்த்தத்தில் அதற்கான அடித்தளம் இலங்கைச் சமூகங்களிடையே காணப்படுகிற இடைவெளிகளைக் குறைப்பதும் பகையை நீக்குவதும் முரண்பாடுகளைக் களைவதிலுமே தங்கியுள்ளது. அதைச் செய்யாத வரையில் இலங்கையில் தீச்சுவாலையும் புகையும் இருளும் இரத்தமும் அவலப்பரப்புமே மிஞ்சும்.
களைப்படைந்த இலங்கையர்கள் இளைப்பாற விரும்புவர். ஆனால், காயப்பட்ட இலங்கையர்கள்?
00
 

2009 ·. by TNB