கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

உபாயமும் அதிகாரமும் - 03

Friday, 25 May 2012
உபாயமும் அதிகாரமும் என்ற கட்டுரையின் இறுதிப் பகுதி இது. இலங்கையின் சமகால அரசியலை மையப்படுத்தி எழுதப்பட்டது. குறிப்பாக தமிழரின் அரசியலை மையப்படுத்தி. விரிவான இந்த விடயம் பற்றி விரிவாக ஆராயப்படவும் விவாதிக்கப்படவும் வேணும்.

“தென்னாசியப் பிராந்தியத்தில் சிங்கள இராசதந்திரத்தைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிடுவார்கள். குறிப்பாக இந்தியா என்ற பென்னாம் பெரிய நாட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் இலங்கை தன்னுடைய இராசதந்திரத்தினாலேயே – உபாயத்தினாலேயே - தாக்குப் பிடித்துக்கொண்டிருக்கிறது. இதில் சிங்கள இராசதந்திரத்தின் சிறப்பைக் காணலாம்” என்று பல ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அதாவது “யானைக்குத் தும்பிக்கை பலம் என்றால் எலிக்கு வளை பலம் என்பதைப் புரிந்து கொண்டவர்கள் சிங்கள இராசதந்திரிகள்” என்று குறிப்பிடுகிறார் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு.

இந்தியாவின் அச்சுறுத்தல் - தமிழ் நாட்டின் படையெடுப்பு அபாயங்கள் - சிங்களவர்களைத் தேர்ந்த இராசதந்திரத்தை நோக்கி அவர்களைச் சிந்திக்கத் தூண்டியிருக்கலாம்.

மேலும் கடந்த அறுநூறு ஆண்டுகளாக பல தரப்பினரின் ஆதிக்கப்போட்டிக்கான களமாக இலங்கை இருப்பது இன்னும் அவர்களை இந்தத் துறையில் தேர்ச்சியுடையவர்களாக்கியிருக்கலாம்.

என்றபடியால்தான் அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொண்டதுடன் துலக்கமான தனியான அடையாளங்களைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அதிலும் தென்னாசியப் பிராந்தியத்தில் - ஏன் உலகிலேயே – மிகச் சிறிய தரப்பினராக இருந்துகொண்டே வலுவானவர்களாக – தாக்குப் பிடிக்கும் திறனுடையவர்களாக - சிங்களவர்கள்
இருக்கிறார்கள்.

சிங்களவர்களிடம் உருவாகிய இந்த இராசதந்திரம் அவர்களை அதிகாரத் தரப்பினர் ஆக்கியதுடன், மேலும் உபாயங்களில் நம்பிக்கையுள்ளவர்களாகவும் தேர்ச்சியுடையவர்களாகவுமாக ஆக்கியது.
‘அரசும் அதிகார வர்க்கமும் தொடர்ச்சியாக இருக்கும் போது அதையொட்டி உபாயங்களும் தேர்ச்சியுறும் வளரும்’ என்று சொல்வார்கள். இது சிங்களத்தரப்புக்கும் பொருந்தும்.

என்றபடியால்தான் இலங்கையில் மிகச் செழிப்பான இராச்சியங்களைக் கொண்டவர்களாகவும் புகழுடைய மன்னர்களைக் கொண்டதாகவும் சிங்கள வரலாறு இருக்கிறது.

மகாவம்சம் புனைவுகளை அதிகமாகக் கொண்ட வரலாற்று நூலாக இருப்பினும் அது சிங்கள ஆதிக்கத்தரப்பினுடைய உபாயத்தின் விளைவு அல்லது வெளிப்பாடு எனலாம்.

இவ்வளவு சக்திவாய்ந்த சிங்களத்தரப்பின் உபாயம் இப்போது நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறது. இதற்குக் காரணம் அது இனவாதத்திற்குள் சிக்கியிருப்பதே. இனவாதம் என்பது குறுகிய அரசியல் எண்ணமாகும். அதேவேளை அது தவறானதாகும்.

ஆனால், உபாயங்களில் தேர்ச்சியுடைய தரப்புகள் இந்த மாதிரித் தவறான அரசிலிலும் கணிசமான காலம் வெற்றிகளைப் பெற்றேயிருக்கும்.  இதற்குக் காரணம் இவற்றின் தேர்ச்சியான உபாயங்களின் மூலம் இவை, தங்கள் நெருக்கடிகளை மிக இலகுவாகக் கடந்த விடக் கூடியனவாக இருப்பதேயாகும்.

ஆனாலும் இறுதியில் இந்த வகையான அரசியலுக்குப் பயன்படுத்தப்படும் உபாயம் நிச்சயம் தோல்வியிலேயே போய்முடியும். இதற்கு வரலாறு நெடுகிலும் ஏராளம் உதாரணங்கள் உண்டு.

கடந்த கால் நூற்றாண்டுக் காலத்தில் அதிக நெருக்கடியை இலங்கையில் – சிங்கள இராசதந்திரம் சந்தித்திருக்கிறது. அந்த நெருக்கடிகளைத் தன்னுடைய தேர்ச்சியான அணுகுமுறையின் மூலம் அது வென்றும் வந்திருக்கிறது.
உதாரணமாக, இந்திய நெருக்கடி 1987 இல் இலங்கைக்குப் பெரிய சவாலாகவே இருந்தது. அதையும் விட 1980 களில் தமிழ்ப் போராளிகளை இந்தியா தனக்குச் சாதகமாக வளர்த்துக் கையாண்டது. ஆனால் அத்தனை இயக்கங்களையும் இன்று இலங்கை (சிங்கள உபாயம்) தோற்கடித்துத் தன்வசப்படுத்தி விட்டது. இதுதான் சிங்கள உபாயத்தின் வெற்றி. இந்தியா வளர்த்த குழந்தைகள் இப்போது இலங்கையின் பிள்ளைகளாகி விட்டனர்.
ஆனாலும் ஒரு வகையில் சிங்கள அதிகார வர்க்கமும் அதைத் தாங்கும் சிங்கள உபாயமும் தோல்விகளை அல்லது சரிவுகளை இந்தக் காலகட்டத்தில் சந்தித்திருக்கிறது எனலாம்.

தமிழர்களை ஒடுக்க முற்பட்டவேளையிலேயே சிங்கள உபாயத்தின் தோல்வி ஆரம்பமாகியது.

ஒடுக்குமுறை என்பது தவறான அரசியல் வழிமுறையாகும் என்று கண்டோம். என்னதான் நுட்பங்களையும் தந்திரோபாயங்களையும் பயன்படுத்தினாலும் ஒடுக்குமுறையை ஒரு போதும் தளர்வற்றுத் தொடரமுடியாது. எவ்வளவு பலத்தோடிருந்தாலும் ஆதிக்கம் ஒருநாள் முடிவுக்கு வந்தே தீரும்.

ஆபிரிக்காவை மேற்குலகம் ஆக்கிரமித்திருந்தது. கறுப்பர்களை வெள்ளையர்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். இறுதியில் என்ன நடந்தது? ஒரு நாள் வெள்ளையர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டியிருந்தது. ஒடுக்குமுறைக்கு முடிவுகட்டவும் வேண்டியிருந்தது. இங்கே வெள்ளையர்களின் அத்தனை உபாயங்களும் தோற்றுப்போயின.
ஒருகாலம் சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜித்தை வைத்திருந்த பிரித்தானியா – ஒடுக்குமுறைக்குப் பயன்படுத்தும் பிரித்தாளும் தந்திரத்தில் பேர் பெற்ற பிரித்தானியா-  தன்னுடைய ஆதிக்கக் கரங்களை உலகெங்கிலும் இருந்து  பின்னே எடுக்க வேண்டிவந்தது.

இன்னும் சொல்லப்போனால், கி.பி 1400 களிலிருந்து ஏறக்குறைய ஆறுநூற்றாண்டுகள் வரையில் உலகத்தின் ஏனைய பகுதிகளைத் தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தது ஐரோப்பா.

ஆனால், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இந்த நிலைமைகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. இன்று இந்த நிலைமை இன்னும் மாறியுள்ளது. இப்போது பல நாடுகள் சுயாதீனமாகவே இருக்கின்றன. பல சமூகங்களும் சுயாதீனமுடையவையாக மாறியுள்ளன.

அறுநூறு ஆண்டுகால ஆதிக்கத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த உபாயம் ஒருபோது முடிவுக்கு வந்ததே உண்மை. இதை நாம் கவனித்துக் கொள்ள வேணும்;.

இலங்கையில் தமிழர்களை ஒடுக்குவதில் குறியாக இருக்கும் சிங்கள அதிகார வர்க்கம் அதற்கான உபாயங்களைப் பற்றியே அதிகமாகச் சிந்திக்கிறது. இதனால், அது, வெளிச் சக்திகளையும் உள்நாட்டுச் சக்திகளையும் தனது ஒடுக்குமுறை அரசியலுக்குச் சார்பாக – சாதகமாகப் பயன்படுத்த விளைகிறது. இதற்காகவே அது தன்னுடைய மூளையின் பெரும்பகுதியையும் செலவழிக்கிறது.

இதேவேளை சிங்கள அதிகாரவர்க்கத்தைப் பணிய வைக்க விரும்பும் உள் மற்றும் வெளிச் சக்திகள் சிங்களத் தரப்பிற்கு எதிராக இருக்கும் தமிழ்த்தரப்பை தேவைக் கேற்றமாதிரியும் இனவாதத்தை சந்தர்ப்பத்திற்கு ஏற்றமாதிரியும் பயன்படுத்திக் கொள்கின்றன.

இது சிங்களத் தரப்புக்குப் பல சந்தர்ப்பங்களிலும் நெருக்கடிகளையே கொடுக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகாலத்தினுள், சிங்கள அதிகார வர்க்கம்  பல நெருக்கடிகளை உள்நாட்டுச் சக்திகளாலும் வெளிச் சக்திகளாலும் சந்தித்துள்ளது.

இந்தியா, மேற்குலகம், ஐ.நா அமைப்புகள், மற்றும் மனித உரிமை அமைப்புகள் என வெளி நெருக்கடிகளாலும் போராட்ட இயக்கங்கள் - குறிப்பாக விடுதலைப் புலிகள் என உள் நெருக்கடிகளாலும் சிங்கள அதிகார வர்க்கம் நெருக்கடிப் பட்டிருக்கிறது.

இந்த நெருக்கடிகளால் இலங்கைத் தீவே பெரும் அழிவுகளையும் இழப்புகளையும் பின்னடைவையும் சந்திக்க வேண்டியேற்பட்டது.
என்னதான் உபாயங்களைக் கையாண்டபோதும் சிங்கள அதிகார வர்க்கம் நினைத்ததைப் போல ஒடுக்குமுறை என்பது இலகுவானதாக இருக்கவில்லை. எவ்வளவுதான் சிறப்பான உபாயங்களைப் பிரயோகித்தாலும் ஒடுக்குமுறையின் எதிர்விளைவுகளால் ஏற்பட்ட நெருக்கடிகளைத் தடுக்க சிங்கள அதிகார வர்க்கத்தினால் முடியவில்லை.
சிங்கள ஒடுக்குமுறையினால் தமிழர்கள் மட்டும் அழிவுகளையும் இழப்புகளையும் வேதனைகளையும் துயரத்தையும் பதற்றத்தையும் பெறவில்லை. சிங்களவர்களும் அழிவுக்கும் இழப்புக்கும் வேதனைக்கும் நெருக்கடிக்கும் பதற்றத்துக்கும் உள்ளானார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.

இந்த ஒடுக்குமுறையின் விளைவுகளால், சிங்களத் தலைவர்கள் பலரை அது  இழந்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் இனப்போரினால் பலியிடப்பட்டிருக்கின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காலிழந்தும் கையிழந்தும் இருக்கின்றனர். பல கோடிக்கணக்கான சொத்திழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

இன ஒடுக்குமுறையினால் இலங்கைத் தீவே பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது. இது சிங்கள மக்களின் வாழ்க்கையையும் பாதித்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், இன்று ஏற்பட்டிருக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் அத்தனைக்கும் சிங்கள அதிகார வர்க்கம் உருவாக்கிய போரே காரணமாகும்.

இவை மட்டுமல்ல, இன ஒடுக்குமுறைப் போர் தீவிரம் பெற்று அது மனிதாபிமான எல்லைகளுக்கப்பால், பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்களையே பலியிட்டது.

இவையெல்லாம் இன்று பெரும் மனித உரிமை மீறல்களாக்கப்பட்டு சர்வதேசத்தின் முன் விசாரணை நடத்தும் அளவுக்கும் தண்டனையைப் பெறவேண்டிய நிலைக்கும் கொண்டு வந்து விட்டுள்ளன. இப்போது தமிழர்களை விடவும் சிங்களத் தரப்பினரே அதிகமாகக் கலங்குகின்றனர்.

உலகத்தின் முன்னே சிங்களவர்கள் தலைகுனியும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
புலிகளும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிந்தாலும் அது ஒட்டுமொத்தமான தமிழ்ச் சமூகத்தை அடையாளப்படுத்தவில்லை. ஆனால், சிங்களத் தரப்பில் ஒட்டுமொத்தச் சிங்களச் சமூகமும் இதைத் தன்னுடைய தலையில் விழுந்துள்ள அடியாகக் கருதும் அளவுக்கே நிலைமையுள்ளது. இதை ஏற்படுத்தியதே சிங்கள இனவாதந்தான். அதாவது, சிங்கள இனவாதத்தைப் பாதுகாக்கும் அதிகாரத்தரப்பின் உபாயமே.

சிங்கள உபாயம் எல்லா நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வெற்றி பெற்று வந்தாலும் அதை ஒரு தீய பிசாசைப்போலச் சூழ்ந்து கொண்டிருக்கும் தொடர் நெருக்கடிகளை அதனால் தடுக்க முடியவில்லை. இதற்குக் காரணம் முன்னரே குறிப்பிட்டிருப்பதைப் போல அது பின்பற்றும் இனவாதமேயாகும். அதாவது தவறான அரசியல் அணுகுமுறைகளேயாகும்.

சனங்களை அழித்து, சொத்துகளை அழித்து, நாட்டை அழித்து, இன்று தன்னுடைய கழுத்தில் தானே சுருக்குக் கயிற்றைப் போட்டிருக்கிறது இந்தத் தவறான உபாயம்.

ஆனால், இந்த நெருக்கடியிலிருந்தும் நாளைக்கு சிங்களத் தரப்பு மீண்டு விடலாம். போரைச் செய்வதற்கும் புலிகளை ஒடுக்குவதற்கும் சர்வதேச சமூகத்தைத் தன்னுடைய உபாயங்களால் வெற்றி கொண்ட சிங்களத்தரப்பு இதிலும் வெற்றியடையலாம்.

ஆனால், இனவாதத்தைத் தொடரும்வரையில் அதனைத் தொடர்ந்து கொண்டேயிருக்கும் பல நெருக்கடிகள். இதைத் தடுப்பதற்கு எந்த உபாயத்தினாலும் முடியாது. இறுதியில் ஒருநாள் இந்த உபாயம் தோல்வியில் முடிந்து சமாதிக்குச் சென்று விடும். இது விதி.

ஆகவே, உபாயங்கள் என்பது எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதில்தான் அவற்றின் வெற்றியும் தோல்வியும் அமைந்திருக்கின்றன. கத்தியைப் பயன்படுத்தி மரத்தையும் வெட்டலாம். மனிதரையும் வெட்டலாம். இதில் எதைச் செய்ய அதைப் பயன்படுத்தப் போகிறோம் என்பதில்தான் நமது அறிவு தங்கியிருக்கிறது. நமது பண்பும் தங்கியுள்ளது.

000 comments:

Post a Comment

 

2009 ·. by TNB