கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

இலங்கையைப் பாதுகாக்க எவ்வளவோ போராட வேண்டியுள்ளது

Friday 7 September 2012



இலங்கையின் பெரும்பாலான ஊடகங்களில் (தமிழில் அல்ல) அண்மையில் வெளியான கார்ட்டூன்கள் பல்கலைக் கழகங்களை அரசாங்கம் கையாளும் முறைமை தொடர்பாகவே இருந்தன. இவற்றில் ஒரு கார்ட்டூன் மிக உச்சமாக ரசிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால், அது சொல்கின்ற யதார்த்தத்தையும் உண்மையையும் ஏற்கக் கடினமாக உள்ளது.

மூடப்பட்ட பல்கலைக்கழகத்தின் கேற்றுக்கு முன்னால் நின்று ஒரு நாய் காலை உயர்த்தி அந்தக் கேற்றுக்கே சலம் அடிக்கிறது. காலை உயர்த்திச் சலம் அடிக்கும் அந்த முகம் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவினுடையது.

பல்கலைக்கழகங்களை அரசாங்கம் எத்தகைய நிலையில்  அணுகுகிறது, புரிந்து வைத்திருக்கிறது என்று உணர்ந்து கொள்வதற்கு இதை விடச் சிறந்த வேறு வார்த்தைகள் தேவையில்லை.

ஒரு நாட்டின் அறிவையும் ஆற்றலையும் வளர்ப்பதில் கல்வியும் அதன் உச்சச் செயற்களமாகப் பல்கலைக் கழகங்களும் இயங்குகின்றன.

இலங்கையின் கல்வி முறைமை தொடர்பாகக் கடுமையான விமர்சனங்கள் நீண்டகாலமாக உள்ளன. அந்த விமர்சனங்களையும் புதிய சிந்தனைகளையும் இலங்கை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. அப்படி இலங்கை அவற்றை ஏற்றுக்கொண்டாலும் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு உலக வங்கியோ உதவும் நாடுகளோ முழுமையாக ஒத்துழைக்கப்போவதுமில்லை. ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை.

இலங்கையின் கல்வித்துறைக்கு மட்டுமன்றி, இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளிலும் ஆட்சிக்கும் கூட இவையே அனுசரணை வழங்குவதால் இந்தத் தரப்புகளின் கட்டுப்பாடுகளை அரசாங்கம் எடுத்தெறிந்து விடவும் முடியாது. மீறி விடவும் முடியாது.

இதைவிட இலங்கைப் பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் சிந்திப்போரிடம் நீண்டகாலமாக உண்டு. ஆனால் இதைக் குறித்தும் அரசாங்கம் எதையும் செய்வதாக இல்லை.

இப்பொழுது எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கை முழுவதிலுமுள்ள பல்கலைக் கழகங்கள் கால எல்லையின்றி மூடப்பட்டுள்ளன. பல்கலைக் கழகங்களை மூடுவதென்ற தீர்மானத்தை அரசாங்கமே எடுத்திருக்கிறது.

தொடக்கத்தில் பல்கலைக்கழகங்களின் கல்வி சாராத ஊழியர்கள் தங்களுடைய போதாக்குறைகளை முன்வைத்துப் போராட்டங்களை நடத்தினார்கள். இதனால், சில வாரங்கள் பல்கலைக்கழகங்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெறவில்லை.

அடுத்த கட்டமாக, விரிவுரையாளர்கள் தங்களின் குறைபாடுகளை முன்னிறுத்திப் பணிப்புறக்கணிப்புப் போராட்டங்களை ஆரம்பித்தார்கள். இந்தப் போராட்டம் வாரங்களைக் கடந்து மாதங்களாகிக் கொண்டிருக்கிறது.

ஆனால், அரசாங்கத் தரப்பில் இருந்து எந்த நல்ல சமிக்ஞையும் கிடைக்கவில்லை. பதிலாக அங்கிருந்து அபாய விளக்குகளே எரிகின்றன.
இன்றைய பொது அபிப்பிராயம் மற்றும் பொது அச்சம் இலவசக் கல்விக்கு நெருக்கடியைக் கொடுப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறதா என்பதே.

இந்த அறிவிப்பைப் பகிரங்கமாகவே கொழும்பிலும் ஏனைய இடங்களிலும் (தமிழ்ப்பகுதிகளில் இது குறைவு அல்லது இந்த உணர்கை இல்லை எனலாம்) இலங்கையின் சிந்தனையாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

மட்டுமல்ல, அரச கல்வியைப் பாதுகாப்போம், தனியார் மயப்படுத்தப்படும் கல்வியை எதிர்ப்போம் என்ற குரல்களோடு போராட்டங்களையும் இந்தச் சிந்தனையாளர்கள் நடத்தி வருகிறார்கள். கடந்த 23.08.2012 வியாழக்கிழமை கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் ‘அரச கல்வியைப் பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில் பெரியதொரு ஆர்ப்பாட்டமும் பொதுக்கூட்டமும் நடந்துள்ளது.

ஆனால், அரசாங்கம் எல்லாவற்றுக்கும் மௌனத்தையே – புறக்கணிப்பையே கடைப்பிடிக்கிறது. அதேவேளை அது தன்னுடைய கள்ளத்தனங்களின் வழியிலேயே தன்னிச்சையான முடிவுகளை எடுத்துச் செயற்படுகிறது.

தனியார் பல்கலைக் கழகங்களின் வருகை, அல்லது உருவாக்கும், அவற்றின் பெருக்கம் என்பன எதிர்காலத்தில் நாட்டின் கல்வியை, நாட்டுக்கான கல்வியை அழித்து விடும்.

அத்தகைய கல்வி ஒன்று பெருக்கமடையுமானால் பிறருக்கான கல்வியும் சிந்தனைமுறையும் அவர்களுக்கான கருவியாக்கலுமே இலங்கையில் நிகழும் என சிலர் அபிப்பிராயப் படுகிறார்கள். இது வெறும் அபிப்பிராயமாக அல்லாமல் கலக்கமாகவும் உள்ளது.

தனியார் பல்கலைக்கழகங்களின் வருகை என்பது அல்லது அவற்றின் உருவாக்கம் என்பது அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ், நிபந்தனைகளின் கீழ் இருக்குமானால் அதை வரவேற்கலாம்.

தனியார் பல்கலைக்கழகங்களின் கல்வியானது வழமையை விட அகன்ற பரப்பைக் கொண்டதாக இருக்கும். அது போட்டியை அடிப்படையாகக் கொண்டதால் போட்டிக்கான சிறப்பியல்புகள் அதைத் தரமுயர்த்திக் கொண்டே இருக்கும். ஒரு சர்வதேச முகத்தைக் கொண்டதான கல்வியை இலங்கையிலும் பெறக்கூடியதாக இருக்கும் என்கின்றனர் இன்னொரு சாரார்.

அரச பல்கலைக் கழகங்களும் அவற்றின் கல்வி முறைமையும் பெரும்பாலும் சம்பிரதாய பூர்வமானதாக மாறிவிட்டன. சில மாற்றங்கள் அதில் நிகழ்ந்தாலும் அது மிக மிகத் தாமதம் கொண்டதாகவே இருக்கிறது. அதிலும் பல்கலைக்கழகங்களில் அவற்றை நடைமுறைப்படுத்துவதும் அவற்றை பல்கலைக் கழகங்கள் கையாளும் விதமும் மந்த நிலைக்குரியன என்று வாதிடுகின்றனர் மற்றொரு தரப்பினர்.

தனியார் பல்கலைக்கழகங்களின் வருகையை ஆதரிப்பதென்பது, அரச பல்கலைக்கழங்களைச் சுறுசுறுப்பாக்குவதற்கான ஒரு விசேட ஏற்பாடே என ஒரு நண்பர் குறிப்பிடுகிறார்.  தூசி படிந்து போயிருக்கின்ற அரச பல்கலைக்கழங்களைத் துப்புரவாக்கிப் புதுமைப்படுத்தும் ஒரு காரியமே இது என்கிறார் மேலும் அவர்.

இப்படி விவாதங்களை உருவாக்கியுள்ள அரசாங்கம் வெளிப்படையாகத் தன்னுடைய நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை.

அதேவேளை அது அரச பல்கலைக் கழகங்களின் செயற்பாட்டை முடக்கும் விதமாக நடந்து கொள்கிறது.

இந்த அடிப்படையிலேயே பல்கலைக் கழகம் சார்ந்தோரின் கோரிக்கைகளை அது பொருட்படுத்தவில்லை. இதற்கான ஒரு குறியீடாகவே இந்தப் பத்தியின் ஆரம்பத்தில் கூறப்பட்டது போல உயர் கல்வி அமைச்சரின் கார்ட்டூன் அமைந்துள்ளது.

மூடப்பட்டிருக்கும் பல்கலைக் கழகத்தை திறப்பதற்குப் பதிலாக அதற்குச் சலம் அடிக்கும் எண்ணத்திலும் செயற்பாட்டிலும் இருக்கின்றது அரசாங்கம் என்தே இதன் அர்த்தம்.

காலவரையின்றிய அளவுக்குப் பல்கலைக் கழகங்களை மூடி நாட்டின் கைநாடியைப் பிடித்துப் பார்க்கிறது அரசாங்கம் என்று சொல்லப்படுகிறது.

அதாவது, மூடப்பட்டுள்ள பல்கலைக் கழகங்களைத் திறக்கச்சொல்லி நடக்கும் கோரிக்கையின் வலுவையும் அந்தக் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடுவோரின் வலுவையும் அரசாங்கம் பரிசோதித்துப் பார்க்கிறது.

இப்படிப் பார்ப்பதன் மூலமாக அது தனக்கெதிராக உள்ள எதிர்ப்பு மனநிலையையும் எதிர்ச்செயற்பாட்டு வலுவையும் கணக்கெடுக்க முயற்சிக்கிறது. தன்னுடைய எதிர்கால அரசியற் தேவைகளுக்காக இவ்வாறு இந்த அரசாங்கம் செயற்படுகிறது என்று சில விமர்சகர்கள் இந்த நிலை தொடர்பாக அபிப்பிராயம் தெரிவிக்கின்றனர்.

பல்கலைக்கழங்களில் கைவைத்தால் அது நாடு தீப்பற்றி எரிவதற்குச் சமம் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், இலங்கையில் அந்த நிலைமை ஏற்படுமா என்று தெரியவில்லை.

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை பலவீனப்படுத்தியும் ஒடுக்கியும் வந்த ஒரு பாரம்பரியமே இலங்கையில் உள்ளது. ஆட்சியில் எந்த அரசாங்கம் இருந்தாலும் இதுதான் கதை. போராட்டங்களிலுள்ள நியாயங்களை அவை ஒரு போதும் உணர்ந்து கொண்டதோ ஏற்றுக்கொண்டதோ இல்லை.

ஒரு தரப்பை இன்னொரு தரப்புக் குற்றம் சாட்டினாலும் அனைத்துத் தரப்பினதும் அடிப்படை இயல்புகளும் நோக்கங்களும் ஒன்றே.

இதையே மக்கள் எப்போதும் விளங்கிக் கொள்ள வேண்டியதாக உள்ளது. மக்கள் மட்டுமல்ல, மக்களைச் சிந்திக்கத் தூண்டும் சமூகச் செயற்பாட்டாளர்களும் சிந்தனையாளர்களும் இதைத் தாமும் விளங்கிப் பிறருக்கும் விளக்க வேண்டும்.

நாட்டுக்கு ஏற்படுகின்ற நன்மைகள் மற்றும் தீமைகளைப் பற்றிய விழிப்புணர்வை மக்கள் கொண்டிருக்க வேண்டியது அவசியம். இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு அதை ஏற்படுத்தத் தகுதியுடையோரைச் சேர்ந்தது.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதரைக் கடிப்பது என்று சொல்வார்கள். ஏறக்குறைய அத்தகைய ஒரு நிலையில்தான் இன்றைய இலங்கைச் சூழல் உள்ளது.

இனங்களுக்கிடையிலான நெருக்கடிகள், மத நெருக்கடி, அனவருக்குமான பொருளாதார நெருக்கடி, ஜனநாயக நெருக்கடி, அரசியல் நெருக்கடி என விரிந்து சென்று கொண்டிருக்கும் நெருக்கடியில் இப்போது பல்கலைக்கழங்களும் அவற்றின் கல்விச் செயற்பாடுகளும் சிக்கியுள்ளன.

ஒரு அரசாங்கமானது தான் பிரதிநிதித்துவப் படுத்துகிற மக்களையும் நாட்டையும் பாதுகாத்து முன்னோக்கிப் பயணிக்க வழிகாண வேண்டும். அது மக்களுக்கான அடிப்படைகளை உருவாக்க வேண்டும். குறைந்த பட்சம் ஏற்கனவே இருக்கின்ற அடிப்படைகளையேனும் பாதுகாக்க வேண்டும்.

ஆனால், இலங்கையில் இந்தத் தன்மைகள் குறைவு. ஆட்சியில் இருந்த அரசாங்கள் ஒவ்வொன்றும் ஏற்கனவே இருந்த அடிப்படைகளையே தகர்த்துத்தான் வந்துள்ளன.

இதில், இன்றைய அரசாங்கமானது, அடிப்படைகளைத் தகர்ப்பதில் மிகக்கடுமையாகத் தொழிற்படுகிறது.

நாட்டின் நலன்கள் மற்றும் மக்களின் நலன்கள் என்று சிந்திப்பதற்குப் பதிலாக ஆட்சியில் அங்கம் வகிக்கின்ற சிலரின் அல்லது ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் நலன்களுக்காக மட்டுமே அது இயங்குகிறது. அதிலும் வெளிச்சக்திகளின் நலன்களுக்காக நாட்டையும் மக்களையும் பலியிட்டுத் தன்னுடைய வயிற்றை நிரப்பிக் கொள்கிற அரசாங்கமாக இது உள்ளது.

இப்படி இயங்கும் அரசை தரகு அரசாங்கம் என்று அழைப்பதே பொருத்தமானது.

இங்கேதான் மீண்டும் நாம் கவனிக்க வேண்டிய விசயங்கள் இருக்கின்றன. அரசாங்கத்தை விமர்சிப்பது (மேற்குறிப்பிட்ட கார்ட்டூன் உட்பட) அதைக் கண்டிப்பது, அதைக் குற்றம் சாட்டுவது என்பதற்கப்பால், விழிப்புணர்வோடு அதை எதிர்த்துப்போராடுவது என்பது இன்று அவசியமானது.

ஆனால், இந்தப் போராட்டங்கள் மறுபடியும் இன்னொரு அதிகாரத் தரப்பைப் பலப்படுத்துவதாகவோ, அல்லது பிற சக்திகளுடைய நலன்களைப் பாதுகாப்பதாகவே அமைந்து விடக்கூடாது. ஆனால், பிற சக்திகள் இதற்காகவே காத்திருக்கின்றன.

அவை அரசாங்கத்தைத் தமக்குச் சார்பாக இயங்க வைக்கும். அதேவேளை அரசாங்கத்தை எதிர்க்கின்ற தரப்பையும் அவை தமக்குச் சாதமாகக் கையாளும். எந்தத் தரப்புப் பலம்பெறுகிறதோ அல்லது எந்தத் தரப்பு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுகிறதோ அந்தத் தரப்பைத் தமது கால்களுக்கிடையில் வைத்துக் கொள்வதே இவற்றின் நோக்கம்.

எனவே உச்சமான விழிப்புணர்வுடைய செயற்பாடுகளின் மூலமே ஒரு நாட்டின் அடிப்படைகளையும் அதனுடைய கல்வியையும் மக்களையும் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்பானவை. ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. ஆகவே, பல்கலைக் கழகங்கள் இன்று எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளும் சவால்களும் முழு நாட்டுக்கும் முழு அடிப்படைகளுக்கும் எதிரான நெருக்கடிகளும் சவால்களுமாகும்.

இங்கே நாம் இன்னொரு முக்கியமான விசயத்தையும் கவனிக்க வேண்டும்.

நாட்டினுடைய புத்திஜீவிகளின் மையமாக இருக்கின்ற பல்கலைக்கழகத்தினர் சிந்திப்போரைப் பெருமளவுக்குக் கொண்ட பல்கலைக்கழகங்கள், போராடும் ஆற்றலையும் பொறுப்பையும் உடைய பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் இந்தச் சவால்களையும் நெருக்கடிகளையம் எதிர்நோக்கிப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய வரலாற்றுப் பொறுப்பைக் கொண்டுள்ளனர்.

இந்தப் பொறுப்பை அவர்கள் முழு நாட்டு மக்களுக்கும் மாற்றி ஒரு எழுச்சியான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இலங்கையைப் பாதுகாப்பதற்கு எவ்வளவோ போராட வேண்டியுள்ளது. அதாவது இலங்கையர் ஒவ்வொருவரும் இலங்கையில் வாழ்வதற்கு நிறையப் போராட வேண்டியுள்ளது.

ஏனெனில் அந்தளவுக்கு இலங்கை நெருக்கடிகளாலும் சவால்களாலும் அபாயங்களாலும் நிரப்பிப் போயுள்ளது.

00

0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB